வரலட்சுமி நோன்பு

ரு ஞாயிற்றுக் கிழமை. பூணூலை வலது பக்க காதில் மாட்டியபடி, வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு, கழிவறை தரையில் சுவற்றின் ஓரமாக ஓடிக் கொண்டிருந்த இரண்டு கரப்பான் பூச்சிகளின் மேல் சீராக தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தான் அரவிந்த். நேற்றிரவு அரவிந்த் வீட்டிற்கு வந்த அக்காவும் அத்திம்பேரும் கொடுத்த அதிர்ச்சியால் இரவெல்லாம் சரியான தூக்கம் இல்லை. தூக்கமில்லாத எரிச்சலில் தண்ணீரின் வேகத்தை கொஞ்சம் அதிகப் படுத்தினான். இரண்டு கரப்பான் பூச்சிகளும் கழிவறையின் மூலைக்கு சென்றன. அவன் சற்றும் எதிர்பாராத வகையில், மூலைக்கு சென்ற கரப்பான்பூச்சிகள் வலது பக்கம் திரும்பி சுவர் ஓரமாக ஓடி அவனிடமிருந்து தப்பிக்க முயன்றன. உடனே அரவிந்த் தண்ணீரின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி, சுவரின் எந்தப் பக்கமும் அவைகளை நகர விடாமல் இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி, தொடர்ந்து அதன் மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டே இருந்தான். ஒருதுப்பாக்கி கொண்டு தன்னுடைய எதிரியை சுடுவது போல நினைத்துக் கொண்டு, வேகமாக வெளியேறும் தண்ணீரை தோட்டாக்களாக கற்பனைசெய்து கொண்டு அந்த கரப்பான் பூச்சிகளை தண்ணீரால் சுட்டுக் கொண்டிருந்தான். தண்ணீரின் வலிமை தாங்காமல் கரப்பான் பூச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக மல்லாக்க விழுந்து, அவைகளின் கால்களும் மீசை முடியும் விண் நோக்கி துடித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த அரவிந்த் ஆறுதல் அடைந்தான். அந்த கரப்பான் பூச்சிகளுக்கு தக்க பாடம் புகட்டியதாக மகிழ்ந்தான். இந்த கரப்பான் பூச்சிகளை வெற்றி கொண்டது போல தன் பெற்றோர்களை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று நினைத்தான்.

 

அப்பா, அம்மாவிடம் அரவிந்தும், அவன் மனைவி ப்ரியாவும் பேசி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இருக்கும். அவர்கள் கொஞ்சி மகிழும் அரவிந்தின் மகள் “அம்மு குட்டி” சஹானா விடம் பேசுவதற்கு கூட அப்பாவோ அம்மாவோ ஆறு மாதங்களாக அரவிந்திற்கு போன் செய்யவில்லை. வரலட்சுமி நோன்பிற்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. எப்படியும் நோன்பிற்கு அங்கு செல்ல வேண்டும். திருமணம் ஆன மூன்று வருடங்களில், ஒவ்வொரு முறையும் நோன்பு செய்வதற்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு விடுமுறை போட்டுவிட்டு கிளம்பி விடுவார்கள். அதுதான் தங்கள் குடும்ப வழக்கமும் கூட. வேறு ஏதோ வேலையாக திருச்சி செல்கையில், வீட்டுக்கு சென்று அப்பா அம்மாவைப் பார்த்த அத்திம்பேரிடம் அம்மாவோ அப்பாவோ ஏதாவது சொல்லி அனுப்பி இருப்பார்கள் என்று ஆவலாக எதிர்பார்த்தான். அக்காவுக்கும் அத்திம்பேருக்கும் நடந்தவை எல்லாம் தெரியும். அரவிந்துடைய பெரியப்பா மகளின் கணவர். அரவிந்த், ப்ரியா காதல் வீட்டிற்கு தெரிந்ததும், அவர்களை இணைத்து வைக்க அக்காவும் அத்திம்பேரும்தான் அரவிந்துடன் நின்றனர். “அம்மா எதாவது சொன்னாளா?” என்று மெதுவாக கேட்டான் அரவிந்த். “இல்ல அரவிந்த்… எதும் சொல்லல.” என்றதும் அவன் முகம் மாறியதை கவனித்த அத்திம்பேர் “அட விடுப்பா … கொஞ்ச நாள்ல அவாளே கூப்பிடுவா பாரு..” என்றார். அத்திம்பேரும் அக்காவும் அண்ணா நகரில் வசிக்கின்றனர். அரவிந்த் வீடு கூடுவாஞ்சேரியில். காரில் எப்பொழுது கூடுவாஞ்சேரியை கடந்து போனாலும், அரவிந்த் வீட்டிற்கு தவறாமல் வந்து போவார்கள். அக்காவும் அத்திம்பேரும் திருச்சியிலிருந்து அரவிந்த் வீட்டிற்கு வரும் திட்டம் அவர்களுக்கு தெரியும். அப்பா தன்னைப் பற்றி ஏதாவது அக்காவிடம் விசாரித்திருப்பார் என நினைத்தான். அப்படி தன்னைப் பற்றியோ குழந்தையை பற்றியோ ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல் போனது அரவிந்திற்கு பெரும் ஏமாற்றம்தான்.

 

“கம்மினாட்டி… ஏண்டா இப்டி எல்லாம் பேசற? முட்டாப் பயலே.. உனக்கு அறிவு இருக்கா இல்லையா? என்ன பேசறனு தெரிஞ்சுதான் பேசறியா நீ? .அறிவுகெட்டவனே……” என்று தன் அப்பாவை திட்டிவிட்டு, அவர் கன்னத்திலும் முதுகிலும் அடித்து விட்டான் அரவிந்த். அருகிலிருந்த அப்பாவின் நண்பர்கள்தான் அரவிந்தையும் அவன் அப்பா சேஷாத்ரியையும் பிரித்து வைத்தார்கள். அப்படி பிரித்து விட்டும் அரவிந்தின் கோவம் அடங்கவில்லை. “என்ன திட்றன்னு சொல்லிட்டு உன்னையும் அம்மாவையும் அசிங்கப் படுத்திக்கறடா. நீதான்டா என்ன வளத்த… ” என்று கத்தித் தீர்த்து விட்டான். அருகில் வந்த கடல மிட்டாய் அங்கிள், “சரிப்பா … கோவப்படாத.. அப்பாதான.. விடுப்பா..” என்று சமாதானப் படுத்த, “அப்பா மாதிரியா அங்கிள் பேசறாரு அவரு?” என்று கேட்டான். தன் இரண்டு வயதிலிருந்து வீட்டுக்கு வரும் போதெல்லாம் கடல மிட்டாய் வாங்கி வரும் கிரிதரன், அரவிந்திற்கும் அவன் தம்பி ஹரிஹரனுக்கும் இப்போதும் கடலை மிட்டாய் அங்கிள்தான். “சரி அரவிந்த். என்னவோ கோவம் அவருக்கு.”. “கோவம் வந்தா என்ன வேணா பேசலாமா அங்கிள்?”. என்று அவனும் சத்தமாக கத்தி விட்டு “ச்சீ…. உனக்குலாம் நான் புள்ளன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு. உன் முகத்துலயே இனி முழிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு தன் காரை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான்.

