அந்நியன்

சுபதி அரசுப்பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்தார். அந்தப் பள்ளியில் கணக்கு ஆசிரியராய் இருந்த மனோகரன் ஓய்வு பெறும்போது இளைஞனைப் போன்ற தோற்றம் மாறாதவராய் இருந்தார். அவர் ஓய்வு பெறும் வயதை அடைந்துவிட்டார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.

ஆனால் பசுபதி அப்படியில்லை. வயோதிகத்தின் அத்தனை குறிப்புகளையும் உடலில் பெற்றிருந்தார். சரீரம் பெருத்துப் போய், தோல் முதிர்ந்தும் தளர்ந்தும் இருந்தது. புருவம் இமை முதற்கொண்டு அனைத்து முடிகளும் நரைத்துவிட்டிருந்தன.  குளித்துத் துண்டைக் கட்டிக் கொண்டு வரும்போது பஞ்சுப் பொதியிலிருந்து குதித்தெழுந்து வந்தவரைப் போல இருந்தார்.

அந்த பழைய வீட்டின் முன் அறையில் அவரும் அப்பாவும் உட்காரும் சாய்வு நாற்காலிக்குப் பக்கத்தில் இருக்கும் தேக்குமர நாற்காலியில் அந்த இளைஞன் உட்கார்ந்திருந்தான். இளமையின் உச்சியில் இருந்த அவனைப் பார்க்க பசுபதியின் மனதில் பொறாமையின் தீ உயிர்பெற்றது. அந்த இளமை அவருக்குச் சகிக்க முடியாததாய் இருந்தது. அவனை யார் என்னவென்று விசாரிக்க நினைத்தவர் அவன் அமர்ந்திருந்த உரிமையின் தோரணையைக் கண்டு தயங்கி நின்றுவிட்டார். ஒருவேளை அப்பாவைப் பார்க்க வந்திருப்பானோ? ஈரோட்டிலிருந்து வரும் வைத்தியநாதனைத் தவிர, அப்பாவைத் தேடி இந்த வீட்டுக்கு யாரும் வந்ததில்லை. வயதாகிவிட்டதால் அவரும் வீட்டுக்கு வந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

அவன் கையில் ஏதோ புத்தகம் இருந்தது. எவ்வளவு உற்றுப் பார்த்தும் அது என்ன புத்தகம் என்று தெரியவில்லை. கண்ணைப் பரிசோதித்து கண்ணாடி மாட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டார். ஆனால் இத்தனை ஆண்டுகாலம் கண்ணாடி இல்லாமலேயே சமாளித்துவிட்டு, இப்போது போய் கண்ணாடி போட்டுக் கொள்வதை அவர் விரும்பவில்லை. அந்த எண்ணத்தைக் கைவிட்டு உள்ளறைக்குத் திரும்பினார்.

சமையல் கட்டிலிருந்த அம்மாவிடம் போய் சைகையாலேயே “அங்க யாரோ வந்திருக்காங்க. காபி போட்டுக் கொடு” என்றார். கமலம் அம்மாளுக்கு கண்களில் பூஞ்சை படர்ந்ததைப் போல காட்சிகள் திட்டுத் திட்டாய் தெரிந்தன. காது மிக மெலிதாகத்தான் கேட்கும் என்பதால், கணவரும் மகனும் அவருடன் சைகையில் உரையாட ஆரம்பித்து பல காலம் ஆகிவிட்டது. கமலம் வியந்தவராய் யாரு? என சைகையில் கேட்டார். அவர் “தெரியல” என உதட்டைப் பிதுக்கி கைகளை விரித்தார்.

கமலம் வியப்பு மாறாதவராய், வாயைத் திறந்தபடி அவரைப் பார்த்தார். பின் என்னவோ நினைத்துக் கொண்டு சிரித்தார். பசுபதி “அப்பா எங்கே?” என்றார். “கடைக்குப் போயிருப்பார்” என சைகை காட்டிவிட்டு சமையல் கட்டுக்குப் போய் பால் பாக்கெட்டைக் கத்தரித்துக் கொண்டு, “நீ டீ குடிக்கிறியா?” எனக் கை காட்டினார் அவர் “கொஞ்சமாய் வேண்டும்” என சைகை காட்டிவிட்டு உள்ளறைக்குப் போய் படுத்துக் கொண்டார்.

ஒருவேளை அவன் தன் மருமகனாய் இருக்கக் கூடுமோ என பசுபதிக்கு சந்தேகமாய் இருந்தது. அந்த நினைவே அவர் நெஞ்சில் சந்தனத்தைப் பூசியதைப் போல குளுமையாய் இருந்தது.

