அணைவடை*

“அத்தை… அத்தை… கமலி அத்தை வந்திருக்காகளாம்…” – ஒரு பெண்ணின் இளங்குரல்.

“என்ன… எங்கே வந்திருக்காளாம்?” – மீனாட்சி அக்காவின் குரல் போலிருக்கிறது.

“இங்கேதான்… கல்யாணத்துக்கு…”

“அவ அக்காதான் அவளைக் கூப்பிடலைன்னு சொன்னாளே…”

“அவ்வளவு சின்னப் பிள்ளையா இருந்துக்கிட்டு கொஞ்சம்கூட அச்சமில்லாமல் யார் கூடவும் ஒட்டமுடியலைன்னு சொந்தக்காரங்க கிட்டே நேருக்கு நேரா பேசினாள் அப்போ…”

“நாமெல்லாம் பேசுறதும் பழகுறதும் போலியாயிருக்குன்னு தத்துவமா எல்லாம் பேசுவாளே…”

“இங்கே யார் அழைச்சானு இவ்வளவு வருஷம் கழிச்சு வந்திருக்கா இப்போ…” – ஆள் மாற்றி ஆள் பேசும் ஒலிகள்.

மணமேடையை நோக்கி நடக்க நடக்கவே, எல்லார் பேச்சும் காதில் விழுகிறது.

“அக்கா மகன் கல்யாணம்தானே, யார் கூப்பிடணும்ன்னு அவளா வந்திருப்பா…”

முன்னர் அறிந்திராத யாதோ ஒரு குரலின் பரிவு. யார் என்று திரும்பிப் பார்க்கத் தோன்றியது; ஆனால் திரும்பவில்லை. இருந்தாலும் மனத்துக்குள் ஒரு சின்ன ஆசுவாசம். அறிந்திராதவர்களின் பரிவைப் போல் நம்மை ஆற்றித் தேற்றுவது வேறு எதுவுமில்லை. ஒரு மனித மனம் இன்னொரு மனத்தைத் தொடும் தூய தருணம். ஒரு மனம் பற்றுக்கோடு; இன்னொரு மனம் தளரத் தேவையில்லை என அந்த ஆதரவை இறுகப் பற்றும் துவண்ட சிறு உயிர்.

சிறு உயிர் என்று தோன்றியதும் மணமேடையை நிமிர்ந்து பார்க்கிறேன். அப்படி என் கையில் ஏந்தி அதிசயித்துப் பார்த்த சிறு உயிர்தான், இருபத்தேழு வயதில் இன்று மாப்பிள்ளையாக நிற்கிறது.

அப்படியொரு வாழ்நாள் அனுபவத்தை, அதிசயத்தை அவன் எனக்குத் தந்த நாள் இப்போதுகூட நினைவில் இருக்கிறது.

*

அப்பாவின் மேனேஜருடன் அந்தக் கடைக்குள் நுழைகிறேன்.

“வாங்க முருகன்… உட்காருங்க…”

“வணக்கம் ஸிகே ஸார்…” என்றுவிட்டு, என் பக்கம் திரும்பி, “இங்கே வாம்மா” – என்றார்.

“ஸிகே ஸார்… இவதான் நான் சொன்ன பொண்ணு… இவளுக்குத்தான் வேலை… இவர்தான் மா சந்திரகுமார் ஸார்… வணக்கம் சொல்லு” என்றார் என்னைப் பார்த்து.

மனசுக்குள் ஒரு நடுக்கம். கைகளிலும் தெரிந்தது. கரங்கூப்பினாலும் வணக்கம் என்ற வாயின் முணுமுணுப்பு அவருக்குக் கேட்டது போல் தெரியவில்லை.

“ரொம்பச் சின்னப் பொண்ணாகத் தெரியுதே முருகன்…”

“ஆமாம்… பதினேழு வயசாகுது… ஆனால் நீங்க சொல்லிக் கொடுத்தால் வேலையெல்லாம் கத்துக்குவா… பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சிருக்கா.”

“ஏன் மேலே படிக்கலை… ஃபெயிலா?”

“ச்சேச்சே… பாஸ்தான் ஸார்… நல்லாப் படிப்பா… எய்ட்டி ஃபைவ் பெர்ஸென்ட்டுக்கு மேலே வாங்கியிருக்கா… என்ட்ரன்ஸ் எக்ஸாம்லாம் கூட எழுதினா… குடும்பச் சூழ்நிலை. மேலே படிக்கவைக்க முடியலை. அதனால்தான், உங்க கிட்டேனா தெரிஞ்ச இடம்… நல்ல சூழ்நிலை… அவளுக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும்னு இங்கே சேர்க்கலாம்னு அவ அப்பாகிட்டே சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்.”

‘நன்றாகப் படிப்பாள், ஆனாலும் மேலே படிக்கமுடியவில்லை’ என்று முருகன் ஸார் சொன்னதாலோ என்னவோ ஸிகே ஸாருக்கு என் மேல் ஒரு பரிவு ஏற்பட்டது என்று நினைக்கிறேன். என்னை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். மொபைல் பயன்பாடு பெருகியிராத அந்தக் காலத்தில், லேண்ட்லைன் அழைப்புகளை எப்படி எதிர்கொண்டு பேச வேண்டும், சேல்ஸ் மற்றும் சர்வீஸ் குறித்து எப்படி உரையாடுவது, வாடிக்கையாளர்களிடம் எப்படிப் பேசுவது என்றெல்லாம் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்தார்.

இரண்டு மாதங்களுக்குள் நிறையக் கற்றுக்கொண்டேன். ஆனால், என் பேச்சு முறைதான் அவருக்குப் பிடிக்கவில்லை. மிகவும் அமைதியாகப் பேசுகிறேன், அதை நான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். எனக்கோ, படிப்பை நிறுத்திய அதிர்ச்சி என் பேச்சையே நிறுத்திவிட்டது போலிருந்தது. அதோடு அந்தச் சூழ்நிலையே அப்போதுதான் பழகி வந்தது. இருந்தும், அவர் அப்படிச் சொல்லும்போது, “சரி ஸார்” என்று கொஞ்சம் உரத்த குரலில் சொல்லப் பார்ப்பேன்.

அதைவிட, விடுப்பு கேட்டால்தான் அவருக்குக் கோபமே வரும். அக்காவை வளைகாப்பு செய்து அழைத்துவரப் போகும்போதும் அப்படித்தான். மறுநாள் விடுப்பு வேண்டுமென்று கேட்டேன்.

“பண்டிகை நேரம் இப்படித் திடீர்னு லீவு கேட்கலாமா?” என்று கடிவது போல் கேட்டார்.

