பெருந்தொற்றிற்குப் பின்னான 15 மாத கால நீண்ட பொது முடக்கத்திற்குப் பின்னே பசுமை குடில் வாயுக்களின் அளவு பெருமளவு குறைந்திருக்கும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் பேரவாவாக இருந்தது. ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மே மாதம் வெளியிடப்பட்ட வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடின் அளவானது நம் அனைவரின் எதிர்பார்ப்பும், கணக்கீடும் தவறு என்று உணர்த்தியுள்ளது.
பசுமைக்குடில் வாயுக்களைக் கணக்கெடுத்தோமென்றால் அதில் கார்பன்-டை-ஆக்சைடு மட்டும் 80% . எனவேதான் புவி வெப்பமயமாதலை அளவிடும் ஆராய்ச்சியாளர்கள் கார்பன்-டை-ஆக்சைடிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஹவாய் தீவில் கடல் மட்டத்திலிருந்து 3500 மீ உயரத்தில் அமைந்துள்ள மௌன லோவா கண்காணிப்பகம் (Mauna Lao Observatory), 1958ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடின் அளவைக் கணக்கிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன் அளவு வளிமண்டலத்தில் உயர்ந்து கொண்டே தான் உள்ளது. பெரும் சூறாவளிகள், வெப்பச் சலனங்கள், பெருமழை, பெரு வெள்ளம், நிலச்சரிவுகள், காட்டுத்தீ என இதன் விளைவுகளை இயற்கை நம் கண்முன்னே காட்டிக்கொண்டேதான் உள்ளது. மனிதர்களாகிய நாம்தான் அதை உணர்வதாக இல்லை.
சமீபத்திய கதைக்கு வருவோம். 2019ஆம் ஆண்டு 417.31 பிபிஎம் (PPM: Parts per million- பத்து லட்சத்தில் ஒரு பங்கு) அளவாக இருந்த கார்பன்-டை-ஆக்சைடு, 2020ஆம் ஆண்டு 419 பிபிஎம் ஆக உயர்ந்துள்ளது. நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு வளிமண்டலத்தில் நூறு ஆண்டுகள் நிலையாக இருக்கும் தன்மை வாய்ந்தது. எனவேதான் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்ட நீண்ட பொது முடக்கத்தின் போது பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்காமல் இருந்த போதும், வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடின் உயர்வில் எந்த மாற்றமும் இல்லை. இதிலிருந்து நாம் உணர வேண்டியது மனிதர்களால் உயர்த்தப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடின் அளவானது வெறுமனே தொழிற்சாலைகளை முடக்குவதாலும், படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதாலும் உடனே குறைந்துவிடப் போவதில்லை. அதற்குத் தேவை உடனடியாக செய்யப்படவேண்டிய நீண்ட நெடிய ஒருங்கிணைந்த மாற்றங்கள்.
பூமியின் வரலாறும் கார்பன் டை ஆக்சைடும்
66 மில்லியன் ஆண்டுகளுக்கான பூமியின் கார்பன்-டை-ஆக்சைடு வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இதே போன்ற உயர்ந்த கார்பன்-டை-ஆக்சைடின் அளவு 41 முதல் 45 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பான பிளியோசின் காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அக்காலகட்டத்தில் கடல் மட்டத்தின் அளவானது இன்று உள்ளதை விட 78 அடி உயரமாகவும், பூமியின் வெப்ப நிலை இன்று உள்ளதைவிட 7 டிகிரி ஃபாரன்கீட் அதிகமாகவும் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று பனி உறைந்து காணப்படும் துருவப்பகுதிகளும், அண்டார்டிக் கண்டமும் அக்காலகட்டத்தில் அமேசான் காடுகளை விட அடர்ந்த காட்டினை கொண்டதாக இருந்துள்ளது. அந்நேரத்திலிருந்த அளவுக்கதிகமான மரங்கள் வளிமண்டலத்திலிருந்த அளவுக்கதிகமான கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி இருக்கும். இதன் விளைவாகவே புவி வெப்பத்தின் அளவு குறைந்து பூமி குளிரத் தொடங்கி அதனோடு இணைந்த காலநிலை மாற்றங்களினால் பனி யுகமும் தோன்றத் தொடங்கியது.
பனியுகம் தொடங்குவதற்கு முன்பான (24 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு) பூமியின் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு 200 பிபிஎம், 11,500 ஆண்டுகளுக்கு முன்பாக பனியுகம் முடியும் போது அதன் அளவு 280 பிபிஎம். இதிலிருந்து பூமியின் வெப்பத்தை நிர்ணயிப்பதில் பசுமைக்குடில் வாயுக்களுக்கு உள்ள முக்கியத்துவத்தையும், கார்பன்டை ஆக்சைடு அளவு உயர்வதால் உண்டாகும் பாதகத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா..!