மகளை ஒன்றரை வயதாய் இருக்கும் போது பார்த்தது. இப்போது அவளுக்கு முப்பது வயதுக்கு மேல் இருக்கும். அவளுடைய கணவன் இவ்வளவு இளைஞனாய் இருக்க வாய்ப்பில்லை என நினைத்தவராய், மகளைப் பற்றிய நினைவில் மூழ்கிப் போனார்.

அவள் உருவம் பற்றிய மூன்றுவிதமான கற்பனைகள் அவரிடம் இருந்தன. ஒன்று அவள் அவளுடைய அம்மாவின் அச்சுப் பிரதியைப் போல அப்படியே இருக்கக் கூடும். அல்லது அவருக்கு பெண் வேடமிட்டதைப் போல அவருடைய பெண் உடலைப் போல இருக்கக் கூடும். அல்லது தங்கள் இருவரின் அடையாளங்களையும் கொண்ட உருவமாய் இருக்கும். அந்த உருவத்தையும் அவரால் கற்பனை செய்ய முடிந்தது. அந்த உருவைப் பார்த்து அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது. பூமியில் இல்லாத ஒரு பெண் அல்லது இருக்கிறாளா இல்லையா எனத் தெரியாத ஒரு பெண் தனக்குள் இருந்து, தன்னைப் பார்த்துக் கொண்டும் அப்பா அப்பா என்று பேசிக் கொண்டும் இருக்கிறாள்.

ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னால், ஒன்றரை வயது சிறுமியாய் இருந்த கற்பகத்துடன் அவரை விட்டு விலகிச் சென்றுவிட்ட செல்லம்மாளின் நினைவுகளுக்குள் அவர் மனம் மீண்டும் அமிழ்ந்தது.

செல்லம்மாள் முன் கொசுவம் வைத்து சேலை கட்டியிருந்தார். அந்த ஊரில் அப்படி சேலை கட்டும் பழக்கம் உள்ள ஒரே ஒரு பெண்ணாக அவர் இருந்தார். அவரின் சேலைக்கட்டும், ஜாக்கெட்டின் மிகச் சிறிய கையும் அந்த ஊர் பெண்களுக்கு விசித்திரமாய் இருந்தது. வாளிப்பான அவர் உடல் யாரோ ஒரு நடிகையை ஞாபகப் படுத்துவதாய் பெண்கள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டனர். அவரையே ஒரு நடிகையைப் போலப் பார்த்தனர். நடிகை என்றால் பரத்தை என்றொரு எண்ணம் அவர்களுக்கு இருந்தது. எனவே செல்லம்மாளும் அப்படிப்பட்டவளாய்த்தான் இருக்கும் என அவர்கள் கெக்கொலி கொட்டி சிரித்துப் பேசினர்.

ஏதோ ஒரு சாக்கில் செல்லம்மாளைப் பார்க்க இளவயதுப் பெண்கள்  வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர். வந்தவர்கள் எல்லோருமே சந்தர்ப்பம் பார்த்து அவர் அந்த சேலைக்கட்டை எப்படி கட்டுகிறார் என விவரம் கேட்டுக் கொண்டனர்.

சிறு நகரத்தாள் வடிவமைக்கப்பட்டவர் என்றாலும், அவர் முற்றிலும் வெள்ளந்தியான சிறு பெண்ணாக இருந்தார். கேட்டவர்களுக்கெல்லாம் முகம் சுழிக்காமல் சேலைக் கட்டை கற்றுத் தந்தார். ஒரு பக்கம் அவரை வக்கிரமாக விமர்சிப்பதும், இன்னொரு பக்கம் அவரைப் போல மாறத் துடிப்பதுமாக ஊர் பெண்கள் விசித்திரமானவர்களாய் மாறிப் போயினர்.

பசுபதிக்கு அவர் உடல் மீதான காமம் மட்டுமே இருந்தது. கல்யாணம் ஆகி வந்த  இரண்டு வருடத்தில் அது காதலாக மலரவே இல்லை. செல்லம்மாளைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்குள் வெப்பம் மூளும். மாதவிலக்கு நாட்கள் தவிர மற்ற நாட்களில் அவரைக் கூடியபடியே இருந்தார். ஒரு கட்டத்தில் செல்லம்மாள் பயந்து போய்விட்டார்.

