ஏன் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் என்று ஒரு இலக்கிய நண்பர் சில மாதங்களுக்கு முன்பு நேர் பேச்சில் என்னிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அமெரிக்க இலக்கியம் பிடிக்கும் என்கிற ஒற்றை வரி பதிலைத் தந்துவிட்டு அவரை அமைதிப்படுத்தி விட்டேன். ஆனாலும் நான் மனதளவில் அமைதியாகவில்லை ஒவ்வொரு முறையும் அமெரிக்க இதழிற்கு வேலை செய்ய இரவு நேரங்களில் உட்காரும் போதெல்லாம் நண்பரின் அந்தக் கேள்வி என்னைச் சலனப்படுத்திக் கொண்டேயிருந்தது. அமெரிக்க இலக்கியம் பிடிக்கும் சரிதான் ஆனால் அதைத்தாண்டி எதற்கு இந்தச் சிறப்பிதழ் என்கிற தீராத மனத்தொந்தரவு வந்து மனதில் உட்கார்ந்து கொண்டது.
கனலி வழியாக ஏற்கனவே உருவாக்கிய ஜப்பானிய சிறப்பிதழிலும் மற்ற இதழ்களும் எந்தவிதத்திலும் தனிப்பட்ட என் வாழ்க்கைக்குத் தொடர்புகள் துளியும் இல்லாதவை. இந்த இதழை மட்டும் ஏன் இவ்வளவு விரும்பி செய்ய முயல்கிறேன். படைப்புகளைக் கேட்டுப் பெறுவதில் மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வமும் வேகமும் கொள்கிறேன் என்கிற மன அலைச்சல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் அமெரிக்க சிறப்பிதழிற்கும் எனக்கும் ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு இருப்பதாக மனதில் ஒவ்வொரு முறையும் நினைக்கத் தோன்றியது. இந்த சமயத்தில் தான் ஒருநாள் என் அப்பாவிடம் ஏதோ விசாரிக்கப் போய் அவர் தனது அப்பாவைப் பற்றிச் சொன்ன ஒரு சின்ன விஷயம் மனதில் அதீதமான வலிகளைத் தந்தது. அது என் தாத்தா எப்படி தனது நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டு துளியும் சம்பந்தமில்லாத நெடுந்தொலைவுக்குப் பிழைக்க ஓடி வந்து கடைசி வரை புதிய நிலத்தில் ஒரு கைப்பிடி மண் கூடத் தனக்கு உரிமை இல்லாமலே மறைந்து போனார் என்கிற கதை அது. அந்தக் கதையின் தொடர்ச்சியாக என் அப்பாவும் இருக்கிறார். ஆமாம், அவருக்கு இன்றுவரை சொந்தமாக நிலம் என்கிற ஒன்று அவர் சிறுவயதிலிருந்து வளர்ந்த இந்தப் புதிய பகுதியில் இல்லை ( எனக்கு இருக்கிறது ஆனால் என் அப்பா என்றுமே அதைத் தன் நிலம் என்று சொல்லிக்கொள்ள மாட்டார்.)
இந்தப் பின்னணி தான் நிலம் பற்றிய நிறைய சிந்தனைகள் மனதில் கொண்டு வந்து சேர்த்தது. நிலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வளவு முக்கியமானது. தன் வாழ்நாளில் இந்த சில ஆயிரம் அடிகள் அல்லது சில நூறு அடிகளைப் பற்றி மனிதனுக்கு இருக்கும் கனவுகள் எவ்வளவு பெரியது. அதற்காக அவன் தன் வாழ்நாட்களில் படும் பாடுகள் எவ்வளவு கடினமானது. ஒரு வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் நிலம் என்பது அவனது ஆன்மாவைப் போல. அது கடைசி வரை அவனுடன் உறுதுணையாக வருவது அல்லது தொந்தரவு செய்வது. இன்னும் சொல்லப் போனால் அவன் கடைசியாக நிம்மதியாக உறங்கப் போவது இதே நிலம் என்கிற கட்டிலில் தான்.
நீங்கள் நிற்பது நிலத்தில் அல்ல எங்கள் மூதாதையர்களின் ரத்த நாளங்களில்
என்கிற செவ்விந்தியர்கள் பாடல் ஒன்றும் மனதில் இந்த கட்டுரையின் நடுவில் வந்து போகிறது.
