ஜேனும் கைத்தடியும்
அம்மாவினால் அவருடைய கைத்தடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரிடம் கைத்தடி ஒன்று இருந்தது, ஆனால் அவருடைய விசேஷமான கைத்தடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய அந்த விசேஷமான கைத்தடியின் கைப்பிடியில் நாய் தலை இருந்தது. அவருக்கு `ஜேனிடம் தன்னுடைய கைத்தடி இருக்கிறது’ என நினைவுக்கு வந்தது. ஜேன் ஒருமுறை வந்திருந்தார். அப்போது அவர் திரும்பிச் செல்லும்போது கைத்தடி வேண்டுமென்று கேட்டார். இது நடந்து இரண்டு வருடங்களிருக்கும். அம்மா ஜேனை அழைத்தார். ஜேன் வீட்டுக்கு வந்தபோது அம்மா அவருடைய படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்தார். அதனால் அவர் கைத்தடியைப் பார்க்கவில்லை. ஜேனும் அவருடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார். அம்மா படுக்கையிலிருந்து எழுந்து வந்து கைத்தடியைப் பார்த்த போது அது அவருடையது போல் இல்லாமல் சாதாரண கைத்தடியாக இருந்தது. அவர் மீண்டும் ஜேனை அழைத்து, “நீ கொடுத்தது நான் கொடுத்த அதே கைத்தடியல்ல” எனக் கூறினார். ஜேனுக்கு சோர்வாக இருந்ததால் அவரால் பதில் பேச முடியவில்லை. படுத்துக் கொள்வதற்காக படுக்கைக்குச் சென்றார். அடுத்த நாள் அவர் கைத்தடியுடன் வந்தார். அம்மா படுக்கையிலிருந்து எழுந்து வந்து அந்தக் கைத்தடியைப் பார்த்தார். அது சரியான கைத்தடியாக இருந்தது. ப்ரெளன் மற்றும் வெள்ளை நிறங்களில் நாயின் தலை அதில் இருந்தது. ஜேன் இன்னொரு சாதாரண கைத்தடியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். ஜேன் போன பிறகு அம்மா, தொலைபேசியில் அழைத்து, “ஜேன், ஏன் கைத்தடியைத் திரும்பக் கொண்டுவரவில்லை? ஜேன் ஏன் தவறான கைத்தடியைக் கொண்டுவந்தாய்?” என புகார் செய்து கொண்டிருந்தார். அம்மா சோர்வடைந்திருந்தார். ஓ! ஜேனும் கைத்தடியும் விவகாரத்தில் அம்மா மிகவும் சோர்வாகிப் போயிருந்தார்.
உங்கள் உடலை அறிந்து கொள்வது
உங்களுடைய கண்விழிகள் இயங்கினால் நீங்கள் சிந்திக்கிறீர்கள் அல்லது சிந்திப்பதற்குத் தொடங்குகிறீர்கள் என்று அர்த்தம். இந்தக் குறிப்பிட்ட தருணத்தில் நீங்கள் சிந்திக்க விரும்பவில்லையெனில், உங்களுடைய கண்விழியை அசையாமல் வைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.
