ரிச்சர்ட் டாக்கின்ஸ் – கடவுளுக்கெதிரான அறிவியல் போராளி

அறிவியலும் சமயமும் ஒன்றின் குறைபாட்டை மற்றது இட்டு நிரப்பும்போது, மானுட சிந்தனைத் தொகுப்பு முன்னகர்கிறது. அறிவார்ந்த நாத்திக தர்க்கம் மரபார்ந்த சமயம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது.

அறிவியலின் தலையீடு இல்லையென்றால் சமயம் இறுகிப்போய் திண்ணப் பேச்சாகி சுருங்கி விடும். சரியாக சமைக்கப்பட்ட சமயத்தின் சேவைகள் மனிதனை அறிவுசார் ஆதிக்கத்தின் பலி பீடத்திலிருந்து மீட்கும்

ரிச்சர்ட் டாக்கின்ஸின் புகழ் பெற்ற “சுயநலம் பிடித்த ஜீன்” புத்தகம் வெளிவந்து முப்பது ஆண்டுகள் கழித்து, முழுமையாக நாத்திக வாதத்தை முன்வைக்கும் “கடவுள் என்னும் மயக்கம்” 2006-இல் வெளிவந்தது

பின்புலம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறிவியல் வெடிப்பு பழமைவாத மதக் கருத்துக்களை பெயர்த்துப் போட்டது. சமயம் நிலாக்கதைகளை நிறுத்திவிட்டு தத்துவ அடிப்படைகளை விளக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது

பிற விஞ்ஞானத் துறைகளை விட உயிரியல் மற்றும் பரிணாமவியலில் ஏற்பட்ட வளர்ச்சி வலுவானது. உயிரிகளின் தோற்றம், இயற்கைத் தேர்வு, வல்லது வெல்லும் விதி குறித்த புதிய உண்மைகளை டார்வின் முன்வைத்தார். 1859-இல் உயிரிகளின் தோற்றம் எழுதிய போது மரபுப் பண்புகளை பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு கடத்தும் வேதிமங்கள் அறியப்பட்டிருக்கவில்லை.

1860வாக்கிலேயே செல்லின் உட்கருவில் உள்ள நியூக்ளிக் அமிலம் கண்டறியப்பட்ட போதும் டி.என்.ஏ மற்றும் ஜீன்களின் வேதிக்கட்டமைப்பு, அதன் பிரிந்து இணையும் தன்மைகள் முழுதாக துலங்கி வந்தது ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கழித்துத்தான். வாட்சன் மற்றும் கிரீக் இருவரும் முப்பரிமாண ஏணியாக ஜீன்களின் அமைப்பை முன்வைத்த போதுதான் ஜீன் மரபியல் அரசபாதையில் நுழைந்தது.

டாக்கின்ஸ் பரிணாமவாதத்தை அடித்தளமாகக் கொண்டு கடவுள் மறுப்பை எடுத்துச் செல்கிறார்.

ஜீன்கள் தங்களுக்குள் மரபுப் பண்புகளைக் கடத்திக் கொள்வது மூலமும் ஒன்றோடு ஒன்று ஒத்துழைத்துக் கொள்வது மூலமும் உயிரிப் பலவகையையும் நூலின் தொடர்ச்சியையும் பல்லாயிரக் கணக்கான படிப்படியான தேர்வின் மூலம் செய்து கொள்கின்றன. இதில் கடவுள் என்ற கருத்தாக்கம் தேவையில்லை என்பது நூலின் மையமாகும்.

வரையறை

டாக்கின்ஸ் தன் எதிர்த் தரப்பை முதலில் வரையறை செய்து கொள்கிறார்:

கடவுள் என்ற கற்பிதம்: மனித சக்திக்கும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு பேரறிவு தானே விரும்பி பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்தது – இதுவே கடவுள் எனப்படுவது

நோக்கம்: இந்தக் கற்பிதம் உண்மையற்றது என்று நிரூபிப்பது

நேர்மறை வாதம்: அப்படி என்றால் நாம் காணும் உலகின் சிக்கலான, அறிவுப்பூர்வமான வாழ்வின் அடிப்படை என்ன?

