“எலனர், இதைக் கவனி! ‘கதிரவன் அஸ்தமித்துவிட்ட அந்த மாலையில் வழக்கம்போல நான் வானத்து நட்சத்திரங்களைக் கவனித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு புதிய நட்சத்திரம், மற்ற எல்லா நட்சத்திரங்களையும் விட பிரகாசமாக என் தலைக்கு நேராக ஒளிர்வதைக் கண்டேன். பால்யத்திலிருந்தே வானத்து நட்சத்திரங்களைக் குறித்து நான் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்ததனால், இப்போது கண்ட அந்த நட்சத்திரம் அதற்கு முன்பு அங்கே இருந்ததே இல்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. நிச்சயமாக இது ஒரு அதிசயம்தான்!’, எலனர், அது என்ன என்பது உனக்குத் தெரிகிறதா? அது ஒரு மகத்தான நட்சத்திர வெடிப்பு, சூப்பர் நோவா. ஆனால் அதற்கு முந்தைய காலம் வரை, பிரபஞ்சம் மாற்றங்களற்றதெனக் கருதி வந்தனர். எனவேதான், ஒரு நிச்சலமான மாலையில் புதிய நட்சத்திரமொன்றைக் கண்ட டைகோ பிராஹே அதனை அதிசயமெனக் கருதியிருக்கிறார். தொலைநோக்கிகளெல்லாம் அப்போது கண்டறியப்பட்டிருக்கவில்லை, அவருக்கு அது தேவைப்படவும் இல்லை. சூரியன் உதித்தபிறகும் கூட அவரால் அதனைக் காண முடிந்தது.”
இந்த அயல்நகரத்து நள்ளிரவின் அமைதியையும், விடுதிகளெல்லாம் நிரம்பி விட்ட சுற்றுலாக் காலத்தில் தனது வீட்டின் ஒரு அறையை இவர்களுக்கு வாடகைக்கு அளித்துவிட்டு இருளில் உறங்கிக் கொண்டிருக்கிற சிறிய குடும்பத்தின் உறக்கத்தையும் மனதில் கொண்ட நோஎல் ஒலிகுறைத்து வாசித்தான். தன் தொழிலுக்குத் தேவையான நினைவாற்றல் இல்லாத ஒரு சுற்றுலா வழிகாட்டியைப் போல, ஐரோப்பிய வானியலாளர்கள் குறித்த தனது வண்ணமயமான புத்தகத்திலிருந்து முக்கியமான கருத்துக்களை கட்டிலில் அமர்ந்தபடி வாசித்துக்கொண்டிருந்தான் அவன். அவளுக்கு மட்டுமேயான சுற்றுலா வழிகாட்டி.
கட்டில்கள் தனித்தனியாகப் போடப்பட்டிருந்தன. அவள் ஒருபோதும் ஆறுதலைக் கோரியதில்லை என்றபோதும், இரவில் அவளை ஆற்றுப்படுத்தும் பொருட்டு அவன் அவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்திருந்தான். உள்ளங்கைகளைக் கோர்த்து கன்னத்தினடியில் வைத்தபடி அவனது முகத்தின் பக்கவாட்டு தோற்றைத்தைப் பார்த்தவாறு அவள் படுத்திருந்தாள். அவன் மீது தோன்றிய அன்பில் பெரிதும் மரியாதையே கலந்திருந்தது. ஆனால், அவனிடமிருந்து எங்கோ வெகு தொலைவில் இருப்பது போலவும், வெறும் நினைவுகளில் மட்டுமே அவனை நேசித்திருப்பது போலவும் இருந்தது மனநிலை. எங்கோ வெகு தொலைவில் பயணத்தில் இருக்கும் அவர்களது மகனிடமிருந்தும் புரிந்து கொள்ளவோ அளவிடவோ முடியாத தொலைவிற்குச் சென்றுவிட்ட மகள் நானாவிடமிருந்தும் கூட தொலைவில் இருக்கிறார்கள் அவர்கள். போலவே, மகளது 16 ஆண்டு கால வாழ்வும் கூட இந்த அன்னையால் புரிந்து கொள்ள முடியாத புதிர்போல்தான் ஆகிவிட்டது.
”கவனி, அவர் ரொம்பவும் எரிச்சலாகிவிட்டார் போலிருக்கிறது: ஆரம்பத்தில் அந்த நட்சத்திரம் சாதகமான விளைவுகளை வழங்கியபடி சுக்கிரனைப் போலத் தோற்றமளித்திருக்கிறது. அடுத்து அது செவ்வாய் போல் ஆனபிறகு அங்கே போர்க்காலங்களும் சிறைப்பிடித்தல்களும் இளவரசர்களின் மரணமும், கோபத்தில் சீறும் விண்கற்களுக்கும், கொள்ளை நோய்களுக்கும், நச்சுப் பாம்புகளுக்கும் இடையே நிகழ்ந்து விடும். இறுதியாக அந்த நட்சத்திரம் சனிக்கோளைப் போல ஆகியபிறகு அங்கே வறுமை, இறப்பு, சிறைவாசம் மற்றும் அத்தனை துக்க நிகழ்வுகளும் அரங்கேறிவிடும். அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது போல் தோன்றுகிறதுதானே? ஐன்ஸ்டீன் இதையெல்லாம் தன்னுடைய கட்டுரையில் எழுதுவதாக கற்பனை செய்யமுடிகிறதா உன்னால்?” யாரோ ஒரு உறவினர் தந்திருக்கக்கூடிய தொலைநோக்கியை சரிசெய்து முதன்முதலாக தன் வீட்டின் கொல்லைப்புறத்திற்கு ஒரு நட்சத்திரத்தை வரவழைத்த ஆறு அல்லது ஏழு வயதுச் சிறுவனாக அவனை அவள் கற்பனை செய்து பார்த்தாள். கோடைகால இரவில் ஒலிக்கும் சில்வண்டுகளின் ஓசையானது நிஜத்தில் நட்சத்திரங்களிலிருந்து எழும் இசைதான் என அவன் அப்போது நம்பியிருந்ததாக இவளிடம் கூறியிருக்கிறான்.
