கதக்

போதும். இன்று நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். சரியாகத்தான் இருக்கும். என் அறைத் தோழன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான். என் இரகசியப் பெட்டியைத் திறக்க மூன்று பூச்சியங்களை அழுத்தினால் போதும். அது இனிமேல் தேவையிருக்காது. இனிமேல் யாரும் என்னை ‘மிஸ்டர்.பத்ரா’ என்று நையாண்டியாக அழைக்க வேண்டியிருக்காது. ‘பத்ரகாளி’ என்றே அழைக்கலாம்.

இந்த ஒப்பனை மேசை எனக்கே எனக்கென செய்யப்பட்ட மாதிரி இருக்கிறது. குறிப்பாக அதன் முன்னங்கால்கள் இரண்டும் கீழ்ப்பகுதியில் வளைந்து கேள்விக்குறி போல இருப்பதைப் பார்க்கும் போது எனக்குள் ஒரு சிலிர்ப்பு வந்து விடுகிறது. மேசையில் மொத்தம் ஆறு சிறு அறைகள் இருக்கின்றன, ஒவ்வொன்றிற்கும் தனித்தனி கதவுகள். தங்க நிறத்தில் நான் கேட்டபடியே பூட்டுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார் அந்த தச்சர். அவரது கைகள் இயங்கும் நளினத்தைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துப் போய்விட்டது.

கைகளைப் பொருத்துத்தானே நளினமும் அழகும். ஒவ்வொரு சிற்றறைக்குள்ளும் எனக்குத் தேவையான தனித்துவமான பொருட்களை மறைத்து வைக்கும் இரகசியப் பெட்டிகளும் உண்டு. சென்ற வாரம் வாங்கி வந்திருந்த பத்து வித உதட்டுச் சாயங்களை முதல் அறையில் அடுக்கி வைத்துப் பார்த்த போது என் கண்கள் என்னையறியாமல் நிறைந்து விட்டன. அடுத்த அறையில் ஒரு சோடி தங்க வளையல்களும் ஒரு சில கவரிங் வளையல்களும் வைத்திருக்கிறேன். தங்க வளையல் ஊரிலிருந்து கிளம்பியபோது விமான நிலைய கடைசி நுழைவாயிலின் அருகே நின்று திருவாளி மாமா யாருக்கும் தெரியாமல் என் கையில் கொடுத்து விட்டது. விமானத்திலிருந்த நேரம் முழுதும் அதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

மேசையை விட அதை இன்னும் கூடுதல் அழகாக்குகிற அந்த சிறிய முகப்பு விளக்குகளைப் பாருங்கள். ஒன்று இளஞ்சிவப்பு நிறத்திலும் மற்றொன்று மெல்லிய நீல நிறத்திலும் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. கடைக்காரன் என்னவெல்லாம் கேட்கிறான்? படுக்கை அறைக்கா? குளியல் அறைக்கா? வெளிச்சம் அதிகமாக வேண்டுமா, இல்லை மங்கிய வெளிச்சம் போதுமா? மின்சார சிக்கனம் பார்ப்பீர்களா? அப்பப்பா! என் தேவையைச் சொல்லிப் புரிய வைப்பது எப்போதுமே சிரமம் தானே? சந்தேகத்திற்கு சிறிது இடம் கொடுத்தாலும் வழிய ஆரம்பித்து விடுவார்கள். எல்லோரும் அப்படியில்லையென்றாலும் எப்படா என்று காத்துக் கிடப்பவர்களும் இருக்கிறார்கள் தானே? சரி, நேரமாகி விட்டது.

இந்த மார்பு முடி வளர்வதை என்ன செய்தாலும் நிறுத்த முடியவில்லையே! தினசரி சவரம் செய்து செய்து கழுத்தின் அடிப்பகுதியில் திட்டுத் திட்டாகப் புண்ணாகி விடுகிறது. பிறகு, அதைப் பற்றி ஆயிரம் கேள்விகள், பதில் சொல்லி முடியுமா என்ன? இந்த முறை வாங்கிய களிம்பு கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. இதுவரை எரிச்சலோ புண்ணோ வரவில்லை. தோல் இலேசாக மிணுங்குவது மாதிரியும் இருக்கிறது. என்ன விசித்திரமோ, தலை முடியை நீளமாக வைத்திருக்கவே எப்போதும் விரும்புகிறேன். இப்போது பாய்கட், பாக்ஸ் கட் என்று என்னவெல்லாமோ வந்திருக்கின்றன இல்லையா? ஆனாலும் எனக்கு நீள்முடிதான் விருப்பம்.  ஆனால், உடலின் வேறு எந்த இடத்தில் முடியைப் பார்த்தாலும் எனக்கு வாந்தி வந்து விடுகிறது.

