மென்சாரல் மழை பொழியத் துவங்கும்

ரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக் கிடந்தது. கடிகாரம் தன் ஒலியை மீண்டும் மீண்டும் வெறுமைக்கு அளித்தபடி இருந்தது. ஏழு-ஒன்பது, காலை உணவுக்கான நேரம், ஏழு-ஒன்பது!

சமையலறையில், காலை உணவு தயாரிக்கும் அடுப்பு மெல்லியதொரு சத்தத்தைக் கொடுத்தது. அதன் வெதுவெதுப்பான உட்பகுதியிலிருந்து நன்கு முறுகலாக்கப்பட்ட எட்டு ரொட்டித் துண்டுகளும், வெந்த பகுதி மேலே தெரியும்படியான எட்டு முட்டைகளும், பதனிடப்பட்டு வறுக்கப்பட்ட பன்றி இறைச்சி பதினாறு துண்டுகளும், இரண்டு கோப்பை காஃபியும், குளிர்ந்த பால் இரண்டு குவளைகளும் வெளியே வந்தன.

”கலிஃபோர்னியா ஆலண்டேல் நகரில் இன்று ஆகஸ்ட் 4, 2026,” சமையலறை மேற்பரப்பிலிருந்து இன்னொரு குரல் ஒலித்தது. நினைவில் தங்கும் பொருட்டு அது அன்றைய நாளை மூன்று முறை ஒப்பித்தது. “இன்று திரு. ஃபெதர்ஸ்டோனின் பிறந்தநாள். இன்று டிலிட்டாவின் திருமண நாள். காப்புறுதிக் கட்டணமும், தண்ணீர், சமையல் வாயு மற்றும் மின்சாரக் கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது.”

சுவர்களில் எங்கோ, இடைமாற்றீடுகள் சொடுக்கின. மின்சக்தி கண்களின் கண்காணிப்பில்  நினைவக நாடாக்கள் ஊர்ந்து சென்றன.

எட்டு-ஒன்று, டிக்-டாக், மணி எட்டு-ஒன்று, பள்ளி செல்லும் நேரம், அலுவலகம் செல்லும் நேரம், மணி எட்டு-ஒன்று! ஆனால் கதவுகள் எவையும் திறக்கப்படவில்லை. இரப்பர் சரிவுகள் நீக்கப்படவில்லை, எந்தத் தரைவிரிப்புகளும் மடிக்கப்படவில்லை. வெளியே மழை பொழிந்துகொண்டிருந்தது. முன் வாசல் கதவில் பொருத்தப்பட்டிருந்த வானிலைப் பெட்டி மெதுவாகப் பாடிக்கொண்டிருந்தது. “மழையே, மழையே, போ போ! குடைகள் மற்றும் மழையங்கிகளை இன்று…” காலி வீட்டின் மீது மழை பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது.

வெளியே வாகனக்கூடம் மணியோசை எழுப்பியபடி, காத்திருக்கும் கார் வெளியே வருவதற்காக தன் கதவை மேலுயுயர்த்தியது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கதவு மீண்டும் கீழே இழுத்துக்கொண்டது.

எட்டு-முப்பது மணிக்கு முட்டைகள் உலர்ந்துபோய், ரொட்டிகள் கல் போல் கடினமாகின. அலுமினியத் தக்கை ஒன்று அவற்றைக் கழிவு மித்தத்தில் தள்ளிவிட்டது. அங்கே சுழன்று ஓடிய வெந்நீர் அவற்றை ஒரு உலோகக் குழாய்க்குள் உள்ளிழுத்து, எங்கோ தூரத்திலிருக்கும் கடல் நோக்கிக் கழுவித் தள்ளியது. அழுக்கான பாத்திரங்கள் சூடான கழுவும் இயந்திரத்திற்குள் போடப்பட்டு, பளிச்சிடும் சுத்தத்துடன் துடைத்து வெளியே வந்தன.

ஒன்பது-பதினைந்து, கடிகாரம் இசைத்தது, சுத்தம் செய்யும் நேரம்.

