சுருட்டை

ராட்சதப் பருந்து போன்ற பறங்கிப் போர்க்கப்பலிலிருந்து முதலாவது தீக்குண்டு ஒரு மாலையில் தான் முழங்கி வெடித்தது. மாடுகள் பாய்ந்து துள்ளி வாலைக் கிளப்பியபடி ம்மா எனக் கத்தியபடி ஓடின. ஆடுகள் ம்மே எனக் கூக்குரலிட்டன. ஆகாயத்திலிருந்து விண்மீனொன்று விழுந்து விட்டதென அதிர்ந்த நான் கையில் நாகியைத் தூக்கிக் கொண்டு காட்டின் திசையை நோக்கி ஓடினேன். காகங்களும் கொக்குகளும் வெளவால்களும் அலையலையென எழுந்து வானை நிறைத்தன. சிறகடிப்புகளின் உரசல்கள் தேகத்தை விதிர்க்கச் செய்தன. எண்ணற்ற சிறு பறவைகள் மரங்களின் கிளைகளிலிருந்து எழுந்து மிதந்தன. தீவுக்கு அப்பால் பருத்தித் தீவை நோக்கிப் பறந்தன. நான் எங்கள் தீவின் அடர்காட்டின் ஊடே மணலும் பாறையுமான ஒற்றை வரிப் பாதையில் கால்களில் முட்கள் தைக்க ஓடினேன். இருட்டின் கன்னங்கரிய தோலை உரித்தபடி என் கால்கள் நிற்காது சென்று கொண்டிருந்தன. ஈச்சம் பற்றைகளின் முட்கள் என் சேலைத் துண்டைப் பிடித்து இழுத்தன.

அப்பால் தீவின் விளிம்பிற்கு ஓடி கரிய பளபளப்புடன் ஒளிரும் பாறைகளின் இடையில் நாகியை மடியில் வைத்துக் கொண்டு ஒளிந்தேன். காதைக் கூச வைக்கும் வெடியொலிகள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ஆகாயம் நீலக் கடலென மினுங்கிக் கொண்டிருந்தது. சர்ப்பங்களின் கண்களைப் போன்ற நட்சத்திரங்களை விடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ம்மா பசிக்கிது” என அரைத் துயிலில் நாகி சிணுங்கினாள்.

பாறைகளுக்கு அருகில் சோற்றுக்கற்றாளைகள் செறிந்திருந்தன. பறித்து வந்து உரித்து ஏழு முறை கடல்நீரில் கழுவிச் சிறு துண்டை அவளது வாயில் வைத்தேன்.

“ப்ச்சக்” எனும் சத்தத்துடன் துப்பினாள்.

திரும்பவும் மெல்லியதாக நறுக்கி நாவில் வைத்தேன். வழுக்கிக் கொண்டு போனது. அலை நெளிவுகளெனச் சுருண்ட அவளது முடி ஒளியில் நனைந்து கொண்டிருந்தது. மேகங்களுக்கு உள்ளிருந்து உதிப்பது போல கிழக்கிலிருந்து ஒளி கசியத் தொடங்கியது. பறவைகள் தீவுக்குத் திரும்பவில்லை. தொலைவில் பருந்துகள் எழுந்து மிதப்பதைப் பார்த்தேன்.

கருக்கிருட்டில் மாடுகளை எவரோ விரட்டிச் செல்லும் ஒலி கேட்டது. அஞ்சியவை போல அவை கத்திக் கொண்டிருந்தன. நான் ஒளிந்திருந்த பாறையிடுக்கில் அலை வந்து நனைத்தது. துண்டை உயர்த்திக் கொண்டு நாகியைத் தூக்கினேன். சுருட்டையொன்று வழுக்கியபடி கரிய பாறையில் ஓடியது. தகதகவென எரிந்து கொண்டு செல்லும் அதன் விரைவைப் பார்த்தேன். நாகி “ம்மா..” என்று சுருட்டையைக் காட்டினாள்.

அவள் பிறந்தது முதல் எங்கள் தீவின் சர்ப்பங்களுடன் தான் வாழ்கிறாள். அவளுக்கு அணுக்கமான முதல் மிருகங்கள் அவை தான். குட்டிச் சர்ப்பங்களைத் துரத்திக் கொண்டு ஓடுவாள். தந்தை அவளைப் பார்த்து “பார்த்தியேடி, என்ர பேரப்பிள்ளை எப்பிடி இருக்கிறாள்! என் குஞ்சு நாகமே, இங்க வா” எனச் செல்லம் கொஞ்சுவார். அவரிலிருந்து வீசும் புகையிலை நாற்றம் நாகிக்குப் பிடிக்காது. கையை நீட்டிக் கவனம் காட்டுவாள். தந்தை பெரிய ஈர்கள் தெரியச் சிரிப்பார். முகத்தில் பரவிய திருநீற்றுக் குறி பத்திவிரித்த நாகத்தின் கழுத்தென ஒளி கொண்டிருக்கும்.

தீவின் ஒரே விஷக்கடிப் பரியாரி எனது தந்தை. பரியாரிக்குரிய எந்த மரியாதையும் அவருக்கு இல்லை. காட்டின் ஓரத்தில் சர்ப்பங்களின் நிழலில் நாங்கள் வாழ்ந்தோம். எங்கே சர்ப்பம் தீண்டினாலும் எங்கள் குடிலின் திசைக்கே ஓடி வருவார்கள். பெரிய மூங்கில் தடிகளை வைத்து முருகைப்பாறைகளை அடுக்கி மண்ணைக் குழைத்துச் சாந்தாக்கி தந்தையும் அனலனும் கட்டியது. பனையோலைகளும் தென்னோலைகளும் போட்ட கூரை. கிடுகுவேலிக்கு அருகில் இரண்டு மாடுகளும் ஐந்து ஆடுகளும் வளர்த்தோம். வைத்தியம் பார்த்தால் பத்துப் பிடி நெல்லோ காற் கூடை மீனோ தான் வரும்படி. சில சமயங்களில் மூன்று மாம்பழங்கள் அல்லது ஒரு முழுத்தோகை புகையிலை கூடத் தருவார்கள்.

தந்தையின் விஷக்கல்லுக்குச் சக்தி அதிகம். சர்ப்பங்களை வசியம் செய்யும் மந்திரங்களை அறிந்தவர் எனச் சாத்திரி சொல்வார். அவரது நோக்குக்குச் சர்ப்பங்கள் அசைவதைச் சிறு பிள்ளையிலிருந்தே பார்த்திருக்கிறேன். நோக்கே மகுடியென ஆனவர். சர்ப்ப மொழியில் பேசக் கூடியவர். தந்தையிடமிருந்து மகனுக்குச் செல்லும் அந்தச் சர்ப்ப மந்திரங்கள் அவருடன் முடியப் போகின்றது எனச் சொல்லிக் கொண்டிருப்பார். ருதுவான பெண்களுக்குச் சர்ப்பம் கட்டுப்படாது. குருதியில் உயிர் தரும் ஓர் உயிருக்குச் சர்ப்பம் காவல் மட்டும் தான். அதனால் தான் அது மண்ணைக் காக்கிறது. பாதாளத்திற்குக் கட்டுண்டிருக்கிறது.

