சில கேள்விகள், சில பதில்கள்! நேர் கண்டவர்கள் -க.விக்கேனஷ்வரன் வே.நி.சூர்யா


 

கடந்து சில மாதங்களாக தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கும் இதுவரை சிறுகதை தொகுப்பு வெளியிடாத சில எழுத்தாளர்களிடம்  கனலி கலை-இலக்கிய இணையதளம் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர்கள் அளித்துள்ள பதில்களை தொகுத்து இந்த நேர்காணலை கொண்டு வந்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் தொடர்ந்து இயங்க இந்த நேர்காணல் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

 

  1. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். இலக்கியத்துடனான அறிமுகம் எப்படித் துவங்கியது?

காளி பிரசாத்: சொந்த ஊர் மன்னார்குடி. இப்பொழுது சென்னையை அடுத்துள்ள திருமுல்லைவாயிலில் வசிக்கிறேன். இலக்கிய அறிமுகம் வணிக இதழ்கள் வழியாகவும் வீட்டில் பெரியவர்கள் பேசும் உரையாடல்கள் வழியாகவும் உண்டானது. சென்னையில் ஏற்பட்ட ஆர்க்குட் / பிளாக்கர்ஸ் இணைய வழி நண்பர்களுடனான நட்பும் எழுத்தாளர் ஞாநி அவர்கள் நடத்திக்கொண்டிருந்த கேணி கூட்டங்களும் தீவிர இலக்கிய வாசிப்பை நோக்கி வழிநடத்தின. சென்னையில் எப்படியும் அடிக்கடி ஒரு இலக்கிய அமர்வு நிகழும். இது மாநகர வாழ்வின் சாதகங்களில் ஒன்று. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வெண்முரசு எழுதத் துவங்கிய பின் அருகருகே இருந்த வாசகர்கள் சென்னையில் வெண்முரசு கலந்துரையாடல் என்று மாதந்தோறும் கூடுகை நடத்தினோம். அந்த நண்பர்களுடனான உரையாடல்கள், விஷ்ணுபுரம் அமைப்பில் ஆண்டுதோறும் நிகழும் கோவை, ஊட்டி, சென்னை இலக்கிய அமர்வுகள் என இன்றுவரை புதிது புதிதாக உலக இலக்கியங்களை அறிந்துகொண்டுதான் இருக்கிறேன்.

சுஷில் குமார்: எனது பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம். தற்போது கோவையில் கிராமப்புற மாணவர்களின் கல்வி சார்ந்து வேலை செய்கிறேன். அந்தக் காலத்து விகடன், கல்கியில் தொடராக வெளிவந்த கதைகள், காமிக்ஸ் போன்றவற்றை எனது அம்மா தனியாக பைண்டிங் செய்து வைத்திருந்தார். இலக்கியம் என்றால் என்னெவென்று அறியாமல் அவற்றை வாசித்திருக்கிறேன். பின் பாரதியார் கவிதைகளில் தொடங்கி நவீன தமிழ் இலக்கியம், உலக இலக்கியம் என்று கடந்த பத்து ஆண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடனான அறிமுகம் ஒரு மிகப் பெரிய திறப்பாக அமைந்தது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது நிகழ்சிகள், ஊட்டி காவிய முகாம்கள், மற்ற பயிற்சிப் பட்டறைகள் வழியாக வாசிப்பும், புரிதலும் நிறைய மாறியிருக்கிறது.

கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் மாதாந்திர சந்திப்புகள், சுக்கிரி இலக்கியக் குழுமத்தின் வாராந்திர சிறுகதை விவாதங்கள், கனலியின் அசைவு இலக்கியக் குழுமத்தின் விவாதங்கள் எனது தனிப்பட்ட வாசிப்பை முறைப்படுத்த உதவுகின்றன.

செந்தில் குமார்: சிறு வயதிலேயே வாசிப்பு தொடங்கிவிட்டது. மிகவும் சேட்டைகாரனான என்னை சற்று நேரமாவது அமைதிபடுத்த, ஒரு புத்தகத்தை கொடுக்கும் பழக்கம் வீட்டிலுள்ளவர்களுக்கு இருந்தது. கோகுலம், பூந்தளிர், ராணி காமிக்ஸ் என்று ஆரம்பித்த அந்த பழக்கம், பாலகுமாரன் வழியாக தொடர்ந்தது. கோகுலம் இதழில் ஒரு கதைகூட அந்த காலக்கட்டத்தில் பிரசுரமானது. வாஸந்தி ஆசிரியராக இருக்கும்போது வந்த இந்தியா டுடே இலக்கிய மலர் வழியாக அசோகமித்திரன் அறிமுகமானார். ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஒருபிடிச்சோறு சிறுகதை தொகுப்பு படிக்க கிடைத்தது. அதுவே தீவிர இலக்கியம் பக்கம் என்னை ஆற்றுப்படுத்தியது.

மௌனன் யாத்ரிகா: ஒருகாலத்தில் கூர்மா நதியாக இருந்த ஓர் ஓடையின் (நாங்கள் அதை யானைவாரி ஓடை என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பெயருக்குரிய கதைகள் ஊரில் இப்போதும் சொல்லப்படுகின்றன) கரையோரத்தில் இருக்கும் சித்திடையார் என்னும் கிராமம்தான் எனது ஊர். சிமெண்ட் நகரமெனப் புகழ்! விளங்கும் அரியலூர் மாவட்டம். முன்பு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தது. சுற்றுவட்டாரத்தில் அதிகம் கரும்பு விளைந்த நன்செய் நிலங்கள் இப்போது தரிசாகிக் கிடக்கின்றன. பசுமையானதாகவும் வறட்சியானதாகவும் பார்த்துப் பழகிவிட்ட அந்த நிலம்தான் என் எழுத்தின் பின்னணி. இந்த நிலத்தோடு இருக்கும் வாழ்வையும் நினைவையும்தான் ‘வேட்டுவம் நூறு’ என்று கவிதை நூலாக்கியிருக்கிறேன்.

இலக்கியமும் அதன் அறிமுகமும் எனக்குக் கதைகளில் இருந்துதான் கிடைத்தது. இயல்பில் நானொரு சிறந்த கதைசொல்லியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் என் இரத்தம் அப்படி. என் தாத்தா ஊரறிந்த கதைசொல்லி. என் அப்பாவிடமும் அந்தக் கதை இருக்கிறது. ஆனால், என் தாத்தாவைப் போல் அவர் அதை வாழ்வாகக் கொள்ளவில்லை. கோபமுற்ற தாத்தாவின் ஆவி என் மீது ஏறிவிட்டது போலும். நான் இப்போது கதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

லோகேஷ் ரகுராமன்: நான் லோகேஷ் ரகுராமன். பெங்களூரில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரிகிறேன். இலக்கியத்துடனான எனது அறிமுகம் 2013-இல் ஜெயமோகனது தளத்தில் வாயிலாக அமைந்தது. எனது இளம் பிராயத்தில் வாசிப்பு பழக்கமே இருந்ததில்லை. கல்லூரி வரையில்கூட அது தொடர்ந்தது. ஆனால் திரைப்படங்களைத் தேடிப் பிடித்து பார்க்கும் வழக்கம் உண்டு. நான் கடவுள், அங்காடி தெரு, ஆறு மெழுகுவர்த்திகள், கடல் போன்ற படங்களின் வாயிலாக ஜெயமோகன் எனும் எழுத்தாளரைக் கண்டடைந்தேன். அவரைப் பின்தொடர அவர் தளத்திற்கு தினமும் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். அப்படி ஏற்பட்டது தான் என் இலக்கிய பரிச்சயம். அதன் பின் தொடர்ந்து இணைய இதழ்களைப் படித்து வருகிறேன்.

சிவபிரசாத் ரங்கசாமி: புத்தகங்களை நேசிக்கிற எண்ணற்ற தமிழ் வாசகர்களில் நானும் ஒருவன். தற்சமயம் சேலம் மாவட்டம் அரசுப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணி செய்கிறேன். என் இரண்டாம் சகோதரிக்கு புத்தகம் வாசிப்பதில் ஆர்வமிருந்தது. அவர் வாசிக்கும் கதைகளை என்னிடம் சொல்வார். நான் பள்ளியில் என் நண்பர்களிடம் சொல்வேன். இப்படி கதைகள் கேட்பதிலும் சொல்வதிலும் இருந்த ஈர்ப்பால் பள்ளி நாட்களிலேயே புத்தகம் வாசிக்கத் தொடங்கிவிட்டேன். கல்லூரி முதலாம் ஆண்டில் இலக்கிய மன்றத் தொடக்க விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வந்த எழுத்தாளர் பெருமாள் முருகனின் அறிமுகம் கிடைத்தது. அவர் தன்னுடைய சேகரிப்பில் பெரிய நூலகமே வைத்திருக்கிறார். நான் விரும்பும் புத்தகங்களை எல்லாம் வாசிக்கக் கொடுத்தார். அவர் மூலமே நவீன இலக்கியமும் சிற்றிதழ் சூழலும் பரிச்சயமானது.

துரை. அறிவழகன்: 1967-இல் பிறப்பு. ஓரியூர் வழித்தடத்தில் உள்ள வலையன்வயல் எனும் குக்கிராமம் எனது பூர்வீகம். அப்பாவுக்கு அரசு உத்தியோகம் என்பதால் மதுரை, சிவகங்கை, காரைக்குடி என குழந்தைப் பருவத்திலிருந்து வளரிளம் பருவம் நோக்கிய பயணத்தின் நிலவியல் வரைபடம் விரிவடைந்து கொண்டே இருந்தது. பனை சூழ் கிராமம் எனது பூர்வீகம். பனை மரங்களும், காய்ந்த மண் தடங்களில் கிடக்கும் ஈரம் உலராத சீவப்பட்ட நொங்குகளும், காய்ந்த பனை ஓலைகளின் சரசரப்பும், உரையாடல்களும் எனக்குள் கடத்திய உணர்வுகள் தான் என் பால்ய நிலம். 77-80 என்பது எனது குழந்தைப் பருவ நீட்சியின் நிலமாக அமைந்தது சிவகங்கை, அந்த 10 முதல் 13 வயது வரையிலான ஆரம்பப் பள்ளி காலகட்டத்தில் கிடைத்த ‘அன்னம்’ மீரா அவர்களின் மகன் கதிரின் பால்ய நட்பால் புத்தக வாசம் அந்த நாட்களிலேயே எனக்குள் படர்ந்துவிட்டது. நவீன இலக்கிய வாசிப்பு என்பது எனது கல்லூரி முதலாம் ஆண்டில் பத்தொன்பதாம் வயதில் நிகழ்ந்தது; இதனை நிகழ்த்தியவனும் கதிர்தான்.

கி.ரா, நாஞ்சில் நாடன், பாவண்ணன், கோணங்கி என இலக்கிய ஆளுமைகள் வந்து போன சிவகங்கை ‘அன்னம்’ பதிப்பகத்தில் புத்தக வாசத்தை நுகர்ந்தபடி செழியன், கதிருடனும் இலக்கியத்தின் அன்றைய அலைப் போக்குகளைப் பேசியபடி நகரும் என் கல்லூரி நாட்கள். ஆல்பர் காம்யுவின் அந்நியன், சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை என கதிர் அறிமுகப்படுத்திய நூல்களின் வாசிப்பு அந்நாட்களில் என்னுள் கிளை பரப்பி ஒரு வசீகரமாகப் படர்ந்துவிட்டது.

கி.ராவின் கரிசல் காட்டுக் கடுதாசி நூலுக்காக ஆதிமூலம் வரைந்த மருது சகோதரர்கள், கத்தி ஏந்திய அய்யனார் ஆகிய கோட்டோவியங்களை லயித்துப் பார்த்தபடி சிலாகித்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பான் கதிர். ஆதிமூலத்தின் கோடுகளுக்குள் நான் ஒரு தீராத பயணம் செய்திருக்க வேண்டும். ஆதிமூலத்தின் கோடுகள் எனக்குள் ஏதோ ஒரு ரகசிய மொழி பேசியதை உணர முடிந்தது. இந்த ரகசிய மொழியின் வசீகரம் தான் என்னை இலக்கியத்தின் பக்கம் நகர்த்தியிருக்க வேண்டும்.

கவிதை, உரை நடை எல்லைகளைத் தாண்டி, ருத்ரய்யா, சத்யஜித் ரே, ரித்விக் கடாக் என கதிர் எனக்குள் கடத்திய பேசு தளங்களும், பார்வை தேடலும் விரிந்த எல்லையில் பாய்ந்து பரவிக் கொண்டே இருந்தது. அப்பிராயத்தின் உணர்வெழுச்சியும், தேடல் வெளியும் என்னை ஏதோ ஒரு ஒளியின் மொழிப் பாதைக்கு நகர்த்திக் கொண்டிருந்தது. அந்நாட்களில் கவிஞர் மீரா நடத்திய அன்னம் விடு தூது, ஊசிகள் இதழ்களில் சிறு சிறு ஈடுபாட்டின் மூலம் என் சிறகுகளைப் பதப்படுத்திக் கொண்டே இருந்தேன். இப்படித்தான் எனக்குள் நவீன இலக்கியத்தின் விழிப்பு நிகழ்ந்தது.

செந்தில் ஜெகன்நாதன்: சொந்த ஊர் மயிலாடுதுறையில் உள்ள பனம்பள்ளி கிராமம், தற்போது சென்னையில் திரைப்படத்துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். சிறுவர் மலர், காமிக்ஸ் படக்கதைகளில் துவங்கிய வாசிப்பு சிறிது சிறிதாக விரிவடைந்தது. சிறுவயதில் வகுப்பறையை விடவும் நூலகம் மனதுக்கு நெருக்கமானதாகவே இருந்தது. பள்ளிக்கூட துணைப்பாட நூலில் வாசித்த கு. அழகிரிசாமி அவர்கள் எழுதிய ராஜா வந்திருக்கிறார் கதைதான் தீவிர இலக்கிய வாசிப்பை நோக்கி நகர்த்தியது. கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் கட்டுரைகள் என இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் அடி நாதமாக இருப்பது மனித வாழ்க்கை என்ற உண்மையை உணர்ந்துகொண்ட தருணத்தில் வாசிப்பை சிக்கெனப் பிடித்துக்கொண்டேன்.

