முத்துமாலை -லாவண்யா சுந்தரராஜன்


 

“இந்த காலை நேரத்தில் உங்கள் அனைவருடனும் மிகவும் வருத்தமான செய்தியொன்றை ஆழ்ந்த துக்கத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நமது அன்புக்குரிய குழுத் தோழன் பிரகாஷ் தற்சமயம் நம்மிடமில்லை. அமெரிக்காவில் நேற்றிரவு மரணமடைந்ததாகத் தெரிகிறது. பிரகாஷின் இறுதி மூச்சு நின்றதன் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அவருடன் சென்ற பிரியங்காவும், நாகசுப்புரமணியனும் இன்று காலை விமானத்தில் கிளம்பி வந்திருக்கின்றார்.”

 

அலுவலகத்தில் நுழைந்ததும் இன்று என்னென்ன அலுவல்கள் என்று பார்க்க வேண்டி மடல் பெட்டியைத் திறந்ததும் இந்த மடல் கண்ணுக்குப்பட்டது. மடல் இன்னும் பெரிய தகவல்களோடு நீண்டு கொண்டிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. இது நிஜமா? என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை. அலுவலக வலைத்தளத்தைப் பார்த்தால் அங்கேயும் பிரகாஷின் சிரிக்கும் புகைப்படத்தைப் போட்டு அவனுடைய பணி வரலாறு பிற தகவல்களைக் கொடுத்து இறப்புச் செய்தி போடப்பட்டிருந்தது. அனைவரின் பிரார்த்தனையை அந்த பதிவு கோரியது. இது கனவென்று இருக்கக் கூடாதா? நேற்று காலையில் தான் பேசினோம். கிளம்பப் போகும் ஆனந்தத்தில் இருந்தான். பிரியங்காவும் நாகசுப்புவும் கூட அவனிடம் எந்த மாற்றமும் இருந்ததாகச் சொல்லவில்லை.  ஐ20 நேற்றிரவோடு முடியப்போகிறது இனிமேலும் அங்கே இருக்க முடியாது ஆகவே தான் கிளம்புகிறேன் இல்லையென்றால் வர மனமே இல்லை என்று சொன்னானே அப்படியே அங்கே தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டானே. வேலை செய்யக் கணிப்பொறியில் பதிவுகளைத் திறந்தால் மனம் முழுவதும் பிரியங்கா, நாகசுப்பு, பிரகாஷ் இவர்களைச் சுற்றியே வந்தது. அவர்கள் இங்கிருந்து கிளம்பியது அவர்களுக்கிடையேயான குழந்தைத்தனமான சண்டைகள் இவையே நினைவுகளாக வந்தது. இங்கிருந்து கிளம்பும் போது மட்டுமா, அங்கே சென்றும் சிங்கமும் புலியும் போலவே சீறிக் கொண்டுதானே இருந்தனர்.

 

பிரியங்கா வேறு குழுவிலிருந்தவள். டெல்லாஸ் செல்ல இரண்டு வாரத்திற்கு முன்னர் தான் எங்கள் குழுவுக்கு மாறினாள். அவள் வேறு நிறுவனத்துக்கு மாற வேண்டி தனது பணிவிலகல் விண்ணப்பத்தைக் கொடுத்திருந்தாள். என்னைத் தான் அவளைச் சமாதானம் செய்து இந்த பயண வாய்ப்பைக் கொடுத்து அவளை நிறுவனத்தோடு தக்க வைக்கும் முயற்சியை  மேற்கொள்ள சொன்னார்கள். வீட்டில் என்னுடைய நான்கு வயது மகன் அக்‌ஷயைக் கவனிக்கப் பெரியவர்கள் துணை இல்லாததால் நான் போக வேண்டிய இந்த பயணத்தை வேண்டாமென்றிருந்தேன். அதையே சாக்கென்று கொண்டு பிரியங்காவிடம் பேசும் பொறுப்பை என்னிடம் கொடுத்திருந்தார்கள். பிரியங்காவிடம் குழுவிலிருந்து முதலில் பேசியதால் என்னிடமே அதிகம் பேசுவாள். அதற்கும் பிரகாஷ் மிகவும் கிண்டல் செய்வான். அவன் செய்வது கிண்டலென்றும் நான் தான் பிரியங்காவுக்குப் புரிய வைக்க வேண்டும். அவ்வளவு கொடூரமான சிரிப்புணர்வு பிரகாஷுக்கு. அவன் சிரிக்க வைக்கச் சொல்லும் எதுவும் சிரிப்பை வரவழைத்ததில்லை. மாறாகக் கோபமோ எரிச்சலோ வரும்.

 

அப்படித்தான் ஒருநாள் பிரியங்கா மிகவும் அழுதபடி என்னிடம் வந்திருந்தாள் “ஜி, என்னால இந்த பிரகாஷ் கூட இனி ஒரு நிமிடம் கூட வேலை பார்க்க முடியாது”

 

“என்ன ஆச்சு”

 

“ஏசி அதிகமாயிருக்கு ரொம்ப குளிருதுன்னு சொன்ன போது நீ பேசாம பாத்ரூம்ல உட்கார்ந்து வேலை பார்க்கலாம் அங்க ஏஸியே இருக்காதுங்கிறான்”

 

“ஓ அது அவன் ஜோக்கா தான் சொல்லியிருப்பான்”

 

“நோ ஜி. ஒரு எல்லையிருக்குல என்னை எப்படி டாய்லெட்டிலிருந்து வேலை செய் என்று சொல்லலாம். சென்ஸ்லெஸ் ஆளா இருக்கான்”

 

“இனிமே இது போல பேச வேண்டாம்ன்னு சொல்றேன்.”

