அவனைப் பார்க்கச் செல்கிறேன்

“என்ன ஆச்சு?” அவள் கேட்டாள்.

“எனக்குத் தெரியலை,” சிரிக்க முயன்றபடி சொன்னான். “நான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.”

“நீங்கள் உங்கள் வேலையில் மிகக் கடினமாக உழைக்கிறீங்க” என்று சொன்னாள். “நான் உங்ககிட்ட பலமுறை சொல்லிட்டேன்.”

“அடக்கடவுளே… சரி, சரி, பெண்ணே..,” அவன் சொன்னான், “அது என்னுடைய தவறல்ல!” அவன் மீண்டும் முயற்சி செய்தான்; மீண்டும் பரிதாபமாகத் தோல்வியுற்றான். கிளர்ச்சியூக்கம் அவனுள் ஒரு பல் வலியைப் போல நிறைந்திருந்தது, ஆனால் அது அவன் தசையினுள் நுழைய மறுத்துவிட்டது. அவன் அவளது மார்பைத் தடவினான். அவள் அவனின் மனைவி. ஒரு கறுப்பினப் பெண்ணைச் செய்யச் சொல்வதைப் போல அவனால் இவளிடம் தனக்கு உதவும் பொருட்டு, சற்று நேரத்திற்கேனும், தனக்காக ஒரு மிகச் சிறிய செயலைச் செய்யும்படி கேட்டுவிட முடியாது. ஒரு கறுப்பினப் பெண்ணின் உருவம் அவனுள்  லேசான கிளர்ச்சியைத் தூண்டியது, தொலை தூரத்து வெளிச்சமொன்றைப் போல; ஆனால் அந்தக் கிளர்ச்சி மறுபடியும் ஒரு வலியைப் போலத்தான் இருந்ததே தவிர அவனை இயங்க உந்தவில்லை. அவன் இயக்கத்தைச் சாத்தியமற்ற ஒன்றாகத்தான் ஆக்கியது.

“தூங்கப் போங்க,” கனிவாகச் சொன்னாள். “நாளை உங்களுக்கு ஒரு கடினமான நாளாக இருக்கப் போகிறது.”

“ஆமாம்,” என்று சொன்னான். அவள் முகம் நோக்கி ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்தான், அவனின் ஒரு கை இப்பொழுதும் அவள் மார்பின் மீது இருந்தது. “க்காட்டாம் தி நிக்கர்ஸ்… நாற்றமடிக்கும் கறுப்பு நீக்ரோக்கள். அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறாயா? அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று உனக்குத் தோன்றவில்லைதானே? இல்லைதானே..?”

“அவர்கள் நாளை வீதிகளில் இறங்கப் போகிறார்கள்,” என்று சொல்லி அவன் கைகளை விலக்கிவிட்டாள். “இப்போது கொஞ்சம் தூங்க முயற்சி செய்யுங்கள்.”

அவன் அப்படியே படுத்துக் கிடந்தான், ஒரு கை அவன் கால்களுக்கிடையில் வைத்து தன் மனைவியின்  மிருதுவான தெய்வீக வடிவழகை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். கதவிடுக்குகளின் வழி மங்கலான ஒரு ஒளி நுழைந்து வந்தது; சந்திரன் முழுமையாகயிருந்தது. தொலைதூரத்தில் இரண்டு நாய்கள், ஏதோவொரு முடிவெடுக்க வேண்டும் என்று தங்களுக்குள் உறுதி கொண்டவை போல இடைவிடாது ஒன்றுக்கொன்று மாறிமாறி குரைத்துக்கொண்டிருந்தன. வடக்கு திசைப் பக்கமாக சாலையில் ஒரு கார் வருவது அவன் காதில் கேட்டது. எழுந்து பாதியமர்ந்த நிலையில் அவனது கை, படுக்கையருகில் ஒரு நாற்காலியில் கிடந்த பேண்டின் மேலிருந்த கைத்துப்பாக்கித் தோலுறையை நோக்கிச் சென்றது. வெளிச்சம் ஜன்னலிடுக்குளைத் தாக்கி அறை முழுதும் வீசிக் கடந்து போவது போலத் தோன்றியது, பின்பு வெளியேறிவிட்டது. காரின் சப்தம் மெல்ல நழுவி விலகியது. அது மண்தரையைத் தொட்டது அவனுக்குக் கேட்டது, அதன் பிறகு எதுவுமே கேட்கவில்லை. அனேகமாகக் கல்லூரிக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் சில தடிக்கருவாயன்களாகத்தான் இருக்கும் – ஆனால் எங்கிருந்து வருகிறார்கள்? கடிகாரம் அதிகாலை இரண்டு மணி என்று அவனுக்குச் சொன்னது. அவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரக்கூடும், பெரும்பாலும் வெளிமாநிலங்களிலிருந்து. அவர்கள் அத்தனை பேரும் நாளை நீதிமன்றத்தில் இருப்பார்கள். கருப்பன்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். இருக்கட்டும், இவர்களும் கூடத்தான் தயாராக இருப்பார்கள்.

அவன் முனகினான். அவனுக்குள் அடைந்துகிடப்பது எதுவோ அதை வெளியேற்றிவிட விரும்பினான்; ஆனால் அது வெளிவருவதாகயில்லை. “அடக்கடவுளே!” என்று சத்தம் போட்டுச் சொன்னபடி, கிரேஸிடமிருந்து விலகி மறுபக்கம் மீண்டும் திரும்பி சாத்திய ஜன்னல்களை வெறித்தான். அவன் பெரிய உடலுடைய ஆரோக்கியமான மனிதன், உறங்கிப் போவதில் அவனுக்கு ஒருபோதும் சிக்கல் இருந்ததில்லை. மேலும், உடலைத் தூண்டச்செய்வதில் பிரச்சினை வருமளவுக்கு அவனுக்கு இன்னும் வயதாகிவிடவும் இல்லை – நாற்பத்து இரண்டு தான் ஆகியிருந்தது. அவன் கடவுள் பயம் கொண்ட நல்ல மனிதனும் கூட, தன் வாழ்நாள் முழுதும் கடமையை முழுமையாகச் செய்ய முயன்றவன். பல வருடங்களாகத் துணை கிராம காவலதிகாரியாகப் பணியாற்றுபவன். இதுவரை அவனை எதுவுமே கவலையடையச் செய்ததில்லை, நிச்சயமாக உடல் தூண்டப் பெறாதது அதில் ஒன்றில்லை. சில நேரங்களில், மற்ற எல்லா ஆண்களையும் போலவே, கிரேஸ் தனக்குக் கொடுக்கும் இன்பத்திற்குச் சற்று மேலதிகமாக காரசாரம் தேவையெனத் தோன்றும்போது கொஞ்சம் தொலைவிற்கு வண்டியோட்டிச் சென்று எவளாவது ஒரு கறுப்புக் கட்டையை அள்ளி போட்டுக் கொள்வதோ அல்லது கைது செய்வதோ உண்டுதான், இரண்டுமே ஒரே காரியத்தில்தான் முடியும். ஆனால் அவனால் அதை இப்போது செய்ய முடியாது, இனி எப்போதுமே முடியாது. ஒருவரின் புட்டம் அந்தரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும்போது என்ன நடக்குமென்று சொல்லிவிட முடியாது. அவர்கள் இதற்கு முன்பு கூட மனிதர்களைக் கொல்லும் அளவிற்குக் கீழ்த்தரமானவர்கள்தான், அவர்கள் ஒவ்வொருவரும். ஏன், அந்தப் பெண்ணே கூட, அவள் இவ்வளவு இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்று நம்ப வைக்கும் அதே கணத்தில் கொலை செய்துவிடக் கூடும். கருப்பன்கள். எதை மனதில் கொண்டு சர்வ வல்லமை பொருந்திய ஆண்டவன் இந்த கருப்பன்களைப் படைத்தார்? சரி சரி, நிஜம்தான். அந்த விஷயத்தில் அவர்கள் வல்லவர்கள்தான். ஐயோ, ஐயோ..கடவுளே!

தூங்குவதற்கு இது உதவவில்லை. அவன் மீண்டும் திரும்பினான், மீண்டும் கிரேஸை நோக்கி, அவளின் வெப்பமான உடலை நோக்கி நெருங்கி நகர்ந்தான். இதற்கு முன் அவன் உணர்ந்திராத ஏதோவொன்றை அவன் உணர்ந்தான். அவனுக்கு அவளைப் பற்றிக் கொள்ளவேண்டும் எனத் தோன்றியது. அவளைப் பற்றிக் கொள்ளவேண்டும், இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும், மீண்டும் காலையில் எழுந்துகொள்ளும் அவசியமற்று, நகரத்திற்குள் சென்று அந்த முகங்களை எதிர்கொள்ளும் தேவையுமற்று, ஒரு குழந்தையைப் போல இவளுக்குள் புதைந்துவிட வேண்டும். எவ்வளவு அசிங்கமான முகங்கள்… இயேசுவே! அந்த ஜெயில் கூடாரத்துக்குள் மீண்டும் நுழையக்கூடாது, அந்த வாசனையை முகரக்கூடாது, அந்தப் பாடலை கேட்கவே கூடாது; அந்த இழிவான சுருள்சுருளான பிசுபிசுப்படைந்த முடியை அவன் விரல்களுக்கடியில் மீண்டும் உணரவே கூடாது, வேகமாக உள்பாயும் லத்தியின் மீதேறிக் குதிக்கும் கறுத்த மார்பகங்களை மீண்டும் பார்க்கவே கூடாது, அந்த முனகல் சத்தங்களை மீண்டும் கேட்பதோ, இரத்தம் கீழே வழிந்தோடுவதையோ கொழுத்த உதடுகள் பிளவுபட்டுக்கிடப்பதையோ அடைபட்ட கண்கள் திறக்க முயலும் போராட்டத்தையோ ஒருபோதும் இனி பார்க்கக்கூடாது. அவர்கள் விலங்குகள், விலங்குகளைவிடச் சற்றுகூட மேம்பட்டவர்கள் அல்ல, அப்படியான மனிதர்களை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது? அவர்கள் இங்கே நாகரீகமான ஒரு நாட்டில் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறார்கள், அப்படியிருந்தும் விலங்குகளைப் போலத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் வீடுகள் இருண்டிருக்கும், ஜன்னல்கள் அட்டைப்பெட்டியாலோ எண்ணெய் பிசுப்பு துணிகளாலோ அடைக்கப்பட்டிருக்கும். குடலைப் புரட்டி வெளியேற்றும் வாந்தி வருமளவிற்கு நாற்றமடிக்கும். அங்கேயேதான் அவர்கள் அமர்ந்திருப்பார்கள், குழந்தைகளைப் பெற்றுப் பெற்றுத் தள்ளியபடி, ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒன்று வெளிவருமோ என்று தோன்றும்படி. உலகத்தைப் பற்றிய அக்கறை எதுவுமில்லை என்பதைப் போலச் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இசையை உரக்க ஒலிக்கவிட்டபடியும் இருப்பார்கள். அவர்களுக்கு அந்த அக்கறை இல்லையென்பதை அவன் உறுதியாக நம்பினான். கதவருகே வந்து சூரிய வெளிச்சத்தில் வெறுமனே சும்மா நின்றுகொண்டிருப்பார்கள், முட்டாள்களைப் போல, எதைப்பற்றிய சிந்தனையுமே இல்லாமல். ஆனால் அங்கு போனால் எதையாவது சொல்லிவிட்டு அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதையே செய்யத் திரும்பப் போய்விடுவார்கள். ‘ஆமாம் மிஸ்டர். ஜெஸ்ஸி.  நான் நிச்சயமாகச் செய்கிறேன் மிஸ்டர்.ஜெஸ்ஸி’. ‘இன்று நல்ல வானிலை மிஸ்டர்.ஜெஸ்ஸி’. ‘ஓ, அப்படியா? நன்றி மிஸ்டர்.ஜெஸ்ஸி’. அஞ்சல்வழி விற்பனை அலுவலகத்தில் சிறிது காலம் அவன் வேலை பார்த்தான், இவர்கள் வாங்கிய பொருட்களுக்கான பணத்தை வசூல் செய்வது அவனது பணி. கண்ணெதிரே தாம் ஏமாற்றப்படுவதைக் கூட தெரிந்துகொள்ளமுடியாத அளவு படுமுட்டாள்களாக இருந்தனர், ஆனால் அதைப் பற்றி அவனுக்கு ஒரு கவலையுமில்லை – அவனுக்கிடப்பட்ட பணியை மட்டும் அவன் செய்தால் போதும். அவர்கள் தாமதமாக வருவார்கள் – பணத்தை கையருகே வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாதவர்கள்; அவர்களைப் பயமுறுத்துவது சுலபம், உண்மையில் அவனுக்கு இவர்களிடத்தில் ஒருபோதும் ஒரு பிரச்சினையும் இருந்ததில்லை. என்ன எழவோ… அவர்கள் எல்லோருக்குமே அவனைப் பிடித்திருந்தது, கதவருகே வரும்போதெல்லாம் குழந்தைகள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தனர். அவன் அவர்களுக்குச் சிலசமயங்களில் மிட்டாய்களோ பப்பிள் கம்மோ கொடுத்து அவர்களின் கரடுமுரடான குட்டிக் குண்டுத் தலைகளைத் தடவிக்கொடுப்பான் – அந்த மிட்டாய்களில் விஷத்தைத் தடவிக் கொடுத்திருந்திருக்கலாம். அந்தக் குழந்தைகள் இப்போது வளர்ந்துவிட்டனர். அவர்களில் ஒருவனுடன் அவனுக்கு இன்று ஒரு தகராறு கூட ஏற்பட்டது.

