சூரியன் மேலெழுந்து வருவதைப் பார்த்ததும் நீலாவுக்குத் திகீரென்றிருந்தது. நீல திரைச்சீலையை விலக்கிவிட்டு, நான் வந்தே தீருவேன் என்பது போன்ற பிரவேசம். ரத்தக்கோளமொன்று உருண்டு, திரண்டு உயிர்ப்புடன் நின்றிருப்பது போன்ற சாயல்.
“சூரியன் ஆரஞ்சு நேரத்துலேனா இருக்கு… ஆரஞ்சு எப்படி செவப்பாவும்… அதெல்லாமில்ல. அது செவப்புதான். ரத்த செவப்பு…”
நீலா கொண்டையை முடிந்து கொண்டாள். மார்புகள் கனத்துக் கிடந்தன. ஆங்காங்கே நீர்க்குத்தல் வேறு.
” மார்க்குத்தல் எல்லாருக்கும் வர்றதுதாம்மா. உதிரப்போக்கு எத்தனைநாளா இருக்கு…?”
மருத்துவர் மார்புகளைத் தடவிப் பார்த்தார். காம்புகளை அழுத்திவிட்டார்.
“நீர் சேர்ந்திருக்கு. பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல” என்று மாத்திரை எழுதித் தந்தார்.
“மென்சஸ் நிக்கிறதுக்கு முன்னாடி சில பேருக்கு உதிரப்போக்கு ஜாஸ்தியாதான் இருக்கும். அதுக்காக நல்லாயிருக்க கருப்பைய எடுத்துடணும்னு நினைக்கிறது முட்டாள்தனம்.”
நீலா இரு மார்புகளையும் அழுத்திவிட்டுக் கொண்டாள். மாதவிலக்கான பிறகு பத்து நாட்கள்வரை இலகுவாக இருக்கும் மார்புகள் அதன்பிறகு விறுவிறுக்க தொடங்கிவிடும். மருத்துவர் தந்த மாத்திரைகள் அந்த ஒரு மாதத்துக்கு மட்டுமே நிவாரணியாக இருந்தன.
“சும்மா, சும்மா மாத்திரை எடுத்துக்கக் கூடாது ” என்று அவரே எச்சரித்திருந்தார்.
சூரியன் தகிக்கத் தொடங்கியது. நீலா ஜன்னல் கதவுகளை அறைந்து சாத்தினாள். அந்த சுட்டெரிக்கும் சிவப்பு…. வயிற்றுக்குள் உயிர்ப்புடன் உருண்டு, புரண்டு சரேலென கீழிறங்கி உதிர்ந்த வேகத்தில் உடைந்து செங்குளமாய் பரவியது.
மெத்தை விரிப்பு கூட சிவப்புதான். நீலா உருவியெறிந்து விட்டாள். மஞ்சள் கரையிட்ட சிவப்பு மெத்தை விரிப்பு. அதன் மேலே படுத்து புரள, ராமனின் அணைப்பில் கிடந்தழிய இனி வாய்க்கப் போவதில்லை.
தக்காளிப் பழங்கள் செங்குருதிக் குடங்கள் போல மினுமினுக்க கண்களை இறுக மூடிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. சிவப்பு சேலை, சிவப்பு வாளி, சிவப்பு குடை எதுவுமே வேண்டாம்.
நீலாவுக்குத் தலை வலித்தது. அப்படியே துவண்டு படுத்துக் கொண்டாள். ரத்தம் அதிகம் போனதில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டதாக மருத்துவர் இரும்புச் சத்து மாத்திரைகளை எழுதித் தந்திருந்தார். அதுவும் அடர் சிவப்பு நிறத்தில்.
“கண்ண மூடிக்கிட்டு முழுங்கிடு.”
அம்மா முழங்கால் வலியோடு பல் கடித்து நின்றிருந்தாள். நீலாவுக்குத் துணையாக வந்து இரண்டு மாதங்களாகிவிட்டன.
“எனக்குப் பொட்டாட்டம் நின்னுடுச்சு. இவள இந்தப்பாடு படுத்துது. என் நாத்தனார் ஒடம்பு வாகு”
அம்மா பார்ப்பவர்களிடத்திலும், அலைபேசியிலும் இதையே சொல்லிக் கொண்டிருந்தாள். நீலா மாடிப்படியை ஒட்டியிருந்த ஓட்டத்தில் அயர்ந்து கிடந்தாள்.
தொடையிடுக்குகள் திகுதிகுவென்று எரிந்தன. அரை மயக்கத்தில் அம்மா கரைத்துத் தந்த ஹார்லிக்ஸை விழுங்கிவிட்டு அப்படியே படுத்துக் கொண்டாள்.