 

“இவனோட இன்னும் நாலு நாளில் எப்படி பயணம் போக இருக்கேன்னு தெரியல இந்த ட்ரிப் போக வேண்டாம்ன்னு தோணுது”

 

அவளைச் சமாதானம் செய்யவும் குழு மேலாண்மை செய்து அவர்களுக்குள் ஒரு நல்லுறவு ஏற்படுத்தவும் என்னுடைய மேலாளர் எங்கள் நால்வரையும் ஒரு மதிய உணவுக்குச் சென்று வரச் சொல்லித் திட்டமிட்டார். நான் அவர்களுக்கு விருந்து கொடுப்பதாக ஏற்பாடு, பின்னர் அது அலுவலகக் கணக்கிலிருந்து பெற்றுக்கொள்ள அனுமதிப்பதாகச் சொல்லி அந்த நகரின் மிக ஆடம்பரமான ஒரு உணவு விடுதியில் எங்கள் நால்வருக்கும் உணவருந்த இருக்கைகளை முன்பதிவு செய்தனர். பிரியங்கா தான் வண்டியோட்டினாள். அவளருகே நானும் பின்னிருக்கையில் நாகசுப்புவும், பிரகாஷும் ஏறிக் கொண்டார்கள். பிரியங்காவுக்கு பிரகாஷ் வருவதன் பொருட்டு இன்னும் அதிக மன அழுத்தமிருந்திருக்க வேண்டும் நான் இடது என்றால் அவள் சரியாக வலது பக்கம் திரும்பினாள். அவ்வாறாக இரண்டு முறை வட்டமடிக்க வேண்டியிருந்தது.

 

“இடம் வலம் தெரியாதவர்களுக்கெல்லாம் எப்படி ஓட்டுனர் உரிமம் கொடுத்தார்களோ” என்று ஹிந்தியில் பிரகாஷ் சொன்னான். எனக்கு ஹிந்தி தெரியும் பிரியங்காவுக்குத் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே தெரியும்.

 

“பிரகாஷ் கொஞ்சம் வாய் திமிரைக் குறையேன். இவளைச் சமாதானம் செய்வது மட்டுமே எனக்கு வேலையாக வைக்காதே. இந்த குழுவுக்கு நீ தான் பெரியவன். இவர்கள் இருவரையும் இன்று உன் கையில் ஒப்படைக்கிறேன். சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஹிந்தியில் சொன்னேன்.

 

“ஜி எங்களுக்கும் புரியும் படி பேசுங்கள்” என்றாள் பிரியங்கா.

 

“நீ ஃபார்முலா ஒன் கார் ஓட்ட வேண்டியவள் என்று உன்னைத் தான் புகழ்ந்து சொல்கிறார்கள்” என்றான் பிரகாஷ்.

 

“பொய் சொல்ல வேண்டாம் ஃபார்முலா ஒன் என்பது ஹிந்தியிலும் ஃபார்முலா ஒன் என்று தானே வரும்” என்றதும் “அசல் புத்திசாலி” என்று ஆங்கிலத்தில் சொல்ல பிரியங்காவை விட்டு மூவரும் சிரித்தோம்.

 

அந்த ஹோட்டலில் நுழையத் தடுப்பு அரணாக இருந்த இரும்பு உருளைகளில் வண்டியை மோதி விட்டாள் பிரியங்கா. அது உடனே பெரிய அளவில் சத்தம் செய்யத் தொடங்கியது. பிரியங்கா மிகவும் கலவரப்படத் தொடங்கினாள். “நான் வண்டியோட்டியிருக்கக் கூடாது” என்று புலம்ப ஆரம்பித்தாள். பாதுகாப்புக்கான பரிசோதனைகள் முடிந்த உடனே அந்த உலோக உருளைகள் கீழிறங்கி தரையோடு தரையாகி அவர்களுக்கு வழிவிடும். அப்படி பரிசோதனைக்கு நிறுத்தாமல் எல்லைக் கோட்டுக்குள் நுழைந்ததுமே சைரன் அலற ஆரம்பித்தது. அதில் பயந்து போய் அந்த உருளைகள் மீது இடித்து விட்டாள். பாதுகாவலர்கள் விரைந்து வந்து சைரனை நிறுத்திய பின்னரும் பிரியங்காவால் பதற்றத்தில் வண்டியை எடுக்க முடியவில்லை. பாதுகாவலர்களில் ஒருவர் வண்டியைக்  கீழ்த்தளத்துக்கு எடுத்துச் செல்ல முன்வரவும் உடனடியாக வண்டியை விட்டு இறங்கி ஓடிவிடும் நிலைமையிலிருந்தவளை முதலில் பிரகாஷ் தான் சமாதானம் செய்தான் “வண்டி லேசா தட்டுச்சி அதுக்கென்ன, ஏன் இவ்வளவு பயம். நாம் எப்போதுமே இடிக்கனும்ன்னு வண்டிய ஓட்டனும்” என்றான். பிரகாஷ் இனி அவர்களைப் பத்திரமாய் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையே முதன்முதலாய் வந்தது எனக்கு.  ஆனால் இப்படி அவர்களை மட்டும் அனுப்பி விட்டு அவன் அங்கேயே கிடப்பான் என்று அப்போது தெரியாமல் போனது.