முட்டை சாப்பிடுவது கொஞ்சம் அதிகமாகிவிட்டது. தொப்பை கொஞ்சம் முன்னால் வந்துவிட்டது. சேலையின் ஊடாக துருத்திக்கொண்டு தெரிவது எனக்கே பிடிக்கவில்லை. பக்கவாட்டில் நல்ல வாளிப்பாகத்தான் இருக்கிறது. வளைவும் கவர்ச்சிதான். சென்ற முறை இரவு விடுதியில் சந்தித்த அந்த மலேசியப் பெண் சொன்ன யோசனை பிரமாதம். ஒரு சிறிய சிவப்புப் பொட்டை இடுப்பின் இடது பகுதியில் விலாவிற்குக் கீழே ஒட்டச் சொன்னாள். வைத்துப் பார்த்ததும் என் முகமே சிவந்துவிட்டது. அப்படியொரு வெட்கம். சரி, இந்த வாரக் கடைசியில் பூச்சந்தையின் பின்புறமுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்துவிட வேண்டியதுதான். ஆமாம், இனி யாரைப் பற்றி என்ன கவலைப் பட இருக்கிறது? என் உடல், என் அழகு, என் ஆசை..அவ்வளவுதான்..

திருவாளி மாமா சொன்னாரே, “அவவன் சோலிய அவவன்தா பாக்கணும், என்ன புள்ளோ? சூத்த, சொள்ளன்னு சொல்லிட்டு வருவாவ. ஆனா, அஞ்சு பைசாக்கு ஒதவ மாட்டாவ. இவியெல்லாம் ஒழுங்கு மயிரா இருக்காவளா என்ன? ஒவ்வொருத்தன் கதையும் எனக்குத்தான் தெரியும்..பின்ன, ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு சும்மா இருக்கேன், பாத்துக்க. ஒனக்க இஷ்டம்போல இரி. ஒரு பய சொன்னாலும் கேக்கணும்னு அவசிய மயிரு இல்ல, பாத்துக்க.”

“மாமா, பெத்த தள்ள, தவப்பனுக்கே வெளங்கல்லயே. பொறவு, சொக்காரமாரு, சாதி சனம்,சப்பு,சவறு எல்லாவனயும் ஏமாத்திட்டுல்லா இருக்க வேண்டியிருக்கு? நம்ம பொறப்பு அப்பிடி இருக்கு. அதுக்கு நம்ம என்ன செய்ய முடியும் மாமா? ஆம்பள, பொம்பள எல்லாம் நமக்கு ஒண்ணுதான மாமா. இவியளுக்கு வெளங்காதுல்லா?”

“அதெப்பிடி புள்ளோ வெளங்கும்? ஒனக்க அதிர்ஷ்டம், எனக்க கூட வந்து சேந்த, இல்லன்னா இவிய சும்மா விட்டுருப்பாவளாக்கும்? அவியளையும் கொற சொல்லதுக்கில்ல.”

எப்போதும் என்னை ஆணாகக் காட்டிக்கொண்டிருப்பதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. சட்டையும், பேண்ட்டும், டையும். ஒரே புழுக்கம். இரவின் இந்த சில மணி நேரங்களில் தான் நான் நானாக இருக்க முடிகிறது.

இந்தப் பச்சை நிற இரவிக்கையை அணியும்போது மட்டும் எனக்கு அப்படியொரு நிறைவு. அதிலும் இந்தப் புதிய சிலிக்கான் சதையை வாங்கிய பிறகு எனக்குக் கூடுதல் அழகு வந்துவிட்டது. இதை வாங்கி மறைத்து வைப்பதை எனது அறைத்தோழன் பார்த்திருப்பானோ என்று எனக்கு அப்போதே சந்தேகமிருந்தது.

