பாற்கடல்

ஞ்சுளா உண்டாகியிருந்தது பார்க்கவே மகா அம்சமாய் இருந்தது. பெண்களே கனவுப் பிறவிகள் தானே, என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டான் சபாபதி. ஆசைப்பட்ட பிடித்த விஷயம் ஒன்று நடந்து விட்டால் அவர்கள் முகம் மருதாணியிட்டாப் போல சிவந்து விடுகிறது. பெண்களால் ஒருபோதும் தங்கள் மகிழ்ச்சியை மறைத்துக்கொள்ள முடிவது இல்லை. துக்கத்தையும் தான்.

அவர்களுக்குக் கல்யாணம் ஆகி ஏழு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. ஆரம்பத்தில் அவர்களும் குழந்தைக்கு அவசரப் படவில்லை. இந்த இளமை வாழ்க்கையை சிறிது அனுபவிக்கலாம் என்று கவலையில்லாமல் இருந்தார்கள். ஓரிரு ஆண்டுகளில் அவனுக்கு, ஒரு குழந்தை இருந்தால் இந்த வாழ்க்கை முழுமை அடையும் என்று எதோ தோன்றியது. அவளுக்கும் அப்படி இருந்ததா தெரியாது. இக்காலங்களில் குழந்தையைத் தவிர்க்க வேண்டாம், இயல்புப்படி வந்தால் வரட்டுமே, என்ற அளவில் இருவருமே கட்டுகளை (உடைகளை?) தளர்த்திக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் குழந்தை பிறப்பது பிந்திக்கொண்டேயிருந்தது. ஒருதடவை, எல்லாம் கூடி வந்தாற் போல இருந்தது. அவளது மாதச் சுழற்சி தள்ளிப் போனது. சட்டென அவளுக்குள் சிறு ஒளி வந்தாற் போல ஆயிற்று. இருபத்தி நான்கு முதல் நாலோ ஐந்தோ நாள் வரை அவள் கணக்கு. முப்பது நாளாகி விட்டது. அவளுக்குள் ஒரு சந்தேகம். விளக்கேற்றி அவள் பெருமாளை நமஸ்கரித்தாள். அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெருமாள் கோவில் அமைந்த ஊர்தான். முப்பத்தி ஐந்து, நாற்பது… என நாள் கடந்தது. உடல் நலக்கேடாகவும் தெரியவில்லை. நாற்பத்தி ஐந்து தாண்டியதும் முதல் முறையாக உடல் சுணக்கம் காட்டியது. எது சாப்பிட்டாலும் கிறுகிறுவென்று உள்ளே சுழன்றடித்து, வாந்தி வந்தது. வயிற்றுக்குள் பிரளயம். திகைப்பு காட்டியது. சபா பயந்து விட்டான். அவளுக்கு என்னவென்றே சொல்லத் தெரியவில்லை. மகா சோர்வாக இருந்தாள்.

மசக்கை. அது அப்படித்தான், என்று புன்னகை செய்தாள் பெண் மருத்துவர். உடம்பில் வேறு ஓர் உயிர் வந்து இணையும் போது இந்த உடல் அதை முட்டித் தள்ளப் பார்க்கிறது. மாத்திரைகள் தருகிறேன், என்றாள் மருத்துவர். பத்து நாளில் மசக்கை கட்டுக்குள் வந்தது. அதற்குள் குழந்தை உருவாகி யிருக்கிறதா என்கிற டெஸ்ட் ரிசல்ட்டும் வந்தது. நல்ல சேதிதான். மஞ்சுளா உண்டாகியிருந்தாள்.

ஏற்கனவே தள்ளிப் போட்டுவிட்டோமோ என்கிற பயத்தில் இருவரும் இருந்தபோது செய்தி ஆசுவாசம் தந்தது. சட்டென அவளைத் தூக்கி ஒரு சுற்று சுழற்றலாம் போல அவனுக்கு சந்தோஷம். அவள் அவனைக் கிட்டே நெருங்கவே அனுமதிக்கவில்லை. டாக்டர் கவனமாக இருக்கச் சொல்லியிருக்கா, என்றாள் அவள். கிட்டே அழைத்து அவளுக்கு நெற்றியில் இதமான முத்தம் ஒன்று தந்தான் சபா. பியூர் வெஜிடேரியன், என்று சிரித்தான்.

மஞ்சளாவிடம் ஒரு தனிக்களை வந்தாற் போலத் தோன்றியது. அவனது பிரமையாகவும் இருக்கலாம். அலுவலகத்தில் அவனைப் பார்த்து விட்டு, என்ன மாப்ளை, கொஞ்சம் உற்சாகம் கூடினாப்ல இருக்கே, என்றுகூட கேட்டார்கள். அவன் வாய்வரை வந்த பதிலை அடக்கிக் கொண்டான்.

ஆனால் பத்து இருபது நாளில் அந்தக் கரு கலைந்து விட்டது. அவளுக்கு திடீரென்று ஜுரம் கண்டு இரவில் இரத்தப் போக்காகி விட்டது. மஞ்சுளா முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை. அழவெல்லாம் இல்லை அவள். தானே உள்ளுக்குள் பயந்தாற்போல இருந்தாள். தான் தன்யோசனை என்று அவள் சுருக்கிக் கொண்டாளா என்று வருத்தமாகி விட்டது. “இங்க பார் இவளே. நமக்கு ஒண்ணும் வயசாகி விடல்ல. இதோட எல்லாம் முடிஞ்சிட்டா மாதிரி, நமக்கு குழந்தையே பிறக்காதுன்ற மாதிரி நீ பயந்துக்றே. அது தேவையே இல்லை” என்றான் அவன் அவளை கையைப் பிடித்துக் கொண்டு.

சரி, என்று தலையாட்டிவிட்டு அவன் கைகளை அவள் விலக்கி விட்டாள்.