மயிலன் ஜி சின்னப்பன்: புத்தகம் வாசிப்பதை அறிவுஜீவி அந்தஸ்தாக நம்பிய வயதில் அது நிகழ்ந்துவிட்டது. ஒரு விதத்தில் அது ஒரு முகமூடியாகத்தான் உள்ளே வந்திருக்கிறது. முகமூடியே முகமானது எந்தப் புள்ளியில் என்று குறிப்பிட்டு சொல்ல வரவில்லை. எந்த நம்பிக்கையில் எழுத ஆரம்பித்தேன் என்பதை யோசிக்கவே வேடிக்கையாக இருக்கிறது. நிச்சயம் விபத்துதான்.

விஜய ராவணன்: எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. இப்போது சென்னையில் இயந்திரவியல் பொறியாளாராகப் பணியாற்றி வருகிறேன்.

மூன்று வருடங்கள் முன்பு முகநூலில் சில பத்திகள் எழுதத்தொடங்கி பின் கைப்பேசி செயலி ஒன்றில் சில குறுங்கதைகள் எழுத ஆரம்பித்திருந்த சமயம் நண்பர் ஒருவரைச் சந்தித்துவிட்டு நெல்லை பேருந்து நிலையத்தை ஒட்டிய NCBH புக்ககக் கடைக்கு எதேச்சையாகச் சென்றிருந்தேன். அப்போது எனக்குப் பெரிய எழுத்தனுபவம் எதுவும் கிடையாது. நான் தீவிரமான இலக்கிய வாசகனாகவும் இருந்திருக்கவில்லை. ஒன்றிரண்டு நாவலகள் வாசித்திருப்பேன். வரலாறு சார்ந்தோ இல்லை புதிதாக ஆர்வமூட்டக்கூடிய விடயங்கள் பற்றியோ சில புத்தகங்கள் அவ்வப்போது வாசிப்பதுண்டு. அவ்வளவுதான்.

அணுமின் நிலையம், அனல்மின் நிலையம் பற்றி புத்தகக் கடைக்காரர் பாலா இன்னொரு வாடிக்கையாளரோடு பேசிக் கொண்டிருந்தார். அது என் துறை சார்ந்தது என்பதால் நானும் அவற்றைப் பற்றி விவரமாக எடுத்துரைத்தேன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே “நீங்கள் எதுவும் எழுதுறீங்களா?” என்று கேட்டார்.

“என் போக்குல தோணுறத கொஞ்சம் எழுதியிருக்கேன்…”

“சிறுகதைத் தொகுப்பு என்ன வாசிச்சிருக்கீங்க?”

நான் எதுவும் வாசித்ததில்லை என்றதும் அவராக எனக்கு மூன்று புத்தகங்கள் எடுத்துத்தந்தார். வண்ணதாசனின் ஒரு சிறு இசை, நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க, எஸ்.ரா-வின் கதாவிலாசம்.

அந்த மூன்று புத்தகங்களும் வாசித்து முடித்த போது இனி தீவிரமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. ஏதோ ஒரு உந்துதலில் அடுத்த ஆறு மாதத்திற்குள் பத்து சிறுகதைகளும் ஒரு நாவலும் எழுதியிருந்தேன். மீண்டும் ஊருக்குப் போனபோது NCBH புத்தகக்கடை பாலாவிடம் இதைப்பற்றி சொன்னதும், கலை இலக்கிய பெருமன்றத்தின் போட்டிக்கு அந்தச் சிறுகதைகளை அனுப்பச் சொன்னார்.

“புத்தகமா வராட்டாலும் பரவால்ல… அனுப்புங்க…” என்றார்.

என்னுடய சிறுகதைகளை ஸ்பைரல் பைண்டிங் போட்டு அனுப்பி வைத்தேன். நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எனக்குப் பரிசு கிடைத்தது. அதுதான் இலக்கிய உலகத்தின் எனக்கான திறவுகோல்.

பிரமிளா பிரதீபன்: இப்போது திரும்பிப் பார்க்கையில் என்னைப்பற்றி சொல்ல நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது. பதுளை ஊவாகட்டவளை எனும் ஊரின் சொந்தக்காரியாய், செல்வராஜா சிவகாமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியாய், அப்படியே பது/ஊவாகட்டவளை ஆரம்பப்பாடசாலையின் ஒரு மாணவியாய் என்று…

நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் சிரிப்பும் வருகிறது. ஊதாநிற பூக்கள் நிரம்பிய ஒரு பச்சை வண்ண ஆடையுடன் வீட்டிற்கு பின்னால் நின்ற மரங்களிலெல்லாம் ஏறித்தாவி தனியே பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் திரிந்ததை அப்படியே கண்முன் கொண்டுவந்தபடியேதான் பதிலளிக்கிறேன்.

தொடர்ச்சியாக இடைநிலைக்கல்வியை பது/தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியினை பது/சரஸ்வதி தேசிய கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம், திறந்த பல்கலைக்கழகம், British Council முதலிய நிறுவனங்களிலுமாய் தொடர்ந்தபடி இடையிலொரு தருணத்தில் மனைவி, தாய் எனும் அடையாளங்களுக்காய் நடமாடத் தொடங்கினேன்.

தொழில் எனும் வகையில் மனதிற்கு மிகப்பிடித்த ஒரு தொழிலையே தெரிவு செய்து ஒரு ஆசிரியராகினேன். அதன் அடுத்தகட்டமாய் விரிவுரையாளராகினேன். கூடவே ஒரு படைப்பாளியாகவும் இருக்க வேண்டுமெனும் அவாவில் வெகு பிரயத்தனத்துடன் என் முயற்சிகளை தொடர்கிறேன்.

இந்த என் நடைபாதையின் ஒவ்வொரு படியினையும் நான் தாண்டி வருகையில் என் தாய் அவளிடமிருந்து எனக்கு கடத்தியதான தன்னம்பிக்கையை மாத்திரமே இறுகப்பற்றிக்கொண்டு நடந்திருக்கிறேன். இன்னுமே நடந்து கொண்டிருக்கிறேன்.

 

  1. முதல் சிறுகதை எப்போது வெளிவந்தது? சிறுகதையை வெளிப்பாட்டு வடிவமாகத் தேர்ந்தெடுத்தது ஏன்?சிறுகதை வடிவத்தின் எல்லைகளாக நீங்கள் உணரக்கூடியவை என்ன?

காளி பிரசாத்: முதல் சிறுகதை 2016-இல் வெளிவந்தது. ஒரு தருணத்தின் உச்சபட்ச உணர்வை எளிதில் கடத்த சிறுகதையே சிறந்த வடிவமாக உள்ளது. சிறுகதையின் எல்லை என்பது அதன் பின்புலம் வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதாக இருக்க வேண்டும். ஒரு புதிய நிலம் சார்ந்த அல்லது மனிதமனம் சார்ந்த ஒரு பின்புலத்தை உருவாக்குதல் கடினம். இப்பொழுது அதையும் ஒரு எல்லை என்று சொல்ல முடியாது. தனிமைக்கால கதைகளில் எழுத்தாளர் ஜெயமோகன் பல வடிவங்களை உருவாக்கியுள்ளார். சில கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாக சில சிறுகதைகளில் வருகிறார்கள். ஆகவே பின்புலம் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவருமே அதைத் தன்னளவில் வாசிக்க முடியும். ஆகவே சிறுகதைக்கான எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன

சுஷில் குமார்: முதல் சிறுகதை மே 2020 கனலி இணைய இதழில் வெளிவந்தது. பல வருடங்களாக எனது வலைப்பக்கத்தில் நீள் கவிதை முயற்சிகள் செய்திருந்தேன். தொடர் வாசிப்பு, எழுத்தாளர்கள், இலக்கிய நண்பர்களுடனான உரையாடல்கள் வழி சிறுகதை எழுத வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பம் உருவாகி வந்தது. இத்தனை பக்கங்களில், இந்த வடிவத்தில் சொல்ல நினைப்பதை சொல்ல முடிகிறதா எனும் முயற்சியாகத்தான் எனது சிறுகதைகளைப் பார்க்கிறேன். தொடர்ந்து எழுத எழுத இந்த வடிவத்தை இன்னும் புரிந்து கொள்வேன் என நினைக்கிறேன்.

எவ்வளவு பின்புலத்தைக் கொடுக்க வேண்டும், எவ்வளவு உரையாடல்கள் இருக்கலாம், வட்டார வழக்கை எந்த அளவிற்குப் பயன்படுத்தலாம், எழுத்தாளனின் கருத்தை திணிப்பதா வேண்டாமா என்று சில எண்ணங்கள் ஒவ்வொரு சிறுகதை உருவாகி வரும்போதும் தோன்றும். சிறுகதை வடிவத்திற்குள் நினைப்பதை எழுதத் துவங்கும் போது இவை சிறிய சிக்கல்களாக இருந்தாலும் சில பக்கங்களை எழுதி முடிக்கும்போது எல்லா எல்லைகளையும் தாண்டி ஒரு சிறுகதை தானே வடிவம் கொள்கிறது என்று நினைக்கிறேன். மற்றபடி, இந்த வடிவத்திற்கு எல்லைகள் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

செந்தில் குமார்: என்னுடைய வலைப்பூவில் 2011-ஆம் ஆண்டிலிருந்தே சிறுகதைகளை எழுதி வந்தேன். முதன்முதலாக கதையை அனுப்பியது பதாகை இதழுக்கு தான். 2015-ஆம் ஆண்டு, பதாகை இதழில் மடத்து வீடு சிறுகதை வெளிவந்தது. அந்த கதைக்கு கிடைத்த வரவேற்பு உற்சாகமளித்தது. ஜெயமோகன் அவர்களுக்கு அந்த கதையை நான் அனுப்பியிருந்தேன். அவர் புதியவர்களின் கதை என்ற தலைப்பில் அந்த கதையை பிரசுரித்து, தனது விமர்சனத்தையும் எழுதியிருந்தார்.

சிறுகதையின் வலிமை, மையம் நோக்கி குவிந்து இலக்கு தவறாமல் செலுத்தபடும் கூர்மைதன்மையே. வாழ்வின் அலைகழிப்புகளும், அனுபவங்களும், சந்தித்த மனிதர்களுமே என்னை எழுததூண்டியவை. நல்ல கோடைகாலத்தில், நெரிசலான தெருவில் நடந்து செல்கையில் சட்டென்று நம் முன் வந்து, ஒரு முகச்சுளிப்பில், புன்னகையில் தமது வாழ்வை சொல்லி காணாமல்போகும் மனிதர்களை சொல்ல, எனக்கு சிறுகதை வசதியாக இருந்தது. அவர்கள், அதற்கு முன்பு என்னவாக இருந்தார்கள், பிறகு என்னவானார்கள் என்பதெல்லாம் சிறுகதையில் சொல்லமுடியாது. அதற்க்கு நாவல் தான் சரியான வடிவம் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

மௌனன் யாத்ரிகா: நான் முதலில் எழுதத் தொடங்கிய இலக்கிய வடிவம் நாட்டுப்புறப் பாடல்கள். பிறகு, கதை. அதன் பிறகுதான் கவிதை எழுத ஆரம்பித்தேன். இவற்றில், என் கணிசமான காலத்தைக் கவிதை எடுத்துக் கொண்டது. அவ்வப்போது கதை எழுதிப் பார்ப்பேன். ஆனால், அதை எங்கும் படிக்கவோ பிரசுரிக்கவோ கொடுத்ததில்லை. அனைத்தையும் மறக்கடித்தது கவிதை. கவிதை ஒரு போதை வஸ்து. எழுதிய கதைகள் தொலைந்தன. கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்கையில் என் முதல் கதையின் ஒரு காட்சி மட்டும் நினைவுக்கு வருகிறது. ஒரு வீட்டில் சோவையாகப் பிறந்துவிட்ட பெண்ணைக் குணப்படுத்த கழுத்தளவு நீர் இருக்கும், தாமரைகள் நிறைந்த குளத்தில் பச்சைத் தவளையைக் குத்துவதற்காக நீண்ட சுளுக்கியோடு நீந்தும் ஒருவன் நினைவுக்கு வருகிறான். வேறொன்றும் நினைவில் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு, 2016-இல் மலைகள் இணைய இதழில் ஒரு கதை எழுதினேன். ‘மூன்று மகிழ்ச்சியான வண்ணங்கள்’ என்பது அதன் தலைப்பு. வரவிருக்கும் சிறுகதைத் தொகுப்பில் அந்தக் கதையைச் சேர்த்திருக்கிறேன்.

நம் மனதில் உள்ளதை மற்றொரு மனதுக்கு மாற்றி வைக்கக் கதையைப்போல் சிறப்பான வடிவம் எதுவுமில்லை என்கிற கதைசொல்லி மரபு எனக்குள் ஊறிக்கிடக்கிறது. நான் எழுதும் கவிதைகளைக்கூட கதை சொல்வதற்குத்தான் நான் பயன்படுத்துகிறேன் என்பது என் எழுத்தை ஆழ்ந்து வாசிப்பவர்களுக்குப் புரியும்.

என்னளவில் சிறுகதை எல்லையற்ற பிரபஞ்சத்தின் காலகாலமான ஞாபக நதி. அதை அதன் போக்கில் பாய விடுவதே எனக்குப் பிடிக்கும்.

லோகேஷ் ரகுராமன்: என்னுடைய முதல் சிறுகதை ‘திருஷ்டி’. அது ஒரு அறிவியல் மிகுபுனைவு சிறுகதை. 2019 சொல்வனம் மே மாத இதழில் வெளிவந்தது. அதன் பின் தொடர்ந்து சொல்வனத்தில் எழுதியிருக்கிறேன். எனக்குக் கவிதை எழுத வராது. அதன் வெளிப்பாட்டு வடிவம் எனக்கு கைவராது என்பதாலேயே நான் முயற்சி செய்யவில்லை. நாவலுக்கு ஒரு விரிவு தேவைப்படுகிறது. அது நிகழும் புலமோ வாழ்க்கையோ விஸ்தீரணமானது. அப்படிப்பட்ட பரந்த அனுபவம் என் குறைபட்ட வாழ்வில் இல்லை. (வாசிப்பு பழக்கத்தில் அதனை அடைந்து விடமுடியும்) நான் வேண்டுவது எல்லாம் ஒரு உச்ச கணம். பாலையில் அலைந்து திரிந்தவன் நாவில் படும் மேகங்கள் இல்லாத அவ்வான்வெளியிலிருந்து சொட்டும் அரிதினும் அரிதான அந்த ஒற்றை நீர் சொட்டு. அந்த ஒற்றை சொட்டு நீர் எங்கேயிருந்து வீழ்ந்திருக்கும் என்று வானைத் துழாவ ஆரம்பித்தால் கிடைப்பது என்ன? அந்த ஒற்றை சொட்டு நீரை சரியாக நான் வெளிப்படுத்திவிட்டால் போதுமென்றிருக்கும் என்று நினைக்கிறேன். அதுவன்றி கடல் எனக்குப் பெரிதில்லை. அதனால் சிறுகதையையே நான் வந்தடைகிறேன்.