அவனுக்குத் தெரியாமல் பல இரவுகளில் நான் வெளியே சென்று வருவதும், இரகசியமாய் என் தோழிகளுடன் பேசுவதும், ஏன், இங்கேயுள்ள பாலியல் விடுதிகளுக்குச் சென்று வருவதும் கூட அவனுக்குத் தெரிந்திருக்கும். என் அலுவலகத்திலும் சிலருக்கு என் நடை, பேச்சு, பழக்கங்கள் குறித்து இப்போதெல்லாம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. நேற்று இரவு வேண்டுமென்றே அறைத்தோழன் இருக்கும்போதே எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்தேன். அவன் உறங்குவதைப் போல நடித்துக்கொண்டு ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.

இதே ஒப்பனை மேசை முன்னால் அமர்ந்து ஓர் அழகான இளஞ்சிவப்பு நிற கவுன் அணிந்தேன். வெண்முத்துகள் இடையே பவளம் கோர்த்த ஒரு நெக்லஸும் அணிந்துகொண்டேன். பல வண்ணப் பூச்சுகளுடன் உதட்டுச் சாயமும் அணிந்து மெல்ல எழுந்து அவனருகே சென்று மெத்தையில் அமர்ந்தேன். அவன் என்ன நினைத்துக் கொண்டிருப்பான் என யோசிக்கும்போது எனக்குக் கிளர்ச்சியாக இருந்தது.

அவன் குறட்டை விடுவதாகத் தெரிந்தது. பின், நல்லவொரு கதக் பாடலை இசைக்கவிட்டு மெல்ல ஆட ஆரம்பித்தேன். கதக்கின் இடையே எங்கள் கோவில் செங்கிடாய்க்காரனின் ஆட்டம் ஞாபகம் வந்து விழுந்து விழுந்து சிரித்தேன். உறங்கிக் கொண்டிருந்த மாதிரி நடித்தவன் எப்படித்தான் அசையாமல் கிடந்தானோ? நீண்டுகொண்டே சென்ற இசையும் ஆடலுமென என்னவொரு இரவு! அதுவும் இன்னொருவனின் உறங்கா அருகாமையில்!

என் அம்மா ஒரு சாமிகொண்டாடி. என் வீட்டின் அருகே சுயம்புவாய் அமைந்திருந்த தெய்வங்களுக்குப் பூசை செய்வதும் கோவிலைப் பராமரிப்பதும் தான் அவளுக்கு முக்கியம். திருமணமாகி வந்த புதிதில் முதல்முறை அப்பாவுடன் அந்த கோவிலுக்குச் சென்றவள் மீது ஒன்று மாறி ஒன்றென மூன்று தேவிமாரும் இறங்கி வந்தார்களாம். அப்பா அதன்பிறகு அவளை நெருங்கவேயில்லையாம். செவ்வாயும் வெள்ளியும் கோவிலே கிடையாய் கிடந்திருக்கிறாள் அம்மா. பின், எல்லா நாட்களும். ஓர் உச்சகாலக் கொடையின்போது ஆராசனை வந்தபோது அம்மாவே சொல்லியிருக்கிறாள்.

“என்னடே, பயந்துட்டியோ? அம்மைல்லான்னு நெனைக்கியோ? நெனப்ப மாத்தணும் பாத்துக்க. எனக்க எல்லைக்குள்ள தான் அம்ம, என்னா? வூட்டுக்குள்ள ஒனக்க பொஞ்சாதி, இல்லையாடே? அம்ம சொல்லுகேன், என்னா? எம் மவள நல்லா பாக்கணும், கேட்டியா? அம்மையே வந்து பொறப்பேன், பாத்துக்க”

அப்பாவின் குழப்பம் ஒருவழியாகத் தீர, அம்மாவுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்திருக்கிறார். அடுத்த தைப்பூசத்தன்று நான் பிறந்தேன். அம்மனே வந்து பெண் பிள்ளையாகப் பிறப்பாள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க நான் பிறந்ததில் அப்பாவிற்கு மனச் சங்கடம் இருந்திருக்கும் போல. இருந்தாலும் அம்மனின் சொல்படியே எனக்குப் பத்ரகாளி என்று பெயரிட்டிருக்கிறார்.

