மூடுதழல்

யில் மதுரை ஸ்டேஷனிலிருந்து கிளம்பியதிலிருந்தே தூக்கம் கெட்டுவிட்டது. இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிதான். ஏசியையும் தாண்டி உடலில் கொஞ்சம் வெக்கை இருப்பதாக உணர்ந்தேன். நல்லவேளை மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலிக்குப் புதிதாக விடப்பட்டிருந்த எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஒரே நாளில் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைத்திருந்தது. மூன்று பேருக்குமே லோவர் பெர்த் கிடைத்திருந்தது. முருகேஸ்வரியும் அனுதிகாவும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

நியாயப்படி விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் பஸ் பிடித்து வந்திருக்கவேண்டும். முதலாமாண்டு மாணவர்களின் கல்லூரி வருகை அனைத்தையும் பாதித்துவிட்டது.  செத்தது சொந்த தாய்மாமனாக இருந்தாலும் வயிற்றுப்பாடு வென்றுவிட்டது. உணர்ச்சிகளைச் சராசரி மனித வாழ்க்கை மூழ்கடித்து விடுகிறது. தென்காசி ஸ்டேஷனை அடைய எத்தனை மணி நேரம் ஆகுமென்று தெரியாது. இரவுப் பயணம் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. முதல் முறையாக இந்தத் தடத்தில் ரயிலில் பயணிக்கின்றேன். ரயிலின் வேகம் சுமாராகவே இருப்பதாகத் தோன்றியது.

அனுதிகாவின் மஞ்சள்நிறச் சுடிதாரின் கீழ்ப்பகுதி சீட்டிலிருந்து இறங்கி தரையில் தொட்டபடிக் கிடந்தது. மெதுவாக அதை எடுத்து சீட்டின் ஓரத்தில் போட்டேன். முருகேஸ்வரி பதறி எழுந்து, “என்னப்பா? என்னாச்சு? எங்க வந்திருக்கு ட்ரெயின்? நீ தூங்கலயா?” தொடர்ச்சியாகக் கேட்டாள். “மதுரை தாண்டிருச்சி நீ தூங்கு” என்றேன். கலைந்திருந்த முடியைச் சரிசெய்துவிட்டு பாத்ரூமை நோக்கி நடந்தாள். “பத்திரமா போயிட்டு வா… எடது பக்க ரூமுக்குப் போ… வலது பக்கத்துல தண்ணி ரொம்ப தேங்கி நிக்குது…” என்றேன். பதில்கூறாமல் நடந்தாள். அவள் மெதுவாக நடந்து போவதைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பொன்னுமாமா எனக்கு எப்பொழுதும் கதாநாயகனாகவே இருந்தார். அறுபத்திரெண்டு வயதில் சாவு என்பது வந்திருக்க வேண்டாம். சொல்லாமல் வருவது தானே சாவு. மாமா செத்த செய்தியைக் கேட்டதிலிருந்து எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இரண்டு வகுப்புகளிலும் மாமாவைப் பற்றியே பேசித் தீர்த்தேன். சில நிமிடங்கள் அமைதிகாத்தும் நின்றேன்.

பாத்ரூமிலிருந்து திரும்பிய முருகேஸ்வரி ஜன்னலோர சைடு லோவா் பெர்த்தில் என்னுடன் அமர்ந்து கொண்டாள். என் கைகளை எடுத்து அவளின் குளிர்ந்த கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். இரண்டு நாள்களாக அடக்கி வைத்திருந்த கண்ணீரை இப்பொழுது நானும் முருகேஸ்வரியும் தாரைகளாக வடித்துக் கொண்டிருந்தோம். “நீ கோயம்புத்தூா்ல இருந்து பட்டினியாவே வாரப்பா… ஏத்தங்கா சிப்ஸ் கொஞ்சம் இருக்கு… எனக்காகக் கொஞ்சம் சாப்பிட்டேன்…” என்றாள்.  என்னால் எதையும் சாப்பிடமுடியவில்லை. சாப்பிடும் மனநிலையும் இல்லை.      

 பொன்னுமாமாவைக் கடைசியாகக் கயத்தாறு சுடலைமாடன் கோயில் கொடையில் வைத்துப் பார்த்தது. மார்ச் மாதமே சற்று தளர்வாகக் காட்சியளித்தார். சுக்கிரனையும் நரேனையும் வயல் வரப்பில் அமர வைத்துக் கிணற்றடியில் ஓடிய தண்ணீரைப் பழைய பெயிண்ட் டப்பாவில் கோரி ஊற்றிக் குளிப்பாட்டிய காட்சியைக் கடைசியாக மனம் அசைபோட்டது. பிறகு சில பேச்சுகளையும் நினைவில் கொண்டுவர முடிகிற