 

“பிரகாஷின் உடல் உடலாய்வுக் கூறுகள் முடிந்து அதன் பின்னர் இந்தியா அனுப்பப்படும். அதற்கு சில நாட்கள் பிடிக்கும். இந்த நிலையில் அவர்கள் குடும்பத்துக்கு ஆறுதலாகவும் மேலும் நமது குழுவின் நாகசுப்புரமணியன், பிரியங்கா இவர்களை பிரகாஷின் பெற்றோர்கள் பார்க்க விரும்புவார்கள். கடைசியாக அவனுடன் அவர்கள் கழிந்த நினைவுகளை அல்லது இன்னும் ஏதேனும் கேட்க விரும்பலாம். நீங்கள் பிரியங்காவையும், நாகசுப்புரமணியத்தையும் அழைத்துக் கொண்டு மனிதவளத்துறைத் தலைவர் டேனியலோடு பிரகாஷ் வீட்டுக்கு நாளை மதியம் கிளம்பிப் போய்விட்டு வந்துவிடுங்கள். நமது கட்டிடக் காவலாளிப் படையிலிருந்து ஒருவரும் உங்களுடன் பாதுகாப்புக்கு வருவார்.

பிரியங்காவும் நாகசுப்புரமணியனும் திரும்பிய உடன் இந்தியா இரவு நேரத்துக்குப் பழக நாள் எடுக்கலாம் மேலும் அவர்கள் இருவரும் பிரகாஷுக்கு நிகழ்ந்ததை நேரில் பார்த்த காரணத்தால் மனம் பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம், நீங்கள் உங்கள் மேலாளரிடம் அடிக்கடி சொன்னபடி பிரியங்கா பிரகாஷ் இருவரின் சண்டை பிரியங்காவைக் குற்றவுணர்வுக்குள்ளாகியிருக்கலாம். அந்தக் குழுவின் தலைமையில் இருப்பதால் நீங்கள் தான் இதை எல்லாம் சரி செய்ய வேண்டியிருக்கும். அவர்களுக்குப் பாதுகாப்பாகவும். அனுசரணையாகவும் இருக்கவும். அதே நேரம் இதெல்லாம் பணி எதையும் பாதிக்காத வண்ணம் கையாளுங்கள்” துறை நிர்வாகியிடமிருந்து நேரடியாக வந்த மடலை வாசித்த போது பிரகாஷின் அம்மாவின் முகம் நினைவுக்கு வந்தது. உடனடியாகப் பிரகாஷ் விட்டுச் சென்ற இடத்தையும், இனி முடித்துக் கொடுக்க வேண்டிய வேலையும் விழியைப் பிதுக்குமே என்றும் தோன்றியது. பிரகாஷ் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப நிர்வாகம் குறைந்தபட்சம் ஆறுமாதங்கள் எடுத்துக் கொள்ளும். அதுவரையிலான வேலைகளைக் குழுவே பகிர்ந்து செய்ய வேண்டும். பிரகாஷின் வீட்டுக்குப் போகும் போது அவனுடைய பெற்றோரையும், தங்கையையும் எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.

 

பிரியங்கா, நாகசுப்பு என்னுடைய குழுவுக்கு வரும் முன்னரே பிரகாஷ் என்னுடைய குழுவில் என்னுடைய மேற்பார்வையில் பணிபுரிந்து கொண்டிருந்தான். பொதுவாக அவன் சீனியர் யாரையும் மதிப்பதில்லை என்ற வரலாற்றை வைத்திருந்தான். ஆனால் அவனுடைய அம்மாவுக்கு மிகவும் உடல்நலம் குன்றியிருந்த போது அவனும் அவன் தங்கையும் எங்கள் அலுவலகம் இருக்கும் நகருக்கு வந்திருந்த போது தங்குமிடம் பிடிக்காமல் இருந்த காரணத்தால் பிரகாஷ் பணியில் முழுக்கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. அது மென்பொருள் வெளியீடு நெருக்கும் நாட்களாக இருந்தது. பிரகாஷ் முக்கிய பொறுப்பிலிருந்தான். அவனது கவனக் குறைவுக்கான காரணத்தைக் கேட்ட போது அம்மாவின் உடல்நலமும் அங்கே தங்குமிடத்திலிருந்த ஒவ்வாமையையும் சொல்லித் திணறினான். அவன் அம்மாவையும் தங்கையையும் எங்கள் வீட்டிற்கு வரவழைத்தேன். பின்னர் என் கணவர் பணிபுரியும் மருத்துவமனைக்குப் போனதும், என் கணவர் பிரத்தியேகமாக பிரகாஷின் தாயைக் கவனிக்க ஏற்பாடுகள் செய்திருந்தார். அதில் மனம் நெகிழ்ந்த அந்தத் தாய் விரைவில் நன்கு குணமாகி கிராமம் திரும்பினர். அதிலிருந்து அவன் நான் என்ன சொன்னாலும் சிறிது மரியாதையோடு இருப்பான். எப்போது ஊருக்குச் சென்று வந்தாலும் எனக்கும் அக்‌ஷை அப்பாவுக்கும் பிரகாஷின் அம்மா ஏதேனும் உணவுப்பண்டம் கொடுத்தனுப்பாமல் இருந்ததில்லை. அடிக்கடி அவன் அம்மா என்னை விசாரித்தாகச் சொல்வான். எவ்வளவு மரியாதை இருந்தாலும் கிண்டலுக்கு எப்போதும் குறைவிருக்காது. பணியிடத்தில் இப்படி வயது வித்தியாசமில்லாது அவர்களோடு கலந்திருந்தால் மட்டுமே அலுவலில் எந்தச் சிக்கலையும் எளிதில் அவர்களோடு பேசி தீர்த்துக்கொள்ள முடிந்தது. ஆனால் பிரியங்கா கொஞ்சம் மேட்டிமை வளர்ப்பு, படிப்பு அவளுக்கு இவனது கிராமிய கிண்டல் துடுக்குத்தனங்கள் புரிவதில்லை. “நீங்க எப்படி ஜி இவனோடு குப்பை கொட்டீறிங்க என்பாள்”

 

