ஜீவன் பென்னி நேர்காணல்

(சமகாலத்தில் தீவிரமாகக் கவிதைகள் எழுதி வரும் கவிஞர்களில் ஜீவன் பென்னி முக்கியமானவர்.இவரது இயற்பெயர் P.மதார் மைதீன் என்பதாகும். சிற்றிதழ்களின் வழியாகத் தனது இலக்கிய பயணத்தைத் தொடங்கிய இவர் இதுவரை தனது மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 

(நானிறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது, 
அளவில் மிகச்சிறியவை அக்கறும்பு மீன்கள்,
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்.)

கவிதைகள் மட்டுமல்லாமல் விமர்சன கட்டுரைகளையும் அச்சு மற்றும் இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். 

இலக்கியம் சார்ந்து எந்த குழுவிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று அறிவித்துக் கொள்ளும் ஜீவன் பென்னியிடம் கனலியின் சமகால இலக்கிய முகங்கள் பகுதிக்கு மின்னஞ்சல் வழியாக  இந்த நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது. )

உங்களின் வாசிப்பு, அதிலிருந்து இலக்கிய வாசிப்புக்குள் வந்தது போன்ற அடிப்படையான விஷயங்களை அறிந்துகொள்ள விரும்புகிறோம். அவற்றைப் பற்றி சொல்லுங்களேன்.?

அப்பா, வேலையின் (ஆயத்த ஆடைகள் வர்த்தகத்தில் துணி கொள்முதல் மற்றும் விற்பனை பிரதிநிதி) பொருட்டு நிறைய பயணங்கள் மேற்கொள்பவராகயிருந்தார். பயணத்தில் அவர் வாசித்த வார, மாத இதழ்களை, ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ வரும் போது வீட்டில் வந்து குவிப்பார். நாங்கள் அதை வாசித்து வந்தோம். பள்ளி பாடநூல்களிலிருந்து இது சற்று ஆசுவாசத்தைத் தந்தது. வாசிப்பதன் முதல் விதை இப்படித்தான் விழுந்தது அதுவே பிற்பாடு பள்ளிகளில் துணைப்பாடக் கதைகளை விருப்பமாக படிப்பதற்கான மனநிலையை ஏற்படுத்திக் கொடுத்தது. கதைகளின் நிகழ்வுகள் வழியே விரிந்திடும் வேறொரு உலகமும் அதன் தவிப்பும் மிகுந்த உற்சாகத்தையும் வியப்பையும் கொடுத்தன. பள்ளிக்காலங்களில் ஆட்டம், பாட்டம், விளையாட்டு என மிகுந்த மகிழ்ச்சியாக சொந்த ஊரில் இருந்தது நினைவிலிருக்கிறது. முதன் முதலாக எழுதிய கவிதை போன்ற ஒன்றிற்கு, கையெழுத்து நன்றாக இருந்ததினால் எங்களது தமிழ் சிஸ்டர் வெகுவாகப் பாராட்டினார். தொடர்ச்சியாக பேச்சு, கட்டுரைப் போட்டிகள், நாடகங்கள், நடனங்கள் என தொடர்ந்து பங்கெடுக்க வைத்தார். பள்ளி வளாகத்தில் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவனாக இது என்னை மாற்றியது. பதினொன்றாம் வகுப்பில் சிறிய அளவிலான நாவல்கள் போல எழுதி கையெழுத்துப் பிரதியாக வகுப்பில் மாதத்திற்கு ஒன்றென வெளியிட்டு 50 பைசாவிற்கு சக மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறேன். தோழர்கள் அவற்றைப் படித்து குதுகலித்தனர். இன்றும் அந்த 3 பிரதிகள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை. பிறகு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் படிக்கும் போது அரபியைக் கற்றுக்கொள்ளலாம் என்று அதைத் தான் மொழிப்பாடமாகத் தேர்வு செய்திருந்தேன். தமிழ் பாடப் பிரிவிலிருந்த என் அறை நண்பர்களிடம் முதல் செமஸ்டருக்கான ‘மேல்பார்வை’ என்ற சுந்தர ராமசாமியின் புத்தகம் ஒன்று இருந்தது, அதிலிருந்துதான் என் வாசிப்பின் எல்லைகள் விரிவடைந்தன. அதுவரையில் என் வாசிப்பனுபவத்தில் கிடைத்திடாத தீர்க்கமான உணர்வை அக்கதைகள் கொடுத்தன. கல்கியும், சாண்டில்யனும், ஜெயகாந்தனும் எனக்கு போதாமலிருந்த தருணத்தில் இந்த தொகுப்பின் வழியே தேடல் துவங்கியது. அருகிலிருந்த மாவட்ட மைய நூலகத்தில்தான் பெரும்பாலும் இருந்தேன். மேலும் கல்லூரி மற்றும் ஹாஸ்டல் நூலங்களில் மீதி நேரத்தை கழித்தேன். சுந்தர ராமசாமி புதுமைப்பித்தனையும், ஜீ. நாகராஜனையும் காண்பித்தார். புதுமைப்பித்தனின் மொழிநடையில் என்னால் சீக்கிரமாக ஒன்றமுடியவில்லை. ஜீ.நாகராஜனே தமிழில் எனக்கு ஆதர்சமாக இப்போதும் இருக்கிறார். தேடல்கள் எல்லையற்று செல்லத் துவங்கியது. எங்கள் ஹாஸ்டல் நூலகத்தில் ‘கொல்லனின் ஆறு பெண் மக்கள்’ – கோணங்கி வரை கிடைத்தது. (கோணங்கியை முதலும் கடைசியுமாக வாசித்தது அப்போதுதான்) பெரும்பாலும் மாணவர்கள் அன்பளிப்பாகக் கொடுக்கும் புத்தகங்களே அவையெல்லாம். லா.ச.ரா-வின் ‘அபிதா’, தி.ஜா-வின் ‘அம்மா வந்தாள்’, பா.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ஆதவனின் ‘காகிதமலர்கள்’, ‘இரவிற்கு முன்பு வருவது மாலை’, அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ போன்ற அநேக எழுத்தாளர்களின் ஒரு புத்தகமேனும் அங்கு இருந்தது மிகுந்த மகிழ்ச்சியை உருவாக்கியது. விகடனின் மாணவப் பத்திரிகையாளருக்கான தேர்விற்காக, வலப்புறமாக இதயம் கொண்டு பிறக்கும் ஒரு பெண் சிசுவை, சாமி குத்தமாக கருதி கொன்று விடுவது மாதிரியான அறிவியல் சார்ந்த சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன். அது தேர்வு பெற்று, எழுத்துத் தேர்விற்கான அனுமதி சீட்டு – கால்டிக்கட்- நாங்கள் விடுமுறையில் சென்று திரும்பிய போதுதான் மிகத் தாமதமாகக் கிடைத்தது. என் சக நண்பர்கள் என்னைத் தேற்றினர். அது முக்கியமான ஒரு திருப்பம். கவிதைகளில் சுகுமாரனின் ‘கோடைக்காலக் குறிப்புகள்’, ‘வாழ்நிலம்’ மற்றும் ‘கவிதையின் திசைகள்’ என்ற உலகக் கவிதைத் தொகுப்பும் அத்தருணத்தில் மிக நெருக்கமான ஒன்றாக எனக்குள் பதியத்தொடங்கின. உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட என் நண்பன் இர்பான், ‘மிர்சா காலிப்’, ‘ஃபைஸ் அகமது பைஸ்’ ‘மீர் தகி மீர்’ போன்றோரின் சிறந்த உருது கவிதைகளை உருதுவிலும், தமிழிலும் தினந்தோறும் வாசித்துக் காண்பிப்பான். சாதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளை உருதுவிலிருந்து எனக்காகத் தமிழில் சொல்லி அவர் குறித்த தேடலை உருவாக்கியவன் அவன்தான். திருச்சி சென்ட்ரல் பேருந்து நிலையத்திலிருக்கும் புத்தகக் கடையில்தான் எல்லா இலக்கியப் பத்திரிகைகளும் கிடைத்தன. அதிலிருந்த கவிதைகளின் வெளிப்பாட்டு முறைகள் அப்துல் ரகுமானையும், மேத்தாவையும், வைரமுத்துவையும் விட வேறுமாதிரியிருந்தன. எனது வாசிப்பின், அனுபவத்தின் புள்ளிகள் இவைகளின் ஏதோ ஒன்றுடன் விலகியிருந்தன. மேலும் மேலும் வாசிக்கும் போதே அதன் குவியம் புலப்படத் துவங்கியது. மேற்சொன்ன எல்லாமும் தீவிர வாசிப்பிற்கான, எழுதுவதற்கான ஆரம்பகட்ட சில பயிற்சிகளையே அளித்திருந்தன. பிறகு அதன் நுட்பங்களை ஒவ்வொன்றாக சேகரிக்கத் துவங்கினேன். சிலவற்றை கற்றுக்கொள்ளவும், கைவிடவும் துணிந்தேன். தொடர்ச்சியான இவ்வாசிப்பின் வழி எனது அனுபவக் குவியலிலிருந்து நிறைய கவிதை மாதிரிகளை எழுதத் துவங்கியிருந்தேன். அவற்றில் சில கல்லூரி ஆண்டு மலர்கள் மற்றும் கல்லூரியின் கிளப் புத்தகங்களில் வெளிவந்தன. மேற்சொன்ன சுகுமாரன் கவிதையில் ஒருவித ஈர்ப்பு பரவி வந்திருந்தது. அந்தத் தேடலில்தான் வெகுசன பிரபலமற்ற தொகுப்பான நிறைய கவிஞர்கள் தீவிரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் சிறு பத்திரிகைத் தளத்திற்கு வந்து சேர்ந்தேன். 2005-ல் கல்லூரி முடித்து ஏதேனும் வேலைக்கென சொந்த ஊரில் காத்திருந்த பொழுதுகளில் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘புதிய காற்று’ இதழ் நூலகத்தில் கிடைத்தது. என் கவிதைகளை அதற்கு அனுப்பினேன். காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை நிறுவனராகக் கொண்ட அந்த இதழில் ஆசிரியராக இருந்த தோழர் ஹாமிம் முஸ்தபா மிகச்சிறப்பான கலை இலக்கிய மாத இதழாக வெளிக்கொண்டு வந்தார். மதுரையைச் சுற்றிய பகுதிகளிலிருந்த புதிய படைப்பாளர்களை நேர்த்தியாக அடையாளம் காணச்செய்தார். கே.முகமது ஷூஜுப் எனும் நல்ல வாசகர் நவீன கவிதைகள் குறித்தும் அதன் புரிந்திடாத தன்மை குறித்தும் கடிதப்பகுதியில் ஒரு பத்தி எழுதவே அதற்கு எதிர்வினையாக அவற்றின் நேர்த்தியான தன்மைகள் குறித்து அடுத்த மாதத்தில் நானெழுதவும் இவ்வாறு நான்கு மாதங்களுக்கு வாதமும். பிரதி வாதமும் நடத்துவதற்கு எங்களுக்கென பக்கங்கள் ஒதுக்கும் அளவிற்கு அதில் சனநாயகத்தன்மையிருந்தது. மு.ராசசேகரன், ஹவி, பா.திருச்செந்தாழை, பொழிவு. சா.முகில், நரன், தேவேந்திர பூபதி, லஷ்மி சரவணக்குமார், மு.ஹரிகிருஷ்ணன் முதலிய சில நண்பர்கள் இங்கிருந்து கிடைத்தனர். தொடர்ச்சியாக புது எழுத்து, புதிய பார்வை, தீராநதி, இறக்கை, மணல்வீடு, உயிர்மை, காலச்சுவடு, கல்குதிரை, புதுவிசை என வாசிக்கவும், அவற்றிற்கு பங்களிப்பு செய்யவும் முடிந்தது. கோவையில் கட்டுமானத்துறையில் ஸ்டோர்ஸ் மற்றும் வேர்ஹவுஸ் பிரிவில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தேன். அப்போது அருகிலிருந்த – ‘இறக்கை’யிலிருந்து – ‘மணல்வீடு’ மு.ஹரிகிருஷ்ணன் மற்றும் புது எழுத்து மனோன்மணி ஆகியோர் எனது கவிதைகள் குறித்து மிகுந்த நம்பிக்கையாகத் தொடர்ச்சியாகப் பேசினர். பிறகு வேலையின் பொருட்டு பெங்களூரில் மூன்று வருடங்கள் இருந்தேன். 2009-ல் புது எழுத்து வெளியீடாக எனது முதல் தொகுப்பு ‘நானிறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது.’ வெளியானது. தன்னிடமிருந்த சிறிய பொருளாதாரத்தைக் கொண்டு மனோன்மணி அதை செய்தார். எப்போதும் அதற்கு நன்றிக்கடன் பட்டவனாகவே இருக்க விரும்புகிறேன். இலக்கிய உலகில் அவரைப் போல அறம் சார்ந்து நிற்கும் ஒருவரைப் பார்ப்பது கடினம். மணல்வீடு அத்தொகுப்பிற்கு பரிசுப் பணம் அறிவித்திருந்தது. ஷீல்டை மட்டும் நான் பெற்றுக் கொண்டு ஹரியிடம் பணத்தை மனோன்மணியிடம் சேர்க்கச் சொல்லிவிட்டேன். என்னால் முடிந்தது அதுவே. முதல் தொகுப்பின் வழியே சாகிப் கிரான், நா.பெரியசாமி, பா.ராஜா, வெய்யில், கோணங்கி என சின்ன நட்பு வட்டாரம் கிடைத்தது. அதுவே இப்போது வரை நீடிக்கிறது. மணல்வீட்டில் நிறைய பக்கங்களை எனக்காக ஒதுக்கினார் ஹரி. அந்த சமயத்தில் வெளிவந்த நிறைய முதல் தொகுப்பை வாசித்து அவற்றிற்கு விமர்சனம் எழுதியிருக்கிறேன். அவர்கள் யாரையும் நேரடியாக நான் அறிந்ததில்லை. அந்த விமர்சனங்களின் ஒவ்வொரு முதல் பத்தியிலும் கவிதையியல் குறித்த சொல்லாடல்களையே எழுதியிருக்கிறேன். எனது முதல் தொகுப்பின் முன்னுரையிலும் இதையே செய்திருந்தேன். அது எல்லோராலும் பேசப்பட்டது. செல்மா பிரியதர்சனின் – தெய்வத்தைப் புசித்தல் – தொகுப்பிற்காக எழுதிய விமர்சனத்திலிருந்த சந்தேகங்களுக்காக அலைபேசியில் என்னை அழைத்துப் பேசித் தீர்த்து பிறகு நண்பர்களாகிக்கொண்டோம். க.மோகனரங்கனின் ஒரு தொகுப்பிற்கும் எழுதியிருக்கிறேன். சி.மணி மற்றும் நான் மிகவும் நேசிக்கக்கூடிய, நல்ல கவிதைக்கான செயல் அறிவை எனக்குள் வளர்த்திட்ட பிரம்மராஜன் அவர்களின் கவிதைகள் குறித்தும் பிறகு எழுதியவை எனக்கு மிக நெருக்கமானவை. நகுலன் குறித்த சிறிய பத்தி மிகவும் உணர்வுபூர்வமானது.

ஜீவன் பென்னி – இந்த புனைபெயரை எப்படித் தேர்வு

செய்தீர்கள்? புனைபெயரின் பின்னணியை அறிந்துகொள்ள இதை கேட்கிறேன்.

நிறைய புனைப்பெயர்களில் எழுதியிருக்கிறேன். பாளையம் பாரதி, கார்க்கி, பூங்கோதை இப்படி.. கல்லூரியில் எனது சிறந்த நண்பனொருவனின் நிக்நேம் ‘பல்கி’ எனக்கும் இதே போல் ஒரு பெயர் தேவை என்பதாக நானும் அவனும் சேர்ந்து வைத்த பெயர் தான் பென்னி. பிறகு ஜீவன் வந்து ஒட்டிக்கொண்டது அவ்வளவே. உயிர்மையில் வெளிவந்த எனது முதல் கவிதை எனது சொந்தப் பெயரில் தான் வெளிவந்தது. மற்ற மொழிகளின் படைப்புகளில் ஆகச்சிறந்த ஆகிருதியை அடைவதற்கு ஆங்கில மொழி சற்று சிரமத்தை ஏற்படுத்தியது. மேலை நாட்டுத் தத்துவங்கள், கீழை நாட்டு இசங்கள், உள் நாட்டு இலக்கிய குழுக்களின் அரசியல்கள் போன்றவற்றை என் அனுபவத்தின் முதல் சுவாரசியம் வரை அறிந்து கொண்டிருக்கிறேன். பிறகு அவை குறித்த தேவைகள் எனக்கு எப்போதுமிருந்ததில்லை. ஆல்பெர் காம்யூவின் படைப்புகளிலிருந்த மனிதாபிமானத்திற்கு நெருக்கமான தத்துவங்களையும், ‘முதலில் படைப்பாளி தன்னை ஒரு சாதாரண மனிதனாக எண்ணவேண்டு’மென்ற வரிகளையுமே நிறைய விரும்பியிருக்கிறேன், வெ.ஸ்ரீராம் அவர்களின் மொழிபெயர்ப்புகள் வழியே காம்யூ என் கல்லூரி நாட்களில் நிறைந்து கொண்டிருந்தார். அது என் சிந்தனைமுறைகளின் எல்லாவற்றையும் திருப்பிப் போட்டது. மேலும் தேடல்களின் பாதைகளைத் திறந்து விட்டது. ஆப்பிரிக்க, குர்திஸ்தான் மற்றும் லத்தீனமெரிக்கக் கவிஞர்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை (வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை, யமுனா ராஜேந்திரன்) வாசித்திருக்கிறேன். மதிப்புரைகளும் எழுதியிருக்கிறேன். அதில் படிந்திருந்த கோபங்களும், சமமற்ற வாழ்வெளிகளின் மீதான, இன அரசியல் மீதான தொடர்ச்சியான கேள்விகளே இத்தேசத்தின் வரைவில் என்னைத் தகவமைத்துக்கொள்ள வைத்தன. மேலும் நமக்கருகினில் நடந்து கொண்டிருக்கும் மூர்க்கமான மனிதத்தன்மையற்ற செயல்களுக்கான கோபங்கள்தான் சில அரசியல் கவிதைகளை எழுதவும் வைத்தன.

உங்கள் தனிப்பட்ட கவிதைவாசிப்பு பற்றி சொல்லுங்களேன்.