என்ன காரணமோ என்னவோ? எனக்கு நினைவு தெரிந்த பிறகு, அப்பாவின் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. அவர் வீட்டிற்குள் நுழைந்தாலே நான் ஓடிச் சென்று அரங்கிற்குள் ஒளிந்துகொள்வேன். அவரைச் சுற்றிலும் எப்போதும் அழுகிய மல்லிகை போன்ற வாடை இருப்பதாய் எனக்குத் தோன்றும். குமட்டிக் கொண்டு வரும். அப்பா எவ்வளவு அழைத்தாலும் நான் பதில் சொல்வதோ, அவரருகே செல்வதோ இல்லை.

எப்போதும் அம்மாவுடன் சமையலறையிலேயே இருக்க ஆரம்பித்தேன். எதுவும் பேசாமல் அவள் சொல்லும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன். முதலில் அப்பாவைப் பார்த்து ஏற்பட்ட வெறுப்பு போகப்போக மற்ற ஆண்களைப் பார்க்கும்போதும் எனக்குள் மெல்ல மெல்ல உருவாகி வந்தது. ஒவ்வொருவரைச் சுற்றிலும் ஒவ்வொரு விதமான வாடை. சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி ஓடிப்போய் அம்மாவின் சேலையை எடுத்து முகர்ந்து கிடப்பேன். எதையும் மனம் விட்டுப் பேச துணையாக யாருமில்லை. அம்மாவிடம் பேசலாமென்றால் அவள் எப்போதும் என் பார்வையில் சாமியாடியாகவே தெரிந்தாள்.

நானும் கோவிலுக்குச் சென்று சிறுசிறு வேலைகளைச் செய்துகொடுக்க ஆரம்பித்தேன். எனக்குப் பன்னிரண்டு வயதென்று நினைக்கிறேன். ஒருநாள் அம்மா காய்ச்சலில் படுத்துவிட்டாள். சாயங்காலம் மணி ஐந்தாகி விட்டது. ஆறரை மணிக்குப் பூசை வைக்க வேண்டும். ஒலிப்பெருக்கியில் வில்லுப்பாட்டைப் போட்டுவிட்டு, கோவிலுக்குச் சென்றேன். சுடலை மாடன் மலையாள மந்திரவாதியுடன் உக்கிரமாக வாக்குவாதத்தில் இருந்தான். அம்மன் சன்னிதி கதவைத் திறந்து தயங்கித் தயங்கி உள்ளே சென்றேன்.

வாசல் திரையை இழுத்து மூடினேன். அம்மனுக்கு அபிசேகத்திற்காக குடம் குடமாகத் தண்ணீர். மூன்று சிலைகள். மூன்றும் மூன்று தேவியர். ஒருத்தி சாந்தம், இன்னொருத்தி கனிவு, மூன்றாமவள் மூர்க்கம். ஒவ்வொரு சிலையின் அருகிலும் சென்று அந்த முகங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவின் முகமே திரும்பத் திரும்ப நினைவில் வந்துகொண்டிருந்தது.

அம்மன் சிலைகளின் ஆடைகளைக் கழற்றியபோது பயத்தில் எனக்கு வியர்த்துவிட்டது. கால்களும் கைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு குடமாக எடுத்து ஒவ்தைவொரு சிலையாக குளிப்பாட்டினேன். அச்சிலைகளைக் கைகளால்ஜ தேய்த்தது மீண்டும் தண்ணீர் விட்டபோது எனக்குள் படபடப்பு. ஒரு நொடி அசைவற்று நின்று அந்தச் சிலைகளைக் கண்கொட்டாமல் பார்த்தேன். எவ்வளவு நேரமோ தெரியாது? அந்தக் கரிய விழிகளும், வளைந்த தோள்களும், மெல்லிய இடைகளும், உருண்டு திரண்ட மார்பும், மடக்கி வைத்த ஒற்றைக் காலும், புன்னகையையும், அருளையும், கோபத்தையும் அடக்கி வைத்த உதடுகளும் என, சிலைகளின் ஒவ்வொரு இணுக்கும் எனக்குள் ஒரு பேரருவியாய்ப் பாய, விழிநீர் வழிய நானும் சிலையாகிப் போயிருந்தேன்.