சுவர்களில் இருந்த துளைகளிலிருந்து சிறிய இயந்திர சுண்டெலிகள் குதித்து வந்தன. இரப்பர் மற்றும் உலோகத்தால் ஆன அந்த சிறிய துப்புரவு விலங்குகள் வீடு முழுவதும் ஊர்ந்தன. அவை தங்கள் மீசைகளைச் சுழற்றியபடி நாற்காலிகளின் மீது மெத்தென விழுந்தன, கம்பளித் துடைப்பத்தைக்கொண்டு ஈரப்படுத்தி, மறைந்திருந்த தூசு அனைத்தையும் மெதுவாக உறிஞ்சிக் கொண்டன. பின்னர் அவை இரகசியப் போர்வீரர்களைப் போல, தங்கள் துளைகளுக்குள் பதுங்கிக் கொண்டன. அவற்றின் வெளிர் சிவப்பு மின்சக்திக் கண்கள் ஒளி குன்றின. வீடு சுத்தமாகியது.

பத்து மணி. மழையின் பின்னால் இருந்து சூரியன் எழுந்தது. இடிபாடுகளும் சாம்பல்களும் மண்டிய நகரத்தில் அந்த வீடு தனியாக நின்றது. இரவில், பாழ்பட்ட நகரம் பல மைல் தூரத்திற்குக் கதிரியக்கத்தை உமிழ்ந்திருந்தது. அந்த வீடு மட்டுமே எஞ்சியது.

பத்து-பதினைந்து. பொன்நிற நீராற்றுகளில் சுழன்ற தோட்டத்துத் தெளிப்பான்கள், காலைத்தென்றலை பிரகாச ஒளிச் சிதறல்களால் நிரப்பின. ஜன்னல் கண்ணாடிகளைத் துளைத்த நீர், முழுதும் கருகிப் போயிருந்த வீட்டின் மேற்குப் பக்கம் ஓடியது. மேற்குப் பக்கச் சுவரில் வெள்ளை வண்ணத்தில் ஓர் ஓவியம் வரையப்பட்டிருந்தது. ஓவியத்தில் ஐந்து இடங்களைத் தவிர மற்ற அனைத்தும் முழுமையாகக் கறுப்படைந்திருந்தன. ஒருவன் புல்வெளியைச் சமன் செய்வது போல் வரையப்பட்ட ஒரு சித்திரம். குனிந்து பூக்களைப் பறிக்கும் ஒரு பெண்ணின் சித்திரம். அவற்றைத் தாண்டி தூரத்தில் அவர்களின் பிம்பங்கள் மரத்தில் எரிந்துகொண்டிருப்பது போன்று தோன்றின. அதன் பின், ஒரு சிறுவன் கைகளை உயரே வீசியது போலக் காற்றில் குதித்தபடி இருக்க, இன்னும் உயரத்தில் அவன் எறிந்த பந்தின் சித்திரம். அவனுக்கு எதிரே ஒரு சிறுமி எப்போதும் கீழே விழவே விழாத அந்தப் பந்தைப் பிடிப்பதற்காகக் கைகளை உயர்த்தியபடி இருக்கும் சித்திரம்.

அந்த ஓவியத்தின் ஐந்து தடங்கள் – ஒரு மனிதன், பெண், குழந்தைகள் மற்றும் பந்து ஆகியவை மட்டும் எஞ்சியிருந்தன. மற்ற அனைத்திலும் மெல்லிய கரிப் படுகை படிந்திருந்தது.

மென் தூறல் மழை, தோட்டத்தை, விழும் ஒளியால் நிரப்பின.

இந்த நாள் வரை, அந்த வீடு தன் அமைதியை எத்தனை அருமையாகப் பேணிக் காத்தது. ”யார் அங்கே? உங்கள் கடவுச்சொல் என்ன?” என்று எவ்வளவு கவனமாக விசாரித்தது. தனித்து வரும் நரிகள் மற்றும் சிணுங்கியபடி வரும் பூனைகளிடமிருந்து பதில் வராத போது, அது தன் ஜன்னல்களை மூடி அடைத்தபடி, திரைச்சீலையை இழுத்துவிட்டுத் தற்காப்புடன் செயல்படும் முதிய பணிப்பெண்ணைப் போல, இயந்திரகதியாய் பாதுகாப்பை உறுதி செய்து வந்தது.

ஒவ்வொரு சத்தத்திற்கும் அந்த வீடு அதிர்ந்தபடி இருக்கும். ஒரு சிட்டுக்குருவி ஜன்னலை உரசினால், உடனே திரைச்சீலை மூடிக்கொள்ளும். திடுக்கிடும் பறவை வேகமாகப் பறந்துவிடும். ஒரு பறவையால் கூட அந்த வீட்டைத் தொட முடியாமல் இருந்தது.