   மகாகவியான பாரதியிலிருந்து துவங்குவது மிகவும் சம்பிரதாயமாகக் கூட இருக்கலாம். ஆனால் எரிகின்ற அறிவின் பெரும் சுடர் நம் தமிழ்ச் சூழலில் அவன்தான். அவனிலிருந்துதான் என்னைப்போன்ற நிறைய பேர் உருவாகி வந்திருக்கிறோம். அவனை முழுவதுமாக படித்து அறிந்து கொள்வதென்பது யாராலும் முடிந்திடாதது. அவனுக்கிருந்த பல மொழிகளின் பரிச்சயங்கள் வழியே தமிழை மிக அடர்த்தியான தன்மைகளினால் அணுகி வளர்த்திருந்தான். அவனுக்கிருந்த சிறிய வாழ்வில் அவன் அனுபவித்திருந்த துன்பங்களுக்கிடையில் மானுடத்திற்கான மிகப்பெரிய திறப்பை அவன் ஏற்படுத்திக் கொடுத்தான். உலகில் சிறந்த கவிஞர்களின் வரிசையில் பாரதியின் இடம் தனித்தன்மையானது. ஒருங்கிணைப்பிற்கு முன்னதான இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் பாரதியின் வாழ்வும், இருப்பும், அவனது உணர்ச்சிகள் மிகுந்த கவிதைகளின் பேராற்றலும், சமூக மன அமைப்பின் எண்ணற்ற நோய்களிலிலிருந்து விடுபடவும், அடிமை விலங்குகளை உடைத்தெறியவும், அவற்றைச் சீர் படுத்துவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் மிக முக்கியமான காரணியாக இருந்திருக்கிறது. அவனுடைய இறுதி அஞ்சலிக்குக் கூட வரமுடிந்திடாத அன்றைய தமிழ்ச் சமூக மக்களின் குழந்தைகள்தான் பாடநூல்களின் வழியே அவரின் படைப்புகளைப் படித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்ச் சூழலில் நல்ல படைப்பாளிகளைப் பொருட்படுத்திடாதத் தன்மையை பாரதியில்தான் நன்கு புரிந்து கொள்ளமுடியும். அவனுக்கே இந்த நிலைமையென்றால் நாமெல்லாம் அதன் புள்ளியில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அவனை ஒற்றிப் பிறந்தவன்தான் பாரதிதாசன். வேறு மொழியில் பாரதிதாசனின் ஆளுமையைப் போல ஒருவனைக் காண்பது அரிது. ந.பிச்சமூர்த்தி தன் கவிதையில் பெரும் பாய்ச்சலை உருவாக்கிக் காண்பித்தார். கவிதை மொழியை, அதன் அனுபவத்தை ஸ்தூல வடிவிலிருந்து வெளியேற்றினார். நகுலனின் மெல்லிய ஆன்ம தளத்தில் எப்போதும் இருந்திடவே விரும்பியிருக்கிறேன். தன்னிலிருந்து துவங்கிடும் உலகின் மெய்மையை அவர் கடந்து சென்ற பாதைகளாகவே அவரின் வரிகளை நான் எப்போதும் நினைத்துக் கொள்கிறேன். சி.மணி தனது தனித்துவமான கவிதை வரிகளால் உலக அனுபவங்களிலிருந்து துவங்கி வரும் தன்னை மிகச்சுலமாக வெறொரு உலகின் வாசலுக்குக் கடத்திக் கொண்டிருந்தார். ஆங்கில மொழியின் திடமான பரிச்சயத்தின் வழியாக கறாரான மொழியமைப்பின் வடிவத்தை அவர் சுயம்புவாகச் செய்து காண்பித்தார். கவிதையில் அவர் விரித்திடும் பற்றற்றத் தன்மையும், வெறுமையும் முக்கியப் புள்ளியாக எனக்குப்பட்டது. ஞானக்கூத்தனின் கவிதைகளில் படர்ந்திருந்த அப்பட்டமான தன்மைகளினாலான வெளிப்பாட்டு யுத்தி அவரை வேறுபட்டு காண்பித்தது. சுகுமாரனின் ‘பூமியை வாசிக்கும் சிறுமி’யிலிருந்த எளிமை மீது மிகுந்த பிரமிப்பும், ஆச்சர்யமும் கொள்ளத்துவங்கினேன். தன் அனுபவத்தின் சாளரத்தை அவர் திறந்து காட்டிய விதம் மிகுந்த ஆர்வம் கொள்ளக் கூடியதாக மாறியிருந்தது. ஒரு கவிதைக்கான விவரிப்பை எவ்வளவு தீர்க்கமாக, அதே நேரம் எத்தனை குறைவான, தேர்ந்த சொற்களால் வெளிப்படுத்தக் கூடிய சாரம்சத்தை அவரே புலப்படுத்தினார். ஆத்மாநாமின் நேரடியான அரசியல் பிரச்சார கவிதைகளில் வழிந்திட்ட கொந்தளிப்புகளும், நிகழ்காலத்தின் மீதான தீவிரமான விமர்சனக் கூற்றுகளும் நம் வெளியில் தனித்துவமானவை. பிரமிள் தன் படிமங்கள் நிறைந்த கவிதைச் சொல்லாடல்களின் வழியே காலத்தின் ஒரு பகுதியை, ஞாபகமாகவும், உறைந்திட்ட ஒரு காட்சியைப் போலானதாகவும் மாற்றி மாற்றி காண்பித்தார். பிரம்மராஜன் கவிதைகள் மீது அதீதமான ஆர்வம் இருந்தது. சவாலான அனுபவப் பகிர்வை அவர் கவிதைகள் உருவாக்கின. மேம்போக்கான வாசிப்பிலிருந்து, தீவிரமான வாசிப்பிற்கான தளத்தை நோக்கி நகர்த்தின அவரது எழுத்துக்கள். அங்குதான் நவீன கவிதைகளின் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டேன். எவ்வளவு விரிவான தளத்தில் அவை இயங்கிக்கொண்டிருக்கின்றன, அதற்கு எத்தனை அதிகமான உழைப்பு தேவைப்படுகின்றது என்பதை அறிந்து கொண்டேன். நவீன கவிதைகளில் வேறொரு நுட்பமான செயலாக்க வடிவங்களை அவர் பரிசோதித்துக் கொண்டிருந்தார். தொடர்ச்சியாக தொகுத்துக்கொண்டிருந்தார். கவிதையியல் சார்ந்த மேற்குலகக் கோட்பாடுகளை, உலகக் கவிதைகளை மொழிபெயர்த்து தமிழ்ச்சூழலுக்கான பார்வைகளை விரிவாக்கிக் காண்பித்தார். எப்போதும் கவிதையின் பெரும் அறிவு சார்ந்த முக்கியக் காரணிகளை செழுமையாக்கி அது சார்ந்து கற்றுக்கொள்ள விரும்பிய நபர்களை பொதுவெளியில் ஒன்று சேர்த்திருந்தார். தொடர்ச்சியாக கற்றலும், எழுதுதலும் தீவிரகதியில் அதன் இணைச் செயல்களாக நடைபெற்று நவீன கவிதைகளின் பெரும் இயக்கமாக அது மாறிக்கொண்டது. ‘மீட்சி’ சிற்றிதழ் அதற்கான விரிவான களத்தையும், உரையாடலையும் உருவாக்கியது. ‘நிறப்பிரிகை’ நவீன படைப்புகளின் அரசியல் நீட்சிகளை முன்னெடுத்தது. அதுவே படைப்பின் வழியே உருவாகும் கருத்துருவாக்கம் என்பது ஒரு அரசியலின் ஆரம்பம் என்று உணர்த்தியது. சில சிற்றிதழ்களே மேற்சொன்ன நவீன படைப்புகளுக்கான மொழிக்களனை, அதன் ஆதாரமான தேர்ந்த அரசியல் நிலைப்பாடுகளை, அவை சார்ந்த புதிது புதிதான உரையாடல்களை முன்னின்று செய்வதற்கு மிக முக்கியமான காரணிகளாக இருந்திருக்கின்றன. கருத்து முரண்பாடுகளால் வெளியேறும் நண்பர்கள், அதே கருத்துக்களைக் கொண்ட வேறு சிலருடன் இணைந்து புதிய சிற்றிதழை உருவாக்கினர். அதுவே இப்போது வரை ஏதேனும் ஒரு வடிவில் கலை இலக்கியத்தின் ஒரு தேடலுக்கான பாதையை உருவாக்கிக் கொண்டு வருகிறது.

மற்ற எல்லா இலக்கிய வகைமைகளை விட அதிகமாகக் கவிதைகள் மட்டும் எழுதப்படுவது ஏன்?

   இந்த சமூகத்தின் பெரும் இரைச்சல்களின் வழியே தங்களுக்கான சிறிய ஒலியொன்றை தனித்து எழுப்பிவிடுவதற்கே எல்லோரும் முயல்கின்றனர். அவர்களின் அன்றாடங்களிலிருக்கும் சலிப்பை, அதில் அவர்கள் கண்ட வெளிச்சத்தை, நுகர்வு இறுக்கத்தின் வலியை, ஏமாற்றங்களை, தேடிக்கொண்டிருக்கும் பிரமிப்பை ஏதேனும் ஒரு வகையில் கரைத்துக்கொள்வதற்கு அவர்கள் விரும்புகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவம் தேவையாக இருக்கிறது. சிலர் அதை எழுத்தில் கொண்டுவருவதற்கு முற்படுகின்றனர். அவை படைப்பாக மாற்றப்பட்டு சக மனிதர்களால் படிக்கப்பட்டு அவ்வனுபவங்களின் பரப்பை அதிகப்படுத்துகின்றது. இந்த ஆசுவாசம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இவற்றில் எல்லாமும் படைப்பமைதியின் முழுத்தன்மையையும், அழகியலின் நுட்பமான செறிவுகளையும் பெற்றுவிடுவதில்லை. வெறும் அனுபவத்தின் வழியே இரைத்து விடும் சொற்களாக மட்டுமே நிறைய மாறிவிடுகின்றன. இவை எல்லா இலக்கிய வகைமைகளுக்கும் பொருந்தும். இதில் கவிதைகள், வெறுமனே அதன் புறவயமான வடிவங்களின் எளிய தன்மைகளால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டு, ஒன்றிற்கு கீழே ஒன்றென்ற வாக்கியங்களின் வழியாக மிகவும் சுலபமாக எழுதப்படுகின்றன. இந்த அசட்டுத்தனமும், கற்றுக்கொள்வதில் இருக்கும் லாவகமற்றப் புரிதலின்மையுமே தொடர்ந்து கவிதை மாதிரிகள் எழுதப்பட்டு, குவிக்கப்பட்டு வருவதற்கு மிக முக்கியமான காரணமென்று நான் கருதுகிறேன். எல்லோராலும் கவிதை எழுத முடியும் என்ற நம்பிக்கை மிகவும் புத்திசாலித்தனமானது, ஆனால் அதற்குள்ளிருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் அறிவின், ஆன்மரீதியான உணர்வுகளின் நெருக்கமான தன்மைகளின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் அதை செய்து பார்ப்பதென்பது வெறுமனே முரட்டுத்தனமான புத்திசாலித்தனமாகவே சுருங்கிக் கொள்கிறது. மனித உடல் வெறுமனே உண்பதாலும், பருகுவதாலும் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது என நம்புவதற்கு ஒப்பானதிது. ஆனால் உடலுக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் அறிவையும், ஆன்ம மனத் தேடல்களையும் போலான தர்க்கரீதியிலான வரையறைகளே நான் மேலே சொல்ல முற்பட்டது. யார் வேண்டுமானாலும் கவிதை எழுதிக் கொள்ளலாம் / எழுதி விடலாம் ஆனால் அது எவ்வாறு கவிதை ஆகிறது அல்லது கவிதையாக ஆகவில்லை என்று சொல்வதற்கும், நம்புவதற்கும் சில அடிப்படையான விசயங்கள் இருக்கின்றன. ‘SURVIVAL OF THE FITTEST’ எனும் கூற்று கவிதைக்கும் பொருந்தும். நல்ல கவிதையொன்று எல்லாவற்றையும் கடந்து தனக்கான தனித்தன்மைகளால் தொடர்ந்து உயிர் வாழும். நல்ல வாசகன் அதன் உயிர்ப்புடனே பார்ப்பான். இன்னும் சற்று விரிவாகவும் சொல்லலாம்.

   மிகப் பழைமையான தமிழ் இலக்கியச் சூழலில் கவிதைகளின் வரலாறுகள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே துவங்கிக் கொள்கின்றன. மொழியின் சவால்கள் நிறைந்த பயன்பாட்டு உத்திகளுக்கென, அறிவுத்தளத்தின் வழியே தர்க்க ரீதியிலான விதிகள் அப்பொழுதே இலக்கண வகையமைப்புகளாக தொல்காப்பியரால் உருவாக்கப்பட்டு, பேச்சு, எழுத்து, சொல் முறைக்கென அடிப்படை கட்டுமானங்கள் இங்கு பண்படுத்தப்பட்டன. இவைதான் ஒலியின் அடிப்படையில் மாத்திரைகளாகவும், சேர்ப்பு, பிரிப்பு இலக்கண விதிகளாகவும் உருக்கொண்டன. இதன் வழியே தான் ஆதிகாலத்தில் அரசருக்கான, கடவுள்களுக்கான புகழ் பாடல்களாக, செய்யுள்களாக புலவர்களால் விரிவடைந்தன. சங்ககால இலக்கிய படைப்புகள், பக்தி இலக்கியங்கள் இவ்வாறே எழுதப்பட்டன. இதில் உணர்வுகளின் வகைமைகளை இலக்கணப் பிரிவின் அடிப்படையிலே சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்கு இணையாக ஒரு புறத்தில் நாட்டுப்புற மக்கள் தங்கள் வாழ்வின் அனுபவக் குறிப்புகளைக் கொண்டே வாய்ப்பாட்டுகளைத் தங்களின் தினசரி வாழ்வின் ஊடே அற்புதமாக பயன்படுத்திக் கொண்டு அதைப் பெருக்கி வந்தனர். பேச்சு வழக்கின் ஊடாக, தங்களது சந்தோசங்களை, துக்கங்களை, கடவுள்களை, காதல் பிரியங்களை பாடல்களாக அவர்கள் பகிர்ந்து கொண்டனர். மிக எளிதாக சாளரத்தை அது திறந்து வைத்தது. இதைப் போன்றுதான் மரபுக்கவிதையும் அதிலிருந்து புதுக்கவிதையும் அதிலிருந்து வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைகளும், நவீன கவிதையும், பின் நவீன கவிதையும் வளர்ச்சி மாற்றம் கொண்டன. இவை எல்லா தேசங்களிலும் குறிப்பிட்ட மாற்றங்களுடன், நிகழ்காலத்தின் அனைத்து விதமான சாரம்சங்களின் மாற்றங்களுடன் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வந்திருக்கின்றன. தற்போது உள்ள தமிழ்ச் சூழலில் கவிதை மாதிரிகள் மிகவும் அசட்டுத்தனமாகத் தொடர்ந்து உருவாக்கப்பட்டு பல வகைகளில் பகிரப்பட்டு குவிக்கப்படுகின்றன. அந்தக் குவியலிலிருந்து அசலான, நல்ல கவிதையொன்றை எடுப்பதென்பது மிகவும் சவாலானது. தமிழ் நாட்டில் 7 கோடி பேர் இருக்கிறார்கள் என தோராயமாக வைத்துக்கொண்டால், 9 கோடி பேர் கவிதைகள் எழுதுகிறார்கள். நிறைய பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களில் கவிதைகள் எழுதுகிறார்கள்! நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது. சிறிய காகிதத்துண்டும் பேனாவும் இருந்தால் கவிதை எழுதிவிடலாம் என்ற வெற்று வரையறையைத் தான் நான் வெறுக்கிறேன். கவிதைக்கான எளிய கோட்பாடுகளையும், உலகளாவிய அதன் வீச்சுக்களையும், அதன் வளர்ச்சியையும், நம் நிலத்தில் அது கடந்து வந்திருக்கும் பாதைகளையும் கற்றுக் கொள்ள விரும்பாமல், முயற்சிக்காமல், அதன் புற வடிவத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு செய்யப்படும் இந்தகைய செயல்பாடுகள் அதன் ஆன்மாவை முழுவதுமாக சிதைத்துக்கொண்டிருக்கின்றன. யாரும் உங்களுக்கு இது சார்ந்த அடிப்படைகளையும், புரிதல்களையும் தேடி வந்து சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் நீங்கள் தொடர்ச்சியான தேடல்களின் வழியாக இவற்றை அறிந்து கொள்ளமுடியும். இவற்றிலிருந்து எது கவிதையாகிறது என்பதன் சூட்சமத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். பிறகு நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வெற்றுச் சொல் கூட்டங்களை நீங்களே கைவிடத் துணிவீர்கள். அந்தப் புள்ளிதான் கவிதை குறித்த மிகுந்த நேர்மையான ஒரு இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அதன் வழியான தொடர்ச்சியான செயல்பாடுகளால் ஒரு நல்ல கவிதையேனும் உங்களால் எழுதிட முடியும். இதற்குப் பிறகுதான் ஒவ்வொருவருக்குமான புதிய மொழிக்கட்டமைப்பை தனியாகத் தேர்ந்தெடுத்து, அவரவரின் கவிதைகளின் வழியாகத் திரும்பத் திரும்ப எழுதிப்பார்த்து தனித்து, திடமாக நிற்கக் கூடிய இடத்திற்கு வந்து சேர முடியும். இந்தத் தளத்திற்கு வருவதற்கு நிறைய பயிற்சிகள் தேவைப்படுகின்றன. ஒரு வாகனத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு மேற்கொள்ளும் முறையான பயிற்சிகளிலும் இன்னும் தீர்க்கமானவை அவை என்று நிச்சயமாக நம்புகிறேன். தொடர்ந்து உருவாக்கப்படும் ‘போலச்செயல்பாட்டு’ வடிவங்களினாலாலான கவிதை மாதிரிகள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் வெற்று அனுபவத் துணுக்குகள் இங்கு ஏராளமாகக் கிடைக்கின்றன. அவை உற்பத்தி மனநிலையின் வெளிப்பாடான பொருள்களைப் போலானவை. அவற்றிற்கு படைப்பமைதியின் எந்தப் புலன்களும் இருப்பதில்லை. கவிதை தனக்கு உள்ளும் புறமுமாக நிகழ்த்திக் காட்டும் படைப்பு மனநிலை என்பது தர்க்க ரீதியில் இவற்றிற்கு முற்றிலும் நேரெதிரானது.

கவிஞர் என்று ஒருவர் தன்னை ஏன் இந்தச் சமூகத்தில்

அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

   இந்த வாழ்வெளியில் ஒருவன் தன்னை சாதாரண மனிதனாகவும் / சக உயிரியாகவுமே அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் / வேண்டும் என தீர்க்கமாக நம்புகிறேன். கவிதை எழுதுவதும், கவிஞர் என்ற பிரிவும் அப்படி ஒன்றும் தெய்வீகத்தனமான ஒன்று அல்ல. அவ்வாறு வரையறுத்துக் கொள்வதற்கான எந்த அவசியமும், அளவுகோலும் நம்மிடம் இல்லை. கவிதைகள் என்பவை வெறுமனே வாழ்வை சொல்லிக் கொண்டிருப்பவையல்ல, எல்லாவகையிலும் அதன் பிரமாண்டத்தை எளிமையாக, நிதானமாக, தனித்துவமாக உணர்த்திக்கொண்டிருப்பவையே. வெறுமனே சொல்வதற்கும், உணர்த்துவதற்குமான இடைவெளிகளின் அரசியல் மிகப்பெரியது. அக்கவிதைகளை எழுதுவதற்கான தொடர் தேடல்களே அறம் சார்ந்த மிக நெகிழ்ச்சியான தருணங்களுக்கு அருகில் உங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது. அங்கு கண்டடைவதை கவிதையாக வாசகனுக்குக் கடத்தும் நிகழ்வின் பிரமிப்பான நொடியில், அந்த சிறிய காலத்தில் மட்டுமே ஒருவர் தன்னை கவிஞராக அடையாளப்படுத்திக் கொள்ள அல்லது நினைத்துக் கொள்ள முடியும்.