“அஞ்சு மாசமாதான் இந்தப்பாடு அதுக்கு முன்னாடி ஒழுங்காதான் குளிச்சிக்கிட்டிருந்தா. மெனோபாஸ் சிலபேருக்கு இப்படித்தான் படுத்தும்னு டாக்டர் சொல்றாரு. ரொம்பக் கவலையா இருக்கு.” அம்மா அதல பாதாளத்திலிருந்து சொல்லிக்கொண்டிருந்தாள்.
“பொண்ணு பிரசவத்துக்காக அமெரிக்கா போயிட்டு ரெண்டுநாள் முன்னாடிதான் வந்தேன். அப்பதான் தெரிஞ்சது. சுமியம்மா ஒரு நாளும் இப்படி இருந்ததே கெடையாது. விடிஞ்சதும் விடியாததுமா குளிச்சி, தலை சீவி, நல்லா உடுத்திக்கிட்டு பூப்பறிக்க எங்க வீட்டுக்கு வருவாங்க. செம்பருத்தின்னா அவங்களுக்கு அவ்ளோ ஆச. படத்துல ஒண்ணு வச்சாலும் பளிச்சுன்னு இருக்கும்னு சொல்லிக்கிட்டே பறிப்பாங்க.”
அவள் முந்தானையில் கட்டிக் கொண்டு வந்த செம்பருத்திப் பூக்களை கவனமாக டீப்பாயில் கொட்டினாள்.
நீலாவுக்கு இமைகள் கனத்துக் கிடந்தன. மெல்லிய கம்பி வரியோடிய திறப்பில் டீப்பாய் குவியல் காற்றில் சிலுசிலுத்தது தெரிந்தது. உதிரத்தில் பிறந்த சின்னஞ்சிறு உயிர்கள், சிறு, சிறு சதைத்துணுக்குகள் கைகாலை அசைத்து அப்படியும், இப்படியுமாக நெளிந்தன.
கெட்டியான குங்குமக்குழம்பு படலம், படலமாய், பூப்பூவாய் விரிந்து மலர்ந்தது. மலர, மலர புதுசு, புதுசாய் உதிரப்பூக்களை யோனி பிரசவித்துக் கொண்டேயிருந்தது.
“கருப்பை பலவீனமா இருக்கு. குழந்தை தாங்கற சக்தி அதுக்கில்ல. அதுதான் இப்படியாயிடுச்சு..” காதில் கரைந்தது குரல்.
“சாமியறைய தொறந்தே பலநாளாயிடுச்சு. எல்லாம் ஒண்ணாயிக் கெடக்கு. இதுல எங்கேயிருந்து வெளக்கேத்தறது. நீங்க பூவ எடுத்துக்கிட்டுப் போயிடுங்க.”
அம்மா பூக்களைத் திருப்பியனுப்பினாள்.
புடவையெங்கும் ரத்தம். நீலாவுக்கு உடம்பு கிடுகிடுத்தது. மெல்லக் கையூன்றி எழுந்தாள். உடம்பின் சீவன் மொத்தமும் கருப்பையில் உருக்கொண்டிருந்தது. உருண்டு வெளியேற அது நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.
பாத்ரூம் கதவைச் சாத்தி நாப்கினைக் களைந்ததுமே அது விரைந்து நழுவியது. பார்க்க முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டாள். வலதுகையால் சுவரைப் பற்றிக்கொண்டு கீழே அமர்ந்து இடது கையால் ஹேண்ட் ஷவரை யோனியில் பீய்ச்சினாள்.
“ஒனக்குப் பால்கொடம் எடுக்குறம்மா மகமாயி. ரத்தப்போக்க நிறுத்திடு.”
கதவுக்கு அந்தப்புறமிருந்து அம்மா வேண்டுவது காதில் விழுந்தது. கைகள் வெலவெலத்தன. யோனி உடைப்பெடுத்துக் கொண்டுவிட்டது என்று அவள் நடுங்கினாள்.
“பிரசவ வலியெடுத்துடுச்சின்னா நிக்கக்கூடாதும்மா. எதிர்பாராம நழுவிடுச்சின்னா மண்ட செதறிடும். பல்லக் கடிச்சிக்கிட்டு படுத்துக்க…”
சுமியைப் பிரசவிக்க இருந்த தருணத்தில் பெரியம்மா அவளை வலுக்கட்டாயமாக படுக்க வைத்தாள். இன்று ஏகப்பட்டது சிதறி விழுகின்றன. விழ, விழ நீர் பட்டுக் கரைந்தோடுகின்றன. நீலா புதிதாய் ஒன்றை வைத்துக்கொண்டு மெல்ல கதவைத் திறந்தாள்.
