ஏதில பெய்யும் மழை காரென மயங்கிய
பேதையம் கொன்றைக் கோதை நிலை நோக்கி
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின் வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே
பருத்த இக்கொன்றை மரங்கள் ஏமாளிகள்:
கற்கள் நிறைந்த பாலையின் வழியே சென்ற
தலைவன் கூறிய மழைக்காலம் இன்னும் வரவில்லை,
ஆனால்,
அகாலத்தில் பொழியும் இம்மழையைக் கண்டு
முறையான பருவமழை வந்ததென ஏமாந்து
இம்மரங்கள் தம் கிளைகளில்
கொத்துகொத்தாய் பூக்களை மலர்த்தியுள்ளன.
மழைக்கான நீண்டகாலக் காத்திருப்பு இந்திய செவ்விலக்கியங்கள் பலவற்றிலும் விவரிக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கிய நூலான அகத்திணையில் காணப்படும் மேற்கண்ட வரிகள் பருவமழையின் மாயைகளைக் கூறுகிறது. மனிதர்களைப் போலவே கொன்றைமரங்களும் ’ஏமாறுகின்றன’. இயற்கையின் சமிக்கைகளை அவை தவறாகப் புரிந்துகொள்கின்றன. அவை நம்பிக்கை கொள்ளும் மழைக்கான முற்குறிகள் வெறும் மாயையாகவே முடிந்துபோகின்றன.
”முறையான பருவமழை வந்ததென” – இனிவரும் காலங்களில் முறையான பருவமழை எப்படி இருக்குமென யாரறிவார்? கடந்த சில தசாப்தங்களாக, தெற்காசிய பருவமழைகள் அதீதப்பொழிவு, அதீத வறட்சி ஆகிய இருகோடிகளுக்கு இடையே ஊசலாடியபடியேதான் உள்ளது. பருவமழையின் இயங்குமுறைகள் மிகவும் சிக்கலானவை, எனவே அதற்கென ஒரு மாதிரியை அமைப்பதென்பது கடினம். மற்ற கோள்களுக்கு விண்கலங்களையும் கூட ஏவிவிடமுடிகிற நம்மால் பருவமழை கொண்டுவரக்கூடிய மழையின் அளவை கணிக்கவே முடிவதில்லை. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் பருவமழைகளின் நிலையற்றதன்மை மேலும் கூடுகிறது. பருவமழையின் வடிவங்களில் அடிப்படை மாற்றமெனவொன்று உண்டாகிவிட்டால், அது லட்சோப லட்ச மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்துவிடக்கூடும்.
16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலத்தில் ‘Monsoon’ எனும் சொல் முதன்முதலாகத் தோன்றியது, இச்சொல் முதலில் அரேபிய மொழியில் ‘மோஸிம்’ எனவழைக்கப்பட்டு, அங்கிருந்து போர்ச்சுகீசியத்திற்குச் சென்று ‘மோசோவ்’ எனப் பெயரிடப்பட்டு பின்னரே ஆங்கிலத்திற்குச் சென்றது. உருதுவிலும் இந்தியிலும் கூட ‘மோஸம்’ எனும் சொல் பருவமழையையே குறிக்கிறது. எளிமையாகக் கூறுவதானால், மழையையும் வறட்சியையும் தரக்கூடிய காற்றுகளைக் கொண்ட வானிலை அமைப்பையே பருவமழை என்கிறோம். உலகெங்கிலும் பல பருவகால முறைகள் இருந்தபோதும் தெற்காசிய பருவமழைகளே அளவிலும் விளைவுகளிலும் மிகப் பிரம்மாண்டமானவையாகும். வடதுணைக்கண்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் யூரேசிய நிலப்பரப்பில் இருந்து வெளியேறிய புவியியல் வரலாற்றின் காரணமாக, இந்திய துணைக்கண்டம் பருவமழை முறையின் மையமாக வீற்றிருக்கிறது. பூமியின் தெற்கு அரைக்கோளத்தின் பரந்த நீர்வெளியை நோக்கியபடியே இந்தியா அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வசந்தத்தின்போதும் ஆசிய கண்டம் வெப்பமடையும்போது, வெப்பக்காற்று அங்கிருந்து மேலெழும்புகிறது. அச்சமயம் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப குளிர்ந்த, ஈரப்பதம் நிறைந்த காற்று அங்கு விரைகிறது. தென்மேற்கில் இருந்து வீசும் பருவமழைக்காற்று பூமியின் சுழற்சி ஏற்படுத்தும் வளைவால் வந்தவழியே மீண்டும் சென்று தென்மேற்கில் அமைந்துள்ள அரேபியக்கடலில் இருந்தும், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இருந்தும் இந்தியாவை வந்தடையும். கடலில் இருந்து வெளியேறும் இந்தக் காற்றில் நீராவிவடிவில் பெருமளவு சூரியசக்தி சேமிக்கப்பட்டிருக்கும். அந்நீராவியே பின்னர் மழையாகப் பொழிகிறது. இதுவொரு பிரமாதமான, சக்திவாய்ந்த முறை. எனினும் இதனை அழிவேயில்லாத, மாற்றத்திற்கே உள்ளாகாத அமைப்பெனவும் கூறிவிடமுடியாது.
