1
சிறிய இடங்களின் நாற்காலிகள்
சிரமமே இல்லை.
சின்ன வேலை
அல்லது
சிறிய உதவிதான் என்றாள்.
எங்கும், எப்போதும்
எடுத்துப்போட்டு வேலை பார்ப்பது மாதிரி வாழ
எனக்கோ வரமாட்டேனென்கிறதை
நான் சொன்னோனில்லை.
ஒரு சோம்பேறித்தனத்தை இன்னொரு
சோம்பேறித்தனத்தால்தான் வெல்ல முடியுமெனப்
போட்டது போட்டபடி கிடந்தேன்
திடுமென
மனம் மாறு செய்ய
ஒரு சுத்தப் புலுத்தியானேன்.
‘நீ கொடுத்து வைத்தவள் தான்’ என்கிற தொனியில்,
இரவு படுக்கை விரிக்கும் முன்
கூடத்தை விளக்கிக்கூட்டினேன்
அவள் உட்கார்ந்திருந்த
சிறிய
சிறிய இடங்களின் நாற்காலிகளை
ஒவ்வொன்றாய்
எடுத்து
எடுத்து
அடுக்கி
அடுக்கிக் கொண்டிருந்தேன்…
அடுக்கி
அடுக்கி…
2.
எதுவுமே நிகழாத வெறும் நாட்களைச் சேகரித்து வந்தேன்
“இதென்ன பழக்கம்?”
என்றவரிடம்
“நல்லவேளை,
எதுவுமே நிகழாத
எளிய நாட்களைச் சேகரித்து வந்தேன்”
என்றேன்.
3.
சிலுமிஷ ஆமை
இரண்டு டென்ஷன்கள்,
தலைவிரிக்கோலம் பூண்டும்
சட்டையைக் கிழித்துக் கொண்டும்
சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது
பெரியவள் கேட்கிறாள்:
இங்கிருந்த சின்னஞ்சிறு சிலுமிஷம் எங்கே பாப்பா…?
சின்னவள்:
இப்படித் தான் அக்கா
நகர்ந்துகொண்டே… போய்டுது.
4.
பல்லில் சிக்கிய துகளை
நாள் முழுதும்
துழாவித்
துழாவித்
துழாவினேன்
ஒரு தற்கணம்;
வெற்றிகரமாகத்
துருத்தி எடுத்துத் துப்பினேன்
அவ்வளு சிறிதாய்
நானே போய் விழுந்தேன்
பரந்த வெளியில் .
5.
எவ்வளவு தான
கீழே என்றாலும்
அந்தக் கீழேவுக்கும்
ஒரு கீழேவுக்கு
நானொரு “மேலே” என்றால்
நாமெல்லாம்
வருவதெப்படி மேலே?
——————————————————
காலக் கிரமம்
காலம் கிழித்து வைத்த வரிசை மாதிரி ஒன்றில்தான்
முன்னேறி வந்தேன்
அது தந்த உற்சாகம்தான்
இந்த
அடுத்த கட்டம்
அல்லது
அடுத்த விளையாட்டில் இறங்கினது
இது கோட்டாக்களால் ஆன நத்தையொத்த வரிசை
மேலும்,
கிரமம் நெடுக
சூது வேறு கவ்வுமென
நம்பி
நம்பி
நம்பினேன்
இந்த அழுகுணி ஆட்டம் வேண்டாம் உனக்கென அம்மாதான் முதலில்
அழைத்தாள்
அப்போது அம்மாவுக்குக் காலமில்லை
பிறகு
மனைவி,
எனக்கிருந்தது காலம்.
அடுத்து மகள்
ம்ம்… ஏதோ ஏறக்குறைய
பனிப்பொழுதில் ஒரு ரோஜாவனம்
குலுங்குதற் போல் வருவது பேத்தியேதான்
இவ்வளவு சீக்கிரம்
சம்பவ இடம் நோக்கி விரைவாளென
நினைக்கவே இல்லை,
கையைப் பிடித்து இழுக்கிறாள்
சற்று சற்று என
வலித்து வலித்து அமர்த்திப் பார்க்கிறாள்
ஒரு நிமிடம்
ஒரே நிமிடம் குழந்தாய்
இதோ வந்துவிடுவேன்.
ஹிட்டு
பாதி உடல் குந்தி
பாதி உடல் நின்று
நெளிந்து வனையும்
சர்ப்ப உடல் வாகு
சிலுவையென அறையப்பட்ட
துணி உலர்த்தும் கொடி மாதிரி தளர்தளர்ந்த முதுகுத்தண்டு
பின்னும்
இன்னும்
பணிகிற தோள்கள்
வனைந்து வனைந்து
காட்டுகிற குண்டி
அதில் பெருமிதத்துடன்
இரவு பகலாக மணியாட்டிக்கொண்டிருக்கும் வால்
வேறென்ன வேண்டும்
குமாஸ்தாவே
அளவெடுத்தார்போல் ஆற்றும்
உங்கள் ஊழியம் ஹிட்டு சார்.
–ச. அர்ஜூன்ராச்.





மிக அருமையான கவிதை,,வாழ்த்துகள்,,