குழந்தை பிறந்து வீட்டுக்கு அழைத்த பின்னும் பசுபதி அப்படியேதான் இருந்தார்.  இளம் வயதுதான் என்றாலும் செல்லம்மாளுக்கு வெறுத்துப் போய்விட்டது. கணவனைப் பற்றிய எண்ணங்கள் மாறின. அவரை ஒரு மிருகம் என நினைக்க ஆரம்பித்தார். எதற்கெடுத்தாலும் சண்டையிட்டார். இரவில் நாயை விரட்டுவது மாதிரி விரட்டினார் அல்லது மரக்கட்டை மாதிரி கிடந்தார்.  தினமும் இதே தொடர வெறுப்பு வளர்ந்து உருண்டு திரண்டது. அந்தக் கசப்பை பசுபதி மனித இயல்புக்கே உரிய கோணலோடு அர்த்தப்படுத்திக் கொண்டார். செல்லம்மாளின் அழகு அவர் கண்ணை உறுத்தியது. அவருக்கு இன்னும் பலருடன் தொடர்பு இருக்கக் கூடும் என நினைக்க ஆரம்பித்தார். வன்மம் தலை தூக்கியது. அவரின் நடவடிக்கைகளின் குரூரமும் பேச்சின் விஷமும் செல்லம்மாளை நிலை குழைய வைத்தன. ஒன்றரை வயது மகள் கற்பகத்தைத் தூக்கிக் கொண்டு செல்லம்மாள் அவர் வாழ்க்கையிலிருந்து காணாமல் போய்விட்டாள்.

முதலில் போய்த் தொலையட்டும் என நினைத்தார் பசுபதி. அவர்களே எப்போது வந்து அழைத்துப் போகச் சொல்லிக் கூப்பிடுகிறார்களோ அப்போது போய்க் கூட்டி வரலாம் என இருந்தார். ஒரு வருடத்திற்கு மேலாகியும் அவரிடமிருந்தோ, அவர் வீட்டிலிருந்தோ எந்த விசாரிப்பும் இல்லை என்றதும் இனி செல்லம்மாள் வர மாட்டார் என அவருக்குத் தெரிந்துவிட்டது என்றாலும் அவராகப் போய் கூப்பிட மனம் இடம் கொடுக்கவில்லை. இரண்டு வருடம் கழித்து அவருக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நினைத்து அப்பா பல இடங்களில் பெண் பார்த்தார். எதுவும் அமையவில்லை. அமைந்துவிடும் என்ற நம்பிக்கை கூட ஏற்படவில்லையென்பதால் அவரும் அப்படியே விட்டுவிட்டார்.

வேலைக்குப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்த அவருக்கு, பத்தாண்டுகள் கழித்து திடீரென ஒருநாள், செல்லம்மாள் விஷயத்தில் தான் மிகவும் முட்டாள் தனமாக நடந்து கொண்டுவிட்டதாக ஒரு எண்ணம் ஏற்பட்டது. எப்படி அப்படி முற்றிலும் தலைகீழாகத் தாம் மாறினோம் என அவருக்கே புரியவில்லை. வியப்பாய் இருந்தது. அந்த எண்ணத்தை ஒதுக்கித் தள்ள முயன்றார். முடியவில்லை. திகைத்துப் போனார். உடனே செல்லம்மாளின் வீட்டுக்குக் கிளம்பினார். அவர் பயந்தபடியே அந்த வீட்டில் அவர்கள் இல்லை. அவர்கள் எங்கே போனார்கள் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அப்போதுதான் அவருக்கு செல்லம்மாளின் மீது காதல் உண்டானது. காதலின் துயரம் அவரை வாட்டியது. திடகாத்திரமான அவர் உடல் கொஞ்சம் கொஞ்சமாக தக்கையைப் போல மாற ஆரம்பித்தது.

சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கையில் பனையோலை விசிறியால் விசிறியபடி அவர் அந்த நாட்களை எப்போதும் அசை போட்டுக் கொண்டிருந்தார்.

கமலம் டீ தம்ளருடன் வந்து, ஒரு தம்ளரை அவரிடம் கொடுத்துவிட்டு, “அந்த பையன் எங்கே?” என்றார். பசுபதி அவரிடம் முன் அறையை கைகாட்டினார். “அங்கே யாரும் இல்லை” என சைகை செய்துவிட்டு, அவர் டீ இருந்த இன்னொரு தம்ளருடன் உள்ளே போய்விட்டார்.

கமலத்திற்கு நரையும் கருமையும் சரிசமமாய் கலந்த தலைமுடி. அதில் எப்போதும் ஒரு முடிச்சு போன்ற கொண்டை இடுப்புக்கு மேலே நடுமுதுகில் கிடக்கும். எங்கேயாவது வெளியே போனால் அவர் அந்த கொண்டையை உயர்த்தி தலையில் போட்டுக் கொள்வார். ஆனால் எதற்கும் வெளியே போகும் பழக்கத்தை அவர் எப்போதோ விட்டிருந்தார். உப்போ தீப்பெட்டியோ வேண்டும் என்றாலும் அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே தன் கணவனிடமோ இல்லை மகனிடமோ சொல்லி வைத்துவிடுவார். ஒல்லியான அவர் தேகம் மிக பலவீனமாய். கைகள் எப்போதும் மெல்லிய நடுக்கம் கொண்டதாய், தண்ணீர் நிறைந்த செம்பையும் தூக்க முடியாததாய் இருந்தன. கீழே உட்காருவதற்காக கைகளைக் கொஞ்சம் வேகமாக ஊன்றிவிட்டாலும் நொறுங்கிவிடும் போல எலும்புகள் கடற்பஞ்சு போல் மாறிவிட்டதை அவரால் உணரமுடிந்தது.