சிவபிரசாத் ரங்கசாமி: தொடர் வாசிப்பு என்னை எழுதத் தூண்டியது. நான் எழுதும் சிறுகதைகளை எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் வாசிக்கக் கொடுப்பேன். அதில் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டி மீண்டும் எழுதச் சொல்வார். அவர் ஏற்றுக் கொண்ட கதைகளைவிட நிராகரித்த கதைகளே ஏராளம் எனலாம். சிறுகதை வடிவம் நமக்குச் சரியாகப் பிடிபடவில்லையோ என்று சோர்ந்திருந்த நேரத்தில் ஏற்காட்டில் பேராசிரியரும் கன்னட மொழிபெயர்ப்பாளருமான நஞ்சுண்டன் சிறுகதைக்காக இரண்டு நாட்கள் செம்மையாக்க முகாம் நடத்தினார். முகாமில் என்னைப் போன்று பத்து நபர்கள் கலந்து கொண்டார்கள். நாங்கள் ஏற்கனவே எழுதி அனுப்பிய கதைகளை ராஜேந்திர சோழன், பெருமாள் முருகன், பாவண்ணன், தேவி பாரதி முதலான எழுத்தாளர்களின் மேற்பார்வையில் வாசித்து விவாதித்து செம்மையாக்கப்பட்டது. அந்த முகாமிற்காக எழுதப்பட்ட ‘ஓடிப் போனவள்’ என்ற சிறுகதை 2010-இல் உயிரெழுத்து இதழில் வெளிவந்தது. இதுவே முதலில் வெளிவந்த என் கதை. மூத்த எழுத்தாளர் ராஜேந்திர சோழன் பாராட்டியதை இக்கதைக்கான அங்கீகாரமாய் நினைக்கிறேன்.

நூற்றாண்டு பாரம்பரியமிக்க தமிழ் சிறுகதை பரப்பின் பெருமிதமும் எல்லாவிதமான பரிசோதனைகளுக்கும் இடமளிக்கும் சாகசத் தன்மையும் என்னை ஈர்த்ததால் சிறுகதை வடிவத்தைத் தேர்வு செய்தேன். நம்முடைய முன்னோடிகள் சிறுகதை என்ற வடிவத்தில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். அந்த உச்சங்களைக் கடந்து போக ஆசை தான் என்றாலும் குறைந்தபட்சம் சமன் செய்யும் நம்பிக்கையோடு இயங்குவதே என்னளவில் சிறுகதைக்கான எல்லையாக நினைக்கிறேன்.

துரை. அறிவழகன்: 1987-இல் கல்லூரி இரண்டாம் ஆண்டில், தாய் இதழில் வெளிவந்த ‘ஸ்நேகிதி’ தான் எனது முதல் சிறுகதை; ‘88-இல் கோவை ஞானியின் நிகழ் இதழில் எனது முதல் கவிதை வெளிவந்தது; தொடர்ந்து பா. செயப்பிரகாசத்தை ஆசிரியராகக் கொண்ட மன ஓசை இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை என எழுத்துப் பயணம். 90-களின் ஆரம்பத்தில் கோணங்கியின் நட்பு முற்போக்கு முகாமிலிருந்து, நவீனத்துவ படைப்பு நோக்கி என்னை நகர்த்தியது. தொடர்ந்து சுருதி, நிழல், மீள்சிறகு என சிற்றிதழ் செயல்பாடு.

எனது அப்பாவின் நிலம் பனை சூழ் கிராமம்; அம்மாவின் நிலம் இலங்கையின் தேயிலை வாசம் சுமந்த கொழும்பு. பனை வாசனை கொண்ட அப்பத்தாவின் கதை உலகிலிருந்தும், யாழ்ப்பாணத்து போயிலை வாசனை கொண்ட அம்மாச்சியின் கதை உலகிலிருந்தும் தான் எனக்குள் சிறுகதை வடிவத்தின் மீதான வசீகரம் பிறந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அபூர்வமும், அற்புதமும் தொட முடியாத தொலை தூர நட்சத்திரமாக ஒளிர்ந்து எழுத்து மனநிலையை ஈர்க்கிறது; நெருங்க, நெருங்க. பிடிபடாத எல்லையற்ற வெளியில் மறைந்து நின்று வசீகரம் காட்டும் அந்த நட்சத்திரத்தின் வடிவம் நோக்கிய சிறுகதையின் பயணம் காலம் காலமாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மொழி, மதம், இனம், தேசம் என எல்லா எல்லைகளையும் தாண்டி பயணிப்பது சிறுகதை. குழந்தைகளின் மன வெளி நிலக்காட்சியில் சூரியனும், நிலவும், பனியும், புல்லும், பட்டாம்பூச்சிகளும் பறக்கும் எல்லையற்ற எல்லை கொண்டது சிறுகதை வடிவம் என்பதே எனது எண்ணம்.

செந்தில் ஜெகன்நாதன்: ‘அன்பின் நிழல்’ என்ற என் முதல் சிறுகதை 2018 ஜூன் மாதம் ஆனந்த விகடனில் வெளிவந்தது. மனித வாழ்க்கையை முழுமையடையச் செய்வதும், நாம் யாரென நமக்கே அடையாளம் காட்டுவதும் சில நுட்பமான தருணங்களே. வாழ்க்கைக்கான தரிசனமாக இருந்த அத்தகைய கணங்களை எழுத வேண்டுமென நினைத்ததன் விளைவே சிறுகதைகளை எழுத உந்தியது. பெரு வாழ்க்கையின் ஒரு துண்டை அல்லது ஒரு துளியை உள்ளங்கையில் வைத்துக் காட்டுவதற்குச் சிறுகதை சரியான வடிவமாகப் பட்டது. ஒரு பெருவாழ்வை அல்லது குணாதிசயத்தை விரித்து எழுதுவதில் இருக்கும் எல்லைதான். எளிமையாகச் சொல்வதானால் சிறுகதை வடிவத்தில், வாழ்வின் அகலத்தை எழுத இயலாது ஆனால் ஆழத்தை எழுத முடியும்!

மயிலன் ஜி சின்னப்பன்: ப்ளாகரில் 2009 முதல் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். அவ்வப்போது இதழ்களுக்கு அனுப்பி வைப்பதுண்டு; அனுப்புவதோடு சரி. அச்சில் பிரசுரமான முதல் சிறுகதை ஆனந்த விகடனில் 2019-இல் வெளிவந்த ‘இடர்’ தான். அதை என்னுடைய முதல் சிறுகதையாக எடுத்துகொண்டால் இன்றுவரை பத்தொன்பது சிறுகதைகள் கோப்பில் இருக்கின்றன.

வடிவத்தை வலிந்து தேர்ந்தெடுக்கவில்லை. கவிதைகளில் எனக்கு குழப்பம் இருக்கிறது. மொழிவளத்திற்காக மட்டும்தான் கவிதைகளை வாசிக்கிறேன். மற்றபடி, முழுக்கவே என்னை உரைநடை ஆசாமியாகத்தான் ஏற்கமுடிகிறது. சிறுகதை எழுதுவதில் இருக்கும் லாவகம் பிடித்திருந்தது. இரண்டாயிரம் வார்த்தைகளுக்குள் ஒரு பூரணத்தை எட்டமுடிகிற நிறைவு. என்னுடைய முதல் நாவலுமே ஒரு சிறுகதையாக எழுத நினைத்த ஒன்றுதான். கொஞ்சம் பெரிய களத்தில் அதை நிறுத்தினால் அதற்கான நியாயத்தைச் சரியாக செய்யமுடியும் என்று தோன்றியதால் அது நாவலாக திரிந்தது. இப்போதுமே இன்னொரு சிறுகதை முயற்சிதான் என்னை அடுத்த நாவலுக்கு கூட்டிச்செல்லும் என்று நம்புகிறேன்.

எல்லை என்று எதுவும் இல்லாதிருப்பதால்தான் அதனை மிகச் சிறந்த கலை வடிவமாக என்னால் பார்க்க முடிகிறது. எல்லை எதுவும் இருப்பதாக தோன்றினால் அது எழுத்தாளனுடையதேயன்றி இவ்வடிவத்தின் எல்லை அல்ல.

விஜய ராவணன்: பேராசியர் இராமச்சந்திரன் அய்யாவை ஊரில் சந்தித்த போது “பரிசு கிடைச்சுருக்கே, உன் கதைகள் எதுவும் இலக்கியப் பத்திரிக்கையில வந்திருக்குதா??” என்று கேட்டார்.

“இல்லை…” என்றேன்.

அதுவரை இலக்கியப் பத்திரிக்கைகள் பற்றியோ இணைய இதழ்கள் பற்றியோ நான் அறிந்திருக்கவில்லை. நாகர்கோவிலில் இருந்து வெளிவரும் திணை இலக்கிய இதழின் மின்னஞ்சலைக் கொடுத்து அனுப்பச் சொன்னார்.

திணை இதழில் என் ‘தேரோட்டம்’ சிறுகதை செப்டம்பர் 2018-இல் வெளிவந்த பின்தான் இலக்கிய இதழ்கள் ஒவ்வொன்றாக எனக்கு அறிமுகமானது. அதன்பின் எல்லா இலக்கிய இதழ்களையும் தேடித்தேடி வாசிக்கத் தொடங்கினேன். கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெரும்பாலான இலக்கிய இதழ்கள் கிடைக்கும்

எந்தக் குடுவைக்குள்ளும் தன்னைப் பொருத்திக்கொள்ளும் சிறுகதை வடிவத்தின் நெகிழ்வுத்தன்மை தான் என்னை ஈர்ப்பது. இலக்கியப் பெருவெடிப்பில் சமீபத்தில் தோன்றிய சிறுகதை வடிவின் பரந்தவெளி எல்லைகள் அற்றது. ‘இதுதான் நான்’ என்று சொல்லும்படி தனக்கென்று ஒரு உருவம் அது வைத்துக்கொள்வதில்லை. வெறும் மாயப்புன்னகை மட்டும்தான். ஒரு ஆரம்பக்கட்ட எழுத்தாளனை ஈர்ப்பதும் அதுவே. ஆனால் அந்தப் புன்னகையின் ஆழத்தில் தான் கதைசொல்லலின் எண்ணற்ற சாத்தியக்கூறுகள் மறைந்திருக்கின்றன.

பிரமிளா பிரதீபன்: ஆரம்பத்தில் கவிதைகள் எழுதுவதிலேயே அதிக நாட்டம் கொண்டிருந்தேன். அவ்வப்போது சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதினேன். ஆனால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் அல்லது வாசகர்களின் நேர்மறையான விமர்சனங்களும் எனது சிறுகதைகளுக்கு கிடைத்ததான வரவேற்பும் எனக்கான வெளிப்பாட்டு வடிவமொன்றை தீர்மானித்துக்கொள்ள வேண்டுமென்ற உந்துதலை தந்திருந்தது. அவ்வடிவம் சிறுகதையாக அமையும் பட்சத்தில் எனது அகவுணர்வுகளை அல்லது நான் வெளி உலகிற்கு சொல்ல எத்தனிப்பவைகளை இலகுவாக சாத்தியமாக்கிக்கொள்ள முடியுமென்பதை அப்போது உணர்ந்திருந்தேன்.

சொல்லப்போனால் வாழ்வின் அழுத்தமான பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் ஒரு இலக்கிய வடிவமெனவே சிறுகதைகளை கருதமுடிகிறது. சமூகத்தை அல்லது ஒரு தனிமனிதனின் அகப்போக்கை ஊடறுத்து நோக்குதலுக்கான வாய்ப்பு சிறுகதை எழுத முயற்சிக்கும் போதே வாய்த்திருப்பதாக தோன்றுகிறது.

தனியே நடக்கும் போதில், பயணிக்கும் போதில், யாரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் கூட நான் யாருமற்ற ஒரு வெளிக்குள் சஞ்சரித்தபடி என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறேன்… சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்… வாதாடிக்கொண்டிருக்கிறேன் என்பதெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. குறிப்பாக கல்வியின் நிமித்தமும் தொழிலின் நிமித்தமும் ஊரைத்தாண்டி வந்த பிறகான காலங்களில் சில ஞாபகங்களுக்குள் ஊர்ந்தபடியேதான் எப்போதுமிருந்தேன். அந்த நினைவுகளில் என் சார் மக்களின் அடிமை வாழ்க்கையின் வலி மிகுதியாகவிருந்ததால் அதனை வெளிப்படுத்தும் வாய்ப்பொன்றிற்காகவும் காத்திருந்தேன்.

காலம் கடந்தவைகளாக மாறிய நிலையிலும் தேங்கியே கிடந்த ஒருசில நினைவுகளை புத்துருவாக்கம் செய்யும் விசித்திரமாக சிறுகதை எனும் வெளிப்பாட்டு வடிவம் எனக்குள் அமைந்துவிட்ட நிலையறிந்து அதனை பெரும் வாய்ப்பாக கருதி மிக்க உவகையுடன் பயன்படுத்தத் தொடங்கியிருந்தேன். அதாவது தொடர்ச்சியாக எழுதினேன்.

சிறுகதை வடிவத்தின் எல்லைகளாக எதனை கருத முடியும்! பக்க அளவையா? சிறுகதை குறித்த உலகின் ஒருமித்த பார்வையையா? அன்றேல் கற்பனையும் அனுபவங்களும் இணைந்த புனைவு எனும் கருதுகோளையா?

