அபிநயம்
அவன் எப்படித் தான் கண்டதைக்
கூறாமலே தவிர்ப்பான்,
இந்த உலகிற்கு,
இலைகளுதிர்ந்து பட்டுப்போன
கிளைச் சுள்ளி ஒன்றும்
அபிநயித்ததே அதை?
இளைப்பாறல்
போராளிகளும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்,
தோழமையின் நிழலில்.
ஒவ்வொரு மனிதனையும்
ஒவ்வொரு மனிதனையும்
அவன் தன்னந்தனியாகவேதான்
சந்திக்க விரும்புகிறான்.
காதலர்கள் தங்கள் காதலர்களைத்
தன்னந்தனியாகவேதானே
சந்திக்க விரும்புகிறார்கள்?
கடவுளும் சாத்தானும்
அய்யா, நீங்கள் இந்த
இந்தியப் புண்ணிய பூமியின்
பழம்பெரும் ஞானங்களையெல்லாம்
நன்கு அறிந்தவர் மட்டுமல்ல
கடவுளைக் கண்டுகொண்டவர் மட்டுமல்ல
அவரை மிக நன்றாகவே விவரித்திருப்பவர்
என்பதையும் நான் அறிவேன்.
ஆனால் அய்யா
அந்த அனைத்து விவரணைகளையும்
திரட்டி வைத்துக்கொண்டே
சாத்தான்தான்
கடவுள் வேடமிட்டபடி
இந்த உலகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை
நாம் எல்லாரும் அறிவோம்தானே?
அது எப்படி நமக்குத் தெரியாமல் போகும்
அய்யா, எனக்குத் தெரியும்.
மெய்யாகவே கடவுளைக் கண்டறிந்தவரான உங்களால்
கடவுள் வேடமிட்டு அலையும்
சாத்தானையும் கண்டுகொள்ளமுடியும் என்பதையும்
அறமின்மையும், வறுமையும் சமமின்மையும்
போரும், துயரும் வாதையுமாய் உருவான
அவனது உலகைத் துப்புரவாய் அழித்து
அங்கே கவிதையின் மதம்கொண்டு
கடவுளின் ராஜ்ஜியத்தை
நிச்சயமாகப் படைத்துவிடவும் முடியும் என்பதும்.
ஒற்றை வீடு
ஒற்றை வீடு போல்
வீடுகள் மேல் வீடுகள், வீடுகள் என!
பதினெட்டு மாடிகளிலும் ஒவ்வொரு
வீடாய் குடியேறத் தொடங்கிவிட்டனர்
மனிதர்கள்.
வெவ்வேறு தாய்மொழிகள் கொண்ட
வெவ்வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்கள்.
அனைவர் முகங்களிலுமே
மனிதர்களின் தாய்மொழிகளைப்
பயின்றுவிட முயலும் விழிகளும் இதழ்களும்.
புன்னகைத்தபடி
‘ரொம்ப அற்புதமாக இருக்கிறது
இந்த காலநிலை, பார்த்தீர்களா‘ என்றார்,
அவனோடு லிப்டில் வந்துநின்ற புதியவர்.
அவன் அன்று சந்தித்த மலர் மனிதர் அவர்.
அவனும் தன்னை வெளிப்படுத்த
விரும்பினானோ அவரிடம்?
“ஆமாம், ‘கடவுளின் சொந்த நகரம் இது’,
என்று சொல்லலாம்.
உலகின் எந்த இடத்தைவிட்டு
இங்கே வந்தவர்களும்
இதைப் பிரிய மனமின்றி
இங்கேயே தங்கிவிடுவார்கள். அல்லது
இதைப்போலொரு நகரையே
எங்கும் கட்டமுயல்வார்கள்.
எப்போதும் கார்மேகங்கள் சூழ்ந்துநிற்கும்
வெயில்மலர்க்குளித்தலம்!
வாசித்துத் தீர்க்க முடியாத காதல் கடிதம்!”
முழுஉலகும்
முழுஉலகும் கண்ணிற்படும்படியான
உயரத்தை எட்டியாயிற்று
தரையில் தெரியும்
ஒவ்வொரு அடிநீளமும் அகலமும்
முழுஉலகின் குழந்தையே என்றாயிற்று.
உயரங்களுக்கும்
தரைக்கும்
செங்குத்தாய் மீளும்
காலமற்றதொரு
கால இயந்திரம் கண்டாயிற்று.
ஈரமழைக் குளுமையினையே
எப்போதும் தவழும்படியும்
குறைவின்றிப் பொழியும்படியும்
படைத்தாயிற்று.
வறுமையில்லாத ஒத்திசைவானதோர்
இன்பசுங்குளிர்க் கிராமத்தைப் படைத்தாயிற்று.
