சமிதை-செந்தில் ஜெகன்நாதன்

சென்னையிலிருந்து ஊருக்குச் சென்றிருந்தேன். மாநகரத்து பிரம்மச்சாரி  வாழ்க்கையில் கடை உணவுகளால் செத்துப் போயிருந்த நாக்குக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் தன் சமையல் மூலம் உயிரளிப்பாள் அம்மா. அன்றைக்கு நண்பகலில் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டுக் கண்ணயர்ந்திருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் நீருக்கடியிலிருந்து எழும் குரலைப்போல அம்மா கூப்பிடுவது கேட்டுக்கொண்டே இருக்கவும் திடுக்கிட்டு எழுந்தேன்.

“ரஞ்சித்து.. பேபி செத்துருச்சாம்ப்பா” சொல்லிக்கொண்டிருக்கும்போதே அம்மாவின் குரல் தடுமாறியது.

“ஐய்யய்யோ.. என்னம்மா சொல்ற? நேத்துதான நம்ப வீட்டுக்கு வந்து பேசிகிட்டு இருந்துச்சு?”

“ஆமாம்ப்பா”

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அடுத்தத் தெருவில் இருக்கும் பேபி வீட்டை நோக்கி ஓடினேன். வாசலில் கூட்டம் கூடியிருந்தது. வேலியோரத்தில் அமர்ந்து பச்சைத் தென்னை மட்டையை வெட்டிக்கொண்டிருந்தனர் சிலர். இரண்டு இளைஞர்கள் அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து விசுபலகைகளைத் தூக்கிக் கொண்டுவந்து வாசலில் போட்டார்கள்.

மொத்தக் கூட்டத்தின் பேச்சுச் சத்தங்களுக்கும், அழுகுரல்களுக்கும் நடுவில் தனித்துக் கேட்டது கனகுவின் கேவல் சத்தம். “யம்மா என்ன இப்புடி அனாதையா உட்டுட்டு போயிட்டியேம்மா.. எனக்கு இனுமே யாரு இருக்காம்மா..” என்ற அவன் கத்திய கத்தல் ஊர் எல்லையிலிருந்த வீரன் கோவில் வரை எதிரொலித்தது.

வாசலில் குந்தியிருந்தவர்களைக் கடந்து உள்ளே சென்றேன். ஊர்ப்பெண்கள் சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர். தலைமாட்டில் இரண்டு பக்கமும் இளநீர் சீவி வைக்கப்பட்டு நடுவில் நல்ல விளக்கு ஏற்றி பேபியைக் கிடத்தி வைத்திருந்தார்கள். வெறுமனே தூங்காமல் கண்ணை மூடிக் கிடப்பதைப் போலிருந்தது முகம். காதோரத்தில் மட்டும் நரைத்திருந்தது, ஒல்லியான உருவத்திலிருந்த பேபியை யார் வந்து பார்த்தாலும் “சாக வேண்டிய வயசா இது” என்று கடவுளை நிந்திப்பார்கள்.

“பாவி.. பாவி.. இப்புடி நீ போவறதுக்காகவா இம்மாம் கஷ்டப்பட்ட.. என் அங்கம் கொதிக்குதே.. ஐயோ.. ஐயோ.. அநியாயமா போயிட்டியேடி… ” பேபியின் கரத்தைப் பிடித்தபடியே கதறி அழுதுகொண்டிருந்தாள் பாலம்மாள். பேபியோடு சித்தாள் வேலைக்குப் போகிறவள்.

சிறிது நேரம் கனகுவின் கையைப் பிடித்துக்கொண்டு நின்று விட்டு வெளியே வந்தேன்.

பேபி – ஊரிலிருக்கும் குழந்தைகள் முதல் வயதான கிழம் வரை எல்லோருக்குமே அவள் பேபிதான். லூர்து ஆஸ்பத்திரியில் அவள் பிறந்தபோது வெள்ளைக்கார மருத்துவர் ”பேபி இஸ் ஃபைன்” என்று அவளது அப்பாவிடம் சொல்ல அதுவே அவருக்குப் பிடித்துப்போக பேபியென்றே பெயராக வைத்துவிட்டார். 

என் அம்மா திருமணமாகி இந்த ஊருக்கு வந்தபோது அடுத்த மூன்று மாதங்களில் பேபி திருமணமாகி வந்ததாக அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனக்கும் கனகுவுக்கும் ஏழு மாதங்கள் மட்டுமே வயது வித்தியாசம்.

கனகு பிறந்து ஐந்து வயதாக இருக்கும்போது கொத்தனாராக வேலை பார்த்த அவனது அப்பா மஞ்சள் காமாலையால் இறந்து போனார். அதன் பிறகு ஒற்றைப் பிள்ளையின் குடல் பசியாற்ற பேபி பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாதவை.

