நிலைப்பேழைகள்

வனது குடும்பம் நகரத்தில் புதிதாக வீடு கட்டிக் குடிபெயர்ந்தபோது கிராமத்து வீட்டில் பிரதானமாக விட்டுவிட்டு வந்தவை: நின்ற வாக்கிலான, அறுங்கோணக் குறுக்குவெட்டுத் தோற்றம் கொண்ட ஒரு பெரிய மரப்பீரோ, படுக்கை வாக்கிலான – முன்பக்கம் இரண்டு அறைகளும் ஓர் இழு மேஜையையும் உள்ளடக்கிய – இன்னொரு மரப்பீரோ, கம்பீரமான ஒரு நாற்காலி, ஓர் ஊஞ்சல் மற்றும் அவனது அம்மா.

விவசாயத்தைப் பார்த்துக்கொள்ள அவனது அம்மா அங்கேயே தங்க வேண்டியிருந்தது. நகரத்து வீடு இரண்டு படுக்கை அறைகளும் ஒரு விசாலமான வரவேற்பறையும் கொண்டது என்றாலும் கிராமத்திலிருந்த பீரோக்கள் உட்பட எதையும் இந்த வீட்டிற்கு எடுத்துவரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும். ஏற்கெனவே ஓர் இரும்பு பீரோ, அலமாரிகள் எல்லாம் பொருட்களை வைக்கப் போதுமானதாக இருக்கும்போது கிராமத்திலிருந்து அவற்றைக் கொண்டுவந்தால் இடத்தை அடைத்துக்கொள்ளும் என்பது அவர்களது கட்சி. அதில் நியாயம் இருப்பதை உணர்ந்திருந்தாலும் அவனது அப்பாவால் செய்யப்பட்ட விலைமதிப்பற்ற அந்தப் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வருவதில் பெரிய மனவருத்தமும் குற்ற உணர்ச்சியும் அவனுக்கு இருந்தன.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வயது முதிர்வாலும் உடல்நலக் குறைபாட்டினாலும் அவன் அம்மா இறந்து போக, நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் அந்த வீடும் அதிலிருந்த மேற்சொன்ன வஸ்துக்களும் அங்கேயே கைவிடப்பட்டன.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த கான்கிரீட் வீட்டின் மேற்கூரையில் – அந்தக் காலக்கட்டத்தில் மஞ்சப்புல் கூரைகளை அகற்றிவிட்டு காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்று போடப்பட்ட பெரும்பாலான வீட்டு கான்கிரீட் கூரைகளும் – கம்பிகள் துருப்பிடித்து இற்று விழுந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்க் கசிவால் அந்தப் பீரோக்களும் இதரவும் பாழாகிக்கொண்டிருப்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. கிராமத்திற்குச் செல்ல நேரிடும் ஒவ்வொரு முறையும் அவற்றைப் பார்த்து வருத்தத்துடன் திரும்புவான். வீட்டின் சாவி தொலைந்துவிட, வீடு திறக்கப்படாமலேயே சில ஆண்டுகள் விடப்பட்டன. இதற்கிடையில் அந்த ஊஞ்சலை மட்டும் மனைவி மக்களின் ஒப்புதல் பெறாமலேயே நகரத்து வீட்டுக்குக் கொண்டுவந்து மாட்டிவிட்டான். இது அவர்களுக்குப் பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

அவனது மகனுக்குத் திருமணம் முடிந்திருந்த நிலையில் புதுமணத்தம்பதிகளும் அவனது மனைவியும் கிராமத்து நிலத்தையும் வீட்டையும் பார்க்கச் சென்றார்கள். திரும்பி வந்த அவர்கள் ஒரு புது முடிவை எடுத்திருந்தார்கள். ‘பீரோக்களையும் அந்த நாற்காலியையும் கொண்டுவந்துவிடலாம்’ என்ற, அவனை ஆச்சர்யப்படுத்திய முடிவுதான் அது.