“அரெஸ்ட் ஆவலையா…?” ராமன் கவலையோடு நின்றிருந்தான்.
“சாயந்தரம் டாக்டர்ட்ட போவலாம்.”
மெல்ல தளர்ந்து நகர்ந்தான். நீலா மறுபடி குளிர்ந்த தரையில் படுத்துக் கால்களை அகட்டி கைகளை வயிற்றில் கோர்த்துக்கொண்டாள். மெல்ல அப்படியே உறங்கிப்போனாள்.
“நீ பெரியவளாயிட்டேடி கண்ணு…”அத்தை கன்னம் கிள்ளி வாயில் சர்க்கரைக் கொட்டினாள்.
“இதுக்கெல்லாம் அழுவலாமா…பொண்ணுன்னா இது வரத்தான் செய்யும். இது வந்தாத்தான் புள்ள பெத்துக்க முடியும். ” ஜெயந்தி அக்கா ரகசியம் போல் சொன்னாள்.
“இவ்ளோநாளும் வயத்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருந்தேன். இவ வயசு புள்ளைங்க சமைஞ்சு ரெண்டு, மூணு வருசமாச்சு. இவளுக்கு இப்பதான் நேரம் வந்துருக்கு.”
அம்மா சொல்லி, சொல்லி பெருமூச்சு விட்டுக்கொண்டாள். தனிமையில் ஒரு ஓரமாய் உலக்கைப் போட்டு, தான் அங்கு அமர்த்திவைக்கப்பட்டதில் கிடைத்த சலுகைகள் நீலாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. ராஜ உபசாரம் நடந்தது. காலை, மாலை துணி அலசுவது மட்டும்தான் பிடிக்கவில்லை. அம்மா பழைய உள்பாவாடைகளை சதுரத்துண்டுகளாக வெட்டித் தந்திருந்தாள்.
“கெணத்துக்குப் பின்னாடி கிளேரியா மரத்துக்கும், கெணத்துத் தூணுக்கும் நடுவுல கொடி கட்டியிருக்கேன். அதுல துணிய காயப்போடு. அங்கதான் நல்லா வெயில் படும். நெழல்ல காஞ்சா கவுச்சியடிக்கும். மறக்காம ரெண்டு கிளிப்பு போடு. இல்லாட்டி பறந்து கெணத்துக்குள்ள வுழுந்துடும். ”
அம்மா சொல்லிக்கொண்டேப் போனாள்.
“கடையில நாப்கின் விக்கிது. வாங்கிக்குடும்மா.”
“அதெல்லாம் நமக்கு கட்டுப்படியாவாதுடி. ஒனக்கடுத்தது ஒருத்தி இருக்கா. பேசாம இரு.” அம்மா அடக்கிவிட்டாள்.
உடல் அயர்ந்திருந்தது. மூன்று மாதத்தில் முதலாவது கலைந்தபோது இப்படித்தான் உடல் அயர்ந்துவிட்டிருந்தது. சுமிக்கு மூத்தது. பல ஆசைகளை நெஞ்சுக்குள் பொதித்து வைத்துக்கொண்டு, உள்வாங்கிய வெளிறிய விழிகளோடு கிடந்தபோது, அது பூந்தளிர்ச் சிறகுகளோடு உலா வந்து கனவுகளைத் தன்வசமாக்கியிருந்தது.
“நான் அதுக்கு சித்தியாக்கும்.” தங்கைக்குப் பெருமைப் பீற்றிக்கொள்ள நேரம், காலம் தேவையிருக்கவில்லை.
“அஞ்சாம் மாசம் பச்சில புழிஞ்சி ஏழாம் மாசம் கூட்டிட்டு வந்து வளைகாப்பு போட்டுடலாம்னு இருக்கேன். மசக்கை வேற அவளைப் படாதபாடு படுத்துது. கடுகு வெடிச்சா கொமட்டுதுங்குறா. தாளிக்கிற வாசனையே புடிக்கலையாம். வாந்தி வருதாம். இது எப்பத் தெளியும்னு தெரியல.” அம்மாவுக்கு சதா அவளைப் பற்றிய பேச்சுதான்.
மூன்றாம் மாத முடிவில் ஓரிரவு தூக்கத்திலேயே விரிசலுற்ற தளிர் செம்பருத்திப்பூவின் இதழ்களாய் உதிர்ந்து வெளியேறி மெத்தையில் மலர்ந்து கிடந்ததை நீல விளக்கொளியில் கண்டு, நழுவியதன் உண்மை உறைக்க, நீலா வயிற்று வலியோடு அலறி மயங்கினாள்.
