மனிதர்கள் பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புலனாய்வை மேற்கொள்ள, அரிசிபோ தொலைநோக்கு நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கும் அவர்கள், பிரபஞ்சங்களுக்கு இடையே கேட்கும் செவிப்புலத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால், நானும் எனது சக கிளிகளும் இங்கேயே இருக்கிறோம். அவர்கள் ஏன் எங்களது குரல்களைக் கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை? நாங்கள், மனித இனத்துடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் பெற்ற உயிரினங்கள். மனிதர்கள் எங்கெங்கோ ஆராய்ந்து கொண்டிருக்கும் அற்புத விஷயம் நாங்கள் தான் இல்லையா?
*
இந்த பிரபஞ்சம் மிகப்பெரியது. நுண்ணறிவு வாய்ந்த உயிரினங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள், நிச்சயம் தோன்றியிருக்கும். இந்தப் பிரபஞ்சம் மிகப்பழையதும்கூட. இங்கே மிகத் திறன்வாய்ந்த இனங்கள் பல்கிப் பெருகி, இந்த அண்டத்தையே நிறைத்திருக்கலாம். ஆனாலும், பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறி இல்லை. மனிதர்கள் இதைத் தான் ஃபெர்மியின் முரண் என்கிறார்கள்.
ஃபெர்மி முரணுக்கு முன்மொழியப்பட்ட தீர்வு என்னவென்றால், திறன்மிகு உயிரினங்கள், எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, மறைந்து வாழும் தன்மைக்குப் பழகியிருக்கின்றன.
மனிதர்களினால் கிட்டத்தட்ட அழியும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு இனத்தின் பிரதிநிதியாகச் சான்று அளிக்கிறேன், இது மிக அறிவார்ந்த உத்தி.
பிறருடைய கவனத்தை ஈர்ப்பதைவிட, அமைதியாக மறைந்து வாழ்வது புத்திசாலித்தனமான செயல்.
*
ஃபெர்மியின் முரண் சில சமயங்களில், பேரமைதி என்று அழைக்கப்படுகின்றது. பிரபஞ்சம் குரல்களின் கூச்சல் நிறைந்துதான் இருக்க வேண்டும். ஆனால், பிரபஞ்சமோ குழப்பத்தக்க அமைதியால் தான் சூழப்பட்டிருக்கிறது.
அறிவார்ந்த உயிரினங்கள், பரவெளிக்குப் பல்கிப்பெருகும் முன்பு, அழிந்து போய்விடும் என்பது சில மனிதர்களின் கோட்பாடு. அவர்கள் கூறுவது சரியென்றால், இரவு வானத்தின் நிசப்தம் என்பது மயானத்தின் அமைதிதான்.
நூற்றாண்டுகளுக்கு முன், ரியோ அபாஜா காடுகள் முழுவதும் எங்களின் குரல்களால் எதிரொலிக்கும் அளவு எங்களது இனத்தின் எண்ணிக்கை மிகுதியாக இருந்தது. இப்பொழுது எங்கள் இனம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. விரைவில், இந்த மழைக்காடுகளும், பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளைப் போல அமைதியில் உறைந்துவிடும்.
*
அலெக்ஸ் என்ற பெயருடைய ஆப்ரிக்க சாம்பல் கிளி ஒன்று இருந்தது. அவன் தனது புலனுணர் திறன்களுக்காகப் புகழ்பெற்றவன். அதாவது, மனிதர்கள் இடையே புகழ்பெற்றவன்.
ஐரின் பெப்பர்பெர்க் என்னும் ஆராய்ச்சியாளர், அலெக்ஸ் குறித்து ஆராய்வதற்காக முப்பது ஆண்டுகள் செலவிட்டார். அலெக்ஸ் வடிவங்கள் மற்றும் நிறங்களின் வார்த்தைகளை மட்டும் தெரிந்திருக்கவில்லை, அவன் உண்மையில் வடிவம் மற்றும் நிறம் குறித்த கருத்துக்களையும் புரிந்துகொண்டான் என்று அவர் அறிந்தார்.
பல விஞ்ஞானிகளுக்குப் பறவைகள், கருத்தியல் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளுமா என்பதில் சந்தேகம் இருந்தது. மனிதர்களுக்குத் தாங்கள் தான் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்ற எண்ணம். ஆனால், அலெக்ஸ் வார்த்தைகளைத் திருப்பி மட்டும் சொல்வதில்லை, அவன் அதைப் புரிந்து கொண்டு தான் சொன்னான் என்று பெப்பர்பெர்க் ஒருவழியாக நிரூபித்தார்.
எனது உறவினர்களிலேயே, அலெக்ஸ் தான், நாங்கள் மனிதர்களின் தொடர்பியல் கூட்டாளிகள் என்று அவர்களால் கருத்தார்ந்த ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அருகில் வந்தான்.
