இலக்கியத்தில் சாதாரணத்துவமும் அசாதாரணத்துவமும்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ஒரு பொருள் அல்லது ஒரு நிகழ்வு சாதாரணமாக மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவும், சமூகப் புழக்கமும் தேவைப்படுவதோடு, அந்தப் பொருளின் அல்லது நிகழ்வின் பங்கும், பணியும் நமது அன்றாடத்தின் ஓர் அங்கமாக மாறும் வரை அவை அசாதாரணமாகவே தொடர்கின்றன. முதன்முறையாக ஒருவர் கார் ஓட்டுவதை நாம் பார்த்த போது அது ஓர் அசாதாரண நிகழ்வு. ஆனால் இன்று அது ஒரு சாதாரண நிகழ்வு. 

ஆனால் நாம் என்றைக்காவது சாதாரணங்களின் பால் நமது கவனத்தைச் செலுத்துகிறோமா?  முதலில் ஒன்று சாதாரணமானது என்று அழைக்கப்படுவதற்கான குணாம்சங்களை வரையறுப்போம்.

 1. அவை நமது கவனத்தை ஈர்க்காதவை
 2. பொருட்படுத்தத் தேவையில்லாத அளவிற்கு எளிமையானவை
 3. நமது உடலையோ, மனதையோ தொந்தரவூட்டாதவை
 4. வாடிக்கையாக மாறிவிட்டவை.  எனினும் தீங்கற்றவை (சில விசயங்கள் வாடிக்கையாக மாறிவிட்டாலும் தீங்கானவையும் கூட.  உ.தா. குடிப்பழக்கம்.  அது சாதாரணமாகவே மாறியிருந்தாலும் நம்மால் அதனைப் பொருட்படுத்தாமல் இருக்க முடிவதில்லை.  ஏனெனில் அதில் ஒளிந்திருக்கும் தீமை)
 5. எவ்வித மதிப்பும் இல்லாதவை (பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு, உணர்ச்சி மதிப்பு)  அல்லது ஆகக் குறைவான மதிப்புள்ளவை. ஒரு வெற்றுப் பத்திரம் ஒன்றையுமே தாங்கியிருக்காவிட்டாலும் மதிப்புள்ளது.ஆனால் ஒரு வெற்றுக் காகிதம் மதிப்பற்றது.  ஒரு வெற்றுக் காகிதத்தில் ஒருவரது கையெழுத்தைப் பெற்றுவிட்டால் அது அசாதாரணமாகிவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட முகமதிப்புள்ள பத்திரம் வெறுமையாக இருக்கும் வரை அதற்கு இருக்கும் மதிப்பு அதில் பதியப்படும் ஒரு தவறான தகவலால், பிழையால், ஒரு சிறு அடித்தல் திருத்தலால் கூட மதிப்பிழந்து சாதாரணமாகிவிடுகிறது. 
 6. பயன்படுத்துவதில் இருக்கும் மதிப்பு. நமது அடையாள அட்டையும், நமது கடவுச்சீட்டும் ஒரே மதிப்புள்ளவை அல்ல.எனினும் இரண்டும் ஆவணங்களே.  இளவேனிற் காலப் பொம்மல்களும், ஏற்றுமதி செய்யப்படும் மலர்களும் ஒன்றல்ல. எனினும் இரண்டும் மலர்களே
 7. அதிக அளவிலானவை, அதிகப் பயன்பாட்டில் இருப்பவை
 8. கவனத்தை ஈர்க்காத வடிவத்தைக் கொண்டவை
 9. விவரிக்க எளிமையானவை. சாதாரண கூட்டல் கழித்தல்கள் விவரிக்க எளிமையானவை.  ஆனால் லாக்கரிதம் விவரிக்கக் கடினமானது.எனினும் இரண்டும் கணிதமே.
 10. கற்பனைக்கு, புரிந்து கொள்வதற்குச் சிக்கலில்லாதவை
 11. மொழியால் சிக்கலின்றி வசப்படுத்திவிடக் கூடியவை
 12. சமூக விதிகளுக்குள் அடங்கியவை.அதாவது ஒரு சமூகத்தால் புறந்தள்ளப்படாதவை
 13. அதன் இடம். 

மேலும் சில குணாதிசயங்களை நம்மால் சொல்லிவிட முடியுமென்றாலும் இதுவே போதுமான அளவிற்கு ஒன்றின் சாதாரணத்துவத்தை விளக்கி விடுகிறது. இவை எல்லாவற்றிற்கும் எதிரான குணாதிசயங்களை உடையவை அனைத்தும் அசாதாரணமானவை.