சுமி கவலையோடு அலைபேசியில் நீலாவைப் பற்றி தினமும் இரண்டு வேளை பாட்டியிடம் கேட்டுக்கொண்டாள்.
“பக்கத்துல இருந்தா ஓடி வந்திருப்பேன். இப்படி கண்டம் தாண்டி வந்து ஒக்காந்துக்கிட்டு வரமுடியாம தவிக்கிறேன்.” எப்போது பேசினாலும் இதைச் சொல்லிப் புலம்பினாள். நீலா சற்று தெம்பாயிருக்கும் நேரங்களில் அவளிடம் பேசும்போதும் இதையே சொன்னாள். வீடியோ காலில் பார்த்து,
“ரொம்ப இளைச்சுப் போயிட்டம்மா…” என்று பதறினாள். அவளிடம், சிவப்பு சுடிதாரப் போட்டுக்கிட்டு வீடியோ காலுக்கு வராதடி என்று சொல்ல வேண்டும் போலிருந்தது நீலாவுக்கு.
உணர்வில் சிவப்பு, திட்டுத் திட்டாய் படிந்து பயத்தைக் கிளப்பி விட்டிருந்தது. கூடவே அசூயையும்.
அன்று தூக்கத்தின் விளிம்பில் அரை மயக்கத்தில் கிடந்தவள் முழு இருளின் அடர்த்தியில் கரைந்திருந்தாள். எட்டிய தூரம் வரையிலும் படிந்திருந்த இருளில் ஒற்றை வெளிச்சப்புள்ளி விரிவு கண்டு, விரிவு கண்டு குபீரென மலர அங்கு காளியின் பாதங்களைக் கண்டாள்.
சுதைக்காளி. பத்ம பாதங்கள் பீடத்தில் சிவந்து அழுந்தியிருந்தன. பாதங்களில் படர்ந்திருந்த சிவப்பின் அழுத்தம் உடலைக் கிடுகிடுக்க செய்தது. நிமிர, நிமிர சிவப்பு உருக்கொண்டு எழும்பிய வண்ணமிருந்தது.
கண்கள் கூசும்படியான சிவப்பில் கரு விழிகளும், உதட்டோர வெண்கூர் பற்களும், விபூதியணிந்த பதக்க நெற்றியும், பச்சை வண்ண தாழம்பூ கிரீடமும் பொருந்த, அம்பாள் முழு வடிவம் கொண்டதில் மூச்சடைத்து வியர்த்துக் கொட்டியது.
கால்களைப் பெயர்க்க முடியாத அழுத்தம். முட்டிகள் வலுவிழந்து குண்டுக்கல்லாய் கனத்ததில் அருகில் படர்ந்திருந்த கொடியைப் பற்றி நகர முயன்ற நேரத்தில் மணலடுக்குகள் வளையம், வளையமாய் சரிந்தன. அவள் விழ, விழ காளி ஆங்காரமாய் சிரித்தாள்.
கூர் நகங்கள் பட்டு கிழிந்த உடலின் ரத்தத்துளிகள் பொட்டு, பொட்டாய் சிதறி விழுந்தன. மணல் வளையத்தில் முளைக்குச்சி போல செருகி புதைந்தவள் மார்பிலும், கழுத்திலும், வயிற்றிலும் விழுந்த செஞ்சிவப்பு துளிகளைக் கண்டு வீறிட்டு அலறினாள்.
” நீலா…” ராமன் பதறி விளக்கைப் போட்டான். உடல் நடுங்க எழுந்தமர்ந்தவளின் முகத்தில் பீதி படர்ந்திருந்தது.
” கனவு கண்டியா…?”
” என்னவோ வித்தியாசமான கனவு. சொல்லத் தெரியல.”
” தண்ணிக் குடிச்சிட்டு சாமிய வேண்டிக்கிட்டு படு.”
அவனுக்கு கண்களில் தூக்கம் சுற்றியலைந்தது. நீலா ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். அடர்த்தியான இருளின் மீது நீலச்சுடரொன்று விழுந்து தெறித்தது. சிறுநீர் வரும் போலிருந்தது. எழுந்து செல்லவேண்டும் என்று நினைத்தபோதே அயர்வாயிருந்தது.
வயிற்றை எக்கி, தொடையிரண்டையும் சேர்த்து இறுக்கிக் கொண்டாள். அடிவயிற்றிலிருந்து கீழிறங்கி சரியும் மையத்தை உள்ளிழுத்து நிதானித்தாள். தற்காலிக உபாயம் இது. பொது இடங்களில், தவிர்க்க முடியாத தருணங்களில் இதுபோல் உபாயம் தேடிக்கொள்வது வழக்கம்தான். இன்று அது கை கொடுத்தது.