“வேலாயுதம் சித்தப்பா வீட்ட வித்திருக்க வேண்டாம்… வீடா அது?… எவ்வளவு ரூமுங்க… எவ்வளவு காலி எடம்… வீட்ட சுத்தியும் எவ்வளவு மரங்க செடிங்க… எத்தன மாடுவல கட்டி வச்சாலும் தொழுவத்துல எடம் காலியாவே இருக்குற மாதிாி இருக்கும்… வீட்ட அவசரப்பட்டு மடத்துப்பட்டி தேவனுக்கு வித்துட்டாவளே… வீடு இருந்திருந்தா இந்தப் பிள்ள காடுவல வச்சிக்கிட்டு கட்டபொம்மன் செலக்குப் பின்னாடி சுடுகாட்டுல படுத்திருக்க வேண்டாம். சாம கொட முடிஞ்சு படப்பு சோத்த வாங்கி தின்னுட்டு ஊருக்குள்ள போயிருக்கலாம். எல்லாம் பாப்பு சித்தி பாத்த பார்வ… வீடு போனதுனாலதான் கோமதி சித்தியயும் காப்பாத்த முடியல…”

“அகிலாண்டேஸ்வரி அம்மன் மொவத்த பாத்து ஏழெட்டு வருஷமாச்சி… இந்த நொண்டி கால இழுத்து அங்குப் போக முடியல… எங்க பெரிய அத்தான் மட்டும் நல்லா இருந்தா இன்னேரம் அகிலாண்டேஸ்வரிய பாத்திருப்பேன். இனி எப்ப பாக்க போறேன்.”

 “குத்தாலத்துத் தண்ணி கயத்தாத்துல எப்படி உப்பாச்சினு தெரியல… உப்பாறுங்கானுவ… இந்த வருஷம் தண்ணியும் இல்ல… ஆத்து தடம் முழுக்க உப்புப் பொரிஞ்சு கெடக்குது… நல்ல வேல பத்து புங்க மரத்த கரைய ஒட்டி நட்டு வச்சிருக்கானுவ… கண்ணுக்குக் குளிச்சயா இருக்கு… “

 மாமாவின் பேச்சுக்களை அசைபோட்டபடி, முருகேஸ்வரியிடம் கூட்டியும் குறைத்தும் பேசி நேரத்தைக் கடத்தினேன்.

பொன்னுமாமா நாகமலை எஸ்டேட்டில் போஸ்ட்மேன் வேலை பார்த்தவர். கங்காணி தாத்தாவிற்குப் பின் கேரளாவில் தங்கிவிட்டவர். குடும்பக் கதைகளை அவா் அளவிற்கு யாராலும் கூறமுடியாது. குடும்பக் கதைகளைக் கணியான் கூத்து அண்ணாவியின் தொனியுடன் விளக்கிக் கூறுவார். கம்ப்யூட்டரையும் மிஞ்சிவிடும் தகவல் களஞ்சியம். கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். மலையாள நடிகர் மம்மூட்டியின் சாயலை ஒத்தவர். எஸ்டேட் மாரியம்மன் கோயில் கொடையில் நடைபெற்ற நாடகங்களில் கதாநாயகனாக நடித்தவர். அவரது நாடகக் கதைகளை மனம் மறந்தாலும், அவர் பாளையங்கோட்டையிலிருந்து கூட்டி வந்த கறுத்த நடிகையுடன் “ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த…” பாடலுக்குப் பிடித்த அபிநயங்கள் எத்தனை வருசமானாலும் மறக்கக் கூடியதா?… அவர் போட்டிருந்த வெள்ளை பெல்பாட்டம் பேண்டும் சிவப்புச் சட்டையும் அவரது ஹிப்பித் தலையும் மறக்கக்கூடியதா? என்ன செய்வது சில விஷயங்கள் மனத்தில் மறையாமல் இருப்பதால்தானே இந்த வாழ்க்கைக்குக் கூடுதல் அழகு தோன்றிவிடுகிறது. ஒருவேளை அழகாக இருப்பதால்தான் என்னவோ சில தத்தளிப்புகளையும் நினைவுகளையும் மனத்திலிருந்து அகற்றிவிடவே முடிவதில்லை. கடவுள் மனிதனுக்கு ‘அடிமனம்’ என்ற ஒன்றை இதற்காக மட்டுமே படைத்து விட்டான் என்றே தோன்றுகிறது.  அடிமனத்தில்தானே அத்தனை அபிலாஷைகளும் மறைந்து கிடக்கின்றன.

 அனிச்சையாக மொபைல் போனைக் கையில் எடுத்தேன். ‘வேர் இஸ் மை ட்ரெயின்’ ஆப்பை நோண்டி ரயிலின் வேகத்தைப் பாா்த்தேன். 85 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ராஜபாளையம் அருகில் சென்று கொண்டிருப்பதாக இடத்தையும் காட்டியது. அறிவியலின் வளர்ச்சியை உணர்ச்சி வசப்பட்ட நேரத்தில் அனுபவித்துக் கொண்டேன். காலை ஐந்து மணிக்கு ரயில் தென்காசி ஸ்டேஷனை அடைந்துவிடும். கடையநல்லூர் ஸ்டேஷனில் இறங்கி விடலாமென்று தீர்மானித்தேன். கடையநல்லூரிலிருந்து பண்பொழி செல்வது எளிமையானது. ஒரு ஆட்டோ பிடித்துச் சென்றுவிடலாம் என்று முருகேஸ்வரியிடம் சொன்னேன். “உன் இஷ்டம்பா எதுனாலும் எனக்குச் சரிதான்…” என்றாள்.