கவிஞர் என்பவர் அக்கவிதையையும் வாசகரையும் இணைக்கும் ஒரு சாதாரண புள்ளி. எழுதப்பட்ட கவிதைகள் பொதுவெளிக்குச் சொந்தமானவையே. அதை சொந்தம் கொண்டாடுவதற்கு படைப்பாளியிடம் எந்த ஒன்றும் இருப்பதில்லை. மேலும் தமிழ் கவிதைச் சூழலில் கவிஞர் என்ற பதம் சற்றே அதிகமான புழக்கத்தினாலும், மலிவான தேவைக்கான யுத்திகளாலும் அதன் தனித்தன்மையை இழந்து நீர்த்துவருகிறது ஆகவே அதை அடையாளப்படுத்திக் கொள்ளாமலிருப்பதுவே நல்லது. இன்னும் சில எளிய காரணங்களால் கவிஞர் என அடையாளப்படுத்திக் கொள்வதென்பது மிகவும் தர்மசங்கடமானது. மேலும் பொதுவெளியில் இப்போது கவிஞராக இல்லாத ஒருவரைக் காண்பதுதான் அரிதிலும் அரிதானது ஆகையினால் அவ்வாறு இருக்கவே பெரிதும் ஆசைப்படுகிறேன்.

முதல் கவிதை இன்றும்  நினைவில் இருக்கிறதா? ஆம் எனில் அது எதைப்பற்றியது? அதைப் பகிர்ந்து கொள்ள இயலுமா?

எனது நினைவில் மங்கலான வடிவத்தில் ஒரு ஓரத்தில் அது இருக்கிறது, ஏழாவது படிக்கும் போது எழுதியது,

“ஒரு வருடத்தின் அருமையை

வகுப்பில் தோல்வியுற்ற மாணவனிடம் கேட்டுப்பார்.”

… என்று தொடங்கி, மாதம், நாள், நிமிடம் என்பதாகச் சென்று இறுதியில்,

“ஒரு நொடியின் அருமையை ஓட்டப் பந்தயத்தில்

இரண்டாவதாக வந்தவனிடம் கேட்டுப்பார் புரியும்.” என்று முடியும்.

சுயமுன்னேற்றம் குறித்த கவிதை மாதிரி அது. இதைத்தான் எனது தமிழ் சிஸ்டர் வகுப்பில் பாராட்டினார். பிறகு நிறைய எழுதியிருக்கிறேன் அவையெல்லாம் ஒரு நல்ல கவிதை எழுதுவதற்கான பயிற்சிதான். சற்று மேம்பட்ட சில கவிதைகளை கல்லூரியின் இரண்டாமாண்டில் (2004) இருந்து எழுதத் துவங்கியிருந்தேன். அதிலிருந்த ‘ஏதாவதொன்றிருக்கிறது’ எனும் கவிதைதான் எனது பெயரிலே ‘உயிர்மையில்’ வெளியானது. ’வார விடுமுறையின் கடைசி நிமிடங்கள்’ எனும் கவிதைதான் ‘புதிய காற்று’ இதழில் எனது புனைபெயரில் வெளியான முதல் கவிதை. அந்தக்காலக்கட்டத்தில் எழுதியவையெல்லாம் எனது டைரியில் பத்திரமாகத் தொகுத்து வைத்திருக்கிறேன். அவைதான் முதல் தொகுப்பின் கவிதைகளாக வந்திருக்கின்றன.

கவிதைகளில் படிமங்களை அதிகம் பயன்படுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதீதமான படிமம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது கவிதைகளின் தரத்தை குறைத்திருக்கிறது என்கிற எண்ணம் வருகிறதா?

   கவிதை வெளிப்பாடுகளில் மொழியின் பிரத்யேகத் தன்மைகளுக்காக படிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. படிமங்களின் பயன்பாடுகளும் அதன் தகவமைப்புகளும் உலகம் முழுவதுமிருக்கும் கவிதை வெளிப்பாட்டு உத்திகளில் ஒன்றுதான். கவிதைக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் தனித்த மொழியானது, செய்தித்தரவுகளின் வரையறைகளிலிருந்தும், வெறுமனே அனுபவத்தைக் காட்சிப்படுத்தும் விவரணைத் தன்மைகளிலிருந்தும் சற்றேனும் மேம்பட்டது என நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நன்கு அறிந்திருக்கும் மொழியின் சொற்களிலிருக்கும் நேரடியான, ஸ்தூலமான பொருளிலிருந்தும், அதன் தினசரிப் பயன்பாடுகளில் நீர்த்துப்போன வழித்தடத்தில் இருந்தும் ஒரு கவிதையின் மொழிக்குள் அவற்றை வேறுபடுத்திக் காண்பிப்பதற்குப் படிமங்களின் கூர்மையான வெளிப்பாட்டு முறைகள் தேவையாக இருக்கின்றன. இவையே ஒரு கவிதையின் நிகழ்வை பன்முகத்தன்மை கொண்ட புரிதலை நோக்கி நகர்த்துகின்றன. மேலும் அதிகமான சொற்பிரயோகப் பயன்பாட்டிற்கான இடங்களில் அதைத் தவிர்த்து, படிமங்களின் குறிப்புகளால் உணர்த்தவும் முயற்சிக்கின்றன. கவிதை மொழிக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனுபவக் குவியல்களின் சாராம்சங்கள் எந்த அளவிற்கு உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றனவோ, அதே அளவிற்கான ஆன்ம ரீதியிலான மெய்மைத் தன்மைகளின் சாரம்சங்களாலும் நிறைந்திருக்கின்றன, இதுவே படிமங்களின் மூலமாக ஒரு கண்ணியை உருவாக்கவும், திறந்திடவும், விலகிடவுமான பல வழிகளை கவிதைக்குள் செய்து காண்பிக்கின்றன. பிரமிளும், நகுலனும் யதார்த்த உலகிலிருந்து தங்களை வெளிப்படுத்தும்போது அதன் சகலவிதமான நெரிசல்களிலிருந்தும் தங்களது தனிமையைப் படிமங்களிலே உணரத்தருகின்றனர். இரண்டும் வேறு வேறான தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அதன் அனுப விரிதல் பொதுத்தன்மையிலானது. சி.மணி, பிரம்மராஜன், தேவதச்சன், தேவதேவன் கவிதைகளில் வெளிப்படும் படிமக்கூறு முறைகளின் அலகுகளும் அவை உருவாக்கிடும் நிகழ்வுகளின் சாராம்சங்களும் ஒன்றிற்கொன்று தனித்துவம் கொண்டவை. யுவன், ராணிதிலக் (முந்தைய தொகுப்புகள்), க.மோகனரங்கள் கவிதைகளில் செயல்பாட்டு விழுமியங்களாக உணரப்படும் படிமக்கூறு முறைகள் மேற்சொன்னவற்றிலிருந்து முற்றிலும் வேறு குரலினானவை. தமிழில் படிமங்களின் வெளிப்பாட்டு ரீதியிலான படைப்பு வகைகள் சற்று பெரியவை ஆனால் இவை எந்த அளவிற்கு முழுமையடைந்திருக்கின்றன, வாசகப்பரப்பில் சவாலான தனித்த பார்வையை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதற்கான ஒட்டு மொத்தமான விமர்சனப் பிரதிகள் நம்மிடம் இல்லை. கவிஞர்களின் தனியான படைப்பு மொழியின் லாவகமான செயல்பாடுகளே படிமத்தின் தேவைகளை எப்போதும் தீர்மானிக்கின்றன. படிமங்கள் மட்டுமே ஒரு கவிதையின் தரத்தை ஒரு போதும் தீர்மானிக்காது. கவிதையின் தனியான அனுபவ நீரோட்டத்தில் பங்கு கொள்ள வாசகனை இழுத்துச் செல்லும் ஒரு கருவி மட்டுமே அது. இவற்றை இப்போதும் பயன்படுத்திக் கொண்டு வரும் கவிஞர்களும் இருக்கிறார்கள்.

   யதார்த்த ரீதியிலான உரையாடல்களின் சொற்களாக, சிறு புனைவின் காட்சிப்படுத்தல்களாக, அன்றாட வாழ்வின் மீதிருக்கும் நெகிழ்ச்சிகள் / உணர்ச்சிகள் தளும்பும் சொற்களாகக் கவிதைகள் தம் எல்லைகளை நிகழ்காலத்தில் சற்று குறுக்கிக்கொண்ட பிறகு படிமம் சார்ந்த தேவைகள் கவிதை மொழியின் இயங்கு தளத்திற்கு எப்போதாவதுதான் தேவைப்படுகின்றன. இப்பொழுது வரை தொடர்ச்சியாக கவிதை எழுதி வருபவர்கள் தங்களது முந்தைய இறுக்கமான படிமங்களின் வழியான வெளிப்பாட்டு முறையிலிருந்து, அடுத்தடுத்தத் தொகுப்புகள் மூலமாக இவ்வெளிய வடிவத்திற்கு மாறிவந்திருப்பதற்கான நிறைய சாட்சிகள் மிகவும் வெளிப்படையானவை. வாசக மனநிலையின் பரவலான கவனிப்புகளுக்கான தன்மையின் மாற்றத்திற்காகவே இந்த நகர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. இப்படியான கவிதை மொழியின் பரப்பானது சற்று அதிகமாக நுகரப்படுவதன் வெளியில் படிமம், உருவகம், குறியீடு போன்றவற்றின் செயலலகுகளை கவனித்து உணரும் நுட்பம் தானாகவே குறைந்து விடுகிறது அல்லது முற்றிலுமாக வலுவிழந்து விடுகிறது. அதீதமான படிமக் கூறுமுறைகள் என்பவை ஒரு கவிதைக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அளப்பரிய விசயத்தின் சாரத்தை ஒன்றிணைக்காமல் நீர்த்துப்போகவே செய்கின்றன அதை மறுப்பதற்கில்லை. சொல்ல வந்ததும், சொல்லியிருப்பதும் என ஒன்றுமே கைகூடாமல் கவிதைக்குள் தனித்து வெற்றுக் கூடாக அவை நிற்கின்றன. கவிதையில் படிமத்தை பயன்படுத்திடுவதென்பது மிக எளிமையான காரணியின் வடிவமாக இருக்க வேண்டுமே தவிர, குதர்க்கமான வடிவ யுத்திக்கான முறையாக அது மாறிவிடக்கூடாது. (இவ்வாறு எழுதிக்குவிக்கும் பலர் இங்கு உள்ளனர்) மேலும் மொத்தக் கவிதையையும் படிமங்களின் வழியே ஒரு போதும் வெளிப்படுத்திட முடியாது என்ற குறைந்த பட்சப் புரிதலிலிருந்தே அது சார்ந்த நுட்பமான புள்ளி துவங்குகிறது. கவிதைக்குள் படிமத்தைப் பயன்படுத்திடும் இடம், அளவு குறித்த தனித்த பார்வையே அக்கவிதையை இன்னும் விசாலமானதாக மாற்றிக்காண்பிக்கிறது.

குறைவாக எழுதுதல் நன்று, அதிகமாக எழுதப்படுவது மோசம் என்கிற இலக்கிய மனநிலை இங்கே நிலவுகிறது. இதில் நீங்கள் எங்கே நிற்க விரும்புகிறீர்கள்.?

  முதலில் எண்ணிக்கையின் அடிப்படையில் படைப்புகளை அணுகுவது தர்க்க ரீதியிலான தீர்க்கமான செயலாக இருக்காது. படைப்புகளின் வழியாக வாசக மனநிலையிலும் அதன் வெளிப்பாடாக சமூக மனதின் கூட்டு மனங்களிலும், கலை இலக்கியத் தடத்திலும் அது நிகழ்த்தியிருக்கும் பெரும் மாற்றங்களும், நிரந்தரமானத் தடங்களும் மிக முக்கியமானவை. மிகச் சில அடிப்படையான உதாரணங்களை வரிசையாகப் பார்ப்போம். கல்கி மற்றும் சாண்டில்யனின் கற்பனைகள் நிறைந்திருந்த பெரும் புனைவுகளின் வடிவங்களும், வெளிப்பாடுகளும் முற்றிலும் வேறானவை. மிக மேலோட்டமான கதையாடலின் வழியே புராண வாழ்வுவெளியின் சாரத்தை வெளிப்படுத்தியவை அவ்வெழுத்துக்கள். அவற்றிற்கு இன்றும் வாசகர்கள் இருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்புகளில் இயங்கிக்கொண்டிருக்கும் கலைத்தன்மையும், வீச்சும், படைப்பு வாதமும், அறம் சார்ந்த தேடல்களும், ஜெயகாந்தனின் படைப்புகளின் மையமான உணர்ச்சிகள் நிறைந்திருந்த, வர்க்கப் பிரிவினை போலிகளுக்கான எதிர்வினைத் தன்மையிலான படைப்பு மனதும், விளிம்பு நிலை மக்களை பிரதிநிதித்துவமாக காட்டிய தன்மையும் அடிப்படையில் வேறுபாடுகள் நிறைந்திருப்பவை. வாசிப்பின் விரிவான தளத்தில் இவ்வேறுபாடுகளை வாசகனொருவன் எளிதாக அடையாளம் காணமுடியும். எழுத்து என்பதை, குறைவாக அல்லது அதிகமாக என்ற மிகக் குறுகிய வரையறைக் கண்ணோட்டத்தின் மூலமாக நன்று / மோசம் எனத் தரம் பிரிப்பதென்பதும், வரிசைப்படுத்துவதென்பதும் மிகுந்த ஏமாற்றங்கள் நிறைந்திருக்கும் ஒன்றாகவே நான் பார்க்கிறேன். ஜி.நாகராஜனின் மொத்தப் படைப்புகளிலும் (மிகக் குறைவானவை) அவர் கடத்தியிருக்கும் சமூக மனதின் நோய்க்கூறுகளின் வாழ்வெளியையும், அதில் ஒட்டுமொத்தமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த எளிய மக்களின் வாதைகளையும் அவரைப் போல் இன்றுவரை யாரும் – தமிழில் – பட்டவர்த்தனமாகக் காண்பிக்க முடிந்ததில்லை. இவை போன்ற சாராம்சத்தை இன்று எழுதிக்குவிப்பவர்கள் அவரின் நீட்சியாகவே இருக்கிறார்களே தவிர அசலான முதல் வரிசையில் வரமாட்டார்கள். பாரதியாரும், க.நா.சுவும், நகுலனும், பா.சிங்காரமும், தி.ஜாவும், கு.பா.ராவும், சுந்தர ராமசாமியும், மௌனியும், அசோகமித்திரனும், கிராவும் நவீன படைப்பு சார்ந்த சூழலில் மிக முக்கியமான அசலான படைப்பாளுமைகள் (இவை சில உதாரணத்திற்கான வரிசை முறை அவ்வளவே) ஒவ்வொருவருக்கான சிறப்பியல்புகளை அவர்களின் படைப்புகளின் வழியாக வாசகன் எளிதாக அடையாளம் காண முடியும். இந்த வேறுபாட்டை வாசகர்கள் புரிந்து கொள்வது மிக அவசியம். நம் சூழலில் ஜெமோவும், எஸ்ராவும், சாருவும் பல்வேறு தளங்களில் எழுதிக்குவித்திருப்பதை யாரும் எளிதாக மறுக்க முடியாது. படைப்பாக்கத்தின் எல்லா எல்லைகளின் உச்சியையும் அவர்கள் தொட்டுக் காண்பித்திருக்கிறார்கள். ஒரு படைப்பை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவுமான வாசகனின் முடிவு மிக எளிய காரணங்களிலானது. ஆனால் விமர்சன அடிப்படையில் அதன் இயங்குநிலைகளை, படைப்பமைதியின் நுட்பமான விசயங்களை, அதன் உள்ளார்ந்த அரசியலின் தன்மைகளை தீர்க்கமான முறையில் சொல்லி ஏற்றுக் கொள்ளவும், நிராகரிக்கவுமான செயல்பாடே சனநாயகத் தன்மையிலானது. ஒரு பிரதிக்கான விமர்சனப் பிரதியே (முதுகு சொறிந்திடும் முறையல்ல – கறாரான மதிப்புரை) அதன் எல்லாவகையிலும் மிக நேர்மையான இடத்தை வாசகனுக்குக் காணத்தருகிறதே தவிர, குறைவான அல்லது நிறைய என்ற அபவாத சொற்களால் ஒன்றும் இவை நிலைபெறுவதில்லை.