இவர்கள் இருவரும் ஒன்றாகக் கடந்திருக்கிற இத்தனை இரவுகளில் அவன் தாமதமாக வேலைகளை முடித்து நட்சத்திரங்களைக் காண்பதற்காக தோட்டத்திற்குச் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம் இவள் யோசித்துக் கொள்வாள்: இவன் மீண்டும் எல்லாவற்றையும் ’பிரிக்க முடியாதவை’யாகக் காண்கிறானா? அல்லது அப்படிக் காண முயற்சிக்கிறானா அல்லது அப்படிச் சிந்திப்பதைத் தவிர்க்கிறானா? என. நெடுந்தொலைவுகளையும் நம்பமுடியாத திசைவேகங்களையும் அளப்பது – அதுதான் அவனைக் கவர்ந்தது. விஷேசங்களின் போது உள்முற்றத்திலோ தோட்டத்திலோ சாந்தமான நிலவினை நோக்கி முகத்தை உயர்த்தியபடி விருந்தினர்கள் உலவும்போது, அவர்கள் நினைக்க மறந்துவிட்ட ஒன்றை மென்மையாக நினைவூட்டுவான். அதாவது தூரத்து நட்சத்திரங்களும் அத்தனை விண்மீன் திரள்களும் பூமியிலிருந்தும் ஒன்றிடமிருந்து ஒன்றும் மிக வேகமாக விலகியபடி இருக்கின்றன என்பதே அது. வெகு தொலைவில் இருப்பவை வெகு விரைவில் நம்மை விட்டு விலகுகின்றன. மணிக்கு நானூறு மைல்கள் என்பதை கற்பனை செய்ய முடிகிறா? அவர்களைக் குறித்து அவன் சொன்ன ஒரு நகைச்சுவைக்கு இணங்குவது போல அவர்கள் பதிலுக்குப் புன்னகைப்பார்கள்.
விளக்கின் ஒளி அவனது முகத்தை மென்மையாக்கியிருந்தது. நானாவின் முகம் இவனது முகத்தின் சாயலைக் கொண்டிருந்ததை மறுபடி ஒருமுறை அவள் நினைவு கூர்கிறாள். நள்ளிரவுகளில் சப்தமின்றி அவளைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும் அந்த அபாய மணியை அவள் இப்போதும் உணர்ந்தாள். கணவனே இல்லை என்பதுபோலவும் குழந்தைகளே இருந்ததில்லை என்பது போலவும் வாழ்வைத் துவக்கிவைத்த பெற்றோரும் கூட இல்லை என்பது போலவும் தோன்றுகிறவை அந்த கணங்கள். குணமடைவதற்கான ஒரு வாய்ப்பினைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பயணமானது அவனது அன்பின் ஒரு பரிசு.
முந்தைய வானியலாளர்கள் வாழ்ந்த இந்த இடத்தைப்,- ப்ரக்-ன் குறுகிய கோல்டன் ஸ்ட்ரீட் மற்றும் அக்காலத்தில் விண்வெளியைப் பார்வையிடும் இடமாக இத்தாலியில் இருந்த கோட்டையை- பார்வையிடுவதன் மூலமாக அவற்றிற்கு அவன், அவள் பொருட்டு, மனிதத்தன்மை அளிக்க முயன்றான். அவர்களும் கூட இந்தப் புவி வாழ்வின் இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள், என்றாலும் வானிலிருந்து வருகிற அந்த அற்புத அழைப்பிற்கு எதிராக அவர்கள் ஒருபோதும் முகம் திருப்பியதில்லை. விளக்கு அணைக்கப்பட்டது. இன்றைய இரவின் இருள் இந்த அந்நியரின் வீட்டிலுள்ள அறையில். நாளை பகலில் வெளியே சென்று விட்டு வந்த பிறகு அடுத்த இரவும் இங்கேதான். தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை முத்தமிடுவது போல அவன் அவள் மேல் குனிந்து முகத்தில் மென்மையாக முத்தமிட்டான். “நான் இன்னும் உறங்கவில்லை” என்று அவள் சொன்னதும் அவன் அவளைக் கரங்களில் ஏந்திக் கொண்டான். உயரத்தில் இருந்த சிறிய ஜன்னல்களில் மரக்கிளைகள் நெருக்கமாக உரசிச் சப்தமெழுப்பின, தூரத்தில் திவோலி கார்டனில் இருந்து ஒலித்த பட்டாசு மற்றும் இசைச் சப்தங்களும் ஜன்னலில் மோதின. தனக்குள்ளிருக்கும் குரல்களை மட்டுப்படுத்தியபடி அவள் அமைதியாகப் படுத்திருந்தாள். தூக்கத்தில் அவளிடமிருந்து வெளிப்பட வாய்ப்புள்ள எந்தச் சப்தமும் – அது எவ்வளவு சிறியதாக இருந்த போதிலும் – மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் சிறிய குடும்பத்தினை எழுப்பிவிடக்கூடும்.
