சகமனிதன் தன்னைச் சிறகென மாற்றிக் கொள்கிறான்.
கைவிடப்பட்ட ஒரு மனிதனை நிறுத்தி
உலகம் நிச்சயமாக உருண்டையானதா எனக் கேட்கின்றனர்?
எல்லாவகையிலும் கைவிடப்பட்டிருக்கும் உருண்டை எனச்
சொல்லிக் கடந்து செல்கிறானவன்.
1.
காயப்பட்ட மனிதனைப் பாடுவதற்காக
இரண்டு பழுத்த இலைகள் இவ்விரவில்
விழுந்திருக்கின்றன.
அடரிருளே!
அழுவதற்கென அவற்றை மிகத் தனிமையாக
அவனருகில் அழைத்து வந்திருக்கிறது.
2.
ஒரு துரோகத்தின் வாசலைத் தட்டிக்கொண்டிருப்பவன்
தனக்கான உலகில் ஏதுமற்றிருக்கிறான்.
சிறிய அர்த்தமொன்றில் படர்ந்திருக்கும்
தன் வாழ்வைத் தனியாகப் பிரித்திட முயன்று
சோர்வடைந்த பொழுதில்
அவனருகில் வந்திடும் சிறிய சிறகொன்று
அவன் தட்டிக்கொண்டிருக்கும் வாசலைக் கைவிட வைக்கிறது.
பறந்திடும் சிறகுகளை வைத்துக்கொண்டு உலகுடன்
விளையாடுவதற்குப் பழகிக்கொள்கிறானவன்.
3.
இரகசியமொன்றைப் புதைத்திருந்த இடத்தில் வளர்ந்து நிற்கும்
சிறிய செடிகள்,
அவைகளை ஒவ்வொரு பூக்களாகக் காண்பிக்கின்றன.
இந்த முறை
இரகசியங்கள் காய்ந்து போய்
உலகிற்கு மேலாக உதிர்ந்து கிடக்கின்றன.
ஒரு பாடலற்ற வெறுமையில்
சிலர் அவற்றை சேகரிக்கத் துவங்குகின்றனர்.
4.
இரத்தம் சிந்திய படி அலைந்து கொண்டிருந்த ஒருவன்
பூமி மீது பலவீனமானத் தனது பாதத்தடங்களை
விட்டுச் செல்கிறான்.
பாதை முழுவதுமிருந்த பரிதாபத்தின் வாசல்களை
அவை தான் ஒவ்வொன்றாக மூடிக்கொண்டிருக்கின்றன.
கருணைகள் மெலிந்த அச்சாலையில்,
ஒவ்வொரு மரமும் தங்கள் நிழல்களை
தங்களுக்குள்ளே உதிர்த்துக் கொள்கின்றன.
5.
காலம் தன்னை சில பொழுதுகளில் ஊமையைப் போலவே
பரிணமித்துக் கொள்கிறது.
அதன் சமிக்ஞைகள்,
ஒருவனை கொலை செய்யத் தூண்டுகிறது.
ஒருவனை பெரும் குற்றமொன்றிலிருந்து விடுவிக்கிறது.
மேலும்
அவர்களிருவரையும் நேருக்கு நேராகச்
சந்தித்துக் கை குலுக்கவும் செய்கிறது.
6.
சகமனிதன் தன் அன்பை பயம் நிறைந்த ஒன்றாக மாற்றிக்கொள்கிறான்
சகமனிதன் தன்னை ஒரு ஆயுதம் என நினைத்துக் கொள்கிறான்.
தூரத்தில் விழுந்து கிடக்கும் கடைசி சக மனிதனோ
தன்னைப் பற்றி நினைத்துக் கொள்வதற்கென ஏதுமில்லாமல்
இறக்கத் துவங்குகிறான்.
7.
வெறுமனே
ஒரு வளையத்தை வரைந்துவிட்டு போய் விட்டவன்.
அதற்கு உள்ளேயும் வெளியேயும் சில மனிதர்களைக்
கொண்டு வந்து நிரப்புகிறான்.
உள்ளேயிருப்பவருக்கென ஒரு அர்த்தத்தையும்
வெளியேயிருப்பவருக்கென ஒரு அர்த்தத்தையும்
காலம் கடந்தாவது அவன் உருவாக்கிக் காண்பிப்பான்
8.
சகமனிதன் தன் பாடலில் ஒரு ஆயுதத்தை வரைகிறான்.
சகமனிதன் அவ்வாயுதத்தை மிகுந்த சோம்பேறியாக நினைத்து
பழகி வருகிறான்.
இருவருக்குமிடையில் நடந்திடும் மோதலில்
நுழைந்து திரும்பும் ஒரு நாளில்
இன்னும் வலிமையானதாக மாறியிருந்தது அதனினுடல்.
9.
யாருடனோ மூர்க்கமாக மோதிக்கொண்டிருக்கும் ஒருவன்
தன் பலவீனத்தை மறைப்பதற்காக
ஒவ்வொரு முறையும்
ஒரு தாக்குதலுக்கு முன்பாக
ஒரு வெறுப்பை எறிகிறான்.
அது அவனது எதிரியை எல்லாவகையிலும் சீக்கிரமாகச்
சாய்க்கிறது.
10.
காயங்களினால் விறைத்துக் கிடக்கும் அவனுடலில்
மெல்லிய நம்பிக்கையைத் துவங்குகிறது
பிரார்த்தனையின் கடைசிப் பாடல்.
அதுவரை அவனது நினைவிலிருந்த உலகத்தில்
ஒரு பிரார்த்தனையின் சிறு வடிவம் கூட இருந்திருக்கவில்லை.
ஜீவன் பென்னி (1982)
இயற்பெயர் – பீ. மதார் மைதீன், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். இளங்கலை இயற்பியல் முடித்தவர். பணியின் காரணமாகத் தொடர்ச்சியாக வாழ நேர்ந்த பிற மாநிலங்களின் நகரங்களிலும், கிராமங்களிலும் தெரிந்திடாத மக்களிடையே செய்த பயணங்களும், சூழல்களும், கிடைத்த நட்புகளுமே எல்லாவற்றையும் கவனிக்கவும் நேசிக்கவும் கற்றுக் கொடுத்தது என நம்பிக்கொண்டிருப்பவர். வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் உதிர்ந்திடும் மகிழ்ச்சிகளையும், கசப்புகளையும் தீர்ந்திடாத சொற்களாக மாற்றிட முயன்று கொண்டிருப்பவர்.
இதுவரை வெளிவந்திருக்கும் கவிதை தொகுப்புகள் :
1. நானிறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது – புது எழுத்து – 2009.
2. அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்’ – மணல்வீடு – 2017.
3. சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள் – வாசகசாலை – செப் 2020.
Email- jeevanbenniepoems@gmail.com.