முதல்முறை கண்டபோது உள்ளுறுப்பு சிதைந்துவிட்டதோ என்று எண்ணும்படியான பீறிடல் உயிர்க்குலையை உலுக்கிவிட்டது. கைவைத்தியம் ஏதேதோ செய்து பார்த்தும் கட்டுப்படாத வேகம் மருத்துவரிடம் கொண்டு நிறுத்தியது. அவர் எழுதித் தந்த மாத்திரைகள் மெல்ல, மெல்ல போக்கைக் கட்டுப்படுத்தின.
நீலா ஒருவாரத்தில் தெளிந்துவிட்டாள். இருபது நாட்கள் எப்போதும் போல சுறுசுறுப்பாக இருந்தாள். இருபத்தியோராம் நாள் காலை எழுந்தவுடனேயே பொட்டு திலகமாய் சிவப்பு மினுக்கம் கண்டபோது உடல் நடுங்கிவிட்டது.
திரும்பவும் பீறிடல், நாப்கினுடனான துவந்த யுத்தம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உடல் அழற்சி…அப்போதும் மாத்திரைகள் வேகத்தைக் கட்டுப்படுத்தின. அதன்பிறகு இரண்டு மாதங்கள் செடியிலிருக்கும் பூப்போல நாட்கள் அவ்வளவு பிரஷ்ஷாக இருந்தன. நீலா சிறகுகள் தரித்த தேவதை போலிருந்தாள்.
மாதவிலக்கு நின்றுவிட்டதாக முழுமையாக நம்பினாள். அழகான நாட்கள் நிகழ்த்தும் சம்பவங்களனைத்தும் அழகானவையாக இருந்தன. தனக்கு மாதவிலக்கு நின்றுவிட்டதை அடிக்கடி சொல்லி மனதிற்குள் நேர்மறை சக்தியைப் பெருக்கிக்கொண்டாள்.
இரவுகளில் கனவுகள் அவளைப் பயமுறுத்தவில்லை. பல நேரங்களில் கனவே வராது நிம்மதியாக உறங்கினாள். அன்றிரவு திடீரென மழை அடித்துக் கொட்டியது. விளக்குகள் அணைந்தன. கதைப் படிக்கலாம் என்றெண்ணியிருந்தவள் எரிச்சலோடு புத்தகத்தை முடி வைத்தநொடி அது வந்துவிட்டிருந்தது.
நீலா பதினைந்து வயதில் பெரியவளானாள். அவளைவிட சின்னக் குட்டிகளெல்லாம் பன்னிரண்டிலும், பதிமூன்றிலும் உட்கார்ந்ததில் அம்மா எல்லா சாமிகளுக்கும் வேண்டுதல் நேர்ந்து காணிக்கை முடிந்து வைத்திருந்தாள்.
கழிவறையில் தாமதித்தால்,
“என்னடி ஆச்சு?” என்று கதவைத் தட்டிக்கேட்டாள்.
“அததுக்குன்னு ஒருநேரம் வரணுமில்ல. அதுக்குள்ள அவசரப்பட்டா ஆச்சா…”
என்று கேட்டவர்களிடமெல்லாம், மனதைக் காட்டிக் கொள்ளாது சொல்லி வைத்தாள்.
“மெதுவாத்தான் வரட்டுமே. நாமப் படுற பாடுதான் நாய்ப்படாதபாடாயிருக்கே…” என்று சொல்லும்போது முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டாள்.
காலையில் வெறும் வயிற்றில் ஐந்து இதழ் செம்பருத்திப்பூ திங்க சொல்லி, எள்ளு வெல்லம் இடித்து, உருட்டிப் பிடித்து தின்றாலே ஆச்சு என்று வற்புறுத்தி, மான்கொம்பை(!) இழைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவிவிட்டு ஒருபக்கம் அம்மா தினந்தினம் தன்னாலானதை செய்து கொண்டிருந்தாள்.
“ஒடம்பு விரிஞ்சு, மாரெல்லாம் உருண்டு, தெரண்டு வந்துடுச்சு. ஒக்காந்துடுவா பாரு…”
கோடிவீட்டு ரத்தினம் ஆச்சி வெற்றிலைச்சாறு வழிந்துவிடாமல் தாவங்கட்டையை உயர்த்தி சொன்னபோது அம்மாவுக்கு உடம்பு புல்லரித்துவிட்டது.