ஸ்வீடிஷ் கடற்கரை வாயிலாக கோபென்ஹகனிலிருந்து லாண்ட்ஸ்கரனா நகரத்திற்கு படகில் செல்ல வேண்டும். பழைய செங்கல் கட்டிடங்களும் கந்தகப் புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகளுமாய் இருக்கிறது வெளி. இரண்டு கரைகளும் கண்ணிற்குத் தெரியாதபடி பரந்து விரிந்திருந்த பால்டிக் கடலின் ஒற்றை விரலாய், அதன் ஒரே நிறமாய் இவர்கள் பயணிக்கிற வலுமிக்க படகின் மஞ்சள் புகை வெளியேறிக்கொண்டிருந்தது. அவள் ஒருபோதும் நினைத்திராத, பயணிக்க விரும்பியிராத ஒரு கடல். அவர்கள் மேல்தளத்திற்கு வந்து நின்றிருந்தனர். காற்றினால் உருவான அலைகளால் மோதப்படுவதிலிருந்து காப்பதுபோன்ற போலிப் பாவனை தரும் கீழ்ப்பகுதியில் அமர்ந்திருப்பது அவளுக்கு மூச்சுமுட்டுவதைப் போல் இருந்தது. ஸ்வீடனையும் டென்மார்க்கையும் சேர்ந்த சக பயணிகள் தங்களது சைக்கிள்களோடும் பழம் மற்றும் மதுக்கூடைகளோடும் திருப்தியடைந்தவர்களாய் கீழ்தளத்தில் இருந்த பலகைகளில் அமர்ந்திருந்தனர்.
குணமடைதலை விரும்பாத ஒரு நோயாளியைப் போல, தீவு பார்வைப் பரப்பிற்குள் வந்த உடனேயே அதைக் கண்டுவிடும் நோக்கத்துடன் அவள் கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண் இமைத்திருக்க வேண்டும், அல்லது வேறெங்கோ பார்த்திருக்க வேண்டும். திடீரென தீவு மேலெழுந்திருந்தது. தூரத்தில் தெரிந்த அப்பட்டமான அதன் காட்சி இங்கே படகிற்கு வெகு அருகிலேயே நீருக்கடியில் பெரிய பாறைகள் இருப்பது போன்ற பொய்த்தோற்றத்தை அவளுக்கு ஏற்படுத்தியது. வலுமிக்க காற்றும் இழுத்துச் செல்லும் நீரோட்டமும் ராட்சத அலைகளும் யுகங்களுக்கு முன்பு ஓய்ந்து அடங்கியபோது பாதிப்படைந்த இந்தத் தீவானது பதட்டம் தரும் அளவிற்கு சிறியது. அங்கு குடியிருப்பவர்கள் அந்நிகழ்வைப்பற்றி இப்போது என்ன நினைத்துக்கொள்வார்கள்? அமைதியாய் இருங்கள், அவர்கள் தங்களுக்குள் அமைதியாய் இருக்கும்படி சொல்லிக் கொள்வார்கள். மீண்டும் ஒருமுறை புயல் உருவாகி நீர் மேலெழும்பினால் நோஅல் போன்ற ஒருவரின் சிந்தனையில் உருவான நேர்த்தியான ஒரு உபகரணம் சூழலிலும் நீரின் ஆழத்திலும் உருவாகிற ஒரு சிறிய ஆபத்தினைக்கூட துல்லியமாகக் கணித்து அவர்களை எச்சரித்து விடும். அவர்கள் தங்களது சைக்கிளில் ஏறி அருகிலிருக்கும் தேவாலயத்தை-ஏற்கனவே நானூறு ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாய் இருப்பதால் எப்போதைக்குமாய் இடிந்து விழத் தயாராய் இருக்கிற, அந்த தேவாலயத்தை – நோக்கி மிதிக்கும்படி கூறப்படுவார்கள். நம்பிக்கையுடன் சரணடைய முடிகிற ஒரு துறைமுக நகரம். அவர்களது வீடுகளும் தோட்டங்களும் வேலிகளும் மரங்களும் ஆழமான சாம்பல் வண்ண நீரின் நுனிவிளிம்பில் அமைந்திருக்க, சிறிய பாய்மரப்படகுகள் பளிங்கு போன்ற நீலக் கடலில் மகிழ்ச்சியுடன் அசைந்தபடி இருக்கின்றன.
இவர்களது படகு நங்கூரமிடப்பட்டதும் பயணிகள் தங்களது சைக்கிள்களை நகர்த்தியபடி மேலேறி, எதிர்வரும் பழுப்புநிற குதிரைகள் பூட்டிய வாகனத்தையும் அதைப் பின் தொடர்ந்து சாவதானமாய் நடந்துவந்த இரண்டு நபர்களையும் கடந்து சைக்கிளை மிதித்து வெளியேறினர். குதிரைகள் நின்றதும், ஒரு சிறுவனையும் அவனது அன்னையையும் தவிர பிற பயணிகள் வண்டியிலிருந்து கீழிறங்கினர். நீல மரப்பலகையில் அன்னையின் மடியில் தலைவைத்தபடி படுத்திருந்த அச்சிறுவனது சட்டைப்பையின் நுனியிலிருந்து சிறிய ஊதா மலர்கள் நீட்டிக் கொண்டிருந்தன. தொப்பியின் நீள்முன்விளிம்பு பின்புறம் திருப்பப்பட்டிருந்ததால் அவனது முகம் முழுவதும் வானத்தின் பார்வைக்குட்பட்டிருந்தது. கண்களைத் திறந்தவன் வானைக் கண்டு ஆச்சரியமுற்று மீண்டும் அவற்றை மூடிக்கொண்டான். அவனைப் பார்த்துக்கொண்டிருந்த எலனர், நாளுக்கு நாள் – பகலிலும் இரவிலும் -வயதாகிக் கொண்டே செல்லச் செல்ல, வான் குறித்த ஆச்சர்யங்கள் குறைந்து விடப்போகிற அவனது முகத்தை மனதில் உருவகப் படுத்திப் பார்த்தாள். கவனமாக அம்மாவும் மகனும் இறங்கிக் கொண்டனர். ”டைகோ பிராஹே அருங்காட்சியகம்?” அந்நிய நிலங்களில் கவனமாகப் பூண்டுகொள்கிற அந்நியோன்யத்துடன் ஒலித்தது நோஎல்லின் குரல். மேலே தனது இருக்கையில் அமர்ந்திருந்த ஓட்டுநர் ஆமோதிப்பாய் தலையசைப்பதைப் போல் இருந்தது.
