வாஸ்லவ் ஸ்மில்: வளர்ச்சி முடிவுக்கு வரவேண்டும். நம்முடைய பொருளாதார நண்பர்கள் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை

வாஸ்லவ் ஸ்மில் (Vaclav Smil) கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த மனிடோபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேன்மைதங்கிய பேராசிரியர் ஆவார். சுற்றுச்சூழல், மக்கள்தொகை, உணவு, சக்தி ஆகியவை குறித்த இவரது நூல்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சீரான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ந்துவருகிறது. இப்போது இவர் வளர்ச்சி குறித்த வரலாறு, புள்ளியியல் பகுப்பாய்வு ஆகியவற்றில் உலக அளவில் முன்னணி சிந்தனையாளாராக அறியப்படுகிறார். சிலர் அடுத்த ஸ்டார் வார்ஸ் திரைப்படத்துக்காகக் காத்திருப்பது போல இவருடைய அடுத்த நூலுக்காகத் தான் காத்திருப்பதாக பில் கேட்ஸ் கூறியிருக்கிறார். இவருடைய சமீபத்திய நூல், வளர்ச்சி: நுண்ணுயிரிலியிருந்து பெருநகரங்கள் வரை (Growth: From Microorganisms to Megacities). இந்நூல், மனிதகுலத்தின் முடிவற்ற விரிவாக்கம் ஏன் முடிவுக்கு வரவேண்டும் என்பது பற்றியதாகும்.

ஆர்வலர்களுக்கெல்லாம் ஆர்வலர் நீங்கள். உங்களைப் போல் வேறெந்தக் கல்வியாளாரும் எண்களைத் திறம்படக் கையாள முடியாது. இருபதாம் நூற்றாண்டு முழுமையும் அமெரிக்கா செய்ய முடிந்ததைவிட 2003-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மூன்று வருடங்களிலும் அதிகமான அளவுக்கு சிமெண்டை சீனா கொட்டிவருகிறது என்று வியப்பூட்டுமொரு புள்ளிவிவரத்தைத் தோண்டியெடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். முதுகெலும்புள்ள அனைத்து வன விலங்குகளின் உலர் திரளான (dry mass) 10 மெட்ரிக் டன்னோடு ஒப்பிடும்போது உலகிலிருக்கும் அனைத்து மனிதர்களின் உலர் திரள் 125 மெட்ரிக்டன் என்று 2000-மாவது ஆண்டில் கணக்கிட்டுச் சொன்னீர்கள். ஆரோக்கியமான வனம் மற்றும் மூளையின் வளர்ச்சி வடிவத்தோடு ஆரோக்கியமற்ற உடல் பருமனையும் சுற்றுப்புறத்தில் இருக்கும் கார்பன் டை–ஆக்சைடின் வளர்ச்சி வடிவத்தையும் ஆராய ஆரம்பித்திருக்கிறீர்கள். இது போன்ற ஆழமான பிரச்சனைகளுக்குள் செல்லுமுன் நீங்கள் உங்களை ஒரு ஆர்வலராகப் பார்க்கிறீர்களா?  

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உலகத்தையும் நிலத்தையும் அது இருக்கும் நிலையிலேயே விவரிக்கும் பழமையான ஒரு அறிவியலாளர் நான் அவ்வளவுதான். வாழ்க்கை நன்றாக இருக்கிறது அல்லது ரயில்கள் வேகமாக ஓடுகின்றன என்று சொல்வது மட்டும் போதாது நீங்கள் எண்களைக் கொண்டுவர வேண்டும். எண்களோடு நான் சொல்வதால் நான் சொல்வதை உண்மையென மக்கள் நம்புவதோடு அதன் மீது விவாதம் செய்வதும் சிரமமாக இருக்கிறது.

வளர்ச்சி மிகப் பெரிய புத்தகம் — இது உலகளவில் பல விஷயங்கள் பற்றி கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஆராய்ந்து நீங்கள் செய்த பல ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் வகையில் 2,00,000 சொற்களைக் கொண்ட தொகுப்பாகும். இதை நீங்கள் உங்களுடைய மகத்தான பணி என நினைக்கிறீர்களா? 

