வன்பாற்கண் வற்றல் மரம்

காரண அறிவிற்கு அறிமுகமே இல்லாத காரணங்கள் இதயத்திற்கு உண்டு

-ப்ளேஸ் பஸ்கால்

சமூகம் ஒரு மானுட உருவாக்கம். மனிதன் ஒரு சமூக விளைபொருள். இவை ஒன்றையொன்று மறுக்கும் இருவேறு முன்மொழிவுகள் அன்று மாறாக இடையறாத சமூக நிகழ்வின் முரணியக்கப் பான்மையைப் பிரதிபலிப்பவை. ஒவ்வொரு சுயசரிதையும் சமூக வரலாற்றின் துமி. அதற்கு வெளியே அசப்பில் அவை புவியியல் நிகழ்வுகள் தாம். மாந்த வாழ்வைத் தாண்டி வெளியே சமூகத்திற்கும் முகாம்கள் இல்லை. சமூகச் செயல்பாட்டில் பங்கெடுப்பதன் மூலம் மட்டுமே தனி உயிரியானது தனிமனிதன் ஆக முடியும். மறுதலையாக சமூக மதிப்பீடுகளோ விளையாட்டு விதிகளைப் போல மைதானத்தினுள் மட்டுமே செல்லுபடியாகும். இப்பார்வையின்படி தனி மனிதன் சமூக மனிதன் என்ற எதிரீடுகளே அடிப்படையற்றவை எனலாம். அப்படி இருப்பின் அவரிருவரும் ஒருவரே.

மனித உயிர் தவிர ஏனைய அநேக உயிர்கள் தம் பிழைப்பிற்குத் தேவையான இயல்புணர்ச்சித் தொகுப்புடனும் வடிவமைக்கப்பட்ட இயற்கருவிகளுடனும் பிறக்கின்றன. காக்கைக் கூட்டில் கண் திறக்கும் குயில் குஞ்சு ஒரு கட்டத்தில் தானே வெளியேறி தன்னினத்தோடு சேர்ந்து கொள்கிறது. ஆழாழியில் ஜனித்த நீர்வாழ் ஜீவிக்குத் தானே தெரிந்துள்ளது தன் இரை எதுவென்று, தான் தப்பியோட வேண்டிய பேர்வழி யாரென்று. இவற்றோடு ஒப்பிடுகையில் மனித உயிர் கிட்டத்தட்ட நிராதரவான நிலையில் உலகிற்குள் நுழைகிறது. சொல்லப்போனால் அதற்கென வரையறுக்கப்பட்ட உலகென்று ஒன்றில்லை. மாறாக பெரும்பாலான ஜீவராசிகளின் உலகம் குறிப்பிட்ட காலநிலைகளாலும் சூழமைவினாலும் வகுத்துக்கொள்ளவியன்ற தூண்டுகைகளாலும் நெய்யப்பட்டுள்ளதைக் காணலாம். உதாரணத்திற்கு மலையடிவாரத்தில் ஊறும் எறும்புகளை மலங்காடுகளில் காணமுடியாது. மலங்காட்டு மரத்தின் கீழ்க்கொப்பில் வாழும் விலங்கு மர உச்சிக்குச் செல்வதில்லை. சில பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மைல்கள் பயணிப்பது சுதந்திர தாகத்தினால் அல்ல. மேற்கொண்டாக வேண்டிய புனித யாத்திரைக்காக அவற்றுள்ளே இயற்றப்பட்டுள்ள நிரலின் பொருட்டே. ஆனால் மனித குமாரனுக்கோ தலைசாய்க்க பிரத்தியேகமாக ஓரிடமில்லை. மனிதக்கருவின் சினை வளர்காலமோ குறுகியது வளர்பருவமோ மிகநெடியது. நிலைமை இவ்வாறிருக்க தன் பேரினத்தின் மாட்சிமை மிக்க கடந்த காலத்தையும் அழிவா அற்புதமா எனத் தெரியாதபடி குழம்பிக்கிடக்கும் எதிர்காலத்தையும் சற்று எண்ணிப்பார்க்க முடிந்தால், கூடவே தனது கதியற்ற நிலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒரு மனிதச்சிசு கதறி  அழுவதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை. இந்நூலில் ஓரிடத்தில் சரியாகவே வர்ணிக்கப்படுகிறது மனிதன் நகைப்புக்குரிய விலங்கு என.

மனிதக்குழந்தை நுழைவது திறந்த உலகிற்குள். கணக்கற்று விரியும் தேர்வுகளின் முன்னே. ஒரு தருணத்தில் எடுக்கப்படும் செயல் தேர்வானது அதற்கடுத்த அனைத்து தேர்வுகளின் முழுத்திறனையும் மாற்றியமைக்கிறது. இதன் காரணமாகவே மனித மனம் நிரந்தரமான ஒரு சமநிலையின்மையில் வதிய வேண்டியுள்ளது. இத்தகு மனித இருப்புக்கு ஏதோ ஒரு வித சமநிலையை வழங்க முயன்றதே சமூக உருவாக்கத்தின் தேவை எனலாம் (தேர்வு முறைகளை முறைப்படுத்தி சிறப்பான தேர்வுமுடிவுகளைத் தொகுத்துக் கொள்வது தான் திட்டம்) இவ்வுள்ளார்ந்த திடமின்மையின் காரணமாக, மனிதன் தன்னுள்ளே தானமைந்து வாழ்வு முடிக்கும் உயிராகத் தொடரமுடிவதில்லை. அவன் தன்னை சதா வெளியே சிதறடிக்கத் தேவைப்படுகிறது, புற நடவடிக்கைகள் வாயிலாகவும் சிந்தனையின் மூலமாகவும். மனித இருப்பென்பதே தனக்கும் உலகிற்குமான தொடர்ந்த ஒரு சமன் தேடும் செய்கை தான். அறுபடாத இச்செய்கையின் மூலம் அவன் தனக்கானவோர் உலகைச் சமைக்கிறான். இந்த உலகுருவாக்கத்தின் ஊடாக அவன் தன்னையும் உருவாக்கிக் கொள்கிறான். அத்தகைய உலகில் தான் அவன் தன் இருப்பை ஊன்ற முடியும். இவ்வுலகுருவாக்கம் எப்போதும் கூட்டு நடவடிக்கையாகவே இருந்து வந்துள்ளது. அவன் சமைத்த பிரதேயக உலகைக் கலாச்சாரம் எனக் கொண்டால் அது ஒரு சமூகமாகவே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் ஆர்வமூட்டும் விதமாக மனிதனால் சமைக்கப்பட்ட உலகம் அதாவது சமூக கலாச்சாரம் அவனது ஆளுகையையும் புரிதலையும் கடந்து சென்று, தானே ஒரு தன்னிருப்பாக, புறவய எதார்த்தமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. நள்ளிரவில் சிங்கவால் குரங்கு ஒன்று அடைமழையை வேடிக்கை பார்ப்பதைப் போல மனிதன் சமூகத்தை வெறித்துப் பார்க்கிறான். அவன் உண்டு செய்த ஒன்று அவனது கட்டுப்பாட்டை மீறி அவனது நோக்கத்தையும் கடந்த ஒன்றாக மாறிவிடுகிறது. இது உலகின் பௌதிக அபௌதிக  கூறுகள் இரண்டிற்குமே பொருந்துபவை. காட்டாக மொழியை உருவாக்கிய மனிதனது பேச்சு மட்டுமின்றி சிந்தனையுமே அம்மொழியின் அடித்தளப் பொறியமைவில் சிக்கிக்கொண்டதைக் கூறலாம். விழுமியங்களை உண்டு செய்தவன் அதை நம்பி ஏற்று வாழ்கிறான். பின்  பல இரவுகள் அதே விழுமியங்கள் அவனைத் தூங்கவிடுவதில்லை. தவிர ஓரெல்லைக்கு மேல் சமூகம் தன் மூர்க்கக் கரங்களைக் கொண்டு மனிதனுக்கு ஆணையிடவும் மீறினால் ஒறுக்கவும் செய்கிறது. இத்தகைய மீறல்களாலும் புதிய சாத்தியங்களாலும் முன்னறியாத தேவைகளாலும் சில விபத்துக்களினாலும் கூட மனிதனின் உலகம் இயலுலகைப் போல நிலையானதாக இருப்பதில்லை. முடிவில் தன் சமனின்மையை, அதை நிவர்த்திக்கும் பொருட்டு தோற்றுவித்த உலகின் மீதே கடத்திவிடுகிறான். என்பதால் மனிதனின் சமன் தேடும் படலம் முடிவுறாது போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் சமூகக் கலாச்சாரத்தின் புறவய இருப்புத் தோற்றத்தை அவன் நிராகரிக்க முடியாது. ஏனெனில் தனக்குப் புறவயமாகத் தயார் செய்யப்பட்ட எந்த நிலைத்தளமும் இல்லை என்பதால் தான் உலகுருவாக்கப்பணியே தொடங்கப்பட்டது. பண்பாட்டின் இத்தனியிருப்பு ஒரு கூட்டுமாயையாய் இருப்பினும் இச்செயற்கையான சமூக அமைப்புகள் தான் அவனது அடித்தளம். இதன் ஆதார சுய இருப்பை கேள்விப்படுத்துவது  அமர்ந்துள்ள கிளையையே வெட்டிக்கொள்வதற்குச் சமானம். அப்படி செய்யின் நீங்கள் சமூக நிதர்சனத்திலிருந்து வெளியேறி ஆகவேண்டும், எப்படி இலக்கண விதிகளை ஏற்கமாட்டேன் என்பவர் மொழிச்செயல்பாட்டில் பங்கேற்க முடியாதோ அதே போல.

இயற்கையாக அமையாத திடத்தன்மையை சமூகமும் கலாச்சாரமும் இரண்டு வழிகளில் வழங்குகின்றன. ஒன்று இயற்கையை மனிதாயப்படுத்துதல் இரண்டு சமூகக்கலாச்சாரத்தை இயற்கையாக்கல். முதல் நடவடிக்கையின் உதாரணமாய் பழங்குடிக் கதைகள் மீள மீள பிரபஞ்ச இயக்கவியலை கதைப்படுத்துவதைக் கூறலாம். இரண்டாவது நடவடிக்கை பெரும்பாலும் சட்டத்தாலும் முக்கியமாக மதத்தினாலும் உருப்பெறும் கதையாடல்களால் அமைக்கப்படுகிறது. சட்டங்கள் யாவும் கடவுளுடன் முடிச்சிடப்பட்டாக வேண்டும். ஒருவர் தாயோடு உறவு கொள்வதை அரசனும் விரும்புவதில்லை கடவுளும் ஏற்றுக்கொள்வதில்லை. இவ்வாறு மதம் அரசு இனக்குழு குடும்பம் என ஒவ்வொரு சமூக நிறுவனமும் கதையாடல்களாலேயே நிறுவப்பட்டுள்ளன. கதைமாந்தர்கள் எப்படி கதையை விட்டு வெளியேற முடியாதோ அதே கதி தான் சமூகப்பாத்திரங்களுக்கும். இத்தகைய பல்வேறு கதையாடல்களின் வலைப்பின்னல் தான் சமூகக் கலாச்சாரம் என்பது.

இதில் துணுக்குறச் செய்யும் உண்மை என்னவெனில் எவை நம்மைக் கட்டுப்படுத்துகின்றனவோ அவையே நமக்கு அர்த்தம் அளிக்கின்றன, ஒரு பருப்பொருளின் எல்கைகளே அதன் வடிவத்தைத் தீர்மானிப்பது போல. கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் அரசு, மதம், குடும்பம் போன்ற அமைப்புகளின் கதையாடலிலிருந்து வெளியேறுகையில் ஒருவர் அனர்த்தத்திற்குள் நுழைய நேர்கிறது. ஆகையால் தான் கைதிகளோ விவாகரத்தானவர்களோ சட்டென ஒரு அபத்தத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஊர் விலக்கம் செய்வது குற்றவாளிக்கு ஊரின் உதவிகளை மறுப்பது மட்டுமல்ல. அவனை அர்த்தமின்மைக்குள் விழச்செய்வது தான் நோக்கம். என்ன இருந்தாலும் நாம் ஏன் இந்நிறுவனங்களைச் சகித்துக்கொள்கிறோம் எனில் இவை நமக்கு ஒரு கதையைச் சொல்வதின் மூலம் அதில் பங்கெடுக்க அனுமதிப்பதன் மூலம் வாழ்விற்கு ஒருவகை அர்த்தத்தை அளிக்கின்றன.

அர்த்தம் எனும் கருதுகோளே கதைசொல்லல் எனும் செயல்பாட்டிலிருந்து தான் வந்திருக்கவேண்டும். ஒரு கதை, விழுமியங்களுக்கு ஒத்திசைவாகப் பயணிப்பதைப் போல முடிவில் ஒரு மரபார்ந்த நீதியை வலியுறுத்துவது போல அல்லது அழிவிலா பெருவாழ்வை நினைவூட்டியவாறு சுபமாக முடிவதைப் போல தன் வாழ்வும் நிறைவேற விரும்புகிறான் ஒவ்வொரு மனிதனும். பெரும்பாலும் அது சாத்தியம் இல்லையாகையால் பொருளின்மை குறித்த கேள்வியோடு இறக்கிறான்.

சமூகக் கதையாடல்கள் வெறும் நாளிதழில் வந்துபோகும் நிகழ்வுகளாக இருந்திருந்தால் அதை மீறிச்செல்வது இத்தனை கடினமானதாக இருந்திருக்காது. ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் மானுட அனுபவத்திலும் நினைவின் படுகைகளிலும் ஊடுருவியுள்ளதால் இக்கதைகள் தொன்ம மொழிபுகள் ஆகின்றன. இச்சமூகப்பாத்திரங்கள் வெறும் நாடக வேடங்கள் அன்றி தொல்படிமப் பாத்திரங்களாக உருவேறியவை. இவற்றை ஏற்று நடப்பதற்கான கட்டளை சமூக ஆணையத்திலிருந்து மட்டுமல்ல கூட்டு நனவிலியின் உள்ளடுக்குகளில் இருந்தும் எழுபவை. ஆக இப்பணிகளை மேற்கொள்ளாத ஒருவனை சமூகம் ஏளனமாக நடத்துவது பெரிய விஷயமல்ல அவனுள்ளேயே ஏதோ ஒன்று அது குறித்த ஆழ்ந்த நலமின்மையை உருவாக்குகிறது. தமது கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் வரை அவனை ஓயவிடுவதில்லை தொன்மங்கள்.

சமூகத்தை விட்டு வெளியேறுவது வெறுமையை பரிசளிக்குமெனில் துறவியின் தேர்வை எவ்வாறு வகுப்பது? அவருக்கு எது பொருள் அளிக்கிறது? துறவு என்பது மதக்கதையாடலின் உபகதையா அல்லது சமூக இருப்பைத் தாண்டி அதியனுபவம் ஏதும் உள்ளதா நம்மவரின் நோக்கம் அதுதானா? அப்படியானால் துறவி கலாச்சாரத்திற்கு உள்ளே இருக்கிறாரா வெளியே இருக்கிறாரா. ‘போதி தர்மர் ஏன் கிழக்கே கிளம்பினார்’ கொரியத் திரைப்படத்தில் ஒரு காட்சி: மீண்டும் இல்லறத்திற்குத் திரும்ப முடிவெடுத்த சிஷ்யன் தன் குருவைப் பார்த்துக் கேட்கிறான் ‘நீங்கள் ஏன் மலையில் இருக்கிறீர்கள்’ அதற்கு அவர் சொல்கிறார் ’வெகுதூரத்தில் நட்சத்திரங்கள் வானத்தை சமன் படுத்துகின்றன’ என. என்பதால் தான் துறவி என்பவர், மிக மிக ஆர்வமூட்டக் கூடிய நபராகவும் கவர்ச்சிகரமானவராகவும் தென்படுகிறார்.

ஆயின் சமூகத்திற்கு வெளியே கால்கொண்டவன் போலத் தோற்றமளிக்கும் நிலவறை மனிதன் கட்டாயம் கவரக்கூடியவன் இல்லை.

*

இக்குறுநாவல் எதிர்பாராத விதமாகத் துவங்குகிறது: ‘நான் ஒரு நோயுற்றவன், வசீகரமற்றவன், வெறுப்பு மிக்கவன்’. எடுத்த எடுப்பிலேயே கதைசொல்லி தன் இருக்கையை வாசகருக்கு எதிராக நகர்த்திக் கொள்கிறான். நிலவறை மனிதன் எனப் பெயரிட்டு சுய அறிமுகம் செய்து கொள்ளும் அவன் தன்னை எல்லா விதத்திலும் கீழானவனாகக் காட்டிக்கொள்கிறான். வாசகர் அவனை விரும்ப மாட்டார், ஆனாலும் அவனைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் அவன் ஒரு எதிர் நாயகன். நூலின் இறுதியில் அவனே சொல்கிறான் ‘ஒரு நாவலுக்கு நாயகன் தேவை ஆனால் இங்கு வேண்டுமென்றே  எதிர் நாயகனின் எல்லா பண்பு நலன்களும் ஒன்றுகூட்டி வெளிப்படுத்தப்பட்டுள்ளது’.