ஆனால் தீக்குண்டுகள் பொழிந்த அந்த இரவுடன் சிரட்டை போன்ற எங்கள் சிறிய தீவின் சரித்திரம் முற்றிலும் மாறியது.

கூட்டமாக இழுத்துச் செல்லப்படும் குடிகளுடன் நானும் நடந்து சென்றேன். சுருட்டையின் நிறமான வீரர்கள் கைகளில் துப்பாக்கிகளுடன் எங்களை இழுத்துச் சென்றனர். அவர்களின் தலைகளில் சுருட்டையின் தலை போல முக்கோணக் கவசங்கள் ஒளிர்ந்தன.

கூனியபடியே நடத்திச் செல்லப்பட்ட குடிகள் கல்லாசனத்தை நிமிர்ந்து பார்க்கக் கூடாது என்று அடித்து இருத்தப்பட்டனர்.

அனலனின் வலது கை நண்டின் காலைப் போல முறிந்து தூங்கியது. அதைப் பார்த்ததும் என்னை அறியாமல் நாகியைப் போட்டு விட்டுப் பாய்ந்து ஓடிப் போனேன். துப்பாக்கியின் அடிப்பக்கத்தால் என் மார்பில் அடி விழுந்தது. மண்ணில் சரிந்து விழுந்தேன். வாயிலிருந்து இரத்தம் ஓங்காளித்துக் கொட்டியது. மார்பைப் பிடித்துக் கொண்டு அடித்தவனைப் பார்த்தேன். சீறும் சுருட்டையின் உக்கிரமான நெளிவு போல முகத்தை வைத்திருந்தான். அவனுக்கு அப்பால் உதிக்கும் சூரியனின் ஒளி முகத்தில் தேமலைப் போலப் படர அமர்ந்திருந்தாள் டொன்னா கிளாரா. இளம் பெண் சுருட்டை. அவள் கடலலைகளின் மீது சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பதை போலிருந்தாள். இரு புறமும் ஈட்டிகளை ஏந்திய சுருட்டை நிற வீரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

கிளாரா அங்கிருக்கும் எவரையும் உற்றுப் பார்க்கவில்லை. தீவின் எழுநூறு குடிகளில் ஒருவர் மிச்சமில்லாமல் அங்கே முழந்தாளில் நின்றனர். சுருட்டை நிறமான இருபது வீரர்கள் கைகளில் ஏந்திய துப்பாக்கிகளைக் குடிகளை நோக்கி நீட்டிக் கொண்டிருந்தனர். இருபதுக்கும் மேலே வேட்டியைத் தார்ப்பாய்ச்சிகக் கட்டிய கரிய லசரின்கள் ஈட்டிகளை ஏந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் குடிகளைக் கணக்கிட்டு கணக்கம் பிள்ளை மாணிக்கம் குறிப்புகளை அனுப்பினான். அவர் தனது ஓலையில் ஒவ்வொன்றையும் குற்றினார். கைகளில் பிடிகாப்பிடப்பட்ட ஊரின் தலையாரி சுப்பிரமணியர் கல்லாசனத்தின் அருகில் இரத்தம் கண்டிய முகத்துடன் விழுந்து கிடந்தார்.

சூரியன் மெல்ல ஏறி வந்து தீவின் பனை மரங்களின் நிழல்களை கல்லாசனத்தின் மீது விழுத்தியது. நீளும் கைகளைப் போல அவை கிளாராவின் காலடிகளை நெருங்கிய போது அவள் எழுந்து கொண்டாள். கணக்கம் பிள்ளை இடுப்பை வளைத்து குடுமி காற்றிலாட கிளாராவின் முன்னால் வந்து “உத்தரவு வேணும் தாயே” என விநயமான குரலில் கேட்டான். அந்த உடல்மொழியைப் புரிந்து கொண்டவள் போல “போ” என புறங்கையை ஆட்டினாள். அவளது கண்களில் மனிதர்களின் மீது கூர்மையான விலக்கமிருந்தது. தீவின் ஒவ்வொரு திசையையும் கண்களால் அளைந்து கொண்டிருந்தாள்.

முரசுக்காரன் சடையன் எழாது படுத்திருந்தான். அவனது விரல்கள் மண்ணில் மடங்கியிருந்தன.

குரலை உயர்த்திய கணக்கம் பிள்ளை “இத்தால் அனலை தீவின் சகல குடிகளுக்கும் அறியத் தருவது என்னவென்றால், இன்று முதலாம் நம் தீவு மேன்மை தங்கிய பேரரசி டொன்னா கிளாரா அவர்களின் ஆட்சியின் கீழ் ஆளப்படுகிறது. யாழ்ப்பாணத்தரசு வீழ்ந்தது. போர்த்துக்கீசிய அரசு உதயமாகியிருக்கிறது. நேற்று மாலையே தீவின் நாற்புறமும் இருந்த பிசாசுகளின் சிலைகளும் அவர்களின் ஆலயங்களும் எரியூட்டப்பட்டன. இன்று முதலாக நமது தந்தை இயேசு பிரான். தாய் மேரியம்மாள். ராணியின் புகழும் கருணையும் ஏழைகளாகிய எங்களின் மீது இருப்பதாக. அனைவரும் புதிய சட்ட நியமங்களுக்கு அமைய ஒழுகி அவரை ஏற்று வாழ்க ராணி என்று ஒலியெழுப்புவோமாக” என்றான்.

கையில் மண்ணை அளைந்து கொண்டிருந்த நாகி ஒரு கல்லைத் தூக்கி கிளாராவை நோக்கி எறிந்தாள். சுருட்டையின் நிறத்தில் கிளாராவைப் பார்த்ததும் அவளைப் பெரிய சுருட்டை என நினைத்திருப்பாள். கிளாரா அவளைப் பார்ப்பதற்கு முன்னரே நாகியைப் பாய்ந்து பிடித்து கைகளில் ஏந்தியபடி இரத்தம் உலராத உதடுகளால் “வாழ்க ராணி! வாழ்க ராணி” என முழந்தாளில் நின்றபடி கூவினேன். குடிகளும் நிமிராமல் சேர்ந்து கூவினர். அலைகளின் மீது பட்டு அந்தக் குரல்கள் காற்றை அறைந்து முழக்கமென எழுந்தன. ஓங்கிச் சடைத்த பனைமரங்களின் ஓலைகள் சீறுமொலி எங்களின் பின்னால் கேட்டுக் கொண்டிருந்தது.

கிளாராவின் ஊதா நிற நீண்ட கவுன் கல்லாசனத்திலிருந்து வழிந்து கொண்டிருந்தது. அவளது முகம் உறைந்து பாறை போலிருந்தது. கழுத்தில் வெண்ணிற விசிறி போன்ற துண்டைக் கட்டியிருந்தாள்.