பசுமைக்குடில் வாயுக்களின் இன்றைய நிலை
இன்றைய காலகட்டத்தில் உலகில் அதிக அளவு வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் நாடாக சீனா (28%) உள்ளது. தாங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவை 2020ஆம் ஆண்டிற்குள் குறைப்பதாக சீன அரசாங்கம் உறுதி அளித்து இருக்கிறது. அதற்கு அடுத்த படியில் உள்ள அமெரிக்கா (15%) 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன்-டை-ஆக்சைடு வெளியீட்டைக் குறைத்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளது. இன்னும் முப்பது வருடங்கள் இவர்கள் கூறும் உறுதிமொழியை நம் பூமி தாங்குமா என்பதுதான் இன்று நம் முன் உள்ள மிகப்பெரிய கேள்விக்குறி…?
பசுமைக்குடில் வாயுக்களுக்கும் பிளாஸ்டிக்கிற்குமான தொடர்பு…?
படிம எரிபொருட்களான நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்றவற்றை எரிப்பதாலேயே 87% கார்பன்-டை-ஆக்சைடு வளிமண்டலத்தில் கலக்கிறது. இந்த கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுவதில் பிளாஸ்டிக் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா…? நம்மில் பலருக்கு ப்ளாஸ்டிக் பொருட்களின் மூலப்பொருள் எதுவென்று தெரியாது. பிளாஸ்டிக்கின் மூலப் பொருள் கச்சா எண்ணெய். ஒவ்வொரு ஆண்டும் 170 லட்சம் பேரல் கச்சா எண்ணைய் பிளாஸ்டிக் பாட்டில்கள் உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மட்டும் ஆண்டுக்கு 25 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.
1907ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு நூற்றாண்டுக்குள் இது பூமியை சீரழித்தது மிக மிக அதிகம். பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு 450 முதல் 600 ஆண்டுகள் ஆகும் என்றே அனைவரும் கூறி வருகின்றோம். ஆனால் எவ்வளவு காலம் ஆகும் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலாது. பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் கடலிலேயே இறுதியாகச் சென்றடைகின்றன. உலகில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களில் 60 சதவீதத்தைப் பயன்படுத்துவது ஆசிய கண்டமே. இங்குள்ள முக்கிய ஆறுகளே கடலில் பிளாஸ்டிக்கை கொண்டு சேர்ப்பதிலும் முதன்மை பங்காற்றுகின்றன. அதிலும் ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நதியான சீனாவின் யாங்ட்சி முதலிடத்திலும், சிந்துநதி இரண்டாம் இடத்திலும், நம்முடைய கங்கை ஆறாம் இடத்திலும் வருகிறது.
புவி வெப்பமயமாதலைக் குறைப்பதில் கடலின் பங்கு
ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று நாம் மரங்களை அழைக்கிறோம். ஆனால் இம்மரங்கள் பூமியில் 30% ஆக்சிஜனை மட்டுமே உற்பத்தி செய்கின்றன. மீதமுள்ள 70% ஆக்சிஜனை உற்பத்தி செய்வது கடலிலுள்ள பாசிகளே. அதைப்போன்று நாம் வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்சைடில் 25% மரங்களாலும், 25% கடலினாலும் உறிஞ்சப்படுகிறது. 50% கார்பன்-டை-ஆக்சைடு வளிமண்டலத்தை அடைகிறது. கடலில் உள்ள பாசிகளே வளிமண்டல கார்பன்- டை-ஆக்சைடை உறிஞ்சுவதிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் 200 மில்லியன் டன் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு கடல்பாசிகளால் உறிஞ்சப்படுகிறது.
பெரும்பாலும் கடல் பாசிகள் அதிகம் வளரும் கடற்கரையோரங்களிலேயே பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குகின்றன. இதன் காரணமாகப் போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காததினால் கடல் பாசிகளால் ஒளிச்சேர்க்கை செய்ய இயலுவதில்லை. ஒளிச்சேர்க்கை நடைபெறாவிட்டால் கடற்பாசிகளால் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சவும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யவும் இயலாது. மனிதர்களாகிய நாம் முயற்சி செய்தால் மரங்களை நடலாம். கடல் பாசிகளை நட இயலுமா…? எனவே வெப்பமயமாதலைக் குறைப்பதில் நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய பங்கு மரங்களை நடுவதும், கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளைத் தடுப்பதும் மட்டுமே.
அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பூமியின் மழைக்காடுகளில் பாதி அமேசான் மழைக்காடுகளே. எனவே கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சுவதிலும் பூமியின் நுரையீரல் என்று சொல்லப்படும் அமேசான் மழைக்காடுகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. ஆனால் சமீப காலமாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் நம்மை வேதனைப்படுத்துவதாகவே உள்ளன. ஆக்சிஜனை வெளியேற்றுவதற்குப் பதிலாக, அமேசான் மழைக்காடுகள் 20% அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன என்னும் தகவலே அது. அளவுக்கதிகமான காட்டுத்தீ, மரங்கள் அழிப்பு ஆகியவையே இச்செயலுக்குக் காரணமாகும்.
