மற்றொருவன்

“பையா….” ஹெட் எடிட்டர் நாணா சார் தான் உரக்க அழைத்தார்.

பையா என்று அழைக்கப்பட்டவன் அப்படி ஒன்றும் சின்னப்பையன் இல்லை. குறைந்தது நாற்பதுக்கும் குறையாத வயது முன் தலையில் விழ ஆரம்பித்து விட்ட வழுக்கை, கசங்கிய சட்டை, சிகரெட் கொடுத்த கறுப்பு உதடுகள், ஆழப்பார்வைக்குச் சாட்சியாகக் கண்களை அதிகப்பெரிசாக காட்டியபடி உருண்டைக்கண்ணாடி,  இடுப்பில் இருந்து விழக்கூடிய அபாய நிலையில் இடுப்பில் பாண்ட், அதிக தொள தொளப்புடன், நடக்கும் போது லேசாக இடதுபுறம் சாயும் உடல், உட்கார்ந்தபடி பாதிநேரம் இருப்பதால், மிக அதிக லேசாக வளைந்த முதுகுத்தண்டு,  அவை பையாவின் தோற்றம்.

பையா சற்றே நிதானித்து பின் இருக்கையில் இருந்து எழுந்து யாருக்காவது வலிக்குமோ என்ற நடையுடன் எடிட்டர் அருகில் சென்று நின்றான். எடிட்டரைச்சுற்றி காகித குப்பைகள். சில சிகப்புக் கோடிட்டு, சில கசக்கப்பட்டு, பல அடுக்கப்பட்டுக் கிடந்தன.  குப்பைக்கூடை நிரம்பி வழிந்தது… காபி கப்புக்கள் சற்றே அதிகமாக மூடி அற்று வெற்று உடம்பாகப் பல பேனாக்களின் சிதறல் மேஜை மீது. ரிசீவர் கீழே அலட்சியமாக வைக்கப்பட்டிருந்த கறுப்புக் குண்டு பழைய மாடல் தொலைபேசி…. அந்த அறையில் இருந்த பல மேஜைகளின் ஓர் உதாரணம் இது. சில சேர்களில் குஷன் பில்லோக்கள் சிலரின் ஸ்பாண்டிலைடிஸ்சையோ அல்லது உயரம் குறைவையோ அல்லது பிருஷ்ட பாகப் பிரச்சனையையோ …எதையோ ஒன்றைப் பறைசாற்றியபடி. அல்லது நேரம் கணக்கில்லாமல் அங்குள்ளவர்கள் அங்கே அடைந்துகொள்வதற்கான அடையாளமாகக்கூட இருக்கலாம். படிப்பதற்குத் தேவையான வெளிச்சம் இல்லாத அபத்தமான மஞ்சள் விளக்குகள் அங்கே எரிந்துகொண்டிருந்தது. இருட்டடைந்த காரிடார்களில் மிக அதிகமாக பழைய பேப்பர்களின் வாசம். முழுவதுமாக சுவர்களில் அடைத்து நின்ற கப்போர்ட்டுகளில் ஐம்பது வருடத் தினசரி செய்தித்தாள்கள் வரிசையாகத் திணிக்கப்பட்டிருந்தன.

பையா என்று அழைக்கப்பட்ட விச்சு என்றும் அழைக்கப்படும் விசுவநாதன் இதில் முக்கால்வாசி செய்தித்தாள்களைப் படித்துக் கரைத்துக்குடித்திருக்கிறான். மற்றும் பாதிவாசி செய்தித்தாள்களில் ஏதோ சில வார்த்தை குவியல்களும் குவித்தும் இருக்கிறான்.

“அரே பையா…. தேக்கோ… இந்தக்காலம் நாளைக்காலை பேப்பரில் வந்தே ஆகவேண்டும். .சீஃப் கட்டளை… நீ என்னப்பண்ணுவ தெரியாது… பன்னிரெண்டு மணிக்குள்ள ரெடி செஞ்சுடு….”