மதியம் பன்னிரண்டு மணி.

வீட்டின் முகப்புத் திண்ணையில் ஒரு நாய் நடுங்கியபடி, ஊளையிட்டது.

நாயின் குரலை அடையாளம் கண்டு, வாசல் கதவு திறந்தது. ஒரு காலத்தில் கொழுத்துப் பெரியதாக இருந்த நாய், இப்போது புண்கள் அப்பிப் போய் எலும்பும் தோலுமாய் இருந்தது. அது வீட்டிற்குள் செல்ல, அதன் கால்களிலிருந்த சகதி, வீடெங்கும் தடம் பதித்துச் சென்றது. அழுக்கின் அசௌகரியத்தால் கோபமுற்ற இயந்திர எலிகள், நாயின் பின்னால் கரகரவென ஒலி எழுப்பியபடி சென்று, சகதியைச் சுத்தம் செய்தபடி சென்றுகொண்டிருந்தன.

வீட்டில் ஒரு சருகு இலை கூட கதவுக்கடியில் கிடக்காது. உடனே சுவர்ப் பலகைகள் திறந்து அவற்றிலிருந்து இயந்திர எலிகள் துரிதமாக வெளியேறத் துவங்கிவிடும். கீழே விழும் தூசி, முடி, காகிதம் எதுவானாலும் சிறிய இரும்புத் தாடைகளில் அரைபட்டு துளைகளுக்குள் உள்ளிழுத்துச் செல்லப்பட்டுவிடும். அங்கே, குழாய் வழியாக நிலவறைக்குச் சென்று அங்கிருந்து இருண்ட மூலையில் கொடிய பிசாசு போல் அமர்ந்திருக்கும் எரியுலையின் வாயினுள் கொட்டப்படும்.

நாய் மாடிக்குச் சென்று, ஒவ்வொரு கதவின் முன்பும் மிரட்சியுடன் குரைத்தது. கடைசியில் அந்த வீடு உணர்ந்துகொண்டதைப் போல, அதுவும் அங்கே அமைதி மட்டுமே குடியிருப்பதை உணர்ந்தது.

நாய் காற்றை நுகர்ந்தபடி, சமையலறை கதவைப் பிறாண்டியது. கதவுக்குப் பின்னால், அடுப்பு தயாரித்துக் கொண்டிருந்த தோயப்பத்தின் அருமையான வாசனையும், மேப்பிள் சாற்றின் மணமும் வீடெங்கும் நிறைந்திருந்தது.

நாய் வாயில் எச்சில் ஊறியபடி, மோப்பம் பிடித்துக் கொண்டு கதவுக்கருகில் படுத்தது. அதன் கண்கள் நெருப்பாய் எரிந்தன. அது பைத்தியக்காரத்தனமாக வட்டமடித்துச் சுற்றியபடி, தனது வாலைத் தானே கடித்துக்கொண்டு, வெறித்தனமாகச் சுழன்றபடி இறந்து விழுந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அது முன் முற்றத்தில் கிடந்தது.

இரண்டு-மணி, குரல் இசைத்தது.

பின்பு, மெதுவாகச் சிதைவை உணரத் துவங்கிய எலிகளின் படை மின் சுழற்சியில் பூத்த சாம்பல் இலைகளைப் போல மென்மையாக முனங்கியபடி முன்னேறின.

இரண்டு-பதினைந்து.

நாய் இருந்த தடம்கூட இல்லை.

திடீரென்று நிலவறையில் எரியுலை கனன்று எரிந்தது. தீப்பொறிகளின் சுழற்சி, புகைப்போக்கியைத் தாண்டிச் சென்றது.

இரண்டு முப்பத்து-ஐந்து.

உள்முற்றச் சுவர்களிலிருந்து சீட்டுக்கட்டு மேஜைகள் முளைத்தன. குழாயிலிருந்து சீட்டுக்கட்டுகள் மெத்தை மீது படபடத்தபடி விழுந்தன. கருவாலி மர நீள் இருக்கைகளில் முட்டைப் பொரியல் சேர்த்த அடுக்கு ரொட்டிகளும், பிஸ்கட்டுகளும் பரிமாறப்பட்டன. இசை ஒலித்தது.

