ஓங்குமினோ, ஓங்குமினோ-சரவணன் மாணிக்கவாசகம்

து, சூதாட்டம் போல இலக்கியம் என்பது கூட ஒரு போதை தான். முன்னிரண்டில், மூளை வேண்டாம் என்று சொல்லச்சொல்ல மனமும், உடலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணப்படுவது போல இலக்கியத்திலும் நடக்கிறது. மனைவியின் நகையை அடகு வைத்து சிறுபத்திரிக்கை நடத்தியவர், வீட்டுச் செலவுக்கு வைத்திருந்த பணத்தை, புத்தகம் வெளியிட மடைமாற்றியவர் என்ற எல்லோருக்குமே சுயசிந்தனை சராசரி மனிதர்களை விட அதிகமாக இருந்திருக்கும்,

அழியப்போகும் வாழ்க்கையில் அழியாத ஒன்றை நிறுவிவிட வேண்டும் என்ற உந்துசக்தியே லாபநட்டக் கணக்குகளைப் பார்க்காமல், அவர்களை முன்செல்ல வைத்திருக்கும். ஆகவே,  இலக்கியம், மற்ற எல்லா போதைகளிலிருந்து எப்படி மாறுபடுகிறது என்றால், அது அநித்தியத்தில் நித்தியத்தைத் தேடும் யத்தனம், உள்ளிருக்கும் அகச்சூட்டை தணிக்க உதவும் வடிகால், விடைபெறுகையில், உலகிற்கு நாம் விட்டுச்செல்லும் அனுபவம்.

கனலி இணைய இதழ் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  குழந்தையாக அது பிறந்த வேளையிலிருந்தே அதனை நானறிவேன். வளர்ப்பில் என் பங்கு என்று எதுவுமில்லாமல் போனாலும், வளர்ச்சியைப் பார்த்ததில் இயல்பாக வரும் பாசம் எப்போதுமிருக்கிறது. வாழ்வியல் போராட்டங்களுடன்,  பெருந்தொற்று காலமும் சேர்ந்தது தான் கடந்த மூன்று வருடங்கள். இத்தனையும் தாண்டி இடைவிடாது வருவது என்பதே ஒரு பெரியசாதனை..விக்னேஸ்வரன், அன்றாடப் பணி, குடும்பம் இவற்றைத் தாண்டி இதழைத் தொடர்ந்து நடத்த என்ன காரணங்கள் இருக்க முடியும்? இலக்கியத்தை நம்பி தமிழ்ச்சூழலில் பெரிதாய் பணமேதும் பண்ணிவிட முடியாது.

புகழுக்காக என்றால், கனலி இதழ் ஒரு வருடம் வராவிட்டால், பலரது நினைவிலிருந்து அது அகற்றப்பட்டு விடும். என் சிந்தனைக்கெட்டிய வரையில், பலரும் செய்தது போல், இலக்கியவெளியில் தன் தடத்தையும் பதித்துச் செல்லவேண்டும் என்ற பேரார்வமே, இவரை சிரமங்களைப் பொருட்படுத்தாது வழிநடத்திக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.

கனலியின் முக்கிய சாதனைகள் என்று சொன்னால், பல ஆரம்பநிலை எழுத்தாளர்களுக்கு ஒரு தளம் அமைத்ததும், சிறப்பிதழ்களும் குறிப்பிடத்தக்கவை என்றே சொல்வேன். சிறப்பிதழ்களில் தி.ஜா, தஸ்தயேவஸ்கி, ஜப்பானியச் சிறப்பிதழ்,  நகுலன் ஆகியவை நன்றாக வந்திருந்தன. அமெரிக்கச் சிறப்பிதழ், அமெரிக்க இலக்கியத்தின் பெரும்பரப்பளவின் காரணமாக, இதழ்வடிவில் கொண்டுவருவதில் பல தடைகளும், குறைகளும் இருந்தன. ஆனால் தி.ஜா நூற்றாண்டு சிறப்பிதழ் என் மனதுக்கு மிகவும் நெருங்கியது. கனலி மூலம்  புதிதாக ஒரு இருபதுபேர் தி.ஜாவைத் தேடி வாசித்தால் அந்த இதழ் வெளிவந்ததற்கான நோக்கம் நிறைவேறி விடுகிறது. கனலியில் எழுத ஆரம்பித்துத் தொகுப்பைக் கொண்டு வந்தவர்கள் இருக்கிறார்கள்.  பலரது புதிய சிறுகதைத் தொகுப்புகளில், கனலிக்கு நன்றி என்ற வார்த்தைகளையும் அடிக்கடி பார்க்கிறேன். தமிழில் பெரும்பான்மையான இணைய இதழ்களுக்கு அரசியல் முகம் கிடையாது. கனலியும் அதில் விதிவிலக்கின்றி, இலக்கியத்தில் மட்டுமே தன்முனைப்பைக் காட்டி வருகிறது.