மொழி என்பது சாதாரணத்துவத்தை அல்லது அசாதாரணத்துவத்தை விவரிப்பதற்காக உருவானதா?  நான் பசியோடிருக்கிறேன் என்று வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னால் அது சாதாரணமான ஒன்றாக இருக்க, நான் பசியோடிருக்கிறேன், என்னிடம் பணமில்லை ஆனாலும் உணவிடுங்கள் என்று ஓர் உணவகத்தில் கேட்டால் அது அசாதாரணமாகிறது.  இங்கே பசியோடிருப்பதை விவரிக்கத் தேவையில்லை. ஆனால் பணம் இல்லாமல் நாம் உணவளிக்கக் கோருவதை நாம் விவரிக்க வேண்டும். மொழி இரண்டிற்கும் பங்களிப்பதாக இருந்தாலுமே, அதன் அளவில் அசாதாரணத்துவத்தின் பால் ஈர்ப்புள்ளதும் கூட.  ஒன்றை விவரிக்கும் தோறும் அது பெருகி, மதிப்புமிக்க ஒன்றாகவும் மாறுகிறது. இரு வாகனங்கள் வேகமாகச் செல்கின்றன என்று சொல்லும் போது நமது மொழிக்கு இருக்கும் அழுத்தம் வேகமாகச் செல்லும் இரு வாகனங்கள் பயங்கரமாக மோதிக் கொண்டன எனச் சொல்லும் போது கூடி விடுகிறது.  இங்கே வேகத்தை அல்ல மாறாக ஒரு மோதலினால் உருவான பயங்கரத்தைச் சொல்வதற்கு நமக்கு ஒரு தனித்துவமான மொழிப் பிரயோகம் தேவைப்படுகிறது.  பயங்கரம் என்பது ஓர் உணர்ச்சி.  நாம் அதிகம் எதிர்கொள்ள விருப்பப்படாத ஓர் உணர்ச்சி.  நீங்கள் விவரிக்கும் தோறும் அந்த விபத்தின் பயங்கரம் அதிகரிக்கும்.  இந்தத் தனித்துவமான மொழிப் பிரயோகமே ஒரு பொருளை, நிகழ்வை சாதாரணத்துவத்திலிருந்து அசாதரணத்துவத்திற்கும், அதனாலேயே நமது நினைவில் இருத்தத் தக்க ஓர் இடத்தைப் பெறுவதற்கும் தகுதி உடையதாக்குகிறது. 

ஒரு பறவையின் இறகொன்று உதிர்வதில் உள்ள சாதாரணத்துவம், பிரமிளின் கவிதையில் அவர் பயன்படுத்தும் மொழியாலும், அதன் அமைப்பாலும்,அதனோடு அவர் உருவாக்க விரும்பும் ஒரு பொருளாலும், படிமத்தாலும் அசாதாரணமாக மாறிவிடுகிறது. 

            `சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று

            காற்றின் தீராத பக்கங்களில்

            ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது`

ஒற்றை இறகு ஒரு பறவையின் வாழ்வாகிவிட முடியுமா? ஆனால் தர்க்கத்தின் எல்லைக்கு அப்பால் இயங்கும் இப்படிமம் நமக்கு வழங்கும் கவித்துவ அனுபவத்தின் வாயிலாக மதிப்புடையதாகிறது. மேற்சொன்ன கவித்துவ அனுபவத்தை அளிப்பதற்காக மொழியில் மிகச் சாதாரணமாகப் புழங்கும் சொற்களை ஒரு குறிப்பிட்ட பாணியில் அமைக்க வேண்டியிருக்கிறது.   வேறு சில சொற்களைச் சேர்த்தால், அல்லது மாற்றிப் போட்டால் நமக்குக் கிடைக்கும் அனுபவமும் மாறிவிடும். 

            `சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று

            ஒரு பறவையின் வாழ்வை எழுத

            காற்றின் தீராத பக்கங்களைத் தேடுகிறது` (அ)

            காற்றின் தீராத பக்கங்களில்

            ஒரு பறவையின் கவிதையை எழுதிச் செல்கிறது (அ)

            ஒரு பறவையின் தலைவலியை எழுதிச் செல்கிறது

இங்கே, கவித்துவ அனுபவம் குறைபடுவதோடு மட்டுமல்லாமல் கவிதை வெகு சாதாரணமாகிவிடுகிறது.வாழ்வை எழுதுவதும், ஒரு கவிதையை, தலைவலியை எழுதுவதும் ஒன்றல்ல.  முன்னதை எழுத மொத்த மொழியே ஓர் அடிமையைப் போல கைகட்டி நிற்க வேண்டும்.  அப்போது கூட வாழ்வை முழுமையாக விவரித்து விட முடியாது.ஏனெனில் முழுமை விவரணை எல்லைகளுக்கு அப்பாலுள்ளது. 