இயற்கை தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறதா..?
வளிமண்டலத்தில் கூடியுள்ள அளவுக்கதிகமான கார்பன்-டை-ஆக்சைடின் காரணமாக மரங்களின் இலைகள் மிகவும் அடர்த்தியாக மாறியுள்ளன என்று சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு 710 பிபிஎம் ஆக மாறும் போது பூமியில் உள்ள அனைத்து மரங்களின் இலைகளும் அடர்த்தியாக மாறியிருக்கும் என்னும் தகவலையும் கூறுகின்றனர். இப்போது உள்ள அளவிலேயே காற்று மாசு தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியிலேயே வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடின் அளவு 910 பிபிஎம் ஆகிவிடும்.
பாலைவனங்களிலும் அதிக வெப்பமான பகுதிகளிலும் வெப்பத்தைத் தாங்குவதற்காக அடர்த்தியான இலைகளுடன் கூடிய முட்செடிகளும், கள்ளி செடிகளும் வளரும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பூமியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மரங்களின் இலைகள் அடர்த்தியாக மாறியுள்ளன என்றால் அதன் அர்த்தம் நாம் நினைத்ததை விட பூமியின் வெப்பம் மிகவும் அதிகமாக அதிகரித்துவிட்டது என்பதாகவும், மரங்கள் அதற்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டன என்பதாகவுமே இருக்க முடியும். நம்மால் தகவமைத்துக் கொள்ள முடியுமா…? கண்டிப்பாக முடியாது…! எனவே புவிவெப்பமாகிவிட்டது என்பதனை நமக்கு உணர்த்தும் ஒரு எச்சரிக்கை மணியாக இதனைக் கருதி பசுமைக்குடில் வாயுக்களின் அளவைக் குறைக்க நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும்.
மனிதர்கள் என்ன செய்யலாம்..?
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் என்று நாம் நினைக்கும் ஆப்பிரிக்க நாடுகளே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதில் இன்று உலகத்திற்கு முன்மாதிரியாக உள்ளன. ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலுமாகத் தடை செய்த முதல் நாடு கென்யா(2017 ம் ஆண்டு). அங்கு ஒரு முறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை தயாரித்தாலோ, இறக்குமதி செய்தாலோ, விற்பனை செய்தாலோ 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்படுகின்றன. ஐநா சபையின் அறிக்கையின் படி, உலகில் இதுவரை 60 நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை பகுதியளவு தடை செய்துள்ளன.
பெருந்தொற்றின் காரணமாக நாம் நினைத்துப் பார்க்காத புதுவகை மாசுபாடுகள் புவியில் கூடிவிட்டன. முக கவசம், கையுறைகள், பாதுகாப்பு உடைகள் ஆகியவை இதில் அடங்கும். அதுமட்டுமின்றி பெருந்தொற்றின் காரணமாக ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்திருந்த பலநாடுகள் மறுபடி பிளாஸ்டிக் பைகளை ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டன.
புவி வெப்பமயமாதலைத் தவிர்ப்பதற்கு மரங்கள் வளர்த்தால் மட்டும் போதாது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டையும் நாம் தவிர்க்க வேண்டும். 120 கோடி மக்கள் வசிக்கும் இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டினில் அரசாங்கம் எத்தனை திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தினாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் எதுவுமே சாத்தியமாகாது. பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது மட்டுமின்றி மாற்று வழிகளை ஆராய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். பலமுறை பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள், மக்கிப் போகும் தன்மையுடைய பிரஷ்கள், பைகள், நாப்கின்கள் ஆகிய பல மாற்று வழிகள் இன்று பயன்பாட்டில் உள்ளன. முடிந்த அளவு அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்வோம்.
வனத்தினை மதுக்கூடமாக நினைப்பவரும், பிளாஸ்டிக் கழிவுகளைப் போடும் குப்பைத்தொட்டியாக நினைப்பவரும் வனங்களுக்குச் செல்ல வேண்டாம். உங்களுக்காகவே அரசாங்கம் மதுக்கூடங்களையும், குப்பைத்தொட்டிகளையும் அமைத்துள்ளது. உங்களால் இயற்கையை ரசிக்க முடிந்தால் மட்டும் வனப்பகுதிகளுக்குச் செல்லுங்கள். உங்களால் முடிந்த அளவு மரங்களை நடுங்கள். மரங்களே இப்பொழுது நம்மை காக்கக் கூடிய ஒரே கவச வீரர்கள். மாற்றங்களை நம்மிடமிருந்தே துவங்குவோம்…!
முனைவர். வானதி ஃபைசல்,
விலங்கியலாளர்.