கனலி பதிப்புத்துறையிலும் ஈடுபட்டு, இதுவரை ஏழுநூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இணைய இதழில் வெளியானவற்றின் அச்சு வடிவம்.

கனலிக்கென்று ஒரு வாசகர் வட்டம் உருவாகி இருக்கிறது. அதில் ஆர்வமுள்ள இளைஞர்கள் எண்ணிக்கை பெரும்பங்கு.  அவர்களை நம்பி, முன்பதிவு பெற்று மாதம் ஒரு நூல் என்று நல்ல நூல்களை வெளியிடலாம். புதியவர்களின் படைப்புகள், மொழிபெயர்ப்புகள் என்று ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.  ஆனால் தரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

நூல்களைப் பதிப்பிப்பதும் கார்ஓட்டுனர் போன்ற வேலைதான். ஐநூறு கிலோ மீட்டர் மிகச் சரியாக ஓட்டிவந்தேன், கடைசிஐம்பது கிலோமீட்டரில் விபத்து நடந்துவிட்டது என்றால் பெரும்பகுதி சரியாக ஓட்டியதற்கான பாராட்டை வழங்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

கனலி வருகின்ற இதழ்களில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்று நான் நினைப்பது:

1.  தஸ்தயேவ்ஸ்கி, செகாவ் என்று சந்தேகத்திற்கிடமின்றி பல மாஸ்டர்கள் இருந்து, சாதனைகள் செய்து, போயிருக்கிறார்கள்.  அவர்களை நினைவுகூர்வது என்பது நல்ல விஷயமே, ஆனால் அவர்களைத் தாண்டி நாம் வெளியே வரவேண்டும். புதிதாக உலக இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்பது மிக முக்கியமானது. பல்கலையில் இருப்போருக்குத் தெரிவதில்லை, விருது வழங்குவோர் அறிவதில்லை, பிரபல எழுத்தாளர்கள் பலரும் கதைச்சுருக்கத்தைத் தாண்டி வாசிப்பதில்லை என்ற சூழலில், கனலி உட்பட்ட சிற்றிதழ்களின் பொறுப்பு அதிகமாகிறது. நடப்பு இலக்கியங்களை வாசகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

2. ஆங்கிலத்தில் பிரபலமாக இருப்பவர்களில் பலரும் புதிதாக ஒரு சிறந்த நூல் வந்தால் சிறுகுறிப்பேனும் எழுதுகிறார்கள்.தமிழில், அந்தந்தக் குழுவைத் தாண்டி, மற்றவர்களின் மேல் வெளிச்சம் சிறிதும் பட்டுவிடாதபடி கவனமாக இருக்கிறார்கள்.  புதிதாகத் தமிழில் வரும் படைப்புகள் குறித்து பக்கஅளவில் மதிப்புரை இல்லை என்றாலும் சிறுகுறிப்புகள் என்ற அளவிலேனும் வாசகர்களுக்குத் தெரியப்படுத்துதல் நன்று.

3. கனலியுடன் இணைந்து பணியாற்றுபவர்களில் திறமை வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் பலர் இருக்கின்றனர். தொடர்ந்து கனலி பதிப்பகம் மூலம் மொழிபெயர்ப்புகளைக் கொண்டு வரலாம்.

4. மற்ற இதழ்களில், குறிப்பாகத் தமிழினியில் எழுதுவோர் பலரும் கனலியில் பங்களிப்பதில்லை. படைப்பாளிகள் டவுன்பஸ் போலவே, தனிநபர் ஒருவருக்குச் சொந்தமானவர்கள் இல்லை. கனலி ஆசிரியர் குழுவே அவர்களைத் தொடர்பு கொண்டு எழுதும்படி வேண்டிக் கொள்ளலாம்.

Our Persistence will break their resistance.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.