 ஒரு கவிதையின், ஓர் இலக்கியப் பிரதியின் மதிப்பே அது எவ்வாறு அசாதாரணத்துவத்தைக் கட்டமைக்கிறது என்பதிலேதான் இருக்கிறது. மொழியால் சாதாரணத்துவத்தை விவரிப்பது கடினம்.  ஏனெனில் அது சாதாரணமானது. அதனை விளக்க ஒரு படிமமோ, தனித்துவமான சொற்களோ, அமைப்போ தேவையில்லை. ஆனால் நம்மிடம் இவை அனைத்துமே உள்ளன.  நம்மால் ஒரு படிமத்தை எளிதாக உருவாக்கி அதன் மூலம் ஒன்றை அசாதாரணமாக விவரித்து விட முடியும்.  ஒருபோதும் இதற்கு எதிராக மொழியின் எந்தக் கருவியைக் கொண்டும் சாதாரணத்துவத்தை விவரித்து விட முடியாது.  மொழியின் கருவியைப் பயன்படுத்தத் துவங்கும் போதே ஒன்று அசாதாரணமாகிவிடுகிறது.படிமம் கூடத் தேவையில்லை, ஒரு சொல்லை இருமுறை சொல்வதே போதுமானது.மின்சார வேகத்தில் அவன் அவளை அழைத்தான் என்பதைக் காட்டிலும் அவன் அவளை வா வா என்று அழைத்தான் என்று சொல்வதே அவனது அவசரத்தைக் காட்டி விடுகிறது.

சாதாரணத்துவத்தை நம்மால் விவரிக்க முடியாதென்பதாலேயே நாம் மொழியின் மீது சந்தேகம் கொள்கிறோம்.  மொழியே ஒரு நாடகம்.ஒரு கல் பட்டுவிட்டதால் வலிக்கிறது என்பது போதாது உயிர் போகிற அளவிற்கு வலிக்கிறது என்றால்தான் வலியின் அளவும், அவசரமும் சேர்கிறது. மேலும் தாங்கிக் கொள்ள முடிவதை அல்ல தாங்க முடியாதவற்றைச் சொல்வதற்கே மொழி அதிகமாகத் தேவைப்படுகிறது. 

 ஒன்றை அசாதாரணமாக நாம் விவரிப்பதின் வழியாக நாம் நம்மைத் தற்காத்துக் கொள்கிறோமா? சாதாரணத்துவத்தில் நாம் தஞ்சமடைவதைக் காட்டிலும் அசாதாரணத்துவத்தில் தஞ்சமடைவதின் வழியாக நம்மைச் சுற்றிலும் ஒரு அகழியை அல்லது நெருப்புச் சுவரை எழுப்புகிறோம்.எதை ஒன்றையும் அசாதாரணமாக மாற்ற முடிந்தால் நம்மால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கும் மேலாகச் செயல்பட முடியும்.   அது கவனத்தை ஈர்ப்பதோடு, மதிப்பையும் அதிகரிக்கிறது.  நாம் ஒவ்வொருவரும் நம்மை அசாதாரணமானவர்கள் என்று கருதிக் கொள்வதிலிருக்கும் திருப்தி, நமது சுய மதிப்பீட்டில் நம்மையே சாதாரணமானவர்கள் என்று கருதிக் கொள்வதில் கிடைப்பதில்லை.  நாம் சாதாரணமானவர்களாக நம்மை உணரும் அடுத்த நிமிடமே நாம் ஒடுங்கி, விலக எத்தனிக்கிறோம்.  இதற்கு நேர்மாறாக நாம் நம்மை அசாதாரணமானவர்களென்று எடையிட்டால் மேலும் அதிகமாக விரிகிறோம், தீவிரமாகச் செயல்படவும் விழைகிறோம்.  எது ஒன்றிலும் நமது ஆற்றல் அனைத்துமே ஒன்றிணைவதற்கும், அந்தச் செயலை மதிப்புமிக்கதாக ஆக்குவதற்கும் நாம் அசாதாரணமான வழியில், வடிவத்தில் அதனைச் செய்ய வேண்டியிருக்கிறது. 

இலக்கியம் அசாதாரணங்களின் கூட்டுத் தொகை.  இலக்கியம் அசாதாரணங்களின் தொகுப்பு.  அதனால்தான் இலக்கியம் மொழியின் அசாதாரணத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. 

ஒரு நாடகத்திற்கு நாடகத்தன்மையை அதிகரிக்கத் தேவையான பங்களிப்பைச் செய்கிறது. 