இந்த அமைப்பில் இமாலயம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. திபெத்திய பீடபூமி அமைந்திருக்கும் உயரம் காரணமாக அது விரைவாக வெப்பமடைகிறது. விளைவாக காற்றழுத்தத்திலும் தட்பவெப்பநிலையிலும் உண்டாகும் மாற்றம் பருவமழையை வலுப்படுத்துகிறது. அதேசமயம் மலைகளே அந்தக் காற்றுக்கு மாபெருந்தடையாக இருந்து, கங்கை சமவெளிகளில் பருவமழையைப் பொழிய வைக்கிறது. தெற்காசியாவில் பொழியும் மொத்த மழையளவில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையேயுள்ள மூன்று மாதகாலத்திலேயே பெய்கின்றன. அக்காலகட்டத்திலுமே கூட அம்மழை வெறும் 100 மணிநேரங்களுக்கே தீவிரமாய் பெய்யும். நீர்ப்பாசன வசதிகளில் நாம் முன்னேறியிருந்தபோதும், 60 சதவீத இந்திய விவசாயம் பருவமழைப்பொழிவை நம்பியே உள்ளது, மேலும் இந்திய மக்கட்தொகையில் 60 சதவீதத்தினர் வேளாண் தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். இத்தனை அதிக எண்ணிக்கையிலான மக்கள் உலகில் வேறெங்கிலும் பருவமழையை நம்பியிருக்கவில்லை.
சுதந்திரத்திற்கு முன்னும் சரி பின்னும் சரி, பருவமழையின் இத்தகைய ஆற்றல் இந்தியாவின் ஆட்சியாளர்களை கலக்கப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், ஏகாதிபத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சரொருவர், ‘ஒவ்வொரு பட்ஜெட்டும் மழையின் சூதாட்டம்’ என்று அறிவித்தார், இந்த அறிக்கை இந்திய ஊடகங்களில் இன்றளவும் தொடர்ந்து குறிப்பிடப்படப்பட்டு வருகிறது. ‘இந்தியாவைப் பொறுத்தவரை, பற்றாக்குறை என்பது தவறிப்போன பருவமழை மட்டுமே,’ என இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி 1960 களின் பிற்பகுதியில் கூறியிருந்தார். இந்த அச்சம் தற்போதும் நீடிக்கிறது. 2017 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவொன்றில் ‘பருவமழைதான் இந்தியாவின் நிதியமைச்சர்’ எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனிதா நரேன் கூறினார். மகத்தான இயற்கை சக்திகளுக்கு எதிரான ஒரு போரை மேற்கொள்வதான இவ்வுணர்வு,அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு இயற்கையை வெல்ல முடியும் என நம்புபவர்களுக்கும் இயற்கையின் வரையறைகளின் மேல் அதீத மதிப்பு கொண்டிருக்கும் நரேன் போன்றவர்களுக்கும் இடையேயான நீடித்த விவாதத்திற்கு வழிவகுத்தது. நடைமுறை வணிக நலன் சார்ந்து பருவமழை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடலினைக் கடக்க உதவும் காற்றுகளைப் பற்றி அறிந்துகொள்வதில் கடற்படையினர் தேர்ச்சி பெற்றனர், மாலுமிகளும் அவர்களை அச்சுறுத்திய புயல்களைப் புரிந்து கொள்ள வேண்டிருந்தது. பருவமழை குறித்தான அறிவாற்றல் மிகுந்த மதிப்பு வாய்ந்தது என்பதோடு அவை பல்வேறு கலாச்சாரங்கள் இடையேயும் விரிந்திருந்தது. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடற்படை வீரர் அஹ்மத் இப்னு மஜித், Kitab al-Fawa’id (‘Book of Lessons on the Foundation of the Sea and Navigation’) எனும் தனது நூலில் உள்ள குறிப்புகளே பருவமழைக் குறித்து முதன்முதலாகக் கிடைத்த தகவல்களாகும்.
17ஆம் நூற்றாண்டில், கிழக்கு நோக்கிய தங்கள் பயணங்களில் ஆங்கில, டச்சு கிழக்கிந்திய நிறுவனங்கள், குறிக்கப்பட்ட படகோட்டத் திசைகளிலேயே பயணித்தன. இப்பயணங்களின் பதிவுப் புத்தகங்களில் மிகப்பெரும் வானிலை தரவுகள் பதியப்பட்டிருந்தன. 1840 களில், ஓய்வுபெற்ற கப்பல் கேப்டனும், கல்கத்தாவின் கடற்படை நீதிமன்றங்களின் தலைவருமான ஹென்றி பிடிங்டன், சிறப்பியல்பு கொண்ட வங்காள விரிகுடாப்பகுதியின் புயல்களை விவரிக்க ‘சூறாவளி’எனும் வார்த்தையை உருவாக்கினார், இது ‘வட்ட அல்லது அதிவளைவுக் காற்று’ எனப் பொருள்படுகிறது. குக்லோமா (வேறு சிலவற்றோடு இச்சொல் பாம்பின் சுருளையும் குறிக்கும்) எனும் கிரேக்கச் சொல்லில் இருந்தே அவர் இவ்வார்த்தையைப் பெற்றிருந்தார்.