   ‘குறைவாக எழுவது ஒரு நோய்’ என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு பேட்டியில் சொன்ன ஞாபகம். அதே போல் அதிகமாக எழுதிக் குவிப்பதும் ஒரு பெரும் மனநோய் என்றே குறிப்பிட விரும்புகிறேன். மேலும் அதனுள் இயங்கிக் கொண்டிருக்கும் மனோதத்துவ சிக்கல்கள் என்பது குறைவாக எழுதும் நோயை விட இன்னும் தீவிரகதியிலானது. படைப்பாக்க மனநிலையின் கூர்மையற்றப் படிநிலைகளை வெறும் கற்பனா சக்தியின் அல்லது கைவந்திருக்கும் படைப்பு மொழியின் அடிப்படையில் வெறுமனே இயந்திர கதியில் உருவாக்கிக் காண்பிப்பது. ஒரு படைப்புக்குள் இருந்திட வேண்டிய அசலானத் தன்மையின் வேர்களை இவ்வாறான உற்பத்தி மனநிலையிலான படைப்புகளில் ஒரு போதும் காணமுடியாது – மபு.னின் கடைசித் தொகுதி ‘நீராலானது’ என்றே நான் கருதுகிறேன். பிறகு வந்திருப்பவை எல்லாமும் அதே மனநிலையினாலான வேறு வேறு சொற்களின் வறட்சியான தன்மைகளையும், நீர்த்துப் போன அதே அகம் சார்ந்த வடிவமைப்புகளையும் உள்ளடக்கியவையே. (நல்ல கவிதைகளே இல்லை என்பதல்ல, ஒட்டுமொத்த ஒப்பீடுகளின் எண்ணிக்கையில் அவை மிக மிகக் குறைவு) இத்தகைய கவிதைகளுக்கான பெரும் நிகழ்வில் அவர் வந்தடைந்திருக்கும் புள்ளி என்பது மிகவும் வீழ்ச்சிகள் நிரம்பியிருப்பது. அவருக்குக் கிடைத்திருக்கும் ஊடக, பதிப்பு வசதிகளும் இன்னும் பிறவும் வேறு நவீன கவிஞனொருவனுக்குக் கிடைக்குமானல் அவரை விடவும் சிறந்த கவிதைகளின் தொகுப்புகளைத் தந்திருக்கவே முடியும். ஒரு தொகுப்பை வெளியிடுவதில் அவருக்கும் மற்றவர்களுக்குமான வசதிகளின், அரசியலின் ஒப்பீட்டின் இடைவெளி எதன் மூலமும் நிரப்பிட முடியாதது. கடைசி பத்தாண்டுகளில் மபு. வந்து சேர்ந்திருக்கும் அரசியல் மற்றும் கவிதைக்கான இடத்தை நீங்கள் அறிய விரும்பினால் 2009 காலகட்டங்களிலிருந்து உயிர்மையில் எழுதப்பட்ட தலையங்கத்தின் வரிகளிலிருந்தே துவங்க முடியும். அரசியல் நிலைப்பாடுகளில் அவர் மேற்கொண்ட செயல்பாடுகளும், அரசியல் சார்ந்த கவிதைகளும் வெற்று கோசங்களினாலானவை, மேலும் அதற்குள்ளிருக்கும் போராளியின் முகம் “அரசியலில் இதெல்லாம் சாதாரணம்” என சதா சொல்லிக்கொண்டிருக்கும் கேளிக்கை வகையிலானது. – தொடர்ச்சியாக அவரின் முழுவதுமான கவிதைத் தொகுப்புகளை வாசிப்பவர்கள் கவிதையில் அவர் இன்று அடைந்திருக்கும் வறட்சியின் தன்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

   அதிகமாக எழுதப்படுவதென்பது எதோ ஒரு சாதனையைப் போல பரப்பப்படுகிறது. (சிலர் எழுத்தை மட்டுமே முழு நேர வேலையாக கொண்டுள்ளதாலும்) இதற்கு வணிக/லாப நோக்கம் ஒரு வகையில் பிரதானமானது. அதே போல் குறைவாக எழுதப்படுவது மட்டுமே தரமான இலக்கிய குணாதிசயமாகக் கருதப்படுவது தீவிர இலக்கியவாத குழுக்களின் அசட்டையான வாதமே. படைப்புகளில் இருந்திடும் கலைத்தன்மையின் நுட்பமான அழகியலும், வெளிப்பாட்டு வடிவ முயற்சிகளில், கருப்பொருள்களில் இருந்திடும் தேடல்களும், வேறுபாடுகளும் புத்துணர்ச்சியான தன்மைகளுமே படைப்பின் தரத்தை நிர்ணயிக்க முடியுமே தவிர மேற்சொன்ன எண்ணிக்கையின் அடிப்படையில் அதை ஒரு போதும் நிரூபிக்க முடியாது. இரண்டிலும் இருக்கும் குறைகள் மிகத் தெளிவானவை. அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எழுதப்பட்டிருக்கும் படைப்புகளை முழுவதுமாக வாசித்து அதன் நிறை, குறைகளை, அதன் உள்ளார்ந்த தன்மைகளை தீர்க்கமாக விமர்சன முறையில் பட்டியலிடுவதே தர்க்க ரீதியிலான வழி. அதை செய்வதற்கு இங்கு விமர்சகர்கள் மிகக் குறைவு. தொடர்ச்சியான படைப்பு மனநிலையை பாதுகாத்துக் கொள்வதும், அதை தகவமைத்துக் கொள்வதும், இலக்கியத்தளத்தில் படைப்பின் வழியாகத் தொடர்ச்சியாக செயல்பட்டுக்கொண்டிருப்பதுமே என் நிலை. படைப்பு அதன் வாசகனை அதுவாக சென்று சேர்ந்து கொள்ளும் நீங்கள் அதற்கு எந்த வகையிலும் முட்டுக்கொடுக்க வேண்டியதேயில்லை.

கவிதை எழுத வேண்டும் என்கிற அந்த எண்ண ஓட்டம் எப்படி மனதில் வருகிறது? கவிதைக்கு முன் பின் உருவாகும் படைப்பு மனநிலை பற்றி சொல்ல இயலுமா?

   திறந்து வரவேற்றிடும் வாழ்வின் பாதைகளில் ஒரு கண்ணியில் நான் மிகத்தீவிரமாகச் சோர்வடைய ஆரம்பிக்கிறேன். அன்றாடத்தின் லாயக்கற்ற தனத்தில், கசப்பில், வலியில், எனக்கான ஒரு ஆசுவாசத்தை நான் தேடத்துவங்குகிறேன். அது, நல்ல படம் ஒன்றைப் பார்ப்பதிலும், இசை கேட்பதிலும், வாசிப்பிலும், எழுத்திலும் நிறைவடைகிறது. வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதல்ல, அதன் சூட்சமத்தை புரிந்து கொள்ள வைப்பதுதான் கலையின் முதல் படியாக இருக்கிறது. நேரடியான பொருள் கூற்று சார்ந்த, அறிவு சார்ந்த வாதங்கள் எந்த இடத்தில் சலிப்படையத் துவங்குகிறதோ, கலையின் தேவைகளும், நோக்கங்களும் அங்கிருந்தே உருக்கொள்கின்றன. கவிதைகள் எழுதப்படுவதன், வாசிக்கப்படுவதன் நிகழ்வில், உணர்வுகள் சார்ந்த அர்த்தப் பொறிகளின் அளவிற்கு, அதன் ஆன்ம ரீதியிலான புரிதலின் காரணிகள் வலுவாக ஒரு இருப்பை அதற்குள் உருவாக்கிக் காண்பிக்கின்றன. அவைதான் வடு போல உங்களைப் பற்றிக்கொள்கின்றன. அறிவின் புள்ளியும், பிரபஞ்சத்திற்கான மனிதத்துவப் புள்ளியும் நேர்க்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் தளம்தான் கவிதையின் அகம் சார்ந்த விளக்கங்களை இன்னும் விசாலமாக்கிக் காண்பிக்கின்றன. பிரபஞ்சத்தின் வெறுமையை உணர்த்திக் கொண்டிருப்பவைதாம் கவிதைகள். உலகின் மிகத் தனிமையான மனிதனாக உங்களை உணரவைப்பதுதான் கவிதையின் செயல்பாடு. அறிவின் ஒரு புள்ளியால் மட்டுமே இப்பிரபஞ்சத்தை உங்களால் அளந்திட முடியாத போது கலை இலக்கியங்கள் அதற்கு பெரும் உதவி செய்கின்றன. வெறுமனே நீங்கள் மனிதர்களை மட்டுமே தேடிக்கொண்டிருந்தால், இந்த பிரபஞ்சத்தின் ஒரு ஓரத்தில் கைவிடப்பட்டுக் கிடப்பீர்கள். எல்லா உயிரினங்களுக்குமான பிரதேசமாக பிரபஞ்சத்தை நீங்கள் பார்க்க முற்படும் போதுதான் அதன் எல்லைகள் இன்னும் விரிவடைகின்றன. கவிதைகள் இதற்கான எண்ணற்றத் திறப்புகளை, மனத்தேடல்களின் வழிகளை மிக நெருக்கமாகக் காண்பிக்கின்றன. எழுதுபவரின் / வாசிப்பவரின் நிகழ்காலத்தில் அது பரவி தனியான நிகழ்வொன்றின் காலமாக உருவாகிக்கொள்கிறது. நன்கு அறிந்திருக்கும் ஒரு மொழியிலிருந்து அதன் எண்ணற்றச் சாத்தியப்பாடுகளின் வழியே அனுபவத்தை இவ்வாறான நுட்பமான ஒளிக்கீற்றாக வெளிப்படுத்திடுவது மிகவும் அசாதாரணமானது.

  நீர்மையான பிரியத்தின் சாயலைக்கொண்ட ஒரு கண்ணீரின் மௌனத்திலிருந்தும், காய்ந்து உங்களுக்குள் வடுவாக மாறிக்கொள்கின்ற துயரங்களிலிருந்தும், பூத்துக்குலுங்கும் மலர்களின் சந்தோசங்களிலிருந்தும், அன்றாடங்களின் சூழல்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் பார்வை நுட்பங்களிலிருந்தும் தொடர்ச்சியாகச் சேகரமாகும் நேரடியான / மறைமுகமான அனுபவக் குவியல்களிலிருந்தே ஒரு கவிதைக்கானத் தேடல் புள்ளி துவங்குகிறது. நம் வாழ்வெளியின் சிறு சிறு துண்டுகளில் இவை பிரதிபலித்திடும் தனிமையான தருணங்களின் மீது குவியத்துவங்கும் மனமானது இப்பரப்பின் ஒட்டுமொத்தமான பிரதிநிதித்துவத்தை ஒரு மொழியின் வழியாக காண்பிக்கவும், பகிரவும் முயல்கின்றது. அதுவே கவிதை மொழியாக அனுபவ மாற்றம் கொள்கிறது.

  நைஜீரியக் கவிஞர் கிறிஸ்டோபர் ஓக்கிக்போ ‘கவிதை என்பது வாழ்வுக்கு மாற்றல்ல, வாழ்வைக் குறைநிறைப்புவதில் அது ஒரு வழி மட்டுமே’ என்கிறார். (மொபு-பிரம்மராஜன்). ஒரு வழியில், எப்போதும் எனக்கு மிக நெருக்கமாக தோன்றிக்கொண்டிருக்கும் சொற்கள் இவை. வெறுமனே ஒரு அனுபவத்தை வைத்துக்கொண்டு மட்டுமே ஒரு கவிதையை உங்களால் நிறைவாக எழுதிட முடியாது. (அது வெற்று விவரணையாகவே உருப்பெரும்) அவ்வனுபவ உள்ளடுக்கில் தனித்திருக்கும், சதா நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வின் நீட்சிகளை உள்வாங்கி உணரும் தருணமே அதை கவிதையாக்கும் மனநிலைக்கருகில் உங்களை அழைத்துச் செல்லும். நிறைய சோம்பலான மனநிலையின் பொழுதுகளில் கவிதைக்கான மொழியை அடைந்து விடுவது பெரும்பாலும் உவப்பாக இருப்பதில்லை. சில அவதானிப்புகளை, ஒரு நொடியின் நிச்சயமற்ற தன்மையை, காட்சிப்படிமங்களை அன்றாடத்திலிருந்து உள்வாங்கிக்கொள்ளும் நேரம் மிகவும் தனித்துவமானது. மேலும் அதன் உள்ளார்ந்த குவிமையத்தை உணர்ந்து,  உலக இரைச்சலின் தொடர்ச்சியான சேதங்களுக்கிடையில் அவற்றை எழுதுவதற்கான நேரம் வேறொன்றாகவும் இருக்கிறது. எழுதப்படுவதற்கு முன்பாக இவையனைத்தும் மனதிற்குள் வரிசையாக அதன் இயக்க நிலைகளை உருவாக்கிக் கொள்ளும் தருணங்கள் மிகவும் அலாதியானவை. அன்றாடத்தின் எல்லாவற்றிலிருந்தும் உங்களைத் துண்டித்துவிடும் அவஸ்தையின் தனிமை கொண்டிருப்பவை. எழுதிடும்போது படைப்பு மனநிலையில் நித்தியத்துவமான கணத்தில் இவை இன்னும் கூர்மையாக்கப்பட்டு கவிதையாக உருவாகிறது. படைப்பு மனநிலையின் தீவிர கதியில் நிதானமான இச்செயலலகுகள் எழுதி முடிக்கப்பட்ட பின்பு மிகவும் ஆசுவாசம் கொள்ளும் தன்மை பேரமைதியின் லயமும் வீச்சும் கொண்டிருப்பவை. பிறகு அக்கவிதை பல்வேறுபட்ட சாத்தியப்பாடுகளின் வழிகளை அடைவதற்கு திரும்பத்திரும்ப எழுதிப்பார்க்கப் படுகிறது. (எல்லாக் கவிதைகளும் அல்ல, சில கவிதைகள் மட்டும்)

குறைவாக எழுதுதல், பொதுச் சமூகத்திலிருந்து விலகியிருத்தல், சமகால அரசியல் மீதான தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தங்களது கவிதைகளில் பேசாமல் இருத்தல்- இவையெல்லாம் நல்ல கவிஞனின் அடையாளம் என்கிற ஒரு கருத்துருவாக்கம் சில ஆண்டுகளாக இங்கே உருவாகி வந்து விட்டது என்று நினைக்கிறேன். அதில் உங்களை நீங்கள் எப்படிப் பொருந்திக் கொள்ள நினைக்கிறீர்கள்?

    இவை போன்ற வெற்றுக் கருத்துருவாக்கங்கள் எல்லாம் சில இலக்கியப் பிதாமகன்களால், அவர்களின் குழுக்களின் அடிப்படைகளில் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாகப் பரப்பப்பட்டு வருகிறது. அவர்களுக்குப் பின்னால் உருவாகிவரும் கிளிப்பிள்ளைகளும் அவற்றையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் எந்தத் தர்க்க ரீதியிலான அர்த்தமும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. இது அவர்களின் தனிப்பட்ட வசதிகளுக்காக, போதாமைகளுக்காக, நிகழ்கால படைப்பு சார்ந்த ஆற்றலின்மையை மறைப்பதற்காக மேற்கொண்டு வரும் சூழ்ச்சியான தடுப்பு மனநிலையின் ஒரு பகுதி என்றே கருதுகிறேன். தொடர்பு ஊடகங்களின் பெரும் வளர்ச்சியால் உலகமே சிறு கிராமமாக மாறிவந்திருக்கும் சூழலில் ஒரு படைப்பை பொதுத்தளத்திற்கு கொண்டுவந்து சேர்ப்பதும், அது குறித்த வெளிப்படையான விமர்சனக் கருத்துக்களைப் பிரதியாக பொது வாசகர்களுக்கென அங்கு நிகழ்த்திக் காண்பிப்பதுமே அறிவார்ந்த செயல்பாடாக இருக்க முடியும். இதுவே கவிதை சார்ந்த நேர்மையான கூட்டியக்கத்தை கட்டிஎழுப்புவதற்கான அடித்தளத்தை உருவாக்கும். எந்தவொரு படைப்பும் வாசகர்களுக்கான பகிர்தலிலே முழுமையை அடைகின்றன. இவை போன்ற அர்த்தமற்ற புறவயக்காரணங்கள் மட்டுமே நல்ல இலக்கியக் கவிஞர்களுக்கான தகுதியாக, அடையாளமாகக் கருதப்படுவதை முற்றிலுமாக நான் மறுக்கிறேன். மேலும் மிகவும் கேளிக்கை நிறைந்த கருத்தாகவே இந்தப் பிரிப்புகளை அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.

   கவிதைப்படைப்பானது பொதுவான வாசகர்களுக்காக எழுதப்பட வேண்டுமே தவிர ஒரு குழுவிற்கோ, அதன் கவிஞர்களுக்கோ மட்டுமேயான குறுகிய மனநிலையில் எழுதப்படக்கூடாது என்பதே என் வாதம். – தங்களது ஆத்ம திருப்திக்காக என எழுதுபவர்கள் அதை வெளியிட வேண்டிய அவசியமேதும் இல்லை – படைப்பை எழுதுவதற்கு முன்பாகவே இத்யாதிகளில் கவனத்தைக் குவித்து, தங்களுக்கென வட்டமிட்டுக் கொள்பவர்கள் படைப்பு ரீதியிலான முழுமையான அர்த்தங்கள் பொதிந்திருக்கும் அசலான படைப்புகளை உருவாக்கவும், உணர்ந்திடவும் முடியாமல் தனிமைப்பட்டுத் தேங்கிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்பவர்கள், அவர்களது தெருவைத் தாண்டிய ஒரு கவிதையைக் கூட எழுத முடியாது. அவர்களெழுதும் இத்தகையப் படைப்புகளை அவர்களே ஒருவருக்கொருவர் தாங்கியும், தூக்கியும் பிடித்துக்கொள்வதும், இதே அலைவரிசை கொண்டவர்களால் நுகர்வுப் பண்டமென மாற்றப்பட்டு கொண்டாடப்படுவதுமே இவற்றின் திரைமறைவிற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் சுழற்சிமுறையிலான வேலையாக உள்ளன.

   அதிகமாக அல்லது குறைவாக எழுதுதல் என்பது அவரவரின் தனிப்பட்ட படைப்பு மனம் சார்ந்த, அனுபவப்பூர்வமான சூழலின் நெருக்கடிகள் சார்ந்த, தனிப்பட்ட வாழ்வின் போதாமைகளுக்கான ஆசுவாசம் நிறைந்திருக்கும் வடிகால்களின் துல்லியமானத் தன்மைகளால் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றது. அப்படைப்புகளுக்கானத் தரத்தை, இடத்தை வாசகர்களும், விமர்சகர்களுமே அதன் நிறை குறைகளுடன் பொதுவெளியில் தீர்மானித்திட முடியும். – எண்ணிக்கை மட்டுமே ஒரு போதும் அளவீடாகாது – ஒரு நல்ல கவிஞனென்பவன் பொது சமூகத்தில் இருந்துதான் தனது படைப்புக்கான கருப்பொருளை அனுபவத்தின் மூலமாகக் கண்டடைகிறான். அதன் சமன்குலைவைத்தான் தனக்கான மொழியில் பிரதியாக்குகிறான். தனிமை நிறைந்திருக்கும் அவனது படைப்பு மனநிலையில் எப்போதும் ஒரு தாக்குதலை ஏற்படுத்திக் கொண்டிருப்பது பொது சமூக மனதின் குரல்தான். நமது சமூக துயரங்களின் ஆழத்திலிருந்துதான் ஒவ்வொரு தனிமனிதனுக்கான சொற்களும் உருவாகின்றன. ஏனெனில் சமூகமென்பது கூட்டான தனிமனிதத் தொடர் சங்கிலியின் இணைப்புதான். இதிலிருந்தே சமூக அரசியலுக்கானப் பொதுக்கண்ணோட்டம் உருவாகிறது. அரசியலுக்கான தர்க்க அறிவின் செயல்பாடுகள் மிகப்பெரியவை – அதை வெறுமனே கட்சி சார்ந்த நிலைப்பாடுகளுடன் குறுக்கி விட வேண்டாம் – இவ்வாறான சொற்களைச் சிலர் வெற்று கோசங்களாக வெளிப்படுத்துகின்றனர். சிலர் அதை, நிதான கதியில் ஒரு பெரும் பரப்பிற்கு கொண்டு வந்து அறம் சார்ந்த கேள்விகளாக முன்வைக்கின்றனர். இங்கு சமகால அரசியல் சார்ந்திடாத, ஒரு நிகழ்வென்பதும் கிடையாது. கண்களுக்குத் தெரியாத பல நுண் கண்ணிகளால் இவை ஒன்றோடொன்று பின்னப்பட்டிருக்கின்றன. இவற்றின் பாதிப்புகளில்லாமல் எந்த ஒன்றும் இங்கில்லை. இத்தகைய அரசியலைப் பேசிடாமல் நம் நிலத்தில் படைப்புணர்ச்சி சார்ந்த மனம் முழுமையடைந்திடாது. ஆகையால் இதிலிருந்து ஒதுங்கியிருப்பதென்பது வெறுமனே பூனை கண்களை மூடிக்கொண்டிருப்பது போலானதுதான்.

