ஆசீர்வாதம்
ஒருவர் நெற்றியிலிருந்து இன்னொருவர் நெற்றிக்கு
நம் காய்ச்சல் தொற்றிக்கொள்கிறது.
வெளியே, உயிரோட்டமாக மின்னும் நட்சத்திரங்கள்
மற்றும் ஒரு படர்கொடி , அதன் உள்ளங்கை போன்ற இலைகளை நீட்டி நட்சத்திரங்களின்
லேசான வெளிச்சத்தைப் பிடிக்கிறது.
வெதுவெதுப்பான என் வீட்டில்,
அதன், வேறு யாருக்கும் தெரியாத முக்கியமான விஷயங்களைப் பற்றி நீ என்னிடம் சொல்கிறாய்,
வெகு தொலைவில்,
ஒரு ஆழமான நீர்ம குரல்
தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வார்த்தைகளில் மழையாகப் பொழிகிறது
மற்றும் ஒருவேளை உன்னை ஆசீர்வதிக்கிறது
இனிய சகோதரி,
என் அன்பு மற்றும் உன் சோகத்தின் பெயரால்,
உனக்கு,
என் வாழ்வின்
வெள்ளை இறக்கையைப் பரிசளிக்கிறேன்
பற்றின்மை
நீ, போய்விட்டாய்.
எப்படிச் சொல்வது என்று தெரியாத, என் இதயத்திலிருந்த,
அந்த வார்த்தையைக் கேட்க ஆசைப்படாமல்.
வாசலில், நம் முத்தம்
(மென்மையான, நீ அப்போதுதான் முகத்திற்கு பௌடர் போட்டிருந்ததால்)
படிக்கட்டிலிருந்து கண்ணைக் கூசும் வகையில் வந்த பெரிய வெளிச்சத்தில்
கிட்டத்தட்ட இரண்டாகப் பிரிந்துவிட்டது
நான் உட்கார்ந்திருந்தேன்
நீண்ட நேரம் என் மேஜையில்,
என் தாயின் சிறிய வயது உருவப்படத்தின் முன்பு ,
கண்ணாடியில் பிரதிபளித்த என் வாடிய, உற்சாகமிழந்த கண்களை வெறித்தனமாகப் பார்த்துக் கொண்டு.
உறக்கம்
ஓ வாழ்க்கையே ,
ஏன்
உன் பயணத்தில் என்னை சுமக்கிறாய்?
இன்னும்,
ஏன்
என் கனத்த உறக்கத்திலிருந்து என்னை இழுக்கிறாய்?
எனக்குத் தெரியும்
பூமி முழுவதும் கரைந்தோடும்
தூய்மையான நீரூற்றுகள்
அழுக்கடைந்த பனிக்கு
அதன் வெண்மையைத்
திரும்பத் தரமுடியாதென்று.
விடியலும்
தன் தளர்ந்த ஒளிக்கிரணங்களின் மந்திரசக்தியால்
இருளடர்ந்த வீடுகளுக்கு மத்தியில்
இருக்கும்
இறந்த தொட்டாற் சுருங்கிகளை
புதுப்பிக்க இயலாதென்று
ஆனால் தனியாக
மாலை உறைபனியில்
ஒரு பூ விற்பனையாளர் நடுங்கிக் கொண்டிருப்பார்
பயனற்ற
நீரூற்றுக்கருகில்
ஓ வாழ்க்கையே ,
ஏன் என் நம்பிக்கையிழந்த உறக்கம்
உன்னை பாரமாக அழுத்தவில்லையா?
எனக்குத் தெரியாது
நான் நினைக்கிறேன் நீ சிரிக்கும் விதம்
ஏற்கனவே கொஞ்சம்
நிறமிழந்த –
இந்தக்குவளை பூக்களின் மீது விழும்
சூரியனை விட இனிமையானது
ஒருவேளை அது நல்லது என்று நான் நினைக்கிறேன்
அனைத்து மரங்களும் –
என்னிடமிருந்தே விழுகிறது
ஒரு வெளிச்சம் மிக்க , வெறிச்சோடிய முற்றமாக நான் இருக்கிறேன்
உன் குரலுக்கு – அது புதிய தோட்டத்திற்கு
நிழலான பாதைகளைக் காட்டுவதாக இருக்கலாம்
புழுக்கம்
இன்று
என் சோகம் கட்டாயமாக என் கவனத்தை வேண்டுகிறது
என் உள்ளத்தில் படபடக்கும்
கனமாக
உப்பில் நனைத்த
வட ஆப்பிரிக்க தென் கிழக்கு காற்று போல
உள்ளது.
