அமுதா கண்திறக்க வேண்டும் என்று நினைத்தாள். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவளுடன் கட்டிட வேலை செய்யும் அபிராமியின் வழியாகக் குடிக்கப் பழகினாள். அபிராமிக்கு மேஸ்திரியை மயக்கி தினம் வேலைக்குக் கூப்பிடச் செய்வதற்கென சில நளினங்களை அமுதா சொல்லிக் கொடுத்ததற்குப் பிரதிபலனாக அபிராமி தனக்கு வாங்கியிருந்த பாட்டிலிலிருந்து அமுதாவுக்கு ஊற்றிக் கொடுத்தாள். அமுதாவுக்குக் குடிக்க வேண்டும் என்று ரொம்பநாளாக ஆசையிருந்தது. ஆனால் அந்த கசப்பான பிரவுன் நிற திரவம் குடித்தபோது அவ்வளவாக ருசிக்கவில்லை. ஆனால் அன்றிரவு மகள் உறங்கிய பிறகு கணவர் எழுந்து திருப்பியபோது வாய்நாற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடிந்தது. அவள் குடித்திருப்பதை உணர்ந்து கொண்டும் அவளிடம் அவர் ஒன்றும் கேட்கவில்லை.
தலை வலித்தாலும் பரவாயில்லை என்று கண்களைத் திறந்துவிட்டாள். தலைவலி இல்லாதது சந்தோஷமாக இருந்தது. தலையை முடிந்து கொண்டு கொல்லைப்பக்கம் ஓடினாள். அன்று வேலைக்கு வரலாம் என்று முதல்நாளே மேஸ்திரியிடம் சம்மதம் வாங்கி இருந்தாள். அதற்கென அவள் கைகளில் தன் உடல்படும்படி நெருங்க வேண்டியிருந்தது வழக்கமாகச் செய்யும் ஜாலங்களை விடச் சற்று அதிகம்தான். தொடர்ந்தால் நிச்சயம் படுக்கக் கூப்பிடுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப்போது அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் வீடு கொஞ்ச நாளில் முடிந்துவிடும். மேலும் ஊரில் நடவு வேலைகளும் தொடங்கிவிடும். அந்த இடைவெளியில் மேஸ்திரிக்கு தொட்டுப்பார்க்க வேறு சில பெண்கள் கிடைத்திருப்பார்கள். அவருக்கும் அந்த இடைவெளியில் படுக்கக் கூப்பிடும் தைரியம் போயிருக்கும். மீண்டும் புதுப்பத்தினியாக அவரிடம் வேலைக்குப் போகலாம்.
கீற்று மறைப்புக்குப் பின்னே கண்மணி குளிக்கும் சத்தம் கேட்டது. பசுமை வீட்டில் குளியலறை உண்டென்றாலும் அது மழைக்காலத்தில் விறகு போட்டு வைக்கத்தான் பயன்படுகிறது. குளிப்பது துவைப்பது பாத்திரம் கழுவுவது எல்லாம் வீட்டை ஒட்டிய கீற்று மறைப்பில்தான். மறைப்புக்கு மேலிருந்து ஆவி எழுந்து கொண்டிருந்தது. ஏதோ சந்தேகம் தோன்ற அமுதா திரும்பிப் பார்த்தாள். வழக்கம் போல கண்மணி செங்கல் கூட்டி வெந்நீர் போட்டு அடுப்பை ஒழுங்காக அணைக்காமல் குளிக்கப் போயிருக்கிறாள்.
“எட்டி கொதிச்சதும் வெறவ வெளில எடுத்துப் போடணும்னு தோனாதா உனக்கு? கொடில நெருப்பு புடிச்சு ஒப்பன் எடுத்து கொடுத்த பட்டெல்லாம் எரிஞ்சிருச்சுன்னா அம்மணமா போறதா வேலைக்கு”
அமுதா உற்சாகமாக இருந்தால் திட்டுவது இயல்பு. மேலும் பேருந்தேறி வெளியூர் வேலைக்குச் செல்வது அவளது உற்சாகத்தைப் பன்மடங்கு கூட்டிவிடும்.
