ஒரு பழைய கதை. நாயொன்று வெகுநாட்களுக்கு முன்பே நீர்வற்றிப்போன ஆற்றின் நடுவே என்றோ இறந்த ஒரு மாட்டின் எலும்பைக் கண்டடைகிறது. ரத்தம் வற்றிப்போன அந்த எலும்பைப் பற்களுக்கு இடையே வைத்துக் கடிக்கிறது. எலும்பின் விளிம்பில் உள்ள கூரிய நீட்சிகள் வாயோரங்களைக் கிழிக்க நாயின் வாயிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்குகிறது. தன் ரத்தத்தை ஆழ்ந்து உறிஞ்சிக் குடிக்கிறது நாய்.
ஆணவம் நிறைந்தவர்கள் இப்படித் தன்னை வதைத்து தன்னுடைய குருதியைக் குடிப்பவர்கள்தான் என்று சொல்வார்கள். மேம்போக்காகப் பார்க்கும்போது தன் குருதியைக் குடிப்பதில் எதிர்மறையான விலக்கப்பட்ட ஒரு அம்சம் இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் நம்மில் யாராவது நம்முடைய குருதியைப் பருகாமல் இருந்திருக்கிறோமா? விபத்தாகவோ வெறுப்பில் பற்களால் உதடுகளைக் கடித்தோ என ஏதோ ஒரு வகையில் நாம் அனைவருமே தன்குருதி குடிப்பவர்கள்தான். அதன் சூடான உப்புச்சுவையை உணர்ந்தவர்கள்தான். காதலை அந்த மாட்டெலும்புக்கும் அதனால் நாமடையும் அலைக்கழிப்பை நம் வாய்க்குள் ஊறும் குருதிக்கும் இணைவைக்கலாம்.
காதல், எல்லாக் காலத்திலும் இலக்கியத்தின் பிரதான பேசுபொருளாகவே இருந்திருக்கிறது. சங்க இலக்கியத்தின் அகத்துறை காதலின் வெம்மையைத் தன்னுள் கொண்டது. உடல் இச்சை தொடங்கி தெய்வாம்சம் வரை காதலின் ஏராளமான வண்ணங்கள் எழுதிக் காட்டப்பட்டுள்ளன. ஆனாலும் அவ்வுணர்வு சொல்லித் தீராததாக, சொல்லில் அடங்காத ஒன்றாகவே இன்றும் நீடிக்கிறது. வாழ்வின் ஒட்டுமொத்த சாராம்சத்தைத் தேடிய படைப்பாளிகளும் காதல் கதைகள் எழுதி இருக்கின்றனர். ஒரு பெரும்கலைஞனின் கை தொடும்போது காதல் கொள்ளும் வண்ணங்கள் ஒரே நேரம் ஊகிக்க முடியாதது என்றும் ஏற்கனவே நாம் அறிந்திருந்த ஒன்று என்றும் ஒரு மயக்கத்தைத் தோற்றுவிக்கிறது. பஷீரின் பால்யகாலசகி, மதில்கள் போன்ற கதைகளை இத்தன்மைக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
தஸ்தாயெவ்ஸ்கியின் A Gentle spirit (தூய உள்ளம் என்று மொழிபெயர்க்கலாம்தானே) ஒரு கோணத்தில் அத்தகையதொரு ‘எளிய’ காதல் கதையே. ஆனால் நிலவறைக்குறிப்புகளும், குற்றமும் தண்டனையும் எழுதிய பிறகு தஸ்தாயெவ்ஸ்கி இந்த நெடுங்கதையை எழுதி இருக்கிறார். அத்தகைய விரிவான அக விசாரணையை மேற்கொள்ளும் படைப்புகளில் அடைய முடியாத ஏதோ ஒன்றினை இச்சிறுபடைப்பு கடத்தி விடுவதுதான் ஆச்சரியகரமானதொரு அம்சம்.