வளர்ச்சி பற்றி மிகப் பெரிய நூல் எழுத வேண்டுமென்றே ஆரம்பித்தேன். ஒரு வகையில் இது இயலாததும் நியாயமற்றதும் ஆகும். இதிலிருந்து பல நூல்களை மக்கள் எடுத்துக் கொள்ள முடியும் – மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி பற்றியும் மக்கள்தொகை பற்றியும் பொருளாதார நிபுணர்கள் வாசிக்க முடியும்; உயிரிகள் மற்றும் மனித உடல்களின் வளர்ச்சி பற்றி உயிரியலாளர்கள் வாசிக்க முடியும். ஆனால் நான் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொடுக்க விரும்பினேன். இதனால் ஒன்றையொன்று தவிர்க்க முடியாமல் எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதையும் அவையெல்லாம் எப்படித் தெளிவான ஒன்றை – வளர்ச்சி முடிவுக்கு வரவேண்டும் – பகிர்ந்துகொள்கின்றன என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ள முடியும். நம்முடைய பொருளியலாள நண்பர்கள் இதைத் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

சீன நாட்டின் சுற்றுச்சூழல் குறித்து நான் நூலொன்றை எழுதிக் கொண்டிருந்தபோது உங்களுடைய செயல்பாடுகள் எனக்கு முதன் முறையாகத் தெரிய ஆரம்பித்தன. திரும்பத் திரும்ப உங்களுடைய தரவுகளைப் பார்த்தேன் – அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்குச் சந்தேகத்துக்குரியவை என்பதை அது அடிக்கடி வெளிப்படுத்தியது. இதனால் நீங்கள் ‘பொய்யைக் கொன்றவர்’ (slayer of bullshit) என அறியப்பட்டீர்கள். இதுதான் உங்களது இலக்கா?

சோவியத் என்கிற தொகுதியிருந்த காலகட்டத்தில் நான் செக்கோஸ்லோவாக்கியாவில் வளர்ந்தேன். என் வாழ்க்கையில் சுமார் 26 ஆண்டுகளை அந்தத் தீயப் பேரரசில் கழித்தேன், முட்டாள்தனத்தை நான் சகித்துக் கொள்வதில்லை. நாளை பிரகாசமாக இருக்கும், மனித இனத்துக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்கிற கம்யூனிசப் பிரச்சாரம் என்னைச் சுற்றி வலம்வந்து கொண்டிருந்த தருணங்களில் நான் வளர்ந்தேன். நான் அதை விமர்சித்து வந்தேன். அவை என்னுடைய கருத்துகள் (opinion/views) இல்லை. அவையெல்லாம் உண்மைகள் (facts). நான் கருத்துகளை மட்டும் எழுதாமல் உண்மைகளின் அடிப்படையிலேயே முழுவதையும் எழுதுவதுண்டு.

நம்முடைய பிரச்சனைகள் அனைத்துக்கும் கணினி மூலம் தீர்வு கண்டுவிடலாம் எனச் சொல்லிவரும் தொழில்நுட்ப-நம்பிக்கையாளர்களையும், முடிவற்ற முதலாளித்துவ வளர்ச்சிக்கான வாக்குறுதியை அளித்துவரும் பொருளாதார நிபுணர்களின் அமர்க்களமான திட்டமிடல்களையும் நீங்கள் தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள். பல நாடுகளில், பொருள்களின் வளர்ச்சி மேலோங்கியிருப்பதைவிட அதிகமாக கீழ்நோக்கி இருக்கிறது, இது ‘சுற்றுச்சூழல் அமைப்பு மீது மனித இனத்தால் விளையும் (anthropogenic) அவமதிப்பு’க்கு வழிவகுக்கிறது என நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இது நியாயமான கருத்தா?