அப்பாவித்தனம்
வெப்பம் மிகுந்த சூரியனின் கீழ்
ஒரு குறுகிய படகில்
சிலிர்ப்பின்
அதிர்வலையை
என் முழங்கால்களுக்கு
எதிராக உணர
ஒரு இளம் ஆணின் நிர்வாணம்
குடிபோதையின் வேதனையோ
இரகசியமாக இரத்தம் சிந்தும்
ஆனால் என்ன இதொன்றும்
அவனுக்குத் தெரியாது.
சித்தம்பிரமை
நான் அதைப் பார்த்தேன், அந்த நொடியில் நீ உன் வயலினை,
வாசித்துக் கொண்டிருந்தாய்
உன் தலை கவிழ்ந்திருந்த நிலையில்:
உன் கண் இரப்பைகள் உன் முகத்தின் மீது ஏற்படுத்திய
இரண்டு மெல்லிய நிழல்களை
நான் பார்த்தேன்
நான்
நடுங்கிக் கொண்டிருந்தேன், ஒருவேளை
வயலின் கம்பிகளில், அழுகையில்
உன் ஆன்மா உன் கைகளில் செதுக்கிக் கொண்டிருந்த சரியான நேரத்தில்
மேலும் நான் உன்னை உன் விரல்களின் நுனியில் சந்தித்தேன்
அல்லது ஒரு வேளை உன் குழல் மீது விளையாடிக்கொண்டிருந்தேன்
ஊசி போல் வீசிய கடல் காற்றுடன் இணைந்து
ஒருவேளை மென்மையும் கச்சிதமும் நிறைந்த ஜில்லிப்பூங்கொத்தின் அழகில் மயங்கி விட்டேன்
ஒரு நாள் நீ உன் இசையை மீண்டும் துவங்கினாய் ;
மீண்டும் அழுதபடி உன் இசைக்கருவியை எடுத்துக்கொண்டாய்
மரணம் அதை உன்னுடன் இறுக்கமாக பிணைத்து விட்டது
அதன் மென்மையான கறுப்பு வெல்வெட் துணியில். நான் உன்னைப் பார்த்தேன் சகோதரா, அந்த நேரத்தில். ஆனால் நான் எங்கிருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை
ஒருவேளை நான் ஒரு பழைய சுவரின் பின்னால் இருக்கும் அடர்த்தியான,
முட்கள் நிறைந்த ஒரு பேரிக்காய் மரத்தின்
மிருதுவான கிளை மட்டுமேவா
என் நிர்வாணத்தின் பாடல்
என்னைப் பாருங்கள்: நான் நிர்வாணமாக இருக்கிறேன். அலைபாயும் என் குழல் கற்றை முதல்
மெலிந்த, விரைத்த பாதம் வரை
நான் முழுவதும் மெலிந்திருக்கிறேன், செழித்து வளர்ந்த தந்தத்தால் மூடியது போல
பாருங்கள்: என் தசை வெளிரி இருக்கிறது
இரத்த ஓடாமல் இருக்கிறது என்று நினைப்பார்கள்
சிகப்பு இரத்தமே காணமுடியாமல் இருக்கிறது
நரம்புகளின் மெல்லிய நீலநிறத்துடிப்புகள் இதயத்திலேயே மறைந்து விடுகிறது.
பாருங்கள் : எனது வயிறு எவ்வளவு காலியாக இருக்கிறது, இல்லாதது போல்
இருக்கிறது என் இடையின் வளைவு, ஆனால் முழங்கால்கள்
மேலும் கணுக்கால்கள் மேலும் எல்லா இணைப்புகளும்
உறுதியான நன்றாக வளர்ந்த எலும்புகளால் ஆனது போல் உள்ளது
இன்று நான் நிர்வாணமாக வளைந்து இருக்கிறேன் தெளிவான வெள்ளை நிற குளிக்கும் தொட்டியில் மேலும் நாளை ஒரு படுக்கையின் மேல் படுத்து இருப்பேன் யாராவது என்னை எடுத்துக் கொள்வார்கள் என்றால். ஒரு நாள் மரணம் என்னை அழைக்கும்பொழுது தனிமையில் அசைவுகளற்று நிர்வாணமாக பூமியின் கீழ் படுத்திருப்பேன்.
கனியமுதுஅமுதமொழி
அன்ட்டோனியா பாஸி:
1912ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். அவரது தந்தையார் ராபர்டோ பாஜி ஒரு வழக்குரைஞர். தாயார் லினா கவாக்னா சங்குலியானி டி குவால்டனா ஒரு கௌன்ட்டஸ்.