இன்னும் சற்று நேரத்தில் வீட்டிலிருந்து எடுக்கப்படவிருக்கும் மனைவியின் பிணத்தின் அருகே அமர்ந்தபடி இறந்தவளின் கணவன் அவளுக்கும் தனக்குமான உறவை நினைத்துப் பார்க்கிறான். பெரிய திருப்பங்களோ உத்திப்பூர்வமான திருகல்களோ இல்லாத எளிய நேரடியான கதை.
வழக்கமாக தஸ்தாயெவ்ஸ்கியின் கதைகளில் வருவதுபோன்ற, வறுமையால் தன்னம்பிக்கை இழந்த, மிரட்சியான விழிகளும் மெல்லிய தேகமும் கொண்ட பெண்தான் இக்கதையிலும் நாயகியாக வருகிறாள். ஆணின் பரிதாபத்தைத் தூண்டக்கூடிய பெண் என்பவள் தஸ்தாயெவ்ஸ்கியின் கதைகளில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஒரு பாத்திரம். சோனியா, க்ருஷென்கா, நஸ்டாஸியா எனப் பாவப்பட்ட பெண்ணாக அறிமுகமாகிறவர்கள் கதைப்போக்கில் வளர்ச்சியடைந்து வேறொன்றாக மாறுகிறார்கள். சோனியா தேவதைத்தன்மை கொண்டவளாகிறாள். நஸ்டாஸியா குரூரமானவளாக மாறிவிடுகிறாள். இக்கதையிலும் கதைசொல்லியின் அடகுக்கடைக்கு வரும் பெண் பரிதாபத்தைத் தூண்டக்கூடியவளாகவே இருக்கிறாள். அவளுக்கு ஒழுங்கான உடைகள் இல்லை. மற்ற கடைகளில் அடகுக்கென ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லாத பொருட்களை எல்லாம் கதைசொல்லியிடம் கொண்டு வருகிறாள். அவள் மீதான இரக்கத்தால் அவனும் அப்பொருட்களைப் பெற்றுக் கொள்கிறான். அவளுடைய அழகு கதைசொல்லிக்குள் தூண்டுவது காதலையா இரக்கத்தையா என்பது பதில் சொல்ல முடியாத கேள்வியாக எஞ்சிவிடுகிறது. அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ய அவள் தயாராக இருக்கிறாள். அவள் எதிர்பார்ப்பது மூன்றுவேளை உணவும் தங்க இடமும் மட்டுமே. ஆனால் அதுவே அவளுக்குக் கிடைப்பதில்லை. தாய் தந்தையை இழந்த அவளை அவளுடைய உறவுப்பெண்கள் இருவர் எடுத்து வளர்க்கின்றனர். அவளை ஒரு நல்ல தொகைக்கு ஒரு வயதான பணக்காரனிடம் ‘விற்க’ முயல்கின்றனர். அவள் தப்பிக்க வழியே இல்லை எனும்போதுதான் கதைசொல்லி அவள் மீதான தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான்.
அவனுடைய சலுகை ஒரு விதத்தில் தெளிவான காய் நகர்த்தல். ஆனால் அவன் அவளை விரும்பவும் முயல்கிறான். கதை முழுக்க தான் அவளை எப்படியெல்லாம் விரும்ப முயன்றேன் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கிறான். ஆனால் அவன் மனைவியின் கோணம் இக்கதையில் வெளிப்படுவதே இல்லை. கதைசொல்லி, அவள் தனக்கு நன்றியுடனும் தன்னிடம் காதலுடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஒரு எல்லைவரை அவனுடைய எதிர்பார்ப்பு சரியென்றும் படுகிறது. ஆனால் அவளிடமிருந்து அவன் பெறுவது மௌனத்தையும் நிராகரிப்பையும்தான்.