ஆனால் மேஜை நிசப்தத்தால் சூழப்பட்டிருந்தது. சீட்டுகள் தொடப்படாமல் கிடந்தன.

நான்கு மணிக்கு, மேஜைகள் பெரிய பட்டாம்பூச்சிகளைப் போல மடிக்கப்பட்டு மீண்டும் சுவர் அடுக்குகளுக்குள் சென்று விட்டன.

நான்கு-முப்பது

குழந்தைகள் காப்பக சுவர்கள் ஒளிர்ந்தன.

பல்வேறு விலங்குகள் வடிவம் கொண்டன: ஸ்படிகத் திரையில் மஞ்சள் ஒட்டகச் சிவிங்கிகள், நீல சிங்கங்கள், இளஞ்சிவப்பு மான்கள், இளம் ஊதா சிறுத்தைகள் துள்ளிக் குதித்தன. சுவர்கள் கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தன. விலங்குகள் ஜொலிஜொலிப்புடனும் கற்பனைத் திறனுடனும் காணப்பட்டன. மறைந்திருந்த படச்சுருள்கள் நன்கு மசகிடப்பட்ட சங்கிலிக் கண்ணிகளின் வழியே சுழன்றுகொண்டிருந்தன. சுவர்கள் உயிரோட்டமாகத் தோன்றின. காப்பக தரை, சுருள் சுருளான புல்வெளியை ஒத்திருப்பது போன்று நெய்யப்பட்டு இருந்தது. அதற்கு மேல் அலுமினிய வெள்ளி மீன்களும், இரும்பு சிள்வண்டுகளும் ஓடிக்கொண்டிருந்தன. நிலைத்திருந்த வெதுவெதுப்பான காற்றில், மெல்லிய சிவப்புச் சிறகுகள் கொண்ட பட்டாம்பூச்சிகள், விலங்குகளின் நறுமண மோப்பத் தடங்களின் ஊடாக சிறகடித்துக் கொண்டிருந்தன! இருண்ட குகைகளுக்குள் மிகப்பெரிய மஞ்சள் தேன்கூட்டைக் கொண்ட தேனீக்கள் ரீங்காரமிடும் சத்தமும், சோம்பேறித்தனமாக முறுவலிக்கும் சிங்கத்தின் குரலும் ஒலித்தன.  வரிமான்களின் குளம்பொலிகளும், காட்டில் பெய்யும் புது மழையின் இரைச்சலும், மற்ற குளம்படிகளும் கோடைக்கால சொரசொரப்பான புல்வெளியில் விழுவது போன்ற சத்தமும் கேட்டன. இப்போது உலர்ந்த புல்வெளிகளுக்குள்ளும், நீண்ட வெம்மையான வானத்திற்குள்ளும் சுவர்கள் மறைந்து அமிழ்ந்தன. விலங்குகள் புதர்க்காடுகளுக்குள்ளும், நீர்க்குட்டைகளுக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தன. அது குழந்தைகளுக்கான நேரம்.

ஐந்து மணி. குளியல் தொட்டியில் சுத்தமான வெந்நீர் நிறைந்தது.

ஆறு, ஏழு, எட்டு மணி. இரவு உணவுகள் ஒரு சுட்டலில் மாய வித்தைகளைப் போல, வரிசையில் பரிமாறப்பட்டன. வெதுவெதுப்பாகக் கனன்று கொண்டிருந்த அடுப்புக்கு எதிரே இருந்த ஒரு உலோக நிறுத்தத்தில், பற்ற வைக்கப்பட்டு அரை இஞ்ச் அளவுக்கு மெல்லிய சாம்பல் படிந்து, புகைப்பதற்குத் தயாராக இருந்த சிகரெட் நீட்டப்பட்டது.

ஒன்பது மணி. இங்கே இரவுகள் குளிராக இருப்பதால் படுக்கைகள் தங்கள் மறை மின் சுற்றுகளின் மூலம் வெதுவெதுப்பாக்கிக் கொண்டன.

ஒன்பது-ஐந்து. படிப்பறை மேற்கூரையிலிருந்து ஒரு குரல் ஒலித்தது. “திருமதி. மெக்லிலன், இன்றைய மாலைப் பொழுதில் எந்தக் கவிதையைக் கேட்க விரும்புகிறீர்கள்?” வீடு நிசப்தமாக இருந்தது.