ஆனால் தன்னைப்போல அவள் தெளிவடைந்து விட்டதாகத் தெரிந்தது. அவன் அடிக்கும் ஏ ஜோக்குகள் அவளுக்குப் பிடிக்கும். ஜோக்குகளில் நான்வெஜ் வகை அது. அவள் இப்போது அவற்றுக்கு மறுபடியும் புன்னகை செய்ய ஆரம்பித்திருந்தாள். இருவருமாய் அவளுக்குப் பிடித்த ரஜினி படம் ஒன்றுக்குப் போய்வந்தார்கள். வரும் வழியில் வெளியே பிரியாணி சாப்பிட்டார்கள். அந்தப் பிரபல உணவுவிடுதி அவளுக்குப் பிடிக்கும். வீடு திரும்பும் வழியில் லேசான மழை இருந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்திருந்ததால் கொஞ்சம் மழை வெறிக்கக் காத்திருந்தார்கள். பத்து நிமிடமாக மழை ஓயவும் இல்லை. பெரிதாய்க் கொட்டி முழக்கவும் இல்லை. பரவால்ல, நனைஞ்சிக்கிட்டே போயிறலாம்… என்றாள் மஞ்சு.

மழையிரவில் தெருவே ஆள் நடமாட்டமின்றிக் கிடந்தது. அதிக வாகனப் போக்குவரத்தும் இல்லை. மழைக்கு குளிரெடுக்க பின் பக்கமிருந்து அவள் அவனைக் கட்டிக் கொண்டது அவனுக்குப் பிடித்திருந்தது. வீடு வந்து அவன் முன்னாலேயே அவள் உடை மாற்றிக் கொண்டாள். அவன் நிமிர்ந்து பார்த்தபோது அவள் புன்னகை செய்தாள். அந்தநாள் முற்றமுழுக்க அவனுக்கு நினைவில் இருந்தது. இருவருமே விரும்பி அருகில் வந்த நாள். ஹா என அவள் சிலிர்த்து மல்லாந்தாள். அவனுக்கும் திருப்தியான நாள் அது. இருவருமே குழந்தைக்கு ஆசைப்பட்ட நாளாக அது தன்னைப்போல அமைந்திருக்கலாம். அந்தக் கனவு அந்தக் கணத்தில் ஆசிர்வதிக்கப்பட்டது போலத்தான் இருந்தது இருவருக்கும்.

மஞ்சளா முழுகாமல் இருந்தாள். அவள் சொல்லாவிட்டாலும் முப்பதாவது நாளில் அவன் விசாரிக்க அவள் வெட்கத்துடன் தலையாட்டினாள். அவனும் நாட்களை எண்ணிக் கவனித்தது அவளுக்குப் பிடித்திருந்தது. முன்பு போல பரபரப்பு இல்லை. அதே பெண் மருத்துவர். சோதனை முடிவை வாங்கிப் பார்த்தாள். “வெரி குட்” என்றாள். என்னவோ அவள் வைத்த பரிட்சையில் அவர்களது பிராக்ரஸ் ரிப்போர்ட் பார்த்த மாதிரி. இருவருக்குமே மகிழ்ச்சியாக இருந்தது.

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள். குழந்தை இல்லை என்பது ஏக்கமாய் அவளை உணர வைத்ததா? அத்தனைக்குத் தெரியாது. கை நழுவிய ஒரு கணம் திடுக்கிட வைத்து விட்டது உண்மைதான். அது கடந்த காலம். குழந்தை ஆணா பெண்ணா என்றே தெரியுமுன்னே கலைந்து விட்டது. சபா நல்ல பிள்ளை. அவளோ அவனோ ஒருவரை ஒருவர் குறை சொன்ன மாதிரியோ, சற்று அதிகமாகக் கவலை காட்டிய மாதிரியோ இல்லை. உண்மையில் அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடியும். அவளை அவனும் புரிந்து கொள்ளக் கூடியவன்தான்.

இந்த முறை மசக்கை வரவேயில்லை. இரண்டு மாதம் தாண்டியதும் தான் அவர்கள் நண்பர்களுக்கும் தங்கள் அம்மா அப்பாவுக்கும் தகவல் சொன்னார்கள். உயிருக்குள் உயிர் வளர்வது என்பதே புதிரான புதிய விஷயமாக இருந்தது. ஸ்கேனில் குழந்தை கர்ப்பப்பையில் இருப்பதை உறுதி செய்து கொண்டார்கள். மாதா மாதம் ஒருமுறை மருத்துவரிடம் போனார்கள். அலுவலகத்தில் எத்தனை வேலை இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது வேலை நேரத்தில் அவன் அவளைக் கூப்பிட்டுப் பேசினான். அவன் பேசாவிட்டாலும் அவள் பேசுவது என்று வைத்துக் கொண்டாள். இருவர் அலுவலகமும் வெவ்வேறு இடங்கள். அவன் அவளை அவளது அலுவலகத்தில் இறக்கி விட்டுவிட்டு தன் அலுவலகம் போவான். திரும்ப அலுவலகம் முடிந்து அவளைப் போய் அழைத்துக் கொண்டு வீடு திரும்புவான்.

உள்ளே கரு வளர்வது என்பது தாயின் பூரிப்பு தான். மஞ்சுளாவிடம் ஒரு விகசித்த ஒளி இருந்தாற் போலிருந்தது.  அவள் சிரித்தால் அந்த மூக்குத்தி அப்படி வெட்கங் காட்டியது- கன்னங்கள் பொலிந்து பளபளத்தன. குழந்தை உள்ளே வளர ஆரம்பித்த கணம் உடம்பே சற்று நீர்ப்பாகமாக ஆகி விடுகிறது போலும். வாழ்க்கை ஒரு பிரிய வட்டத்துக்குள் இயங்குவதாக ஆகியிருந்தது.

மஞ்சுளாவின் அப்பா அம்மா வைகுண்டபதியில் இருந்து வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். அவர்கள் உற்சாகத்தைப் பார்த்தால் அவர்களுக்கே இளமை திரும்பி விட்டது போலத் தெரிந்தது- “ஒவ்வொரு தடவை மஞ்சு ஃபோன் பண்ணற போதும் இந்தச் செய்திதான் நாங்க எதிர்பார்த்தோம்” என்றாள் மாமியார். மாமனார் அதிகம் எப்பவுமே பேச மாட்டார். “பெண்ணை எப்ப சொல்றீங்களோ வந்து அழைச்சிட்டுப் போறோம் மாப்ள…” என்றார் மாமனார். அவனுக்கும் அவளுக்கும் சென்னையிலேயே பிரசவத்தை வைத்துக் கொள்ளலாம் என்று இருந்தது. நகரம் மருத்துவ வசதி மிக்க ஊர். இதை விட்டுவிட்டு… “அதெல்லா இல்ல. எங்க ஊரும் இப்ப மின்ன மாதிரி இல்ல. எவ்வளவோ முன்னேறியாச்சு…” என்றார் மாமனார். என்றாலும் அதற்கு மேல் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை.

