இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் காலநிலை மாற்றம்

ந்தியாவில் நடந்துவரும் விவசாயிகளின் இயக்கமானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஒரு புயல் போல புரட்டிப் போட்டிருக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து வந்த நூறாயிரக்கணக்கானோர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக புது தில்லியை முற்றுகையிட்டிருக்கிறார்கள். போராட்டக்காரர்களும் அரசாங்கமும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதிருக்க, மோதலுக்கும் வன்முறைக்குமான வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் சர்வதேச செய்தியறிக்கைகள் இந்தப் போராட்டத்திற்கான மூலக் காரணம் செப்டம்பர் 2020-இல் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்கள் தான் என்கின்றன. இந்தச் சட்டங்கள் நாட்டின் விவசாய அமைப்பை, கணிக்கப்பட்ட தேவையின் அடிப்படையில் உற்பத்தியை விநியோகிக்கும் முறையிலிருந்து (supply-push) நிஜமான தேவையை மையமாகக் கொண்ட (demand-led) ஒன்றாக முற்றிலுமாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன. சாராம்சமாக, இந்த மூன்று சட்டங்கள் விவசாயத் துறையில் உள்ள நிபந்தனைகளைத் தளர்த்துவதையும், ஒப்பந்த அடிப்படையிலான வேளாண்மைக்குக் கதவுகளைத் திறந்துவிடுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்தச் சட்டங்கள் தங்களை மிகப்பெரிய நிறுவனங்களின் கருணையை நம்பி இருக்கும் நிலைக்குத் தள்ளும் எனவும், விவசாய உற்பத்திக்காக வரலாற்றில் இல்லாத அளவிற்கு அரசு மானியம் வழங்குவதன் மூலம் விவசாயிகளையும், அதே போல உள்நாட்டு மற்றும் உலகளாவிய தடையற்ற சந்தைகளின் விசித்திர மாற்றங்களிலிருந்து பொதுமக்களையும் பாதுகாக்க வழிசெய்த பல்வேறு அரசு உதவித் திட்டங்களைத் திறம்பட நிறுத்திவிடும் எனவும் விவசாயிகள் அஞ்சுகிறார்கள்.

வேளாண் துறையைத் தனியார்மயமாக்குவது, நாட்டின் தொழிலாளர்களில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் விவசாயத்தைக் கொண்ட இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகின் வளர்ந்த நாடுகளுக்கும்கூட ஓர் ஆபத்தான நடவடிக்கைதான். எனவே, விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள் என்பதல்ல உண்மையான கேள்வி, ஆனால், முதலில் மோடியின் அரசாங்கம் தனது அரசின் சக்தியை அரசியல் ரீதியாக ஆபத்தான ஒரு கொள்கைச் சீர்திருத்தத்தில் செலவு செய்ய ஏன் தேர்ந்தெடுத்தது என்பதுதான்.

விடை மிக எளிமையானதுதான்: விவசாயம் போட்டியற்றதாகிவிட்டது, எனவே மானியம் வழங்குவதைத் தொடர முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது. இந்தப் போட்டியற்ற நிலைக்கு ஒரு குறிப்பிட்ட காரணமென்று இல்லை. இருந்தாலும், இயற்கை வளங்களின் தவறான மேலாண்மை, திறனற்ற மற்றும் காலாவதியான பயிர்செய்யும் முறைகள், கழிவு நிறைந்த விவசாய நடைமுறைகள் போன்ற பல்வேறு சவால்களின் மத்தியில், சமீபத்திய பத்தாண்டுகளில் இந்திய விவசாயத் துறையைப் பெருங்குழப்பத்தில் வீழச் செய்த ஒரு தனித்துவமான காரணம் வெப்பநிலை அமைப்பு (temperature patterns) மற்றும் மழையளவில் நாடு முழுவதும் ஏற்பட்ட மாற்றம் தான் (change in rainfall).

இந்தியாவில் தீவிர காலநிலை நிகழ்வுகள், குறிப்பாக தீவிர மழைபொழிவு நிகழ்வுகள் 1950 மற்றும் 2015-க்கு இடையில் எண்ணிக்கையில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன. இதன் விளைவாக நாட்டின் பொருளாதார இழப்பு, சர்வதேச பேரழிவு தரவுத்தளத்தின் (EM-DAT) அறிக்கையின்படி 1988-1997 கால இடைவெளிக்கு 20 பில்லியன் டாலர்கள் என்பதிலிருந்து 2008-2017-க்கு 45 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இந்த அளவு 2020-ஆம் ஆண்டிற்கு மட்டும் 10 பில்லியன் டாலர்களாக ஏறியுள்ளது.