அத்தகையதொரு சூறாவளிதான் இந்தியாவின் வானிலை வளர்ச்சிக்காய் வித்திட்டது. அக்டோபர் 1864 இல், கல்கத்தா மற்றும் வங்காளக்கடலோர மாவட்டங்களை ‘பெருஞ் சீற்றம்கொண்ட சூறாவளி’ஒன்று தாக்கியது. ‘ஆறுகள் சீற்றமடைந்து கடலைப் போல் பொங்கி’நகரத்தை ‘நிர்மூலமாக்கின.’ ‘கண்ணிற்கு எட்டியதூரம்வரை, இடைவெளியே இல்லாமல் சேதாரமும் துயரமும்தான் காணப்பட்டன.’ என ஒரு பிரிட்டிஷ் நிருபர் எழுதியுள்ளார். அந்தச் சூறாவளி ஏற்படுத்திய அழிவு 1875 இல் நிறுவப்பட்ட இந்திய வானிலைச் சேவையின் வளர்ச்சியைத் தூண்டியது. புவியியலாளராகப் பயிற்சி பெற்றவரான அதன் முதல் இயக்குனர் ஹென்றி பிளான்போர்ட், பருவமழையின் மர்மங்களின்பால் ஈர்க்கப்பட்டார்.
அதே தசாப்தத்தில், அதாவது 1870 களில், இந்தியா மழையை எந்தளவிற்கு நம்பியுள்ளது என்பதை தொடர்பஞ்சங்கள் கொடூரமாக நினைவூட்டின. உலகெங்கிலும் வறட்சி சுழற்சிகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் அவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. இந்தியா, வடக்கு சீனா, ஜாவா, எகிப்து, வடகிழக்கு பிரேசில் ஆகிய அனைத்துப் பகுதிகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டதை சமகால ஆய்வாளர்கள் கண்டனர். இதன் காரணத்தைக் கண்டறிய மேலும் ஒரு நூற்றாண்டுகூட ஆகலாம். அமெரிக்க வரலாற்றாசிரியர் மைக் டேவிஸ் இப்பஞ்சங்களை ’அண்மைக்கால விக்டோரிய அழித்தொழிப்புகள்’எனவழைத்தார். 1870 களிலும், 1890 களிலும் பஞ்சத்தில் இறந்த மில்லியன் கணக்கானவர்கள் ‘இயற்கைப் பேரழிவால்’ இறக்கவில்லை, ஸ்மித், பெந்தம், மில் ஆகியோரின் புனிதக்கொள்கைகளின் இறையியல் பயன்பாடு மூலம் அம்மக்கள் ‘கொலை செய்யப்பட்டார்கள்’ என 2001ல் அவர் வாதிட்டார். ஆம், மழை மிக மோசமாக மக்களை ஏமாற்றிவிட்டதுதான், எனினும் அந்த வறட்சியை பேரழிவாக மாற்றியது ஏகாதிபத்தியத்தின் கொள்கையே ஆகும். நீண்ட காலத்தவறெனக் கூறுவதானால், இந்தியாவை நவீன முதலாளித்துவத்திற்கு இழுத்துச் சென்ற ஆங்கிலேய ஆட்சி, கிராமப்புற சமூகங்களின் பின்னடைவைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதைக் குறிப்பிடலாம். குறுகிய காலத்தவறாக, ’தடையிலாச் சந்தைகளின் ஒருமைப்பாடு’ என்ற பெயரில் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிவாரணம் மறுத்ததன் மூலம் ஆங்கிலேய ஆட்சி விஷயங்களை மேலும் மோசமாக்கியது.
ஆனால் பஞ்சங்களுக்கு காலனித்துவ அரசாங்கத்தின் எதிர்வினையைக் கடுமையாக விமர்சித்தவர்களுமே கூட, மழையை நம்பியிருப்பதால் இந்தியநாடு பலவீனமடைகிறது எனவும் ஒப்புக்கொண்டனர். ‘விளிம்பின் இறுதிக்கு வந்துவிட்டோம், ஒவ்வொருமுறை பருவமழை தோல்வியடையும்போதும் மில்லியன் கணக்கானவர்கள் இறக்கின்றனர் அல்லது பட்டினி கிடக்கின்றனர்’ என நீதிபதியும் சமூக சீர்திருத்தவாதியும் பொருளாதார வல்லுனருமான மகாதேவ் கோவிந்த் ரனாடே 1899 இல் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்தான், காலனித்துவ அரசாங்கமும், இந்திய, பிரிட்டிஷ் விமர்சகர்களும் நீர்ப்பாசனத்தின் அவசியத்தை உணர்ந்து தமக்குள்ளே பகிர்ந்துகொண்டனர். பருவமழையின் மாறுபாடுகளைத் தணிக்க, வற்றாத நீர்ப்பாசனம் மட்டுமே அதிகப் பயனளிக்குமென அவர்கள் நம்பினர். தெற்காசியாவின் நிலப்பரப்பையும் நீர்நிலையையும் அவர்களின் தேடல் மாற்றக்கூடும்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இந்தியாவின் வானிலை ஆய்வாளர்களுக்கு வானிலை முன்னறிவித்தல் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. 1882 ஆம் ஆண்டில், பிளான்போர்ட் தனது முதல் பருவமழை கணிப்புகளைத் தயாரித்தார். அவை பரிட்சார்த்தமாய் தயாரிக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள, பிளான்போர்ட் வானிலைக்கான ஒரு குறிகாட்டியில் மட்டுமே கவனம் செலுத்தினார். இமயமலையின் பனிப்பொழிவின் அளவிற்கும் வரவிருக்கும் பருவமழையின் தீவிரத்திற்கும் இடையே ஒரு எதிர்உறவு இருப்பதாக அவர் உறுதியாக நம்பினார். மலையுச்சிகளில் குறைந்த பனிபொழியக்கூடிய வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் கண்டம் வேகமாக வெப்பமடையும், இது பருவமழை சுழற்சியை வலுப்படுத்தும் என அவர் கணித்தார். அவரது இம்முதல் முயற்சி பெருமளவில் சரியாகவே இருந்தது. ஆனால் இக்கணிப்பையெல்லாம் கடந்து பெரிய அளவில் பருவமழை இயங்குவதாக பிளான்போர்டும் அவரது சகாக்களும் சந்தேகித்தனர்.