அவர் அக்காவும் மாமாவும் எப்போது அவர் வாழ்க்கையிலிருந்து விலகினார்களோ, அப்போதே வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும் அதன்பின் அதன் எச்சமே நடப்பதாகவும் அவருக்கு ஒரு எண்ணம். அதனால் என்ன நடந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.

அக்கா வீட்டுக்காரர் சிதம்பரம் அழகான மனிதர். அக்காவும் மாமாவும் ஜோடியாக நடந்து போவதைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது. அவர்கள் வெளியே போய்விட்டு வந்தால், அம்மா உப்பும் மிளகாயும் வைத்து எப்போதும் சுற்றிப் போடுவார். ஒவ்வொரு முறையும் மிளகாய் கார நெடியின்றி எரிந்து போகும். “பாத்தியா இந்த ஒரு மொளகா தப்பித் தவறி அடுப்புல விழுந்துட்டா அப்படி காந்தும். மூச்சு விடவே முடியாது. அப்படியாப்பட்ட மொளகா துளி காரமில்லாம எரியுதே. ஊர்ல அவ்வளவு கண்ணு உங்க மேல” என்பதையும் அவர் ஒவ்வொருமுறையும் சொல்லத் தவறமாட்டார்.

அக்கா நல்ல பக்திமான் வீட்டில் ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் என புத்தகங்கள் வைத்திருப்பார். அப்போதெல்லாம் இரவில் சமைக்கும் வழக்கம் கிடையாது. காலையிலோ அல்லது மதியத்திலோ செய்த சாப்பாடுதான் இரவுக்கும்

மாலையில் விளக்கு வைத்ததும் பக்தி சிரத்தையாய் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு சத்தமாகப் படிக்க ஆரம்பித்து விடுவார். கமலமும் தவறாமல் போய் அக்காவின் முன்னால் உட்கார்ந்து கொள்வார். கமலம் அவருக்குத் தங்கையென்றாலும் ஒரு தாயின் பாவனையில் தான் அவர் பார்ப்பதும் பேசுவதும்.

அந்தப் புத்தகங்கள் எல்லாம் ஒப்புக்குத்தான். பெரும்பாலும் மனதிலிருந்தே அந்தப் பாடல்களைப் படித்தார். அவள் குரல் அவ்வளவு கணீர் என்றிருக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வந்துவிடுவார்கள். பாடலைப் பாடி கமலத்திற்கு விளக்கம் சொல்வதைப் போல எல்லோருக்கும் விளக்கம் சொல்லி பக்தியில் திளைத்து திருநீறு பூசிக் கொண்டு எழுவார். அப்போது வாழ்க்கைதான் எவ்வளவு அர்த்தமுள்ளதாய் இருந்தது.

மாமாவுக்கும் கடவுள் பக்தி அதிகம். மங்கை தன் மனைவியாய் இருப்பது அவருக்கு அளவில்லாப் பெருமை. அது எப்போதும் அவர் முகத்தில் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கும்.

மாமாவின் அப்பா வீடு பக்கத்து தெருவிலேயே இருந்தது என்பதால், அக்கா பெரும்பாலும் அம்மா வீட்டிலேயே இருப்பார். சிதம்பரம் தன் வீடு மாமியார் வீடு என்ற வித்தியாசம் இல்லாமல் இருப்பார்.

சிதம்பரத்தின் அப்பா தன் ஜவுளிக்கடை நிர்வாகத்தை கல்யாணத்துக்குப் பின் மகனிடம் விட்டிருந்தார். நிர்வாகம் கைமாறியவுடனேயே தான் ஒரு பரோபகாரி என்பதை சிதம்பரம் நிரூபித்தார். தலைச்சுமையாய் எடுத்து ஊர் ஊராய் போய் விற்கும் வியாபாரிகளுக்கெல்லாம் தாராளமாய் கடன் கொடுத்தார். இவரின் குணத்தைத் தெரிந்து கொண்ட வியாபாரிகள் கூட்டம் கூட்டமாய் வர ஆரம்பித்தனர். நாட்கள் போகப் போகத்தான் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே அவருக்குப் புரிய ஆரம்பித்தது. கடன் வாங்கிப் போனவர்களில் பெரும்பாலானோர் திரும்பி வரவில்லை. திரும்பி வந்தாலும் பழைய கடனைக் கொடுக்காமல் புதிதாக மேலும் கடன் கேட்டார்கள். அவருக்கு இல்லையென்று சொல்லும் மனம் இல்லை. இன்னும் ஜவுளிகளைத் தூக்கிக் கொடுத்து அனுப்பினார்.  இந்த விஷயம் அவர் அப்பாவுக்கு கடைசி வரை தெரியவில்லை. மகன் மீது அவ்வளவு நம்பிக்கை.