முதுகுத்தண்டு போல நகரின் மையத்தில் நீண்டு சென்ற அந்தப் பாதையில் வாகனம் குதித்தபடி செல்ல, நோஎல் செங்குத்தாய் நிமிர்ந்து அமர்ந்திருந்தான். வெளிர்நிற சூரியன் அவனது முடியை வெள்ளி நிறமாக்கிக் காட்டியது. நிகழ்ந்து கொண்டிருக்கிற இந்த மாற்றம் குறித்தும் அவன் ப்ரக்ஞை கொண்டிருக்கவில்லை. கடலின் சாம்பல் நிறத்தை எடுத்துக்கொண்ட பரந்த உயர்வானம் அதன் நிழலை நிலத்திலிருக்கிற சமவெளிகள், பச்சை வயல்கள், சில கரிய கால்நடைகள், பழுப்புக்குதிரைகள், கூரை வேயப்பட்ட வீடுகள் மற்றும் தானியக் களஞ்சியங்கள் மீது ஒரு படக்காட்சி போல் கவிழ்த்திருந்தது. இவள் முன்பொருமுறை வரைந்த கூரையைப் போன்றிருந்தன அக்கூரைகள். முழுமை பெற்ற அவ்வோவியத்தை பிற குழந்தைகள் ஒரு புத்தகத்தினுள் பார்ப்பதற்கு வெகு முன்பே, அன்னைக்கு அருகே தனது சிறிய நாற்காலியில் அமர்ந்து அப்படம் உயிர் பெறுவதைப் பார்த்திருந்தாள் நானா. வெள்ளை நட்சத்திரப்புள்ளிகளாலான கருநீல வானத்தின்கீழ் ஒரு சிறிய குடிலும் இரவின் கரும்பச்சைத் தண்டுகளின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு வண்டும் கொண்டது அப்படம். ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அப்படத்தில் இருக்கும் கூரையைப் போல் அல்லாது இங்கே இருக்கும் இந்தக் கூரைகள் காலத்தின் நெருப்பில் அழிந்துபடக்கூடும்.
குதிரைகள் நிறுத்தப்பட்டன. யாரேனும் இறங்கக்கூடும் எனக் காத்திருந்த ஓட்டுநர், யாரும் இறங்கவில்லை என்பதைக் கண்டு “டைகோ பிராஹே” என்றார் பொதுவாக. குதித்து இறங்கிய நோஅல் அவளும் இறங்குவதற்கு உதவினான். குதிரைகள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தன. தொடுவானின் இருமருங்கிலிருந்தும் எந்தஒரு சைக்கிளோ வேறு வாகனமோ வருவதுபோல் தென்படவில்லை. சுற்றிலும் உணரமுடிகிற கண்ணுக்குத் தெரியாத அந்த மௌனம் கடலின் மௌனமாக இருக்க வேண்டும். ஆனால் முழுமையாக நம்ப முடியாத மௌனம் அது. சாலையின் மறுபுறத்தில் ஆளில்லாத ஒரு சுற்றுலாத்தலம் கண்ணில்பட்டது. நீண்ட மரத்தண்டினாலான குறுகிய மேசைகளும் நாற்காலிகளும் மரங்களினடியில் கிடக்க அவை எல்லாவற்றிற்கும் பின்னால் மஞ்சள் வண்ண விளக்குகள் தொங்கவிடப்பட்ட செங்கல் கட்டிடம் நின்றிருந்தது. அதற்குப் பக்கவாட்டில் வெறுமையான சாலையின் மருங்கே சிவப்பு செங்கற்சுவர்களும் கற்கூரையும் கொண்டிருந்த தேவாலயம் முற்றத்தில் இளஞ்சிவப்பு ரோஜாக்களுடன் காட்சியளித்தது. அதற்குப் பின் சில அடி தொலைவில் டைகோ பிராஹே அருங்காட்சியகம் அமைந்திருந்தது. வெகுசில விலைமதிப்பற்ற புத்தகங்களும் சில ஓவியங்களும் மட்டுமே அதனுள் இருக்கவேண்டும். அவ்வளவு சிறியதாக இருந்த அது மூடப்பட்டிருந்தது. பிரம்மாண்டமான மல்பெரி மரங்கள் சிறிய அருங்காட்சியகத்தின் கூரையைத் தாண்டி உயர்ந்திருக்க அங்கே அந்த மரங்களின் கீழே ஒரு உயரமான கற்சிலை நின்றிருந்தது. வானியலாளரின் சிலை. அவர் நிஜமாகவே அங்கே நிற்கிறார் என்பது போலவும் இதோ இப்போது பறந்துவிடப் போகிறார் என்பதுபோலவும் அவரை நோக்கி ஒடியபடி “இது அவர்தான்” என்று கூவினான் நோஅல். அறிவார்ந்த மரியாதையுடன் அந்தச்சிலையை நோக்கியபடி சுற்றிச் சுற்றி வந்தவன், அதன் கீழ்ப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் புரியாத விவரங்களை உற்று நோக்குவதைக் கண்டாள். எந்த ஒரு சாதாரண மனிதனையும் விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயரம் கொண்டிருந்த அந்த வானியலாளர் சிலை கழுத்துப்பட்டையுடனும், முழங்காலருகே மடிப்புகளுடன் தொங்கிய ஆடையுடனும் இருக்க, மேலங்கி காலணி வரை நீண்டிருந்தது. தனது கையில் அவர் ஒரு கால்வட்டத்தைப் பற்றியிருந்தார். பின்னோக்கிச் சாய்ந்த தலையுடன் அவர் வானத்தை ஆராய்ந்தபடியிருக்க, குறுந்தாடியோ அவரது கண்காணிப்புத் தளங்கள் அமைந்திருந்த உள்ளீடற்ற பெரிய புவிக் கிண்ணத்தை சுட்டியபடி இருந்தது. வானியலாளருக்குப் பின்னிருந்த வயல்வெளியில் ஒரு விவசாயி குப்பைகளை எரித்துக் கொண்டிருக்க அதன் நீண்ட சுருள்சுருளான புகை தரையை ஒட்டிப் படர்ந்திருந்தது. அங்கிருந்த ஒரு டிராக்டர் கிளம்பியதும் அச்சம்கொண்ட முயல் ஒன்று அதன் முன்னே தாவி ஓடியது.
