சூழலியலின் முதல் விதி:உயிர்க்கோளத்தில் எல்லாம் எல்லாவற்றுடனும் இணைந்துள்ளது-த வி வெங்கடேஸ்வரன்

1971இல் பேரி காமன்னர் எனும் புகழ் மிக்க சூழலியலாளர், உலக சூழலியல் இயக்கத்தின் மீது தத்துவ தாக்கம் செலுத்திய ‘கிலோசிங் தி சர்கிள்’ எனும் நூலை எழுதினர். இதில் சுற்றுச்சூழலின் முறைசாரா நான்கு விதிகளை வகுத்தார். 

முதல் விதி – எல்லாமே எல்லாவற்றுடனும் இணைக்கப்பட்டுள்ளது,

இரண்டாவது விதி – எல்லாம் எங்காவது செல்ல வேண்டும்

மூன்றாவது விதி – செம்மையாகச் செயல்பட இயற்கை அறியும் 

நான்காவது விதி –  எதுவும் இலவசமாக வழங்கப்படுவதில்லை

இவை இயற்பியலின் விதிகள் மற்றும் கணித தேற்றங்களைப் போல முறைசார் விதிகள் இல்லை. எனினும் சூழலியலை விளங்கிக்கொள்ள இந்த விதிகள் உதவும் என்ற அடிப்படையில் பேரி காமன்னர் இந்த விதிகளை விளக்கும் போதே முறைசாரா என்றும் அடைமொழியோடு தான் விவரித்தார். அவரைத் தொடர்ந்து இந்த விதிகளை, கடந்த ஐம்பது வருடங்களாக, பல்வேறு சூழலியலாளர்கள் இந்த தமது  கட்டுரைகள், வாதங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நான்கு விதிகளை மீள் பார்வை செய்வதே இந்தக் கட்டுரைத் தொடர்களின் நோக்கம். இந்த முதல் பகுதியில் முதல் விதி விவாதிக்கப்படுகிறது. அடுத்தடுத்த கட்டுரைகளில் ஏனைய விதிகள் மீள்பார்வை செய்யப்படும். எனினும் ஒவ்வொரு கட்டுரையும் தனித்து வாசிக்கும் படி அதனளவில் முழுமை அடைந்ததாக இருக்கும்.

சூழல் அமைப்பு பிணைப்புக்கள்

எல்லாமே எல்லாவற்றுடனும் இணைக்கப்பட்டுள்ளது எனும் முதல் விதி

சுற்றுச்சூழல் மண்டலத்தின் பிணைப்புகளை சுட்டுகிறது. வெவ்வேறு உயிரிகளுக்கு இடையில் தொடர்பு உள்ளது. எடுத்துக்காட்டாக வேட்டையாடும் விலங்குக்கும் வேட்டையாடப்படும் விலங்குக்கும் இடையே தொடர்பு உள்ளது. புல்வெளிகளில் மான்கள் போன்ற புற்களை உண்ணும் மேய்ச்சல் விலங்குகள் இருக்கும். இந்த மான்களை வேட்டையாடி உண்ணும் புலிகளின் இருப்பிடமாகவும் அந்த புற்காடுகள் இருக்கும். அதிக மான்கள் அந்தக் காட்டில் வாழ்ந்தால், கூடுதல் புலிகளை அந்தக் காடு தாங்கும். அதிக புலிகள் இருந்தால் கூடுதல் மான்கள் வேட்டையாடப்பட்டு அவற்றின் எண்ணிக்கை குறையும். கூடுதல் புற்கள் மேயப்பட்டால் மான்கள் பசியால் வாடும். எனவே புல்-மான்-புலி என்ற சங்கிலியில் ஒன்றுக்கொன்று பிணைப்பு உள்ளது. மேலும் உள்ளபடியே இந்தச் சங்கிலி ஒரு வட்டச் சுழற்சி. புல்-மான்-புலி-புல் என இந்த பிணைப்பில் தொடர்பு உள்ளது. புலியின் எண்ணிக்கை குறைந்தால் கூடும் மானின் அளவில் புல்லின் அளவு குறையும். எனவே புலிக்கும் புல்லுக்கும் தொடர்பு உண்டு. இது எளிமையான எடுத்துக்காட்டு.