நாகசுப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்தவன். அவனுக்கு இந்த கார்ப்பரேட் கலாச்சாரமே முதலில் கொஞ்சமும் எடுபடவில்லை. எப்போதும் எதற்கும் பயந்தபடியே இருப்பான். மதிய உணவு ஒன்றாக உணவருந்தப் போகும் போது எப்போதும் நாற்காலியின் முனையில் அமர்ந்துகொண்டு சாப்பிடுவான். அவனை மிக இயல்புக்குக் கொண்டுவர நிறையத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. பிரகாஷ் அவனோடு பழகக் கொஞ்சம் தயக்கம் காட்டுவான். பேசும் போதும் வேண்டுமென்றே அவனை “மீன்” என்று பொருள்படும்படி ஹிந்தியில் என்னிடம் சொல்லிக் கிண்டலடிப்பான். அவனை மிரட்டித் திட்டி இன்ன பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நாகசுப்புவுக்கும் பிரகாஷுக்கும் இணக்கமான சூழலை வேலையின் முக்கியத்துவத்தின் பொருட்டு ஏற்படுத்தி வைத்திருந்தேன். இதெல்லாம் என்னுடைய பணியில் வராது ஆனாலும் என் குழு எனது வேலையைப் பகிர்பவர்கள் என்ற முறையில் இது அவசியமென்று எனக்குத் தோன்றியது. தினமும் இதற்காகவே பூப்பந்து விளையாடும் திட்டம் வைத்திருந்தோம். நானும், பிரகாஷும் ஒரு பக்கமும் நாகசுப்பு மற்றொரு பக்கமென்று விளையாடுவோம். இருபது நிமிடம் விளையாடி முடித்ததுமே பிரகாஷ் மிகவும் சோர்வடைந்து விடுவான்.  அப்போதே இவ்வளவு சிறுவயதில் கொஞ்ச நேர உடற்பயிற்சியின் போது ஏன் இப்படி சோர்வுறுகிறான் என்று யோசித்திருக்க வேண்டும். முறைப்படி ஏதேனும் மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே அவனை வெளிநாட்டுக்கு அதுவும் மீமிகை குளிர் பகுதிக்கு அனுப்பும் உடல்தகுதியுண்டா என்று கண்டறிந்து அனுப்பியிருக்க வேண்டும். அவனுக்கு என்ன உடல் கோளாறென்று தெரிந்து செய்ய வேண்டியது கூடாதது என எல்லாம் எச்சரித்து அனுப்பியிருக்க வேண்டும்.

 

பிரியங்கா குழுவுக்கு வந்ததும் அவள் வருகையை அவ்வளவு எளிதாக பிரகாஷால் ஏற்க முடியவில்லை. அதுவும் இரண்டு வருடமாகத் தான் கேட்ட பணி நிமித்தம் வெளிநாடு போகும் வாய்ப்பு, பிரியங்கா வேலையை விட்டுவிடுவேன் என்று சொல்லிய காரணத்துக்காகக் கொடுக்கப்பட்டதையும் அவனால் ஏற்க முடியவில்லை. இவர்கள் மூன்று பேரையும் ஒன்றாக அங்கே அனுப்பி எப்படி வேலை வாங்கி இந்த ப்ராஜெட்டை நல்லபடி முடிப்போமென்று கவலை எனக்கு மட்டுமல்ல என் மேலாளாருக்குமிருந்தது. பிரகாஷ் எங்களது மென்பொருளில் எல்லா உட்பிரிவுகளையும் அறிந்தவன். அவனால் என்ன பிரச்சனை என்றாலும் எந்த பிரிவில் எங்கே பிரச்சனை இருக்கக் கூடுமென்று மென்பொருள் அச்சு சுவடுகளைப் பார்த்தே சொல்லிவிடும் அளவுக்கு அதில் திறமையிருந்தது. நாகசுப்பு பிரச்சனை இன்னது என்று சொல்லிவிட்டால் உடனடியாக தீர்வை நிர்மாணித்துவிடுவான். பிரியங்காவுக்கு அவள் ஏற்கனவே பணிபுரிந்த எல்லா மேலாளர்களிடமும் நல்ல பெயர் இருந்தது. ஏனோ சிறு சிறு உட்பூசல்களால் அவள் வேறு பணிக்கு மாறத் திட்டமிட்டிருந்தாள். வந்த இரண்டு வாரத்திலேயே கொடுக்கப்பட்ட பணிகளைத் தேவைப்படும் புள்ளிகளுக்கு மட்டும் கேட்டறிந்து தீர்வினை நிர்மாணித்து விட்டாள். எதிர்பார்த்ததை விட மிக விரைவிலேயே பணிக்குள் நுழைந்து தீவிர பங்களிப்பைக் கொடுக்கத் தொடங்கிவிட்டாள். இருந்தாலும் பிரகாஷ் அவளின் திறமையைக் குறைத்தே மதிப்பிட்டுக் கொண்டிருந்தான். இவர்கள் மூன்று பேரையும் ஒன்றாக அனுப்பி விட்டு தினமும் பேசி சிறு குழந்தைகளுக்குக் கிடையே நடக்கும் பஞ்சாயத்து போலச் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அமெரிக்கா சென்ற இரண்டு வாரங்களில் பிரகாஷ் நள்ளிரவில் அழைத்தான் “ஜி என்னை எதற்காக இந்த மேனாமினுக்கியுடனும், அந்த மீன் பையனிடம் அனுப்பினீர்கள், இருவரும் ஒரு வேலையும் செய்வதில்லை நான் சமைத்து வைத்தால் நன்றாகத் தின்று தீர்க்கின்றார்கள். நாகசுப்புவாவது பாத்திரங்களைக் கழுவி வைக்கிறான். அவள் ஒரு துரும்பைக் கூட அகற்றுவதில்லை”