வேலை முடித்து வந்தும் குளிக்க வேண்டியிருப்பதால் முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு வீட்டுக்குள்ளிருந்த கேஸ் அடுப்பைப் பற்ற வைத்து தனக்கும் மகளுக்கும் சேமியா பாத் கிண்டி வைத்துவிட்டு காலையில் எழுந்ததுமே சுற்றக்கிளம்பிவிட்ட கணவர் வந்தால் சாவியைக் கொடுக்கச் சொல்லி பக்கத்து வீட்டு விஜியிடம் கொடுத்துவிட்டு பள்ளிக்குக் கிளம்பியிருந்த கண்மணியுடனேயே வேலைக்குப் புறப்பட்டாள். கண்மணி இவளை வைத்து மிதிக்கச் சிணுங்கியதால் அவளிடமிருந்து அமுதா சைக்கிளை வாங்கிக் கொண்டாள். வேலை திருத்துறைப்பூண்டியில். கண்மணி மன்னார்குடியில் உள்ள செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாவது படிக்கிறாள். அவளுடன் கமலாபுரம் வரை சைக்கிளில் சென்றுவிட்டு அங்கிருந்து திருவாரூர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி. ஒரு வாரமாகத் தொடர்ந்து வேலை நடப்பதால் அன்னக்கூடை சும்மாடு துண்டு எல்லாம் வேலை நடக்கும் இடத்திலேயே இருந்தது. வேலை செய்யும் போது கட்டிக்கொள்ளும் புடவையை மட்டும் அங்கு வைத்துச் செல்ல வீடு கட்டுகிறவர் சம்மதிக்கவில்லை. அன்னக்கூடையுடன் சைக்கிளில் ஏற கண்மணி அனுமதிக்கமாட்டாள். இன்று அது இல்லாததால் சங்கடம் இல்லாமல் சைக்கிள் மிதிக்க முடிந்தது.
கமலாபுரத்தில் எட்டு மணிக்கு பேருந்தேற வேண்டும். அபிராமி மட்டும் தான் திருவாரூர் வரை துணை. ஆனால் அவளை இன்னமும் காணவில்லை. கண்மணி எதிர் சாரியில் மன்னார்குடி பஸ்ஸேறி போய்விட்டாள். வேறு இடங்களுக்குக் கட்டிட வேலைக்குச் செல்லும் கிழவிகள் வெற்றிலை மென்றபடி பேருந்து நிலையத்தில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தன. அமுதாவுக்கு அவர்களுடன் சேர்ந்து நிற்கப் பிடிக்கவில்லை. மற்றொரு புறம் தக்களூரில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் அவர்களுடைய பேருந்துகளுக்காகக் காத்திருந்தனர். அவர்களுடனும் போய் அமுதாவால் இணைந்து நிற்க இயலவில்லை. திடீரென வெயில் அதிகமாகிவிட்டது போலிருந்தது. கண் எரிந்தது. இரவு சீரியல் பார்த்து அதன் பிறகு இன்னொரு படம் பார்த்துப் படுத்திருக்கக்கூடாது என்று நினைத்தாள். அவள் செல்ல வேண்டிய எட்டு மணிப்பேருந்தின் ஹார்ன் சத்தம் தூரத்தில் கேட்டது. அபிராமியும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அவளுக்காகக் காத்திருப்பதா இந்தப் பேருந்தில் ஏறிவிடுவதா என்ற புதுக்குழப்பம் வேறு தொற்றி ஏற்கனவே மனம் முழுக்க புண்ணில் கொட்டிய மண் போல