விளை நிலங்களை விழுங்கிய சாலை

“இந்தியாவில் நாவல் இன்னும் அவ்வளவாக வளர்ச்சியடையாத ஒரு துறை. நம் பிராந்திய மொழிகளில் நல்ல நாவலாசிரியர்களும் நல்ல நாவல்களும் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உலகத்தரம் வாய்ந்த முதன்மையான நாவலாசிரியர்களும் முதன்மையான நாவல்களும் நம்மிடம் இல்லை.” – பி.கே.பாலகிருஷ்ணன்

கத்தான இலக்கிய வடிவங்களில் ஒன்றான நாவல், தமிழைப் பொறுத்தவரை காப்பிய மரபின் தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது. ஆனாலும் நாவல் எனும் இலக்கிய வகைமை தமிழுக்கு ஓர் இறக்குமதி சரக்குதான் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழில் முதல் நாவல் எழுதப்பட்டு ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன. இன்றும் தமிழில் நாவல் இலக்கியம் வளர்ச்சியடையாத ஒரு துறையாகவே பார்க்கப்படுகிறது. தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் இருந்துதான் அவரவர்களுக்குரிய இடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. சில தமிழ் நாவல்களை உலக நாவல்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதென்பது சற்று மிகையாகவே பார்க்கப்படுகிறது. தமிழில் நாவல் ஆக்கத்தில் அவ்வப்போது ஒருசில புதிய முயற்சிகள் நடந்தாலும் அதிலொரு தொடர்ச்சியின்மையும் காணப்படுகிறது. மலையாள இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களுள் ஒருவரான பி.கே.பாலகிருஷ்ணன் (நாவலென்னும் கலைநிகழ்வு, பக்.57) தன்னையும் உள்ளடக்கியே மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அவரது குரல் இந்திய நாவல் இலக்கியத்தின் போதாமையிலிருந்தே வெளிப்பட்டுள்ளது. அவரது கருத்தையும் தீவிர உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும். “நாவல் என்கிற உருவத்தை எத்தனை விதமான விமர்சனங்களாலும் ஸ்தாபித்துத் தெளிவாக்கிவிட முடியாது. விமர்சனங்கள் கோடிதான் காட்ட முடியும்” (நாவல் கலை, பக்.17) என்கிறார் க.நா.சுப்ரமண்யம். நாவலின் தரம் எதனை அடிப்படையாகக்கொண்டு மதிப்பிடப்படுகிறது; அதன் தரத்தை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதெல்லாம் ஒருநாளும் முடிவை எட்டமுடியாத விவாதங்கள். க.நா.சு.வின் கருத்து அத்தகையதொரு இடத்திற்குத்தான் இட்டுச்செல்கிறது. இருவரது கருத்துகளும் இருவேறு திசைகளிலிருந்து ஒலிக்கின்றன. க.நா.சு.வின் கருத்து படைப்பாளரது சார்புத் தன்மையிலிருந்து உருவானது. க.நா.சு. உலக இலக்கியப் பரிச்சயம் உடையவர். விமர்சகர் என்பதைக் கடந்து, அவர் ஒரு படைப்பாளியாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சமூகத் தாக்கத்தை நேரடியாக உள்வாங்கிக்கொண்ட இலக்கிய வடிவமாக நாவலே கருதப்படுகிறது. இதன் சமீபத்திய உதாரணம், மு.குலசேகரன் எழுதியுள்ள ‘தங்க நகைப் பாதை’ என்ற நாவல். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு இன்றும் தேர்தலில் வாக்குகளை வாங்கித்தரும் திட்டமாகக் கருதப்படுவது தங்க நாற்கர சாலைத் திட்டமாகும். இத்திட்டம் அன்றைய பிரதமர் அ.பி.வாஜ்பாய் அவர்களால் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களை இணைக்கும் மாபெரும் திட்டமாகத் தங்க நாற்கர சாலைத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீட்டர்கள். குறைவான பயண நேரம்; குறைந்த எரிபொருள், பாதுகாப்பான பயணம் ஆகிய மூன்று நன்மைகளை இத்திட்டம் அளிக்கும் என்று அரசு கூறியது. மேலும், இது இந்தியாவின் மிகப்பெரிய நெடுஞ்சாலைத் திட்டமாக இன்றும் இருந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக நாடு பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. கிராமத்திற்கும் நகரத்திற்குமான இடைவெளிகளை இத்திட்டம் குறைத்திருக்கிறது. கிராமப் பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. தொழிற்சாலைகள் பெருகியிருக்கின்றன. வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன என்பது போன்ற பல நன்மைகள் இத்திட்டத்தால் நடந்திருக்கின்றன. இதற்கான தரவுகள் அரசிடம் இருக்கின்றன. இத்திட்டத்தைக் கொண்டுவந்த கட்சி அதனைத் தங்களது சாதனைகளாகத் தொடர்ந்து கூறிவருகிறது.

