நிலாகண்ணன் கவிதைகள்

அவளொரு வயலினிஸ்ட்

பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்தது

கன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும்

அவள் ஒரு வயலினிஸ்ட்

கிழிந்த ஆடைகளை

சிறு ஊசியால் வயலினைப்போல மீட்டுவாள்

அந்த இசையை நாங்கள் உடுத்தியிருந்தோம்

அவளே எங்கள் வீடாகவும் இருந்தாள்.

அவள் எங்களை குதிரைக்குட்டிகளே தீக்கொழுந்துகளே

என்றழைப்பாள்

திரும்பும்படி இல்லாத வானத்தில்

நாளொவ்வொன்றும்

பறவையாகயிருந்தது

மேலும் அது பறத்தலின் காலமாய் இருந்தது

 

நத்தையின் மீதேறி தானடைய விரும்பும் ஒளியை நோக்கிச் சென்றாள்

அன்று

உலகத்தின் மிகப்பெரிய மலர் அவள் மடியிலிருந்தது.

 

நீர்ச்சுகம்

தூக்கிக்கொஞ்சாத குழந்தையாக அலைதுஞ்சும் கடல்

பெரிய ஞானம்

காலப்பள்ளம்

மனவிகாசம்

நீரினடியில் இருக்கின்ற

இருளே வேரிலும் தண்டிளும் இருக்கிறது நீரினடியில் இருக்கின்ற இருளே மலைக்குள்ளும் கருந்துளைக்குள்ளும் இருக்கின்றது.

நீர்தான் யாவுமாக இருக்கிறது

நிலத்திலிருந்து நீருக்குள் தீபத்தைக் கொண்டு செல்ல இயலாதுதானோ மரணமென்பது

வாழ்வின் இறுதியாக

நிலம் முடிவடைந்து

மரணத்துக்கு அப்பால்

நீர் துவங்குகிறது

நீரே தெய்வத்தின் பேரெழில்

 

இனிப்பின் பாதையிலிருந்து திரும்புதல்

சமீபமாக எனதுடல் முழுக்க ஆரஞ்சு பழத்தின் வாசனை வருகிறது

நானோ எந்த தோட்டத்திற்கும் உரிமையாளனுமில்லை

நாக்குகள் கரைபுரண்டோடும் நதிக்கரையில் அமர்ந்திருக்கிறேன்  அக்கரையினோரத்தில் குழந்தையின் கைபிடித்து மனைவி விளையாடிக் கொண்டிருகின்றாள் இறகுப்பந்தைப்போல் இருப்பதால் எனை

எறும்புகள் கூடி புற்றுக்குள் இழுத்துக்கொண்டு போனது  நுழைவாயிலின் முன் தப்பித்து வந்துதான் இதை நான் உங்களுக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்

மழையில் நனைந்த வாழையிலைகளைப் பார்க்கையில் பசிக்கின்றது

இரவானால் சர்க்கரை டப்பாவிற்குள்ளிருந்து நாராசமான குரலில் யார்யாரோ பாடுகிறார்கள் எனக்கு பயமாக இருக்கின்றது

வேப்பங்காயில் பால் சுரக்கும் காலத்தை நான் பெற்றெடுத்துக்கொண்டிருக்கிறேன்..

 

இருளைப் பேணுதல்

வலியென்பது உடலில் ஏற்றிவைக்கப்படும் ஜோதி, இருளைப்பிளந்து அது பரவுகிறது.

இறந்தவர்களின் உலகத்தில் எல்லோரும் பிறப்புக்கு அஞ்சுகிறார்கள்.

கோபத்தில் பிறந்து போவாயென்று சாபமிடும் அவர்களின் உலகத்தில் மேகமோ அதனூடே பறக்கும் புல்லினமோ கிடையாது

பிறப்பு வெளிச்சத்தின் துவக்குநோய் என அங்கே நம்புகிறார்கள்.

 

நவீன ஓவியத்தில் நிறங்கள் மன உணர்வுகளை சுட்டுகிறது. வெள்ளையும்

மஞ்சளும் உயிர்த்துவக்கத்தின் மூல நிறங்களாகின்றன

இவைதான் துயருக்கான நிறங்கள்

குருதி வடியும் கர்த்தரின் முன்னால் தங்கள் வெள்ளை விரல்களை நிறுத்தி இனி யாரையும் காயமிக்கப் போவதில்லையென்று ஏற்றிவைக்கிறார்கள் எத்தனை எத்தனை நகங்கள்?

எத்தனை மஞ்சலொளிப்பாவங்கள்?

 

நிலவு என்பது கடந்த காலத்திற்கான நுழைவாயில்.

வெளிச்சம் இப்படித்தான் நம்மை இருளுக்குள் கவர்ந்து கொள்கிறது

கடந்த காலத்திற்குள் நுழையும் வாளி ஒளிச்சிதைவை ததும்பவிட்டுக்கொண்டு வருகிறது.

நிலாவில் நான்கு குழந்தைகளின் தாய் வெளிச்சத்தை சுண்டக் காய்ச்சுகிறாள் என்றும் நம் எல்லோருக்குமான

கண்ணீரென்பது வெளிச்சத்தின் நீர்மமாக அங்கேதான் உற்பத்தியாகிறது என்றும் பழங்குடிக்கதையொன்று உண்டு.

 

அவர்கள் நிம்மதியில் திளைத்திருக்கிறார்கள் ஒளியை உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் அதனால்தான் நாம் கல்லறைக்கு வெளியே விளக்கேற்றுகிறோம்

ஒளி துயரக்குறியென்பதை அம்மா நட்சத்திரமானதில் அறிந்தேன்

ஆக வனத்திற்கு மாமலர் சருகுகள்தான் நம்புங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.