டாக்கின்ஸின் பதில் – சிக்கலான உயிரிப் பலவகையின் உருவாக்கத்தை நிகழ்த்தும் அறிவும் வடிவமைப்பு நுட்பமும் தொடந்த, படிப்படியான பரிணாம வளர்ச்சியால் உருவாகிறது

டாக்கின்ஸ் எதிர்ப்பவை:

 1. ஒரு கடவுள், பல கடவுள் கொள்கைகள்
 2. ‘டீ’ இசம் (Deism) என்னும் கொள்கை (நம்மை மீறிய பேராற்றல் உலகைப் படைத்தது; எனினும் இயற்கையாக ஒருவருக்குள் தர்க்க ரீதியாக எடுக்கும் பாதையை நம்புதல்; ஆலயங்கள் தவிர்த்தல்)
 3. ஒரு புத்திசாலி தனி நபரால் உருவாக்கப் பட்டது பிரபஞ்சம்
 4. மதநிறுவனங்களின் நிதிக்கொடைகள் வழியாக கடவுள்/இறையியலை பரப்பும் போக்கு

ஐன்ஸ்டினின் கடவுள்;

கடவுள் என்ற சொல்லை அறிவியலாளர்கள் பயன்படுத்துகையில் மத நம்பிக்கையாளர்கள் ஓடி வந்து ‘அவரே நம்பி விட்டார்’ என்று கூட்டம் சேர்ப்பதைக் கண்டிக்கிறார் டாக்கின்ஸ்.

ஐன்ஸ்டினின் அதிகமாகவும் (தவறாகவும்) பயன்படுத்தப்பட்ட புகழ் பெற்ற கூற்று “மதமில்லாத அறிவியல் நகர முடியாதது; அறிவியல் இல்லாத மதம் விழிகளற்றது”. இங்கே சொல்லப்பட்ட கடவுள் இயற்கையின் அற்புதமான கடடமைப்பின் முன் ஐன்ஸ்டின் உணரும் பணிவைத்தான் குறிக்கிறது என்கிறார் டாக்கின்ஸ்.

கடவுளின் பகடை;

அண்டமெனும் மாபெரும் படைப்பை நிகழ்த்திய பேரறிவு என்று ஒன்று இல்லை; தாறுமாறாக பகடையை உருட்டி செய்யக் கூடியது அல்ல இது என்று வாதிடும் டாக்கின்ஸ், மதங்கள் கொண்டாடும் உருவமுள்ள அல்லது பண்புகள் உள்ள கடவுளை நிராகரிக்கிறார்.

மனிதனின் செயல்களில் குறுக்கிடும், அற்புதங்கள் நிகழ்த்திடும், மனத்தினைப் படிக்கும், குற்றம் கடியும் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கும் கடவுள் அல்ல ஐன்ஸ்டின் சொல்லும் கடவுள்; மதவாதியின் கடவுளுக்கும் அறிவியலாளனின் ‘கடவுளுக்கும்’ உள்ள இடைவெளி பல ஒளி ஆண்டுகள்.

சமயத்தின் அறிவியல் முயற்சி;

எப்படியாவது ‘அறிவியல்’ பூர்வமாக தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று சில சமய அமைப்புகள் மாபெரும் நிதிச் செலவில் ஒரு ‘ஆய்வை’ அமெரிக்காவில் நடத்தின. இதைக் கேலி செய்கிறார் டாக்கின்ஸ்.

நோயாளிகளை மூன்று குழுக்களாகப் பிரித்து ஒரு பிரிவினருக்கு பிராத்தனை எதுவும் செய்யாமலும், இரண்டாவது குழுவுக்கு பிரார்த்தனை செய்து அது குறித்து அவர்களுக்கு அறிவிக்காமலும், மூன்றாவது குழுவுக்கு பிரார்த்தனை செய்ததுடன் அவர்களுக்கு அதைத் தெரியப்படுத்தியும் ‘ஆராய்ச்சி’ செய்யப்பட்டது.

கடவுள் கோபித்துக் கொண்டு விட்டது போல, பிராத்தனை யாருக்கு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதோ அந்தக் குழு மோசமான உடல் நிலையை அனுபவித்தது.