தங்க நாற்கர சாலைத் திட்டம் 2012ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் குறித்த நன்மைகள் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல இந்தத் திட்டத்தை நாடு முழுக்க நடைமுறைப்படுத்தும்போதும் நடைமுறைப்படுத்திய பிறகும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தரவுகள் அரசிடம் இருக்கின்றனவா? என்ற கேள்வி இங்கு எழுகிறது. இச்சாலைத்திட்டம் நாட்டு மக்களின் வளர்ச்சிக்கானதாகக் கருதப்பட்டாலும், அதே மக்கள் இத்திட்டத்தால் கடுமையான பாதிப்பையும் சந்தித்திருப்பர் என்பதையும் மறுக்க முடியாது. அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது நன்மை, தீமை என இரண்டுமே இருக்கும். அரசு இயந்திரங்கள் நன்மையை மட்டுமே என்றும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும். படைப்பாளர்கள் ஒருபோதும் அப்படி இருக்க மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர் ஒருவராக இருந்தாலும் அவரது தரப்பைப் பொருட்படுத்துவார்கள். குறிப்பாக நவீன இலக்கியங்கள் உதிரிகளின் பக்கம் நிற்கும். ஒடுக்கப்பட்டவர்களுக்காக அதன் குரல் ஒலிக்கும். மு.குலசேகரன் ஒரு நவீன இலக்கியப் படைப்பாளர். எனவேதான் தங்க நாற்கர சாலைத் திட்டத்தால் தன் நிலத்தை இழந்த ஒருவரின் துயரமான வாழ்க்கையைத் ‘தங்க நகைப் பாதை’ நாவலாகப் பதிவு செய்திருக்கிறார்.

‘தங்க நாற்கரம்’ என்ற பெயரே கவர்ச்சிகரமாக இருக்கிறது. இந்தத் திட்டம் வந்த பிறகு விவசாயம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. விவசாய நிலத்தின் மதிப்பு உயரத் தொடங்கியது. விவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. பலர் தங்களது நிலத்தை விற்கவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர். ‘இந்தியாவின் இரத்த நாளங்கள்’ என்று வருணிக்கப்பட்ட இத்திட்டம், மறைமுகமாகப் பலரைச் சொந்த நிலத்தைவிட்டே விரட்டியது. இந்தக் கண்ணியைத்தான் மு.குலசேகரன் விரிவான தளத்தில் புனைவாக எழுதிருக்கிறார். அவரது நேரடி அனுபவம் இதற்குப் பயன்பட்டிருக்கிறது. இவர் வாணியம்பாடி பகுதியைச் சார்ந்தவர். இந்தப் பகுதியின் வழியாகச் செல்லும் சாலைதான் சென்னையையும் டெல்லியையும் இணைக்கிறது. இரண்டு வழியாக இருந்த இச்சாலை, பிறகு நான்கானது. இப்போது ஆறு வழியாகிப் பறந்து கொண்டிருக்கிறது. இந்தச் சாலைத் திட்டத்தினூடாக நசுங்கிய குடும்பங்களுள் ஒன்று சுந்தரத்தினுடையது. இவர், விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியாதவர். தொடர்ந்து நிலம் தன்னை ஏமாற்றிக்கொண்டே இருந்தாலும் நிலத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடைய காந்தியவாதி. இவர் கதையைச் சொல்வதின் மூலமாக இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டு நிலங்களை இழந்த அனைவரது கதைக்குமான சாட்சியமாக இந்நாவல் நிற்கிறது.