“அங்கே இன்று ஒரு கருப்பன் இருந்தான்,” என்று சொல்லிவிட்டு நிறுத்தினான்; அவன் குரல் விநோதமாக ஒலித்தது. அவன் கிரேஸை தொட்டான். “நீ முழுச்சிருக்கியா?” அவன் கேட்டான். அவள் பொறுமையற்று ஏதோ முணுமுணுத்தாள், அவனைத் தூங்கப்போகச் சொல்லியிருப்பாளாக இருக்கும். அது பரவாயில்லை. தான் தனியாக இல்லை என்பதை அவன் தெரிந்துகொண்டான்.

“என்ன ஒரு வேடிக்கையான காலமிது,” அவன் சொன்னான், “இது போன்ற ஒரு விஷயத்தைப் பற்றி யோசிப்பதே… – நீ கேட்டுக்கொண்டிருக்கிறாயா?” அவள் மீண்டும் எதையோ முணுமுணுத்தாள். அவன் திரும்பி மல்லாந்து படுத்தான். “இந்தக் கருப்பன் கலகத்தலைவர்களில் ஒருவன். அவனோடு முன்பே கூட ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அவனைப் பண்ணையில் மூன்று நான்கு முறை கட்டி வைத்திருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். எது எப்படியோ, பிக் ஜிம்.சி. யும் உடன் சில பசங்களும் சேர்ந்து அந்தக் கருப்பனை இன்று உரித்தெடுத்துவிட்டார்கள்.” அவன் கிரேஸை பார்த்தான். அவள் கவனித்துக்கொண்டிருக்கிறாளா இல்லையா என்பதை அவனால் சொல்ல முடியவில்லை; அவளிடம் மீண்டும் அதைக் கேட்பதற்கும் பயம் அவனுக்கு. “பதிவு செய்வதற்கு என்று தனியாக அவர்களுக்கு ஒரு வரிசை இருந்தது, சரியா?” – அவன் சிரித்தான், ஆனால் அவள் சிரிக்கவில்லை – “பிக் ஜிம்.சி. விரும்பிய இடத்தில் அவர்கள் நிற்கவில்லை, மாட்டார்கள்… யாரும் எதுவும் நுழையமுடியாதபடி அவர்கள் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி போக்குவரத்தை மறித்துக்கொண்டுதானே நிற்பார்கள். பிக் ஜிம்.சி. அவர்களைக் கலைந்து போகச் சொன்னான், அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அந்தப் பாடலை பாடியபடியே இருந்தார்கள். இந்தக் கருங்காலிப் பயல்தானே அக்கூட்டத்தின் தலைவன், அவன் நகர்ந்தால் மற்றவர்களும் நகர்ந்துவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டான் பிக் ஜிம்.சி. ஆனால் அவன் நகர்வதாய் இல்லை அடுத்தவர்களையும் நகர விடுவதாக இல்லை. அதனால் அவர்கள் அவனையும் மற்ற சிலரையும் அடித்து வேனுக்குள் தூக்கி எறிந்தார்கள் – ஆனால் சிறைக்கு வரும்வரை அந்தக் கருப்பனை நான் பார்க்கவில்லை. அவர்கள் அப்போதும் பாடிக்கொண்டிருந்தார்கள், அவர்களை நான் நிறுத்தியாக வேண்டும். அவர்களிடம் நான் சொல்லி அதை நிறுத்தமுடியாது ஆனால் அவனால் அது முடியுமெனத் தெரியும் எனக்கு. அவனைத் தனியாக ஒரு செல்லில் கிடத்தியிருந்தார்கள், அவன் தரையில் படுத்தபடி வெட்டியிழுத்துக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தான். பிக் ஜிம் சி.யும் அவன் ஆட்களும் அடித்ததில் அவன் காதுகளிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றுதானே உனக்குத் தோன்றுகிறது? லத்தியை அவன் மீது விளாசினேன், அவன் மேலும் கொஞ்சம் துடிதுடித்து ஒரு விதமாகக் கத்தினான் – ஆனால் அவனிடம் குரல் மிச்சம் இல்லை. “நீ அவர்கள் பாடுவதை நிறுத்தச் சொல்,” நான் அவனிடம் சொன்னேன், “உனக்கு நான் சொன்னது கேட்டதா? அவர்கள் பாடுவதை நிறுத்தச் செய்.” அவன் நான் சொன்னது கேட்காதது போல நடித்தான், நான் மீண்டும் லத்தியை அவன் கைகளில் ஓங்கி அடித்தேன். அவன் தரையில் உருண்டதும் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. அவன் பேண்டிலேயே மூத்திரம் பெய்திருந்தான்.”  நிறுத்தினான். அவனது வாய் உலர்ந்து தொண்டை உப்புக்காகிதம் போலக் கரகரத்துப் போயிருந்ததாக உணர்ந்தான்; அவன் பேசப்பேச வெளிவர மறுத்த அந்த விசித்திரமான உணர்வுத்தூண்டல் அடங்கிப்போகத் தொடங்கியது. “நீங்கள் எல்லோரும் பாடுவதை நிறுத்தவேண்டும், என்று நான் அவனிடம் சொன்னேன், நீதிமன்ற வளாகத்திற்கு வந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்வதும் மக்களுக்குத் தொல்லை கொடுப்பதையும் எங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுப்பதையும் உடல்நலமற்ற வெள்ளைப் பெண்மணிகளுக்கு மருத்துவம் பார்க்கவிடாமல் டாக்டர்களைத் தடுப்பதையும் வடக்கத்தியன்கள் வாயில் விழுமளவு நம் நகரத்திற்குக் கெட்ட பெயரை வாங்கித் தருவதையும் நிறுத்தியாக வேண்டும்-!” இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் அந்தப் பையனை லத்தியால் இடித்துக் கொண்டிருந்தான். இன்னும் கழட்டாமலிருந்த அவனின் தலைக்கவசத்தின் பின்னாலிருந்து வியர்வை வடிந்துகொண்டிருந்தது. அப்பையன் தனது அழுக்கிலும் நீரிலும் இரத்தத்திலும் உருண்டான், லத்தி விரைப்பைகள் மீது பட மீண்டும் கத்த முயன்றான். ஆனால் கதறல் மேலெழவில்லை, ஒருவிதமான பிதற்றலும் முனகலும்தான் வெளிப்பட்டது. அவன் நிறுத்திவிட்டான். இந்தக் கறுப்பனை அவன் கொன்றுவிடக்கூடாது. சிறையறை மிகக் கடுமையான நாற்றத்தால் நிறைந்திருந்தது. அந்தப் பையன் அசைவற்று கிடந்தான். “நான் சொல்றது உனக்குக் கேட்குதா?” அவன் அழைத்துப் பார்த்தான். “வாங்கினது போதுமா?” அப்பாடல் அப்போதும் பாடப்பட்டுக்கொண்டிருந்தது. “வாங்கினது போதுமா?” அவன் கால் அப்பையனின் மீது திடீரென எத்தியது, அப்படிச் செய்வான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அது நன்கு வசமாக அந்தப் பையனின் முகத்திலேயே விழுந்தது. ‘ஜீஸஸ், இவன் சாதாரண கருப்பன் அல்ல, ஒரு கேடுகெட்ட காட்டெருமை’ என்று நினைத்தான் அவன். மீண்டும் உரக்கக் கத்தினான், “நீ வாங்கினதெல்லாம் போதுமா? அவர்கள் பாடுவதை இப்போது நிறுத்தச் செய்கிறாயா இல்லையா?”

ஆனால் அந்தப் பையன் மூர்ச்சையாகியிருந்தான். அந்தப் பையன் துடித்துக்கொண்டிருந்ததைவிட இப்போது அவன் மோசமாக உதறல் கொண்டான். தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைந்தான். அதே நேரத்தில் மிக விசித்திரமான, தனிப்பட்ட ஒரு ஆனந்தத்திற்கு நெருக்கமான ஒரு உணர்வை அடைந்தான்; அவனுக்குள் ஆழ்ந்திருந்த, அவன் நினைவடுக்குகளுக்குள் ஆழப் படிந்திருந்த ஏதோவொன்று தூண்டப்பட்டது, ஆனால் அது எதுவாயினும் அது அவன் நினைவிலிருந்து நழுவிச் சென்றிருந்தது. அவன் தலைக்கவசத்தைக் கழற்றிவிட்டு சிறைக்கதவை நோக்கி நடந்தான்.

“வெள்ளையனே,” தரையில் அவனுக்குப் பின்னாலிருந்து அழைத்தான் அந்தப் பையன்.

அவன் நின்றான். ஏதோவொரு காரணத்திற்காக அவனுடைய பிறப்புறுப்பை கைகளில் பற்றிக்கொண்டான்.

“உனக்கு மூதாட்டி ஜூலியாவை நினைவிருக்கிறதா?”

வாய் நிறைய இரத்தத்தோடும், இருளில் ஒளிரும் பூனையின் கண்களைப் போன்ற தன் ஒற்றைக் கண்ணை லேசாகத் திறந்து தரையில் கிடந்தபடி பேசினான் அந்தப் பையன். “என் பாட்டியின் பெயர் மிஸஸ்.ஜூலியா ப்ளாஸ்ஸம். ‘மிஸஸ்.’ ஜூலியா ப்ளாஸ்ஸம். எங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள் இனி சரியான பெயரைச் சொல்லித்தான் அழைக்கப்போகிறீர்கள் – அந்தப் பையன்களும் பாடுவதை நிறுத்தப்போவதில்லை. பரிதாபத்துக்குரிய வெள்ளைப் பொண்டுகளே நீங்கள் ஒவ்வொருவரும் மண்டை வெடித்து முற்றாகப் பிதற்றித் திரியும் வரையில் நாங்கள் பாடுவதை நிறுத்தப்போவதில்லை.” பிறகு அந்த ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டான்; இரத்தத்தைத் துப்பினான்; அவன் தலை பின்னால் தரையின் மீது விழுந்தது.

அவன் குனிந்து கீழே அந்தப் பையனைப் பார்த்தான், ஒரு வருடத்திற்கு மேலாகவே அவனை அவ்வப்போது பார்த்ததுண்டு என்ற ஞாபகம் சட்டென  வந்தது அவனுக்கு: கிழவி ஜூலியா அவனின் தபால் பட்டுவாடா வாடிக்கையாளர்களில் ஒருவர், மிக நல்ல மூதாட்டி. அவன் அவளைப் பார்த்துப் பல வருடங்களாகிவிட்டது, இறந்து போயிருப்பாள் என்று நினைத்திருந்தான்.

ஒருமுறை அவன் அவர்களின் முற்றத்திற்குள் நடந்து சென்றான், அந்தப் பையன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். அந்தப் பையனை நோக்கிப் புன்னகைத்துக் கேட்டான், “கிழவி ஜூலியா வீட்டில் இருக்கிறாளா?”

அந்தப் பையன் பதில் சொல்வதற்கு முன்னால் வெகுநேரம் அவனைப் பார்த்தான். “கிழவி ஜூலியா என்று யாரும் இங்கு இல்லை.”

“இது அவளுடைய வீடுதான். எனக்கு அவளைத் தெரியும். பல வருடங்களாக இங்குதான் வாழ்ந்துகொண்டிருந்தாள்.”