ஐய வாதம்;

முழு முதற் பொருள் ஒன்று இருக்கிறது – இல்லை என்ற பிரிவினைக்கு இடையில் ‘இருக்கலாம்; தெரியவில்லை’ என்று நிலை எடுத்து உண்மைக்காக காத்திருக்கும் ஆக்ஞேய வாதம் (ஐய வாதம் என்கிறார் ஜெயமோகன்) கார்ல் சேகன், டி.எச்.ஹக்ஸ்லி போன்ற அறிஞர்களால் பின்பற்றப் பட்டது. இந்த வாதத்தை முற்றும் நிராகரிக்கும் டாக்கின்ஸ் கடவுள் நிரூபணப் பிரச்சனை அறிவியல் – தர்க்கம் – புள்ளியியல் முறையில் தீர்க்கப் படக்கூடிய கேள்விதான் என்று அடித்துக் கூறுகிறார்

மூலத்தைத் தேடி;

பருப்பொருட்களின் அடிப்படை அலகுகளாக அணுவின் உட்கருவும் அதைச் சுற்றிவரும் எலக்ட்ரான்களும் கண்டறியப் பட்டதால் கடவுளுக்கு அவசியமில்லை என்று சொல்லும் டாக்கின்ஸ் அறிவியலின் அடுத்த கட்ட நகர்வுகளை பெரிதாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை வைத்து ஒரு மூலகம் தங்கமாகவோ தகரமாகவோ உருக்கொள்கிறது. மேலும் க்வாண்டம் இயக்கவியல் வேறு தலையை நுழைக்க ஆரம்பித்து விட்டது என்கிறார்.

ஆனால் 1924-லேயே க்வாண்டம் இயக்கவியல் என்ற பதம் பழக்கத்தில் வந்து விட்டது. முதல் நியூட்ரினோ 1955-இல் கண்டுபிடித்து விட்டார்கள்.  1962-ல் மியூவான் முதலிய மேலும் நுண்ணிய துகள்கள் அறியப்பட்டு விட்டன.

பொருண்மையின் மூலத்தை நாடிச் செல்லும் அறிஞர்கள் பெரும் வியப்பை அடைந்திருக்கிறார்கள். சிலநேரம் துகள்களாகவும், சிலநேரம் அலைகளாகவும், இவற்றில் ஒன்றிற்கான நிகழ்தகவாகவும், நுணுகிச் செல்லும்தோறும் சூனியமாகவும் மாறக்கூடிய ஆதிமூலம் அறிவியலாளர்க்கும் போக்கு காட்டித்தான் வருகிறது

பொருட்களுக்கு ‘நிறையை’ வழங்கும் ஒரு துகளாக போஸான் கற்பிதம் செய்யப்பட்டது. 5 பில்லியன் டாலர் செலவில் ஜெனிவாவில் அமைக்கப் பட்ட துகள் முடுக்கியில் 2012-இல் போஸான் துகளைக் கண்டுவிட்டதாக அறிவித்தார்கள். (இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ் புகழ் இயற்கையில் நிலைத்திருப்பதாக. ஓம் ஆமென் அமின்).

இந்தச் சோதனை வேறு பல புதிய அறிதல்களை நிகழ்த்தும் என்று கணிக்கப் பட்டது. கரும்பொருள் (Dartk Matter), வெளியின் புதிய பரிமாணங்கள் (New Dimensions), ஒற்றை ஆற்றல் (Unified Force) போன்ற பிரமிக்க வைக்கும் கணிப்புகள் எதையும் ஆய்வு வெளியே கொண்டு வரவில்லை . இரண்டு ஆண்டுகள் பராமரிப்புக்காக தூங்க வைக்கப்பட்ட இந்த முடுக்கு கலம் அடுத்த பெரிய 10 பில்லியன் டாலர் சோதனைக்கு நிதி வேண்டி தயாராகிக் கொண்டுள்ளது. (நியூயார்க் டைம்ஸ் கட்டுரை https://www.nytimes.com/2019/01/23/opinion/particle-physics-large-hadron-collider.html )

டாக்கின்ஸ் தரப்புக்கு இது எதிர் தரவுகளமாக அமையக்கூடும்.

இடைவெளி வழிபாடு;

துகள்கள் கண்டுபிடிப்பை அறிவியல் நிகழ்த்த நிகழ்த்த, முதிரா இறையியலாளன் இப்படி டாக்கின்ஸிடம் அறைகூவலாம் – “துகள்களை படைத்து, எல்லா தங்க அணுக்களிலும் சரியாக 79 எலக்ட்ரான்கள் வைத்தவர் எங்கள் கடவுள்”

இந்த அணுகுமுறையை டாக்கின்ஸ் இடைவெளியை வழிபடுதல் என்கிறார்.