ஓவ்வொரு சிறுகதை ஆசிரியரும் தனக்கானதொரு தனித்துவமான முறையினை அமைத்துக்கொண்டுதான் படைப்புகளை தருகிறார்கள். அவர்கள் சிறுகதைக்கான எல்லைகளை தீர்மானித்திருப்பார்கள் என்பதை ஏற்பதற்கில்லை. நிஜத்தில் சிறுகதை வடிவத்தின் எல்லை இதுதானென வரையறைக்குட்படுத்துதல் சாத்தியப்பாடற்றதென்றே எண்ணுகிறேன். அப்படியே ஒரு எல்லையினை வகுத்துக்கொள்ள விரும்பினாலும் வாசகனின் விருப்பத்தினையும் இயல்பையும் தேடுதலையுமே அதன் எல்லைகளாக கருதிக்கொள்ள முடியும்.

மேலையுலகில் வளர்ச்சிப்பெறத் தொடங்கிய மார்க்சியவாதமானது நவீன சிறுகதைப்புனைவின் வரையறைகளை புதிய பாய்ச்சலுடன் பன்முகப்படுத்தி தந்துள்ளது என்றே கருத முடிகிறது. சிறுகதையை வாழ்க்கையிலிருந்து சிதறிய ஒரு துண்டாக மாத்திரம் நோக்காது சமூக உறவுகளின் அலகாகவும் செறிவாகவும் ஊடுருவலாகவும் தரிசிக்கும் புலக்காட்சியை மார்க்சிய கருத்தியல் வழங்கியுள்ளது.

இதன்படி சிறுகதைகள் கடந்த நூறு வருடங்களுக்குள் எராளமான மாற்றங்களை அடைந்திருப்பதையும் நவீன கதைசொல்லல் முறைகளுடன் பல்வேறு பரிணாமங்களை கடந்து கொண்டிருப்பதையும் வெகுவாக உணரும் நான் கதைகளின் ஆரம்பம் நடுப்பகுதி முடிவு எனும் கட்டுமான உருமாற்றங்களுடன் கூட கதைகள் அமைக்கப்படுவதை அவதானிக்கிறேன். தொடரும் இந்த வேகமான சிதறல்களுடன் வெளிவந்துகொண்டிருக்கும் இன்றைய சிறுகதையாளர்களின் படைப்புகளுடன் இணைத்து யோசித்துப் பார்க்கும் போது நிச்சயமாய் ஒரு சிறுகதையின் எல்லையினை வாசகனே தீர்மானிக்கிறான். அல்லது படைப்பாளனும் வாசகனும் அரூபமாக சந்தித்துக்கொள்ளும் ஒரு புள்ளியே அவ்வெல்லையைத் தீர்மானிக்கிறது எனலாம்.

 

  1. ஒரு சிறுகதை மனதில் உருவாகும் கணத்திலும் அது முழுமை பெறும் கணத்திலும் இருக்கும் உங்கள் மனநிலை என்பது என்ன? எங்களுக்குச் சொல்ல முடியுமா?

காளி பிரசாத்: இது ஒரு சிறுகதை தருணம் என்று மனதில் தோன்றும் கணம்தான் முக்கியமானது. அதை எழுத்தில் வடிவமாக மாற்றும் போது அதில் நம் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று அதில் உருவாகிறது. அதுவே சிறுகதையில் எழுத்தாளனுக்கு ஈர்ப்பான ஒன்று என்று நினைக்கிறேன்.

சுஷில் குமார்: முதல் சில சிறுகதைகளைப் பொருத்தமட்டில் சிறுகதை மனதில் உருவான தருணம் தயக்கம், ஒரு வித பதற்றம், வடிவம், மொழி சார்ந்த குழப்பங்கள் என ஒரு கலவையாக இருந்தது. கதைகள் முழுமை பெற்றபோது சிறிது நிறைவும் அதே நேரத்தில் கதையின் வெற்றி குறித்த எதிர்பார்ப்பும் இருந்தது. தற்போதைய கதைகள் உருவாகும் கணம் ஒரு தியானம் போல சில நாட்களுக்கு நீண்டு செல்கிறது. கதை முழுமை அடைந்ததும் உற்சாகமும் நிறைவும் சில நாட்களுக்கு நீடிக்கிறது. அடுத்தது என்ன என்கிற விழைவு பின் மேலோங்குகிறது.

செந்தில் குமார்: ஒரு காட்சி, வாழ்வின் ஒரு துளி மனதில் கருவாக இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. சட்டென்று அது கதையாக உருவாகும் அற்புதத்தை மறுபடி மறுபடி அனுபவிக்கவே தொடர்ந்து எழுத முயல்கிறேன். சமயங்களில் அவை வாய்ப்பதுண்டு. சில நேரங்களில் முட்டி நிற்பதுமுண்டு.

மௌனன் யாத்ரிகா: கதாபாத்திரமாகவோ அல்லது ஒரு காட்சியாகவோ அல்லது ஒரு உரையாடலாகவோ ஒரு கதைக்கான விதை மனதில் விழுவதை நான் உணர்கிறேன். அதை ஒரு சிறுகதையாக உருமாற்றுவதற்கு ஏதாவது ஒரு நிகழ்வோ அல்லது நினைவோ வாய்ப்பாக அமையும். அந்த வாய்ப்பைத் தக்க நேரத்தில் பயன்படுத்திக்கொண்டு ஒரு சிறுகதையாக மாற்றிவிட்டால் பெரிதாய் எதையோ சாதித்துவிட்டதைப்போல் இருக்கும். கவிதையில் இந்த மனநிலையைத் தவறவிடும் நான், கதையில் அனுபவிக்கிறேன்.

லோகேஷ் ரகுராமன்: ஒரு கதையின் கரு நம் மனதில் தொற்றும்போது இருக்கும் தொந்தரவு விவரிக்க இயலாதது. இதை எப்படியாவது கதையாக்கி விடலாமா? எதனையாவது கருவென்று சொல்லிக்கொண்டு நாமே திரிகிறோமோ என்று தோன்றி அலைக்கழிக்கும். மனம் அதற்கான சான்றுகளை நமது அன்றாடங்களில் தேடப்பார்க்கும். ஏதேனும் ஒரு நிகழ்வையோ செய்தியையோ அக்கருவைக் கொண்டு தொகுத்துப் பார்க்கவோ விளக்கிப் பார்க்கவோ முயற்சிக்கும். அம்முயற்சியில் வெற்றி பெற்றால் அக்கருவுக்கு நல்ல படிமம் கிடைத்து கதையின் துவக்கம் புரிபடும். தோற்றால் மீண்டும் அதே அலைக்கழிவில் தொடரவேண்டியதாக இருக்கும். கதை வளர்ந்து முழுமைபெறும் கணத்தில் சரியாக நம்மை வெளிப்படுத்திவிட்டோம் என்கிற ஆசுவாசம் இருக்கும்.

சிவபிரசாத் ரங்கசாமி: நல்ல கதைகளை வாசிக்கும்போது ஏற்படும் மனத் தத்தளிப்பு எனக்குள் பெரிய மலைப்பையும் தாழ்வுணர்ச்சியை உண்டாக்கிவிடுகிறது. அதிலிருந்து விடுபடும் அவஸ்தையில் அந்தக் கதைக்கு நிகரான அல்லது எதிர்த்தரப்பிலிருந்து எழுதிப் பார்க்கும் பரபரப்பு தான் எனக்குள் ஒரு சிறுகதை உருவாவதற்கானப் புள்ளி, ஆனால் அது இறுதி வடிவம் பெறும்போது நான் எழுத நினைத்ததற்கு முற்றிலும் மாறான ஒன்றாகவே வருகிறது. கதைக்குள் நிகழும் சிறு சம்பவம் அல்லது ஒரு கதாபாத்திரம் என் நோக்கத்தை முற்றிலுமாகச் சிதறடித்து தனக்கான வெளியை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதை அனுமதிப்பதன் மூலம் என் கதைக்கான புதிய அனுபவத்தை உருவாக்க முயல்கிறேன். இது சரியான அணுகுமுறையா எனத் தெரியவில்லை. ஆனாலும் படைப்பின் தரம் தான் விவாதிக்கப்படுமே தவிர படைப்பாளனின் அணுகுமுறையல்ல என நம்புகிறேன்.

துரை. அறிவழகன்: சாகச விருப்பமும், புதுமை மீதான தீராத வசீகரமும் கொண்ட குழந்தைகளின் மன உலகின் நிகழ்கணத்தை ஒத்தது படைப்பு உருவாகும் கணம். புதுமை மற்றும் சாகச எண்ணம் உருக்கொண்ட கணத்தில் இருந்து, அதை அடைவது வரையிலான மின்னதிர்வைக் கொண்டது ஒரு சிறுகதை முழுமை பெறுவது வரையிலான கணம். சிறுகதை முழுமை பெற்ற பிறகு ஒரு பேரமைதி; நடுக்கடலின் அலைகளற்ற தன்மை; நதியின் சில்லிப்பு. அடுத்த கதையின் துவக்கப் புள்ளி பிடிபட்டவுடன் மீண்டும் மின்னதிர்வு உருக்கொண்டுவிடும். இது ஒரு சுழற்சிப் பயணம்.

செந்தில் ஜெகன்நாதன்: நம்மை பாதிக்கிற ஒரு சம்பவம், ஒரு சொல், ஒரு முகம் எது வேண்டுமானாலும் கதைக்கருவாக சூல் கொள்ளக்கூடும். மனதைவிட்டு நீங்காத வீரியமுள்ள கரு தன்னைத்தானே கதையாய் உருவகித்துக்கொண்டு நெடு நெடுவென வளரும். நம்முடைய வேலை சிந்தனையை எப்போதும் அதைச் சுற்றி வரச்செய்வதுதான். நம்மை பாதிக்காத சம்பவங்களில் இருந்து நிச்சயமாக ஒரு நல்ல கதை எழுத இயலாது. எழுதுகின்ற ஒவ்வொரு கணமும் உன்னதமானது.

எழுதுவது என்பது வார்த்தைகளுக்கிடையிலும் சிந்தனைக்கிடையிலும் தவமிருக்கும் தருணம் அல்லவா? எழுதி முடிக்கும்வரை பிரசவ வேதனை, எழுதி முடித்த கதையில் குழந்தையின் புன்னகை தரும் நிம்மதி!

மயிலன் ஜி சின்னப்பன்: எல்லா கதைகளிலும் அப்படி நடப்பதில்லை. சமயங்களில் எழுத ஆரம்பித்ததும் கதை வேறொரு புதிய திசையில் தன்னை வளர்த்துக்கொள்ளும். இறுதி வடிவம் வேறெங்கோ போய் நிற்கும்போது சமயங்களில் அதைத் தோல்வியாகக் கூட நினைத்திருக்கிறேன். நினைத்ததைவிட சிறுகதை சிறப்பாக வந்திருந்தத் தருணங்களிலும்கூட அப்படித்தான் தோன்றியிருக்கிறது; இந்த இறுதி வடிவத்தை ஏன் முன்னரே சிந்திக்க வரவில்லை என்றுதான் அங்கு கேள்வி நிற்கும். ஆனால் இப்படி அனிச்சையாக நிகழும் கதைகள்தான் அதிகம் வரவேற்கப்பட்டுள்ளன. இங்கு எதையும் திணித்துவிட முடியாது என்பதாகவே இதை எடுத்துக்கொள்கிறேன்.

விஜய ராவணன்: பல நாட்களாய் அழுது அடம்பிடித்து கேட்ட விளையாட்டுப் பொருள் எதிர்பாரா வேளையில் கையில் கிடைத்ததும் ஏற்படும் துள்ளல் தான் ஒரு சிறுகதை உதிக்கும் தருணம். நாட்கணக்கில் மனதில் சுமந்திருந்த கரு எழுத்துரு அடையும் தருணத்தில் சிறகுகள் முளைத்துவிடும். பெரும் பாரத்தை இறக்கி வைத்த நிம்மதி. அடுத்த சில தினங்களுக்கான ஆழ்ந்த நித்திரைக்கு அந்த எண்ணம்தான் ஆதாரம். அதேநேரம் ஒரு படைப்பை எழுதிமுடித்ததும் மனதில் உண்டாகும் வெற்றிடம் கொஞ்சம் கொஞ்சமாய் மேலெழுந்து மெல்ல அழுத்தத் தொடங்கும். இன்னொரு கதைக்கரு அவ்வெற்றிடத்தை நிரப்பும்வரை…

பிரமிளா பிரதீபன்: இம்மனநிலை பற்றிய விளக்கத்தை பகிர்ந்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு நன்றி கூற வேண்டும். அது ஒரு அலாதியான அனுபவம். என் அகத்திற்குள் மாத்திரமாய் நான் வைத்துக்கொண்டாடும் ஒரு பூரண உணர்வு.

குறிப்பிட்ட ஒரு கதைக்கான புள்ளி மனதிற்குள் உருவாகும் சந்தர்ப்பத்தை சரியாகக் கணித்து சுட்டலென்பது கடினம். அது நடுசாமத்தின் அடர் இருள் பொழுதின் மங்கிய வடிவமாக அமைதலும் சாத்தியம்தான். அவ்வாறு தோன்றும் அக்கணங்களில் கையில் கிடைக்குமொரு தாளில் எழுதிப்பதித்துகொண்டு அதனை சிறுகதையாக்க முயற்சிக்கும் பொழுதுகளில்தான் நான் விசித்திரமாக செயற்பட ஆரம்பிக்கிறேன்.

நினைவுகளை கற்பனைகளுடன் கலந்து மீள் உருவாக்கம் செய்தலும் அதனை சார்ந்தே குறிப்பிட்ட சில நாட்களுக்கு சுற்றிச் சுற்றி சிந்தித்து சோர்ந்து போவதும் அரிய அனுபவமாக இருப்பது அதிசயமில்லைதானே!

சில வேளைகளில் நினைவுகளின் அல்லது அனுபவங்களின் இடைவெளிகளுக்குள் கற்பனையை பொருத்தமானதாக திணிப்பதனூடாகதான் நேர்த்தியானதொரு படைப்பினை அணுக முடியுமோவெனும் சந்தேகத்தில் எல்லையற்ற விஸ்தரிப்புடன் குறிப்பிட்ட ஒரு சிறுகதைக்குள் பிரவேசிக்கத் தொடங்குகிறேன். நிழலாய் சுற்றிச் சுழன்று அக்கதைக்குள் ஊடுருவியிருக்கும் போது அதன் வெளிபாடு நிஜத்தை விட அதிகரித்த தோற்றத்தை உண்டுபண்ணுகிறது அல்லது முற்றிலும் வேறுபட்ட ஒரு மாற்றத்தினையும் கொண்டுவந்து சேர்க்கிறது.