அந்தப் பையன் தலையசைத்தான். “உனக்குத் தெரிந்த கிழவி ஜூலியா வேறெங்காவது வாழ்பவராக இருக்கலாம், வெள்ளையனே. ஆனால் அந்தப் பெயரில் இங்கு யாருமில்லை.”

அவன் அந்தப் பையனைப் பார்த்தான்; அந்தப் பையன் அவனைப் பார்த்தான். அப்பையனுக்கு அப்போது கண்டிப்பாக பத்து வயதைத் தாண்டியிருக்காது. ‘வெள்ளையன்’. கிறுக்குச் சிறுவனோடு வம்பளந்துக் கொண்டிருப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. அவன் சத்தம் போட்டான், “ஹே, கிழவி ஜூலியா!”

ஆனால் வெறும் மௌனம் தான் அவனுடன் பதில் பேசியது. அச்சிறுவனின் முகத்திலிருந்த பாவனை மாறவேயில்லை. சூரியன் அவர்கள் இருவர் மீதும் நின்று நிதானமாகத் தாக்கியது. அவன் ஏதோவொரு கொடூரக் கனவில் தான் சிக்கிக்கொண்டதைப் போல உணர்ந்தான், ஒரு சிறுவனின் துர்சொப்பனம் அது; அவனே தன் சிறுவயதில் கண்ட கொடுங்கனவாகவும் இருக்கலாம். எந்த பெரிய மாற்றமும் நிகழ்ந்திராமல் மிகப் பரிச்சயமானவையெல்லாம் நுட்பமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் இடம்பெயர்ந்துவிட்டதைப் போன்றதொரு உணர்வு ஏற்பட்டது: இந்த மரங்கள், இச்சூரியன், முற்றத்திலிருக்கும் புல் திட்டுக்கள், ஓரஞ்சரிந்திருக்கும் தாழ்வாரம், வலுவற்ற தாழ்வாரப் படிக்கட்டுகள், ஜன்னல்களை மூடியிருக்கும் அட்டைப் பலகைகள், ஒரு குகையின் முகத்துவாரத்தைப் போலத் தோற்றமளிக்கும் கதவின் கருந்துளை, இந்தக் கருவண்டுச் சிறுவனின் கண்கள்… என எல்லாம்… எல்லாம் தீக்குணங்களால் உரமேற்றப்பட்டிருந்தன. ‘வெள்ளையன்’. அவன் அச்சிறுவனைப் பார்த்தான். “அவள் வெளியே போயிருக்கிறாளா?”

அச்சிறுவன் எதுவும் பேசவில்லை.

“சரி… நான் வந்து போனதாக அவளிடம் சொல். நான் அடுத்த வாரமும் வருவேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகரத் தொடங்கினான்; பிறகு நின்றான். “உனக்கு பப்பிள் கம் வேண்டுமா?”

அச்சிறுவன் ஊஞ்சலிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தான். அவன் திரும்பிப் பார்த்துச் சொன்னான், “உன்னிடம் இருப்பது எதுவும் எனக்கு வேண்டாம் வெள்ளையனே.” அவன் வீட்டிற்குள் நுழைந்து கதவுகளை அடைத்துச் சாத்தினான்.

இப்போது அந்தப் பையன் இறந்துவிட்டவனைப் போலக் காணப்பட்டான். ஜெஸ்ஸி அவனருகே சென்று அவனைத் தூக்கி தன் கைத்துப்பாக்கியால் அடித்தே அவன் தலையை முலாம்பழத்தைப் போல இடித்து உடைக்க விரும்பினான். அவன் நடுங்கத் தொடங்கினான், அது தனது ஆத்திரத்தினால் உண்டானது என்று அவன் நம்பினான். வியர்வை, சூடாகவும் குளிர்ந்தும் அவன் உடலிலிருந்து இறங்கி ஓடியது. தன்னுடைய அடிவயிற்று ஆழத்திலிருந்தே எழும் விசித்திரமான அடக்கவியலாத மிருகத்தனமான அலறல் ஒன்றினைப் போல அவர்கள் பாடிக்கொண்டிருந்தது அவனை நிரப்பியது. சில்லிடும் பயமொன்று அவனுள்ளிருந்து மேலே மேலே எழுவதை உணர்ந்ததும் அவன் ஓங்கிக் கத்தினான், ஓலமிட்டான், “அதிர்ஷ்டசாலிகளே… அவ்வப்போது கொஞ்சம் வெள்ளை இரத்தத்தை உங்களுக்குள்ளே பாய்ச்சிவிடுகிறோம்- உங்கள் பெண்கள் மூலமாக, உலகிலுள்ள அத்தனை கறுத்தச் சிறுக்கிகளுக்காக நான் வைத்திருப்பதெல்லாம் இதுதான்.” பின்பு அவன் நிற்பதற்கே மிகவும் பலமற்றுப் போனான்; அவனே திகைப்படையுமளவிற்கு, திகிலுறுமளவிற்கு, தனது கால் விரல்களுக்கடியிலேயே தான் வன்மையாக உறைந்துவிட்டதைப் போல உணர்ந்தான் – எந்த முன்னெச்சரிக்கையும் இல்லை; அவன் கைகளைக் கீழே தொங்கப்போட்டு அந்தப் பையனை வெறித்துப் பார்த்தான், சிறையறையை விட்டு வெளியே சென்றான்.

“அவர்கள் செய்வதெல்லாம் அதைப் பாடிக்கொண்டிருப்பதுதான்,” அவன் சொன்னான்.  “அதைப் பாடிக்கொண்டேயிருப்பதுதான்.” அதை முதன்முறையாக எப்போது கேட்டோம் என்பது அவன் நினைவில் இல்லை; அவன் வாழ்நாள் முழுதும் அதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். அந்தச் சத்தம் அவனுக்கு மிகவும் பரிச்சயமானதுதான் – ஆனால் அவன் மிகக் குறைந்த கவனம் செலுத்திய சத்தமும் அதுதான். – அது எப்போதும் விளங்கிக்கொள்ளமுடியாத ஒரு ஆறுதலை அளிப்பதாகவும் இருந்தது. அவர்கள் கடவுளிடம் பாடுகிறார்கள். அவர்கள் கருணைவேண்டிப் பாடுகிறார்கள், சொர்கத்திற்குச் செல்வோம் என்று நம்பினார்கள். சில மூதாட்டிகளின், சில மிக மூப்படைந்த ஆண்களின் கண்களைப் பார்க்கும்போது அவனுக்கே கூட தோன்றியிருக்கிறது, இவர்கள் என் ஆத்மாவின் கருணைக்காகவும்தான் பாடுகிறார்கள் என்று. ஆனால் நிச்சயமாக அவன் அவர்களின் சொர்கத்தைப் பற்றியோ அவர்களின் கடவுள் எது என்றோ அல்லது அது எதுவாக இருக்கமுடியுமென்றோ சிந்தித்துப் பார்த்ததே இல்லை; கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான், அப்படித்தான் அவன் நினைத்தான்; சொர்கம் என்பது நல்லவர்கள் சென்று சேரும் இடம் என்றே நினைத்தான். நல்ல மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பதைப் பற்றி அவன் அதிகம் யோசித்ததில்லை. அவன் ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்கும் அனைவரையும் சரியாக நடத்துவதற்கும் முயற்சி செய்தான்: கடவுளுக்கு எதிராகப் போரிட வேண்டும் என்றும் பைபிளில் தெளிவாக விதிக்கப்பட்டிருக்கும் விதிகளுக்கு எதிராக நடக்கவேண்டும் என்றும் கறுப்பர்கள் தங்கள் தலைகளில் ஏற்றிக் கொண்டது அவனுடைய தவறு அல்லவே. எந்த போதகரும் இதைத்தான் சொல்வார். அவன் தனது கடமையை மட்டும்தான் செய்தான்: கருப்பன்களிடமிருந்து வெள்ளை இனத்தவரையும் கருப்பன்களிடமிருந்து கருப்பன்களையுமே கூட காப்பதுதான் அது. நிறைய நல்ல கருப்பன்கள் இப்போதும் கூட உண்டுதான் – அவன் அதையும் நினைவில் கொள்ள வேண்டியிருந்தது; அவர்கள் அத்தனை பேருமே இன்று மதியம் பார்த்த அந்தப் பையனைப் போலக் கிடையாது; தங்கள் மக்களுக்கு நேர்வதைப் பார்த்து சில கருப்பன்கள் வருந்தவும் கூடும். இதெல்லாம் முடிந்தபிறகு அவர்கள் அவனுக்கு நன்றி சொல்வார்கள். அந்த வகையில், அவர்களில் சில சிறந்த மனிதர்கள், நேரிடையாக அவனுடைய கண்களை நோக்காமல் தாழ்ந்த குரலில் சிறு புன்னகையுடன் சொல்வார்கள் : நாங்கள் நிச்சயமாக உங்களுக்கு நன்றி கூறுகிறோம், மிஸ்டர்.ஜெஸ்ஸி. எங்கள் இதயத்தின் அடியாழத்திலிருந்து உங்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறோம். அவன் புன்னகைத்தான். அவர்கள் எல்லோருக்குமே பித்துப் பிடித்துவிடவில்லை. இந்தத் தொல்லையும் கடந்து போகும். – இளைஞர்கள் அந்தப் பாடலின் சில வார்த்தைகளை மாற்றி அமைத்துவிட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அவன் கவனம் கொண்டு அவ்வார்த்தைகளை இதற்கு முன்பு கேட்டதில்லை, இப்போதும் அவன் அவற்றைக் கவனிக்கவில்லை; ஆனால் வார்த்தைகள் மாறிவிட்டன என்பது அவனுக்குத் தெரியும்; அந்த அளவுக்கு அவன் அதைக் கேட்டிருக்கிறான். முகங்களும் மாறிவிட்டனவா என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவர்கள் பாடும்போது அவர்களின் முகங்களை ஒருபோதும் பார்த்தது கிடையாது, இந்தப் பிரச்சினை துவங்குவதற்கு முன்னாலும் கூட. ஆனால் தற்போது அவன் காண்பது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர்கள் அவனை வெறுத்தார்கள், அந்த வெறுப்பு அவர்களின் இதயங்களை விடக் கருமையானது, அவர்களின் தோல்களைவிடக் கருமையானது, அவர்களின் இரத்தத்தை விடச் சிவப்பானது, இதுவரையிலிருந்த அவன் லத்தியின் கடுமையைவிட வலிமையானது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும், பெருத்த வலியும் முற்றாகச் சோர்வுற்றதைப் போலவும் உணர்ந்தான். ஏதோ அவர்களின் வாசம் அவன் நாசியிலிருப்பதைப் போலவும் அது அவன் நுரையீரல்களை நிரப்பி அவன் மூழ்கிக்கொண்டிருப்பதைப் போலவும் உணர்ந்தான் – கருப்பன்களுக்குள்ளே மூழ்கிக்கொண்டிருந்தான்; தூங்கி விழித்ததும் இவை எல்லாவற்றையும் அவன் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். இது முடியவே முடியாது. ஒருவேளை இத்தனை காலமாக அவர்கள் பாடுவது இதைத்தான் உணர்த்திக்கொண்டிருந்ததோ. அவர்கள் கறுப்பினத்தவரைச் சொர்க்கம் அனுப்பி வைப்பதற்காகப் பாடவில்லை, அவர்கள் வெள்ளையர்களை நரகத்தில் தள்ளவே பாடிக்கொண்டிருந்தார்கள்.