கணவனை இழந்த பிறகு பேபியின் உடன்பிறந்தவர்கள் எத்தனையோ முறை அழைத்தும் பிறந்த வீட்டுக்குச் செல்லாமல் அவளது கணவன் பார்த்துப் பார்த்து அவளுக்கென கட்டிய ரயில் ஓடு போட்ட சிறிய வீட்டையும் ஊரையும் விட்டுப் போக அவளுக்கு மனம் ஒப்பவில்லை. வீட்டு வாசலில் கணவன் தன் மீது கொண்ட அன்பினால் பதித்திருந்த பேபி இல்லம் என்ற செங்கல் அளவு கல்வெட்டைப் பார்த்து முகம் நனைய அழுவாள். கொத்தனார் வீடு என்று அழைக்கப்பட்ட வீடு அதன் பின்னர் பேபி வீடு என்று அழைக்கப்பட்டது.

களைபறிக்கவும், நாற்று நடவும் போய்க்கொண்டிருந்த பேபி வயல் வேலை இல்லாத நாட்களில் சேகர் கொத்தனாரிடம் சித்தாள் வேலைக்குப் போவாள். செங்கல் சுமப்பது, சிமெண்ட் கலவை போடுவது என சகல வேலைகளையும் செய்வாள். பான்டு சட்டியைத் தூக்கிக்கொண்டு சாரத்தின் மீது ஏறுவதும் இறங்குவதும், கலவையை அள்ளி வைத்து மற்ற ஆட்களுக்குத் தூக்கிவிடுவதும் முதுகெலும்பைப் படுத்தி எடுக்கும். அந்தியில் கூலி வாங்கியதும் செட்டியார் கடையில் அரிசி, பருப்பு, மிளகாய் வாங்கிக் கொண்டுபோய் அவதி அவதியெனச் சமைத்து விளையாடப் போயிருக்கும் கனகுவை இழுத்து வந்து அவன் சாப்பிடுவதை ரசித்திருப்பாள்.

பேபி வேலை முடிந்து தாமதமாகிவிட்டால் கனகு அம்மாவைத் தேடிக்கொண்டு சென்று விடுவான். தன் அம்மாவின் மீது மிகுந்த பிரியமுள்ளவனாக இருந்தான். நாங்களெல்லாம் படிப்பு முடிந்து சென்னை, பெங்களூர் என வேலைக்காக ஊரை விட்டுப் புறப்பட்டபோது, கனகு மட்டும் தன் அம்மாவை விட்டுப் பிரிய முடியாது என்று ஊரிலேயே இருந்துவிட்டான். கனகுவின் தூரத்து உறவினன் ஒருவன், குவைத்தில் பெரிய நிறுவனத்தில் முக்கியமான பதவியிலிருந்தான். அவன் எத்தனையோ முறை கனகுவை பயணச்செலவு முழுக்கத் தானே ஏற்றுக்கொள்வதாகவும், நல்ல சம்பளத்தில் வேலை இருப்பதாகக் கூறியும் கனகு அம்மாவைப் பிரிந்து வெளிநாடு போகவில்லை. ஏழு வருடங்களுக்கு மேல் செல்போன் கடையில் வேலை செய்து பின் சொந்த முயற்சியால் ஒரு செல்போன் சர்வீஸ் கடையை வைத்திருக்கிறான் கனகு.

”ஏய் நேரம் ஆயிகிட்டு இருக்கு மருமவளுக்கு சேதி சொன்னீங்களா இல்லியாப்பா” என்ற வேணு மாமாவின் குரல் கேட்டதுதான் தாமதம் கனகு விறுவிறுவென்று வெளியே வந்தான் “மாமா.. அந்த தேவுடியாளுக்கு சேதி சொல்லக் கூடாது.. என்ன அம்மா இல்லாத அநாதையா ஆக்குனவ அவதான்.. அவ வந்து என் வாசப்படிய மெறிக்கக் கூடாது” வார்த்தைகள் தெறித்து விழுந்தன.

விசுபலகையில் அமர்ந்திருந்த ரங்கப்பிள்ளை துண்டை உதறி மெதுவாக எழுந்தார்.

“யப்பா இன்னைக்கு ஆயி செத்த ஆத்தரத்துல நீ பேசிப்புடலாம்ப்பா நாளப்பின்ன தாலிகட்டுன பொண்டாட்டி இல்லன்னு ஆயிடுமா?” அவரின் குரலில் அனுபவத்தின் கனிவு நிறைந்திருந்தது.

“எங்க அம்மாவே போயிட்டு.. இனுமே எனக்கு எவளும் தேவ இல்ல தாத்தா.. மொத சண்டையிலயே அவள வெரட்டி இருந்தா எங்கம்மா இன்னேரம் உசுரோட இருந்துருக்கும்”

சினத்துடன் வந்த வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் ஊர்ப் பெரிய மனிதர்கள் குழம்பி நின்றார்கள்.

