முள்ளெலி

 உலகில் 17 வகை முள்ளெலிகள் உள்ளன. ஐரோப்பா. ஆப்பிரிக்கா. நியூசிலாந்து, ஆசியா போன்ற பகுதிகளில் வாழ்கின்றன..  இந்தியாவில் மூன்று வகையான முள்ளெலிகள் காணப்படுகின்றன. அவை நீண்டகாது முள்ளெலி, வெளிர் முள்ளெலி, தென்னிந்திய முள்ளெலி என்பவையாகும். தமிழகத்தில் காணப்படும் முள்ளெலி காண்பதற்கு மூஞ்சிஎலியைக் (மூஞ்சூரு எலி) காட்டிலும் பெரியதாகயிருக்கும். வடமாநில முள்ளெலிகள் சற்று மாறுபட்டு நீண்ட காதுகளை கொண்டும் கண் பார்வை குறைந்தும் காணப்படுகிறது.

         மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை சார்ந்த வறண்ட திறந்த வெளிப் பகுதிகளில் முள்ளெலிகளைக் காணலாம். முள்ளெலி ஓர் அரிய இரவாடிப் பாலூட்டியாகும். இவை மேட்டுக்காடுகள், விளை நிலங்களைச் சார்ந்த பகுதிகள் மற்றும் சோளம், துவரை, கடலை, காராமணி, கொள்ளு, சாமை, வரகு, தினை போன்ற தானியங்கள் பயிரிடப்பட்ட காடுகளில் முன்னர் அதிகளவில் காணப்பட்டது.

          இரவு நேரங்களில் மட்டுமே பெரும்பாலும் இரை தேடக்கூடியது. ஊர்ந்து செல்லும் போது குலுங்கிக் குலுங்கி மெதுவாக நகர்ந்து செல்லும். இடையூறு ஏற்படின் பந்துபோல் சுருண்டு கொள்ளும் (எறும்புதின்னி போன்று). ஆபத்து ஏற்படின் விரைவாக ஓடக் கூடியது. மரங்களிலும் ஏறும் திறன் பெற்றது. பகலில் புதர்கள், செடிகள், பொந்துகள், பாறை இடுக்குகள் போன்றவற்றில் மறைந்திருந்து ஓய்வெடுக்கும். சில வேளைகளில் பகலிலும் குறிப்பாக அதிகாலை வேளையில் மற்றும் மாலை வேளைகளில் உணவு தேடுவதும் உண்டு. இவை தங்கும் இடத்தைவிட்டு அதிக தூரம் செல்வதில்லை, விடியலில் தங்கும் இடத்தை அடைந்துவிடும்.. பாதுகாப்பான இடம் எனக் கருதினால் ஆண்டு முழுவதுமே அதே இடத்தில் தங்கும் இயல்புடையது.

         முள்ளெலி 20 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் அதிக அளவில் சென்னை, ஈரோடு, பெருந்துறை, அவிநாசி, திருப்பூர், தாராபுரம், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, திருவில்லிப்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர் கோயில், வருசநாட்டு பள்ளத்தாக்கு, மன்னார் வளைகுடா, திருச்சி, மதுரையைச் சுற்றியுள்ள சில முன்னேறாத கிராமங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத தமிழகத்தின் பல பகுதிகளில் காணப்பட்டது. தற்போது குறைவான எண்ணிக்கையில் ஆங்காங்கே அரிதாகத் தென்படுகிறது.