பல வழிகளிலும் கருப்பன்களின் மீதான குற்றச்சாட்டுகளை எல்லோருமே உணர்ந்திருந்தனர், ஆனால் ஒருவரும் அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியவில்லை. அவனை விடவும் வயது மூத்த ஆண்கள், அவனை விடவும் நீண்ட காலமாகச் சட்டம் ஒழுங்கைக் காக்கும் பொறுப்பிலிருந்தவர்கள் கூட எப்போதையும் விட தற்போது அதீத மௌனமாக இருக்கின்றனர். அவனால் விளங்கிக்கொள்ள முடியாத வகையில் அவர்களின் கேலிப் பேச்சுகளின் தொனி தற்போது மாறிவிட்டது. இந்த ஆண்கள் அவனுக்கு முன்மாதிரிகளாக இருந்தவர்கள், அவன் அப்பாவின் நண்பர்களாக இருந்தவர்கள். அவர்கள்தான் ஒரு ஆணாக இருப்பதென்றால் என்ன என்று அவனுக்குக் கற்றுக்கொடுத்தவர்கள். இப்போது தைரியத்தை வரவழைத்துக் கொள்வதற்கும் அவர்களைத்தான் அவன் முன்னோக்க வேண்டியிருந்தது. அவன் செய்தது சரியா என்பது அவனுக்கே தெரியவில்லை என்பதல்ல அதன் அர்த்தம் – அவனுக்கு அது தெரியும், யாரும் அதை அவனுக்குச் சொல்ல வேண்டியதில்லை; முந்தைய ஆண்டுகளில் இருந்த சகஜமான மனநிலையை அவன் இழந்துவிட்டான், அவ்வளவுதான். ஆனால் அவன் அப்பாவின் நண்பர்களுக்கு இந்நாட்களில் கூடிப்பேசி செலவழிப்பதற்கு நேரமிருப்பதில்லை. அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் தங்கள் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கவே முனைந்தனர். ஏனென்றால், அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அவர்களின் அமைதியான நகரத்தின் இரவை வெடிச்சத்தங்கள் உலுக்கிப் போட்டிருந்தன. நல்லவேளையாக இம்முறை வெடிகுண்டுகள் தவறானவர்களின் கைகளுக்குக் கிடைக்காமல் போயிருக்குமோ என்று ஒவ்வொருமுறையும் ஒவ்வொருவரும் சத்தமின்றி எண்ணிக்கொண்டனர். அத்தனை துப்பாக்கிகளும் எங்கிருக்கின்றன என தங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்; ஆனால் இந்த இருண்ட உயிர்கள் வாழும் இரகசியமான இடத்தில் என்ன நகர்வுகள் திட்டமிடப்படுகின்றன என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒரு சிறு படையை உருவாக்கி ஒவ்வொரு கருப்பனின் வீட்டையும் சோதனையிட வேண்டும் என்று அவ்வப்போது ஆலோசிக்கப்படும், ஆனால் அவர்கள் அதை இதுவரை செய்யவேயில்லை. அப்படிச் செய்திருந்தால், முதலில், இந்த வடக்கத்திய வேசி மகன்கள் வரிந்துகட்டிக்கொண்டு இவர்களைக் காக்க வந்து சேர்ந்திருப்பார்கள்; இரண்டாவதாக, இந்த கருப்பன்கள் நகரம் முழுக்க பரவியிருக்கிறார்கள் என்றாலும் – இரயில் தண்டவாளங்களின் அருகேயுள்ள கீழ்ப் பள்ளங்களில், மேற்கே தூர இருக்கும் ஆலைகளின் அருகில், வசதியுள்ளவர்கள் மலைகளின் மீது, கல்லூரியின் அருகே சிலர் – ஒரு பகுதியில் இருக்கும் கருப்பன்களுக்கு நேர்வது எதுவும் மற்றொரு பகுதியில் இருப்பவர்களுக்கு உடனடியாக தெரியாமல் போய்விடுவதில்லை. இதன் அர்த்தம் கருப்பன்களை எதுவும் ஆச்சரியப்படுத்தாது என்பதுதான். மிக அரிதாகத்தான் மூத்தவர்கள் அதை வெளியே குறிப்பிட்டிருக்கிறார்கள், ஆனால் சில கருப்பன்களிடம் துப்பாக்கிகள் உண்டு என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் சொன்னதை வைத்துப் பார்த்தால் அதற்குக் காரணமும் இருந்தது, கருப்பன்களில் சிலர் இராணுவத்தில் இருந்திருக்கிறார்கள். கருப்பன்கள் இப்போது கூட இராணுவத்தில் இருக்கிறார்கள், இந்த அரைகுறை அரசாங்கத்திடமிருந்து திருடுவதற்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்பது கடவுளுக்கே தெரியும் – மொத்த உலகமே இதைச் செய்துகொண்டிருந்தது, ஐரோப்பிய நாடுகளையும் ஆப்பிரிக்காவில் இருக்கும் அத்தனை நாடுகளையும் பார்த்தாலே தெரியும். இதைப் பற்றி அவர்கள் கிண்டல் கூடச் செய்தார்கள் – கசப்பூட்டும் கேலிப்பேச்சுகள்; துரோகம் செய்துவிட்டதாக வாஷிங்டன் அரசாங்கத்தைச் சபித்தார்கள்; ஆனால் என் முன்னோடிகள் தாங்கள் விரும்பிய அந்தப் படையைத் திரட்டவேயில்லை. ஒருவேளை, அவர்களுடைய நகரம் வடக்கிலுள்ள சில நகரங்களைப் போல அத்தனை கருப்பன்களும் ஒரே இடத்தில் ஒன்றாக வாழ்வதைப் போல அமைக்கப்பட்டிருந்தால் அவர்கள் கிளம்பிச் சென்று அவ்வீடுகளுக்குத் தீ வைத்து அப்படியாவது அமைதியைக் கொண்டு வந்திருப்பார்கள். கருப்பன்கள் அனைவரும் ஒரே இடத்தில் வாழ்ந்திருந்தால் அவர்கள் அந்த ஒரு இடத்திற்கு மட்டும் தீ வைத்திருக்கக்கூடும். ஆனால் இந்த நகரம் அமைந்திருக்கும் விதத்தில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியாது. மொத்த நகரத்திற்கும் பரவிவிடும் – அது பரவுவதற்குக் கருப்பன்களும் உதவியிருப்பார்கள். ஆனால் எப்படியாவது அதைச் செய்துவிட வேண்டும் என்று அடிக்கடி பேசிக்கொண்டார்கள்; அதனால் அவர்களில் யாராவது ஒருவர் பித்துப் பிடித்துப் போய் தீக்குச்சியை உரசிவிடக்கூடும் என்று கூட பயந்தார்கள்.

தாங்கள் நேரடியாகச் சம்பந்தப்படாத எந்தப் போரைப் பற்றியும் மிக அரிதாகவே என் முன்னோடிகள் வாய் திறந்து பேசியிருக்கிறார்கள். ஆனால் ஒரு போரின் போது வீரர்களிடையே நிகழும் வார்த்தைகளற்ற உரையாடல் போன்ற ஒன்றை அவர்களுக்குள் இது நிகழ்த்தத் தவறிவிட்டது. ஒவ்வொரு மனிதனும், அவர்களின் உரையாடல்களிலிருந்து, வெடிச் சிரிப்புகளிலிருந்து, துண்டுப் பேச்சுகளிலிருந்து பல்வேறு அளவிலான இருண்மைகளில் விருட்டென வெளிப்படும் ஒரு திகிலூட்டும் அமைதியோடும், அவனாலேயே கூட விளங்கிக்கொள்ள முடியாத ஒரு இரகசியத்தோடும் மல்யுத்தம் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அது தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் போருடன் நேரடியாகத் தொடர்புடையதாக இருந்தாலும் நிச்சயமாக அவனுடைய கடந்த காலத்திற்கும் அந்தரங்கத்திற்கும் கூட தொடர்புடையதாகயிருந்தது. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான காரியங்களைத்தான் முன்பு செய்தார்கள் என்பதை அவர்களால் இனி உறுதியாக நம்ப முடியாது. மூத்தவர்களின் அந்தரங்கத்தில் அவர்களை மிரளச் செய்யும் எந்தக் கூறும் இருக்கக்கூடும். அது தன்னைத்தானே திடீரென வெளிப்படுத்தி அவர்களை அச்சுறுத்தலாம். அதை அவர்களால் அறியவும் அணுகவும் முடியாமல் இருக்கும்போதே தீர்ப்பு நாளின்போது ஆய்வுக்குட்படுத்தப்படும் என்பதைக் கனவில் கூட அவர்கள் நினைத்துப் பார்த்ததில்லை. கடந்த காலம், நிச்சயமாக நினைவிலிருந்து அகல மறுக்கும் அதே வேளையில் நினைவில் நிற்கவும் பிடிவாதமாக மறுக்கும் என்றும் கூட அவர்கள் கனவு கண்டதில்லை. மற்றவர்களின் உண்மையான பிரச்சினைகளுக்குள் தங்களால் இனி நுழைய முடியாது என்பதால் புரிந்துகொள்ளவியலாத வகையில் பயனற்றுப் போய்விட்டதாக உணர்ந்தனர் – ஆனால் இங்கே இவனைப் போன்றவர்களோ எண்ணிக்கையில் தங்களை விஞ்சிவிட்டவர்களுடன் நாகரிக உலகைக் காக்க சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அக்கறை கொள்வார்கள் என முன்னோடிகள் நினைத்திருந்தார்கள் – மக்கள் அக்கறை காட்டவில்லை; காட்டியிருந்தாலும் அவர்களுக்கு உதவ அது போதுமானதாக இல்லை. சரணடைய வைக்க அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் கூட அது உண்மையிலேயே பேருதவியாக இருந்திருக்கும் அல்லது குறைந்தபட்சம் மன பாரமாவது சற்று தணிந்திருக்கும். இப்படியாக ஒருவருக்கொருவர் அவர்களுக்குள்ளிருந்த பழைய இயல்பான ஒரு தொடர்பை அனேகமாக எப்போதைக்குமென இழந்துவிட்டனர். ஒருவர் மீது ஒருவர் அதிகமாகச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், அதே நேரத்தில் அடுத்தவரைச் சற்று குறைவாகவும் நம்ப வேண்டும். பணத்திற்காகவோ அல்லது ஒப்புதல் வாக்குமூலம் தருவதால் வரும் மனநிம்மதிக்காகவோ அவர்களில் ஒருவர் மற்ற அனைவருக்கும் துரோகம் செய்யமாட்டார்கள் என்று யார்தான் கூற முடியும்? ஆனால் வாக்குமூலம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது என்பதைக் கற்பனை செய்ய யாரும் துணியவில்லை. அவர்கள் ஒரு போரில் சண்டையிட்டுக் கொண்டிருந்த வீரர்கள் ஆனால் இப்போது அவர்களுக்குள்ளிருந்த உறவு என்பது குற்றத்தில் துணை போன கூட்டாளிகள். அவர்கள் அத்தனை பேரும் வாயை மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

‘நான் காலெடுத்து வைத்தேனே ஜோர்டான் நதியினிலே’

எங்கிருந்தென்றே தெரியாதபடி திடீரென அறையின் இருளிலிருந்து, தாளத்துடனும் லயத்துடனும் அந்த ஒற்றை வரி அவனை நோக்கிப் பறந்து வந்தது. அவன் வார்த்தைகள் ஏதுமற்று உறங்கிக்கொண்டிருக்கும் மனைவியின் பக்கம் திரும்பினான். ‘நான் காலெடுத்து வைத்தேன் ஜோர்டானின் நதியினிலே’. இந்தப் பாடலை அவன் எங்கு கேட்டிருக்கிறான்?

“கிரேஸ்,” அவன் முணுமுணுத்தான். “நீ விழித்துக்கொண்டிருக்கிறாயா?”

அவள் பதிலளிக்கவில்லை. ஒருவேளை அவள் விழித்துக்கொண்டுதான் இருக்கிறாளென்றால், அவன் உறங்க வேண்டும் என்று அவள் விரும்பியிருப்பாள். அவள் மூச்சு நிதானமாகவும் இயல்பாகவும் இருந்தது, அவள் உடல் மெல்ல மேலெழும்பி அடங்கியது.

‘நான் காலெடுத்து வைத்தேனே ஜோர்டான் நதியினிலே.

மேலெழும்பி வந்த நீர் எனது முழங்காலைத் தொடவே’

 

அவனுக்கு வியர்க்கத் தொடங்கியது. அவனுக்கு மிதமிஞ்சிய பயம் உண்டானது, ஆனாலும் அதிலே ஆர்வங்கிளப்பும், நடுக்கமூட்டும் ஒரு மகிழ்வும் இருந்தது.

 

‘நான் காலெடுத்து வைத்தேனே ஜோர்டான் நதியினிலே.

மேலெழும்பி வந்த நீர் எனது இடையை மூழ்கடிக்கவே’

இப்பொழுதைப் போலவே அதுவும் ஒரு இரவு நேரம், அவன் அம்மாவிற்கும் அப்பாவிற்கு இடையில் காரில் தூக்கக் கலக்கத்திலிருந்தான். அவன் அம்மாவின் மடி மீது தலை சாய்த்திருந்தான், தூக்கம்தான் ஆனாலும் உற்சாகமாக இருந்தான். இருண்ட வயல்வெளிகளுக்கு அப்பால், தூரத்திலிருந்து அப்பாடல் வந்தது. எங்குமே எந்த வெளிச்சமும் இல்லை. அவர்கள் மற்ற எல்லோருக்கும் பிரியாவிடை சொல்லி இந்த இருண்ட தூசியடர்ந்த சாலையின் பக்கம் திரும்பினார்கள். வீட்டை நெருங்கிவிட்டார்கள்.