அமெரிக்க வரலாற்றிலும் நிலம் தான் முக்கியகாரணி. அமெரிக்கா என்கிற நாடு உருவாகவே இந்த நிலம் தான் காரணம். சிறுவயதில் வாசித்த காமிக்ஸ் முதல் ரசித்துப் பார்த்த அமெரிக்க வன்மேற்கு படங்கள் வரை செவ்விந்தியர்கள் என்பவர்கள் முரடர்கள் மற்றும் மண்டை தோலைத் தலை முடியுடன் வெட்டி எடுத்து தங்களது வெற்றிகளைக் கொண்டாடும் ரத்தவெறி பிடித்த மிருகங்கள் என்றெல்லாம் கருது கோள்கள் என்னுள். அதிலும் கொலம்பஸ் என்பவனை வாசிக்கும் போதெல்லாம் எவ்வளவு பெரிய கடலோடி அவன். ஒருவேளை அவன் இல்லாமல் போயிருந்தால் (தற்செயலாக இருந்தாலும்) அமெரிக்கா என்கிற உலகின் மாபெரும் வல்லரசு நாடு இன்று இருந்திருக்குமா என்றெல்லாம் பல்வேறு கருத்துகள் இளமைப் பருவத்தில் முக்கியமாகக் கல்லூரி காலங்களில் என்னுள் இருந்தது. அமெரிக்கா என்கிற தேசத்தின் மீது விவரிக்க முடியாத ஆசை, கனவுகள் எப்படிப்பட்ட நாடு பாரு மச்சான் என்று நண்பர்களிடம் ஒவ்வொரு முறையும் பெருமை அடித்தல் இன்னொரு பக்கம்.
கல்லூரியின் கடைசி ஆண்டு படிப்பின் போதுதான் ஒரு கிருஸ்துவ நண்பரின் அறிமுகம் கிடைத்தது. நல் வாசகரான அவர்தான் எனக்கு ஆங்கிலப் புத்தங்களை எப்படி வாசிக்க வேண்டுமென்று கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுத் தந்தார். அப்படித்தான் நூலகத்தில் ஆங்கிலப் புத்தங்கள் இருக்கும் பகுதியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கினேன். அந்த வாசிப்புகளின் வழியாக எனக்கு முற்றிலும் வேறு ஒரு திறப்பு ஏற்பட்டது. அங்குதான் இன்றைய வல்லரசுகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அத்தனை பெரிய நாடுகளின் காலனித்துவம், சுரண்டல், அடிமை முறை, இனவெறி, தங்களது தனிப்பட்ட நலன்களுக்கு இவர்கள் நடத்திக்கொண்ட உலகப் போர்களின் வரலாறு போன்றவற்றைப் பற்றியெல்லாம் ஓரளவுக்கு அறிதல்கள் பிடிபட்டது. அதற்குப் பிறகு தனிப்பட்ட வாசிப்புக்குள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வழியாக முற்றிலும் எனக்கான வேறு ஒரு உலகை நானே கண்டடைந்து கொண்டேன்.
இப்படி என் அறிதல்கள் வழியாக என் ஆழ்மனதிலிருக்கும் பல குரல் வடிவங்களின் ஒரே ஒரு குரல் வடிவத்தின் வேறு ஒரு வடிவம் தான் இந்த அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் முயற்சி. உண்மையில் அமெரிக்கா என்பது ஒரு தேசமே அல்ல. அது பல்வேறு இனக்குழுக்களின் கூட்டுக் கலவை. ஆனால் இந்த அத்தனை இனக்குழுக்களும் இன்று மேலே அமர்ந்திருப்பது லட்சக்கணக்கான அமெரிக்காவின் உண்மையான தொல்குடிகளின் ஆன்மாவின் மீதே. இன்று அமெரிக்கர்களின் கைவசம் இருக்கும் ஒவ்வொரு நிலமும் பெயர் தெரியாத என் மூதாதையர்களின் ஒருவனின் நிலமே. அன்று நிலத்தை இழந்த அவன் குரல் இன்று வரை அங்கு தகிக்கும் வெப்ப சமவெளி பள்ளத்தாக்கில் ஒலித்துக்கொண்டே தானே இருக்கிறது. அந்த நிலமற்ற குரலின் நீட்சி தானே இந்த உலகில் வேறு எங்கோ ஒரு முனையில் இருக்கும் என் சந்ததியும் என்று தோன்றுகிறது.
உலகில் நிலமற்ற அத்தனை மனிதர்களும் வெறும் நடைப் பிணங்களே என்கிறது வரலாற்றின் மோசமான பக்கங்கள்.