குரல் மீண்டும் ஒலித்தது, ”உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தாததால், தற்செயலில் ஒரு கவிதையைத் தேர்வு செய்கிறேன்” குரலையொற்றி மெல்லிய இசை எழுந்தது. ”உங்களுக்கு விருப்பமான சாரா டெஸ்டேலின் கவிதையை நினைவுகூர்கிறேன்…

மென்சாரல் மழை பொழியத் துவங்கும், மண் வாசனை துளிர்க்கும்,

தூக்கணாங்குருவிகள் தங்கள் மினுமினுக்கும் சத்தத்துடன் வட்டமடிக்கும்;

 

இரவெங்கும் குளத்துத் தவளைகள் இசை படிக்கும்,

நடுங்கும் பனியில் காட்டுப் பிளம் மரங்கள் உறைந்திருக்கும்;

 

தாழ்வான வேலிக் கம்பிகளில் அமர்ந்தபடி தங்கள் இச்சைகளைச் சீழ்க்கை ஒலியில் தெரிவிக்கும்

ராபின் குருவிகளின் இறகுகளில் கதகதப்பு படிந்திருக்கும்;

 

ஒருவருக்கும் போரைப் பற்றித் தெரியாது,

போர் எப்போது முடியுமென்ற கவலையும் ஒருவருக்கும் கிடையாது.

 

யாருக்கும், எந்தப் பறவைக்கும் மரத்துக்கும்

மனித இனம் அழிவது குறித்து எந்த அக்கறையும் கிடையாது;

 

விடியலில் வசந்தம் எட்டிப்பார்க்கும் போது கூட

நாம் முற்றிலும் மறைந்துவிட்டோம் என்று அது அரிதாகவே அறிந்திருக்கும்.”

 

கல் அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. சாம்பல் திரட்டு இருந்த தட்டில் சிகரெட் விழுந்தது. நிசப்தமான சுவர்களுக்கு நடுவே இருந்த காலி நாற்காலிகள் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருந்தன. இசை ஒலித்தது.

பத்து மணிக்கு வீடு மரணிக்கத் துவங்கியது.

காற்று வீசியது. முறிந்து விழுந்த மரக்கிளை சமையலறை ஜன்னலைத் தகர்த்தது. சுத்தம் செய்யப் பயன்படும் கரைசல் பாட்டில்கள் அடுப்பின் மீது சிதறி உடைந்தது. ஒரு நொடியில் அந்த அறை தீப்பற்றிக் கொண்டது!

”தீ!” என்று ஓர் அபாயக் குரல் அலறியது. விளக்குகள் ஒளிர்ந்தன, மேற்கூரையிலிருந்து விசைக்குழாய்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தன. ஆனால் கரைசல் தரை விரிப்புகளின் மூலம் சமையலறைக் கதவுகளுக்கு அப்பாலும் பரவியது. கூட்டு எச்சரிக்கை குரல்கள் இரைந்தன: “தீ, தீ, தீ!”

வீடு தன்னைக் காத்துக் கொள்ள முயன்றது. கதவுகள் அறைந்து இறுக்க மூடிக்கொண்டன. ஆனால் வெப்பத்தினால் ஜன்னல்கள் உடைந்து, காற்று பலமாக வீசி நெருப்பினால் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு அறையாக அபகரித்து, படிகளில் முன்னேறிச் சென்ற, கோடிக்கணக்கான தீப்பொறிகளைக் கொண்டு பற்றி எரியும் நெருப்பிற்கு முன்னால் வீடு தன்னை ஒப்புக் கொடுத்தது. சுவர்களில் இருந்து கீச்சிட்டபடி விரைந்த தண்ணீர் எலிகள், நீரைப் பீய்ச்சியடித்தபடி இங்குமங்கும் ஓடின. சுவர் தெளிப்பான்கள் செயற்கை மழையைப் பொழிவித்துக் கொண்டிருந்தன.

ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எங்கோ ஒரு விசைக் குழாய் தடுமாற்றத்துடன் செயல்பாட்டை நிறுத்தியது. குளிர்விக்கும் மழை நின்றது. இத்தனை நாட்களாகக் குளிக்கவும், பாத்திரம் கழுவவும் பயன்பட்ட தண்ணீர் இருப்பு தீர்ந்து போனது.