பத்தாவது காலாண்டு விடுமுறை. பொழுதுபோகாமல் மதியம் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தவளின் பாவாடையில் ரத்தத்திட்டுகள். சந்தேகப்பட்டு அம்மாவிடம் சொன்னபோது அம்மா, அவளை ஓரமாய் இருக்க சொல்லிவிட்டு பக்கத்துவீட்டு காமாட்சியை அழைத்துவர ஓடினாள்.
“நான் பாக்கக்கூடாதுடி. தோஷமாயிரும். அப்படி ஓரமா ஒக்காரு. காமாட்சிய கூட்டியாரேன்.”
அம்மா அவசரமாய் ஓடியபோது நீலாவுக்கு அழுகை நெஞ்சடைத்தது. இனம்புரியாத சொரசொரப்பு வயிற்றுக்குள். ஏற்கனவே தெரியும்தான். இருந்தும் முதல்முறை நேர்ந்ததில் எதிர்பார்ப்பை தேக்கி வைத்திருந்த இதயம் சட்டென விண்டுவிட்டது.
“நீ இன்னும் ஆவலையாடி…நான்லாம் பத்து வயசுல வந்துட்டேன்.”
“நான் பன்னண்டு வயசுல வந்தேன்.”
“வெள்ளப் பட்டா சீக்கிரம் ஒக்காந்துருவாங்கன்னு எங்கம்மா சொல்லும். ஒனக்குப் பட ஆரம்பிச்சிருச்சா…?”
“அதொண்ணுமில்ல. ஒனக்குத் தேவையில்லாத விசயம். எங்களுக்குள்ள பேசிக்கிறோம்.”
“அவளுக்கு அதப்பத்தி எதுவும் தெரியாது. அவகிட்ட போயி சொல்லிக்கிட்டு.”
கேள்விகளும், கேலிகளுமாக கழிந்த நாட்கள் வலி மிகுந்தவை. இன்டர்வெல்லில் கழிவறைக்குச் செல்லும் நேரங்களிலெல்லாம் இதே பேச்சுதான். குசுகுசுக்கப்பட்ட ரகசியங்களுக்குத் தான் அந்நியப்பட்டு நின்றிருப்பது நீலாவுக்கு அவமானமாயிருந்தது.
பெண்கள் வகுப்பில் ஒரேயொரு ஆண்பிள்ளை போல அவள் தட்டுத் தடுமாறினாள். கவிதா நெருங்கிய தோழி. மற்ற நேரங்களில் கைகோர்த்து நடப்பவள் இந்தப் பேச்சு வரும்போது கழற்றி விட்டுவிடுவாள்.
அம்மாவுக்குத் தாளாத சந்தோஷம். இப்போதும் அதை சொல்லி, சொல்லி மாய்ந்து போவாள்.
“பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்ல. காலையில கண்ணு முழிக்கும்போதே இன்னிக்காவது நல்ல சேதி சொல்லணும் தாயேன்னு வேண்டிக்குவேன். நல்லவேள சுமிக்குட்டி அந்தக் கவலைய வைக்கல ” என்று பேத்தியைக் கன்னம் வழித்து முத்தமிடுவாள்.
ஒருமுறை காளியம்மன் திருவிழாவின் போது நீலா விலக்காகிவிட்டாள்.
மூன்றுநாள் திருவிழாவில் ஊரே அமர்க்களப்படும். காளி வீடு, வீடாக வரும். வருடா வருடம் ஒருவர் விரதமிருந்து காளி கட்டிக்கொள்வார். (சுதையினால் செய்யப்பட்டிருக்கும் சிரசையும், கழுத்திலிருந்து வயிறு வரையிலான பகுதியையும் சேர்த்து காளி உருவத்தை மேலே தாங்கிக்கொள்வது).
முறைப்படி விரதமிருந்து கையில் காப்பும் கட்டி காளி கட்டிக்கொள்பவரை மக்கள் காளியாகவே பாவித்து சிலிர்த்துப்போவர்.
தாழம்பூ வடிவ சிரசு, அகன்ற முகம், கனிந்த கண்கள், கடைவாயோரப்பற்கள், நெற்றிக்கு நேர்மேலே சிரசில் படமெடுக்கும் நாகம்… பார்த்துக்கொண்டேயிருக்கலாம். சிவப்பு வர்ணம் பூசப்பட்ட காளியின் முகத்தில் வெள்ளை விபூதிப்பட்டை. புருவமத்தியில் செஞ்சாந்து குங்குமம். காளியின் கழுத்தில் நெக்லஸ், காசுமாலை என்று விதவிதமான அணிமணிகள்.
