முதியவளின் நிர்வாணம்

யது முதிர்ந்த பழுப்புநிறப் பறவையொன்று தன் நீண்ட சிறகைத் தரையில் தளர்த்தி  ஓய்வெடுப்பதைப் போலச் சுருக்கம் நிறைந்த கைகளைத் தனது இருபக்கமும் இருத்தி அமர்ந்திருந்தாள் அவள். ஆடைகளற்றிருந்த அவளது உடலின் நிர்வாணத்தை, அவள் கால்களை மடக்கி தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்த கோணம் மறைத்திருந்தது.  சிரத்தின் பெரும்பாலான முடிகள் நரைத்து விட்டிருந்த நிலையில் அவளது தலைமயிர் உளப்பிறழ்வு ஏற்பட்டவர்களுடையதைப் போலச் சிக்கலாக அழுக்காக இருக்கவில்லை. எண்ணெய் தடவி ரப்பர் பேண்ட் போட்டிருக்கவில்லை என்றால் அவள் குனிந்து அமர்ந்திருக்கும் நிலையில் கேசம் முகத்தின் முன்புறம் பிரிந்து விழுந்து அவளைப் பைத்தியக்காரியாகக் காட்டியிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைப் போலத் தோற்றமளித்த அவளது உடல் மொழி நிர்வாணமாக மட்டும் இல்லையென்றால் எளிதில் கடந்து சென்றிருக்கக் கூடிய ஒன்றாக இருந்தது.

அவளது இருப்பு அண்மையிலிருந்த பேருந்து நிறுத்தத்தின் இறுக்கத்தைக் கூட்டியிருந்தது. பேருந்து வரும் திசையில் அவள் அமர்ந்திருந்தது அந்நிறுத்தத்தில் பேருந்தை எதிர் நோக்கிக் காத்திருந்த மூவருக்கும் சங்கடத்தை உண்டாக்கியிருந்தது. அவர்களின் தலைகள் சாலையிலிருந்து சிறு குறுங்கோணத்தில் திரும்பி வலுக்கட்டாயமாக அவளைத் தவிர்த்திருந்தன. அன்று தனது இரு சக்கர வாகனம் பழுதடைந்திருந்ததில் பல நாட்கள் கழித்துப் பேருந்தை எடுக்க வந்திருந்த இளைஞன் திகைப்பிலிருந்தான். எப்போதாவது நண்பர்களுடன் கேளிக்கைக்காகப் பார்க்கும் காணொளிகளில் வரும் உடல்களின் முதிர்ந்த வடிவமாக இவ்வுடல் அவனுள் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. நிர்வாணத்திற்கு ஏற்படக்கூடிய இறுதிக்கால மாற்றங்களைப் பற்றி யோசிக்க வேண்டுமென்று அவனுக்கு இதுவரையில் தோன்றியதே இல்லை. இத்தனை நாட்கள் பார்த்து வந்த காணொளிகள் தந்த பரவசம் மொத்தமும் அங்கு நின்றிருந்த கணங்களில் வடிந்து போய்விட்டதை அவன் உணர்ந்தான். எப்போதும் அசாதாரண சம்பவங்களைப் படமெடுத்து இன்ஸ்டாகிராமில் பகிரும் வழக்கம் கொண்ட அவன் இச்சூழலைப் படமெடுத்து விடாதபடிக்குத் தொலைப்பேசியைச் காற்சட்டைப் பையில் வைத்துவிட்டு கைகளை இறுக்க மூடிக்கொண்டான்.