பையா என்ற விச்சு என்ற விசுவநாதன் ஏதும் பேசாமல் நின்றான். இன்னும் ப்ரூஃப் திருத்தவேண்டிய வேலை பாக்கி இருந்தது. கார்டூன் படம் வந்து சேரவில்லை. ஓவியர் தொலைப்பேசியை எடுக்க மறுக்கிறார். ப்ரிண்ட் ஆன பக்கங்களில் அவுட்லே சரி இல்லை. சரி செய்துத்தர வேண்டும். இந்த வேலைகளை முடிக்கவே நடுஇரவு ஆகிவிடும். இப்போது இந்தக்கட்டுரை. இதை ஏனோ தானோ என்றும் எழுத முடியாது. சீரியஸ் மேட்டர். இது வரை வந்துள்ள பழைய கட்டுரைகளைப் படித்து அதில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு மாறாமல், இன்று வரை நடந்துள்ள மாற்றங்களை முன் வைத்து…. இந்த சில வார்த்தைகளைத் துப்பி ஒழுங்குபடுத்தவே குறைந்தது இரண்டு மணி நேரம்… பின் முன் பக்கத்தை மாற்றி அமைத்து, இந்தப்பத்தியை உள் நுழைத்து, முன் பக்கத்தில் முன்  கொடுத்த விஷயத்திற்கு மற்றொரு பக்கம் பார்த்து, அந்த மற்ற பக்கத்தில் போட வைத்திருந்ததை நாளையோ…அதற்கு அடுத்த நாளோ…அல்லது கிடப்பிலோ போட்டு…..

இவற்றைச் சொல்லலாமா என்று சிறிது யோசித்து பின் வார்த்தைகளை விழுங்கி ,அசிஸ்டண்ட் எடிட்டர் கொடுத்த துண்டு காகிதத்தை ஒன்றும் பேசாமல் கைகளில் வாங்கிக் கொண்டான். பிரச்சனைகளை இங்கே சொல்லக்கூடாது. முடிந்தால் அதிக நேரத்தைக் கடவுளை ஏமாற்றிப் பிடுங்கிக்கொண்டு வேலை செய்யவேண்டும். செக்கு மாடுகள் செக்கைச் சுற்றுவதற்குத்தான். கழுத்து வலியைப்பற்றிப் பேச அவைகளுக்கு உரிமை இல்லை. இதுதான் எழுத்திற்கு வலு…. இப்படியும் சொல்ல முடியாது…ஒரு வித எஸ்கேபிசத்திற்கான வார்த்தைகளாக வேண்டுமானால் கொள்ளலாம்.

ஒரு உச் சத்தம் மட்டுமே சாத்தியப்பட்ட அந்த நேரத்தில் விச்சு ஒரு அயர்ச்சியுடன் நாற்காலியில் சற்றே சாய்ந்து அமர்ந்தான்.

இப்போதெல்லாம் சற்றே அடிக்கடியாக தலையில் தெறிப்பது போன்ற ஒரு வலி வருகிறது. சாரிடானுக்கு சிறிது காலம் கடமைக்காக கட்டடுப்பட்டுக்கிடந்தது. இப்போதெல்லாம் காபி, சாரிடான், ஏதோ ஒரு தலைவலி களிம்பு, பாட்டு, தூக்கம்…இவை எதற்கும் அடங்காமல் குத்தாட்டம் போடுகிறது. டாக்டரை ஒரு நடை சென்று பார்த்துவிட்டு வரவேண்டும்.

எதிரே வைக்கப்பட்டிருந்த காபி கப் சற்றே அதிகம் சாந்தப்படுத்தப்பட்டதன் காரணமாக நாணம் கொண்டு ஆடை உடுத்தி அதில் ஒரு ஈயையும் சுற்றவிட்டுக்கொண்டிருந்தது. உடலோடு ஒட்டி நின்ற இறக்கைகளைப் பிரிக்கக் கஷ்டப்பட்டபடி சுழன்று சுழன்று சுற்றிக்கொண்டிருந்தது. காபி சூடு ஆறிப்போனபின் விழுந்திருக்கவேண்டும். அதனால் தான் இறந்து போகாமல் இன்னும் வாழ முயன்று கொண்டிருக்கிறது. வெளியே எடுத்துப்போட்டால், ஒரு நிமிடம் தன் இறக்கைகளை ஒரு சிலிர்ப்பு சிலுப்பி, காபி தண்ணீரைச் சிதறவிட்டு சடுதியில் பறந்து போய்விடும், நன்றி ஏதும் சொல்லாமல்.  அதனால் அந்த ஈயை வெளியே எடுத்து விட வேண்டிய கட்டாயம் ஏதுவுமின்றி சிறிது நேரம் அதன் அவஸ்தையை ரசித்துக்கொண்டிருந்தான்.