அறிவியல் உயிரைப் பணயம் வைத்து சிக்கல்களை தேடிச் சென்று தீர்க்க முடியாத சிக்கல்களை ஒத்துக்கொண்டு இடைவேளையை நிரப்ப முயல்கிறது.

அந்த இடைவெளியில் கூடாரம் அடித்து உட்கார்ந்து கொள்ளும் சோம்பல் சமயவாதிகள், புதிய திறப்புகளால் இடைவெளி நிரம்பும் பொது அறிவியலே ஆக்கித் தரும் புதிய இடைவெளிகளைத் தேடுகிறார்கள்.

ஃப்ரெட் ஹாயில் கடவுள் படைப்பு வாதத்தை விளக்க ஒரு உதாரணம் தருகிறார் . போயிங் 747 விமானத்தின் பணிமனை ஒன்றில் விமான பகுதிகள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு சூறாவளிக் காற்று அங்கே வீசி விமானத்தை முழு ஒருமையுடன் கட்டமைப்பது எப்படி சாத்தியம் அற்றதோ அதே போன்றது தான் புவியில் உயிர் தானாகவே தோன்றி இருக்கலாம் என்னும் வாதமும் என்கிறார்.

இந்த உதாரணத்தை அப்படியே கடவுள் படைத்தல் கொள்கைக்கு எதிராக திருப்புகிறார் டாக்கின்ஸ், கடவுளும் அந்த காற்றால் இணைக்க முடியாத போயிங் 747 போன்றவர்.

பரிணாமம் என்னும் அற்புதம்;

டிராகன் பூச்சியின் இறக்கையும், கழுகின் கண்களும் சிக்கலான அறிவுக்கூர்மை கொண்ட பயன்பாடு மிக்க வடிவத்தைக் கொண்டுள்ளன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஜீன்கள் பிரிந்து இணைந்து சோதனை செய்து பயின்று அடைந்த வித்தை இது என்கிறார் டாக்கின்ஸ். இது தற்செயல் இல்லை என்று மறுக்கும் டாக்கின்ஸ், பந்தயம் கடவுளுக்கும் இயற்கைத் தேர்வுக்கும் இடையில் என்று சொல்கிறார்

வடிவமைப்பாளர் என்று ஒருவர் இருந்தால் அது புள்ளியிலில் நிகழாத தகவாக மாறிவிடும்.

சிக்கலான அமைப்பு எளிய படிப்படியான அலகுகளாக பிரிக்கப் படவேண்டும். படைப்புவாதிகள் தரும் குறுக்க முடியாத கடவுள் என்னும் சிக்கல் கொள்கை தீர்வாகாது.

பாக்டீரியாவின் நகர்வு உறுப்பான ஃப்லா ஜெல்லம் தானாகச் சுழலும் ஒரு அச்சு. இது எளிதில் விளக்க முடியாத சிக்கல். அறிவியல் அதன் சவாலை எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறது. டி.டி.எஸ்.எஸ் என்ற வேதிமம் கண்டு பிடிக்கப் படுகிறது. இதன் வேறு பல பயன்கள் அறியப்படுகின்றன. சிக்கல் எளிமையாக மாற்றப்படுகிறது

இப்போதைய நிலையில் விளக்க முடியாத சில ராட்சதப் பாய்ச்சல்களும் பரிணாமத்தில் உள்ளன. யூகேரியட் என்னும் செல்வகை (உட்கருவும் மைட்டொ கண்டிறியவும் கொண்ட முதிர்ந்த உயிரியல் அலகு), மனிதனின் ‘உணர்வு’ (Consciousness) போன்ற புதிர்கள், புதிய ஞானத்தை வேண்டி தவம் இயற்றுகின்றன

ஒருமை வாதம் (மனமும் உடலும் ஒரே பொருளால் ஆனவை) அறிவியலின் கொள்கையாக பெரும்பாலும் இருக்கிறது. மனதை மூளையின் பகுதியாக எடுத்துக் கொள்வது வசதியாக உள்ளது. உடலும் மனம் வேறு என்று பெரும்பாலும் குழந்தைகளே நம்புகிறார்கள் என்கிறார் டாக்கின்ஸ். சுவாமி விவேகானந்தரும் இவ்விரண்டும் ஒரே ஆற்றலின் இரு வடிவங்கள் என்கிறார்.