“இல்லை ஸார்… அக்காவுக்கு வளைகாப்புன்னு போன வாரமே…”

“சத்தமாப் பேசு… ஒண்ணுமே கேட்க மாட்டேங்குது… எத்தனை தரம்தான் சொல்றது…”

கண்ணீர் இப்பவோ அப்பவோ என எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், கொஞ்சம் இளகிய குரலில் கேட்டார்.

“சொல்லு… என்னன்னு கொஞ்சம் சத்தமா சொல்லு…”

“இல்லை ஸார்… அக்காவுக்கு வளைகாப்புன்னு சொல்லி போன வாரமே நாளைக்குப் போகறதுக்கு லீவு கேட்டிருந்தேன்…”

“ஓ… ஆமாம்… ஆமாம்… கேட்டிருந்தே… போன வாரம் கேட்டிருந்தால் என்ன… ஒருநாள் முன்னாடி ஞாபகப்படுத்தக் கூடாதா… சரி பரவாயில்லை… போய்ட்டு வா. ஒருநாள் தானே… நாளான்னைக்கு வந்துடணும்.”

“சரி ஸார். தேங்க் யூ ஸார்.”

ஸிகே ஸார் அப்படித்தான். ரொம்பக் கண்டிப்பானவர் என்று சமயங்களில் நினைப்போம். ஆனால், ஒரு நொடியில் அப்படியொன்றும் இல்லை என்பது போல் ஏதாவது சொல்வார்; செய்வார். இருந்தாலும், அவர் கண்டிப்பானவர் என்ற ஒரு அச்சம் எப்போதும் இருந்தே வந்தது.

ஆனால், மருத்துவமனைக்குப் போகவேண்டும் என்று அந்த மாலை அக்காவிடம் இருந்து கடைக்கு ஃபோன் வந்தபோதுதான் அவரை நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது. ஃபோனை முதலில் எடுத்துப் பேசியவர் அவர்தான்.

“கமலி… கமலி… ஓடி வா…” என்று என்னை அவசரமாக அழைத்தார்.

“உங்க அக்கா பேசறாங்க… பேசு… பயப்படாமல் பேசு” என்றார்.”

அக்காவிடம் பேச என்ன பயம் என்று எண்ணிக்கொண்டே ஃபோனை வாங்கினேன்.

“கமலி… செக்கப்புக்குப் போயிருந்தேன். நாளைக்குள்ள டெலிவரி ஆகிடும்னு டாக்டர் சொல்றாங்க. ஆனால் ஏதோ காம்ப்ளிகேஷன் இருக்குன்னு என்னை ஜிஹெச்சுக்கு வரச் சொல்றாங்க. அவங்களுக்கு இன்றைக்கு அங்கே நைட் ட்யூட்டியாம். நீ உடனே அப்பாக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிட்டு வீட்டுக்கு வா.”

“சரி” என்று ஃபோனை வைத்துவிட்டேன். ஆனால், எனக்கு அத்தனையும் உள்வாங்கிக்கொள்ளச் சற்று நேரம் ஆனது. கையில் பத்து ரூபாய் இருந்தது பேருந்துக் கட்டணத்துக்கு. வீட்டில் இந்த வாரச் செலவுக்கு என ஒரு எழுபது ரூபாய்க்குள் இருந்தது. இப்போது செலவுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதுகூட எனக்குத் தெரியவில்லையே…

“கமலி… என்ன பேசாம நிற்கிறே… கிளம்ப வேண்டாமா… சட்டுனு கிளம்பு…” – ஸிகே ஸாரின் குரலில் பரபரப்பு.

நான் பேசாமல் ஒரு கணம் நின்றேன்.

“சரி ஸார்… போய்ட்டு வர்றேன். ஆனால் நாளைக்கு ஆஃபீஸ்க்கு நான்…”

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்… நீ முதல்ல கிளம்பு…”

“சரி ஸார்…”

என்ன செய்யப்போகிறோம் என்ற திகைப்புடனேயே திரும்பத் தொடங்கினேன்.

“கமலி… ஒரு நிமிஷம்… இங்கே வா…” – கேஷ் கவுன்ட்டர் அருகே போய் நின்று என்னை அழைத்தார்.

“இந்தா… ஐயாயிரம் இருக்கு… இதை வைச்சுக்கோ…”

“வேண்டாம் ஸார்…” என்று திக்கித் திணறிச் சொன்னேன். ஆனாலும், திடீரென வழிதிறந்து விட்ட ஆசுவாசம். தலை முங்கும் ஆற்றுவெள்ளத்தில் தப்பிக் காற்று கிட்டிய ஆசுவாசம். நிம்மதிப் பெருமூச்சுகள். ஆனால் வாய் மட்டும் வேண்டாம் என்று சொன்னது. வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதங்கள்கூட முடியவில்லை. அதற்குள் எப்படி இவ்வளவு பெரிய தொகையை வாங்குவது என்ற ஒரு தயக்கம்.

“பாரு… இந்தச் சமயம் செலவுதான் ஆகும். இப்போ உங்க அக்காவையும், குழந்தையையும் கவனிக்க வேண்டாமா… காசுக்கு வழிசெய்ய அலைஞ்சுக்கிட்டிருக்க முடியுமா… பரவாயில்லை. இதை வாங்கிக்க… நீ திரும்பி வந்த பிறகு எப்படித் திருப்பித் தர்றதுங்கிற மற்ற விஷயமெல்லாம் பேசிக்கலாம். சரியா… நீ இப்ப கிளம்பு.”

அப்பாவுக்கு நைட் ஷிஃப்ட். ஆனால், ஃபோன் செய்தபோது, இன்னும் வந்திருக்கவில்லை. விஷயத்தைத் தெரிவிக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போகப் பறந்தேன். பேருந்து உடனே கிடைத்தது. வீட்டுக்குப் போனால், பெரியத்தை வந்திருந்தார்கள். பக்கத்து வீட்டுச் சௌந்தரத்தாச்சி, தன் மருமகளை அனுப்பி அழைத்து வரச் செய்திருந்தார்.

“வா… வா… மாமா ஆட்டோ கூட்டிவரப் போயிருக்காங்க… உங்க அப்பா எங்கடீ?”

“ஃபோன் செய்தேன் அத்தை… அப்பா இன்னும் ட்யூட்டிக்கு வரலை… ஆனால் ஜிஹெச்சுக்கு வரச் சொல்லுங்கன்னு சொல்லியிருக்கேன்.”