விவசாய நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுகொண்டிருக்கும் தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் பாதிப்புகளைப் பேச்சிதான் சொல்லத் தொடங்குகிறாள். சுந்தரம் பேச்சியின் நினைவில் வளரும் கதாபாத்திரம். அவரது வாழ்க்கை புனைவில் பின்னோக்கி நினைவுகூரப்படுகிறது. சுந்தரத்தின் இளமை காலம் முதல் அவரது இறப்புவரையுள்ள காலகட்டம்தான் புனைவின் கதையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சுந்தரம் பள்ளிப் படிப்பை முடித்தவர். காமராசர் அந்த ஊரில் தொடங்கிய ஒரு பள்ளிக்கு இவரை ஆசிரியராக இருக்கச் சொல்கிறார். இவரது அம்மாவுக்கு மகன் விவசாயம் செய்யவேண்டும் என்பது ஆசை. சுந்தரம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுகிறார். பொதுவாக நிலம் விட்டு நிலம் பெயர்தலைத்தான் புலம்பெயர்தல் என்போம். இப்பகுதி மக்கள் சொந்த நிலத்திலேயே புலம் பெயர்ந்தவர்களாக ஆக்கப்படுகின்றனர். அவர்கள் விற்ற நிலத்திலேயே கூலிகளாக மாற்றப்படுகின்றனர். அவர்களது நிலம் அவர்களுக்குள் நினைவுகளாக மாறுகிறது. இதற்கான நேரடிச் சாட்சியமாகப் பேச்சி இருக்கிறாள்.

ஒரு நல்ல புனைவு, நிகழ்ந்ததைவிட நிகழக்கூடியவற்றின் சாத்தியங்களில்தான் அதிகக் கவனம் செலுத்தும். இந்த நாவலின் பேச்சி கதாபாத்திரம் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஒற்றையடிப் பாதையாக இருந்த வழித்தடம் அவள் கண்முன்னே ஆறுவழிச் சாலையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதனை அவள் வளர்ச்சியாகப் பார்க்கவில்லை. ஒரு பேரழிவிற்கான அறிகுறியாகப் பார்க்கிறாள். ‘அந்த வழி வளருது. இன்னும் எவ்வளவு பெரிசாகும்னு தெரியல. எதிர்காலத்துல எல்லாத்தையும் அழிச்சுடும்’ என்பதை அவளது அனுபவத்திலிருந்து சொல்கிறாள். அவள் திருமணமாகி அந்த ஊருக்கு வந்ததிலிருந்தே அந்தச் சாலையின் வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்தச் சாலையின் வேகம் அவள் கணவனைப் பலிவாங்கி விடுகிறது. சாலையைக் கடத்தல் சாகசம் நிறைந்த ஒன்றாக அப்பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது. வாகனங்களின் வேகத்தை அவர்களால் கணிக்க முடியவில்லை. கணிக்க முடியாத ஒரு வாகனத்தின் வேகத்தில் சிக்கித்தான் பேச்சியின் கணவன் ராஜா இறந்து போகிறான்.

சாலையைக் கடத்தல் குற்றமாக அரசால் சுட்டிக்காட்டப்படுகிறது. சாலைக்கு எதிர்ப்புறம் இருந்த நெருக்கமான ஊர்களெல்லாம் மிக நீண்ட தூரமாகத் தெரிகின்றன. பேச்சி எதிர்காலத்தைக் கணிக்கிறாள். இந்தச் சாலை யாருக்கானது என்ற கேள்வி அவளுக்குள் எழுகிறது. புனைவின் இறுதிவரை பேச்சி கதாபாத்திரம் தொடர்கிறது. பெரும் அழிவை அவள் கண்முன்னே பார்த்துக்கொண்டே இருக்கிறாள். அவளது வாக்கு உறுதிபட்டுக்கொண்டே வருகிறது.