பழுப்பு நிறமான ஆந்தைக் கண்கள். சுருட்டையின் வரிச்செதிள்கள் போன்ற தோற்புள்ளிகள். கன்னத் தசைகள் கள் அப்பம் போல மின்னின. கையில் தங்க நிறமான சிலுவையொன்றைப் பிடித்திருந்தாள். சுருட்டைகளின் தலையில் அப்படி ஒரு குறியிருக்கும். ஐந்து போர்த்துக்கேய சேவகிகளும் இரண்டு காப்பிரிச் சேவகிகளும் அவளது குதிரை வண்டிலின் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். கரிய நிறத்தில் துடிப்பான குதிரை கால்மாற்றிக் கொண்டு நின்றது. அவர்களில் ஒருத்தி ஓடி வந்து கிளாராவின் கையினருகில் குனிந்தாள். அவளது சுருக்கமான குறிப்புகளைச் செவியால் கேட்டவள் திரும்பி ஓடிச் சென்று வண்டிலைத் திறந்து ஒரு கண்ணாடிக் கிண்ணத்தையும் மதுப் புட்டியையும் கொண்டு வந்தாள். கிளாரா கிண்ணத்தைக் கையில் பிடித்தபடி குருதிச் சிவப்பான திரவத்தை வார்த்துக் குடித்தாள்.

குருதி குடிக்கும் புதிய ராணியை  மிரளும் கண்களால் பார்த்தோம். அவளது தீர்க்கமான அச்சமற்ற பார்வை குடிகளுக்குப் பழக்கமில்லாதது. எங்கள் குடில்களில் வாழும் தெய்வங்களின் சிலைகளை விட அவள் பல மடங்கு பிரமாண்டமாக இருந்தாள். ஆனால் நான் அவளை ஒரு தடித்து உயர்ந்த சுருட்டை என எண்ணிக் கொண்டேன். ஒவ்வொரு மனிதரையும் சர்ப்பங்களுடன் அன்றி வேறு எவற்றுடனும் இணைத்து என்னால் விளங்கிக் கொள்ள முடியாது. 

ஒவ்வொரு ஆறு நாட்களுக்கு ஒருமுறை கிளாரா அந்தக் கல்லாசனத்தின் மீது அமர்ந்து குடிகளுக்கு நீதி வழங்கினாள். அவளது நீதி குடிகளுக்குப் புதினமாய் இருந்தது. அவள் மகிழ்ச்சியாய் இருந்தால் இணக்கம் காணப்படும். முறையிடுவோரும் எதிராளியும் இணங்கும் ஒரு புள்ளியை அவளே கண்டடைவாள். அவளது சினமோ இரு தரப்பையும் எரிக்கும். கசையடிகளும் கற்பாறையில் வெய்யிலில் கிடக்கவும் அவள் தண்டனைகளை வழங்கினாள்.

அவள் எங்கள் குடிகளைக் கொண்டு தனது மாளிகையைக் கட்டிக் கொண்டாள். ஒவ்வொரு குடும்பத்திலுமிருந்து ஆண்கள் ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை அங்கே ராணி காரியம் செய்யப் பணிக்கப்பட்டார்கள். கணக்கம் பிள்ளை மேற்பார்வை செய்தான். அவள் மாளிகையைக் கட்டி முடித்த போது அது கதைகளில் கேட்ட ஆலயம் போல இருந்தது. அப்படியொன்றை எங்கள் தீவு கனவிலும் காண முடியாது. ஆனால் அப்படியொன்று எங்களின் கண் முன்னால் எங்களின் கரங்களால் வெட்டப்பட்டு எங்களின் வியர்வையால் சாந்திட்டு கட்டி முடிக்கப்பட்டதை வியப்புடன் பார்த்தேன். அனைத்தையும் அவள் எங்கள் தீவிலிருந்தே எடுத்துக் கொண்டாள். பாறைகளை வெட்ட வைத்தாள், மணலைக் கிண்ட வைத்தாள், கூரைகளை உண்டாக்கினாள், பனைகளை ரம்பத்தால் அறுக்கச் செய்தாள், ஓலைகளை மடித்து உயர்ந்த வேலிகளைப் போட்டாள். பார்க்கப் பார்க்க மலைப்பாய் இருந்தது. அந்த மாளிகையை அவள் கட்டிக் கொண்டிருந்த போது புகையிலைச் சுப்பைய்யாவுக்கு நாகமொன்று கடித்தது.

தீவின் மையத்திலிருந்த பெரிய புகையிலைத் தறையின் மேலாளன் கணக்கம் பிள்ளை அதை எடுத்து பட்டினத்துக்கு அனுப்புவான். ஒவ்வொரு பருவத்திலும் விளையும் கனிகளும் கிழங்குகளும் பட்டினத்துச் சந்தைக்கு வள்ளங்களில் செல்லும். அனலன் வள்ளங்களில் மூட்டை சுமக்கச் செல்வான்.

தந்தை தான் சுப்பைய்யாவுக்கு வைத்தியம் பார்த்தார். விஷக்கல்லை வைத்துத் தீண்டிய இடத்தில் பிடித்தார். கையைப் பிடித்துப் பார்த்து நாடி விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்துப் பிழைக்க மாட்டான் எனச் சொன்னார். அவள் தந்தையின் வைத்தியத்தை ஆர்வத்துடன் பார்த்தாள். சர்ப்பத்தின் கீழ்ப் பற்கள் அவனைத் தீண்டி ஆழப் பதிந்திருந்தன. யமதூதியும் யமதாஷ்டிரியும் பதிந்தால் பிழைப்பது அரிது. நஞ்சு விரைந்து பரவிக் குருதியைக் கட்டியாக்கும்.

சுப்பைய்யாவின் மூடும் விழிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கிளாரா துவிபாஷி ஒருவனை வைத்து தந்தையிடம் சர்ப்பங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் சொல்லச் சொல்ல அவளுக்குள் சர்ப்பங்களின் மாபெரும் இருள் முடிச்சுகள் துலங்கி வந்தன. சர்ப்பங்களுக்கும் குடிகளுக்கும் இருக்கும் பின்னலை அவர் சடை பிரித்துக் காட்டினார். மெல்ல மெல்ல கிளாராவிற்குள் அந்தக் குரூரமான அறுக்கும் கத்தியை அவர் தான் கொடுத்தார். அவள் இந்தத் தீவை முழுவதுமாக அச்சமின்றி ஆள்வதற்குச் சர்ப்பங்கள் பெருந்தடை என்பதை உணர்ந்தாள். சர்ப்பங்களின் நஞ்சிலிருந்து எழும் அச்சம் குடிகளை என்றும் நம் தெய்வங்களுடன் பிணைக்கும் என்பதை அறிந்தாள். கோயில்களை எரித்து சிலுவையையும் அவளுடைய தெய்வத்தையும் அவள் ஊன்றியும் எதனால் குடிகள் மந்தணச் சடங்குகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவள் கண்டுபிடித்தாள். சிடுக்கான முடிச்சொன்றை அவளது மனம் கண்டு கொண்டது. சுப்பைய்யா இறந்ததும் அவளது ஆணையை முரசுக்காரன் சடையன் ஆலமரக் கூடலில் வைத்து அறிவித்தான்.

“இத்தால் தீவின் சகல குடிகளுக்கும் அறியத் தருவது என்னவென்றால் குடிகளின் நன்மை கருதி மேன்மை தங்கிய மகாராணி, தீவின் அனைத்துப் பாம்புகளையும் கொன்று எரித்துக் கடலில் வீச உத்தரவிட்டுள்ளார். ஆதலால் குடிகள் தாங்கள் காணும் சிதல் புற்றுகளை இடித்து அழிக்க வேண்டும். கண்ணில் தென்படும் ஒரு பாம்பையேனும் உயிருடன் விடுபவர்களுக்கு நூறு கசையடிகள் வழங்கப்படும்”

தந்தை நாகம் போன்று சடையனைப் பார்த்துச் சீறினார். குடிகளில் பெரும்பாலானவர்கள் அது நியாயம் தான் என்றனர். கணக்கம் பிள்ளை அப்பாவைப் பார்த்து “உனக்கு இனி பணியில்லை பரியாரி. வந்து புகையிலைத் தறையில் தோகை காயப் போடு. இல்லையெண்டால் மீனைப் பிடி. அதுவும் சர்ப்பம் தானே. செதில் செதிலா உடம்பிருக்கும்” எனச் சொன்னார். குடிகள் கலகலத்துச் சிரித்தனர்.