மீம்கள்;

டாக்கின்ஸின் முக்கிய பங்களிப்பாக கருதப்படுபவை மீம்கள். ஜீன்களுக்கு இணையாக பண்பாட்டு வெளியில் நடத்தைகளை கடத்தும் பிரதி செய்யும் விரிவாக்கும் அலகுகளாக மீம்களை முன்வைத்தார்.

இயற்கைத் தேர்வு மூலம் உயிர்களின் பருவுடல் பரிணாமம் அடைவது போல சமூக வாழ்வின் கலாச்சார வரலாறு மீம்களால் உருவாகி வந்தவை. ஆனால் ஜீன்கள் போல வேதிமமாக இயந்திரத்தனமாக இல்லாமல் கடத்தும் தோறும் மாறும் தன்மை கொண்டவை மீம்கள். மீம்களின் கடலே சமூக வாழ்வு என்கிறார்.

அரேபிய பாப்ளர் என்னும் பறவையை ஆராய்ந்த இஸ்ரேல் அறிஞர் ஜஹாவி சில பறவைகளின் ‘தியாக’ நடத்தைகள், உதவி செய்யும், கொடை அளிக்கும் பண்புகளை பதிவு செய்துள்ளார். மரத்தின் உச்சியில் இருக்கும் பறவை ஆபத்தை முன்னறிவிக்கவும், தாக்குதல் ஏற்பட்டால் களப்பலி ஆகவும் தயாராக உள்ளது.

பரிணாம வாதத்தில் ஈகை குணம் ஒரு பெரிய வீணடித்தல் என்று கருதும் டாக்கின்ஸ் பறவைகளின் சுய தியாக இயல்பை இப்படி விளக்குகிறார். வரலாற்றின் ஏதோ ஒரு தருணத்தில் தப்பிப் பிழைக்க வேண்டி ஏற்றுக் கொண்ட சில பண்புகள் அதன் தேவை மறைந்து விடட போதும் மாறாமல் நீடிக்கின்றன. (வள்ளுவர் இதைக் கேட்டிருந்தால் 230-ஆவது குறளை தனக்குள் சொல்லிக் கொள்வார்)

எப்படி ஈகை ஒரு டார்வினிச பிறழ்ச்சியோ, அப்படியே மதமும் ஒரு விபத்து என்பது டாக்கின்ஸின் வாதம். மனிதன் விலங்கிலிருந்து சற்றே மேலே இருந்த யுகங்களில் குழந்தைகளை அதிக காலத்திற்கு ஆபத்திலிருந்து காக்க வேண்டி இருந்தது. நெருப்பு, குழி, புதிய இடங்கள் போன்ற ஆபத்துகளை நோக்கி குழந்தைகள் செல்லாமல் தடுக்க கேள்வி கேட்காத கீழ்ப்படிதல் அவசியமாக இருந்திருக்கும். காலம் மாறியபோதும் மாறாமல் படிந்து விட்ட படிதலே மதத்தின் கச்சாப் பொருள் என்பது அவர் கண்டடைதல்.

ஒழுக்கத்திற்கு மதம் தேவையில்லை; மதம் வரும் முன்பே ஒழுக்கம் வந்து விட்டது; நல்லவராக இருக்க கடவுள் தேவையில்லை; மதம் தனிமனித குற்ற உணர்வை அமைப்பு ரீதியாக சுரண்டுகிறது என்பது டாக்கின்ஸின் முடிவு.

