அடர்வனத்தில் நிகழ்ந்த அற்புதம்

தாத்தா, வண்டியில் மாடுகளைப் பூட்டினார். பூட்டாங்கயிரை, மாடுகளின் கழுத்தைச் சுற்றி வண்டியுடன் இணைத்தார்.

தாத்தா, தினமும் ஆனைமலை அடிவாரத்துக்கு மாட்டுவண்டியில் சென்று திரும்புவார். தென்னந்தோப்பில் தேங்காய், மாங்காய், புளி ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு சந்தையில் விற்று வீடு திரும்புவார்.

அன்று காலை, மாடுகளின் கழுத்துமணிச் சத்தத்தைக் கேட்ட அப்பு வாசலுக்கு ஓடிவந்தான்.

“நானும் ஒங்களோட வர்றேனே. யானை, புலி, கரடி, சிறுத்தை, மான் எல்லாத்தையும் காட்டுறேன்னு ரொம்பநாளா சொல்றீங்களே.  இன்னிக்கி என்னை கூட்டிப்போய்க் காட்டுங்க.” என்றான்.

“அடிவாரத்துக்கு அணில், உடும்பு, முயல்தான் வந்துபோகும். யானை, புலி, கரடியெல்லாம் காட்டுக்குள்ளேயே இருக்கும். உள்ளே போக நமக்கு அனுமதி கிடையாது.” என்று சொல்லிச் சமாளித்தார்.

பேரனுக்கு அழுகை வந்தது. ‘ஓ’வென்று கத்தி அழுத் தொடங்கினான். தாத்தா, சமாதானம் செய்து பார்த்தார். பலனில்லை. அப்புவை அழைத்துக்கொண்டு கிளம்பினார் தாத்தா.

சிறிது நேரத்தில் மலையடிவாரத்தை அடைந்தார்கள்.

தென்னந்தோப்பு வரப்பில் உட்காரவைத்த பேரனை, “தப்பித்தவறி காட்டுக்குள்ள போயிறாதே” என்று எச்சரித்தார் தாத்தா.

அருகில் ஒரு குங்கிலியமரம் இருந்தது. அவனுக்கு ஒரு யோசனை உதித்தது. மரத்தில் வழிந்திருந்த பிசினை ஒரு துண்டு பிய்த்தான். கீழே கிடந்த சிரட்டையில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கரைத்தான்.  அது, நுரைத்துப் பால்போலப்  பொங்கியது.

ஓவியம்: அப்பு சிவா

காட்டுப்புல்லை பிய்த்து, தண்ணீரில் தொட்டு ஊதினான். காற்று நீர்க்குமிழ்கள் உருவாகி மேலே பறந்தன. சில நிமிடங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான குமிழ்கள் உருவாகின. காடே வண்ணமயமாகக் காட்சியளித்தது.

எல்லையில், இரை தேடித்திரிந்த ஒரு முயல் அவற்றைப் பார்த்தது.

“அம்மா! யாரோ நம்ம வீட்டுக்கு மேலே குண்டு எரியப்போறாங்க” என்று பயங்கலந்த குரலில் சொன்னது. பதற்றத்துடன் வெளியே வந்த முயலம்மா, குட்டிமுயலுடன் பொந்துக்குள் புகுந்து பாதுகாப்பாக மறைந்துகொண்டது.

சமவெளியில் மேய்ந்துகொண்டிருந்த மான் கூட்டம் குமிழ்களைப் பார்த்தன. ஒரு புள்ளிமான் சொன்னது.

“காட்டு விலங்குகளைக் கணக்கெடுக்க, பறக்கும் கேமராக்களை அனுப்பலாம்ன்னு போன வாரம் இங்கே வந்திருந்த அதிகாரிகள் பேசினதைக் கேட்டேன். இதெல்லாம் கேமிராக்கள்தானா?” என்ற சந்தேகத்தை கேட்டது. பதிலில்லை.

நரி, வரையாடு, முள்ளம்பன்றி, குரங்கு, காட்டெருமை போன்ற விலங்குகளும் வானத்தில் மிதக்கும் குமிழ்களை வியந்து பார்த்துன.