  “சின்னதுரை மாமா எழவு வீட்டுக்கு வந்தாரானு தெரியலயே… நானும் சுரேஷ்ட்ட கேக்க மறந்துட்டேன்… அவனும் சின்னதுரை மாமா பத்தி ஒன்னும் சொல்லல… பதினஞ்சி வருஷமா அண்ணன் தம்பிக்குள்ள அப்படி என்னதான்  பிரச்சனையோ… ஒரே வீட்டுக்குள்ள வளந்தவங்க… பதினஞ்சி வருஷம் நல்லது கெட்டதுல கலந்துகிட்டு, சந்திச்சாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாம இருந்திருக்காங்க… பொன்னுமாமாட்ட சந்திரா அத்த மகா சமைஞ்ச வீட்டுல கேட்டதுக்கு உன்  சோலிய பாருடேனு ஏசி விட்டுட்டாா்… சின்னதுரை மாமாட்ட கேட்குறதுக்குப் பயம்…”  முருகேஸ்வரியிடம் புலம்பிக்  கொண்டிருந்தேன்.

 “ரெண்டு பெரியப்பாக்களுக்கும் மகளுங்க மேல கொள்ள பிரியம்… சின்னதுரை பெரியப்பாக்குப் பெரியக்கா சொன்னது மட்டும்தான் வேதவாக்கு… பொன்னுப் பொியப்பாவுக்கு அவங்க மகா கலாவதி மேல பிரியம் அதிகம்… ரெண்டு அக்காவும் கட்டிக் கொடுத்த இடத்துல நல்லாதான் இருக்காங்க… இருந்தாலும் ஒருத்தர் மேல ஒருத்தருக்குப் பொறாமை… இவங்க போட்ட சண்டையில ரெண்டு பெரியப்பாவுக்கும் மனஸ்தாபம்… சாந்தி பெரியம்ம நாகமல எஸ்டேட் மலங்காட்டுல ரப்பர் பால் வாளிய தலையில தூக்கிட்டு மழையில நனைஞ்சிட்டு பூத்துக்கு அவசரமா வந்திருக்கா… ராவுத்தர்பாய்ய பொதச்ச எடத்துப் பக்கம் வழுக்கி விழுந்துட்டா… ரப்பா் பால் வாளி குதிங்காலுல விழுந்ததுல சரியான அடி… இரும்பு வாளி கால பதம் பார்த்துட்டு… ஒரு மாசமா புனலூரு ஆஸ்பத்திரில கெடந்துருக்கா… பொன்னுப் பெரியப்பாவும் கார்த்தியும் யார்ட்டயும் சொல்லாம வைத்தியம் பார்த்து பண்பொழிக்குக் கூட்டிட்டு வந்திருக்காங்க…” முருகேஸ்வரி அவளுக்குத் தெரிந்த செய்திகளைக் கூறிக் கொண்டிருந்தாள். வெளியே இலேசான தூறல் விழுந்ததை உணரமுடிந்தது. முருகேஸ்வரிக்கு என்னிடம் சொல்வதற்கு இதைவிட கூடுதலான செய்திகள் இருப்பதாகத் தோன்றியது. அவளது முட்டைக் கண்கள் ஏதோ ஒன்றைச் சொல்லாமல் சொல்லியது. நான் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தேன். எப்படியும் அவள் பேச்சைத் தொடர்வாள் என்ற நம்பிக்கையிருந்தது.

  “பொன்னுப் பெரியப்பா சாந்தி பெரியம்மைக்கு, அடிபட்டத யாருக்கும் தெரியாம மறச்சிரலாம்னு நெனச்சிருக்காரு… அது எப்படியோ சின்னதுரை பெரியப்பாவுக்குத் தெரிஞ்சிருச்சி… பெரியப்பா, மெட்ராசுல இருக்க பெரியக்காகிட்ட போன்ல சொல்லிட்டாரு… அவ வாய வச்சிகிட்டு சும்மா இருக்காம, அந்தமான்ல நர்ஸ் வேல பாத்துட்டு இருக்குற கலாவதி அக்காட்ட சொல்லிட்டா… கலாவதியக்கா பத்திரக் காளியாயிட்டா… சாந்தி பெரியம்மைக்கு அடிபட்டது ஒரு மாசம் கழிச்சி பெரியக்கா மூலமா தெரிஞ்சது கலாவதியக்காவுக்கு கஷ்டமா போயிட்டுது… அவ போன் போட்டு பொன்னுப் பெரியப்பாவ உண்டு இல்லன்னு பண்ணிட்டா… கோவத்துல கிளம்பி பண்பொழிக்கு வந்துட்டா… இந்தச் சண்டைதான் பெருசா ஆகி ரெண்டு பெரியப்பாவும் பேசாம இருந்துட்டாங்க… நேர்ல சந்திச்சாக்கூட பேசமாட்டாங்க… வடக்க தெக்க திரும்பி இருந்துப்பாங்க… ஒரு வருசம் ரெண்டு வருசமில்ல பதினஞ்சி வருஷமா அண்ணன் தம்பிக்குள்ள பேச்சி வாா்த்த இல்ல…  சண்டையைப் பத்தி எல்லாரும் பேசிப் பேசி  ஏழு வழியாக்கிட்டாங்க… என்று முருகேஸ்வரி  சொல்லி முடித்தாள்.