புலியைத் தவிர மானை வேட்டையாடும் வேறு ஊன் உன்னி அந்தக் காட்டில் இருக்கலாம். புல்லை மேயும் வேறு தாவர உன்னி விலங்கு இருக்கலாம். எனவே மெய்யான வாழ்விடத்தில் பல்வேறு உயிரிகள் ஒன்றுடன் ஒன்று பல்வேறு வகைகளில் பிணைத்து இருக்கும்.

மேலும் உணவுச் சங்கிலி மட்டுமல்ல சூழல் அமைப்பில் பல்வேறு வகையான பிணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகள் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட பிணைப்பாக இருக்கலாம்.   வெட்டி கீறல் ஏற்படுத்தவல்ல புற்களின் மீது நடக்க  மேய்ச்சல் விலங்குகள் பரிணாமத்தில் பெற்ற குளம்புகள் மானின் கால்களில் உள்ளது. மேயும் விலங்கின் வாய் பகுதியை வெட்டிக் கீறல் ஏற்படுத்தவல்ல வகையின் புற்களின் விளிம்புப் பகுதி ரம்பம் போன்ற அமைப்பு கொண்டுள்ளது. பரிணாமத்தின் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்து விட்டோம் எனக் கருதக்கூடாது. இன்னமும் மேய்ச்சல் விலங்குகளும் புல்லும் ஒன்றை ஒன்று சமாளிக்கப் பரிணமித்துக்கொண்டு தான் உள்ளன. நமக்குப் புலப்படாமல் சிறு அளவில் இந்த பிணைப்பில் கூட மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. புவியின் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அந்தப் பகுதியின் வானிலை மாறி, வெப்ப நிலை உயரும்போது அந்தப் பகுதிக்குப் புதிதாகக் கொசு குடிவரும். வெப்பம் – கொசுவின் வாழ்விடம் எனும் பிணைப்பு கொசுவுக்கு புதுப் புது வாழ்விடங்களை ஏற்படுத்திக்கொடுக்கலாம்; சில வாழ்விடங்களைக் காலி செய்துவிடலாம். இப்படிச் சூழல் அமைப்பில் பல்வேறு வகையான பிணைப்புகள் உள்ளன.

உயிரிகளுக்கு இடையே மட்டுமல்ல அந்தப் பகுதியின் இயல்வேதி சூழலுக்கும் அங்கு வாழும் உயிரிகளுக்கும் இடையே தொடர்பு உண்டு. உயிரிகள், அந்தப் பகுதியின் நில-நீர் போன்ற அமைப்பு, அந்தப் பகுதியின் காலநிலை, மண்ணில் உள்ள தாதுப்பொருள்கள் எனப் பல்வேறு உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட அமைப்பு தான் சுற்றுச்சூழல். அதாவது சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள ஒவ்வொரு பகுதியும் ஏனைய பகுதிகளோடு இணைக்கப்பட்ட வகையில் இயங்குகிறது.

மிகையாகும் பெரும் விளைவுகள்:

உணவுச் சங்கிலி போன்ற சுழற்சியில் ஆற்றல் கீழிலிருந்து மேலாகச் செல்கிறது, சூரிய ஒளியின் ஆற்றலில் ஒரு பங்கை உறிஞ்சி தாவரம் உணவாகத் தயாரிக்கிறது. இந்த தாவரத்தை உண்ணும் போது அந்த சூரிய ஆற்றலில் ஒருபகுதி மட்டுமே தாவர உன்னியின் ஆற்றலாக மாறுகிறது. அந்த தாவர உன்னியை ஊன் உன்னி உண்ணும்போது அதே சூரிய ஆற்றலில் மேலும் வெகு சிறுபகுதி மட்டுமே ஊனுன்னிக்குக் கிடைக்கிறது. தாவரக்கழிவு, விலங்குகளின் கழிவு முதலிய புழு பூச்சி போன்ற உயிரிகளுக்கு உணவாகிறது. அதாவது உணவு சங்கிலியில் ஆற்றல் மிகையாக்கம் (amplification) ஏற்படுவதைக் காணலாம். ஒரு கிலோ புல் வளர புல் உறிஞ்சும் சூரிய ஆற்றல் போல மானின் ஒரு கிலோ எடை உருவாக பல் மடங்கு ஆற்றல் தேவை, புலியின் ஒரு கிலோ எடை ஏற மானின் பல கிலோ இறைச்சி தேவை. உயிரி சுழற்சிகளில் இதுபோன்ற மிகைப்பு வினை ஏற்படுகிறது. இதன் காரணமாகச் சுழற்சி பிணைப்பில் ஒரு இடத்தில் ஏற்படும் சிறு சலனம் சுழற்சியின் வேறு பகுதியில் பெரும் ஊசலாக மாறிவிடலாம். இந்த வினை உடனே வெளிப்படாமல் காலதாமதத்தோடு ஏற்படலாம்.