பெண்ணை உட்கார்த்தி வைத்து மருதாணி இட்டு விட்டாள் அம்மா. நாலைந்து மாதங்கள் தாண்டிய நிலையில் இப்போது சற்று வயிறு எடுப்பு தந்திருந்தது. அம்மாவே சமையல் வேலைகள் பார்த்துக் கொண்டாள். மாமியார் அடுப்படியில் தோசை வார்க்க மஞ்சுளா ஒரு தட்டில் எடுத்துப் போய் கணவனுக்குப் பரிமாறினாள். பரமபத விளையாட்டில் சிற்றேணி ஒன்றில் அவள் ஏறியிருந்தாள். வாழ்க்கை மௌனமான கணக்குகளுடன் அமைதியாக இயங்கினாற் போல ஆயிற்று.

அவனது பெற்றோர்களும் அடுத்தவாரம் வந்திருந்தார்கள். அவர்கள் வந்து பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. ஒவ்வொரு முறை அவனும் அவளும் கிளம்பும் போதும் எதாவது தடங்கல் அமைந்து போனது. இப்போது செய்தி கேள்விப்பட்டதும் அவர்களுக்கு ஊரில் இருப்பு கொள்ளுமா என்ன? அவர்களை வரவேற்க மஞ்சுவும் அவனும் ரயில் நிலையத்திற்கே போய்க் கூட்டி வந்தார்கள். நண்பனின் காரை எடுத்துப் போயிருந்தான் சபா. ரயிலில் இருந்து இறங்கும் போதே எப்படி இருக்கேம்மா… என்று அவளைத் திரும்பச் சொல்லி தலைநிறையப் பூ வைத்தாள் சபாவின் அம்மா.

வளைகாப்பு மிகச் சிறப்பாக நடந்ததும் அவள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டாள். இப்போது குழந்தையின் அசைவு உள்ளே தெரிய ஆரம்பித்திருந்தது. சட்டென அவள் அவன் கையைப் பிடித்து வயிற்றில் வைத்துக் காட்டினாள். “குழந்தை உதைக்கிறதா?”, என்று கேட்டான் அவன். “வலிக்கிறதா?…” என்றான் கவலையுடன். ரொம்ப பலவீனமாக இருந்தாள் மஞ்சுளா. உதவிக்கு என்று அவளது அம்மா வந்துவிட்டாள். ரொம்ப பக்தி சிரத்தையான ஆள் அவள். தினசரி அவனும் அவளும் எழுந்துகொள்ளு முன்னமே அவள் எழுந்து கொண்டுவிடுவாள். குளித்து முடித்து தலையில் ஈரத்துண்டுடன் பால்கனியில் இருந்து வெளியே பார்த்து சூரிய நமஸ்காரம் செய்வாள். வாயில் சுலோகங்கள் புரண்டபடி இருக்கும். சங்கட ஹர சதுர்த்தி, பிரதோஷம் விவரம் எல்லாம் அவளுக்கு விரல் நுனியில் இருந்தது. கிராமத்துக்காரி என்றாலும் வீட்டில் இருந்த கம்பியூட்டரை இயக்க அவளுக்குத் தெரிந்தது. வெளியே போக வகை இல்லை என்றால் யூ டியூபில் அவள் பிரதோஷ பூஜைகள் பார்த்தாள். கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் கேட்டாள். அபிஷேக் ரகுராம், சிக்கில் குருசரண் என்று எல்லாம் இன்றைய பட்டாளம். அவனும் அவளும் அலுவலகம் போய்விட்டால் கச்சேரி கேட்டபடி கூடவே பாடுவாளாய் இருக்கும். அவளிடம் தனி அலைபேசி இருந்தது. அவளும் தினசரி மஞ்சுவோடு அலுவலகத்துக்குப் பேசினாள்.

அம்மாவும் கூட இருந்தது மஞ்சுளாவுக்கு ரொம்ப உதவி. அவளை வேலையே செய்ய விடவில்லை அம்மா. “இந்த சமயத்தில் அவளும் குனிஞ்சி நிமிர்ந்து வேலை செய்யணும் மாமி” என்றான் சபா. “இருக்கட்டும். அதான் இத்தன்னாள் ஆபிசில் செஞ்சாச்சே” என்றாள் மாமியார். ஒரே பெண் அவர்களுக்கு. அவனை விட பெரியவர்கள் அந்தக் குழந்தையை வரவேற்கத் தயாராகி விட்டாற் போல இருந்தது.

கால் பாவாமல் நடமாடினான் அவன். வாழ்வின் அறுசுவையில் இனிப்புச் சுவையா இது என்று திகட்டியது. இப்போது மல்லாந்து அவள் படுக்க முடியவில்லை. ஒருக்களித்து தான் படுக்கணும். இல்லாட்டி, சில சமயம் குழந்தை நெஞ்சுக்கு ஏறி சிரமப் படுத்தும்… என்றாள் மாமியார். பெரியவர்கள் கூட இருப்பது எத்தனை உதவி, என நினைத்துக் கொண்டாள் மஞ்சு. அதுவும் ஏற்கனவே பெத்து இறக்கியவள் அம்மா. சனிக்கிழமையானால் தவறாமல் அவளை எண்ணெய் முழுக்கு போடச் சொல்கிறாள்.

பெண் மருத்துவர் பிரசவ நாள் என்று ஒரு தேதி சொல்லியிருந்தாள். குடும்பத்தில் எல்லாருக்குமே அந்த நாள் மேல் ஒருகண் இருந்தது. தினசரி காலண்டரைக் கிழிக்கையில் பிரசவத்துக்கு இன்னும் எத்தனை நாள் பாக்கி என்கிற யோசனை தவிர்க்க முடியவில்லை.