சமகாலக் கவிதைகள் அதிகமாக அரசியல் நீக்கம் பெற்றிருக்கும் இந்த காலகட்டத்தில் மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் அதிகமாக எழுதினாலும் அவரின் கவிதைகளில் இருக்கும் சமூகம் சார்ந்த அரசியல் குரல் என்பது  முக்கியமானது இல்லையா? கவிதைகள் அரசியல் நீக்கம் பெற வேண்டும் அல்லது அரசியல் பிரக்ஞையைப்

பெற்றிருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் நீங்கள் எதை எற்றுக் கொள்கிறீர்கள்?

   சமகால அரசியல் பிரக்ஞையுடனான படைப்புகளே, முன்னெப்பொழுதையும் விட தற்சமயம் மிகவும் தேவையுள்ள ஒன்றாகக் கருதுகிறேன். இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் தனிமனித சுதந்திரப் பிரச்சனைகளில், பண்பாட்டு, கலாச்சார, மொழித் தளங்களின் மீதான நெருக்கடிகளில், பொருளாதார, வேலை வாய்ப்பின்மை சார்ந்த பின்னடைவுகளில், சாதி, மத, வர்க்க நிலைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் ஏற்றத்தாழ்வுகளில், கருத்துரிமைகளுக்கெதிரான நிலைப்பாடுகளில், சூழலியல் சார்ந்த அக்கறையின்மைகளில் நிகழ்கால அரசியலின் செயல்பாட்டுக் காரணங்கள் எப்போதும் முழுமையாகப் பங்கு வகிக்கின்றன. இதுதான் சமூக பொதுப்பரப்பில் அனைத்து விதமான நோய்க்கூறுகளுக்கும், மனிதத்துவ வீழ்ச்சிகளுக்கும், சமமற்ற வாழ்வெளிக்கும் முதல் காரணங்களாக இருக்கின்றன. இவை தனி மனித அகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தொடர்ச்சியானத் தாக்குதல்கள் மிக வலுவானவை. இவற்றிலிருந்து ஒவ்வொருவரின் தனியான மனதை மீட்டெடுக்கவும், பாதுகாத்திடவும் கலைப்படைப்புகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதென்பது மிகவும் நம்பிக்கையான வழிமுறையே. ஆனால் தினசரிகளின் செய்திகள், கார்ட்டூன்கள், மீம்ஸ்கள், இன்னும் காமடி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் நிகழ்கால அரசியல் சார்ந்த அடிப்படையான சில வெளியீட்டு வடிவங்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு விடுகின்றன. இவற்றிலிருந்து வேறுபட்டு, பெரும்பரப்புடனான கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பதும் அதை கவிதையில் முழுமையாக வெளிப்படுத்துவதும், உணர்த்திக் காண்பிப்பதும் பெரும் சவால்களை உள்ளடக்கியிருக்கின்றன. இவ்வாறாக இல்லாமல் ஆழமில்லாத வெறும் கோசங்களாக இவை சுருங்கிவிடவும் கூடாது.

   பெரும் நிறுவனம் சார்ந்த எதிர்ப்பு மனநிலையே சிற்றிதழ்களின் தொடக்க வரலாறு. இவற்றிற்குள் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளர்கள், அதிகார மனநிலையில் கட்டமைக்கப்பட்டிருந்த மேலோட்டமான கருத்துருவாக்கங்களிலிருந்து முரண்பட்டு தங்களது படைப்புக் குரலின் வழியாக இவற்றிற்கு எதிரான அரசியலை முன்னெடுத்தனர். தொடர்ந்து கொண்டிருக்கும் அதன் நிலைப்பாடுகள் மிகவும் வலுவானவை. அரசியல் சார்ந்த குரலாக மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் ஒலிக்கப்படுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் இந்தக் கவிதைக் குரலின் தொடர் செயல்பாடுகளின் வழியாக அவர் ஒரு நிறுவனம் சார்ந்த முற்றத்தை அடைந்திருப்பதைத்தான் நான் வீழ்ச்சி என்று கருதுகிறேன். அவரது அரசியல் கவிதைக்குரலின் முக்கியம் என்பது இதில்தான் வெகுவாக நீர்த்துப்போகின்றது. இது ஒரு மோசமான உதாரணமாக, சமரசங்கள் நிறைந்த வழியாக நிலைபெற்று விடவும் கூடும். நிறுவனம் சார்ந்த ஒரு வட்டத்திலிருந்து பன்முகத்தன்மையான அரசியல் நிலைப்பாடுள்ள கவிதைகளை சுதந்திரமாக வெளிப்படுத்திட முடியாது. உங்களுக்கானத் தனிப்பட்ட புகழ், பெரும் பணம், அதிகாரம் போன்ற லௌகீகத் தேவைகளுக்காக, உணர்வுகளின் சுரண்டல்கள் மூலமாக நீங்கள் அசலான அரசியல் கவிதைகளை ஒரு போதும் எழுதிட முடியாது. அதன் அறம் சார்ந்த நிலைப்பாடு என்பது மிகவும் கட்டுக்கோப்பானது. அதன் அடித்தளமென்பது தன்னலமற்றத் தீர்க்கமான செயலலகுகளால் கச்சிதமாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.

   லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களான நெரூடா மற்றும் ஆக்டேவியா பாஸ் ஆகியோரின் வெளிப்படையான அரசியல் படைப்புகளும் அதன் நிலைப்பாடுகளும் தமிழில் நன்கு அறியப்பட்டவை. (சே குவேரா படைப்புகள் தனி ரகம்) இருந்த போதும் இதன் மேலோட்டமான தன்மையிலிருந்து வேறுபடும் ஆப்பிரிக்கப் படைப்பாளர்களான கோஃபி அவூனோர், பிரேட்டன் பிரேடன்பாஹ் மற்றும் ஜெரீமி க்ரோனின், துருக்கிய ஆளுமையான நஸீம் ஹிக்மெத், அரேபிய எதிர்ப்பு இலக்கியத்தின் முன்னோடியான மொஹமத் தர்வீஷ் ஆகியோரின் கவிதைக்குள் நிரம்பியிருக்கும் இரத்தமும், ஆழமுமான அதிகார எதிர்ப்பு குரல் என்பது எத்தனை மேலானது என்பதை நீங்களே வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இங்கு உலவிக்கொண்டிருக்கும் போலி அரசியல் கவிதைகள் பற்றிய ஒரு விழிப்புநிலை ஏற்படும்.

   நம் காலத்தின் அரசியலில் பாரதி ஏற்படுத்தியிருக்கும் எதிர்வினைகள் மிகக் காத்திரமானவை. இதன் தொடர்ச்சியான முகங்களும் நம்மிடம் இருக்கின்றன. அரசியலும் மதமும் கலக்கப்பட்டிருக்கும் நம் நிலத்தில் இவை சார்ந்த தீவிரப் பிரக்ஞையின் சொற்களினூடான படைப்புகளே இன்று அதிகம் தேவைப்படுகின்றன. எனது ‘நானிறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது’ என்ற கவிதையில் நம் இந்திய / தமிழ்ச் சூழலில் சிறைகளில் காரணங்களின்றி அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் மனம் மற்றும் உடல் சார்ந்த வலிகளையே உணர்த்தியிருக்கிறேன். மேலும் ‘அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்’ தொகுப்பில் மூன்றாவது பிரிவிலிருக்கும் பல கவிதைகள் எனது அரசியல் சார்ந்த திடமான நிலைப்பாடுகளால், பார்வைகளால் உருவானவையே.

தமிழிலக்கியச் சூழலில் இன்றும் முதல் தொகுப்பு கொண்டு வருவதில் ஒரு கவிஞனுக்கு இருக்கும் அகம் மற்றும் புறச் சிக்கல்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். உங்கள் முதல் கவிதைத் தொகுப்பு வெளியிட்ட போது எப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைத்தன? முதல் தொகுப்பின் மீதான கடுமையான விமர்சனங்களாக எவற்றை வைப்பீர்கள்.?

   தொடக்கம் முதலே மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணனும், புது எழுத்து மனோன்மணி அவர்களும் என் கவிதைகள் குறித்து மிகவும் நம்பிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தனர். தொகுப்பிற்காக மனோன்மணி கேட்ட போது மிகவும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தேன். கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, தேவையற்றவைகளை ஒதுக்கித் தொகுத்தேன். கவிதைகள் குறித்து நான் தேடிக்கண்டடைந்த சொற்களை, அதன் மீதான எனது நிலைப்பாட்டை தொகுப்பின் முன்னுரையில் விரிவாகப் பதிவு செய்திருந்தேன். (கவிதைத் தொகுப்பு வெளியிடுபவர்கள் தங்களின் கவிதை குறித்த / கவிதையியல் சார்ந்த இது போன்ற கருத்துக்களை இவ்வாறு பகிர்ந்து கொள்வதற்கான தேவை இங்கிருக்கிறது) அது எனக்கு ஒருவித மனநிறைவைத் தந்தது. – பரவலாகப் பேசப்பட்டது – தமிழில் நிறைய கவிஞர்களின் முதல் தொகுப்பை வெளியிட்டிருக்கும் புது எழுத்து வாயிலாக எனது முதல் தொகுப்பும் வெளிவந்தது மிகவும் நெகிழ்ச்சிகள் நிரம்பியிருந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுத்தது. அதுவரையிலான ஒரு தொடர்ச்சியான தீவிரகதியின் மனவோட்டத்திற்கான சிறு ஆசுவாசத்தை இதில் உணரமுடிந்தது. தொகுப்பின் வடிவமைப்பிலும், எழுத்து மற்றும் சில வாக்கியப் பிழைகளிலும் நேர்ந்திருந்த அக்கறையின்மை குறித்து கொஞ்சம் வருத்தமும் இருந்தது. இதன் வழியே கிடைக்கப்பெற்ற சிறிய நண்பர்கள் குழுவுடனான அப்போதைய உரையாடல் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.

   எனது முதல் தொகுப்பிலிருக்கும் சில கவிதைகளில் வெறுமனே காட்சிப்படுத்தல்களினாலான தீவிரமற்ற தன்மையும், இன்னும் சிலவற்றில் தனிமையான மனம் சார்ந்த வெற்றுப் பார்வைகள் இருந்ததையும், சில கவிதைகளில் வெளிப்பாட்டு முறைகளில் அடைந்திருந்த தோல்விகளையும் கடுமையான விமர்சனமாக நானே வெகுசீக்கிரமாக உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

சக எழுத்தாளர்கள், கவிஞர்கள் உங்களின் முதல் தொகுப்பு பற்றிச் சொன்ன கருத்துக்களையும் விமர்சனங்களையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அதிலிருந்து நீங்கள் பெற்றவை, அதன் வழியாகக் கவிதைகள் மீதான உங்களது பார்வைகள் மாறியிருக்கிறது எனில் அவற்றையும் நீங்கள் எனக்குச் சொல்லாம்.

   கவிஞர் சாகிப் கிரான், தொகுப்பு வெளியீட்டிலே எனது கவிதைகள் சார்ந்த மிகவும் நுட்பமான தன்மைகளையும் மற்றும் சில கவிதைகள் அதன் இயங்குநிலைகளில் அடைந்திருக்கும் தோல்விகள் குறித்தும் மிகச் சிறப்பான கட்டுரை ஒன்றை வாசித்தார் – இப்பொழுதும் அவரது வலைத்தளத்தில் வாசிக்கக் கிடைக்கும். – நாங்கள் முதல் முதலாக அங்குதான் சந்தித்துக் கொள்கிறோம். கவிஞர் சமயவேல் அவர்கள் எனது கவிதையில் இருந்த புத்துணர்ச்சியான விசயங்களையும், அதன் சில வெறுமையான பக்கத்தையும் காண்பித்திருந்தார். மேலும் லஷ்மி சரவணக்குமாரும் எனது தொகுப்பு சார்ந்த விரிவான ஒரு பார்வையை வழங்கியிருந்தார். இவை மூன்றுமே விமர்சனப் பிரதியாக எனக்குக் கிடைத்தவைகளில் மிக நெருக்கமானவை மற்றும் என்னளவில் முக்கியமானவை.

   2009-ம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வேலையிழந்து ஊர் திரும்பியிருந்தேன். நெருக்கமாகயிருந்த உறவொன்றின் பிரிவால் மிகுந்த மனநெருக்கடியின் கசப்பிலிருந்தேன். பிறகு மதுரையில் சிறிய நிறுவனமொன்றில் ஆறு மாத காலம் பணியாற்றினேன். அப்பொழுது ‘கடவு’ இலக்கிய அமைப்பின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. – அது எனது தொகுப்பு வெளிவந்த சமயம் – அங்கு க.மோகனரங்கனுடனான சிறிய உரையாடலில், அவர் எனது தொகுப்பு குறித்த அவரது வாசிப்பனுபவத்தை சுவாரசியமாக வெளிப்படுத்தினார். யவனிகா எனது தொகுப்பு குறித்தும் கவிதைகளின் வெளிப்பாடு குறித்தும் மிகுந்த ஆர்வமாக உரையாடினார். முத்தமெல்லாம் கொடுத்தார். கோணங்கி அக்கவிதைகளின் மொழி குறித்த சாகசத்தை வெளிப்படுத்தினார். புற்களில் அமர்ந்தபடி பிரபஞ்சன் நிகழ்த்திக் கொண்டிருந்த உரையாடலைக் கேட்பதற்கென ஒரு கூட்டமே அங்கு கூடியிருந்தது. மெதுவாக அவரருகில் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்ட போது சட்டென எனது தொகுப்பின் பெயரைச் சொல்லி அவருக்கே உரித்தான முறையில் அதிலிருந்த இறுக்கமான சில படிமத்தன்மை குறித்து அக்கறை கொள்ளச் செய்தார். – நீண்ட நாட்களுக்குப் பிறகு பாண்டிச்சேரியில் மார்க்கெட்டில் எனது மனைவியுடன் சந்தித்த போது, என் கவிதையில் சில வரிகளைச் சொல்லி விட்டு, மனைவியை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறிச் சென்றார். – கவிதைகளை எழுதுவது தொடர்பான என அணுகுமுறையின் மாற்றங்களுக்கான சில புள்ளிகள் இங்கிருந்தே துவங்கின. இப்பொழுது வரை நிறைய எழுத்தாள நண்பர்களிடம் எனக்கு நேரடியான பழக்கங்களோ, உரையாடல்களோ ஏதுமில்லை. மிகச் சொற்பமான அளவிலான தொடர்புகளே என்னிடம் இருக்கிறது, அதுவே போதுமானதாகவும் இருக்கிறது.

  அந்த நேரத்தில்தான் எனது தொகுப்பின் மூலமாக சமயவேல் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. தினமும் இலக்கியமும் வாழ்வும் சந்தித்துக் கொள்ளும் புள்ளியை பேசிக்கொண்டே நெருங்கியிருந்தோம். குளச்சல் யூசுஃப்பின் மொழிபெயர்ப்பில் வைக்கம் முகம்மது பஷீரை வாசிக்கத் துவங்கினேன். மனிதர்களின் வாழ்வியலை, அவர்களுக்குள்ளிருக்கும் நெருக்கடிகளை, அதற்குள் ஒளிந்திருந்த மனிதத்துவ மகத்துவங்களை பஷீரே எனக்கு அறிமுகப்படுத்தினார். யூசுஃப் தன் மொழிபெயர்ப்பில் அப்படைப்புகளை வெறுமனே சொற்களாக மாற்றிக் காண்பிக்காமல் அந்நிலத்தின் வாழ்வையே வாசிக்கக் கொடுத்தார். பஷீரை மிக நெருக்கமான எழுத்தாளராக இப்போதும் உணர்ந்து வருகிறேன். அடுத்ததாக ‘நிழல்’ வெளியீடாக, ‘சீனிவாச ராமாநுஜம்’ மொழிபெயர்த்த ‘சாதத் ஹசன் மண்ட்டோ படைப்புகள்’ நூல் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இலக்கியத்தின் அசலான வேறு பாதையை, வடிவத்தை அது உருவாக்கித் தந்தது. எளிய மனிதர்களை எல்லைக்கோடுகளும், அரசு நிறுவனமும், மதங்களின் குறியீட்டு அரசியலும் எந்த அளவிற்கு சின்னாபின்னமாக செய்திருக்கிறதென்பதையும், அவற்றின் மூலமான சமூக மனதின் சிதைவுகளையும் அவரே எடுத்துக்காட்டினார். நடைபெற்ற பெரும் கலவரங்களுக்குள்ளும், ஆபாசங்களுக்குள்ளும், நிர்வாணங்களுக்குள்ளும், குரூரத்திற்குள்ளும் ஒளிந்திருக்கும் அடையாளங்களற்ற மனிதத்தின் அதிர்வுகளையும், அளவற்ற நேசங்களையும், தேடல்களையும், எல்லையற்ற மனிதத்துவத்தையும் மிகத்தனித்துவமான மொழியில் சொல்லித்தருபவை அவரது படைப்புகள். எனக்குள்ளிருந்த காயங்களை மறந்து படைப்பு மனநிலையைத் திரும்பப் பெற்று நிறைய எழுதியிருந்தேன். அவைகளில் சில தான் இரண்டாம் தொகுப்பான ‘அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்களி’ல் இருக்கும் முதல் மற்றும் இரண்டாம் பிரிவுகளின் கவிதைகள். பிறகு குடும்பப் பொருளாதாரத் தேவைகளுக்கென 2010-லிருந்து நான்கு வருடங்கள் வட இந்தியாவில் இருந்தேன். நொய்டா, புது டெல்லி, குர்கான், ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தின் பத்தி ஆகிய நகரங்களில் கழித்திருந்தேன். மொழியும், இடமும் தெரிந்திடாத நிலத்தில் வாழ்வதற்கு மிகவும் பிடித்திருந்தது. லௌகீகத்தேவைக்கென முழுவதும் உழைத்திருந்தேன். இலக்கியத்திலிருந்து சற்று இடைவெளியெடுத்திருந்தேன். முன்பு சொல்லியிருந்த விமர்சன ரீதியிலான சொற்களும், நேரடியான அனுபவத்தில் மனதளவில் நானடைந்து கொண்ட பரந்து பட்ட மாறுதல்களுமே எனது புதிய படைப்பிற்கான விசாலமான தன்மையை ஏற்படுத்திக் கொடுத்தன. மு,ஹரிகிருஷ்ணன் தேசிய அளவிலான நிகழ்த்துகலை கூத்திற்கு கலைஞர்களை டெல்லிக்கு அழைத்து வந்திருந்தார். பிறகு ஒரு சமயம் ஒருங்கிணைந்த தேசிய நாடக நிகழ்விற்காக ச.முருகபூபதியின் குழுவுடன் கோணங்கியும் வந்திருந்தார். நிகழ்ச்சிகளையும், கலைஞர்களையும் நானும் என் நண்பர்களும் பார்த்து ரசித்தோம். பிறகு அங்கிருந்து பணியின் பொருட்டு பாண்டிச்சேரிக்குத் திரும்பினேன். இடையில் திருமணம் முடிந்திருந்தது. இங்கு வந்த பிறகு, சில மருத்துவப் பிரச்சனைகளால் எனது மனைவி மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பியிருந்தார். மிகுந்த இருள் சூழ்ந்த காலமாக அதை நான் இப்போதும் உணர்கிறேன். வெறுமனே அலுவலக வேலைகளை மட்டுமே பார்த்தபடி இயந்திரம் போல வாழப்பழகியிருந்தேன். முற்றிலுமாகத் தனிமைபட்டுப்போனேன். அதிலிருந்து மீண்டு வருவதற்கு என் மனைவி திரும்பவும் வாசிப்பையும், எழுத்தையுமே பரிந்துரைத்தாள். அதுவே மிகச்சரியான எனது படைப்பின் திசையை எனக்கு அறிமுகம் செய்தது. அவளே என்னை எல்லாவித இருண்மையிலிருந்தும் இதுவரை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறாள். எனது இரண்டாவது தொகுப்பை அவளுக்கே சமர்ப்பித்திருந்தேன்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழில் புதுக்கவிதை தோன்றியபோது அது மேற்கிந்திய நாடுகளிலிருந்து முக்கியமாக ஐரோப்பியக் கவிதைகளின் வடிவங்களைப் பெற்று வளர்ந்து நவீன கவிதைகளாக இன்று  நிற்கிறது. மரபின் தொடர்ச்சியாக இன்று பெரும்பாலான கவிதைகள் எழுதப்படுவது இல்லை (தேவதேவன் மட்டும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்) இப்படி மரபிலிருந்து துண்டிக்கப்பட நவீன கவிதைகளைத் தான் நீங்களும் எழுதுகிறீர்கள். மரபுக் கவிதைகளை எழுத இயலவில்லை என்கிற எண்ணம் எப்போதாவது மனதில் வந்து போய் உள்ளதா?