 

“பாத்திரங்களைத் தொடாதே என்று நீ திட்டி விட்டாய் என்று நேற்று அவள் என்னிடம் சொல்லி அழுதாள்”

 

“இல்லை ஜி, அப்படியே காய்கறிக் குப்பையோடு டிஸ் வாஸ்ஸரில் போட்டு விட்டாள்”

 

“பிரகாஷ் உன்னால் சமைக்க முடியவில்லை என்றால் எல்லோருமே வெளியில் சாப்பிடுங்கள்”

 

“இல்லை ஜி நான் வெளியில் சாப்பிட்டு வயிறு சரியில்லாமல் போய்விட்டது. அப்போது பிரியங்கா தான் அவள் அம்மாவிடம் கேட்டு கஷாயம் ஏதோ போட்டுத் தந்தாள்”

 

“அப்புறமென்ன எவ்வளவு அக்கரையோடிருக்கிறாள்.”

 

இரண்டொரு நாளுக்குப் பிறகு பிரியங்காவிடமிருந்து அழைப்பு வரும் “சீனியர் இவன் என்னை ரொம்ப இன்சல்ட் செய்யறான்.”

 

“பிரகாஷா என்ன ஆச்சு?”

 

“காஃபி மிகவும் வாசனையாக இருக்கு ஆனா நுரையே வர்ல பாரு என்று நாகசுப்பு கிட்ட சொல்லிகிட்டு இருந்தேன் இவன் சொல்றான் ரின் பவுடர் போட்டு கலக்கு நுரை வரும்ன்னு. எங்கிருந்து பிடிச்சீங்க இந்த காட்டுமிராண்டிய”

 

“சரி நாகசுப்பு கூட ஒன்னும் பிரச்சனையில்லையே.”

 

“இல்ல இவன்ட மட்டும் தான்”

 

நாளை அதிகாலையில் பிரியங்காவும், நாகசுப்புவும் வந்திறங்குகின்றார்கள். இருவரின் இல்லமும் கிட்டத்தட்ட 2500கிமிக்கு அப்பால் இருப்பதால் இங்கே நாகசுப்பு நண்பர்களுடன் தங்கியிருக்கிறான். பிரியங்கா வீடெடுத்து தங்கியிருக்கிறாள். வெளிநாட்டுப் பயணம் முடிந்து திரும்பும் ஒவ்வொரு ஊழியரும் வந்தவுடன் குழுவுடன் விருந்து உண்ண வேண்டுமென்று அந்த நிறுவனத்தில் ஒரு பொது வழக்கிருந்தது. அதற்கென எங்கே செல்வது என்று திட்டமிட்டு கடந்த முறை நால்வரும் பேசிய போது பேசினார்கள். பிரியங்கா, நாகசுப்பு இருவருமே இரண்டு வாரம் விடுப்பு வேண்டுமென்று சொல்லியிருந்தார்கள். பிரகாஷ் இல்லையில்லை நாம் இங்கே வந்து மாபெரும் வெற்றியை நிறுவனத்திற்குத் தந்திருக்கிறோம் ஆகவே உடனடியாக என்று இந்தியாவில் காலடி வைக்கிறோமோ அன்றே சினிமாவுக்குப் போகிறோம் இரவு உணவு உண்கிறோம் என்று திட்டவட்டமாகச் சொல்லியிருந்தான். அதில் உங்களுக்கெல்லாம் ஒரு இன்ப அதிர்ச்சி தருவேன் என்றும் சொல்லியிருந்தான். அது இப்படிப்பட்ட அதிர்ச்சி என்று யாருக்குமே தெரியவில்லை. கடைசியாகப் பிரியங்கா பற்றி அவள் அமெரிக்கரிடமும் நல்ல பெயர் வாங்கிவிட்டாள் எனக்குக் காதில் புகை வருது ஜி என்று சொன்ன போது கூட முன்பிருந்த வெறுப்பெதுவுமில்லை. என்ன தான் ஆகியிருக்கும் அவனுக்கு, முதல் அறிக்கையின் படி நாள் கணக்கு முடிந்த உணவும் உண்டதும், கூடவே அதிமிஞ்சிய போதையும் என்று சொல்லியிருப்பதாகத் துறைக்குள் தகவல் கசிந்தது. அதுவும் வெளியில் சொல்லக்கூடாது என்ற கடும் எச்சரிக்கையுடன் சொல்லப்பட்டிருந்தது. பிரியங்காவும், சுப்புவும் வந்த பின்னர் எதுவும் தெரிய வாய்ப்புகள் இருக்கும்.

 

பிரியங்காவையும், நாகசுப்புவையும் வரவேற்றுக் கூட்டிக் கொண்டு வர நிறுவனத்திலிருந்து வண்டி அனுப்பினார்கள். அதில் என்னைச் செல்லச் சொல்லி நிறுவனம் வேண்டிக் கொண்டிருந்தது. அதிகாலை அக்‌ஷை தூங்கிக் கொண்டிருந்த நேரம் எழுந்து விமானநிலையம் சென்றேன். பிரியங்கா அழுதழுது முகம் வீங்கியிருந்தாள். நாகசுப்பு வழக்கம் போல வெறித்த முகத்தோடிருந்தான். பிரியங்காவை ஆறுதலாக அணைத்துக் கொண்டேன். பிரியங்கா மறுபடி அழ ஆரம்பித்தாள்.