 ரயில் சங்கரன்கோவில் ஸ்டேஷனில் நின்றது. ஸ்டேஷன் வெளிச்சம் ஜன்னல் வழியாகப் பெட்டிக்குள் நுழைந்தது. அனுதிகா லேசான சிணுங்கலுடன், “அப்பா உச்சா போகணும்… இன்னும் எத்தன நேரம் நான் ட்ரெயின்ல இருக்கறது… என்னால இனி இங்க இருக்க முடியாது… சீக்கிரம் எறங்கணும்…” என்றாள். முருகேஸ்வரி அவளை அழைத்துக்கொண்டு பாத்ரூம் சென்றாள். நான் லக்கேஜ்களை எடுத்து ஒழுங்குபடுத்தினேன். கடையநல்லூரில் இறங்கி ஆட்டோ பிடித்துவிடலாம் என்று திட்டமிட்டேன். இன்னும் இருபது நிமிடங்களில் கடையநல்லூரில் இறங்கிவிடலாம். அனுதிகாவும் முருகேஸ்வரியும் என்னை இடித்துக் கொண்டு என்னுடைய சீட்டில் அமர்ந்து கொண்டனர். யாரும் தொடா்ந்து பேசவில்லை. ரயிலும் மெதுவாகக் கிளம்பியது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். இரண்டு மூன்று எருமை மாடுகள் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய தோட்டத்தில் மிரட்சியுடன் படுத்திருந்தன. ரயிலிருந்து லேசான ஹாரன் ஒலி எழும்பியது. ஒரு மாடு மட்டும் திடீரென எழுந்து நின்று கழுத்தில் கட்டி இருந்த கயிற்றிலிருந்து விடுபட முயன்றது. ஓரளவுக்கு வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. ரயிலும் வேகமெடுத்தது. ஜன்னல் வழியாக ஒரு மழைத்துளி என்னுடைய இடது கண்ணில் விழுந்தது. விழுந்த வேகத்தில் கண் கலங்கியது. கைக்குட்டையை எடுத்து மெதுவாகத் துடைத்தேன். அனுதிகா, “தாய்மாமன் செத்துட்டாருன்னு அப்பா அழுதும்மா…பாவம் அப்பாபையன்…” என்றாள். மெதுவாக அனுதிகாவின் வலது கன்னத்தை வருடிக் கொடுத்தேன். அவளது மூக்கை விரல்களால் பிடித்து முத்திவிட்டு, “ஊசிமூக்கி பேசாம இருடி…” என்றேன்.

 கடையநல்லூர் ரயில்வே ஸ்டேஷனில் முதலாவதாக நின்ற ஆட்டோக்காரரிடம் பேரம் படிந்தது. 250 ரூபாய் வேண்டும் என்றார். நானும் சரியென்றேன். மூவரும் ஆட்டோவில் ஏறினோம். ஆட்டோவும் கிளம்பியது. ஆட்டோக்காரரிடம் “அண்ணே உங்க பேரு என்ன?” என்றேன் ‘பஷீர்’ என்றார். பாய், எனக்குப் பண்பொழில ‘பஷீர்’ னு ஒரு நண்பன் இருக்கான்” என்றேன். அவர் பதில் ஏதும் கூறவில்லை. மொபைல் போனை எடுத்து டைம் பார்த்தேன். மணி 5.45 என்று காட்டியது. “இன்னும் பத்து நிமிசத்துல பொன்னுமாமா வீட்டுக்குப் போயிரலாம்…” என்று கூறினேன். முருகேஸ்வரியும் பதில் கூறவில்லை. அவள் சில முன் தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்ததாக நினைத்துக்கொண்டேன். அவள் சமீபத்தில் இரண்டு மூன்று இழவுகளை நேரிடையாக எதிர் கொண்டிருக்கிறாள்.

 பஷீர்பாய், “தம்பி பண்பொழில எங்க எறங்கணும்…” என்றார்.  “தைக்கா முக்குல இருந்து தேன்பொத்த போற ரோட்டில வீடு… வீட்டு முன்னாடி பொிய வேப்பமரம் நிக்கும்… கேரளா மாடல் வீடு…” என்றேன். அவரிடம் எந்தப் பதிலும் இல்லை. எப்படியோ பொன்னுமாமா வீட்டின் முன்பாக இறக்கிவிட்டார். 300 ரூபாயைப் பாயிடம் கொடுத்து 50 ரூபாய் சில்லறையைப் பெற்றுக்கொண்டேன். அவசரமாக லக்கேஜ்களை இறக்கினேன். வீட்டின் கேட் திறந்திருந்தது. கேட்டை ஒட்டி சாமி மாமாவும் சின்னதுரை மாமாவும் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தனர்.

