காத்திருப்பு அறையில்
மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில்,
பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன்
நானும் சென்றிருந்தேன்.
அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரை
காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன்.
அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டி
விட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே நிரம்பியிருந்தனர்,
கணுக்கால் வரை உயர்ந்த காலணிகளும் மேலங்கியும்
விளக்குகளும் பத்திரிக்கைகளுமாக.
என் அத்தை உள்ளே இருந்தார்
நீண்டதாய் தோன்றிய காத்திருப்பின் பொழுதினை கழிக்கும் நோக்குடன்
அங்கே இருந்த நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிக்கையை எடுத்து வாசிக்கவும் (என்னால் வாசிக்க முடிந்தது)
புகைப்படங்களைக் கூர்ந்து கவனிக்கவும் தொடங்கினேன்.
ஒரு எரிமலையின் உட்புறம்,
கருமையாகவும் சாம்பல்கள் நிரம்பியும்;
பின் நெருப்பாலான சிற்றாறுகளாகப் பொங்கி வழிந்தபடியும்.
ஓஸோவும் ஜான்சனும் சவாரிக்குத் தகுந்த ஆடைகளும், நாடா வைத்த காலணியும் அட்டையாலான தலைக்கவசமுமாக.
இறந்த மனிதனொருவன் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்க, …”நல்ல விருந்து,” என்றது தலைப்பு
மணி இழைகளால் வட்ட வட்டமாகச் சுற்றப்பட்ட நீள்வட்ட தலையுடைய குழந்தைகள்;
ஒளிவிளக்குகளைப் போலக் கழுத்தில் கம்பிகளால் சுற்றிக்கொண்டுள்ள, கரிய நிர்வாண பெண்கள்.
அவர்களது மார்பகங்கள் திகிலூட்டுபவையாக இருக்கின்றன.
நான் தொடர்ந்து புத்தகத்தை வாசித்தேன்.
சட்டென்று மூடிவைப்பதற்கும் கூச்சமாக இருந்தது.
அதன் பிறகு அட்டையைப் பார்த்தேன்;
அதன் மஞ்சள் விளிம்புகள், அதிலிருந்த தேதி.
திடீரென, உள்ளிருந்து,
ஆ! என்னும் வேதனையின் ஒலி
–அத்தை கன்சூலோவின் குரல்—
அதிகம் உரத்தோ நீண்டோ ஒலிக்கவில்லை.
எனக்கு ஆச்சரியமே எழவில்லை;
அவள் ஒரு முட்டாள் என்றும் கோழை என்றும் எனக்கு அப்போதே தெரிந்திருந்தது.
எனக்குக் கொஞ்சம் சங்கடமாய் இருந்ததோ, இல்லை.
என்னை முழுதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்னவெனில், அது நான்தான்:
என்னுடைய குரல், என் வாய்க்குள்ளிருந்து.
யோசனையேயின்றி
நான் என் முட்டாள் அத்தையாகியிருந்தேன்,
எங்கள் கண்கள் நேஷனல் ஜ்யாக்ரஃபியின் அட்டையில் பதிந்திருக்க,
நான் – நாங்கள் – நாங்கள் வீழ்ந்து கொண்டிருந்தோம், வீழ்ந்து கொண்டேயிருந்தோம்,
அது ஃபிப்ரவரி, 1918.
நான் என்னிடம் சொன்னேன்; இன்னும் மூன்று நாட்கள், பிறகு உனக்கு ஏழு வயது பூர்த்தியாகிவிடும்.
உருண்டையான சுழல்கிற உலகிலிருந்து, தண்மையான கருநீல ஆகாயத்திற்குள் விழுகின்ற உணர்வினை தடுத்து நிறுத்தும் பொருட்டு நான் இதைச் சொல்லிக் கொண்டேன்.
ஆனால் எனக்குத் தோன்றியது: நீ ஒரு தனி மனுஷி,
நீ எலிஸபெத்,
நீ அவர்களுள் ஒருத்தி.
ஆனால் நீ ஏன் அவர்களுள் ஒருத்தியாய் இருக்க வேண்டும்?
நான் என்னவாய் இருக்கிறேன் என்பதைப் பார்ப்பதற்கே அச்சமாய் இருந்தது எனக்கு.