மஞ்சுளாவின்வின் வயிறு பெரிதாகி விட்டது. வயிறு எத்தனைக்குப் பெரிசா இருக்கோ அத்தனைக்கு அத்தனை பெண் குழந்தைன்னு சொல்வாங்க, என்றாள் மாமியார். கிராமங்களில் அப்படிப் பேசிக் கொள்வார்கள் போல, என நினைத்துக் கொண்டான் சபா. அவன் மாத்திரம் தனியே அலுவலகம் போய் வந்தான். அங்கிருந்து தினசரி ஒருமுறை வீட்டுக்கு மஞ்சுவுடன் பேசினான். உலகம் மஞ்சுளாவைச் சுற்றி வந்தாற் போல ஒரு பிரமை ஏற்பட்டது அவளுக்கு. குழந்தையுடன் இந்நாட்களில் அவள் மனப் பூர்வமாய்ப் பேசிக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டாள். நிறைய நல்ல நல்ல பாடல்களை வீட்டில் அவள் காதுபட வைத்தாள் அம்மா. குழந்தை எல்லாவற்றையும் வயிற்றில் இருந்தபடியே கேட்கும்… என்றாள் அம்மா. கிராமங்களில் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள், என மஞ்சுவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. மெல்ல வயிற்றைத் தடவியபடியே புன்னகை செய்து கொண்டாள்.

வீட்டில் அவள் ராணியாக உணர்ந்த கணங்கள். அவளது குற்றேவல்களுக்குத் தயாராய் அம்மாவும் அவனும் காத்திருப்பதாகப் பட்டது. தாய்மை பெண்ணின் பரிபூரணம்.  உன் கர்ப்பகிரகத்தில் கடவுள் குடி வந்தாகி விட்டது இப்போது, என்றான் ஒருமுறை சபா. வேடிக்கையாய் இருந்தது எல்லாமும். அவளைச்சுற்றி உலகம் இயங்குகிறதா, அல்லது அவள் தன்னைச் சுற்றி உள்ள உலகத்தை இயக்குகிறாளா என்பதே நிச்சயமாய்த் தெரியவில்லை.

இந்தமுறை பெண் மருத்துவரைப் பார்த்தபோது அவள் வயிற்றித் தடவிப் பார்த்து விட்டு குழந்தை நல்லா இறங்கிக் குடுக்கறாப்ல இருக்கும்மா, என்றாள். என்ன நல்லா முட்டறதா?… என்று கேட்டாள். சில சமயம் வலி துடிச்சுப் போறது டாக்டர், என்றாள் அவள். எல்லாம் நடந்த அடுத்த நொடி குழந்தை எதுவும் நடக்காத மாதிரி உள்ளே அமைதி காக்கிறது. மருத்துவர் புன்னகைத்தாள். இன்னும் ஒரு வாரத்தில் பிரசவம் ஆயிரும் போல இருக்கே… என்றாள். அவள் சொன்ன கெடுவுக்குக் கிட்டத்தில் வந்திருந்தது காலம்.

இரவுகளிலோ பகலிலோ திடீரென்று மஞ்சுவுக்கு வலி வரும். படுக்கையில் எழுந்துகொண்டு உடலைத் திருக ஆரம்பிப்பாள். பக்கத்து அறையில் இருந்து மாமியார் ஓடி வருவாள். எப்பவும் ஃபிளாஸ்கில் வெந்நீர் இருக்கும். பெரிதாய் ஒரு பூகம்பம் கிளம்பினாற் போல உலகம் திகைத்து அதிர்வு காட்டி பின் அடங்கி விடும். குழந்தை அலுப்புடன் திரும்ப உள்ளே தூங்க ஆரம்பித்து விடும். வெந்நீரை அருந்திவிட்டு மஞ்சு திரும்பப் படுத்துக் கொள்வாள்.

பிறகு குழந்தை முற்றிலும் சுவாதீனப்பட்டு வயிற்றில் கீழே இறங்க ஆரம்பித்ததை அவள் உணர்ந்தாள். பல்வேறு வலிக் குறிப்புகளை கண் செருக முனகினாள் மஞ்சு. அவனுக்குப் பதட்டமாய் இருந்தது. “நான் பாத்துக்கறேன் மாப்ள. நீங்க அடுத்த ரூமுக்குப் போங்க” என்றாள் மாமியார். அவனது நண்பன் ராமபத்ரனிடம் கார் இருந்தது. “ஒரு வார்த்தை சொல்லு இவனே. ராத்திரின்னாலும் பரவால்ல. கூப்பிடு. நான் காரை எடுத்துக்கிட்டு உடனே வந்திருவேன்”, என்று சொல்லியிருந்தான் ராமபத்ரன்.

சொன்னபடி ராமபத்ரன் வந்துவிட்டான். அம்மாவும் பெண்ணுமாய் பின் பக்கமாக ஏறிக் கொண்டார்கள். தானறியாமல் மனதில் கடவுளிடம் பிரார்த்தனைகள் வைத்துக் கொண்டிருந்தான் சபா. அவனுக்கே அது ஆச்சர்யமாய் இருந்தது. ஒரு உணர்வு வியூகத்தில் இழுக்கப்பட்ட கணங்கள் அவை. அவள் பின் இருக்கையில் என்னென்னவோ முனகிக்கொண்டே வந்தாள். “ஆச்சி. இன்னிக்கு பிரசவம் ஆயிரும் போல இருக்கு” என்றாள் மாமியார்.

அவர்களை இறக்கி விட்டுவிட்டு ராமபத்ரன் கிளம்பிப் போயிவிட்டான். குழந்தை பிறந்தபின் வந்துபார்ப்பதாகச் சொல்லிப் போனான். அவரவர் காரியம் அவரவருக்கு. இதுவரை அவன் செய்த உதவியே பெரிது… என நினைத்துக் கொண்டான் சபா.

பிரசவம் ஒரு நிகழ்வு. வலி அதன் வழி. பெண்கள் இதைக் கடந்துதான் வரவேண்டும். இங்கே ஆண்கள் வெறும் சேவகர்கள். கைகட்டி அவர்கள் பதறித் துடித்து, காத்திருக்கத்தான் வேண்டும். அவனால் எப்படி உதவ முடியும் அவளுக்கு? அழுகை என்று இல்லை. என்றாலும் வியர்த்தது அவனுக்கு. உள் படபடப்பை அடக்க முடிந்தால் நல்லது.