ஆமாம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். உயிர்க்கோளம் (biosphere) சரியான நிலையில் இல்லையெனில் இந்தக் கிரகத்தில் உயிர் எதுவுமிருக்காது என்பது எளிதாகப் புரிந்துக் கொள்ளக் கூடியதாகும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதை மட்டுந்தான். பொருள் நுகர்வு மூலம் நாம் வளர்ச்சியைக் குறைக்கலாம் என பொருளியலாளார்கள் கூறுவார்கள். ஆனால் அது சுத்த முட்டாள்தனமாகும். வரலாற்றுச் சான்றுகளிலிருந்து இதற்கான தெரிவுகள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. வீழ்ச்சியை நீங்கள் நிர்வகிக்க முடியாமல் அதற்கு அடிபணிந்தால் ஒன்றுமில்லாமல் போய்விடும். அதை நிர்வகிக்கச் சில வழிகளைக் கண்டுபிடிப்பதே சிறந்த நம்பிக்கையாகும். 50, 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட நாம் இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம், ஏனென்றால் நம்முடைய ஞானமும் விரிவடைந்திருக்கிறது. நாம் முயன்றால், நம்மால் ஏதாவதொரு செயல்பாட்டுக்கு வரமுடியும். அது வலியற்றதாக இருக்காது, ஆனால் அந்த வலியைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியமுடியும்.

அப்படியென்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி குறித்த நம்முடைய எதிர்பார்ப்புகளை நாம் மாற்றிக் கொள்வது தேவையா?

ஆம், நீங்கள் சந்தோஷத்தை எப்படி வரையறை செய்தாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது வாழ்க்கை, சமநிலை, நல்வாழ்வு குறித்த உணர்வு ஆகியவற்றின் மீதான உங்களுடைய திருப்தியை அதிகரிக்கப் போவதில்லை என்பது நாம் காலங்காலமாக அறிந்ததுதான். ஜப்பானைப் பாருங்கள். அவர்கள் பணக்காரர்கள் ஆனால் இவ்வுலகில் சந்தோஷமில்லாமல் வாழும் மக்களில் அவர்களும் இருக்கிறார்கள். அப்படியென்றால் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் 10 பேர்களில் எப்போதும் ஒருவராக இருப்பவர்கள் யார்?  பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். அந்த நாடு ஏழ்மையாலும், சூறாவளிகளிலும் பாதிக்கப்பட்டாலும் அந்நாட்டு மக்கள் அருகிலிருக்கும் ஜப்பானியார்களைவிட சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நிலையை நீங்கள் அடைந்துவிட்டால், இறப்புவிகிதம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவற்றில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் பலன்கள் குறைய ஆரம்பித்துவிடும்.

இந்த நிலைதான் தங்கத்தரம் (golden standard) கொண்டதா? வளர்ச்சியானது வீரியம் மிக்கதாவும், புற்றுநோயாகவும், பெருத்தும், சுற்றுச்சூழலுக்கு அழிவாகவும் மாறுவதற்குத் தள்ளுவதைவிட இந்த நிலைதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமா?

அப்படித்தான். அப்படியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஆற்றலையும், பொருள் நுகர்வையும் பாதியாகக் குறைத்துக் கொள்ளும்பட்சத்தில் அது நம்மை 1960-களில் இருந்த நிலைக்கு இட்டுச் செல்லும். முக்கியமான எதையும் இழக்காமல் நாம் இதைக் குறைத்துக் கொள்ளமுடியும். 1960,70-களில் ஐரோப்பாவில் வாழ்க்கையொன்றும் அவ்வளவு மோசமானதாக இல்லை. கோபன்ஹேகனிலிருந்து சிங்கப்பூருக்கு மக்கள் மூன்றுநாள் பயணம் மேற்கொள்ள முடியாது, அதனால் என்ன இப்போது? அவர்களுடைய வாழ்வில் பெரிதாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை. நம்மிடம் உள்ள அமைப்பில் எந்த அளவுக்கு மந்த நிலை இருக்கிறது என்பதை மக்கள் உணரவில்லை.