மறதி
பூனையானது உள்ளே வரவேண்டுமென்று ஜன்னலைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது. பூனையோடு வாழ்ந்து வருவது பற்றியும் அதனுடைய எளிமையான கோரிக்கையான உள்ளே வர விரும்புவது பற்றியும் அது எந்த அளவுக்கு நல்லது என்பது பற்றியும் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள், பூனையை எப்படி உள்ளே அனுமதிப்பது என்பது பற்றி தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் நீங்கள் பூனையை உள்ளே அனுமதிக்க மறந்து விட்டீர்கள். அது இன்னும் ஜன்னலைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் பூனையை உள்ளே அனுமதிக்கவில்லை, பூனைக்கான தேவை குறித்து நினைக்கும்போது அது எவ்வளவு விசித்திரமானது என நினைப்பதோடு சிறிய தேவைகளைக் கொண்ட பூனையோடு வாழ்வது பற்றியும் நினைத்துக் கொண்டு பூனையை உள்ளே விடாததால் அது இன்னும் ஜன்னலைப் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றியும் அது எவ்வளவு விசித்திரமானது என்பது பற்றியும் நினைத்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் பூனையை உள்ளே அனுமதிக்கிறீர்கள் என்று தெரியாமலே அதை உள்ளே அனுமதிக்கிறீர்கள். இப்போது அந்தப் பூனை மேடையின் மீதேறி சாப்பாடு வேண்டுமென சத்தம் போடுகிறது. பூனை சாப்பாட்டுக்கு சத்தம் போடுகிறது என்பதைப் பார்க்கும் நீங்கள் அதற்கு உணவு கொடுக்கவில்லை ஏனெனில் தெரியமலே பூனையை உள்ளே விட்டது எவ்வளவு விசித்திரமானது என்பது பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதன்பின் பூனை சாப்பாட்டுக்கு சத்தம் போட்டாலும் நீங்கள் அதற்கு எதுவும் கொடுக்கவில்லை என்பதோடு அதனுடைய சத்தத்தைக் கேட்காதது எவ்வளவு விசித்திரமானது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டே பூனைக்கு சாப்பிடக் கொடுப்பது தெரியாமலே சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தனிமை
யாரும் என்னை அழைக்கவில்லை. நான் பதிலளிக்கும் கருவியைப் `செக்’ செய்யவில்லை. ஏனெனில் எல்லா நேரமும் இங்குதானே நான் இருந்து கொண்டிருக்கிறேன். நான் வெளியே போயிருந்தால், போயிருக்கும் போது யாராவது அழைத்திருக்கக்கூடும். அப்படியிருந்தால் அதை பதிலளிக்கும் கருவியில் நான் `செக்’ செய்து பார்க்க முடியும்.
திருமதி டி-யும் அவரது பணிப்பெண்களும்
அடையாளம் காணும் பண்புகளுடனான ஆரம்பகால பணிப்பெண்கள் சிலரின் பெயர்கள்
கோரா, எல்லோரையும் மிஸ் செய்பவர் நெலி பிங்கோ: எங்களின் அன்புக்குரியவள், ஆனால் சானடோரியத்தில் மறைந்து விட்டாள்.
அன்னா, சிடுசிடுப்பவர்
வர்ஜீனியா யார்க்: மந்தமானவர்
பேர்டெல் முர்ரே: பழமையானவர், நட்பான தெற்கத்திய இனிமையர்
லில்லியன் சாவேஜ்; குடிகாரர்களால் தொந்தரவு செய்யப்படாதவர்
கெர்ட்ரூட் ஹாக்காடே: இனிமையாவர் ஆனால் நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடிய உடல்நலக் குறைவு ஏற்பட்டு விடும் என அச்சம் கொண்டவர்
ஆன் கார்பெர்ரி: வலுவற்ற, வயதான காது கேளாதவர்.
நீட்சே
ஓ, அப்பா. உங்களை நான் கேலி செய்ததற்கு வருந்துகிறேன். இப்போது நான் கூட நீட்சே (Nietszche) பெயரைத் தவறாக உச்சரிக்கிறேன்.
முழுமைக்கான வழி
நீங்கள் நல்கை பெறுவதற்குத் தகுதியற்றவர் இல்லை என்பதை விட ஒவ்வொரு வருடமும் உங்களுடைய விண்ணப்பம் போதிய அளவுக்கு நன்றாக இருப்பதில்லை. கடந்த வருடம் உங்களுடைய விண்ணப்பம் பூரணத்துவம் உள்ளதாக இருந்திருந்தால் நீங்கள் நல்கை பெற்றிருப்பீர்கள். நீங்கள் நல்கை பெறுவதற்குத் தகுதியற்றவர் இல்லை என்பதை விட முதலில் உங்களுடைய பொறுமையை சோதிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பொறுமையாக இருக்கிறீர்கள். ஆனால் போதுமான அளவுக்கு இல்லை. நல்கையையே மறக்கும் அளவுக்கு பொறுமையைப் பற்றி நன்கு தெரிந்த கொண்டதற்குப் பிறகு நீங்கள் நல்கையைப் பெறுவீர்கள்.