அவளது கரத்தைப் பற்றிக் கொண்ட நோஅல், கீழிருக்கும் அகலமான பச்சைப் பள்ளத்திற்கு அழைத்துச் சென்றான். முன்பொரு காலத்தில் வான் கோட்டையும் கண்காணிப்புக் கூடமும் அமைந்திருந்த இடத்தில் அவர்கள் நின்றிருந்தார்கள். கற்பனைகளில் மட்டுமே காண முடிகிற கோட்டைகளுக்கேயுரிய அதே அழகுடனும் லகுவுடனும் அவர்களால் அந்தக் கோட்டையை உணர முடிந்தது. முன்பு அவற்றின் அடித்தளம் இருந்த இடத்திலிருந்து ஒன்றுவிடாமல் அத்தனை கற்களையும் உழவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். இப்போது அங்கே ஐந்து நூற்றாண்டுகளின் மண்தான் குவிந்திருந்தது. அவளது காலுக்கு அருகில் இருந்த தேரை ஒன்று இந்த பெரிய மந்தமான விலங்குகளைக் கண்டு பதட்டம் கொள்ளாமல் நகராமல் இருந்தது. இரவுகளில் கோட்டையின் உச்சியில் கழுத்து வலிக்க அண்ணாந்து நின்றபடி அந்த வானியலாளர் மேலே உயரத்தில் இருக்கும் சிறுவனுக்காக எப்படிக் காத்திருந்தார்? வானத்தை ஆக்கிரமிப்பது பற்றி அவர் திட்டம் தீட்டினாரா? நட்சத்திரங்களால் ஆன பரலோக வேட்டைக்காரர்களின் வரிசையில் அவரும் ஒருவரா? பழிவாங்கும் தேவதைகள் வானிலிருந்து தாக்கக்கூடும் என அஞ்சியபடி உழவர்கள் இரவுகளைக் கழித்தனரா?
“எலனர், உனக்குப் பசிக்கிறதா? தாகமாய் இருக்கிறதா?” அவர்கள் அந்தத் தேரைக்கு அருகில் அமர்ந்தனர். தனது தோள்பையிலிருந்து குடிநீர் புட்டி, வெண்ணெய், ரொட்டி, இனிப்பு பிஸ்கட்டுகள், உலர் திராட்சை, மிட்டாய்கள் போன்றவற்றை நோஅல் வெளியே எடுத்தான். ”நீ இந்த உலர்திராட்சையை உண்டால் எனது எல்லா விருப்பங்களும் நிறைவேறிவிடும்” என்றபடி அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவற்றை எடுத்து உதடுகளில் வைத்தவள் அப்படியே விழுங்கினாள். அவள் குணமடைவதே அவனது விருப்பம் என்பதை அறிவாள், ஆனால் அவளது விருப்பம் அதுவாக இருக்கவில்லை. நகைச்சுவைகள் மூலமாகவும் புதிர்கள் மூலமாகவும் அவளை அவர்களது வாழ்வின் துவக்கத்திலிருந்த உற்சாகமான காலத்திற்கு அழைத்துச்செல்ல முடியும் என அவன் நம்பினான். புதிய ஒரு பிரபஞ்சம் தன்னை மலர்த்திக்கொண்ட இடத்தில் சுற்றுலாவிற்கு வந்திருக்கும் இளம் தம்பதிகள் போல.