          காடுகளில் ஆடுகள், மாடுகள் மேயும் காட்டில் சிறுவர்களுடன் முள்ளெலியினைக் கையில் வைத்து நண்பன் ஞானசண்முகத்துடன் விளையாடியும் இருக்கிறேன். செட்டிபாளையத்தில் மாமா தோட்டத்தில் வெவ்வேல மரத்தின் கீழ் வைத்து விளையாடும் பொழுது மரத்தின் மேல் ஏறிக் கொள்ளும். பின்னர் மரத்தின் மேலேறி பிடித்து வருவோம். முயலுடன் ஒன்றாக வைத்திருந்தோம். பெரியவர்கள் இவைகளை வைத்திருக்கக் கூடாது எனத்திட்டியதால் புகை வண்டி தண்டவாளத்தின் (இருப்புப் பாதை) அருகே காட்டில் விட்டு விட்டது இன்றும் நினைவில் உள்ளது. எளிதில் பழகக் கூடியது.  பழகிய பின் இவை சுருண்டு கொள்வதில்லை. இயல்பாக எவ்வித அச்சமுமின்றி கூப்பிட்டால் வரும் இயல்புடையது.

          இது மிகவும் சாதுவான உயிரினமாகும். தன் நாக்கால் நக்கி உடலை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்கும். இதன் உடலின் மேல் அடர்ந்த முட்கள் நிறைந்த கவசம் போன்ற பகுதியைக் கொண்டு அசைந்து வருவதைக் கொண்டு எளிதில் அடையாளம் காணலாம். இதனுடைய உடலில் சுமார் 5000 முதல் 7000 எண்ணிக்கையில் முட்களிருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த முட்கள் விஷமற்றவை, தீங்கு விளைவிக்கக் கூடியது அல்ல.. இதனுடைய முட்கள் இளம் வயதில் இருந்து வளரும் பொழுது விழுந்து மீண்டும் புதிதாக வலிமையான முட்கள் உருவாகும். தடவினால் முட்கள் பெரிதாகக் குத்துவதில்லை.

         எதிரிகள் தாக்க முற்பட்டால் முட்கள் மேல் நோக்கியவாறு பந்து போல் சுருண்டு படுத்துக்கொள்ளும். இதனால் எதிரிகள் இதனை விட்டு விலகிச் சென்றுவிடும். தற்காப்புக்காகவே இதனை பயன்படுத்துகிறது. முள்ளெலியின் மேல் தண்ணீர் படின் அல்லது மழை நீர் விழின் உருண்டை வடிவில் சுருண்டு படுத்திருக்கும் நிலையிலிருந்து பிரிந்து நகரத் தொடங்கும். இத்தகைய உயிரினம் தற்போது தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ளதெனலாம்.

         பூச்சிகள், நத்தைகள், தவளைகள் மற்றும் சிறு ஆமைக் குட்டிகள், பாம்புக் குட்டிகள், தேள்கள், பறவை முட்டைகள், காளான்கள், புற்களின் வேர்கள், காடுகளில் கிடைக்கும் பழங்கள் மற்றும் இறந்த உயிரினங்களின் உடலின் மென்மையான பகுதிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். இவை எடுக்கும் உணவில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக இருப்பதால் இவை அதிக அளவில் உணவை உட்கொள்கிறது.

          முள்ளெலிகள் இணை சேரும் காலம் ஏப்ரல் – மே மாதங்களாகும். இத்தருணங்களில் ஆண்களுக்கிடையே பிற பாலூட்டிகளைப் போலவே மோதல்கள் ஏற்படுவதுமுண்டு. இதன் கர்ப்ப காலம் 35-58 நாட்கள் ஆகும்.. சராசரியாக 2-4 குட்டிகள் ஈனும். வயது வந்த ஆண் முள்ளெலி ஆண் குட்டிகளைக் கொன்று விடுவதுமுண்டு.