“சார்… விச்சு சார்…. யாரோ வந்திருக்காங்க…எடிட்டரைத்தான் பார்க்கணுமாம். ஆனா அவரு உங்களைப் பார்க்கச் சொல்லிட்டாரு…. யாரோ முக்கியமானவங்க சிபாரிசு போல…. வரச்சொல்லவா….??”

கடிகார முள்ளிற்கும் அவனுக்குமான போட்டி வலுப்பட்டுக் கொண்டேதான் சென்றது.

அந்த யாரோ என்பவன் வந்தான். அபத்தமாக மனம் இப்போதெல்லாம் பார்த்தவர்களைப் பற்றிக் கதை சொல்லத் தொடங்கி விடுகிறது. உருவத்திற்குச் சம்பந்தம் இல்லாமல் போடப்பட்டிருந்த ஏகத்திற்குப் பெரிதான சாயம் வெளிர்த்த சட்டை ஒரு கதையை, ஒட்டி உலர்ந்து லேசாகச் சவரம் செய்யாததால் முளைத்திருந்த சின்னசின்ன முள் காடுகள் முளைத்த தாடை ஒரு கதையையும், லேசாக அழுத்தமாக அடர்ந்திருந்த கறுப்பு அழுக்கு உள்படர்ந்த நகங்கள் ஓர் கதையையும்…

அவனை உட்காரச்சொல்லவில்லை.

“என்ன?”

“கதையை எழுதி இருக்கிறேன்…என் கதையை…” லேசான பெருமை, தயக்கம், வெட்கம் எல்லாம் சேர்ந்த ஜிகிர்தண்டாவாக குரல். கைகளில் ஒரு பைண்ட் புக்காக கறுப்பு உடை உடுத்திய ஒரு டைரி…

” என்ன…ஒரு கைதியின் டைரியா??”

சிரிப்பு எட்டிப்பார்க்காமல் மிக நேர்த்தியாகக் காக்கப்பட சீரியஸ்னஸுடன் அபத்தக்கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தான்.

“ஆமாங்க… அப்படித்தான் வெச்சுகுங்களேன். வாழ்க்கை சிறையில் அடைபட்ட ஒரு கைதியின் டைரி தான்.”

விசு இந்த பதிலை எதிர்பார்க்காததால் சற்றே தடுமாறிச் சுதாரித்து பின் சமாளித்தான்.

“ஓ, வாழ்க்கை ஓர் கட்டுக்குள் இருப்பது தான் சிறையா…? இந்தா பாருங்க, இந்த சென்டிமெண்ட் கதையெல்லாம் இப்போ வேகாது. படிக்க ஆளில்ல.. கேட்டீங்களா….” நீட்டப்பட்ட கறுப்பு டைரியை கைகளில் வாங்காமல் அலட்சியம் காட்டினான்.

வந்தவன் உணர்ச்சி அற்ற முகத்தோடு பார்த்தபடி கைகளையும் நீட்டியபடி நின்றுகொண்டிருந்தான்.

சட்…. எதற்கு இவனிடம் பேசி நேரத்தை வீண் செய்யவேண்டும். இரவுக்குள் முடிக்க வேண்டிய வேலை அவ்வளவு இருக்கும்போது…

” சரி.. வெச்சுட்டு போங்க…. பார்த்துச் சொல்கிறேன்.” அவன் செல்வதைக்கூடப் பார்க்காமல் தன் வேலையில் இறங்கினான். வேலை முடித்து வீடு செல்வதற்கு ஒரு மணி ஆயிற்று. லேசாக முணுமுணுத்து வலி கொடுத்த தலைவலிக்கு நாயர் கடை இஞ்சி டீ சற்றே பலன் அளித்தது.