அவனுக்குச் சற்று தள்ளி நின்றிருந்த மத்திய வயது மனிதருக்கு அவரது தாயின் நினைவு வந்தது. இப்படித் தெருவில் தவிக்க விட்டுச் சென்றிருக்கக்கூடிய அவளது மகனை மனதிற்குள் வைதார். ஒருவேளை தனது மகன், மருமகளுடன் இணைந்து தன்னை புறக்கணிக்கிறானோ என்று சந்தேகப்பட்டு, அவனது பாராமுகத்தைப் பழிவாங்க இவள் இப்படி அமர்ந்திருக்கிறாளோ என்ற ஐயமும் அவருள் எழுந்தது. ச்சே ச்சே என்று தலையசைத்து விட்டு, மகன் தான் இருக்க வேண்டுமா என்ன, மகளாக இருக்கலாம் அல்லது குழந்தை இல்லாதவளாகக் கூட இருக்கலாம் என்று  முணுமுணுத்துக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் பின்னாலிருந்த   இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு தானே அங்கு நிர்வாணமாய் அமர்ந்திருப்பதைப் போலக் கூச்சம் உண்டாகியிருந்தது. எழுந்து போய் அந்த முதியவளுக்குப் போர்த்தி விட அவளிடம் கைக்குட்டையைத் தவிர உபரி துணி எதுவும் இருக்கவில்லை. துப்பட்டாவை எடுத்துக் கூட போர்த்திவிட முடியாதபடிக்கு இன்று அவள் சேலை அணிந்து வந்திருந்தாள். அப்படியே துப்பட்டா இருந்திருந்தாலும் அருகில் சென்று போர்த்திவிட்டிருப்பாளா என்பது சந்தேகம் தான். ஒருவேளை அம்முதியவள் மனநிலை சரியில்லாதவளாய் இருந்தால் தனக்குப் பிரச்சனையாய் முடியக்கூடும் என்ற பயம் அவளுக்குள் இருந்தது. நிர்வாணமான பெண்ணுடன் பொதுவில் தனியே மல்லுக்கட்டும் தைரியம் அவளுக்கு இல்லை. வேறு யாராவது முதலில் சென்று உதவி செய்யத் தொடங்குவார்களென்றால் தானும் அவர்களுடன் இணைந்துகொள்ளத் தயாராய் இருந்தாள்.

முதியவள் இப்போது முதுகை இன்னும் நன்றாக வளைத்து முன்புறமாகக் குனிந்து மண்ணில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். இருந்த நிலை மாறாமல் அவ்வப்போது தலையை நிமிர்த்தி யாருடைய வருகையையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பவளைப் போலப் பார்த்துவிட்டு மீண்டும் மண்ணில் விரல்களை அளைந்தாள். சுரந்து தீர்த்த முலைகளை மறைப்பதால் எந்தவொரு பயனும் இல்லை என்பதைப் போல் அதைப் பற்றிய பிரஞ்சை இன்றி தன் தேடுதலில் கவனம் பதித்திருந்தாள். குடையாய் விரிந்திருந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த அவளின் முகக்குறிப்புகள் ராமனின் வரவை எதிர்பார்த்து நிமிர்ந்து பின்னர் ஏமாந்து தலைகுனிந்த அசோகவனத்துச் சீதையை நினைவுபடுத்தின.

சாலையில் பல வாகனங்கள் கடந்து சென்றன ஆனால் ஒரு பேருந்து கூட வரவில்லை. எதிர்பக்கமிருந்து இப்பக்கமாகத் தந்தையுடன் சாலையைக் கடந்து வந்த சிறுமி சாலையோரம் அமர்ந்திருந்த அந்த முதியவளைப் பார்த்துவிட்டு தனது தந்தையை ஏதோ கேட்கத் துவங்கினாள். அவர் அவசர அவசரமாக அவளை இழுத்துக் கொண்டு அவ்விடத்தைக் கடந்தார். அந்தச் சிறுமி புள்ளியாகி மறையும் வரை இரண்டடிக்கொருதரம் திரும்பிப் பார்த்தபடி சென்றாள். இளைஞனுக்கு யாரையாவது அழைத்து உதவி கேட்கலாம் என்று தோன்றியது. ஆனால் எண் நூறைத் தவிர வேறு எந்த எண்ணும் சட்டென நினைவுக்கு வரவில்லை. இதற்குக் காவலர்களை அழைக்கலாமா அல்லது மருத்துவமனையை அழைக்க வேண்டுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. சமூக ஊடகங்களில் அதிகமாகப் புழங்கினாலும் நிஜத்தில் நெருங்கிய சிலரைத் தவிர யாரிடமும் அதிகம் பேசிவிடாத கூச்ச சுபாவம் கொண்டிருந்த அவனுக்கு இது மிகுந்த சங்கடத்தைக் கொடுத்தது.