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான காலநிலை விஞ்ஞானிகளில் ஒருவரான சர் கில்பர்ட் வாக்கர் பருவமழையின் கடல்சார் தொடர்புகளை வெளியிட்டார். அவர் ஒரு சிறந்த கணிதவியலாளர், பணிவுமிக்கவர். பூமராங்கின் எறிபாதையை வால்கர் ஆய்வுசெய்துகொண்டிருந்த கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் இருந்து விலகி இந்திய வானிலைச் சேவைக்கு அவர் வந்துசேர்ந்தார், 1904 முதல் 1924 வரை அச்சேவையை இயக்கினார். அவரொரு பறவையியலாளர், புல்லாங்குழல் இசைப்பவர், முதன்மை புள்ளிவிவர நிபுணராகவும் இருந்தார்.
பருவமழையைப் புரிந்துகொள்வதற்கு வாக்கர் அனுபவமுறைகளை அணுகினார். பணியாற்றல் கொண்டவரென வாக்கரால் அடையாளம் காணப்பட்ட ராய் பகதூர் ஹேம்ராஜ் என்பவரது தலைமையில் பல இந்திய ஊழியர்கள் நிறைந்த ஒரு குழுவை அமைத்து அதையொரு மிகப்பெரிய மனிதக்கணினி போல் வாக்கர் பயன்படுத்தினார். வாக்கரின் இக்குழுவிற்கு கிடைத்த தரவுகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தோமானால் அவருக்கு முந்தைய தலைமுறையில் கூட இச்செயல் சாத்தியமாகியிராது. அவையெல்லாம் தெளிவான, புதிய விஷயமொன்றை சொல்லின: பருவமழையின் முறை பூமிக்கோளின் இயக்கத்தைச் சார்ந்தது என்பதுதான் அது. பசிபிக் பெருங்கடல் முழுவதும் உண்டாகும் வளிமண்டல அழுத்த வேறுபாடுகளுக்கும் பருவமழையின் வலிமைக்கும் தொடர்பிருப்பதாகத் தோன்றியது. வாக்கர் இந்த நிகழ்வை தெற்கு அலைவு என்று அழைத்தார்.
பருவமழைக்கு நேரம் மற்றும் விண்வெளியுடனான தொடர்புகளையும் வாக்கர் ஆராய்ந்தார். இந்தியாவில் பற்றாக்குறையாகவோ ஏராளமாகவோ பொழியும் பருவமழையின் முன்னறிவிப்புகளை சான்சிபார் அல்லது அலாஸ்காவில் உள்ள அலூடியன் தீவுகள் வரை தொடர்புபடுத்தி வாக்கர் ஆராய்ந்ததில், ஒன்றோ இரண்டோ பருவமழைக்காலப் பின்னடைவுகள் இருப்பதை அத்தொடர்பின்வழி கண்டுகொண்டார். எனினும் இதற்கான காரணச் சக்திகளை அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. இது நிகழ்ந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வாளர் ஜேக்கப் பியூர்க்னெஸ் வானிலை குறித்த வாக்கரின் நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு தன் ஆராய்வை மேற்கொண்டார், விளைவாக கிழக்கு பசிபிக் பெருங்கடலில், பெரு கடற்கரையையொட்டி கடற்மேற்பரப்பில் ஒழுங்கற்ற இடைவெளிகளில் உண்டாகும் வெப்பமே ஒட்டுமொத்த உலகின் வானிலையிலும் எதிரொலிக்கிறது எனக் கண்டார்.
உள்ளூர் மீன்பிடி சமூகங்கள் பயன்படுத்திய வார்த்தையை அடிப்படையாக வைத்து, பியூர்க்னெஸ் அதனை ’எல் நினோ’ எனவழைத்தார். ஆசிய வரலாற்றில் உண்டாகியுள்ள மிக மோசமான வறட்சிகளுக்கெல்லாம் தீவிர எல் நினோ நிகழ்வுகளுடன் தொடர்பிருப்பதைக் காணலாம்.