 சின்னதுரை மாமாதான் உடனடியாக என்னை அடையாளம் கண்டு, “ஏலேய் சாமியப்பா… கஸ்தூரி மவன்டே… கருத்தான் வந்துருக்கான்… என்ன பாக்குற, மணிபயதான் வந்திருக்கான்…” பேசத் தொடங்கினார். சாமிமாமா சற்றுப் போதையில் இருந்தான். சாமி மாமாவை மட்டும் அதிக உாிமையில் ஒருமையில் பேசிப் பழகியிருந்தேன். என்னுடைய கைகளைப் பிடித்து வைத்துக் கொண்டு கூப்பாட்டுடன் அழத் தொடங்கினான். “பொன்னு போய் சேர்ந்துட்டான்டே… கம்பி குத்துன கால சரியா கவனிக்காம விட்டுட்டான்… மயிராண்டி திருவனந்தபுரம் ஆஸ்பத்திரில சேந்து பாத்திருக்கலாம்… ஒடம்ப பேணாம விட்டுட்டான்… கால எடுத்திருந்தகூட உயிரோட இருந்திருப்பான்… அவன் இல்லாம நாங்க என்ன செய்ய போறோம்…” பேசி விட்டு வேகமாக சேரில் அமர்ந்தான். சட்டைப்பையிலிருந்த பீடிக்கட்டிலிருந்துப் பீடியை உருவிப் பற்ற வைத்தான். நான் மெதுவாக வீட்டிற்குள் நுழைந்தேன். முருகேஸ்வரியையும் அனுதிகாவையும் வீட்டிற்குள் விட்டுவிட்டு உடனடியாக கேட் அருகே வந்தேன். இருவருடன் மிலிட்டரி முருகன்மாமாவும் கையில் சிகரெட் புகைய சோில் அமர்ந்திருந்தாா். அவா் மாயாவி போல வந்திருந்தாா். எப்படி வந்தாா் என்று தொியவில்லை.  நானும் காலியாக இருந்த சேரில் அமர்ந்தேன்.

 சாமிமாமா பேச்சைத் தொடா்ந்தான். “கோயம்புத்தூா்ல கே.சி.டி. காலேஜ்லயா வேல பாக்குற, மூத்தவன் அங்கதான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ்க்கு அப்ளை செஞ்சிருந்தான். கட் ஆப் மாா்க்கு ரொம்ப கம்மியா இருந்துச்சி அங்க எடம் கெடைக்கல… பின்னதான் கோயில்பட்டி நேஷனல் காலேஜ்ல மேனேஜ்மெண்ட் கோட்டால சேர்த்துவிட்டேன். டீச்சர் சித்தி ஒனக்குத்தான் போன்போட்டு சீட் இருக்காணு கேக்க சொன்னா… ஒனக்கு போன் போடல… ஏல ஒன்ன பார்த்து இருவது வருஷத்துக்கு மேல இருக்கும்டே… நீ பொிய வாத்தியாரா ஆயிட்ட… பொன்னண்ணன் ஒன்ன பத்தி பெருமையா சொல்லுவான்டே… ஓன்மேல அவனுக்குப் பிரியம் ஜாஸ்திடே… நீ சின்ன பயலா இருக்கும் போது உன்ன தோள்ல தூக்கிட்டு நாகமல எஸ்டேட் மலங்காடு முழுக்க சுத்துவான்… அவன் மொகத்த பாக்காம போய்ட்டயே… நேத்தே வருவேனு நெனச்சேன்… வராம இருந்துட்ட… லீவு கெடைக்கலனு சொன்னானுவோ… சரி நம்ம என்னதான்டே செஞ்சிறமுடியும்… நம்ம பொழப்பயும் பாக்கணும்…” கையிலிருந்த பீடியைப் பால்சேம்புச் செடியின் மூட்டில் சுண்டியெறிந்து விட்டு, அடுத்த பீடியைப் பற்றவைத்தான்.

 சின்னதுரை மாமா மெதுவாக எழுந்து, “ஏலேய் சாமியப்பா… வாடே கொஞ்சம் தைக்கா முக்கு வரயும் போவலாம்…. ஜமால்பாய் டீ போட்ருப்பான்டே… கருத்தான கூட்டிட்டுப் போயி ஒரு டீ சாப்ட்டு வருவோம்…” என்றாா். மிலிட்டரி முருகன் மாமா, “தொர அண்ணே… ஓன் மருமவனுக்கு மட்டும்தான் டீயா எங்களுக்கு வாங்கி தரமாட்டயா?” என்றார். “வாங்கடே மயிரு… எல்லாரும் தைக்கா முக்கு போவலாம்…” என்றார். அனைவரும் ஆங்காங்கே கிடந்த செருப்பைக் காலில் மாட்டிக்கொண்டு வடக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தோம். யாரும் பேசவில்லை. சாமிமாமாவின் ரப்பர் செருப்பு கொஞ்சம் லூசாக இருந்தது. அவன் நடக்கும்போது ஏற்பட்ட வித்தியாசமான சப்தம் மட்டுமே அந்த அமைதியைக் குலைக்கும் வண்ணம் இருந்தது. அக்தர்பாய் வீட்டைக் கடக்கும் போது எதிரில் பொன்னம்மாச்சி கையில் தூக்குவாளியுடன் வந்தாள். பக்கத்தில் வந்தவுடன்தான் எங்களைப் பார்த்தாள். ஏலேய்… எங்கல எல்லாரும் ஒன்னா போறேங்க… இந்த மணிப்பய எப்ப வந்தான்… ஒங்களுக்குத்தான்டே வடகர சொள்ளமுத்து கோனான் வீட்லருந்து பால் வாங்கிட்டு வாரேன். வாங்க ஒங்களுக்கு டீ போட்டுதாரேன்…” என்றாள்.  “நீ போத்த… நாங்க இந்தா ஒரு எட்டு நடந்துட்டு வாறோம்…” என்றான் சாமிமாமா.  அவளின் பதிலை எதிர்பார்க்காமல் நால்வரும் நகர்ந்து சென்றோம். நான் மட்டும் மெதுவாகத் திரும்பி ஆச்சியைப் பாா்த்தேன்.