விழிப்பு வந்தபோது அந்த அம்மைகளின் நிர்வாணத்தின் முன் நானும் நிர்வாணமாக நிற்பதாகத் தோன்ற கைகளை வைத்து என் மார்பை மறைத்து ஒடுங்கி நின்றேன். ஏன் என் மார்பை மறைத்தேன் என அப்போது எனக்கு விளங்கவில்லை. வெட்கத்தில் என் முகம் சிவந்து உடல் கூசியது. சுடலையின் வேட்டை உச்சகட்டத்தை அடைய, சட்டெனச் சிலிர்த்து என்ன செய்யவெனத் தெரியாமல் நின்றேன். அம்மாவின் குறிகூறும் முகம். அன்பு, கனிவு, தாய்மை. அன்றைய பூசையின் முடிவில் அம்மன் வந்து எனக்குள் இறங்கி நின்றாள். பத்ரகாளியும், முத்தாரம்மையும், பேச்சியம்மையுமாக மாறி மாறி வந்தாள். அன்று முதல் எனது குரலில் ஒரு கரகரப்பு வந்து ஒட்டிக்கொண்ட மாதிரி இருந்தது.

“லேய் பத்ரகாளி, எங்க கூடெல்லாம் வெளாட மாட்டியோ? பல்லாங்குழியும் சுட்டிக்கல்லுந்தான் வெளாடுவியோ? அக்காமாருக்ககிட்ட பால் குடிச்சியா டே? அவியட்ட எங்களப் பத்தியும் கொஞ்சம் சொல்லு புள்ளோ.” என்றான் தளவாய்ப் பயல். அவனும் அவனுடைய சவடாலும். தினமும் என்னை வழிமறித்துச் சீண்டுவது அவனுக்கு வழக்கமாகிவிட்டது. முட்டை சுத்தி வைத்து விட வேண்டியதுதான்.

பள்ளிக்கூடத்திலும் யாரும் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை. இல்லை, யாருடனும் சேர்ந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. பெரும்பாலும் தனியாகவே இருப்பேன். பெரிய வகுப்பு அக்காக்கள் ஏதாவது சிறுசிறு வேலைகளுக்கு என்னை அழைப்பார்கள். பேனாவோ, நோட்டுகளோ வாங்கவும், சில சமயம் தின்பண்டங்கள் வாங்கவும் அனுப்புவார்கள். சில நாட்கள் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி மடித்துக் கொடுத்து அனுப்புவார்கள். மருந்துக்கடைக்குச் சென்று அந்த அண்ணனிடம் அதைக் கொடுத்தால் அவர் ஒரு காக்கிக் கவரில் ஒரு பொட்டலத்தை வைத்துக் கொடுப்பார்.

“ஏல பத்ரகாளி, இங்கன வாவுட்டி. எனக்கும் ஒரு காக்கிக் கவரு வாங்கிட்டு வருவியாட்டி?” என்று பள்ளிச் சுவரின் மேலிருந்த அண்ணனொருவன் கேட்டான். பின், பல அண்ணன்களும் என் வகுப்பு பையன்களும் அப்படியே கேட்டு என்னைக் கிண்டல் செய்தனர். பின்னர், எனக்கு விசயம் விளங்கினாலும் எந்தவொரு கூச்சமோ தயக்கமோ என்னில் தோன்றவில்லை.

ஒருநாள் அம்மனுக்கான சேலைகளை அரங்கில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தபோது ஒரு மஞ்சள் பட்டு என் கைகளில் இதமாக ஓர் குழந்தையின் மெல்லுடல் போல பட்டது. அதை எடுத்து முகத்தின் அருகே கொண்டு சென்றேன். பன்னீரும் மல்லிகையும் சேர்ந்த ஒரு வாசம். பச்சைப் பால் வாசம். உடல் விதிர்விதிர்த்துப் போக வேக வேகமாக என் உடைகளைக் கழற்றி அந்தப் பட்டை உடுத்தினேன். அம்மனுக்கு அலங்கரிப்பதைப் போல எனக்கு நானே அலங்கரித்துக் கொண்டேன். அவளுக்கு அணிவிக்கும் நகைகளையும் சலங்கைகளையும் அணிந்து ஒரு பொட்டு குங்குமத்தை எடுத்து நெற்றியில் தரித்தேன்.

கண்ணாடியை நோக்கி மெல்ல நடந்து சென்ற போது எனது இடை வளைந்து நடை நளினமாகியதைப் போலத் தோன்றியது. என் நிஜ உடலையும் முகத்தையும் அன்று நான் முதன்முதலாகக் கண்டுகொண்டேன். அந்த சாயங்காலத்தில் எனக்குள் ஓர் ஆசை பிறந்தது. எனக்கு நீண்ட கருங்கூந்தல் வேண்டும். ஆனால், என் மீசையின் மென்மயிரைப் பார்த்து அருவருப்பாக இருந்தது.