           காடுகளில் வாழும் முள்ளெலிகள் 2- 4 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. முள்ளெலிகள் பிறக்கும் பொழுது கண்கள் மூடியபடி பிறக்கின்றன.  அடுத்த சில மணிநேரங்களில் குட்டிகள் கண் பார்வை பெற்றுவிடுகின்றன. வளர்ந்த முள்ளெலி அரை கிலோவுக்கும் குறைவான எடையுடன், 7 முதல் 15 செமீ நீளமுடன் சிறிய அளவு இருக்கும். இதன் உடலின் மேல் 2 முதல் 3 செமீ முட்களைக் கொண்டிருக்கும். குட்டிகள் பிறக்கும் போது ஊசி போன்ற மயிர்கள் (முட்கள்) உடலில் இருப்பதில்லை. பின்னர் மிருதுவான வெள்ளை மயிர்கள் முதலில் உருவாகி பின்னர் நாளாக நாளாக அவைகள் வளர்ந்து கடினமான முட்களாகிவிடும். வெப்பகாலங்களில் குட்டிகளின் சூட்டினைத் தணிக்கவும் நீரினைக் குடிக்கச் செய்யவும் தாயானது நீர் இருக்கும் பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி வந்து குட்டிகளின் மேல் தெளிப்பதாகவும் மற்றும் அதன் உடலிலிருந்த நீரினைக் குட்டிகள் பருகியதாகவும் முன்னர் நண்பர் சந்தோசிடம் அனுபவமுள்ள வேட்டைக்காரர் ஒருவர் கூறியுள்ளார். இதனைக் கேள்வியுற்று வியப்படைந்தேன். இந்நிகழ்வு ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். முள்ளெலி மோப்ப சக்தி மிகுதியாகக் கொண்டது.

            முள்ளெலி வேகமாக அழிந்ததற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பினும் முன்னர் கக்குவான் இருமல் போக்க இதன் சதைப் பகுதியை மருந்தாகவும், முள்ளினைச் சுட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், கக்குவான், ஆசுத்துமா மற்றும் சளிப் பிணியைப் போக்க தேன் கலந்து கொடுத்து வந்தனர். சில பகுதிகளில் உணவாகவும் உண்டு வந்துள்ளனர். இது போன்ற பல காரணங்களாலும் முள்ளெலிகள் அழிந்துவந்துள்ளன.

           மனிதர்களைப் போலவே முள்ளெலிக்கு இதயநோயும், புற்றுநோயும் அதிகளவில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரியப் படுத்தியுள்ளனர். கல்லீரல் நோயும் இவற்றிற்கு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதனாலும் இவைகள் அழிய நேர்கிறது.

          முள்ளெலி தற்போது அழிவதற்கு பல காரணங்களிருப்பினும், இரவு நேரங்களில் இவை சாலைகளைக் கடப்பதை வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதில்லை. காரணம் இதன் நிறம் சாலையின் நிறத்தை ஒத்திருப்பதால் இவை புலப்படுவதில்லை.மேலும் வாகனங்கள் விரைவாகச் செல்வதால் இவற்றின்மீது ஏற்றி நசுங்கச்  செய்து விடுகின்றனர். எனவே இதனால் பல முள்ளெலிகள் இறந்து விடுகின்றன. இதனாலும் இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து தற்போது முற்றிலும் அழியும் நிலையில் உள்ளதெனலாம்.

         ஏழாண்டுகளுக்கு முன்னால் பவானி அருகே உள்ள சோதனைச்சாவடியில் காலை வேளையில் கூட்டமாக கூடி இருந்தனர். அங்கு சென்று பார்த்த பொழுது லாரி ஓட்டுனர் கையில் துணியுடன் ஒன்றை வைத்துக் கொண்டு காட்டிக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்து இது முள்ளெலி என அவர்களுக்கு விளக்கம் கூறினேன். விசாரித்த பொழுது தாராபுரம் அருகே சாலையில் அதிகாலை வேளையில் ஊர்ந்து சென்றதை முகப்பு விளக்கொளியில் கண்ட லாரி ஓட்டுனர் அது என்னவென்று தெரியாது அதனைப் பிடித்து கொண்டு வந்துள்ளார். பின்னர் வன அலுவலகத்துக்கு தகவல் கொடுத்து அதனை மீட்டு காட்டில் திரும்பவும் விட்டோம். இதுபோல் தமிழகத்தில் பல பகுதிகளில் சாலையைக் கடந்து கொண்டே இருக்கிறது. ஓட்டுனர்களின் கவனக்குறைவினால் பல முள்ளெலிகள் இறக்க நேரிடுகின்றன.

தமிழகத்தில் முன்னர் பெரும்பாலான பகுதிகளில் காணப்பட்ட முள்ளெலிகள், வேளாண்மை சார்ந்த காட்டு நிலங்கள் அதிகமாக நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருவதாலும் இவ்வினம் பல்வேறு காரணங்களால் அழிந்து வந்துள்ளது. மேலும் காடுகள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும். தற்போது அரிதாக அவிநாசி பகுதிகளிலும் தாராபுரம் பகுதிகளிலும் காணப்படுகிறது.

செய்தித் தாள்களில் அவ்வப்போது முள்ளெலி வீட்டின் முற்றத்தில் காணப்பட்டதாக செய்திகள் அவ்வப்போது வெளி வருகின்றன. காரணம் யாதெனில் அவை வாழ்ந்த இடங்களில் வீட்டு மனைகள் கட்டப்பட்டுள்ளதும் மின்னொளியினால் அவை வழி மற்றும் திசைமாறி அங்கு வந்து விடுவதே காரணமாகும்.

வறண்ட சமவெளிப்பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் என்றாலும் திருநெல்வேலி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான முண்டந்துறையில் முள்ளெலியானது குறிப்பாக பான தீர்த்தம் செல்லும் வழியில் முட்களுடன் கூடிய தோலினைச் சமீபத்தில் காண நேர்ந்தது. இதனை சிறுத்தை ஒன்று கொன்று முள்ளெலியின் அடிப்பகுதியை தின்றுவிட்டு மேலே உள்ள முட்களடர்ந்த தோலுடன் கூடிய பகுதியை அப்படியே விட்டுச் சென்றுவிட்டது. இதனைப் படம் பிடித்தேன். இந்கிழ்வானது உயரமான மரங்களடர்ந்த வனப் பகுதிகளிலும் முள்ளெலி வாழ்கிறது என்பது இதன் மூலம் அறிய முடிகிறது. இதன் உடலின் அடிப்பகுதியில் முட்கள் இருப்பதில்லை,

இன்றைய நாட்களில் முள்ளெலிகள் நடமாடும் பகுதிகளை செய்திகள் வாயிலாக மட்டுமே அறிகிறோம்.

திருப்பூர் கொடுவாய் பகுதி, கணபதிபாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் குட்டையூர் பகுதி, அவிநாசி பகுதி, சென்னி மலை அருகே சின்னபிடாரியூர், திண்டுக்கல் மாவட்டம் குடப்பம் கிராமப்பகுதிகளிலுள்ள கல்லுப்பாறை, முத்தாலம்மன் பாறை மலைப் பகுதிகளிலும், மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகிலுள்ள இடையபட்டி, வெள்ளிமலை (இது குன்றாகும்). வெள்ளிமலை ஆண்டி முருகன் கோயிலைச் சுற்றி உள்ள அடர்ந்த உசில மரங்கள் நிறைந்த காடு தான் வெள்ளி மலை கோயில் காடு. இப்பகுதிகளில் இன்றும் முள்ளெலி  காணப்படுகிறது.

மனிதர்கள் வாழும் நடமாடும் பகுதிகளில் மக்கள் கண்டு பிடித்து காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் மூலம் விடப்பட்டதாக பல செய்திகள் அவ்வப்போது செய்தித்தாள்களில் வருகின்றன. இச்செய்திகள் இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

பிடிக்கப்பட்ட முள்ளெலிகளை அவை வாழும் சூழல் ஏற்றதாக இருப்பின் அப்பகுதிகளிலேயே விடுவது தான் நல்லது. இல்லையெனில் அருகிலுள்ள வனக்காட்டில் விடுவது ஏற்றதாகும். இல்லையெனில் முள்ளெலி இனம் அழிய நாமே காரணமாகி விடுவோம்.


தூ.இரா.ஆ.அருந்தவச்செல்வன் 

[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.