உறுத்திக் கொண்டிருந்த வெறுப்பை அதிகப்படுத்தியது. எனினும் அந்த கணத்தில் பரிபூரணமாகக் கவலைப்பட ஒரு விஷயம் கிடைத்துவிட்டதால் மற்ற கவலைகள் மட்டுப்பட்டன. அபிராமிக்கென நின்றால் கூட்டம் குறைவான அரசுப் பேருந்தைவிட்டு நெரிசலான தனியார் பேருந்தில் ஏற வேண்டும். அதைக்கூடச் சமாளித்துக்கொண்டு விடலாம். இவள் திருவாரூரை அடையும் முன்பே மேஸ்திரி ஆட்களுடன் புறப்பட்டுவிட்டால் வெறுங்கையுடன் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். அடுத்தடுத்த நாட்கள் மேஸ்திரி வேலைக்குக் கூப்பிடுவார் என்பதற்கும் உத்திரவாதமில்லை. அபிராமியை விட்டு எட்டு மணிப்பேருந்தில் ஏறினாள் அவள் கோபித்துக் கொள்வாள். இப்போதைக்கு இருக்கும் ஒரேயொரு ஆறுதலையும் இழக்க நேரும். மேலும் புதிதாகப் பழகியிருந்த குடிக்கு தன் காசினை செலவழிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை அபிராமி வேண்டுமென்றே ஒளிந்துநின்று தான் என்ன செய்கிறோம் என்று கண்காணிக்கிறாளோ என்று அமுதாவுக்கு ஒரு புது சந்தேகம் வந்தது. அவள் குழப்பம் அவளை உடைக்கும் தருணத்தில் “அக்கோவ்” என்ற குரலும் அரசுப் பேருந்தும் ஒன்றாக வந்து சேர்ந்தன.
திடீரென அமுதாவுக்கு அபிராமியின் மீது அளவற்ற பாசம் சுரந்தது.
“எங்கடி போன முண்ட” என்று பேருந்தில் ஏறி அமர்ந்ததும் கேட்டாள். ஜாக்கெட்டில் ஊறி நின்றிருந்த வியர்வை ஜன்னலரோக் காற்றுக்கு உடலைக் குளிரச்செய்து ஆசுவாசம் தந்தது.
“மொதலியார் கொல்லையில தேங்கா புடுங்க போனங்க்கா” என்றாள்.
அபிராமிக்கு தென்னை ஏறத் தெரியும் என்பது அமுதாவை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால் இரண்டாவது குழந்தையை சிசேரியன் பண்ணி எடுத்து ஒரு வருடமே ஆகிறவள் தென்னை ஏறுவதா என்று எண்ணினாள்.
“மொதலியார் பாத்துட்டாறாக்கும்”
“அவரு பாத்தா என்ன? அந்த மொவ இந்த மொவன்னு ஏசுவாரு. அவரால என்ன எந்திருச்சு ஓடியாந்து தொறத்தவா முடியும்?” என்று முகவாட்டத்துடன் சொன்னாள்.
“அவருக்கு ஒரு மொவன் இருக்கான்ல. ஊர்லேர்ந்து வந்துருக்கான் போலருக்கு”
“செரி”
“நடுக்கொல்லையில காய் நெறைய இருந்த மரமா பாத்து உச்சிக்கு ஏறிட்டேங்க்கா. அந்த பய வேப்பங்குச்சில பல்லு வெலக்கிட்டு வந்தான். ஏதோ ஊர்ல பேஸ்ட்டு கெடைக்காத மாதிரி. பொசகெட்ட பய கரெட்டா நான் ஏறுன மரத்துக்கு கீழ வந்து கைலிய தூக்கிவுட்டுட்டு குத்த வச்சுட்டாங்க்கா”
அமுதா சிரிக்கத் தொடங்கிவிட்டாள். அபிராமியின் முகம் கருத்தே இருப்பதைக் கவனித்தபிறகு “பெறவு என்னடியாச்சு” என்று கேட்டாள்.