அப்பா நொங்கும், பதநீரும் பல இடங்களுக்கும் கொண்டு சென்று விற்பார். விளைச்சலற்ற மற்ற நாட்களில் புளிய விறகும் ஒடமர விறகும் வெட்டிக் கொண்டுபோய் வீடுகளுக்கும் விடுதிகளுக்கும் கொடுத்து வருவார். வீட்டிற்கு வருவது சாப்பிடுவதற்கு மட்டுமேயாக இருக்கும். அம்மா எப்போதும் கோவிலே கதியாகக் கிடந்ததால் வீட்டு வேலைகள் ஒவ்வொன்றாகச் செய்யக் கற்றுக் கொண்டேன். அதிலும் முக்கியமாக அம்மா சொல்லச் சொல்ல ஒவ்வொரு வகை கூட்டுகளும் கறிகளும் செய்துபார்ப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பா உட்கார்ந்து சாப்பிடும்போது முகம் எப்படி மாறுகிறது என்பதை மறைந்திருந்து பார்ப்பேன்.

அப்பாவிற்கு அம்மாவின் சமையலும் என் சமையலும் ஒன்றாகிப் போனதோ நானும் அம்மனும் ஒன்றாகிப் போனதோ எதுவும் தெரியாது. இரவுகளில் தினமும் அவரருகே மாம்பட்டை வாடையடிக்கும். உறங்கப் போகும் வரை கோவில் வேப்பமரமூட்டில் உட்கார்ந்து மற்ற மாமாக்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பார்.

நான் உறங்கியபிறகு நள்ளிரவில் வந்து என் முகத்தைத் தொட்டு ஒரு முத்தம் கொடுத்துவிட்டுச் செல்வார். நான் கல்லெனக் கிடப்பேன். அம்மாவும் அப்பாவும் பேசிக் கொள்கிறார்களா இல்லையா என்றே தெரியாது. ஒருநாள், பனையேறியவர் கீழே விழுந்து முதுகெலும்பை உடைத்துக்கொண்டு மண்ணள்ளும் தள்ளுவண்டியில் வந்து சேர்ந்தார். அத்தோடு என் பள்ளிப் படிப்பு முடிந்து போனது. அதில் ஒன்றும் எனக்குப் பெரிய வருத்தமில்லை. கடற்கரைச் சந்தையில் ஒரு கைவினைப் பொருள் கடையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

இந்தப் பட்டுச்சேலை எப்படியிருக்கிறது? காஞ்சிபுரத்திலிருந்து எனக்காக வாங்கி அனுப்பியிருக்கிறார் திருவாளி மாமா. இப்போது ஒரு புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்ப வேண்டும். அவரது மகளுக்குச் சடங்கு நடத்த வேண்டுமென வேறு சொல்லிக் கொண்டிருந்தார். என் சேமிப்பிலிருந்து ஒரு இரண்டு லட்சமாவது அனுப்பிவைக்க வேண்டும். என்னை இங்கே வேலைக்கு அனுப்புவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்? ஊர், உலகமெல்லாம் என்னை ஏளனமாக, வெறும் உடலாகப் பார்த்தபோது பக்கத்தில் உட்கார வைத்துப் பக்குவமாய் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தாரே. அவர் மட்டும் எப்படி என் மனதைப் புரிந்துகொண்டார்?

….

கடற்கரைக் கடைக்காரன் பார்த்த பார்வையும், நடந்துகொண்ட விதமும் எனக்குப் பிடிக்காமல் ஆன பிறகும் உடனடியாக நான் வேலையிலிருந்து நின்றுவிடவில்லை. அவனுடைய எல்லை என்னவெனத் தெரிந்துகொள்வதற்காக வேண்டுமென்றே அங்கேயே வேலைக்குச் சென்றேன்? அவனைத் தூண்டும் விதமாக வேண்டுமென்றே நடந்துகொண்டேன்.