‘அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்` என்பதில் ஒரு நாடகம் மிக எளிதாக நம் கண்முன்னே நிகழ்கிறது.  அவனும் அவளும் அல்லது இராமனும் சீதையும் ஒருவருக்கொருவர் நோக்கினார்கள் என்பதில் நாடகமும் இல்லை, படைப்பூக்கமும் இல்லை.  சாதாரணத்துவம் புறக்கணிக்கப்பட வேண்டியதா?  என்றைக்காவது நமது வாழ்வின் மதிப்பைக் கவனிக்க விரும்பினால் நம்மைச் சுற்றியிருக்கும் சாதாரணமானவற்றிலிருந்தே துவங்க வேண்டும்.   அசாதாரணங்கள் அல்ல பெரும்பாலும் நமது வாழ்வே சாதாரணங்களின் பங்களிப்பால் உயிர்த்திருக்கிறது. மின்விளக்கை எடிசன் கண்டுபிடித்தது அசாதாரணமானது, நமது வாழ்வையே மாற்றியமைத்தது, என்றாலும் மூச்சு விடுவது சாதாரணமானது.  நம்மால் மின்விளக்கில்லாமல் வாழ்ந்துவிட முடியும்.  நம்மைச் சுற்றிலும் இருக்கும் அசாதாரணமானவற்றை ஒவ்வொன்றாக நாம் விலக்க முனைந்தால் நமக்கு அடிப்படையானவையென்று எதுவெல்லாம் எஞ்சுமோ அவை அனைத்துமே சாதாரணமானவை.  நாம் சாதாரணமானவற்றின் தயவாலும், அசாதாரணமானவற்றைக் கற்பனை செய்வதாலுமே வாழ்வில் தாக்குப் பிடிக்கிறோம். 

 நாம் நமது கவனத்தைச் சாதாரணமானவற்றின் மீது குவிப்பதற்கு வெகுகாலமாகும் அல்லது முடியாமலேயே கூடப் போகும்.அதற்கு நமக்கு மொழி தேவையில்லை.அதன் நாடகாம்சம் எதுவுமே தேவையில்லை.ஆனால் ஒன்று சாதாரணமானதாக மாறுவதற்கு வெகுகாலம் ஆற்றல் மிக்க உழைப்பும், கல் போன்ற பொறுமையும் தேவைப்படும். 

அசாதாரணத்துவத்தை எளிதாக உருவாக்க முடியும், மொழி அறிவு போன்ற பல கருவிகள் உள்ளன.ஆனால் சாதாரணத்துவத்தை உருவாக்குவது கடினமானது. இலக்கியத்தின் பணி, அசாதாரணமானவற்றை சாதாரணமானதாக ஆக்குவதைக் காட்டிலும் அதற்கு எதிரானதிலேயே அடங்கியிருக்கிறது.  எத்தனையோ பெண்களை நாம் இலக்கியத்தில் வாசித்திருந்தாலும் `மரப்பசுவின்` அம்மணி அம்மாளை நாம் ஏன் `அக்னிப் பிரவேசம்` கங்காவை விட அசாதாரணமானவளாகவும், நேசத்திற்கு உரியவளாகவும் பார்க்கிறோம்?  கூடவே நாம் `எஸ்தரையும்` நினைவில் வைத்திருக்கிறோம்.  ஆனால் இவர்கள் யாரைக்காட்டிலும் `இரத்த உறவில்` வரும் அக்காள் கூடுதலாக அசாதாரணமானவள்.  ஏனெனில் அவள் சாதாரணத்துவத்தின் இயல்பிலேயே தன்னை ஒளியேற்றிக் கொள்கிறாள்.   அவளது மதிப்பை நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது.ஒருவர் அசாதாரணமானவராவதற்குத் துணிச்சலும், உழைப்பும், சாதாரணமானவராக மாற்றிக்கொள்ள விழிப்பும், உழைப்பும் தேவைப்படும். மீறுவது எத்தனை கடினமானதோ அதை விடவும் சகல மீறல்களையும் கட்டுப்படுத்திக் கொண்டு ஒடுங்குவதே கடினமானது. 

கவிதை சந்தத்தின் வாயிலாக ஒலியை எழுப்புகிறது.  ஆனால் நமது சமகாலக் கவிதைகளோ மொழியின் ஒலியைக் குறைத்து மொழியின் அமைதியை எழுப்புகிறது.  இசையின் அடிப்படையான நோக்கம் அமைதியைப் படைப்பதே என்பதற்கு ஒப்பானது இது. 

சீமாட்டி பெளவரியும், அன்னா கரினினாவும் ஏன் நம் நினைவில் நிற்கிறார்கள்.  இருவரும் தற்கொலை செய்து கொண்டதாலா?. கிரேட் கேட்ஸ்பியின் டெய்ஸியை ஏன் நாம் மறந்து விட்டோம், அவள் கணவனிடம் திரும்பியதாலா? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.