 

‘நான் காலெடுத்து வைத்தேனே ஜோர்டான் நதியினிலே,

மேலெழும்பி வந்த நீர் எனது தலையைத் தாண்டவே,

நான் அக்கரையைப் பார்த்தேன்

அங்கே எனது மரணப் படுக்கையை அமைத்துக் கொண்டிருந்தான் அவன்!’

 

“அவர்கள் அவனுக்காகப் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.” என்று கூறினார் அவன் அப்பா, மிகவும் சோர்வுற்றும் உள்ளொடுங்கியும் காணப்பட்டார் இப்போது. “அவர்கள் சோகமாக இருக்கும்போது கூட அப்படியே கிளம்பிச் சென்று எவளையோ பின்னாலிருந்து புணர்ந்து கிழிக்கப் போகிறவர்கள் போலவே சத்தமிடுகிறார்கள்.” அவர் கொட்டாவி விட்டு சிறுவனைத் தாண்டி சாய்ந்து தன் மனைவியின் தோள்களின் மீது லேசாகத் தட்டி தன் கையை சற்று நேரம் அங்கேயே வைத்துக்கொண்டார். “சரிதானே?”

“அப்படி பேசாதீங்க,” அவள் சொன்னாள்.

“சரி சரி, ஆனால் அதைத்தான் நாம் இப்போது செய்யப் போகிறோம்,” அவர் சொன்னார், “உன் மனதை அதற்கு தயார்ப்படுத்திக் கொள்.” அவர் விசிலடிக்கத் தொடங்கினார். “பார்த்தாயா? எனக்குள் உணர்ச்சி பெருகும்போது நானும்கூட ஒருவகையில் இசை வயமாகிவிடுகிறேன்.”

‘ஓ.. ஆண்டவரே!  வாரும் வந்து தொந்தரவாய் இருக்கும் எம் மனதைத் தேற்றுங்கள்.’

அவனுக்கு கறுப்பின நண்பன் ஒருவன் இருந்தான். அவனுக்கு வயது எட்டு, அருகாமையில்தான் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் ஓட்டிஸ். அவர்கள் மணலில் புரண்டு சண்டையிட்டிருக்கிறார்கள். இப்போது ஓட்டிஸ் பற்றி நினைத்தாலே அவனுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. அவன் நடுங்கத் தொடங்கினான். அவன் அம்மா அவன் தோள்களைச் சுற்றி கைகளைப் போட்டுக்கொண்டாள்.

“இவன் சோர்ந்து போய்விட்டான்,” அம்மா சொன்னாள்.

“இதோ சீக்கிரம் வீடு சேர்ந்துவிடுவோம்,” என்று சொன்னார் அவன் அப்பா. அவர் மீண்டும் விசிலடிக்கத் தொடங்கினார்.

“இன்று காலை ஓட்டீஸை நாம் பார்க்கவில்லையே,” ஜெஸ்ஸி சொன்னான். இதை ஏன் சொன்னோமென்று அவனுக்கே தெரியவில்லை. அந்த காரின் இருளில் அவனது குரல் மிகவும் சன்னமாகவும் குற்றஞ்சாட்டுவதைப் போலவும் ஒலித்தது.

“நீ இரண்டு நாட்களாகவே ஓட்டீஸைப் பார்க்கவில்லையே,” அம்மா சொன்னாள்.

அது உண்மைதான். ஆனால் அவனுடைய கவலையெல்லாம் இன்று காலையைப் பற்றித்தான்.

“இல்லைதான்…”, என்று சொன்னார் அவன் அப்பா, “அவனை இன்று காலை வெளியே விட ஓட்டீஸின் வீட்டில் பயந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.”

“ஆனால் ஓட்டிஸ் எதுவுமே செய்யலையே!” அவனுடைய குரல் இப்போது கேள்வி கேட்பதைப் போல் இருந்தது.

“ஓட்டிஸால் எதுவும் செய்யமுடியாது,” என்று சொன்னார் அவன் அப்பா. “அவன் மிகச் சிறியவன்.” காரின் விளக்குகள் இப்போது அவர்களின் வீட்டின் மீது பாய்ந்ததும் அச்சுறுத்தும்படி வீடு அவர்களை நோக்கி வந்தது, சுற்றிலும் மஞ்சள் தூசியைப் போல வெளிச்சம் உதிர்ந்துகொண்டிருந்தது. மரத்தில் கட்டிப்போடப்பட்டிருந்த அவர்களின் நாய் குரைத்தது.

“ஓட்டிஸ் எதுவும் செய்துவிடக்கூடாது என்பதைத்தான் நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்,” அவன் அப்பா சொன்னார். கார் நின்றது. அவர் ஜெஸ்ஸியைப் பார்த்தார். “உன் அப்பா உனக்குச் சொன்னதை நீ அவனிடம் போய் சொல். புரிந்ததா?”

“யெஸ், சார்!”

அவன் அப்பா விளக்குகளை அணைத்தார். நாய் முனகியது, பின்னங்கால்களில் நின்று துள்ளியது. ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றனர். அவனால் தூங்கமுடியவில்லை. அவன் இரவின் சத்தங்களைக் கேட்டுக்கொண்டு விழித்தபடி படுத்திருந்தான், வெளியே நாய் கொட்டாவி விட்டு முனகும் சத்தம், சிள்வண்டுகளின் அறுக்கும் ஒலி, தூரத்தில் நாய்களின் குரைப்பொலி, பிறகு அத்தனை சத்தமும் நின்றுபோய், இரவின் வெறும் கனத்த முரலும் அரவம் மட்டும். சொரசொரப்பான போர்வையைப் போல இருள் அவன் கண் இமைகளை அழுத்தியது. அவன் திரும்பித் திரும்பிப் படுத்தான். அவன் தன் அம்மாவைக் கூப்பிட நினைத்தான் ஆனால் அது அப்பாவிற்குப் பிடிக்காது என்று அவனுக்குத் தெரியும். அவன் மிகவும் பயந்து போயிருந்தான். அதன் பிறகு அவன் அப்பாவின் குரல் மெலிதாக அடுத்த அறையிலிருந்து கேட்டது, அதில் கேலி கலந்திருந்தது; ஆனால் அது அவனுக்கு உதவவில்லை, அது அவனை மேலும் பயமுறுத்தியது, என்ன நடக்கப்போகிறது என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் தன் தலையைப் போர்வைக்குள் நுழைத்துக் கொண்டான், பின்பு பயத்தில் மீண்டும் வெளியே நீட்டி இருண்ட ஜன்னலை வெறித்துப் பார்த்தான். அவன் அம்மாவின் முனகலும் அப்பாவின் பெருமூச்சும் அவனுக்குக் கேட்டது; அவன் பற்களைக் கடித்துக்கொண்டான். அவர்களின் கட்டில் ஆடத் தொடங்கியது. அவன் அப்பாவின் மூச்சொலி இவ்வுலகத்தையே நிரப்புவதைப் போலத் தோன்றியது.

அன்று காலை சூரியன் தன் வலிமையைத் திரட்டி வருவதற்கு முன்னரே ஆண்களும் பெண்களும், சிலர் முகஞ்சிவந்தும் சிலர் உற்சாகத்தால் வெளிர் முகத்துடனும், அந்தச் செய்தியுடன் வந்திருந்தனர். உடைசலான முதல் கார் ஒன்று முற்றத்தின் முன்னால் வந்து  நிற்கும் முன்னரே ஜெஸ்ஸியின் அப்பாவிற்கு அந்தச் செய்தி என்ன என்பது தெரிந்துவிட்டதைப் போலத் தோன்றியது, அவர் சத்தம் போட்டபடி வெளியே ஓடி வந்தார், “அவர்கள் அவனைப் பிடித்துவிட்டார்களா? அவனைப் பிடித்துவிட்டார்களா?”

அந்த முதல் பாழடைந்த காரின் உள்ளே எட்டு பேர் இருந்தனர், மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள். பெரியவர்களின் மடி மீது குழந்தைகள் அமர்ந்திருந்தனர். அவர்களில் இருவரை ஜெஸ்ஸிக்கு ஏற்கனவே தெரியும், இரண்டு பையன்கள்; அவர்கள் கூச்சத்துடனும் சங்கடத்துடனும் ஒருவருக்கொருவர் முகமன் சொல்லிக்கொண்டனர்; அந்தப் பெண்ணை அவன் அறிந்திருக்கவில்லை.

“ஆமாம், அவனைப் பிடித்துவிட்டார்கள்,” இருவரில் வயதான, அகலமான தொப்பியும் பகட்டான மங்கிய நீல நிற உடையும் அணிந்திருந்த பெண்மணி கூறினார். “அவனை இன்று அதிகாலை கண்டுபிடித்துவிட்டனர்.”

“அவன் எவ்வளவு தூரம் சென்றுவிட்டிருந்தான்?” ஜெஸ்ஸியின் அப்பா கேட்டார்.

“ஹார்க்னெஸ்ஸைக் கூட அவன் தாண்டிச் சென்றுவிடவில்லை,” ஆண்களில் ஒருவன் சொன்னான். “அங்கிருந்த மரங்களிடையில் அவன் தொலைந்துவிட்டான் போலிருக்கிறது – அல்லது அவன் ஒருவேளை அவ்வளவு பயத்தில் நகர முடியாமல் நின்று விட்டானோ என்னவோ.” அவர்கள் அத்தனை பேரும் சிரித்தனர்.

“ஆமாம், உனக்குத் தெரியுமா அது சுடுகாட்டிற்குப் பக்கம் கூட,” இளவயது பெண் இதைச் சொன்னதும் அனைவரும் மீண்டும் சிரித்தனர்.

“அங்குதான் அவனைக் கொண்டு போயிருக்கிறார்களா இப்போது?” ஜெஸ்ஸியின் அப்பா கேட்டார்.

இந்நேரத்தில் முதல் காருக்குப் பின்னால் வரிசையாக மூன்று கார்கள் குவிந்துவிட்டிருந்தன. எல்லோரும் உற்சாகமாகவும் பிரகாசமாகவும் இருந்தனர். அவர்கள் உணவு கட்டிக் கொண்டு வந்திருப்பதையும் ஜெஸ்ஸி கவனித்தான். சுதந்திர தின சுற்றுலாவைப் போல இருந்தது.

“ஆமா, அங்குதான் இருக்கிறான் அவன்,” ஆண்களில் ஒருவன் சொன்னான், “உன் முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதிலளிக்க எங்கள் எல்லோரையும் இங்கேயே வைத்திருக்கப் போகிறாயா? கிளம்பு, வெட்டியாகக் கழிப்பதற்கு நேரமில்லை.”

“சாப்பாடு எதுவும் எடுத்துக் கொள்ள வேண்டாம்,”  அங்கிருந்த கார்கள் ஒன்றிலிருந்து கத்தினாள் பெண்ணொருத்தி, “போதுமானளவு எங்களிடம் உள்ளது. சும்மா உடனே கிளம்பி வாங்க.”

“நல்லது, நன்றி,” சொன்னார் ஜெஸ்ஸியின் அப்பா, “இப்போதே வந்துவிடுகிறோம்.”

“பையனுக்கு ஒரு ஸ்வெட்டர் எடுத்துக்கொள்வது நல்லது,” அவன் அம்மா சொன்னாள், “ஒருவேளை குளிரத் தொடங்கிவிட்டால் தேவைப்படும்.”

தன் அம்மாவின் மெலிந்த கால்கள் முற்றத்தைக் கடந்து போவதைப் பார்த்தான் ஜெஸ்ஸி. அவளும் தன் தலைமுடியைச் சற்று சீவி சரிசெய்து சர்ச்சுக்கு அணிவதைப் போல நல்ல ஆடையை அணிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புவாள் என்பதை அவன் அறிவான். அவன் அப்பாவும் அதைக் கணித்துவிட்டார், அவள் பின்னால் சத்தம் போட்டுச் சொன்னார், “இப்போது நீ எந்த சினிமா நட்சத்திரம் போலவும் அலங்கரித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டாம், உடனே கிளம்பி வா.” ஆனால் அவர் இதைச் சொன்னபோது சிரித்தார், மற்ற ஆண்களைப் பார்த்துக் கண்ணடித்தார்; அவரது மனைவி மற்ற அனேக பெண்களைவிட இளமையாகவும் அழகாகவும் இருந்தாள். அவர் ஜெஸ்ஸியின் தலையைத் தட்டி காரை நோக்கி இழுத்துச் சென்றார்.  “நீங்க எல்லாம் போங்க,” அவர் சொன்னார், “நான் உங்கள் பின்னாடியே வந்துவிடுவேன். ஜெஸ்ஸி நீ போய் நாயை அங்கே கட்டிப்போடு, நான் காரை கிளப்புகிறேன்.”