1922 ல் இவர் மன்ஸானி உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்தார். தன்னுடைய கிளாசிக்ஸ் ஆசிரியரைக் காதலித்தார் இந்தக் காதல் வாழ்க்கை 11 ஆண்டுகள் தொடர்ந்தது. பின் இவரது பெற்றோர்களின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. 1930 மிலான் பல்கலைக்கழகத்தில் பிலாலஜி படிப்பில் சேர்ந்தார். அங்கு விட்டாரியோ செரினி மற்றும் அவர் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களுடன் நட்பு பாராட்டி வளர்ந்தார்.1935 தனது இலக்கிய பட்டப் படிப்பை கஸ்டவ் பிளாபர்ட் பற்றிய ஆய்வுக்குப் பிறகு முடித்தார். 1938 ல் கார்னெட் என்ற பத்திரிகையில் பணியாற்றினார்
1938 ம் வருடம் டிசம்பர் இரண்டாம் நாள் பார்பிட்யூரெட் போதைப் பொருளை அதிகமாக எடுத்து தற்கொலைக்கு முயன்ற இவரது உடல் மிலான் நகரின் வெளியே சியாரவில் அப்பே என்ற இடத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அடுத்த நாளே இவர் மரணமடைய அவசரமாக பாஸ்ட்டுரோவில் இருந்த ஒரு சிறிய இடுகாட்டில் புதைக்கப்பட்டார். இதைத் தற்கொலை இல்லை என்றும் பாஸி நிமோனியாவால் காலமானார் என்ற இவரது குடும்பத்தினர் அறிவித்தனர். பாஸியின் உயில் பாஸியின் தந்தையாரால் அழிக்கப் பட்டது.
செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த இவர் தனது பதின்ம பருவத்தில் கவிதைகளை எழுதத் துவங்கினார். தனது நாட்குறிப்பேட்டில் அவரது அன்றாட செயல்கள் அவரது பயணங்கள் அவர் எடுத்த புகைப்படங்கள் அவர் மனதிலே ஊற்றெடுத்த கவிதைகள் அனைத்தையும் பதிந்து வந்தார்.
ஆனால் அவரது தந்தையார் இதை சிறிதும் விரும்பாததோடு பாஸியை கட்டுப்படுத்தினர்.
நவீன இத்தாலிய இலக்கிய உலகின் அசலான குரல் அன்ட்டோனியோ பாஸியின் குரல்.
தன்னுள் ஊற்றெடுக்கும் உணர்வுகளின் கொந்தளிப்பை அழகிய கவிதைகளாக அவர் எழுதிய வண்ணம் இருந்தார்.
அடெல் ரிக்கியோட்டி பாஸியின் கவிதைகள் அனைத்தும் அவரது வாழ்க்கைக்கும் கலைக்கும் இடையே நிகழ்ந்த தொடர் போராட்டத்தில் பரிமளித்த ஆன்மாவின் பாடல்கள் என்று வர்ணிக்கிறார்.
அவர் வாழ்நாளில் கிட்டத்தட்ட 300 கவிதைகளை எழுதினார் ஆனால் எல்லா கவிதைகளும் அவர் 26 வயதில் இறந்த பிறகு கடுமையான தனிக்கைக்கு உட்படுத்தியப் பின்னரே இவரது தந்தையார் அவைகளைப் பிரசுரித்தார்.
அவர் வாழ்ந்த காலத்தில் அச்சுக்கே வராத அவரது கவிதைகள் உயிர்ப்பானவை. ஒரு சின்னஞ்சிறு பெண்ணின் அக உலக சித்திரங்கள். அதனால் அவை அவரது இறப்பிற்குப் பிறகு அச்சிடப்பட்டிருந்தாலும் அவைகள் விரிவாகக் கொண்டாடப் பட்டன. பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டன.
வட லம்பார்டியில் நவீனத்துவத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மிலான் நகரில் இவர் வாழ நினைத்த வாழ்க்கையை வாழ முடியாதவராகவும் லம்பார்டியின் பின்புலத்தில் தான் எழுத நினைத்த சரித்திர நாவலை எழுத முடியாதவராகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழும் அவலம் அவருக்கு இருந்தது.
இத்தாலியாக இருந்தால் என்ன இந்தியாவாகத்தான் இருந்தால் என்ன மிலான் பெரு நகரமாக இருந்தால் என்ன மதராசப் பட்டிணமாக இருந்தால் என்ன பெண்கள் தாங்கள் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுக்கவோ அதில் முன்னேறவோ பெற்றோர்களால் கட்டுப்படுத்தப்படும் விதத்தில் எந்த வேறுபாடும் இல்லை என்பதையே இவரது வாழ்க்கை குறிப்புகள் சொல்லுகின்றன.
பெண்கள் கலை இலக்கிய உலகில் பிரவேசித்து ஜொலிக்க பாதைகள் எப்பொழுதும் அடைப்பட்டே இருந்தது என்பதற்கு இவர் வாழ்க்கையையும் ஒரு உதாரணமாகச் சொல்லலாம்