ரோமுலஸ் விட்டேகர் என்னும் முறிமருந்து

“காடு தொல்குடிகளோடு பேசும். தொல்குடிகள் காட்டோடு பேசுவார்கள். ஓடை நீரும், ஊற்று நீரும், ஆற்று நீரும் இவர்களோடு பேசும். அவை மட்டுமா? பூச்சிகள், பறவைகள், விலங்குகளும் பேசும். இன்றுவரை நம்மிடையே புழங்கிக் கொண்டிருக்கும் ஈசாப் கதைகளில் எப்படி எல்லா உயிரினங்களும் பேசுகின்றன? அவற்றை எப்படி குழந்தைகள் நம்புகின்றன? நாம் குழந்தைகளாக இருந்த போது அவற்றை நம்பினோமே? இப்போது ஏன் நம்புவதில்லை? வளர்ந்து விட்டோம். அறிவில் வளர்ந்து விட்டோம்.”

— நக்கீரனின் ‘காடோடி’ நாவலில்.

நம் அறியாமையின் பட்டியலை நீண்டுகொண்டிருக்கச் செய்கிறது வாசிப்பு. அறியாமையே ஆர்வத்தை மேலிடச்செய்து புது உலகத்தின் வாழ்வியலை வியப்பின் வழியலோடு கரைந்துபோகச் செய்கிறது. பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகரின் வாழ்க்கைப் பயணம் நூலை வாசிக்க, அதை மேலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஜாய் விட்டேகர் எழுதிய ’ஸ்னேக் மேன்’ என்ற ஆங்கில மூல நூலைத் தமிழாக்கம் செய்த தோழர் கமலாலயனின் மொழி, சிக்கலில்லாது சுவாரசியமான வாசிப்பை அனுபவிக்கச் செய்திடுகிறது. இம்மொழிபெயர்ப்பு அவருக்கு நிறைவைத் தந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.

ரோமுலஸ் விட்டேகரை மனம் நாயகனாக ஏற்றுக் கொண்டாடுகிறது. சாகசங்களும், சவால்களும் மிக்க வாழ்வை வாழ்ந்ததோடு மட்டுமல்லாது, நமக்குப் பெரும் கொடையைத் தந்துள்ளது அவரது பயணம். நமக்கு அது புதுக்கற்றலைத் தந்தபடியே இருக்கிறது.

குழந்தைகளை ஆச்சரியப்படுத்த, அதிசயித்து மகிழ்வோடு இருக்கச் செய்யும் பாம்புப்பண்ணை, முதலைப்பண்ணை போன்ற அமைப்புகளை நிறுவியவர் ரோமுலஸ் விட்டேகர். நம்முடன் இப்படியான உயிரிகளும் வாழ்ந்து கொண்டிருந்தன. நம் பேராசையால் இவற்றையெல்லாம் அழித்து விட்டோம் என குழந்தைகளிடம் பாவமன்னிப்புக் கேட்க, இப்பண்ணைகளில் இருக்கும் உயிரிகள் மட்டுமே மிச்சமிருக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனும் உண்மை கசக்கத்தான் செய்யும்.

நம்மைப் பயங்கொள்ளச் செய்ய உருவம் தேவையே இல்லை. பாம்பு எனும் ஒற்றைச்சொல் போதும். அந்தப் பாம்புகளின் வகைமைகள், வாழ்வு குறித்து காட்சிப்படுத்தும் இந்த நூலில், எதையும் அறிந்து கொள்ளாது அறிவியல் பார்வையற்று ஊடகங்கள் நமக்குள் ஊற்றி வைத்திருக்கும் மகாமட்டமான விஷங்களை நம்மிலிருந்து முறிவு கொள்ளச் செய்திடுகிறார் ரோமுலஸ்.

இவ்வுலகம் நமக்கு மட்டும்தான் எனும் திமிர்த்தனம் எல்லாவற்றையும் அழிக்கச்செய்கிறது. காடுகள், மலைகள், குளம்,குட்டிகளோடு பாம்புகள், முதலைகள், ஆமைகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. இயற்கை குறித்த ரசனையற்ற, கற்றலற்ற சமூகமாக உள்ளது. இயற்கையை, சக உயிரிகளை நேசிக்கக்கற்றுத் தராத பாடத்திட்டமும், அரசியலும் அவலம். நடந்து முடிந்துள்ள தேர்தலில் கூட, எந்தக்கட்சியிடமும் இது குறித்த அறிக்கை இல்லாதது துயரமே. மிச்சமிருக்கும் உயிரிகளையும், இயற்கையையும் நேசிப்பதற்கு வளரும் சந்ததியினருக்குக் கற்றுக்கொடுக்கும் முயற்சியை முன்னெடுக்கத்  தூண்டுகிறது இந்த நூல். அல்லது அவர்களிடம் இயல்பாகவே உள்ள ஆர்வத்தைப் பொசுக்கிடாமல் பாதுகாக்கச் செய்யும்.