அப்பாவை தான் கம்மினாட்டி என்று திட்டி அடித்து விட்டது அரவிந்திற்கே பேரதிர்ச்சியாய் இருந்தது. அவனால் காரை கவனமாக ஓட்ட முடியவில்லை. கண்கள் கலங்க, இடது கையால் கண்ணீரை துடைத்தபடி காரை மெதுவாகவே ஓட்டினான். இவ்வளவு நடந்தும் அம்மா ஒரு வார்த்தை கூட பேசாததும் அவன் வீட்டை விட்டு வெளியேறும் போது அம்மா அவனை தடுக்காததும் அவனுக்கு இன்னும் வலித்தது. அம்மா அப்படியே பேசியிருந்தாலும் ” கல்யாணி .. நீ வாய மூடிண்டு இருடி. அவன் போகட்டும்” என்று அப்பா சொல்லியிருப்பார். அம்மாவும் எப்போதும் போல அமைதியாய் நின்று கொண்டிருப்பாள். அப்பாவை மீறி அம்மாவால் என்ன பேசி விட முடியும்? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். கல்யாணி அப்படித்தான். அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியையாக இருந்தாலும், கல்யாணியின் வங்கி atm அட்டை கூட சேஷாத்ரியிடம்தான் இருக்கும். கணவரை மீறி கல்யாணி எதுவும் பேச மாட்டார். அப்பாவை அடித்த கைகளை கார் ஸ்டியரிங் மேல் வலிக்கும்படி குத்திக் கொண்டே இருந்தான். அப்பா சொன்ன வார்த்தைகள், அதற்கு அரவிந்தனின் எதிர்வினை என நடந்த சம்பவங்கள் கற்பனையாகி விடக் கூடாதா என்று இருந்தது.

அரவிந்தனுக்கு தன் அப்பாவை அவ்வளவு பிடிக்கும். தன் வாழ்நாள் முழுக்க அப்பா தன்னை ஆக்கிரமித்து இருந்தார். தன் நண்பர்களோடு அவன் விளையாடியதை விட, தன் அப்பாவோடு அவன் கழித்த நேரம்தான் அவனுக்கு நினைவிருந்தது. அப்பான்னா அரவிந்த் அப்பா மாதிரி இருக்கணும் என்று அந்த தெருவில் வசிப்பவர்கள் அரவிந்திடமே சொல்லி இருக்கிறார்கள். சேஷாத்ரி திருச்சி பெல் நிறுவனத்தில் கிளார்க் வேலை பார்க்கிறார். இன்னும் ஐந்து ஆண்டுகள்தான் சர்வீஸ் இருக்கிறது. பள்ளி நாட்களில் அவனுக்கும் ஹரிஹரனுக்கும் பள்ளிக்கு கிளம்புவதற்கு முன்பு தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து தலை சீவி விட்டது அப்பாதான். அப்படி தலை சீவும் பொழுதே “மேத்ஸ் ஹோம் ஒர்க் பண்ணிட்டியா? கெமிஸ்ட்ரி ரெக்கார்டு எழுதிட்டியா?” என்று ஆரம்பித்து, தலை சீவி முடித்து நெத்தியில் காவிநிற செந்தூரத்தை வைக்கும் போது “நன்னா படிக்கனும்டா… என்ன?” என்று தினமும் சொல்லி அனுப்புவார். தேர்வு நேரங்களில் பாடங்களில் இருந்து கேள்வி கேட்பார், கணக்கு சூத்திரங்கள் கேட்பார். தேர்வு அட்டவணை பள்ளியில் கொடுப்பதற்குள் mid term test டைம் டேபிள் வந்துடுத்தா? எப்ப டெஸ்ட்? அவா டைம் டேபிள் கொடுக்கலன்னா என்ன? நீயே படிக்க ஆரம்பிச்சுடு” என்று எச்சரிக்கை விடுப்பார். பள்ளி கட்டணம் கட்டுவது, புதிய வகுப்பு ஆரம்பித்தால் அந்த பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வாங்கி அதற்கு அட்டை போட்டு வைப்பது, அவ்வப் போது க்ளாஸ் டீச்சரை சந்தித்து 90 அல்லது 95 மதிப்பெண் வாங்கும் தன் மகன்களுக்கு அந்த பத்து, ஐந்து மதிப்பெண்கள் எங்கே குறைந்தது என்று கேட்பது, என்று சேஷாத்ரி பிள்ளைகளுக்காக பாதி மாணவராகவே மாறி விடுவார். தன் சக மாணவர்கள் தீபாவளிக்கும், பிறந்தநாளுக்கும் ரெடிமேட் உடையும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்து மகிழ்வார்கள். ஆனால் அரவிந்தும் ஹரிஹரனும் துணி எடுத்து அதை தையற் கடையில் கொடுத்து, கட்டம் போட்ட சட்டையும் அதற்கு மேட்சிங்காக ஒரு பேண்டும்தான் அணிவார்கள். துணி எடுத்து தைத்துக் கொடுத்த உடைதான் சிறப்பு என்று தன் இரண்டு மகன்களையும் அவர் நம்பவும் வைத்து விடுவார். அந்த காலத்தில், அவர்கள் வகுப்புகளில், ஏன், அவர்கள் படிக்கும் அந்த உயர்ந்த பள்ளியிலேயே துணி எடுத்து தைத்து உடை போடும் மாணவர்கள் இவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். படிப்புக்காக மட்டும் அல்ல. ஒழுக்கத்திலும் கூட அவர் அவ்வளவு கண்டிப்பு. ஒரு முறை அரவிந்த் வேறு ஒரு மாணவனுடைய ஹீரோ பேனாவை எடுத்து வந்து விட்டான். அந்த மாலையே அரவிந்தை அந்த நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனிடம் சாரி சொல்ல சொல்லி அந்த பேனாவை கொடுக்க வைத்தார். மேத்க்ஸ் ஹோம் வொர்க் கொடுக்கவில்லை என பொய் சொன்னதால் ஹரிஹரன் கன்னத்தில் ஒரு நாள் பளாரென்று அடித்தும் விட்டார்.

இப்படி அக்கறையுள்ள அப்பா இருக்கையில் அரவிந்தும் ஹரிஹரனும் நன்றாக படிக்காமல் போனால்தான் ஆச்சர்யம். அரவிந்தை விட ஹரிஹரன் இரண்டு வருடங்கள் இளையவன். பெரியவன் பண்ணிரெண்டாம் வகுப்பிலும் சின்னவன் பத்தாம் வகுப்பிலும் ஒரே வருடத்தில் தேர்வெழுத, அந்த வருடம் தானும் பொதுத் தேர்வு எழுதுவதைப் போல் உணர்ந்தார் சேஷாத்ரி. மகன்களின் தேர்வுக்கு அவரும் ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டார்.

வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதே அப்பாவை திட்டிய அந்த நாளின் நினைவும், அப்பா தன்னை வளர்த்த நினைவுகளும் அவன் மனதிற்குள் முட்டி மோதின. இன்னும் அந்த இரண்டு கரப்பான் பூச்சிகளும் மல்லாக்க கிடந்தபடி இருந்தன. விண்ணை நோக்கி அதன் கால்கள் துடித்துக் கொண்டிருந்தன. அப்பா சொன்ன வார்த்தைகள் அவனுக்கு இப்பவும் அருவருப்பாய் இருந்தது. டெட்டால் லிக்விட் வாஷ் போட்டு தன் கைகளை சுத்தம் செய்து கொண்டே, இந்த சங்கடமான மனநிலை ஒரு நாள் மாறும் என்று நம்பிக்கை கொண்டான்.

அம்மாவாவது தன்னையும் ப்ரியாவையும் வரலட்சுமி நோன்பிற்கு அழைப்பாள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு வருடமும் வரலட்சுமி நோன்பு என்பது வெறும் வரலட்சுமி நோன்பு இல்லை. அது அவர்களது குடும்பக் கொண்டாட்டம். வழிபாட்டுக் கலைக் கொண்டாட்டம். அரவிந்திற்கும் ஹரிஹரனுக்கும் அது பால்யத்தின் நினைவுச் சுவடுகள். அம்மா மடிசார் புடவை கட்டி, நெற்றி நிறைய பொட்டு வைத்து, தலை நிறைய மல்லிகைப் பூ வைத்திருப்பார். அப்பா பட்டுத் துணியில் பஞ்சகச்ச வேஷ்டி கட்டி, பெரிய பட்டு அங்கவஸ்திரத்தால் தன் உடலை போர்த்தி, மீதம் இருக்கும் அங்கவஸ்திரம் தரையில் விழாமல் இருக்க அதையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டு வீட்டில் இங்கும் அங்கும் நடந்து செல்வார். பாட்டி நெற்றியில் விபூதி வைத்து கொண்டு சன்னமான சரிகை வைத்து அயன் செய்த காட்டன் புடவையில் பளிச்சென்று இருப்பார். வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் தொங்கும். பக்கத்து தெருவில் உள்ள கிரிஜா மாமி வீட்டின் மாமரத்தில் அரவிந்தோ அல்லது ஹரிஹரனோ காலையில் சென்று மாவிலைகள் பறித்து வருவார்கள். வடை, பாயசம், சுண்டல் என சிறப்பு உணவு கிடைக்கும். ஒரு மூன்றடி உயர செவ்வக மேசையை வெள்ளை வேஷ்டி கொண்டு அலங்கரித்து மேசையின் முன்னிரு கால்களில் வாழைக் கன்றை கட்டி, கால்களுக்கு நடுவில் ஒரு பெரிய மனைப் பலகையில் அரிசி மாவால் கோலமிட்டு அதன் மேல் வாழை இலை வைத்து, கொஞ்சம் அரிசி கொட்டி, மஞ்சள் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிச் சொம்பின் மீது, மஞ்சள் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்ட குடுமி வைத்த தேங்காய் வைத்து, அந்த தேங்காயின் குடுமியில், வெள்ளியால் செய்யப் பட்ட இரண்டு வரலட்சுமி முகங்கள் சொருகப் பட்டிருக்கும். அந்த வரலட்சுமி முகமும் அம்மாவின் முகமும் ஒரே போல இருப்பதாக அரவிந்திற்கு தோன்றும். அம்மாவிற்கு தெரியாமல் வரலட்சுமி முகத்தையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்துக் கொள்வான். அம்மா அவ்வளவு அழகாக இருப்பாள். அம்மா காலையிலும் மாலையிலும் பாடல்கள் பாடிக் கொண்டே இருப்பார். கர்நாடக சங்கீத பாடல்கள், தெலுங்கு கீர்த்தனைகள், தமிழ் பாடல்கள் என்று அந்த இரண்டு நாட்களும் பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். ‘ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி…… ஸ்ரீ லலிதாம்பிகையே…” என்று அம்மா உருகி உருகி பாடுவது அவ்வளவும் ரம்யமாக இருக்கும். அப்பா “போற்றி.. போற்றி” என்று ஒரு புத்தகத்தை பார்த்து சொல்லிக் கொண்டு இருப்பார். “அம்மா… ஏம்மா ரெண்டு வரலட்சுமி முகம் இருக்கு?” என்று ஒரு நாள் கேட்ட போது, “ஒன்னு எங்காத்துல கொடுத்தது.. இன்னொன்னு பாட்டியோடது.. ஒரே குடும்பமா இருந்தா இரண்டு முகமும் தனித்தனியா வைக்கப் படாது.. உனக்கு கல்யாணம் ஆரச்சே நீயும் உன் ஆம்பிடையா எடுத்துட்டு வர்ற முகத்தை இப்படித்தான் சேத்து வெச்சு பூஜை பண்ணனும் ” என்று அரவிந்தின் கன்னத்தை கிள்ளி அம்மா சொன்னது இன்றும் அரவிந்திற்கு நினைவிருக்கிறது. சேஷாத்ரியின் அண்ணனுக்கு ஒரே ஒரு மகள். அதனால் பாட்டியின் வரலஷ்மி முகம் ஆண் வாரிசு உள்ள சேஷாத்ரியின் குடும்பத்துக்கு வந்து விட்டதென்பது அரவிந்திற்கு பள்ளிப் பருவத்தில் தெரியாதது, கல்லூரி நாட்களில் தெரிந்து கொண்டான். இப்படி தனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து வரலட்சுமி நோன்பை விழாக் கோலமாக கொண்டாடி இருக்கிறான். திருமணம் ஆனதும் இன்னொரு முகமும் சேர்த்து விடும் என்று கற்பனையில் இருந்தான். அது ஒரு நோன்பு என்பதையும் மீறி அம்மா அப்பாவுடன் தன்னையும் தன் மனைவியையும் இணைத்துக் கொள்ளும் அடையாளமாகவே அதை பார்க்கத் தொடங்கினான். அதன்படியே திருமணமான மூன்று வருடங்களிலும் வரலட்சுமி நோன்பிற்காக ப்ரியாவுடன் திருச்சிக்கு வந்து தன் பெற்றோருடன் நோன்பு செய்ய வந்தான். இவ்வளவு உணர்ச்சிகளை கொண்டுள்ள வரலட்சுமி நோன்பிற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கையில், இன்னும் பெற்றோரிடம் பேசாமல் இருப்பது அரவிந்திற்கு கொஞ்சம் பதட்டத்தை ஏற்படுத்தியது.

எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது அந்த ஒரு நாள் வரை. அரவிந்தும் ஹரிஹரனும் அப்பா சொற்படி கேட்கும் பிள்ளைகளாக நன்கு படித்தனர். அரவிந்திற்கு கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்ததும் ஹரிஹரனுக்கு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திலேயே பொறியியல் படிப்பிற்கு இடம் கிடைத்ததும் தன் வாழ்நாள் சாதனையாக இருந்தது சேஷாத்ரிக்கு. “பெரியவன டாக்டர்கு படிக்க வெச்சிருக்கேன், சின்னவன இன்ஜினியரிங் படிக்க வெச்சிருக்கேன்” என்று உற்றார் உறவினரிடம் பெருமையாகவே சொல்லிக் கொள்வார். அரவிந்த் எம்டி படிப்பிற்கு சென்னை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று எம்.டி படித்துக் கொண்டிருந்தான். சின்னவனுக்கு ஐடி கம்பெனியில் வேலை கிடைத்து பெங்களூர் போய் விட்டான்.

அந்த ஒரு நாளில், ப்ரியா என்ற ஒரு பெண்ணை தான் காதலிப்பதாக அரவிந்த் சொன்னான். ப்ரியா தன்னுடன் கோவையில் எம்பிபிஎஸ் படித்து பிறகு சென்னையில் எம்.எஸ் படிக்கிறாள் என்றும் கூறினான். அவளோடு தன் வாழ்வை அமைத்து கொள்ள விரும்புவதாகவும் மெல்லிய குரலில் கூறினான். “என் காதுல ஈயத்தை காச்சி ஊத்திடுடா… காதலிக்கறேன்னுலாம் சொல்லாதடா… அதையெல்லாம் தாங்கற சக்தி எனக்கு இல்ல டா” என்று கண் கலங்கி சோகமாகி தன் எதிர்ப்பை காட்டினார் சேஷாத்ரி. அம்மா அவா யாரு? என்ன குடும்பம், என்ன கோத்திரம் என்று விசாரிக்க அவர்களுக்கு அடுத்த இடி விழுந்தது. அப்பா பெயர் அய்யனார், எஸ்பிஐ பேங்க்ல மேனேஜர். அம்மா காளீஸ்வரி. சொந்த ஊர் மதுரை பக்கத்தில் மேலூர். ” என்னடா? ரிஸர்வேஷன்ல பேங்க் வேல வாங்குன அப்பன். ட்வெல்த்தில ஜஸ்ட் பாஸ் ஆகி ரிஸர்வேஷன்ல டாக்டர் ஆன பொண்ணு. அவங்க கூட சம்மந்தம் பண்ணனுமா? ஏண்டா இவ்ளோ கேவலமா போய்ட்ட நீ? நாங்க உனக்கு நல்ல பொண்ணு பாக்க மாட்டோமாடா? அதுக்குள்ளே என்னடா அவசரம்?” என்று கத்திக் கொண்டே இருந்தார் அப்பா. ” இல்லப்பா அவளும் என் மார்க் தான்ப்பா ட்வெல்த்தில…. ஒரே கட் ஆப் மார்க் தான் ப்பா” என்று பதில் சொன்னான். ” ஓ.. அதனால .. நாய குளிப்பாட்டி நடு வீட்ல வெக்கணுமா? உனக்கு சமமா மார்க் எடுத்துட்டா? நம்ம கூட சம்மந்தம் பண்ணனுமா? கண்ட குடும்பமும் நம்மளும் ஒண்ணா?” என்று அப்பாவின் உக்கிர அவதாரத்தை அன்றுதான் அரவிந்த் பார்த்தான். அம்மா எப்போதும் போல தன் சோகத்தை கண்ணீரால் வெளிப் படுத்தினாள். வார்த்தைகள் வளர்ந்து கொண்டே போயின. தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி, ஒரு கட்டத்தில் கோபம் கொப்பளிக்க “உனக்கும் இந்த வீட்டுக்கும் சம்மந்தம் இல்ல போடா ” என்று எல்லா உணர்ச்சிகளையும் கொட்டித் தீர்த்து விட்டார்.

விஷயம் பெரியப்பாவுக்கு தெரிந்தது. அக்காவுக்கும் அத்திம்பேருக்கும் தெரிந்தது. “அரவிந்த் இப்படி பண்ணுவான்னு நெனச்சி கூட பாக்கல டா” என்று போனிலேயே பெரியப்பாவின் குரல் தழுதழுத்தது. “கொஞ்ச நாள் ஆரப் போடு … நீ இத பத்தி எதும் பேசிக்காத அவனாண்ட” என்று அண்ணனிடம் இருந்து சேஷாத்ரிக்கு அறிவுரை வந்தது. அவ்வப்போது அரவிந்திடம் போனில் பேசும்போது சேஷாத்ரிக்கு வார்த்தைகள் நீளும். அம்மா சரியாக பேசுவதை நிறுத்தி விட்டார். அப்படியே பேசினாலும் ” நான் வளத்த கிடா.. என்னையே முட்டுது.. எல்லாம் நான் செஞ்ச பாவம்” என்று சுய பரிதாபத்தை அரவிந்திடம் கொட்டுவாள்.

அப்பா ஒரு பக்கம் “கிளிக்கு றெக்கை மொளைச்சுடுத்து.. நீ பெரிய மனுஷன் ஆகிட்ட” என்று அவ்வப்போது பேச்சில் குத்திக் கொண்டே இருப்பார். நாட்கள் ஓடிக் கொண்டே இருந்தன.

அக்காவையும் அத்திம்பேரையும் ஒரு நாள் காபி ஷாப்பிற்கு வரவழைத்து ப்ரியாவை அறிமுகப் படுத்தினான் அரவிந்த். “ப்ரியா.. கவலை படாத.. இவங்க அப்பா அப்படியே விட்ர மாட்டார். நாங்களும் விட்டுட மாட்டோம்… கல்யாணம் பண்ணிக்கறது பெரிய விஷயம் இல்ல.. அதுக்கப்புறம்தான் கஷ்டமே இருக்கு. எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிக்கணும். பாப்போம்.. ‘ என்று ப்ரியாவுக்கு ஆறுதலும் அதே நேரத்தில் எச்சரிக்கையும் விடுத்தாள். அப்பா அம்மா பேசும் வார்த்தைகளை அக்காவிடம் சொல்லி வருத்தப் பட்டான் அரவிந்த். “இந்த டயலாக் லாம் கௌரவம் படத்துலயே கேட்டாச்சுன்னு சொல்லு” என்று அத்திம்பேர் சொல்ல அனைவரும் சிரித்தனர். இந்த மாதிரி லேசான மனநிலை வருவதற்கே அரவிந்திற்கு இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. போன வருடம் பாட்டி இறந்து போனதால், சில மாதங்கள் யாருமே கல்யாண விஷயம் பற்றி பேச வில்லை.