சுழற்சி தரும் நிலைத்தன்மை:

இந்த பிணைப்புகளை உற்றுப் பகுத்துப் பார்த்தல் அடிப்படையில் சுழற்சி போக்குகள் மூலம் தன்னுள் பிணைந்த சூழல் அமைப்பு மேலாண்மை செய்யப்படுவது விளங்கும். புல்-மான்-புலி-புல் என்ற சுழற்சியை எடுத்துக்கொண்டால்,  சில ஆண்டுகள் கூடுதல் மழை பொழிவு ஏற்பட்டால் அந்த கட்டத்தில் செழிப்பாகப் புல் வளர்ந்து அதனால் கூடுதல் மான்கள் வாழ வழிபிறக்கும்; இதன் தொடர்ச்சியாகக் கூடுதல் புலிகள் வாழ முடியும். அடுத்த வானிலை சுற்றில் வறட்சி ஏற்படும்போது மான்கள் மடியும்; புலியின் எண்ணிக்கை குறையும்.  அவ்வப்போது ஏற்படும் வானிலை மாற்றங்களைச் சமாளிக்கும் படியாக இந்த பிணைப்புச் சுழற்சி உள்ளது. ஏற்படும் மாற்றங்களைத் தானே சமாளிக்கும் படியாக தம்முள் தற்கட்டுப்பாட்டமைப்பியல் (cybernetics) குணத்தைச் சூழல் அமைப்புகள் கொண்டுள்ளது.

அதாவது தன்னைத்தானே மீள்வு செய்து சமன் படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டதாகச் சூழல் அமைப்பு இருக்கிறது. கிண்ணத்தில் கோலிகுண்டை வைத்தால் முதலில் அது இங்கும் அங்கும் உருளும். பின்னர் அந்தக் கிண்ணத்தின் அடிப்பகுதியில் ஓய்வு கொள்ளும். சற்றே அந்தக் கோலிகுண்டை அசைத்தால், அங்குமிங்கும் உருண்டு மறுபடி அதே மையப்பகுதியில் நிலைகொள்ளும். அதுபோல சூழல் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கும். ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அடிப்படையில் சூழல் அமைப்பில் நிலைத்தன்மை நோக்கிய நகர்வு இருக்கும்.

இந்த நிலைத்தன்மை மாற்றமில்லா நிலைத்தன்மை அல்ல; மாற்றங்களுடன் கூடிய நிலைத்தன்மை. இயக்க நிலைத்தன்மை (dynamic stability).  கிண்ணத்தில் உள்ள கோலிகுண்டு இயக்க நிலைத்தன்மையில் இருப்பது போலச் சூழல் அமைப்பும் நாள்தோறும் மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டே இயக்க நிலைத்தன்மை கொண்டுள்ளது. சுழற்சி பிணைப்புகள் வழியே தற்கட்டுப்பாட்டமைப்பு ஏற்படுகிறது. குறிப்பிட்ட அளவு மாற்றங்களை அந்த அமைப்பு தாங்கும்; மாற்றங்கள் ஏற்படுத்தும் அழுத்தம் கூடி சுழற்சி வேகம் ஓரளவுக்கு மேலே தடைபட்டால் அந்த சூழல் அமைப்பு நிலைகுலைந்துவிடும்.