“நாயி எதத்திம்பான்னு தெரியல. அவ்வளவு ஒயரத்துலயும் மணக்குது. ஒரு கொலைய சரிச்சு தலையில போட்டுருவமான்னு இருந்துச்சு எனக்கு. மூக்க பிடிச்சிட்டே உக்காந்திருந்து அவன் கழுவிட்டுப் போனதும் மொல்ல எறங்கி பாத்தா மரத்து சுத்தி பேணு வச்சிருக்காங்க்கா”
அமுதா சிரித்துக்கொண்டே எழுந்துவிட்டாள். திருத்துறைப்பூண்டி பேருந்து உறுமிக்கொண்டு நின்றிருந்தது. இவர்கள் ஓடிச்சென்று ஏறவும் பேருந்து கிளம்பவும் சரியாக இருந்தது. கடைசி இருக்கையில் வரிசையாக அமர்ந்ததும் ஒவ்வொருவரும் சத்தமாகப் பேசத் தொடங்கினர். அமுதா தன்னுடன் படித்த பெண்கள் யாராவது பஸ்ஸில் தென்படுகிறார்களா என்று தேடினாள். கண்களுக்கு யாரும் தட்டுப்படாதது ஆசுவாசமாக இருந்தது. அமுதாவின் மேஸ்திரி கட்டிக்கொண்டிருக்கும் வீடு திருத்துறைப்பூண்டிக்குச் சற்று முன்னர் வேளூர் பாலத்தின் அருகிலிருந்தது. இவர்கள் சென்று இறங்கியதும் வீட்டின் சொந்தக்காரர் வழக்கம்போல மேஸ்திரியை முறைத்தார். மேஸ்திரி சிரித்தார். அவர் கை தன் உடல்மேல் படும்போது வரும் அதே சிரிப்பு என்று அமுதா எண்ணிக் கொண்டாள்.
முதல் மாடியில் பூச்சு வேலை நடந்தது. கஷ்டமாக இருந்தாலும் அமுதா கீழ்த்தளத்தில் இருந்து பூச்சுக் கலவைக்காக சிமெண்ட்டும் மண்ணும் அள்ளிச்சென்று கொட்டும் வேலைக்கு ஒத்துக் கொண்டாள். வீட்டின் மேற்கூரை போடும்வரை எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை செய்யலாம். வீட்டிற்கு மேற்கூரை மூடிய அறைகள் உருவாகிய பிறகு இந்த மேஸ்திரி அழைத்து வரும் கொத்தனார்களை நம்ப முடியாது. அவரைப் போலவே திறமையும் வேட்கையும் கொண்டவர்கள். கீழ்த்தளத்திற்காவது வீட்டின் சொந்தக்காரர் எப்போது வேண்டுமானாலும் உள்ளே வருவார் என்று ஒரு பயம் இருக்கும். ஆனால் மேல் தளத்திற்கு அவரால் ஏற முடியாது. வேலைக்கென எடுத்து வந்திருந்த புடவையை மாற்றிக்கொண்டு மதியம் வரை அமுதா படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள். அதன்பிறகு அவளை அறைக்குக் கலவை அள்ளிவரும்படி மேஸ்திரி கூப்பிட்டுவிட்டார். அமுதா பூச்சுக் கலவைக்காக மணல் அள்ளிக் கொண்டு வந்து கொட்டிய கூடத்திற்குக் கதவுகள் போடப்படாததால் வெயில் நுழைந்து கடந்து கொண்டிருந்தது. ஆனால் அறை அவ்வாறு இருக்கவில்லை. சற்று இருட்டும் குளிரும் கலந்திருந்தது. மேஸ்திரி அமுதாவிடம் எதுவுமே பேசவில்லை.அவள் இருப்பு சட்டியில் கொண்டு வந்து கொடுத்த கலவையை வாங்கி சுவரில் விசிறிக் கொண்டிருந்தார். படுக்க வைத்து வழித்து எடுத்தால் ஒரு கைப்பிடிச் சதைகூட கிடைக்காத நரம்புகள் புடைத்த கச்சிதமான உடல். மற்ற கொத்தனார்களைப் போல மேஸ்திரி பனியனுடன் வேலை செய்வதில்லை. வேலை செய்யும்போதும் சட்டை போட்டிருப்பார். அந்த சட்டை இப்போது அமுதாவைச் சற்று எரிச்சலடையச் செய்தது. சிமெண்ட பாலின் நெடியிலும் அமுதாவால் மேஸ்திரியின் வியர்வை வாடையைப் பிரித்தறிய முடிந்தது. காலை முதல் ஈர சிமெண்ட் போல படிந்து இறுகியிருந்த ஏதோவொன்று மனதிலிருந்து இளகத் தொடங்கியது. திடீரென உடலில் அலுப்பும் சோர்வும் படர்வது போலிருந்தது. ஈர சிமெண்ட் நசநசத்த அந்த தரையில் அப்படியே படுத்துத் தூங்க வேண்டும் போல இருந்தது. பக்கத்து அறையில் அபிராமி கொத்தனார்களுடன் சிரித்துப் பேசுவது கேட்டது.