பெரியப்பா நிதானமாக அரவிந்திடம் ஒரு உரையாடல் நடத்தினார். “கண்ணா.. நீ நல்ல பையன் டா.. உனக்கு எல்லாம் தெரியும்.. இருந்தாலும் என் மனசுக்கு படறத சொல்றேன்… நம்மாத்து பழக்க வழக்கம் வேற.. அவா பழக்க வழக்கம் வேற.. கல்யாணத்துக்கு அப்புறம் நீ காலேஜ்ல இருந்த மாறி வாழ்க்கை இருக்காது. நாம பருப்பு சாதம், நெய், தயிர் சாதம்னு சாப்பிடறவா .. அவனுங்க முட்டை, மீனு, ஆடு கோழின்னு சாப்புட்றவனுங்க… நாம ஆவணி அவிட்டம், வரலஷ்மி நோன்பு, நவராத்திரி னு இருப்போம், அவனுங்க கிடா வெட்டி பொங்கல் வெச்சி, கோழி அடிச்சி குழம்பு வெச்சி திருவிழா எடுக்கற பயலுக… அப்பா அம்மாவுக்காக சொல்லல.. உன் நல்லதுக்காக சொல்றேன். இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வருமான்னு யோசிச்சிக்கோ கண்ணா..” என்றார் தாழ்மையான குரலில். “பெரியப்பா.. நான் நன்னா யோசிச்சிட்டேன்.. அவளை எனக்கு புடிச்சிருக்கு. என்னையும் அவளுக்கு புடிச்சிருக்கு. ரெண்டு பேரும் டாக்டர். எங்க கேரியருக்கும் நல்லது. நம்மாத்துல அவ முட்டை, மீனு சாப்பிட மாட்டா, சமைக்கவும் மாட்டா. வேணும்னா அவ ஹோட்டல்ல சாப்பிடட்டும்… இந்த வருஷத்துக்கு ஒரு முறை வர்ற பண்டிகைக்கு நம்மாத்துல என்ன செய்யணுமோ அதச் சொல்லிக் கொடுத்தா அவ செய்வா.. அவ்ளோதான் . சிம்பிள் பெரியப்பா” என்றான் தீர்க்கமாக.

இப்படியே பல்வேறு நிலைகளில் மறுபடியும் மறுபடியும் நிறைய உரையாடல்கள், வாக்குவாதங்கள், அவன் காதலை வீட்டில் சொல்லி என மூன்று வருடங்கள் ஓடி விட்டது. அவனுக்கும் ப்ரியாவுக்கும் ஒரே மருத்துவமனையில் வேலையும் கிடைத்து விட்டது. அக்காவும் அத்திம்பேரும் சேஷாத்ரியிடமும் அரவிந்த் அம்மாவிடம் நிறைய உரையாடல்கள் நிகழ்த்தினர். வேறு வழியில்லாமல் அவர்கள் திருமணத்திற்கு சேஷாத்ரி சம்மதித்தார். அடுத்த பிரச்சினை திருமணத்தை எப்படி செய்வதென்பது. அரவிந்தின் தாய் மாமா, பெரியப்பா, கடலை மிட்டாய் அங்கிள், பெரியம்மா, பெற்றோர், குடும்பத்தில் உள்ள மற்ற பெரியோர்கள் என நிறைய தொலைபேசி அழைப்புகளும், விவாதங்களும் நடந்து கொண்டே இருந்தன. சில விஷயங்கள் இவன் காதில் விழும். சிலது விழாது. விழுந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருக்கவும் கற்றுக் கொண்டான்.

“மாப்ள.. உங்க அப்பா அம்மா ஒத்துக்கிட்டதே பெருசு. அவங்க சொன்னபடியே கல்யாணம் பண்ணிடலாம். என் பொண்ணு சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்” என்று இரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட்டார் அய்யனார். அதை அப்படியே சேஷாத்ரியிடம் சொன்னான் அரவிந்த். “தெரிஞ்சிக்கோ. அவனுக்கு தெரிஞ்சது கூட உனக்கு தெரியல..” என்கிறார். ஒரு நாள், அரவிந்தின் அப்பா, அம்மா, அக்கா அத்திம்பேர் முன்னிலையில் பெரியப்பா திருமண செய்முறையை விளக்கினார். அவர் நிறைய சாஸ்திரிகளிடம் பேசி விட்டு தான் சொல்லப்போவதுதான் உசிதமான முறை என்றும் கூறினார். “அதாவது நம்ம சாஸ்திரப்படி முகூர்த்தத்திற்கு முன்ன கன்னிகாதானம் பண்ணுவோம். பொண்ணோட அப்பா அம்மா எங்க மகளை இவ்ளோ நாள் நான் நல்லபடியா வெச்சிருந்தொம். நல்லபடியா உங்க கிட்ட ஒப்படைக்கறோம்னு பொண்ண பெத்தவா பையனுக்கு அந்த பொண்ண தானம் கொடுக்கறது. அப்படி பண்றச்சே.. வேற மனிஷால தானம் குடுக்கப்படாது. அதனால கல்யாணியோட தம்பி, முகூர்த்தத்திற்கு முந்தய நாள், யாரும் வர்றதுக்கு முன்ன, காத்தாலேயே, ப்ரியாவை சுவீகாரம் எடுத்துக்கறது. சுவீகாரம் எடுத்துண்டு, மறுநாள் முகூர்த்தத்துல சுவீகாரம் எடுத்துண்டவா தம்பதி சகிதமா மனைல உக்காந்து கன்னிகாதானம் பண்ணலாம். அந்த பொண்ணோட அப்பா அம்மா மனைல உக்கார வேண்டாம். மத்தபடி வேற ஒன்னும் பெரிசா இல்லை. நம்ம சாஸ்திரப்படி நடக்கட்டும்னு அவாட்ட சொல்லிடு ” என்று பொறுமையாக சொன்னார்.