 ஜமால்பாயின் கடையில் டீ தயாராக இருந்தது. சாமிமாமா முன்னால் சென்று, “ஏய் ஜமாலு நாலு டீ போடுடே… ஒன்னுல மட்டும் சீனி வேண்டாம்டே… அதிகமாகத் தேயில தண்ணியவும் ஊத்திக் குடு…” என்றான். சிறிது நேரத்தில் அனைவரது கையிலும் டீ கிளாஸ் வந்தது. மிலிட்டரி முருகன் மாமா பேச ஆரம்பித்தாா்.  “மணி எதுத்தால பார்த்தயாடே… அந்த நொண்டி ஆசாரி எவ்வளவு பெரிய பங்களா கட்டிருக்கான்னு… அந்தக் கெழட்டு முண்ட செஞ்ச வேல… எங்க தாத்தனுக்குப் புளியற சாராயத்த வாங்கி ஊத்திப் பதினெட்டு ஏக்கரையும் எழுதி வாங்கிட்டு இந்த நெண்டிபெயகிட்ட வித்துட்டா… இன்னைக்கி என்ன ரேட்டுனு தெரியுமாடே… இந்த எடம் மட்டும் இப்ப நம்மகிட்ட இருந்திருந்தா நாம அம்புட்டு பேரும் கோடீஸ்வரனுவதான்… என்ற வழக்கமான ஆதங்கத்தைக் கொட்டினார். ரோட்டின் ஓரமாகப் படுத்திருந்த செவலை நிறக் கிழட்டுக் குதிரை மிரண்டு எழுந்தது. அதன் முடியெல்லாம் கொட்டி தோல் மட்டும் தொிந்தது. அதன் முதுகில் புளியம்பூக்கள் ஒட்டிக்கிடந்தன. குதிரையின் வலது காது கீழ் நோக்கித் தொங்கிக் கிடந்தது. முன் பக்க வலது காலைச் சற்றுக் கெந்தி நடந்தது. பின்னால் திரும்பிப் பார்த்தேன். திருமலைக் கோயில் செல்லும் பச்சைநிறத் தனியார் பேருந்து பஸ் ஸ்டாப்பில் வேகமாக வந்து நின்றது. பஸ்ஸிலிருந்து சுப்ரபாதம் ஒலித்தது. காலி தூக்குவாளியுடன் பொன்னம்மாச்சி பஸ்ஸிலிருந்து இறங்கினாள். பாலை வீட்டில் கொடுத்துவிட்டு பஸ்ஸில் ஏறி தைக்கா முக்கு வந்துவிட்டாள். எங்களைப் பார்க்காமல் எதிரிலிருந்த இல்லத்தார் தெருவிற்குள் நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து கிழட்டுக் குதிரையும் கெந்தியபடி மெதுவாகத் தெருவில் நுழைந்தது.

 எச்சில் கிளாஸ்களைக் கடை பலகையில் வைத்துவிட்டு அனைவரும் முழித்துக் கொண்டிருந்தோம். சின்னதுரை மாமா ஆரம்பித்தார். “ஏலேய்… இனி வீட்டுக்குப் போய் என்னடே செய்யப் போறோம்… வாங்க ஒரு எட்டு கட்டாந்தரைக்குப் போய்ட்டு வந்துருவோம்… அந்தப் பயல நேத்து நைட்டோட நைட்டா கொண்டுபோயி மூட்டத்துல வைச்சோம்… இருட்டு வேற… குடிமவன் மாசானம்பய மப்புல நின்னு வேல செஞ்சான்… நைட்டு என்ன செஞ்சி தொலச்சான்னு தெரியல… ஒரு எட்டு போயி செதய பாத்துட்டு வருவோம்டே… நைட்டு லேசா தூறல் விழுந்தது… இருவது கொப்பரத் தேங்காகூட ஐஞ்சி கிலோ ஆமணக்கு முத்தையும் உள்ள அள்ளி போட்டுத்தான் மூட்டத்த போட்டோம்… அந்த எத்துவாளி தாயோளி கண்டிப்பா வீட்டுக்குப் போயிருப்பான்….” என்று கண் கலங்கக் கூறினார்.