ஜோசப் காம்பெல்லின் பிரபலமான ‘ஆயிரம் முகம் கொண்ட நாயகன்’ நூலில் நாயகனின் பொதுவான பயணம், சாமான்ய உலகிலிருந்து கிளம்பிச் சென்று அமானுஷ்ய உலகில் நுழைந்து அற்புத சவால்களை வென்று அதன் மூலம் வரம் ஒன்றைப் பெற்று அதை தன் குலத்தாரோடு பகிர்ந்துகொள்வதாகச் சித்தரிக்கப்படுகிறது. புத்தரின் தொன்மக்கதை கச்சிதமாகப் பொருந்தக்கூடியது இதற்கு. ஆனால் இவை கதைப்பாடல்களையோ புராணக் கதைகளையோ விளக்குவதற்குத் தான் பெரிதும் பயன்படும். பொதுவாக நாயகனின் பாத்திரம் அவனது காலகட்டத்தின் தனித்தன்மைக்குத் தக மாறிவந்துள்ள ஒன்று. முக்கியமாகக் கலை இலக்கியத்தில். ஆனால் நாயகனின் இருப்புக்கு அவசியமான தேவை அவனது நாயகமும் செயற்கரிய செய்கையும் வெளிப்படுவதற்கு ஏற்ற சூழல். நவீன காலகட்டமானது இத்தகைய சூழலை யாருக்கும் வழங்கவில்லை. ஒருவகையில் நாயகர்கள் தேவையிலாது போகும் நிலவரத்தை நோக்கித் திட்டமிட்டுப் பயணிக்கும் காலம் இது. எனவே இக்காலகட்ட நாயகர்களைச் செவ்வியல் தொனியில் நாயகர்கள் என்றே சொல்ல முடியாது. தோராயமான செவ்வியல் வரையறை என்றால் நாயகன் என்பவன் அபாரமான செயல்திறனுடன் இக்கட்டைக் கடப்பவன் எனலாம். சற்று நடைமுறை வாதியான அரிஸ்டாட்டில் தனது பாணியில்  ‘சராசரிக்கு மேலானவன்’ என்கிறார். ஆனால் நவீன இலக்கியப்படைப்புகள் அக்காலகட்டத்தின் பெருங்கேள்விகளை சாமான்யனின் பிரதிநிதியாக நின்று பேசும் நபர்களையே நாயகனாக்குகிறது. ஏனெனில் நவீனம் ஜனநாயக யுகம். இப்பிரதிநிதிகள் நாயகர்கள் இல்லை அவர்கள் முதன்மைப் பாத்திரங்கள். ஆனால் நிலவறை மனிதன் ஓர் நாயகன்..ஏனெனில் இவன் சாமான்ய பிரதிநிதி அல்ல. சராசரிக்கு மேலானவனும் இல்லை சரியாகச் சொன்னால் கீழானவன். எனவே தான் அநேகமாக நவீன இலக்கியத்தின் முதல் எதிர்நாயகனாகக் கருதப்படுகிறான் அவன். எதிர் நாயகனை வில்லனில் இருந்து பிரித்துப் பார்க்கலாம். வில்லனின் படைப்பு நோக்கே நாயகனின் பிம்ப உயரத்தைக் கூட்டுவதற்காக உருவாக்கப்பட்டது தான். நாயகனை மேலானவனாகத் தோன்றச்செய்ய அவனது செயல்திறனை மேம்படுத்தவே வில்லன் தோன்றுகிறான். ஆனால் எதிர் நாயகன் தன்னளவில் ஒரு நாயகனே. நாயகனிடம் இருந்து அவன் வேறுபடுவது முன்வைக்கும் விஷயங்களைப் பொறுத்தே. நாயகன் மரபு வழிப்பட்ட நியதிகளையும் சமகால மதிப்பீடுகளையும் எதிர் நாயகன் அவற்றுக்கு எதிரானவற்றையும் தேர்கின்றனர். மற்ற பெரும்பாலான நவீனப்பொதுமையின் பிரதிநிதிகளோ (முதன்மைப் பாத்திரங்கள்) விழுமியவெளியில் தேர்வு செய்ய இயலாமல் இரண்டிற்கும் நடுவே அல்லாடுபவர்கள். எதிர் நாயகனும் நாயகனைப் போல வாசகனை ஆட்கொள்கிறான் வயப்படுத்துகிறான். வாசகரால் அவனோடு தன்னை பொருத்திப் பார்க்க இயலாது. வெறுக்கக் கூடச் செய்யலாம். ஆனால் அவனுக்கு காதுகொடுப்பதை நிறுத்த இயலாது. ஏனெனில் எதிர் நாயகன் வாசகனின் இருட்திசைகளில் கணப்பு மூட்டுபவன்.

நவீனயுகம் அறவியலை சார்பியவாதத்துடன் அணுகுவதால் நன்மை தீமை எனும் திட்டவட்ட தனியிருப்புகள் இல்லாது போகையில் தீமைக்கெதிரான போராட்டமானது அடிப்படையில் குழப்பமடைய கதாநாயகர்களின் குறிக்கோள் என்பதே என்னவென்று தெரிவதில்லை. நெப்போலியனின் முடிவிற்குப் பிறகு கற்பனாவாத நாயகனும் காலியாக இரண்டாம் உலகப்போருக்குப் பின் விரக்தியுற்ற குழப்பவாதியான பல் பிடுங்கப்பட்ட எதிர் நாயகன் எதிர்படத் துவங்கினான். ஆனால் நிலவறை மனிதன் பல்பிடுங்கப்பட்டவனல்ல. ‘அந்த பல் வலியெடுத்தாலும் கூட அதைப் பிடுங்க சம்மதிக்கமாட்டான்’. ஓரிடத்தில் அவன் சொல்கிறான் ‘இறுதியில் சோப்புக் குமிழியும் நிலைமமும்’. செவ்வியல் நாயகன் செயல்திறன் மிக்கவன் எனில் செயலின்மையின் தூதரான நிலவறை மனிதன் எதிர் நாயகர்களின் கதாநாயகன்.

*

தாஸ்தேயெவ்ஸ்கியின் படைப்புலகை இரண்டு காலகட்டங்களாகப் பிரிப்பது விமர்சன மரபு. இருபத்து நான்கு வயதில் அவர் எழுதிய ‘பாவப்பட்டவர்கள்’ நாவலிலிருந்து சைபீரியாவிற்கு நாடு கடத்தப்படும் வரை அவர் எழுதியவற்றை முதற்கட்டமாகப் பிரிக்கலாம். அதில் ‘டபுள்’ குறுநாவலும் பலகீன இருதயம் உட்பட பல சிறுகதைகளும் அடங்கும். சிறைவாசத்திலும் சைபீரிய வாழ்விலும் பிரதானமான பத்தாண்டுகளைக் கழித்துவிட்டு மீண்டும் எழுதத் தொடங்கியதிலிருந்து அவரது இறுதி நாவலான கரமாசோவ் சகோதரர்கள் வரையான படைப்புகளை இரண்டாம் கட்டமாக வகுக்கலாம். இந்த இரண்டாம் கட்ட படைப்பு வாழ்க்கையில் தான் தாஸ்தேயெவ்ஸ்கி தன் மகத்தான ஆக்கங்களைப் படைக்கிறார். முதல் பகுதியில் ரஷ்ய இயல்புவாத எழுத்து மற்றும் கோகலின் தாக்குறவு ஆகியவற்றால் ஆளான கற்பனாவாத எதார்த்த எழுத்தாளராக இருந்தவர் இவ்விரண்டாம் பாதியில் தனித்த தலைசிறந்த செவ்வியல் ஆசிரியர்களில் ஒருவராகிறார்.

எரிக் ஹாப்ஸ்வாம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியையும் ஒருசேர ‘புரட்சியின் நூற்றாண்டு’ என்கிறார். அமெரிக்கப் புரட்சி, அயர்லாந்து புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலை என ஒரு பெரிய நிலைமாற்றத்தின் கொதிகலனாக இருந்தது அக்காலகட்டம். இக்கொந்தளிப்புக்கான பொருளியல் சூழலை உருவாக்கியது இங்கிலாந்தில் கருக்கொண்ட தொழிற்புரட்சி என்றால் கருத்தியல் உந்தத்தை வழங்கியது பிரெஞ்சு புரட்சியை ஒட்டி நடந்த விவாதங்களும் மேற்கு ஐரோப்பிய சிந்தனையாளர்களின் தத்துவ வெளியீடுகளும் எனக் கூறுகிறார் ஹாப்ஸ்வாம். இப்புரட்சிகர சிந்தனைகள் சிறு சிறு வித்தியாசங்களுடன் புதிய புதிய நாமகரணங்களில் ஏறத்தாழ உலகமெங்கும் சமூக அரசியல் சூழலில் வெப்பநிலையை ஏற்றிக்கொண்டிருந்தன. இந்தப் பின்புலத்தில் தான் மார்க்ஸ் ‘கம்யூனிசம் எனும் பூதம் ஐரோப்பாவை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது’ என்றெழுதினார். கம்யூனிசம் என்ற பெயரைப் பல்வேறு புரட்சிகர சிந்தனைகளுக்கான வெகுஜன கூட்டுப்பதமாகவே குறிப்பிட்டார் அவ்விடத்தில்.

 

பீட்டரது சீர்திருத்தங்களின் காலத்தில் மெதுமெதுவாக ஐரோப்பாவை நோக்கி நகரத்துவங்கிய ரஷ்யா அதுவரை ஆசியாவின் ஒரு பின் தங்கிய பெரிய நாடாகவே இருந்து வந்தது. மற்ற மேலை நாடுகள் தொழிற்புரட்சியின் விளைவால் நவீன யுகத்திற்குள் நூறு கால்களில் முன்னேறிக்கொண்டிருக்க ரஷ்யாவில் 1860 வரை கூட பண்ணையடிமை முறை அதன் மூலவடிவிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மணிமுடியை உருட்டுவது, அரியணையை இடமாற்றுவது, அரண்மனையைக் கொளுத்துவது என ஐரோப்பாவே ஒரு சரித்திர நாடக அரங்காக மாறிக்கொண்டிருந்த நேரத்தில் அன்னை ரஷ்யா அப்பட்டமான ஒரு நிலப்பிரபுத்துவ மன்னராட்சியாத் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில் சீர்திருத்தங்கள் வாயிலாக ரஷ்யாவில் ஒரு மிகமுக்கியமான திருப்பம் உருவாகிறது. அதாவது பிரபு வம்சத்தினரிடையேயும் மேல் நடுத்தரவர்க்கத்தினரிடையேயும் மெல்ல உருவாகி வந்த அறிவுஜீவி வர்க்கத்தின் தோற்றம். இவர்கள் ஐரோப்பியக் கல்வி கற்று பிரஞ்சு மொழி பேசி மேலையர்களது உடைகளை மட்டுமின்றி கொள்கைகளையும் உடுத்தியிருந்த ஒரு சிறிய வர்க்கம். பெரும்பாலும் வளமிக்க முக்கியமான குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள். ரஷ்ய இலக்கியத்திற்கும் கலையெழுச்சிக்கும் வித்திட்ட ஆதார முரண்பாடு இது தான் என்கிறார் தாஸ்தேயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றாசிரியரான ஜோசப் பிராங்க்.

 

அதாவது ஐரோப்பிய அறிவார்த்தமும் அணுகலும் கொண்ட ஒரு சிறு பகுதியினர் ஒருபுறம், அவர்களின் இலட்சிய நாட்டத்திற்கு சற்றும் பொருந்திப்போகாத அல்லது அவர்களது துடிப்பிற்கு ஏதுவற்ற மிகவும் பின் தங்கிய பெரும்பான்மை ரஷ்யா மறுபுறம். ரஷ்ய செவ்வியல் படைப்புகளில் ஏதோ ஒரு புள்ளியில் இம்முரண்பாட்டை உரசிச் செல்லாத படைப்புகளே இல்லை எனலாம். (தோற்றத்தில் இந்திய மறுமலர்ச்சி இலக்கியங்களோடு ஒப்பிட்டு பார்க்கலாம் இதை). இது இரண்டு வழிகளில் செயல்பட்டது. ஐரோப்பிய மறுமலர்ச்சியின் கருத்துக்களை குடியானவ மக்களிடையே கடத்தி அந்த இலட்சியங்களை நோக்கிச் செல்ல அவர்களைத் தூண்டுவது. இன்னொன்று அம்மண்ணிற்கே உரிய மரபார்ந்த பண்பு நலன்களை, அப்பண்பாட்டின் மூலகங்களை சுவீகரித்தல் அதாவது ருஷ்ய ஆன்மாவைப் புரிந்துகொள்வது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் அனைத்து ரஷ்ய படைப்புகளையும் இவ்விரு துருவங்களுக்கிடையே வைத்துப்பார்க்க இடமிருக்கிறது.

 

தாஸ்தேயெவ்ஸ்கி இரண்டு வகை கற்பனாவாதத்தால் ஆகர்ஷிக்கப்பட்டவர். இரண்டுமே பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் மேற்கு ஐரோப்பாவில் கிளைத்தவை. ஒன்று ஜெர்மானியக் கருத்து முதல்வாதத்தால் ஊட்டம் பெற்ற மீமெய்மை கற்பனாவாதம். மற்றொன்று பிரெஞ்சு அறிஞர்களான ஃபூரியர் போன்றோரால் முன்வைக்கப் பட்ட சமூகக் கற்பனாவாதம். ஒன்று உள்முகமாகத் திரும்பியது. ஆன்மா முழுமுதல் பொருள் என்றும் அதன் எல்லையற்ற சாத்தியங்களை நோக்கி உயர்வதே வாழ்வின் நோக்கம் என்றும் வலியுறுத்தியது. மற்றொன்று வெளிநோக்குடையது. மனித சாத்தியங்கள் எல்லயற்றவை அன்று மாறாக சமூக அழுத்தங்களால் வரையறுக்கப்பட்டது எனக்கூறியது. இரண்டுமே கற்பனாவாதங்கள். தாஸ்தாயெவ்ஸ்கி இரண்டிலிருந்தும் தாக்கத்தைப் பெற்றார். சிந்தனையாளர்களிடம் இருந்தல்ல படைப்பிலக்கியவாதிகளிடம் இருந்து. ஷில்லர், கதே இடமிருந்து ஜெர்மானிய கற்பனாவாதத்தை. பால்சாக், ஹியூகோ இடம் இருந்து பிரஞ்சு சமூக கற்பனாவதத்தை. சொல்லப்போனால் இறுதிவரை இரண்டில் ஒன்றை அவரால் தேர முடியவில்லை. இரண்டையும் கைவிடவும் முடியவில்லை. ஏனெனில் அக்காலத்திய எல்லா ரஷ்ய அறிவாளிகளைப் போல அவரும் அவ்விரண்டையும் கிறித்தவத்தோடு ரகசியமாக முடிச்சிட்டிருந்தார். எந்த அறிவியக்கமாய் இருந்தாலும் ரஷ்யாவில் அது கிறித்துவத்தின் கேள்வியைச் சந்தித்தே ஆகவேண்டும் என்கிறார் ஜோசப் பிராங்க். ரஷ்ய நாத்திகவாதிகள் கூட கிறித்துவ மதத்தை மறுதலித்தாலும் கிறிஸ்து என்ற பிம்பத்தை தம் கட்சியைச் சார்ந்த ஒருவராகவே காட்டிக்கொள்ள முயன்றனர். பிராயம் முதலே கிறித்தவத்தில் பெரும்பிடிப்பு கொண்டிருந்த தாஸ்தாயெவ்ஸ்கியின் ஆர்த்தடாக்ஸ் பித்து பிரசித்தமானது. ஆயினும் அவர் எதிர்கொண்டவை அவரது காலகட்டத்தின் ஆதாரக் கேள்விகளையே. அவரது எல்லா நாவல்களையுமே சமூக உளவியல் நாவல்கள் என வகைப்படுத்த வாய்ப்புள்ளது.

ஆனால் அவர் சமகாலத்தின் கேள்விகளைச் சந்தித்தது நடப்புச் செய்திகளின் மேற்தளத்தில் அல்ல. அவற்றை அடிப்படையான மனித இயல்பினது உள்முரண்களாக மாற்றிக்கொள்கிறார். அதனால் சமூக வாதங்களின் தீர்வுகளைப் பெரிதாக நம்புவதில்லை அவர். எந்தவொரு புதிய தரப்பையும் உள்ளுணர்வின் தடத்தில் நிரந்தப் புதிரின் ஒரு பரிமாணமாக உருமாற்றுகிறார். ஒரு கருத்தை அதன் எல்லைக்குக் கொண்டுசெல்கிறார். எதைக் கையாளும் போதும் தன் தேடலின் பாதையினின்று கண்ணெடுப்பதில்லை. மறுதலையாக மானுடத்தின் அடிப்படை வினாக்களை விசாரிக்க, மனிதன் எனும் புதிரை விடுவிக்க சமூக நிகழ்வுகளைப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் கூறமுடியும்- அவருக்குத் தெரியும் திராட்சைகள் அழுகிவிடும் ஒயினுக்கு அழிவில்லை என்று.

*

இயற்கையில் கடவுள் வசித்தது ஒரு காலம். சூர், முருகு, அணங்கு என நீர்நிலைகளிலும் மலையிடுக்குகளிலும் வாழ்ந்து வந்தது. பின் மின்னலையும் புயல்களையும் பெருங்கடவுள்கள் தம் திறலை நிலைநாட்டப் பயன்படுத்தின. திடுமென இவை அனைத்தையும் தெய்வதம் இன்றியே விளக்க முடிந்தால் இவை எல்லாம் என்ன ஆகும்? முடிவற்ற மூர்ச்சையாக்கும் ஒரு பொருட்தொகுதி என்று ஆகிவிட்டால், நாம் நம் இருப்பிலேயே ஓர் அழையா விருந்தினரெனத் தானே உணர முடியும்.

 

கருத்தைப் பின்னந்தலையில் சூடிக்கொள்ளலாம்; வாயில் போட்டுச் சவைக்கலாம். ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கி செய்வது அதையல்ல. ரஷ்ய விமர்சகர் ஸ்ட்ரக்கோவ் குறிப்பிட்டதைப் போல அவர் கருத்தை உணர்கிறார். அக்கருத்து தன்னுள்ளே ஊடுருவிச் செல்ல அனுமதிக்கிறார். அவரது கதாபாத்திங்கள் ஒரு கருத்தின் பிரதிநிதியாக வாதாடுபவை எனக் கூறப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் அவரது பாத்திரங்கள் ஒரு கருத்தால் பீடிக்கப்பட்டவை. அவை அக்கருத்துக்காக வாதிப்பவை அன்று அக்கருத்தின் நாவாகி விடுபவை. அவரது ஒரு மகத்தான படைப்பின் பெயரே ‘பீடிக்கப்பட்டவர்கள்’ (அல்லது பேய்கள்). கருத்தால் பீடிக்கப்பட முதலில் அதை உணர வேண்டும். அக்கருத்துக்குக் கடத்தியாகச் செயல்பட வேண்டும். அப்படி அல்லாமல் அதை மூளைப்பயிற்சிக்கான சாமானாகக் கொண்டால் எளிதாகக் கடந்துசென்றுவிடலாம். காட்டாக கடவுள் இல்லை என்ற கருத்தை அப்படி எளிதாகக் கடந்து விடலாம் தான். நாத்திகன் முற்போக்குவாதி போன்ற அடையாளங்களைச் சட்டைப் பையில் குத்திக்கொள்வது இப்போது கடினமான விஷயமல்ல. ஆனால் அக்கருத்தை ஒருவர் தன் தண்டுவடத்தில் உணர்ந்தாரெனில் அதன் முனகலை அடிவயிற்றில் கேட்டாரெனில் அவர் பீடிக்கப்பட்டவரைப் போலவே நடந்துகொள்வார். அப்படித் தான் ஒரு கருத்தின் முகடுகளையும் பாதாளத்தையும் காணமுடிகிறது அவரது பாத்திரங்களால். அப்படித் தான் தாஸ்தாயெவ்ஸ்கி சிந்தனைகளின் பாரதூர பின்விளைவுகளை அறியக்கூடியவரானார். அப்படித் தான் அவர் புஷ்கினின் ‘தீர்க்கதரிசி’ ஆனார்.