காட்டுவாசிகள் என ஏளனமாகப் பார்க்கப்படுபவர்களே இயற்கையைக் காப்பாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கும். “நான்கு வகையான மிப்பெரிய நச்சுப் பாம்புகளை இருளர் கூட்டுறவுச்சங்கம் என்ற ஓர் அமைப்பின் உறுப்பினர்கள் பிடித்து வருவார்கள். பின், அவற்றிலிருந்து பலமுறை நஞ்சு சேகரிக்கப்படும். விஷமுறிவு மருந்து தயாரிக்க இது பயன்படுத்தப்படும். அவ்வாறு விஷம் எடுக்கப்பட்டபின், அவற்றை மீண்டும் காடுகளிலேயே விடுவித்து விடுவார்கள்.” எதைக்கண்டாலும் எதிரியாகப் பாவித்து அடித்துக் கொல்லும் மனப்போக்குக் கொண்ட நாம் யார் என்பது குறித்த கேள்வி எழத்தான் செய்கிறது. இயற்கை எப்பொழுதும் தன்னைத்தானே சமனிலைப்படுத்திக் கொள்ளும். ராஜநாகம் குறித்த இவரின் கூற்று உண்மையை உணர்த்துகிறது. ராஜநாகம் மிகவும் அறிவான பாம்பு. கேரளத்திலும், கர்நாடகத்திலும் இவற்றின் எண்ணிக்கை அதிகம். ராஜ நாகங்கள், பாம்புகளை மட்டுமே உணவாகக் கொள்ளும். வேறு எதையும் சாப்பிடாது. ஆபத்தான பாம்புகளின் எண்ணிக்கையை அவை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. நமக்கு ராஜநாகம் நண்பன்.

முதலையை பள்ளிச்சுற்றுலாவின் போது முதன்முறையாகக் கண்டது. வசீகரிக்கும் உருவம் கொண்ட விலங்காக இல்லாததால், பெரிதாக அதன் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. அதன் வாழ்வு குறித்த விட்டேகரின் விவரிப்பை வாசிக்க முதலைகளின் மீது பிரியம் சுரக்கிறது. சிந்தனை முழுக்க பெரும் சிக்கோடுதான் வாழ்கிறோம் என்பதை அறியச் செய்கிறது இந்த நூல்.

“ஓர் ஆற்றிலிருந்த முதலையால் முட்டைகளை வெளியேற்ற முடியவில்லை. சிரமப்பட்ட அது, தன் இணை முதலையிடம் வேறு யாரையாவது உதவிக்கு அழைத்து வருமாறு கோரியது. அந்த ஆற்றில் வேறு முதலைகள் எவையும் இல்லாததால், கரைக்கு வந்த ஆண்முதலை அங்கிருந்த முருட் பெண் ஒருத்தியிடம் உதவி கேட்டது. முதலில் அவள் தயங்கினாள். பின், அந்த முதலையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, முதலையின் வாலைப்பிடித்தவாறு சென்று முட்டைகளை வெளியேற்ற உதவினாள். இதனால் முதலைகள் முருட் இன மக்களைத் தாக்குவதே இல்லை“ என்ற கதையை நக்கீரனின் ‘காடோடி’ நாவலில் வாசித்தது நினைவிற்கு வந்தது. இது, எத்தகைய கொடிய விலங்குகளிடமும் நேசிப்பைச் செலுத்த முடியுமென எனக்குத் தெளிவுபடுத்தியது. மேலிருப்பது கதை என்றால், கீழ் வரும் உண்மை நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

“தாய் முதலை செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் அந்தப் பெரிய, பொதுவாக எந்தப் பொறுப்பையும் ஏற்க விரும்பாத ஆண்முதலை தானே முன்வந்து செய்தது. புதிதாகப் பொரித்த குஞ்சுகளுள் ஒன்று முதலை வளையினருகே ஒரு வெற்றிடத்தில் விழுந்து விட்டது. அந்த ஆண் முதலை, தன் வாயில் அதை ஏந்திச்சென்று, தண்ணீருக்குள் மெல்லக் கீழே நழுவி விழுமாறு செய்தது. முட்டை வளையைத் தோண்டுவதில் ஓர் ஆண்முதலை பங்கேற்பதை அன்றுதான் பார்க்க முடிந்தது” என்றிருந்ததை வாசித்ததும் முதலைகள் நெருக்கம் கொள்ளத் தொடங்கின. எல்லா உயிரிகளிலுமே ஆண் தடித்தனத்துடன்தான் வாழும் போலும்.

நாம் செய்வது தவறு என்பதை ஒப்புக்கொண்டு காட்டுயிர்களை நேசிக்க, குழந்தைகளின் மனநிலை நமக்குத்தேவையாக இருக்கிறது. ஏழுகடல், ஏழு மலைகள் கடந்து ஒரு சிப்பியுள் அடைக்கப்பட்டிருக்கும் உயிர் அல்ல குழந்தைகளின் மனப்போக்கு. அது நம்முள் எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் அதைக் கண்டு கொள்ள மறுக்கிறோம் என்பதை உணரச்செய்து, தோழமையுணர்வோடு எல்லா உயிர்களையும் அணுகச் செய்கிறது ரோமுலஸ் விட்டேகரின் வாழ்க்கைப்பயணம்.

ரோமுலஸ் விட்டேகர் என்னும் முறிமருந்து

வெளியீடு: வானதி பதிப்பகம்

விலை: ரூ.500


ந.பெரியசாமி

ஒசூரில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனமொன்றில் வேலை. வெளிவந்த கவிதை தொகுப்புகள் நதிச்சிறை, மதுவாகினி, தோட்டாக்கள் பாயும் வெளி, குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம்.
மொழியின் நிழல் எனும் கட்டுரை தொகுப்பும் வந்துள்ளது.

1 COMMENT

  1. வாசிக்க வேண்டிய நூல் என்று தோன்றுகிறது. விமர்சனம் மிகவும் நன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.