அவனது துணிவு வெளிப்பட்ட அந்தவொரு நாள், அந்தவொரு கணம், அவனது நிமிர்வும் ஆண்மையும் இழந்து அவன் என் முன்னே வெற்றுடலாக நின்ற போது எனக்குள் ‘சீ’ எனத் தோன்றியது. இதைத் தெரிந்துகொள்ளத்தான் இத்தனை நாள் இருந்தோமா? அந்த அம்மன் உடலுக்கும் இந்த வெற்றுடலுக்கும் இடையே என்ன வித்தியாசம்? எனக்குள் மறைந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு பெண்ணை இவன் எப்படி அறிந்துகொண்டான்? இவனுக்கு நான் ஒரு பெண்ணுடலாக வேண்டுமா, இல்லை, ஒரு ஆணாக வேண்டுமா? அவனது நிர்வாணத்தைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

“சந்தக்கரைவிளைல நம்ம திருவாளி அண்ணாச்சி இருக்காவ தெரியுமா டேய்?”

“தெரியாது சித்தப்பா.”

“நம்ம கோயில் கொடைக்கு சமையலுக்கு வருவாவல்லா டே, அந்த கருத்த ஆளு, ஒரு வடச்செயின் போட்டுருப்பாவல்லா?”

“ம்ம்..”

“நாஞ் சொன்னேன்னு அவர்ட்ட போயி சொல்லு புள்ளோ, தொழில் சொல்லிக் குடுப்பாவ, என்னா? ஒனக்கும் ஒரு பொழப்பு வேணும்லா டே? இந்த ஏரியால அவரு சமையல் மாறி வருமா?”

“செரி, சித்தப்பா.”

திருவாளி அண்ணாச்சி பார்த்த அன்றைக்கே என்னை முழுதாக ஏற்றுக் கொண்டார். முதல் நாள் நான் வைத்த நார்த்தங்காய் கூட்டைச் சுவைத்துப் பார்த்தவர் அப்படியே என்னை கட்டியணைத்துக்கொண்டார்.

“நளனுக்க ரத்தம் மாதில்லா தெரியுவு புள்ளோ! பின்ன, அம்மைக்க பூச வைக்கப் புள்ளல்லா? அவளாக்கும் ஆக்கித் தருகது.” என்று சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து என் கைகளில் திணித்தார்.

மாமா அவரது சமையல் கலையை எனக்குள் வளர்த்துவிட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, எங்கு சமையலுக்குச் சென்றாலும் “பத்ரகாளிட்ட விட்டுக் காட்டிட்டு பந்திக்கு அனுப்புனாப் போதும், வெளங்குவா டே?” என்று சொல்லிவிட்டு பந்தலுக்குப் பின்புறம் சென்று விடுவார். மற்றவர்களை விட எனக்கு எப்போதுமே அதிகமாகச் சம்பளம் கொடுப்பார்.

“என்னடே பத்ரகாளி, தலைவர வளச்சுப் போட்டுட்டியோ? என்ன டே மேட்டரு?”

“போங்கல சோலி மயிரப் பாத்துட்டு. வந்துட்டானுவோ, எல்லாவனும் சொயம்பு மாதி.”

ஒருநாள், தென்கரைவிளைக் கோவில் என்று நினைக்கிறேன். மூன்று நாள் கொடை விழா. எல்லா வேலைகளையும் வழக்கம்போல நானே பார்த்துக்கொள்ள, திருவாளி மாமா மாம்பட்டை அடித்துவிட்டு கணியான் ஆட்டம் பார்க்கச் சென்று விட்டார். குறைந்தது பத்தாயிரம் பேராவது இருப்பார்கள். நாற்பது சொம்பு சாப்பாடு. வட்டை மாற்றி வட்டை சமைத்து பந்திக்குக் கொடுத்து அனுப்பி விட்டு ஒரு வாய் சோற்றை எடுத்து வாயில் வைத்தேன். தலை கிறக்கிக்கொண்டு வர, கைகால் தளர்ந்து அப்படியே மயங்கி விழுந்து விட்டேன். சாப்பிடாமல் தொடர்ந்து வேலை செய்ததாலோ என்னவோ?