அடுத்ததாக, வானியலாளரின் நிலத்தடி கண்காணிப்புத் தளத்தை நோக்கி அவர்கள் நடந்தபோது, நோஅல்லின் லேசான காலணி தூசுப்படலத்தைக் கிளப்பியபடி செல்ல, அவளது செருப்பு எவ்வித சலனங்களையும் ஏற்படுத்தாமல் நகர்ந்தது. துல்லியமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளமுடியாதபடி காற்று கோட்டையின் மேல் மோதிக்கொண்டே இருந்ததால் வானியலாளர் தனது கருவிகளை நிலத்தடிக்கு கொணர்ந்திருந்தார் என்றான் நோஅல். ஆனால் மக்கள் அதைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? என வியந்தாள் அவள். இதே சாலையில் இரவுகளில் தனது நீண்ட அங்கியுடன் ஒளிரும் சோகமான கண்களுடன் வானத்தையே பார்த்தபடி, அருகிலிருக்கும் உதவியாளரால் பாதையைக் குறித்து எச்சரிக்கப்பட்டபடி, அவர் நடந்ததைப் பார்த்த அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? கடவுளின் கோபத்திற்குப் பயந்து அவர் ஒளிந்து கொண்டதாக நினைத்திருப்பார்களா? எல்லாமும் அழிந்தாலும் அவர் மட்டும் தப்பித்துவிடுவார் என நினைத்தார்களா? சிறுவயதில் ஒரு சண்டையில் இழந்து விட்ட தனது மூக்கிற்குப் பதிலாக அவர் பொருத்தியிருந்த உலோக மூக்குடன் பாதாள கண்காணிப்புத் தளத்திலிருந்து எட்டிப் பார்க்கும்போது, அது உருகாமல், பழிவாங்குதலின் நெருப்பைப் பிரதிபலிக்கும் பூதாகரமான தங்க நிறத்திற்கு மாறிவிடும் என்றா?
சாலைக்கு மறுபுறம், கிட்டத்தட்ட அவர்களது முற்றத்தின் பரப்புடைய ஒரு கற்பனை வளையத்திற்குள் குழந்தைகள் ஓடிக்கொண்டிருந்தனர். கூடாரம் குவிமாடம் கூம்பு என தாமிரத்தாலான வடிவியல் உருவங்களைக் கொண்ட ஒரு விளையாட்டுத்தளம் உலர்ந்த புல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்தது. “வந்து பார்” என நோஅல் சொன்னதும் அவள் அந்த வட்டத்திற்குள் நுழைந்தாள். இவைதான் வானத்தைப் பார்ப்பதற்கான அவரது ஜன்னல்களாய் இருந்தன, இரவுகளில் இந்த தாமிர வடிவக் கூரைகளை ஒவ்வொன்றாகத் திறந்து அவர் வானத்தின் அகலப் பரப்பை சிறுசிறு கூறுகளாகத் தரிசித்திருக்கிறார். பச்சையும் நீலமும் கலந்த வண்ணத்தில் களிம்புகள் அவற்றின் மேல் படிந்திருக்க, நாதங்கிகள் தளர்வாகத் தொங்கின. நுழைவுவாயில் அருகிலிருந்த சரிவான தாமிர மூடியில் ஒரு சிறுமி சறுக்கியபடி செல்ல அவளை இரண்டு சிறுவர்கள் பின் தொடர்ந்தனர். தொலைவில் இருக்கும் சலனமற்ற சுற்றுப்புறத்தின்மீது அவர்களது சவால் ஒலிகள் மோதி எதிரொலித்தன. அடுத்து அவர்கள் அந்த கூரைவிளக்குகளைச் சுற்றிச்சுற்றி வந்தனர். குவிமாடத்தின் ஒரு பகுதியை நோஅல் திறந்ததும் அந்தச் சிறுமி அவளை நெருக்கியபடி தொடர எல்லாக் குழந்தைகளும் அவர்கள் பின்னே வந்தனர். கிட்டத்தட்ட ஏழு அடிக்குக் கீழே தரையில் மழைநீரும் பாறைகளும் குப்பிகளுமாய்த் தெரிந்தது. கருப்பு தோல்செருப்புகள் ஒன்றையொன்று இடித்துக்கொள்ளும்படி நின்று குழந்தைகள் நோஅல்லுடன் சேர்ந்து உள்ளே பார்த்துக் கொண்டிருக்கும்போது, சேவலொன்றும் அவர்கள் அருகில் வந்தது. அப்போது அந்தச் சிறுமியின் பொன்நிறக் கூந்தலை அதன் பட்டுப்போன்ற தன்மையை வானின் கீழ் அது எவ்வளவு புதியதாக மின்னுகிறது என்பதை எலனர் பார்த்துக் கொண்டிருந்தாள். க்ளுக்கென ஒரு கிண்டலான சிரிப்பை அந்தச் சிறுமிதான் முதலில் தொடங்கி வைத்தாள், பின்பு சிறுவர்கள் அனைவரும் சப்தமாகச் சிரித்தனர். உள்ளே ஒன்றுமில்லை என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.
மீண்டும் அவர்கள் கடலுக்கு வந்தபோது நீர் இருண்டிருந்தது. தொலைவில் மழை திரைபோல் பொழிந்துகொண்டிருக்க தீவு கீழே நழுவிக் கொண்டிருந்தது. அடர்த்தியான அந்தியினூடாக படகு லாண்ட்ஸ்கரானாவை நோக்கிப் பயணித்தபோது நகரிலிருந்த மரங்கள் அவள் கண்களுக்கு கரிய இரும்புக் குவியல்கள் போல் தோற்றம் அளித்தன. மங்கலாய் விளக்கெரிந்து கொண்டிருந்த காத்திருப்பு நிலையத்தில் சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த பலகையில் அவர்கள் அமர்ந்தனர். நோஅல்லோ மற்ற எவருமோ, அவர்களது துல்லியமான – சந்தேகத்திற்கப்பாற்பட்ட கருவிகளோ, எல்லாவற்றையும் விட உன்னதமான அவர்களது அறிவாற்றலாலோ கூட ஒருபோதும் அளவிட முடியாத ஒரு வெளி எங்கும் நிறைந்திருக்கிறதென அவளுக்குத் தோன்றியது. அந்த வெளியின் பெயர் துயரம், எதுகொண்டும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம். இவ்வுலகின் ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஏதோ ஒருவர் அவ்வெளிக்குச் செல்கிறார், பின்பு அவர் ஒருபோதும் அங்கிருந்து திரும்புவதேயில்லை. நோஅல் அவளது முழங்காலைத் தொட்டு நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தான்.