சௌந்தரத்தாச்சி, “நல்லபடியா போய்ட்டு வா…” என்று, அக்காவுக்குத் திருநீறு பூசிவிட்டார்.

நான் பூஜை அலமாரியில் இருந்த தாத்தா, ஆச்சி படத்தை ஏறிட்டுப் பார்த்தேன். கண்ணீர் திரண்டது. தனியாக இருப்பதுபோல் பயமாக இருக்கிறது என்று அவர்களிடம் மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்.

அத்தை என்னிடம், “காசு எதுவும் வைச்சிருக்கியா?” என்று கேட்டார்.

“இருக்கு அத்தை…”

இதற்குள் ஆட்டோ வந்துவிட்டது.

மாமா முன்னால் ஏறிக்கொண்டார். நானும், அத்தையும் இருபுறம் இருந்துகொண்டு, அக்காவை நடுவில் வைத்துக்கொண்டோம். எனக்கு என்னவென்று புரியாத ஒரு பயம். படபடப்பும், நடுக்கமும் அதிகமாக இருந்தது. அழுதுவிடக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். மருத்துவமனைக்குப் போய்ச் சேரும் வரை மூச்சுவிட்டேனா என்று நினைவில்லை எனக்கு.

பிரசவ வார்டுக்குச் சென்று சேர்கையில் ஒன்பது மணியாகியிருந்தது. பெரிய வெள்ளைக் கடிகாரம். ரோமன் எண்கள், முட்கள் – கறுப்பில். அக்காவைப் பார்த்த டாக்டர் இன்னும் வந்திருக்கவில்லை. ஆனால் அவளைத் தயார் செய்யச் சொன்னதாகச் சொல்லி அழைத்துக்கொண்டு போய்விட்டனர். எங்களுக்குக் காத்திருக்க இடமேதும் இல்லை. வெளியே மரத்தடியில் இருக்கச் சொல்லிவிட்டு நர்ஸ் போய்விட்டார்.

நல்ல பெரிய வாகை மரம். பனிக்காலம் அப்போதுதான் முடிந்துகொண்டிருந்ததால், மரத்தடியில் இருப்பது இதமாக இருந்தது. பதற்றம் தணிவது போலிருந்தது. அப்பாவும் இதற்குள் ஆட்டோவில் வந்து இறங்கினார்.

பரபரப்பாக வந்து, “என்ன ஆச்சு… குழந்தை பிறந்துடுச்சா?” என்றார். எனக்கும் அத்தைக்கும் சிரிப்பு வந்தது.

“இப்போதான் அண்ணே உள்ளே கூட்டிக்கிட்டுப் போனாங்க…” என்றார் அத்தை.

“சரி” என்று அப்பாவும் எங்களுடன் உட்கார்ந்தார்.

மாமா, துண்டைத் தலைப்பாகை போலக் கட்டிக்கொண்டு அப்பாவின் அருகே போய் உட்கார்ந்தார்.

“அத்தான்… தாத்தா ஆகப் போறீக… நமக்கு ஒண்ணும் இல்லையா?” என்று சிரித்தார்.

“இதுவா நேரம்?” என்றார் அப்பா.

பிறகு, இருவரும் எழுந்து, எதிரில் இருந்த காஃபிக் கடைக்குப் போனார்கள். சிறிது நேரத்தில் ஆளுக்கு இரண்டு கண்ணாடி தம்ளர்களை ஏந்திக்கொண்டு வந்தனர். நால்வரும் காஃபி அருந்தினோம். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.

அக்காவை உள்ளே அனுப்பி, ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம். கைக்கடியாரத்தைப் பார்த்தேன். வீட்டிலேயே மறந்துவிட்டிருந்தேன்.

“மாமா… மணி எத்தனை?”

“பத்துப் பத்து…” என்றார்.

“பாப்பா பிறந்திருக்குமா அத்தை?” என்றேன்.

“ஏட்டீ… இதுக்குள்ளேயா பிறக்கும்… எப்படியிருந்தாலும், நம்மகிட்டே வந்து சொல்வாங்க…”

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.

“நான் வேணா போய்க் கேட்டுட்டு வரட்டுமா?”

“வேணும்னா போய்க் கேளு… என்ன இப்போ?”

நான் மெதுவாக அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்து முன் மேஜையருகே போனேன். அங்கே யாருமில்லை. இடது புறம் வார்டின் உள்ளே போகும் காரிடார் – அங்கே அக்கா மெதுவாக நடந்துகொண்டிருந்தாள். அழிக்கதவின் அருகே போனேன். உள்ளேயிருந்து ஒரு நர்ஸ் வந்தார்.

“என்னம்மா..?”

“சிஸ்டர்… அவங்க என் அக்கா… பாப்பா பிறந்துடுச்சான்னு பார்க்க வந்தேன்.”

“இல்லைம்மா… குழந்தை பிறந்ததும் யாராச்சும் வெளியே வந்து சொல்லுவோம்…” – கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லப் பார்த்தார். ஆனால் சொற்கள் மென்மையாக மாறிவிட்டன.

“தேங்க்ஸ்.”

வெளியே வந்தேன்.

“என்னம்மா..?”

“இன்னும் இல்லை அத்தை… அவங்களே வந்து சொல்வாங்களாம்.”

இதற்குள் மாமா மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்திருந்தார்.

“சரி நான் கிளம்பறேன்” என்றார் அப்பா.

“என்னண்ணே நீ… இப்போ போய் கிளம்பணுங்கறே…” என்றார் அத்தை.

“ட்யூட்டிக்குப் போயாகணுமே… அங்கே வேற யாரும் இல்லை” என்றார்.

“வேண்டாம்ப்பா… நீங்க இங்கேயே இருங்க… எனக்கு பயமாயிருக்கு” என்றேன்.

“நான் காலையிலே வந்துடுவேன்மா… நீ இங்கே வா” என்று என்னை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போனார். போகும் வழியில் என் கையில் கொஞ்சம் பணம் கொடுத்தார்.

“இதிலே மூவாயிரம் இருக்கு… வைச்சுக்கோ… ஏதாச்சும் செலவுன்னா நீயே காசு கொடு… என்ன?” என்றார்.

ஸிகே ஸார் பணம் கொடுத்திருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

“அப்பா… ஸார் கூட ஐயாயிரம் பணம் கொடுத்திருக்காங்கப்பா…” என்றேன்.