தந்தை உக்கிரமானார், கைகளும் கால்களும் கோல் முழங்கும் பறைத்தோல் போலாடியது. காற்றில் ஆலங்கூடலின் முதுவிழுதுகள் சடை விரித்தாடின.

“அற்ப சீவன்களே கேளுங்களடா, சர்ப்பமில்லாத மண்ணில் மனுசருக்கும் வாழ்வில்லை. சர்ப்பங்கள் குடியின் காவல் தெய்வங்கள்” எனக் கூவினார்.

மண்ணை ஓங்கி உதைத்துச் சடை முடி ஆடச் சன்னதம் வந்தது போலத் தொடர்ந்தார்,

“ஒன்று மட்டும் சொல்கிறேன் மூடர்களே, தெய்வங்களை நீங்கள் பிசாசுகள் என்று அழிக்கலாம். தெய்வமென்று மண்ணிலுறையும் சர்ப்பங்களை உங்களால் அழிக்கவே முடியாது. அவை வாழ்வது சிதல் புற்றுகளிலோ காட்டுப் பற்றைகளிலோ அல்ல… ஆழத்தில்… மண்ணுக்கும் அடியில்…மண்ணைத் திறந்தாலும் தொட முடியாத தொலைவில்… பாதாளத்தில் அவை உறைகின்றன. அங்கிருந்தே அவை பிறந்து நெளிந்து மண்ணில் தவழ்கின்றன.

உங்கள் மகாராணி தீக்குடுக்கையால் என்னைச் சுட்டாலும் குறையில்லை, சொல்கிறேன் கேளுங்களடா, அவை மண்ணுக்கடியில் வேர்களைப் போல பெருகியெழுபவை. ஆகாயத்தில் விண்மீன்களென இமை திறந்து பார்ப்பவை. மண்ணை நீங்கள் ஆளலாம்.. அற்பக் குடிகளை நீங்கள் ஆளலாம்.. பாதளத்தையும் ஆகாயத்தையும் உங்களால் ஆள முடியாது. உங்கள் தெய்வங்களாலும் சிலுவைகளாலும் கூட இயலாது” என்று கூவியபடி நடுங்கி விழுந்தார்.

நாகி தந்தையையே பார்த்துக் கொண்டு நின்றாள். “த்தா.. த்தா” என நெருங்கிச் சென்று தொட்டாள். நோய் கண்ட முதிய சர்ப்பத்தைத் தொட்டு ஆறுதற்படுத்துவது போல அவரது தோலில் தடவினாள். மூச்சு விம்மி விம்மியழத் தந்தை விழுந்து கிடந்தார்.

தந்தையின் சன்னதத்தில் எழுந்த பாதாளத்தின் குரலைக் குடிகள் மஞ்சாடியளவும் மதிக்கவில்லை. ராணியென கிளாரா ஆட்சியேற்ற பின்னர் அவளின் ஆணையில் குடிகள் மகிழ்ந்த முதல் நிகழ்வு அது தான். தீவின் காடுகளிலும் பற்றைகளிலும் உறைந்த சிதல்களின் மாளிகைகளை உடைத்து மண்ணோடு மண்ணாக்கினார்கள். காணும் சர்ப்பங்களை அடித்துக் கொன்று கிளாராவின் மாளிகை வாசலில் அதற்கென வைக்கப்பட்டிருந்த மரப்பீப்பாயில் போட்டனர். பத்துச் சர்ப்பங்களுக்குக் காற் பணம் கொடுத்தாள். அவள் எண்ணியதை விடப் பீப்பாய்கள் நிறைந்தன.  பட்டினத்திலிருந்து புத்தம் பீப்பாய்களை வரவழைத்தாள். கொல்லப்பட்ட சர்ப்பங்களின் செதிலுடல்கள் அவளது மாளிகை முற்றத்தில் பீப்பாய்களில் குவிந்தன.

அப்பா அந்தக் காலம் முழுவதும் குடிலுக்குள்ளேயே மடங்கிக் கிடந்தார்.

“நாங்களும் வாழணும் ஆலி” என்றான் அனலன். அவன் புத்தம் ஆட்சியில் ஒரு மாளிகைப் பணியோ கூலிப் பணியோ கிடைக்கும் என அந்த முற்றத்திலேயே சர்ப்பங்களின் பிரேதங்களோடு கிடந்தான்.

ஒரு மாலையில் எங்கள் நடுக்குடிலில் வைத்து தீவின் கடைசி ராஜநாகம் தந்தையைக் கொத்தியது. அது அவரின் உதட்டில் தீண்டியிருந்தது. நாகி தான் முதலில் பார்த்தாள். தந்தையைத் தீண்டிய ராஜநாகம் தன் மாபெரும் ராட்சத பத்தியை விரித்துச் சீறும் கண்களுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவள் “ம்மா.. ம்மா” என மிழற்றிக் கொண்டு அதைப் பிடிக்கப் போனாள். நான் எட்டிப் பார்த்து அதிர்ந்தேன். மின்னல் வெட்டிப் பிரிந்தது போலக் கழுத்துச் செதில்கள் மினுங்க கரிய பாறைச் செதுக்கு போல ஒளி வீசிக் கொண்டு அது என்னைப் பார்த்தது. அந்தப் பார்வையில் அசையாத கூர்மையொன்று மின்னியது. இரு குறும் வாள்களென மின்னும் நாக்குகளால் காற்றைத் தீண்டியது.

நெடுநாள் அறிந்த பார்வையுடன் நின்றாடியது. காற்றில் ஏறி அப்படியே எழுந்து பறக்கப் போவதைப் போல. பிறகு ஒருகணத்தில் பின்னால் சரிந்து ஓங்கி மும்முறை நிலத்தில் தீண்டியது. அதன் முன்னிரு பற்களும் தெரிந்தன. சிரிப்பது போல. காளியும் காளாத்திரியும் தெரிய நாகியைப் பார்த்து நெருங்குவதும் விலகுவதுமான ஒரு நடனத்தில் நின்றிருந்தது அது.

என் வலக்கை கூரை ஓலையில் நுழைந்து அரிவாளை உருவியது. நாகி இரண்டு அடிகள் தத்தி வைப்பதற்குள்ளாகப் பாய்ந்து ஒரே வெட்டில் அதன் தலையைச் சரித்தேன். பத்தி சுருங்கி ஒரு கரிய கயிற்றைப் போல அடங்கியது. குருதிப் பீய்ச்சல் தந்தையில் பெய்தது. கடைசி மூச்சுப் போல நுனிவால் துடித்து நாகியின் காலில் தொட்டு விலகியது. ஒரு ஆசியைப் போல என எண்ணிய போது மார்புகளைப் பிடித்துக் கொண்டு அதன் வால் நுனியில் விழுந்து கிடந்து அழுதேன்.