 

நியுட்டோனிய இயற்பியல் பிரபஞ்ச இயக்கத்தை சில இயந்திர விதிகளின் அடிப்படையில் பொருள் கொண்டு வரையறுத்தது. இதே போல வரலாற்றுவாதமும் பரிணாமக் கொள்கையும் ஒட்டுமொத்த உயிர்கோள செயல்பாட்டையும் அதனூடாக மனித சமூக வளர்ச்சியையும் முழுமையாக விளக்கிக்காட்ட முயற்சித்தது. இந்தப் பின்னணியில் தான் ஏற்கனவே தத்துவத்தில் நிலவிவந்த நிர்ணயவாதம், பொருண்மய நிர்ணயவாதமாக(Material determinism) வலுவாக நிறுவிக்கொண்டது. இதனோடு தொடர்புடைய ஒரு கொள்கையை ரஷ்ய அரசியல் விமர்சகரான நிக்கோலாய் செர்னிஷெவ்ஸ்கி Rational Egoism என்ற பெயரில் முன்னெடுத்தார். அது மனித இச்சைகளையும் அவனது செயல்பாட்டையும் நோக்கத்தையும் பகுத்தறிவின் மூலம் நேர்த்தியாகக் கரைப்படுத்திக் கையாளமுடியும் என வலியுறுத்தியது. இக்கோட்பாட்டை இயக்கி செய்துகாட்டும் முகமாக செர்னிஷெவ்ஸ்கி எழுதிய நாவலின் பெயர் ‘செய்ய வேண்டியது என்ன?’. மனித பகுத்தறிவில் நம்பிக்கை கொண்ட கதாபாத்திரங்கள் மூலம் சமூக மாற்றத்தை நிகழ்த்துவதாக அமைந்தது அந்த நாவல். கலைத்தரமான வெற்றியடையாவிடினும் ரஷ்யாவில் முன்னுதாரணமற்றதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது அப்புத்தகம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் புரட்சியாளர்களிடையே பைபிள் போல வாசிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்படைப்பால் பலமாக ஊக்கமடைந்த லெனின் ‘செய்ய வேண்டியது என்ன?’ என்ற பெயரிலேயே இன்னொரு பிரசித்தி பெற்ற நூலை மார்க்ஸிய அடிப்படையில் எழுதினார். டால்ஸ்டாயும் இந்த பெயரைப் பயன்படுத்தி தன் சொந்த விழுமியங்களுக்கு உருக்கொடுத்தார்.

 

நிலவறை குறிப்புகள் நாவலையே செர்னிஷெவ்ஸ்கியின் நாவல் மீதான தாக்குதலாகவும் நையாண்டியாகவும் வாசிக்க முடியும் என்கிறார் ஜோசப் ப்ராங்க். ‘செய்ய வேண்டியது என்ன’ என்ற பேரே நாவலில் நேரடியாகக் குறிப்பிடப்படுகிறது. அந்நாவலின் பல தருணங்களும் பாத்திரங்களும் கேலி செய்யப்படுகிறது. ஆனால் நிலவறைக்குறிப்புகளை அப்படிக் குறுக்கிவிட முடியாது. ஏனெனில் புரட்சிகரக் குழுக்களில் நேரடியாகப் பங்கேற்றிருந்த அதனால் நாடுகடத்தப்பட்ட தாஸ்தாயெவ்ஸ்கிக்கு அக்கருத்தியலின் உள்முரண்களையும் இடைவெளிகளையும்  கண்டறிவதில் பெரிய சிரமம் இருந்திருக்காது. ஆனால் அவர் அஞ்சியது அக்கருத்தியல் வாதத்தின் தர்க்க பலகீனத்தை அல்ல மாறாக அதன் கவர்ச்சிகரத்தை. அதன் மூலம் நடக்கச் சாத்தியமான ஆபத்தை. இக்கருத்தியலின் தவிர்க்கமுடியாத விபத்து தான் நிலவறை மனிதன் எனச் சுட்டிக்காட்ட விரும்பினார். ஆனால் இந்நூல் அப்பின்புலத்தை மிக எளிதாகவே தாண்டிவிட்டது. நிர்ணயவாதமும், பகுத்தறிவாண்மையும் விசாரத் தளத்தை மீறி இன்று நவீனத் தொழில்நுட்பம் மற்றும் முதலாளித்துவத்தின் கதையாடல்கள் வழியாக பொதுப்புத்தியின் நாளங்களுக்குள் ஊடுருவி விட்டன என்பதால் நிலவறை மனிதனை வெறும் சிறப்புக் கதாபாத்திர வகையாகச் சுருக்கிவிட முடியாது. நவீன மனிதனின் அருவருப்பான மறு பக்கத்தை ஒளிநகல் எடுப்பதால் நிலவறை மனிதன் தன்னளவிலேயே ஒரு நவீனத் தொன்மம் ஆகிறான். இந்நாவலின் தொடக்கத்திலேயே அடிக்குறிப்பில் ஆசிரியர் குறிப்பிடுகிறார் ‘இக்குறிப்புகளும் இவற்றின் ஆசிரியரும் கற்பனையே. ஆயினும் இத்தகைய ஆட்கள் இருக்க முடியும் என்பது மட்டுமல்ல நம் சமூக உருவாக்கத்தின் பின்புலங்களைக் கருத்தில் கொண்டால் இத்தகையோர் இருந்தே ஆக வேண்டும்.’

 

பல்பிடுங்கப்பட்ட எதிர்நாயகன் வேறு யாருமில்லை இருத்தலியல் கதாநாயகன் தான். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்தப் புத்தகம் தான் முதல் இருத்தலியல் படைப்பாகக் கருதப்படுகிறது. அதற்குப் பிறகு போன நூற்றாண்டில் எல்லா மொழிகளிலுமே இருத்தலிய வெள்ளப்பெருக்கு ஓடிமுடித்து அந்நியமாதல் என்ற வார்த்தை கிட்டத்தட்ட குடும்பச் சொற்பிரயோகமாக மாறிவிட்டது. ஆனால் இப்போது வாசிக்கும் ஒரு தீவிர வாசகனையும் பிடதியில் அடித்துக் கிடத்தும் வல்லமை கொண்டது இக்குறுநாவல்.

*

கூட்ஸியின் பீட்டர்ஸ்பர்க் நாயகனில் ஒரு காட்சி. தனது மனைவியின் சடலத்தின் அருகே அமர்ந்தபடி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெறிபிடித்தவாறு தாஸ்தேயெவ்ஸ்கி எழுதுவதாக. தாஸ்தாயெவ்ஸ்கியின் இப்படைப்பு அக்காலத்திய விமர்சகர்களால் அவரது சொந்த அவஸ்தையின் வெளிப்பாடாகவும் அவரது சொந்த சரிவின் கதையாகவுமே எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனாலேயே அதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் தவறவிட்டனர். உண்மையில் அது போன்ற சூழலில் தான் அவர் இதை எழுதவும் செய்தார். அவரது முதல் மனைவியும் அவருக்குப் பேருதவியாய் இருந்துவந்த சகோதரனும் மரணத்தருவாயில் இருக்க அவரது வலிப்புநோயும் சூதாட்டப் பித்தும் தீவிரமான சமயத்தில் மோசமான ஒரு காதல் விவாகரத்தின் முடிவிலும் பெரும் நிதிநெருக்கடியிலும் குடும்பச்சுமையிலும் தான் இதை எழுதுகிறார். ஆனால் யுங் சொல்வது போல ’ஒரு கலைஞனின் வாழ்வை மட்டும் கொண்டு அவன் கலையை விளக்க முடியாது. எல்லா பெருங்கலைப்படைப்பும் கூட்டு நனவிலியில் வரவிருக்கும் மாற்றங்களை உள்ளுணர்வின் வழியாகப் புரிந்துகொள்பவையே’. எனவே இது அவரைப் பற்றியது என வாசிக்கும் ஒருவர் அடிப்படையையே தவறவிடுகிறார் என்று தான் சொல்லவேண்டும்.

இந்நாவலில் ஒரு வரி பீட்டர்ஸ்பர்கை ‘உலகிலேயே அருவமான முன் தீர்மானிக்கப்பட்ட நகரம்’ என வர்ணிக்கிறது. மகா பீட்டரின் காலத்தின் போது சதுப்புநிலப் பகுதி ஒன்றில் ‘ஐரோப்பாவை நோக்கி ஒரு சாளரமாக’ நிர்மாணிக்கப்பட்டது பீட்டர்ஸ்பர்க் நகரம். பழங்காலம் முதலே ரஷ்யாவின் தலைநகராய் இருந்து வந்த மாஸ்கோவோ தேசத்தின் மரபையும் தொன்மையையும் பிரதிபலிக்கும் கலாச்சார மையங்களும் பற்பல தேவாலயங்களும் நிரம்பிய இடம். மாறாக பீட்டர்ஸ்பர்க் நவீன யுகத்தின் குறியீடாக அரசதிகாரத்தின் முகங்களான அலுவலகங்களும் புதுச்சந்தைகளும் ஒளிரும் செயற்கையான நகரம். தாஸ்தாயெவ்ஸ்கி தன் பல படைப்புகளுக்கு இந்நகரைக் கதைக்களமாகக் கொண்டது அங்கு அவர் அதிகமாக வாழநேர்ந்தது மட்டும் காரணமாக இருக்க முடியாது. எழுந்து வந்த புதிய ரஷ்யாவின் பொருளற்ற பகட்டையும் அபரிமிதமான அசமத்துவத்தையும் அதனினும் மேலாக ஆன்மிக வறுமையையும் குறிப்புணர்த்த பீட்டர்ஸ்பர்கின் அழுக்கான தெருக்களும் இருண்ட சந்துகளும் போல வேறெந்த ரஷ்ய நகரமும் பயன்பட்டிருக்காது. மேலும் தாஸ்தாயெவ்ஸ்கியின் பீட்டர்ஸ்பர்க் உண்மையான பீட்டர்ஸ்பர்க்காகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லையே. அவது பல நாயகர்களைப் போல நிலவறை மனிதனும் பீட்டர்ஸ்பர்கின் ஒதுக்குப்புறத்தில் மலிவான அழுக்கடைந்த நாற்றமடிக்கும் இருண்ட குடியிருப்பில் வசிக்கிறான். அவனது மொழியில் சொல்வதென்றால் ‘மூலையில்’. அவன் ஒரு அநாதையாக வளர்ந்தவன். அவனே சொல்வது போல ‘நண்பர்கள் எனக் கூறிக்கொள்ள யாருமில்லை’ அவனுக்கு குடும்பம் இல்லை காதலி இல்லை அக்கம்பக்கத்தவர் இருப்பது போல் கூடத் தெரியவில்லை. செய்து வந்த  வேலையையும் தூரத்து உறவினரின் இறப்பு மூலம் வந்த பிதிரார்ஜிதத்தின் காரணமாக ராஜினாமா செய்துவிடுகிறான். நிதர்சனத்தில் அவன் எந்த சமூகத் தொன்மப் பாத்திரங்களையும் ஏற்கவில்லை. அவனது முதல் அடையாளமே இந்த அடையாளமின்மை தான். சமூகக் கதையாடல்களில் பங்கேற்க முடியாததே அவனது பிரதிக்குரலின் அடிநாதத்திற்குக் காரணம்.

 

இக்குறுநாவல் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி நிலவறை மனிதனின் தற்கூற்று மொழிதலாகவே அமைந்துள்ளது. தான் யார் என்பதையும் என்ன நோயால் பீடிக்கப்பட்டுள்ளான் என்பதையும் விவரிக்கிறான். அவன் எந்தக் கருத்தியலையும் முன்வைக்கவில்லை. எந்தக் கோட்பாட்டுப் பள்ளியிலும் அவனைச் சேர்க்க முடியாது. அதற்கான தர்க்க ஒழுங்கும் தெளிநோக்கும் அவனுக்குக் கிடையாது. (ஒருவேளை தர்க்கத்தால் கோர்க்கப்பட்டிருந்தால் இம்முதற்பகுதி ஒரு கருத்தியல் ஆவணமாகவே எஞ்சியிருக்கும். ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கியின் எந்தப் படைப்பையும் அப்படிக் குறுக்கிவிட முடியாது. ஏனெனில் தர்க்கத்தை விட உள்ளுணர்வின் முடுக்கங்களே அவரது புனைவின் திசையைத் தீர்மானிக்கின்றன). அவனது தற்கூற்று முழுதுமே சிதறிய சுயமொன்றின் கொடூர உண்மைகள். ஆயினும் இத்தகைய கொந்தளிப்பின் சிதறல்களையும் தத்தளிப்புகளையும் கருத்தில் கொண்டால் மட்டுமே நிலவறை மனிதனின் பாத்திரப்படைப்பு பூர்த்தி அடையும்.

அவனது சுய அறிமுகமே குழப்பமூட்டுவதாக உள்ளது. தனது நோயைக் குறித்து தனக்கு எல்லாம் தெரியும் என்கிறான் ஆனால் எந்த உறுப்பு பாதிப்புற்றுள்ளது என்பதில் தெளிவில்லை. நோயாளி எனினும் மருத்துவரைக் காணச்செல்ல மறுக்கிறான்.. வாசகனிடத்தில் பிரதானமாக அவன் பாவிப்பது நிச்சிரத்தையை. ‘நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள் எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை’ ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளலாம் அதைக் குறித்து எனக்கொன்றும் இல்லை’ இவ்வாறெல்லாம் கூறியவன் தான் உங்களுக்காக எழுதவில்லை என்கிறான். தன்னைக் குணப்படுத்திக் கொள்ளவே பேசுவதாகச் சொல்கிறான். ஆயினும் மீண்டும் மீண்டும் வாசகரை நோக்கி ‘ஜெண்டில் மேன்’ எனத் தேய்வழக்கில் பேச்சைத் துவங்குகிறான். இந்த விதமான பொருட்டின்மை(Indifference) நிலவறை மனிதனின் ஆதார குணாம்சம். இதற்குக் காரணமாக அவன் ஓரிடத்தில் கூறுகிறான்: ‘பீட்டர்ஸ்பர்கின் வானிலை என் உடல்நிலைக்குப் பாதகமானது. ஆனாலும் நான் பீட்டர்ஸ்பர்க்கை விட்டு வெளியேற மாட்டேன் – ஆ..நான் வெளியேறினாலும் வெளியேறாவிட்டாலும் அது ஒரு பொருட்டே இல்லை’.அப்படியானால் அந்நகரின் பொருட்டின்மையே அவனையும் தொற்றியுள்ளது எனலாம்.பொருட்டின்மை என்பது முகமூடி தான். உள்ளே இருப்பதோ வெறுப்பு. செல்ல இடமில்லாத போது அவ்வெறுப்பு தன் மீதே பாய்ந்துகொள்கிறது. எதுவும் இல்லாத இடத்தில் வெறுப்பு  குடியேறும் என்பது தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்டுபிடிப்புகளில் ஒன்று. தனது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிந்தும் அவன் மருத்துவரிடம் செல்லாதது ‘வெறுப்பினால்’ தான் என்கிறான். ஆனால் மருத்துவரை அணுகாததால் அவன் தண்டித்துக் கொள்வது தன்னையே தான். அதீத கூருணர்ச்சி, சுய-அழிவு மனோபாவத்திற்கு இட்டுச்செல்லும் இடம் தாஸ்தாயெவ்ஸ்கி தவறவிட விரும்பாத ஓரிடம். என்பதால் தனது எதிர்நாயகனை, இழப்பதற்கு ஏதுமற்ற தற்கொலை படையினரில் ஒருவராகவே பேச வைத்திருக்கிறார்.

நிலவறை மனிதன் தன்னைப் பீடித்துள்ள நோயாகக் கருதுவது அதீத பிரக்ஞையை. ஓரிடத்தில் பிரக்ஞையே பிணி தான் என்கிறான். இந்த அதீத பிரக்ஞை காரணமாக அவனுக்கு எதார்த்தத்தில் உள்ள முரண்களும் விரிசல்களும் சட்டெனக் கண்ணில் படுகின்றன. அதை விட மோசமாகத் தன் உள்ளே மொய்க்கும் எதிர்வுகள் மற்றும் பிறழ்வுகளிலிருந்து பார்வையை அகற்ற முடிவதில்லை. இவ்விதத்தில் ஒவ்வொரு பொருண்மையும் தருணமும் தனக்கெதிரான கூறைத் தன்னுள்ளேயே கொண்டுள்ளதைக் காணமுடிகிறது அவனால். இதனால் முன்னிற்கும் தேர்வுகள் ஒன்றை ஒன்று தாமே நிராகரித்து அவனது செயல்பாட்டை ரத்து செய்து முடிக்கிறது. ஒவ்வொரு செயலுக்கு முன்னும் அவன் அதற்கான தடைகளையும் அதிலுள்ள அற்பத்தனத்தையும் காண்கிறான். எனவே ஒவ்வொரு செயலில் இருந்தும் பின்வாங்குகிறான். ஒவ்வொரு கணத்திலும் உள்ள எதிர் சாத்தியங்களின் புலத்தோற்றம் முடமாக்குகிறது அவனை. இவ்விதமாக சங்கற்பமின்மையும் செயலின்மையும் அவனது இருப்பின் இயற்பண்புகளாகின்றன.

புறக்காரணி ஒன்று வந்து குறுக்கிடாத வரை எந்த ஒரு பொருளும் தான் இருக்கும் நிலையிலேயே இருக்க விரும்பும். இப்பண்பிற்கு நிலைமம் என்று பெயர். நிலவறை மனிதன் கூறுகிறான் ‘உச்சபட்ச பிரக்ஞையின் கனி நிலைமம் தான்’ அப்படியென்றால் ஒரு மனிதன் பொருளாகிவிட்டானா? அவன் செய்யவேண்டிய தேர்வுகளிலிருந்தும் அதன் மூலம் விளையும் பொறுப்பிலிருந்தும் அதனோடு ஒட்டிப்பிறக்கும் பதற்றத்திலிருந்தும் தப்பித்துவிட்டானா? மிகையான பிரக்ஞை தான் தனது நோயெனக் கூறிக்கொண்டாலும் நிலவறை மனிதனின் உண்மையான வியாதி அதனால் விழைந்த செயலின்மையே. செயலின்மையின் மூலம் அவன் தன்னுள்ளே தொடங்கி தன்னுள்ளே முடியும் விலங்காகி விடுகிறான். தன்னியல்பான சமநிலையின்மை அவனுக்கு தலைச்சுற்றலை உண்டாக்குகிறது. மனித இயல்பான வெளிப்பாட்டு அம்சம் தடைபடுகிறபோது உருக்கொடுக்க இயலாத தனது உயிர்ச்சாறுகளின் நொதிப்பினால் உள்ளூற அழுகத் துவங்குகிறான். இத்தகு செயலின்மை சமூக உருவாக்கச் செயல்பாட்டிலிருந்து அவனை விலக்குகிறது. அச்செயல்பாட்டினூடாக அவனது தன்னுருவாக்கத்தையும் நீக்குகிறது. இப்படியாக அவன் எவ்வித உருமாற்றத்தின் வாய்ப்புக்கும் அப்பால் சென்றுவிடுகிறான். தன் நிலைமப் பண்பின் காரணமாக அவன் எப்படி இருக்கிறானே, வெறுப்பு மிக்க விரும்பத்தகாத ஒரு நோயாளியாக, அப்படியே தொடர்கிறான். அதற்கு எதிரான முனைப்பையும் சிந்தனையையும் தன் அதீத பிரக்ஞையாலேயே வீழ்த்துகிறான்.