“அப்படியா…” என்று ஒரு கணம் நம்பமுடியாமல் கேட்டார். பிறகு, “சரி இருக்கட்டும். இந்தச் சமயம் என்ன செலவாகும்னு நமக்குச் சொல்லமுடியாது. மீதி இருந்தால் திருப்பிக் கொடுத்துடலாம். இப்போ இதையும் சேர்த்து பத்திரமா வைச்சுக்கோ” என்றார். இவ்வளவு பணமெல்லாம் வைத்து நான் செலவு செய்து பழக்கமேயில்லை. அதிகபட்சம் ஆயிரம்-இரண்டாயிரத்துக்குள் கையாண்டிருக்கிறேன் மாதச் சாமான்கள் வாங்கும்போது. இப்போது, இது எனக்கு ஏதோ பெரிய பொறுப்பைச் சுமப்பது போல் இருந்தது.

“அப்பா… எனக்கு பயமாயிருக்குப்பா” என்றேன் மீண்டும். அப்பா என்னைத் தோளோடு சேர்த்துக்கொண்டு தட்டிக்கொடுத்தார்.

“நான் காலையிலே வந்துடுவேன்மா… நீ தைரியமா இருக்கணும்… நீதானே இப்போ அக்காவைப் பார்த்துக்கணும்…” என்றார். ஆமாம் என்பது போல் தலையாட்டினேன். அப்பா என் தலையில் கை வைத்து அசைத்தார். எனக்குச் சின்னப் புன்னகை வந்தது. என் இரண்டு கைகளையும் பற்றி இறுக்கி உலுக்கினார்.

“காலையிலே சீக்கிரம் வந்துடறேன்” என்று ஆட்டோவில் ஏறிக்கொண்டார்.

மீண்டும் வாகை மரத்தடிக்குத் திரும்பினேன். அத்தை தன்னருகில் தட்டிக் காட்டினார். நான் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்.

“உங்க ஐயா என்ன சொன்னான்?”

“காலையிலே சீக்கிரம் வந்துடறேன்னு சொன்னாங்க. செலவுக்குப் பணம் கொடுத்துட்டுப் போனாங்க…”

மாமா நல்ல தூக்கத்திலிருந்தார். எனக்கும் அத்தைக்கும் தூக்கம் என்ற ஞாபகமே இல்லை. என்னால் ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பது இயலாததாக இருந்தது. மெல்ல எழுந்து காலார அங்குமிங்கும் நடந்தேன். அத்தையும் எழுந்து என்னோடு வந்து நடக்கத் தொடங்கினார்.

பொழுது போவேனா என்றது. உள்ளே போய் இரண்டு மூன்று முறை கேட்டுவிட்டு வந்துவிட்டேன். முதன்முறை போகும்போது, என்னென்னவோ பொருட்கள் எழுதிய பட்டியல் கொடுத்து வாங்கிவரச் சொன்னார்கள். வாங்கக் கிளம்பிய என்னைத் தடுத்து, மாமாவை எழுப்பி வாங்கிவரச் சொன்னார் அத்தை.

இன்னொரு முறை கேட்கப் போனபோது, நர்ஸ்கள் பொறுமையை இழப்பது தெரிந்தது. அமைதியாக வெளியே வந்துவிட்டேன். கட்டிடத்தையொட்டி இருந்த மச்சுப்படியில், நானும் அத்தையும் அமர்ந்துகொண்டோம்.

அத்தை மெதுவாகக் கேட்டார்.

“உங்க அம்மாவுக்குச் சொல்லணுமா… உங்க அப்பா என்ன சொன்னான்?”

“அதைப் பற்றி ஒண்ணும் சொல்லலை அத்தை.”

“உங்க அம்மா எங்கே இருக்காளாம் இப்போ… இந்த விஷயம் எல்லாம் தெரியுமா?”

“திருப்பூர்லே இருக்காங்களாம். அக்காதான் சொன்னாள். அவளுக்குக் குழந்தை பிறக்கப்போகுதுன்னு தெரியுமாம். அக்காவே ஒரு முறை லெட்டர் போட்டாளாம், இதுக்காவது எங்ககூட வந்து இருங்கன்னு. ஆனால் ஒண்ணும் பதில் வரலையாம்.”

“இப்படி இருக்காளேடீ…”

நான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

“இப்போ யார் பார்த்துக்கிறது பிள்ளையையும் உங்க அக்காவையும்?”

அம்மாவைப் பற்றிக் கேட்டதும், ‘கவலைப்படாதீங்க… நாங்க எல்லாம் இருக்கோம்’ என்று ஏதோ சொல்லப் போகிறார் என்று நினைத்திருந்தேன்.

“அம்மா கூட இருந்தாலும் இல்லைன்னாலும், நாங்கதானே பார்த்துக்கணும் அத்தை. முதல் குழந்தையா இருக்கிறதாலே அக்காவுக்கு அதுமாதிரி மனக்குறை வந்துடக்கூடாதுன்னு அப்பா நினைக்கிறாங்க. அதனாலேதான் இங்கேயே கூட்டிட்டு வந்துடுவோம்னு வந்திருக்காங்க.”

“அது சரிதான்… ஆனால் எப்படி ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டு…”

“அம்மாச்சியை வரச்சொல்லட்டுமான்னு அப்பாகிட்ட கேட்டேன். முதல்ல வேண்டாம்னாங்க. அப்புறம் வர்றாங்கன்னா வரட்டும் ஆனால் ரொம்ப வற்புறுத்த வேண்டாம்னு சொன்னாங்க. அதனாலே அம்மாச்சி வந்தாலும் வருவா…”

அதுபற்றி மேற்கொண்டு எதுவும் அத்தை பேசவில்லை. பழைய கதைகள் ஏதாவது சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதையும் இதையும் பேசிக்கொண்டிருந்தோம். கீழ்வானம் வெளுத்துவந்தது. அவ்வளவு நேரமும் பொட்டுத் தூக்கம் கூடக் கிடையாது. மருத்துவமனை வளாகத்தில் எத்தனை பரந்து கிளைவிட்ட மரங்கள்?! அத்தனை மரங்களின் பசுமையும், அந்த அதிகாலையின் செவ்வானமும், பறவைகளின் கீச்சொலியும், மருத்துவமனைச் சுற்றுவட்டாரம் காலையுயிர்பெறும் ஓசைகளும் எல்லாம் நேற்றே போல் நினைவில் இருக்கின்றன இன்னும்.

அவ்வளவு அழகான அதிகாலையில்தான் அவன் பிறந்தான். அக்காவின் பெயர் சொல்லி எங்களை உள்ளே அழைத்தனர்.

“பையன்” என்று சொல்லி, தன் கையிலேயே வைத்து முகத்தைக் காட்டிவிட்டு ஒரு நர்ஸ் உள்ளே எடுத்துச் செல்லத் திரும்பினார்.