“என் தெய்வமே!” எனக் கூவினேன். “பொறுத்துக் கொள்.. உன் பிள்ளையைப் பொறுத்துக் கொள்” என அரற்றினேன். நாகி அதன் தலையைத் தொட்டுப் பார்த்தாள். உறைந்த பச்சைக் கண்களில் உயிருப்பது போன்றதொரு பாவனை எஞ்சியிருந்தது. அவள் சுற்றிச் சுற்றி அதைப் பார்த்து “ம்மா..” என்றாள்.

அனலன் வந்து பார்த்தான். அவனது முகத்தில் புத்தம் ஒளி பரவியது. கடைசி நாகம் இது தான் என்பது அவனுக்குத் தெரியும். இரண்டு ராஜநாகங்கள் தான் தீவில் இருந்தவை. ஒன்றை கணக்கம் பிள்ளையின் புகையிலைத் தறையில் வைத்து அனலன் தான் கொன்றான். ஆக இப்பொழுது முதல் எங்கள் பரம்பரைக்கு நாகதோசம் நிலையாய் விழுந்து விட்டது. இனி ஏழு தலைமுறைக்குச் சென்று தலை கொடுக்க வேண்டும். நாங்கள் ஈனும் குட்டிகளின் குருதியில் இனி நாகங்களின் கரவு எப்போதுமிருக்கும். ஆனால் அனலன் அதைக் கொண்டு சென்று பறையடித்து ஆடி கிளாராவுக்கு வேடிக்கை காட்டினான். அவள் கொடுத்த குருதித் திரவத்தைக் குடித்து கடற்கரையில் லசரின்களுடன் வாய்த் தர்க்கம் புரிந்தான். அவர்கள் அவனை எச்சரிக்கை செய்தும் கேட்கவில்லை. ஒரு லசரினை ஈட்டியால் குத்தி விழுத்தினான். லசரினது குலை வெளியே வந்து விழுந்தது. அருகிலிருந்த இளம் லசரின்கள் இருவர் அவனைப் பாறையில் விழுத்தி பாறைக்கல்லைத் தலையில் போட்டுக் கொன்றனர். தலை கூழாகச் சிதறிக் கிடந்தான். 

அன்றிரவு கல்லாசனத்தின் முன்னே நூறு பீப்பாய்கள் நிறைந்து வழியக் கிடந்த சர்ப்பங்களின் செதிலுடல்களை காய்ந்த ஓலைகளைப் போட்டுக் கொழுத்தினார்கள். உரிந்த செட்டைகள் போன்ற பிரேதங்கள். அனலனின் பிரேதத்தை நெருப்பில் எறிகிறார்கள் என சாத்திரி வந்து மூச்சு வாங்கச் சொன்ன போது தென்னையோலைகளை இழைத்து தந்தைக்குப் பாடையைச் செய்து கொண்டிருந்தார்கள். நாகியைப் பார்த்தேன். பருத்தித் துணியால் சுற்றப்பட்டு ஒரு முதிய ராஜநாகம் போலக் கிடந்த தந்தையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குடிகள் வேடிக்கை பார்க்கவென எரியும் தீயைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். குருதிச் சிவப்பான வெல்வெட் துணியைக் கல்லாசனத்தில் விரித்து அதன் மேலமர்ந்து கிளாரா தீயையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆந்தைக் கண்களில் நெருப்பின் நெளிவுகள் ஆடிக் கொண்டிருந்தன. நான் ஆலமரக் கூடலில் ஏறி நின்று அங்கு எரியும் தீயைப் பார்த்தேன். பல்லாயிரம் சர்ப்பங்கள் நுனிவாலில் எழுந்து நெளிவதைப் போன்ற மாபெரும் தீப்பெருக்கு. எரியும் சர்ப்பங்களின் கெடுமணம் காற்றிலடித்தது. குடிகள் கள்ளுக் குடித்துப் பறையடித்துக் கொண்டாடினார்கள். தம்மை இழந்து நெளிந்து துடிக்கும் முகங்களின் பெருக்கு. ஒரு விழவு போல.

அனலன் அந்தப் பல்லாயிரம் சர்ப்பங்களின் விறகில் எரிந்தான். அவளைப் பார்த்தேன். தங்கச் சிலை உருகுவது போல மாறியிருந்தாள். புருவங்களில் தழல் நெளிவுகளின் சுருக்கம் உறைந்து போயிருந்தது.  விழிகளில் எதுவுமில்லை என்பது போன்ற நோக்குக் கூர்ந்திருந்தது. புன்னகையென்று சொல்ல முடியாத மெல்லிய இளக்கம் உதடுகளில். ஆனால் என் உள்ளுணர்வில் அவள் என்னைப் பார்க்கிறாள் எனத் தோன்றிக் கொண்டேயிருந்தது. கூடலின் இருட்டை வெறுமனே பார்த்து விட்டுத் திரும்பி தீயைப் பார்த்தபடி குருதித் திரவத்தைப் பருகிக் கொண்டேயிருந்தாள்.

கல்லாசனத்தின் ஈரப்பெருக்கு தீயில் ஜொலித்தது. அவளது தங்க நிறச் சிலுவையை ஒரு கையில் பிடித்திருந்தாள். இரையும் மாகடலின் ஓலம் அப்பால் கேட்டுக் கொண்டிருந்தது. பல்கோடி விண்மீன்கள் வானில் தோன்றிச் செறிந்திருந்தன. மேகமே இல்லாத முழுவானம். அனலனின் தேகம் விடைத்து நெரிபடுமொலி என் செவிகளை வந்தறைந்தது. ஊனுருகும் கெடுமணம். நெஞ்சில் ஒரு குத்தீட்டி மெதுமெதுவாக இறங்கிக் கொண்டிருப்பது போலிருந்தது. இந்தத் தீவை எரித்து அதன் சாம்பலில் குளித்து அமலையாடும் வெறி பற்றிக் கொண்டு வந்தது. காலிடையால் குருதி சீறிப் பெருக்காகியது. விழுந்தேன்.

*

இன்று நான் முழுவதுமாகத் தளர்ந்து விட்டேன். நூற்றியிருவது பருவங்கள் பெயர்ந்து சென்றன. ஒவ்வொரு நாளாக நான் காத்திருந்தது இன்றைய இந்த ஒரு நாளுக்காகத் தான். இத்தனை பருவங்களும் நான் ஒவ்வொரு நாளிலும் என் நஞ்சை நிழல் போலக் கூட்டித் திரிந்தேன். குடிகள் எல்லாவற்றையும் உடனுக்குடன் மறந்தனர். எப்போதாவது ஒரு சுருட்டையோ நாகமோ சாரையோ தீவில் நுழையும். அதை அவர்கள் அஞ்சினார்கள்.

நீரில் நீந்தி வருகின்றன என்றனர். வள்ளங்களில் தொற்றித் தீவு புகுகின்றது என்றனர். வானிலிருந்து விழுவதைப் பார்த்தேன் என்றான் சாத்திரி. மண்ணில் புல் போல முளைக்கின்றன என ராணியிடம் முறையிட்டான் கணக்கம் பிள்ளை. நான் சொன்னேன் எனது பெயர்த்தியிடம் “அவற்றை நான் தான் ஈனுகிறேன் என் குஞ்சே, அவை என் குஞ்சுகள். நீ அவர்களின் குருதி”.