பிரசவம் தாய்மையின் விஸ்வரூபம், என நினைத்துக் கொண்டான். பிரசவத்துக்குப் பின்னரே பெண் விஸ்வரூபம் எடுத்து விடுகிறதாக அப்போது நினைத்துக் கொண்டான். அன்பு மகா சமுத்திரம் அது. பாற்கடல் தேவி அல்லவா அவள்? மருத்துவமனை செல்ல அதிகப் போக்குவரத்து இடைஞ்சல் இல்லை. நல்லவேளை, நான் கார் ஓட்டவில்லை என்று இருந்தது சபாவுக்கு. வாழ்வின் சின்ன நெருக்கடி இது. இதற்கே எனக்குத் தாளவில்லை, என ஒரு புன்னகையுடன் நினைத்துக் கொண்டான். அவன் அப்பா அம்மாவுக்கு நான்கு குழந்தைகள். நான்கு பிரசவம்… யப்பா, என்று மலைப்பாய் இருந்தது. இப்பவெல்லாம் ஒரு பிரசவம், ஒரு குழந்தையை வளர்ப்பது என்பதே மலைப்பாகிவிட்டது.

மஞ்சுளாவுக்குத் தனி அறை உடனே தந்தார்கள். முழுவதும் பிரசவம் பார்க்கும் ஆஸ்பத்திரி அது. பெண் மருத்துவர் மாடியிலேயே இருந்தாள். அவசரம் என்றால் அவள் உடனே கீழே வந்து கேஸ் பார்த்தாள். எத்தனை ராத்திரியானாலும் மெலிதான மேக்அப்புடன், புன்னகையுடன் (அதுவும் மேக்அப் தானே?) புழங்கினாள். நோயாளியின் நம்பிக்கை நட்சத்திரம் அவள்தானே, என்று இருந்தது.

காரில் இருந்து இறங்கும்போதே அவளுக்கு, மஞ்சுவுக்கு வலி மந்தித்து விட்டது. குழந்தை என்ன நினைத்ததோ, திரும்ப உறங்கப் போயிருக்கலாம். ஆனால் நன்றாக இப்போது இறங்கி இடுப்புக்கு நகர்ந்திருப்பதாக அவளே உணர்ந்தாள். வெளி வருவதற்கான முயற்சிகளை அதுவே கைக்கொள்ளும் என்று இருந்தது. உள்ளே போரடித்து விட்டதா உனக்கு என சிரிப்புடன் நினைத்துக் கொண்டாள். குழந்தை முகத்தைப் பார்க்க அவளுக்கு ஆவலாய் இருந்தது. இன்னும் சில மணி நேரங்கள் ஒருவேளை என நினைத்துக் கொண்டாள். குழந்தைதான் அதை முடிவு செய்ய வேண்டும்…

என்ன வலி வலிக்கிறது. இடுப்பெல்லாம் பளீர் பளீர் என்று வலி மின்னுகிறது. இத்தனை சிறிய இடுப்பை விரித்துப் பிளந்துகொண்டு சிசு வெளிவர முட்டி மோதிப் பிரயத்தனப் படும் என்று தெரிந்தது. உலகம் வலிகளால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. உழைப்பு இல்லாமல் போராடாமல் வெற்றி இங்கே இல்லை. வலி என்பது வெற்றிக்குத் தோரணம். சில விஷயங்களின் அருமையைப் புரிந்து கொள்ள இந்த ஊடுபாதையிலான வலி அவசியம் என்று தான் தோன்றியது.

ஒரேமாதிரி உட்கார்ந்திருக்க முடியவில்லை. சிறிது இப்படி அசைந்து நகர்ந்து கொண்டாள். பிறகு எழுந்துகொண்டு சிறிது நடமாடினாள். திடீரென்று உடம்பையே ஒரு வெட்டு வெட்டினாற் போல வலி உயர்ந்தெழும். அப்படியே கட்டிலைப் பற்றி முன்குனிந்து பல்லைக் கடித்துக்கொண்டு கண்ணை மூடினாள். கூடவே இருந்தான் சபா. அவனுக்கு ரொம்பப் பாவமாய் இருந்தது. அவள் தற்செயலாகத் திரும்பி அவனைப் பார்த்துவிட்டு பிறகு புன்னகை செய்தாள்.

“ரொம்ப வலிக்கறதா இவளே?”

“பரவால்ல…” என்று புன்னகைத்தாள் மஞ்சு. மாமியார் “காபி சூடா ஃபிளாஸ்க்ல இருக்குடி. வேணா தரட்டுமா?” என்று கேட்டாள். “ம்…” என்னுமுன் ஒரு மல்யுத்தப் புரட்டலாய் திரும்ப உள்ளே முட்டியது வலி. கண்ணில் நீர் கொட்டிவிட்டது அவளுக்கு. “நீங்க வேணா வெளில சேர் இருக்கு போயி உட்கார்ந்திருங்க” என்றாள் அவனிடம் மாமியார்.

அறைக்குள்ளேயே இங்கும் அங்குமாக நடந்தாள் மஞ்சு. அறை வாசல் பக்கம் வந்து நின்று அவனைப் பார்த்தாள். அவன் சட்டென எழுந்து கொண்டான். அப்படியே அவனை உட்கார்ந்திருக்கும்படி கை காட்டினாள். பக்கத்து அறையும் திறந்திருந்தது யாரோ தம்பதிகள் அங்கே வந்து அட்மிட் ஆகியிருந்தார்கள். சின்னபெண் அது. கல்யாணம் ஆகி சீக்கிரமே குழந்தை உண்டாகி விட்டது போலத் தோன்றியது. அவள் முகமே குழந்தையின் மிருதுவுடன் இருந்தது. பக்கத்து அறைப் பெண்ணும் தன் அறையில் இப்படி அப்படி நாடகக்காரி போல நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. இந்த நாடகத்தில் மாத்திரம் கிளைமாக்சில் திரை போட்டு விடுவார்கள்.