தகவல் வளர்ச்சி என்பது வெள்ளமோ, வெடிப்போ மட்டுமல்ல. இந்த அடைமொழிகள் எல்லாம் போதாது. நாம் தகவலுக்கு அடியில் புதையுண்டு இருக்கிறோம். இது யாருக்கும் எந்த நல்லதையும் செய்யப் போவதில்லை.

கெளபாய் பொருளாதாரம்’, ‘ஸ்பேஸ்மேன் பொருளாதாரம்’ ஆகிய இரண்டுக்குமான வித்தியாசத்துக்கு கென்னத் போல்டிங்கை (Kenneth Boulding) மேற்கோள் காட்டியிருக்கிருக்கிறீர்கள். முதலாவது, பரவலானதும், வளத்தை நுகர்வதற்கு முடிவற்ற வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறது என்றும் இரண்டாவதானது நாம் வாழும் பூமியானது விண்வெளிக் கப்பல் போல மூடிய வடிவத்தைக் கொண்டதாக இருப்பதாகவும் அதனால் நம்முடைய வளங்களை கவனத்துடன் நிர்வகிக்க வேண்டியது அவசியம் என்றும் கூறுகிறது. ஒரு வகையான சிந்தனையிலிருந்து இன்னொரு வகைக்கு மாறுவதென்பது சவாலாகும். ஆனால் மனித வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள் கெளபாய்களாகவும் சில தசாப்தங்களே ஸ்பேஸ்மெனாகவும் இருந்திருக்கிறது. நாம் நிலையிணைப்பு (hardwired) உடையவர்கள் இல்லையா?     

கிழக்கு மற்றும் மேற்கத்திய மரபுகளில் சிக்கனம் குறித்து ஆழமான பாரம்பரியம் உள்ளது, அதாவது உங்கள் வருமானத்துக்குள் சிந்தனை முறையிலான வாழ்க்கை வாழ்வதாகும். இது எப்போதும் இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. அதிக நுகர்வு, பெரிய குளியலறை, எஸ்யூவி வாகனம் போன்றவை குறித்தும் இப்போது குரல் பலமாக எழ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இது இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது. இது புகைபிடிப்பது போல, 50 வருடங்களுக்கு முன்பு இது எங்கும் வியாபித்திருந்தது. ஆனால் இப்போது இதற்கும் நுரையீரல் புற்றுநோய்க்குமான தொடர்பை மக்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதால் இது கட்டுப்படுத்தப்பட்டிருப்பது போல பொருளின் வளர்ச்சி நம்மை எங்கே எடுத்துச் செல்லும் என்பதை மக்கள் அறிய வரும்போது இதே தான் நடக்கும். இதற்குச் சிறிது கால அவகாசம் தேவை என நான் நினைக்கிறேன்.

நேரிடர்கள் நிர்வகிக்க முடியாமல் போவதற்கு முன்பாக நாம் எப்படி அந்தத் திசையை நோக்கி நகர்வது எப்படி?