அவள் என்னை மலங்கும் விழிகளுடன் எச்சிலொழுகப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்குச் சர்ப்பங்களைத் தெரியாது. அதன் வாசமோ ஓசையோ கூடப் பழக்கமில்லை. ஆனால் அவள் என்னைப் பார்ப்பாள். கழுத்து மடங்கிக் கூன் விழுந்த என் உடல் ஒரு பத்தி விரித்த நாகமென்பதை அவள் அறிவாள். குருதியில் அவளுக்குச் சர்ப்பங்களின் வாசனை நிறைந்திருக்கிறது. சில பொழுதுகளில் என் நிழலைத் தொட வந்து “ ம்மா..” என்பாள். என் குழிந்த கன்னங்கள் விரியச் சிரிப்பேன். பிறகு மணலில் சர்ப்பங்களை விரல்களால் வரைந்து காட்டுவேன். அவை உக்கிரமாக மோதிக் கொள்வது போல விரல்களால் அந்த முழுக் காட்சியையும் கோடுகளாக நெளிவுகளாக வரைந்து கொண்டேயிருப்பேன். என் விரல்களே கூடச் சர்ப்பங்கள் போல நெளியும்.

நெடுங்காலமாக நாகி கிளாராவின் அணுக்கச் சேவகி. சர்ப்பங்களுக்கு எப்போதும் தீண்டும் தொலைவு இருக்க வேண்டும் எனப் பொறுத்தேன். அவள் கிளாராவின் மாளிகை முற்றத்தில் குதிரைகளைப் பராமரித்தாள். அவளது புருசனும் அவளும் கிளராவிற்கு பிள்ளைகள் எனச் சாத்திரி சொன்னான்.

“எல்லாம் மறைந்து போய் விட்டது ஆலி. உன் புற்றிலிருந்து வெளியே வா” எனச் சொன்னான்.

“போடா துட்டா” என அவனை அடித்து விரட்டினேன்.

நாகியும் புருசனும் கிளாராவின் கல்லாசனத்தை மெருகேற்றினர். கடகத்தில் தென்னங்கயிற்றைப் பிணைத்து நீரை அள்ளி கல்லாசனத்தின் மீது வார்த்து தென்னம் பொச்சுகளால் அதை ஒரு மணலில்லாமல் தூய்மையாக்குவார்கள். பொளிந்து பொளிந்து அதை ஒரு கத்தியைப் போலத் தீட்டி எடுத்தார்கள். பின்னர்

ஒரு சிம்மாசனத்தைப் போலச் செதுக்கி மகாராணி டொன்னா கிளாரா என அதன் காலடியில் பொறித்தனர். அவள் வரும் நாட்களில் அதன் மீது அத்தரைத் தெளித்தனர். வெல்வெட் துணிகளை விரித்தனர். கொற்றக் குடையும் செய்து பின்னால் ஊன்றினர். ஒரு முழு யானை அமரக் கூடிய அளவு கொண்ட அந்தக் கல்லாசனத்தின் நடுவில் சுருட்டை ராணி அமர்ந்திருப்பாள். வீங்கித் தடித்த பெண் சுருட்டை. தோற்புள்ளிகள் பெருகி தீவின் வெம்மை சுட்டுப் படர்ந்த கருவளையங்கள் அவளின் கண்களின் கீழே படிந்திருந்தன.

அவள் ஆர்ப்பரிக்கும் அலைகளின் திரையின் முன்னால் கரிய சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு நீதி வழங்கினாள். சூரியன் எப்போதும் அவளின் பிடரியில் கிரீடம் போல ஒட்டியிருக்கும் பொழுதில் தான் காட்சியளிப்பாள். அவளது கரிய குதிரை செத்து விட்டது. இப்போது வேறொரு குதிரை ஒன்றை அவள் வைத்திருக்கிறாள். அதுவும் கரியது, இருட்டின் மீது அவளுக்கு அத்தனை வாஞ்சை.

அவளை நான் ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் ஒருமுறை ஆலடியில் சென்று தலையை உயர்த்திப் பார்ப்பேன். என் கழுத்தின் நரம்புகள் பிணைந்து கொள்ளும். தடித்துப் பருத்த சுருட்டை அங்கே தளர்ந்து போயிருப்பாள். ஆனால் குடிகள் அவளை நேசித்தனர். இந்த அற்பக் குடிகளை ஏன் தெய்வங்களும் கைவிட்டன என்பதற்கு அவர்களே நிரூபணம். வக்கற்றவர்கள், ஏமாளிகள், மூடர்கள், பசப்பர்கள், நிந்திப்பவர்கள், தந்திரக்காரர்கள்.

கிளாரா தனது கனவுகளிலிருந்து தான் சர்ப்பங்கள் வருகின்றன எனத் தன்னிடம் தனியே சொன்னதாக நாகி சொன்னாள். அவளது படுக்கையைச் சுற்றி உப்பினால் ஒரு வளையம் வரைந்திருக்கிறாளாம். படுக்கைக்குச் செல்லும் பொழுது எப்பொழுதும் இரு சேவகிகள் அருகில் உறங்க வேண்டும்.

இரவிலும் பகலிலும் அவளது மாளிகையைச் சுற்றி லசரின்கள் ஈட்டிகளை நீட்டியபடி காவலிருந்தனர்.

சாத்திரியிடம் பரிகாரங்கள் கேட்டதாகவும் மருமகன் சொல்லிக் கொண்டிருப்பான்.

நான் என் பெயர்த்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன், “அவளால் இதைத் தாண்ட முடியாது. அவளது தேகமே நஞ்சினால் திரைந்திருக்கிறது. நஞ்சு விழுந்து நாட்பட்ட பாலைப் போல. நீ அஞ்சாதே குஞ்சு. உன்னை நான் காப்பேன். உன்னை நெருங்கும் ராஜநாகத்தைக் கொல்லும் வலிமை இன்னும் என் கைகளில் இருக்கிறது. அதற்குத் தான் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். எனது சாம்பல் இந்த மண்ணில் பரவும் போது பாம்புகள் இந்த நிலத்திற்குத் திரும்பும்.

நீயறிவாயா குஞ்சு, முதல் தசாப்தத்தை இப்போது உனக்குச் சொல்கிறேன். சர்ப்பங்கள் இல்லாத நிலத்தில் எலிகள் பெருகும். நெற்கதிர்கள் அழியும். தானியக் கிடங்குகளை அல்லும் பகலும் காவலிருக்க வேண்டும். இருட்டின் மீது அச்சமிழந்த குடிகளின் செயல்களில் இருள் தெய்வங்கள் குடிபுகும். அவர்கள் ஒருவரை ஒருவர் வஞ்சம் கொண்டனர். இருட்டில் அவர்களைக் கொன்றனர். பெண்டிரைப் புணர்ந்தனர். இளையோர் இருளை அள்ளி அள்ளிக் குடித்தனர். கள்ளும் குருதித் திரவமும் பெருகின. புகையிலைச் சுருட்டு தீவெங்கும் மணத்தது. குடியின் ஆழம் தொலைந்து போனது.