”ஏன்ப்பா நீ பாட்டுக்கு சொல்லிட்ட ஊர்க்காரவுங்கங்கற மொறைக்கு நாளைக்கு நாங்க சேதி சொல்லலன்னு கும்பகோணத்துல இருந்து அந்த பொண்ணுக்கு சொந்தக்காரன் வந்து கேட்டான்னா நாங்க எங்க போயிப்பா மூஞ்சிய வச்சிக்கறது?” கோவிந்தனின் கேள்விக்கு வேலி முள்ளை உடைத்துக் கொண்டே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் கனகு.

வானம் திடீரென கருப்புத் துணியால் மூடப்பட்டதைப் போல ஆனது. சூரியனைக் காணவில்லை. மழை பெரும் சொட்டாக விழத்தொடங்கியது. எல்லோரும் தெறித்து கிடைத்த இடத்தில் ஒண்டுவதற்கு ஓடினார்கள். வீம்புக்காக கனகு நின்றதாலும் சில பெரிய மனிதர்களோடு நானும் நின்றேன். சற்று நேரத்திற்கெல்லாம்  மேகத்திலிருந்து வேகமாய் அம்புகள் இறங்குவதைப்போல மழை வலுக்கத் தொடங்கியது. கனகு தலையில் கை வைத்துக்கொண்டே வீட்டுக்குள் போனதும், அங்கிருந்த மற்றவர்களோடு எதிர்வீட்டு கந்தசாமி வீட்டு வாசலில் கட்டியிருந்த ஆடுகளுக்குப் பக்கத்தில் சென்று ஒதுங்கி நின்றேன். பேபியின் உடலைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் ஓடு பட்டுத் தெறிக்கும் மழையின் ஓசையில் தங்கள் வீடுகளில் என்னென்ன நனைந்தனவோ என்ற கவலையை கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

மழைச்சத்தம் அதிகரிக்க அதிகரிக்க அம்மாவைப் பார்த்து கனகு அழுதுகொண்டே இருந்தான். அவனையே  கோபமான பாவனையுடன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் பாலம்மாள். அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாத கனகு வீட்டைவிட்டு வெளியே வந்தான்.

கந்தசாமி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கனகு மனைவிக்கு அழைப்பு விடுக்காததைப் பற்றிப் பேச ஆரம்பித்தவர்கள், மழை நீண்டுகொண்டே போக மழையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். ஊருக்குள் யார் யாரின் இறப்பின் போதெல்லாம் இப்படி பெருமழை பெய்திருக்கிறது என்று செல்லமணி தாத்தா வெற்றிலையை மென்றுகொண்டே  சொல்லத் தொடங்கினார்.

“என்ன பாவம் பண்ணுனாளோ..? வாழும்போதும் நிம்மதியில்லாத வாழ்க்க வாழ்ந்தா.. செத்தும் நல்ல சாவு இல்லய்யா பேபிக்கு” கவலைப்படுவதைப்போலவே கிண்டலை இழைத்துப் பேசினார் குருசாமி.

அவரது பேச்சைப் பொருட்படுத்தாத கோவிந்தன், ரங்கப்பிள்ளை தாத்தாவைப் பார்த்துச் சொன்னார் “எட்டூரு மழ எண்ணி அடிக்கிதே மாமா பேபிய பொதைக்கதான் முடியும் போலருக்குதே”

 அமர்ந்திருந்த நாற்காலியை பின்னால் இழுத்து எழுந்த ரங்கப்பிள்ளை “என்னாடா வெவரம் இல்லாம பேசுற.. வெசம் குடிச்ச ஒடம்பு.. பொதைக்க முடியாது எரிச்சிதான் ஆவுனும்.. மழ பெய்யுதுன்னுல்லாம் வழக்கத்த மாத்த முடியாதுடா கம்னேட்டி”

அவர் கோவிந்தனை அப்படிச் சொன்னதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றார்கள் என்னோடு நின்றுகொண்டிருந்த மற்ற இளம் வயது நண்பர்கள். ஒருவன் மட்டும் தாங்க முடியாது சிரித்துவிட்டான்.

”அப்ப மழய பாக்காம எங்க இருந்தாவது ஒரு வண்டி ராட்டியும், வெறவும்  கொண்டாந்துருங்கடா புள்ளைவோளா” என்றார் செல்லமணி.

“ஊரு பூரா மரத்த வெச்சுகிட்டு வெறவு வாங்க போவனுமாமுல்ல” குருசாமியின் நக்கல் கூட்டத்தோடு நசுங்கிய குரலாகக் கேட்டது.

ஆனால் கோவிந்து அதை உன்னித்துக் கேட்டுவிட்டார் “ஏ அறுவுகெட்ட பயலே.. அடிக்கிற மழைக்கு ஒரு புடி அருவம் பில்லு கூட புடுங்க முடியாது போலருக்கு.. இப்பதான் நக்கல் மசுறு பண்றியா?.. தெடம் இருந்தா பேபி கொல்லையிலயே ஒரு மரத்துக் கெளைய வெட்டிட்டு வா பாப்போம்” என்று சொன்னவுடன். குருசாமி அடுக்கி வைக்கப் பட்டிருந்த மூட்டைகளின் பின்னால் பதுங்கினார்.  