இதற்குப் பதிலளிக்க வேண்டுமெனில் உலகளாவிய நிலையில் பேசாமலிருப்பது முக்கியமாகும். இதில் பல அணுகுமுறைகள் இருக்கின்றன. வேறுபட்ட பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் இலக்காக வைத்து அவர்களுக்கேற்றவாறு அதை வடிவமைக்க வேண்டும். (தாமஸ்) ஃப்ரீட்மேனின் உலகம் தட்டையானது, எல்லாம் ஒரே மாதிரியானது, எனவே ஓர் இடத்தில் செயல்படக்கூடிய ஒன்று அனைத்து இடங்களிலும் செயல்படும் என்கிற யோசனை மோசமானதும், தவறானதுமாகும். உதாரணமாக, டென்மார்க்குக்கும் நைஜீரியாவுக்கும் பொதுவானதாக எதுவுமில்லை. ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் செய்வது வித்தியாசமானதாக இருக்கும். நைஜீரியாவுக்குத் தேவை அதிக உணவும், அதிக வளர்ச்சியுமாகும். பிலிப்பைன்ஸுக்கு இதைவிட அதிகமாகத் தேவைப்படும். கனடாவுக்கும், ஸ்வீடனும் இதைவிடக் குறைவாக இருந்தால் போதுமானது. நாம் இதை வெவ்வேறு பார்வையிலிருந்து பார்க்க வேண்டும். வளர்ச்சியில்லை (de-growth) என பொருளாதார அறிஞர்கள் சொல்லும் இடங்களில் வளர்ச்சியையும், வளர்ச்சி தேவைப்படக்கூடிய இடங்களில் வளர்ச்சியையும் நாம் ஏற்படுத்தவேண்டும்.

தனிமனிதராகிய உங்களுடைய புள்ளியியல் பகுப்பாய்வு உலகவங்கி வெளியிடும் மொத்தப் பகுப்பாய்வை ஒத்திருக்கிறது. நீங்கள் முன்பு உணர்ந்ததைவிட வளர்ச்சியின் முடிவுக்கு மிகவும் நெருக்கமாக நாம் இருக்கிறோம் என்பதை இந்த ஆய்வுகள் உங்களுக்கு உணர்த்தியதா?

மக்கள் என்னிடம் நான் ஒரு நம்பிக்கையாளரா அல்லது அவநம்பிக்கையாளரா எனக் கேட்கிறார்கள் அதற்கு நான் எதுவும் சொல்வதில்லை. நான் வேண்டுமென்றே அஞ்ஞானவாதியாக இருக்க முயற்சிக்கவில்லை ஆனால் இதுதான், இந்த முடிவுக்குத்தான் என்னால் வரமுடிந்தது.  சீனாவில் சுற்றுச்சூழல் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று மக்களிடம் நான் சொன்னது அவர்களை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “இது எப்போது சீர்குலையக் கூடும்?” எனக் அவர்கள் கேட்டதற்கு நான், “இது ஒவ்வொரு நாளும் சீரழிந்து கொண்டிருக்கிறது, ஆனால் இது ஒவ்வொரு நாளும் சரி செய்யப்படுகிறது,” என பதிலளித்தேன். அவர்கள் அதிக நிலக்கரியைப் பயன்படுத்தினர் அதனால் அதிக காற்று மாசுபாட்டைப் பெற்றனர், அதே சமயம் அவர்கள் உலக வங்கியிலிருந்து பில்லியன் கணக்கில் நிதி பெற்று பெரிய நகரங்களில் நவீன நீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைத்தனர். இப்போது அவர்கள் நவீன விவசாயத்தை நடைமுறைப்படுத்துவதால் நீர்ப்பாசனத்திற்கு குறைந்த தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். நாம் இப்படிப்பட்ட இனம் தான்: நாம் முட்டாள்கள், நாம் அலட்சியமாக, மெத்தனமாக இருக்கிறோம். ஆனால் இன்னொரு பக்கம், விஷயங்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்போதுகூட நிலைமைக்குத்தக்க இணங்கக்கூடியவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருந்து அவற்றை ஒன்றாக இணைக்க முயற்சிக்கிறோம். ஆனால் இதனால் ஏற்படக்கூடிய நிகர விளைவைக் கணக்கிடுவது. மிகவும் மோசமானதாகும். நாம் வளர்ச்சியடைகிறோமா அல்லது வீழ்ச்சியில் இருக்கிறோமா? என்பது நமக்குத் தெரியவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோம் நாட்டு நூலகத்தில் இருந்த தகவல்களின் எண்ணிக்கை சுமார் 3GB என்று உங்கள் நூலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் இன்றைய இணைய உலகத்தில் அது போல ட்ரிலியன் மடங்கு அதிகமான தகவல்கள் இருக்கின்றன. ஆனால் இது நேர்மறையானதா அல்லது நம்முடைய பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான திறனை இது மேம்படுத்துமா என்பது குறித்து தெளிவான சந்தேகத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.