பூச்சுக்காக விசிறியதில் சிந்திய சிமெணட் கலவையை அள்ளுவதற்காக அமுதா கீழே குனிந்த போது ஏணியில் நின்று மேலே பூசிக் கொண்டிருந்த மேஸ்திரியின் கர்ணை கை தவறி விழுந்து அதன் கூர்மையான இரும்புப் பகுதி அமுதாவின் இடுப்பெலும்பில் முட்டியது.
“அம்மா” என்று அலறிக்கொண்டு நிமிர்ந்தவளிடம் “அப்புறமா அழுதுக்க. கர்ணைய எடுத்துக் குடு” என்று மேஸ்திரி சொன்னார்.
மாலையில் தேநீருக்காக வேலை நிறுத்தியபோது சுரத்தில்லாமல் இருந்த அமுதாவின் முகத்தைப் பார்த்து “என்னாச்சுக்கா” என்று அபிராமி அவள் தோளில் கைவைத்தபடி கேட்டாள்.
வெறுப்பா அருவருப்பா என்று சொல்லிவிட முடியாத ஒரு உணர்வு அமுதாவுக்குள் ஊற சேலையோ ஜாக்கெட்டோ மறைக்காத தோள்பகுதியில் இருந்த அபிராமியின் கையிலிருந்து மெல்ல தன் உடலை விலக்கிக்கொண்டாள். மெல்லத்தான். மிக மிக இயல்பாகத்தான். ஆனால் அந்த மிக மெல்லிய அசைவே அவர்களுக்குள் இருந்த அதனினும் மெல்லிய உறவுப் பிணைப்பை அறுக்க போதுமானதாக இருந்தது. மிக உண்மையான உறவுப் பிணைப்புகள் அவ்வளவு சிறிய அசைவில் அறுந்து போவதாகவே எப்போதும் இருக்கின்றன.
அன்று மாலை பேருந்து நிலையத்துக்கு ஓடும்போது அமுதாவிடம் நாள் முழுக்க உழைத்த தங்களுடலின் வியர்வை வாடை பள்ளி மாணவர்களை முகம் சுளிக்க வைப்பதைப் பற்றிய கவலைகள் இருக்கவில்லை. அழுக்கேறிய அந்த உடலினுள்ளே இருக்கும் பெண்ணை அசட்டை செய்யாமல் தொட்டு விலகும் ஆண் விரல்கள் குறித்த போதமில்லை. இந்த போதங்கள் தொற்றினாலும் அவற்றைப் பகிர்ந்து கொள்ளவோ பகிர்ந்து கொள்ளாமலேயே வெறுமனே அருகிருக்கவோ அபிராமி இல்லை. ஆளுக்கொரு புறமாக நின்று வந்தனர். ஆலத்தம்பாடி தாண்டியதும் அபிராமிக்கு உட்கார இடம் கிடைத்தும் அமுதா அருகில் வந்து அமர்ந்து விடுவாளோ என்று அஞ்சிக்கொண்டு அவள் நின்று கொண்டே வந்தாள். வெளிப்படையான இந்த விலக்கம் அமுதாவை மேலும் நோகடித்தது. மனம் அந்த முறிவை முன்னரே உணர்ந்துவிட்டாலும் முறிவுக்கு ஒரு பருவடிவ செய்கை சாட்சியமாவது மேலும் வலிக்கச் செய்தது அடிபட்ட இடத்தில் ரத்தம் வரப்போவதை முன்னரே உணர்ந்தாலும் ரத்தத்தைக் காணும்போது தோன்றும் அதிர்ச்சி போல.