ஒரு சிறுகதையை ஆரம்பிக்க மட்டுமே என்னால் முடிகிறது. அதன் பிறகாய் அக்கதையின் வழியில் நான் பயணிக்கிறேனே தவிர என் தேவைக்கேற்றாற் போல கதையை மாற்ற முயற்சித்தல் அனேக பொழுதுகளில் தோல்வியையே தருகிறது.

எழுத ஆரம்பித்த காலப்பகுதிகளில் இத்தகைய அனுபவங்களை நான் உணரவில்லை. எனது வாசிப்பின் விரிவும் ஓரளவான முதிர்ச்சியின் வெளிப்பாடுமே இத்தகைய அகபோராட்டங்களுடன் சிறுகதைக்குள் வாழ்தல் எனும் நிலையை எய்த காரணமாயிருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு கதைக்குள் நான் உலாவும் காலம் இதுதானென எளிதில் என்னால் நிர்ணயிக்க முடிவதில்லை. ஆனால் கதையை எனது சிறகுகளாக உருவாக்கிக் கொண்டு கதாபாத்திரங்களாகவும் கதைசொல்லியாகவும் மாத்திரமே அப்போதைய பொழுதுகளை நான் எதிர்கொள்கிறேன். அச்சந்தர்ப்பங்களிலான என் நிஜவாழ்வு சப்தமற்ற நிஷப்தத்துடன் அர்த்தமற்று நகர்கிறது. ஏராளமான தடுமாற்றங்களை ஏற்படுத்துகிறது. அத்தடுமாற்றங்கள் பிரச்சனைகளாக உருமாறி என் நடைமுறைச்சூழலை பாதிக்கவும் செய்கிறது. எனினும் இதையெல்லாம் தாண்டி கதையோட்டத்தின் ஒரு பாகமாய் வாழ்ந்து அதன் முழுமையை எய்தி மீளும் அக்கணத்தில் நானடையும் திருப்திக்கு அளவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 

  1. உங்களுக்கு இலக்கியம் என்பது என்ன? எதற்காக எழுதுகிறீர்கள்?

காளி பிரசாத்: இலக்கியம் என்பது ஒருவருடைய விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு என்றும் திறந்த மனத்துடன் அணுகி அறிய வேண்டிய ஒன்று. வரலாறு, தத்துவம், மரபு, உளவியல் என தனித்தனியாக ஒன்றை ஆராய்ந்து அதனூடாக வாழ்க்கையை விளங்கிக்கொள்ள முயல்பவர்கள் உண்டு. இலக்கியம் என்பது இவையனைத்தும் கலந்த ஒன்று.

நான் எழுதுவது, இந்தப் பின்னணியில் என்னை நான் அறிந்துகொள்ளவே.

சுஷில் குமார்: எனக்கே எனக்கென, மேலெழுந்து, பின் கீழ் விழுந்து, பின் மேலெழும் என் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்க, தொடர்ந்த உள்விசாரணையில் என்னை நீடித்திருக்கச் செய்ய, அடுத்தடுத்த படிகளுக்கு என்னை உயர்த்திச் செல்ல ஊக்கமளிக்கிற ஒரு தனி உலகம்தான் இலக்கியம் எனக்கு. ஒட்டுமொத்த இலக்கியமும் என் கூடவே கைபிடித்து நடந்துவரும் ஒரு நண்பன், அல்லது ஒரு மனசாட்சி என்றுதான் தோன்றுகிறது.

கேள்வியின் இரண்டாம் பகுதியை ‘தற்போது எதற்காக எழுதுகிறேன்’ என்று மாற்றி என்னை நானே கேட்கிறேன். ஒவ்வொரு சிறுகதையும் எனக்கு நானே விடுத்துக் கொள்கிற ஒரு சவால் போலவிருக்கிறது. ஓர் அனுபவத்தை, பார்த்த அல்லது கேட்ட ஒரு வாழ்வை எனது மொழியில் இன்னொருவருக்கு நிகழ்த்திக் காட்ட முடிகிறதா? அது அவரிடம் கேள்விகளை எழுப்புகிறதா, அவருக்கு தன்னைப் பற்றிய ஏதேனும் ஒரு கூடுதல் புரிதலைக் கொடுக்கிறதா, கதாபாத்திரத்தின் இடத்தில் அவரால் தன்னை நிறுத்திப் பார்க்க முடிகிறதா? என்கிற சவால்களை எனது சிறுகதைகளில் பரிட்சித்துப் பார்க்கிறேன்.

செந்தில் குமார்: இலக்கியம், நான் உபாசனை செய்யும் தெய்வம். எந்த சபையிலும் என்னை நிமிர்வாக உணரவைப்பது இலக்கியமே. படைப்பு எழும் கணங்களின் பரவசத்தை அடையவே எழுதுகிறேன். என்னிடம் சொல்ல சில வாழ்வும் மனிதர்களும் உண்டென்பதே எழுதுவதின் நோக்கம்.

மௌனன் யாத்ரிகா: எனக்கு இலக்கியம் என்பது பாட்டன் சொத்து. வைத்து அனுபவிப்பதும், வரும் தலைமுறைக்கு குறைவின்றி கைமாற்றிக் கொடுப்பதும் என் கடமையென்று கருதுகிறேன்.

எழுதுவதற்கு என்னிடம் ஒரு காரணமுமில்லை. என் மொழியும் வாழ்க்கையும் எழுதுவதன் மூலம் வளப்படுகிறது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்வேன். எல்லா சந்தர்ப்பத்திலும் எழுதும் மனநிலை எனக்கு வாய்க்கும். சில சமயம் எதுவுமே தோன்றாது. ஏன் எழுதுகிறேன் என்பதற்கு ‘எழுதத் தோன்றுகிறது எழுதுகிறேன்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

லோகேஷ் ரகுராமன்: என்னை முழுதுமாக ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படுத்தக்கூடிய ஊடகம் என்பதாகவே நான் சொல்லுவேன். அதற்காகவே எழுதுகிறேன். அன்றாடங்களிலிருந்து துண்டித்துக்கொண்டு ஒரு நிகர் வாழ்க்கையையோ தருணத்தையோ கலையிலேற்றி ஆழமாகச் சொல்லிவிட்டால் போதும்.

சிவபிரசாத் ரங்கசாமி: கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு வாழ்வின் சிக்கலான தருணங்களில் நம்பிக்கையோடு பற்றிக் கொள்ளும் ஒன்றாகத் தான் இலக்கியம் இருக்கிறது. என்னுடைய கிராமத்தையும் அதில் வசிக்கிற மனிதர்களையும் நான் நேசிக்கிறேன். விவசாயக் கூலிகளாகவும் தனியார் மருத்துவக் கல்லூரியின் கடைநிலை ஊழியர்களாகவும் பணி செய்யும் அந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை எனக்குத் தெரிந்த மொழியில் பதிவுசெய்ய நினைக்கிறேன்.

துரை. அறிவழகன்: 2004-இல் மீள் சிறகு முதல் இதழுக்குப் பின் ஒரு நீண்ட நெருக்கடி மனநிலையோடு மலேசியா வாசம். பின்னர் 2018 இறுதியில் brain stroke காரணமாக நாடு திரும்பிய பின் மீண்டும் வாசிப்பும், எழுத்தும். எனக்குள் இலக்கியம் என்பது என்னை அடையாளப் படுத்திக் கொள்வதற்கான உணர்வு தளத்தின் வெளிப்பாடு. ஸ்ரோக் வருவதற்கு முன்னர் கல்லூரி நாட்களில் எழுத்து எனக்கு வசீகரமும், கிரீடமும். பாலகுமாரன், சுஜாதா எழுத்துக்களைப் படிக்கும் வாசக மனநிலையைவிட புதுமைப்பித்தன், மௌனி, அசோகமித்திரன், வண்ணநிலவன் எழுத்துக்களை வாசிப்பவன் என்ற கொம்பு சீவப்பட்ட மனப்பரப்பு எனக்குள் இருந்தது. வாசுதேவன் நாயர், பஷீர், ஓ.வி. விஜயன், எம். கோவிந்தன் ஆகியோர்களைப் பற்றிப் பேசுவதில் ஒரு மேதமை மாயத் தோற்றம் என்னிடம் இருந்தது. அக்காலகட்டத்து எழுத்து முயற்சியில் இந்த உணர்வே விரவி நின்றது. அந்த எழுத்துக்கள் என்னை தனித்துவமிக்கவனாகக் காட்ட எழுதப்பட்டவை. இப்பொழுது ஸ்ரோக் பாதிப்புக்கும் பின் இந்த இரண்டு ஆண்டு கால உணர்வும், மன நிலையும் வேறானவை. ‘ஜீன் பால் சார்த்தர் சொன்னது போல “எல்லாவற்றையும் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்துப் பார்க்க வேண்டும்” என்பதாகவே எனது மனநிலை உள்ளது.

குழந்தைக் கண்களால் அறியப்படும் ரகசியங்களின் ரேகைகள், பச்சை பனை ஓலைப்பட்டை நரம்புகளில் ஒட்டியிருக்கும் சாமைகளின் அசைவாக அடையாளம் பெறும் நோக்கில் எழுதப்படுபவை எனது எழுத்துக்கள்.

எனக்குள் அலையோடி நிற்கும், குழந்தைமை நிலத்தின் வரைபடத்தை வரைவதாகவும், குழந்தைகளின் அக உலகு மலர்வுக்கான களமாகவும் இன்றைய எனது எழுத்துக்கள் பயணிப்பதாக நம்புகிறேன். “பால்ய நினைவோட்டத்தையும், குழந்தைமை அக உலகையும் இழக்காதவன் என என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் உந்துதல்தான் என்னை எழுத வைக்கிறது; இலக்கியமும், எழுத்துமே எனது அடையாளம் என நினைக்கிறேன்.

செந்தில் ஜெகன்நாதன்: மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானதாக இலக்கியத்தைச் சொல்வேன். ஒரே வாழ்வை அதுவும் சொற்ப வாழ்காலத்தை கொண்ட மனிதன் பல்வேறு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கவும், தன்னை நேரில் அறியாத ஒருவனின் உணர்வைத் தான் உணர்ந்து பார்க்கவும் இலக்கியம் ஒரு அற்புதமான விஷயம்.

சிந்தனைக்குள் நெருக்கியடிக்கும் சொற்களையும், சம்பவங்களையும் நானறிந்த மொழியின் துணைகொண்டு பிறரிடம் உரையாட விரும்புவதன் வெளிப்பாடாகவே எழுதுவதைப் பார்க்கிறேன்.

மயிலன் ஜி சின்னப்பன்: உணர்தல், உணர்த்துதல்; இவையாகத்தான் எனக்கு இலக்கியம் இருக்கிறது. என்னால் இந்தக் கலை வடிவத்திற்கு தகுந்த மரியாதை செய்ய முடியும் என்று நம்புவதால் எழுதுகிறேன்.

விஜய ராவணன்: இலக்கியம் என்பது என்னைப் பொறுத்தவரை கணக்கற்ற முகக்குவியலின் கிடங்கு. நாம் மறந்துபோன கவனிக்க மறந்த, தவறவிட்ட தொலைந்துபோன நாம் அறிந்திராத எத்தனையோ முகங்களின் மொத்தக் குவியல். நாம் தேடும் நமக்கான முகமும் அந்தக் குவியலில் தான் எங்கோ புதையுண்டு கிடக்கிறது.

ஒவ்வொரு முகமும் மௌனமாகவோ சத்தமாகவோ தன்னுடைய கதைகளை முணுமுணுத்தபடி இருக்கின்றன. இலக்கியம் இல்லையென்றால் அந்த முணுமுணுப்புகள் வெறும் இரைச்சலாய் காற்றில் என்றோ கரைந்து போயிருக்கும். ஒவ்வொரு எழுத்தாளனும் அந்தக் குரல்களுக்குச் செவிகளாய் இருக்கிறான். காலச்சுழலில் இழுத்துச்செல்லப்பட்ட அதன் முகங்களை மீளுருவாக்கம் செய்கிறான். அந்த முயற்சியே அவனுக்கு ஆசுவாசமானதாகவும் உவப்பளிப்பதாகவும் இருக்கிறது… எனக்கான உந்துதலும் அதுவே!

பிரமிளா பிரதீபன்: வாழ்வின் பரிச்சயங்களில் நான் அடைய முடியாத தூரத்தில் இருந்தவைகளையெல்லாம் எனக்;கு சாத்தியமாக்கிய விந்தையை செய்தவை இலக்கியங்கள்தான்.

கலையும் இலக்கியமும் மனிதர்களை மகிழ்விக்க வேண்டும். மனிதர்களின் நோய்மைகளை சுமுகமாக்க வேண்டும்’ என்கிறார் மாக்சிம் கார்க்கி. என்னளவிலும் அத்தகையதொரு உணர்வே மேலோங்கியிருக்கிறது.

மனித வாழ்வின் அழிவுகள், வீழ்ச்சிகள், மகத்துவங்கள் என்ற ஒட்டுமொத்த வெளிப்பாடுகளதும் அடையாளமாய் மிளிர்கிறது இலக்கியம். வாழ்க்கை பயணத்தின் அழிந்து போன பல சுவடுகளையும் தழைக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படும் புதிய சிந்தனைகளையும் தனிமனித நுகர்ச்சிகளுக்கு சமகாலத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தினையும், அந்தரங்கமான தனிமனித உளவியல் பிரச்சனைகளையும் என்று எல்லாவிதமான உணர்வுகளையும் குறித்ததொரு வடிவமாக்கி சேமித்து வைத்திருககக்கூடிய அல்லது எம் அடுத்த சந்ததியினருக்;கு கையளிக்கக்கூடிய அற்புதமே இலக்கியம்.