பருவமழை இயங்கும் முறை மனித தலையீட்டிற்கு அப்பாற்பட்டது. அப்படியும் தொழில்நுட்பத்தை உபயோகிக்க முயன்றாலும், அது நிலப்பரப்பில், உள்கட்டமைப்பு வடிவங்களை மாற்றியமைப்பதுவரை மட்டுமே சாத்தியப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், உலகெங்கிலும் உள்ள பொறியியலாளர்கள் நீர் சேமிப்பு, வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்தியை இணைக்கும் அணைகளை அமைப்பதன் மூலம் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் அபாயத்தை தடுக்க முடியும் என்று நம்பினர். இந்தியாவிலும் இந்நம்பிக்கை பரவியது. 1930 களில், இந்தியர்கள் சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருந்த அக்காலத்தில், பல இந்திய விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் டென்னசி பள்ளத்தாக்கு ஆணையத்தின் ஹைட்ராலிக் சாதனைகளையும், சோவியத் யூனியனையும் நம் நாட்டிற்கான மாதிரியாகக் கொண்டனர்.
சுதந்திரத்தின் போதும், பாகிஸ்தான் இந்தியா பிரிவினைக்குப் பின்னரும், பருவமழையின் ஏற்ற இறக்கங்களை சமன்செய்யும்பொருட்டு பெரும் நீர்த்திட்டங்கள் உருவாக்கப்படுமென வாக்களிக்கப்பட்டது. வளம்நிறைந்த விவசாய நிலங்களை இழந்துவிட்டதாக வருந்தும் இருநாடுகளிலும், முன்னர் பஞ்சம் தலைவிரித்தாடிய பகுதிகளிலும், உணவு உற்பத்தி இந்நீர்த்திட்டங்களால் பெருகும். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1956 ஆம் ஆண்டு பஞ்சாபிலுள்ள பக்ரா நங்கல் அணையை ஆய்வு செய்தபோது, ‘இவை இந்தியாவின் புதிய கோயில்கள், இவற்றையே நான் வழிபடுகின்றேன்.’ என்றார். நீருக்கான நீண்டநெடுங்காலப் போராட்டத்தில் இருந்து இந்தியா விடுதலையடைந்துவிட்டதாக பொதுத்தகவல்களை பரப்பும் திரைப்படங்கள் புகழாரம் சூட்டின.
சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளின் துவக்கத்தில் நாடு அடைந்த இந்த மிதமிஞ்சிய நம்பிக்கையின்மேல் 1960 களில் பலத்த அடிவிழுந்தது. 1965, 1966 என அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பெரும் பகுதிகள் பருவமழை தோல்வியால் பாதிக்கப்பட்டன. பயிர் அறுவடைகள் தோல்வியடைந்ததால் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பீகார் அரசாங்கம் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டது. மே 1964 இறுதியில் நிகழ்ந்த நேருவின் இறப்பைத் தொடர்ந்து, சுதந்திரம் பெற்றபிறகு இந்தியாவில் நிகழும் முதல் பெரிய அரசியல் மாற்றத்துடன் பஞ்சமும் கைகோர்த்துக்கொண்டது. அதன் விளைவாய் எழுந்த உணவுப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய அமெரிக்காவின் உதவிகளை இந்தியா நாட வேண்டியிருந்தது, ”பஞ்சபூதங்களின் கருணையில்லாததால் நாம் நிராதரவாய் நிற்கிறோம்” என 1965இல் ஒரு செய்தித்தாள் தலையங்கம் அரற்றியது.
மேலும் மேலும் அமெரிக்க உதவியை இந்தியா நாடியதால், அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி ஜான்சனின் நிர்வாகம் பருவமழை மீது அதிக அக்கறை காட்டத்துவங்கியது. இந்தியாவுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்வதை மேற்பார்வையிட்ட ஜான்சன், ‘இந்தியாவில் மழை எங்கு பொழிந்தது, எங்கு பொழியத் தவறியது’ என்பதைத் தெரிந்துகொண்டேன் எனத் தன்னுடைய நினைவுக் குறிப்புகளில் எழுதியுள்ளார். 1967 ஆம் ஆண்டில் பீகாரில் வறட்சியை கட்டுப்படுத்த சில்வர் அயோடைட் உதவியுடன் செயற்கை மழையை உண்டாக்க அமெரிக்க அரசாங்கம் ரகசிய அயலக திட்டத்தில் ஈடுபட்டதென வரலாற்றாசிரியர் கிறிஸ்டின் ஹார்ப்பரின் Make it Rain(2017) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோசீனாவிற்கென அமெரிக்க இராணுவம் வைத்திருந்த பெரும் லட்சியத் திட்டங்களுக்கெல்லாம் இது ஒரு சோதனைமுயற்சியாக விளங்கியது. ஆனால் ‘ப்ராஜெக்ட் க்ரோமெட்’ எனவழைக்கபட்ட அத்திட்டம் வெகுவிரைவிலேயே தோல்வியை தழுவியதால் அது சத்தமின்றி கிடப்பில் போடப்பட்டது.
1960களில் உண்டான வறட்சிகளின் விளைவாக, கடல்போல் பரந்திருக்கும் நிலத்தடி நீரின்பக்கம் இந்தியாவின் கவனம் திரும்பியது. பெரிய அணைகள் மிக அலங்காரமாகத் தோன்றியபோதும், அவற்றின் கட்டுமானத்திற்காய் பல மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டபிறகும் – அவற்றால் மக்களுக்குப் போதுமான தண்ணீரை வழங்க முடியவில்லை. குழாய்கிணறுகளின் வருகையின் பின்னர்தான் நீர்த்தேவையை தீர்க்கமாக நிறைவேற்ற முடிந்தது.