முழுமையற்ற உலகில்
முழுமையான ஒன்றைச்
சுட்டும் முகமாய் அவ்வப்போது
தனிப்பெருங்கருணை ஒன்று காட்டும்,
ஒருசெயல் மாதிரிப் பாடம்தான் இது என்றும்,
இனி ஆக வேண்டியதெல்லாம்
நம் கையில் தானிருக்கிறது என்றும்,
நம்மை நாம் படைத்த உலகின் தவறுகளை
நாம்தான் சரி செய்யவேண்டும் என்றும்
எச்சரிக்கத் தவறாத குரலின் தேவைமட்டும்
இருந்துகொண்டே இருக்கிறது காண் அக்கிராமத்து
ஏழைப் பணியாட்களின்
இடைவேளை ஓய்வினைப்போல்!
அவன் நின்ற இடம்
அவன் நின்ற இடம் சரிதான்
என்றது வானம்.
அவன் பார்வை நடை நெருங்க நெருங்க
‘முழுபூமியைத்தான்
சுற்றிவந்து பாரேன்’ என்றது
விலகி விலகிச் சென்று கொண்டேயிருந்த
தொடுவானம்.
மேல்வானமெங்கும் மேகங்கள்
அருள்பாலிக்கும் தேவதைகளாய்!
இப்பொழுது என்னைப் பார் என்றது
தரைமேயும் கால்நடைகள் போலிருந்த
நகரம்.
இந்தப் பக்கம் இங்கே பார் என்றது
அவன் கண்ணெதிரே முளைத்துநின்ற
ஆயிரம் இல்லங்களுடைய
ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பு.
நெருங்கும் காலடியோசை அவனை விளிக்க
முகம் திரும்பிய அவன் முன்வந்து நிற்கும் மனிதர்
ஓர் அன்பரோ ஆர்வலரோ கடவுளோ அன்றி
வேறு யாராக இருக்க முடியும்!
கவிதையின் மதம்
நம் எண்ணங்களாலான
கடவுளுக்கும் மதத்திற்கும் கொடுக்கிற
நம் அக்கறைகளை
நாம் நம் இயற்கைக்குக் கொடுத்தால் போதும்
நிச்சயமாக அது நலன் பயக்கும் என்பேன்.
இந்தக் கடவுள் நம்பிக்கை பற்றிய
உண்மை எல்லாம் தெரியத்தான் செய்கிறது.
அவற்றைக் கைவிட்டு விட்டால்
மூண்டுவிடும் வெறுமையைத்தானே
தாங்க முடியவில்லை, அய்யா!
இயற்கைமீது நாம் செலுத்தும் அன்பே
நமக்கு வழிகாட்டிவிடும்.
பருவகாலங்கள் நம் பண்டிகைகளாகி
அசத்தும்!
கலைகளும் இலக்கியங்களும்
வழிபாடுகளும் கொண்டாட்டங்களுமாய் நிலவி
மொத்த உலகுமே நம் குழந்தைமையின் தாய்வீடாகி
தேன்நிலவு ஒளிரும்!
துயரும் குழப்பமும் வாதைகளும்
அறமின்மைகளும் மிக்க இந்த உலகும்
தானாகவே இயங்கத் தொடங்கும். சமய மெய்ச்செயல்கள்
தன்னைச் சரிசெய்துகொள்ளும்.
மூண்டுவிட்ட வெறுமைதான்
அழிவில்லாத பேருயிர் தகிக்கும்
எத்தகைய பெரும்பாத்திரம்!
உறுதிமொழி
உன்னால்தான் இந்த உலகம்
வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை
நன்கு அறிவேன்.
நீ இல்லை எனில்
இந்த உலகம் என்ன ஆகும் என்பதை
நன்கு அறிவேன்.
உயிர்வாழ்வின் மர்மத்தை
நான் அறிவேன்.
வழிதவறிச் செல்லும்
இந்த மனிதர்களால் பாழ்பட்ட
வாழ்வை நான் அறிவேன்.
இப்போதிங்கே அறிவேன் அறிவேன்
என்று நான் சொல்வதெல்லாம்
அறிவு கடந்த ஓர் ஆற்றலும் இயக்கமுமான
ஒன்றைத்தான் என்பது தவிர
ஓர் அறிவினால் விளைந்த
அறிவு அல்ல என்பதறிவேன்.
ஒளிரவிட்டு நீ சுட்டிக்காட்டிய
விடயங்கள், தருணங்கள்
ஒவ்வொன்றையும் ஆய்ந்து கற்று
எரிந்துகொண்டிருக்கும்
சுடரிலிருந்து பேசுகிறேன் நான்.
என்னால் ஆவதெல்லாம்
உன் குரலில் வழிகாட்டுவது தவிர
வேறொன்றுமில்லை என்பதறிவேன்.
அதைச் செய்வேன்.
செய்து, கவிதையின் மதத்தை-
ஓ, கடவுளே உனது ராஜ்ஜியத்தைப்
படைத்தே தீருவேன்.
இதுவே மரணமற்ற எனது பிறப்பின்
உரிமையும் இலட்சியமும் என்பேன்.