நெருப்பு படிக்கட்டுகளை முறித்துப் போட்டது, மாடி வரவேற்பறையிலிருந்த பிகாசோ, மேட்டிஸ் ஓவியங்களை எண்ணெய்யில் பொறிந்த இறைச்சியைப் போல மாற்றியது, ஓவியச் சட்டகங்களைக் கறுப்புச் சுருள் படிமங்களாக உரித்துப் போட்டது.

இப்போது நெருப்பு படுக்கைகளில் கிடந்தது, ஜன்னல்களில் எழுந்து நின்றது, திரைச்சீலைகளின் நிறங்களை மாற்றியது!

அதன் பிறகு, மறுசீரமைப்பு: பரண் கதவுகளிலிருந்து, குழாய்வாய் கொண்ட இயந்திர முகங்கள் கீழிறங்கி வந்து, பச்சை இரசாயனத்தைப் பாய்ச்சியது.

இறந்த பாம்பைப் பார்த்து அச்சம் கொள்ளும் யானையைப் போல, நெருப்பு பயந்து அணைந்தது.

இப்போது இருபது பாம்புகள் தரையெங்கும் ஊர்ந்து, பச்சை நுரை பொங்கும் தங்கள் கொடிய விஷத்தைக் கக்கியபடி நெருப்பைக் கொல்ல முனைந்தன.

ஆனால், நெருப்பு தந்திரமிக்கது. பரணிலிருந்த குழாய்களின் வழியே வீட்டிற்கு வெளிப்புறமும் தன் சுவாலைகளைப் படர விட்டிருந்தது. பெரு வெடிப்பு! பரணிலிருந்து இயந்திரக் குழாய்களை இயக்கிக் கொண்டிருந்த மூளை, வெங்கலத் துகள்களாகச் சிதறி தூண்களின் மீது தெறித்தது.

நெருப்பு ஒவ்வொரு அலமாரியாக நுழைந்து, தொங்கிக்கொண்டிருந்த உடைகளைத் தீண்டியது.

வீடு நடுநடுங்கியது. கருவாலி மரத்தாலான அதன் நிர்வாண எலும்புக் கூடு, வெப்பத்தினால் அஞ்சியது. ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர், உடலின் தோலைக் கிழித்து உள்ளிருக்கும் சிவப்பு நாளங்களையும், இரத்த நுண் குழாய்களையும் திறந்து வைத்திருப்பதைப் போல, வீட்டின் நரம்புகளான கம்பிகள் வெளியே திறந்து கிடந்தன. உதவி, உதவி! தீ! ஓடுங்கள், ஓடுங்கள்! பனிக்காலத்து முதல் பனிக்கட்டியை நொறுக்குவதைப் போல, வெப்பம் கண்ணாடிகளை சுக்குநூறாக்கியது. குரல்கள் ஓலமிட்டன. தீ, தீ, ஓடுங்கள் என்று பத்துப் பதினைந்து குரல்கள், காட்டிற்குள் தனிமையில் உயிர்பயத்துடன் அலையும் குழந்தைகள் அரற்றுவதைப் போல, சோகமான குழந்தைப் பாடல் ஏற்ற இறக்கத்துடன் இசைப்பதைப் போல ஒலித்தன. சூடான பாதாம் கொட்டைகள் ஓடுகளிலிருந்து பட்டென வெடித்துத் திறப்பதைப் போலக் கம்பிகள் வெடித்ததும், குரல்கள் மங்கத் துவங்கின. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து… குரல்கள் மரித்தன.

குழந்தைகள் காப்பகத்தில், காடு எரிந்தது. நீல சிங்கங்கள் கர்ஜித்தன, ஊதா ஒட்டகச் சிவிங்கிகள் தாவின. சிறுத்தைகள் நிறங்களை மாற்றியபடி வட்டமிட்டுச் சுற்றி ஓடின. நெருப்பின் முன் ஓடிக்கொண்டிருந்த ஒரு லட்சம் விலங்குகள் தூரத்தில் தெரிந்த ஓடையை நோக்கி ஓடி மறைந்தன. இன்னும் பத்து குரல்கள் மரணமடைந்தன.