” சாரே, அதிக ஜோலியோ, சாரண்டே ஒரு பிரசன்னம்…. இந்த காகிதக் குப்பைகளைப் படிக்க ஆளுண்டோ? ” என்ற தைரியமான கேள்விக்கு அவன் டீக் கடை வாசலில் ராயாசமாக தொங்கிய மலையாள பத்திரிகை ஒன்றை ஆட்டிவிட்டு, டீ காசை கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

மேல் சட்டையை கழட்டும்போது தோளில் மாட்டி இருந்த துணிப்பை எக்குத்தப்பாகச் சட்டை கைகளில் சுருண்டு மாட்டி  தான் இன்னும் தோளிலிருந்து எடுக்கப்படாததை உணர்த்தியது. சட்டைகளை மறுபடியும் தோளுக்கு உயர்த்தி பைக்கு விடுதலை கொடுத்தபோது லேசான கனமாய் உள்ளே அந்த கறுப்பு டைரி ஆடி நின்றது.

அட.. இதை மறந்து எடுத்து வந்துவிட்டேனே…. சரி….டீ சாப்பிட்டதால் தூக்கம் சற்றே அடம் பிடித்துத்தான் வரும்… என்னதான் எழுதி இருக்கிறான் என்று பார்த்துவிடலாம்….என்ற எண்ணத்தோடு நாட்குறிப்பின் பக்கங்களை மெல்லப் புரட்டத்தொடங்கினான்.

13.03.2001

அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டேன். வேலைக்கு வரும் பெண்மணி வீட்டுவேலை முடித்து பின் சமைக்கத் தொடங்குவாள். என்ன சமையல் என்ற எதிர்பார்ப்போடு மூக்கு தன் வேலையைச் செய்யத் தொடங்க வேண்டும். எனக்கு அது தான் பிடிக்கும். ஆனால் நேற்று சாயங்காலம், நான் தான் இன்றைக்கான கறிகாய் வாங்கி வந்தேன். அதனால் மூக்கு வழி செய்திக்குக் காத்திராமல், புத்திக்கு சமையல் என்னவென்று தெரிந்து விட்டிருந்தது.

இது தான் என் தலைவலிக்குக் காரணம். மொனோடனி… எதிர்பார்ப்புக்கள் இல்லை. நடந்தவையும் நடக்கப்போவதும் நடந்து கொண்டிருப்பதும் தெரிந்த இந்த பொழுதுகள் சாகடிக்கப்பட வேண்டியவை.

வாசலில் எதோ பெரிய கூச்சல். நான் போக முடிவெடுப்பதற்குள் வேலை செய்யும் பெண்மணி கை கால் பதற வெளியே ஓடிச்சென்றாள். பின் அதே பதட்டத்தோடு உள்ளே ஓடி வந்தாள்.

அய்யா…ஆக்சிடெண்ட்.. .பெரிய ஆக்சிடெண்ட்.. லாரி அடிச்சு பையன் ஸ்பாட்டுலேயே காலி…. மூளை சிதறிக்கிடக்கு…

மெதுவாக எழுந்து சென்றேன். கூச்சல் அழுகை சத்தம் எதுவும் என் காதுகளில் விழவில்லை. மஞ்சள் வெள்ளையாகச் சிதறிக்கிடந்த மூளையில் என் மனம் லயித்தது. அதில் துளியும் கலக்காமல் சிகப்பு நிற ரத்தம் மற்றொரு பக்கமாக உறையத் தொடங்கி இருந்தது. இன்று என் வாழ்வில் முக்கியமான நாள். இதுவரை பார்த்திராத மூளையை முழுவதுமாக பார்த்து ரசித்தேன்.

அவனால் இதற்கு மேல் படிக்க முடியவில்லை. எப்படிப்பட்ட ஒரு பெர்வர்ட்டாக இருந்தால் ஒரு சாவைப் பற்றிச் சிந்திக்காமல் மூளையை ஆராய்ச்சி செய்திருக்கமுடியும்? எல்லாம் சரிதான், எப்படி இது போல் எழுதிய ஒன்றைப் பதிப்பிக்கத்தகுந்தது என்று எண்ணலாம்? யோசித்தபடி படுத்தபோது வெள்ளையாக மஞ்சளான வஸ்து ஏதோ ஒன்று வந்து அவன் அடிமனதில் ஆட்டம் போட்டது. நடுநடுவே அன்றைய பத்திரிகையில் அச்சிட விச்சு கொடுத்த செய்திகளின் வார்த்தைகள் நிர்வாணமாக மேடை ஏறின.