எரிக் ஃப்ரம் தன்னுடைய ‘அன்பு எனும் கலை’ என்ற நூலில் அன்பு என்பது ஒரு செயல்பாடு என்று விளக்குகிறார். அன்பு தானாய் மலர்ந்து நறுமணம் மாறாமல் நீடிக்கும் மலரல்ல. அது தொடர்ச்சியாகப் பராமரிக்கப்பட வேண்டியது என்று வாதிடுகிறார். பரிசளிப்புகள், விசாரிப்புகள், தொடுகைகள், கேலிகள் வழியே ஒவ்வொரு நாளும் அது உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட வேண்டியது என்பது அவர் வாதம். சுருக்கமாக யார் மீது நாம் அன்பு செலுத்துகிறோமோ அவருடைய நிலையிலிருந்து அவரைப் பற்றிச் சிந்திக்கும் பச்சாதாபம் அன்பின் முக்கியமானதொரு அடிப்படை. நம்முடைய மரபு இந்த பச்சாதாபத்தை கடமையாக மாற்றி வைத்திருக்கிறது. நம்முடைய உறவுகளில் அன்பைவிட கடமை, நன்றியுணர்ச்சி, தியாகம் போன்ற காரணிகள்தான் முதன்மை இடம் வகிக்கின்றன. திருமணமானதும் தம்பதியராகக் குழந்தை பிறந்ததும் பெற்றோராக நாம் நடிக்கத் தொடங்குகிறோம். இன்று இந்த நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது. உறவுச்சிக்கல் சார்ந்து இன்று எழுதப்படும் பெரும்பாலான கதைகள் ஒரு உறவை நடிப்பதற்கும் அதில் உணர்வுப்பூர்வமாக ஈடுபடுவதற்குமான இடைவெளியையே பேசுகின்றன. தான் அன்பு செலுத்தப்பட வேண்டிய ஆன்மா என்று நம்புகிறவர்களுக்கும் அப்படி நிபந்தனையற்று அன்பு செலுத்த இயலாதவர்களுக்குமான மோதலை நாம் பல கதைகளில் காண்கிறோம். அந்த வகையில் A Gentle spirit ஒரு முன்னோடி ஆக்கம். இக்கதையில் கதைசொல்லி தன் மனைவியிடமிருந்து பெற விரும்புவது காமத்தையும் நன்றியையும்தான். ஆனால் அப்படி காமத்தையும் நன்றியையும் கொடுப்பது ஒரு ‘ஆசைநாயகியால்’ மட்டுமே இயலக்கூடியது. அவளுமே நன்றியாக நடிக்கத்தான் செய்வாள். ஆனால் இக்கதையில் கதைசொல்லி அவள் ஏன் தன் மீது பிரியமாக இல்லை? நன்றியுடன் இல்லை? என்று புலம்பிக்கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் அவளை வேவு பார்க்கத் தொடங்குகிறான். அவளுக்குத் தன் மீது ஒரு ஏளனம் இருப்பதையும் அவனால் உணர முடிகிறது. இக்கதை அடுத்தகட்ட சிக்கலை நோக்கிச் செல்வது இந்தப் புள்ளியில்தான். அவளுக்குக் கதைசொல்லியின் மீது காதலில்லாமல் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் அவள் ஏன் அவனை ஏளனமாக நினைக்கிறாள்? அவனைக் கேலி செய்து அவனுடன் முன்னர் ராணுவத்தில் பணிபுரிந்தவனுடன் ஏன் பேசுகிறாள்? அவன் எதிர்பார்ப்பதற்கு மாறாக நடந்து கொள்வதன் வழியே அவனை நெருங்க நினைக்கிறாளா அல்லது இயல்பிலேயே அவளிடம் அறவுணர்ச்சி கிடையாதா?