நெருப்புப் பெருவெள்ளத்தின் இறுதித் தருணத்தில், நேரத்தை அறிவிக்கும் குரல், தானியங்கி புல்வெட்டி புல்வெளியைச் சீரமைக்கும் விசை, மூர்க்க வெறியுடன் குடையைத் திறந்து மூடும் அமைப்பு, அறைந்து சாத்தி மீண்டும் திறக்கும் நுழைவாயில் கதவு என்று ஆயிரமாயிரம் பணிகள் ஒரே நேரத்தில் தாறுமாறாகச் செயல்படத் துவங்கின. அவை கடிகாரக் கடையில் ஒரு கடிகாரத்தில் மணி அடிக்கத் துவங்குகையில், அதற்கு முன்பும் பின்புமாக எல்லா கடிகாரங்களும் ஒலிப்பதை ஒத்திருந்தன. ஒத்திசைவோடும், பிறழ்வுகளோடும் நிறைந்த பித்தேறிய குழப்ப ஒலி அங்கே சூழ்ந்தது. அசுத்தமாகப் பரவிக் கிடக்கும் எரிசாம்பலை சுத்தம் செய்யும் பொருட்டு, கடைசியாக எஞ்சியிருந்த சில துப்புரவு எலிகள் முனைப்புடனும் வீரத்துடனும் பாய்ந்து வந்தன. அனைத்துத் திரைச்சுருள் உருளைகளும் எரிந்து, எல்லா கம்புகளும் பொசுங்கி, மின்சுற்றுகள் யாவும் வெடித்துச் சிதறும் வரை, சூழ்நிலையை மென்மையாகப் புறந்தள்ளிய ஒரு குரல், தீர்க்கமான ஆய்வு மனப்பான்மையுடன் உரத்த குரலில் கவிதை வாசித்துக் கொண்டிருந்தது.

வீட்டை முழுமையாக வெடிக்க வைத்த நெருப்பு, தீப்பொறியையும், புகையையும் கக்கியபடி அதைத் தரை மட்டமாக்கியது,

சமையலறையில், மரக் கட்டைகளோடு நெருப்பு மழை பொழிவதற்கு முன்பான தருணத்தில், அடுப்பு பத்து டஜன் முட்டைகள், முறுகலாக வறுத்த ஆறு ரொட்டி அடுக்குகள், இருபது டஜன் பன்றி இறைச்சித் துண்டுகள் என்று பைத்தியக்காரத்தனமாகத் தயார் செய்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது. அவை அனைத்தையும் உண்டு முடித்த நெருப்பு, அடுப்பை மீண்டும் உயிர்ப்பித்து வெறித்தனமான சீறொலி எழுப்பச் செய்தது.

பெருந்தகர்ப்பு. பரண் சமையலறையையும், முகப்பறையும் தகர்த்தபடி விழுந்தது. முகப்பறை நிலவறையையும், நிலவறை அதன் கீழடுக்கையும் தகர்த்தன. சாய்வு நாற்காலிகள், திரைச்சுருள் நாடாக்கள், மின்சுற்றுகள், படுக்கைகள் மற்றும் எலும்புக்கூடாக உறைந்து போயிருந்த அனைத்துப் பொருட்களும் உள்ளே ஆழத்தில் குப்பைக் காடாகத் தூக்கி எறியப்பட்டன.

புகை, நிசப்தம் மற்றும் மிகப்பெரிய புகை மண்டலம்.

கிழக்கு மங்கலாக விடியத் துவங்கியது. அத்தனை அழிபாடுகளுக்கு இடையே, ஒரு சுவர் மட்டும் தனித்து நின்றது. குவிந்திருந்த கற்குவியல் மற்றும் புகைக்கு மேலே சூரியன் உதித்து எழுந்த போது, சுவருக்குள்ளிருந்து ஒரு கடைசிக் குரல் மீண்டும், மீண்டும் ஒலித்தபடியே இருந்தது:

இன்று ஆகஸ்ட் 5, 2026, இன்று ஆகஸ்ட் 5, 2026, இன்று…”