ப்ரியாவிடமும், ப்ரியாவின் பெற்றோரிடமும் அரவிந்த் இந்த ஏற்பாட்டை சொல்லிவிட்டான். “அதாவது மாப்ள … நாங்கல்லாம் உங்க ஆளுக கூட சமமா உக்கார கூடாது. அதனால உங்க தாய் மாமா என் பொண்ண தத்து எடுத்துட்டு அவரே மனைல உக்காந்து கல்யாணம் பண்ணி வெப்பாரு. பொண்ண பெத்த நாங்க யாரோ மாதிரி அத வேடிக்கை பாக்கணும். அதான…” என்று தன் பேச்சை நிறுத்தி விட்டு “ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ‘ என்று உம் கொட்டிக் கொண்டிருந்தார். ‘அங்கிள் தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு வேற என்ன செய்றதுன்னு தெரியல’ என்ற சங்கடப்பட்டான் அரவிந்த். “சரி… அப்டியே செஞ்சிட சொல்லுங்க. எல்லாம் என் பொண்ணுக்காக.. உங்களுக்காக.. நீங்க சந்தோஷமா இருந்தா போதும்”. ஆனால் இதில் ப்ரியாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. ‘ஏன்…. என் அப்பா அம்மா என்ன செத்தா போயிட்டாங்க? அவங்க இருக்கும்போது என்ன ஏன் உங்க மாமா தத்து எடுக்கணும்? … அது என்ன தானம் கொடுக்கறது? நான் என்ன ஆடா? மாடா? என்ன தானம் கொடுக்கறதுக்கு ‘ என்று கோவமும் அழுகையும் சேர அரவிந்திடம் கத்தினாள். ப்ரியாவின் கேள்விகளுக்கு அரவிந்திடம் எந்த பதிலும் இல்லை. முகூர்த்தத்திற்கு முந்தய நாள், ப்ரியாவும், அரவிந்தின் தாய் மாமாவும் அத்தையும் சாஸ்திரிகளும் மனையில் அமர்ந்து ப்ரியாவை சுவீகாரம் எடுத்துக் கொண்டதை கீழே பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர் ப்ரியாவின் பெற்றோர். முகூர்த்த நேரத்தில் தாலி காட்டுவதற்கு முன்பு அத்திம்பேர் அய்யனாரிடம் சென்று “சார் .. நீங்க மேல வாங்க ” என்று அழைத்தார். “இல்ல தம்பி.. நான் இங்க இருந்தே பாத்துக்கறேன்” என்று மறுத்து விட்டார். அய்யனாரும் காளீஸ்வரியும் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, ப்ரியா அரவிந்தின் தாய்மாமா மடியில் அமர்ந்து கொள்ள அரவிந்த் தாலி காட்டியதை கண்கள் குளமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்படிதான் ப்ரியா -அரவிந்த் திருமண வாழ்க்கை தொடங்கியது. “இங்க பாரும்மா … எங்காத்துல என்ன செய்றாமோ, அதே மாதிரி அங்க வெச்சுக்கணும். கொஞ்சம் சுத்த பத்தமா இருக்கணும். குளிக்காம சமைக்க படாது, தூரமானா தனியா இருக்கணும்…….” என்று அவ்வப்போது வீட்டின் விதிமுறைகளை சொல்லிக் கொண்டே இருப்பார் கல்யாணி. “உங்களுக்குல்லாம் இது பழக்கம் இருக்காது ” என்று காயப் படுத்திக்க கொண்டே இருப்பார் சேஷாத்ரி. அத்தனைக்கும் ஆறுதல் அவர்களின் காதல் மட்டுமே. அரவிந்தின் பெற்றோர் அவ்வப்போது கொடுக்கும் காயங்களைத் தவிர்த்து பார்த்தால் அது அவர்களது கனவு வாழ்க்கை. பேத்திக்கு மதுரை மீனாட்சியம்மனின் பெயர் ‘மீனா’ என்று பெயர் வைக்க காளீஸ்வரிக்கு ஆசை. ஆனால் சேஷாத்ரி சொன்னது போல் கர்நாடக சங்கீத ராகமான “சஹானா” தான் குழந்தைக்கு பெயரானது. இப்படி பதில்களற்ற கேள்விகளோடும், அழுகையோடும், அடிபணிதலோடும், மனக்காயங்களுடனும் தான் அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்ததது. வேண்டாத மருமக கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்பதைப் போல அவள் என்ன செய்தாலும் என்ன சொன்னாலும் ஒரு குறை கூறும் தொலைபேசி அழைப்பு அரவிந்திற்கு சென்று விடும். ‘உன் பொண்டாட்டி இப்டி சொன்னா.. இப்படியா பேசறது பெரியவங்க கிட்ட? நல்ல குடும்பமா இருந்தா மரியாதை தெரியும்’ என்று வசவுகள். இதற்கிடையில்தான் மூன்று வருட வரலட்சுமி நோன்பு திருச்சியில் முடிந்தது. அம்மா அப்பா வீட்டிற்கு போவது என்பது ப்ரியாவிற்கும் அரவிந்திற்கும் ஏதோ பெரிய பரீட்சை எழுதுவது போல பயமாக இருக்கும். ‘டேய், நான் என் பைனல் எக்ஸாமுக்கு கூட இப்படி பயந்தது இல்லடா… உங்க வீட்டுக்கு வர்றது அவ்ளோ பயமா இருக்கு’ என்று ஒவ்வொருமுறை திருச்சி செல்லும் போதும் ப்ரியா அரவிந்திடம் சொல்வாள். ஒன்றரை வயது சஹானாவிடம் “உங்க அம்மா என்னாண்ட பேசாதனு சொன்னாளா? பாட்டி பேச்சு ‘கா’ விட சொன்னாளா?” என்று குழந்தையிடம் கல்யாணி பேசும்போது, “நான் ஏன் அத்தை அப்படியெல்லாம் சொல்ல போறேன்.. குழந்தை கிட்ட போய் இப்படி பேசாதீங்க” என்று ப்ரியா குறுக்கிட்டாள். “என் பேத்தி கிட்ட நான் பேச கூட கூடாதாம்ப்பா… உன் பொண்டாட்டி சொல்லிட்டா” என்று அரவிந்திடம் சொற்கள் வந்திறங்கியது.

சஹானா குட்டியை பார்த்துக் கொள்ள ப்ரியாவின் அம்மா காளீஸ்வரி வந்து இவர்களுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். ‘உனக்கு அவாதான் முக்கியம்.. நாங்கல்லாம் இனி தேவையில்லை.. அங்க வேலைக்காரி நம்மவா இல்ல.. உன் பொண்டாட்டியும் அப்படி தான். அவ அம்மா கேக்கவே வேணாம். அந்த கேடு கெட்ட ஜென்மங்களுக்கு நடுவுல என் புள்ள.. என் பேத்தி… எப்படி ஒழுங்கா வளரும்?… எல்லாம் தலை எழுத்து.’ என்று சேஷாத்ரி சொல்ல. ‘அப்பா.. ஒழுங்கா பேசுப்பா.. நல்லா இல்ல நீங்க பேசறது’ என்று அர்விந்த் கோவம் கொண்டான். ‘ஓ.. துரைக்கு அவங்கள சொன்னா கோவம் வருதா.. அதானடா உண்மை.. அசிங்கத்த அசிங்கம்னு சொல்லாம வேற என்ன சொல்றது?’ என்று வாக்குவாதம் முற்ற, அலைபேசி அழைப்பை துண்டித்தான் அரவிந்த். இப்படியான வார்த்தைகளும் சுடுசொற்களும் அதிகரித்தன. காயப்படுவதும் அதிலிருந்து மீள்வதும், அரவிந்திற்கும் ப்ரியாவிற்கும் வழக்கமான ஒன்றாகிப் போனது.