அவர்கள் சொன்னார்கள், கரையானால் பலவீனப்பட்டுக் கிடந்த கதவைத் தள்ளித் திறந்து பார்த்தபோது நாற்காலி காணாமல் போயிருந்தது. விசாரித்ததில் அந்த நாற்காலி அதே ஊரில் வாழ்க்கைப்பட்டுப் போயிருந்த அவனது சகோதரி வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதை அவன் மனைவியால் ஜீரணிக்க முடியவில்லை. அடுத்ததாகப் படுக்கை வாக்கிலான பீரோவின் மேற்பலகை கரையானால் முக்கால்வாசி தின்னப்பட்டிருந்தது. அது மாம்பலகை என்பதால் எளிதாகச் சாப்பிட முடிந்த கறையான்களுக்கு, கீழ்ப்பகுதி முழுமையும் கடினமான இருவட்டு மரத்தால் செய்யப்பட்டிருந்ததால் ஒன்றும் செய்யமுடியாமல் விட்டுவைத்திருந்தன. ஆனால் நின்ற வாக்கிலான பீரோ முழுவதும் இருவட்டு மரத்தால் செய்யப்பட்டிருந்ததால் சேதமின்றி இருந்ததை அவர்கள் எடுத்து வந்திருந்த செல்போன் புகைப்படங்கள் காட்டின.

பாழ்பட்டிருந்த பீரோவுக்குக் கரையான் கொல்லி அடித்து, புதிய மேற்பலகை போட்டு அவற்றை எடுத்து வந்து புதிய வீட்டில் வைக்கச் சொல்லிவிட்டு அவனது மகனும் மருமகளும் மாநகருக்குச் சென்றுவிட்டார்கள். அங்குதான் அவனது மகன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்களின் இந்தத் திடீர் மனமாற்றம் அவனை மகிழ்ச்சிப்படுத்தியது என்றாலும் அந்தப் பீரோவை நேரில் சென்று பார்த்தபோது அவனால் அந்த அழிவை ஜீரணிக்க முடியவில்லை. காலம் கடந்த அவர்களின் முடிவு அவனுள் வெறுப்பை ஏற்படுத்தியது.

பெரிய பீரோவும் அந்த நாற்காலியும் அவன் அப்பா செய்த காலத்தில் அவன் பிறந்திருக்கவில்லை. ஆனால் அவர் இறப்பிற்கு முன்னால் அந்தப் படுக்கை வாக்கிலான பீரோவைச் செய்யும்போது அவனுக்கு ஆறு வயது. பீரோவைச் செய்ய அவர் காகிதங்களில் வரைந்திருந்த வரைபடங்கள் அவனை ஈர்த்தன. அவற்றை அவன் நகல் செய்து வரைந்த ஓவியங்கள்தான் அவனைப் பிற்காலத்தில் ஓர் ஓவியனாகவும் ஆக்கியிருந்தது.

அவன் சகோதரி எடுத்துச் சென்றிருந்த நாற்காலி ஒரு நகல்தான். அதே போல அதற்கு முன்பாக அவன் அப்பா செய்திருந்த நாற்காலிதான் முதன்மையானது; தனித்துவமானது. அவர் ஒரு தீவிர திமுக தொண்டர் என்பதால், தேர்தல் பிரச்சாரத்துக்காகக் கிராமத்துக்கு வந்திருந்த அறிஞர் அண்ணா, மேடையில் அமர்வதற்காக அந்த நாற்காலியை அவர் எடுத்துச் சென்றிருந்தார். அதன் காரணமாகவே மகத்துவம் பெற்ற அந்த நாற்காலியை உரிமையாக்கிக்கொள்ளப் பிரமுகரான அப்பாவின் நண்பர் ஒருவர் விரும்பியதால், மறுக்க முடியாமல் அவருக்கே கொடுத்துவிட்டு வந்ததாக அவனது அம்மா சொல்லக் கேட்டிருக்கிறான்.

பிடிவாதமாக அவன் முன்பு மீட்டு வந்திருந்த ஊஞ்சல் அவன் படுப்பதற்காகவே அவன் அப்பா செய்து கொடுத்தது. அம்மை போட்டு உடல் எரிச்சல் காரணமாகத் தூளி கட்டிப் போடச் சொல்லி அவன் அடம்பிடித்ததால், அவர் செய்து கொடுத்த மாமர ஊஞ்சல்தான் அது. இந்த ஊஞ்சல் பலகையும் கரையானால் தின்னப்பட்ட பீரோவின் மேற்பலகையும் ஒட்டிப் பிறந்தவை.