அலெக்ஸ், இளமையாக இருந்த பொழுதே, திடீரென இறந்துபோனான். அவன் இறப்பதற்கு முந்திய மாலை, அவன் பெப்பர்பெர்கிடம் கூறினான், “நீங்கள் நன்றாக இருங்கள். நான் உங்களை விரும்புகிறேன்.”
மனிதர்கள், தங்கள் இனமல்லாத வேறு நுண்ணறிவு உயிரிகளோடு தொடர்பு கொள்ள விரும்பினால், அவர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?
*
ஒவ்வொரு கிளிக்கும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, பிரத்யேகமான அழைப்பு இருக்கிறது. உயிரியல் வல்லுநர்கள் இதனைக் கிளியின் “தொடர்பு அழைப்பு” என்கிறார்கள்.
1974-இல் வானியல் வல்லுநர்கள், மனித அறிவுத்திறனை செய்முறைப்படுத்திக் காட்ட, அரெசிபோவில் இருந்து ஒரு செய்தியை பரவெளிக்கு ஒலிபரப்பு செய்தார்கள். அது, மனிதர்களின் “தொடர்பு அழைப்பு” அரெசிபோவின் செய்தி பூமிக்குத் திருப்பி அனுப்பப்படுவதை, மனிதர்கள் எப்பொழுதேனும் கண்டுபிடித்தால், பரவெளியில் இருந்து யாரோ தங்கள் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்கள் என்று அறிந்துகொள்வர்.
*
கிளிகள் குரல்வழி கற்கும் திறன்கொண்டவை. நாங்கள் புதிய சத்தங்களைக் கேட்டபின், அதனை உச்சரிக்கப் பழகுகிறோம். இது வெகுசில விலங்குகளிடம் உள்ள குணாம்சம். ஒரு நாயினால் டஜன் கணக்கான கட்டளைகளைப் புரிந்துகொள்ள முடியும், ஆனால் அதனால் பதிலுக்கு குரைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
மனிதர்களும் குரல்வழி கற்பவர்கள் தாம். நமது இரு இனத்திற்கும் பொதுவாக உள்ள விஷயம் அது. ஆகவே மனிதர்களும் கிளிகளும் சப்தத்தின் மூலம் ஒரு சிறப்பான பந்தத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் வெறுமனே கத்துவதில்லை, நாங்கள் உச்சரிக்கிறோம். நாங்கள் தெளிவுபடப் பேசுகிறோம்.
அதனால் தானோ என்னவோ, மனிதர்கள் அரெசிபோவை செய்திகளை அனுப்ப மற்றும் கேட்க என்ற இரு தன்மைகளும் இணைத்து வடிவமைத்திருக்கிறார்கள். கேட்டுக் கொள்ளும் கருவி, ஒலி அனுப்பியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அரெசிபோ இரண்டு வேலைகளையும் செய்யும். அதற்குக் கேட்கக் கூடிய செவிப்புலனும், பேசக் கூடிய வாய் திறனும் இருக்கின்றன.
*
மனிதர்கள் கிளிகளோடு ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள், ஆனால் வெகு சமீபமாகவே அவற்றிற்கும் அறிவுத்திறன் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கருதுகிறார்கள்.
அவர்களையும் குறைசொல்ல முடியாது என்று தான் நினைக்கிறேன். கிளிகளாகிய நாங்கள், மனிதர்கள் அவ்வளவு அறிவுக்கூர்மை வாய்ந்தவர்கள் இல்லை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். நமது பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட விஷயங்கள் பற்றி நாம் அவ்வளவாய் அக்கறை கொள்வதில்லை தானே.
ஆனால், பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் இருக்கும் எந்த உயிரினத்தையும் விட, கிளிகள் மனிதர்களோடு அதிக ஒப்புமை கொண்டவை. மனிதர்கள் எங்களை மிக நுணுக்கமாக ஆராயலாம். அவர்கள் எங்களைக் கண்ணோடு கண் பார்க்கலாம். நூறு ஒளியாண்டுகள் தள்ளியிருந்து ஒட்டுக் கேட்பதால் மட்டும், எவ்வாறு தங்களால் வேற்றுகிரக அறிவுத்திறனைப் புரிந்துகொள்ள முடியும் என்று மனிதர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை.
*
“வன்மூச்சு” என்பது விருப்பமும், சுவாசிக்கும் செயலும் இணைந்தது என்று சொல்வது தற்செயலானது அல்ல. எங்களது எண்ணங்களுக்கு ஒரு செயல்வடிவம் கொடுக்க, நாங்கள் பேசும்பொழுது, எங்கள் நுரையீரலில் இருக்கும் மூச்சுக்காற்றைப் பயன்படுத்துகிறோம். நாங்கள் எழுப்பும் சப்தங்கள், எங்களது நோக்கங்கள் மற்றும் எங்களது உயிர்விசை ஆகியவற்றின் ஒன்று சேர்ந்த கலவை தாம்.