தகவல்களின் வளர்ச்சி என்பது வெள்ளம் அல்லது வெடிப்பு மட்டுமல்ல. அந்த அடைமொழிகள் (adjectives) போதுமானதாக இல்லை. நாம் தகவல்களுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளோம். இது யாருக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை. நமக்கு மேலே செயற்கைக்கோள்கள் உள்ளன, அவை அதிக அளவிலான தகவல்களை உருவாக்குகின்றன, ஆனால் அதைப் பகுப்பாய்வு செய்ய போதுமான ஆட்கள் இல்லை. ஆமாம், கணினிகள் அதைச் சுருக்க/குறைக்க உதவலாம், ஆனால் அதன் அடிப்படையில் யாராவது முடிவுகளை எடுக்க வேண்டும். புரிந்துகொள்வதற்கு நிறைய இருக்கிறது.

உங்கள் ஆய்வின்போது நீங்கள் எப்போதாவது ‘ஸ்டாட்கேசம்ஸ்’ (statgasms) அதாவது ‘புள்ளியியல் பரவசநிலை’ (statistical orgasms)’ அடைந்திருக்கிறீர்களா?

பயிற்சியின் மூலம் நான் ஒரு உயிரியலாளர், எனவே உலகின் மிகப்பெரிய மரங்களான ரெட்வுட்ஸ், யூகலிப்டஸ் பற்றிய புதிய ஆய்வுகளைப் படிப்பதில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். அவை ஒருபோதும் வளர்வதை நிறுத்திக் கொள்வதில்லை. யானைகளைப் பொருத்தவரை அவை வளர்ச்சியின் நிச்சயமற்ற வடிவங்களைக் கொண்டுள்ளதோடு இறக்கும்வரை ஒருபோதும் அதை நிறுத்திக் கொள்வதில்லை. மனிதர்களாகிய நமக்கு 18 அல்லது 19 வயதிலேயே வளர்ச்சியானது நின்றுவிடுகிறது. ஆனால் புவியில் மிகப்பெரிய இனங்கள் இறக்கும்வரை வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

மனித மக்கள்தொகை பற்றி?

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம், வீழ்ச்சி எவ்வளவு விரைவாக உள்ளது என்பதுதான். 100 ஆண்டுகளுக்கும் மேலாக, வளர்ச்சி விகிதம் துரிதப்படுத்தப்பட்டது. 1930-கள் 20-களைவிட வேகமாக, 40-கள் 30-களைவிட வேகமாக வளர்ச்சியடைந்தன. 1960-களில், உலக மக்கள்தொகை மிக வேகமாக வளர்ந்தது, 2024-ஆம் ஆண்டளவில், அது முடிவற்ற விகிதத்தில் வளரும் என்று பிரபலமான அறிவியல் கட்டுரை ஒன்று கூறியிருக்கிறது — அதாவது மக்கள்தொகை ஒப்பிணைவின்மை (singularity) தருணங்கள் போல  — இது அபத்தமானது. அப்போதிருந்து, ஒவ்வொரு ஆண்டும் விகிதமானது குறைந்து வருகிறது. மக்கள்தொகை முழுமையான அடிப்படையில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது, ஆனால் சதவீத அடிப்படையில் இது 60-களின் நடுப்பகுதியில் இருந்து குறைந்துவருகிறது.