அலர்மேல் மங்கைக்கும் இதைப்பற்றி துளியும் அச்சம் இல்லை. அவர் நல்லவர் மக்களுக்கு நல்லது பண்ணுகிறார். நல்லது செய்பவர்களை கடவுள் எப்போதும் கைவிட மாட்டான் என்ற அசைக்க முடியாத சித்தம் அவருக்கு இருந்தது.

ஒரே வருடத்தில் கடை காலியானது. சிதம்பரம் ஒரு சில்லறை ஜவுளி வியாபாரியாக மாறினார். என்றாலும் கணவன் மனைவி இருவருக்கும் யார் மீதும் எந்தக் கசப்பும் வெறுப்பும் ஏற்படவில்லை. அப்பாவுக்கோ, மாமனார் வீட்டுக்கோ சுமையாய் இருந்துவிடக் கூடாது என, அதே ஊரில் வேறொரு தெருவில் தனியாகக் குடித்தனம் போனார்கள். ஜவுளிக் கடை கடன் சுமை அவர்களைத் தலையெடுக்க விடாமல் அழுத்திக் கொண்டிருந்தது. ஏழ்மையும் தரித்திரமும் மேலும் மேலும் இறுக்கிப் பிழிந்தது. அப்போதும் அவர்களின் பக்தியில் கொஞ்சமும் குறையவில்லை.

மாமாவின் அப்பா தெருவில் நின்று கத்தினார். “உன்னை யார் இப்படி இருக்கச் சொன்னா. எனக்கு ஒரே பையன் நீ தானே. நான் ஜவுளிக் கடையில சேத்து வைச்சிருக்கிற சொத்தெல்லாம் உனக்குத் தானே. திரும்ப வீட்டுக்கு வா நான் முதல் தர்றேன். திரும்ப கடைய நடத்து. அறிவுள்ள புள்ள, கூட இருந்து வியாபாரத்தைப் பாத்தவன் விஷயம் தெரிஞ்சி நடந்துக்குவான்னு பொரும்போக்கா விட்டுட்டேன். இப்ப என்ன பணம் தானே போயிட்டுப் போவுது. வயசிருக்குது சம்பாதிச்சிக்கலாம் வீட்டுக்கு வா” என்றார்.

“போங்கப்பா இன்னைக்கி வெறுமானம். நாளைக்கி வர்றேன்” என தலையைக் குனிந்து கொண்டே முணுமுணுத்தார் சிதம்பரம்.

மறுநாள் அக்கா மாமா இரண்டு பேரும் அந்த வீட்டில் இல்லை. அந்த ஊரிலேயே இல்லை. அதற்குப் பின் அவர்களைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.

கமலம் சமையல் வேலையை மிக சீக்கிரமாக முடித்துவிடுவார். அதில் அவர் ஒரு எந்திரத் தன்மையை அடைந்துவிட்டிருந்தார். அவர் சமையலும் ஒரு எந்திரத்தால் செய்யப்பட்டதைப் போலவே இருக்கும். அவர் கணவரோ, மகனோ அதைக் குறை கூற மாட்டார்கள். அவர்களும் எந்த முகக் குறிப்பும் இல்லாமல் அதைச் சாப்பிட்டு எழுந்துவிடுவார்கள்.

கமலத்தின் அன்றைய காலை சாப்பாடு தயாரிக்கும் பணி முடிந்தது. சமையல் மேடையைக் கழுவித் துடைத்துவிட்டு, முன் அறைக்கு வந்தார். அங்கே அந்த இளைஞன் உட்கார்ந்திருந்தான். அவரைப் பார்த்து புன்னகைத்தான். அந்தப் புன்னகையின் வசீகரத்தில் அவர் தன்னை மறந்தார்.

“முன்னயே நீயா வந்த?” என சைகையால் கேட்டார்.

அவன் “ஆமாம்” என தலையாட்டினான்.

“எங்க போன?” என்றார்.

அவன் மீண்டும் புன்னகைத்தான்.

“டீ சாப்டு” என்றார்

அவன் வேண்டாம் என்றான்.

மெல்லிய குரலில் “இட்லி சாப்புடுறியா” என்றார்.