நான் பேசுகிறேன், அதனால் வாழ்கிறேன். குரல்வழி கற்பவர்களான கிளிகள் மற்றும் மனிதர்களால் மட்டுமே, இதிலுள்ள உண்மையை உணர்ந்துகொள்ள முடியும்.
*
உங்கள் வாயினால் சப்தங்களை உச்சரிப்பதன் மூலம் ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. வரலாறு முழுமையிலும் மனிதர்கள் இந்த செயலைத் தான் தெய்வீகத்தன்மையை அடைவதற்கான வழியாக முதன்மையாகவும், ஆத்மார்த்தமாகவும் உணர்ந்திருக்கிறார்கள்.
பித்தாகோரியன் மறைஞானிகள், உயிரெழுத்துக்கள், கோளங்களின் இன்னிசையைக் குறிப்பதாகவும், தாங்கள் வலிமைபெற அவற்றை உச்சரித்ததாகவும் நம்பினர்.
பெந்தகோஸ்தே கிருத்துவர்கள், தாங்கள் நாக்கினால் பேசும்பொழுது, வானில் தேவதைகள் பேசிய மொழியைப் பேசுவதாக நம்புகின்றனர்.
இந்து பிராமணர்கள் மந்திரங்கள் உச்சரிப்பதன் மூலம், மெய்மையின் நிர்மாண அடிப்படைகளை பலப்படுத்துவதாக நம்புகின்றனர்.
குரல்வழி கற்கும் இனங்களால் மட்டுமே, தங்களது தொன்மங்களில் சப்தத்திற்கு இத்தகைய முக்கியத்துவம் இருக்கின்றது என்பதைக் கண்டுணர முடியும்.
கிளிகளாகிய நாங்கள், அதனை மதித்துப் போற்றுகின்றோம்.
*
இந்து மத தொன்மத்தின்படி, பிரபஞ்சமானது “ஓம்” என்ற சப்தத்தின் மூலமே உருவானது. இந்த உச்சரிப்பு, இதுவரை நிகழ்ந்த மற்றும் இனிமேல் நிகழப்போகிற அனைத்தையும் தன்னுள் அடக்கியது.
அரெசிபோ தொலைநோக்கி, விண்வெளியை நோக்கி, நட்சத்திரங்களுக்கு இடையே குறிப்பாகத் திருப்பப்படும் பொழுது, அங்கிருந்து மெலிதான முரல் ஒலி கேட்கிறது.
வான்வெளி வல்லுநர்கள் அதனை “அண்ட நுண்கதிர் அலை பின்னணி” என்று அழைக்கின்றனர்.
பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் உருவாவதற்குக் காரணமான பெருவெடிப்பின் எஞ்சிய கதிர்வீச்சு அது.
ஆனால் நீங்கள் அதனை “ஓம்” என்ற ஒலியின் குரல்வழி பிரதிபிம்பம் என்றும் நினைத்துக் கொள்ளலாம். பிரபஞ்சம் இருக்கும்வரை, இரவு வானம் அந்த ஒலியை அதிர்வலைகளோடு எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
அரெசிபோ வேறு எதையும் கேட்கவில்லை, அது படைப்பின் ஒலியைத் தான் கேட்கிறது.
*
போர்ட்டோ ரிகாவைச் சேர்ந்த கிளிகளான எங்களுக்கென்று பிரத்யேக தொன்மங்கள் இருக்கின்றன. அவை மனிதத் தொன்மங்களைவிட எளிமையானது, ஆனால் மனிதர்கள் அதிலிருக்கும் இன்பநுகர்வை பிரித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
ஐயோ, எங்கள் இனம் அழியும்பொழுது எங்கள் தொன்மங்களும் அழிகின்றன. நாங்கள் முற்றிலுமாக அழிவதற்குமுன், மனிதர்கள் எங்களது மொழியின் மறைகுறி முறையைக் கண்டுணர்வார்களா என்று சந்தேகமாக இருக்கிறது.
எனவே, எங்களது இன அழிவு என்பது பறவைகள் இனக்குழு ஒன்றின் அழிவு என்பது மட்டுமல்ல. எங்களது மொழியின், எங்களது சடங்குமுறையின், எங்களது பாரம்பரியத்தின் மறைவு. அது எங்கள் குரல்களை நிசப்தமாக்குவது.
*
மனிதச் செயல்பாடுகள் எனது இனத்தை அழிவின் விளிம்பிறகுக் கொண்டுவந்துவிட்டன. ஆனாலும் இதற்காக நான் அவர்களைக் குறைசொல்ல மாட்டேன். அவர்கள் இதனை வேண்டுமென்றே கெடுநோக்கில் செய்யவில்லை. அவர்கள் எங்களின் மீது போதிய கவனம் செலுத்தவில்லை, அவ்வளவு தான்.