நடுத்தர வயது மனிதருக்கு, இப்படித் தெருவில் அமர்ந்திருக்கும் பெண்ணைக் கவனிக்காமல் இயல்பாய் இயங்கிக் கொண்டிருந்த சமூகத்தின் மீது வருத்தம் உண்டானது. இது மாதிரி சூழலில் தனது சட்டையைக் கழற்றி அணிவிக்கும் கதாநாயகர்களை அவர் படத்தில் பார்த்திருக்கிறார். ஆனால் இப்போதிருக்கும் அசாதாரண அமைதி கெட்டு அனைவரின் பார்வையும் தன்பக்கம் திரும்பும் என்ற தயக்கம் அவருக்குள் இருந்தது.  நிர்வாணமான ஒரு பெண்ணைத் தான் பார்த்ததாகக் காட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லை. பின்னால் அமர்ந்திருக்கும் பெண் ஏதாவது செய்யலாம் தானே, ஒரு பெண்ணை இன்னொரு பெண் நெருங்கினால் ஒரு பிரச்சனையும் ஏற்படாது, இவள் ஏன் அப்படியே அமர்ந்திருக்கிறாள் என்ற கோபம் அவருக்கு ஏற்பட்டது. அவள் ஏதாவது துணியால் போர்த்திவிட்டால் தான் அருகில் சென்று ஏதாவது ஆலோசனை சொல்லலாம் என்று நினைத்தார். ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்தார். அவள் கைத்தொலைபேசியில் தீவிரமாய் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். அந்நியப் பெண்களுடன் சட்டெனப் பேசிப் பழகியிராத வழக்கத்தில் அவரின் நாக்குப் புரள மறுத்தது. இந்த உரையாடலை எவ்விதம் துவக்குவது என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது.

உட்கார்ந்திருந்த அந்தப் பெண் எழுந்து நின்று தனது புடவையைச் சரி செய்தாள். தனியொரு பெண்ணாய் பேருந்து நிலையத்தில் நிற்பது அவளுக்குச் சங்கடமாய் இருந்தது. அடுத்த பேருந்து இவளுடையதாக இல்லாதிருந்தாலும் கூட ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாமா அல்லது அடுத்த நிறுத்தத்திற்கு நடந்து சென்றுவிடலாமா இல்லை காசு போனால் போகிறதென்று ஆட்டோவைப் பிடிக்கலாமா என்று யோசித்தாள். அந்த இளைஞன் இப்போது தனது கைத்தொலைபேசியில் சேவை இல்லங்களின் தொலைப்பேசி எண்களைத் தேடத் துவங்கியிருந்தான். நடுத்தர வயது ஆடவர் தயக்கத்துடன் இவளை மீண்டும் ஒருமுறைத் திரும்பிப் பார்த்தார். அவரின் உதடுகள் பேச விரும்புவது போலத் திறந்து மூடின.

அந்தச் சமயம் பேருந்து ஒன்று சாலை முனையில் திரும்பி இந்தப் பக்கம் வருவது தெரிந்தது. இளைஞன் சட்டென தன் கைத்தொலைபேசியை அணைத்துவிட்டு பேருந்து வந்து நிற்கக்கூடிய இடத்தைக் கணித்து முன்னால் நகர்ந்தான். அந்தச் சலனத்தில் நடுத்தரவயது ஆடவரும் அவனுக்கு அருகாக நகர்ந்தார். மூவரின் முகத்திலும் தேவையற்ற சிக்கலிலிருந்து விடுபட்ட மலர்வு.

சரியாகப் பேருந்து நிறுத்தத்திற்கு முன்னால் அந்நேரம் வந்து நின்ற வேனைக் கடந்து சற்று தொலைவிற்குச் சென்று நின்றது பேருந்து. மூவரும் வேகமாய் ஓடி அதில் ஏறிக் கொண்டார்கள். பேருந்து நகர்ந்த போது சிறு குறுகுறுப்பு உந்த அந்தப் பெண் பின்பக்கக் கண்ணாடி வழியாகப் பேருந்து நிறுத்தத்தைப் பார்த்தாள். வேனிலிருந்து பச்சை சேலையணிந்த இரு பெண்கள் அந்த முதியவளை நோக்கி நகர்வது தெரிந்தது. அதுவரை மனதிலிருந்த சங்கடம் மறைந்து நிம்மதி உண்டாக, படியில் நின்றிருந்த அந்த இளைஞனைப் பார்த்தாள். அதே நேரம் பேருந்து நிறுத்தத்தின் திசையிலிருந்து மீண்ட அவனின் பார்வையும் இவள் கண்களைச் சந்தித்து, ஒருகணம் திடுக்கிட்டு அவசரமாய் தொலைப்பேசிக்குள் புதைந்தது.