–ஓரப்பார்வையால் பார்த்தேன் நான் –
விளக்கிற்குக் கீழே தென்பட்ட நிழல் படிந்த சாம்பல் நிற முழங்கால்களை,
கால்சட்டைகளை, பாவாடைகளை, காலணிகளை, பல சோடிக்கரங்களை மீண்டும் நிமிர்ந்து பார்க்கும் தைரியம் எனக்கில்லை.
புதிதாக எதுவும் எப்போதும் நடந்துவிடவில்லை என்பதும் இனி நடக்கவே முடியாதென்பதும் எனக்கு நன்றாகத் தெரிந்தது.
நான் ஏன் என் அத்தையாய் இருக்க வேண்டும்,
அல்லது நானாய், அல்லது யாரோ ஒருவராய்?
என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன –
காலணிகள், கைகள், என் தொண்டையில் நான் உணர்ந்த பரம்பரைக் குரல், அல்லது அந்த நேஷனல் ஜ்யாக்ரஃபிக் புத்தகமும் அதில் அச்சுறுத்தும்படி தொங்கிக்கொண்டிருந்த மார்பகங்களும் –
எங்களை ஒன்றிணைத்தனவா
அல்லது எங்களை ஒரே ஆளாகச் செய்தனவா?
எப்படி – அதை எந்த வார்த்தையில் சொல்வதென எனக்குத் தெரியவில்லை – ”சாத்தியமேயில்லையே” –எப்படி நான் இங்கே வர நேர்ந்தது,
அவர்களைப்போலவே, சற்று உரத்தும் நீண்டும் ஒலித்திருக்கக்கூடிய, ஆனால் ஒலிக்காத, வேதனையின் குரலை ஒட்டுக்கேட்கும்படியாக?
காத்திருப்பு அறை ஒளிமிகுந்தும் அதிக வெப்பமாகவும் இருந்தது. அது, ஒன்றன்பின் ஒன்றாய் மேலெழுந்த கருத்த பேரலைகளின் அடியில் நழுவிக் கொண்டிருந்தது.
பின்பு நான் மீண்டும் அந்த அறைக்குள் இருந்தேன்.
போர் நடந்து கொண்டிருக்கிறது. வெளியே மாசசூஸட்ஸின் வொர்சஸ்டரில் அது இரவாகவும் சகதிகளாகவும் பனியாகவும் இருந்தது.
அப்போதும் அது பிப்ரவரி ஐந்து, 1918தான்.
அஃதொரு கலை
இழத்தல் என்னும் கலையைக் கற்றுத் தேர்வதொன்றும் அத்தனை கடினமானதல்ல;
இல்லாமல் போதல் என்னும் பண்பைப் பல விஷயங்கள் இயல்பாகவே கொண்டிருப்பதாகத் தோன்றுவதால்
அவற்றின் இழப்பொன்றும் பெரிய அழிவை ஏற்படுத்துவதில்லை.
தினமும் எதையாவது பறிகொடுங்கள். காணாமல் போன சாவியும்
மோசமாய்க் கழித்த ஒரு பொழுதும் ஏற்படுத்துகிற பதட்டத்தை அனுபவியுங்கள்.
இழத்தல் என்னும் கலையைக் கற்றுத் தேர்வதொன்றும் அத்தனை கடினமானதல்ல;
அடுத்ததாக, பெரிய விஷயங்களை இழக்கவும், அடிக்கடி இழப்பினை சந்திக்கவும் பயிற்சி எடுங்கள்:
இடங்களை, பெயர்களை, நீங்கள் உத்தேசித்திருந்த பயணங்களை.
இது எதுவுமே அழிவைக் கொண்டுவராது.
நான் என் அன்னையின் கடிகாரத்தைத் தொலைத்தேன். பாருங்கள்! எனது கடைசி – அல்லது கடைசிக்கு முந்தைய – மூன்று வீடுகள் இல்லாமல் ஆகின.
இழத்தல் என்னும் கலையைக் கற்றுத் தேர்வதொன்றும் கடினமானதில்லை.