மறுப்புகள்;

 1. டாக்கின்ஸ் எதிர்க்கருத்தை சுருக்கிக் கொள்கிறார். மதம் என்ற விரிவான புலத்தை தனக்கு வேண்டிய வடிவில் எதிர்மறையாக விளக்கிக் கொண்டு கம்பு சுத்துகிறார் என்று தோன்றுகிறது.
 2. கடவுள் என்பதை கவித்துவ உன்னதமாக , உலகம் நிறைந்த ஆற்றலாக , என் ஜீனே கடவுள் அறிவே கடவுள் என்று உணரும் அதே நேரம் ஆலயம் செல்லும் விசுவாசிகள் உலகில் பெரும்பான்மை. அவர்களை வசைபாடி ஒரே கூண்டில் அடைப்பது நோக்கமாக இருக்கலாம். இதில் ஒரு அரசியல் நிலைப்பாடும் சில உளவியல் மீம்களும் கிடைக்கலாம் (தனித்த போராளி , மதவாதிகளால் தூற்றப்படும் உண்மை விரும்பி)
 3. மாற்றாக முன்வைக்கும் ஜீன்களும், மீம்களும் எல்லாவற்றிலும் தீர்வைத் தருவதில்லை
 4. தற்காலத்திற்கேற்ற உச்ச உணர்ச்சியின் புகழ் தேடலாக இருக்கலாம் (Zeitgeist)
 5. கீழை மதங்களை உசாவலுக்கு அவர் எடுத்துக் கொள்ளவில்லை. (கண்ட கோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே என்ற பாடலும் பார்க்கும் இடம் எங்கிலும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே என்ற கவிதையும் டாக்கின்சுக்கு என்ன உணர்வைக் கொடுத்திருக்கும்)
 6. வாழ்வின் பற்சக்கரங்களில் சிக்கி ஒரு ஆறுதலைத் தேடி வருபவனுக்கு மதம் இல்லாதிருந்தால் பெரும்வெற்றிடமாக இருந்திருக்கும் . வேறு ஒன்று இது வரை வளரவில்லை. அல்லது எது ஆறுதல் அளிக்கிறதோ அது மதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு வேளை மதமும் கடவுளும் இயற்கையால் மனிதனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மீம் தானோ?
 7. மதம் மனிதனை சுரண்டக் கூடாது என்று நினைப்பவர்கள் மதத்திலும் இருக்கிறார்கள். அறிவியலை அதிகாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்பவர்களை இவர்கள் எதிர்க்கிறார்கள்

டாக்கின்ஸின் அழகிய அறிவியல் பார்வை அறிவியல் நோக்கை சமயம் உட்செரித்துக் கொண்டு தன்னியல்பில் வளர வேண்டும் என்ற உயர் ஆளுமைகளின் இலக்கிற்கு வலு சேர்க்கும்.

முடிவாக, எது பரிணமிக்கிறது என்ற வினாவிற்கு பருப்பொருள் கடந்த ஆற்றல் தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்பது பொருத்தமாகத் தெரிகிறது. பதஞ்சலியை மேற்கோள் காட்டி பரிணாமம் என்பது உள்ளே இருந்து முடிவற்ற ஆற்றல் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முயற்சி என்று கூறும் சுவாமி விவேகானந்தர், ஒரு விவசாயி வயலில் தண்ணீர் பாய்ச்ச்சும்போது தடையை விலக்குவது போல முடிவிலி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் செயல்பாடே பரிணாமம் என்கிறார். டாக்கின்ஸ் இதற்கு என்ன எதிர்வினை அளிக்கக் கூடும்?

படைப்பில் இறைவனின் கை இல்லை என்கிறார் டாக்கின்ஸ். க்வாண்டம் இயற்பியலின் எதிர்கால சாத்தியங்களும் அறிவியலின் தீரா வியப்பை அளிக்கும் புதிர்களையும் மனதில் எடுத்துக் கொண்டால் ரிக்வேதம் 10-ஆம் மண்டலம் 129-ஆவது பாடல் அளிக்கும் பிரமிப்பையே அடைகிறோம். இருப்பும் இல்லாமையும் இல்லாத காலத்தில் மரணமும் மரணமின்மையும் இல்லாத நேரத்தில் இருளும் ஒளியும் ஒன்றாக இருந்த போது இதை படைத்தது கடவுளின் சங்கல்பமா? அவரே அறிவார். அல்லது அவரும் அறியாரோ? டாக்கின்ஸ் அறிவாரோ?


கோவையில் வசிக்கும் ஆர் ராகவேந்திரன் ஓர் அரசுடைமை வங்கியில் பணிபுரிகிறார். ஜெயமோகனின் அறம் வாசித்து விட்டு இலக்கிய வாசிப்பில் நுழைந்தவர். அறிவியல் புனைவுகளிலும் விளிம்பு நிலை ஆய்வுகளிலும் ஆர்வமுண்டு.,

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.