ஒட்டுமொத்தமாக, நூலின் தொனி அவநம்பிக்கையாக இருக்கிறது என நான் கூறுவேன், ஆனால் உலக மக்கள்தொகை 9 பில்லியனைத் (1 பில்லியன் = 100 கோடி) தாண்டி விரிவடையாத நம்பிக்கையான சூழ்நிலையின் சாத்தியத்தையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள் – தற்போதையக் கணிப்புப்படி – இதில் ஆற்றல் மாற்றம் எதிர்பார்ப்பதைவிட வேகமாக இருக்கும். 2050-க்கு முன்னர் பொருட்களின் தேவை உச்சமாக இருந்தாலும், அது இன்னும் பல தசாப்தங்களாக அதிகரித்துவரும் அழுத்தத்தை நம்மிடையே விட்டுச் செல்லும். காலநிலை, மண், பல்லுயிர் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் ஏற்கெனவே வெளிப்படையான நெருக்கடிகள் இருக்கும்போது, இந்த ஆபத்தான வீக்கத்திலிருந்து நாம் எப்படி மீள்வது?

அது கடினமான பகுதி. மேற்கத்திய உலகிலும் ஜப்பானிலும் கிட்டத்தட்ட ஓரளவுக்கு அந்த நிலையில் இருக்கிறது. சீனா அதை நோக்கி இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டும். ஏனெனில் அது ஆற்றலைப் பொருத்தவரையில் 1960-களில் ஸ்பெயின் இருந்த நிலையில் இருக்கிறது. உண்மையான பெருக்கம் ஆப்பிரிக்காவில் ஏற்படும், அங்கு 1 பில்லியன் மக்கள் பிறப்பார்கள். தற்போதைய ஆப்ரிக்க மக்களை வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற பண்பார்ந்த (decent) வாழ்க்கை நிலைக்குக் கொண்டுவருவது கடினம். கூடுதல் பில்லியனுடன் அதைச் செய்வது இன்னும் அசாதாரணமாகக் கடினமாக இருக்கும். நீங்கள் அனைத்தையும் ஒரு எண்ணுக்குக் கீழ் கொண்டுவரலாம் – அது வருடத்திற்கு ஒரு நபருக்கான ஆற்றல் நுகர்வான கிகாஜூல்கள் (gigajoules) ஆகும். இதில் அலகு முக்கியமல்ல ஆனால் ஒப்பீட்டைக் கவனியுங்கள். அமெரிக்காவின் நுகர்வு சுமார் 300. ஜப்பான் சுமார் 170. ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 150. சீனா இப்போது 100-க்கு அருகில் உள்ளது. இந்தியா 20. நைஜீரியா 5. எத்தியோப்பியா 2. நைஜீரியாவிலிருந்து சீனா வரை வளர தனிநபரைப் பொருத்தவரையில் 20 மடங்கு அதிகரிப்பு தேவைப்படுகிறது. பெருக்கத்தின் அளவு இந்த அளவுக்கு இருக்கிறது. எனவே நீங்கள் கோபன்ஹேகன் அல்லது சசெக்ஸில் நுகர்வைக் குறைக்க முடியும், ஆனால் நைஜீரியாவில் முடியாது.

வயதானவர்கள் நிறைந்த ஜப்பான் ஒரு முன்மாதிரியா? சொத்து விலை, பங்குச் சந்தை மதிப்பு குறைவு, மக்கள்தொகை பலம் மற்றும் தாக்கம் போன்ற குழப்பங்களில் சறுக்காமல் நீண்ட சரிவை அந்நாடு எதிர்கொள்வது வியப்படைய வைக்கிறது. விருப்பமில்லாமல் பின்வாங்குவதை எதிர்கொள்ளும் மற்ற நாடுகளுக்கு இது படிப்பினைகளாக இருக்குமா?

ஓரளவுக்கு மட்டுமே ஜப்பான் முன்மாதிரியாக இருக்க முடியும், ஏனென்றால் சமீப காலம்வரை இது ஒரு சிக்கனமான, ஒழுக்கமான சமுதாயமாக இருந்தது, இதனால் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றையும் அங்குள்ள மக்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால் நமக்கு மந்தநிலை உள்ளது. பொருள் நுகர்வு அடிப்படையில் நாம் மிகவும் செழித்து இருக்கிறோம். அதைக் குறைத்துக் கொள்வதற்கான வழிவகை இருக்கிறது. ஆனால் இதற்கான பதில் எளிதானது இல்லை.  இருந்திருந்தால், நாம் ஏற்கனவே அதைச் செய்திருப்போம்.