செவ்விந்தியர்களுக்குக் கழுகுகள் என்பவை கடவுளின் தூதர்கள் அவர்களைப் பொருத்தவரை கழுகுகள் என்பவை தங்களின் செய்தியைக் கடவுளுக்குச் சொல்லும் பறவைகள். ஒரு செவ்விந்தியனுக்கு ஒரு கழுகின் இறகு கிடைத்தால் கூட அவன் புனிதமானவனாக மாறிவிடுவான் என்பது அவன் நம்பிக்கை. ஒவ்வொரு போர்களிலும் வெற்றி பெற்றபின்பு அவனுக்குக் கிடைப்பது கழுகுகளின் இறகுகளில் செய்யப்பட்ட கிரீடமே. கழுகும் செவ்விந்தியர்களும் வேறுவேறு அல்ல. ஒவ்வொரு செவ்விந்தியனும் உயரப் பறக்கும் ஒரு கழுகே. இந்த கழுகுகளின்(செவ்விந்தியர்களின்) ஒவ்வொரு நிலமும் மெல்ல மெல்ல அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் சிறு பகுதி மட்டும் (ஆமாம் அமெரிக்க வரலாறு என்பது முழுக்க முழுக்க மனித ரத்தம் படிந்த வரலாறே) இப்படி தனது தொல்குடிகளின் நிலத்தைப் பிடுங்கி அவர்களை அணு அணுவாக அவர்களின் நிலத்திலிருந்து பிடுங்கி எறிந்தவர்களின் கலையும் இலக்கியமும் எப்படி உருவாகியது எப்படி மேலேறி வந்தது, குடியேறிகளாக வந்தவர்களால் வளர்க்கப்பட்ட கலை இலக்கியம் எப்படி வளர்ந்து நின்று ஓங்கியது. இன்று எந்நிலையில் இருக்கிறது என்கிற என் தனிப்பட்ட பல்வேறு தேடல்களின் சிறு துளி தான் இந்த அமெரிக்க கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்.
உலகில் இருக்கும் சமுத்திரம் எவ்வளவு பெரியது என்று யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். உண்மையில் அப்படித்தான் இந்த அமெரிக்க இலக்கிய வரலாறும். அவையும் சமுத்திரத்தின் அளவுக்கே இன்றுவரை பரந்து விரிந்துள்ளது. அந்த சமுத்திரத்தில் ஒரு துளி (இல்லை அதைவிடக் குறைவாகக் கூட இருக்கலாம்) எடுத்து இந்த அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழைத் தொகுத்துள்ளேன். நிச்சயம் இது முழுமையான அமெரிக்க கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ் அல்ல (அமெரிக்காவின் இன்றைய அரசியல் நிலைப்பாடுகளைப் பேசும் இதழும் அல்ல அதற்கு நிறைய ஊடகங்கள் என்றும் இருக்கிறது) இது நூறு சதவீதம் அமெரிக்க கலை இலக்கியச் சூழலியல் பகுதிகளின் ஒரே ஒரு துளி மட்டும். இந்தச் சிறிய துளியில் என் மூதாதையர்களான அமெரிக்க தொல்குடிகளின் அழிக்கப்பட்ட சில குரல்களை நீங்கள் இனம் காணலாம் அல்லது இனவெறியால் நூற்றாண்டுகளாகத் துயரக் குரலில் பாடிக் கொண்டிருக்கும் ஒரு கறுப்பின மனிதனின் குரலை நீங்கள் கேட்கலாம். அமெரிக்க வாழ்வின் பழைய கதைகள் அல்லது புதிய கதைகளை நீங்கள் அறியலாம். புலம்பெயர்ந்த ஒரு எழுத்தாளரின் கதைகளைக் கூட நீங்கள் ரசிக்கலாம்.
இப்படி இந்தச் சிறப்பிதழ் வழியாக நீங்கள் கேட்கும் குரல்கள் அல்லது கதைகள் உங்கள் வாழ்நாளில் சற்றேனும் சில மனநெருக்கடிகளும், சிந்தனைகளும் தந்து போனால் போதும் அதுவே இந்தச் சிறப்பிதழின் வெற்றி தான்.
தனது நிலத்தைத் தொலைத்த கழுகுகளான செவ்விந்தியர்களுக்கு இந்தச் சிறப்பிதழைக் காணிக்கை செய்வோம். ஏனென்றால் நம்மால் செய்ய முடிந்தது இது மட்டும் தான்.
(இந்தச் சிறப்பிதழிற்கு சில சிறுகதைகளை மொழிபெயர்ப்புக்குத் தேர்வு செய்து தந்து உதவிய மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி அவர்களுக்கும், நான் கேட்டவுடன் பாரிஸ் ரெவ்யூ இணையதளத்தில் எனக்கு உடனடியாக சந்தா செலுத்தி அந்த இதழ்களை வாசிக்க உதவிய ஈழ எழுத்தாளர் கலாமோகன் அவர்களுக்கும்.
என் தொடர் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டு படைப்புகளை எழுதியும் மொழிபெயர்ப்பு செய்தும் தந்து உதவிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் வந்தனங்கள். இன்னும் வரும் காலங்களில் வாய்ப்புள்ள போதெல்லாம் நிலமிழந்த என் மூதாதையர்களின் வரலாற்று இலக்கியங்களை இன்னும் விரிவாக அறிமுகம் செய்வேன் என்று நம்புகிறேன்.
என்றும் என்னுடன் பயணிக்கும் எழுத்தாளர் கீதா மதிவாணன், தோழர்கள் மகேஸ்வரன், ஆனந்த் மற்றும் சாருலதாவுக்கு எனது அன்பு.
நன்றி,
என்றும் அன்புடன்,
க.விக்னேஸ்வரன்.