அவன் வேண்டாம் என்று தலையாட்டினான்.

அவர் “இரு நான் கொண்டு வர்றேன்” என்றுவிட்டு உள்ளே போனார். இரண்டு இட்லிகளை தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்தார். அறையில் அவனைக் காணவில்லை. முன் வாசலுக்கு வந்து பார்த்தார். தெருவில் யாரும் இல்லை.

வீட்டின் வெளிப்புறம் அமைதியை உள்வாங்கி மேலும் அமைதியை பரப்பிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது. வீட்டையொட்டியிருந்த இருவாட்சி மரம் தன் அபூர்வத் தன்மையால் அந்த வீட்டையும் ஒரு அபூர்வப் பொருளாக மாற்றியிருந்தது. வீட்டைச் சுற்றி இன்னும் இரண்டு வீடு கட்டும் அளவுக்கு இருந்த காலியிடத்தை, தக்காளிச் செடிகளும், புடலை அவரை, சுரைக் கொடிகளும் தன்னிச்சையாய் வளர்ந்து ஆக்கிரமித்திருந்தன. புற்களும் பூடுகளும் ஏராளமாக மண்டி, வீடு ஒரு காட்டுக்குள் இருப்பதைப் போன்ற தோற்றத்தில் இருந்தது. காம்பவுண்ட்டிலிருந்து வீட்டுக்குப் போக இருந்த பாதை ஒற்றையடிப் பாதையாக சுருங்கி மெலிந்திருந்தது.

ஜோதி எங்கோ போய்விட்டு வீட்டுக்கு வர சாலையிலிருந்து தெருமுக்கில் திரும்புவது தெரிந்தது. கணவரின் தலை தெரிந்ததும், கமலம் உள்ளே போய்விட்டார்.

ஜோதிக்கு இப்போது எண்பது வயதிருக்கும். கருவூல அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கண் பார்வை தீர்க்கம். காது நன்றாகக் கேட்கிறது. ஒல்லியான சரீரம் வேகமாக நடப்பார். அவரும் பசுபதியும் சேர்ந்து போனால் பசுபதி வயோதிகராகத் தெரிவார்.

அவர் உள்ளே வரும்போது முன்அறையில் அப்படி ஒரு இளைஞன் உட்கார்ந்திருப்பான் என அவர் எதிர்பார்க்கவில்லை. விருந்தாளியை வரவேற்பது போன்ற தொனியில், புன்னகையைவிடப் பெரிதாக சிரிப்பை விடச் சிறிதாக ஒன்றைச் செய்தார். வேகமாக உள்ளறைக்குப் போனார். பசுபதி தூங்கிக் கொண்டிருந்தார். ஜோதி சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு பனியனை மாட்டிக் கொண்டார். வெளியே வெய்யிலில் உட்கார்ந்து கொண்டு கமலம் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தார்.

“இந்தப் பக்கம் நிழல்ல வந்து உட்காரு” எனக் கைகாட்டினார். அவர் “அவ்வளவுதான் முடிஞ்சது” என்பது போல சிரித்தார்.

ஜோதி “அவன் யாரு” எனக் கையாட்டி கேட்டார்.

அவர் “வந்துட்டானா” என்றார் ஆச்சரியமாய். ஒரு கணம் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்திருந்தவர், தெரியல எனக் கைவிரித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தார்.

ஜோதி உள்ளறைக்குப் போய் பார்த்தார். பசுபதி கட்டிலில் படுத்திருந்தார். ஏதாவது காரணமாக மகனைப் பார்க்கத்தான் அவன் வந்திருக்க வேண்டும் என நினைத்தவராய் மீண்டும் முன்னறைக்கு வந்தார். அவன் இன்னமும் அங்கே தான் உட்கார்ந்திருந்தான். இவர் பேனைப் போட்டுவிட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டார். வெளியே நடந்து போய்விட்டு வந்தது அசதியாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டார்.

ஜோதியின் அப்பாவும் ஒரு ஜவுளி வியாபாரிதான். வாலிபனாய் இருக்கும் போது, இலங்கைக்கெல்லாம் போய் வியாபாரம் செய்திருக்கிறார்.  ஜோதி சிறுவனாய் இருந்தபோது, அவர் அந்த விஷயங்களை கதைகதையாய் சொல்லுவார். அங்கே காய்கறிகள் எல்லாம் பெரிது பெரிதாக இருக்கும். கத்திரிக்காய் சுரைக்காய் அளவுக்கு இருக்கும். சுரைக்காய் ஒரு கூடையில் ஒரு காயை மட்டும் வைக்கும் அளவுக்குப் பெரிதாக இருக்கும். தேங்காயில் ஒரு வல்லம் (நான்கு படி) இளநீர் இருக்கும். இங்கே பிச்சையெடுப்பவர்கள் கையில் வைத்திருப்பதெல்லாம் அந்த தேங்காய் ஓடுதான் என்பார்.