குழாய் கிணறுகள் எளிய தொழில்நுட்பமாகும், நீர்நிலைப் புரட்சியின் முன்னோடியாக அவை விளங்கின. மின்சார விசையியக்கக் குழாயால் இயக்கப்படும் இந்தக் கிணறுகள் நீண்ட எஃகு குழாயைக் கொண்டிருக்கின்றன, அவை நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. குழாய் கிணறுகள் பருவமழையை ஈடுசெய்தன. குழாய்கிணறுகள் ஆண்டுமுழுதும் நீர் தந்தன, அவற்றுக்கான விசைக்குழாய்களை வாங்கும் வசதிகொண்ட விவசாயிகளுக்கு அக்கிணறுகள் உதவின, அதேசமயம் அவற்றை வாங்க இயலாதவர்களின் மேல் மேலதிக ஆதிக்கத்தை செலுத்தவும் அக்கிணறுகள் தவறவில்லை. கிராமப்புற இந்தியாவில் சமத்துவமின்மையின் வரையறைகள் மூப்பரிமாணங்கள் கொண்டவை, நீர்தேடி ஆழமாக குழாய்களை இறக்குவதற்கு மூலதனம் கொண்டவர்களுக்கே அவை சாதகமானவை.
மெக்ஸிகோவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக மகசூல் தரும் விதை வகைகளும், குழாய்கிணறு பாசன விவசாயமும் இணைந்து வேளாண்மையில் பெரும் முன்னோக்கியப் பாய்ச்சலை உருவாக்கியது, அப்பாய்ச்சலுக்கு ‘பசுமைப் புரட்சி’ எனப் பெயரிடப்பட்டது. 1960 களின் வறட்சிக்குப் பிறகு வந்த ஒரு தசாப்தத்திற்குள்ளாகவே இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவிட்டது, அதுவும் உணவு உற்பத்திக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களின் அளவும் அதிகரிக்கப்படாமலேயே இது நிகழ்ந்தது. இந்த மாற்றத்துடன் இந்தியாவின் நீர் வரைபடம் தலைகீழானது. இந்தியாவின் வடமேற்கு மற்றும் தென்கிழக்கின் வறண்ட பகுதிகளில் விவசாயம் வளர்ச்சியடைந்தது, நிலத்தடி நீர் பாசனமே இதை சாத்தியமாக்கியது. அதேசமயம் வரலாற்று ரீதியாக இந்தியாவின் உணவு உற்பத்தி மையங்களாக அதுநாள்வரை திகழ்ந்துவந்த வடகிழக்கின் பருவமழை நிறைந்த பகுதிகளில் உற்பத்தியில் பின்னடைவு உண்டானது.
பசுமைப்புரட்சியின் புகழ்பெற்ற வெற்றிகளின் விளைவாக, நிச்சயமற்றப் பருவமழையின் அச்சுறுத்தல் குறைந்துவிட்டதாக இந்தியாவின் முக்கியமானவர்கள் எண்ணினர். எழுத்தாளரும் செய்தித்தாள் ஆசிரியருமான குஷ்வந்த் சிங் 1987இல் எழுதிய இந்திய இலக்கியத்தில் பருவமழை எனுமொரு கட்டுரையில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பருவமழை இந்திய கலாச்சார உணர்வுகளை எத்தனை ஆழமாக வடிவமைத்துள்ளது என்பதை பல காவியங்களையும் கவிதைகளையும் மேற்கோள் காட்டி எழுதியிருந்தார். சமீபத்திய தசாப்தங்களில் ‘மழைக்காலங்களின் மாறுபாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது’ என்று சிங் முடித்தார். ’நீண்ட கோடை மாதங்களின் சுட்டெரிக்கும் வெப்பத்தைப் பொறுத்துக்கொண்டு, பருவமழையைக் கொண்டுவரும் முதல் மேகங்களைத் தேடிக் காத்திருக்கும் வேதனை இனியும் இல்லை’ என்றும் அவர் எழுதியிருந்தார். இந்திய இலக்கியத்திலிருந்து பருவமழை மறைந்துவிட்டது; அது ‘முன்னர் இருந்த அதே தீவிரத்தோடு, கவிஞர்களின், நாவலாசிரியர்களின் கற்பனையை தூண்டிவிடக்கூடிய சக்தியை இழந்துவிட்டது.’
இந்த தருணத்தில்தான், 1980களில், காலநிலை விஞ்ஞானிகள் பருவமழையின் போக்கு குறித்து கவலைகொள்ளத் துவங்கினர். எல் நினோவின் தென் அலைவுகள் உண்டாக்கும் ஒழுங்கற்ற பருவமழையின் தாக்கங்கள் துவங்கி மேடன் – ஜூலியன் அலைவுக்குக் காரணமான பருவகால மாற்றங்கள் வரை, பல்வேறு கால அளவுகளிலும் நிகழ்ந்த மழைக்கால உள்மாறுபாடுகள் குறித்து இருபதாம் நூற்றாண்டின் வெப்பமண்டல வானிலை அறிவியல் பல்வேறு கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளது. எனவே மானுடவியல் காலநிலை மாற்றத்திற்கான பெருமளவு ஆதாரங்களும் கையிலிருக்கும் நிலையில், பூமி வெப்பமயமாதல் பருவமழையை எவ்வாறு பாதிக்கின்றது என்ற கேள்வியை நோக்கி வானிலை ஆய்வாளர்கள் திரும்பியுள்ளனர்.