“என்ன விச்சு… கண்கள் சிவந்து கிடக்கு. பையா மிட்நைட் மசாலாவா..? எடிட்டர் நாணாவின் அபத்தக்கூச்சல், இரவு தூக்கத்தில் பார்த்த சிதறிய மூளையை நினைவுபடுத்தச் சற்றே திகைத்து பின் சுதாரித்தான்.

” எடிட்டர் சார்..  நேற்று என்னைப்பார்க்க ஒருவரை அனுப்பியது நினைவில் இருக்கா..? யார் அது, வேலை ஆயிரம் கிடக்கு…. அபத்தமான சுயபுராணம் ஒன்றை எழுத்து என்ற பொய் நாமகரணம் சூட்டி கையிலே கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்கிறார். முடியாது சார். நீங்க பார்த்துகுங்க….” என்றும் இல்லாத சமயமாய் குரல் உயர்ந்து ஒலிக்க, சட் என்று நிமிர்ந்துப் பார்க்கிறார் நாணா. கண்களில் சட்டென்று தோன்றிய கோபம், மெதுவாகச் சந்தேகமாக மாறும்போது வார்த்தைகள் வெளி வந்தன.

“பையா…. சீப்க்கு வேண்டியவர் தெரியுமா…”

“வேண்டியவர்….. இருக்கட்டுமே…. அதனால் என்ன?” தன்னை அறியாமல் விச்சுவின் வாயில் இருந்து விழுந்த சொற்கள்.

“பையா… நீ ஏதோ இன்னிக்கு சரியாதான் இல்ல. போ, போய் வேலையைப்பாரு. அப்புறமா பேசலாம்” அவன் மேலே குரலை உயர்த்தி பேசத் தொடங்கி விடுவானோ என்ற பயம் அவர் பேசும் தொனியில் தெரிந்தது.

அவருக்கு விசுவநாதனை மிகவும் பிடிக்கும். அவரின் தேவைக்கேற்ப பொதி சுமக்கும் கழுதை. அவனை விட்டு விட்டால் அது போல் மற்றொருவன் கிடைப்பது சற்றே சிரமம் தான். இந்த பழைய அறையின் மூலையில் வழிந்து கிடக்கும் குப்பைக்கூடைக்குக் கூட பேசும் திறன் உண்டு. சீப்பின் காதுகளுக்கு ஒரு அட்சரம் தப்பாமல் நடக்கும் பேச்சுக்கள் ஒலி பரப்பப்படும். ஏன், அவரே அதை தனக்குத் தேவையான தருணங்களில் செய்திருக்கிறார். விசுவநாதன் இப்படி மரியாதைக் குறைவாகப் பேசுவதைக் கேள்விப்பட்டால், அவருக்கு வேலை போகாதுதான். ஆனால் விசுவநாதன் போய் விட்டால் இப்படி ஒரு பொதி மாடு அவருக்குக் கிடைப்பது சிரமம்.

விசுவநாதன் சற்றே முறைத்து விட்டுச் சட்டென்று திரும்பிச் சென்றான்.

“இந்த டைரி….” கூறவந்தவர் மெதுவாகக் குரலை அடக்கி சமாளித்தார். நிச்சயமாக விச்சு காதில் விழுந்திருக்காது. ஆனால் அவன் நின்று, திரும்பி அவசரமாக வந்தான்.

“டைரி… முடிந்தவரைப் படிக்கிறேன்” பதிலை எதிர்பார்க்காமல் எடுத்துக் கொண்டு திரும்பினான்.

விசுவநாதனுக்கு எப்போதும் தோன்றும் தலைவலி கண்களுக்கு மேற்புறம் லேசாகப் பரவ ஆரம்பித்தது.

“ஷிட்” சற்றே உரக்க உதிர்த்த வார்த்தை அந்த இருட்டு அறையின் மூலைகளுக்குச்சென்று எதிரொலி கொடுக்கத் தொடங்கியது ஒவ்வொன்றாக. தலைவலி அதிகரித்தது. சிகரெட் பெட்டியை அவசரமாக கைகளில் கசக்கியபடி வெளியே வந்தான். அவனைப்போலவே ரத்தினமும் ஓர் மூலையில் நின்று புகை விட்டுக்கொண்டிருந்தார்.

“என்ன விச்சு, சீஃப் கூட சண்டையா?”

