ஸ்ரீநேசன் கவிதைகள்

 

1.கவிதை ஆவது

சொற்களில் சொற்சேர்க்கையில் அதுவாக்கும் கருத்தில் விரவிய அணியில் அலங்காரத்தில் ஓசை நயத்தில் சொற்களிடைவெளியில் அங்குக் கண்சிமிட்டும் மறைபொருளில் பொருள்மயக்கத்தில் தொனியில் வடிவத்தோற்றத்தில் கற்பனையில் சிந்தனையில் வாசகனில் அவன் கூர்ந்த வாசிப்பில் அவனும் கவிஞனும் ஒன்றும் ஏதோ ஒரு புள்ளியில் என்றெல்லாம் தன் மின்னல் முகங்காட்டி அகம் கவர்ந்தாலும் எங்கிருந்தோ ஒளியூற்றாய் உருதிரண்டு விழித்த பின்னும் நிலைத்து மகிழ்த்தும் கனவுபோல் இடைவெளியில் இருண்மைக் காட்டிநமக்குப் பிடித்துப்போகும் மாயம் நிகழ்த்தும் ஒரு கவிதை.

 

2.கூதல்

மலைத்தளத்துக்குச் சிறுசுற்றுலா போனோம்

ஓர் இரவு தங்கிக் குளிரைக் கொண்டு திரும்புவதென

சூரியன் விழுந்ததும் முன்பனி எழுந்தது

குழாயைத் திறந்தால் நீர்ப்பனி கொட்டியது

சன்னலை இறுக்கச் சாத்தினோம்

கதவையும் அடைத்து மூடினோம்

கம்பளிகளோடு தூங்கப்போனோம்

கதகதப்பையும் பகிர்ந்து கொண்டோம்

விடியற்காலை விழிப்பில் குளிர் வாட்டி வதைத்தது

எங்கிருந்தோ எப்படியோ வருகிறது இக்குளிர்

நீ ஆதங்கப்பட்டாய்

பதில்கூறுவதுபோல ஒரு பறவை எங்கிருந்தோ குரலெழுப்பியது

ஆமாம் அங்கிருந்து வருகிறது குளிர்

பறவையின் குரல் நுழைந்து வருவதுபோல்

நான் ஆமோதித்தேன்.

 

 3.சாதாரண விஷயம்

காலை விழித்ததும் சன்னலில் தன்னைக் காட்டிக்கொண்ட

சோளப்பயிர்களைக் கண்டதும்

அவை இன்று அதிகப் பச்சைநிறத்தில் தெரிகிறது என

சாதாரணமாக நினைத்தேன்

இது ஒரு சாதாரண விஷயம்தான்

ஆனால் ஏனவை பச்சைநிறத்தில் தெரிகிறது என சிந்தித்தப்போது

நான் சாதாரண விஷயத்திலிருந்து அசாதாரண விஷயத்துக்கு மாறிவிட்டேன் என புரிந்துகொண்டேன்

எங்கோ வீசிக்கொண்டுபோய் அதுவே எதிர்பாராமல்

இந்தப்பக்கமாகத் திரும்பி வீசி வந்த காற்று

அசைவற்று அமைதி காத்திருந்த பச்சைப்பயிர்களை

உற்சாகத்தில் நடனம் புரியவைத்தும்

அவை தத்தமக்குள் சலசல சங்கீதத்தை முணுமுணுக்கச் செய்தும்

குளிர்காலையைப் பச்சிலையாய்க் கசக்கிக் கண்ணுள் பிழிந்தும்

புதிதாய் மலர்ந்த கதிரின் கொங்கு

மணந்து நாசி நிறைப்பதும்கூட நிகழ்ந்தது

நான் தொடர்ந்து இருக்கிறேன்

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து

உற்றறியச் செய்த ஒண்தொடிகளுள் கலந்தவாறு

தொடர்ந்து சிந்திக்கிறேன்

சாதாரணமாக இருந்து கொண்டு

அசாதாரணத்தை அனுபவித்துக்கொண்டு.

 

4.விரிச்சி

மணமாகி ஈராண்டைக் கடந்தவள்

புறக்கடையில் அமர்ந்து

கணவனுடையதோடு தன்னுடையதைச் சேர்த்து

துவைத்துக்கொண்டிருக்கிறாள்

குழந்தையின் ஆடையைத் துவைக்க

கண் திறக்காத காலத்தைச் சபித்துக்கொண்டு

வெளியே தெருவில் பேசிக் கடக்கும் குரல்கள்

கொண்டவளைப் பழிபோட்டுக் கழித்துவிட்டு

மறுமணத் திட்டமிடும் ஒருவனைக் குறித்தவாறு

துவைத்தும் அழுக்கு அகலாத துணிகளைத்

திகிலோடு மீண்டும் துவைக்கத் தொடங்குகிறாள்

ஆண்டு கழிந்து குரல்கள் திரும்புகின்றன

ஆண்மையற்ற அவன் வீட்டில்

இப்போது ஆண் மகவு அழுகிறதாம்

எவனோ செய்த சூழ்ச்சியை எவளோ வீழ்த்திய வீழ்ச்சியாய்

ஊருக்கே உரைத்த அப்பேச்சு

இவள் காதடைய

இப்போதே துவைத்து முடித்த

கந்தலாகாத் துணிகளைக் காயப்போட

முற்றத்துக்குக் கிளம்புகிறாள்.

 

5.வெளி யே வீடு

வீட்டுள் இருக்கிறேன்

சன்னலில் வந்துபேசும் மைனா என் நண்பன்

நாள்தோறும் வருகைதரும் கரிச்சான் குரலில் கவலை தீர்க்கும்

காக்கையைச் சொல்லத் தேவையில்லை

வீட்டுக் காவலாள்போல சுற்றிச்சுற்றிக் கரைந்து கொண்டிருக்கும்

சிட்டுக்குருவிக்கு நேரங்காலம் கிடையாது

கீச்சிட்டு கீச்சிட்டு என்னைக் கிளர்ச்சிக்குள்ளாக்கும்

கிளிகள் வானிலிருந்தே நலங்கேட்டுப் பறந்து விரையும்

தினமும் வந்து எனைப்போல்

தனிமையில் தலையாட்டி மெளனமாய் உரையாடும் ஓணான்

ஒன்றையும் காணா தின்று

தூரத்து மலையை ஏக்கத்துடன் பார்த்துக் காத்திருக்கிறேன்

மலையிலிந்து ஒரே தாவலில் வந்ததுபோல்

தீண்டிவிடும் நெருக்கத்தில்

திடுமென சன்னலில் வந்தமர்ந்தது

ஒரு குரங்கு

எதிர்பாரா இக்கணத்தில் இருவருக்கும் பதற்றம்

வேடிக்கையாக எனது இடப்புறமும் வலப்புறமும்

எட்டி எட்டிப் பார்க்கையில்

நான் அதைப் பார்க்கவில்லை

அதுதான் என்னை ஒரு காட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறது

என்பதாய் ஓருணர்வு

உடன் ஒரு பேருணர்வு

சன்னலில் முடியும் இவ்வீடு என் கூடு

மலைக்கப்பாலும் நீளும் வெளிமுழுதும் அவைகளின் வீடு.


ஸ்ரீநேசன்:

தமிழ் நவீனக் கவிஞர்களில் முக்கியமானவர்.

வாணியம்பாடியில் இருந்து ஐந்து கி.மீ. பயணத்தில் குந்தாணிமேட்டு பகுதியில் வசிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.