லூயிஸ் க்ளக் கவிதைகள்

1,ஏதுமின்மையின் தனிமை

இருள் நிறைந்திருக்கிறது

மழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லை

இங்கு ஒரே மழை சத்தம்

அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது

மழையோடு குளிரும் சேர்ந்துவிட்டது

இவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லை

காற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறது

எல்லா காலையிலும் அது

கோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்தது

பிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டது

ஆனால் புயல் நின்றபாடில்லை

காய்ந்த நிலங்களை நனைத்து

வெள்ளக்காடாக்கி நிலம் மறைந்துபோனது

வேறெதையும் காணமுடியாமல்

இருண்ட சாளரங்களின் வழியே

மழை மட்டுமே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது

இந்த ஓய்விடத்தில் எதுவும் நகராது

இப்போது நாம் யாரோ அதுவாகவே மாறுவோம்

விலங்குகள் மொழியின்றி, பார்வையின்றி இருளில் வாழ்கின்றன

நான் உயிரோடிருப்பதை எதுவும் மெய்ப்பிக்கவில்லை

இங்கே முடிவிலியாய் மழை மட்டும் பெய்கிறது.

 

2, தொலைநோக்கி

நீங்கள் பார்வையை நகர்த்தும் ஒரு கணத்திற்குப் பின்

எங்கேயோ இரவு வானின் அமைதியில் வாழ்வதாகத் தோன்றுகிறது

எங்கே இருக்கிறீர்கள் என்பதை மறக்கிறீர்கள்

மாந்த வாழ்விற்குப் பொருளில்லா வேறொரு இடத்தில் இருக்கிறீர்கள்

இவ்வுலகில் இருப்பதை நிறுத்திக்கொண்டீர்கள்

உடலின் படைப்பு அல்ல நீங்கள்

விண்மீன்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே நீங்களும்

அமைதியின் பேருருவாய் பங்குகொண்டு இருக்கிறீர்கள்

பின் மீண்டும் உலகிற்கு வந்துவிட்டீர்கள்

குளிர் குன்றின்மீது இரவில்

தொலைநோக்கியை ஒருபுறமாக எடுத்துக்கொண்ட பின்புதான் உணர்ந்தீர்கள்

அந்த உறவுதான் பொய்யானது காட்சி பொய்யன்று

மறுபடியும் நோக்குகிறீர்கள்

ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளதென்று

 

3,புனைவின் பணி

கடைசிப் பக்கத்தை நான் பல இரவுளுக்குப் பின் புரட்டியபோது கவலையின் அலை என்னைச் சூழ்ந்துகொண்டது. எங்கே போய்விட்டன அவையெல்லாம்? இவர்கள் உண்மையானவர்களைப் போல தோன்றுகிறார்கள். என்னைத் திசைதிருப்ப , இரவில் நடந்தபடியே உள்ளுணர்வால் வெண்சுருட்டைப் பற்ற வைத்தேன். இருளில், உயிர்பிழைத்தவர் பற்ற வைத்த நெருப்பைப் போல வெண்சுருட்டு ஒளிர்ந்தது. எண்ணற்ற விண்மீன்களின் நடுவே யாரிந்த சிறு புள்ளி ஒளியைக் காண்பார்கள்?  நான் கொஞ்ச நேரம் இருளில் அமர்ந்தேன். வெண்சுருட்டு ஒளிர்ந்து சின்னதாகி, ஒவ்வொரு இழுப்பும் என்னை மெதுவாக அழித்துக்கொண்டிருந்தது. எவ்வளவு சிறியது இது? மிகச் சிறியது ஆமாம் என்னுள் இனி எப்போதும் விண்மீன்கள் இருக்கப்போவதில்லை.

 

4,உருவப்படம்

ஒரு மழலை உடலின் வெளிக்கோட்டுருவத்தைத் தீட்டிக்கொண்டிருந்தாள்

அவளால் என்ன இயலுமோ அதையே வரைந்தாள்

இருந்தும் அது முழுக்க வெண்மையாகவே இருந்தது

அவளுக்கு அங்கே என்ன தெரியுமோ அதை நிரப்பமுடியவில்லை

ஒத்துழைக்காத அந்தக் கோட்டிற்குள் வாழ்வு தொலைவதை அறிகிறாள்

ஒரு சூழலின் பின்புலத்திலிருந்து மற்றொன்றைக் கத்தரித்தாள்

அது சேய் தாயாக மாறுவதைப் போல இருந்தது

நீங்கள் இப்போது  இதயத்தை வரையுங்கள்

அவள் உருவாக்கிய வெற்றிடத்தை நிரப்ப.

 

5, நாற்சந்தி

என் உடலே!

இனி நாம் ஒன்றாக பயணிக்கப் போவதில்லை

உன்னிடத்தில் நான் ஒரு மென்மையை உணர்கிறேன்

Pablo Picasso, Head and Shoulders of a Woman,
Pablo Picasso, Head and Shoulders of a Woman.

அது மிகவும் புதிதானது, அறிமுகமற்றது

என் இளமைக் காலத்தில் காதல் என்றால் நினைவுக்கு வருமே அதைப் போலானது

காதல் பெரும்பாலும் அதன் குறிக்கோளில் முட்டாள்தனமானது

நிறைய முன்கூட்டிய கோரிக்கைகளுடன் வாக்குறுதி அளிக்க இயலாதது அது

ஆனால் அதன் தெரிவுகளிலோ, ஆழத்திலோ அப்படியானதல்ல

என் ஆன்மா அதிக அச்சத்திலும், உக்கிரத்திலும் இருக்கிறது

அதன் கொடூரத்தைப் பொறுத்துக்கொள்ளுங்கள்

அது ஆன்மாவாக இருந்தாலும் என் கைகள் உன்னை நோக்கி எச்சரிக்கையுடன் நகர்வது குற்றம் புரிய அல்ல

உன்னைத் தொடுவதென்பது

கடைசியாய், இந்த வெளிப்பாட்டின் உணர்வை ஒரு பொருளாகச் சாதிக்கும் ஆர்வத்தில்

இதனால் நான் இழக்கப்போவது இப்புவியை அல்ல உன்னைத்தான்.

 

லூயிஸ் க்ளக் கவிதைகள்

தமிழில்: கு..தமிழ்மொழி


லூயிஸ் க்ளக்:

லூயிஸ் க்ளக்  2020 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். நோபல் குழு தன் அறிவிப்பில், அலங்காரமற்ற எளிமையுடன் தனி மனித இருப்பை அனைவருக்கும் பொதுவாக்கிய தீர்க்கமான குரல் அவருடையது என்று பாராட்டுகிறது. இவர் 1943ம் நியூயார்க்கில் பிறந்தார்.  1968-ல் இவரின் First born என்ற முதல் கவிதை தொகுப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இதுவரை பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.  2006 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அவெர்னோ’, 2014ல் வெளிவந்த ‘Faithful and Virtuous Night’ ஆகிய படைப்புகள் மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றது.  தேசிய மனிதநேய பதக்கம்,புலிட்சர் பரிசு, தேசிய புத்தக விருது, தேசிய புத்தக விமர்சகர்கள் வட்ட விருது, மற்றும் பொலிங்கன் பரிசு உள்ளிட்ட அமெரிக்காவின் பல முக்கிய இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். இது மட்டுமன்றி THE WORLD IRIS என்ற நூலுக்காக இவருக்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.  மேலும் இவர் பாஸ்டன் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் வருகை தரு ஆசிரிய உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார். பல்வேறு பல்கலைக் கழகங்களும் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.