மனிதர்கள் அழகிய தொன்மங்களை உருவாக்கின்றனர். என்ன கற்பனை வளம் அவர்களுக்கு. அதனால் தானோ என்னவோ அவர்களின் ஆசைகளும் மிகப்பெரியதாக இருக்கின்றன. அரெசிபோவைப் பாருங்கள். இத்தகைய விஷயத்தை உருவாக்கும் இனம், நிச்சயம் சிறப்பு வாய்ந்ததாகத் தான் இருக்க வேண்டும்.
எனது இனம், இங்கே இன்னும் அதிக நாட்களுக்கு இருக்கப் போவதில்லை. எங்கள் காலங்களுக்கு முன்பே, நாங்கள் இறந்து, பேரமைதியில் இணைந்து விடுவோம். ஆனால் நாங்கள் செல்வதற்கு முன், மனிதர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறோம். அரெசிபோவில் உள்ள தொலைநோக்கி, அதனைக் கேட்டறியும் திறன் கொண்டிருக்கும் என்று நம்புகிறோம்.
செய்தி இது தான்:
“நீங்கள் நன்றாக இருங்கள். நான் உங்களை விரும்புகிறேன்.”
ஜெனிஃபர் அல்லோரா (1974) மற்றும் கில்லெர்மோ கால்ஸாடில்லா (1971), விழிசார் கலையில் சேர்ந்தியங்கும் இரட்டை கலைஞர்கள். அவர்கள் போர்டோ ரிகாவின் ஸான் ஹ்வான் நகரில் வசிக்கிறார்கள். ஈராண்டுகளுக்கு ஒருமுறை நிகழும், புகழ்பெற்ற கலைசார் நிகழ்வான “வெனிஸ் கலைவிழா”வில் 2011-ஆம் ஆண்டு நடந்த, 54வது சர்வதேச கலை கண்காட்சியில் அவர்கள் அமெரிக்காவின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டார்கள். சிற்பம், புகைப்படக்கலை, நிகழ்த்தியல் கலை, காட்சிசார் கலை ஆகியற்றில் பல்வேறு ஊடகங்களில் படைப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களது படைப்புகள் சர்வதேச அளவில் பல பொது நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
டெட் சியாங்க் (1967). அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர். இவரது சீனப்பெயர் ஃபெங்-நான். இவரது படைப்புகள், நான்கு நெபுலா விருதுகளையும், நான்கு ஹுகோ விருதுகளையும் வென்றிருக்கிறது. இவர், சிறந்த புதிய எழுத்தாளருக்கான ஜான் டபுள்யூ கேம்ப்பெல் விருதையும் வென்றிருக்கிறார். சியாங் நியூ யார்க்கின் போர்ட் ஜெஃப்பர்ஸனில் பிறந்தார். சீனாவில் பிறந்த அவரது பெற்றோர்கள், கம்யூனிசப் புரட்சியின்போது தைவானுக்கும் அதன்பின் அமெரிக்காவுக்கும் குடிபெயர்ந்தனர். அவர் பிரௌன் பல்கலைக்கழகத்திலிருந்து கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். அவர் தற்பொழுது சியாட்டல் அருகிலுள்ள பெல்லிவில் வசித்தபடி, மென்பொருள் துறையில் தொழில்நுட்ப எழுத்தாளராகப் பணியாற்றுகிறார்.
அல்லோரா & கால்ஸாடில்லாவின் காட்சிப்படிமமான “பேரமைதி (2014)”, போர்டோரிகா, எஸ்பெரான்ஸாவில் உள்ள, உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியை மையமாக வைத்துப் படைக்கப்பட்டது. அங்கே உலகில் மிக அருகிவரும் கிளி இனமான அமேஸோனா விட்டாடா கிளிகளின் கடைசி எண்ணிக்கைகள் வசித்துவருகின்றன. இப்படைப்பிற்காக, அல்லோரா & கால்ஸாடில்லா இரட்டையர் உயிருள்ளவைகள், உயிரற்றவைகள், மனிதர்கள், விலங்குகள், அறிவியல் மற்றும் அண்டம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள குறுக்கவியலாத இடைவெளி குறித்து புனைகதைகள் எழுதிய எழுத்தாளரான டெட் சியாங்குடன் இணைந்து பணியாற்றி உள்ளார்கள்.
தமிழில் பாலகுமார் விஜயராமன் –சேவல்களம் நாவலாசிரியர்; மொழிபெயர்ப்பாளர்.
இது கடவுளின் பறவைகள் என்ற இவர் மொழிபெயர்த்த சிறுகதைகளின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதை.