ரிச்சர்ட் பவர்ஸ்: மரங்களின் பொருட்டு வனத்தினைக் காணுதல்

தேசிய புத்தக விருது (National Book Award) மற்றும் மாக் ஆர்தர் “ஜீனியஸ்” நல்கையை (Mac Arthur “genius” grant) வென்றுள்ள எழுத்தாளர் ரிச்சர்ட் பவர்ஸின் (Richard Powers) சமீபத்திய நாவல் ‘தி ஓவர்ஸ்டோரி’ (The Overstory). மனிதர்களையும், பல்வேறு தேவைகளுக்காக காலங்காலமாக அவர்கள் சார்ந்திருக்கும் மரங்களையும் பிணைத்து ‘தி ஓவர்ஸ்டோரி’ எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சில சாதாரண மனிதர்களின் தினசரி மற்றும் ஆன்மீக வாழ்வில் வெவ்வேறு மரங்கள் வகிக்கிற முக்கியத்துவம் குறித்தும் பழமையான காடுகளை வணிகத்தின் பொருட்டு அழிக்கிற வழக்கத்தின் விளைவுகள் குறித்தும் இந்த நாவல் பேசுகிறது.

இல்லினாய்யில் (Illinois) பிறந்த பவர்ஸ், இலக்கியத்தில் பெயர்பெறும் முன்பு பாஸ்டனில் கணினி நிரலராகப் பணியாற்றியிருக்கிறார். தனது நாவலைப் பற்றியும், அதை எழுதிய மற்றும் அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த காலங்களில் மனிதன் மற்றும் இயற்கைக்கு இடையேயான உறவு குறித்த தனது கண்ணோட்டத்தில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

நாம் நேரடியாக ‘தி ஓவர்ஸ்டோரி’யில் இருந்தே தொடங்குவோம். மரங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட, வித்தியாசமான கதாப்பாத்திரங்களின் கலவையாக இந்த நாவல் தெரிகிறது. இந்த எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?

ஸ்டான்ஃபோர்டிலும் சிலிக்கன் பள்ளத்தாக்கிலும் கற்பித்துக் கொண்டிருந்த சமயத்தில் “மதமாற்றம் போன்ற ஒரு மனவெழுச்சி”யை (“religious conversion moment”) உணர்ந்தேன். அப்போது பாலோ ஆல்டோவிலிருக்கும் சாண்டா க்ரூஸ் மலைகளில் நடைப்பயணத்தில் ஈடுபட்டிருந்தேன். அங்கே உயரத்தில் இருக்கும் செம்மரக் காடுகளிடையே அதைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது ஒருநாள் காடழிப்பிலிருந்து தப்பிய பெரிய மரம் ஒன்றை எதிர்கொண்டேன். வெட்டப்பட்டு மீண்டும் வளர்கிற மரங்களாலான காட்டிற்கும் வன அழிப்பிலிருந்து தப்பித்த முதிய மரங்களைக் கொண்ட காட்டிற்கும் இடையேயான வேறுபாடு குறித்த சிந்தையை அது என்னுள் தோற்றுவித்தது.

30 அடி சுற்றளவும் 300 அடி உயரமும் கொண்ட அம்மரம் கிட்டத்தட்ட கிறித்தவத்தின் பழமையை உடையது. சான் ஃப்ரான்சிஸ்கோ (இருமுறை) மற்றும் பாலோ ஆல்டோவை நிர்மாணிப்பதற்காகவும், கண்டங்களுக்கு இடையேயான ரயில்பாதையை நிறைவுசெய்வதற்கு லேலாண்ட் ஸ்டான்ஃபோர்ட் கட்டிய ரயில் பாதைக்காகவும் வெட்டப்படுவதற்கு முன்பு அந்த மலை முழுவதும், நான் கண்டதைப் போன்ற பழமையும் பேருருவும் கொண்ட எண்ணற்ற மரங்களால் நிறைந்திருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது.

மனிதர்களுக்கும் மரங்களுக்குமிடையேயான உறவு குறித்த இக்கதையை புனைவிலக்கியத்தில் நான் கண்டதே இல்லை எனத் தோன்றியது. மனித சாகசங்களை வேறு கோணத்தில் பார்க்கும்படி அது என்னைத் தூண்டியது.

அந்தக் காட்டினைப் பற்றி இன்னும் சற்றுச் சொல்லுங்களேன். அது இருமுறை வெட்டப்பட்டதாகச் சொன்னீர்கள். இரண்டாம் முறை அல்லது மூன்றாம் முறை துளிர்த்து வளர்ந்த மரங்களுக்கும் அந்த ஒற்றை ராட்சத மரத்திற்குமான வேறுபாடு என்னவாக இருந்தது?

அன்று அடைந்த விழிப்பின் வீச்சின் ஒருபகுதிதான் அது. அந்தக் காட்டின் பழமை குறித்தும் மரபு குறித்தும் எந்தவொரு வரலாற்றுணர்வும் இன்றி செம்மரங்களின் அடிவாரத்தில் நடந்துகொண்டிருந்தேன். அந்தப் பிராந்தியத்திற்கு முதன்முறையாக வெள்ளையர்கள் சென்றபோது அது எப்படி இருந்திருக்கும் என்கிற சிந்தை எனக்கு ஒருபோதும் எழுந்ததேயில்லை. நூறாண்டுகளில் ஒரு செம்மரத்தால் எவ்வளவோ செய்ய முடியும், அதாவது, அது அதிவேகமாய் வளரக்கூடியது. அத்தோடு அது ஒரு வசீகரமான மரமும்கூட.

அதாவது அவை இயல்பாகவே மிகப்பெரியவை.

மிகச்சரி. இரண்டாம் முறை துளிர்த்து ஓங்கிய அந்த மரங்களினூடாக நடக்கும்போது ஒரு பிரம்மாண்டமான திறந்தவெளி தேவாலயத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை அடையாமல் இருக்கவே முடியாது. அதாவது அவை நேராக வளர்பவை, வியப்பிற்குரியவை, அவற்றின் பரந்த அடித்தண்டானது மிக நீண்ட உயரம்வரை பக்கவாட்டுக் கிளைகளற்று வளரக்கூடியது. அவற்றினூடாக பிரம்மிப்புடனும் பக்தியுடனும் நடந்து கொண்டிருக்கும்போது அவற்றால் என்னவெல்லாம் செய்துவிட முடியும் என்பது குறித்து நம்மால் ஊகிக்கக்கூட முடியாது என்கிற தெளிவை நாம் அடைகிற நொடி இருக்கிறதல்லவா! அதுதான் அதன் வலிமை.

மலையிலிருந்து திரும்பிவந்து வாசிக்கத் தொடங்கியபோதுதான் செம்மர வனங்களில் 98% வெட்டப்பட்டுவிட்டன என்பதைக் கண்டறிந்தேன். அமெரிக்காவில் உள்ள எல்லா வகையான பழமைக்காடுகளுக்கும் இது பொருந்தும் – 95 முதல் 98 சதவிகிதம். அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதன்பிறகு கிழக்கிற்கு வந்து பழமைக்காடுகளின் எச்சங்களைத் தேடி அலைந்தபோதுதான், நான் ஒருபோதுமே, வளமான பழுதுபடாத உயிரோட்டமான பழமைக்காடு எப்படி இருக்கும் என்பதை அங்கு கண்டதேயில்லை என்கிற மற்றொரு அதிர்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்தத் தேடலின் இறுதியில்தான் இப்போது வசிக்கிற ஸ்மோக்கி மௌண்டெய்னுக்கு வந்துசேர்ந்தேன்.

Image result for santa cruz mountains

இரண்டாம்/மூன்றாம் முறை துளிர்த்த மரங்களைக் கொண்ட வனங்களுக்கும் பழமை மர வனங்களுக்குமான வேறுபாடு கிழக்குக் காடுகளில் எப்படி இருக்கிறது?

மீண்டும் துளிர்த்த மரங்களைக் கடந்து வெட்டப்படாத மரங்களினூடாக மேல்நோக்கிச் செல்லும்போது எல்லாமும் நமக்குத் தெளிவாகத் தெரிந்துவிடுகின்றது. அந்த வேறுபாட்டை உணர்வதற்கு நீங்கள் மரங்கள் குறித்துக் கற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அதன் தோற்றம் வேறாக இருக்கிறது; அதன் வாசனை வேறாக இருக்கிறது; அதன் ஓசை வேறாக இருக்கிறது. மரங்களின் வகைகளும் சட்டென்று அதிகமாகி விடுவதை மிகத் தெளிவாகக் காண முடிகிறது. அங்கிருக்கும் உயிர் வலையானது கீழிருப்பதைவிட எத்தனைச் சிக்கலானது என்பதைக் கண்ணுறும்போது திகைப்பே மேலிடும்.

வெட்டப்படாத முதிய வனங்களில் இருக்கும் ஒருங்கிணைவையும் வகைகளையும் செழிப்பையும் உறவையும் ஆரோக்கியத்தையும் மீண்டும் அடைய எத்தனை காலமாகும் என்பது குறித்து பலரும் சிந்திப்பதை நாம் காண்கிறோம். ஆனால் அவை அனைத்துமே – 300 ஆண்டுகள் என்றோ 500 ஆண்டுகள் என்றோ 1000 ஆண்டுகள் என்றோ நாம் ஊகிப்பவை அனைத்துமே – வெறும் ஊகங்கள் மட்டும்தான். ஏனென்றால் அப்படி நிகழ்ந்ததை நாம் ஒருபோதும் கண்டதில்லை.

மரங்களின் பல்வேறு வகைகள் குறித்து நாவலில் மிக ஆழமாகப் பேசியுள்ளீர்கள். நாவல் வெளிவருவதற்கு முன்பாக குறிப்பிடத்தக்க அளவு நடைப்பயணத்தை நீங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அச்சமயத்தில் கவனித்தவற்றின் அடிப்படையில் எழுதினீர்களா அல்லது அதற்கென தனியாக வாசிக்க வேண்டியிருந்ததா?

55 வயதுவரை மரங்களைப் பற்றி எனக்கு எந்த அறிவும் இல்லை. மரங்களைப் பிடிக்கும். அழகியல் நோக்கில் அவற்றை மெச்சியிருக்கிறேன். சில ப்ரம்மாண்டமான மரங்களைக் குறித்து அவ்வப்போது வியந்திருக்கிறேன். ஆனால் என்னால் எந்த ஒரு மரத்தையும் அடையாளம் காண முடியாது. மேப்ல் மரத்திற்கும் சிகமோர் மரத்திற்கும் இடையிலான வேறுபாட்டையோ, சிகமோர் மரத்திற்கும் ட்யூலிப் பாப்லர் மரத்திற்கும் இடையிலான வேறுபாட்டையோ நான் நினைவில் வைத்திருந்ததில்லை. அவை எல்லாமும் அங்கே உயரத்திலும் நான் இங்கே கீழேயும் இருந்தோம்.

நான் இந்த நாவலை எழுதிய அந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் இவை அத்தனையும் ஆச்சரியப்படும்படியாக மாறிவிட்டன. நாவலினால் நிகழ்ந்தவற்றைத் தாண்டி என் வாழ்வை இது மிகப்பெரிய அளவில் செறிவூட்டியிருக்கிறது. நான் பார்க்கத் தவறுகிற விஷயங்களைக் குறித்த விழிப்புணர்வை இது ஏற்படுத்தியிருக்கிறது. போலவே, என் வாழ்க்கைக்கு மிக முக்கியமாகவும் மையமாகவும் இருக்கிற மனிதர்களல்லாத உயிரிகளை நான் கொண்டாட வேண்டியதன் அவசியத்தையும் அது உணர்த்தியிருக்கிறது.

அறிவியல்பூர்வமாக சரியாக இருக்க வேண்டியது எந்த அளவிற்கு அவசியம் என நினைக்கிறீர்கள்? ‘தி ஓவர்ஸ்டோரி’க்காக எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டீர்கள்?

மரங்கள் பற்றிய 120 புத்தக-நீள ஆய்வுகளையும் நிறைய பத்திரிகைக் கட்டுரைகளையும் செய்திக் கட்டுரைகளையும் இணைய வெளியீடுகளையும் வாசித்து முடித்திருந்தேன். இவை ஓர் ஆய்வுக்குப் போதுமானவைதான். என்றாலும் அது வெறும் மகிழ்ச்சிக்கானதாகவும் இருந்தது. அது ஒரு வேலையே இல்லை. புத்தகம் வெளிவந்து ஓராண்டாகிவிட்ட இப்போதும்கூட அதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

அறிவியல்பூர்வமாக சரியாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என நான் கருதினேன்? நமது பண்பாட்டிற்கு அறிவியலைச் சரியாகப் புரிந்துகொள்வதும் கைக்கொள்வதும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் எனச் சொல்வேன். ஏனென்றால் அப்படி ஒரு தொடர்ந்த நெருக்கமான கட்டுப்பாடான கண்காணிப்பினால்தான் இந்த அமைப்பின் மீது நாம் செலுத்தி வரும் ஆதிக்கம் பற்றியும் அதனால் நமக்கு ஏற்படவுள்ள விளைவுகள் பற்றியும் நம்மால் ஏதேனும் புரிந்துகொள்ள முடியும்.

பாஸ்டனில் கணினி நிரலராக நீங்கள் பணியாற்றியதாக உங்களது சுயவிவரக் குறிப்பில் கண்டேன். அது எப்போது, எத்தகையது?

1979-இல் பாஸ்டனுக்குச் சென்று 1984-இல் அங்கிருந்து வெளியேறிவிட்டேன், வெறும் நான்கரை அல்லது ஐந்து ஆண்டுகள்தான். இரண்டு வெவ்வேறு இடங்களில் வசித்தேன். ஆரம்பத்தில் தரவுச் செயலாக்கப் பணிக்காக லெவிஸ் வார்ஃப்-இல் பணியாற்றிய சமயத்தில் சோமர்வில்-கேம்ப்ரிட்ஜ் வரிசையில் வசித்தேன். பின்பு, நுண்கலை அருங்காட்சியகத்திற்குப் பின்னுள்ள ஃபென்ஸ்-இல் வசித்தேன். என் முதல் புத்தகத்தின் கதை அந்த இடத்தில்தான் நிகழ்கிறது. என்னைப்போலவே தரவுச் செயலாக்கப் பணியில் இருக்கிற ஒருவர்தான் மையப் பாத்திரமும்கூட. பிரம்மிக்கத்தக்க வகையில் நான் உருவேற்றம் கண்ட ஆண்டுகள் அவை.

அந்த நகரம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. ஓர் இளைஞனாக, தொழில்நுட்பத்தையும் அறிவியலையும் கல்வியையும் நோக்கி அதிவேகமாக முடுக்கிவிடப்பட்டிருந்த அந்த நகரத்தில் வசிப்பது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. எனக்குள்ளிருந்த திறமைகளை உணர்ந்து வழக்கமான பாதையிலிருந்து மாறி எழுத்தாளராக வாழ்வதென்கிற புதிய முயற்சியை நோக்கிய முடிவை எடுக்க முடிந்த இடமாக அது இருந்தது குறித்து உற்சாகமாக இருந்தது.

இவை எல்லாமே எனக்கு பாஸ்டனில்தான் நிகழ்ந்தன. அங்கே வாழ்ந்தது என் வாழ்வின் மிகக்குறைந்த காலம்தான் என்றபோதும், ஆழ்மனதில் அது ஒரு முக்கியமான, குறிப்பிடத்தக்க இடமாகப் பதிந்துள்ளது. நிஜத்தில் எனது வாழ்வு துவங்கியது அங்கேதான்.

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையேயான தொடர்பு தசாப்தங்களுக்கும் சதாப்தங்களுக்கும் பிறகு வெகு தாமதமாகவே நம் கவனத்திற்கு வந்துள்ளதாக உங்களது புத்தகம் சுட்டுகிறது. அது என் கவனத்தை ஈர்த்தது. நம் காலத்திய செயல்பாடுகள் இந்தக் கோளை எப்படிப் பாதிக்கின்றன என்பது குறித்த நம் அறியாமையே தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்துக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பிறகுதான் இத்தகைய தெளிவை எட்ட முடிந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மிகத் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்ட ஒரு காலத்தில் இருக்கிறோம் நாம். இப்போது என்ன நினைக்கிறீர்கள்? புவியின் உயிர்க்கோளத்தில் நமது நடவடிக்கைகளால் ஏற்படுகிற விளைவுகளைக் கவனிப்பதிலும் புரிந்துகொள்வதிலும் நாம் முன்னேறியிருக்கிறோமா?

காலத்தை உணர்வதிலும் மதிப்பிடுவதிலும் கருக்கொள்வதிலும் வெகுவாக நாம் மோசமாகவே இருக்கிறோம். அதிவேகச் செயல்பாடுகளை மட்டுமே கவனிக்கும்படி நமது மூளை தகவமைந்துவிட்டது. பின்னணியில் மெதுவாக நிகழ்கிற மாபெரும் மாற்றங்கள் நம் கண்ணில் படுவதேயில்லை. காலத்தைத் தோற்கடிப்பதற்காக நாம் உருவாக்கியிருக்கிற தொழில்நுட்பங்களெல்லாம் – எழுதுதல், பதிவு செய்தல், புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் – (சாக்ரடீஸ் அஞ்சியது போல) நம் நினைவாற்றலைச் சேதப்படுத்தி, காலங்காலமாய் நுணுகிக்கொண்டே வருகிற போலி நிகழ்காலத்தின் (Specious Present) ஆழத்திற்குள் நம்மை மூழ்கடித்துவிட முடியும். தாவரங்களது நினைவாற்றல் மற்றும் கால உணர்வு குறித்து நமக்கு எதுவுமே தெரியாது. மனிதன் எழுத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்கிவிட்ட ப்ரிஸ்ல் கோன் பைன் மரங்கள் கலிஃபோர்னியாவின் வொய்ட் மௌண்டெய்ன்ஸ்ல் இப்போதும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதுகூட ஒருவருக்கு கடினமாக இருக்கும்.

முரணாக, நூறுகோடி சமன்பாடுகளை நொடியில் செய்து முடிக்கவல்ல இயந்திரங்களை உருவாக்க வேண்டுமென்கிற நமது ஆர்வமானது, முதன்முறையாக, மனிதனால் உணர முடிகிற காலத்திற்கு வெகு அப்பால் உள்ள கால வேகத்தினடிப்படையில் விஷயங்களைச் செய்து பார்ப்பதற்கும், சுற்றுப்புறத்தில் மரங்களின் வேகத்தில் நிகழ்கிற மாற்றங்களைச் சிந்தித்து பொருத்திப் பார்க்கவும் நம்மை ஏதுவாக்கியிருக்கிறது. அதனால்தான் ‘தி ஓவர்ஸ்டோரி’யில் சிலிக்கன் பள்ளத்தாக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. மனித எதிர்காலத்திற்கு ஏதேனும் நம்பிக்கை இருக்கிறதெனில் அது, நமது ‘முன்னோர்களால்’ ஆதிக்கம் செலுத்த முடிகிற காலத்தின் பிரம்மாண்டம் குறித்து நமக்குக் கற்பிக்கவல்ல ‘சந்ததி’களின் கையில்தான் இருக்கிறது.

கூட்டு வெகுசனப் படிமங்களில் (collective popular imagination) மரங்கள் பூதாகரமாய் விரிகின்றன. கற்பனைக் கதைகளில் அவை புலனுணர்வு கொண்டவையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் போராளிகள் ‘மரங்களை அணைப்பவர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். நிறைய புத்தகங்களிலும் படங்களிலும் பாடல்களிலும், குடும்ப வேர்களையும் கால நகர்வையும் சுட்டும் குறியீடாக மரங்களை கலைஞர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த அளவிற்கு, மரங்களோடு நம்மைப் பிணைத்துக் கொண்டே இருப்பது எது?

மரங்களின் அடித்தண்டிலிருந்து புதிதாய் கிளைகள் தோன்றும் விதமானது, பரிணாமம் பல்வேறு சூழல்களில் திரும்பத் திரும்ப சுயமாக நிகழ்த்துகிற, பிரம்மித்தக்க வெற்றிகரமான அம்சமாய் இருக்கிறது. இந்தக் கோளிலேயே மிகப்பெரியதும் நீண்ட ஆயுள் கொண்டதும் அதிக வெற்றிகரமானதும் மிக நெருக்கமான சமூக அமைப்புடையதுமான உயிரிகளில் மரங்களுக்கும் இடமுண்டு. ஒரே சமயத்தில் அவை ஆகாயத்திலும் பூமியிலும் நிலத்தடியிலும் வசிக்கின்றன. வளிமண்டலத்தை அவையே உருவாக்குகின்றன, நிலத்தின் நீரை வடிகட்டுகின்றன, தட்பவெப்பத்தைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. (புதை படிவ எரிப்பினை அடுத்து, காடழிப்புதான் பசுங்குடில் வாயு விளைவுக்கான இரண்டாவது காரணமாய் இருக்கிறது.)

புத்தரது பிரபலமான வாக்கின்படி, எல்லையற்ற அன்பும் கருணையும் கொண்டு, எவ்வித எதிர்பார்ப்புமின்றி, ஏராளமான உணவினையும் வாழ்விடத்தையும் பாதுகாப்பையும் நிழலையும் எல்லா வகையான வளங்களையும் தன்னைத் தேடி வருகிறவர்களுக்கு வாரித் தருகிற அசாதாரணமான உயிர்க்கோளமாக வனங்கள் இருக்கின்றன. தன்னை வெட்டுவதற்காக வருகிற மனிதர்களுக்கும்கூட அவை இதனைத்தையும் நல்குகின்றன. பூமியிலுள்ள பத்துலட்சம் வகைகளுக்கும் மேற்பட்ட மரங்கள் எல்லையற்ற புதுமையையும் வகைகளையும் கொண்டுள்ளன. கண்டு தீர்க்க முடியாத அழகினையும் உடையவை. அவை ஒன்றுடன் ஒன்று உரையாடுகின்றன. ஒன்று மற்றொன்றிற்கு வளம் சேர்க்கின்றன. கடந்தவற்றை நினைவில் வைத்திருக்கின்றன. எதிர்காலத்தைக் கணிக்கின்றன. எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்?

காலநிலை மாற்றங்களுக்கும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகளுக்கும் நடுவில் மனித இனத்தின் எதிர்காலமானது எப்படி இருக்கும் என்பது குறித்த விஞ்ஞானிகளின் பல்வேறு கணிப்புகளின் நடுவில், இந்த நாவலை எழுத அமர்ந்தபோது நீங்கள் என்ன மாதிரியான மனநிலையில் இருந்தீர்கள்? நம்பிக்கையுடன் அணுகினீர்களா அல்லது அச்சத்துடனா?

க்ராம்சியின் கொள்கை எனக்கு விருப்பமானது: அறிவு எதிர்மறைச் சிந்தனையுடனும் ஆன்மா நேர்மறைச் சிந்தனையுடனும் சூழலை அணுகுவது. ஆனால், நம்பிக்கை பற்றியும் ஏமாற்றம் பற்றியும் பேசுகிறபோது எழுகிற முக்கியக் கேள்வியானது: எதனை நம்புவது மற்றும் எதற்காக அஞ்சுவது? காலநிலையால் ஏற்பட்ட எண்ணற்ற பேரழிவுகளையும், பல்வேறு சூழல்களில் நிகழ்ந்த இன அழிப்புகளையும் மரங்கள் தாங்கியிருக்கின்றன, தற்போது மனிதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹாலோசீன் (Holocene) அழிப்பையும் அது நிச்சயமாய்த் தாங்கும் என பந்தயம்கூடக் கட்டலாம். மரங்களின் எதிர்காலம் குறித்து எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

அதேபோல, மீளவே முடியாதபடிக்கு இப்போது நாம் மிகத்தீவிரமாகக் கைக்கொண்டிருக்கும் தனிநபர்-பொருள்முதல் கொள்கையானது இன்று நீங்கள் பயிரிடப் போகிற ஒரு சாதாரண ஓக் மரத்தின் ஆயுள் அளவிற்குக் கூட நீடிக்காது என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அது எனக்கு வருத்தத்தை அளிக்கவில்லை. ஏதோ ஒரு வகையில், மனிதர்களாகிய நாம் வேறொன்றாக மாறிக் கொண்டிருக்கிறோம். அந்த ஓவிட் உருமாற்றத்தை நாம் எவ்வளவு நளினமாக அல்லது எவ்வளவு சேதங்களுடன் அடையப்போகிறோம் என்பதே கேள்வி. தோரோ (Thoreau) சொன்னது போல, ஒன்று இயற்கையின் கையில் நம்மை ஒப்புக் கொடுப்பதற்கு நாம் கற்றுக் கொள்வோம், அல்லது இங்கிருந்து காணாமல் போய்விடுவோம். இவற்றில் எது நிகழும் என எப்படிக் கணக்கிடுவதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்போது நாம் இருக்கிற இந்தப் பிற்பகல், அது சேதாரங்களின் பாதையாக இருக்கும் என்றுதான் சொல்கிறது.

தி ஓவர்ஸ்டோரி’ வனம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே சிறப்பாக ஏற்படுத்திவருகிறது. அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இயற்கையின் வேறு ஏதேனும் அம்சத்தையும் இதே போல் கையிலெடுக்க திட்டமிட்டுள்ளீர்களா?

அழிந்துகொண்டிருக்கும் பழமைக் காடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதைவிட, மனிதர்களல்லாத உயிர்கள் குறித்து மனிதர்களிடம் ஏற்பட வேண்டிய சிந்தனா மாற்றத்திற்கான தேவை பற்றிய எண்ணத்தை தோற்றுவிப்பதையே ‘தி ஓவர்ஸ்டோரி’யிடமிருந்து எதிர்பார்க்கிறேன். உண்மையில், மனிதர்களாகிய நாம் சுயசார்புடையவர்கள் என்று எண்ணுவதும் இயற்கையின் விதிகளுக்கு உட்படாதவர்கள் என்கிற நம்பிக்கையோடு வாழ்முறையை அமைத்துக் கொள்வதும் எத்தனை பெரும்பிழையானது என்பதையே என்னுடைய நாவல் பேசுகிறது.

இந்தக் கோள் அனுமதிக்கிற வாழ்க்கைச் சுழற்சிகளுக்குள் மட்டுமே நம்மால் வாழ முடியும் என்பதே இப்புத்தகத்தின் மையக்கருத்து. நாம் கண்டடைந்திருக்கிற தொழில்நுட்பங்கள், காலத்தையும் பொருளையும் வளைப்பதற்கான நிறைய வழிகளையும் வலிமையையும் தந்திருக்கின்ற போதிலும், நம் பொறுப்புகளிலிருந்து அவை விலக்களித்துவிடவில்லை. போலவே, பிற உயிர்களைச் சார்ந்திருப்பதற்கான அவசியமேயில்லை என்பது போல் நாம் நடிப்பதற்கும் அது அனுமதி நல்கிவிடவில்லை.

நம் எல்லாரையும் போலவே, இயற்கையை வென்றுவிட்டதாக எண்ணி, பின் அந்த நம்பிக்கை கேள்விக்குள்ளாகி இறுதியில் மரங்களின்றி நம்மால் வாழ இயலாது என்று உணர்கிற ஒரு மனிதனைப் பற்றிய கதை இது. ஆனால், மாறாக, மரங்களால் மனிதர்களின்றி வெகு சிறப்பாக தொடர்ந்து ஜீவித்திட முடியும்.


தி ஹார்வர்டு ஹெஸெட், தி சிகாகோ ரெவ்யூ ஆஃப் புக்ஸ் ஆகிய தளங்களில் வெளியான ரிச்சர்ட் பவர்ஸின் நேர்காணல்களில் இருந்து இந்த மொழிபெயர்ப்புக்காகக் கேள்விகள் தொகுக்கப்பட்டன.

தமிழில் இல. சுபத்ரா – முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்து, பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் சுபத்ரா, கணவர் மற்றும் குழந்தைகளுடன், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வசித்துவருகிறார். புனைவு மற்றும் அபுனைவு சார்ந்த மொழிபெயர்ப்புகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.