   இரண்டாயிரம் வருடம் மரபுடைய நம் தமிழ் மொழிச் சூழலில் கவிதைக்கான இடமென்பது மிக முக்கியமானதாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. சங்ககாலப் பாட.ல்கள், பக்திப் பாடல்கள், செய்யுள்களின் வழியே அவைத் தனிப் பரப்பைத் துவக்கி வைத்தன. அவற்றிலிருந்தே நெடும் வரிசை கொண்ட இலக்கண, பா, சந்த, விருத்தம் சார்ந்த வெளிப்பாட்டு முறையிலான மரபுக்கவிதையும் பிறகு, இவ்விலக்கண விதி மீறல்களைக் கைக்கொண்ட புதுக்கவிதையும் உருமாறி வந்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகத் தான் 1960 – 90 காலகட்டத்தில் நவீன கவிதையின் துவக்கமும், தேடல்களும் தோற்றம் கொண்டன. எந்தவொரு மொழி சார்ந்த இயக்கத்திலும் இத்தகைய ஆழமான தகவமைப்புகள் இன்றியமையாதவையே. மேலும் பழையவைகள் அடைந்திடும் தேக்கங்களும் இயல்பானவையே. இது போன்ற மாற்றங்களே அவை, பிழைத்திருப்பதற்கும் உயிரற்றிருப்பதற்குமான வேறுபாடுகளை காலந்தோறும் நமக்குக் காண்பிக்கின்றன. ஏதேனும் ஒன்று அதில் நிகழ்ந்திருப்பதற்கான சாட்சியும் அதுவே. சங்க காலத்திலிருந்து இப்போதுள்ள காலம் வரை எல்லாவற்றிலும் நாம் அடைந்து வந்திருக்கின்ற மாற்றங்களுக்கும் நிகரானதிது.

   தமிழ் நவீன கவிதையின் வடிவமும், உள்ளடக்கமும் ஐரோப்பிய நிலங்களின் பரந்து பட்ட கவிதை மொழியின் வடிவங்களை அடிப்படையாகக் கொண்டவையே. அந்நிலப்பரப்பின் புராதனமும், மரபும், அழகியல் தன்மைகளும், வெளிப்பாட்டு முறைகளும், வாழ்வெளிச் சிக்கல்களும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது அம்மொழி. ஆனால் அவற்றிற்குள் இயங்கிக்கொண்டிருக்கும் இத்தகைய உள்ளார்ந்த தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே அதன் புற அமைப்பை மட்டுமே எடுத்துக் கொண்டு இங்கு பலர் இயந்திரகதியில் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். (பிரம்மராஜன் சொல்வதைப் போல – சில கவிஞர்கள், மொழிபெயர்ப்புகளை ரகசியமாக தங்களது பதிப்புகளாக மாற்றிக் கொள்கின்றனர்) தமிழ் நவீன கவிதை என்பது நம் நிலத்திற்கான, அதன் தொன்மைக்கான, நம் வாழ்வினூடான சகலத்தின் மீதிருக்கும் தேடல்களின் நுண்ணுணர்வுகளையும் கொண்ட பாடுபொருளைக் கொண்டு எழுதப்படும் போதே அதன் விசாலமானத் தன்மை இன்னும் விரிவடையும். இந்த வேறுபாடுதான் இங்கு மிக முக்கியமாக உணரப்படவேண்டியது. தேவதேவன் இதைத்தான் உதாரணமாகச் செய்து கொண்டிருக்கிறார். இயற்கையின் ஒரு துளியாக மனிதனை உணரச் செய்திடும் பல அசலான மரபின் நீட்சியானக் கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். கவிதை என்பது பிராந்தியத்தன்மையின் எல்லைகளற்றவையாக இருக்க வேண்டும் என்பதைப்போலவே அதனுள் அது உற்பத்தியாகும் நிலம்சார்ந்த, மரபு சார்ந்த தொடர்ச்சியின் பிரக்ஞைபூர்வமான தன்மையும் இருக்க வேண்டும். மரபுக்கவிதை என்பது வேறு, மரபின் தொடர்ச்சிகளை பாடுபொருளாகக் கொண்டிருக்கும் கவிதை என்பது வேறு. மரபுக் கவிதைகளின் அலாதியான இசையுணர்வின் லயமும், சுகமும் தனியானவை. பாரதியாரின் பல மரபுக்கவிதைகளை பாடல்களாக வீட்டில் பாடிக்கழிப்பது என்னுடைய முக்கியப் பொழுதுபோக்கு. மரபுக்கவிதையை எழுத ஒரு போதும் முயன்றதுமில்லை. அந்த நினைப்பு வந்ததும் இல்லை.

நவீன வாழ்க்கையில் இவ்வளவு மாற்றங்களுக்கு பிறகும் ஒரு கவிஞனுக்கும் இயற்கைக்கும் இருக்கும் அல்லது உருவாகும் உறவு என்பது மட்டும் ஏன் மாறாமல் அப்படியே இருக்கிறது? இயற்கையை கவிஞர்கள் அளவுக்கு அதிகமாக ரொமான்டிஸம் செய்துவிட்டார்களோ என்கிற சலிப்பு வாசகனுக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

ஏனெனில் நாம் எப்போதும் இயற்கையிடம் தஞ்சமடைபவர்களாகவே இருக்கிறோம். நம் வாழ்வெளியின் பலதரப்பட்ட மாற்றங்களிலும் சிறிய அல்லது பெரிய காரணிகளாக இயற்கையே இருக்கிறது. நீங்கள் உணர்ந்து கொள்வதிலிருந்தும் இன்னும் மிகப்பெரியதாக அது மாறிக்கொண்டேயிருக்கிறது. அதன் முடிவிலித் தன்மையே அதன் பிரதான பிரம்மாண்டத்தை உருவாக்கிக் காண்பிக்கிறது. மலையும், காடும் மட்டுமே இயற்கை என்பதல்ல, நம் வாழ்வெளியில் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கும் சூழலே இயற்கை. அன்றாட வாழ்வுகளில் உங்களுக்கு ஏற்படும் அணுகுமுறை சார்ந்த இன்ப, துன்பங்களுக்குப் பிறகான வெறுமையை நீங்கள் உங்களைச் சுற்றியிருக்கும் இயற்கையிலிருந்தே எடுத்துக் கொள்கிறீர்கள். சதா இயற்கையைக் கவனித்துக் கொண்டிருக்கும் நுட்பம்தான் வாழ்வின் எல்லாச் சரடுகளின் வழியாகவும் நிரந்தரமின்மையை உணர்த்திக் கொண்டிருக்கிறது. இயற்கையை அனுபவிப்பதிலிருந்தே வாழ்வின் ஆன்ம ரீதியிலான மெய்மையுணர்வு சார்ந்த புரிதலை துவங்கிக் கொள்ள முடியும். இதுவே எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையை ஆக்கி வைத்திருக்கிறது. அதுவே நம்மைச் சோதனைக்குள்ளாக்குவதும், அரவணைத்துக் கொள்வதுமாக மாறி மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கவிஞருக்கும் இயற்கைக்கும் உள்ள உறவென்பது எல்லையற்றது. கவிதைக்கென இயற்கையிலிருந்து எடுத்துக் கொள்ளும் தேர்வானது ஒரு புறம் சற்றே நீர்த்துப் போனாலும் மற்றொரு புறம் அதன் நித்தியத்துவத்தை வெளிப்படுத்தும் கவிதைகளும் வரவே செய்கின்றன. இயற்கை குறித்த கவிதைகளில் சலிப்பு ஏற்பட்டிருந்தால் அது கவிதை மொழியின் கச்சிதமின்மையால் நிகழ்ந்திருக்கும்.

கவிதைகள் வாசகனுக்கு எழுதப்படுவது என்பது (உங்கள் பதில்) இங்கிருக்கும் குரல்களில் சற்றே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்லும் வாசகன் இன்னும் நவீன கவிதைகளைப் புரியவில்லை என்கிற பல்லவியைத் தானே தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கிறான். நவீன கவிதைகளுக்கு உண்மையில் எழுத்தாளர் / கவிஞர்களைத் தாண்டி வாசகன் என்று ஒருவன் இருக்கிறானா?

அப்படி இருக்கிறான் எனில் அவன் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கைகளும் விமர்சனங்களும் எப்படிப்பட்டதாக இருக்கும்?

ஒரு படைப்பு சுழற்சியில் வாசகனின் பங்கு இன்றியமையாதது, படைப்பாளர் படைப்பில் செலுத்தியிருக்கும் அதே கவன நுட்பங்கள் வாசகனின் வாசிப்பிலும் தொடர்கின்றன. அதுவே அப்படைப்பின் பன்முகப் புரிதலின் வாசலைத் திறந்து விடுகிறது. அகஸ்மாத்தமாக திடீரென எதையும் உங்களால் செய்திடவும், புரிந்து கொள்ளவும் முடியாது. சிறு பயிற்சியும் அதற்கான கால அவகாசமும் தேவைப்படுகிறது. நவீன கவிதைக்கான நுட்புலன்களை நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும், அதற்கு வாசிப்பின் பயிற்சியும், தேடலும், தொடர் உழைப்பும் தேவையாகயிருக்கிறது. இதில் எந்த அளவு விருப்பத்துடன் நம்பிக்கையுடன் தொடர்கிறீர்களோ அவ்வளவு வேகமாக நவீனத் தமிழ்க் கவிதைகள் இயங்கிக்கொண்டிருக்கும் தளத்திற்கு வந்து சேர முடியும். கவிதையின் மொழியில், கட்டமைப்பில், உள்ளடக்கத்தில், வடிவத்தில் ஏற்பட்டு வந்திருக்கும் பெரும் மாற்றங்களை நீங்கள் அறிந்து கொள்ளும்போதுதான் அதன் செயல்பாட்டு வடிவத்தை உங்களால் உள்வாங்கிக் கொள்ள முடியும். பொதுவான வாசகர்களின் தளத்திலிருந்து, சொல்லும்படியான எண்ணிக்கையில் இவற்றை நோக்கிய நகர்வுகள் இப்போதும் இருக்கின்றன. மிக எளிதான குறுங்கதையின் வடிவத்திலிருக்கும், உணர்வுகளை அபரிமிதமாக வெளிக்காட்டிடும் கவிதைகளிலிருந்து வெளியேறி, நவீன கவிதைகளில் நிகழ்ந்திடும் பன்முகத்தன்மை கொண்ட புரிதலை, அனுபவத்தை நோக்கி வந்திடும் அவர்களை வெளித்தள்ளாமல் இருக்க வைக்கவேண்டியது ஒவ்வொரு நவீன கவிதை படைப்பாளிக்கும் சவாலானது. நவீன கவிதைகளுக்கென, எழுத்தாளர்கள் / கவிஞர்கள் தாண்டி நிறைய வாசகர்கள் எப்போதும் இருக்கிறார்கள் என்றே நாம் நம்பிக்கொண்டிருக்கிறேன். நீங்களும், நானும் இத்தகைய வழிகளில்தானே கவிதை சார்ந்த பொதுவெளியில் நகர்ந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். இதுவே அதற்கான எளிய சான்று. இப்பொழுது கூட அவர்களுக்காகத்தான் நாம் இதை செய்துகொண்டிருக்கிறோம். வாசகர்கள் மீதான நம்பிக்கை மதிப்பீடே படைப்புகளில் புதிய முயற்சிகளுக்கானக் கதவுகளைத் திறந்து விடுகிறது. மேலும் புரியவில்லை என்பவர்களைப் பற்றியும், புரியவே கூடாது என்றே கவிதை எழுதுபவர்கள் பற்றியும் சொல்வதற்கென என்னிடம் எதுவுமில்லை.

உங்களின் இரண்டு தொகுப்புகளில் நிலம் என்கிற மையப்பொருள் எங்கேயும் இல்லையே? இது எதேச்சையாக  அமைந்துள்ளதா அல்லது தனக்கான நிலத்தின் மீது ஜீவன் பென்னி என்கிற கவிஞனுக்கு இன்னும் குழப்பங்கள் இருக்கிறதா? 

உலகிலேயே மிக மோசமான நிலை அகதியாக வாழ்வது தான். தன்னிலத்திலிருந்து வெளியேறுவதென்பது எல்லாவகையிலும் அழுத்திடும் துன்பங்கள் நிறைந்திருப்பதுவே. போர்களின் மூலமாக  வெளியேற்றப்படுவதென்பது ஒரு வகை எனில் வேலைக்காக உள்நாட்டில் MIGRATE ஆகி கொள்வதென்பது வேதனைகள் நிரம்பிய மற்றொரு வகை. இந்திய நிலம் முழுவதிலும் சிறிய வருமானத்திற்காக, சிறிய இரைப்பையின் பசிக்கென தொழிலாளர்களாக இடம்பெயர்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் உண்டு. இவர்களிடம் வாழ்வு குறித்த எந்த நிச்சயமும் இல்லை, எந்த புகாரும் இல்லை. இதுபோன்ற நிறைய்ய கட்டிடத் தொழிலாளர்களை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன், பழகியிருக்கிறேன் (CONSTRUCTION WORKS). அவர்களில் நானும் ஒருவன் என்பதைச் சற்றுத் தாமதமாகத் தான் உணர்ந்திருந்தேன். அவர்களை விடச் சற்று அதிகமாகச் சம்பாதித்திருக்கலாம், ஆனால் ஏக்கமும், மனநிலையும் ஒன்று தான். தொடர்ச்சியாக என் நிலத்தை கைவிட்டவனாகவே வாழ்வைத் தொடர்ந்து வருகிறேன். நகர் புறத்தில் வாழ்ந்திடும் ஒரு ஒட்டுண்ணியின் சகலமும் எனக்குப் பொருந்துகின்றன. எப்போதும் என் நிலத்திற்குத் திரும்புவதற்கான எளிய காரணத்தைத் தேடிக்கொண்டிருப்பவனாக, அதற்காக எல்லாவற்றையும் கைவிடத் துணிந்தவனாக இருக்கிறேன். எனக்கு அங்கு வாழ முடியவில்லையே என்ற வருத்தங்கள் இருக்கின்றன. மற்றபடி என் நிலத்தை ஒரு பொருண்மையான தளத்தில் எனது கவிதைகளில் நான் பயன்படுத்தியதில்லை. ஆனால் அங்கு அனுபவித்த நிகழ்வுகளை, சுற்றியிருந்த நெருக்கமான மனிதர்களைப் பற்றி இரண்டு (கடைசியான – சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவளி’லும்) தொகுப்பிலும் சில கவிதைகள் இருக்கின்றன. எனக்கான நிலம் எது என்பது குறித்து எனக்கு நிறைய்ய குழப்பங்கள் ஒரு சமயம் இருந்தன. அதன் பிறகு ஒரு நகர்புறம் சார்ந்த துண்டு நிலப்பரப்பில் சற்று ஆசுவாசமடைந்திருந்தேன். அந்நகர்புறம் சார்ந்த நெருக்கடிகளையும், தொடர்ச்சியாக அங்கு சந்திக்க நேர்ந்த நகர உதிரிகளின் மனதையுமே ‘அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்’ தொகுப்பில் மூன்றாவது பிரிவில் (மிகக் கடைசியான மிருதுவான கதைகள்) வகைப்படுத்தியிருந்தேன். அதில் வரும் மனிதர்கள் அனைவருக்கும் ஒரு வாழ்வும், நெகிழ்ச்சியுமான ஒரு பின்னணியும் இருக்கிறது. நிலத்தைப் பற்றி பேசுவதென்பது ஒரு வகையில் அதன் மனிதர்களையும், அதற்குள் ஒளிந்திருக்கும் எளிய வாழ்வின் சாகசத்தையும் பற்றி பேசுவதும் தானே.

கவிதைகளில் தன்னையறியாமல் வந்து உட்கார்ந்து கொள்ளும் உரைநடைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? உரைநடை இயல்பு கவிதைகளுக்குத் தேவைப்படுகிறதா?

தமிழில் எழுதப்பட்டிருக்கும் / எழுதிக்கொண்டிருக்கும் நிறைய்ய கவிதைகள் உரைநடைத் தன்மை கொண்டவை தான். பல நல்ல விதிவிலக்குகளும் இருக்கின்றன. சமீபத்தில் எழுதப்படும் கவிதைகளில் இத்தன்மை இன்னும் அதிகரித்திருக்கிறது. (நேரடியான பேச்சின் சாயல், மிகு உணர்ச்சிகளை வடித்து அதன் வழியான கழிவிரக்கத்தைத் தொடுதல், ஆதங்கங்களை வெளிக்காட்டுதல் இவை போன்ற சில பிரிவுகளில்) ஒரு நிகழ்வை, அனுபவத்தை புனைவின் வசீகரத்தோடு இணைத்துச் சொல்வதற்கு கவிதையில் உரைநடையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எந்த அளவிற்கு இது பயன்படுத்தப்படுகிறதென்பது, கவிஞன் தன் எழுது மொழியில் எந்தளவு சமரசம் செய்துகொள்கிறான் என்ற அடிப்படையில் வேறுபாட்டுக் கொள்கிறது. கவிதையில் செயல்படும் மொழிக்கு அனுபவத்தை, காட்சியை, மனதின் வண்ணத்தை ஒரு நிலையில் பிரதிபலிப்பதோடு நின்றுவிடாமல், அதன் உள்ளுணர்வையும் மிக நெருக்கமாக உணர்த்திக் காட்ட வேண்டிய தேவையிருக்கிறது. அதற்கு உரைநடையை சிலர் எளிய வழியாக மாற்றிப் பின்பற்றிக் கொள்கின்றனர். ஆனால் ஒரு கவிதை மொழியின் அசலான தன்மை, உரைநடையிலிருந்து வேறுபடும் புள்ளியானது அதன் மெல்லிய இறுக்கமான அகத்தின் தனியான வடிவமைப்பிலானது. – சிறந்த உதாரணங்கள்:  பிரம்மராஜன், க.மோகனரங்கன் பிறகு இவர்களைப் பின்பற்றுவோரில் மிகச்சிலர்.- இதுவே புனைகதைகளிலிருந்து கவிதையை வேறுபட்ட படைப்பு வடிவமாக மாற்றிக் காண்பிக்கிறது. அதனாலேயே சிலர் அதைக் கைக்கொள்ள முடியாமலும் போகிறது. மேலும் அது அத்தனை எளிமையானதுமல்ல.

அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்” தொகுப்பில் வெறுமை என்பதன் மீதான சலிப்பும், ஜென் மனநிலையில் எழுதப்பட்ட சில சிறிய கவிதைகள், மழை, கடல், மரம் என்கிற குறியீட்டுக் கவிதைகள், சில ஆளுமைகளுக்கு அர்ப்பணிப்புகள் என்று தொகுப்பு ஒரு கூட்டுக் கலவையான அனுபவத்தை வாசிப்பவனுக்குத் தருகிறது? இன்று சற்றே பின் நோக்கி நினைவுகூர்ந்து இந்த தொகுப்பைப் பற்றி உங்களிடம் சொல்ல என்ன நினைவுகள் இருக்கிறது.?

“அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்” தொகுப்பிலுள்ள சில கவிதைகள் எனக்கு நிறைவைக் கொடுத்தன. சொல் முறை சார்ந்தும், வாழ்வில் படிந்திருந்த வெறுமை சார்ந்தும், தொடர்ச்சியான நகர்புற அனுபவப்பரப்பிலான எனக்குள்ளான மாற்றங்களை பகிர்ந்து கொள்வதான மனதும், வடிகாலும் அச்சொற்களில் இருப்பதாக தீவிரமாக நம்புகிறேன். சில போலி நீதிகளின் மாண்புகளை, சீறுடையணிந்த அரசு வேலை ஆட்களின் அறமற்ற செயல்களை, விடுதலைகளற்ற வாழ்நிலங்களின் வலிகளை, தனித்த இரக்கங்களின் பாடல்களை மற்றும் கதைகளை, ஜனநாயகம் நம்மை எப்படி மரியாதையாக சாகடிக்கிறது என்பதை இத்தொகுப்பின் மூன்றாம் பிரிவான ‘மிகக்கடைசியான மிருதுவான கதைகள்’ பிரிவில் சொல்லியிருந்தேன். நகர்புற பெரும் ஏமாற்றுச் சந்தைகளின் நவீனப் பெருக்கத்திற்கு எதிராக, அறமற்ற விழுமியங்களின் மீது துவங்கும் அதிகார கட்டமைப்பிற்கெதிரான ஆற்றலாகப் பெரும் மழையை ஒரு குறியீட்டு வடிவமாக இக்கவிதைகளில் பயன்படுத்தியிருந்தேன், அது மிகுந்த ஆறுதலாகயிருந்தது. மிக நெருக்கமான சில உறவுகளை ஒவ்வொன்றாக இழந்திருந்தேன். அவையே அத்தொகுப்பிலிருக்கும் ‘பிரிவின் தீர்ந்திடாத சொற்களா’க உருமாற்றமடைந்திருந்தன. நெருக்கடியான காலகட்டத்தில் என்னை அணைத்திருந்த கைகளையும், தேற்றிய மனங்களையும் வருடிக்கொடுத்திட எனக்கு இப்படித்தான் தெரியும், சின்னச் சின்ன பொருளில் ஒரு பெரும் வாழ்வை இப்படித்தான் என்னால் சமன் செய்து கொள்ள முடியும். வேறு வேறான மனநிலையில் நின்று கொண்டிருந்த அத்தருணங்களை, அகச்சிக்கல்களை, புறவயமான நெருக்கடிகளை, மகிழ்ச்சியின் வடிவங்களை மிகச் சுலபமாக இக்கவிதைகளே ஒரு சிறு முடிச்சில் கட்டப்பட்ட தொகுப்பாகக் காண்பித்தன. கவிதைகளின் வழியே அந்தக் காலத்தை கடந்து செல்வதற்கு முற்பட்ட எனது மன தைரியத்தை ஒரு வகையில், என்னை நானே தேற்றிக்கொள்வதற்கு தேர்ந்தெடுத்த சரியான பாதையாகவே இங்கு நினைவு கொள்கிறேன். இவற்றிற்கெல்லாம் எது காரணமாக, ஆதாரமாகயிருக்கிறதோ அதுவே பேரன்பின் மிகச்சுருக்கமான வடிவமாக நான் எப்போதும் உணர்ந்து கொள்கிறேன்.

பெரும்பாலும் எழுத்திற்கு உரிய கவனம் கிடைக்காமல் போவதை விட, அதற்கான உள்ளார்ந்த குழு அரசியல் காரணங்கள் மிக மோசமான சோர்வைக் கொடுத்திருக்கிறது. இத்தொகுப்பு குறித்து அழைத்துப் பேசிய, எழுத்தில் பதிவு செய்த எழுத்து உறவுகளும், முகம் தெரிந்திடாத நண்பர்களும் அக்கவிதைகள் யாருக்காக எழுதப்பட்டதோ அவர்களுக்குச் சென்று சேர்ந்து விட்ட திருப்தியைத் தந்தனர். திரும்பவும் அச்சோர்வுகளைக் கடந்து இன்னும் சில தூரங்கள் சென்று வருவதற்கான வழியையும், நம்பிக்கையையும் எழுத்தே திடமாகக் கற்றுக் கொடுக்கிறது.

வரலாறென்பது கடைசி பழங்குடியின் மரணம் தான் என்கிற கவிதை முதல் பழங்குடியினரைப் பற்றிய கவிதைகள் ரசிக்க வைக்கின்றன ஆனால் அவை தொகுப்பில் ஒரு இடைச்செருகல் என்கிற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை? 

இருக்கலாம். இடைச்செருகல்களும், குறுக்கீடுகளும் வாழ்வின் சில விநாடிகளை ரசிக்கவும், ஓர்மை கொள்ளவும் வைத்திடுமெனில் அதை எந்த நிர்பந்தமுமில்லாமல் தாராளமாக அனுபவிக்கலாம். கவிதைகளைத் தொகுப்பாக்கும் போது அதில் செய்ய வேண்டிய பிற ஒழுங்கு வேலைகளை எப்போதும் மிகு கவனத்துடனே மேற்கொள்கிறேன். தொகுப்பாக வாசகன் அதை அணுகிடும் போது நிகழவிருக்கும் புத்துணர்ச்சியானவற்றைத் தேர்ந்தெடுத்துச் சரி செய்கிறேன். வாசிக்கும் போது கிடைக்கக் கூடிய உணர்வு ரீதியிலான சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டு சில பிரிப்புகளாகப் பிரித்து அடுக்குகிறேன். அதில் சில நல்ல விளைவுகளும், சில குறைபாடுகளும் நேர்ந்து விடுகின்றன.

அறத்தின் மீதான தேடல்களே என் கவிதைகள் என்கிறீர்கள். அது ஒரு வகையில் சரிதான் ஆனால் அறம் மட்டும் வாழ்க்கை இல்லையே. தனி மனித ஒழுக்க மீறல்களும் அவர்களின் சிடுக்குகளையும் கவிதைகளின் பாடுபொருளாகவும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா!

சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகளைப் பாருங்கள் தன் வாழ்வின் அத்தனை அபத்தங்களையும் அவர் தனது கவிதைகளாக  எழுதிக் கொண்டார். அப்படி வாழ்வில் தான் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் எந்தவித தயக்கமும் இன்றி தனது கவிதைகளாக முன்வைக்க இங்கிருக்கும் சமகாலக் கவிஞர்களால் முடியவில்லை. ஏன்? (இது ஒரு பொதுவான கேள்விதான்)

   ‘ஒவ்வொரு கவிதைத் தூண்டலும், அது எவ்வளவு உன்னதமானதாய் இருந்த போதிலும் அறம் சார்ந்த கோரிக்கைகளை எதிர்கொள்ளும் முயற்சியே’ என்று குறிப்பிட்ட நவீன இத்தாலிய நாவலாசிரியரான ‘சேஸரே பவேசே’ அடிப்படையில் ஒரு கவிஞர். ‘கவிதைக் கலை’ பற்றி, 1. The poet´s craft, 2. Concerning certain poems not yet written என்ற தனது இரண்டு முக்கியமான கட்டுரைகளின் வழியே கவிதைக்கான உரையாடலின் மிகப்பெரிய வாசல்களை திறந்துவிட்டிருக்கிறார். – கவிஞர். பிரம்மராஜன் அவர்கள் தொகுத்த ‘சமகால உலகக் கவிதை’ (2007, உயிர்மை) நூலிலிருந்த சேஸரே’வின் குறிப்பும், கவிதைகளுமே (மொபு-பிரம்மராஜன்) அவரை நோக்கியத் தேடலைத் துவக்கி வைத்தன) தீவிர அகச்சிக்கலில் படிந்திருந்த அவருடைய வாழ்வும், எழுத்தும் பல்வேறு திருப்பங்களையும், சுவாரசியங்களையும், முதிர்ச்சிகளையும் கொண்டிருந்தவை. அன்றாடத்தின் நிஜத்திலிருக்கும் எல்லாவிதமான போதாமைகளையும், நோய்மைகளையும் ஒளிவுமறைவின்றி, தெளிவான மொழியில் வெளிப்படுத்தியிருப்பவை அவரது கவிதைகள். தனிமனிதன் X அக உலகம் X சமூகம் இவற்றினிடையேயான தொடர் நிகழ்வுகளின் சந்திப்புப் புள்ளிகளை, யதார்த்த வாழ்வின் எல்லா சிக்கல்களோடும் பதிவு செய்ய முயன்றிருப்பவையே எனது சில கவிதைகளின் இயங்கியலாக உள்ளது. இவ்வாறாகவே வாழ்வு சார்ந்திருக்கும் எல்லாவற்றிலும் ஒரு ஆழத்தில் படர்ந்திருக்கும் அறத்தின் நீட்சியான சிறிய வடிவத்தையே நான் சொல்வதற்கும் கண்டடைவதற்கும் விரும்புகிறேன். அறம் என்பதன் அர்த்தத்தை நீங்கள் எவ்வளவு பெரிய பரப்பில் பார்க்க முயல்கிறீர்களோ அவ்வளவு தொலைவில் அது தன்னை முழுவதுமாக வெளிப்படுத்திக் கொள்கிறது. வெறுமனே நெகிழ்ச்சிகளின் பொருண்மையான வடிவத்தின் பிரதான வடிகாலான ஒன்றை மட்டுமே அறம் என்று நினைத்துக் கொள்வது அதன் பரந்துபட்ட சாரம்சத்தின் எல்லைகளைக் குறுக்கி விடுகிறது.

   தனிமனிதனுக்கு எவையெல்லாம் நெருக்கமானவையாக இருக்கிறதோ அவையெல்லாம் ஒரு சமயத்தில் அவனுக்கு அபத்தமானதாகவும், சிக்கலாகவும், வெறுமையானதாகவும், தீர்க்கவே முடியாததாகவும் மாறிக்கொள்கின்றன. இவையாவும் திடீரென முளைத்து அவனை நோக்கி வருவதில்லை. அவன் காலத்தில் உணர்ந்து வந்திருப்பதன் சிறிய தொகுப்புதான் இவை. ஒவ்வொருவருக்கான கால இடைவெளியில் இவற்றைப் புரிந்து கொள்ளவும், படைப்புகளில் கொண்டுவரவும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்.டி.ராஜ்குமார், பிரேம் போன்றோர் தீவிர முயற்சிகளாக நிறைய எழுதியிருக்கின்றனர். இன்னும் சிலரது முயற்சிகளில் அது முழுமையடையாமல் உள்ளீடற்றவையாக நீர்த்தும் போயிருக்கின்றன. நீங்கள் சொல்லும் எல்லாவிதமான பாடுபொருள்களையும் கொண்டு எழுதுவதற்கான தயக்கங்கள் ஏதும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை, சூழலின் புரிந்துணர்வு சற்று விரிவகன்று கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அப்பாடுபொருள்கள் சார்ந்து செறிவான பார்வையும், புரிதலும் இல்லாமல் வெறும் கவர்ச்சியாக மட்டுமே இங்கு மாற்றப்பட்டிருக்கின்றன என்பதை வேண்டுமானால் சொல்லலாம்.

சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்’ கவிதைத் தொகுப்பில் முழுவதும் பெண்கள்தான் வருகிறார்கள். முழுத் தொகுப்பும் பெண்களின் நேசிப்பை, கனவுகளை, இருளை, உடல் மீதான கரிசனத்தை, அன்றாட இடர்களைக் கவிதைகளாகப் பாடுகிறது. இப்படி ஒரு தொகுப்பு முயற்சி செய்யலாம் என்று ஏன்  முடிவு செய்தீர்கள்.?

   வாழ்வு குறித்து சொல்வதற்கு சில தோழிகளிடம் சிறிய சிரிப்பு மட்டுமே எப்போதுமிருக்கிறது. நிர்க்கதியான நிலையில் ஒரு துளி அழுகையின் நெருக்கத்தையே அவர்கள் காண்பிக்கின்றனர். பெரும் துயரங்களுக்குப் பிறகான வாழ்வெளியிலும் அவர்களிடம் இருக்கும் அந்த சிரிப்பும், அந்த ஒரு துளியும் மிக மேன்மையான வடிவமாகவே நான் பார்க்கிறேன். அவர்களின் நிகழ்காலமென்பது, கடந்த காலத்தின் ஒரு பகுதியின் மௌனத்திலிருந்தே துவங்கிக் கொள்கிறது. (ஆண்களிடமும் இந்த வெறுமையிருக்கலாம், ஆனால் நமது இறுகிய ஆணாதிக்கச் சூழலில் அது மிக மிகக் குறைவே.) நீண்ட நாட்களுக்கு முன்பே சக தோழிகளிடம், உறவுப் பெண்களிடம் கேட்ட, பார்த்த, அனுபவத்தின் புனைவாக மாற்றமடைந்திருந்த நிறைய கதைகள் என்னிடம் இருந்தன. அவற்றைக் கவிதையாக்க சில குறிப்புகளில் முயன்று கொண்டிருந்த போதுதான். தொகுப்பு முழுவதுமாக இதை செய்து பார்க்கத் தோன்றியது. முதலில் நூறு பெண்கள் குறித்த சிறுசிறு கதைகளின் வடிவத்தில், கவிதைமொழித் தன்மையின் அழகியல் நிறைந்ததாகத்தான் சிலவற்றை எழுதி முடித்திருந்தேன். சில கவிதைகளில் அதன் மொழி பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பிறகு அதன் வழியே கண்டடைந்து, உருமாற்றமடைந்து கிடைத்த வடிவங்கள் மிகுந்த உற்சாகமளிக்கக் கூடியதாக மாறியிருந்தன.

   இத்தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கவிதைக்குப் பின்னாலும் உண்மையான ஒரு முகமும், மனதும், வாழ்வும், மரணமும் இருக்கிறது. சாதி, மதம், இனம், வர்க்கம் மற்றும் இன்னும் என்னென்ன பிரிவுகளிருக்கிறதோ அவை எல்லாவற்றிலும், எந்த விதமான பேதங்களில்லாமல் காலம் காலமாகச் சுரண்டப்படுவது பெண்களின் மனதும், உடலும்தான். செய்திகளுக்குள் மூடிக்கிடக்கும், கைவிடப்பட்டிருக்கும் சக மனிதர்களின் ஆழமான துயரங்களையும், அகத்தின் தேடல்களையும் பாசாங்கில்லாமல் சொல்ல முயன்றிருக்கும் சுதந்திர வெளியாகவே இக்கவிதைகளை நம்பிக்கொண்டிருக்கிறேன். இதைத்தான் இத்தொகுப்பில் வாசகர்களுக்கு நான் கடத்திட முயன்றிருக்கிறேன். வெறுமனே காட்சி சார்ந்த புனைவாக இல்லாமல் மனிதத்துவத்தின் ஒரு ஒளியின் கீற்றை அதற்குள் புதைத்து வைத்து சொல்லியிருக்கிறேன். ‘வாசகசாலை’யால் மிக விரைவாக இது கொண்டு வரப்பட்டது. மிக நெருடலான காலகட்டத்தில், நம்பிக்கையின் சலனமற்ற மனநிலையில், இத்தொகுப்பு வெளிவந்திருப்பது ஒன்றே எனக்கு மிகுந்த ஆசுவாசத்தைக் கொடுத்தது. படைப்பின் தனியான மனநிலையைப் பாதுகாத்திடவும், தொடர்ச்சியாக இயங்கிடவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. முதல் வரைவைப் பார்த்தே அக்கவிதைகள் குறித்த தனித்தன்மைகளை நம்பிக்கையாகப் பேசிய ‘வாசகசாலை’ அருண், தொகுப்பை வாசித்து உடனே அழைத்து அவை உருவாக்கிய மனவெளியைப் பகிர்ந்து கொண்ட, முகநூலில் பதிவிட்ட தோழர்கள், தோழிகள் மற்றும் என் கவிதைகளைத் தோழிகளைக் கொண்டே நாடக அரங்கில் வாசிப்பு நிகழ்வாக மாற்றி அதன் வேறொரு பரிமாணத்தைக் காணச் செய்த வெளி ரங்கராஜன் சார் என அனைவருக்கும் இத்தருணத்தில் நெகிழ்ச்சியான அன்பையும் நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன்.

நவீன கவிதைகள் ஒளி அல்லது இருளை நோக்கி நகர்வதை அதிகமாகப் பார்க்கிறோம். இவை இரண்டுக்கும் இடையே கூட சில கவிதை முயற்சிகள் நடக்கிறது. உங்கள் கவிதைகள் இவை இரண்டையும் நோக்கி நகரவில்லை, அது அதுவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். என் விமர்சனம் சரி என்று நினைக்கிறீர்களா?

   ஒரளவேனும் சரியான பார்வை என்று நினைக்கிறேன். எப்பொழுதும் என் கவிதையில் எதையும் நிரூபிப்பதற்கும், கட்டமைப்பதற்கும், அடைவதற்கும் நான் முயல்வதில்லை. அதன் வழியேயான ஒரு சாராம்சத்தைப் பகிர்ந்து கொள்ளவே மெனக்கிடுகிறேன். சாய்ந்து கிடக்கும் செடியொன்றைச் சற்று நிமிர்த்தி வைக்கும் சிறிய வேலையைப் போலாகவும், கூழாங்கல் மூழ்கிக்கொண்டிருக்கும் தனிமையான மௌனத்தைக் காட்சிப்படுத்துவது போலானதாகவும், சிறிய பூச்சி ஒன்றிற்காக நகர்ந்து பாதையைக் கொடுத்திடுவது போலானதாகவுமான எளிய முயற்சியாகவே இவற்றை மேற்கொள்கிறேன். கவிதை மொழியின் வழியே நான் தகவமைத்துக் கொண்டு வந்திருக்கும் நுட்பம் இவற்றை சில இடங்களில் வலுவானதாகவும், தனிமையானதாகவும் மாற்றிக் காண்பிக்கிறது.