ஜோதி பிச்சை கேட்டு வருபவர்களின் கைகளை ஆராய்ச்சி செய்வதைப் போலவே எப்போதும் பார்ப்பார். அதில் இருக்கும் ஓடு தேங்காய் ஓடு என்பதை அவரால் நம்பமுடியவில்லை.

அவனிடமும் அம்மாவிடமும் அன்பாகத்தான் இருந்தார். ஆனால் எப்படி அப்படி நடந்து கொண்டார் என இன்னமும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. திடீரென ஒருநாள் அப்பா காணாமல் போய்விட்டார்.  அதே தெருவில் இருக்கும் பெண்ணை அவர் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டதாக ஊரெல்லாம் ஒரே பேச்சாய் இருந்தது.

அம்மா வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு தலைத் தலையாய் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். அந்த பெண்ணின் கணவன் வாசலில் வந்து நின்று அப்பாவை பச்சை பச்சையாய் திட்டினான்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆளாளுக்குப் பேசி அவனை அங்கே இருந்து அனுப்பி வைத்தார்கள்.

அப்பாவின் மீது அளவற்ற கோபம் இருந்தாலும், அவரின் மீதான ஏக்கம் ஜோதியின் மனதில் பிசின் மாதிரி நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்தது. அப்பா என்றாவது ஒருநாள் அம்மாவை இல்லாவிட்டாலும் தன்னையாவது வந்து பார்ப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை.

ஜோதியின் அப்பா அடர்ந்த தலைமுடியுடன், மையிட்டதைப் போன்ற மீசையுடன் ஒளிரும் வெண்கலச் சிற்பம் போன்ற இளமையின் பூரணத்தில் தான் இப்போதும் அவர் மனதில் இருந்தார். தன் கிழ மனதுக்குள் இருக்கும் இளம் அப்பாவின் குளிர்ந்த முத்தத்தை அவர் எப்போதும் தன் கன்னத்தில் உணர்ந்தபடியே இருந்தார்.

ஜோதியின் மூடிய விழிகளுக்குள் இருந்து ஒரு கண்ணீர்த் துளி எட்டிப் பார்த்து, கண்களுக்குக் கீழே இருந்த பள்ளத்தில் தயங்கி நின்றது. அந்த இளைஞன் வீட்டுக்குள் என்னவோ தேடுவதைப் போல இருந்தது. திடுக்கிட்டு விழித்தார். அனிச்சையாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். சரியான வேக்காடாய் இருந்தது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தார். இளைஞனைக் காணவில்லை. எழுந்து போய் தண்ணீர் குடித்தார்.

உள்ளறையில் தரையில் கமலம் ஒருக்களித்து ஒடுங்கி பாவம் போல படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். கட்டிலில் இன்னும் பலமணி நேரம் தூங்குபவரைப் போல பசுபதி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.

சமையல் கட்டில் செய்து வைத்திருந்த இட்லியும், சாம்பாரும் ஆறிப் போய் இருந்தன. ஜோதி தட்டில் இரண்டு இட்லிகளைப் போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.

சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். பத்து மணி ஆகியிருந்தது. இப்போதே இவ்வளவு சலிப்பாய் இருக்கிறது. இன்னும் மிச்சப் பொழுதும் எப்படிப் போகப் போகிறதோ என அவருக்குப் பயமாய் இருந்தது.

அவர் சாப்பிட்டு முடிக்கும்போது, கமலமும், பசுபதியும் எழுந்தார்கள். எழுந்துபோய் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தார்கள். பசுபதியின் பார்வை தரையில் ஒரு புள்ளியில் நிலைத்திருந்தது. கமலத்திடம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதற்கான எந்த வெளிப்பாடும் இல்லை. சாப்பிடும் முன் எப்படி இருந்தாரோ அப்படித்தான் சாப்பிடும் போதும், சாப்பிட்ட பின்னும் இருந்தார்.

அப்போது அந்த இளைஞன் வீட்டுக்குள் நுழைந்து, தன் வீட்டைப் போல சர்வ சகஜமாய் உள் அறைக்குப் போனான். பசுபதியோ, கமலமோ அவனைக் கவனிக்கவில்லை. அந்நியனின் நடமாட்டத்தை உள்ளுணர்வாகவும் அறியாதவர்களாக இருந்தனர்.