உலகில் அச்சுத்தொடர்பூடகம் உருப்பெற்ற சூழலைத்தொடர்ந்து அசுர வேகத்தில் வளச்சிக் கண்டுவரும் இலக்கியத்தின் புதிய பரிணாமங்கள் வித்தியாசமான பொருள்கோடலை செய்யும் மரபுக்குள் எம்மை அழைத்துச்சென்று நவீன சிந்தனைகளை தோற்றுவித்தலுக்கிணங்க இன்றைய கால இலக்கியத்தின் போக்கு எமக்கு சாதகமாக அமைந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. அதாவது சமகால நடைமுறையில் மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியங்கள் முன்னனிக்கு வந்து கொண்டிருக்கின்ற இந்நிலமையானது விளிம்புநிலை எழுத்துக்களையும் காலங்காலமாய் ஒடுக்கப்பட்ட எழுத்துக்களையும் இருண்டுபோனதாய் ஓரங்கட்டப்பட்ட எழுத்துக்களையும் வெளிக்கொண்டுவரும் புதியவெளிகளை திறந்துவிட்டிருக்கின்றன என்றே சொல்லலாம். இச்சந்தர்ப்பத்தில் இத்தகையதான வெளிகளை எமக்கானதாக்கும் முயற்சியும் ஈடுபடலுமே எம்மை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை அமைத்துக்கொடுக்க உதவிடுமென்றும் கருதுகிறேன்.

என்னை எழுதச்சொல்லி எவருமே நிர்ப்பந்திக்காதவிடத்து நான் ஏன் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்க வேண்டும்? அதிலும் இடையறாத வாழ்க்கை சிக்கல்களை மீறி அதிசிரத்தையெடுத்து எதற்காக எழுத வேண்டும்?

எந்த நோக்கமும் இல்லாமல் உயிரோடு வாழ்ந்துக் கொண்டிருப்பதைக்காட்டிலும் உயர்ந்த நோக்கம் ஒன்றின் பொருட்டு நம் உயிரை விடுதல் மேலானது’ என்ற கோசத்துடன் எகிப்திய மக்கள் அரசை நோக்கி ஒருகட்டத்தில் முழக்கமிட்டதாய் அறிந்திருக்கிறேன்.

அந்த கோசத்தின் எதிரொலி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் எல்லா திசையிலுமே எதிரொலிப்பதாகவே எனக்குத் தோன்றும். உயிரை விடுமளவிற்கு போகவில்லையென்றாலும் என்சார் இலங்கைவாழ் மலையக மக்களின் மனவெளிப்பாடுகளின் சிறுதுளியையேனும் வெளியே தெரியப்படுத்திவிட முடியும் என்ற திண்ணத்துடனேயே எழுத ஆரம்பித்திருந்தேன்.

அதிகார ஒடுக்குமுறைகளை தாங்கிக்கொள்ளவும் முடியாமல்; புறக்கணிக்கவும் முடியாமல் சமநிலையற்ற மனவெழுச்சியுடன் பாதிப்படையும் போதில் அல்லது தன் சமூகத்தின் இன்மையை வெளிச்சமிட்டு காட்டவேண்டுமென்ற உந்துதலில் தளம்பலடைந்ததொரு நிலையிலேயே நான் எழுத்தை அதற்காகவென்று சாதகமாக்கிக்கொள்ள முனைந்தேன்.

என்னுடைய ஆரம்பகால எழுத்துக்களில் இத்தகைய வாழ்வியல் இடர்களும் இன்மையின் ஏக்கங்களுமே அதிகமாக இருந்ததாய் நம்புகிறேன். ஆனாலும் அண்மைகாலமாக என் எழுத்தின் பயணமானது வேறொரு திசை நோக்கி செல்வதை அவதானிக்கிறேன். அவை மனித மனங்களின் அகமன சிக்கல்களையும் உளவியல் போராட்டங்களையும் குறிப்பாக பெண்கள் வெளிப்படுத்தத்தயங்கும் சில உணர்வுகளையும் மையப்படுத்தியதாகவே இருக்கிறது.

இந்த புதிய திசையிலான எழுத்து பொருத்தமானதா? இல்லையா? என்பதை தாண்டி இத்தகைய கருப்பொருளுக்கான தேவைப்பாட்டினையும் உணர்ந்து அது என் சமூகத்தை பாதிக்கும் விதத்தை நான் வெளிப்படுத்துதல் கூட எனதொரு கடமையென்றே எண்ணுகிறேன். அத்துடன் ஆர்வத்துடனான எனது இலக்கியத் தேடலுக்கும் அதனை பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென்ற உந்தலுக்கும் தேவையானதொரு மாற்றமாகவும் இதனை கருதுகிறேன்.

சமூகப்பெறுமானம் அற்ற எழுத்துக்களால் பயனில்லை என்று நினைப்பவள் நான். அதனபடி எனது ஒவ்வொரு புனைவிலும் இருக்கவேண்டிய சமூகபெறுமானத்தை திட்டமிட்டு தீர்மானிக்கிறேன். எனினும் எனதிந்த கருத்து பொருத்தமானதா இல்லையா என்று எனது படைப்புகளை படிக்கும் வாசகனால் மாத்திரமே முடிவெடுக்க முடியும்.

இதையெல்லாம் தவிர்த்து தனிப்பட்ட ரீதியில் எழுத்தென்பது பூரண திருப்தி தருமொரு விருப்புத்துறையாகவே என்னை மகிழ்விக்கிறது.

நான் என்னை உணரலும், இனங்காணலும் என்னை வெளிப்படுத்தலும்கூட எழுத்தினூடாகவே எனும்போது எனக்காகவும் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம்.

 

 

  1. கொரோனா போன்ற ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் தொடர்ந்து எழுதி வந்ததை எப்படி உணர்கிறீர்கள்?

காளி பிரசாத்: கொரோனா காலத்தில் உருவான நெருக்கடி என்பது, தன் மீதான அச்சத்தை விடவும் தான் ஒரு கடத்தியாக இருந்து தன்னால் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பும் குறித்துத் தான். ஆகவே கூடியமட்டும் தனியாகவே இருந்தேன். அலுவலக வேலையும் வீட்டிலிருந்து பார்க்கத்தக்க ஒன்றுதான்.

இந்தக் காலத்தில் கட்டுரைகள் எழுதமுடிந்த அளவுகூட புதிய கதைகள் எழுத இயலவில்லை. ஆனால் மனதில் இருந்த கருக்களை எழுத இயன்றது. இப்போது பார்த்தால் 2016-இல் முதல் கதை வெளியானது. இப்போது வெளியாக உள்ள என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பத்துக்கு நான்கு கதைகள் இந்த ஆறு மாதத்தில் எழுதியவைதான்.

சுஷில் குமார்: உளச் சோர்வு, பொருளாதாரச் சிக்கல்கள், எங்கும் மலிந்திருந்த சலிப்பு இவை அனைத்தையும் தாண்டி என்னை நானே மனதளவில் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியிருந்தது. வழக்கமான செயல்களிலிருந்து கொஞ்சம் விலகி என் கதைகளில் மூழ்கியிருக்க விரும்பினேன். தொடர்ந்த எழுத்தும் நண்பர்களின் விமர்சனங்களும் என கொரோனா ஊரடங்கு காலம் நான் நிறைய வெளிப்பட, எனக்கான எழுத்து முறையை நான் கைக்கொள்ள முயல நல்ல வாய்ப்பாக அமைந்தது. குறிப்பாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட எழுத்தாள நண்பர்களின் கறாரான விமர்சனம் என் முன்னிருக்கும் சவாலை மென்மேலும் பெரியதாக மாற்றியது. ஒவ்வொரு கதையிலும் இன்னும் ஒரு படி மேலே அல்லது ஆழமாக செல்ல முடிகிறதா என முயற்சித்துப் பார்க்கிறேன். சிறுகதை உருவாகி நிகழ்கிறதா, ஒரு தரிசனம் இருக்கிறதா, a raid into the unconscious சாத்தியப்படுகிறதா என பரிசீலனை செய்து தொடர்ந்து எழுதுகிறேன்.

இக்கால கட்டத்தில் இதுவரை 25 கதைகள் எழுதியிருக்கிறேன். கனலி, யாவரும், சொல்வனம், பதாகை, ஓலைச்சுவடி மற்றும் நகர்வு இணைய இதழ்களின் ஆசிரியர்கள் தந்த ஊக்கம் மிக முக்கியமானது. விரைவில் யாவரும் பதிப்பகத்தின் மூலம் எனது முதல் சிறுகதை தொகுப்பு வெளிவருகிறது.

ஜெயமோகன் எனது ‘மூங்கில்’ என்கிற சிறுகதையை அவரது தளத்தில் பகிர்ந்திருந்தார். மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன்.

செந்தில் குமார்: அகநெருக்கடிகளே இன்னும் நம்மை எழுததூண்டுபவை என்று நான் உணர்ந்திருக்கிறேன். அதை கண்கூடாக இந்த காலக்கட்டத்தில் நான் அனுபவித்தேன். பலரும் அப்படி உணர்ந்ததை படைப்புகள் வழியாக அறிகிறேன். நாளொன்றுக்கு ஒரு கதை வீதம், நூறு கதைகளை எழுதியுள்ளார் ஜெயமோகன். மாபெரும் சாதனை அது. பல நல்ல படைப்புகள் இந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. நிறைய எழுதபடும்போதே சிறந்த இலக்கிய சூழல் உருவாகும். அப்படி ஒரு காலக்கட்டமாக இது இருந்திருக்கிறது.

மௌனன் யாத்ரிகா: தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்ததால் உலகை அச்சுறுத்திய அந்தக் கிருமியை நினைவிலிருந்து அழித்துக்கொள்ள முடிந்தது. வெறுமனே இருந்திருந்தால் அது கொடுக்கும் அச்சமும் பீதியும் மனதை வலுவிழக்கச் செய்திருக்கும். இத்தனைக் கால எழுத்து வாழ்வில் இந்தக் கொரோனா காலத்தில்தான் நான் அதிகம் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதிகம் கவனிக்கப்பட்ட என் எழுத்தும் இந்தக் காலத்தில்தான் வந்திருக்கிறது. சக கவிஞர், வேட்டுவம் நூறு, சங்க இலக்கியச் சிறுகதைப் பரிசு என்று என்னை உலகறியச் செய்த எழுத்துக்கள் கொரோனா கால பரிசுகள் என்றுகூடச் சொல்லிக் கொள்ளலாம்.

லோகேஷ் ரகுராமன்: கொரோனா காலத்தில் தான் நான் என் ‘விஷ்ணு வந்தார்’, ‘நீர் பதுமராகம், அரோமா’ போன்ற நீண்ட நெடிய சிறுகதைகளை எழுதினேன். தமிழினியில் வெளிவந்தது. என் அலுவலக நெருக்கடியும் கூடியிருந்தது. ஏதோ ஒரு கையாலாகாதத்தனம் என்னை வந்தடைந்ததோ என்று வீடடங்கு காலத்தின் முதல் மாதங்களில் நினைத்திருக்கிறேன். அதனை இக்கதைகள் மூலம் ஈடு கட்டியிருக்கிறேன் என்று இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.

சிவபிரசாத் ரங்கசாமி: தொற்று நோய்களின் தாக்கம் குறித்து என்னுடைய பெற்றோர்கள் சொன்ன வாய்மொழிக் கதைகளிலும் தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய தோட்டியின் மகன் நாவலிலும் அறிந்திருக்கிறேன் என்றாலும் நேரடியாக உணரும் போது ஏற்படும் அக நெருக்கடி வேறு விதமாகத் தான் இருக்கிறது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களைவிட இன்னும் வராதவர்களுக்குள் இருக்கும் நோய் சார்ந்த பயம், அந்த பயத்தை ஊதிப் பெருக்கும் சமூக ஊடகங்கள், அரசின் அறிவிப்புகள் என்று எங்கும் இருள் சூழ்ந்த காலகட்டம். இதில் அதிகமாக எழுதவில்லை என்றாலும் நிறைய வாசிக்கவும் இலக்கிய நண்பர்களோடு விவாதிக்கவும், ZOOM கலந்துரையாடல்களில் ஆர்வத்தோடு பங்கெடுக்கவும் செய்தேன்.

துரை. அறிவழகன்: கொரோனா காலகட்டத்திற்கு முன்பாகவே நெருக்கடியான மனநிலைக்குள் உழன்று மீண்டுவிட்டதால் கொரோனா எனக்குள் எந்த வித்தியாசத்தையும் உணர்த்தவில்லை. 2018 செப்டம்பரில் Brain Sroke காரணமாக நாடு திரும்பிய நாள் முதல் இன்றுவரை வெளிநடமாட்டம் இயலாத உடல் பாதிப்புடன் தான் இருக்கிறேன். வாசிப்பும், எழுத்தும்தான் இந்நிலையிலிருந்து என்னை மீளச் செய்யும் என்கிற உன்மத்த நிலையிலிருந்துதான் இன்றைய நாட்களின் எனது எழுத்து பயணம் இருக்கிறது. உட்சலனங்களும், வெளி மௌனமும் அலையோடும் நிகழ்காலத்தின் மன நெருக்கடியை எழுத்து வழி இயக்கத்தின் துணையுடன் தான் கடந்து கொண்டு இருக்கிறேன். மேலும்,

“துன்பம்

இறைவன் உயர்த்திய

அபய கரத்தின் நிழல்”

எனும் ஃபிரான்ஸிஸ் தாம்ஸனின் கவிதை நினைவுதான் வருகிறது இம்மாதிரியான நெருக்கடி காலங்களைக் கடக்கும்போது.

செந்தில் ஜெகன்நாதன்: ஒருவகையான சிந்தனை தப்பித்தல்தான் உண்மையில் பெரும் ஆறுதல். புறவாழ்க்கை யுத்தங்களை எதிர்கொள்ளப் பயன்படுத்தும் கேடயம். கொரோனா தருணத்தில் எளிதாகக் காற்றில் விரவிக்கிடந்த எதிர்மறை எண்ணங்களுக்கு நடுவே எழுதுவது ஒன்றுதானே அதை அறிந்தவனுக்கு வழி.