நாவலின் சில நுணுக்கமான இடங்களையும் சுட்டிக்காட்ட வேண்டும். சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு அரசிடமிருந்து கடிதங்கள் வழியாக அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கடிதங்கள் சுந்தரத்தைப் பதற்றத்திலேயே வைத்திருக்கின்றன. அரசின் காலதாமதம் அவருக்குச் சில நம்பிக்கைக் கீற்றுகளையும் உருவாக்குகிறது. சாலை விரிவாக்கத்திலிருந்து தன் நிலத்தைக் காப்பாற்ற சுந்தரம் விதைத்துக்கொண்டே இருக்கிறார். பயிர் விளைந்த நிலத்தை அரசு உடனடியாக எடுத்துக்கொள்ளாது என்ற அவரது நம்பிக்கை பொய்த்துப் போகிறது. அரசின் இயந்திரங்கள் அவரது எள்ளுச்செடிகளை வேரோடு பிடுங்கி வாரிச் சுருட்டிக் கொள்கின்றன. வழுக்கிக்கொண்டு செல்லும் ஒவ்வொரு சாலைக்கு அடியிலும் நிலத்தை வாரிக்கொடுத்த விவசாயிகளின் ஆன்மா சுற்றிக்கொண்டே இருக்கிறது என்ற கதையாடலுக்குள்ளும் பிரதி வாசகரை அழைத்துச் செல்கிறது. பிரதிக்குள் அவ்வப்போது வந்துபோகும் சில கதாபாத்திரங்கள் இதனை நிரூபிக்கின்றன. அமானுஷ்யம் என்ற தன்மையைத் தாண்டி அடிமனதின் விழைவுகளாக இதனைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

‘சாலை கறுத்த சவப்போர்வை போலிருந்தது’ என்று ஓரிடத்தில் மு.குலசேகரன் எழுதியிருக்கிறார். இன்று நடைபெறும் சாலை விபத்துகளில் பெரும்பாலானவை, தங்க நாற்கர சாலைகளில் நடப்பவைதாம். ‘பாதுகாப்பான பயணத்திற்கு’ என்று நைச்சியமாகப் பேசி நிலத்தைக் கைப்பற்றிய அரசு, ‘அதிக வேகம் ஆபத்து’ என்று ஆங்காங்கே பலகைகள் வைத்து விபத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. சாலை ஓரத்திலுள்ள ஒவ்வொரு ஊருக்கும் தனித்த அடையாளம் என்ற ஒன்றிருக்கும். அந்த அடையாளம்தான் அவர்களுடைய ஊரின் பேருந்து நிறுத்தம். வளர்ந்த மரங்கள், பழைய கோயில்கள், கட்டடங்கள், நினைவுச்சின்னங்கள் என எதுவாகவும் அவை இருக்கலாம். இந்தச் சாலை விரிவாக்கத் திட்டம், இந்த அடையாளத்தைதான் முதலில் அழித்தது. மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன; கட்டடங்கள் மூளியாக்கப்பட்டன; கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டன; நினைவுச் சின்னங்களை இடம்பெயர்த்து வைத்தனர். இப்போது எல்லா ஊரும் ஒன்றுபோலத் தெரிகின்றன. அந்தந்த ஊர்க்காரர்கள் தங்களது ஊர்களைக் கண்டுபிடிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். அடுத்து, இன்னொரு பிரச்சினையையும் சாலையோரத்தில் அமைந்திருந்த கிராமங்கள் சந்தித்தன. நெடுஞ்சாலைகளில் காலி மாட்டுவண்டிகூட ஏறமுடியாத அளவுக்கு அவர்களது ஊருக்குச் செல்லும் சாலைகள் பள்ளமாக்கப்பட்டன. இன்றும் இந்தப் பிரச்சினை சரிசெய்யப்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.