ஒரு குதிரை குதிரையாக ஆக வேண்டியதில்லை. ஆனால் ஒரு மனிதன் ஏதாவதாக மாறவேண்டியுள்ளது. முன்னர் சொன்னதைப் போல சமூக உருவாக்கத்தினூடே அவன் தன்னையும் உருவாக்க வேண்டியுள்ளது. ஆனால் செயலின்மையின் விளைவால் நிலவறை மனிதனால் எதுவாகவும் ஆகமுடியவில்லை. ‘ஒரு போக்கிரியாகவோ, ஒரு நீதிமானாகவோ ஒரு நாயகனாகவோ ஒரு பூச்சியாகவோ..தன்னால் எதுவாகவும் மாறமுடியவில்லை’ என்கிறான். பிற்பகுதியில் மீண்டும் மீண்டும் சொல்கிறான் தன்னை எல்லோரும் ஒரு பூச்சியைப் போல நடத்துவதாக. ஓரிடத்தில் ‘ஜெண்டில்மேன்.. நிஜமாகவே சொல்கிறேன் நான் பலநேரம் ஒரு பூச்சியாக மாற முயன்றிருக்கிறேன்’ என்கிறான். அரை நூற்றாண்டுக்குப் பின் ஒரு அதிகாலையில் உண்மையாகவே தான் ஒரு பூச்சியாக உருமாறி இருப்பதைக் காண்கிறான். நிலவறை மனிதனின் உருவகம் தான் கிரிகோர் சமோசாவின் எதார்த்தம் ஆனது.

*

நிலவறை மனிதன் தன்னளவிற்கு அதீத பிரக்ஞை இல்லாத மற்றவர்களை ‘செயலின் மனிதன்’ என்றழைக்கிறான். அவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டாலும் அவர்களை முட்டாள்கள் எனவும் குறுகிய மனோபாவம் உடையவர்கள் என்றுமே சொல்கிறான். அவன் தன்னைக் குறித்து பெருமைப்படுவது தன் அறிவார்த்ததை முன்னிட்டே. அதுவே தனது சாபம் என்றும் சொல்லிக்கொள்கிறான். நவீனசுயம் மற்றெல்லா சுயங்களிலிருந்தும் தன்னைத் துல்லியமாக வேறுபடுத்திக் கொண்டதால் தனக்கும் மற்றமைக்குமான வடிவெல்லைகள் கூடுதல் கூர்மையாகப் பிரிக்கப்படுகின்றன. நிலவறை மனிதனின் அதீத பிரக்ஞை தவிர்க்க முடியாமல் அவனது ஆணவத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது. ஆகையால் தான் நாவலில் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் முட்டாள் என்றே விளிக்கிறான். இச்செயலின் மனிதனை ‘செய்ய வேண்டியது என்ன’ நாவலின் பாத்திரங்களாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

 

நிலவறை மனிதன் கையாலாகத்தனத்தைத் தன் தர்க்க அறிவைக்கொண்டு நியாயப்படுத்திக் கொள்கிறான். அவ்விதமாகத் தன் கரணியக் கூறை சமரசப்படுத்திவிட முடிகிறது. மனத்தின் ஏனைய படைப்பாக்க இச்சைக் கூறுகளோ திருப்தி அடைவதில்லை. இதுவே அவனது இடையறாத உளைச்சலுக்கும் எரிச்சலுக்கும் காரணமாக அமைகிறது. எல்லா முடிவுகளையுமே அறிவார்த்தமாக நிர்ணயிக்க முடியுமெனில் ஒரு தனிமனிதன் எந்த நோக்கத்திற்காக செயல்பட வேண்டும் என்கிறான். 2+2=4 என்பதை மாற்ற முடியாதென்றால் தான் எதற்காக வினையாற்ற வேண்டும் என்கிறான். மனிதன் தன்னை முழுதாகப் பகுத்தறிவின் மூலம் வகுக்கமுடியும் எனத் தெரிந்தால் அவன் வேண்டுமென்றே அதற்கு எதிராகச் செயல்படுவான் என்கிறான். எவ்வளவு கேலிக்குரியதாக இருந்தாலும் 2+2=5 என நிரூபிக்கவே முயல்வான். இந்நிர்ணயவாத நிலைப்பாட்டையே தன் செயலின்மைக்குக் காரணமாகச் சொல்கிறான். அவனது இம்மிகையான அறிவார்ந்த அணுகுமுறை இயற்கை விதிகளை ‘கற்சுவருடன்’ ஒப்பிடுவதற்கு இட்டுச் செல்கிறது.

 

மனித பண்புநலன்களை அட்டவணைப் படுத்த முடியும் என்றால் அவனது செயல்களை அறிவியல் பூர்வமாக வரையறுக்க முடியும் என்றால் தன்னிச்சையின்(Free will) இருப்பை நியாயப்படுத்தமுடியாது. தாஸ்தாயெவ்ஸ்கியைப் பொறுத்தவரை செயல் என்பது சுய-இச்சையிலிருந்து உதித்தாக வேண்டும். சுய-இச்சையின் கேள்வியானது அவரது மூலவிடயங்களில் ஒன்று. இச்சிக்கல் குறித்து அநேக படைப்புகளில் விசாரித்துள்ளார். ரஸ்கோல்நிக்கோவ் பலநேரம் ஒரு ’எந்திரம்’ போல நடந்துகொள்வதாகக் கூறுகிறார். பீடிக்கப்பட்டவர்களின் கிரிலோவ் பொதுநலத்திற்காகத் தற்கொலை செய்வதாகக் கூறிக்கொண்டாலும் தன்னிச்சையின் அபத்தமும் நோக்கமின்மையுமே பிரதானக் காரணம். இதற்கான அதிதீவிர இறுதி வடிவமாக இவான் கரமசோவின் மூர்க்கமான வாதத்தையும் ஏசுவின் எளிய பதிலையும் மகத்தான விசாரணையாளரில் அமைக்கிறார். ஆனால் அவரது படைப்புலகில் முதன்முதலாக இது தலைகாட்டியது நிலவறைக்குறிப்புகளில் தான். இது மட்டுமல்ல இதற்குப் பின்னான அவரது பெரும்படைப்புகளில் கையாளப்பட்டிருக்கும் பல கருக்கள் இப்படைப்பில் தான் முதலில் இடம்பெறுகின்றன. நிலவறை மனிதன், பகுத்தறிவின் அதீதம் தன்னிச்சையை மறுதலிப்பதாகக் கூறுகிறான். செர்னிஷெவ்ஸ்கியின் தரப்பிற்கான அவனது பிரதான எதிர்வினையே அது தான். ஆனால் போராடி வெல்லும் அத்தகைய சுய-இச்சையை தன் விழுமிய-முடமையால் அவன் பயன்படுத்துவதே இல்லை. இந்த நிலைமை நம் காலத்திற்கு அவ்வளவு பொருத்தப்பாடு உடையது.

சமூகவியலாளர் பாமன் சொன்னதைப் போல நம் காலத்தின் அடிப்படையான கேள்வி ‘செய்ய வேண்டியது என்ன’ என்பதல்ல யார் அதைச் செய்வது என்பது தான். எல்லோருக்குமே தெரியும் நுகர்விற்கு வரம்பிட்டாக வேண்டுமென. ஆனால் அரசாங்கங்கள் மட்டுமல்ல விலைப்பட்டியலில் இருந்து ஒரு சரக்கை நீக்குவதற்கு நம்மில் ஒருவர் கூட தயாராக இல்லை. முன்னெப்போதும் இல்லாத அளவு மத்தியவர்க்கம் மூடைக்கணக்கில் முற்போக்குக் கருத்துக்களைச் சுமக்கிறது. ஆனால் எதன் பொருட்டும் ஒரு செங்கல்லைக் கூடத் தியாகிப்பதற்கு அது முன்வராது. அப்படி ஒரு தருணம் வாய்ப்பின்  பொருண்மயவாதத்தாலும் பயன்பாட்டு நோக்கினாலும் உருப்பெற்ற தன் விலைமதிப்பற்ற பொதுப்புத்தியைக் கொண்டு அது வேண்டுமென்றே அவ்வாய்ப்பை நழுவவிடும் நிலவறை மனிதன் செய்வதைப் போல. மறைமுகமான இக்கூட்டுச் செயலின்மை ஒருவகை சப்கான்ஸியஸ் ஒப்பந்தம். மறுபக்கத்தில் நவீனத் தொழில்நுட்ப சந்தை கணக்கற்ற தேர்வுகளை வழங்குவது போன்ற மயக்கத்தைத் தருகிறது. அதாவது செயல்புரிவதற்கான எண்ணிறந்த சாத்தியங்களை முன்வைப்பது போல. ஆனால் அது ஒரு தோற்ற மயக்கமே. உதாரணத்திற்கு அலைபேசி வைத்துக்கொள்வது என்பது சுயதேர்வு போலத் தெரியலாம் ஆனால் அதை  வைத்துக்கொள்ள மறுக்கிற ஒருவர் தான் அது ஒரு மறைமுக நிர்பந்தம் என்பதை அறிவார். அப்படியென்றால் சமூக அழுத்தங்களின் கரைக்கோடுகளைத் தாண்டி மனிதன் தன் சுய-இச்சையைப் பிரயோகிக்கமுடியாதா? இங்கு தான் நிலவறை மனிதன் ஆச்சரியகரமாக ஒரு புரட்சிகர வாசலில் கொண்டு நிறுத்தப்படுகிறான். ஆனால் அவனால் முன்னகர முடியாது. வழக்கம் போல அவன் முரண்களின் வானவில்லையே காண்கிறான். அறிவுஜீவி ஒருவர் சொல்லக்கூடும் அவனது பிரச்சனையே முரணியக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாதது தான் என. ஆக அவன் பின்னகர்கிறான். அப்படியே பின்வாசல் வெளியே வெளியேறினால் அவன் துறவியாகி விடக்கூடும். கட்டாயம் அவனால் அவ்வளவு பெரிய முடிவை எல்லாம் எடுக்கமுடியாது. மீதமிருப்பது அந்த இரண்டு வாசல்களுக்கு இடையே அவனே சொல்வது போல ‘ஒரு எலியாக’ வாழ்வது தான். எப்போதாவது ஒரு க்ஷ்ணமேனும் தன்னை எலியாக உணராத பெருநகரவாசி யாராவது இருக்கிறார்களா? அந்த இரண்டு வாசல்களுக்கு இடையே தான் செயலின்மையின் அரியாதனம் வீற்றிருக்கிறது. கழற்ற முடியாத மணிமுடி என்பது வேறொன்றுமில்லை விரக்தி தான்.

 

*

1861 லண்டனில் நடைபெற்ற மாபெரும் முதல் உலகப் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டது பளிங்கு அரண்மனை (The crystal palace). அப்போதைய தொழில்நுட்பத்தின் முழுச்சாத்தியத்தையும் பயன்படுத்திக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தொழிற்புரட்சியினது வெற்றியின் சின்னமாகக் கருதப்பட்டது. செர்னிஷெவ்ஸ்கியின் நாவலில் இச்சின்னம் பகுத்தறிவினது சாதனைக் குறியீடாக இடம்பெற்றுள்ளது. பகுத்தறிவாண்மைவாதிகள் மனிதனின் செயல்பாட்டை அவனது சொந்த நலன்களின் பாற்பட்டு செம்மைப்படுத்த முடியும் என வாதிட்டனர். ஆனால் நிலவறை மனிதன் இக்கருத்தை முற்றிலும் மறுக்கிறான். ஒரு மனிதன் எப்போதும் தன் சொந்த நலன்களை முன்வைத்தே செயல்படுவான் என்பதை ஏற்காத அவன், மனிதன் தன் தனிப்பான்மையை நிலைநாட்ட தன் சொந்த நலன்களுக்கு எதிராகவும் செயல்படுவான் என்கிறான். ஏனெனில் எந்த நலனைவிடவும் முக்கியமான விநோத நலன் அவனது சுய-இச்சை என்கிறான். நவீன உளவியல் மனத்தை பலநூறு காம்ப்ளக்ஸ்களாக வகுப்பது மனித சுயத்தைப் பகுத்தறிவாக்கும் திட்டத்தில் விழும் விரிசல்களை நிரப்புவதற்குத் தானே. மூளையைப் புரிந்துகொள்வது மனத்தைப் புரிந்து கொள்வதாகாது. நிலவறை மனிதனின் அபாரமான முன்மொழிபானது மனிதன் என்பவன் அகாரணியக் கூறுகளாலும்(irrationality) உண்டாக்கப்பட்டவன் என்பதே. மானுடத்தின் இந்த அகாரணியக் கூறுகளைக் கருத்தில் கொள்ளாமல் உற்பத்திக்கப்படும் அனைத்து அறிவார்ந்த லட்சியங்களும் உட்டோப்பியாக்களும் தோல்வியால் தான் முடியும் என்கிறான் நிலவறை மனிதன். சென்ற நூற்றாண்டைத் திரும்பிப்பார்த்தால் அக்கூற்றை தாஸ்தாயெவ்ஸ்கியின் தீர்க்கதரிசனங்களில் ஒன்றாகக் கணக்கிடலாம்.

 

நிலவறை மனிதன் பளிங்கு மாளிகையை கோழிக்கொட்டிலுக்கு ஒப்பிடுகிறான். மழைக்கு ஒதுங்கமுடியுமே அன்றி அங்கு வாழமுடியாது என்கிறான். அங்கு சந்தேகத்துக்கோ துயரத்துக்கோ இடமிருக்க முடியாது என்கையில் அப்படிப்பட்ட ஓரிடத்தில் வாழ்வே சாத்தியமில்லை என்கிறான். சீருடைத்தனத்திற்கும் அசட்டு நன்னம்பிக்கைவாதத்திற்கும் எதிரான இந்தக் குரல் தான் எதேச்சதிகாரம் தொடர்பான 1984, Brave new world, catc-22 போன்ற அனைத்து எதிர்-உட்டோப்பிய நாவல்களிலும் இடம்பெற்றது. மற்ற நாவல்கள் எல்லாம் சோவியத் யூனியனின் வருகைக்கு வெகு பின்னர் என்றால் இப்படைப்பு ருஷ்யபுரட்சிக்கு அரைநூற்றாண்டு முன்னமே எழுதப்பட்டது என்பது தான் வித்தியாசம். பகுத்தறிவின் மூலம் கச்சிதமாக நிர்ணயிக்கப்பட்ட இலட்சிய சமூகத்தில் கூட மனிதன் தன் சொந்த சுய-இச்சையை நிலைநாட்ட அறிவியலால் கணிக்கப்படாத ஒன்றைச் செய்துகாட்டுவான் என்கிறான் நிலவறை மனிதன். குழப்பம், மூட்டம் யாவற்றையும் திட்டமாகக் கணித்து எல்லா வகை சஞ்சலத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பினும் மனிதன் வேண்டுமென்ற பைத்தியமாகி காரணிய அறிவின் ஆட்சிப்பரப்பை மீறிப்போவான் என்கிறான். நிலவறை மனிதனுக்கு மிக நெருக்கமான பாத்திரப்படைப்பான The Double கோல்யாட்கின் இறுதியில் மனநலவிடுதிக்குக் கொண்டு செல்வதை நினைவு கொள்ளலாம். மனிதன் தன் சொந்த நலன்களின் முன்னிட்டே இயங்குகிறான் என்பதை ஒத்துக்கொள்ள நேரிடினும் வேறெந்த நலனையும் விட அவனுக்கு முக்கியமான நலன் தன் சொந்த தனிப்பான்மையை தக்கவைப்பதும் அதன் பொருட்டு தன் சுய-இச்சையைக் கையாள்வதுமே. நிலவறை மனிதன் சொல்கிறான் ‘காரண அறிவு என்பது வெறும் காரண அறிவு தான் ஆனால் சுய—இச்சையோ ஒட்டுமொத்த வாழ்வின் புலப்பாடு’.அதாவது மனித சாராம்சமே அவனது சுய-இச்சை தான் என்கிறான்.

 

மாறாக நவீன மேலைத் தத்துவ இயலின் தந்தையான தெகார்தே பிரக்ஞையை மனித சாராம்சமாகக் கண்டார் – நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன். (கிருஷ்ணன் கீதையில் செயலையே மனித சாரமாக முன்வைப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். சொல்லப்போனால் தாஸ்தாயெவ்ஸ்கியின் ஒவ்வொரு ரத்தம் தோய்ந்த கேள்விக்கும் கீழை ஞானம் முற்றிலும் புதிய பதிலை முன்வைக்கக் கூடும். ஆனால் ஒரு படைப்பாளியை அவனது பண்பாட்டுப் பின்புலத்தில் வைத்து ஆய்வதே பொருத்தமானதாக இருக்கும்). சாக்ரடீஸ் தத்துவவாதியை மகப்பேற்று தாதியுடன் ஒப்பிடுகிறார். அப்படிப் பார்த்தால் தெகார்தே நவீன சிந்தனை பிறப்பெடுக்க உதவியவர்களுள் முக்கியமான ஒருவர். நவீன உணர்திறனது நிழற்பிரதேசத்தைக் கண்ணுறும் நிலவறை மனிதனோ தனது சாரமான பிரக்ஞையையே ஒரு வியாதி என்கிறான்.

 

*

 

நிலவறை மனிதனுக்கும் வாசகருக்குமான உறவு ஒருவிதத்தில் சமூகத்திற்கும் அவனுக்குமான உறவை மறைமுகமாகச் சுட்டுகிறது. கதைசொல்லியாக நிலவறை மனிதன் குழப்பமானவன் நம்பகத்தன்மை அற்றவன். முதற்பகுதியின் இறுதியில் தான் சொல்லிய அனைத்துமே பொய் என்கிறான். ஒரு கதைசொல்லி தான் பொய் சொல்வதாகக் கூறினால் அவன் சொல்வதை எப்படிப் பின் தொடர்வது.