அப்பு, தொடர்ந்து பிசினைத் தொட்டு ஊதி விளையாடினான். அதே நேரத்தில், எதிர்பாராத ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

கண்ணெதிரில் ஒரே ஒரு குமிழ் மட்டும் பலூனைப்போல பெரிதாக வளர்ந்தது. பிறகு, சாக்குமூட்டை அளவில் ஆனது. சீக்கிரம் உடைந்துபோகுமென்று நினைத்தான். வாயிலிருந்த புல்லை வெளியே எடுத்து உதறினான். காற்று நீர்க்குமிழ் ஒட்டிக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில், குமிழ் மெல்ல மேலெழுந்தது. அப்பு, கையிலிருந்த புல்லை உறுதியாகப் பிடித்திருந்தான். வானத்தில் அப்புவையும் தூக்கிக்கொண்டு பறந்தது.

காற்றடைத்த குமிழ் உடைந்து கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தோடு ஆகாயத்தில் பறந்தபடி காடுகளைச் சுற்றிப்பார்த்தான், அப்பு.

காட்டு விலங்குகளைக் கண்டு ரசித்தான்.

ஆற்றங்கரையில் நீரள்ளி விளையாடிய யானைகள், குட்டிகளை முதுகில் சுமந்து ஓடியாடும் கரடிகள், மான்களுடன் சேர்ந்து விளையாடிய புலிகள் என விலங்குகள் விளையாடிவதை வானத்திலிருந்து வேடிக்கை பார்த்தான். மலைகளுக்கு நடுவில் பாய்ந்துவரும் அருவியைப் பார்த்து வியந்தான்.

மதியவேளை நெருங்கியதும் பசியெடுத்தது. வானத்தில் மிதந்து யாராவது ஊட்டிவிட வருவார்களா? இல்லையே. அப்பு, வீடு திரும்ப விரும்பினான். ஆனால் கீழே இறங்க வழி தெரியவில்லை.

தேங்காய்களை வண்டியில் ஏற்றிமுடித்த தாத்தா, அப்பு ஆகாயத்தில் பறப்பதைத் தூரத்திலிருந்து கவனித்தார்.

சட்டென்று யோசித்தவர், உரத்த குரலில் சொன்னார்:

“அப்பு! இந்தப் பக்கம் பறந்து வா! இன்னுங்கொஞ்சம் நகர்ந்து வா!” வென வழிகாட்டினார். பேரன், தாத்தா சொன்னபடியே செய்தான்.

தென்னந்தோப்பு வான்பகுதியில் நுழைந்த குமிழ், மெல்ல மெல்ல கீழே இறங்கியது. ஒரு மரத்தடி நிழலில் அப்பு பத்திரமாகத் தரையிறங்கினான்.

‘அப்பாடா! உயிர் பிழைத்தோம்’ என நிம்மதி அடைந்தான்.

அப்பு தாத்தாவிடம், “இதென்ன மந்திரமா செஞ்சிங்க? காற்று நீர்க்குமிழ் கீழே எப்படி இறங்கிச்சு?” என்று ஆவலோடு கேட்டான்.

அருகிலிருந்த குமிழ் உருண்டோடியது. மாட்டிக் கொம்பில் முட்டி உடைந்தது.

கடைசியில், தாத்தா விளக்கினார்.

“நீ பறந்துகிட்டிருந்த பகுதி முழுவதும் வெயிலடிச்சதால காற்று சூடேறி இருந்துச்சு. அதனாலதான் அந்தக் குமிழ் வானத்தில எழும்பிப் பறக்க ஆரம்பிச்சது. அதைக் கீழே இறக்குகிற வழி என்னன்னு யோசிச்சேன். காற்றடைச்ச குமிழை குளிர்விக்கணும். இந்தப் பகுதியில மேகம் கறுத்திருந்ததைப் பார்த்தேன். ஒன்னைய இந்தப் பக்கமா பறந்து வரச்சொன்னேன். எல்லாமே சரியாக நடந்துச்சு. நீயும் பத்திரமா தரை இறங்கிட்டே.” என்றார்.

தாத்தாவுக்கு நன்றி சொன்னான் அப்பு, காட்டு விலங்குகளை காணவேண்டுமென்ற அவனது ஆசை நிறைவேறியது.


கொ.மா.கோ.இளங்கோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.