கார்கள் தடதடத்து, இருமலொலியெழுப்பி குலுங்கின; கார்களின் வரிசை நகரத்தொடங்கியது; பளபளப்பான தூசி காற்றை நிரப்பியது. கட்டிப் போட்ட உடனே நாய் குரைக்கத் தொடங்கியது. ஜெஸ்ஸியின் அம்மா வீட்டிலிருந்து அவன் அப்பாவிற்கு ஒரு மேலங்கியும் ஜெஸ்ஸிக்கு ஒரு ஸ்வெட்டரும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். அவள் தலையில் ஒரு ரிப்பன் போட்டுக்கொண்டிருந்தாள், பழைய சால்வை ஒன்றால் தன் தோள்களைப் போர்த்தியிருந்தாள்.

“இதை காருக்குள் போட்டுவிடு கண்ணா,” என்று சொல்லி எல்லாவற்றையும் அவன் கைகளில் திணித்துவிட்டாள். அவள் குனிந்து நாயைத் தடவிக்கொடுத்தாள், பின்பு கிண்ணத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தாழ்வாரப் படிகள் மூன்றிலேறி கதவைச் சாத்தினாள்.

“சீக்கிரம் வா,” சொன்னார் அவன் அப்பா, “யாரும் வந்து திருடிச் செல்வதற்கு அங்கு எதுவும் இல்லை.” அவர் காரில் அமர்ந்திருந்தார், அது ஏப்பம் விட்டு உதறலெடுத்தது. அணிவகுப்பின் கடைசி காரும் மறைந்துவிட்டது ஆனால் பாடலின் சத்தம் மட்டும் அவற்றின் பின்னால் மிதந்து வந்தது.

ஜெஸ்ஸி காரில் ஏறி அப்பாவிற்கு நெருக்கமாக அமர்ந்துகொண்டான். காரின் வாசத்தை விரும்பினான், கூடவே அதன் நடுக்கத்தையும், பிரகாசமான பகலையும், ஒரு மகத்தான எதிர்பாரா பயணத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்ற உணர்வையும். அவன் அம்மா காரில் ஏறி கதவைச் சாத்தியதும் கார் நகர்ந்தது. அதுவரையில் அவன் கேட்காமலிருந்ததைக் கேட்டான், “எங்கே போகிறோம்? பிக்னிக் போகிறோமா?”

அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை ஒருவாறு அவன் உணர்ந்திருந்தான், ஆனால் நிச்சயமாகத் தெரியவில்லை.

“சரியாகச் சொன்னாய்,” அவன் அப்பா சொன்னார், “நாம் பிக்னிக்தான் போகிறோம். இந்த பிக்னிக்கை நீ ஒருபோதும் மறக்கமாட்டாய்- !”

“நிஜமாகவா,” என்று அவன் கேட்டான். ஒரு கணம் கழித்துச் சொன்னான், “நாம் அந்த கெட்ட கருப்பனைப் பார்க்கப் போகிறோம் – வயதான மிஸ்.ஸ்டாண்டிஷை அடித்து வீழ்த்தியவனைத்தானே?”

“அட, ம்ம்ம்… சரியென்றுதான் நினைக்கிறேன்,” அவன் அம்மா சொன்னாள், “அவனை நாம் பார்த்தாலும் பார்க்கலாம்.”

அவன் கேட்கத் தொடங்கினான், ‘நிறைய கருப்பன்கள் இருப்பார்களா அங்கே? ஓட்டிஸ் இருப்பானா அங்கே?’ – ஆனால் அவன் அவனுடைய கேள்விகளைக் கேட்கவில்லை, விநோதமும் சங்கடமுமான விதத்தில் அதற்கான பதிலை அவன் ஏற்கனவே அறிந்திருந்தான். அவனுடைய நண்பர்கள் அவன் கண்ணுக்கெட்டும் வரையில் சாலையில் மற்ற கார்களில் இருந்தனர்; மேலும் சில கார்கள் அவர்களோடு இணைந்து கொண்டன. சூரியன் திடீரென அதிக சூடானது போலத் தோன்றியது, அவன் ஒருசேர பெரும் சந்தோஷமும் சற்று பயமும் கொண்டான். என்ன நடக்கிறது என்பது அவனுக்கு முழுதாகப் புரியவில்லை, என்ன கேட்பது என்று அவனுக்குத் தெரியவில்லை – அவன் அதைக் கேட்பதற்கும் யாரும் இல்லை. இத்தகையான மர்மங்களுக்கு விடை தெரியவேண்டுமெனில் ஓட்டிஸிடம் செல்வது அவனக்குப் பழக்கமாகிவிட்டது. ஓட்டிஸுக்கு எல்லாம் தெரியும் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் இதைப் பற்றி அவன் ஓட்டிஸிடம் கேட்க முடியாது. இரண்டு நாட்களாக ஓட்டிஸைப் பார்க்கவும் இல்லை; அவன் எங்காவது ஒரு கறுப்பு முகத்தைப் பார்த்தே இரண்டு நாட்களுக்கு மேலாகிவிட்டது; அவன் இப்போதுதான், ஹார்க்கின்ஸ் சென்று சேரும் நீண்ட மலைப்பாதையில் ஏற அவர்கள் திணறிக்கொண்டிருக்கையில்தான் உணர்ந்தான், இன்று காலையில் இந்தச் சாலையில் ஒரு கறுப்பு முகத்தைக் கூட தான் பார்க்கவில்லையென்று. எங்கேயுமே கறுப்பின மனிதர்கள் காணவில்லை. சாலையெங்கும் அவர்கள் வாழ்ந்த வீடுகளிலிருந்து புகை எதுவும் சுருண்டெழவில்லை, உயிர் அசைவே இல்லை – ஒன்றிரண்டு கோழிகள் தென்பட்டிருக்கலாம் அவ்வளவுதான். ஜன்னல்களின் பக்கமாக ஒருவருமில்லை, முற்றத்தில் யாருமில்லை, தாழ்வாரங்களில் ஒருவரும் அமர்ந்திருக்கவில்லை, கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அவன் பலமுறை இந்தச் சாலை வழியே வரும்போது பெண்கள் துணிகளை முற்றத்தில் துவைப்பதையும் (கொடிகளில் துணிகள் எதுவும் தொங்கவில்லை) ஆண்கள் வயல்வெளிகளில் வேலை செய்வதையும் குழந்தைகள் மண்ணில் விளையாடிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறான்; சில காலை வேளைகளில் கறுப்பின ஆண்கள், நடந்தோ சில நேரங்களில் பாரவண்டியிலோ அல்லது காரிலோ, தொப்பியை உயர்த்தி காட்டி, புன்னகைத்து, சிரித்துப் பேசி சாலையில் கடந்து போவார்கள். தோல் நிறத்திற்கு நேர்மாறாக அவர்களின் பற்கள் வெள்ளைவெளேறென்று இருக்கும். கண்கள் சூரியனைப் போல வெம்மையாகவும், கிழிந்த அவர்களின் சாம்பல் நிற ஆடைகளுக்கு எதிராக மந்தமான நெருப்பைப் போல அவர்களின் தோலின் கருமையும் இருந்தது. கருப்பன்களுக்கான சர்ச்சைக் கடந்து சென்றார்கள் – அது பூட்டப்பட்டு, நிராதரவற்று, மரணகளை கொண்டிருந்தது. அந்தக் கல்லறைத் தோட்டத்தில் ஒருவரும் மண்டியிட்டோ நடந்துகொண்டிருக்கவோ இல்லை, அவன் மலர்களையும் கூட அங்கே பார்க்கவில்லை. அவன் கேட்க நினைத்தான், ‘அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் எல்லோரும் எங்கிருக்கிறார்கள்?’ ஆனால் அவனுக்குத் தைரியம் இல்லை. மலை செங்குத்தாக மேலே உயர உயரச் சூரியன் குளிர்ந்துகொண்டு வந்தது. அவன் தன் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தான். அவர்கள் நேராகச் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மயானத்திலிருந்து மீண்டும் மீண்டும் எதிரொலித்த பாடலை அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. அவர்கள் இப்போது அவனுக்கு அந்நியர்கள். அவன் பார்க்க இயலாத ஏதோவொன்றை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் தந்தையின் உதடுகள் விசித்திரமான ஒரு இரக்கமற்ற சுழிப்பைக் கொண்டிருந்தன, அவர் அவ்வப்பொழுது உதடுகளை நனைத்து எச்சில் விழுங்கிக்கொண்டார். அப்பாவின் நாவைப் பற்றி அவன் நன்றாகவே அறிந்திருந்தான், அது இதற்கு முன் அவன் கண்டிராதது போல் இருந்தது. அப்பாவின் உடல் திடீரென அளவிடமுடியாத, மலையைவிட மிகப் பெரியதாக ஆனது போலத் தோன்றியது. பழுப்புப் பச்சையாக இருந்த அவருடைய கண்கள் இப்போது சூரிய ஒளியில் மஞ்சளாகத் தெரிந்தது; அல்லது குறைந்தபட்சம் அவன் இதற்குமுன் பார்த்திராத ஒரு ஒளி இருந்தது அதில். அம்மா தன் தலைமுடியை லேசாகத் தட்டி ரிப்பனை சரி செய்து, முன்னால் குனிந்து கார் கண்ணாடியில் பார்த்தாள். “நீ நல்லாதான் இருக்க,” சொல்லிவிட்டுச் சிரித்தார் அப்பா. “அந்தக் கருப்பன் உன்னைப் பார்த்தால், வாழ்க்கையை இப்படி ஒன்றுமில்லாமல் வீணாக்கிவிட்டோமே என்று தன்னையே பழித்துக் கொள்வான். அவன் பேயாக உன்னிடம் திரும்பிவந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.” அவர் மீண்டும் சிரித்தார்.

இப்போது பாடுவது மெதுவாகக் குறைந்து பின் நின்றது; அவர்கள் தங்களது சேருமிடத்தை நெருங்கிவிட்டார்கள் என்பதை உணர்ந்தான். அவர்கள் இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும் குறுகிய நேரான கூழாங்கற்கள் நிறைந்த சாலையை அடைந்தனர். அவர்கள் ஏதோ நீருக்கடியில் இருப்பதைப் போல வெகு தூரத்திலிருந்து சூரிய ஒளி சல்லடையாய் அவர்கள் மீது வழிந்தது; மரத்தின் கிளைகள் கிழிபடும் சத்தத்துடன் கார்களின் மீது மோதின. அவர்களுக்குக் கீழே வலதுபுறத்தில் கண்ணுக்குத் தெரியாத ஆழத்தில் நகரம் இருந்தது; இடதுபுறத்தில் மைல் கணக்கில் மரங்கள் நீண்டு அவர்களின் மூதாதையர்கள் பள்ளத்தாக்கில் குடியேறக் கடந்து வந்த உயரமான மலைத் தொடர்களைச் சென்று அடைந்தன. இப்போது, கற்சாலையின் மீது சக்கரங்கள் மோதித் தேயும், மோட்டார்கள் சிதறும், குழந்தைகளில் ஒன்று அழும் சத்தங்களைத் தவிர அத்தனையும் அமைதியாகிப் போனது. அவர்கள் மிக நிதானமாக நகர்வதைப் போலத் தோன்றியது. மீண்டும் மேலேறத் தொடங்கினர். முன்னால் கார்கள் கடுமையாக முயன்று பொறுமையாக மேல் நோக்கிச் செல்வதையும் பின்பு சமவெளியைத் தொட்டதும் சாலை விளிம்பில் சூரியஒளியில் அவை மறைவதையும் அவன் பார்த்தான். இப்போது அவர்களின் வண்டியும் மேலே உயர்வதை உணர்ந்தான். அப்பாவின் மூச்சொலியில் மாற்றமடைந்ததைக் கேட்டான், சூரிய ஒளி அவன் முகத்தில் மோதியது, மரங்கள் அவர்களிடமிருந்து நகர்ந்து சென்றது, அவர்கள் அவ்விடத்தை அடைந்துவிட்டனர். அப்பரப்பை கடக்கையில் அவன் சுற்றிலும் பார்த்தான். அந்தச் சிறுவெளியில் அவனால் காணமுடியாத எதோவொன்றை மில்லியன் கணக்கில், நிச்சயம் நூற்றுக்கணக்கில், மக்கள் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. அவனால் தீப்பிழம்பைப் பார்க்கமுடியவில்லை ஆனால் புகையை முகர்ந்தான். பின்பு அவர்கள் அச்சமதளத்தின் மறுபக்கம், மீண்டும் மரங்களிடையே சென்றனர். அவன் அப்பா சாலையிலிருந்து விலகி அங்கு நின்றுகொண்டிருந்த எண்ணற்ற கார்களுக்கு பின்னால் நிறுத்தினார். ஜெஸ்ஸியைப் பார்த்தார்.