மஞ்சு பார்த்தபோது அந்தப் பெண் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தாள். மஞ்சுவும் தலையாட்டி அதை ஏற்றுக் கொண்டாள். அந்தப் பெண் கூட அவள் கணவன் இருந்தான். ரொம்பச் சின்னப் பையன் போலத் தெரிந்தான். காதல் திருமணமாக இருக்கலாம்… அவனும் சிறிது பயந்திருந்தான். எங்கள் இருவரில் யாருக்கு முதலில் பிரசவம் ஆகும் என்று தெரியவில்லை, என மஞ்சு நினைத்துக் கொண்டாள். எனக்கு சாதாரண டெலிவரிதான் ஆகும் என்று தோன்றியது. ஏனெனில் மஞ்சுவுக்கு குழந்தை வெளிவர என்று முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டது.

இப்போது சபா பக்கத்து அறைக்கு வந்திருந்தான். அந்த தம்பதியோடு பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பெண் அவள் கணவனின் தோளில் சாய்ந்தபடி நின்றிருந்தாள். “கூட யாரும் வரல்லியா?” என்று சபா அவர்களைக் கேட்டான். “இவங்க பாட்டி வந்திருக்காங்க. எதோ விசாரிக்கப் போனாங்க” என்றான் அந்தக் கணவன். நல்ல கனிந்த பாட்டி அந்த அம்மாள். பெண்ணுக்குத் திருநீறு பூசிவிட்டு அவளைத் திரும்ப நடக்கச் சொன்னாள். பாட்டியின் புடவைக் கட்டே தெற்கத்திக் கட்டாய் இருந்தது.

சபாவைப் பார்த்துவிட்டு பாட்டி புன்னகை செய்தாள். “எங்க காலம் மாறி இல்ல இப்ப. பிரசவம்னு அந்தக் காலம் மாதிரி பயம் இல்ல. டாக்டர்கள் ரொம்பத் தேவைன்னா சிசேரியன் பண்ணிர்றாங்க” என்றாள். அவன் தலையாட்டினான். என்றாலும் நார்மல் டெலிவரி ஆகணுமே என்று அவன் கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.

பிரசவம் பெண்ணை மகத்துவப் படுத்தி விடுகிறது. பரமபத ஏணியின் பெரிய ஏற்றம் இது. தான், தன் குழந்தை… இருவர் மாத்திரமேயான உலகம் அது. அவளுக்கும் குழந்தைக்குமான ஓர் உணர்வுப் பரிமாற்றம் அது. வலிப் பரிமாற்றம். முற்றிலும் அவள் உள்ளேயிருந்து… அவளாகவும் அவள் அல்லாமலும் ஓர் உயிர் வெளியே வந்து வாழ்க்கைப் பயணம் மேற்கொள்வது என்பது பெரும் அதிசயம் தான். ஆண்களுக்கு இந்த அதிசயம் நினைவு அளவிலேயே கூட, கனவு அளவிலேயே கூட சாத்தியம் அற்றது.

மஞ்சுவின் வயிற்றில் குழந்தை தங்கிய நாள் முதல் இதோ இந்த நிமிடம் வரை, சபா அனுபவித்த அத்தனை உணர்ச்சிகளையும் இந்தப் பையனும் கண்டிப்பாக அனுபவித்துக் கடந்திருப்பான் அல்லவா, என நினைத்துக் கொண்டான். என்னென்னவோ காலூன்றாத நினைவுகளில் அவன் கடல்படகு போல தள்ளாட்டப் பட்டிருந்தான். வெளி வராந்தாவில் சிறிது நடந்தான். அவனே பிரசவ வலி கண்டாற் போல. கால்கள் துவண்டன. அவளுக்கு எப்படி இருக்கும், என நினைக்க கால்கள் நடுங்கின.

அந்தப் பெண் பெயர் சித்ரா, என்றார்கள். அவள் கணவன் ராஜ்குமார். பாட்டி ஒன்றும் கவலை காட்டவில்லை. அந்தக் குடும்பத்தின் பெரிய தலை அது. அவர்கள் மூவருமாய்க் காரில் வந்து விட்டார்கள். மற்ற உறவுக்காரர்கள் அடுத்து பார்க்க என்று வருவார்களாய் இருக்கும்.

சித்ராவா, மஞ்சுவா யார் முதலில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவது… என்று யோசித்துக் கொண்டிருந்த போது, பெண் மருத்துவர் வந்து மஞ்சுவைப் பார்த்தாள். வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். மஞ்சுவுக்கு வலி விட்டுவிட்டு வர ஆரம்பித்திருந்தது. முதலில் தள்ளித் தள்ளி வந்து கொண்டிருந்த வலி இப்போது சீக்கிரம் சீக்கிரம் எடுத்தது. மருத்துவர் தலையாட்டிக் கொண்டாள். நர்சைக் கூப்பிட்டு பிரசவ அறையைத் தயார் செய்யச் சொல்லி விட்டாள்.

ஸோ தட்ஸ் இட். பெண்களுக்குக் கல்யாணத்துக்குப் போலவே பிரசவத்துக்கும் முகூர்த்தக் கணம் உண்டு. முன்னது நாம் நிர்ணயிப்பது. பின்னது கடவுள் நிர்ணயம் செய்வது. நடந்து வர முடியுமா?… ம், என்று தலையாட்டினாள் மஞ்சு. வெளியே வருகையில் பக்கத்து அறைக்காரி அவளும் வெளியே வந்து கை கொடுத்தாள். சிரிப்புடன் கை குலுக்கி தலையாட்டினாள் மஞ்சு.

சிறிது தூரம் கூடவே போனான் சபா. அவள் அம்மாவையும் உள்ளே வரவேண்டாம், என்று சொல்லிவிட்டு, தியேட்டரின் கதவைச் சாத்திவிட்டார்கள். சட்டென மஞ்சு காணாமல் போன மாதிரி இருந்தது. ஒரு மாதிரி பயமும் திகைப்பும் வெட்டியது அவனுக்கு. மாமியார் நேரே போய் அங்கே கிடந்த நாற்காலியில் அமர்ந்து எதோ சுலோகப் புத்தகம் வாசிக்க ஆரம்பித்தாள். அத்தனை வெளிப்படையாக கடவுளைச் சரண் அடைய அவனால் முடியவில்லை. ஹா என நெற்றியைத் தடவிக் கொண்டான்.