ஹெலனும் வீயும்: ஆரோக்கியம் மற்றும் உயிர்சக்தி பற்றிய ஆய்வு
அறிமுகம்
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஆய்வு எண்பதிலும் தொண்ணூறுகளிலும் வாழ்ந்து வரும் இரண்டு மூதாட்டிகளைப் பற்றியதாகும். இது அவர்களின் நினைவுகளைச் சார்ந்திருப்பதால் முழுமையற்ற விபரமாக இருந்தாலும் கூட சாத்தியமான அளவுக்கு இது விபரத்தைக் கொடுக்கும். இந்த நெருக்கமான விளக்கத்தின் வாயிலாக ஆய்வுக்கு உட்பட்டவர்களின் நடத்தைகளிலும், வாழ்க்கை வரலாற்று அம்சங்களிலும் எது இந்த அளவுக்கு ஒரு முழுமையான உடல் ரீதியான, மன ரீதியான, உணர்வு ரீதியான ஆன்மிக ஆரோக்கியத்தைக் கொடுத்தது என்று சில கருத்துகள் உருவாகலாம் என நாங்கள் நம்புகிறோம். அவர்கள் மறந்து விடும்போது சில நேரங்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் கரிசனையுடன் நடந்து கொள்வார்கள். ஆனால் மரணத்திலும் கூட சகோதரிகளின் முகங்கள் நீண்டகால பழக்கத்தின் காரணமாக வேதனை நிறைந்ததாக இருந்தது.
அம்மா
பெண்ணொருத்தி கதை எழுதியிருந்தாள். “நீ நாவல் எழுதியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!” என்று அவளுடைய அம்மா கூறினார். அவள் பொம்மைவீடு கட்டியிருந்தாள். “இது ஒரு உண்மையான வீடாக இருந்திருந்தால் எப்படியிருக்கும்!” என்றாள் அம்மா. அவள் அவளுடைய அப்பாவுக்காக ஒரு சிறு தலையணை செய்திருந்தாள். “இது மெல்லிய மெத்தையாக இருந்தால் நடைமுறைக்குரியதாக இருந்திருக்குமே!” என்றாள் அம்மா. அவள் தோட்டத்தில் ஒரு சிறிய குழி வெட்டியிருந்தாள். “இது பெரிய குழியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!” என்றாள் அம்மா. அவள் பெரிய குழியொன்றை வெட்டி அதற்குள் தூங்குவதற்குச் சென்றாள். “எப்போதும் இதிலேயே நீ தூங்கினாள் நன்றாக இருக்குமே!” என்றாள் அம்மா.
பாதுகாப்பான காதல்
அவள் தன் மகனின் குழந்தைநல மருத்துவரைக் காதலிக்கிறாள். அவள் மட்டுமே தனியாக இருக்கையில் யார் அவளைக் குற்றம் சொல்வது. இந்தக் காதலில் பெரும்ஆர்வம் அடிப்படைக் கூறாக இருந்தது. இது மிகவும் பாதுகாப்பாவும் இருந்தது. தடுப்பின் மறுபக்கம் அவர் இருந்தார். அவருக்கும் அவளுக்கும் இடையில் பரிசோதனை மேசையில் குழந்தை இருந்தது, அதுவே அலுவலகம், பணியாட்கள், அவருடைய மனைவி, அவளுடைய கணவர், அவருடைய ஸ்டெதஸ்கோப், அவருடைய தாடி, அவளுடைய மார்பகங்கள், அவருடைய கண்ணாடிகள், அவளுடைய கண்ணாடிகள் போன்றவை இருந்தன.
பிரச்சினை
X, Y-யோடு இருந்தாலும் Z-ன் பணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். Y,W-வை ஆதரித்து வந்தார் அவர் V மூலம் பெற்றெடுத்தக் குழந்தையோடு வசித்து வந்தார். V சிகாகோவுக்குச் செல்ல விரும்பினார் ஆனால் அவருடைய குழந்தை நியூயார்க்கில் W உடன் வசித்து வந்தது. W-வினால் போக முடியாது ஏனெனில் அவர் U-வோடு உறவு கொண்டிருந்தார், அவருடைய குழந்தையும் கூட நியூயார்க்கில் அதனுடைய அம்மா T-யோடு இருந்தது. T,U-விடம் இருந்து பணமும், W, Y-யிடமிருந்து அவளுக்கான பணத்தையும் V-யிடமிருந்து அவர்களுடைய குழந்தைக்காகவும் பணம் பெற்றுக் கொண்டிருந்தாள். X, Z-டிடம் இருந்து பணம் பெறுகிறார். X-க்கும் Y-க்கும் சேர்ந்து குழந்தை எதுவுமில்லை. V குழந்தையை அரிதாகப் பார்த்து வந்தாலும் வேண்டியதைச் செய்து வந்தார். U, W-வின் குழந்தையோடு வசித்து வந்தாலும் அதற்குத் தேவையானதைச் செய்யவில்லை.