தொகுத்துக் கூறினால் அனைத்து ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை; அவை தம்முள் கொண்டுள்ள சுழற்சி பிணைப்புகள் கொண்டுள்ளதால், வெளி உந்து உலைவுகள் காரணமாக ஊசல் செய்தாலும், சற்றேறக்குறைய தானே சமநிலைப் படுத்திக்கொள்ளும் தன்மை வாய்ந்தவை. இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்பின் ஏதேனும் ஒரு பகுதி சேதமடைந்தாலோ அல்லது மிகைப்படுத்தப்பட்டாலோ அதன் விளைவுகள் மற்ற பகுதிகளுக்கு மிகைப்படுத்தப்பட்டுப் பரவக்கூடும். மேலும் சிறு கடையாணி கழன்றால் குடை சாய்வது போல, எதாவது சிறு இடைஞ்சல் பெரும் நிலைகுலைவை ஏற்படுத்த முடியும். இதன் தொடர்ச்சியாக நமது செயல்கள் எதிர்பாரா விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இவை தான் முதல் விதியின் சாரம்.

மாறாத புனித இயற்கை:

இந்த விதி பல சூழல் ஆர்வலர்களால் தவறாக விளங்கிக் கொள்ளப்படுகிறது. இப்போது உள்ள இயற்கை சூழல் அமைப்பு (அல்லது தொழிற்புரட்சிக்கு முந்தய கட்டத்திலிருந்த சூழல் அமைப்பு) அப்படியே இருக்க வேண்டும்; எந்த மாற்றமும் ஆபத்தை விளைவிக்கும் என இந்த விதியை இவர்கள் விளங்கிக் கொள்கின்றனர். இதன் தொடர்ச்சியாக ஒவ்வொன்றும் பின்னிப் பிணைந்த ‘இயற்கையிலிருந்து’ விலகிச் செல்வது அல்லது ‘இயற்கைக்கு மாறான’ செயல்கள் தீங்கானது; இயற்கையின் புனிதத்தைக் கெடுக்கும் செயல் எனும் பார்வை சூழலியல் தத்துவங்களில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. மனித இடையூறு காரணமாக ‘சமநிலை தவறும் இயற்கை (The imbalance of nature)’ தான் சூழல் பிரச்சினைக்குக் காரணம் என்ற கருத்து எழுகிறது. இயற்கை ஒரு ஆழமான மர்மம்; அதில் உள்ள எல்லா பிணைப்புகளும் நமக்கு விளங்கிவிட முடியாது எனவே தற்போது இருக்கும் இயற்கை அமைப்பை அப்படியே ஒப்புக்கொள்வது தான் சிறந்தது எனக் கருதப்படுகிறது.

மாற்றம் எதுவுமில்லாத இயற்கை எனும் கருத்து ஒருவகையில் ;இயற்கையை’ புனிதப்படுத்தி வழிபாட்டுக்குத் தகுந்த ஒன்றாகக் கருதும் ஆன்மீகப் பார்வையை உருவாகுகிறது. நேரடியாக இறையுணர்வு பார்வையை ஏற்கும் சூழல் ஆர்வலர்கள் சிலர் கடவுள் ஒரு பரிபூரண பழுதற்ற உலகத்தை உருவாக்கினார்; கடவுள் படைத்த உலகத்தை மனிதர்கள் தங்கள் நடவடிக்கைகளினால் மாசு செய்கின்றனர்; சரியான நேரத்தில் கடவுள் இயற்கையை மறுபடி பரிசுத்தம் செய்யும் வகையில் மீட்டெடுப்பார்; மாசு செய்யும் நம்மைத் தண்டிப்பார் எனக்கருதுகின்றனர்.

கடவுளை நேரடியாகப் புகுத்தாமல் இயற்கையை சமயசார்பற்ற ஆன்மீக நோக்கில் காணும் ஆழ் சூழலியல் (deep ecology), கயா (Giga) கோட்பாடு போன்ற  பார்வைகள் மனிதன் கைபடாத இயற்கையை ஏதோவகையில் புனிதம் என்று கருதுகிறது. இயற்கையாக புவியியல் மாறுதல்களில் ஏற்படும் மாற்றங்கள் மிகமிக சொற்ப வேக கதியில் அமைவதால் மனிதனின் தலையீடு இல்லை என்றால் நிலம், உயிரிகள், வானிலை எல்லாம் சற்றேறக்குறைய மாறுதல்கள் இல்லாமல் அப்படியே எப்போதும் போலவே இருக்கும் என இந்த சமயசார்பற்ற ஆன்மீகப் பார்வை கருதுகிறது. எடுத்துக்காட்டாக ஆல்டோ லியோபோல்டு எனும் புகழ்மிக்க சூழல் ஆர்வலர் 1949 ஆம் ஆண்டில் இயற்கை சூழல் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் அழகைக் காப்பது தான் சூழல் நெறி எனக்கூறுகிறார்.