நிலம் மற்றும் கடலின் மேற்பரப்பு வெப்பமடைவதைப் பொறுத்தே பருவமழையும் மாறுதலடைகிறது. அதேசமயம் பிராந்திய அளவில் உண்டாகும் மாற்றங்களாலும் அது பாதிக்கப்படுகிறது. ஏரோசோல் உமிழ்வுதான் பருவமழையில் பெரும் பாதகம் விளைவிக்கிறது, வாகன உமிழ்வு, பயிர் எரிப்பு, வீட்டுச்சமையல் தீ ஆகியவற்றிலிருந்து வெளியேறும் துகள்களும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. உலகிலேயே இந்திய வானம் மீதுதான் ஏரோசோல்களின் செறிவு அதிகமாய் உள்ளது, குறிப்பாக வானை சுத்தமாக கழுவிவிட மழை இல்லாத குளிர்கால மாதங்களில் அதன் அளவு மேலும் அதிகமாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் மீதான வானில் அவை பரவிமிதந்து, மாபெரும் கறையாக செயற்கைக்கோள் படங்களில் காட்சியளிக்கின்றன. அறிவியலாளர்கள் இதற்கு ‘பழுப்பு மேகம்’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்புகை காற்றில் விஷத்தைப் பரப்புகிறது. இந்தியாவில் உள்நாட்டுக் காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது. மழைக்காலத்தை உண்டாக்கும் வெப்ப மாறுபாட்டை பாதித்ததன் மூலம், ஏரோசல் உமிழ்வுகளும் பருவகால மழையின் வீழ்ச்சிக்குப் பங்களிக்கின்றன என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தொலைதூர ஏரோசோல்களால், குறிப்பாக கிழக்கு ஆசியாவில் உருவாகும் சல்பேட்டுகளால் தெற்காசியாவில் பருவமழை பாதிக்கிறது எனவும் சமீபத்திய ஆய்வொன்று கூறுகிறது.
இவை எழுப்பும் சங்கடங்கள் ஏராளம். தெற்காசியாவில் எரிவாயு சக்திகளில் பற்றாக்குறை நிலவுவதே இந்த ‘பழுப்பு மேகங்கள்’ உருவாக்கத்திற்கு காரணமே தவிர, நாம் அதிகப்படியாய் எரிவாயுக்களை உபயோகிப்பதால் அவை உண்டாகிடவில்லை. பெரிய அளவில் மாசை உண்டாக்கக்கூடிய மலிவான எரிபொருட்களின் முழுமையற்ற எரிப்புகளின் விளைவே இது, மின்சாரம் கூடக் கிடைக்காமல் வாழும் 240 மில்லியன் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரே எரிபொருள் அத்தகைய மலிவுப் பொருட்களே. ஏரோசல் உமிழ்வு குறைய வேண்டுமானால் மின்சாரம் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும். புதுப்பிக்கத்தக்க சக்திகளிலிருந்து அதனை உருவாக்க முடியாவிட்டால், இது இந்தியாவின் பைங்குடில் வாயு உமிழ்வை அதிகரித்துவிடும் என்பதையும், பூமி வெப்பமயமாதலுக்கு வழிகோலும்போது காலநிலை மாற்றத்தின் பிராந்திய இயக்கிகளை முடக்கிவிடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எளிதான தீர்வுகள் என எதுவும் இல்லை.
கடந்த 150 ஆண்டுகளில், ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் வனப்பகுதி அதிர்ச்சியளிக்கும் விகிதத்தில் குறைந்துள்ளது. இதுவும் கூட பருவமழையை பாதிக்கும். காடழிப்பை வறட்சியுடன் ஒப்பிட்டுப்பார்த்த ‘desiccationists’ எனவழைக்கப்படும் 19 ஆம் நூற்றாண்டின் சூழலியல் வல்லுநர்கள், செயல்முறைகளை தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் என எண்ணியிருந்தோம். ஆனால் நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மழையையும் பாதிக்கக்கூடும் என அவர்கள் நம்பியதில் தவறில்லை என இப்போது புரிகிறது. இந்தியாவில் தீவிர விவசாய உற்பத்தி, நீர்ப்பாசனத்திற்கு அதிக நீரைப் பயன்படுத்துவது போன்றவை மண்ணின் ஈரப்பதத்தையும், வெப்பத்தை உறிஞ்சக்கூடிய அல்லது பிரதிபலிக்கக்கூடிய மண்ணின் திறனையும் பாதித்துள்ளது. பயிர்கள் காடுகளை விட அதிகளவில் சூரியக் கதிர்வீச்சை பிரதிபலிக்கின்றன, காடுகளோ அவற்றை ஈர்த்துக்கொள்ளக்கூடியவை.
தற்போது நாம் துயரளிக்கக்கூடிய முரண்நகையொன்றினுள் சிக்கிக்கொண்டுள்ளோம். பருவமழையின் மாறுபாடுகளில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளான தீவிர நீர்ப்பாசனம், புதிய பயிர்களை நடவு செய்தல் ஆகியவை ஏற்படுத்திய அடுக்கடுக்கான விளைவுகள் பருவமழையை மேலும் சீர்குலைக்கவே செய்தன.