இரண்டு நகரங்களை இழந்தேன், மிகவும் அன்பானவை. போலவே, அவற்றைவிட விஸ்தாரமான இரண்டு சாம்ராஜ்யங்கள் என்னிடமிருந்தன, இரு நதிகள், ஒரு கண்டம்.
அவற்றை அவ்வப்போது நான் நினைத்துக் கொள்வதுண்டு, ஆனாலும் அது ஒரு அழிவல்ல.
உன்னை இழப்பதும் கூட, (குறும்பான அந்தக் குரல், எனக்கு மிகவும் பிடித்தது) நான் பொய் சொன்னதாகிவிடக்கூடாது. இது உறுதியானது
இழத்தல் என்னும் கலையைக் கற்றுத் தேர்வதொன்றும் கடினமானதே இல்லை;
அது ஒரு (எழுது) பேரழிவினைப் போல் தோற்றமளித்தாலும் கூட.
ரயில் பாதை
ரயில் பாதையில் தனியே நடந்தேன்
நான், படபடக்கும் இதயத்துடன்.
பிணைப்புகள் அதிநெருக்கத்திலிருந்தன
அல்லது ஒருவேளை, வெகுதூரத்திலிருந்தன.
சூழல் மேலும் தெளிவுற்றிருந்தது:
புதர்-பைன்களும் ஓக் மரங்களும்; தொலைவில்
அவற்றின் சாம்பல்-பச்சை வெளிக்கு அப்பால்
அந்த இழிந்த முதிய சாது வசிக்கிற
சிறிய குளத்தைக் கண்டேன் நான்,
ஒரு பழைய கண்ணீர்த் துளியென
தன் காயங்களை இறுகப் பற்றியபடி
ஆண்டுக்காண்டு மேலும் துலக்கமுற்றபடி கிடக்கிறது அது.
அந்த சாது தன் வேட்டைத் துப்பாக்கியைச் சொடுக்கினான்
அவனருகிலிருந்த மரம் அதிர்ந்தது.
குளத்தின் மேல் ஒரு அலை எழுந்தது
செல்லக் கோழி கொக்-கொக் என்றது.
“அன்பைச் செயலாய் நிகழ்த்த வேண்டும்!”
உரக்கக் கத்தினான் சாது.
குளம் முழுவதும் ஒரு எதிரொலி
திரும்பத் திரும்ப அதை உறுதி செய்ய முயன்றது.
எலிஸபெத் பிஷப்: 1911-1979
தமிழில் : இல. சுபத்ரா.
எலிஸபெத் பிஷப் (1911 – 1979):
பிறந்து எட்டு மாதங்களே ஆனபோது தந்தையையும் ஐந்து வயதில் தாயையும் இழந்த எலிஸபெத் பிஷப்பின் குழந்தைப் பருவமானது முதலில் தாயாரின் சொந்தங்களுடனும் பின் தந்தையின் குடும்பத்துடனும் என மிகுந்த அலைக்கழிப்பிற்குள்ளானது. அதன்பிறகும் தந்தை வீட்டில் மிகுந்த உடல்நலக்குறைவுற்ற(ஆஸ்த்மா) பிஷப், பின் அத்தை Maudஉடன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அத்தை மாட் மற்றும் க்ரேஸ் அவருக்கு டென்னிஸனையும் ப்ரௌனிங்கையும் லாங்ஃபெல்லோவையும் அறிமுகப்படுத்துகின்றனர். இன்னொருபுறம், அதே வீட்டில், வளரிளம்பருவத்தில், மாமா ஜார்ஜால் நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல்களையும் அவர் எதிர்கொள்ளவேண்டியாகிறது. இந்தஅலைக்கழிப்புகளும் ஆழ்மனத்தில் படிந்த பாலுறுப்புகள் சார்ந்த அச்சமும் அவரது கவிதைகளில் வெளிப்பட்டபடியே இருக்கின்றன.
நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் வசித்தபோதிலும், தனிமையையும் அமைதியையும் பாதுகாப்பையும் உணர முடிகிற தீவுகளையே அவர் விரும்பினார். நகரங்களையும் மனிதர்களையும் அவர் கொடுங்கனவாய் உணர்ந்திருக்கின்றார்.