 

 

 

 


ஹேமலதா

இவரது முதல் புத்தகமான ‘வாழைமர நோட்டு’, சிங்கப்பூர் இலக்கிய பரிசு 2020, படைப்பு இலக்கிய விருது, திருப்பூர் சக்தி விருது ஆகியவற்றைப்

பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் கவிதைகள்,

தங்கமுனை விருது, சிங்கப்பூர் தேசிய கவிதைப் போட்டி உள்ளிட்ட

போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது கதைகள் கணையாழி,

கல்கி, சிராங்கூன் டைம்ஸ், தமிழ் முரசு, கனலி, அரூ, திண்ணை,

மலைகள்.காம் உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்துள்ளன.

 

Previous articleதலையங்கம்: இன்னும் பிறக்காத தலைமுறைக்காக…
Next articleஆனந்த் குமார் கவிதைகள்
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
6 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
நரேஷ்
நரேஷ்
2 years ago

அருமையான கதை, ரசித்து வாசித்தேன்.

Saravanan
Saravanan
2 years ago

சென்ற ஆண்டு இறந்துவிட்ட எனது 100 வயது பாட்டியின் நினைவு வந்துவிட்டது.

Jaikumar Priya
Jaikumar Priya
2 years ago

அருமை 👌👌

தயாஜி
2 years ago

குறுங்கதைக்கு ஏற்ற கச்சிதமான கரு. ஆனால் வாசகர்களின் மனதில் இக்கதை பல்வேறாக விரியவடைகிறது. நம்மையும் ஒரு பாத்திரமாக சேர்த்துக் கொள்கிறது.
நிர்வாணமான முதியவளிடம் இருந்து கதை தொடங்கி அவளிடமே முடியவும் செய்கிறது. ஆனால் அம்முதியவளை சுற்றி இருப்பவர்களின் மன இயல்புகளை கதை முழுக்கவும் பார்க்க முடிந்தது.
கதை. பேருந்து நிலையத்தில் ஒரு முதியவள் நிர்வாண நிலையில் இருக்கிறாள். அங்கு பேருந்திற்காக வருகின்றவர்கள் எப்படி அதனை எதிர்கொள்கின்றார்கள். அவர்களின் மனவோட்டம் என்ன. அவர்களா அம்முதியவளை காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் கதை.
ஒரு இளைஞன். ஒரு நடுத்தர வயதுக்காரர். ஒரு பெண், மகளுடன் சாலையை கடக்கும் அப்பா என ஒவ்வொருவரும் அந்த முதியவளின் நிர்வாணத்தை எதிர்கொள்ளும் விதம் நம் சமூகத்தில் நாம் ஒதுங்கியும் கண் மூடி கடந்துவிட்ட சூழல்களை நமக்கு நினைவுப்படுத்துகிறது. பேருந்து வரவும், மூவறும் பேருந்தில் ஏறி சுய திருப்தி அடைந்துக் கொள்கிறார்கள்
என்ன நடக்கும் யார்தான் காப்பாற்றுவார்கள் என்கிற கேள்வியை கடைசி வரை எழுத்தாளர் காப்பாற்றியுள்ளார். கதையின் நிறைவில், யாரால் வந்தது என்று அடையாளம் காட்டாதபடிக்கு ஒரு வேன் வந்து நிற்கிறது. அதிலிருந்து பச்சை சேலை அணிந்த பெண்கள் அம்முதியவளை நோக்கி வருகிறார்கள்.
யார் அழைத்திருப்பார்கள் என்கிற கேள்விகளின் ஊடே நாம் என்ன செய்திருப்போம் என்கிற சுயபரிசோதனைக்கு இக்கதை வழி அமைக்கிறது.

#தயாஜி

Vijay Vanaraja MURUGAN
Vijay Vanaraja MURUGAN
2 years ago

தங்களின் ஒவ்வொரு வரிகளும் கதை நிகழ்வை மனதின் அடி ஆழத்திற்கு எடுத்துச் செல்கிறது…
கதை மாந்தர்களின் மனோநிலை பற்றிய விளக்கங்கள் வயது, பால் அடிப்படையில் மிக நேர்த்தியாய் இருந்தது!.
“நான் இருந்தால் என்செய்வேன் !?” என்ற கேள்வியும் எழுகிறது.
நன்றிகள்!!!!

Krishna
Krishna
1 year ago

Excellent. Really touched.