மயிலன் ஜி சின்னப்பன்: ஊரடங்கு சமயத்தின் தேக்கத்தைக் கலைய வாசிப்பதும் எழுதுவதும் பெருமளவிற்கு கை கொடுத்தன. இந்தக் காலகட்டத்தில் பதினைந்து சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் எழுதியிருக்கிறேன் என்று நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. ஒரு வகையில் ஏதோவொரு நெருக்கடியிலிருந்து விடுபட இந்தப் படைப்பூக்கம் முன்னின்றிருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எழுத்தாளனாக என்னை இக்கதைகள் கொஞ்சம் முன்னே நகர்த்தியிருக்கின்றன என்றும் நம்புகிறேன்.

விஜய ராவணன்: பொது ஊரடங்குக்குச் சில நாட்கள் முன்பு அலுவலகப் பயணம் முடிந்து இந்தியா திரும்பியதில் தொடங்கி தொடர்ச்சியாக எட்டுமாத காலம் அடுத்தடுத்து வெவ்வேறு காரணங்களுக்காகத் தனிமையில் இருக்க வேண்டிவந்தது. அடிப்படைத் தேவைகள் நிர்தாட்சண்யமாக மறுக்கப்பட்டன. காரணமற்ற வெறுப்பும் தொடர் நிராகரிப்புகளும் சூழ்ந்த அதேநேரத்தில் எதிர்பாரா உதவிகளும் கதவைத் தட்டின. உறக்கமும் உணவும் சரிவர வாய்க்கப்பெறாத அந்த பாரமான பொழுதுகளை எழுத்தில் கடக்க முனைந்தேன். எல்லோருக்கும் அந்தத் தருணத்தில் இப்படியான ஏதோவொரு பிடிமானம் தேவைப்பட்டிருக்கும்.

வாசிக்க வேண்டும் என்று பட்டியலிட்டு வைத்திருந்த புத்தகங்கள் மூலமாக என்னை தொகுத்துக்கொண்டேன். தொற்றுக் காலத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த இலக்கிய இதழ்களும் சக எழுத்தாளர்களின் படைப்புகளும் புத்துணர்வை அளித்தது. இதுநாள் வரை நான் எழுதியவற்றை மறு ஆய்வு செய்வது சிந்தனையில் சிதறியிருந்த புள்ளிகளை ஒருங்கிணைத்து புதுப் படைப்புகளாக்குவது என எழுதுவதற்கான தொடர் மனநிலையை தக்க வைத்துக்கொண்டேன். மனதுக்கு நெருக்கமான உலகத் திரைப்படங்கள் பற்றி நடு இதழில் கட்டுரைத் தொடரொன்று எழுதத் தொடங்கினேன். ஊரடங்கு காலத்தில் யாவரும், அரூ, குமுதம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் என் படைப்புகள் தேர்வானதும், என் முதல் சிறுகதைத் தொகுப்புக்கான அறிவிப்பு வெளிவந்ததும் மேலும் என்னை உற்சாகப்படுத்தியது. இணைய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். ஒருகட்டத்தில் அந்தத் தனிமைப் பொழுதுகளை எவ்வளவு வெறுத்தேனோ அவ்வளவு நேசிக்கவும் ஆரம்பித்தேன்.

 

 

  1. உங்களுடைய சிறுகதைகளைப் பற்றி உங்களுக்கு இருக்கும் விமர்சனம் என்ன?

காளி பிரசாத்: என்னுடைய இந்த முதல் தொகுப்பின் கதைகள் புறச்சூழல் ஒருவனுக்கு ஏற்படுத்தும் அக மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டவை. வாழ்வியல் பிரச்சனையை சார்ந்தவை சில. உளவியல் பிரச்சனையை சார்ந்தவை சில.

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ஆள்தலும் அளத்தலும் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன் அதையே சுயவிமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

“என்னுடைய கதைகளில் ஒரு சிறுகதைக்கான தருணம் இருக்கிறதா என்று கவனிக்கிறேன். என் கதைகளின் வழியே நான் சொல்ல வருவது வெறும் அதிர்ச்சியோ அல்லது நகைச்சுவையோ மாத்திரம் அல்ல என்பதில் கவனமாக இருக்கிறேன். கதைகளை வாசிப்பவரை மகிழ்விக்கும் நோக்கமோ அவரது அறிவுக்கண்ணைத் திறந்துவைக்கும் ஆவலோ இருந்ததில்லை. நான் அறிந்த களங்கள் எனக்கு சிலவற்றைச் சொல்ல இலகுவாக இருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. அந்தப் பின்புலம் உதவியாக இருந்தது. அனுபவங்கள் அறிதல்கள் என அனைத்தையும் ஒரு கலைடாஸ்கோப்பில் போட்டு சுழற்றிச்சுழற்றிக் காட்டுவது போலத்தான் இவை வெளிப்பட்டிருக்கின்றன.”

சுஷில் குமார்: ஒரு வாழ்வனுபவத்தை காட்சிகளாக கண்முன் கொண்டுவர என்னால் முடிகிறது. உரையாடலும் வட்டார வழக்கும் நன்றாக வருகிறது. ஒருசில வடிவ முயற்சிகளும் செய்திருக்கிறேன். கதை மாந்தர்களின் உளவியல், பின்புலச் சித்தரிப்புகள், கதையில் நிகழ வேண்டிய ஒரு பறத்தல் அனுபவம், தரிசனம் இவை சார்ந்து தொடர்ந்து வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு எழுதுகிறேன். இது ஒரு நீண்ட பயணம், அதில் பல நிலைகளில் எனக்கான எழுத்துச் சாத்தியங்களைக் கண்டடைவேன் என்பதில் தெளிவிருக்கிறது.

செந்தில் குமார்: முதலில் என்னுள் உள்ள வாசகன் திருப்தியடைந்தால் மட்டுமே, கதைகளைப் பிரசுரத்துக்கு அனுப்பும் தைரியத்தை நான் பெறுகிறேன். பரந்துபட்ட களங்களை எழுத வேண்டுமென்பதே என்னுடைய கதைகளின் மீதான என்னுடைய விமர்சனம்.

மௌனன் யாத்ரிகா: என் சிறுகதைகள் எனக்கமைந்த பிரத்தியேகமான மொழியாலும், நுட்பமான காட்சி விவரணைகளாலும் கவனிக்கப்படுகின்றன என்றாலும், ஒரு சிறுகதைக்குரிய முக்கியமான அல்லது சரியான தகுதிகளை அவை இன்னும் எட்டித் தொடவேண்டிய இடத்திலேயே இருக்கின்றன என்றே கருதுகிறேன்.

லோகேஷ் ரகுராமன்: என் கதையை ஒவ்வொரு முறையும் மீண்டும் வாசிக்கையில் ஒவ்வொரு மாதிரியான விமர்சனங்கள் எழுகின்றன. கதைகளின் நீளம், தகவல் திரட்டு ஆகியவை வெளிப்படையானவை. அனைவரும் உணரக்கூடியவை. ஆனால் அதன் புரிபடாத தன்மை, சென்றடையாத தன்மையைத் தான் நான் கேள்விக்கு உட்படுத்துகிறேன். எனக்கே புரியாமல் போன பாகங்கள் இருப்பது போலத் தோன்றும். எதற்கு இப்படி எழுதினோம் என்று தோன்றும் இடங்கள் ஏராளம். அது “அந்த தருணத்தின் வெளிப்பாடு” என்று கொண்டாலும் அத்தகைய சப்பைக்கட்டுகள் என்னை நிறையவே அயர்ச்சியடையச் செய்திருக்கின்றன.

சிவபிரசாத் ரங்கசாமி: “எழுது, அதுவே அதன் ரகசியம்” என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி சொல்லி இருப்பார். கவிதை, சிறுகதை, நாவல் என்று இலக்கியத்தின் அத்தனை வடிவங்களும் சீரான ஒரு ஒழுங்கையும் தனிமனித உழைப்பையும் கோருகிறது. ஆனால் நான் எந்த வித நிர்பந்தமும் இல்லாமல் என்னை ஒரு செளகாரியமான எல்லைக்குள்ளேயே நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த பத்தாண்டுகளில் வருடத்திற்கு இரண்டு மூன்று சிறுகதைகள் வீதம் மிகக் குறைந்த அளவில் தான் எழுதி இருக்கிறேன். இந்த நத்தை வேகம் தான் எனக்கிருக்கும் சுய விமர்சனம் எனலாம்.

துரை. அறிவழகன்: ஆரம்ப காலகட்டத்து எழுத்துக்களில் காதல் சார்ந்த கிளர்ச்சியும், வர்க்க கண்ணோட்ட சாயலும் மிகுந்திருந்ததாகக் கருதுகிறேன். 90-இல் மன ஓசையில் எழுதப்பட்ட “மேட்டாங்காட்டு ஓசைகள்” புரட்சி குறித்த கிளர்ச்சி மனநிலை கொண்ட ஒரு எழுத்துக்களின் வெளிப்பாடு தான்; ஆனால் அக்காலகட்டத்தில் அந்த எழுத்துக்கள் பிறப்பதற்கான புறச் சூழலும், உண்மை கிளர்வும் இருந்தது. பெரியார் மாவட்டத்து கிராமப்புற விவசாயிகளுடன் வாழ்ந்து எழுதப்பட்டது தான் அக்கட்டுரை. இன்று அந்த கிளர்ச்சி உணர்வெல்லாம் வடிந்து ஒரு புதுவெளி தரிசனத்துடன் எழுதுவதாக நினைக்கிறேன். 88ல் காரைக்குடி வையக்கரை படுகை நாணற் புதர் ஓரங்களில் பார்த்த சிறு பறவைகளின் காலடித்தடம் கொடுத்த உணர்வு வழி வெளிப்பட்ட கவிதையிலும், 96ல் வெளிவந்த “சிறகுக் குழந்தைகள்” தொகுப்பில் இடம் பெற்ற “காட்டின் வாசனை” சிறுகதையின் வாசனை அடர்த்திக்குள்ளும் தான் என்னுடைய உண்மையான நிலம் இருப்பதாகக் கோடிட்டுக் காட்டியவர்கள் கோணங்கியும், வியாகுலனும்.

அறிவு சார்ந்த வெளிப்பாடின்றி அக உணர்வு சார்ந்த பால்ய நினைவோடையிலிருந்து இன்றைய கதைகள் பிறப்பதாகக் கருதுகிறேன். “நீல லிட்மஸ் சிகப்பு லிட்மஸாக மாறும் பரிசோதனைகள், விஞ்ஞானப் பார்வைகள் எல்லாம் இலக்கியத்தில் செல்லுபடியாகாது. விஞ்ஞானம் கறாரான பொது உண்மையை நோக்கி விரிகிறதென்றால் கலையோ நேர் எதிர்த் திசையில் தனித்துவமிக்க அகநிலை சார்ந்த வாழ்க்கைப் பார்வையை நோக்கிக் குவிவதாக இருக்கிறது” எனும் சா.ஜோதிவிநாயகத்தின் கருத்தோட்டத்தின் அடியொற்றித்தான் எனது எழுத்துக்கள் பயணிப்பதாக நம்புகிறேன்.

உறைபனியாக, எழுத்தோ, இலக்கிய வாசிப்போ நிகழாத காலத்தை (2004-2018) கடந்துவிட்டேன். குழந்தைமையின் நெகிழ்வும், பால்ய உணர்வும் கலந்த நிலத்தின் நிறங்களைச் சுமந்த தெறிப்புகள் விரவி மலரும் காட்சிகளின் அடுக்குகளாகத் தான் இன்றைய எனது கதைகளை நான் பார்க்கிறேன்.

செந்தில் ஜெகன்நாதன்: வாழ்க்கையின் உன்னதங்களை மட்டுமே எழுத முயல்வது. உண்மையில் வாழ்வின் எல்லா தருணங்களும் அப்படியில்லையே. அதன் குரூரங்களையும் எழுத வேண்டும். ஆனால் இப்போது மொத்த உலகமுமே குரூரங்களால் சூழப்பட்டிருக்கிறதனால் அதை எழுதும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன்.

மயிலன் ஜி சின்னப்பன்: நீளம்; கொஞ்சம் ஆதவன் சாயல் – இரண்டுமே நண்பர்கள் அடிக்கடி விமர்சனமாக குறிப்பிடுவன. நான் அப்படி உணரவில்லை. ஆதவனை நான் வாசித்ததே இல்லையெனினும் என்னுடைய எழுத்து இப்படித்தான் இருந்திருக்கும். நானே ஒரு விமர்சனம் வைக்க வேண்டுமெனில், எழுத்தில் என்னால் எதார்த்த எல்லைகளை மீற முடிவதில்லை – அதைச் சொல்லலாம்.

விஜய ராவணன்: மூன்று வருடங்கள் முன் நான் எழுதத் தொடங்கிய புள்ளியிலிருந்து இப்போது என் சிறுகதைகளைப் பார்க்கும்போது, அதன் கதைக்களம் சற்று பரந்திருப்பதையும், வழமையிலிருந்து சற்று விலகிவருவதையும், புனைவின் வெவ்வேறு சாத்தியக்கூறுகளை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருப்பதையும் என்னால் உணர முடிகிறது. அதேநேரம் யதார்த்தத்தின் நடைபாதையைவிட்டு அவை முற்றிலும் ஒதுங்கிவிடவும் இல்லை.

பிரமிளா பிரதீபன்: என்னுடைய படைப்புகளின் முதல் வாசகன் நானாகத்தான் இருக்கிறேன். எழுதி முழுமைப்படுத்திவிட்டதாய் எண்ணிய அடுத்த கணத்திலிருந்து நான் யாரோவாகி எனது படைப்புக்களை வாசிக்கும் அனுபவம் ஏராளமான படிப்பினைகளைத் தருகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் நான் வியந்த, முகம்சுளித்த, அருவருத்த தருணங்களும் இல்லாமலில்லை. எனினும் இப்படியான சுயவிமர்சன பார்வை சமயங்களில் படைப்பொன்றினை நேர்த்திப்படுத்த உதவியிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

எனது கதாபாத்திரங்களுக்கு என்னால் உயிர் கொடுக்க முடிவதாய் எண்ணிக்கொள்ளல்தான் எனக்கு நான் கூறிக்கொள்ளும் நேர்மறையான விமர்சனமாக இருக்க முடியும். கதாபாத்திரங்களே கற்பனையின் உச்சவடிவம். அதற்கு உருவத்தையும் உடலையும் நினைவுகளையும் கொடுத்து அதனை நடமாட வைக்க முடிகிறது அல்லது அந்த ஒரு கதாபாத்திரத்தின் உருவாக்கத்திற்காய் என் நிஜவாழ்வின் குறிப்பிட்டதொரு காலத்தை ஒதுக்க முடிகிறதென்பது எனது வெற்றியென்றே தோன்றும். ஆனாலும் கதைவழியாக பிறந்த அம்மனிதர்களை குறித்து வாசகர்கள் என்னுடன் உரையாடும் பொழுதில்தான் அழிவற்ற சில மனிதர்களை நான் படைத்திருக்கிறேன் என்ற தன்னம்பிக்கை உச்சம் பெறும்.