 நால்வரும் பேச்சு இன்றி கடையநல்லூர் செல்லும் ரோட்டில் மயிலாடும்பாறை நோக்கி நடக்கத் தொடங்கினோம். எனக்கு இடமே தெரியவில்லை. பெரிய பெரிய வீடுகளாக முளைத்திருந்தன. தென்காசி, பண்பொழி, வடகரை, மேக்கரை ஊா்களின் அழகே தென்னந்தோப்புகளும் மாந்தோப்புகளும்தான். இப்பொழுது கட்டடங்களால் அகோரமாகக் காட்சியளிக்கின்றன. ஆயிஷா டாக்கீஸ் இருந்த இடம் மட்டும் ஓரளவுக்கு அடையாளம் தெரிந்தது. இடிபாடுகளைத் துளைத்துக் கொண்டு இரண்டு ஈச்ச மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன. “நம்ம எவனுக்கும் கிருஷ்ணன் தாத்தா, மாடத்தியாச்சி வாழ்ந்த ஊருல இருக்க கொடுத்து வைக்கல… ஊருக்கு ஒருத்தனா பிரிஞ்சு கெடக்கோம்… இந்தப் பொன்னுப் பயலாவது பண்பொழில வீடு கட்டி வாழுதானேனு சந்தோஷப்பட்டேன். அவனுக்கு முழுசா வாழக் கொடுத்து வைக்கல… ரிட்டைடு ஆகி ரெண்டு வருஷம்தான் இங்ஙனக்குள்ள வாழ்ந்திருப்பான்… ஒரேயடியா போய் சேர்ந்துட்டான்… நான் ஒரு கூறு கெட்டவன்… பொட்டக் கூதியுள்ளைங்கப் பேச்ச கேட்டுட்டு அவன்கூட பதினஞ்சி வருஷமா பேசாம இருந்துட்டேன்… அந்தப் பய கட்டுன வீட்டுக்குள்ள அவன் எழவ பாக்கத்தான் வந்திருக்கேன்…” என்று கூறியபடியே ரோட்டு ஓரத்தில் தாழ்வாகக் கிடந்த சுமைதாங்கிக் கல்லில் அமர்ந்து கூப்பாடுப் போட்டு அழத் தொடங்கினார் சின்னதுரை மாமா. யாராலும் அவரைத் தேற்ற முடியவில்லை. நான் அவர் காலடியில் அமர்ந்து கொண்டு இரண்டு கால்களையும் கட்டிப்பிடித்துச் சத்தமாக அழத்தொடங்கினேன். சாமிமாமா எதையும் பெரிதுபடுத்தாமல் பீடியை இழுத்தபடி நின்றான்.  மிலிட்டாி முருகன் மாமா சின்னதுரை மாமாவின் பக்கத்தில் ஒட்டி அமர்ந்து கொண்டு தேம்பி அழத் தொடங்கினார்.

“ஏ…மயிராண்டிங்கலா… வாங்கடே வந்த சோலிய மொதல்ல பாப்போம்… அவன் தல விதி… போயி சேந்துட்டான்…  இப்ப அழுது என்னத்த கிழிக்கப் போறீங்க… எந்திரிங்க ஒரு எட்டு நடந்தா மயிலாடும்பாற வந்துடும்… சீக்கிரமா போய் பாக்கலாம்… வாங்கப்பா…” என்று சாமி மாமா சூழ்நிலையைக் கலைத்துப் போட்டான். அனைவரும் மெதுவாக நடக்கத் தொடங்கினோம். சின்னதுரை மாமா நடையில் பின்தங்கினார். அவா் தோளில் கிடந்த பச்சைநிறக் குற்றால சீஸன் துண்டு நழுவி விழுவது போன்று தொங்கியது.

 மயிலாடும்பாறையை ஒட்டிய கல்வெட்டான் குழியில் கொஞ்சம் தண்ணீர் கிடந்தது. ஒரே ஒரு செந்தாமரை மட்டும் வழக்கமான அளவைவிடப் பெரிதாகப் பூத்திருந்தது. தாமரை இலைகளைச் சிறுவா்கள் கல்லடித்துக் கிழித்து வைத்திருந்தனா். இலைகளின் ஒழுங்கு சிதைந்திருந்தது. ஒழுங்கற்ற இலைகளுக்கிடையே பளிச்சென்று ஒற்றைத்தாமரை மட்டும் கண்களுக்குத் தொிந்தது. சுடுகாட்டில் பூத்திருக்கும் ஒற்றைப் பூவிற்கும் தனித்த அழகு இருக்கத்தான் செய்கிறது. பாறையில் ஏறி கிழக்குப் பக்கமாக இறங்கிய பாதையில் நடந்தோம். சற்றுத் தொலைவில் இருந்த சிதையின் புகைச்சல் கண்களில் பட்டது. கருகல் வாடையும் நாசியைத் துழைத்தது. கால்கள் துவழ ஆரம்பித்தன. சொந்த தாய்மாமன்… என்னைத் தூக்கி வளர்த்தவன்… தாமிரபரணியில் தூக்கி வீசி நீச்சல் கற்றுக் கொடுத்தவன்… அவன் தோள்களில் என்னை ஏற்றி உலகத்தைக் காட்டியவன்… இன்று சிதை மூட்டத்தில்… எப்படியோ சிதையை எட்டி விட்டோம்.