 

“வரும் வழி முழுவதும் அழுது கொண்டே வந்தாள் ஜி”

 

“மேம் அந்த கதவு அதை உடைத்துத் தான் திறந்தார்கள்”

 

“சரி நீ இனி அழுது கொண்டே இருந்து என்ன பயன்”

 

“அவனுக்கு அந்தக் கதவு ரொம்பப் பிடிக்கும். அதே போலொரு அறையும் படுக்கையும் முக்கியமாக அதே கதவை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்பான்” அதற்குள் பிரியங்காவின் வீடு வந்திருந்தது.

 

“சரி நீ போய் உறங்கு. சாயங்காலம் சந்திப்போம்”

 

“இல்லை பிரகாஷ் இந்தியா வந்திறங்கிய தினம் அதிகாலை உறங்கக் கூடாது, இரவு வரை எப்படியாவது விழித்திருக்க வேண்டுமென்றான். அதற்குத்தான் சினிமாவுக்குச் செல்லலாம் என்று சொல்லியிருந்தான்”

 

“…”

 

“அவன் முகம் கோணிப்போயிருந்தது, வாயில் அப்படி நுரை தள்ளியிருந்தது.”

 

“சரி அதை எதையும் நினைக்காதே. உறங்கு. என் வீட்டுக்கு வருகிறாயா?”

 

“இல்லை ஜி. நான் இங்கேயே இருக்கேன். அவன் கோணலாக விழுந்து கிடந்தான். சட்டையெல்லாம் மேலேறி. நைட் பேண்ட் நனைந்திருந்தது”

 

“நீ அறைக்குப் போ. வா சுப்பு நாம் உன் இடத்திற்குப் போவோம். நான் வீட்டுக்குப் போக வேண்டும்”

 

“ஜி என்னை விட்டுப் போகாதீங்க”

 

“சரி என்னோடு வா வீட்டுக்குப் போகலாம்”

 

“இல்லை நான் வரலை”

 

“அப்ப நாங்க கிளம்பறோம். நீ வீட்டுக்கு வா அக்‌ஷையோடு கொஞ்ச நேரம் விளையாடுவாய்”

 

அவளையும், நாகசுப்புவையும் மீண்டும் அழைத்துக் கொண்டு நாகசுப்புவும் அவனது நண்பர்களும் தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்றோம்.

 

“சுப்பு நீ வீட்டில் இருந்து கொள்வாய் தானே அல்லது நீயும் எங்கள் வீட்டுக்கு வருகிறாயா?”

 

“இல்லை ஜி. நான் இங்கேயே இருக்கேன். சாயங்காலம் பார்ப்போம்.”

 

அங்கிருந்து வீட்டுக்கு வருவதற்குள் அக்‌ஷை எழுந்திருந்தான். வீட்டுக்கு வந்தபின்னர் தான் பிரியங்காவுக்கு மாற்று உடை எதையும் எடுத்து வரவில்லையென்பதை உணர்ந்தேன். அவளைக் குளிக்கச் சொல்லி என்னுடைய இரவு உடையொன்றைக் கொடுத்தேன். சாயங்காலம் அவளிடத்துக்குப் போய் உடை மாற்றிக்கொண்டு அங்கிருந்து பிரகாஷ் வீட்டுக்குப் போவதாகத் திட்டம். குளித்து விட்டு வந்தவள் நீண்ட நாள் உணவருந்தாது போல வேக வேகமாய் உணவு உண்டாள், இடையிடையே எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள். “போலீஸ் விசாரிசாங்க ஜி. எனக்கு ரொம்பப் பயமா இருந்தது” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அழுகை பீரிட்டது. கவனத்தைத் திசை திருப்ப அக்‌ஷையை ரைம்ஸ் சொல்லச் சொன்னேன். அவன் பாட்டும் அபிநயமும் எதுவுமே அவளைச் சரிசெய்யவில்லை. அக்‌ஷை வந்து பிரியங்காவின் கண்ணீரைத் துடைத்து “ஆன்டிய யாரும் அடிச்சிட்டாங்கல. ஏன் அழுதுட்டே இருக்காங்க” என்று என்னைக் கேட்டான்.

 

“ஜி அவன் அன்று மிக அதிகமாகக் குடித்தான். நாங்கள் ஒன்றாகத்தான் இரவு உணவு சாப்பிட்டோம்”

 

“சரி பிரியங்கா நீ இப்போது அக்‌ஷையோடு விளையாடு. அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று யோசிப்போம்.”

 

“ஜி நான் வேறு இடம் மாறிப் போகலாமென்று நினைக்கிறேன்”

 

“பிரியங்கா பேசிக் கொள்ளலாம். எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதே”

 

“என்னால் அவன் காலியான இருக்கையைப் பார்த்துக் கொண்டு…”

 

“சரி கொஞ்ச நேரம் தூங்குகிறாயா?”

 

அவள் உறங்கி எழுந்து இன்னும் தொந்தரவுக்கு உள்ளானவள் போலிருந்தாள். சிறிது அலுவலக வேலைகளை அதுவரை பார்த்து முடித்திருந்தேன், பிரியங்காவை அழைத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு, நாகசுப்புவையும் டேனியலையும் தயாராக இருக்கும்படி அழைத்தேன். அலுவலகத்திலிருந்து டேனியலையும், நாகசுப்புவை அவன் அறையிலிருந்து அழைத்துக் கொண்டு ஹரியானாவின் அம்ரூ என்ற குக்கிராமத்துக்குப் பயணமானோம். டேனியல், பிரகாஷ் வீட்டிற்கு முதல்கட்ட உதவித் தொகையாக சில லட்சத்திற்கான காசோலையைக் கையில் வைத்திருந்தார். பிரகாஷ் வீட்டு முகவரியைக் கேட்டறிந்து அங்கே செல்ல இரவு எட்டுமணியானது. நவம்பர் மாதக் குளிர் உடலைத் துளைத்தது.