ராபர்ட் லாவல் உள்ளிட்ட ஆண் நண்பர்கள் இருந்த போதிலும், வாழ்நாள் முழுவதுமே பெண்களிடம்தான் பிஷப் அதிக நெருக்கமாகவும் காதலாகவும் உணர்ந்திருக்கிறார். வாழ்வின் இறுதியில் பிஷப் எழுதிய மிகப்பிரபலமான ‘One Art’ கவிதையின் நாயகியும் கூட ஆலிஸ் என்னும் பெண்தான். என்றாலும் தனக்கிருக்கும் தன்பாலின ஈர்ப்பை பிஷப் மறைக்கவே விரும்பினார்.
1956லேயே North & South/A Cold Spring கவிதைத் தொகுப்பிற்காக புலிட்ஸர் பரிசினை வென்றுவிட்டபோதிலும், 1983ல் ஏட்ரியன் ரிச்சால் கவனப்படுத்தப்பட்ட பிறகே பிஷப்பின் நிஜமான கோலோச்சுதல் துவங்கியது. பிஷப்பின் கவிதைகளில் வெளிப்பட்ட ’வெளியாள்’தன்மையையும் ’விளிம்புநிலை’ மனதினையும் அதை வெளிப்படுத்துவதில் இருந்த நேர்மையையும் தைரியத்தையும் ஏட்ரியன் அடையாளம் கண்டுகொண்டார். அதற்குமுன்பு வரை வெகுசில சிறுகதைகளைம் ஒரு நூறு கவிதைகளைம் மட்டுமே வெளியிடப்பட்டிருக்க, அவர் வெளியிடாமல் வைத்திருந்த எண்ணிடலங்கா கடிதத்தொகுப்புகளும் கவிதை வரைவுகளும் விமர்சனங்களும் பார்வைக்கு வந்தன.
National Book Award உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை வென்றிருக்கும் பிஷப் மதிப்புமிக்க Consultant in Poetry to the Library of Congress பதவியையும் வகித்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாறானது “Elizabeth Bishop: A Miracle for Breakfast” என்னும் பெயரில் Megan Marshallஆல் எழுதப்பட்டுள்ளது.
இவரது படைப்புகள்:
Poetry collections
- North & South(Houghton Mifflin, 1946)
- Poems: North & South. A Cold Spring(Houghton Mifflin, 1955) —winner of the Pulitzer Prize[1]
- A Cold Spring(Houghton Mifflin, 1956)
- Questions of Travel(Farrar, Straus, and Giroux, 1965)
- The Complete Poems(Farrar, Straus, and Giroux, 1969) —winner of the National Book Award[2]
- Geography III(Farrar, Straus, and Giroux, 1976)
- The Complete Poems: 1927–1979(Farrar, Straus, and Giroux, 1983)
- Edgar Allan Poe & The Juke-Box: Uncollected Poems, Drafts, and Fragmentsby Elizabeth Bishop ed. Alice Quinn (Farrar, Straus, and Giroux, 2006)
- Poems, Prose and Lettersby Elizabeth Bishop, ed. Robert Giroux (Library of America, 2008) ISBN 9781598530179
- Poems(Farrar, Straus, and Giroux, 2011)
Other works
- The Diary of Helena Morleyby Alice Brant, translated and with an introduction by Elizabeth Bishop, (Farrar, Straus, and Cudahy, 1957)
- The Ballad of the Burglar of Babylon(Farrar, Straus, and Giroux, 1968)
- An Anthology of Twentieth Century Brazilian Poetry, edited by Elizabeth Bishop and Emanuel Brasil, (Wesleyan University Press (1972)
- The Collected Prose(Farrar, Straus, and Giroux, 1984)
- One Art: Letters,selected and edited by Robert Giroux (Farrar, Straus, and Giroux, 1994)
- Exchanging Hats: Elizabeth Bishop Paintings,edited and with an introduction by William Benton (Farrar, Straus, and Giroux, 1996)
- Words in Air: The Complete Correspondence Between Elizabeth Bishop and Robert Lowell, ed. Thomas Travisano, Saskia Hamilton(Farrar, Straus & Giroux, 2008)
- Conversations with Elizabeth Bishop, George Monteiro Ed. (University Press of Mississippi 1996)