“எலே ரஞ்சித்து நீயும் சுரேஷும் வெறவு எங்க கெடைக்குதுன்னு நம்ப சுந்தரு மினிடோர் வண்டியில போய் பாத்து வாங்கியாங்கடா” என்று எங்களைப் பார்த்து ஆணை பிறப்பித்தார் ரங்கப்பிள்ளை.

சுகுமாரும், வேலுவும் மற்ற பொருட்களை வாங்க நியமிக்கப்பட்டனர்.  

வண்டியில் ஏறி அமர்ந்ததும் “ஏய் தம்பி..” என்ற குரல் கேட்டு கண்ணாடியில் பார்த்தேன். பாலம்மாள் என்னை நோக்கிக் கூப்பிட்டாள். அதற்குள் சுந்தர் வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டான்.

“வெறகு.. வெறகு.. வாங்கிட்டு வரப் போறேன்” என்று சொல்லி தலையை உள்ளிழுத்தேன்.

நானும் சுரேஷும் விறகைத் தேடி சுந்தரின் வண்டியில் புறப்பட்டோம்.செலவு என்னா ஆனாலும் குறையில்லாமல் செய்யும்படி சொல்லி கனகு ரங்கப்பிள்ளை கையில் முப்பதாயிரம் கொடுத்திருப்பதாக வண்டியில் புறப்படும்போது சுரேஷ் சொன்னான்.

சாவுக்கு வந்திருந்த ஊர்க்காரர்களிடம் கேட்டதில் ஒருவரிடமும் ராட்டி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒரு காலத்தில் ஊரில் எல்லா வீடுகளிலும் மாடுகள் இருந்தன. இப்போது மாடுகள் இருக்கும் வீடுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நாங்கள் விசாரித்ததில் ஆவணி அக்கா வீட்டில் ஐம்பது ராட்டி மட்டுமே கிட்டியது. சாக்கைக் கட்டி அதைப் பத்திரப்படுத்தி எங்கள் இருக்கைக்கு நடுவிலேயே போட்டுக்கொண்டோம். எதிரில் என்ன வருகிறது என்பது தெரியாத வகையில் கொட்டிக்கொண்டிருந்தது பெரும் மழை. முகப்பு விளக்கைப் போட்டு கடவுளே என்று ஸ்டியரிங்கைப் பிடித்துக்கொண்டிருந்தான் சுந்தர்.

சேந்தங்குடி, வள்ளாலகரம், பாலாஜி நகர், கருங்குயில்நாதன்பேட்டை என எல்லா இடத்திலும் அலைந்துவிட்டு. நகரத்தில் விசாரிக்கலாம் என்று வண்டியைத் திருப்பியபோது. வானம் இடிந்து விழுவதைப் போல இடிச்சத்தம் குலை நடுங்க வைத்தது.

தெரிந்த நண்பர்களுக்கெல்லாம் போன் செய்து விசாரித்தேன். கனகுவின் செல்போன் கடை அமைந்திருக்கும் காம்ப்ளக்ஸ் அருகில் விறகுக்கடை இருப்பதாக ஒருவர் சொன்னதனால் அங்கு சென்று பார்த்தோம்..  கடை அடைத்திருந்தது. என்ன ஏதென்று விசாரித்தார். நாங்கள் விவரங்களைச் சொன்னோம். “யாரு செல்போன் கடக்காரு அம்மாவா?.. ஐயோ பாவம் ஒரு பத்து நாளைக்கு முன்னாடி அந்த அம்மா அவங்க  மெவனோட கட வாசல்ல ஒக்காந்து அழுதுது தம்பி.. எதோ வூட்ல சண்ட போல்ருக்கு.. ” என்று சொன்னார். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

ரங்கப்பிள்ளையும், கந்தசாமியும் மாறி மாறி போன் அடித்து ராட்டி கிடைத்துவிட்டதா, விறகு கிடைத்துவிட்டதா என்று விசாரித்துக் கொண்டே இருந்தார்கள்.

“ஏன்ணே திடீர்னு பேபி இப்புடி பண்ணிக்கிச்சி.. கனகராஜி அண்ணனுக்கு கல்யாணம் ஆயி ரெண்டு வருசம் கூட இருக்காது போல்ருக்கே?”

சுரேஷின் கேள்வி எரிச்சலாக இருந்தாலும் விறகு கிடைக்காத வெறுப்பை மறக்கும்படியாக ஏதாவது பேசலாம் என்று தோன்றியது.

எங்கள் நண்பர்களிலேயே கனகுவுக்குத்தான் முதலில் திருமணம் ஆனது. அவன் ஜாதகத்தில் சகடை தோஷம் இருக்கிறது என்று ஜோசியர் சொன்னதால்  சீக்கிரமாகத் திருமணம் செய்து வைக்கவேண்டுமென இருபத்தைந்து வயதிலிருந்தே பேபி அவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்திருந்தது. பன்னிரண்டாவது வரை மட்டுமே படித்திருந்தாலும் டவுனில் சொந்தமாகக் கடை வைத்திருக்கும் கனகுவுக்கு பெண் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை.

