இன்னொரு ‘பூஜ்ய’ நாளைத் தடுப்பது எப்படி?

சென்னையில் வீட்டுவேலை செய்யும் கலைச்செல்வி முருகனின் நாள் அதிகாலையிலேயே துவங்குகிறது. அப்போதுதான் சில தெருக்கள் தள்ளி இருக்கும் குடிநீர் குழாயில் தண்ணீருக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் கலைச்செல்வியின் சிகப்புக் குடத்துக்கு முன்னிலை இடம் கிடைக்கும். மூன்றாம் மாடியில் இருக்கும் தனது புறாக்கூண்டு வீட்டுக்குப் போதுமான தண்ணீரைப் பிடித்த கையோடு அருகிலிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வேலைக்குக் கிளம்பி விடுவார் கலைச்செல்வி. சற்றே வசதி படைத்தவர்கள் நிறைந்த அந்த குடியிருப்பில் பெரிய பெரிய டேங்கர் லாரிகளில் தண்ணீர் வருவிக்கப் படுகிறது.

ஏறக்குறைய ஒரு கோடியே பத்து லட்சம் மக்கள் வாழும் இந்த மாநகரத்தின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான வற்றாத நதிகள் எதுவும் சென்னையிடத்தே இல்லை. வடகிழக்கு பருவமழையைத் தவிர சென்னை தன் நீராதாரத்துக்கு நம்பியிருப்பது அதன் நான்கு நீர்த்தேக்கங்களைத் தான். 2019, ஜூன் மாதத்தில் ஒரு நாள், இந்த நான்கு நீர்த்தேக்கங்களும் துளியும் நீர் இன்றி வறண்டு போன போது சென்னை ஸ்தம்பித்தே போனது. இதை ஜீரோ நாள் (Zero Day) என்று மாநகர நிர்வாகிகள் அறிவத்து, 124 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களில் இருந்து ரயிலில் நீர் கொணரும் அளவுக்கு நிலைமை கவலைக்கிடமானது.

இதே நகரம் 2015-ல் பெருவெள்ளத்தையும் பார்த்தது. பருவநிலை மாற்றத்தின் விளைவாக கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் சென்னை மூன்று மடங்கு வரை உச்சபட்ச மழைப்பொழிவைச் சந்தித்துள்ளது. பருவம் தவறி சீரற்று பெய்யும் பருவமழை ஒரு புறம் கடும் வறட்சியையும் மறுபுறம் பெரும் வெள்ளத்தையும் சென்னைக்கு பரிசளித்திருக்கிறது. மினரல் வாட்டர் பாட்டில்களும், டேங்கர் லாரிகளில் தண்ணீரும் வாங்கும் திறன் படைத்தவர்கள் தவிர, கலைசெல்வியைப் போன்ற எளிய குடிமக்கள் அடி பம்ப்களையே நம்பி சிகப்புக் குடத்துடன் காத்திருக்கின்றனர்.

சென்னையின் நீர்வளப் பிரச்சனைகள் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்து விட்டதாக நித்யானந்த் ஜெயராமன் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் நேரடி காலனி ஆட்சியில் சென்னை வந்த அந்த காலகட்டத்தில்தான் சென்னையின் நீராதாரங்களில் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. முறையான நீர் மேலாண்மையும் தொலைநோக்குத் திட்டங்களும் இல்லாததே சென்னையின் இன்றைய நீர் அவலத்துக்குக் காரணம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொறியாளரான ஜெயராமன்.

ஆங்கிலப் படையெடுப்புக்கு முன்னர் இன்றைய சென்னையும் அதன் சுற்றுப்புறங்களும் ‘ஏரி நகரங்கள்’ என்றே அழைக்கப்பட்டன. அந்த அளவுக்கு ஏரிகளாலும், சதுப்பு நிலங்களாலும், இயற்கையான நீர்த்தேக்கங்களாலும், கோயில் குளங்களாலும் இந்த மாநகரம் பிணைக்கப் பட்டிருந்தது. இந்த நீர்நிலைகள் கணிசமான அளவில் மழைநீரை சேகரித்து ஆண்டு முழுவதுக்குமான நீர்த் தேவையை நிவர்த்தி செய்ய உதவி வந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னையின் சில குளங்கள் விரிவுபடுத்தப்பட்டு அவை  ஒன்றிணைக்கப்பட்டு ஒரு பொதுவான பெரிய நீர்த்தேக்கம் மூலம் பல நகர்ப்புறங்களுக்கு நீர் விநியோகிக்கப் பட்டது.

அப்போதிலிருந்து இன்று வரை பல நூற்றாண்டுகளாக சென்னையின் நீராதாரமாக இந்த நீர்த்தேக்கங்களே இருந்துவருகின்றன. இன்று மிகப்பெரிய மாநகரமாக வளர்ந்திருக்கிற சென்னை அதன் நகரமயமாக்கலுக்குக் கொடுத்த விலை மிகப் பெரியது. 1980கள் வரை எண்பது சதவீதம் இருந்த சதுப்புநிலங்களின் பரப்பளவு தற்போது வெறும் பதினைந்து சதமாக குறைந்திருக்கிறது. இன்னும் பத்து சதவீத சதுப்புநிலங்கள் மட்டுமே ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதாக The nature conservancy-யின் ஆய்வு சொல்கிறது.