இதற்கு முரண்பாடாக, தீவிர மழைபொழிவு நிகழ்வுகள் அதிகரித்த போதும் மழைபொழிவின் மொத்த அளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இந்தியப் பொருளாதார ஆய்வு (2017-2018)-இன் படி, நாட்டின் வருடாந்திர சராசரி மழையளவு 1970 மற்றும் 2015-க்கு இடையில் 86 மில்லிமீட்டர் அளவிற்குக் குறைந்திருக்கிறது, இது நீண்ட கால சராசரியான 1056.83 மில்லிமீட்டரிலிருந்து கிட்டத்தட்ட 8 சதவீதம் குறைவு. இது ஆபத்தானது, ஏனென்றால் இந்தியாவின் விவசாய நிலத்தில் 52 சதவீதத்துக்கும் மேல் நீர்ப்பாசனம் இல்லாத, கணிக்கப்படக்கூடிய மற்றும் சரியான சமயத்தில் பெய்யும் மழையைச் சார்ந்த பகுதியாக இருக்கிறது. கூடுதலாக, இதே கால இடைவெளியில் காரிஃப் (பருவமழைக் காலம்) மற்றும் ராபி (குளிர்காலம்) சாகுபடிப் பருவங்களின் சராசரி வெப்பநிலைகள் முறையே 0.45 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.63 டிகிரி செல்சியஸ் அளவில் உயர்ந்துள்ளன. மழையளவு மற்றும் வெப்பநிலையின் போக்குகளில் ஒரு வருடத்திற்கு உள்ளாக இருக்கும் இந்த மாற்றங்கள் இடம் சார்ந்தோ காலம் சார்ந்தோ ஒரே மாதிரியாக இல்லை, அதனால் இவை நாடு முழுவதிற்குமான வானிலை அட்டவணையை மாற்றியமைக்க வழிவகுத்திருக்கின்றன. சென்ற வருடம், இந்திய வானிலைத் துறை (IMD) கடந்த 80 ஆண்டுகளில் முதல் முறையாகப் பருவமழைக் காலத்தின் தொடக்கம் மற்றும் முடிவிற்கான தேதிகளை மாற்றியது.

காலநிலை மாற்றத்தினால் விளைந்த குலைவுகளும், தொடரும் அழுத்தங்களும் – கணிக்கமுடியாத தீவிர காலநிலை நிகழ்வுகளோடு கூடிய வெப்பநிலை மற்றும் மழைபொழிவிலான நீண்ட கால மாற்றங்கள் – விவசாயிகளையும் அரசாங்கத்தையும் குழப்பிவிட்டது. வீழ்ச்சியடையும் மகசூலிற்கு முட்டுக் கொடுக்க விவசாய உள்ளீடுகளின் (பாசன நீர், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் போன்றவை) பயன்பாட்டைத் தீவிரப்படுத்தி விவசாயிகள் இதனை எதிர்கொண்டனர். இருந்தாலும், உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டதால், இலாப வரம்புகள் சமீபத்திய ஆண்டுகளில் மறைந்துவிட்டன. விவசாயிகளின் இடையே வளர்ந்துவரும் இந்தக் கலக்கத்தை தணியச்செய்ய குழாய் கிணறுகளிலிருந்து நீரெடுக்க இலவச மின்சாரம், உரங்களுக்கான மானியம், பெரும் தொகையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களின் வழியாக அடுத்தடுத்த அரசுகள் முயற்சி செய்திருக்கின்றன. எப்படியிருந்தாலும், இந்த உதவிகள் எல்லாம் இழப்புகளைச் சரி செய்யப் போதுமானதாக இல்லைதான்.

JPEG - 362.7 kb

மாற்றமடைந்த இந்தக் காலநிலை போக்குகளின் பேரழிவு, நேரடி விளைவுகளைத் தாண்டியும் இருக்கிறது. இந்தியாவின் விவசாயத்தின் நிலைத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை கட்டமைக்கும் பயிர் முறைகளை இடையூறு செய்யும் வடிவில் வந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தால் திணிக்கப்பட்ட இந்த அசாதாரண நிச்சயமற்ற தன்மையின் அச்சுறுத்தலால் விவசாயிகள் முன்னர் இலாபகரமாக இருந்த பயிர்களிலிருந்து குறைந்த இலாபம் தரக்கூடிய குறைந்த ஆபத்துள்ளவைக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். எப்படியிருந்தாலும், தேர்ந்தெடுப்பதற்குப் பெரிய அளவில் தெரிவுகள் இல்லாததால், ஒட்டுமொத்தமாக ஒரே பயிருக்கு மாறுவது தேவைக் கதிகமான உற்பத்தியில் சென்று முடிகிறது, பின்னர், கடைசியில் விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், சில சமயங்களில் இந்தியாவில் அநேகமாக ஒவ்வொரு முக்கிய மற்றும் சிறு பயிரின் விலையும் சரிந்தது. கடனால் நசுக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு குழப்பமான போக்கு தொடர்ந்திருக்கிறது.