பேபியின் அண்ணன் வழி உறவினர் மூலமாக கும்பகோணத்திலிருந்து வந்த ஜாதகம் பொருந்திப் போக கனகுவுக்கும், வனஜாவுக்கும் திருமணம் முடிவானது.

திருமணமான முதல் மூன்று மாதம் வரை சந்தோஷமாகவே கழிந்தது. ஒருநாள் கனகு கடைக்குப் போய்விட்ட மதிய நேரத்தில் சாப்பிட்டுவிட்டுப் படுத்திருந்தாள் பேபி. வனஜா கொல்லைப்புறத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். வனஜாவின் போன் இரண்டு மூன்று முறை அடிக்க வனஜா எடுக்காததால் அடுத்தமுறை அடிக்கும்போது பேபி எடுத்திருக்கிறாள். ஹலோ என்ற ஆண்குரல் எதிர்முனையில் கேட்க “ஆருங்க” என்று கேட்ட பேபியின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் போன் உடனே துண்டிக்கப்பட்டது. இது பத்து நிமிட இடைவெளியில் மீண்டும் தொடர பேபியின் குரலைக் கேட்டு மறுபடியும் துண்டிக்கப்பட்டிருக்கிறது எதிர்முனையில்.

பேபிக்கு எதுவோ மனதுக்குள் இடற வனஜாவைக் கூப்பிட்டுக் கேட்டாள். வனஜாவுக்கு அதைக் கேட்டதும் பதற்றத்தில் உள்ளுக்குள் கிடுகிடுத்தது ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சட்டென்று முகத்தை மாற்றிக்கொண்டு கோபத்துடன் “ஏன் என் ஃபோன எடுத்தீங்க?” என்று கேட்டதும்தான் பேபிக்கு லேசாகச் சந்தேகம் எட்டிப் பார்த்தது.

அன்றிலிருந்து வனஜாவுக்கு எப்போது போன் வந்தாலும் வனஜாவுக்கு பேபியைக் குறித்த ஜாக்கிரதை உணர்வின் காரணமாக மாமியார் இருக்கிறாளா என்று பார்த்துவிட்டுப் பேசுவதோ, பேசாமல் இருப்பதோ நிகழ்ந்திருக்கிறது. அதுவே பேபியின் மீதான வெறுப்பு வளர்வதற்கான ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறது.

கனகு கடையிலிருந்து வரும்போது வீட்டிற்கென என்ன பொருள் வாங்கி வந்தாலும் அதை பேபியிடம்தான் கொடுப்பான். மனைவிக்கென வாங்கி வரும் பூ, தின்பண்டங்கள் எதுவானாலும் அம்மாவின் கையால்தான் கொடுத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது இது வனஜாவுக்கு பெரும் எரிச்சலூட்டுவதாக இருந்தது.

ஒருநாள் சினிமாவுக்குப் போகலாம் என்று வனஜாவுக்கு போன் செய்து தயாராக இருக்கும்படி சொன்னான் கனகு. வனஜா தனது நிச்சயதார்த்தப் புடவையைக் கட்டிக்கொண்டு அறையில் தயாராக இருந்தாள். கனகு வீட்டுக்கு வந்தவுடன், இவர்களின் பயணத்திட்டம் எதையும் அறியாத பேபி ”தம்பி ஒங்க அப்பாவுக்கு தெவசம் வர்ற நாளாயிட்டு நாங்குடி ஐய்யர பாத்து அம்மாவாசைக்குள்ள ஒரு நாள குறிச்சு வாங்கியாந்துருவோமா?” என்று கேட்க, மனைவியிடம் இன்னொரு நாள் சினிமாவுக்குச் செல்லலாம் என்று சொல்லிவிட்டு அம்மாவுடன் ஐய்யரை பார்க்கச் சென்றான். திரும்ப வந்தாவது சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது அவன் களைப்பில் அப்படியே உறங்கிப் போனான்.

இரண்டுநாட்கள் கழித்து திவசம் கொடுப்பதற்காக ஐயர் வந்தார். “பேபியம்மா  ஒத்தையாளா இருந்து புள்ளைய கண்ணுங்கருத்துமா வளத்துட்டீங்க.. அவரும் திறமையா ஒரு கடையும் வெச்சுப்ட்டார்.. இனி ஒரு கொறையும் இல்ல உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்தவர். அரிசி, காய்கறிகளைக் கொண்டு வந்து வைத்த வனஜாவைப் பார்த்து “எம்மா கொழந்த பேபியம்மா மாறி ஒரு புண்ணியாத்மா ஒனக்கு மாமியாரா கெடைக்கக் கொடுத்து வச்சுருக்கனும்மா..  அவங்கள நன்னா பாத்துக்கோ..” என்று சொல்ல வனஜாவுக்கு எரிச்சல் அதிகமானது.