இயற்கை தன்னுடைய பரிசுத்த ஈடன் நிலைக்குத் திரும்ப இறைநம்பிக்கை கொண்ட ஆன்மீகப் பார்வை கடவுளின் வருகைக்குக் காத்து இருக்கிறார்கள் என்றால் சமயசார்பற்ற ஆன்மீகப் பார்வையோ தொழிற்சாலை உற்பத்தியை அகற்றுவதன் மூலம் இயற்கையை அதன் மூல இயல்பு நிலைக்குத் திருப்ப முடியும் எனக்கருதுகிறது. இயற்கை உலகம் இயற்கையாகவே நிலையற்றதாக இருக்கலாம், மனித செயல்பாடுகள் இல்லாவிட்டாலும் விரைவான மாற்றத்திற்கு அது உள்ளாகலாம் என்ற சாத்தியக்கூறுகளை ‘மாறாத இயற்கை’ பார்வைகள் கவனத்தில் கொள்வதில்லை.

சூழல் அமைப்பு பல்வேறு தளங்களில், உலகின் பல்வேறு பகுதிகளில் நாள் அளவில், மாத அளவில், பருவ கால அளவில் நீண்ட கால அளவில் வெகு நீண்ட தசாப்பத அளவில் என பல்வேறு கால அளவுகளில் மாற்றமடைந்துகொண்டே இருக்கிறது என அறிவியல் ஆய்வுகள் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்கின்றன. பூமியின் வரலாற்றைப் பார்த்தல் ஒருகாலத்தில் பூமியில் உயிரே இருக்கவில்லை; ஆரம்ப காலத்தில் ஒளிச்சேர்க்கை மூலம் ஒருசெல் உயிரிகள் உருவாக்கிய ஆக்ஸிஜன் காரணமாகத்தான் பூமியின் வளிமண்டலத்தில் சுமார் இருபத்தியொரு சதவிகிதம் ஆக்ஸிஜன் உருவானது. இன்றுள்ள அதே நிலையில் கண்டங்கள் இருக்கவில்லை. ஆயிரம் வருடங்களில் நதியின் போக்கு மாறி அந்தப் பகுதியின் சூழல் அமைப்பும் மாறுகிறது. ஆதிகாலத்திலிருந்த உயிரிகள் இன்று பூமியில் இல்லை. எல்லாம் மாற்றத்துக்குள்ளாகிறது. இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் மட்டும் அல்ல. பல மாற்றங்கள் கோள் அளவில் ஏற்படும் மாற்றங்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

காலநிலை மாற்றம் குறித்து கவலை ஏன்?

சூழல் அமைப்புகள் மாறிக்கொண்டே இருக்கும் என்றால் கார்பன் அளவு கூடுவது; கடல் அமிலம் ஆவது; உயிரினங்கள் அழிவது, புவிவெப்பம் அடைவது போன்ற சமகால சூழல் சவால்களைக் கண்டு நாம் ஏன் கவலை கொள்ளவேண்டும்? இந்த மாற்றங்களையும் சூழல் அமைப்பு சமாளித்து புதிய நிலையை அடைந்துவிடும் தானே.