தைரியமான தெம்பான பெண்தான் மஞ்சு. இல்லறம் என்று இருவருமாய்க் கைகுலுக்கி இணைந்தோம். சட்டென பெண்ணாய் மஞ்சு விஸ்வரூபம் காட்டிவிட்டாள். குழந்தை வயிற்றில் தங்கிய ரிசல்ட் வந்த கணம் முதல் எதிர்பார்ப்பும் ஆவலுமாய்க் காத்திருந்த அந்தக் கணம் இதோ வந்துவிட்டது. ஒரு நிமிடம் நின்றான். யோசிக்கவே முடியாத பலவீனத்துடன் இருந்தான். அட என்னை விட, உள்ளே அவள்… மஞ்சு என்ன பாடுபடுகிறாளோ என்றிருந்தது.

அதற்குள் அந்த அடுத்த அறைக்காரி சித்ராவுக்கு பனிக்குடம் உடைந்துவிட்டது என்றார்கள். மருத்துவர் இங்கே மஞ்சுவுடன் உள்ளே இருந்தாள். என்றாலும் நர்ஸ் ஒருத்தி உடனே வந்து அவளை ஒரு ஸ்ட்ரெச்சர் வரவழைத்து அழைத்துப் போனாள். அந்தப் பையன் அதிகம் பதறியிருந்தான். வழக்கமான பிரசவமாக அது இருக்காது போலிருந்தது. சபா விறுவிறுவென்று போய் அவன் தோளைத் தொட்டான். “அதெல்லா பெரிசா பிரச்னை ஆவாது ராஜ்குமார்…” என்றான் சபா. ராஜ்குமார் தலையாட்டினான்.

கால் மணி நேரம் கடந்திருக்கும். தியேட்டர் உள்ளேயிருந்து குழந்தையின் வீரிடல் கேட்டது. ஆகா என்ற கணம் அது. மாமியாரும் சட்டென சுலோகப் புத்தகத்தை மூடியபடி எழுந்து வந்தாள். குழந்தை பிறந்துவிட்டதாக இருவரும் உணர்ந்தார்கள். தன்னியல்பாக மணி பார்த்தான் சபா. அவர்களே பிறந்த நேரம் குறித்து வைத்துக்கொண்டு வந்து சொல்வார்கள், என நினைத்துக் கொண்டான்.

கதவுக்கு வெளியே காத்திருந்தார்கள். கதவைத் திறந்துகொண்டு டாக்டர் வெளியே புன்னகையுடன் வெளியே வந்தார். “வாழ்த்துகள் சபாபதி சார். உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.” முகம் நிறையச் சிரிப்புடன் அவளைக் கும்பிட்டான் சபா. “மகிழ்ச்சி டாக்டர்…” மருத்துவர் அடுத்த கேசைப் பார்க்க வேண்டிய வேலையில் இருந்தாள். “ஒரு அஞ்சி நிமிஷம். நர்ஸ் வந்து கூப்பிடுவாங்க…” என்றபடி அவள் மற்றொரு பிரசவ அறைக்குப் போனாள்.

அப்படியே தன் அம்மா அப்பாவுக்குத் தகவல் சொன்னான் சபா. அவர்கள் இன்று இரவு கிளம்பி நாளை வருவதாகச் சொன்னார்கள். மஞ்சுவின் அப்பாவைக் கூப்பிட்டபொது, அவரே “மாப்ளே, கங்ராஜுலேஷன்ஸ்” என்றார். மாமி தகவல் சொல்லிவிட்டாள் என்று தெரிந்தது. ஐந்து நிமிடத்தில் அவனும் மாமியாரும் உள்ளே அழைக்கப் பட்டார்கள். ரங்கராட்டினத்தில் உச்சிக்கு ஏறி பயத்துடன் கீழே சர்ரென்று இறங்கினாற் போல இருந்தது அவனுக்கு.

லேசான வெளிச்சம். கூட தாதி ஒருத்தி இருந்தாள். “எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுய்யா…” என்று சிரித்தாள் அவள். பையில் இருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தான் சபா. கட்டிலில் மஞ்சுவின் அருகே படுத்திருந்தது சிசு. ரத்தச் சிவப்பாய் இருந்தது. பார்க்கவே சிலிர்த்தது அவனுக்கு. குழந்தை வயிற்றில் இருந்து வெளியே வந்த கணம் வெளிக் காற்றின் அழுத்தத்தை எதிர்கொண்டு அழ ஆரம்பிக்கிறது, என அவன் கேள்விப்பட்டிருந்தான். இயற்கை எத்தனை ரகசிய விநோதங்களை உள்ளடக்கியதாய், அவ்வப்போது அவற்றை வெளியே காட்டுவதாய் இருக்கிறது.

மிகச் சோர்வாய்ப் படுத்திருந்தாள் மஞ்சு. “அம்மாவுக்கு இப்ப சூடா எதுவும் குடுக்கலாமா?” என்று மாமியார் அந்தத் தாதியிடம் கேட்டாள். “வெந்நீர் இருந்தா குடுங்க. ஊசி மயக்கம் கூட இருக்கும். பத்து நிமிஷம் போகட்டும். வாந்தி வந்திரப்டாது இல்லியா?” என்றாள் தாதி. சபா கிட்டே போய் அந்தக் குழந்தையைப் பார்த்தான். உடல் எங்கும் ரேகையோடி சுருக்கங்களாய் வரிவரியாய்க் கிடந்தது சிசு. கையில் நகங்கள் வளர்ந்திருந்தன. அத்தனை தலைமுடி கருகருவென்று. மூணரை கிலோ இருந்ததாக விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள்.

அவன் போய் மஞ்சுவின் தலையைத் தொட்டான். “எப்பிடி இருக்கே?” என்று கேட்டான். “அலுப்பா இருக்கு. அவ்ளதான்…” என்று சோர்வாய்ப் புன்னகைத்தாள் மஞ்சு. “ஆண் குழந்தை” என்றாள் புன்னகையுடன். “என்ன குழந்தைன்னா என்ன?” என்றான் அவன். அவள் தலையாட்டினாள்.

குழந்தையின் சிற்றசைவுகள். என் உயிரின் பரிணாமம். நம்ப முடியாத தருணமாய் இருந்தது அது.