Spur tank road, lake view road முதலிய சாலைகளின் பெயர்கள் மட்டுமே இந்த சதுப்புநிலங்களின் ஈர நினைவுகளாக இன்று  எஞ்சியிருக்கின்றன.

சென்னையின் பிரதான பகுதியிலிருந்து இருபது கிலோமீட்டர்  தொலைவில் இருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டுமே இன்றும் எஞ்சியிருக்கிறது. கண்ணாடி விரியன் (Russell’s viper) போன்ற ஊர்வனவற்றுக்கும், நீளவால் இலைக்கோழி (pheasant-tailed jacana) மற்றும் சாம்பல் தலை ஆள்காட்டி (grey-headed lapwings) போன்ற பறவைகளுக்கும் உறைவிடமாக இந்த சதுப்புநிலம் இருக்கிறது.

Care Earth Trust என்கிற பல்லுயிர் ஆய்வு மையத்தின் நிறுவனரான ஜெயஸ்ரீ வெங்கடேசன் 2001-ம் ஆண்டில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து வருகிறார். 1960களில் ஆறாயிரம் ஹெக்டர் பரப்பளவில் இருந்த இந்த பகுதி 2000-களின் தொடக்கத்தில் வெறும் 600 ஹெக்டராகக் குறைந்துள்ளதாக இவருடைய ஆய்வு தெரிவிக்கிறது. திட்டமிடப்படாத நகர விரிவாக்கமும், கழிவுநீர் கலப்புமே இதற்கு காரணம் என்ற இவருடைய  விரிவான ஆய்வின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான உத்தரவை வழங்கி இருக்கிறது. இந்த சதுப்புநிலப் பகுதியில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்புகளும் நிகழாத வண்ணம் தடைவிதிப்பதோடு, இழந்த சுற்றுச்சூழல்  வளத்தை மீட்டெடுக்க சரியான திட்டங்களை செயல்படுத்தவும் இந்த நீதிமன்ற உத்தரவு வலியுறுத்துகிறது.

2007-ம் ஆண்டு இந்த சதுப்புநிலத்தின் ஒரு பகுதி natural reserve-ஆக அறிவிக்கப் பட்டதை அடுத்து, 2018-ம் ஆண்டில் இந்த பகுதியின் இயற்கை வளத்தை மீட்டெடுக்க 1.65 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்த இடத்தில் இருக்கும் சட்டத்துக்கு புறம்பான ஆக்கிரமிப்புகளையும் கழிவுகளையும்  அகற்றும் பணியில் தமிழக வனத்துறை ஈடுபட்டு வருகிறது.

இந்த முன்னெடுப்புகள் சதுப்புநிலங்களையும் வன உயிர்களையும் மீட்டெடுக்க உதவுவதோடு, மழைநீரை சேகரித்துத் தேக்கி வைப்பதிலும் அதன்மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதிலும் முக்கியப் பங்களிக்கிறது.

இதைப் போலவே சென்னையின் முக்கிய நதிகளை உயிர்ப்பிக்கும் பணிகளும் முடுக்கிவிடப் பட்டுள்ளன. மாநகரின் மூன்று பிரதான நதிகளையும் பக்கிங்காம் கால்வாயையும் மறுசீரமைக்கும் முயற்சிகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கின்றன. இந்த நான்கு நீர்நிலைகளுமே தொழிற்சாலை கழிவுகளின் கலப்படத்தால் குடிப்பதற்கோ குளிப்பதற்கோ பயன்படாத வகையில் இருக்கின்றன. இந்த நீர்நிலைகளை புனரமைப்பதற்காக 2006-ம் ஆண்டில் தமிழக அரசு ‘அடையாறு பூங்கா ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பை நிறுவியது. பக்கிங்காம் கால்வாயின் அகலம் 200 மீட்டரிலிருந்து 50 மீட்டராக குறைந்திருக்கும் இந்நிலையில் தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகளையடுத்து இந்த நதிகளின் முகத்துவாரங்கள் மெல்ல மெல்ல சீரமைய தொடங்கியிருக்கின்றன. 350 ஏக்கர் பரப்பளவில் அலையாத்தி (Mangroves) தாவர வகையைச் சார்ந்த Rhizophora, Avicennia, Bruguiera போன்ற 173-க்கும் மேற்பட்ட நாட்டுச் செடிகள் பயிரிடப்பட்டன. 2007-08-ல் 141-ஆக இருந்த இந்த இடத்தின் உயிரினங்கள் எண்ணிக்கை 2019-20-ல் 368-ஆக உயர்ந்திருக்கிறது. வேட்டி உளுவை என்று அழைக்கப்படும் மீன்களும், நண்டுகளும், உடும்புகளும் இன்னும் எண்ணற்ற உயிரினங்களும் இந்த இடத்தில் காணக்கிடைக்கின்றன.