மீட்பர்கள் எனப் புத்தம் மனிதர்களை கிளாரா கூட்டி வந்தாள். அவளது தெய்வங்களைக் குடிகள் ஏய்த்தனர். பொய்யும் புரட்டும் மலிந்தன. ஆசையும் பேராசையும் போரிட்டுக் கொண்டன.

நீ நாகங்களைக் கொன்றவர்களின் குருதி. ஒருவன் பேராசையில் கொன்றான். நான் என் குஞ்சுக்காகக் கொன்றேன், என் தந்தைக்காகக் கொன்றேன். நான் அந்த ராஜநாகத்தை என் கையால் வெட்டும் போது ஒன்றை உணர்ந்தேன். அது காற்றைப் போலவே இருந்தது. சதைத் துணுக்கோ ஒரு கதிர்க்கீற்றையோ வெட்டும் போதிருக்கும் ஒரு சிறு நடுக்கம் கூட என் அரிவாளில் இருக்கவில்லை. காற்றைத் தான் நான் வெட்டினேன். அந்த நாகம் தன் தலையை அறுத்துக் கொண்டு தானே விழுந்தது.

என் தந்தையை எரித்த போது எழுந்த ஓசை சுருட்டைகள் தங்களைத் தாங்களே பனைகளில் உரசியெழுப்பும் ரம்பம் அறுக்கும் ஒலி போலிருந்தது என கணக்கம் பிள்ளை சொன்னான். அவன் அவனுடைய புகையிலைத் தறையில் பிறகொரு நாள் வெட்டுப்பட்டுக் கிடந்தான். அதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள், காற்றிலொரு கீறல் விழுந்தது போலக் கழுத்தில் ஒரு வெட்டு.

தந்தையின் உடல் எரிந்த போது எழுந்த மணம் தாழம் பூக்களின் சர்ப்ப வாசனை. அதை அன்று புலரியில் தீவே அறிந்தது. கிளாரா தன் மாளிகையின் யன்னல்களைச் சாத்திக் கொண்டு அத்தரைப் பூசிக் கொண்டு முகர்ந்து கொண்டிருந்தாளாம். அன்று நஞ்சுப் பெருக்கு போல மழை பெய்தது.

அடுத்த தசாப்தத்தை உனக்குச் சொல்கிறேன் கேள், என் குஞ்சு நாகமே,

இரண்டாவது தசாப்தத்தை ஆண்டது துர்க்கனவுகள். இருளில் யாராவது நிழலென ஆடும் சர்ப்பங்களைக் காண்பார்கள். அல்லது கனவுகளிலிருந்து நழுவி விழும் பாம்புகளைக் கண்டார்கள். குடிகளின் இளைய பிள்ளைகள் தேள்களாலும் நச்சுப் பூச்சிகளாலும் தீண்டப்பட்டார்கள்.

அறிவாயா என் குஞ்சு நாகமே, மண்ணிலிருந்து முழுவதுமாக நஞ்சை அகற்ற எவராலும் முடியாது. அது வாழ்வின் நிழல். அது விண்ணிலும் மண்ணிலும் காற்றிலும் கடலிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

நீ அதை அஞ்சக் கூடாது. நஞ்சே வாழ்வை மூர்க்கமாகப் பற்றிக் கொள்ளச் செய்யும் விதி. அதன் நடனமே இருள். அதன் பாடலே கடல். அதன் வெளிச்சமே வாழ்க்கை. நீ அதைப் பருகு.

இது மூன்றாவது தசாப்தம், இதை நான் கடக்க மாட்டேன். இது என் வஞ்சத்தின் தசாப்தம். என் வஞ்சமே இங்கிருக்கும் ஒவ்வொருவரின் நிழலிலும் படிந்து நோயெனவும் பஞ்சமெனவும் போரெனவும் பீடித்திருக்கிறது. மாபெரும் கரும் மேகங்கள் வானில் எழுவது போல நான் என் வஞ்சத்தால் இந்தத் தீவை மூடியிருக்கிறேன்.

ஆனால் என் குஞ்சு நாகமே, நீ இப்போது அறிய வேண்டியது நீதியைப் பற்றியது. ஆம். நஞ்சு கொண்டவரே நீதியின் நெருப்பிற்குத் தங்களை ஆகுதியாக்க முடியும். நஞ்சிலிருந்தே நீதியின் கனிவான வெளிச்சம் மண்ணில் படிகிறது. ஒவ்வொரு நாளும் நான் என் உடலை ஒறுத்துப் பருகிக் கொண்டதெல்லாம் நஞ்சன்றி வேறென்ன?

நாம் இந்தத் தீவின் பல்லாயிரம் சர்ப்பங்களை எரிய எரியப் பார்த்தவர்கள். அதைக் கூடிக் கொண்டாடியவர்கள். என் தந்தை சொன்னார், பாதாளத்தின் குரலில், வேர்களிலிருந்து பெருகியெழுபவை சர்ப்பங்கள், ஆகாயத்திலிருந்து இமைக்காமல் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பவை சர்ப்பங்கள். அவற்றை நீ அழிக்க முடியாது. மனிதர் யாருக்கும் அந்த வல்லமையை எம்மிலும் பெரியது அளிக்கவில்லை. இதை நான் இன்று உனக்குச் சொல்கிறேன். அந்தத் தளர்ந்த சுருட்டை ராணி தன் முதிய குதிரையில் இந்தத் தீவை விட்டு பிடி காப்பிடப்பட்டுச் செல்லப் போகிறாள். அவளது மாளிகையிலேயே அவளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். நான் இன்று அந்தக் கல்லாசனத்தில் உன்னை அமர வைப்பேன். ஒரு கணமேனும் அதை நீ உணர வேண்டும். அதன் பின்னர் நான் அதை அழிப்பேன். என் வாழ்க்கையை உடைத்ததைப் போல நொறுக்குவேன். அவளது மாளிகையை எரிப்பேன். என் சர்ப்பங்களை எரித்ததைப் போல கொழுத்தி அதன் வெளிச்சத்தில் நெளிந்து ஆடுவேன்.

என் வஞ்சத்தை நான் நிறைவேற்றித் தான் ஆக வேண்டும். அதுவே சர்ப்பங்களின் நீதி. பாதாளத்தின் நீதி. நஞ்சு கொண்டோரின் நீதி” என்றேன்.

அவள் “ம்மா..” எனச் சொல்லிச் சிரித்தாள்.

நான் அவளைக் கைகளில் கோலி அள்ளி முதுகில் போட்டேன். ஒவ்வொரு அடியாக அரைந்து ஆலடியை நோக்கிப் போனேன். கல்லாசனம் வெறுமையாக இருந்தது. மேற்கில் சூரியன் தகதகக்கும் ஒரு கனியைப் போல விழுந்து கொண்டிருந்தது. குடிகளை மீண்டும் கூட்டமாக நிறுத்தியிருந்தனர் புத்தம் வீரர்கள். நாகியும் புருசனும் கல்லாசனத்தின் அருகில் வீங்கிய முகத்துடன் விழுந்திருந்தனர்.