ஜோதிக்கு என்னவோ புரிவது போல இருந்தது. சந்தேகத்துடன் எழுந்து உள்ளறைக்குப் போய்ப் பார்த்தார். அங்கே அவனைக் காணவில்லை. அவன் வந்தது மாயக்காட்சியாய் இருக்குமோ என யோசித்தார். அப்படி நினைக்க முடியவில்லை என்பதைக் கண்டு, திகிலில் அவருக்கு வியர்த்துவிட்டது.

மூவருமே பல சமயங்களில் அவனை அங்கே கண்டனர். அவன் யாரோடும் எதுவும் பேசவில்லை. யாருக்கும் அவனோடு பேசும் துணிச்சல் வரவில்லை. சில சமயங்களில் அவனை சிநேகிதனாக உணர்ந்தனர். நாளாக நாளாக அவன் இருப்பு அங்கே மிக இயல்பானதொன்றாக ஆகிவிட்டது. கமலம் தனியாக இருக்கும் போது, சைகையில் ஏதாவது அவனோடு உரையாட விரும்பினார். என்ன கேட்டாலும் அவன் புன்னகைத்துக் கொண்டுதான் இருந்தான். ஒருமுறை அவனிடம் மேலே கைகாட்டி, “அக்காவும், மாமாவும் நல்லா இருக்காங்களா?” என்றார். அப்போது அவர் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சரம் சரமாய்க் கொட்டின.

“என்னை கூட்டிப் போயிடு. உடம்பெல்லாம் நோவுது. கண் சரியா தெரியல. காது ஒன்னும் கேக்கல. இன்னும் நான் எதுக்கு இந்த பூமிக்கு பாரமா?” என ஆவேசம் வந்தவரைப் போல படபடவென சைகையிலேயே பேசிவிட்டார். அந்த சமயத்தில் ஜோதி அங்கே வந்து அவரின் நடவடிக்கைகளைப் பார்த்து வியந்தவராய் நின்றார்.

கமலம் அவரைப் பார்த்ததும் எதுவுமே நடக்காதது போல உள்ளறைக்குப் போய்விட்டார்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. ஜோதி இரவு முழுவதும் சாய்வு நாற்காலியிலேயே கிடந்து தூங்கிக் கொண்டிருந்தார். எழுந்து போய் படுக்கையில் படுக்க வேண்டும் என்று தோன்றவே இல்லை. வெயில் வந்த பின்னும் தூங்கிக் கொண்டே இருந்தவர் கண் விழித்தபோது, அறையில் அவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். திடீரென அவருக்கு அனைத்தின் மீதும் சலிப்பு ஏற்பட்டது. எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அவன் தோளைத் தட்டி திரும்ப வைத்தார். அவன் புன்னகைத்தான். அது அவருக்கு மேலும் சலிப்பூட்டுவதாய் இருந்தது. தலையெழுத்து என்பதைப் போலத் தலையில் தட்டிக் கொண்டே எழுந்து டாய்லெட்டுக்கு போனார்.

குளித்து தலை துவட்டிக்கொண்டிருந்த பசுபதிக்கு திடீரென தலைச்சுற்றலும் மயக்கமும் வந்தது. அப்படியே பொத்தென சேரில் விழுந்துவிட்டார். கமலமோ, ஜோதியோ அதைக் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் அவரே கண்விழித்து எழுந்தார். அசதி ஆளைத் தள்ளியது. மெல்ல நடந்துபோய் உள்ளறைக் கட்டிலில் சாய்ந்தார்.

நிலைப்படி அருகே, அந்த இளைஞனின் உருவம் போலத் தெரிந்தது. நடுங்கும் கைகளைக் குவித்து அவனைக் கும்பிட்டார்.

ஆடிப் பதினெட்டன்று விடியற்காலையிலேயே வானம் கருங்கும்மென இருண்டிருந்தது. மழைக்கு முன்பான குளிர்ந்த காற்று உடலைத் தழுவி முத்தமிடுவதைப் போல இருந்தது.

அன்று ஜோதி கொஞ்சம் ஆட்டுக்கறி எடுத்து வந்திருந்தார். பசுபதி கறியை அரிந்து கொடுத்துவிட்டு, தேங்காய், மல்லி, மிளகாய் எல்லாம் அரைத்துக் கொடுத்தார். அன்று கமலம் அபூர்வமாகச் சுவையாகச் சமைத்திருந்தார். மூவரும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த இளைஞன் சற்று தூரத்தில் உட்கார்ந்து அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

“தம்பி கைகழுவிட்டு வந்து கொஞ்சம் சாப்பிடு, கமலம் இன்னைக்கி கறிக்குழம்பு அட்டகாசமா வச்சிருக்கா” என்றார் ஜோதி. சொல்லும்போதே அவரிடமிருந்து வெடிச் சிரிப்பொன்று கிளம்பியது.

 


குமாரநந்தன்

[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.