“சிஸ்டர்…ஒரு நிமிஷம்…”

“என்னம்மா…”

“இன்னும் ஒரு தடவை நல்லா பார்த்துக்கிறேன்…” என்றேன்.

“மத்தியானத்துக்குள்ளே ரெகவரி வார்டுக்கு வந்துடுவாங்க… அங்கே இன்னும் நல்லா பார்க்கலாம்மா” என்றார். ஆனாலும் இன்னுமொரு முறை அருகில் வந்து காட்டிவிட்டுத்தான் சென்றார். அதிகாலையில் பார்த்த அந்த விடியல் வானம் போல், கால்களின் செஞ்சிவப்பு நிறம்தான் மனசுக்குள் பதிந்தது. அந்த மூன்று நொடி பார்த்துவிட்டதில் “மூக்கு என்னைப் போல்” என்று சொல்லிக்கொண்டேன்.

பிறகு, அக்காவும் குழந்தையும் வார்டுக்கு வந்ததும், எங்களையும் பார்க்க அனுமதித்தனர். அவனைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு அத்தை என் கையில் தந்தார். ஆனந்தமும், அவனுக்கு வலித்துவிடக்கூடாதே என்ற ஜாக்கிரதையுணர்வுமாக அவனைக் கையில் மெல்ல ஏந்திக்கொண்டேன்.

“கழுத்தையும் தலையையும் சேர்த்துப் பிடிக்கணும்… சரியா…” என்றார் அத்தை.

சரி என்று வாயால் சொன்னால் குழந்தைக்கு நோகுமோ என்று, மெதுவாகத் தலையசைத்தேன். அவன் மொத்த உருவும் சேர்ந்து என் இரண்டு உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிட்டது போலிருந்தது.

பட்டுப் போன்ற உடலும், சின்னப் பூப் போன்ற வாயும், குட்டிக் குட்டி ஆச்சர்யங்களாகக் கைகளும், கால்களும், விரல்களும். அது குழந்தையல்ல… ஒரு அதிசயம். அப்படித்தான் அப்போதும் இருந்தது; இப்போதும்.

*

அவன் பிறந்த அந்த நாளை எப்படி மறக்கமுடியாதோ… அப்படித்தான் அவன் பிறந்த பிறகான முதல் முப்பது நாட்களையும் மறக்க முடியாது. அந்தப் பதினேழு வயதில் நான் அவ்வளவு நோஞ்சானாகவும் இல்லை; சத்துப் பிடித்திருக்கவும் இல்லை. நாற்பது – நாற்பத்திரண்டு கிலோ எடை இருப்பேன். ஆனால் அந்நாட்களில் ஏதோ அசுர பலம் என் உடம்பில் வந்து சேர்ந்திருந்தது. சதா வேலைகள் வேலைகள் வேலைகள்… பிள்ளை பெற்ற வீட்டில் ஓய்ந்திருக்கும் கணம் என்ற ஒன்று கிடையவே கிடையாது எனத் தெரிந்துகொண்ட நாட்கள். அதிலும் அவனை முதன்முதலாக வீட்டுக்கு அழைத்துவந்த நாளை இன்னொரு ஜென்மத்திலும் மறக்கவே முடியாது.

பிறந்த மூன்றாம் நாள் வீட்டுக்கு அழைத்துவரலாம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் நடைமுறைகளெல்லாம் எதிர்கொண்டு முடித்துவிட்டு வீடு வந்து சேர மாலை ஆகியிருந்தது. அன்றும் அப்பாவுக்கு இரவு ஷிஃப்ட். எங்களை வீட்டில் விட்டுவிட்டு அப்பா கிளம்பிவிட்டார். வளவில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குழந்தையைப் பார்க்க வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள். எல்லாருக்கும் வந்தவுடன் சாக்லேட் பாக்கெட்டை நீட்டி, காஃபி போட்டுக்கொடுத்து அனுப்பி வைத்து முடிந்தது. சௌந்தரத்தாச்சி, அக்காவுக்கு ஏதோ பத்தியக் குழம்பு செய்துகொண்டு வந்தார்கள். சாதம் மட்டும் என்னைச் செய்யச் சொல்லியிருந்தார்கள். அதில் ஊற்றிப் பிசைந்து ஆச்சியே அவளுக்குச் சாப்பிடக் கொடுத்தார். அக்கா இடையிடையே தண்ணீர் கேட்டாள்.

“இந்தக் குழம்பு சாப்பிடும்போது தண்ணியே குடிக்கக் கூடாதும்மா” என்றார் ஆச்சி. பிறகு, என்னிடம் திரும்பி, “நீயும் தெரிஞ்சுக்கோ… உங்க அக்கா இடையிலே தண்ணி குடிக்காமல் பார்த்துக்கிடறது உன் பொறுப்பு” என்றார்.

மருத்துவமனை வார்டில் வைத்திருந்த கையேடுகளில் பேறுகாலம் முடிந்த பெண்கள், நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டும் என்று வாசித்த ஞாபகம். ஆனால், இந்த ஆச்சியிடம் இதைச் சொல்ல முடியுமா? புண்ணியத்துக்கு உதவுகிறார். அவரிடம் வாதம் செய்வது நல்லதல்ல. அதனால் பேசாமல் இருந்தேன்.

இனி, என்ன சாப்பிடப் போகிறோம், ஒன்றும் செய்யவேண்டாம் என்றிருந்தபோது, ஆச்சியே என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய்ச் சாப்பிடச் செய்தாள்.

“நீ ரொம்ப தைர்யமான பொண்ணும்மா…” என்றார்.

என்ன ஏதென்று நான் கேட்கவில்லை. அடுத்த வீடுதான் என்றாலும், எனக்கு வீட்டில் இருக்கும் அக்கா, பாப்பாவின் மீதே ஞாபகம். சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு ஓடியே வந்துவிட்டேன். தொட்டில் கம்பு வைத்து குழந்தைக்குத் தொட்டில் கட்டியிருந்தோம். அதையும் அந்த ஆச்சிதான் எனக்குச் சொல்லித் தந்திருந்தாள்.

அக்கா, குழந்தைக்குப் பாலூட்டி, மெல்லத் தட்டிக்கொடுத்துவிட்டு, தொட்டிலில் இட்டாள். தொட்டிலின் இரண்டு புறமும் எங்கள் இருவருக்கும் படுக்கையை விரித்தேன். அணைவடைத் துணியை மேலே மென்மையாகப் போர்த்தினாள். விழித்துவிடுவானோ என்று அஞ்சினேன். அவனோ பூப்போலத் தூங்கிக்கொண்டிருந்தான். அணைவடைத் துணி ஒரு சுகம்தான்.