எதிர்மறையான அன்றேல் குறைபாடுகள் என நான் கருதுபவற்றை பற்றிய மேலதிக கருத்துக்களை சக எழுத்தாளர்களிடமோ மூத்த எழுத்தாளர்களிடமோ பேசி அதுபற்றியதான தெளிவடைதல்களை பெற்றுக்கொள்கிறேன். என்ற போதிலும் நான் தீர்மானித்ததான படைப்புகள் தொடர்பான ஒருசில முடிவுகளை யார் வந்து விமர்சித்த போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததொரு நிலையும் அவ்வப்போது எற்படுவதுண்டு. அந்த அதிகபட்ச நம்பிக்கையானது சாதகமாக அமைவதையொத்தே பாதகமாக அமைவதையும் கவனித்திருக்கிறேன்.

 

 

  1. அடுத்து என்ன? எதிர்காலத்திய திட்டங்கள்?

காளி பிரசாத்: சென்னை வெண்முரசு கலந்துரையாடல் ஐந்து வருடங்களைக் கடந்தும் தொடர்ந்து நிகழ்கிறது. அதற்கு இணையாகவே வெண்முரசு சாராத மற்ற இலக்கியப் படைப்புகளைக் குறித்து கலந்துரையாடலைக் கொண்டு செல்ல இன்னொரு அமர்வு உருவாக்கியுள்ளோம். அதில் முதல் அமர்வாக பின்தொடரும் நிழலின் குரல் பற்றி இம்மாதம் உரையாடுகிறோம். இனி இதுவும் மாதாந்திர கலந்துரையாடலாகத் தொடரும்.

தினந்தோறும் ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்தபடியே இருக்கிறேன். ஏதேனும் விமர்சன குறிப்புகள் எழுதுகிறேன். இப்போதைக்கு இன்னும் சில சிறுகதைகள் எழுதியுள்ளேன். ஒரு நாவல் எழுதத் துவங்கி அது திருப்தி இல்லாததால் தொடர்ந்து எழுதவில்லை. இது போன்று என் கட்டுரைகள் கதைகள் அனைத்தும் துண்டு துண்டாகத்தான் நிற்கின்றன. எனக்கென எழுத்தில் திட்டங்கள் என்று ஏதும் போட்டுவைப்பதில்லை. எதுவும் தன்னியல்பாக நிகழ்பவைதான்.

சுஷில் குமார்: தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவது, நீண்ட நாட்களாக கருவாகியிருக்கும் நாவலை ஆரம்பிப்பது, கல்வி சார்ந்த எனது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் சார்ந்த பணி (முதல் நூல் தெருக்களே பள்ளிக்கூடம் – தன்னறம் பதிப்பகம்), சில உலக சிறுகதைகளை மொழிபெயர்ப்பது, எல்லாவற்றிற்கும் மேல் தொடர்ந்து வாசிப்பது.

செந்தில் குமார்: என்னுடைய சிறுகதை தொகுப்பு இசூமியின் நறுமணம் (கனலியில் வெளியான கதை) என்ற தலைப்பில் இந்த மாதம் இறுதியில், வெளியாக இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது தொகுப்பும் கொண்டு வரவேண்டுமென்று நினைக்கிறேன். நாவல் எழுதவேண்டும் என்கிற எண்ணமும் உண்டு.

மௌனன் யாத்ரிகா: அடுத்து…

நாவல்தான் எழுதப் போகிறேன்.

கதையைத் தேர்ந்துகொண்டு ரொம்ப நாட்களாகிவிட்டது. ஒரு அத்தியாயம் எழுதி முடித்திருக்கிறேன். ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் விரியும் கதை மனதில் ஊறிக்கொண்டிருக்கிறது.

மேலும்…

சங்க இலக்கியப் பாடல்களைத் தேர்வு செய்து சிறுகதைகள் எழுதவும் இருக்கிறேன். குமுதம் – கொன்றை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் கிடைத்த பரிசு அந்த உத்வேகத்தை வழங்கியிருக்கிறது.

லோகேஷ் ரகுராமன்: நிறைய வாசிக்க வேண்டும். கரு திரண்டால் இன்னும் என்னை உவத்தும் சிறுகதைகள் எழுத வேண்டும். அன்றாடங்களில் முற்றிலுமாக மூழ்கடித்துக் கொள்ளாமல் என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது அது போதும்.

சிவபிரசாத் ரங்கசாமி: இதுவரை எழுதிய கதைகளைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. காவிரியாற்றுப் பாசனப் பகுதியான கரூரிலிருந்து புலம்பெயர்ந்து சேலத்தில் சீரகாபாடி என்று தற்சமயம் அழைக்கப்படும் பொங்கவெளி காடு என்ற வறண்ட நிலத்தைத் திருத்தி ஒரு தம்பதி பயிர் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏழு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருந்திருக்கிறது. அந்த பிள்ளைகள் வளர்ந்து திருமணம் செய்யப்பட்டு வம்சம் பல்கிப் பெருகி இன்று மூன்று தலைமுறையைக் கடந்திருக்கிறது. நான் நான்காம் தலைமுறையின் கண்ணி. என் முப்பாட்டன் செழிப்பான பகுதியிலிருந்து வறண்ட நிலப்பகுதிக்கு இடம் பெயர்ந்ததன் காரணம் என்ன என்ற தேடலில் பொருட்டு மூன்று தலைமுறையின் வாழ்க்கையைப் புனைவில் வாழ்ந்து நாவல் ஒன்று எழுதுவது என் எதிர்கால திட்டம் எனலாம்.

துரை. அறிவழகன்: மலேசியாவிலிருந்து இறுகிய நிலமாகத் திரும்பிய என்னுள் தங்களுடைய பிஞ்சு கவித்துவ கண்களின் தீண்டலின் வழி என் அக உலகின் புனைவு பூக்களை விழிப்புறச் செய்த மைனாக்கள், அருகாமை வீட்டுக் குழந்தைகளும், சிறார்களும் தான். இவர்களின் நேசமிக்க தீண்டலே இன்றைய நாட்களைப் புனைவு உலகமாக மாற்றியது. அந்த்வான் து செந்த் எக்சுபெரியின் நாவலில் வரும் ‘குட்டி இளவரசன்’ போல பூட்டிய பெட்டிக்குள் இருக்கும் ஆட்டுக் குட்டியைப் பார்க்கும் கண்கள் இவர்களிடம் இருந்தது. அவர்கள் எனக்குள் கடத்திய அந்தக் கண்களின் மொழியோடும், கற்பனையின் விரிந்த எல்லையற்ற வெளியோடும் உறவாடி எழுத்தாக்க முயற்சியில் எனது இன்றைய நிகழ் கணங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறது. வீட்டைச் சுற்றி அலைவுறும் பசுங்கன்றுகளுடனும், நாய்க்குட்டிகளோடும் இந்தச் சிறார்கள் பேசிய மொழியைத் தான் எனது எழுத்துக்குள் கொண்டு வரும் முயற்சியில் தான் என் எழுத்துக்களின் உருப்பெறல் நிகழ்ந்து கொண்டுள்ளது. பஷீரின் எழுத்துக்களும் குழந்தைகளும், மிருகங்களும் சந்தித்துக் கொள்ளும் கணங்களில் உருப்பெறும் மொழி வளமையும், கற்பனையும், அபாரமும் அற்புதமும் வாய்ந்தவை. அத்தகைய ஒரு கணத்தை என் எழுத்துக்குள் கொண்டு வந்துவிடும் பேராசை எனக்குள் இருக்கிறது.

குழந்தைமையின் நீர் பொதி சுமந்த குழந்தைகளின் மொழியையும், அவர்களுக்குள் நிறைந்து கிடக்கும் ஃபேண்டசி உலகையும் காட்டும் நாவலொன்று வெளிக்கொண்டு வரும் முயற்சி நடந்து வருகிறது; சிறார் எழுத்தாள ஆளுமைகளின் சிறார் உலகு காட்டும் கதைத் தொகுப்புக்கான வேலையும் நடந்து வருகிறது.

இம்முயற்சிகள் தவிர்த்து 2019 முதல் இன்று வரை எழுதப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறார் சிறுகதைகள் முழு வடிவம் பெற்ற நிலையில் உள்ளது. இக்கதைகள் அனைத்தும் ஒவ்வொரு பருவத்திலும் பிரகாசமாய் ஒளிரும் சிறார்களின் பூ இதயத்தின் தெறிப்பு ரேகைகள் இழையோடும் கதைகள். நிலவின் ஒளியால் நிலவாகவும், சூரியனின் ஒளியால் சூரியனாகவும் மாறும் சிறார் உலகம் காட்டும் சிறுகதைகள். காருண்ய ஆன்மாவில் உள்ள இலக்கியத்தையும், நம்பிக்கையையும் பின் தொடர்பவர்கள் நகர வேண்டிய திசை சிறார் இலக்கியமே என்னும் உணர்வு அடர்த்தியின் பித்து நிலையிலிருந்தும், வண்ணங்களின் குழைவிலிருந்தும் வெளிப்படும் சிறார்களின் மன சித்திரம் காட்டும் கதைகள் இவை. மற்றும் பொது களத்தில் எழுதப்பட்ட எட்டு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக நூல் வடிவமாக்க வேண்டும்.

செந்தில் ஜெகன்நாதன்: அடுத்த கதையை, முந்தைய கதையைவிடச் சிறப்பாக எழுதி முடிக்க வேண்டும். அவ்வளவுதான்!

மயிலன் ஜி சின்னப்பன்: திட்டமிட்டு நிகழ்த்தக்கூடியதாக எழுத்தை சுருக்க முடியவில்லை. நிகழ வேண்டும். அவ்வளவுதான்.

விஜய ராவணன்: ‘பெரிய எதிர்கால திட்டங்கள் என்று இப்போதைக்கு ஒன்றுமில்லை. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான். நிழற்காடு என்ற என் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘சால்ட்’ வெளியீடாக விரைவில் வர இருக்கிறது.

பிரமிளா பிரதீபன்: ஏலவே திட்டமிட்டுவைத்துக்கொள்வதால் மாத்திரமே எங்கள் தொடர் பயணம் சாத்தியமாகிறது. குறிப்பாக பெண்கள். இலக்கியத்திற்கென நேரமொதுக்கி செயற்படுதல் என்னைபொருத்தவரையில் எல்லா தடவைகளிலும் தோல்வியை தருவதற்கான வாய்பினையே அதிகரிக்கின்றது. ஆகவே இடைக்கிடை கிடைக்கும் சிறு பொழுதிலும் எவ்வாறு உச்சப்பயன் காண்பதென்பதை திட்டமிட்டே செயற்படுத்துகிறோம்.

இந்த வருடத்தில் ஒரு சிறுகதை தொகுப்பை வெளியீடு செய்வதற்கென திட்டமிட்டிருக்கிறேன். மேலும் புனைவின் வழி பயணித்த எனக்கு அபுனைவிற்குள் நுழையும் ஒரு வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. என் தொழிலின் நிமித்தமாய் உளவியல், கல்வியியல் தொடர்பான நூல்களை ஆராயத்தொடங்கியிருப்பதால் அத்துறைகள் சார் அபுனைவு இலக்கியங்களை ஆக்குவதற்கான திட்டமிடலுடன் உரிய தேடல்களையும் செய்துக்கொண்டிருக்கிறேன்.

மேலும் வெறுமனே இலக்கியத்தை பேசிக்கொண்டு மட்டுமே இருக்குமொருத்தியாய் தேங்கிவிடாதிருக்க என் தொழிற்துறையை பயன்படுத்துவதனூடாக மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் புகுத்த வேண்டியதென இல்லையேல் சீர்படுத்த வேண்டியதென எண்ணும் சில நடைமுறைகளை கருத்தரங்குகளின் மூலம் கொண்டு சேர்க்கும் விதமாக குறிப்பிட்ட சில மலையக படைப்பாளிகளுடன் சேர்ந்து பணியாற்றவும் தொடங்கியிருக்கிறேன்.

அத்துடன் சமூகத்தின் முடிவற்ற வன்செயல்களையும் முரண்பாடுகளையும் எதிர்கொள்வதற்கு கலைகளிலே பொதிந்துள்ள ஆக்கத்திறன் மற்றும் கற்பனை மலர்ச்சி சார்ந்த வலுக்களை பயன்படுத்தலே சிறந்த தீர்வாக அமையும் எனக்கூறிய கல்வியியலாளர் ஹேர்பட் றீட்டின் கருத்தினை முழுவதுமாக ஆதரிக்கும் நான் எனது தொழிலின் நிமித்தம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டுமென்றும் எப்போதுமாய் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன்.


  • க.விக்கேனஷ்வரன்
  • வே.நி.சூர்யா.

3 COMMENTS

  1. புதிய படைப்பாளிகளை பற்றிய அறிமுகம்
    நான் நெருக்கமாக பழகும் விஜய்யும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது

  2. இளைஞர்களின் இலக்கியப் பார்வை எதிர்கால தமிழ் படைப்புகள் மேலும் சிறப்படையும் எனும் நம்பிக்கையை அளிக்கிறது. நேர்காணல் கண்ட தங்களுக்கும் பதிலளித்த நம்பிக்கை நட்சத்திங்களுக்கும் பாராட்டுகள்.

  3. அருமையான நேர்க்காணல்கள் படைப்பாளிகளுக்கு ஓர் அங்கீகாரம். எழுத நேர்ந்த தருணங்கள், எழுத்துப் பயணங்கள், அடுத்த கட்ட நகர்வுகள் போன்றவை இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்க நினைக்கும் ஒவ்வொருவருக்குமான பாடங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.