ஆம். காலநிலை மாற்றம் போன்ற சுற்றுச்சூழல் சவால்கள் புவியை அழித்துவிடாது. 65 மில்லியன் ஆண்டுகள் முன்னர் பூமியில் மோதிய ராட்சச விண்கல் ஏற்படுத்திய பிரளயத்தில் பூமி அழிந்துவிடவில்லை. எனினும் டைனோசர் உட்பட பல நிலம், நீர் வாழ உயிரினங்கள் அழிந்தன. இந்தக் காலநிலை மாற்றத்திலும் புவிக்கோள் ஒன்றும் அழிந்து விடப்போவது இல்லை; ஆனால் கூடும் சராசரி வெப்பநிலை ஏற்படுத்தும் மாற்றங்களினால் மனிதர்கள் உட்பட பல உயிரிகள் பெரும் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடும். காலநிலை மாற்றத்தின் தாக்கம் எல்லா மனிதர்களிடையேயும் ஒரேவிதத் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை, ஏழை எளியவர்கள், மூன்றாம் உலக நாடுகளில் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இயங்கியல் பார்வையில்:

இயற்கைக்கு ஒரு குறிப்பிட்ட வரலாறு உண்டு. இந்த வரலாற்றில் மனிதன் உட்பட எல்லா உயிரிகளும் இயற்கையின் மீது வினை புரிந்து மாற்றங்களை ஏற்படுத்துகிறது.  எடுத்துக்காட்டாகச் சில நுண்ணுயிரிகள் கற்களிலிருந்து பாஸ்பேட் தாதுவை அரித்தெடுத்து மண்ணில் கலக்கும். இதன் தொடர்ச்சியாக அந்த பகுதியின் மண் தன்மை மாறும்; பாறைகளில் பாஸ்பேட் அளவு குறையும். மறுபுறத்தில் அந்த கட்டத்தில் உள்ள இயற்கை சூழல் அமைப்பும் உயிரிகளின் மீது தாக்கம் செலுத்தி உயிரிகளை மாற்றுகிறது. உலக வெப்பநிலை அதிகரிக்கும் கட்டடத்தில், அதுவரை மொட்டை சிகரங்களாக இருந்த மலையின் உச்சி வரைக்கும் மரங்கள் வளர வழி ஏற்படுகிறது.

எனவே இன்று உள்ள அதே சமநிலையில் பூமி எல்லா காலத்திலும் இருந்தது கிடையாது. மாற்றங்களைப் புவி ஏற்று புதிய நிலை அடையும். சூழலியலாளர் ரேச்சல் கார்சன் கூறியது போல “இயற்கையின் சமநிலை இன்று உள்ளது போலவே 10,000 -15,000 ஆண்டுகளுக்கு முந்தய ப்ளீஸ்டோசீன் காலத்துக்கு முன்பு இருக்கவில்லை….. இயற்கையின் சமநிலை என்பது காலாகாலத்துக்கும் நிரந்தரமான நிலை அல்ல; அது நெகிழும் தன்மை கொண்டது; எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து தன்னைத்தானே சீரமைத்துக்கொண்டே உள்ளது. மனிதர்களும் இந்தச் சமநிலையின் ஒரு பகுதியாக இருக்கின்றனர்… எனினும் இன்று ஒரு சமநிலை உள்ளது.  உயிரினங்களுக்கிடையேயான ஒரு சிக்கலான, துல்லியமான ஒருங்கிணைந்த உறவுமுறை அமைப்பு உள்ளது. ஒரு குன்றின் விளிம்பில் அமர்ந்திருக்கும் ஒரு நபர் எப்படி புவியீர்ப்பு விதியை மீறுவதைப் புறக்கணிக்க முடியாதோ அதுபோல இன்று உள்ள சமநிலை குறித்து அலட்சியமாக நம்மால் வாளாவிருக்க முடியாது.”

காலநிலை மாற்றம் ஏற்படும்போது புவி புதிய சமநிலைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அந்தப் புதிய சமநிலை மனித வாழ்வுக்கு உகந்ததாக இல்லாமல் போகும் என்பது தான் கவலை. மேலும் குறைந்த கால அளவில் இந்த மாற்றம் ஏற்படுவதால், மாற்றங்களுக்கு மனித இனம் பரிணாம படிநிலை தகவமைத்துக் கொள்ளும் வாய்ப்பு சிறிதளவும் இல்லை. எனவே மனித இனத்துக்கே ஆபத்து. கூடுதலாக ஏழை எளியவர்களின் வாழ்வாதாரங்கள் பறிபோகும்; அழுத்தம் கூடும் என்பது கூடுதல் அக்கறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.