தன் முதிய குதிரையை ஈட்டியால் குத்தி சோதிக்கும் புத்தம் வீரனை கிளாரா பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்தேன், அதே அசைவில்லாத விலக்கம் கொண்ட பார்வை. தளர்ந்த சுருட்டை ராணியே பார், உன் குருதித் திரவத்தை கையில் பிடித்தபடி நடனமிடும் புத்தம் நஞ்சை. மானுடர் ஒருவரை ஒருவர் நஞ்சினால் ஆள்கிறார்கள், வஞ்சம் தீர்க்கிறார்கள், வென்று அமைகிறார்கள், சர்ப்பங்களை வென்றமைந்த உன் அசைவற்ற நோக்கினை இப்போதெனப் பார்க்கிறேன். என் நெஞ்சு இறுகிக் குளிர்கிறது. பாதங்களில் குளிர்ந்த கற்றாளைச் சதை போல மினுக்கம் கூடி வருகிறது.

இதோ நீ என்னைப் பார்க்கிறாய், நான் அறிவேன். அன்றும் நீ என்னைப் பார்த்தாய், ஓர் இருட்டை வெறுமனே பார்ப்பதைப் போல. என் தந்தையை எரிக்கும் பொழுதும் என் அனலனை எரிக்கும் பொழுதும், என் சர்ப்பங்களை எரிக்கும் பொழுதும் கூட நீ என்னை உணர்ந்திருப்பாய், நான் உன்னை உணர்ந்ததைப் போல. நீ அப்போது மகிழவில்லை என நான் அறிவேன். ஆனால் நீ என்னை வென்றாய், ஆண்டாய், மேலே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாய்.

இன்றும் அப்படித் தான். உன் கல்லாசனத்தை நொறுக்கிப் பொடிப் பொடியாக்கி நான் கடலில் கரைப்பேன். என் கைகளில் அந்த உறுதி இருக்கிறது. என் குஞ்சுகளின் கனவில் நான் அதை அழிவில்லாத சர்ப்பங்களைப் போலப் புரந்திருக்கிறேன். உன் மாளிகையைக் குடிகளே எரிப்பார்கள். நீ அதை அறிவாய். நீ இங்கிருந்து நீங்கிச் சென்ற பிறகு அதைத் தான் புத்தம் வீரர்கள் செய்வார்கள். நீ புரிந்ததைப் போலவே. இந்தச் சுழற்சியை நீ அறிந்ததினால் தான் என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறாய். இப்பொழுது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது, உனது உதட்டில் இம்முறை எழுந்திருப்பது மெய்யான புன்னகை. உன்னை மீறி உன்னில் எழும் நஞ்சின் கசிவு. அதைத் தான் நான் அன்று என் நெஞ்சில் உணர்ந்தேன்.

இதோ புத்தம் வீரர்கள் புத்தம் ஆணையைக் குடிகளுக்குக் கொடுக்கிறார்கள். உன் கண் முன்னாலேயே நாகியும் அவள் புருசனும் ஊரின் குடிகளும் உன் கல்லாசனத்தை உடைக்கிறார்கள். நீ அமர்ந்து அமர்ந்து ஆட்சி புரிந்து, நீதி புரந்த ஆசனம் பெயர்ந்து கொண்டிருக்கிறது. சுக்கல் சுக்கலாக உடைந்து தெறிக்கிறது. புத்தம் வீரர்கள் அதை பறையடித்து முரசு முழங்கிக் கொண்டாடுகிறார்கள். குருதித் திரவத்தை உன் குதிரையின் மூக்கில் சொருகி அதை ஓட வைக்கிறார்கள். தள்ளாடித் தள்ளாடி அந்தக் கரிய புரவி ஓடுகிறது. நின்று சாய்ந்து வீழ்கிறது. சிரிப்பொலிகள் கூக்குரலென எழுகின்றன. புத்தம் கொடியை உன் கல்லாசனம் கிடந்த பிளவில் ஊன்றுகிறார்கள்.

நீ புரந்து காத்த உன் குடிகள் உன்னைக்

கைவிடுகிறார்கள். புத்தம் வீரர்களைப் பார்த்து மகிழ்கிறார்கள். அது காலந்தோறும் அப்படித் தான்.

அவர்கள் எளிய குடிகள். இந்த வாழ்க்கை எளியது ராணி. உன் கனவை நீ இந்தத் தீவில் பெருக்கிக் கொண்டாய். அகங்காரத்தைப் பெருக்கிக் கொள்ளாத மானுடர் யார்? அதிலும் பெண்ணால் அப்படிப் பெருக்கிக் கொள்ளாமல் மண்ணில் வாழ முடியுமா? அது சர்ப்பங்களின்றி வாழ்வில்லை என்பதைப் போல.

உன் காலின் அடியில் அதை நீ பார்த்தாய். உன் கனவில் வரும் சர்ப்பங்கள் உன்னை இனி தொடராது என்பதாலேயே நீ சிரிக்கிறாய். ஆனால் நஞ்சு பொல்லாதது ராணி. அதை நானும் ஆழத்தில் உணர்கிறேன். நீதிக்கான நஞ்செனினும் அது நஞ்சு. அது என்னையும் எரிக்கும். நானும் நீயும் கல்விளக்கில் எரியும் இரண்டு இருட் சுடர்களெனக் காலத்தில் ஒளிர்வோம்.

இப்போது உனது கல்லாசனத்தின் தூசும் கூடக் கடலில் அடங்குகிறது. உன்னை ஏற்றிச் செல்லும் கலம் அதோ தெரிகிறது. உன் பொருட்களைப் புத்தம் வீரர்கள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். உன் வெறுமையான கைகளைப் பார்க்கிறேன். சலித்துப் போய் காற்றில் நீண்டிருப்பவை. உன்னை அவர்கள் ஒரு வேடிக்கைப் பொருளெனப் பார்க்கிறார்கள், சுடுசொற்களால் உன்னை அவமதிக்கிறார்கள், ஒரு ராணியை எவராலும் ஏற்க முடியாது. அவமதிக்காமல் கொல்ல முடியாது. அவள் எத்தனை பெரிய அன்னையெனவே ஆனாலும். அவளை வெல்லும் கணத்திற்கெனக் காத்திருக்கிறார்கள். அதுவே அவளை அத்தனை விசையுடன் அவர்களை வெல்லச் செய்தது. அதுவே அத்தனை எதிர்விசையுடன் அவளை ஒரு உடலென மாற்றி பிரேதமென நிற்க வைக்கச் செய்வது.

போய் வா ராணி, இது உன் நிலமும் தான். நான் அறிவேன். நீ மறுமுறை திரும்பினால் உன் சர்ப்பங்களை நீயே புரப்பாய். இப்போது நீ கண்டுகொண்டிருப்பாய் அனைத்தும் எங்குத் தொடங்கியதென்று. போய் வா ராணி. 

என் மனம் ஆகாயம் போலத் தெளிந்திருக்கிறது. இன்னும் சில கணங்களில் முதல் சர்ப்பம் ஆகாயத்தில் தன் இமையாத விழியைத் திறந்து மண்ணைப் பார்க்கத் தொடங்கும்.

உன் மூக்கில் அந்த வாசம் வருகிறதா? கடற் காற்றுச் சுமந்து வரும்  தாழம் பூக்களின் வாசனை.

உன் சுருட்டைச் செவிகளுக்குக் கேட்கிறதா? பனைமரங்களில் ரம்பம் அறுக்கும் ஓசை.

என் முதுகில் தூங்கிக் கொண்டிருந்தவள் காட்டை நோக்கி விரல்களை நீட்டி “ம்மா..” என்கிறாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here