அவ்வளவு வளர்ந்திருந்த எனக்கே எத்தகைய வேனற்காலத்திலும் ஒரு மெல்லிய துணியையேனும் மேலே போர்த்திக்கொள்ளாமல் தூங்க முடிவதில்லை. அதற்குப் பழகிவிட்டிருந்தேன். ஆனால் அன்று நின்றுகொண்டு கூட என்னால் தூங்கியிருக்க முடியும். நான் நன்கு தூங்கி நான்கைந்து நாட்கள் ஆகியிருந்தன. குழந்தையை வீட்டுக்கு எடுத்து வந்த நாளில் அழுதுகொண்டேயிருக்கும் என்று எல்லாரும் சொல்லியிருந்தார்கள். அதையெண்ணி வேறு, எங்களுக்கு ஒரு அச்சம். ஆனால், அவன் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். நாங்களும் சற்றுக் கண்ணயர்ந்தோம்.

திடீரென, குழந்தையின் அழுகை. எழுந்து பார்த்தால், மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. அக்கா அவனை எடுத்துப் பாலூட்டிப் பார்த்தாள். ஆனால், குடிக்காமல் இன்னும் வீறிட்டு அழத்தொடங்கினான். அக்கா, தோளில் போட்டுக்கொண்டு, அவனைத் தட்டிக்கொடுத்தாள்; மடியில் வைத்து ஆட்டிப் பார்த்தாள்; கைகளில் ஏந்திக்கொண்டு உறங்கச் செய்யப் பார்த்தாள். அவன் அழுகை குறையவேயில்லை.

இப்போது என்ன செய்ய வேண்டும்? மறுபடியும் சௌந்தரத்தாச்சியைத்தான் நாட வேண்டும். ஆனால், இவ்வளவு உதவிகள் செய்திருந்த அவரை இந்த நள்ளிரவில் வேறு எழுப்பித் தொந்தரவு செய்வதா?

ஆனால், அழும் குழந்தையை அமர்த்தவும் வழிதெரியவில்லை. இந்த உலகில் எங்கள் மூவரையும் தவிர யாருமே இல்லாதது போன்ற அச்சவுணர்வு தோன்றியது. அக்காவுக்கு இன்னும் எப்படியிருந்திருக்குமோ… எனக்குச் சொல்லத் தெரியாது. கொஞ்ச நேரத்துக்கு மேல் அவளும் அழத் தொடங்கியிருந்தாள். எனக்கோ மேலும் பயமாகிவிட்டது. குழந்தையை அவள் கையிலிருந்து நான் வாங்கி வைத்துக்கொண்டேன். தோளில் போட்டு அணைத்துக்கொண்டேன். மெல்ல அசைந்து அசைந்து அவனை அமர்த்தப் பார்த்தேன். அக்கா என் மடியில் படுத்துக்கொண்டு ஏங்கியழத் தொடங்கினாள். அவள் கண்ணீரைத் துடைத்துத் துடைத்து விட்டேன். ஆனால், கண்ணீரைத் தவிர வேறு நல்ல துணை அப்போது இருந்திருக்கமுடியாது. அதற்கு ஏதோ ஒரு பலன் இருந்திருக்கத்தான் வேண்டும்; ஏதோ ஒரு தேவதை எங்கள் அருகில் இறங்கியிருந்திருக்க வேண்டும். குழந்தை அழுகை குறைந்து உறங்கத் தொடங்கினான். அக்காவும் என் மடியிலேயே உறங்கத் தொடங்கிவிட்டாள். எனக்கு அதுவே ஒரு ஆசுவாசமாக இருந்தது. குழந்தையை மீண்டும் தொட்டிலில் இட்டால் விழித்துவிடக்கூடும் என்ற அச்சத்தில், அந்த விடிவிளக்கின் இருட்டில், அவனைத் தோளில் சார்த்திக்கொண்டு, மடியில் கிடந்த அக்காவை அசக்கிவிடாமல் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

மெல்ல இரவு விடிந்தது.

*

காலை உணவு தயார் செய்தாயிற்று. சௌந்தரத்தாச்சி வந்து குழந்தையைக் குளிப்பாட்டிவிட்டு, எப்படிக் குளிக்கச் செய்ய வேண்டுமென்று எனக்கும் காட்டிவிட்டுச் சென்று விட்டார். மதிய உணவுக்குச் சில வேலைகள் செய்து வைத்துக்கொண்டேன்.

பிறகு, அக்கா குளிக்க விறகடுப்பில் வெந்நீர் வைத்துக்கொண்டிருந்தேன். வளவில் இருக்கும் பர்வதத்தக்கா வந்தார். அவர் இரண்டு நாட்களாக ஊரில் இல்லை. அல்லது நாங்கள் வீடு வந்ததுமே எல்லாரையும் போல் அவரும் வந்து பார்த்திருப்பார்.

“என்னடீ செய்யுறே?”

“அக்காவுக்கு வெந்நீர் போடறேன்.”

“பாரு… உன் அக்கா இப்போதான் குழந்தை பெத்துருக்கா… எப்போதும் போல வெந்நீர் போடக்கூடாது அவளுக்கு. நான் சொல்றமாதிரி செய். நல்லா கொதிக்கக் கொதிக்க ஒரு வெந்நீர். அப்புறம் நகச்சூட்டில் ஒரு வெந்நீர்… அப்புறம் இளஞ்சூடா ஒரு வெந்நீர்… அப்போதான்டி எல்லாம் வெளியே போகும்.”

‘என்ன வெளியே போகவேண்டும் என்கிறார்…’ – நான் கேட்கவில்லை. என்னவோ சொல்கிறார்… அதுபடியே செய்துதான் விடுவோமே… இந்தச் சமயத்தில் என்ன செய்யவேண்டும் என்று நமக்கு என்ன தெரியும் என்று, பேசாமல் சரியென்றேன்.

“நான் அவசரமா பீடி கம்பெனிக்குப் போறேன்… இல்லேன்னா நானே வைச்சு அவளுக்கு ஊத்திவிடுவேன். சரி… நேரமாச்சு… நான் வந்ததும் பிள்ளையைப் பார்க்க வர்றேன்.” – அவசர ஓட்டமும் நடையுமாகப் போனார்.

நான் மூன்று வித வெந்நீரை, கொப்பரையிலும், வாளியிலுமாக நிரப்பினேன். அக்காவை மெல்ல அழைத்து வந்து, குளியலறையில் உட்கார வைத்தேன்.