திருவாரூரில் இறங்கியபோது கமலாபுரத்துக்கு பேருந்தேறத் தோன்றவில்லை. தைலம்மை தியேட்டர் வாசலில் போய் நின்றாள். பிறகு வாசன் ஸ்வீட்ஸ் வாசலில். பிறகு செல்வீஸ் ஸோட்டல் எதிரே. அதன் பிறகு சகாரா சூப்பர் மார்க்கெட் வாசலில். வெளியே வருகிறவர்களைப் பார்க்கப் பார்க்க ஆதங்கம் கூடியது. அமுதாவுக்கு முப்பத்தைந்து வயது முடிவடைந்து ஒரு மாதம் ஆகிறது. கணவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது அவளை செல்ஃபி எடுக்கக் கூப்பிடுவார். சில சமயம் இவளாகவும் எடுத்துப் பார்த்திருக்கிறாள். புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற குறுகுறுப்பு அவளுக்குள் மிக மகிழ்ச்சியான சமயங்களில் தான் தோன்றும். முகத்தைக் கழுவி நன்றாகச் சிரித்துக் கொண்டு படம் எடுத்துப் பார்ப்பாள். எடுக்கும் கணத்தில் கூட தன் முகம் அழகாக இருப்பதாகவே அவளுக்குத் தோன்றும். ஆனால் எடுத்தபிறகு அந்த படத்தில் முகத்தில் துப்பிய எச்சில் போல அழகின்மையும் முதுமையும் வழியும். ஆனால் அவள் வெளியே நின்ற இடங்களிலிருந்து வெளியே வரும் பெண்களிடம் அந்த முதுமை இல்லை. பேரக்குழந்தைகளைத் தூக்கி வருகிறவள்கூட அழகாகவே இருக்கிறாள். காரில் ஏறிப் போகிறார்கள். இந்தக் காரில் அடிபட்டு அவர்கள் சாகமாட்டார்களா? இங்கு ஒரு பூகம்பம் வந்து வசதியின் மகிழ்ச்சியால் நிரம்பிய இந்த உடல்கள் சிதைந்து போகாதா? அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. யார் மீது கோபங்கொள்வது என்றும் தெரியவில்லை.
மீண்டும் பேருந்து நிலையத்துக்கு வந்த போது இதுவரை மனதைத் தூக்கி நிறுத்தியிருந்த இலக்கில்லாத ஆற்றாமை வடியத் தொடங்கியது. அந்த வடிதல் அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு கோபத்துக்குப் பிறகும் கூட அவள் ஏறிய பேருந்து மெதுவாகவே சென்றது. அதன் உட்புறம் கொஞ்சமாகவே ஒளியூட்டப்பட்டிருந்தது. அமுதாவுக்கு அந்த கார்களில் செல்கிறவள்களின் ஞாபகம் ஒரு துரோகச் செயலைப்போல மீண்டும் வந்தது. அவளது ஆற்றாமையை மதித்து ஒருவர் கூட்டுறவு நகரில் தன் இருக்கையை விட்டு எழுந்து இறங்கிச் சென்றார். அந்த இருக்கையில் தலை மொத்தமும் நரைத்த ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். அமுதாவுக்கு அமரலாமா வேண்டாமா என்று ஒரு கணம் குழப்பம் ஏற்பட்டது. அவருக்கு தன் அப்பாவை விட சில வயதுகள் அதிகம் இருக்கும் அல்லது அவரொரு அன்னிய ஆண். இரண்டு சாத்தியங்களுக்கு இடையே குழம்பிக் கொண்டிருந்தவளை “ஏம்மா நிக்கிற? வேலைக்கு வேற போயிட்டு வர்ற போலருக்கு. செத்த இப்படி உக்காரு” என்று அவரே நிமிர்ந்து பார்த்து சத்தமாகச் சொன்னார். அந்த கணத்தில் அவரைத் தவிர உலகில் தனக்கு அடைக்கலம் தர யாருமே இல்லையென்று அமுதா நினைத்துக் கொண்டு அவரருகில் அமர்ந்தாள்.