பீரோக்களை நகருக்கு எடுத்து வரும் திட்டம், மழைக்காலம் தொடங்கியதால் தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவனுக்கு முன்னால் இந்தத் திட்டம் மலைபோல நின்றது. காரணம் அந்தப் பீரோக்களை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வருவதே சவாலான காரியம். அதற்கு நிறைய ஆட்களின் உதவி தேவை. கிராமத்திலிருந்து நகரத்துக்குக் குடிபெயர்ந்து வந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் கிராமத்துக்கும் அவனுக்குமான உறவில் பெரிய இடைவெளி விழுந்திருந்தது. ஆட்களைத் திரட்டுவது அவனால் முடியுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. அவன் அம்மா இருந்தபோது இது போன்ற பெரிய வேலை எல்லாம் எளிதில் சாத்தியமாகியது. கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும் பம்ப்செட் குழாயின் புட்வால்வுக்கு லெதர் மாற்றுவதாக இருந்தால் அதை மேலே கொண்டுவர வேண்டும். அதற்கு ஏழெட்டுப் பேராவது தேவைப்படுவார்கள். அவன் அம்மா அவர்களை எப்படியாவது அழைத்துவந்துவிடுவாள். மூன்று பக்கம் வடக்கயிறு போட்டு அதை அவர்கள் இழுத்து வெளிக்கொணரும் சாகசத்தை அவன் அருகிலிருந்து பார்த்திருக்கிறான். அவன் அப்பா இறந்த பிறகு விவசாயத்தை நிலைப்படுத்தியதிலும் அவர் விட்டுச் சென்ற கடன்களை அடைப்பதிலும் அவளுக்கிருந்த மனவுறுதி இப்போதும் அவனுக்கு மலைப்பாகவே இருக்கிறது.

அவன் மகன் எப்போதாவது செல்போனில் அழைத்து ‘இன்னும் பீரோக்களைக் கொண்டு வரவில்லையா?’ என்று கேட்டுக்கொண்டிருந்தான். இதில் ஆர்வம் காட்டிய அவர்கள் ஊருக்கு வரும்போது அசிரத்தையுடன் இருந்துவிட்டுக் கிளம்பிச்சென்றார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டு வெளியே செல்வதற்கே அடுத்தவர்கள் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருந்த அவன்தான் அதைச் செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தது போலத் தெரிந்தது.

அவன் இதற்காக ஒரு திட்டம் வகுத்தான். அந்த நகரத்தில் செப்டிக் டேங்குக்கான கற்பலகைகளைக் கொண்டு வந்து பொருத்தும் குழுவை அவனுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள்தான் இந்தப் புதிய வீட்டுக்குக் கற்பலகைகளைக் கொண்டு வந்து பாவியவர்கள். அவர்களிடம் பேசினான். அவனுடைய திட்டம் இதுதான்: டெம்போவுடன் கிராமத்துக்குச் சென்று அவர்கள் பீரோக்களை வீட்டிலிருந்து வெளியில் கொண்டு வந்து, அதில் ஏற்றி புதிய வீட்டின் முன் இருக்கும் காலி இடத்தில் இறக்கி வைத்துவிட வேண்டும். அடுத்ததாக அவன் பெயிண்டர்களை அழைத்து வந்து கரையான் தின்ற பீரோவைச் சுத்தம் செய்து கரையான் கொல்லி அடித்த பின் ஆசாரியைக் கூட்டி வந்து புதிய பலகை போட்டு, பெயர்ந்திருக்கும் கதவுகளைச் சரியாகப் பொருத்த வேண்டும். துருப்பிடித்து பழுதாகியிருந்த எல்லா பூட்டுகளையும் அகற்றிவிட்டுப் புதிய பூட்டுகளைப் போட வேண்டும்.  மீண்டும் பெயிண்டர்கள் வந்து அவற்றுக்கு வண்ணம் அடிக்க வேண்டும். காய்ந்ததும் அந்தக் குழு திரும்ப வந்து இரண்டு பீரோக்களையும் உள்ளே கொண்டு போய் வைத்துவிட வேண்டும்.

அதற்கு அவர்கள் ஒரு பெரிய தொகையைக் கேட்டார்கள். அதில் கொஞ்சம் குறைத்துப் பேசி எப்போது கொண்டுவரப் போகலாம் என்பதைப் பிறகு தெரிவிப்பதாகச் சொல்லியிருந்தான்.

இத்திட்டத்தை அவன் மகனிடம் சொன்னபோது அவன் மறுத்தான். பீரோக்களை அதே நிலையில் வீட்டுக்குப் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தால் கறையான்கள் வீட்டுக்குள் புகுந்து எல்லாவற்றையும் சேதப்படுத்தத் தொடங்கிவிடும் ஆபத்து இருக்கிறது என்றான். அதனால் கிராமத்து வீட்டுக்கு வெளியே பீரோக்களை வைத்து, சுத்தம் செய்து கரையான் கொல்லி அடித்த பிறகே இங்குக் கொண்டுவர வேண்டும் என்று உறுதியாகக் கூறினான். அதற்குப் பதிலளித்த இவன் கிராமத்தில் ஆட்களைத் திரட்ட என்னால் இப்போது ஆகாது நீ வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான்.