“அக்கா… பர்வதத்தக்கா சொன்னாங்கன்னு மூணு வெந்நீர் வைச்சிருக்கேன்… முதலில் இந்த மாதிரி கொதிக்கக் கொதிக்க வெந்நீர் ஊத்திக்கணுமாம். ஊத்தட்டுமா?”

அக்கா சரியென்று தலையசைத்தாள். ஆனால், வெந்நீர் பட்டதும் துடித்துவிட்டாள்.

“அக்கா… ஸாரிக்கா… ஸாரிக்கா…” என்று சொல்லிக்கொண்டே ஊற்றி சோப்பு எடுத்துக்கொடுத்தேன். அக்கா அழத் தொடங்கினாள்.

“அக்கா… ஸாரிக்கா… ஸாரிக்கா…” என்று மறுபடி மறுபடி சொன்னேன். கொஞ்சம் தேறுதலடைந்தாள்.

அடுத்தடுத்து இரண்டு வெந்நீர் ஊற்றி அவளைக் குளிக்கச் செய்தேன். சாப்பாடு எடுத்துக் கொடுத்துவிட்டு, துணி துவைக்கக் கிளம்பினேன்.

அக்காவின் துணிகளை எடுத்துக்கொள்ள, சலவைக்காரர் வீட்டிலிருந்து மல்லிகா அக்கா வந்திருந்தாள். குழந்தையை அவள் கையில் கொடுத்து வாங்கச் சொல்லியிருந்தார் அப்பா. மல்லிகாக்காவைக் கண்டதும் தொட்டிலிலிருந்து அவனை எடுத்துப் போக உள்ளே வந்தேன். அக்கா, அயர்ந்து போய் உறங்கிக்கொண்டிருந்தாள். உறக்கத்தில் அவள் முகமும் உடம்பும் மென்மையாகத் துவண்டிருந்தன. அவள் மீது குழந்தையின் வாசனையா… அல்லது குழந்தையிடம் அவளது வாசனையா… தெரியவில்லை. ஆனால் வீடெங்கும் அம்மணம் நிறைந்திருந்தது. குழந்தையை அசங்காமல் எடுத்துச் சென்று, மல்லிகாக்காவிடம் கொடுத்தேன். முகமெல்லாம் புன்னகையாகக் குழந்தையைச் சீராட்டிவிட்டுக் கொடுத்தாள்.

அப்பா கொடுக்கச் சொல்லியிருந்த காசைக் கொடுத்து, அக்காவின் உடைகளையும் அவளிடம் கொடுத்துவிட்டேன். குழந்தையின் அணைவடைத் துணிகள் அடிக்கடி தேவைப்படும் என்பதால் அவற்றை வீட்டிலேயே துவைக்கச் சொல்லியிருந்தார் அத்தை. அவற்றையெல்லாம் அள்ளி வாளியில் போட்டுக்கொண்டு, புறவாசல் குழாயடிக்குச் சென்றேன். நெல்லிக்காய் மரத்தடியில் துவைகல்லும் ஒரு அடிபம்பும். குடிதண்ணீர்க் குழாய் வளவில் முன்வாசல் அருகே. துவைக்க அலசத் தேவைகளுக்கு வளவிலுள்ள பத்து வீடுகளுக்கும் பொதுவான அடிபம்பு இங்கே புறவாசலில்.

பம்படியில் நின்றிருந்த வளவின் முன்வீட்டுக்காரர், என்னைப் பார்த்துக்கொண்டே உள்ளே திரும்பினார். சற்று நேரத்தில் வீட்டுக்கார ஆச்சி வந்தார். என்னைப் பார்த்துக்கொண்டே நின்றவர், சற்றுப் பொறுத்துச் சொன்னார்.

“கமலி… பிள்ளைத் துணியெல்லாம் இங்கே துவைக்கக் கூடாது” என்றார் சட்டென்று.

“என்ன ஆச்சி… இங்கே துவைக்கக் கூடாதுன்னா நாங்க எங்கே துவைக்க முடியும்?”

“தெருவிலே இருக்கிற பம்படிக்குப் போ… அல்லது மொத்தமா சேர்த்து எடுத்துக்கிட்டு வாய்க்காலுக்குப் போய்த் துவைச்சிட்டு வாயேன்.”

“அக்காவையும், பிள்ளையையும் தனியா விட்டுட்டு வாய்க்காலுக்கெல்லாம் போகமுடியுமா ஆச்சி? நாங்க மட்டும் வாடகை கொடுக்கலையா… பம்படியிலே துவைக்கக் கூடாதுன்னா எப்படி?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. தெருப் பம்படிக்குப் போன்னு சொல்றேன். அவ்வளவுதான்.”

வளவில் இருக்கும் ஒரு சிலர் இதையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் நின்றிருந்தனர். ஆனாலும் எதுவும் பேசத் துணியவில்லை. ஆத்திரமும் அழுகையுமாக எல்லாத் துணிகளையும் அள்ளி மீண்டும் வாளிக்குள் போட்டேன். இன்னொரு வாளியையும் சேர்த்து எடுத்துக்கொண்டு விறுவிறுவென முன்வாசலுக்குப் போனேன்.

முன்மதிய நேரம். தெருவே காலியாக இருந்தது. தெருத் தளத்தில் பாவியிருந்த கற்களைப் போலவே தெருவெங்கும் ஒரு அமைதி. நல்ல வெள்ளை வெயில் எல்லாத் திசைகளிலும். ஆனால், எனக்கு மட்டும் ஒரு திசையுமில்லாமல் அடைத்துவிட்டிருந்தது. திகைந்து போனவளாகப் பம்படியில் அமர்ந்திருந்தேன். எவ்வளவு நேரமென்று தெரியவில்லை. பிறகு, மெதுவாக, ஊற வைத்த அணைவடைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து, குழந்தையின் கழிவுகள் நீங்கச் சுத்தமாகத் துவைக்கத் தொடங்கினேன். இவ்வளவு துணிகள் சேர்ந்திருந்தன என்று ஊறவைக்கும்போது தோன்றவில்லை. நான்கு நான்காக அலசி, டெட்டால் கலந்த தண்ணீர் இருந்த வாளியில் போட்டேன். அவ்வளவு நேரமும் என்னையறியாமல் ‘மூசுமூசு’ எனக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தேன். அக்கணங்களில் ஒன்றில்தான் என் மனத்தில் ஏதோவொன்று என்றென்றைக்குமாக முறிந்திருக்க வேண்டும். நிராதரவின் ரணம்… இப்போது திறந்து பார்த்தாலும் புதியது போலிருக்கும் அந்த ரணம்… அது அப்போதுதான் ஏற்பட்டிருக்கவேண்டும்.