சாலை விரிவாக்கம் ஒட்டுமொத்தமாக அந்த ஊரின் அடையாளத்தையே மாற்றிவிடுகிறது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும் வணிக மையங்களாகவும் மாற்றப்படுகின்றன. புதிய புதிய நெடுஞ்சாலை உணவகங்கள் ‘தாபாக்கள்’, ‘மோட்டல்கள்’ போன்ற பெயர்களில் உருவாகின்றன. மனரீதியாகப் பல பிரச்சினைகளை நெடுஞ்சாலை ஓரத்தில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்கின்றனர். திடீரென ஊரே வெளிச்சமாகிவிடுகிறது. எப்போதும் வாகனங்களால் உருவாகும் வெவ்வேறுவிதமான சத்தங்கள் அவர்களை உறங்கவிடாமல் செய்துவிடுகின்றன. நிலம் வைத்திருப்பவர்கள்மீது செயற்கையான அழுத்தம் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கட்டாயமாக நிலத்தை விற்கவேண்டிய நெருக்கடிக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். சுந்தரத்தின் நிலமும் அப்படியொரு நெருக்கடியில்தான் விற்கப்படுகிறது. பெரும் கட்டடங்களுக்கு இடையே விவசாயம் செய்துகொண்டிருப்பவர்களின் பதற்றங்கள் சொல்ல முடியாதவை. ‘இத வித்துட்டா நாம எங்க போறது?’ என்ற பெரிய முருகனின் மனைவி ராஜி கேட்கிறாள். இந்த வரி புனைவை வாசிப்பவர்களுக்குள் பெரும் கனத்தை ஏற்றிவிடுகிறது. இதுபோன்ற நுட்பமான பிரச்சினைகளைப் புனைவு கவனத்துடன் அணுகியிருக்கிறது.

பிரிக்கப்படாத வடார்க்காட்டு மக்களின் வாழ்க்கையைத்தான் நாவல் பேசுகிறது. அதேநேரத்தில் ஜவ்வாதுமலை, கானாறு, தோல் தொழிற்சாலை உள்ளிட்ட இடக்குறிப்புகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் அனைவருக்குமான நாவலாகவும் இது இருக்கிறது. சாலை விரிவாக்கம் நாவலின் மையமாக இருந்தாலும் அதனோடு தொடர்புடைய, தொடர்பில்லாத பலரது வாழ்க்கையும் நாவலுக்குள் ஊடாடுகிறது. உலக அளவில் நாவல் என்பது கலைக்குள் நிகழ்த்தப்படும் மாபெரும் விவாதமாகவே பார்க்கப்படுகிறது. தமிழைப் பொறுத்தவரை நாவல் எனும் வடிவம் அகலமான கோணிப்பையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாவலிலும் அந்தத் தன்மை காணப்படுகிறது. இதில் பல்வேறு அடுக்குளாக வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. வாசகர் நினைவு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்குத் துணைக்கதைகளும் கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன. அவை பிரதிக்குள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமலேயே மறைந்து போகின்றன. கதாபாத்திரங்களுக்குள் பெரிய விவாதங்கள் எவையும் நிகழவே இல்லை. ‘பெரிய நாவல்’ என்ற கவர்ச்சிக்குள் மு.குலசேகரனும் மாட்டிக்கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது.

ஒரு பிரதியின் தீவிரத்தைத் தீர்மானிப்பதில் வடிவத்திற்கும் முக்கியமான பங்கிருக்கிறது. ஒரு பிரதிக்குள் எந்தத் தன்மை ஆதிக்கம் செலுத்துகிறதோ அதுவே அதன் வடிவம் என்று திறனாய்வாளர்கள் விளக்கியிருக்கின்றனர். இந்நாவல் வடிவப் பிரக்ஞையே இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. “நாவல் இருமையும் குவிதலும் உள்ளதாக இருக்கலாகது; நாவலின் நகர்வு ஒரே திசை நோக்கியதாக இருக்கக் கூடாது; வலை போல நாலாபுறமும் பின்னிப் பின்னி விரிவடைவதாக இருக்க வேண்டும்; நாவலின் ஆகிருதி ஒரே பார்வையில் முழுமையாகப் பார்த்து விடக்கூடியதாக இருக்கக் கூடாது” (நாவல் கோட்பாடு) என்பது நாவலின் வடிவம் குறித்த ஜெயமோகனின் கருத்தாகும். மு.குலசேகரன் இந்தக் கருத்தை அப்படியே பின்பற்றி நாவல் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ஜெயமோகனின் கருத்து தமிழ் நாவலுக்குரியதாகவும் தோன்றவில்லை. ஏனெனில் அவரே அப்படி எழுதியதாகவும் தெரியவில்லை. மேலும், ஒரு நாவலுக்கு மையம் முக்கியமானது என்பது பற்றி அவரே விரிவாக எழுதியுமிருக்கிறார். மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ள இந்நாவலில், இரண்டாவது பகுதி நாவலுக்குச் சுமையாகவே இருக்கும் என்பது என் அவதானிப்பு.

ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனி வாழ்க்கையும் பண்பாடும் இருக்கிறது. அது அப்படியே எழுதப்படும்போது உள்ளடுக்குகளற்ற தட்டையான வடிவமாகப் பிரதி உருப்பெற்றுவிடுகிறது. இந்தத் தன்மையிலிருந்து படைப்பாளர்கள் தம் பிரதியைக் காப்பாற்றிக்கொள்ள சில நகாசு வேலைகளைப் செய்ய வேண்டியிருக்கிறது. இத்தகைய நகாசு வேலைகளுக்கு உத்தி, தத்துவம், கோட்பாடு, மொழிப்பிரக்ஞை என்று பல பெயர்களைத் திறனாய்வாளர்கள் சூட்டியிருக்கின்றனர். இதிலும் படைப்பாளர்களுக்குப் போதிய அறிவு தேவைப்படுகிறது. ஏனெனில் இலக்கியம் எல்லா கலைகளையும்விட மேலானது; படைப்பாளர் எல்லோரையும்விட மேலானவர். இந்த நாவலை மேலான படைப்பாக மாற்றுவதில் புனைவின் வடிவமே தடையாக இருக்கிறது. தங்க நாற்கர சாலைத் திட்டத்தினூடாகப் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியே இந்நாவல் பேசுகிறது. இதுதான் இந்நாவலின் மையமும்கூட. நாவலின் தலைப்பு, பின்னட்டைக் குறிப்புகள் என எல்லாமே இந்த மையத்தைச் சார்ந்த புரிதலையே ஏற்படுத்துகின்றன. ஆனால் இப்புனைவு அதில் மட்டுமே கவனத்தைக் குவிக்கவில்லை.

சுந்தரமும் அவரது நிலத்தில் வேலைசெய்யும் பெரிய முருகனும் நிலம்தான் உயிர் என்று கருதுபவர்கள். சுந்தரத்திற்கு விவசாயத்தின்மீது ஈடுபாடு இருந்தாலும் அதனை அவரால் இலாபகரமாகச் செய்ய இயலவில்லை. ஆனால் தன் வாழ்நாளின் இறுதிவரை அவர் விவசாயத்தைக் கைவிடவும் தயாராக இல்லை. தென்னை, கரும்பு, நெல், எள், காய்கறிகள் எனத் தொடர்ந்து பயிரிடுகிறார். விவசாயம், அவர் மனைவி பொன்னம்மாவின் நகைகளைக் காலிசெய்துகொண்டே இருக்கிறது. இந்நாவலுக்கு விவசாயப் பிரச்சினை என்பது தேவையில்லாதது என்றே கருதுகிறேன். நாவலின் மையம் என்பது சாலை விரிவாக்கப் பிரச்சினைதான். சாலை விரிவாக்கத்தினால் அந்த மக்களுக்கு ஏற்பட்ட அகப்புறப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தியிருந்தால் புனைவு இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருக்கும். அதாவது, பொன்னம்மாவின் நகைகள் எப்படி ஒவ்வொன்றாக அடகுக்கடைக்குப் போனது என்பது நாவலின் இரண்டாம் பகுதி. இந்தப் பகுதி இல்லாமலேயே நாவல் முழுமையை அடைந்திருக்கிறது.