சிறிது நேரத்தில் வேறொரு நர்ஸ் வந்தாள். குழந்தையை எடுத்து மஞ்சுவிடம் மார்பருகே தந்தாள். மார்புக் காம்பருகே குழந்தையின் உதட்டைக் கொண்டுபோனாள். குழந்தை கண்மூடிக் கிடந்தது. அம்மாவின் உடல் சூடு அதற்கு பெரும் ஆறதலைத் தரும், என்று தோன்றியது- மெல்ல குழந்தை அவள் மார்பை உறிஞ்ச ஆரம்பித்தது. அதற்கு எப்படி எல்லாம் தெரிகிறது… எத்தனை ஆச்சர்யமானது இயற்கை. அதுவரை சுரக்காத அவளது மார்புகள் சட்டென கண் திறந்தாற் போல குழந்தைக்குப் பால் சுரந்தது. சிசேரியன் ஆன ’குழந்தைக்குக் கூட அம்மாவின் மார்பில் பால் சுரக்கிறது… என்பது அதிசயம்தான். அது தாய்மையின் பரிபூரணத்தின் வெளிப்பாடு!

பவித்ரத்தின் உச்சம் இந்தக் காட்சி. மஞ்சு தன் வாழ்பின் மிகப் பெரும் உச்சத்தில் நிற்கிறாள். மொத்த உலகத்தையும் ரட்சிக்க வந்தவள் போல மயக்கம் தருகிறாள். வயிற்றில் குழந்தை வந்த கணத்தில் இருந்தே அவர்களுக்குள் ரசவாதம் நிகழ்ந்துதான் விடுகிறது. அவர்கள் அன்பு வள்ளல்கள் ஆகி விடுகிறார்கள்.

அரைமணி நேரத்தில் மஞ்சுவை ஸ்ட்ரெச்சரில் மீண்டும் அவளது அறைக்கு அனுப்பி விட்டார்கள். குழந்தையைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள் மஞ்சு. சபா வெளியே போய் தன் அலுவலக சகாக்களுக்கும், அவளது அலுவலகத்துக்கும் தகவல் சொன்னான். எல்லாரும் மாலை அலுவலகம் முடிந்து பார்க்க வருவார்கள் என்று தோன்றியது.

தான் தன் குழந்தை, என்கிற அந்த ஆழமான பந்தத்தில் திளைக்கிறாள் மஞ்சு. குழந்தை அவள் உடலில் இருந்து வெளியே வந்து விட்டாலும் இருவருக்குமான அந்தப் பிணைப்பு இன்னும் அறுபடாததாகவே இருந்தது. மஞ்சுவின் அம்மா ஏற்கனவே பிள்ளைப்பேறு பார்த்தவள் போல எல்லாம் சகஜமாய் இயங்கினாள். வேட்டியை சிறு சிறு துண்டுகளாக்கிக் கையோடு எடுத்து வந்திருந்தாள். குழந்தைக்கு அவ்வப்போது ஈரம் மாற்ற வேண்டி யிருந்தது.

பிரசவம் என்பது மொத்தமும் பெண்ணின் சமாச்சாரம். இதில் ஆணின் பங்களிப்பு இல்லை. எதுவும் இல்லை… என்பது ஓரளவு ஆதங்கமாகக் கூட இருந்தது. பின்னால் குழந்தையின் எதிர்காலம், படிப்பு, சந்தோஷம் என்று அப்பாக்கள் ஸ்கோர் செய்யலாம். என்றாலும் இந்த நிமிடம்… அம்மாக்களுக்கானது தானே?

அவர்கள் யாருமே எதிர்பாராமல் பக்கத்து அறை சித்ராவுக்கு பிரசவம் மிகவும் சிக்கலாகி விட்டது. ரத்தப் போக்கு மிக அதிகமாகி அவள் மயக்கம் அடைந்த நிலையில் குழந்தையையே சிசேரியன் பண்ணி எடுக்கிறாற் போல ஆகிவிட்டது. தாய் இறந்து பெண் குழந்தை மாத்திரம் உயிர் பிழைத்தது. அந்த ராஜ்குமார் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. “இவ இல்லாம… குழந்தை மாத்திரம்… நான் என்ன செய்ய முடியும்? இந்தப் பெண் குழந்தையை நான் ஒருத்தனா.. எப்படி வளர்க்கப் போறேன்?” என அவன் கதறி அழுதது பார்க்க சகிக்கவில்லை. அவனுக்கு நாம் எவ்விதமாய் ஆறுதல் தர முடியும் என்று சபாவுக்குத் தெரியவில்லை.

சபா மஞ்சுவின் அறைக்குத் திரும்பியபோது மேலும் தெளிந்திருந்தாள். “நீங்க.. காப்பி கீப்பி எதுவும் குடிச்சீங்களா என்ன?” என விசாரித்தாள். “நீ?” என்று கேட்டான். “அம்மா குடுத்தா..” என்றாள் மஞ்சு. திரும்பவும் குழந்தைக்குப் பால் கொடுக்க ஆயத்தமானாள். ஒரு மணிக்கு ஒரு தடவை தாய்ப்பால் கொடுப்பது நல்லது, என்றும், குறிப்பாக தாய்ப்பால் அதிகம் சுரக்க அது வகை செய்யும் என்றாள் மாமியார்.

குழந்தைக்குப் பால் தந்தபடியே அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் மஞ்சு. அவனும் புன்னகை செய்தான். திடீரென்று நினைவு வந்தது போல “சித்ராவுக்குக் குழந்தை பிறந்துட்டதா?” என்று கேட்டாள். அவன் முகம் பார்த்தபடி “என்னாச்சி?” என்றாள். “அச்சச்சோ” என்றாள். அழுது விடுவாளோ என்று இருந்தது.

அவனையே பார்த்தாள். “என்னங்க நாம ஒண்ணு செய்யலாமா?” அவன் தலையாட்டினான்.

“அது பால்குடி மறக்கிற வரைக்கும் அந்தக் குழந்தையையும் நம்ம கூட வெச்சிக்கலாமா?” என்று கேட்டாள் மஞ்சு.

பாற்கடலில் சுனாமி கிளம்பினாற் போல இருந்தது அவனுக்கு. இல்லற தர்மத்தில் ஒரு பெண்ணுக்கு ஆனால் ஈடு செய்ய சாத்தியமே இல்லை என நினைத்தபடி அவன் ராஜ்குமாரைப் பார்க்கப் போனான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.