“எடீ… இங்கே என்ன செய்றே..?” – பர்வதத்தக்காவின் குரல்.

திடுக்கிட்டு நிமிர்ந்தேன். அழுகையை விழுங்கிக்கொண்டு சொன்னேன்: “பிள்ளைத் துணியெல்லாம் உள்ளே துவைக்கக் கூடாதாம்.” சொல்லும்போதே அழுகை மீண்டும் விக்கியது.

“இதுக்கு ஏம்ட்டீ அழறே..?”

“தெரியலைக்கா… எனக்கே தெரியலை… ஆனால் அழுகையா வருது…”

“கொண்டா இப்படி…” – பீடிக் கூடையை எதிர் ஓரமாக இறக்கி வைத்துவிட்டு, என்னருகில் இருந்த கல்லில் அமர்ந்தார். என் கையிலிருந்து துணிகளைப் பிடுங்கி, தான் துவைக்கத் தொடங்கினார்.

நான் அவளைத் தாவிக் கட்டிக்கொண்டு, மீண்டும் அழத் தொடங்கினேன்.

“எல்லாரும் இருந்தும் சில சமயம் சில பேர் அனாதையாயிடறோமே… அது ஏன்க்கா..?”

அக்கா என் தலையைத் தடவி என்னை மீண்டும் நேராக்கினாள். துணிகளை அலசிப் பிழிந்தாள். பளிச்சென்று சுத்தமாகியிருந்தன.

“இதெல்லாம் என்ன பெருசா… இதுக்குப் போய் அழுவாளா…” என்று சோவிப்* பற்கள் தெரியச் சிரித்தாள்.

‘எதெல்லாம்’ என்று நான் கேட்கவில்லை. ஆனால், தானாகவே வந்து அவள் என்னை மெதுவாக அணைத்துக்கொண்டு தோள்களில் தட்டிக்கொடுத்தாள்.

*

இப்போது இத்தனை ஆண்டுகள் கழித்து வரும் என்னைப் பார்த்து, இத்தனைப்பேச்சுக்கள் கேட்கும்போது அந்த நாள் ஞாபகம் வருகிறது. அவள் சொன்ன சொற்கள் ஞாபகம் வருகின்றன.

‘இதெல்லாம் என்ன பெருசா… இதுக்குப் போய் அழுவாளா?’

மணமக்களை நெருங்கிப் போகிறேன். தம்பதிகளுக்கென வடிவமைக்கப்படும் ஜோடி மோதிரங்கள் வாங்கி வந்திருந்தேன்.

மாப்பிள்ளைப் பையன், நான் அதிசயித்துப் பார்த்த அந்தச் சின்ன உயிர், என்னை எதிர்பாராதது போல் திகைத்துப் போய்ப் பார்க்கிறான். அவன் விரும்பித் தேர்ந்த மணவாட்டி, ‘சித்துச் சிறுக்’கென மிக அழகாக இருக்கிறாள். இருவர் கைகளையும் மெல்லப் பற்றியெடுத்து, மோதிரங்களை ஒவ்வொன்றாக இருவருக்கும் அணிவிக்கிறேன்.

“இவங்க என் சித்தி” என்கிறான் மனைவியிடம்.

“உங்களுக்குச் சித்தி இருக்காங்களா?” – ஆச்சர்யமாகக் கேட்கிறாள்.

தெருவடிக் குழாயில் பர்வதத்தக்காவிடம் நான் கேட்ட கேள்வி மீண்டும் ஞாபகம் வருகிறது:

‘எல்லாரும் இருந்தும் சில சமயம் சில பேர் அனாதையாயிடறோமே… அது ஏன்க்கா..?’

“இருக்கேன் பொண்ணே… உன் கணவனுக்குச் சித்தின்னு ஒருத்தி இருக்கேன்.” – அவளைக் கட்டி, நெற்றியில் முத்தமிடுகிறேன்.

இதெல்லாம் என்ன பெருசா இதுக்குப் போய் அழுவாளா?’

அந்தச் செஞ்சிவப்புப் பாதங்கள், எனக்கு வாழ்நாள் அனுபவம் தந்த அந்தச் சின்ன உயிர், அதை அதன் இணையுடன் பார்த்தாயிற்று.

பிறகு அவனுக்கு மட்டுமாக வாங்கிவந்திருந்த அந்த மென்பட்டுக் கம்பளி வஸ்திரத்தை அவன் தோள்களில் அணையுமாறு அணிவிக்கிறேன். ஆனந்தமும், ஜாக்கிரதை உணர்வுமாக அங்கிருந்து வெளியேறுகிறேன். நல்ல வேளை, யாரும் என்னைத் தடுக்கவில்லை.

* அணைவடை – பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு விரிக்கவும், போர்த்தவும் பயன்படுத்தப் படும் துணி. உடுத்தி வெளுத்த, பருத்தித் துணிகளை, குறிப்பாக வேட்டிகளை, சிறிய அளவில் வெட்டிப் பயன்படுத்துவர். திருநெல்வேலிப் பகுதிகளில் இத்துணியைக் குறிக்க அணைவடைத் துணி என்ற சொல்லைப் பயன்படுத்துவர் சிலர்.

^ சோவி – சோழியின் மரூஉ. வட்டாரப் பேச்சு வழக்கு.

Previous articleஇரண்டு விடியல்கள்
Next articleமொழிக் கருப்பன்
Avatar
கார்த்திகா முகுந்த் (1982): பிறந்த ஊர் திருநெல்வேலி. கணவர் முகுந்த் நாகராஜன் மற்றும் மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம். கல்கி வார இதழின் ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். முன்னணி தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பிரதி மேம்படுத்தியுள்ளார். பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில் ஓவிய அறிமுகச் சான்றிதழ் பயிற்சி பெற்றவர். Knitting ஆடை வடிவமைப்பு, புகைப்படக் கலை, கல்வெட்டியல், சைகை மொழி ஆகியன இவருடைய பிற ஆர்வங்கள். வெளியாகியுள்ள நூல்கள்: 1. இவளுக்கு இவள் என்றும் பேர் (2010) – கவிதைத் தொகுப்பு 2. குட்டி யானைக்கு பச்சைத் தொப்பி (2018) – சிறார் கதைகள் தொகுப்பு 3. ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான் (2021) – கவிதைத் தொகுப்பு 4. துமி (2022) – கவிதைத் தொகுப்பு இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் விரைவில் வெளியாகவுள்ளன. மின்னஞ்சல் – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.