“யூ ஆல்ரைட்?” அவர் கேட்டார்.

“யெஸ் சார்,” அவன் சொன்னான்.

“சரி, வா போகலாம்,” என்று சொன்னார் அவன் அப்பா. அவர் சுற்றிச் சென்று அவன் அம்மாவின் பக்கம் இருந்த கதவைத் திறந்தார். அம்மா முதலில் வெளியே காலெடுத்து வைத்தாள். அவர்கள் அவளைப் பின்தொடர்ந்து சமவெளியை நோக்கி நடந்தனர். அவன் அம்மாவும் அப்பாவும் அங்கிருந்தவர்களுக்கு முகமன் கூறுவதும் அவர்கள் இவர்களுக்கு வணக்கங்கள் சொல்வதும், இவனைக் கட்டிப்பிடித்தும் தட்டிக்கொடுத்தும் “இவ்வளவு பெரிதாய் வளர்ந்துட்டான்” என்று கூறுவதுமான குழப்பங்களைத்தான் அவன் முதலில் உணர்ந்தான். காற்று நெருப்பிலிருந்து புகையை அடித்துக் கொண்டுவந்து இவன் கண்களின் மீதும் மூக்கின் மீதும் மோதியது. அவனுக்கு முன்னாள் இருந்த மக்களின் முதுகைத் தாண்டி அவனால் வேறெதுவும் பார்க்கமுடியவில்லை. கோபங்களும் சபித்தலும் சிரித்தலும் – இன்னும் வேறெதுவுடைய சத்தங்களோ முன்னால் இருந்த கூட்டத்தினரிடமிருந்து அலைகளாகச் சுருண்டு  பின்னால் வந்தது. முன்னால் இருந்தவர்கள் தாங்கள் கண்டதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தனர், அந்த உவகை அலையலையாகச் சுருண்டு, சமவெளியைக் கடந்து, புகையைவிட எரிச்சலூட்டும் விதமாகத் திரண்டு பின்னால் வந்தது. அவன் அப்பா சட்டெனக் கீழே குனிந்து ஜெஸ்ஸியை தன் தோளில் ஏற்றி அமர்த்திக்கொண்டார்.

இப்போது அவன் நெருப்பைப் பார்த்தான் – குச்சிகளும் மரப்பெட்டிகளுமாகப் போட்டு வைத்திருக்கும்  உயர்ந்த குவியல்கள்; நிலைத்த சூரிய ஒளியின் கீழே முகத்திரையளவே மெல்லியதாய் வெளிர் ஆரஞ்சிலும் மஞ்சளிலுமாக இருந்தன தீப்பிழம்புகள்; பழுப்பு நீலப் புகை மேல் நோக்கிச் சுருண்டு அவர்களின் தலை மீது கொட்டியது. நெருப்பும் புகையுமென அலைந்துகொண்டிருக்கும் திரையின் பின்னால் ஒரு பெரிய மரக் கிளையோடு கட்டப்பட்டிருந்த நீள் சங்கிலி ஒன்றை மட்டுமே அவனால் பார்க்கமுடிந்தது. பிறகு, அந்தச் சங்கிலி இரண்டு கறுப்புக் கைகளை, அழுக்கான மஞ்சள் உள்ளங்கைகள் ஒன்றையொன்று பார்ப்பதைப் போல, மணிக்கட்டில் பிணைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். புகை பெருகியது; அந்தக் கைகள் கண் பார்வையிலிருந்து நழுவி விழுந்தது; உரத்த ஆராவாரம் கூட்டத்தினரிடையே எழுந்தது. பின்பு அந்தக் கைகள் மெல்ல மீண்டும் பார்வைக்கு வந்தது, சங்கிலியால் மேல் நோக்கி இழுக்கப்பட்டது. இந்த முறை அவன் சுருள்சுருளான, இரத்தமும் வியர்வையும் வழியும் தலையைப் பார்த்தான் – இவ்வளவு தலைமுடியுள்ள ஒரு தலையை அவன் இதற்கு முன் பார்த்ததேயில்லை, அவ்வளவு கருமை அவ்வளவு சிக்குகள், அதுவே தனியொரு காடு போலக் காட்சியளித்தது. தலை தொங்கிக்கொண்டிருந்தது. அவன் நெற்றியைப் பார்த்தான், தட்டையாகவும்  மேல் தூக்கியும் இருந்தது, அம்பு முனையைப் போல முடி மத்தியிலிருந்தது; அவனுக்கு இருப்பதைப் போல, அவன் அப்பாவிற்கும் இருப்பதைப் போல; அதை விதவையின் உச்சிமுனை என்று அழைப்பார்கள்; சிதைந்திருந்த புருவங்கள், பரந்த மூக்கு, மூடிய கண்கள், ஒளிரும் கண் இமைகள், தொங்கும் உதடுகள் என அத்தனையிலும் இரத்தமும் வியர்வையும் வழிந்துகொண்டிருந்தன. அவனுடைய கைகள் தலைக்கு மேலே நேராக இருந்தன. அவனது அத்தனை எடையும் அவனை அவன் கைகளிலிருந்து கீழ் நோக்கி இழுத்தது; அவன் பெரிய மனிதன், அப்பாவைவிட பெரியதாக இருந்தான், ஆப்பிரிக்கக் காட்டுப் பூனையைப் போலக் கருப்பாக இருந்தான், நிர்வாணமாகவும். ஜெஸ்ஸி மேல் நோக்கி எம்பினான்; அவன் அப்பாவின் கைகள் அவன் கணுக்கால்களை உறுதியாகப் பிடித்திருந்தன. அவன் என்னவோ சொல்ல விரும்பினான், என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை, ஆனால் அவன் என்ன சொல்லியிருந்தாலும் அது யார் காதிலும் விழுந்திருக்காது. ஏனென்றால், கூட்டத்தில் ஒருவன் முன்னால் வந்து நெருப்பின் மீது மேலும் மரக்கட்டைகளைப் போட்டதும் மொத்த கூட்டமும்  மீண்டும் உரத்த கூச்சலிட்டது. தீப்பிழம்புகள் துள்ளி எழும்பின. தொங்கிக்கொண்டிருந்த மனிதன் அலறியது  தனக்குக் கேட்டதாக நினைத்தான், ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. அவன் அக்குள் முடிகளிலிருந்து வியர்வை இரு பக்கங்களிலும் வழிந்து மார்பின் மீதும் தொப்புளின் மீதும் தொடையிடுக்குகளுள்ளும் ஓடியது. அவன் மீண்டும் கீழே இறக்கப்பட்டான்; மீண்டும் மேலே உயர்த்தப்பட்டான். இப்போது அந்த அலறல் தனக்குக் கேட்டது என்று ஜெஸ்ஸிக்கு நிச்சயமாகத் தெரியும். தலை பின்னால் சாய்ந்தது, வாய் அகலத் திறந்தது, இரத்தம் கொப்புளித்து வாயிலிருந்து வழிந்தது; கழுத்தின் நரம்புகள் வெளியேறிக் குதித்தன; கூட்டத்தினரிடையே ஆரவாரம் புரள, ஜெஸ்ஸி பயத்தில் தன் அப்பாவின் கழுத்தை இறுகப் பிடித்துக்கொண்டான். மரணிக்கும் மனிதனின் அழுகைக்குப் பதிலென அங்கிருந்த மக்களின் ஆரவாரம் உயர்ந்தது. மரணம் சீக்கிரம் வந்துவிடவேண்டுமென அவன் விரும்பினான். அவர்கள் மரணத்தைக் காக்க வைக்க விரும்பினர்: அவர்கள்தான் மரணத்தை தங்கள் கைப்பிடியில் வைத்திருந்தார்கள், இப்போது அந்தப் பிடியை மெல்ல மெல்ல நழுவவிட்டார்கள். ‘அவன் என்ன செய்திருப்பான்?’ ஜெஸ்ஸிக்கு வியப்பாக இருந்தது. ‘அந்த மனிதன் என்ன செய்திருப்பான்? அவன் என்ன செய்திருப்பான்?’ – ஆனால் தன் அப்பாவிடம் அவனால் கேட்க முடியவில்லை. அவன் தன் அப்பாவின் தோள் மீதுதான் அமர்ந்திருந்தான், ஆனால் அப்பா எங்கோ வெகு தொலைவிலிருந்தார். அங்கே அவன் அப்பாவின் இரு நண்பர்கள், வயதான ஆண்கள், சங்கிலியை மேலே உயர்த்துவதும் கீழே தாழ்த்துவதுமாக இருந்தனர்; அத்தனை பேரும், பாரபட்சமின்றி, இந்த நெருப்பிற்குக் காரணம் என்று தோன்றியது. அந்தக் கருப்பனின் அந்தரங்கப் பகுதிகளில் முடி எதுவும் மிஞ்சவில்லை, இப்போது அவன் கண்கள் அகலமாகத் திறந்துகொண்டன, கோமாளியின் அல்லது ஒரு பொம்மையின் கண்களைப் போல வெள்ளையாக இருந்தன. புகை அச்சிறுவெளி முழுதும் ஒரு பயங்கரமான வாசனையைச் சுமந்து சென்றது, இனியதும் அழுகியதுமான ஏதோ பற்றியெரியும் மணம்.