இந்த விளைவுகள் அனைத்தும் கடல் மற்றும் வளிமண்டலத்தில் புவி வெப்பமடைதலின் தாக்கத்துடன் இணைந்தால், மேலும் பாதிப்புகள் பெருகும். பைங்குடில் வாயுக்களின் விளைவை எதிர்ப்பதற்கு பதிலாக, ஏரோசல் உமிழ்வும் நிலப் பயன்பாட்டு மாற்றத்தின் தாக்கமும் அவற்றை சிக்கலாக்குகிறது. பல்வேறு காலநிலை மாதிரிகளிலும் பருவமழை கட்டிலா அட்டை போன்றே பாவிக்கப்படுகிறது.
புவி வெப்பமடைதல் வறண்ட நிலையை நோக்கி திடீர் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என நிரூபணமானால், பருவமழையின் எதிர்காலம் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். மானுடவியல் காலநிலை மாற்றத்தை விடவும் இயற்கையின் விளைவாக கடந்த காலங்களில் இந்தியாவின் மழைக்காலங்களில் உண்டான இத்தகைய மாற்றங்களுக்கு புவியியல் சான்றுகள் உள்ளன. கிரீன்லாந்து பனிக்கட்டியின் மீளமுடியாத இழப்பு இதன் மூலம் நிகழ்ந்ததொரு கட்டாய நிகழ்வாக இருக்கலாம், இது மழைக்கால சுழற்சியை பாதிக்கும் வகையில் பூமியின் காலநிலை முழுவதும் எதிரொலிக்கவும் செய்யும். இத்தகைய ஆபத்தும் கூட நம் ‘ஊகமாகவே உள்ளது’, அறிவியலின் ஒரு மதிப்பாய்வை முடித்தும் வைக்கிறது. ஆனால் அதன் தாக்கங்கள் திகிலூட்டவே செய்கிறது.
The Great Derangement: Climate Change and the Unthinkable (2016) எனும் தனது புத்தகத்தில், ‘பெரும்பாலான சமூகங்கள் ‘பழக்கத்தின் மந்தநிலையால்’ வழிநடத்தப்பட்டு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரிய அபாயங்களை எதிர்கொள்கிறது’ என அமிதாவ் கோஷ் குறிப்பிடுகிறார். மழைக்காலத்தின் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதன் அபாயங்கள் பற்றிய விவாதங்களெல்லாம் இந்திய ஊடகங்களில் இருந்து முற்றிலுமாக விலகிவிட்டது. கிராமப்புற இந்தியாவின் அவல நிலையைப் பற்றி பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வுடன் இணைந்து விவாதிக்க அண்மையில் டெல்லிக்கு விவசாயிகள் அணிவகுத்துச் சென்றனர், காலநிலை மாற்றம் என்பது எங்கோ தொலைதூரத்தில் இருப்பதல்ல, பலரின் வாழ்வை நசுக்கக்கூடிய யதார்த்தம் அது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
பருவமழையைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள் அதை மிக நெருக்கமாக அறிந்தவர்கள்தாம். மாறிவரும் பருவமழையானது அதை நம்பியிருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு வடிவத்தையும் பாதிக்கிறது. வடக்கு கேரளாவின் வயநாட்டில் உள்ள குருகுலா தாவரவியல் சரணாலயத்தில், சூழலியல் நிபுணர் சுப்ரபா சேஷனும் அவரது சகாக்களும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலுக்கு உகந்த, அழியக்கூடிய நிலையிலிருக்கும் தாவரங்களைப் பயிரிட்டு பராமரிக்கின்றனர். ‘நாங்கள் இந்த தாவரங்களை அகதிகள் என்று குறிப்பிடுகிறோம்,’ என்று அவர் 2017 இல் குறிப்பிட்டிருந்தார்; ஏற்கனவே காடுகள் வெட்டப்பட்ட பகுதிகளில் இருந்து இதுபோன்ற பல தாவரங்கள் மீட்கப்பட்டுள்ளன. வானிலை பற்றிய உள்ளுணர்வைப் பொறுத்தே தோட்டக்காரர்கள் பணிபுரிகின்றனர்.
ஆனால் இந்த வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பருவமழை கணிக்க முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டது என்பதை வானிலை ஆராய்ச்சியும், உள்ளூர் உணர்வுகளும் ஒப்புக்கொள்கின்றன. உள்ளூர்வாழ் இனங்கள் வானிலையின் சமிக்ஞைகளால் திகைக்கின்றன. சில மலைவாழ் இனங்கள் வாழ முடியாதவாறு வெப்பநிலை அதிகரித்துள்ளது, மேலும் மேலும் அதிகரித்து வரும் வெப்பநிலையோ புதிய நோய்களைக் கொண்டுவருகிறது.
‘பிரத்யேக முறையும், அடக்கவியலா சக்தியும் கொண்ட பருவமழை முற்றிலுமாக பொய்த்துப் போய்விடுமோ என வருந்துகிறேன்’ என சேஷன் கூறிமுடித்தார்.
சுனில் அம்ரித் – ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுகள் துறையில் பேராசிரியர்; Unruly Waters: How Rains, Rivers, Coasts, and Seas Have Shaped Asia’s History இவரது சமீபத்திய நூல். இது When the monsoon goes away என்ற தலைப்பில் Aeon தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.
தமிழில் சசிகலா பாபு