இருவருக்குமான பிரச்சினை முற்றி ஒரு கட்டத்தில் அவனைக் கொலை செய்து விடுவது என அவன் தூங்கும்போது அவன் முன்னே துப்பாக்கியுடன் அவள் வந்து நிற்கும் இடம் ஒரு உச்சம். அந்தப்புள்ளியிலிருந்து சமநிலையுடன் நிகழ்ந்து கொண்டிருந்த ஆட்டத்தில் கதைசொல்லியின் கை ஓங்கத் தொடங்குகிறது. அவள் நிலைகுலைகிறாள். நோயில் விழுகிறாள். தன் சேமிப்பு மொத்தத்தையும் கரைத்து அவளை அவன் காப்பாற்றுகிறான். ஆனாலும் இருவருக்கும் இடையே உறவு சீரடைவதில்லை. ஆனால் அவன் அவளிடமிருந்து நன்றி போன்ற எளிய உணர்ச்சிகளை எதிர்பார்ப்பதைத் தவிர்த்து விடுகிறான். ஒரு புள்ளியில் அவள் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி கோருகிறான். அவள் பாதங்களை முத்தமிடுகிறான். கதையோட்டத்தின்படி அவன் எந்தத் தவறும் இழைக்கவில்லை. அவன் சொல்லும் கதையில், அவன் எதையும் மறைத்தும் பேசவில்லை. ஆனாலும் ஏன் அவன் அவளிடம் மண்டியிடுகிறான்? கதையின் மிக நுட்பமான தருணமிது. குற்றமும் தண்டனையும் நாவலில் சோனியாவின் கால்களை ரஸ்கோல்நிகோவ் பற்றிக் கொள்வதும், திமித்ரியின் கால்களில் ஜோஸிமா விழுவதும், அசடனில் நஸ்டாஸியாவிடம் மிஷ்கின் மண்டியிட்டுக் கெஞ்சுவதும் இதற்கு இணையான ‘தர்க்கமற்ற’ தருணங்களே. ரஸ்கோல்நிகோவ் தான் செய்த கொலைகளுக்காக சோனியாவின் காலில் விழ வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த அனைத்து தருணங்களிலும் மண்டியிடுவது ஆணவம். இன்னும் சரியாகச் சொல்வதெனில் ஆண்மை. புத்திசாலித்தனம் (ரஸ்கோல்நிகோவ்), தியாகம்(ஜோஸிமா), கள்ளமின்மை (மிஷ்கின்), கருணை (A Gentle spirit கதைசொல்லி) என ஒவ்வொரு ஆணும் தன்னிடம் உயர்ந்தது எது என நினைத்தார்களோ அதை ஒரு எதிர்பாராத தருணத்தில் யாரோ ஒருவரின் காலில் கொண்டுபோய் வைக்கின்றனர். இந்த தருணங்களில் சோனியாவைத்தவிர மற்ற மூவரும் வணங்கத்தக்கவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அத்தகையதொரு சமர்ப்பணத்தின் வழியே தன் இயல்பிலிருக்கும் ஒரு தீய அம்சத்தை மண்டியிடுகிறவர்களால் கடந்து போக முடிகிறது. அதாவது தன்னிடம் இருக்கும் நல்ல அம்சம் தனக்குள் விதைக்கும் ஆணவத்தை அவர்கள் கடந்து போகிறார்கள்.
இக்கதையில் கதைசொல்லி அப்படி மண்டியிட்ட மறுகணமே, அவளுடைய வைராக்கியம் முழுமையாகப் பொருளற்ற ஒன்றாக மாறிவிடுகிறது. அவனுடைய செயலுக்கு முன் அவள் மீண்டும் சிறுத்துப் போகிறாள். மற்ற தருணங்களில் இந்த மண்டியிடல் யார் முன்னே மண்டியிடுகிறார்களோ அவர்களிடம் ஒரு நுண்ணிய மாற்றத்தைத்தான் விளைவிக்கின்றன. ஆனால் இக்கதையில் மண்டியிடல் அவளைச் சிதைத்து விடுகிறது. சொல்வதற்குச் சற்று குரூரமாகத் தெரிந்தாலும், இக்கதையை ஒரு சிறந்த காதல் கதையாக்குவது அவளுடைய மரணம் தான். காதலின் குருதி குடிக்கும் தன்மை காலங்காலமாகத் தொடர்வது. தன் குருதியை அளிப்பதன் வழியே அவள் அவனை நிரந்தரமாக வென்று சென்று விடுகிறாள். எக்காலத்திலும் நிகழும், அழகியதாகவும் குரூரமானதாகவும் மாறி மாறி போக்குகாட்டும், இந்த மோதலின் நுண்மையைத் தொட்டுப் பேசும் இக்கதை காதல் போலவே நிரந்தரத்தன்மையை பெற்றுவிடுகிறது.