நினைவு மெல்ல மீண்டு வந்தபோது என்னுடல் இலேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. குளிரில் பற்கள் அடித்துக் கொண்டன. ஒரு கனமான கை என் தலையைக் கோதி விட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கை மெதுவாக என் முகத்தைத் தொட்டு வருடிப் பின் உடல் முழுதும் தொட்டு அருகே கிடந்தது. அந்த முழு உருவும் என்னருகே நெருங்கி அணைக்க முயன்றபோது தள்ளிவிட்டு விலக முடியாமல், அல்லது விலக விரும்பாமல் அப்படியே படுத்துக் கிடந்தேன்.  சிறிது நேரத்திற்குப் பிறகு என் நெற்றியில் மெல்லிய முத்தமொன்றை வைத்து விட்டு மெல்ல எழுந்து சென்றது அந்த உருவம்.

இங்கே, ஒரு பெரிய நிறுவனத்தின் சமையல் பொறுப்பு என்னுடையது. என்ன விதமான பதார்த்தமானாலும், எந்த நாட்டுச் சமையலானாலும், சாப்பிடப் போவது யாராக இருந்தாலும், திருவாளி மாமாவிற்காக முதல் முதலாகச் செய்த அந்த நார்த்தங்காய் கூட்டை மனதில் வைத்தே செய்கிறேன். அதுபோக, சமைத்துப் பரிமாறுவது ஓர் அன்னையின் கருணையல்லவா? என் மூன்று அம்மைகளும் எனக்கு அருகிருந்து தந்த கலையல்லவா அது? என்னதான் பலரும் என்னை ஒரு விதமாகப் பார்த்தாலும், என்னதான் கேலியும் கிண்டலும் செய்தாலும், உரசிச் சென்றாலும், எனக்குள் உருக்கொண்டு இங்கே வாழ்ந்திருப்பது ஓர் அம்மையின் உயிரல்லவா?

இப்படியெல்லாம் எனக்கு யோசிக்கத் தெரியாது. இன்று மதியம் சமைத்துக் கொண்டிருந்தபோது என் அறைத்தோழன் தன் குடும்பத்தோடு வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டு எங்கள் சமையலறையைச் சுற்றிக் காட்டினான். அவனது சின்னஞ்சிறியப் பெண் என்னைப் பார்த்து கையசைத்தாள். நான் அவனது அலைபேசியை வாங்கி அவளோடு பேசிக்கொண்டே நான் சமையல் செய்வதையும் காட்டிக்கொண்டிருந்தேன். நீண்ட நேரம் அவள் என்னோடு விளையாடிச் சிரித்துச் சிரித்துப் பேசினாள். கடைசியில், அலைபேசியை வைக்கும் முன், என்னிடம் மெல்ல இரகசியக் குரலில் சொன்னாள், “மாமா, நீங்கள் என் அம்மாவைப் போலப் பேசுகிறீர்கள். ஐ லவ் யு.”

என்ன தோன்றியதோ என்னவோ? அந்த நொடியில் முடிவு செய்தேன். எனது அடையாளத்தை இன்று பட்டவர்த்தனமாக அறிவிக்க வேண்டும் என்று.

நேராக வீட்டிற்கு வந்து என் எல்லா பெண்ணுடைகளையும் அலங்காரப் பொருட்களையும் என் எல்லா இரகசிய வாசனைத் திரவியங்களையும் எடுத்து என் அறை முழுதும் பரப்பி வைத்தேன். இதோ உங்கள் முன்னால் இருந்து ஆடையணிந்து அலங்காரம் செய்து முடித்திருக்கிறேன். என் அறைத் தோழன் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான். அவனை இதே உடையில் வரவேற்று அவனுக்கு ஏதாவது சமைத்துக் கொடுப்பேன். பின், அவன் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவனை அழைத்துக் கொண்டு எங்காவது நல்ல கூட்ட நெரிசலான இடத்திற்குச் செல்வேன். ஒரு சாராய விடுதிக்கோ, இல்லை பாலியல் விடுதிக்கோ, இல்லை கடற்கரைக்கோ செல்வேன்.

அங்கே எல்லா ஆண்களும் பெண்களும் ஆடி மகிழ்ந்திருக்கும் இடத்தில் எல்லோருக்கும் தெரியும்படியான ஒரு வெளிச்சத்தில் நின்று எனக்குப் பிடித்த கதக் நடனம் ஆடுவேன். ஒருவேளை, என் அறைத் தோழன் அதிர்ச்சியானாலோ, இல்லை அருவருத்து என்னை விட்டு ஓடிவிட்டாலோ கவலையில்லை. அது அவனது பிரச்சினை, இல்லையா?


சுஷில் குமார்

[email protected]

Sushil Kumar

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.