கவிதையின் புற வடிவங்களில் நீள் கவிதைகள் தொகுப்பில் அதிகமாக இல்லை.(தற்போது எழுதியிருக்கலாம்) நீள் கவிதைகளை எழுதும் மனநிலை சவாலானதாக இருக்கிறதா?

   நீள் கவிதையில், கவிதை மொழி சார்ந்த ஓர்மையானது நிச்சயமாக சவாலானதுதான். ஆனால் இங்கு எழுதப்படும் நீள் கவிதைகள் வெறுமனே வரையறைகளை மட்டுமே வெளிப்பாடாகக் கொண்டிருப்பவை. சிலவற்றில், துவங்கும் போது இருந்திடும் மொழியின் நுட்பமும், லாவகமும் போகப் போக குறைந்து, எண்ணற்ற இணைப்புச் சொற்களாலும், வெற்று அசட்டை உருவகங்களாலும் வாசித்தலின் அந்நேரத்திற்கான உடனடியான அனுபவத்தை மட்டுமே கடத்துகின்றன. ஒரே தலைப்பின் கீழாக சில சிறு கவிதைகளாக நானதை மாற்றி எழுதிப்பார்க்கிறேன். அதே மனநிலைக்கான அடுத்தடுத்த சாகசங்களையும், சவால்களான பார்வைகளையும், வெளிப்பாடுகளையும் நெருக்கமாக அனுபவித்திட, செய்து பார்த்திட இது பெரும் உதவியாகயிருக்கிறது. (தற்போது நானெழுதியிருக்கும் நிறைய கவிதைகள் இத்தன்மையிலானவையே)

உங்கள் கவிதைகளில் பகடி, அங்கதம், சுய எள்ளல் போன்றவை குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. எல்லாவற்றையும் கொஞ்சம் தீவிரமாக அணுக வேண்டும் என்கிற மனநிலை இதற்குக் காரணமாக இருக்கிறதா? (உங்களிடம் பேசிய போது எனக்கு நீங்கள் அப்படிப்பட்ட மனிதராகத் தெரியவில்லை அதனால் கேட்கிறேன்)

   மேற்சொன்னவையெல்லாம் இன்னும் சற்று அதிகமாக, எனது அன்றாட வாழ்க்கையின் தேவைக்கென, பயன்பாடுகளுக்கெனச் சேகரித்து வைத்திருக்கிறேன். (நீங்கள் என்னை சரியாகக் கணித்திருக்கிறீர்கள்) ஆனால் இலக்கியம் என்பது அறிவும், உணர்வும் ஒன்றுடனொன்று சரியளவில் கலந்திருக்கும் துறை. அதன் வழியே நீங்கள் கண்டடைவதும், அனுபவிப்பதும் மனிதத்துவத்தின் எளிய வடிவத்தைத்தான். நமக்குள் கட்டப்பட்டிருக்கும் சங்கிலிகளை இதன் ஆழமான தன்மைகளே அறுத்தெறிகின்றன. நீங்கள் உங்களது மனஅளவில் சுதந்திரமாக உணர்வதற்கு கவிதைகள் பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. கவிதை சார்ந்த விசயங்களில், ஆரம்பத்திலிருந்தே தீவிர மனநிலையிலேயே அதை பார்த்திருக்கிறேன். இங்கு அவை வெறும் நுகர்வு மனநிலை கொண்டதாக பார்க்கப்படுவதில் எனக்கிருந்த எதிர் மனநிலையே இத்தன்மையை வளர்த்திருந்தது. கவிதை, பசியுள்ளவனுக்கு ஒரு ரொட்டியைப் போல பகிர்ந்து கொள்ளப் படக்கூடியதே. இருந்தபோதும் அதை விளைவிப்பதற்கான, பகிர்ந்து கொள்வதற்கான செயல் தளங்களில் என்னளவில் சிறிது மாறுபாடுகளைக் கொண்டிருக்கிறேன். கவிதை குறித்த நுட்பமான விசயங்களில் அதன் சுதந்திரமும், தீவிர கதியுமே எனக்கு முதலாவதாகப் படுகின்றன. வேறெதிலும் இவ்வளவு நுட்பமாக இவை இணைந்திருக்க முடியாது. கவிதைக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் தீவிரத்தன்மையே அன்றாடத்தின் எல்லாவற்றையும் தனித்தன்மையுடனும், நிதானத்துடனும் அணுகுவதற்கு எனக்கு மிக தனித்துவமான சிலவற்றைச் சொல்லித் தந்திருக்கிறது.

நவீன இலக்கியச் சூழல் சிற்றிதழ் தொடங்கி இன்று இணையம் வரை விரிந்து பரவிவிட்டது. எல்லாவற்றின் மீதும் மதிப்புகள் என்பது காணாமல் போய்க் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்தச் சூழலில் கவிதைகளைத் தொடர்ந்து எழுதுவதும் தீவிரத்தன்மை குறையாமல் பயணம் செய்வதும் மிகவும் சவாலானது என்று நினைக்கிறேன். அதுவும் கோவிட் போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் படைப்பு மனதை சரியாக தக்கவைத்துக் கொள்ள அல்லது தகவமைத்துக் கொள்ள முடிகிறதா?

   தமிழ் இலக்கியச் சூழலில் நுழைந்த சில வருடங்களிலே, அது இறுக்கமான காழ்ப்புணர்வின் பின்புலங்களினாலும், இருட்டடிப்புகளாலும், கள்ள மௌனங்களினாலும், குழு அரசியலின் ஒட்டுண்ணித் தனங்களாலும், ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்து விடும் அவல விமர்சனங்களினாலும், மாஸ்டர்களின் கிளிப்பிள்ளைகளால் உருவாக்கப்படும் நுகர்வு சந்தை மதிப்புகளாலும் சுற்றிலும் கட்டப்பட்டிருப்பதை சிறிது சிறிதாக அறிந்து கொண்டேன். புதிதாக எழுத வருபவர்களிடம் அவர்கள் காண்பிக்கும் ஒவ்வாமை சார்ந்தும் மிக சீக்கிரமாகவே புரிந்து கொண்டேன். தமிழ் இலக்கியச் சூழலின் குழு அரசியல் காழ்ப்புணர்வுகளும், இருட்டடிப்புகளும் தொடர்ச்சியான நோய்க்கூறுகளையே இங்கு பரப்பிக்கொண்டிருக்கின்றன. இக்குழுக்களின் எண்ணிக்கை, தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் குழுக்களுக்குச் சற்றும் சளைத்தவையல்ல! அவரவருக்குத் தேவையானவர்களை, நேரடியான சில தொடர்புகளின் வழியாக நட்பு பாராட்டி அவர்களின் படைப்புகளை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் தன்மையும், கொண்டாடும் போக்கும் மற்றவர்களின், புதியவர்களின் படைப்புகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் காலந்தோறும் இருந்து வந்திருக்கின்றன. படைப்புகளை விட நேரடியான பழக்கமும், முகஸ்துதியும், ஒரே அலைவரிசைத் தன்மையும் நிறைய தேவையிருக்கிறது. இது குறித்தெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கவில்லையென்றால் நீங்கள் இன்னும் இலக்கியத்தின் மேற்பரப்பிலே இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். மனிதத்துவத்தை, கருணைகளை கடலாகப் படைத்துக் கொண்டிருக்கும் படைப்பாளர்களே, அவர்களுக்குள் முரண்பட்டு கொலைவெறியில் சுற்றிக்கொண்டிருக்கும் களம் இது. புதிதாக வருபவர்கள் இதற்கான சகல முன்னேற்பாடுகளுடன் வருவது நல்லது. இதையும் தவிர்த்து சில படைப்புகளும், படைப்பாளர்களும் வெளியில் வந்திருக்கிறார்கள் எனில், அது இந்த இலக்கிய உலகில் இன்னும் இருக்கும் சில அறம் சார்ந்த மனிதர்களினால்தான் சாத்தியமாகியிருக்கிறது. ஒப்பீட்டளவில் இவை குறைவானவையாக இருந்தபோதும் நம்பிக்கையைக் கையளிக்கிறது. வெறும் படைப்புகளை மட்டுமே வைத்துக்கொண்டு இங்கு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதென்பது மனரீதியாக மிகவும் சவாலான விசயம் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நிறைய நல்ல படைப்பாளிகள் இந்த சவாலோடு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதுதான் தமிழ் இலக்கியத்தை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது. எல்லாத்துறைகளிலும் போலிகளும், ஏமாற்றுக்காரர்களும், சர்க்கஸ் செய்து கொண்டிருப்பவர்களும் நிறைந்துதானே இருக்கிறார்கள். இணைய இதழ்களின் வருகையை சாத்தியப்படுத்திய நண்பர்கள் இதன் ஜனநாயகத் தன்மையை இன்னும் சிறிது ஓர்மைப்படுத்தினர். வாசகர்களுக்கும், படைப்பாளருக்குமான இடைவெளியை இங்கு குறைத்தனர். சிற்றிதழ்களில் சற்றேறக்குறைய்ய படைப்பாளர்கள் தான் வாசகர்களாகவும் இருந்தனர். அதுவே அதன் பரப்பை சற்று குறுக்கியது. இணைய இதழ்கள் அதை சரிசெய்தன. அதனால் விசாலமான தளத்தை அது உருவாக்கிக் கொண்டது. இந்த மாற்றங்கள் இன்றியமையாதவை. இதிலும் அதிகார முகங்கள் இருக்கின்றன. அவை அவ்வப்போது கழன்று விழவும் செய்கின்றன. நீங்கள் இலக்கியத்தில் உயிர்வாழ விரும்பினால் இத்தகைய தகவமைப்புகளை ஏற்றுகொண்டு அதில் செயல்பட்டே ஆக வேண்டும். சில எழுத்தாளர்கள் இத்தகைய மாற்றங்களினால் பொதுவெளியில் ஏற்பட்டிருக்கும் சனநாயகம் குறித்து அடைந்திருக்கும் பதற்றங்கள் மிக முக்கியமானவை.

   இலக்கியம் என்பது வியாபாரமாக்கப்பட்ட தளத்தில் நடந்து கொண்டிருக்கும் (TRADE CONSERVATIVE FORMAT) நுகர்வு பொருள் சார்ந்த சந்தையல்ல என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறேன். (புரிந்து கொள்ளவும் வேண்டுகிறேன்) அதற்கான லாப நட்ட விகிதம் சார்ந்த விதிமுறைகளை இலக்கியத்தின் எதனுடனும் பொருத்திப் பார்க்க முடியாது. இதிலிருந்து அடைவதற்கான புகழ், அதிகாரம் என்று ஒன்று இருப்பதாக நான் எப்போதும் நினைத்ததில்லை. எனக்குத் தெரிந்த படைப்புகளை, எனது எளிய மொழியில் உருவாக்கிக் காண்பிக்கிறேன். அவற்றை விரும்புவதற்கும், ஒதுக்குவதற்குமன சுதந்திரங்கள் மிக வெளிப்படையானவை. குறுக்கு வழிகளை ஒரு போதும் நம்பியதும், பயன்படுத்தியதும் இல்லை. மேலும் நான் எந்த பெரிய எழுத்தாளரின் – உறவுகளின் மருமகனோ, செல்லமோ, அல்ல. எனக்கான எந்தப் பின்புலங்களோ, குழுவோ கிடையாது. வேறெதைக் கொண்டும் என் கவிதைகளை நான் முட்டுக் கொடுத்தது கிடையாது. இங்கு இருக்கும் எண்ணற்ற உதிரிகளின் சிறிய கணக்கில் வேண்டுமானால் என்னை முழுவதுமாக இணைத்துக் கொள்வேன். இந்த மனநிலைதான் எப்பொழுதும் எனது படைப்பு சார்ந்த மனதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

   பெரும் தொற்றின் காலத்தில் பொருளாதார, உடல் மற்றும் மன ரீதியிலான நெருக்கடிகள் எல்லோருக்கும் பொதுவானவையே. தனிமையின் இக்காலத்தில் எழுத்திலும், வாசிப்பிலும் என்னை முழுவதுமாகப் பயன்படுத்தியிருந்தேன். வெறிச்சோடிக் கிடந்த சாலைகளை சில முறை பார்க்க நேர்ந்தபோது, இயற்கையின் முன் நாமெல்லொரும் எத்தனை சிறிய தூசிகளைப் போலானவர்கள் என்ற எண்ணமே வந்திருந்தது. வாழ்வின் நிரந்தரமின்மைகளை இவ்வளவு பெரிய தளத்தில் இது உணர்த்தியிருக்க வேண்டாம். இருந்த போதும் இங்கு எதுவும் மாறவில்லை, ஏமாற்றுச் சந்தைகள் இன்னும் வலுவடைந்திருக்கின்றன என்ற உண்மைகளே மிக வலுவானவை. மேலும் இது குறித்து ஒரே ஒரு சிறிய கவிதை மட்டுமே எழுதியிருந்தேன். அது.

இந்த உலகம் எடையற்றிருக்கிறது,

அதன் மலர்கள் பறிப்பவர்களற்றிருக்கின்றன

நமக்கான இதயம் மரக்கட்டையைப் போல் மாற்றப்பட்டு விட்டது.

பல நுட்பமான காரியங்களை இவ்வளவு சுருக்கமாகச் செய்துமுடித்திருக்கிறது

ஒரு பிரத்யேகக்கணம்.’

சமகாலத்தில் உங்களுடன் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்களில் யாரையெல்லாம் வாசிக்கிறீர்கள்? அவர்களுடனான நட்புறவு எப்படி இருக்கிறது? கவிதைகளைப் பற்றி மனம் திறந்து விமர்சனங்களை ஒருவருக்கு ஒருவர் எழுப்பிக் கொள்ளும் சூழல் ஒன்று உண்மையில் இங்கிருக்கிறதா?

   கவிதைகள் வாசிப்பு என்பது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. பெரிய அளவிலான நட்புகளின் பரப்பளவு எனக்குக் கிடையாது. சமகால சில கவிஞர்களுடன் கிடைத்திருக்கும் நட்புறவென்பது சீராகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அது இரு கைகளுக்குள் அடக்கிவிடும் சிறு எண்ணிக்கையிலானதுவே. கவிதை குறித்து எப்போதாவது பேசும் சூழலே இருந்திருக்கிறது.. கவிதை குறித்த நுட்பமான புரிதலையும், கவிதை மொழியின் பிரக்ஞையும் ஓரளவேனும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் சில கவிதைத் தொகுப்புகள் வாசிக்கக் கிடைக்கும்போது சந்தோசமடைகிறேன். அத்தொகுப்புகள் குறித்த பொதுவான சாரம்சத்தையும், அக்கவிதைகளின் தேடல்களையும், அதன் புதிய மொழியனுபவத்தையும், சிலவற்றில் அது அடைந்திருக்கும் முழுமையின்மையையும் விமர்சனப் பிரதியாகப் பொதுவெளியில் வைத்திருக்கிறேன். அதில் எந்த வித ஒளிவும் மறைவும் இல்லை. சமகாலக் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுப்பாக வாசித்து விடும் பட்சத்தில் அது குறித்து எழுதிவிடுவதென்பதே எனக்கு மனநிறைவைத் தருவது. வாசிக்க நேர்ந்த சிலரின் முதல் தொகுப்பு சார்ந்தும் சிறு குறிப்பாவது எழுதிவிடுகிறேன். (சில தொகுப்புகளுக்கு எழுதவில்லை என்றால் இன்னும் அத்தொகுப்பு வாசிக்கப் படவில்லை என்பதாகவே அர்த்தம் – இவை நிறைய இருக்கின்றன.) விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனதும், அதை விவாதிப்பதற்கான மனதும் சிறிது நிச்சயத்தன்மையுடனே இருக்கிறது.

   பிரம்மராஜன், சரோ லாமா-வின் சில மொழிபெயர்ப்பு கவிதைகள், சமயவேல், யவனிகா ஸ்ரீராம், க.மோகனரங்கன், சாகிப் கிரான், அகச்சோரன், பா.ராஜா, தவசி கருப்பசாமி, சந்திரா, அனார், நேசமித்ரன், நா.பெரியசாமி, பிரதாப ருத்ரன், விவேகானந்த் செல்வராஜ் போன்றோரையும் தற்போது எழுதி வரும் எல்லோரையும் எந்த வேறுபாடுமின்றி நெருக்கமாக வாசித்து வருகிறேன்.

நன்றி ஜீவன் பென்னி இத்தனைக் கேள்விகளுக்கும் நிதானமாக பதில்களை எங்களுக்கு அளித்தமைக்கு. கடைசியாக சொல்ல எதேனும் சொற்கள் இருந்தால் எங்களுக்கு நீங்கள் சொல்லாம்.

   இலக்கியமென்பதே தாங்கள் செய்து கொண்டிருப்பதும், எழுதுவதுமே என்று ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கும் சில தலைமைப்பீடங்கள், அவற்றின் அடுத்தடுத்த வாரிசுகள் போன்றோரிடமிருந்தும் அவர்களது எழுத்திலிருந்தும் நான் மிகவும் விலகியே இருக்கிறேன். எனது உலகம் மிகச் சிறியது. அவற்றின் பிரம்மாண்டங்களுக்குள் அதனை ஒரு போதும் நுழைத்திடவே முடியாது.

கவிதைகள் குறித்தும் அதன் நுட்பமான மொழி, இயங்கியல் தன்மை, அழகியல், அரசியல் சார்ந்தும் உரையாடுவதற்கான நல் வாய்ப்பாக இது அமைந்திருந்தது. தொடர்ச்சியான எனது கவிதை செயல்பாட்டில் இதை முக்கியமானத் தருணமாக நினைத்துக் கொள்கிறேன். கவிதைப் படைப்புகளில் நான் கொண்டிருக்கும் நிலைப்பாடுகளையும், அதன் உள்ளார்ந்த தன்மைகளையும் பகிர்ந்து கொள்வதற்கான இவ்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த ‘கனலி’ இதழுக்கும், விக்னேஸ்வரனுக்கும் மிக்க நன்றியும், அன்பும்.

ஒரு படைப்பாளியாக உங்களின் அத்தனை கனவுகளும் வெற்றி பெற கனலி சார்பிலும் என் சார்பிலும் வாழ்த்துக்களும் அன்பும்.

நன்றி.

2 COMMENTS

  1. ஒரு கவிஞனின் உள்ளார்ந்த எண்ணங்களை மிக விரிவாக பதிவு செய்துள்ளீர்கள். இப்படிப்பட்ட நேர்மையான நேர்காணலை வாசிக்கும்போதுதான் வாசகனின் எண்ணமும் விரிவடையும். பாராட்டுக்கள்.

    • மிக்க அன்பும், நன்றியும், மகிழ்ச்சியும் சார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.