கோபன்ஹகனுக்குப் புறப்பட ஆயத்தமாயிருந்த ஒரு படகின் ஓசையோடு, மஞ்சள் மற்றும் வெள்ளை விளக்கொளி இருண்ட இரவினூடாக அவர்களை நோக்கி வந்தது. படகின் பாதுகாப்பு மிக்க மேல்தளத்தில் அமர்ந்து கரையிலிருக்கும் விளக்குகளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அங்கே ரொம்பவும் பனியாய் இருக்கிறதென்றான் நோஅல். ஆனால் அவளின்றி கீழ்வரவேற்பறைக்கு அவன் செல்லமாட்டான். அவள் அவனுடன் சேர்ந்து கீழே சென்றாள். ஒவ்வொரு மேசையிலும் அமர்ந்திருந்த மது அருந்துபவர்களது சத்தமும், சூட்டும் டையும் அணிந்த ஒரு இளைஞனால் இசைக்கப்பட்ட பியானோவின் சத்தமும் சேர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது அங்கே. சிவப்பு மேசை விரிப்புகள் மேல் சிந்திய மதுவில் சறுக்கியபடி மதுக்குவளைகள் கிடந்தன. ஜோடியாக ஆடிக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில், கண்களை மூடி, உயர்த்திய கையின் சதை அலைவுற, தனியே ஆடிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.
நுழைவுப் பகுதிக்கு அருகிலேயே ஒரு நீண்ட டேபிளில் அவர்களுக்கான இடத்தை தெரிவுசெய்தான் நோஅல். அடர்நிற ஆடையணிந்த கம்பீரமான ஒரு முதியவருக்கருகே அவள் அமர்ந்தபோது லயத்துடன் அசைந்துகொண்டிருந்த அவரது கால் அவரது பளுமிக்க காலணியை அவளது மெல்லிய செருப்பின் மேல் இடிக்கும்படி செய்தது. அவள் அங்குவந்ததை அறிந்திராத அவர் திரும்பிப்பார்த்து மன்னிப்புக் கோரினார். பிறகு, இதற்கு முன்பே அவளை மிக நன்கு அறிந்திருக்கிறோமோ எனச் சோதிப்பது போலவும், இங்கேதான் இருந்த அவள் சற்று நேரம் வெளியே சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்துவிட்டது போலவும் நீண்டநேரம் அவளை உற்றுப்பார்த்தார். அவளுக்குக் குறுக்காகச் சாய்ந்த நோஅல் படகு எங்கிருந்து வருகிறது என அவரைக் கேட்டான். கோபன்ஹகனிலிருந்து காலையில் கிளம்பி இப்போது அங்கேயே திரும்பிக்கொண்டிருக்கும் சுற்றுலாப்படகு இது என்றார் அவர். அந்த ஒட்டுமொத்த நாளின் மகிழ்ச்சியும் அவரது இளஞ்சிவப்பு முகத்தில் பிரதிபலிக்க, வாழ்வின் முதல்நாளில் கொண்டிருந்திருக்கக்கூடிய இயல்பான லகுவான தன்மையை அவருடைய தோற்றம் கொண்டிருந்தது.
“அமெரிக்கரா?” என நோஅல்லை வினவினார் அவர். நோஅல் ஆமோதிப்பாய்த் தலையசைத்தான். “பறக்கும் இயந்திரத்தில் வந்தீர்களா?”என்றதற்கு, ஆமாம் எனத் தலையசைத்தபடி அவரது முகத்தை இவள் உற்றுப்பார்த்தாள். இரவில், வான்கூரைக்கடியில் நட்சத்திரங்களுக்குச் சற்றுக் கீழே காற்றில் கர்ஜித்தபடி நகரும் ஒரு இயந்திரத்தின் ஒளியை ஆச்சர்யத்துடன் உற்றுப்பார்க்கிற சிறுவனாக அவரைக் கற்பனை செய்துகொண்டாள். அந்த வானியலாளர் நட்சத்திரத்தைக் கண்டு அடைந்த ஆச்சர்யத்திற்கு சற்றும் குறைந்ததல்லாத ஒரு நிகழ்வு! ”நாங்கள் டைகோ பிராஹே அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தோம்” என்றாள். ”ஓ..ம். அங்கே ஒரு சுற்றுலாத்தலம் இருக்கிறது. எனது சகோதரி தேன்நிலவிற்கு அங்கே சென்றிருந்தாள்.”என்றார் அவர். “ஓர் இரவில் அவர் அதற்கு முன் அங்கே இருந்திராத ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைக் கண்டார். இளவரசர்களின் மரணத்தையும் மற்ற எல்லாவகை சோக நிகழ்வுகளையும் அறிவிக்கிற சகுனமாக அதை அவர் கருதினார். உங்களுக்குத் தெரியுமா? நமது விதி நட்சத்திரங்களின் கையில் இருப்பதாக அவர் நம்பியிருக்கிறார்.” இவளது பேச்சினால் அவர் ஆச்சர்யமடைந்ததை அவளால் உணர முடிந்தது. அந்நியர்களின் இது போன்ற சம்பாஷனைகளை அவர் உணவறையில் கேட்க வேண்டும். தீவிரமான விஷயங்களைப்பற்றி அந்நியோன்யமாக உரையாட வேண்டுமென்கிற அவர்களது ஆவல் மதுக்கோப்பையில் நுரைகள் போல் விரைந்து மேலெழுவதை அதில் அவர் கண்டுகொள்ள முடியும்.