தன்னை அவன் வாழ்க்கையில் முக்கியமானவளாகவே கருதவில்லை என்ற எண்ணம் வனஜாவுக்குள் கள்ளிச்செடி போல வளர்ந்தது.

அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடம் மாமியாரைக் குறை சொல்லித் திட்டுவதும், ஜாடைப் பேச்சு பேசுவதும், பாத்திரங்களை இடித்தல், பொருட்களைப் போட்டுடைத்தல், அண்டைவீட்டுக்காரிகளிடம் பேசுதல் என வனஜாவின் போக்கு விரிவடைந்துகொண்டே சென்றது. 

இரவு படுக்கச் சென்ற கனகுவிடம் முகம் கொடுக்காமலே படுத்திருந்தாள் வனஜா. அருகில் வந்து படுத்தவன், மேலே கை வைத்ததும் “ச்ச்சீ.. கை எடு” என்றாள். கனகுவுக்கு ஒரு கணம் அதிர்ச்சியாகி அவள் தோளைத் திருப்பினான். அவள் கண்களைப் பார்த்த கனகு அதிர்ச்சியடைந்து தானும் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

அடுத்தடுத்த இரவுகளிலும் இப்படியே தொடர கனகு தாங்க முடியாமல் ”ஏன்டி இப்படி நடந்துக்குற?.. என்னதான் பிரச்சன ஒனக்கு?”

“ஆங்.. எனக்கு என்ன பிரச்சனங்கறத ராத்திரி படுக்க வர்றப்பதான் கேப்பியா?”

“என்னடி பேச்சுடி பேசுற?”  

 “எதுக்கு நீ இங்க வந்த?.. போ.. போயி ஒன் ஆத்தாகிட்டயே படுத்துக்க” என்றாள்.

வெளியே படுத்திருந்த பேபிக்கு காதில் விழுந்த வார்த்தை தொண்டையில் சுருக்கேற்றுவதைப் போலிருந்தது.

கனகு ஓடிச்சென்று அவளைக் காலால் ஓங்கி மிதித்தான். வலி தாங்க முடியாமல் அவள் கத்தத் தொடங்க, பேபி துள்ளத் துடிக்க ஓடி வந்து அவனைத் தடுத்தாள்.

“சண்டய மூட்டி உட்டதும் இல்லாம தடுக்குற மாதிரி வந்திருக்கியா?” என்று மாமியாரைப் பார்த்துக் கேட்கவும் மீண்டும் விழுந்தது ஒரு அடி. பேபி கனகுவை மாறி மாறி அடித்து வெளியே நெட்டித் தள்ளிக்கொண்டு போனாள்.

மறுநாள் காலை எழுந்து வனஜா தன் பிறந்தவீடு இருக்கும் கும்பகோணத்திற்குச் சென்றுவிட்டாள். கனகு அவளுக்கு போன் செய்தபோது அவளது போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வனஜாவின் அப்பாதான் அவள் அங்கிருப்பதை உறுதிப்படுத்தினார்.

ஒவ்வொரு நாளும் வரும் அழைப்பையெல்லாம் வனஜாவுடையது என்று எதிர்பார்த்த கனகுவுக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

ஒரு வாரம் கழிந்ததும் பேபிக்கு பயம் உண்டாகியது.

“எப்பா சண்ட போட்டுகிட்டுப் போனா அப்டியே உட்டுடறதா..? நேர்ல  பார்த்து அவள கூப்ட்டுட்டு வாடா” என்று கனகுவிடம் சொன்னாள்.

மாமனார் வீட்டுக்குச் சென்றிருந்த கனகுவிடம் வனஜாவின் அப்பா “இதப்பாருங்க தம்பி.. செல்லமா வளத்த பொண்ணு நல்லபடியா வாழனும்னுதான் நான் ஒங்களுக்கு கட்டிக்குடுத்தேன்.. என்னமோ நாய அடிக்கிற மாறி அடிச்சிருக்கீங்களே.. நாப்பது நாளு தள்ளிப்போயிருந்துருக்கு.. வயித்துல ஒதச்சதுல.. புள்ள கலஞ்சிடுச்சி தெரியிமா ஒனக்கு?” அவர் சொன்னதைக் கேட்டதும், சவுக்கால் அடித்ததைப் போல இருந்தது கனகுவுக்கு.. உடம்பெல்லாம் அனல் பரவியது.

வனஜாவின் விசும்பல் சத்தம் மட்டும் வீட்டிற்குள் கேட்டது.

”என் பொண்ணு அங்க வந்து வாழாது தம்பி.. ஒங்க மூஞ்சுலயே முழிக்க மாட்டன்னு சொல்லிடுச்சி.. ஒங்களுக்கு ஒங்க அம்மா பெருசுன்னா எனக்கு என் பொண்ணுதான் பெருசு..” என்று  திட்டவட்டமாகச் சொன்னார்.

கனகுவுக்கு நெருப்புத் துண்டத்தை விழுங்கியதைப் போலிருந்தது. அமைதியாக இருந்தான்.