இந்த நிகழ்வின் மற்றொரு பக்கம் என்னவென்றால், வேறொரு நாட்டில் ஒரு காலநிலை நிகழ்வு பயிர் உற்பத்தியை அழிக்கிறபோது, உலகச் சந்தையில் பெரும்பாலும் ஒரே இரவில் அந்தப் பயிரின் விலையை உயர்த்திவிடுகிறது. விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிட்டு அந்த விலை உயர்வை விரைவில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள், அதன் விளைவாக உலகளாவிய சாகுபடி முறைகளைச் சீர்குலைக்கிறார்கள். தேவைக்கதிகமான உற்பத்திக்கும் தோல்வியடைந்த சாகுபடிகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டு இந்தியாவின் விவசாய முன்னேற்றம் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் நிலையற்றதாகிவிட்டது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விவசாய சீர்குலைவு நிகழ்வு இந்தியாவிற்கு மட்டுமே உரித்தானதில்லை. பக்கத்து நாடான பாகிஸ்தானில், வெப்பநிலை மற்றும் மழைபொழிவில் ஒரு வருடத்திற்குள்ளாக ஏற்படும் மாற்றத்தோடு சேர்ந்து இந்தஸ் (சிந்து) ஆற்று நீரோட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கம் விவசாய உற்பத்தியைத் தலைகீழாகச் சுழற்றியடித்துவிட்டது. மேல் இந்தஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கின் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட இந்தஸ் ஆற்றின் சுருக்கம் அனைத்து விதமான விநியோக மோதல்களையும் தூண்டிவிட்டது – நீர்ப்பாசனமா அல்லது மின்சார உற்பத்தியா, ஆற்றைச் சார்ந்து வாழும் மக்களா அல்லது ஆற்றிலிருந்து விலகி வாழும் மக்களா, கிராமப்புறமா அல்லது நகர்ப்புறமா, போன்றவை.

இந்தியாவைப் போலவே, காலநிலை மாற்றத்தால் திணிக்கப்படும் உடனடி ஆபத்தைக் குறைப்பதற்காக, பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பாகிஸ்தானி விவசாயிகள் மேற்கொள்ளும் தாறுமாறான சமாளிக்கும் நடவடிக்கைகள் சரக்குச் சந்தைகளை நிலையற்றதாக்கி, விவசாயிகளை திவாலாக்கி அடிப்படை அமைப்பிலேயே பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கலக்கம் பாகிஸ்தான் விவசாயிகள் அடிமட்ட நிலையிலேயே திட்டமிட வழிவகுத்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், நாட்டின் முக்கியமான விவசாய மாநிலங்களாகிய பஞ்சாப் மற்றுள் சிந்த் பகுதி விவசாயிகள் நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போராட்டங்கள், உள்ளிருப்புப் போராட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

காலநிலை மாற்றமானது தகவமைத்தல் சார்ந்த அசாதாரணமான, கடுமையான சுமைகளைத் திணித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் மக்களின் பாதிக்கப்படக்கூடிய தன்மை, அவர்களது சமாளிக்கும் திறன்கள், அவர்களது அரசாங்கங்களின் எதிர்வினைகள் மற்றும் முதலில் இந்த விளைவுகளை உருவாக்கிய காலநிலைச் சீர்கேடு ஆகியவை ஒன்றோடொன்று தொடர்பில் வரும்போது சிக்கலான அழுத்தங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த அழுத்தங்களைப் பற்றி, சமூக அழுத்தங்களை விளைவிக்கத்தக்க காலநிலை மாற்றத்தின் ஆற்றலை விளக்க பொதுவாக பயன்படுத்தப்படும் மொத்த தரவுத்தொகுப்புகளில் காண முடியாது. மனிதச் சமூகங்களின் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்குதலை எதிர்கொள்ள, இவை அந்தந்த இடம்சார்ந்து விளக்கமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல் நிலையற்ற தன்மையாக தீவிரமாகும் ஆற்றல் இருக்கிறதா? வெகுஜன இடம்பெயர்வு, சமுதாய அமைப்புகள், கிளர்ச்சிகள் மற்றும் உள்நாட்டு மோதல்கள் போன்ற பெரிய அளவிலான அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் ஒரே இரவிலோ அல்லது ஒரே ஒரு காரணத்தினாலோ வெடிப்பதில்லை என அறிஞர்கள் சொல்கிறார்கள். தனிப்பட்ட குறைகளும் திட்டமிடப்படாமல் உருவாகும் கொந்தளிப்பின் வெளிப்பாடுகளும் இணைந்து ஒரு பொதுவான ‘பிறருக்கு’ எதிராக குறுக்கு வர்க்கக் கூட்டணிகளை உருவாக்கும் போதுதான் திட்டமிடப்பட்ட, நீடித்த சமூக மற்றும் அரசியல் சண்டை நிகழ்வுகளும் வன்முறை மோதல்களும் சாத்தியமாகும். இந்தியா உள்ளுக்குள் உடைந்துவிடக்கூடிய சமூகமாக இருப்பதால், விவசாயிகளின் இயக்கம் அத்தகைய ஒரு பாதிக்கப்பட்டவர்களின் கூட்டணியை உருவாக்குவதற்கு அருகில் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது.


ஜாஃபர் இம்ரான் – மேரிலேண்ட் பார்க் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை துறையில் முது முனைவர் பட்ட ஆய்வாளர்; Le Monde diplomatique இதழில் வெளியானது.

தமிழில் சுஷில் குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.