(”மென்சாரல் மழை பொழியத் துவங்கும்” என்னும் இச்சிறுகதை, அணுக்குண்டு வீச்சினால் சிதைவுற்ற ஒரு தனித்த வீட்டைப் பற்றியது. இச்சிறுகதை 1950ஆம் ஆண்டு மே 6ம் தேதி பிரசுரமான காலியர் இதழில் முதலில் வெளியாகியது. பின்பு, இக்கதை சற்று திருத்தி எழுதப்பட்டு ப்ராட்பரியின் “தி மார்ஷியன் க்ரோனிகில்ஸ்” நாவலில் “ஆகஸ்ட் 2026 – மென்சாரல் மழை பொழியத் துவங்கும்” என்ற தலைப்பில் ஒரு அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது. இந்த இரண்டு பதிப்புகளுக்கும் இடையே இருந்தது வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே. 1997ம் ஆண்டு வெளிவந்த மறுபதிப்பில், “தி மார்ஷியன் க்ரோனிகில்ஸ்” நாவல் 1950ம் ஆண்டு பதிப்பில் குறிப்பிட்ட எல்லா நாட்களும் 31 ஆண்டுகள் முன்னகர்த்தப்பட்டு, “ஆகஸ்ட் 2057 – மென்சாரல் மழை பொழியத் துவங்கும்” என்று மாற்றியமைக்கப்பட்டது. சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா இடையேயான பனிப்போர், அணு ஆயுதப் போராக மாறும் என்று நிலவிய அச்சத்தின் காரணமாக இக்கதையை எழுதியதாக ரே ப்ராட்பரி குறிப்பிட்டுள்ளார்)

ரே ப்ராட்பரி

தமிழில் :பாலகுமார் விஜயராமன்


ரே டக்ளஸ் ப்ராட்பரி (ஆகஸ்ட் 22, 1920 – ஜூன் 5, 2012) அமெரிக்க எழுத்தாளர் மற்றும் திரைக்கதையாளர். இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ரே, கனவுருப் புனைவு, அறிவியல் புனைவு, மர்மக் கதைகள், யதார்த்த புனைவு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பயணித்திருக்கிறார். ப்ராட்பரி ஸ்வீடனிலிருந்து குடியேற்றம் பெற்ற தாய்க்கும், ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்த தந்தைக்கும் அமெரிக்காவின் இனினாய்ஸ் மாகாணத்தின் வாகிகன் நகரில் பிறந்தார், தனது குழந்தைப் பருவத்தில், நிறைய குடும்ப உறுப்பினர்களால் சூழப்பட்டு வளர்ந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போது, இவரது அத்தை நிறையக் கதைகளை வாசித்துக் காட்டுவார். அத்தகைய குடும்ப அமைப்பே, அவர் எழுத்தாளர் ஆவதற்கு அடித்தளமிட்டன. இளமைப் பருவம் முழுக்க, ஆர்வாக வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்த ரே, தனது பதினோராவது வயதில் சொந்தமாகக் கதைகள் எழுதத் துவங்கினார். ப்ராட்பரி பண்பாடு மற்றும் கலை குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவை அத்துறைகளிலிருந்த விமர்சகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. ஆனால் இவர் தனது புனைவுகளில் பண்பாட்டையும், சமூகத்தையும் கேள்வி கேட்பவராக இருந்தார். இவர் தனது ஃபாரன்ஹீட் 451 (1953) நாவல் மற்றும் மார்ட்டின் க்ரோனக்கில்ஸ் (1950) மற்றும் தி இல்லஸ்ட்ரேட்டட் மேன் (1951) சிறுகதைத் தொகுப்புகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். பெரும்பான்மையான இவரது சிறந்த படைப்புகள் யூக புனைவு வகைமையைச் சேர்ந்தவை. மோபி டிக், இட் கேம் ஃப்ரம் அவுட்டர் ஸ்பேஸ் உள்ளிட்ட திரைக்கதைகள் மற்றும் தொலைக்காட்சி படைப்புகளிலும் இவர் பங்களிப்பு செய்திருக்கிறார். ப்ராட்பரி 600 சிறுகதைகள் உட்பட 27 நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள், உலகம் முழுக்க 36 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, எண்பது லட்சத்திற்கும் மேலான பிரதிகள் விற்றிருக்கின்றன.

 

Previous articleலூயிஸ் க்ளக் கவிதைகள்
Next articleடெட் கூசர் கவிதைகள்
Avatar
பாலகுமார் விஜயராமன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொலைத்தொடர்பு பொறியாளர். சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்து வருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது எட்டு தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. விலங்குகள், பறவைகள், சூழலியல் சார்ந்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பான “கடவுளின் பறவைகள்” பரவலான கவனிப்பைப் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.