வளர்ச்சிக்கான முடிவை வணிகர்களால் ஏற்க முடியுமா? தைப் பற்றி பில் கேட்ஸிடம் குறிப்பிட்டுள்ளீர்களா?

நான் இதை அவரிடம் சொல்லத் தேவையில்லை. அவருக்கு சுற்றுச்சூழல் பற்றி நிறைய தெரியும். இதற்காக பில்லியன் டாலர்களை ஒதுக்கி வைத்திருக்கும் அவர் உலகைப் புரிந்துகொள்வதில் விருப்பமுடையவர். என்னைப் போல அவரும் ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான நூல்களைப் படிக்கிறார்.


வாஸ்லவ் ஸ்மில் நூல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறுவதென்ன?

  • Energy and Civilization: A History (MIT Press, 2017)

“எனக்கு விருப்பமான எழுத்தாளர்களில் ஸ்மிலும் ஒருவர். இது அவருடைய ‘மாஸ்டர்பீஸ்’ ஆகும். கழுதை சக்திகொண்ட ஆலைகளிலிருந்து இன்றைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மீதான வேட்கைவரை ஆற்றலுக்கான நம்முடைய தேவை மனித வரலாற்றை எப்படி வடிவமைத்திருக்கிறது என்பதை அவர் விவரித்திருக்கிறார்.”

  • Making the Modern World: Materials & Dematerialization (Wiley, 2013)

“யாராவது ஒருவர் இப்போது நாமெல்லாம் சில பொருட்களை மட்டுமே உபயோகிக்கிறோம் என்று சொல்ல முயன்றால் அவர்களுக்கு இந்த நூலை அனுப்பி வையுங்கள். குறைந்த மூலப் பொருட்களுடன் ஒரு பொருளை மலிவாக உருவாக்குவதில் நமக்கிருக்கும் திறமையையும் – உதாரணமாக, சோடா கேன்கள் தயாரிக்க குறைவான அலுமினியம் போதும் – எப்படி அது அதிக உற்பத்தியை ஊக்குவிக்கிறது என்பதையும் வழக்கமான அவருடைய சந்தேகம் மற்றும் தரவின் மீது இருக்கும் காதலுடன் ஸ்மில் காட்டியிருக்கிறார்.”

  • Harvesting the Biosphere (MIT Press, 2013)

“உயிரினகோளத்தை மனிதர்கள் எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதை எண் போல தெளிவாகக் விவரித்திருக்கிறார்… இந்தக் கோளில் நாம் ஏற்படுத்தும் தாக்கத்தின் மீது நீங்கள் அக்கறை கொண்டால் அது ஒரு முக்கியமான கதையைச் சொல்லும்.”


21 செப்டம்பர் 2019 அன்று Vaclav Smil: ‘Growth must end. Our economist friends don’t seem to realise that’ என்ற தலைப்பில் தி கார்டியன் நாளிதழில் வெளியான நேர்காணல்; நேர்கண்டவர் ஜோனாதன் வாட்ஸ்.

தமிழில் சித்தார்த்தன் சுந்தரம் – மொழிபெயர்ப்பாளர்; மால்கம் க்ளாட்வெல் எழுதிய The Tipping Point, Blink, Outliers, டேவிட் & கோலியாத், ஹார்ப்பர் லீ எழுதிய To Kill a Mockingbird, நோபல் பரிசு பெற்ற ஸ்வெட்லான அலெக்ஸியேவிச் எழுதிய Voices from Chernobyl உள்ளிட்ட 15 நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பெங்களூருவில் வசித்துவருகிறார்.

1 COMMENT

  1. மிக முக்கியமான ஒரு நேர்காணல். சிறப்பான மொழிபெயர்ப்பு. வாழ்த்துகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.