சுந்தரத்திற்கு அடுத்துப் பொன்னம்மாவின் கதாபாத்திரம் புனைவில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இத்தம்பதிக்கு கார்த்தி, மோகன், சுமதி, விஜயா என்று நான்கு குழந்தைகள். புனைவு இவர்களுடைய வாழ்க்கையையும் கவனப்படுத்தியிருக்கிறது. கார்த்தி சென்னைக்குக் குடிபெயர்கிறான். மோகன் குடும்பத்துடன் பக்கத்திலுள்ள நகரத்திற்குச் சென்றுவிடுகிறான். சுமதியும் விஜயாவும் வெவ்வேறு ஊர்களில் வாழ்க்கைப்படுகின்றனர். சுந்தரத்தின் இறப்பே முதுமையின் கொடூரத்தையும் பிள்ளைகளின் சுயநலத்தையும் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அதற்குப் பிறகு தனித்துவிடப்பட்ட பொன்னம்மாவின் இறுதிக்காலம் புனைவில் தனித்துத் தெரிகிறது. ‘ஒரேடியா செத்துத் தொலைஞ்சா நிம்மதியா தலை முழுகிட்டுப் போகலாம்’ என்று அம்மாவைப் பார்த்து விஜயா சொல்கிறாள். இதுபோன்ற திருவாசகங்களைப் பலரது வாயிலிருந்து உதிர்ந்தபோதே கேட்டிருக்கிறேன். இதற்கு எதிர்வினையான, ‘அப்படியே வீட்டில் கிடந்து அழுகிச் செத்திருக்கலாம்’ என்ற பொன்னம்மாவின் மறுமொழியைத்தான் எளிதில் கடந்துசெல்ல முடியவில்லை. ஏறக்குறைய அவள் அப்படித்தான் யாருமற்றுச் செத்துப் போகிறாள். இந்த வரியை வாசிக்கும்போது உண்மையில் புனைவு என்பதைக் கடந்து, பயமாக இருக்கிறது.

இந்த நவீன வாழ்க்கை உறவுகளுக்குள் எவ்வளவு பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டது. நிலத்திற்காகவும் தம் குழந்தைகளுக்காகவும் எல்லாவற்றையும் இழந்த பொன்னம்மா கூறிய வரிகள், மனித இருப்பின்மீதும் அவை உருவாக்கிய கற்பிதங்கள்மீதும் விடப்பட்ட மிகப்பெரிய அறைக்கூவல். பொன்னம்மாவுக்கு அப்படியொரு எண்ணம் எப்படித் தோன்றியது என்பதற்குப் பின்புள்ள காரணிகள் பொருட்படுத்தத்தக்கவை. விஜயா, பொன்னம்மாவை உள்ளே விட்டுவிட்டு வெளியே தாழ்ப்பாள் போட்டுச் செல்கிறாள். விஜயா இதனை இயல்பாகச் செய்வதாகவே பிரதி காட்டுகிறது. இந்த இயல்புதான் நெருடுகிறது. புனைவு முதன்மையாகக் கட்டமைக்கும் சாலை விரிவாக்கப் பிரச்சினைகளைக் கடந்து, நாவலின் இறுதிப்பகுதி வாசிப்பவர்களைப் பொன்னம்மாவின்மீது கவனத்தைக் குவிக்கச் செய்துவிடுகிறது. பொன்னம்மாவின் பிள்ளைகள் அவளைத் தனிமையில் விட்டுப் போனதற்குப் பின்னணியில் தங்க நாற்கர சாலைக்கும் பங்கு இருக்கிறதா என்ற பார்வையிலும் நாவலை அணுக வேண்டியிருக்கிறது.

கரும்பும் நெல்லும் விளைந்த நிலத்தில் பங்களாவும் ஓட்டலும் கட்டப்படுகிறது. அந்த நிலத்தில் வேலைசெய்தவர்கள் இப்போது பங்களாவிலும் ஓட்டலிலும் வேலை செய்கிறார்கள். இரு கரைகளிலும் நுரை போங்க ஓடிய கானாறு தன் வளத்தை இழக்கிறது. இருக்கும் கொஞ்சம் மணலும் சுரண்டப்படுகிறது. பேச்சி இன்னமும் உயிரோடிருக்கிறாள். ‘அது நாலாகி, ஆறாகி, எட்டாகி, பத்தாகி, நூறாகும் பாரு. அப்ப வழி மட்டுந்தா தனியாகப் போகும். இந்த ஊருங்கெல்லாம் காணாமலாகும்’ என்று சாலையைப் பார்த்துக் கணியங்கூறுகிறாள். பேச்சியின் வாக்கு பலிக்கக்கூடாது. ஆனால் அதற்குச் சாத்தியங்கள் குறைவுதான். ஏனெனில், அவள் காலத்தில் ஒற்றையடிப் பாதையாக இருந்த வழித்தடம்தான், இன்று ஆறுவழிச் சாலையாக உருமாற்றம் அடைந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது.