ஒரு மணி நேரத்தில் 20 சிலைகள்
1
20 சிற்பங்களை ஒரு மணிநேரத்தில் பார்ப்பது என்பது பிரச்சினையாக இருந்தது. ஒரு மணி நேரம் என்பது நீண்ட அவகாசமாக இருந்தது. ஆனால் 20 சிற்பங்கள் என்பதும் அதிகமான எண்ணிக்கையாகும். ஒரு மணிநேரம் என்பது இன்னும் அதிகமாக இருந்தது. ஒரு மணி நேரத்தை இருபது சிற்பங்களால் வகுத்து நாங்கள் கணக்கிட்டபோது ஒரு சிற்பத்துக்கு மூன்று நிமிடங்கள் தேவையாக இருந்தது. கணக்கு சரியாக இருந்தாலும், எங்களுக்கு அதில் ஏதோ தவறு இருப்பது போல தோன்றியது: ஒரு சிற்பத்தைப் பார்ப்பதற்கு மூன்று நிமிடமென்பது மிகவும் குறுகிய கால அளவாக இருந்தது, அதோடு ஒரு மணி நேரத்திலிருந்து ஆரம்பித்ததோடு பார்க்கையில் இது மிக மிகக் குறுகிய கால அளவாகும். இதில் சிரமம் என்னவெனில் மிகவும் அதிகப்படியான சிற்பங்கள் இருப்பதுதான். இருப்பினும் எத்தனை சிற்பங்கள் இருந்தாலும், நமக்கு ஒரு மணி நேரம் இருந்தால் போதுமானதாக இருக்கும். கணக்கு சரியாக இருந்தாலும் கூட, அது சூழ்நிலையை சரியாக தெளிவுபடுத்தவில்லை. கணக்கிடுவைதைப் பொருத்தவரையில் சூழ்நிலையை சரியாக எப்படி தெளிவுபடுத்துவது, ஏன் இந்த கணக்கீடு உண்மையைத் தெளிவுபடுத்தவில்லை என்பதை நம்மால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
2
இதற்கான பதில் இதுவாக இருக்கலாம்: நாம் நம்பப் பழகுவதற்கு ஒரு மணி நேரம் என்பது உண்மையிலேயே மிகவும் குறுகிய காலம், மூன்று நிமிடமென்பது மிகவும் நீண்ட நேரம், எனவே முடிவாக நமது பிரச்சினையை மாற்றி சிறிய கால அளவான ஒரு மணி நேரத்திலிருந்து ஆரம்பித்து அதில் 20 சிற்பங்களைப் பார்ப்பதோடு கணக்கிட்டு பார்த்தால் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சிற்பத்தைப் பார்ப்பதற்கு மூன்று நிமிடம் என்பது அதிக கால அவகாசமாக இருக்கும். இந்த தருணத்தில் பல கால அளவு நீண்டதாக நீடித்தாலும் கூட, ஒவ்வொரு சிற்பத்துக்கும் மூன்று நிமிடங்கள், அவை ஒரு மணிநேரம் என்கிற குறுகிய கால அளவுக்குள் அனைத்தையும் அடக்க முடியும்.
ஆங்கில மூலம்: லிடியா டேவிஸ்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
லிடியா டேவிஸ் :
அமெரிக்க நாட்டின் நார்தாம்ப்டன் பகுதியைச் சேர்ந்தவர் லிடியா டேவிஸ் (வயது 74). இவர் சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பிரெஞ்ச் மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் வழக்கத்துக்கு மாறாக மிக மிகக் குறுகிய சிறுகதைகளை (குறுங்கதைகள்!) எழுதி வருபவர்.
1976-ல் வெளியான `The Thirteenth Woman and Other Stories’ என்பது உட்பட இது வரை ஆறு புனைவுத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். 1986-ஆம் ஆண்டு இவருடைய `Break It Down” என்கிற நூல் PEN/Hemingway பரிசுக்கான இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்படட்து. இவருடைய சமீபத்திய நூல்கள்: Varieties of Disturbance, Can’t and Won’t, The Collected Stories of Lydia Davis. இந்நூலில் இவர் 2008-ஆம் ஆண்டு வரை எழுதிய அனைத்துக் கதைகளும் இடம் பெற்றிருக்கிறது.
இவர் பல பிரெஞ்சு மொழி படைப்புகளை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார்.