 

பிரகாஷ் வீட்டில் நுழைந்ததுமே அவன் வீட்டு நிலைப்படி இடித்தது.

 

“பார்த்து வாங்க மேம்” என்ற பிரகாஷின் அம்மாவின் நெற்றியில் பெரிய காயம் இருந்தது. கட்டு போட்டிருந்தார்கள்.

 

“வாங்க டீ போடவா உங்களைப் பத்தி பீஷு நிறைய சொல்லியிருக்கான். ஓ நான் உங்க வீட்டுக்குக் கூட வந்தேனே. என் ஆஸ்துமாக்கு உங்க வீட்டிலிருந்து தானே ஹாஸ்பிடல் போனேன். ஆமா பீஷுவுக்கு என்ன ஆச்சு. அவன் நல்லாத்தானே இருக்கான். இவங்க எல்லோரும் பொய் சொல்றாங்க. நான் அவன் கிட்ட நேத்து பேசினேனே. ராஜ்மா செய்து சாதத்தோட சாப்பிட்டேன்னு சொன்னான். உனக்கு ராஜ்மாவே செய்ய தெரியாதேன்னு சொன்னேன்”

 

“அம்மா அமைதியாக இருங்க” என்று வாயில் ஒரு விரலை வைத்துச் சொன்னதும் பிரகாஷின் அம்மா அமைதியானாள். பிரகாஷின் தங்கை பிரியங்காவை  அழைத்துக் கொண்டு வெளியில் சென்றாள். டேனியல் அவளோடு போகச் சொல்லி கண் காட்டினார்.

 

“அண்ணாவுக்கு என்ன ஆயிற்று”

 

“எனக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் கிளம்பத் தயாராக இருந்தோம் பிளைட்க்கு நான்குமணி நேரமே இருந்தது. பிரகாஷ் கதவு திறக்கவே இல்லை”

 

“நீங்கள் ஏன் அவனை அப்படியே விட்டுவிட்டு கிளம்பினீங்க”

 

“அவர்களது ஐ 20 முடிந்தது. அங்கே அவர்கள் இதுக்கும் மேலே இருக்க முடியாது” என்றேன்

 

“நான் இவர்களைக் கேட்கிறேன். இவர்களே பதில் சொல்லட்டும்”

 

“எங்களால் அதுக்கும் மேலே அங்கேயிருக்க முடியாது. அது சட்டப்படி குற்றமாகிவிடும்”

 

“கடைசியாக நீங்கள் என்ன பேசினீங்க அண்ணன் என்ன சொன்னான்?”

 

“நாங்கள் முதல் நாள் எல்லோரும் ஒன்றாகச் சாப்பிட்டோம். பிரகாஷ் தான் சமைத்திருந்தான்”

 

“என்ன சொன்னான்”

 

“இனிமே என் சமையலிலிருந்து விடுதலைன்னு சொன்னான். ஜென்ரலாக பயணம் பத்தி வேலை பத்தியும் தான் பேசினோம்”

 

“அவனுக்கு ஏதாவது மனச்சுமை இருந்ததா?”

 

“இல்லை கிளம்ப இருக்கிறோம் ரொம்ப சந்தோஷமா தான் இருந்தான்”

 

“அவனுக்கு  ஒருவேளை அங்கே யாரையும் பிடித்திருந்ததோ அது நடக்காமல் ஏதேனும் செய்து கொண்டிருப்பானோ ”

 

“அப்படியெதுவும் அவன் எங்களிடம் சொல்லவில்லையே” பிரியங்காவுக்கு அடக்கமுடியாத அழுகை வந்தது. அவள் குளிரில் நிற்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தாள் “தீபமாலிகா இப்போது இவ்வளவு தான் பேச முடியும் அவளை வதைக்காதே. குளிர் வேறு உள்ளே செல்வோம்” என்று இடையிட்டு ஹிந்தியில் சொல்ல வேண்டியிருந்தது.

 

“இல்லை எனக்கு இன்னும் பேச வேண்டும். அண்ணாவுக்கு ஆனது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்”

 

அதற்குள் வீட்டினுள்ளிருந்து பிரகாஷின் அம்மாவின் ஓலம் கேட்டது. “அவன் ராஜ்மா சாப்பிட்டேன் என்றானே, இவன் தான் கூட இருந்தவனா இவன் மேல் தான் எனக்குச் சந்தேகம். அவனிடம் எவ்வளவு பணமிருந்தது அதற்காகத் தான் இப்படி செய்தானா?” நாகசுப்புவை பிடித்துக்கொண்டு பிரகாஷின் அன்னை ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தாள்.

 

பிரகாஷின் தங்கை உள்ளே ஓடியவள் “அம்மா அவரை விடு, நீ அமைதியாக இரு” என்றாள்.

 

“சரி நான் அமைதியா இருக்கேன். பிரகாஷ் வீட்டுக்கு வரனும். அவன் வரும்வரை என்னைப் பேச வேண்டாம்ன்னு சொன்னீங்கல. அவன் ராஜ்மா சாப்பிட்டேன்னு சொன்னான். அவன் வருவான்”

 

“ஆமா அம்மா அவன் வருவான்.”

 

“வருவானா. கண்டிப்பா வருவானா. அப்படியே கிண்டல், சிரிப்பு, அப்படியே வருவானா?”

 

“அவன் வருவான் அம்மா”

 

“அவன் ராஜ்மா சாப்பிட்டேன்னு சொன்னானே. இவன் இல்லை என்கிறான். இவன் பொய் சொல்றான் என்பிள்ளை என்னிடம் எதுக்கும் பொய் சொல்ல மாட்டான் எதுவுமே மறைச்சது இல்லை”

 

“அம்மா நீ போய் டீ போடு”

 

“சரி ஆமா பிரகாஷ் மேம் வந்திருக்காங்க. டீ போடனும். அவன் ஒருமுறை மேம் வீட்டில எல்லோரும் வருவாங்க பாலக் பூரி பண்ணிக் கொடுக்கனும்ன்னான். நான் பாலக் பூரி பண்ணவா?”