மு.குலசேகரன், பெரிய அளவில் இலக்கியங்களில் பதிவாகாத வடார்க்காட்டு மக்களின் வாழ்க்கையை வலிமையான கருப்பொருளுடன் நாவலாக எழுத முயன்றிருக்கிறார். நாவலில் அப்பகுதி மக்களின் நிலமும் வாழ்க்கையும் ஓரிழையாகப் பதிவாகியிருக்கின்றன. ஆனால், நாவல் வட்டாரமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கதாபாத்திரங்கள் பேசும் இடங்களில் மட்டுமே கொஞ்சமாக இப்பகுதியின் மொழி பதிவாகியிருக்கிறது. பெரும்பாலும் புனைவாசிரியர் கூற்று முறையிலேயே நாவல் எழுதப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் எதனையும் புனைவாசிரியர் கட்டுப்படுத்தவில்லை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் சுந்தரம், பொன்னம்மா கதாபாத்திரங்களைத்தான் புனைவாசிரியர் பிரக்ஞையுடன் அணுகியிருக்கிறார். பிற கதாபாத்திரங்கள் அதனதன் போக்கில் தோன்றி மறைந்து விடுகின்றன. முன்னுரையிலேயே, ‘கதாபாத்திரங்கள் தாமாகப் பிறந்து வந்தார்கள். அவர்களைப் பின்பற்றுவதே என் வேலையானது’ என்று மு.குலசேகரன் எழுதியிருக்கிறார். பெரும்பாலும் ஒரு நாவலின் தொடக்கத்தைப் புனைவாசிரியர் முடிவுசெய்ய வாய்ப்பிருக்கும்; முடிவு படைப்பாளரின் ஆளுகைக்கு அப்பாற்பட்டது. அவ்வகையில் இந்நாவலின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் மட்டும்தான் நாவலின் மையமாக இருக்கிறது. இடைப்பகுதி இடைச்செருகலாகவே தொக்கி நிற்கிறது.

பி.கே.பாலகிருஷ்ணன் சிறந்த நாவல் எது என்பதற்கும் அவரளவில் ஒரு விளக்கம் தந்திருக்கிறார். “ஒரு நாவல் மறுவாசிப்பிலும் வாசகனுக்கு வலுவான நிகழ் வாழ்க்கை அனுபவத்தை அளிக்கும் ஆற்றல்கொண்ட ஒன்று என்றால், அந்த நாவல் சிறந்தது என்று எந்தச் சந்தேகமும் இல்லாமல் சொல்லிவிடலாம்” (நாவலெனும் கலைநிகழ்வு, பக்.138) என்கிறார். ஒரு நாவலாசிரியர் எழுதிய எல்லாவற்றுக்கும் உரிமை கோரக்கூடாது. அவர் எழுதியவற்றை இழப்பதற்கும் மனமுவந்து தயாராக இருக்க வேண்டும். அப்படிச் சிலவற்றை இழந்தால் ‘தங்க நகைப் பாதை’ நாவல் வாசிப்பதற்கும் நாவலில் சொல்லப்பட்டுள்ள ஒரு வாழ்க்கையை மிக அணுக்கமாக உணர்வதற்கும் உகந்ததாக இருக்கும்.

Previous articleபோண்டு
Next articleஆனந்த்குமார் கவிதைகள்
சுப்பிரமணி இரமேஷ்
நவீன இலக்கியங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதுகிறார். சென்னை, இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள், தொடக்க காலத் தமிழ் நாவல்கள், தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும், படைப்பிலக்கியம் ஆகிய கட்டுரை நூல்களும் ஆண் காக்கை என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. காலவெளிக் கதைஞர்கள், தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும், பெருமாள்முருகன் இலக்கியத்தடம், பத்ம வியூகம் ஆகிய தொகைநூல்களும் இவரது பங்களிப்புகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.