இந்த நிலைமை முற்றிலும் சீரடைவதற்கு இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்றபோதிலும் ஒப்பீட்டளவில் பார்க்கையில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிற சிறிய முன்னேற்றம் நம்பிக்கையளிக்கும் விதமாகவே இருக்கிறது. முன்பை விட அதிக பறவைகளைப் பார்க்க முடிவதோடு, முன்பு நீர் தேங்கியிருந்த சில இடங்களில் நல்ல நீரோட்டத்தையும் காண முடிகிறது.

இதுபோன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் சில பத்தாண்டுகளாகவே செயல்படுத்தப்பட்டு வந்தாலும், அவை வேகமெடுத்தது 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போதுதான். ராணுவ விமானங்களில் இருந்து விழும் உணவுப் பொட்டலங்களுக்காக மொட்டைமாடிகளில் கையேந்தி நிற்கிற அளவுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை தற்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது. மாறிவரும் பருவநிலையும் அதன் விளைவுகளையும் எதிர்கொள்ள இயற்கையோடு இயைந்த தீர்வுகளை நோக்கி இந்த மாநகரம் அடியெடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறது.

பெருவெள்ள காலத்தில் எதிர்கொண்ட இன்னல்களின் விளைவாக இனி சென்னையை ‘ஆயிரம் குளங்கள் கொண்ட ஒரு நகரமாக’ புதுப்பிக்க வேண்டும் என்கிற ஒரு தொலைநோக்கு எண்ணம் உதயமாகியிருக்கிறது. இன்று இந்த நகரம் எய்திருக்கும் பெருவளர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தைப் போல கோயில் குளங்களாலும் சிறு சிறு நீர்த் தேக்கங்களாலும் ஒன்றிணைக்கப்பட்ட  நீர்நிலைகள் நிறைந்த நகரமாக சென்னையை மாற்ற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இறுதி இலக்கு.

இந்த திட்டத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒன்றாக இருக்கிற ‘மெட்ராஸ் terrace’ என்கிற கட்டிடக்கலை அமைப்பு சென்னையின் தொன்மைமிக்க கோயில் குளங்களை மீட்டெடுப்பதைத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன்படி இதுவரைக்கும் பதினைந்துக்கும் மேற்பட்ட கோயில் குளங்களை இந்த அமைப்பு மீட்டமைத்திருக்கின்றது. ஒரு நகரத்தின் கோயில் குளங்களின் நீர் அளவைக் கொண்டே அந்த நகரத்தின் ஒட்டுமொத்த நீர் இருப்பை  அடையாளம் கொள்ளலாம் என்கிறார் மெட்ராஸ் terrace-ன் இயக்குனர் சுசீந்திரன்.

கோயில் குளங்களை மீட்டெடுப்பது மட்டுமில்லாமல் குடியிருப்புப் பகுதிகளில் வெளியேறும் கழிவுநீரை ‘bioswales’ என்று அழைக்கப்படுகிற ‘vegetated கால்வாய்களில்’ சேகரிக்கும் முயற்சியிலும் மெட்ராஸ் terrace அமைப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக மைலாப்பூரின் சாலைகளிலும் சில உணவு விடுதிகளிலும் இந்த bioswales அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை ஒரு பள்ளிக்கூடத்தில் செயல்படுத்தும் முயற்சி கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதியிலேயே தடைபட்டிருக்கிறது.

நிலத்தின் மேற்பரப்பில் இருக்கிற நீரை சேகரிப்பது மட்டுமில்லாமல் நிலத்தடி நீர் மட்டத்தையும் சதுப்புநிலங்கள் உயர்த்துகின்றன. எதிர்வரும் காலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான உணவுப் பற்றாக்குறையையும், கடுமையான பெரு வெள்ளங்களையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இந்நிலையில் இந்த சதுப்புநிலங்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் சென்னையின் சதுப்புநிலங்கள் சந்தித்த ஆக்கிரமிப்புகளையும் அழிவுகளையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது இழந்த இயற்கைச்சூழலை மீட்பதென்பது மிகப் பெரிய சவாலாகவே அமைகிறது. Nature Conservancy மற்றும் Care Earth Trust போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து சென்னை முனிசிபல் கார்பரேஷன், நகரத்தின் 200 சதுப்புநிலங்களை முதல்கட்டமாக தேர்ந்தெடுத்து அவற்றை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் ‘Care Earth Trust’-ன் நிறுவனரான வெங்கடேசன் நபிக்கையுடனே இருக்கிறார். பள்ளிக்கரணை சதுப்புநிலங்களை சீரமைக்கும் பணிகளை தான் மேற்கொண்டபோது அதை வீண்வேலை என்று விமர்சித்தவர்கள் பலர், ஆனால் இந்திய சூழல் மட்டுமல்லாமல் சர்வதேச இயற்கை வளங்கள் புணரமைப்பு முயற்சிகளிலும் பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் இன்று மிகப்பெரிய முன்னுதாரணமாக திகழ்கின்றன என்கிறார் வெங்கடேசன்.


கல்பனா சுந்தர் – இதழாளர்

தமிழில் சுந்தர் ஸ்ரீநிவாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.