பேச்சுக்கொடுத்து விஷயத்தை வெளி வாங்கி அதற்குக் கண் மூக்கு காது புது உடல் என்று சகலமும் சேர்த்துப் பரவவிடக்கூடியவர்.

“ப்ச்…அதெல்லாம் இல்லை. டே டு டே வேலை பேச்சுதான்”

“அட, நமக்குள்ள என்ன? சும்மா சொல்லு. நீ இவ்வளவு சத்தமா பேசி கேட்டதில்லையே.”

விசுவநாதனுக்குத் தலை வலி லேசாக அதிகரித்தது.

இவருடன் பேசுவது சிரமம். அதற்கான தெம்பு இன்று அவனுக்கில்லை. ஒவ்வொரு நாளும் இவர் போல் பலர். ஒவ்வொருத்தரையும் சமாளித்து, பின் வேலையை முடித்து, பின் அதற்கும் ஒரு இளக்கார பேச்சைக்கேட்டு….இதை இருபது வருடமாகச் செய்ததில் அந்த வேலைகளே பெரும் சுமை மூட்டையாகத் தோளில் அமர்ந்து அழுத்தத் தொடங்கியது.

“சார், கொஞ்சம் உடம்பு முடியலை. தலைவலிதான். என்ன இப்போ கொஞ்சம் அதிகமாயிட்டுது. நான் உள்ளே போறேன்” அவசரமாகப் பாதி குடித்து முடித்த சிகரெட்டை கால்களின் கீழ் போட்டு ஏதோ ஒரு ஆங்காரத்தோடு அழுத்தி நசுக்கினான்.

” அட, என்னப்பா நீ. இதுவரை அனாவசியமா ஒரு தபா கூட லீவு எடுக்காதவன். போ, போய் லீவ் சொல்லிட்டு கிளம்பிகினே இரு. வேல காத்திருக்கும். நாளை வந்து பண்ணு.”

பதில் பேசாமல் தன் இடத்திற்குத் திரும்பினான். அந்த டைரி தன் கறுப்பு முதுகைக் காட்டியபடி இளித்துக்கொண்டு ஓர் ஓரமாகக் கிடந்தது. மெதுவாக கைகளில் எடுத்தான். அவசரமாக ஒரு பக்கத்தைப்பிரித்தபோது “13.08.2002”. அதுவும் 13 என்ற தேதியில் இருக்க அவன் மனதிற்கு அன்றும் நடந்தது என்று எழுதப்பட்டது சரியாக இருக்காது என்று தோன்றியது.

படிக்கத் தொடங்கினான்.

குடியிருந்த அறையை காலி செய்யச் சொல்லிவிட்டார்கள். வீட்டுச்சொந்தக்காரரின் பிள்ளை வரப்போகிறானாம். இந்த அறையும் வேண்டுமாம். நான் எதுவும் கூறவில்லை. அவர்கள் தேவை. கேட்கிறார்கள். காலி செய்துவிட்டால் போகிறது. ஓர் ஒற்றை ஆளுக்கான பொருட்கள் யாவும் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து எடுத்துக்கொண்டு போய்விட முடியும். ஆனால் சமையல் மட்டும் வீட்டு வேலைக்கு வேறு ஆள் பார்க்க வேண்டும்.

செய்தித்தாளில் நான்கு இடத்தை சுழித்து வைத்தேன். அதில் இரண்டு இந்த இடத்திற்குப் பக்கமாகவே இருந்தது. அதனால் அவற்றில் ஒன்று கிடைத்தால் வேலைக்கு இப்போது வருபவரே வரச்சொல்லிவிடலாம். ஒரு பிரச்சனை குறைந்தது.

முதல் வீடு மிக அழகாக இருந்தது. அடுத்துப் பார்த்தது அவ்வளவு நன்றாக இல்லைதான். ஆனால் நான் அதைத்தான் தேர்வு செய்தேன். காரணம்….? காரணம்….? காரணம்…?

அந்த அறையின் ஜன்னல் வழியே தெரிந்த இறைச்சிக் கடை. நான் அறையைப் பார்க்கச்சென்றபோது, அங்கே ஒரு கோழி கழுத்து அறுபட்டுக் கொண்டிருந்தது. எனக்கு ரத்தம் பிடிக்காது. ஆனால் அப்போது கேட்ட அந்த கோழியின் அலறல் மிகப் பிடித்திருந்தது. இனி காலையிலும் மாலையிலும் இப்படி குரல்களைக் கேட்க முடியும் என்பதே ஒரு சிலிர்ப்பைக் கொடுத்தது.