கனகு சோர்ந்த முகத்தோடு வீட்டிற்கு வந்தான். அவனிடம் ஆவலாகப் போய் பேபி கேட்டாள்.

“தம்பி அவ வர்லியா?”

கனகு பதில் சொல்லாமல் வந்து அமர்ந்தான். பேபி மறுபடியும் கேட்டாள்.

“இன்னும் கோவமாதான் இருக்காளா எப்ப வரன்னு சொன்னா?”

”அவ எப்புடி வருவா.. ஒனக்காக அவள அடிக்கப் போயி என் புள்ள கலஞ்சி போயிடுச்சி..” சொல்லிக்கொண்டு நெற்றியில் அடித்துக்கொண்டான்.

”அய்யோ முழுவாம இருந்துருக்காளா?”

பேபிக்கு மூச்சு நின்றுவிடும்போல இருந்தது.

”என் மூஞ்சயே பாக்க புடிக்கலன்னு வெளிலயே வரமாட்டன்னுட்டா.. செருப்பால அடிச்ச மாதிரி அவுங்க அப்பன் கேள்வி கேக்குறான்” ஆத்திரத்தில் பொறிந்து தள்ளினான்.

“மாசமா இருக்கறத என்கிட்ட சொல்லனும்னு இருந்துருக்கா.. நீ எழவக் கூட்டுனதுல எல்லாமே மண்ணாப் போச்சி.. இப்ப சந்தோசம்தான ஒனக்கு?”

“தம்பி நான் என்னாடா பண்ணுனேன்.. ஒனக்கு கெடுதல் வருனும்னு நெனப்பனாடா?”

“இன்னும் என்னத்த நெனைக்கறது? நீ இருக்கறவரைக்கும் என் வாழ்க்க நிம்மதியில்லாத வாழ்க்கதான்.. இதுதான் விதின்னா போவட்டும் போ”

அவன் அப்படிச் சொன்னதும் மனம் உடைந்து அதிர்ச்சியில் நடுங்கியபடி நின்றாள் பேபி. கையும் காலும் வெட வெடத்தது.

அதிலிருந்து கனகு வீட்டிற்கே வராமல் பல நாட்கள் கடையிலேயே தங்கத் தொடங்கினான்.

பேபி போன் பண்ணும்போதெல்லாம் எடுக்காமல் இருந்தான். கடையில் சென்று கூப்பிட்டாலும் எதுவும் பேசாமல் கடையை விட்டே வெளியே போய்விடுவான். கடை வாசலில் உட்கார்ந்து நீண்ட நேரம் காத்திருந்துவிட்டுப் போவாள்.

ஊருக்குள் இதை யாரிடமாவது  பகிர்ந்துகொண்டால் தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாக நினைப்பார்களோ என்று யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதவள், தன் மகனின் நண்பன் என்பதால் எனக்கு போன் செய்து நடந்த விஷயங்களைக் கூறினாள். நான் கனகுவுக்கு போன் செய்யும்போதெல்லாம் “இதைத் தவிர வேற எதாவது விஷயம் இருந்தா பேசு மாப்ள” என்று சொல்லி போனை துண்டித்துவிடுவான்.

மழை சற்றே குறைந்து பூமழையாய் தூறிக்கொண்டிருந்தது.

கூறைநாட்டில் விறகு கிடைக்க வாய்ப்பிருப்பதாக ஒருவர் சொன்னதனால் அங்கு சென்று பார்த்தோம். நல்ல சவுக்குக் கட்டைகளும், சித்தர்க்காட்டில் ராட்டியும் கிடைத்தன. சுரேஷ் முகமும், என் முகமும் சந்தோஷத்தில் மலர்ந்திருந்தது. விறகை அடுக்கும்போதுதான் இது ஒரு உடலை எரிப்பதற்கு என்ற எண்ணம் வந்து மனதில் கல்லெறிந்தது. எல்லாவற்றையும் தார்ப்பாய் போட்டுக் கட்டிவிட்டு ரங்கப்பிள்ளைக்கு போன் செய்தேன் “தாத்தா வெறகும், ராட்டியும் கெடச்சிடுச்சு” என் குரலின் உற்சாகத்தை வலிந்து குறைத்து போனை துண்டித்தேன். சுரேஷையும், டிரைவர் சுந்தரையும் பார்க்காமல் சாலையைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். விறகோடு நாங்கள் போய்ச் சேரும்போது கனகுவின் மனைவி வனஜா சத்தம் போட்டு அழுதுகொண்டிருந்தாள்.

மழை முற்றிலுமாக விட்டிருந்தது. தெருவெங்கும் நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. தவளைகள் சத்தமிடத் தொடங்கியது.

“அடுத்த மழ வர்றதுக்குள்ள தூக்கனும்ப்பா” என்று கோவிந்தன் குரலுக்கு எல்லோரும் பரபரப்பாய் தயாரானார்கள்.