அவன் தலையைச் சற்று திருப்பி அந்நிலம் முழுதும் இருந்த முகங்களைப் பார்த்தான். அவன் தன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவளின் கண்கள் வெகு பிரகாசமாக இருந்தன, அவள் வாய் திறந்திருந்தது: அவன் இதற்குமுன் பார்த்ததைவிடவும் மிகவும் அழகாக இருந்தாள், அதிகமும் வித்தியாசமாக இருந்தாள். அவன் இதற்குமுன் உணர்ந்திராத ஒரு மகிழ்ச்சியை உணரத் தொடங்கினான். அவன் தொங்கிக்கொண்டிருக்கும் பளபளப்பான உடலைப் பார்த்தான், அவன் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் கொடூரமான ஆனால் அதீத அழகுடைய பொருள் அதுதான். அவன் அப்பாவின் நண்பர்களில் ஒருவர் அதை நெருங்கிச் சென்றார், கையில் கத்தி வைத்திருந்தார்: ஜெஸ்ஸி தான் அந்த மனிதராக இருக்க வேண்டுமென விரும்பினான். அது நீண்ட பளபளப்பான கத்தி. அதைத் தடவிப் பார்ப்பதற்காக, அதனோடு விளையாடுவதற்காக, சூரியனே அதன் மேல் விழுந்து பற்றிக்கொண்டது போலத் தோன்றியது – அது நெருப்பை விடப் பிரகாசமாக இருந்தது. சிரிப்பலை ஒன்று கூட்டத்தில் வீசிச் சென்றது. ஜெஸ்ஸி, அப்பாவின் கைகள் தன் கணுக்காலில் இருந்து நழுவி பிறகு இறுகப் பற்றிக்கொண்டதை உணர்ந்தான். கத்தி வைத்திருந்த மனிதன் கூட்டத்தை நோக்கி நடந்து வந்தான் லேசாகப் புன்னகைத்தபடி; இது ஏதோவொரு சமிக்ஞை என்பதைப் போல அமைதி கவிழ்ந்தது; தன் அம்மா இருமுவதை அவன் கேட்டான். பிறகு தொங்கிக்கொண்டிருக்கும் உடலை நோக்கி அம்மனிதன் நடந்து சென்றான். அவன் பின்னால் திரும்பி மீண்டும் புன்னகைத்தான். இப்போது அந்தச் சிறுவெளி முழுதும் அமைதி சூழ்ந்தது. தொங்கிக்கொண்டிருக்கும் தலை மேல் நிமிர்ந்து பார்த்தது. அதற்கு தற்போது முழு நினைவும் இருப்பதைப் போலத் தெரிந்தது, ஏதோ வலியையும் நடுக்கத்தையும் தீ எரித்து அழித்துவிட்டதைப் போல. கத்தி வைத்திருந்த மனிதன் கருப்பனின் ஆணுறுப்பை எடை போடுவதைப் போலத் தன் கையில் தாங்கிக்கொண்டான். ஒரே கையில். இன்னமும் புன்னகைத்துக்கொண்டிருந்தான். ஒரு வெள்ளைக் கை தொட்டிலில், அந்தக் கருப்பனின் ஆணுறுப்பு தராசில் எடைபோடப்படும் ஏதோவொன்றின் இறைச்சித் துண்டைப் போல இருந்தது; ஆனால் கனமிக்கதாக, அதிக எடையுள்ளதாகத் தெரிந்தது. ஜெஸ்ஸி தன்னுடைய விரைப்பை இறுக்கமானதை உணர்ந்தான்; அவன் அப்பாவினுடையதைவிட பெரியது, மிகப்பெரியது. தளர்வுற்று தொங்கியது. முடியற்றது. அவன் இதுவரை பார்த்ததிலேயே மிகப் பெரியதும் கறுப்பானதும் அதுதான். அவ்வெள்ளைக் கரம் அதை இழுத்து, தொட்டிலாட்டி வருடியது. அப்போது இறக்கும் மனிதனின் கண்கள் நேராக ஜெஸ்ஸியின் கண்களைச் சந்தித்தது – அது ஒரு நொடி நேரம் கூட நிலைத்திருக்காதுதான், ஆனால் அது ஒரு வருடத்தைவிட நீண்டதாகத் தோன்றியது. கத்தி, திடீரென மேலே பிறகு கீழே என மின்னிட்டு வீச, ஜெஸ்ஸி கத்தினான், கூட்டம் கத்தியது, அந்த வெறுப்பூட்டும்  பயங்கரமான ஒன்று வெட்டி எடுக்கப்பட்டது. இரத்தம் பீறிட்டு வந்தது. பிறகு, அந்த கூட்டம் விறுவிறுவென முன்னேறிச் சபித்தும் ஓலமிட்டும் அவ்வுடலை கைகளால், கத்தியால், கற்களும் பாறைகளுமாக வீசி கிழித்தது. ஜெஸ்ஸியின் தலை தன் பாரம் தாங்காமல் அவன் அப்பாவின் தலையை நோக்கி கீழே சாய்ந்தது. யாரோ முன்னால் அடியெடுத்து வைத்து அவ்வுடலை மண்ணெண்ணெய்யால் நனைத்தார். அம்மனிதன் கிடந்த இடத்தில் ஒரு பெரிய தீப்பிழம்புத் திரை தோன்றியது.

“உன்னிடம் சொன்னேன்தானே,” அவன் அப்பா சொன்னார், “இந்த பிக்னிக்கை உன்னால் மறக்கவேமுடியாது.” அப்பாவின் முகம் முழுதும் வியர்த்திருந்தது, அவர் கண்கள் மிகச் சாந்தமாகயிருந்தது. அந்த நொடியில் ஜெஸ்ஸி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அவன் அப்பாவை நேசித்தான். தன் அப்பா தன்னை மிகக் கடினமான பரிசோதனை ஒன்றிற்கு ஆட்படுத்தியதாகவும், என்றென்றைக்கும் தன் வாழ்வின் திறவுகோலாக இருக்கப் போகும் ஒரு மகத்தான இரகசியத்தைத் திறந்து காட்டிவிட்டதாகவும் உணர்ந்தான்.

“ஆமாம், ஆமாம்.. ஒத்துக்கொள்கிறேன்,” என்றான் அவன்.

ஜெஸ்ஸியின் அப்பா அவனின் கை பிடித்து கூட்டத்தினிடையே நடந்து அச்சமவெளியைக் கடந்துசென்றார். அவன் அம்மா மற்ற பெண்களுடன் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் அவர்களுக்குச் சற்று பின்னால் வந்துகொண்டிருந்தாள். அந்த கறுத்த உடல் தரையில் கிடந்தது, அதைத் தாங்கியிருந்த சங்கிலியை அவன் அப்பாவின் நண்பர்களில் ஒருவர் சுருட்டிக்கொண்டிருந்தார். நெருப்பு சிதைக்காமல் விட்டிருந்த மிச்சத்தை, அதன் வேலையை, கத்திகளும் கற்களும் கூட்டத்தின் கைகளும் முடித்து வைத்திருந்தன. தலை குடையப்பட்டிருந்தது, ஒரு கண் கிழிந்து வெளியேறியிருந்தது, காது தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இதை உணர ஒருவர் மிகக் கவனமாகப் பார்க்கவேண்டியிருந்தது. அது இப்போது வெறும் கறுத்துத் தீய்ந்துபோன தரையின் மீதிருந்த கறுத்துத் தீய்ந்துபோன ஒரு வெற்றுப் பொருள். முன்பு காயங்களாக இருந்தவற்றுடன், முன்பு கால்களாக இருந்தவற்றைக் கழுகுச் சிறகைப் போல விரித்துக் கிடந்தான்.

“இப்போது அவர்கள் இவனை இங்கேயே விட்டுவிடுவார்களா?” ஜெஸ்ஸி கிசுகிசுத்தான்.

“ஆமாம்,” என்று சொன்னார் அவன் அப்பா, “ஆனால் எப்படியும் சீக்கிரத்திலேயே அவர்கள் வந்து இவனைக் கொண்டு சென்றுவிடுவார்கள். நாம் அங்கே சென்று அங்கிருக்கும் உணவு முழுதும் தீர்ந்துவிடுவதற்கு முன்னால் கொஞ்சம் எடுத்துக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.”

“ஆமாம், சரிதான் ஒப்புக்கொள்கிறேன்,” இப்போது அவன் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான், “நான் ஒப்புக்கொள்கிறேன்.”

கிரேஸ் இப்போது அவன் தொடையைத் தொட்டு அசைத்தாள்: நிலவொளி அவளைப் பேரெழிலென  ஒளிவட்டமிட்டு சூழ்ந்திருந்தது. அவனுக்குள் எதுவோ குமிழிட்டு கிளம்பியது, அவனுடைய இயல்பு மீண்டும் அவனிடம் திரும்பியது. சிறையிலிருந்த அப்பையனை அவன் நினைத்துக்கொண்டான்; நெருப்பிலிருந்த அம்மனிதனை அவன் நினைத்துக்கொண்டான்; அவன் கத்தியை நினைத்துக்கொண்டே தன்னுறுப்பை தானே ஏந்தி, அதைத்தடவி அசைத்தான். ஒரு கொடூரமான சத்தம், உரத்த சிரிப்பிற்கும் அலறலுக்குமிடையேயான ஒன்று அவனுள்ளிருந்து வெளிப்பட்டது. உறங்கிக்கொண்டிருக்கும் தன் மனைவியை முழங்கையால் பிடித்து இழுத்தான். பனியைப் போல இப்போது குளிர்ச்சியாக இருக்கும் நிலவொளியில் அவன் முகத்தை ஏறிட்டாள் அவள். அன்று காலையை அவன் நினைத்துக்கொண்டு அவளைப் பற்றி இழுத்தான், சிரித்தும் அழுதும், அழுதும் சிரித்தும், அவளைத் தடவியபடியே, அவளை ஆட்கொண்டபடியே, குசுகுசுப்பாகச் சொன்னான், “வா தேனே, உன்னை நான் ஒரு கறுப்பனைப் போலப் புணரப்போகிறேன், அப்படியே ஒரு கறுப்பனைப் போலவே. அருகில் வா, தேனே… நீ ஒரு கறுப்பனுடன் காதல் செய்வதைப் போல என்னுடன் காதல் செய்.” அவன் அவள் மீது இயங்குகையில் அன்று காலையை நினைத்துக்கொண்டான், முன்னெப்போதும் இல்லாதவகையில் அவன் வேகமாக இயங்குகையில் கூட, அன்று காலையையே நினைத்துக்கொண்டிருந்தான். அவன் இயக்கம் முழுவதுமாக அடங்குவதற்கு முன்னால் அவன் காதில் கேட்டது, முதல் கோழி கூவலும் நாய்களின் குரைப்பொலியும் சரளைக்கல் பாதையில் டயர்களின் சத்தமும்.


James Arthur Baldwin (1924-1987) – ஜேம்ஸ் பால்ட்வின்:

 

ஹார்லெமின் (Harlem) ஹென்றி ஜேம்ஸ் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் பால்ட்வின் 1950களின் இறுதியிலும் 1960களின் தொடக்கத்திலும் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான அமெரிக்க இனவாதத்தை நோக்கி உரக்க எழும்பிய குரல். கட்டுரையாளர், நாவலாசிரியர், நாடகாசிரியர் என பல்வேறு தளங்களிலும் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவரின் சமூக நீதிக்கும் சம உரிமைக்காகவும் தனது வீரியமிக்க எழுத்துக்களால் பெரும் பங்களிப்பாற்றியவர். நீண்ட கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மூலம் போராட்ட குணமிக்க மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கியத்தின் மூலமாக சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியுமென நம்பிய அதே வேளையில் 60களில் கொதித்தெழுந்த போராட்டங்களில் நேரடியாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மொழியின் அத்தனை வெளிப்பாடுகளையும் முயன்று பார்த்தவர். தன்பால் ஈர்ப்பு கொண்டவன் என்பதை அவர் சிறுவயதிலிருந்தே உணர்ந்திருந்தாலும் அதை தன்னுடைய புனைவுகளில் மட்டுமே வெளிப்படுத்தி வந்தார். வெளிப்படையாக இதை அறிவிப்பது தான் ஈடுபட்டிருக்கும் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களைப் பிசுபிசுக்கச் செய்யும் என்று நினைத்தார். கறுப்பினப் போராட்டக்காரர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களை முழுதாக ஏற்றுக்கொள்ளாத காலகட்டமது. மார்டின் லூதர் கிங், தன்பால் ஈர்ப்பு குணப்படுத்தக்கூடிய ஒரு மனநோய்தான் என்று தனது கல்லூரி காலங்களில் எண்ணம் கொண்டிருந்தார்.

 

சம உரிமை போராட்டங்கள் கறுப்பினத்தவர் மட்டுமே ஈடுபடவேண்டியது என்பதை பால்ட்வின் நம்பவில்லை. அவ்வகையில் தான் கறுப்பினத்தவர்களுக்காக மட்டுமே குரலெழுப்பும் ஒரு போராளி என்று அழைக்கப்படுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு குடிமகனும், அவன் எந்த இனத்தவனாயினும் இதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். கறுப்பினத்தவர்களுக்கான விடுதலை என்பது வெள்ளையினத்தவருக்கான அக விடுதலையும்தான் என்று உரைத்தார். அவர்களின் அகச்சிக்கல் கறுப்பினத்தவரின் இன்னல்களுக்கு நிகரானது என்று எண்ணினார். இவரது படைப்புகளில் வெள்ளை இனத்தவரின் மனங்கள் விரிவாக விவாதிக்கப்படுவதற்கும் இதுவே காரணம். அதுபோலவே ஆண்மை என்னும் கருத்துருவாக்கமும் அது தரும் ஆதிக்க உணர்வும் இனவாதத்திற்கு மற்றொரு கூறு என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். அதனாலேயே இவரது புனைவுகளில் பாலியல் வேட்கை சார்ந்த மனப்பிறழ்வுகளும் இனவாத அழிவுச் செயல்பாடுகளையும் ஒன்றாக அணுகும் பார்வை பெருமளவில் வெளிப்படுகிறது. அதற்காகவே அவர் இன்றளவும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.

 

ம. நரேந்திரன்

மென்பொருள் துறையில் பணிபுரியும் இவர் கோவையில் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் தொடர் வாசிப்பும் ஆர்வமும் கொண்டவர். இவரின் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் திரு. ஜெயமோகன் தளத்திலும் கனலி, சொல்வனம், யாவரும்.காம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. இவரின் தமிழாக்கத்தில் சமகால ஆங்கில சிறுகதைகளின் தொகுப்பு – ‘இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்’ யாவரும் பதிப்பகத்தாரால் 2020இல் வெளியிடப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது. புலம் பெயரிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட  இக்கதைகளின் மூலமாக முதன்மையான சமகால ஆங்கில சிறுகதை ஆசிரியர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.