மூட்டம் முழுவதுமாக உருக்குலைந்திருந்தது. நான்கு தூண்கள். மேலே தகரக் கொட்டகைப் போட்டிருந்தார்கள். கொட்டகை முழுவதும் கரும்புகையால் கறுத்திருந்தது. பூ மாலைகளின் குவியல் ஒரு பக்கம் கிடந்தது. பாடை கட்டிய ஓலைப் பின்னலை மாடு மேய்ந்திருந்தது. ஈக்குச்சிகள் மட்டும் மட்டையோடு காட்சியளித்தன. இரண்டு காலிப் பன்னீர் பாட்டில்கள் கிடந்தன. ஏனோதானோவென்று இளநீர்க் கூந்தல்கள் சிதறிக் கிடந்தன. வெளிறிய நிறத்தில் ஓா் அரைஞாண் கயிறு சுருண்டு கிடந்தது. நால்வரும் மூட்டத்தைச் சுற்றி நின்றோம். குளிருக்கு இதமான வெக்கை சுகமாக இருந்தது. சிதையின் தலைமாட்டில் மட்டும் மண்டை ஓட்டுக் குவியல் சாியாக எாியாமல் புகைந்தவாறு குப்பமாகக் கிடந்தது.  அதில் கங்குகளின் தணப்பு அதிகமாக இருந்தது.

சிதையின் இடதுபுறமாக நின்ற சின்னதுரை மாமாவின் அழுகை சத்தம் மூன்று மடங்கு அதிகரித்தது. பறவைகள் கலைந்து பறந்தோடிய ஓசை காதுகளை அடைத்தது. மயில்களின் அகவலோசையும் சற்று அதிகமாகக் கேட்கத் தொடங்கியது. சின்னதுரை மாமா இடதுபுறச் சிதையை ஒட்டிக் குனிந்தார். என்ன நடக்கிறது என்பதை உடனடியாக அவதானிக்க முடியவில்லை. அவரது வலது கையால் எதையோ தூக்கினார். அவர் கையை உற்றுப் பார்த்தவுடன்தான் தெரிந்தது. சிதையிலிருந்து விலகி பொன்னுமாமாவின் இடதுகை லேசாகக் கரிந்து எாியாமல் கிடந்திருக்கிறது. சின்னதுரை மாமா அருவருப்பு இல்லாமல் எரியாத கையை எடுத்து, சிதையின் தலைமாட்டில் கங்கு குவியலில் வீசி எறிந்தார். ஆவேசம் வந்தவர்போல நின்றார். பதற்றத்தால் உடல், கோமரத்தாடி ஆடுவது போல முன்னும் பின்னுமாக அசைந்தது. உதடுகள் விம்மின. விரல்களை மடக்கி இறுக்கமாகப் பிடித்திருந்தாா்.   கால்களை இரண்டு எட்டுப் பின்னெடுத்து வைத்துவிட்டு, “செறிக்கியுள்ள நான் செத்து, நீ என்ன கொழுத்திருக்கனும்டே… நான் சாவாமல் கெடந்து உன்ன கொழுத்திட்டேனடே… ஏலேய் பொன்னு மயிராண்டி… என்ன மன்னிச்சிருடே…” என்ற பேச்சுடன் விருவிருவென நடந்துசென்று மூசுமூசுவென்று   மயிலாடும்பாறை ஏற்றத்தில் ஏறத்தொடங்கினார். நான் சட்டென்று சிதையின் பக்கம் திரும்பி, அவர் தூக்கியெறிந்த பொன்னுமாமாவின் கையையே பார்த்துக்கொண்டு நின்றேன்.

Previous articleமொழிக் கருப்பன்
Next articleநுண்கதைகள்
Avatar
ப.சுடலைமணி திருநெல்வேலியில் பிறந்தவர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயின்று,  தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கோயம்புத்தூர் குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.  பணியின் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து கோவையில் வசித்து வருகிறார்.  இவரது கவிதைகள் புன்னகை,  வடக்கு வாசல், உயிர் எழுத்து, புதுப்புனல், யுகமாயினி, காவ்யா, கல்கி, சிற்றேடு, தொடரும், உன்னதம், தி இந்து - காமதேனு, கனவு, சிறுபத்திரிக்கை, முத்துக்கமலம், கீற்று, கவிக்கூடு, தேன்சிட்டு, திண்ணை, மகுடம், தென்றல் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. முகநூலிலும் கவிதைகள் எழுதி வருகிறார். "நட்சத்திரக் கிழவி" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். கல்யாண்ஜி, கலாப்ரியா கவிதைகளில் ஈடுபாடு கொண்டவர்.  சூழலியல் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார்.   பயணம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  பயணங்களில் காணும் காட்சிகளைக் கவிதைகளாகப் பிரதியெடுத்து வருகிறார். இவரது கவிதைகள் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, கோவை கலைமகள் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

4 COMMENTS

  1. அருமையான கதை சின்னத்துரை மாமாவோடு சேர்ந்து அழுதுவிட்டேன்

  2. அருமையா வந்திருக்கு…. என்ன மயிராண்டி மனுசங்களுக்குள்ள சண்டை வேண்டிக் கெடக்கு…போனவன் போயிட்டா, போட்ட சண்டை போயிரவா செய்யுது …

  3. இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி ஜன்னல் வழியாக எப்படி மழைத்துளி?!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.