“நீங்கள்…உங்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதா? என வினவினாள். “ம், ஆமாம். ஆமாம்.” அவர்கள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உடல்கள் அருகமைந்து விட்டதால் இருவருக்குள் சட்டெனப் பற்றிக்கொள்கிற நெருக்கத்துடன் இதேபோல் வேறு அந்நியர்கள் நோக்கிக் கொள்வதை அவள் பார்த்திருக்கிறாள். மிகவும் வயதானவர் இவர். இவளது கண்களிற்குள் பார்ப்பதைப் போல இதுவரை எத்தனை அன்புமுகங்களுக்குள் அவர் உற்று நோக்கியிருப்பார்? இவர் தொடர்ந்து வாழ்ந்து கொண்டேயிருக்க, அந்த முகங்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போயிருக்கும். பிறப்பதற்கு ஒரு காலம் இருப்பது போல் இறப்பதற்கும் ஒரு காலம்! அவர்களது இழப்பை ஏற்றுக் கொள்வதற்கு அது ஒன்றுதான் வழி, இல்லையா? உலகிலுள்ள எந்தவொரு வானமும் அதிலுள்ள எந்தவொரு நட்சத்திரமும் நமக்குச் சொல்லுகிற சேதியும் அதுதான், இல்லையா? அவர் இதை அறிந்திருக்க வேண்டும், இதயத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்திருக்க வேண்டும். சலசலப்பும் கூச்சல்களும் சப்தமான இசையும் சேர்ந்து ஒலிக்க, திடீரென மேசைமேல் ஏறி ஆடத்தொடங்கிவிட்ட இளைஞனை எல்லோரும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
மரங்கள் நிறைந்த தங்களது அமைதியான தெருவிற்குள் டாக்ஸியில் செல்லும்போது தான் பித்துப்பிடித்தது போல் நடந்துகொண்டோமோ, வானியலாளரின் மூடநம்பிக்கைக்கு இணங்கிவிட்டோமோ என யோசித்தாள் எலனர். வரவேற்பறையில் இவர்களுக்காக விளக்கெரிந்து கொண்டிருந்தது. அந்தச் சிறிய குடும்பம் ஏற்கனவே உறங்கியிருந்தது. பிரித்துப் போடப்பட்டிருந்த தனது கட்டிலில் படுத்துக் கொண்டவன் அவளை நோக்கிச் சாய்ந்து, நெற்றியிலிருந்த முடிக்கற்றையை விலக்கிவிட்டான். அவளது நெற்றியை தெளிவாக்குவதன் மூலம் அவளது சிந்தையை தெளிவாக்க முயன்றான். கைகளை உயர்த்தி இவனைப் பற்றிக் கொண்டவள், இவளது கண்களுக்காகவும் கைகளுக்காகவும் தன்னை வடிவமைத்துக்கொண்ட வானியலாளரின் சித்திரம் ஒன்றை வரித்துக்கொண்டாள். இளவயது பிராஹே, தனது கண்காணிப்புத்தளத்தில், புத்திசாலித்தனம் நிறைந்த அந்த வானையும் தவிர்க்க முடியாத அதன் சகுனத்தையும் பார்த்தவாறிருக்க, அதன் பிரதிபலிப்பு அவரது கண்களிலும், தடித்த விரல்களிலிருந்த ரத்தினக்கற்களிலும், ஊற்றிலிருந்து பொங்கும் நீரிலும், வானை நோக்கித் திரும்பியிருக்கும் ஒவ்வொரு இலைகளிலும் மிதந்தவாறிருந்தது.
இல. சுபத்ரா :
ஆங்கில இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். புனைவு மற்றும் அபுனைவு சார்ந்த மொழிபெயர்ப்புகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வரும் இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான ‘பாதி இரவு கடந்து விட்டது’ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இவரது கட்டுரைகள் மற்றும் மொழியாக்கங்கள் இலக்கிய இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.
ஜினா பெரியல் (1926-1999)
சுயத்திலிருந்தும் சுயமுனைப்பிலிருந்தும் வெளியேறுவதற்கான ஒரு வழியாகவே எழுத்தைக் காண்பதாகக் கூறும் ஜினா பெரியல் 20ம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர். பல சிறுகதைகள் நாவல்கள் மற்றும் நாடகங்கள் எழுதியுள்ள இவருக்கு Women in Their Beds: New & Selected Stories (1996) என்கிற சிறுகதைத் தொகுப்பு PEN/Faulkner Award, the National Book Critics Circle Award உள்ளிட்ட பல அங்கீகாரங்களைப் பெற்றுத்தந்தது. மரணமும், மனிதர்கள் உறவுகளில் எதிர்கொள்ளும் ஏமாற்றங்களும் இவரது பெரும்பான்மையான புனைவுகளின் மையமாய் இருக்கின்றன.
அவரது படைப்புகள்:
Novels
- The Descent (1960)
- A Conference of Victims (1962)
- The Son (1966)
- The Lights of Earth (1984)
Story collections
- Short Story (1958; a Scribner’s showcase volume for four then-new writers: Berriault, Richard Yates, Seymour Epstein and Bonnie Barnett).
- The Mistress and Other Stories (1965)
- The Infinite Passion of Expectation: Twenty-five Stories (1982)
- Women in Their Beds: New & Selected Stories (1996)