விசுவநாதனால் மேலே படிக்க முடியவில்லை. இப்போது என்றில்லை இனி எப்போதுமே படிக்க முடியாது. அவசரமாக மூடி வைத்தான். இந்த எழுத்துக்களில் என்னவோ சரி இல்லாமல் இருந்தது. இல்லை, எழுத்துக்களில் இல்லை தவறு. அதை எழுதியவன் மனதில் தான் கோளாறு. ஏதோ ஓர் உந்தலில் டாக்டர் சாரிக்கு போன் செய்தான்.

“ஆமாம் டாக்டர். இப்படித்தான் ஒவ்வொரு நாளும் நடந்தது என்று பதிவு இருக்கிறது. என்ன… என்னா…. அப்படியா டாக்டர் சொல்றீங்க. சரி, உடனே சொல்லிடறேன். சரி டாக்டர், ரொம்ப நன்றி. அப்புறம், இது என்னோட பிரச்சனை. தலைவலி அதிகமா வரது. ஓ, கண்ணாடி மாத்தணுமா. சரி வரேன் டாக்டர். அடுத்த வாரம் கொஞ்சம் வேலை குறைச்சலா இருக்கும். அரை நாள் லீவ் எடுத்துட்டு வந்துடறேன். நன்றி டாக்டர்”

அந்த டைரி கண்களில் பட்டது. அவசரமாக கைகளில் எடுத்தான்.

“இதை இனிமேல் படிக்க முடியாது. அப்சல்யூட் க்ராப். ஆங், இன்னும் ஒண்ணு முக்கியமா சொல்லணும். இதுலே எழுதி இருப்பதை படிச்சு பார்த்தால் எழுதினவன் மனநிலையில் தொந்தரவு இருக்கும் போல தோணித்து. அதான் தெரிந்த டாக்டர் கிட்டப் பேசினேன், நாணா சார். சீஃப்புக்கு வேண்டியவனென்று சொல்றீங்க. அதனால தான் நான் இவ்வளவு இன்டரெஸ்ட் எடுத்துகிட்டேன். டாக்டர் நான் சொன்னதைக் கேட்டதுமே பளிச்சென்று சொல்லிட்டார். அவனுக்கு மனநிலை சரி இல்லை. சில நேரங்களில் போர்டமும் இதற்குக் காரணமா இருக்குமாம். ஒரே வேலை ஒரே இடம் ஒரே ஆட்கள் என்று மனசு வெறுத்து போயிடுமாம். இது தற்கொலையில் கூட முடியலாமாம். நீங்க அந்த ஆள் வந்தா சொல்லி வார்ன் பண்ணிடுங்க. அனாவசியமா ஒரு உயிர் போகவேண்டாம். சரி, நான் கிளம்பறேன். வேலை முடிஞ்சுடுத்து.”

பதிலை எதிர்பாராமல் டைரியை மேஜை மீது வைத்துவிட்டுக் கிளம்பினான்.

சீப் எடிட்டர் அவன் போவதை மிக அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பின் அந்த டைரியை கைகளில் எடுத்தார். படிக்கத்தொடங்கினார்.

“இன்று அவளைப்பார்த்தேன். கண்டதும் காதல்….”

மற்றும் ஒரு பக்கத்தைப் புரட்டினார்.

“கண்ணம்மா, என்னோடு தனியா சினிமாவிற்கு வருவியா?”

மற்றும் ஒருபக்கம். அடுத்து ஒருபக்கம்.

‘என்ன இது, வெறும் காதல் கதை. இதிலே தற்கொலை எங்கே வந்தது?”

அவர் யோசித்துக்கொண்டிருக்கும் அதே நேரம்..

“ஒன்று”

“இரண்டு'”

….

….

…..

“பத்து”

விசுவநாதன் மெதுவாகத் தண்ணீர் ஒருவாய் குடித்து பின் ஒரு மாத்திரை என்று ஒவ்வொன்றாக  விழுங்கிக் கொண்டிருந்தான்.

தூக்கமாத்திரைகள்!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.