பேபியின் உடல் சுடுகாட்டில் தகதகத்து பெரும் பிழம்புகளுடன் எரிந்துகொண்டிருந்தது. விறகுக்காக அலைந்த அலைச்சல்கள் எல்லாம் தணிந்தன என் மனதில்.

கொள்ளி வைத்துவிட்டு வந்த கனகுவுக்கு வனஜாதான் சாப்பாடு பரிமாறினாள். அவன் சாப்பிட அருகிலிருந்து குழம்பு, ரசம், கூட்டு என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து வைத்தாள்.

ஊருக்குப் போவதற்காகப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். நூறு நாள் வேலைக்குப் பெண்கள் தெருவழியே சாரை சாரையாகப் போய்க்கொண்டிருந்தார்கள். பாலம்மா கிழவி, துணிமடித்துக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்ததும் ஆலோடியில் வந்து அமர்ந்தது. பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்தேன். “எப்பா சின்னப்புள்ள அம்மாவ அடிக்கடி வந்து பாத்துக்கடி..”

“சரி” என்று புன்னகையோடு சொன்னேன். சட்டென்று முந்தானையால் கண்ணைக் கசக்கிக்கொண்டு பாலம்மா அழ ஆரம்பித்துவிட்டது.

“ஏன் பாலம்மா ஏன் அழுவுற?”

“பேபிக்கு வந்த கெதி இந்த ஊரு ஒலகத்துல யாருக்கும் வரக்கூடாது யப்பா”

பாலம்மா குரல் தேம்பியது.

”என்னமோ அவ விதி அவ்வளவுதான் முடிச்சுகிட்டுப் போய் சேந்துட்டா” என்று பாலம்மாவை சமாதானப்படுத்த முயன்றாள் அம்மா.

“இல்லம்மா அவளுக்கு சாவனும்னு எண்ணம்லாம் இல்லம்மா”

அதிர்ந்து திரும்பினேன்.

“சாவனும்னு நெனைக்கிறவ காதுல மருந்த ஊத்திகிட்டு படுத்துருப்பாளா..? ” பாலம்மாளின் கேள்வி தலையைச் சுற்ற வைத்தது.

”காலையிலேயே ஒரக்கடையில இருந்து வந்தாளேன்னு சந்தேகப்பட்டு ஒரக்கடக்காருகிட்ட போயி பேபி என்னா வாங்கிட்டுப் போறான்னு கேட்டேன்.

அவரு சொன்னதும் ஓட்டமா ஓடியாந்து பேபி மவன்கிட்ட

”கத்திரி செடிக்கி மருந்து வைக்கறதுக்கு ஒங்க அம்மா மருந்து வாங்கிட்டு வந்துருக்குதாம்ப்பா ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணிக்கப் போவுது அது என்னான்னு பாருப்பான்னு சொன்னேன்”

சொல்லி நிறுத்திவிட்டு பாலம்மா வெயிலில் தகித்துக்கொண்டிருக்கும் தெருவையே நிலைகுத்திய பார்வையோடு அமர்ந்திருந்தாள். அம்மாவும் நானும் உறைந்து போயிருந்தோம்.

மூச்சை இழுத்துவிட்டு பாலம்மா தொடர்ந்தாள்..

நம்ப வூட்ல ஏது கத்திரி செடின்னு கனகுக்கு தெரியாம இல்ல தம்பி.. தெரிஞ்சேதான் ஆத்தாகிட்ட ஒரு வார்த்தையும் பேசாம.. காலைலயே வண்டிய எடுத்துகிட்டு வெளில போனுச்சு அந்த மவராசன்..”

எனக்கு இன்றைக்கு சென்னைக்குப் போகத் தோன்றவில்லை. இன்னும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டித்து அம்மாவுடன் இருக்க வேண்டும் போலத் தோன்றியது.

3 COMMENTS

  1. சிறப்பான நடை
    காட்சிகள் கண்முன்
    விரிகின்றன வாழ்த்துகள்

  2. சிறப்பான கதை… நானுங்கூட எங்கம்மா பக்கத்துல இருக்கணும்னு போல தோணிட்டு… வாழ்த்துகள் தோழர்

  3. சமிதை-இந்த தலைப்பில் அந்த அம்மாமாவின் தெ(எ)ரிவதை தவிர்க்கவே முடியவில்லை.எவ்வளவு அழுத்தமான காட்சியமைப்பு.ஏனோ மனம் அம்மாவின் மடியைத்தேடுகிறது.உணர்வுகளோடான இந்த எழுத்துநடை மீண்டும் மீண்டும் உங்களை எண்ணி பிரம்மிக்கச்செய்கிறது.வாழ்த்துகள் எழுத்தாளரே. கரிசல் நில வாசத்தை எழுத்தோடு வைத்திருந்த படிமப்படுத்திய கி.ரா வைப்போல டெல்டா படுகை மணம் உங்கள் எழுத்தில் கட்டுப்பட்டு கிடக்கிறது .வாழ்த்துகள் மற்றும் கட்டிப்பிடித்த அன்புகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.