அதுதவிர ரோஜா, மல்லிகை, சம்மங்கி, செவ்வந்தி, எலுமிச்சை மாலைகள். ஆறு கரங்கள். கரங்களில் கிளி, தாமரைப்பூ, உடுக்கை, கத்தி, சூலாயுதம், கண்ணாடி என்று விதவிதமான பொருட்கள் தாங்கி அழகாக பாவாடையுடுத்தி பின்பக்க சிரசிலிருந்து இடுப்பு வரை பிர்க்கா போர்த்தி நடந்து வரும் காளிக்குள் மனிதர் இருப்பதாக எவருக்கும் தோன்றாது.
நீலா சிறுவயதில் காளி பின்னோடு அலைவாள். மூன்றுநாட்களும் உற்சாகமாக கழியும். உடலின் வளர்ச்சிகள் வெளித்தெரிய ஆரம்பித்த பிறகு அம்மா அவளை அனுமதிக்கவில்லை. சின்னஞ்சிறு செப்புச்சிமிழ்கள் பெரும் சுமையாகி அவளை முடக்கிப்போட்டபோது, கூடத் திரிந்த ஆண்பிள்ளைகளின் மேல் பொறாமை கொண்டாள்.
“அவளுக்கு மூணாநாளு. அவ ரூமுக்குள்ள இருக்கட்டும்.”
அம்மா ஊரிலிருந்து வந்திருந்த பாட்டியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். காளி நடந்து வருவதை எதிர்கொண்டு பார்க்கவேண்டும். அது ஒரு இச்சை எல்லோருக்கும். கனத்த சலங்கைகள் பதிக்கப்பட்ட பட்டையைக் காலில் கட்டிக்கொண்டு ஜல், ஜல்லென்று காளி நடந்துவரும்போது அப்படியே உடம்பு கிளர்ந்தெழும். சிலிர்ப்பு அடங்க வெகுநேரமாகும்.
“நீ ரூமை விட்டு வெளில வரக்கூடாது. பேசாம ஒரு எடமா ஒக்காரு…” அம்மாவின் ஆணை பறந்து வந்தது.
“என்ன பாக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு நீ மட்டும் பாப்பியோ…”
நீலாவுக்கு குமுறி, குமுறி வந்தது. வாசலில் வந்து நின்ற காளியை ஜன்னல் வழியே எக்கிப் பார்த்தாள்.
காலில் நீரூற்றி, மாவிளக்கு போட்டு, அர்ச்சனை செய்து, விபூதி வாங்கி நிமிர்கையில் அம்மா கவனித்துவிட்டாள்.
காளி எழுந்து நின்றது. நாதஸ்வரமும், மேளமும் ஒலிக்க கால்களை முன்னும், பின்னும் வைத்து மெதுவாக ஆடத் துவங்கியது. கைகள் பாவாடையை இறுகப் பற்றியிருக்க, கொஞ்சம் இடப்புறமும், வலப்புறமும் நகர்ந்து வேகத்தைக் கூட்டியது.
“ஆடு பாம்பே, விளையாடு பாம்பே…..”
நாதஸ்வரம் இழைந்தது. இழைந்து, இழைந்து நளினமான பெண்ணின் மிருதுவோடு, முரடான இசையோடு ஊடுபாவியது.
ரோஜா இதழ்கள் உதிர, உதிர காளி அங்குமிங்கும் சுழன்று பூரித்தாடியது. வெறிகொண்ட ஆட்டமில்லை அது. பூஞ்சிறகொன்று காற்றில் மிதப்பது போன்ற லகுவாக ஆட்டம். நாதஸ்வரம் உச்சத்தைத் தொட பின்னால் நின்று அரவணைத்துப் பிடித்திருப்பவர் விலகிவிட்டார்.
காளி குனிந்து கும்மி கொட்டியது. தாழம்பூ சிரசு தரையைத் தொட்டுவிடும் தூரத்தில். அதே வேகத்தில் மின்னல் வெட்டியது போல பாய்ச்சலாக நிமிர்ந்தது. சிரசிலிட்டிருந்த எலுமிச்சை மாலை குலுங்கி அடங்கிற்று. நீலா சிலிர்த்து ஒடுங்கினாள். இதற்காகத்தானே இத்தனை கூட்டம்.
அம்மா திட்டித் தீர்த்தாள். “தீட்டக்காரி சாமிய பாக்கக்கூடாது. அடங்குறியா நீ…படுபாவி. அவளுக்கு கோவம் வந்தா என்ன செய்வான்னே தெரியாது. நீ பாத்துப்புட்டியே. என்னாவுமோ, ஏதாவுமோ…லபோ, திபோவென்று அடித்துக்கொண்டாள்.