 

நிலவறை மனிதன் வாசகர்களைக் கண்டுகொள்வதே இல்லை. ‘நீங்கள் என்ன வேண்டுமாயினும் நினைத்துக் கொள்ளுங்கள்.. நான் உங்களுக்காக எழுதவில்லை’ என்கிறான் ஆயினும் அவர்களோடு உரையாடுவதை நிறுத்துவதில்லை. மேன்மை தங்கியவர்களே என விளித்தாலும் உள்ளூர அவர்களை ஏளனமாகவே கருதுகிறான். சமூகத்துடனான உறவிலும் இத்தகைய குழப்ப மனநிலையையே கடைப்பிடிக்கிறான் (கூடவே பொருட்டின்மையையும்). அதனோடு தொடர்பு கொள்ள விரும்புகிறானா விலகவிரும்புகிறானா என்பதே தெளிவதில்லை. இந்த விதமான முரண்பாடு இல்லாத ஒரு பத்தியைக் கூட தாஸ்தாயெவ்ஸ்கியிடம் காணமுடியாது. பொருத்தமாகவே நாவலின் இறுதியில் நிலவறை மனிதன் தன்னை ‘முரண்பாடுகளை விநியோகிப்பவன்’ என அழைத்துக் கொள்கிறான். இதை தாஸ்தாயெவ்ஸ்கியின் நேரடிக் குரலாகவே எடுத்துக்கொண்டாலும் பிழையாகாது என நினைக்கிறேன். ஏறத்தாழ அவரது எல்லாப் பாத்திரங்களுக்குமே முழுச்சுதந்திரம் தரப்படுவதுடன் அவையாவுமே தீவிரமாக நியாயப்படுத்தப்படுவதுண்டு, கருத்தியல் கற்றையில் எந்தப் புள்ளியில் அவை நிலைகொண்டிருந்தாலும் சரி. அதே போல எந்தத் தரப்பும் முழுதாக நிராகரிக்கப்படுவதில்லை. இதனாலேயே நாவல் கட்டுறுதியாக முடிவுபெறாது அநேக இளகுநூல்களுடன் நிறைகிறது. முதன்முதலாக இக்கருத்து பக்தினின் பிரபலமான ஆய்வின் மூலம் முன்வைக்கப்பட்டது.

 

நிலவறை மனிதரைத் தவிர வேறெந்த பாத்திரமும் பிரதானப் படுத்தப்படவில்லை என்பதால் இந்நாவலில் அத்தகைய முடிவுபெறாத முடிவுகள் இல்லாதது போலத் தோன்றலாம். அதை நிவர்த்திப்பதைப் போல நிலவறை மனிதன் தானே கட்டற்ற முரண்பாடுகளோடு பேசுகிறான். அவனே ஓரிடத்தில் சொல்வது போல ‘அவனுள்ளேயே எண்ணற்ற நேரெதிரான முரண்பாடுகள் மொய்ப்பதால்…’ அவனுடைய தரப்பே கட்டுறுதி இன்றி அமைக்கப்பட்டுள்ளது. பலமுறை அவனே தான் வெறுப்பில் பேசியதாகவும்.. வேடிக்கைக்காகப் பேசியதாகவும் சொல்கிறான். மேலும் இறுதியில் தான் சொல்லிய அனைத்தும் பொய்யென்று சொல்லிக் கொள்கிறான். இத்தகைய நம்பகத்தன்மையற்ற கதைசொல்லியாலும் அவனது உள்முரண்களாலும் இந்நாவலிலும் எவ்வித அறுதிப்பாடும் அடையப்படுவதில்லை. அதிலும் நிலவறை மனிதன் அதீத வெறுப்பினால் உந்தப்படுவதால் வாசகரே அவனுக்கு எதிர்தரப்பாக பாவிக்க நேரிடுகிறது. முதற்பகுதியின் முடிவில் அவனே எதிர்தரப்பைப் போல அதாவது வாசகரைப் போல பேசிக் காட்டுகிறான் ‘நீங்கள் சொல்லக்கூடும்… நீ உன் பிரக்ஞையைக் குறித்து தம்பட்டம் அடிக்கிறாய்.. ஆனால் நீ செய்வதெல்லாம் ஊசலாட்டம் தான்’ என. வாசகரோடு உரையாடும் சாக்கில் ஒருவேளை அவன் தன்னுள்ளே மொய்க்கும் நேரெதிர் கூறுகளை மோதவிடுகிறானோ.. ஒருவேளை அவன் வெளியே தொடர்பு கொள்ள விரும்புவது போல் தோன்றினும் தன்னுள்ளே உள்ள விரிசல்களைத் தைக்க முயல்கிறானோ.. இப்படியாக அவரது எல்லா படைப்புகளைப் போலவே இதுவும் பல்குரல் தன்மை கொண்டுவிடுகிறது, ஆனால் சற்று நுட்பமாக மேலும் திருகலாக.

*

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நன்னம்பிக்கைவாதம் பெரும்பாலும் அறிவியல் சாதனைகளால் உந்தப்பட்டது. மனிதன் பகுத்தறிவின் வாயிலாகச் செம்மையாக்கப்படும் பொழுது சமூகம் இன்னும் சீரானதாக மாறும் என்ற நம்பிக்கை. தொழில்நுட்பம் எவ்வாறு தடையின்றி முன்னேறுகிறதோ அதே போல மனித உள்ளமும் அதன் பயனாக சமூகமும் மேலும் மேலும் வளர்ச்சிப்  பாதையில் நடையிடும் என்ற எண்ணமிருந்தது. ஆனால் மனித அகத்தின் ஒழுங்கின்மையை மறக்காத தாஸ்தாயெவ்ஸ்கி நவீன காலகட்டத்தில் மட்டுமல்ல எப்போதுமே மனிதமனமானது அகாரணியக் கூறுகளும் உள்ளடக்கியதே எனக் கருதினார். உதாரணத்திற்கு நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய மனிதன் வன்முறை குறைந்தவனாக மாறுவான் என்ற அபிப்ராயத்தை நிலவறை மனிதன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்புலத்தில் வைத்து மறுக்கிறான். இருபதாம் நூற்றாண்டைக் கருதிப் பார்த்தால் இம்மறுப்பு இன்னும் கூடுதல் பொருத்தப்பாடு உடையதாக இருக்கும். அவன் சொல்கிறான்: ‘கிளியோபட்ரா அடிமைகளின் மார்பில் ஊசிகளைக் குத்தி சந்தோஷித்தாள்.. சலிப்பினால் தான்.. இப்போதும் அப்படித்தான்’

 

*

பளிங்கு மாளிகையை கோழிக்கொட்டிலுக்கு ஒப்பிடும் நிலவறை மனிதன் அதை நிராகரிப்பதற்கு ஒரு முக்கியமான காரணத்தைக் கூறுகிறான் ‘கோழிக்கொட்டிலில் மழைக்கு ஒதுங்குவேனே ஒழிய அதில் வாழச் சம்மதிக்க மாட்டேன். அது பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கலாம் அதற்காக அதை மானுட இலட்சியமாக எல்லாம் ஏற்கமுடியாது’ என்கிறான். பகுத்தறிவின் வாயிலான பயன்பாட்டுவாதத்தின் அடிப்படையில் அமையப்பெறும் இலட்சிய சமூகம் மனிதனின் இயல்பான சமநிலையின்மையையும் அகரணிய அம்சத்தையும் ஆன்மிகப் பரிமாணத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது (இதுவரையிலான அத்தகைய சமூக அமைப்புகள் எடுத்துக்கொண்டதாயும் தெரியவில்லை) என்பதாலேயே அதை நிராகரிக்கிறான். நவீன அறிவியல் ஓர் அணுவின் இடத்தையும் திசைவேகத்தையும் கூட இன்னும் அறுதியிட்டுக் கூறமுடியாத நிலையில் தான் உள்ளது. ஹெய்சன்பர்க் கூறியுள்ளார் ‘குவாண்டம் இயற்பியலானது காரணியவாதத்திற்கும் கட்டுதிட்டான நிர்ணயவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது’ என. துகள் இயற்பியல் துறை, புனைகற்பனைகளை எல்லாம் மிஞ்சிப்போகக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் இயற்கையை அறிதல் என்பது முழுதாக என்றுமே முடியாத பயணமாகவே இருக்க முடியும். ஆனால் நவீன அறிவியல் வெற்றி பெற்றிருப்பது இயற்கையைத் துல்லியமாகப் புரிந்துகொள்வதில் அல்ல புரிந்துகொண்ட அளவில் அதை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதில் (ஒன்றைப் பயன்படுத்த முடிவதாலேயே அதை அறிந்துகொண்டதாக அமையாது). இதன் மீது எழுப்பப்பட்ட நவீனத்துவமும் (கலை இலக்கியம் தவிர) தொடக்கம் முதலே மனித இருப்பைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியிலிருந்து ஒதுங்கி அவனைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளச் சொல்கிறது. ஆகவே தான் நிலவறை மனிதன் தன்னை எவ்விதத்திலும் பயனற்றவனாக மாற்றிக்கொண்டான். அதேநேரம் அவன் முழுமுற்றான இலட்சியவாத எதிர்ப்பாளியும் இல்லை. அவனே சொல்கிறான்: எனக்கு இதை விட மேலான ஒன்றைக் காட்டுங்கள் நான் உங்கள் பின்னால் வருகிறான். ஆனால் அதுவரைக்கும் கூட கோழிக்கொட்டிலில் தங்கமுடியாது.

 

II

நிலவறைக் குறிப்புகளின் இரண்டாவது பகுதி இருபது வருடங்களுக்கு முன்பு அவனது வாழ்வில் நடந்த மூன்று நிகழ்வுகளின் நினைவுறல்களைக் கொண்டது. முதல் பகுதியில் தான் யார் என்று கூற முயன்ற கதைசொல்லி இரண்டாம் பகுதியில் தான் யார் என்று காட்டுகிறான். சிதைவுற்ற தன்னிலை காரணமாக அவனது முன்னைய உரையை விட பின்னது அவனைத் தெளிவுபடுத்துகிறது.

‘அப்போது எனக்கு வயது இருபத்து நான்கிற்கு மேலிருக்காது… அப்போதும் என் வாழ்வு இருண்டதாகவும் குழப்பமானதாகவும் கடூர தனிமையானதாகவும் தான் இருந்தது. நான் உரையாடல்களைக் கூட தவிர்த்தேன், மேலும் மேலும் என் மூலைக்குள் பதுங்கினேன்’ இப்படித் தொடங்குகிறது அந்தப்பகுதி.

 

சம்பவம் 1:

ஓரிரவு நடந்துகொண்டிருக்கையில் நிலவறை மனிதன் எதிர்சாரியில் உள்ள நலிந்த மதுவிடுதியின் ஒளிரும் சன்னல் வழியே காண்கிறான்.பில்லியர்ட் மேஜைக்கு அருகே சர்ச்சித்துக் கொண்டிருந்த சிலர் ஒரு மனிதனை சன்னல் வழியே தூக்கி வெளியே எறிகின்றனர். நிலவறை மனிதனுக்கு தானும் சண்டை மூட்டி அப்படி வெளியே எறியப்பட வேண்டுமென ஆசை பிறக்கிறது. சண்டை பிடிக்கும் நோக்கத்தோடு விடுதிக்கு உள்ளே  நுழைபவன் வழக்கம் போலத் தனது கோழைத்தனத்தால் தயங்கி பில்லியர்ட் மேஜைக்கருகே நின்றுகொண்டிருக்கிறான். அப்போது அவ்வழியே வெளியேறும் அதிகாரி ஒருவர் தன் வழியை மறித்து நின்று கொண்டிருந்த நிலவறை மனிதனை தோளைப் பற்றித் தூக்கி தள்ளி நிறுத்திவிட்டுக் கடந்துசெல்கிறார். அதுவும் அவனைக் கண்டுகொள்ளாமல். இச்செய்கை சந்தேகமேயில்லாமல் நிலவறை மனிதனைத் திடுக்கிடச் செய்கிறது. ஆனால் அவரை எதிர்த்துப் பேசுவதற்கான ’அறத்தின்மை’ அற்ற அவன் அஞ்சி பின்வாங்குகிறான். கலங்கியவாறு தன் மூலைக்கு வந்துவிடுகிறான். அங்கே கிடந்தபடி ஆறடி உயரங்கொண்ட அந்த அதிகாரிக்கு எதிராக முழங்குவதாகவும் அவரை வஞ்சம் தீர்ப்பதாகவும் வறட்டுக் கற்பனைகளில் மூழ்குகிறான். ஆயினும் இந்த அவமானத்தை அவனால் மறக்க முடியவில்லை. அவனே சொல்கிறான் ‘ஒரு சிறு அவமானத்தைக் கூட நான் இதுவரை மறந்ததில்லை’ என.

பிரபலமான நெவ்ஸ்கி ப்ராஸ்பக்ட் வீதியில் நடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளான் நிலவறை மனிதன். அவ்வீதியில் தான் ஒரு பூச்சியாக உணர்வதாகச் சொல்லும் அதேநேரம் ஒவ்வொரு முறையும் அதை நோக்கி ‘ஈர்க்கப்படுகிறான்’. தாஸ்தாயெவ்ஸ்கியின் பல பாத்திரங்களில் இந்தப்பண்பையும் காணலாம், அவமானத்தின் மீதும் துன்பத்தின் மீதுமுள்ள மோகம். அவரின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் இதே குணநலனுடன் அவரும் பல இடங்களில் நடந்துகொள்வதைக் காணமுடியும். தந்தை கரமாசோவ் ‘முக்கியமான சந்திப்புக்கு’ ஆர்வமுடன் செல்வதையும், மிஷ்கின் நடாலியா வீட்டிற்குச் செல்வதையும், கோல்யாட்கின் அவனது உயரலுவலரின் இல்ல விருந்திற்கு அழைப்பில்லாமலேயே செல்வதையும் நினைவு கொள்ளலாம்.

அவனை அவமானப்படுத்திய அந்த அதிகாரியும் பலநேரம் நெவ்ஸ்கி ப்ராஸ்பக்டில் நடந்து செல்வதைக் காண்கிறான். பற்பல கற்பனைகளுடன் அவரைப் பின் தொடர்கிறான். ஆனால் அந்த அதிகாரிக்கோ இவனை அடையாளமே தெரியவில்லை.. நடைபாதையில் எதிர்வரும் அவருக்கு விலகி வழிவிடுகிறான். இப்படியாக அசட்டு கற்பனைகளோடும், பொருமலோடும் இரண்டு வருடங்களாக அவரைக் கண்காணிக்கிறான். அன்றைக்கும் எதிரே வரும் அதிகாரிக்கு வழிவிட்டு ஒதுங்கும் நிலவறை மனிதனுக்கு சட்டெனத் தோன்றுகிறது: ஏன் ஒதுங்கி வழிவிடுவது எப்போதுமே நானாக இருக்கிறேன். ஒருமுறை அவர் எனக்கு வழிவிட்டால் தான் என்ன? அப்போதே நிலவறை மனிதனுக்கு செயலூக்கமுள்ள ஒரு சிந்தனை உதயமாகிறது. அடுத்த முறை தான் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கப்போவதில்லை என்றும் அவரும் வழி விடவில்லையென்றால் தோளுக்குத் தோளாக மோதப்போவதாகவும் உறுதி கொள்கிறான்.

சும்மா வாழும் அவனுக்கு இச்சாகசம் அபரிமிதமாகக் கிளர்ச்சியூட்டுகிறது. தன் மூலையில் படுத்தபடி அவர் தனக்கு வழிவிடுவதாகவும் அவரோடு நேருக்கு நேர் மோதிக் கொள்வதாகவும் வெள்ளோட்டம் பார்க்கிறான். இந்த அரிய நிகழ்விற்காக விலையுயர்ந்த மேல்கோட்டும் தொப்பியும் வாங்கிக் கொள்கிறான். ஆயினும் பலமுறை எதிரே நடந்துவரும் அந்த அதிகாரி மிகநெருங்கி வந்ததும் மனத்திட்பம் இழந்து ‘ஒரு பந்தைப் போல’ விலகி ஒதுங்குகிறான். இப்படியாகப் பலமுறை கடைசிக் கணத்தில் உருகிவிட நேர்வதால் அத்திட்டத்தையே கைவிடுகிறான். மறுநாள் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டில் நடந்துகொண்டிருக்கையில் மூன்றடி தூரத்தில் தன்னெதிரே அந்த அதிகாரி நடந்துவருவதைக் காண்கிறான். எதிர்பாரா விதத்தில் திடுமென மனவுறுதி கொள்கிறான். அவர் மீது நேருக்கு நேராக மோதுகிறான். ஒரு அங்குலம் கூட இடம் விடாது அவரைக் கடக்கிறான். இம்மோதல் அவனை உச்சகட்ட உணர்வெழுச்சிக்கு இட்டுச்செல்கிறது. அவன் தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இத்தாலியப் பாடல்களைப் பாடிக்கொண்டே வீடு சேர்கிறான். ஆ..இறுதியாக ஒரு செயல். அவன் தன் கௌரவத்தை நிலைநாட்டி விட்டான். முக்கியமான விஷயம் என்னவென்றால் அம்மோதலின் போது அந்த அதிகாரி எதுவும் நடக்காதது போல கடந்து செல்கிறார். நிலவறை மனிதன் சொல்கிறான் ‘ஆனால் எனக்குத் தெரியும் அவர் நடிக்கிறார்’ என்று. ஆம் ஆறடி உயர அதிகாரிக்குள்ளும் நிலவறை மனிதனின் மூலகம் இருக்கிறது. அப்படி இல்லாதது போல நடிக்கலாம் அல்லது சிலர் அது குறித்த பிரக்ஞையற்று இருக்கலாம். ஆனால் நிலவறை மனிதன் தனது பெருமைக்குரிய பிரக்ஞையை வைத்து அதைக் கண்டுபிடித்துவிடுகிறான்.

 

இது ஒவ்வொரு நாளும் ஒரு நகரவாசி எதிர்கொள்கிற சிறிய சம்பவம் தான். ஆனால் செயலற்ற நிலவறை மனிதனுக்கு இத்தகு சின்ன சம்பவபிப்புகளே பெரிய வானியல் நிகழ்வுகளாகத் தோன்றுகின்றன. இருபது வருடங்களுக்குப் பின் இதை அவன் நினைவு கூர்வதை வைத்தே அவன் என்ன மாதிரியான வாழ்வை வாழ்கிறான் எனக் கணித்துவிடலாம். ஆனால் ஒரு எழுத்தாளனாக தாஸ்தாயெவ்ஸ்கி இந்த நிகழ்வைக் குறிப்பிடுவதில் விஷயம் இருக்க வேண்டும். இச்சந்தர்ப்பம் ஒருவகையில் நிலவறை மனிதனின் ஆதார பிரச்சனையில் ஒன்றைச் சுட்டுகிறது. மேலும் இதில் நகர்மயத்தின் இன்னொரு அம்சமும் தொழிற்படுகிறது. நடைபாதையில் எதிரே வரும் ஒருவருக்கு (அதிலும் அவர் எதிர் பாலினத்தவராகவோ வேறு அடையாளம் கொண்டவராகவோ இருந்துவிட்டால்..) வழிவிட மறுக்கையில் நாம் அவர் கண்களைச் சந்திப்பதைத் தவிர்க்கிறோம். அவரைக் கண்டுகொள்ளாதது போல நடிக்கிறோம். நமக்கெதிரே யாருமே நடக்காதது போல நடந்துகொள்கிறோம். நவீன இருப்பின் அங்கிங்கெனாத அதிகார விருப்புறுதியை தாஸ்தாயெவ்ஸ்கி பெரிய அரசவை நிகழ்வுகளைக் கொண்டோ போர்க்களத்தைக் கொண்டோ சித்தரிக்கவில்லை. ஒரு நடைபாதை சம்பவத்தைக் கொண்டு ஆய்கிறார். ஏனெனில் அது தான் ஒவ்வொருவரின் அம்மணப்புள்ளி. அதிகார வேட்கையின் பாலம் தொங்கிக்கொண்டிருக்கும் சிறுதும்புநுனி. தவிர இதிலுள்ள பொருட்டின்மை(indifference) நிலவறை மனிதனின் அடிப்படை குணாம்சம் மட்டுமல்ல நவீன சுயத்தின் தவிர்க்க முடியாத உளக்கூறு. இப்போட்டியில் எதிராளை முதலில் கண்டுகொள்பவர் தோல்வி அடைந்தவராகிறார், ஏனெனில் அவர் வழிவிட்டு நடந்தாக வேண்டும். மாறாக இறுதிக்கணம் வரை அதிகார விருப்புறுதியின் பாதையில் தன் பொருட்டின்மையை நாட்டுபவர் உருகும் தார்ச்சாலைகளில் வெற்றி வீரராகவோ வீராங்கனையாகவோ நடந்து செல்லலாம். கூட இதில் எதிரே வருபவர் புலனாகாதவராகி விடுகிறார். புலப்படாமை என்பது நவீன யுகத்தில் அறிமுகமான புதுச்சிக்கல்களில் ஒன்று. நகர்மயமும் மக்கட்பெருக்கமும் ஜனநாயகமும் இதற்குக் காரணமாகக் கணிக்கப்படுகிறது. இப்புலப்படாமைக்கு எதிரான நம் செயல்கள் கிட்டத்தட்ட உச்சத்தை அடைந்துள்ள காலகட்டமாகத் தான் இந்த ஊடக யுகத்தை வரையறை செய்யமுடியும். குடும்பத்தில் ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோருமே தொலைக்காட்சிப் பெட்டியில் காட்சிதர ஏங்குகிறோம். இன்று ஒவ்வொருவரும் தமக்கென்று சொந்தமாகத் தொலைக்காட்சி அலைவரிசை வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது சமூக ஊடகம். புலப்படாமைக்கு அஞ்சி அதனோடு போரிட்டு புரட்சி நடத்தி நாமெல்லோருமே இன்று பிரபலங்கள் ஆகிவிட்டோம். அங்காடிச் சாளரத்தருகே பளபளப்பில் ஒயிலாக ஒரு பொம்மையைப் போல சதா காட்சிக்கு நின்றுகொண்டிருக்கிறோம். தனிவாழ்வானது அருகிப்போய் பொதுவாழ்க்கை எனும் பொய்யில் சுயங்கள் ஊறிக்கொண்டிருக்க  நாம் மறைக்கத்துடிக்கும் பக்கங்களில் பதுங்கியுள்ளது நம் காலத்தின் சாராம்சம். நமது ரகசியம் தான் நமது அரும்பெரும் உண்மை.

 

 

சம்பவம் 2

 

சென்ற நிகழ்வு நிலவறை மனிதனது அவமானகரத்தின் கண்காட்சி என்றால் இது அவனது தற்பெருமையின் கூத்து. தாஸ்தாயெவ்ஸ்கியின் பெரும்பாலான பாத்திரங்கள் அளவற்ற தற்பெருமையாலும் கூரிய அவமான உணர்ச்சியாலும் அல்லலுறுபவை. இரண்டுமே ஒரே மனநிலையின் இருவேறு பக்கங்கள். ஒரேநேரத்தில் குளிர்காய்ச்சலாலும் சூட்டுக்கொப்பளத்தாலும் அவதிப்படுவதைப் போல, ஒன்றுக்குச் சிகிச்சை செய்து இன்னொன்றை முற்ற வைத்துக்கொள்பவை. நிலவறை மனிதன் தன் அறிவார்த்தம் குறித்து ‘வரம்பற்ற பெருமை’ கொண்டுள்ளான். அதே நேரம் மிக எளிய எதிர்ச்செய்கை கூட என்பிலாத உயிரைப் போல நடுக்குவிக்கிறது அவனை.

 

தாஸ்தாயெவ்ஸ்கி பயன்படுத்தியுள்ள பாத்திர வகைமைகளில் ஒன்று ‘கனவு காண்பவன்’ பிரபலமான உதாரணம் வெண்ணிற இரவுகள். இது கற்பனாவாத காலத்தின் கண்டுபிடிப்புகளில் ஒன்று. மேகங்களுக்கிடையே சிகையலங்காரம் செய்யும் தனியன். நிலவறை மனிதனுக்குள்ளும் ஒரு கனவாளி வாழ்கிறான். மேலே சொன்னது போன்ற திடீர் விபத்துகளுக்குப் பின்னர் வழக்கமான தனது மனமூட்ட வானிலைக்குத் திரும்பும் அவன் ‘கனவுகளின் களியாட்டத்தில்’ ஈடுபடுகிறான். அவனே சொல்கிறான் ‘மூலையின் கிடந்தபடி மூன்றுநாட்கள் இடைவிடாது கனவு காண முடியும் என்னால்’ என. கனவில் அவன் அச்சுப்பிசகாமல் ஒரு கற்பனாவதக் கதாநாயகன் தான் (பைரனின் மேன்ஃப்ரெட்). அதிலே அவன் சந்தோஷிக்கிறான், அழுகிறான், மனித குலத்துக்காக மரிக்கிறான். மூன்று நாட்கள் கனவுகளில் பரவசத்தை எய்திய பின் அவனுக்கு ’மானுடத்தைத் தழுவவேண்டும்’ என ஆவல் பிறக்கிறது. கனவின் தயார்நிலை  ஜீவிதங்களில் ஊறிப்போனதால் கொஞ்சம் சமூகத்தில் கால் நனைக்கவேண்டும் போல் இருக்கிறது. அப்படியான ஒரு தினத்தில் அவன் தனது பள்ளி நண்பனை சந்திக்கச் செல்கிறான்.

அங்கு வேறு சில நண்பர்களும் உள்ளனர். யாருமே நிலவறை மனிதனைக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் ராணுவத்தில் பெரிய பதவியில் அமரப்போகும் இன்னொரு பள்ளித்தோழனான ஸ்வெர்காவ் என்பவனுக்கு பிரிவுபச்சார விருந்து அளிப்பதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். ஸ்வெர்காவ் நிலவறை மனிதனுக்கு நேரெதிரானவன் என்று சொல்லலாம். தன்னம்பிக்கையுள்ள அழகான வெற்றிகரமான சமூகத் திறன்கள் கொண்ட வசீகரமானவன். பள்ளியிலேயே நிலவறை மனிதன் ஸ்வெர்காவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெறுத்து வந்திருந்தான். அவன் எப்போதும் ஏளனமாகக் கருதும் அதேநேரம் ரகசியமாகப் பொறாமைப் படும் சாதாரண செயலின் மனிதன் ஸ்வெர்காவ். திடுமென உரையாடலில் குறுக்கிட்ட நிலவறை மனிதன் தானும் விருந்தில் கலந்துகொள்வதாக வேண்டுகிறான். அவர்கள் மறுப்பதையும் பொருட்படுத்தாது அவ்விருந்திற்குத் தானும் வருவதாகக் கேட்கிறான். அவர்கள் தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கின்றனர். அவன் அந்த இரவையும் மறுநாள் பகலையும் நடுக்கத்துடனும் பகற்கனவுகளோடும் கழிக்கிறான். விருந்தில் ஸ்வெர்காவையும் அவனது நண்பர்களையும் தனது புத்திசாலித்தனத்தாலும் நகைச்சுவைத் திறனாலும் வெல்வதாகக் கற்பனை செய்கிறான். அதேநேரம் அங்கு நேரவாய்ப்புள்ள சின்ன சின்ன விபத்துக்களை எண்ணியும் கலங்குகிறான்.

 

நிலவறை மனிதன் எப்போதுமே எதார்த்தத்தைக் கண்டு அஞ்சுகிறவனாகவும் அதேபோது அதை வெல்ல விரும்புகிறவனாகவும் காணப்படுகிறான். சமூகக் கதையாடல்களைப் புரிந்துகொள்வதில் அவன் ஒரு வளர்ச்சி குன்றிய குழந்தையைப் போல நடந்துகொள்கிறான். அவன் தன் நுண்ணுணர்வால் கதையாடல்கள் யாவும் உண்மையல்ல வெறும் ஏற்பாடு தான் என்பதை அறிகிறான். ஆயினும் அவனுக்குள் உள்ள மரபணுத்தனமோ அல்லது தொல்படிமக் கட்டளையோ ஏதோ ஒன்று அவனை அதில் பங்கெடுப்பதிலிருந்து அவ்வளவு எளிதாக விடுவிப்பதில்லை. இந்த முரண்பாடு அவனது மூலச்சிக்கல். அதாவது தனது விருப்பத்தைத் தானே விரும்பாதது. அதனாலேயே எப்போதாவது அவன் ஈடுபடும் ஒன்றிரண்டு செயலும் விபத்தாகவே முடிகிறது. வேறு வழியே இல்லை அவன் சொல்கிறான்: நான் என் கட்டுப்பாட்டில் இல்லை.

விருந்திற்குத் தாமதமாகச் செல்லத் திட்டமிட்ட நிலவறை மனிதன் முதல் ஆளாகச் சென்று சேர்கிறான். ஒருமணி நேரம் கழித்து ஸ்வெர்காவும் நண்பர்களும் வருகின்றனர். விருந்து நேரம்  தள்ளிவைக்கப்பட்டது குறித்து வேண்டுமென்றே அவனுக்குத் தெரிவிக்கப்படவில்லை. தொடக்கம் முதலே ஸ்வெர்காவ் தன்னைக் கீழாக நடத்துவதாக எண்ணுகிறான். அதனால் எப்படியாவது அவர்களுக்குத் தனது மேட்டிமையை எடுத்துரைக்க வேண்டுமெனத் தவிக்கிறான். அதே பழைய தற்பெருமைXஅவமானம் சுண்டிவிளையாட்டு தான். ஒரு கட்டத்தில் இவன் முற்றாக அவர்களது உரையாடலிலிருந்து துண்டிக்கப்பட்டு அவர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொள்கின்றனர். அங்கிருந்து எழுந்து செல்வது எவ்வளவோ மேலானதாக இருந்திருக்கலாம். ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கியின் பாத்திரங்கள் தன்னழிவின் சூழலுக்குள் தாமே வலியச் செல்வதோடு நின்றிடாமல் அவமானம் தன் கழுத்து முட்ட உயரும் வரை அதனுள்ளேயே தங்க விரும்புவதைக் காணலாம். அதைப் போலவே அவனும் துயரத்தில் பதங்கமாக விரும்புகிறான். அவன் கஷ்டப்படுவது மட்டுமல்ல அங்கிருந்த நண்பர்களையும் சங்கடத்துக்கு உள்ளாக்குகிறான். ஒரு மின்வெட்டைப் போல அங்கு அமர்ந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் தனது அறிவார்த்ததைப் அறிவிக்கவும் ஸ்வெர்க்காவை தரம் தாழ்த்தும் நோக்கத்துடனும் வாழ்த்தும் சாக்கில் அவனைக் காயப்படுத்துகிறான். இதனால் கடுப்பான ஸ்வெர்காவும் மற்றவர்களும் நாயகனைத் தனியே விட்டு அப்பால் சென்று குடித்துக் குலாவத் துவங்குகின்றனர். அவர்கள் அங்கே மகிழ்ந்திருக்க அவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தவித்தபடியும் அதேநேரம் தன் கௌரவத்தை நிரூபிக்க எண்ணமிட்டவாறும் வியர்க்க வியர்க்க மேஜைக்கும் அடுப்படிக்குமாக நடையிடுகிறான் மூன்று மணிநேரம். இது ஒருவிதத்தில் இந்நாவலின் மைய்யப்படிமம் என்றே கூறிவிடலாம். ஏனெனில் நம் நாயகனின் நிலையே இது தான்.

 

உணவக உள்வராந்தாவில் பேசிக்களித்திருக்கும் நண்பர்களின் கூட்டமானது சமூகப் பங்கேற்பாளர்களின் கூடாரம். அங்குள்ள யாவருமே அடையாளங்களை நம்பியேற்று அதற்கேற்ப நடக்கக் கற்றுக்கொண்ட செயலின் சாமான்ய மனிதர்கள். அவர்களுக்கெதிரே தனக்குத் தானே முணுமுணுத்தபடி தனியே மேஜைக்கும் அடுப்படிக்குமாக நடந்துகொண்டிருக்கும் ஒருவன் சமூகக் கதையாடலில் இருந்து வெளிநடப்பு செய்ய முயல்பவன். ஆனால் அவனால் அதைச் செய்ய முடியாது. அவன் தன் நண்பர்களிடம் சென்று சமரசமாகிவிட விரும்புகிறான். ஆனால் அதற்கு அவனது அறிவார்த்தமும் தற்பெருமையும் வழிவிடுவதில்லை. அவனை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அவனும் சிரித்தவாறு பொருட்டில்லை என நடிக்கிறான். ஏனெனில் அவன் ஒரு முன்னறிவிப்பு. தன்னை மற்றோரிடமிருந்து துல்லியமாகக் கத்தரிக்கத் தெரிந்துகொண்ட நவீன அந்நியன். வீழ்ச்சியின் மார்செல்.

’தன் வாழ்விலேயே மிகக்கேலிக்குரிய கேவலமான கணங்களான’ அந்த மூன்று மணிநேரங்களுக்குப் பின் அவனது நண்பர்கள் வெளியே ஒரு மதுவிடுதிக்கு கிளம்புகின்றனர். நிலவறை மனிதன் ஓடிச்சென்று ஸ்வெர்கோவிடம் அவனை அவமதித்ததற்காகத் தன்னை மன்னிக்கக் கோருகிறான். அதற்கு ஸ்வெர்காவ் மறுமொழி சொல்கிறான்: ‘என்னை அவமதிப்பதா? நீ.. நீயா.. எந்தச் சூழலிலும் உன்னால் என்னை அவமதிக்க முடியாது’ அவனை அவமதிக்கும் தகுதி கூட தனக்கில்லை என ஒருவர் சொல்லும் போது அவனை அவமதித்துக் காட்டுவது தானே தன்னை தகுதி உடையவனாக்கும். எனவே ஸ்வெர்காவையும் அவனது குழாமையும் பின் தொடர்கிறான் நிலவறை மனிதன் ஒரு குதிரை வண்டியில். ஸ்வெர்காவின் கன்னத்தில் அறைவது, பின் அவனால் துவந்த யுத்தத்திற்கு அழைக்கப்படுவது, துவந்தத்தில் அவனை மன்னித்து வான் நோக்கிச் சுடுவது, அதில் பங்கேற்றதற்காக சைபீரியாவிற்கு செல்வது, விடுதலையாகி மீண்டும் வந்து செர்காவை மன்னிப்பது.. இப்படி போனது நிலவறை மனிதனின் கற்பனை பின் தொடரும் வழியில்.

 

நிலவறை மனிதனின் உலகில் இன்னொருவரானவர் ஒன்று அவனுக்கு ஆட்படுபவராக அல்லது அவனை ஆதிக்கம் செய்பவராக மட்டுமே அறிமுகமாகிறார். வேறெந்த வகையான சமூகப் பாத்திரங்களையும் புரிந்துகொள்ளமுடிவதில்லை அவனால். உதாரணத்திற்குத் தனது வேலைக்காரனான அப்பலோன் உடனான அவனது உறவைக் குறிப்பிடலாம். அடிப்படையில் எஜமான்-வேலையாள் என்ற பாத்திரங்களையே புரிந்துகொள்ளவில்லை அவன். மாறாக அப்பலோன் தன்னை அவமரியாதை செய்கிறான் எனச் சொல்கிறான். அவன் தனது எஜமானன் அறைக்கு அவ்வப்போது வருவது அவருக்கு எதாவது வேண்டியுள்ளதா என வினவத் தான். ஆனால் நிலவறை மனிதனோ அவன் தன்னை நோட்டமிடவும் எரிச்சல் படுத்தவுமே வருகிறான் என எண்ணி அப்பலோனிடம் ‘என்ன வேண்டும் உனக்கு’ எனக் கத்துகிறான். இந்த இடத்தில் தன் பாத்திரம் என்னவென அறியாமலேயே அதைத் தலைகீழாக்குகிறான். ‘என்ன வேண்டும் உங்களுக்கு’ எனக் கேட்கவேண்டியது வேலைக்காரனே ஒழிய எஜமான் அல்ல. அதே போலத்தான் அவனுக்கு சக மாணவன் என்பதோ அலுவலன் என்பதோ நண்பன் என்பதோ என்ன வகையான பாத்திரங்கள் எனப் புரிவதில்லை. இந்தப் பகுதியில் நிலவறை மனிதனின் பூச்சின்றி கவனித்தால் மற்ற நண்பர்களின், அப்பலோனின் உரையாடல் எந்த விதத்திலும் அவனை வேண்டுமென்றே தாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை என்பதைக் காணலாம்.

நிலவறை மனிதன் மற்றவர்களைத் தனக்கான கண்ணாடியாக மட்டுமே கருதுகிறான். எல்லா இடத்திலும் தன்னைக் காணும் நார்ஸிசஸ். தான் அருவருப்பானவன் அநாதரவானவன் எனத் தெரிய வருகிறபோது கண்ணாடியைப் பழிக்கிறான். நரகம் என்பது மற்றவர்கள் தான் என்கிறான் (அப்பலோனை தன்னை சித்ரவதை செய்பவன் என விளிப்பதைச் சொல்லலாம்). மேலும் மற்றவர்களின் துணையின்றி தன்னைக் காண இயலாதவனாகவும் இருக்கிறான். தற்குருடு. ஒரே நேரத்தில் தனது சுயஇருப்பையும் மற்றமையின் புற இருப்பையும் மறுதலிக்கிறான். அதனால் அவனே கூட அற்ற தனிமையில் அவன் இருப்பதாகத் தோன்றலாம்.ஆனால் அவனது தனிமை ஒரு பொய். தனக்குத் தெரிந்த பார்த்த படித்த பற்பல ஆட்களின் பெருமந்தையோடு தான் குடித்தனம் நடத்துகிறான் தன் மூலையில். அதாவது சமூகத்திற்குள் நுழையாது சமூகத்தை தன் இருட்பொந்திற்கு இழுத்து வருகிறான். அதைக் குறித்த கனவின்றி ஒரு நிமிடம் கூட நகராது அந்நிலவறையில். நிலவறை என்பது எங்கோ அமைந்துள்ள இடம் அல்ல. அவன் எங்கு இருந்தாலும்,நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டோ ஹோட்டல் டீ பாரீஸோ, அதை நிலவறை ஆக்கமுடியும் அவனால். ஏனெனில் அவனே சொல்வதைப் போல நிலவறை அவன் ஆன்மாவில் உள்ளது.

*

இப்படைப்பு முழுதுமே ‘ஈரப்பனி’ பொழிகிறது. இரண்டு பகுதிகளையும் அது தான் இணைக்கிறது. அந்த மாற்றமற்ற மந்தமான அசௌகர்ய வானிலை நிலவறை மனிதனின் தனித்துவ வாழ்விற்கான படிமமாகிறது. உணவகத்திலிருந்து ஸ்வெர்காவைப் பின் தொடர்ந்து செல்லும் காட்சியிலும் பனி பொழிகிறது. அங்கு நிற்கும் வயதான வண்டிக்காரனின் குடியானவ மேல் கோட் முழுவதையும் பனித்துருவல் மூடியுள்ளது. பழிவாங்கும் வெறியிலும் அவமானகரத்திலும் கொதிக்கும் நிலவறை மனிதன் அவ்வண்டிக்காரனை திட்டுகிறான் வேகமாக ஓட்டச்சொல்லிக் குத்துகிறான். ‘மண்ணின் மைந்தன்’ என இளப்பமாகத் தாக்குகிறான். பொதுவாக புறவயச்சூழலை குறைவாகவே சித்தரிக்கும் தாஸ்தாயெவ்ஸ்கி இக்காட்சியில் நுட்பமாகச் சித்தரித்திருப்பதைத் தற்செயல் எனக் கூறமுடியுமா தெரியவில்லை. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் சார்பாக பகுத்தறிவாண்மையைக் கொண்டு சிந்தித்த புரட்சிகர முன்னணிப் படை ஆட்சிக்கு வந்த பின் குடியானவர்களையும் வண்டிக்காரர்களையும் அப்படித்தான் நடத்தியது. அந்த இரவின் பீட்டர்ஸ்பர்க் வீதியை தாஸ்தாயெவ்ஸ்கி இப்படி வர்ணிக்கிறார்: பனிப்பொழிவின் மூட்டத்தினுள்ளே தனிமையான தெருவிளக்குகள் துயரமாக மினுங்கின சவ ஊர்வலத்தில் தீப்பந்தங்களைப் போல.

சம்பவம் 3

 

இது இரண்டாவது சம்பவத்தின் தொடர்ச்சி தான். நிலவறை மனிதன் அங்கும் வந்து குழப்புவான் என்று எண்ணிய ஸ்வெர்காவும் அவனது கூட்டாளிகளும் வேறிடத்திற்குத் தப்பிவிடுகின்றனர். தேடிவரும் நிலவறை மனிதன் அவ்விடுதியில் காண்பது ஒரு விலைமாதுவை.

அவ்விலைமாதுடன் உறவு கொண்ட பிறகு கண்விழிக்கும் நிலவறை மனிதனுக்கு உடனே தான் எங்கிருக்கிறோம் என்பதும் அந்நாளின் அசம்பாவிதங்களும் நினைவிற்கு வருகிறது. அவன் உடனே வெளியேறி இருக்கலாம். ஆனால் ‘கடவுளுக்குத் தான் தெரியும் நான் ஏன் உடனே கிளம்பவில்லை’ என்று நினைவுகூர்வதைத் தொடர்கிறான் (இந்நாவலில் இந்த இடத்தைத் தவிர எல்லா இடத்திலும் ‘சாத்தானுக்குத் தான் தெரியும்..’ எனும் சொல்வழக்கே அவன் வாயிலிருந்து வருகிறது). அப்போது தான் அருகே படுத்தபடி அவன் முகத்தை நெடுநேரமாக கவனித்துக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் பெயரைக் கூட அறிந்துகொள்ளாதது உறைக்கிறது. அவள் பெயர் லிசா. நெடுநேரம் ஒருவரை ஒருவர் வெறிக்கின்றனர் இருவரும். பின் என்ன நினைத்தானோ அவளது பின்புலத்தையும் கதையையும் கேட்கிறான். அவள் ஆர்வமின்றி பதிலளிக்கிறாள். திடுமென அன்று காலை அவன் பார்த்த ஒரு விபச்சாரியின் சவ ஊர்வலத்தை நினைவு படுத்தி விபச்சாரத் தொழிலின் இழிவுகளைப் பற்றி எடுத்துரைக்கிறான். தன்னால் இன்னொருவர் மீது பாதிப்பு செலுத்த முடியும் எனும் எண்ணம் அவனுக்கு உற்சாகம் அளிக்க குடும்ப வாழ்வின் மகிமை குறித்தும் சொற்பொழிகிறான். கேட்டு முடித்த லிசா அவன் பேசுவது எதோ புத்தகம் பேசுவது போலிருக்கிறது என்கிறாள். இது நிலவறை மனிதனை காயப்படுத்துவதுடன் ஆச்சர்யப்படுத்தவும் செய்கிறது. ஏனெனில் எல்லோரையும் எண்ணுவது போலவே அவளையும் முட்டாள் என்றே எண்ணியிருந்தான். ஆனால் அந்த விலைமாது மிகச்சரியாகவே கூறிவிட்டாள், அது புத்தகத்திலிருந்து உருவப்பட்டது என்று. விபச்சாரியைக் கடைத்தேற்றுவது என்பது உட்டோப்பிய படைப்புகளின் செல்லக்கரு என்றே கூறலாம். அதன் வழிவந்த புரட்சிகர நூல்களிலும் காணக்கிடைப்பது. தாஸ்தாயெவ்ஸ்கியின் நோக்கம் இந்த புனைவுத் தருணத்தைக் கேலி செய்வது தான். மிகச்சாமர்த்தியமாக கற்பனாவதப் புனைவுத் தருணத்தை அப்படியே விவரித்து இறுதியில் அதைத் தலைகீழாக நிறுத்துகிறார் ஒரு கோமாளி செய்வதைப் போல.

ஆனாலும் இளம்பெண்ணான லிசா இப்பேச்சின் மூலம் உள்ளூர சற்று தூண்டப்பெற்றாள் என்பது தான் உண்மை. ‘சரியான நரம்பைத் தொடவேண்டும்’ என எண்ணிக்கொண்ட நிலவறை மனிதன் லிசாவின் குற்றச்சாட்டை மறுத்து விபச்சாரத்தினால் வரும் வியாதிகளையும் இளமை கழிந்தபின் வரும் கதியின்மையும் கொடூரமாக விவரிக்கிறான். தனது பேச்சின் உற்சாகத்தில் அடித்துச்செல்லப்படும் அவன் தனதருகே அவள் தலையணையில் அழுந்தியவாறு அழுதுகொண்டிருப்பதைக் கவனிக்கிறான். அவள் மீது  அவனுக்கு உண்மையிலேயே பரிவு பிறக்கிறது. பிறகு உண்மையான காதலின் பரிசுகளைக் குறித்துப் பேசி அவளைத் தேற்றுகிறான். விடைபெறுகையில் தனது முகவரியை அவளிடம் கொடுத்து தன்னை வந்து காணச்சொல்கிறான். ஒரு நன்னம்பிக்கை நாவலின் கதாநாயகன் அப்படித்தானே செய்வான்.

 

நிலவறை மனிதன் எப்போதுமே ஒரு கதாநாயகன் ஆகவிரும்பினான். அவனது மூலையின் கற்பனைகளில் நிகழ்த்திப் பார்க்கும் ஒன்றை இப்போது நிஜத்திலேயே செயல்படுத்த லிசா ஒரு வாய்ப்பை வழங்கினாள். ஒரு முற்போக்கு நாயகனைப் போல அவனும் அவளுக்குப் புத்தி புகட்டினான். மானுடத்தின் மகத்துவத்தைக் குறித்தும் வாழ்வின் ஒளிதிகழும் பாதைகளைப் பற்றியும் கூறி அவளது மனதை மாற்றினான். இறுதியாகத் தான் நாயகனாகும் ஆசையில் தனது முகவரியையும் கொடுத்து வந்தான். இந்த இரண்டாம் பகுதியின் மேற்கோளாகக் காட்டப்பட்டிருப்பது இதே சந்தர்ப்பம் குறித்த நெக்ரசோவின் கவிதை வரிகள். ‘செய்ய வேண்டியது என்ன?’ நாவலிலும் ஒருவன் விபச்சாரியைத் திருத்தி அவளை முன்னுதாரண போராளியாக ஆக்கிக் காட்டுகிறான். ஆனால் நிலவறை மனிதனுக்கோ தன் மூலைக்குத் திரும்பும் வழியில் அவனது ‘அருவருப்பூட்டும் உண்மை’ தலைகாட்டத் துவங்குகிறது.

 

மறுநாள் நிலவறை மனிதன் பயப்படுகிறான் லிசா ஒருவேளை உண்மையிலேயே அவனது குடியிருப்புக்கு வருவாளோ என. அப்படி வந்தால் அவளுக்குத் தெரிந்துவிடும் அவன் நிஜமான கதாநாயகன் இல்லை என. தனது நசிந்த குடியிருப்பைக் குறித்தும் வறுமையைக் குறித்தும் எப்போதுமே அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டு. இந்த நிலையில் தன்னை லிசா பார்ப்பது தனது கண்ணியத்திற்கு முடிவு கட்டிவிடும் என எண்ணியிருக்கக் கூடும். அல்லது தனது கற்பனை வாழ்வில் இன்னொருவர் நுழைவதின் ஆபத்தும் பொறுப்பும் அவனை பதற்றமுறச் செய்திருக்கலாம். இரண்டு நாட்களுக்குப் பின்னும் அவள் வரவில்லை என்பதும் அவனை வருந்தச்செய்கிறது. அவளும் தன்னை அவமதிக்கிறாளோ எனப்படுகிறது. தனது நாயகச் செய்கைகள் அவளைக் கூட நம்பச்செய்யவில்லையோ என எண்ணுகிறான். வழக்கமாக தன் பகற்கனவுகளில் மூழ்குகிறான். அதில் அவன் அவளை விபச்சாரத்திலிருந்து மீட்பதாகவும், அவளைக் கல்வியில் பயிற்றுவிப்பதாகவும் அதன் மூலம் அவள் தன்னைக் காதலிப்பதாகவும் முடிவில் அவளை மணந்துகொள்வதாகவும் கற்பனை செய்கிறான். எல்லாக் கனவுப்பருவத்தைப் போலவே இதுவும் சுயவெறுப்பிலும் அவமானத்திலும் முடிவுறுகிறது. கூடவே சித்ரவதைக்காரனான அப்பலோனின் நடவடிக்கை வேறு. இந்நிலையில் சம்பளம் தொடர்பாக ஒரு சர்ச்சை முற்றவே அப்பலோனை அடிப்பதற்கு கையோங்கும் சமயத்தில் அங்கு வருகை தருகிறாள் லிசா. தனது பிம்பம் நொறுங்கிய அவமானத்தில் தன் அறைக்குள் திரும்புகிறான். தனது வருகை அவனை பாதித்ததைப் புரிந்துகொண்ட லிசா தான் கிளம்புவதாகச் சொல்கிறாள். ஆனால் நிலவறை மனிதனால் அவளை மன்னிக்கவே முடியவில்லை. தனது கீழ்நிலையும் அசிங்கமான இருப்பும் வெளிப்பட்டுவிட்ட ஆத்திரத்தில் நிலவறை மனிதன் பேசத் துவங்குகிறான்.

தான் முன்பு அவளது விடுதியில் வைத்துப் பேசியது எதுவும் நல்லெண்ணத்தினால் உந்தப்பட்டதில்லை என்கிறான். அதற்குச் சற்று முன்னர் சந்தித்த அவமானத்திற்குப் பழிதீர்க்கும் முகமாகவே அவளோடு உறவு கொண்டான் என்கிறான். அவனுக்கு அவள் மீது அக்கறை இல்லை என்றும் அவனது உண்மையான அக்கறை எல்லாம் அவளை தன் மேன்மை மிக்க பேச்சினால் தன் ஆளுகைக்கு உட்படுத்துவது தான் என்கிறான். ஆனால் மிகையுணர்ச்சியினால் தவறுதலாகத் தன் முகவரியைத் தந்துவிட்டதாகவும்  இந்த இரண்டு நாட்களும் அவள் வந்துவிடக்கூடாது என வேண்டிக் கொண்டதாகவும் கூறுகிறான். இப்போது தன் கீழ்மையைக் கண்டறிந்துவிட்டதற்காக ஒருபோதும் அவளை மன்னிக்க மாட்டேன் என்கிறான்.

முதலில் அதிர்ந்துபோகும் லிசா கடைசியில் கண்டுகொள்கிறாள் நிலவறை மனிதன் தன்னை விடப் பரிதாபகரமான நிலையில் இருப்பதை. அழுதுகொண்டே அவனை அணைக்கிறாள். நிலவறை மனிதனும் உணர்ச்சிகரத்தில் சோபாவில் முகம் புதைத்து அழுகிறான். இந்த இடத்தில் இனி இந்த ஜீவன்கள் இரண்டும் காதலில் விழுந்து சுபமாகக் கதை முடியும் என யூகிப்பதை, ஏன் விரும்புவதைக் கூட, வாசகரால் தவிர்க்க முடியாது. ஆனால் அப்போது தான் நிலவறை மனிதனின் அருவருப்பூட்டும் உண்மை வெளிவருகிறது. அவனக்கு சட்டெனப் புரியவருகிறது பாத்திரங்களும் காட்சியும் தலைகீழாக்கப்பட்டது. அதாவது முந்திய இரவில் அழுதது அவள் தேற்றியது அவன். இப்போது முகம் புதைத்து அழும் அவனை அவள் தேற்றுகிறாள். நாயகனின் இடத்தில் இருந்து அவன் இறங்கிட அவள் நாயகியாகிறாள். அவனது அதீத பிரக்ஞை இதை எளிதில் கண்டுகொள்கிறது. ஒரு விபச்சாரியைவிடத் தான் தரம் தாழ்ந்திருப்பதைக் காண்கிறான். அவள் அவனை மீட்பது என்பது அவனது ஒட்டுமொத்த சுய பிம்பத்துக்கும் மரணமாகத் தான் இருக்கும். எனவே அவளை ஆட்கொள்ள வேண்டும் என்ற ஆத்திரம் எழுகிறது. அவன் அவளோடு உறவு கொள்கிறான். ஆனால் உடலுறவின் முடிவில் லிசாவிற்குப் புரிகிறது அவனது எண்ணம். அவள் சொல்லாமலேயே புரிந்து கொள்கிறாள் நிலவறை மனிதனின் அருவருப்பூட்டும் உண்மையை. அதாவது அவனால் நேசிக்க முடியாது என்பதை. அவள் நிலவறையை விட்டு வெளியேற எழுகிறாள். தன் அவமானத்தை ஒருபோதும் மறக்காத அவன் அவளைப் பழிதீர்க்க எண்ணுகிறான். அதாவது ஸ்வெர்காவ் அவனுக்குச் செய்ததைத் திருப்பிச் செய்கிறான். நீ என்னை அவமதிக்க முடியாது ஏனெனில் நீ வெறும் விபச்சாரி தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறான். கிளம்பிச்செல்லும் அவளது கையில் ஐந்து ரூபிள் தாளைத் திணிக்கிறான். அழுதபடியே அவள் அதைக் கீழே விட்டெறிந்துவிட்டு வெளியேறுகிறாள். இச்செய்கை நிலவறை மனிதனைத் திடுக்கிட வைக்கிறது. ஏனெனில் அவள் தனது எதிர்செய்கையின் மூலம் நிலவறை மனிதன் தன்னை அவமதிக்க முடியாது என்பதை நிரூபித்துவிட்டுப் போகிறாள். கூடவே அவளை விட அவன் கீழானவன் என்பதையும் பரிதாபகரமானவன் என்பதையும். தான் உண்மையில் நாயகி என்பதையும் ஆனால் அவன் நாயகனில்லை பூச்சி என்பதையும். அதற்குப் பிறகு லிசா அவனைப் பார்க்கவே இல்லை. அவள் என்ன ஆனாள் என்றும் அவனுக்குத் தெரியாது.

நிலவறை மனிதனால் ஏன் அன்பு செய்ய முடியவில்லை? ஏனெனில் அவனுக்கு அந்த மொழி புரியவில்லை. ஏனெனில் அவனது அதீத பிரக்ஞையின் தர்க்க சட்டகத்திற்குள் அம்மொழி பொருந்திப் போகவில்லை. எனவே அப்படி ஒரு மொழி இருப்பதையே அவனால் நம்பமுடியவில்லை. ஓர் வறிய விலைமாது ஒற்றை சந்திப்பில் தன் மீது பரிவு கொள்ளக்கூடும் என்பதை அவனது அறிவார்த்தம் சந்தேகிக்கிறது. நிலவறை மனிதன் தனக்கிருந்த ஒரேயொரு பழைய நண்பனைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘அவன் எனக்குத் தேவைப்பட்டது நான் அவனை வெல்வதற்குத் தான்’ என்கிறான். உறவு என்பது ஒருவரிடம் அடிமையாவதாகவோ அல்லது அவரை அடிமையாக்குவதாகவோ மட்டுமே இருக்கமுடியும் என நம்புகிறான். இது விஷயத்தில் சூதாடியின் அலெக்ஸியும் இந்த வகையறா தான்.

நேசமோ கலையோ மனிதப் பிழைப்பிற்கு உபயோகப்படுகிறது என்பதால் தான் அவை ஜீவிக்கின்றன என்பது தானே சமூக டார்வினியத்தின் பாலபாடம். சிக்கல் என்னவெனில் அவை பயன்பாடற்றவை என்பதல்ல, பயன்பாட்டின் மொழியில் மட்டுமே ஒன்று புரிந்துகொள்ளப்படுகையில் நாளோட்டத்தில் அந்த பயன்பாட்டு மொழியை மட்டுமே பேசமுடியும். எந்த மொழியும் புழக்கத்தில் உள்ளவரை தானே ஜீவனோடு உள்ளது. அந்தரங்க வாழ்விலோ பொதுவாழ்விலோ எந்த நிகழ்வையும் அதிகார மொழிபெயர்ப்பிற்குப் பின்னரே புரிந்துகொள்ள முடியுமெனில் அதை மட்டும் தானே பேசவும் முடியும். நிலவறை மனிதனும் அப்படித்தான். தனக்கும் வேலைக்காரனுக்கும் இடையில் இருக்கும் ஒரே தொந்தம் சம்பளம் தான் எனக் கருதுகிறான். ஒரு விருந்து மேஜையில் நண்பர்கள் தங்கள் ஆளுமைத் திறனைக் காட்டாமல் தமக்குள் பேசிக்கொள்ளலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லா சமூகப் பரிவர்த்தனைகளையும் பணப்பட்டுவாடாவாகவே காட்சி அளிக்கிறது. அதனினும் மேலாக தானே விரும்பமுடியாத தன்னை ஒரு வேசி விரும்புவது நம்பவே முடியாதது அவனுக்கு.

 

உறவுகளுக்குள்ளும் சமூக வளர்ச்சியிலும் அதிகாரம் ஒரு செயலூக்க விசையாகத் தொழிற்படுவதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதிகாரத்தின் பாஷையைத் தவிர ஏனைய உரையாடல்களுக்கும் ரகசியங்களுக்கும் செவிடாகிப் போவது மனித வாழ்வு எனும் சம்பவத்திலிருந்து எல்லா அழகையும் தெய்வாம்சத்தையும் துடைத்தழிப்பதிலேயே போய் முடியும். போன  நூற்றாண்டிலேயே எல்லா அறிவுத்துறைகளும் சமூக அமைப்புகளும் தனியுறவுகளும் அதிகாரப் பொருள்கோடலால் கட்டவிழ்க்கப்பட்டுவிட்டன. இப்போது பல்வேறு உரிமைகளுக்காக நடைபோடும் நாம் அதிகாரத்திடம் கடி பெற்ற ஸோம்பிக்கள் என்பது தான் உண்மை. சந்தை மதிப்பீடுகளின் அடைப்பெட்டிக்குள் வளரும் குஞ்சுகளுக்கு உலகமே ஒரு சந்தையாகத் தோன்றாதா? இவ்வகையான அதிகாரமயப் புரிதல் நடைமுறையில் பயனுள்ளதாக இருக்கலாம்  கோழிக்கொட்டிலைப் போல. ஆனால் பயன்பாட்டு நோக்கையும் அதிகார வேட்கையையும் தவிர இவ்வாழ்விற்கு வேறெந்த ஆழமான அடித்தளங்களும் இல்லையா? மேற்தளத்தில் அவ்வப்போது அசையும் நாம் தும்பட்டைகள் தானா? சிறிதும் பெரிதுமான பண்ணைக் கூடங்கள் தான் நம் வாசத்தலங்களாக இருக்க முடியுமா? மனிதன் அப்பத்தினால் தான் வாழ்கிறானா?

இல்லை என்கிறான் நிலவறை மனிதன். இப்படைப்பில் ஏசுவைக் குறித்து எழுதியிருந்த பகுதியை தணிக்கையினர் தவறான புரிதலால் நீக்கிவிட்டதாக தன் தம்பிக்கான கடிதத்தில் வருந்துகிறார் தாஸ்தாயெவ்ஸ்கி. ஆனால் பின்னால் வந்த எந்த பதிப்புகளிலும் அவர் அப்பகுதியைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதையும் ஓர் ஓர்மையுள்ள முடிவாகவே எடுத்துக் கொள்ளமுடியும்.

*

நிலவறை மனிதன் நல்லவனா கெட்டவனா?அடிப்படையில் அவன் ஒரு பலிகடா. பகுத்தறிவாண்மைக்கும், நிர்ணயவாதத்திற்கும் பிறந்த மனநலங்குன்றிய குழந்தை. அவன் தன்னை முடமாக்கிய கருத்தியல்களுக்கு எதிராக வாதிடுகிறான், வாய்ப்புற்றுநோயாளி ஒருவன் புகையிலைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதைப் போல. மிகுந்த தாக்கத்தை உண்டு செய்வது சொல்லப்பெறும் செய்தி அன்று காட்டப்படும் வாய். தர்க்கமாகவும் குதர்க்கமாகவும் கொந்தளிப்புகளைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதியில் தன்னை நோயாளி என்பவன் இரண்டாவது பகுதியில் நோயாளியாக நடித்துக்காட்டுகிறான். அதேநேரம் அந்நோயின் பிடியிலிருந்தும் அவன் தப்ப முடியவில்லை. ஏனெனில் நஞ்சு அவன் ரத்தத்திற்குள் கலந்துவிட்டது. அவன் எதற்கு எதிராக முழங்குகிறானோ அதனாலேயே வழிநடத்தப்படுகிறான் குடிக்கு எதிராகக் குமுறும் குடிகாரனின் கால்களைப் போல. அது தான் இப்படைப்பின் வெகு அழகான முரண்.

 

*

நிலவறை மனிதனை தாஸ்தாயெவ்ஸ்கியின் பல படைப்புகளின் முன்னோட்டமாகக் கருதலாம். நிலவறை மனிதனும் ரஸ்கோல்நிக்கோவைப் போல நெப்போலியனாகக் கனவு காண்கிறான். ஆனால் அவன் ஒரு திட்டத்தைத் தனது மறுதிட்டத்தால் வெட்டிவிடுகிறான். மாறாக ரஸ்கோல்நிக்கோவோ ஒரே கோடரி வீச்சால் கணநேரமாவது நெப்போலியனாக முடிகிறது. கொலை செய்த பிறகு நடந்து வரும் அவன் ஒரு குழந்தை தரும் நாணயத்தைக் கால்வாயில் விட்டெறிவதன் மூலம் சமூகத்துடனான தனது அனைத்து ஆத்மார்த்த இணைப்புகளையும் துண்டித்துக் கொள்கிறான். பின் சென்று தஞ்சமடைவது அதே பீட்டர்ஸ்பர்கின் அதே நிலவறையில் தான். சோனியாவைப் போல லிசாவும் கருணையும் புரிதலும் நிரம்பிய ஒரு வறிய விலைமாது. இரண்டுமே கற்பனாவாதப் பாத்திரப் படைப்பின் தலைகீழாக்கம். மக்தலேனாவின் தொலை எதிரொலி. இரண்டிலுமே மீட்பது நாயகர்கள் அல்ல. தாசிகள் தான். லிசாவால் முடியாதது ஏன் சோனியாவால் முடிந்தது. ஏனெனில் ரஸ்கோல்நிக்கோவ் நிலவறை மனிதன் அல்ல. இருத்தலியல் படைப்பாக்கத்தைத் தொடங்கி மட்டும் வைக்கவில்லை தாஸ்தாயெவ்ஸ்கி, இம்மனோபாவத்தின் பேராபத்தையும் சமிக்ஞை செய்கிறார் இந்நூலில். நிலவறை மனிதன் சிகப்பு நிறத்தில் எழுதப்பட்ட ஓர் அறிவிப்புப் பலகை. அவன் சொல்கிறான்: விரைவிலேயே மனிதர்கள் கருத்தால் கருத்தரிக்கப்படுவார்கள் என. ரஸ்கோல்நிக்கோவும், ஸ்டவ்ரோகினும்,ஸ்மெர்டியாகோவும் அப்படிப்பட்டவர்கள் தாம். சென்ற நூற்றாண்டின் பெரும் பேரழிவுகளை நிகழ்த்தியது அவர்கள் தான்.

 

*

நிலவறை மனிதன் சமூக எதார்த்தத்தைக் கரிசனமின்றி விமர்சிக்கையில் அதற்குப் பதிலாக அதனினும் மேலான ஆன்மிக விண்ணரசிற்கோ அல்லது இயற்கையின் பெருமடிக்கோ போகவில்லை. இந்நூலை வாசிக்கையில் பலமுறை தோரோவின் நினைவு வந்தது. ஒட்டுமொத்த சமூகக் கதையாடலையும் நிராகரித்து அதை நடைமுறைப்படுத்திய தோரோவால் கேட்க முடிந்தது: ‘எதற்குத் தனியனாக உணரவேண்டும்? நமது கிரகம் பால்வீதியில் இல்லையா என்ன? ‘ஏனெனில் அவர் சமூகத் தொடர்பைத் துணித்துக்கொண்டாலும் அதற்கு வெளிவிரிந்த பிரபஞ்ச பெருநிகழ்வோடு தொடர்பேற்படுத்திக் கொண்டார். நிலவறை மனிதனின் பிரதான முடிச்சே இந்தத் தொடர்பின்மை தான். அவன் எதன் கண்ணியும் இல்லை. அவனே சொல்வது போல அவனொரு சோதனைக் குழாய்ப் பிறவி. அந்தரத்தில் ஒரு தூசி அவ்வளவு தான்.

 

*

நிலவறை மனிதன் நவீன சுயத்தின் பாதகமான சில அம்சங்களின் மிகையாக்கம் தானே என ஒருவர் வினவமுடியும். நிலவறை மனிதனும், தாஸ்தாயெவ்ஸ்கியின் பல பாத்திரங்களைப் போல, தன்னளவில் மிகைவாதியாகத் தான் நடந்துகொள்கிறான். தாஸ்தாயெவ்ஸ்கியே கூட ஒரு கடிதத்தில் ‘நான் எப்போதுமே எல்லாவற்றையும் மிகைப்படுத்துகிறேன். என்னால் இத்தன்மையை உதறமுடியும் என்றே தோன்றவில்லை’ என எழுதுகிறார். ஆனால் மிகையாக்கத்தின் மூலம் தான் இதுவரை புலப்படாத மிகநுண்ணிய அசைவுகளைக் கைப்பற்றுகிறார் எனத் தோன்றுகிறது. ஒரு தனிமம் இன்னொன்றாக மாற குறிப்பிட்ட வெப்பநிலையும் அழுத்தமும் தேவைப்படுவதைப் போல  அத்தகைய உச்சக்கட்ட தருணங்களில் மட்டுமே தலைகாட்டும் மனித பாங்குகள் இருக்கலாம் தானே. எப்படியோ நுண் கண்டுபிடிப்புகளுக்கும் தூர தரிசனத்திற்கும் மிகையாக்கத்திற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது. எனவே தான் தாஸ்தாயெவ்ஸ்கியின் கதைசொல்லி பெரும்பாலும் நுண்ணோக்கியுடன் திரிகிறார். அது வழியே புதிய புதிய கிருமிகளைக் கண்டறிகிறார். அழுதபடி கிடந்து பிரார்த்திக்கிறார்.

*

நிலவறை மனிதன் ஓரிடத்தில் சொல்கிறான்  துக்கத்தில் உச்சகட்ட இன்பம் இருப்பதாக. அதை விளக்குவதற்குத் தான் பேனாவைக் கையில் எடுத்திருப்பதாக. இதை தாஸ்தாயெவ்ஸ்கியின் நேரடிக் குரலாக எடுத்துக்கொள்ளமுடியாது தான். ஆனால் நிலவறை மனிதனின் குணாம்சம் பலவிதங்களில் கலைஞர்களின் தற்போக்கு மனோபாவத்தை ஒத்துள்ளதையும் மறுக்கமுடியாது. கலைச்செயல்பாட்டிற்கும் இத்தகைய உளநோய்க்கூறுக்கும் ஆன ஒப்புமை உளவியலில் விரிவாகப் பேசப்பட்டுள்ள ஒன்று. அவனே கூட ஒத்துக்கொள்கிறான் மனிதன் முதன்மையான படைப்பாற்றல் கொண்ட விலங்கென. ஆனால் தன்னையே படைக்கமுடியாத ஒருவனால்  வேறெதைப் படைக்க முடியும். தனது சமரசமற்ற மறுப்புவாதத்தின் கரங்களால் எதைப் பற்ற முடியும். யோசித்துப் பார்த்தால் அவன் இறுதியாக ஒன்றைப் பற்றியுள்ளான். ஆகவே தான் நாம் அவனை வாசிக்கிறோம்.  செயலொழிந்த நிலவறை மனிதன் தன் ’தள்ளாடும்’ நாற்பது வயதில் ஒரு செயலைத் துவங்கியுள்ளான், அதாவது தன் கதையைச் சொல்லத் தொடங்கியுள்ளான், தனது அருவருப்பான வேதனைமிக்க தன்வெளிப்பாட்டை நிகழ்த்தியுள்ளான். அவனது குறிப்புகள் தான் நிலவறையின் ஒரே வாசல். அவன் எங்காவது செல்லக்கூடுமென்றால் அது அவ்வழியாகத் தான், அவன் ஏதாவது ஆக முடியுமென்றால் அது அப்பாதையில் தான். இதை முன்னிட்டு அவன் தன்னையே பாராட்டிக் கொள்ளலாம். அவ்வற்றல் மரம் அப்படித்தான் துளிர்க்கக் கூடும்.

 

*

இதுவரை தன்மை ஒருமையில் பேசிவந்த நிலவறை மனிதன் நூலின் இறுதியில் எந்தப் பெரிய தடுமாற்றமும் இன்றி ‘நாம்’ எனக் குரலெடுக்கிறான். சகதி படிந்த நவீன மனிதனின் பிறப்பை தாஸ்தாயெவ்ஸ்கி இங்கு அறிவிப்பதாகவே எடுத்துக்கொள்ளலாம். துவக்கம் முதலே வாசகன் நிலவறை மனிதனை தனக்கு ஒவ்வாத நபராகக் குறைந்தபட்சம் மிக விசித்திரமான ஆளாகக் கருதியிருக்கக் கூடும். ஆனால் சட்டென அவன் ‘நாமெல்லோருமே,கொஞ்சமாகவோ அதிகமாகவோ, உண்மையான வாழ்விடம் இருந்து தொடர்பிழந்திருக்கிறோம்.. நமக்குத் தெரியாது எந்த தரப்பைத் தேர்வது என்று, எங்கு நம் கடப்பாட்டை வைப்பது என்று, எதை விரும்புவது எதை வெறுப்பது, எதை மதிப்பது எதை அவமதிப்பது என்று’. நம் காலத்தின் விழுமிய முடக்கத்தை அப்போதே கணித்திருக்கிறான் அவன். ஏனெனில் வேறு யாரையும் விட அவனுக்குத் தெரியும் நிலவறைத் தன்மை என்பது தன்னை நவீன மனிதனாக உணரும் ஒவ்வொருவரும் தவிர்க்க இயலாத உளப்பான்மை என்று.

யோசித்துப் பார்த்தால் நிலவறை மனிதனைத் துரத்தும் ஒவ்வொரு கேள்வியும் நவீன மானுடத்தின் அடிப்படைக் கேள்விகள். ஆயின் அவனுக்கும் நமக்குமான வேறுபாடு நாம் அந்தக் கேள்விகளின் பாதையில் எந்த எல்லைக்குச் செல்ல முடியுமோ அங்கு செல்ல பயப்படுகிறோம் அல்லது பொதுப்புத்தி என்ற பேரில் சாமர்த்தியமாகத் தப்பிக்கிறோம். நிலவறை மனிதன் சொல்கிறான் ‘நீங்கள் பாதிதூரம் வரை கூட செல்ல அஞ்சும் வழிகளில் நான் முடிவெல்லைகளுக்குச் சென்றிருக்கிறேன்’ என. உதாரணத்திற்கு நவீனத் தொழில்நுட்பத்தை எப்படி சின்னஞ்சிறுகேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ளும் தகைமைக்கு வந்திருக்கிறோம் என்பதை யோசித்துப்  பார்க்கலாம். அறிவியல் கதையாடல் மூலம் யாரை வேண்டுமாயினும் எதை வேண்டுமாயினும் நம்பச்செய்யமுடியும் இப்போது. வீட்டிற்குள் ஒரு தொழில்நுட்ப சாதனம் எந்த விசாரணையுமின்றி பிரவேசிக்கிறது. அது என்ன, அதன் நோக்கம் என்ன, தேவை என்ன, இயங்குமுறை என்ன யாருக்கும் தெரியாது; எல்லோருமே பண்ணை விலங்குகளைப் போல அதற்கேற்ப தகவமைக்கத் துடிக்கிறோம் தயக்கமின்றி தன்னார்வலர்களாக. தொழில்நுட்பத்தை மறுப்பதல்ல அதைக் கேள்விக்குட்படுத்துவது என்பதே கேள்விக்கு அப்பாற் சென்றுவிட்டது. நிலவறை மனிதன் குறிப்பாக இத்தகைய தவிர்க்க முடியாது எனத் தோற்றமளிப்பவற்றைத் தான் ஊடுருவிக் காண்கிறான். அதை ஏற்க மறுக்கிறான். உண்மை தான், அதற்கான விலையையும் செலுத்துகிறான்.

யுங்கின் சுயசரிதையில் ஒரு விஷயம் குறிப்பிடப்படுகிறது: ‘நள்ளிரவில் திடீரென ஒரு சத்தம் கேட்டெழுகையில் நாம் மாடியிலும் பரணிலும் சன்னலிலும் போய் தேடுவோம். உள்ளூர நமக்குத் தெரியும் அச்சத்தம் நிலவறையில் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என. ஆயினும் அங்கு செல்ல அஞ்சும் நாம் வீடு முழுதும் தேடிப்பார்க்கிறோம்’ என. நிலவறையை லகுவாகுவே நனவிலியைச் சுட்டும் குறியீடாகப் பார்க்க முடியும். அது நம் நிழல்களின் உறைவிடம் இல்லையா. அப்படி ஒன்றே வீட்டில் இல்லாது போல் நாம் நடிக்கலாம். நல்லவர்களாக அழகானவர்களாகக் காட்டிக்கொள்ளலாம். ஆனால் வெளியே கொட்ட முடியாத குப்பைகளில் தான் நம் சுயசரிதை எழுதப்பட்டுள்ளது. தம் நிழல்களை ஏற்றுக்கொள்ளாதவர் அதை இன்னொருவருடையதாய் அறிவிக்கிறார். அதன் வாயிலாகப் பேய்களையும் பேரெதிரிகளையும் கூடவே பேரழிவுகளையும் உண்டாக்குவார். நிலவறை மனிதன் தன் சாயையை ஏற்றுக்கொள்கிறான். தன் எதிர் மின்னழுத்தத்தைப் பொறுத்துக்கொள்கிறான். அவனே அவனுக்கு விளக்காவதைத் தவிர அவ்வறையில் வேறு வழியில்லை. இப்படியாக அவனது நெருக்கடியே அவனது சுயநிலைமாற்றத்திற்கான அறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. மேலே மினுக்கும் ஆபாச மின்விளக்குகளில் இருந்தல்ல நிலத்தடியிலிருந்தே ஒளிக்கான தாகம் உதிக்கிறது.. எலும்பைக் கரைக்கும் வல்லிருட்டினுள்ளே தான் மீச்சிறிய வெளிச்சத் துமியும் தென்படுகிறது. அத்தகைய கண்டுபிடிப்புகளான சிறிய பொறிகள் தாம் சாம்பல் நீரின் மேலான நம் பயணத்தினூடே மிதவை விளக்குகளாய் அசைபவை.

 

நிலவறைக் குறிப்புகள்
எம். ஏ.சுசீலா
நற்றிணை பதிப்பகம்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.