 

“அம்மா நீங்க இங்கே உட்காருங்க நான் உங்களிடம் பேசனும்” என்றேன்.

 

“மேம் பிரகாஷ் சொல்லியிருக்கான் நீங்க ரொம்ப திறமைசாலின்னு நீங்க ஏன் மேம் அவனை அமெரிக்கா அனுப்பினீங்க. நீங்களே போயிருக்கலாமே? இப்ப தான் அவன் ராஜ்மா சாப்பிட்டேன்னு சொன்னானே. நான் கூட சொன்னேன் உனக்கு ராஜ்மா எல்லாம் பண்ண தெரியாதேன்னு சொன்னேன். கம்பியூட்டர்ல பார்த்து பண்ணேன். நீ பண்றது போலவே இருந்தது. உனக்கு பண்ணி தரேன்னு சொன்னானே. இவன் என்னவோ வேற சாப்பிட்டதா சொல்றான். இவன் பொய் சொல்றான். அவன் சொன்னான் அவன் வருவான். அவன் எப்படி இல்லாம போயிருப்பான்”

 

“அம்மா நாங்க எல்லாம் இருக்கோம். கம்பெனி பிரகாஷ்க்கு நிறைய செய்யும்”

 

“ஆமா உங்க கம்பெனி தான் கொள்ளியும் போட்டுட்டீங்களே. நீங்க எதுக்கு வந்தீங்க என் மகனை குடுங்க”

 

“அம்மா உன்னை என்ன சொன்னேன்”

 

பிரகாஷ் அம்மா வாயில் ஒருவிரலை வைத்துக் கொண்டு சத்தம் எழுப்பக்கூடாதென்ற பாவனை செய்து, “ம் சரி தீபி நான் பேசல. நான் பேசல. கத்தல. நீயும் என்ன விட்டு போயிடாத. ஆனா இவங்களை எல்லாம் போக சொல்லு. உடனே போக சொல்லு. சாரி மேம். நான் பாலக் பூரி இன்னொரு நாள் பண்ணித் தரேன்.”

 

அப்படியே அமைதியாகக் கிளம்பத் தயாரானோம். ஒருமுறை நாகசுப்பு அந்த அன்னையில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போல் போனான். டேனியல் அவனைத் தடுக்கப் போனான். அதற்குள் நாகசுப்பு பிரகாஷ் அம்மாவின் காலில் விழுந்துவிட்டான். “அம்மா என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று சொன்னதும் அந்த அம்மா அவனை எடுத்து அணைத்து அழ ஆரம்பித்தாள்.

 

“என்னை மன்னிச்சிக்கோங்க. நான் எதுவும் தவறாக பேசியிருந்தா தப்பா எடுத்துக்காதீங்க. அந்த பொண்ணு பிரியங்கா எங்க. வந்திருக்கானு சொன்னாங்களே. அவன் சொல்லியிருந்தான். இவளை கூட்க்டிகிட்டு வருவேன்னான். என்கிட்ட காட்டி ஆசீர்வாதம் வாங்குவேன்னு சொன்னான். ஆனா இப்போ இவ மட்டும் தனியா வந்திருக்காளே.” என்றவள் சிறிது உடைந்தழுதாள். தனது கழுத்திருந்த தங்கசரடில் கோர்க்கப்பட்ட முத்து மாலையைக் கழற்றி பிரியங்காவின் கழுத்தில் போட்டாள். “இது பிரகாஷ் எனக்கு முதல் சம்பளத்தில் வாங்கியது.” பிரியங்கா நடுங்கிப் போனாள். அதைக் கழற்ற முயற்சி செய்த போது விழிகளை உருட்டி “அதைக் கழற்றக் கூடாது” என்றாள். தீபமாலிகா அன்னையின் செய்கைக்காக மன்னிப்பு கேட்டாள். ஆனால் அந்த முத்துமாலையை மட்டும் தற்சமயம் கழற்றிவிட வேண்டாம் என்று கண்ணீர்மல்கச் சொன்னாள்.

 

நாங்கள் அனைவரும் திரும்பினோம். மணி பன்னிரண்டாகியிருந்தது.“நாம் இப்போதே வந்தது தவறாகி விட்டதோ டேனியல்?”

 

“இல்லை ஜி நாம் வந்தது சரி தான்” என்றாள் பிரியங்கா.

 

“..”

 

“ஸகுன் கொடுப்பதைப் பற்றி பிரகாஷ் சொல்லியிருக்கான். பெண் பார்க்கப் போகும்போதோ அல்லது பிடித்திருக்கிறது என்று உறுதி செய்யும் நாளன்று தங்கம் ஏதேனும் கொடுப்பது அவர்கள் வழக்கம். ஆனா அவன் ….”

 

“பிரியங்கா இனி இதைப் பற்றி நினைக்காதீங்க. அந்த அம்மா சொன்னது எதையும் நீங்களோ நாகசுப்புவோ மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்றான் டேனியல்

 

“இந்த மாலையை என்ன செய்யட்டும்?”

 

“மீண்டும் காசோலை கொடுக்கப் போகும் போது திரும்பிக் கொடுத்து விடுங்கள்” என்றேன். பிரியங்காவின் விரல்கள் அந்த முத்துமாலையை வருடிக் கொண்டிருந்தது.

 


  • லாவண்யா சுந்தரராஜன்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.