திட்டம் தற்போதைக்குக் கைவிடப்பட்டதில் அவன் நிம்மதியை உணர்ந்தான். இந்த உணர்வு புதிதாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இதற்கு உடல் சோர்வு, இயலாமை ஒரு காரணம் என்றாலும் அந்தப் பீரோக்களை இந்த வீட்டில் கொண்டு வந்து வைத்த பிறகு ஏற்படும் மாற்றம் எத்தகைய மனநிலையை ஏற்படுத்தும் என்பதை யோசித்தபோது சாதகமான எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. பெரிய பயன் எதுவும் தராத அவை அவனைத் தொந்தரவான சிந்தனைக்கு அழைத்துப் போய்விடுமோ, தினம் தினம் தன்னைப் புதுப்பித்து வாழ்வதற்கான உந்துதலைப் பெற்றுக்கொண்டிருக்கும் அவனை, அவை சாவை நோக்கித் திருப்பிவிடுமோ என்றும் அஞ்சினான்.

மனரீதியான இந்தப் பின்வாங்கல் சரியா தவறா என்று அவனுக்குப் புரியவில்லை. அவனது அப்பா சிருஷ்டித்த, அவரது நினைவுகளைத் தாங்கி நின்ற, அவனது பால்யத்தோடு பயணம் செய்த அவை பாழாவதை அவன் மனம் ஏற்க மறுத்தாலும் இப்போது ஏன் இந்த நேர்மாறான சிந்தனை? இதற்காகவே அவற்றிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்கத் தோன்றியது.

இதனால் கிராமத்துக்குப் போவதையே தவிர்த்து வந்தான். வீட்டின் பெரிய வரவேற்பறையின் வாசலில் நின்று பீரோக்கள் வைக்கப்படப்போகும் இடத்தைச் சங்கடமான ஓர் உணர்வோடு பார்ப்பான். தனித்து வந்துவிட்ட இந்த ஊஞ்சல், அவன் அதில் உட்கார்ந்து அசையும்போது எழுப்பும் கிரீச்சிடும் சப்தம் கெஞ்சலுடன் ஒலிக்கும்.

இதற்கிடையே அவன் சகோதரி போன் செய்து, ‘ பீரோக்களைச் சீக்கிரம் எடுத்துட்டு போயிடு கண்ணு. அந்தக் காலத்துல அப்பா எப்படியோ செய்துட்டாரு. எத்தனை லட்சம் குடுத்தாலும் இப்ப நம்மால செய்யமுடியுமா சொல்லு? பாழாயிடும்ன்னுதான் நாற்காலிய வீட்ல கொண்டு வந்து வச்சிருக்கேன். போகும்போது அதையும் எடுத்துகிட்டுப் போயிடு கண்ணு‘ என்றாள்.

தற்போது ‘பீரோ’ என்ற சொல் தனக்குள் தோன்றினாலும் யாரிடமிருந்தாவது கேட்டாலும் எதோ ஒருவிதச் சோர்வை அவன் மனம் உணர்ந்தது.

இந்த மனக்குழப்பத்துக்கு முடிவு கட்டும்விதமாக அவன் மனைவியிடம் முடிவாகச் சொல்ல உள்ளே வந்தான். அப்போது அவள் ஊஞ்சலில் உட்கார்ந்து தொலைகாட்சிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“பீரோக்களை எடுத்து வர என்னால் முடியாது. அதில் இப்போது எனக்குப் பெரிய விருப்பமோ ஆசையோ இல்லை. உன் மகன் சொல்வதுபோல, அங்கேயே சரி செய்து, நீங்களே ஆட்களிடம் பேசிக் கொண்டுவந்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னான். அவன் மனைவி இதைக்கேட்டதும் சடாரென்று ஊஞ்சலிலிருந்து எழுந்து வேகமாக நடந்து அறைக்குள் போய்விட்டாள்.

வெறும் ஊஞ்சல் இலேசாக ஆடுவதைச் சற்றுநேரம் பார்த்திருந்துவிட்டு மீண்டும் வெளிவாசல் திண்ணைக்குத் திரும்பினான் அவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here