அம்மா ரசம் சோறு கரைத்துத் தந்தாள். கவனமாக தக்காளியை நீக்கியிருந்தாள்.
“அதென்னவோ செவப்பப் பாத்தாலே கொமட்டுதாம். படுறபாடு அப்படி. ”
சின்னவளிடம் பேசியபடியே கொல்லைப்புறம் வந்தாள்.
“நீ முடிஞ்சா ஒரு எட்டு வந்து பாத்துட்டுப்போடி. ரொம்ப துவண்டுட்டா. போனமுறை போனப்ப கர்ப்பப்பை நல்லா இருக்கு, எடுக்க வேணாம்னு டாக்டரம்மா சொல்லுச்சு. நேத்தி மறுபடியும் மாப்ள கூட்டிப்போனாரு. அப்பதான், சரி எடுத்துடலாம்னு சொல்லியிருக்காங்க…ஆமாமா…போக்கு நிக்கவேயில்ல. இப்படியே போனா ஒடம்பு என்னத்துக்காகும். இப்ப ஏதோ மாத்தர எழுதி குடுத்ததுல கொஞ்சம் பரவாயில்ல. எந்திரிச்சு ஒக்காந்துருக்கா. ஆனா ஆபரேஷன் பண்ணனும்னா மூணு பாட்டில் ரத்தம் ஏத்தணுமாம். ஹீமோகுளோபின் கொறைவா இருக்காம். ”
அம்மா சொல்லிக்கொண்டே போனாள். மாத்திரைகளில் ரத்தப்போக்கு கட்டுப்பட்டிருந்தது.
“உடம்புல பலம் கூடி வரணும். அப்பதான் ஆபரேஷன் பண்ண முடியும்” என்றிருந்தார் மருத்துவர்.
அம்மா பார்த்து, பார்த்து சமைத்துப்போட்டாள். சுமி அங்கிருந்து அட்டவணைப் போட்டு அனுப்பினாள்.
அன்றிரவு ராமன் மெல்ல நெருங்கி வந்தான்.
“சுத்தமா நின்னுடுச்சா…?”
இதமாக முன்நெற்றி கேசம் ஒதுக்கி விட்டபடி கேட்டான். நீலாவுக்கு ஓய்ச்சலாக இருந்தது. சாறு பிழியப்பட்ட சக்கை போலிருந்தாள்.
“ஒங்கம்மாதான் பாத்து, பாத்து சமைச்சுப் போடுறாங்களே….” கன்னத்தை வருடினான்.
“ஆமா…”
நீலா எங்கோ பார்த்தபடியிருந்தாள். படுத்துக்கொண்டால் தேவலாமென்றிருந்தது.
ரொம்ப நாளாச்சுடி…”
காதில் மெதுவாய் முனகினான். விளக்கணைந்து நீல விளக்கு சட்டென ஒளிர்விட்டது.
மனதைப் பிழிய வைக்கும் பெண்ணுலகத்தின் ஒரு கவளம்.
வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி🙏
அருமை தோழி….கதையில் இருவிதமான போக்கும் தெரிகிறது.
நன்றி தோழி
மெனோபாஸ் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் வேதனைகளை மிகச்சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.ஓர் ஆண் எழுத்தாளரால் இது போன்ற ஒரு படைப்பை நிச்சயமாக வழங்கிடமுடியாது. வலியும், வேதனையும் அனுபவிப்பவர்களுக்குத்தானே தெரியும்.சில உவமைகள், வர்ணனைகள் ஆச்சரியப்பட வைத்தன. எல்லாவற்றையும் விட சிகரமாக அமைந்தது முடிவாக வந்த வரிகள் தான்.”ரொம்ப நாளாச்சுடி” இந்த இரண்டு வார்த்தைகளில்தான் எவ்வளவு அர்த்தங்கள்? நீ எக்கேடுகெட்டா என்ன, எனக்கு வேணும் என்று நினைக்கிற ஆண் மனோபாவம். அப்பப்பா பிரமிக்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துகள் சகோதரி.
நெஞ்சார்ந்த நன்றிகள் சார்🙏🙏🙏
மனதை உருக்கி பெண்கள் பால் கருணை சுரக்கச்செய்யும் கதை. கடைசி வரி ரத்தச்சகதியில் நனைத்து ஆணினத்தில் முகத்தில் அடித்ததுபோலிருந்தது. முன்பு நான் எழுதிய கவிதை பூப்பின் ரணம் ஊருக்கென்ன தெரியும் என்ற வரிகள் நினைவுக்கு வந்தது. வாழ்த்துகள் கிருத்திகா.
மிக்க நன்றி சார்🙏🙏🙏