ஒரு நாள் காலை பதினோரு மணிக்கு ட்யூட்டியில் இருந்த ப்ரியாவை சேஷாத்ரி தொலைபேசியில் அழைத்து பேசிக் கொண்டிருக்கையில் மொபைல் போன் சிக்னல் இல்லாமல் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. வேலைப்பளுவால் ப்ரியாவும் மறுபடியும் அழைக்கவில்லை. அன்று இரவு ஒன்பது மணிக்கு ப்ரியாவை அழைத்த சேஷாத்ரி “கொஞ்சமாவது மரியாதை தெரியுதா உனக்கு? படிச்சா மட்டும் போதாது. இதுக்குதான் கண்ட குடும்பத்தோட சம்மந்தம் வேணாம்டானு சொன்னேன். அவன் கேட்டானா? … பேசிட்டிருக்கும்போது போன கட் பண்ணத்தான் சொல்லி குடுத்திருக்காங்களா உங்க வீட்ல?” என்று போனை எடுத்ததும் வார்த்தைகள் கொட்டத் தொடங்கின. ட்யூட்டி முடிந்து பசியுடன் வீடு சேர்ந்த ப்ரியாவிற்கு கோவம் கிர்ர்ர் என்று ஏறியது. ‘மாமா நீங்க கண்டபடி பேசினா.. என்னால பதில் சொல்ல முடியாது மாமா’ என்று சொல்லி விட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டு அரவிந்திடம் வந்து ஓ வென்று அழுதாள்.

மறுநாள் காலை அய்யனாரிடம் இருந்து ப்ரியாவிற்கு அழைப்பு வந்தது, “என்னம்மா மாமாவ இப்படி மரியாதை இல்லாம பேசிட்ட? கண்டவன் கிட்டலாம் பதில் சொல்ல முடியாதுன்னு சொல்லலாமா? உன்ன விட வயசுல பெரியவர் தான?” என்றார் ஒரு எரிச்சலான குரலில். “இல்லப்பா.. கண்டபடி பேசினா பதில் சொல்ல முடியாதுன்னு தான்பா சொன்னேன். எனக்கு ஒரே பசிப்பா.. பசில அப்டி சொல்லிட்டேன் பா…. ஏன்ப்பா என்ன சொன்னாரு?” “இல்லமா… விடு.. அரவிந்த் எங்க?” “ட்யூட்டிக்கு போய்ட்டாருப்பா.. எனக்கு இன்னைக்கு மதியம் ட்யூட்டி” …. “சரிம்மா.. நீ ரெஸ்ட் எடு . நான் அப்புறம் பேசறேன் ”

“மாப்ள.. எப்படி இருக்கீங்க?”…. ‘ம்ம்ம் நல்லா இருக்கேன் அங்கிள்.. நீங்க எப்படி இருக்கீங்க’…. “அப்பா நேத்து போன் பண்ணாரு.. ரெண்டு மணி நேரம் பேசனாரு…. ரொம்ப அசிங்கப் படுத்திட்டாரு ப்பா… எனக்கு ரிஸர்வேஷன்லதான் வேலை கிடைச்சது.. நான் வேலை பாத்துதான சம்பளம் வாங்குறேன்? சும்மாவா சம்பளம் வாங்கறேன்? என் பொண்ணுக்கு மார்க் இல்லாமலா மெடிக்கல் சீட் கிடைச்சது? உங்கள மாறி குடும்பத்துல சம்மந்தம் பண்ணிட்டேனேன்னு அசிங்கமா இருக்குனு சொல்றாரு. அப்படி நாங்க என்ன பண்ணிட்டோம் மாப்ள.. நாங்க பொறந்தது தப்பா? இல்ல படிச்சது தப்பா?” என்று குரல் உடைந்து பேசினார். “அங்கிள்.. அப்பாக்காக நான் சாரி கேட்டுக்கறேன் அங்கிள். அப்பா அப்படி பேசி இருக்க கூடாது. மனசுல ஏதும் வெச்சுக்காதீங்க அங்கிள்.. நீங்க ஏன் அங்கிள் ரெண்டு மணி நேரம் அவர் பேசறதை கேட்டீங்க? போன வெக்க வேண்டியதுதானே?”  “ப்ரியா ஏதோ மரியாதை இல்லாம பேசிட்டானு சொன்னாரு. சரி.. அவர் மனசுல இருக்கறதுல்லாம் வெளிய வரட்டும்னுதான் கேட்டேன். ஆனா இவ்ளோ அசிங்கப் படுத்துவாருன்னு எதிர்பாக்கல மாப்ள” என்றார். “சாரி .. அங்கிள் மனசுல ஏதும் வெச்சுக்காதீங்க ” … “நீங்க ஏன் சாரி சொல்றீங்க…. எதோ என் ஆதங்கத்தை உங்ககிட்ட சொன்னேன். சரி .. வேலைய பாருங்க மாப்ள. அப்புறம் பேசறேன்”.

அரவிந்த் கூனிக் குறுகி போயிருந்தான். அப்பா செய்த அசிங்கத்தை விட, அய்யனார் அதற்கு பதிலேதும் பேசாமல் இருந்த அவரது அமைதி அரவிந்தை தொந்தரவு செய்தது. ஹீரோ பேனா திருடியதற்கும், ஹோம்வொர்க் இல்லை என்று பொய் சொன்னதற்கும் மகன்களை தண்டித்த அப்பாவால், எப்படி சக மனிதர்களை இழிவு படுத்தி பேச முடிகிறது என்று ஒரு பக்கம் வியப்பாகவும் இருந்தது.  இதை அப்பாவிடம் போனில் பேச வேண்டாம் என்று நினைத்து அந்த கோவத்தை தேக்கி வைத்துக் கொண்டு நேரில் பேசலாம் என்று அப்பாவிடமோ அம்மாவிடமோ ஒரு வாரமாக போன் பேசவில்லை. அவர்களும் பேசவில்லை. ஒரு வாரம் கழித்து தனியாக காரில் திருச்சிக்கு புறப்பட்டான். அப்பாவிற்கு தன் தவறை உணர்த்தி இனிமேல் இது போல் பேசாமல் இருக்க கொஞ்ச நேரம் பேசிவிட்டு வரலாம் என்று கிளம்பினான்.

வீட்டு வாசலில் அரவிந்த் தன் பெற்றோருக்கு வாங்கி கொடுத்த கார் நின்று கொண்டிருந்தது. “கார் உங்களுக்குத்தாம்ப்பா..” என்று சொன்னதும், அப்பா தன்னை கட்டி அணைத்த நாளும் நினைவுக்கு வந்தது. “வாடா.. வழி தெரிஞ்சதா வீட்டுக்கு.. மூணு மாசம் ஆச்சு வந்து.. குழந்தையை அழைச்சுட்டு வரலையா? உன் பொண்டாட்டி வரலையா?” என்று ஒன்றும் நடக்காதது போல் பேசினார். வீட்டில் கடலை மிட்டாய் அங்கிளும் இருந்தார். எதுவும் பேசாமல், அம்மா சமைத்து வைத்திருந்த மதிய உணவை சாப்பிட்டு விட்டு சோபாவில் உட்கார்ந்தான். ‘ஏன்ப்பா.. அங்கிள் கிட்ட அப்படி கன்னாபின்னானு பேசினீங்க?”….. ” ஓ .. அத கேக்க தான் வந்தியா நீ? அம்மா அப்பாவை பாக்க வரல?… மாமனாரை சொன்ன உடனே கோவம் பொத்துக்கிட்டு வருதோ” என்று குரலை உசத்திப் பேசினார். “அப்பா.. நீங்க பேசறது தப்பு..”.. ‘ அப்படியே அறைஞ்சுடுவேன் பாத்துக்க.. நீ யார்ரா என்ன தப்புனு சொல்றதுக்கு? நீ டாக்டர்னா… கை நிறைய சம்பாதிச்சிட்டா பெரிய புடுங்கியா? இந்த பேச்செல்லாம் என்னாண்ட வெச்சுக்காத.. வந்துட்டான் கேக்கறதுக்கு” “அப்பா.. இப்படிலாம் பேசாதீங்கப்பா”…. ‘நீ யார்ரா என்ன அதிகாரம் பண்ண? அப்படிதாண்டா பேசுவேன்.. தங்க விக்கிரகம் மாறி உன்ன வளத்தேன்.. நீ போய் குப்பைல விழுந்துட்ட.. என்ன தப்பு சொல்ற யோக்யதைலாம் உனக்கு இல்ல… பொண்டாட்டியையும் வெச்சுட்டு.. அவங்க அம்மாவையும் கூட வெச்சிக்கிட்டு கூத்தடிக்கிற நாய் நீ.. நீ என்ன சொல்றியா?” என்று கேட்டதும்,

ஒரு வாரம் தேக்கி வைத்திருந்த கோபம் அரவிந்திற்கு கொப்பளிக்க, “கம்மினாட்டி … ஏண்டா இப்டி எல்லாம் பேசற ? முட்டாப் பயலே.. உனக்கு அறிவு இருக்கா இல்லையா? என்ன பேசறனு தெரிஞ்சுதான் பேசறியா நீ? .அறிவுகெட்டவனே…… ” என்று தன் அப்பாவை திட்டிவிட்டு, அவர் கன்னத்திலும் முதுகிலும் அடித்து விட்டான். “என்ன திட்றன்னு சொல்லிட்டு உன்னையும் அம்மாவையும் அசிங்கப் படுத்திக்கறடா.. நீதான்டா என்ன வளத்த…” என்று கத்தித் தீர்த்து விட்டான்.

அருகில் வந்த கடல மிட்டாய் அங்கிள், ” சரிப்பா … கோவப் படாத.. அப்பாதான.. விடுப்பா..” என்று சமாதானப் படுத்த, ” அப்பா மாதிரியா அங்கிள் பேசறாரு அவரு?” என்றான் கோபமாக. “ச்சீ …. உனக்கு லாம் நான் புள்ளன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு. உன் முகத்துலயே இனி முழிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு தன் காரை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான். இது நடந்து ஆறு மாதம் இருக்கும். இதற்குப் பிறகுதான் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை. இந்த ஆற்றாமையில்தான் அந்த கரப்பான் பூச்சிகளை ஓட ஓட விரட்டினான்.

இதனால் வந்த பதட்டம் ஞாயிற்றுக் கிழமை மனநிலையை தொந்தரவு செய்தது. சஹானாவுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டே டிபன் சாப்பிட்டான். டிவி பார்த்தான். அவனுக்கு பதட்டம் குறையவே இல்லை. நாட்கள் ஓடின. வரலட்சுமி நோன்பிற்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. தன் பள்ளிக்கால நண்பன் சங்கரிடம் நடந்தவற்றையெல்லாம் ஒரு நாள் தொலைபேசியில் சொன்னான். ‘டேய் நீயாடா இப்படி பண்ண? உங்க அப்பாவ அடிச்சிட்டியாடா?.. என்னால நம்பவே முடியலடா… அவர் பண்ணதும் தப்புதான்… ‘ என்று ஆச்சர்யத்தில் மூழ்கினான் சங்கர். சங்கருக்கு நன்றாக நினைவிருக்கிறது. பள்ளி நாட்களில் ஒரு நாள் சங்கர் ‘ போடா மயிறு” என்று அரவிந்தை திட்டினான். அதற்கு அரவிந்த் ‘டேய்.. அசிங்கமா பேசாதடா’ என்று சங்கரை கண்டித்தான். அந்த அரவிந்த் இப்படி செய்ததுதான் சங்கருக்கு ஆச்சர்யம்.

சில நாட்கள் கழித்து, ஒரு புதன்கிழமை பெரியப்பா போன் செய்தார். தான் மாலை வீட்டுக்கு வருவதாக தெரிவித்தார். அடுத்த வெள்ளிக் கிழமை வரலட்சுமி நோன்பு. விஷயம் பெரியப்பாவிற்கு போயிருக்கும். அவர் வருவது சமாதானப் படுத்தி நோன்பிற்கு அழைப்பதற்காகத்தான் இருக்கும். இல்லை அம்மா அப்பாவும் உடன் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று ஊகித்தான் அரவிந்த். சுமார் எட்டு மணிக்கு பெரியப்பா வீட்டுக்கு வந்தார். சஹானா குட்டிக்கு ஒரு பெரிய பொம்மையை கையில் கொடுத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். சோபாவில் அமர்ந்தவர் அவசரமாக தன் பையில் வைத்திருந்த கவரை அரவிந்திடம் கொடுத்துவிட்டு, “கண்ணா.. கீழ கார் வெய்ட் பண்றது.. அக்காவாத்துக்கு போனும். இத கொடுக்கத்தான் வந்தேன்’ என்று சொல்லி விட்டு அவசரமாக கிளம்பி விட்டார். எவ்வளவு வற்புறுத்தியும் டிபன் கூட சாப்பிடாமல் போய் விட்டார். அந்த கவரை திறந்த அரவிந்த் அதிலிருந்த வெள்ளி வரலட்சுமி முகம் ஒன்றை கையில் எடுத்தான். அது ப்ரியா அந்த வீட்டு மருமகளாக கொண்டு வந்தது. அந்த முகத்தையும் சேர்த்து மூன்று வெள்ளி வரலட்சுமி முகத்தை வைத்துதான் திருமணத்திற்கு பிறகு நடந்த வரலட்சுமி நோன்புகள் நடந்தன. இந்த வருடம் அந்த முகத்தை பிரித்தது போல அரவிந்தையும் அந்த குடும்பத்திலிருந்து பிரித்து விட்டார்கள். தன் தலையை தூக்கிப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ப்ரியாவைப் பார்த்தான். ப்ரியா அரவிந்தின் கண்ணீர் துளிகளை தன் கைகளால் துடைத்து விட்டாள். இப்போது ப்ரியாவின் முகம் அந்த வரலட்சுமி முகம் போல் அரவிந்துக்கு தெரிந்தது.


நா.ஞானபாரதி                                                                                       

[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.