“எந்த ஊரும்மா?” அதே சத்தமான
“கமலாபுரங்க”
“அது நீ எறங்குற ஊரு. நீ எந்த ஊரு?”
அவள் ஊரைச்சொல்லத் தயங்கினாள்.
“ஊரச் சொன்னா நா என்ன ஓ ஊட்டுக்கு ரவைக்கு சாப்பாடு கேட்டா வரப்போறன் இப்பிடி யோசிக்கிற?”
வெற்றிலையால் சிவந்த வாய் நிறையப் புன்னகைத்தார். அமுதாவும் சிரித்தாள். ஆனால் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. ஆனால் அவர் விடுவதாகத் தெரியவில்லை.
“வீட்டுக்கு வந்தா ஒரு வா சோறு குடுக்கமாட்டியா?” இப்போதும் அவர் குரலின் சத்தம் குறையவில்லை என்றாலும் அதில் ஒரு கெஞ்சல் தட்டுப்பட்டது. அந்தக் கெஞ்சல் அமுதாவுக்குப் பிடித்திருந்தது.
“ஏதோ பாணிபரதேசிக்கு போடுறதா நெனச்சு உனக்கு போட்டாப்போச்சு” என்றாள். அவரிடம் அப்படிப் பேசுவதில் தவறில்லை என்று தோன்றியது.
“பரதேசியா? ஒறவுக்காரனாட்டமெல்லாம் நெனச்சுக்க மாட்டியாக்கும்”
முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இரு பெண்கள் திரும்பிப் பார்த்தனர். அவர் முகத்தோரணை அவரை கேலி செய்யும் தெம்பை அந்தப் பெண்களுக்குக் கொடுத்தது.
“என்னா ஒறவுன்னு ஒன்ன நெனக்கச் சொல்ற”
அவர் இப்போது அமுதாவை விடுத்து அப்பெண்ணிடம் பேசத் தொடங்கினார்.
“புருசனா நெனச்சிக்கயேன்”
“ஆமா இருக்கிற புருசனே எப்ப போவான்னு யோசனையா கெடக்கு. நீ வேற பங்குக்கு வாறியாக்கும்”
இப்போது முன் பின் இருக்கைகளிலிருந்த ஆண்களிடமிருந்து முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கின. ஆனால் அவர் அதையெல்லாம் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அமுதாவுக்குச் சற்று பயமும் கூடவே எச்சரிக்கையும் ஏற்படத் தொடங்கியது.
அவர் அமுதாவைப் பார்த்து “இந்த முண்ட சரிப்படமாட்டா போலருக்கு. நீ உன் ஊரச் சொல்லு. நா உங்கூடவே வந்துடுறேன்” என்றார். அமுதாவுக்கு அப்போதும் சிரிப்புதான் வந்தது.
அவர்களின் அமர்ந்திருந்த வரிசையிலிருந்து சில இருக்கைகள் தள்ளி கருத்த வலுவான உடலுடைய ஒருவர் எழுந்தார்.
“டேய்” என்றார்.
அமுதாவின் அருகில் அமர்ந்திருந்தவர் திரும்பவில்லை.
“உன்னத்தாண்டா” என்று அவர் அருகில் வந்து தோளைத்தட்டினார்.
தலை நரைத்தவரின் முகம் கருத்தது.
“தம்பி மரியாதையா பேசுங்க” அவர் குரல் அருவருப்பூட்டுமளவு நடுங்கியது. அவர் அருகில் அமர்ந்திருப்பது இப்போது கூசக்கூடியதாகத் தோன்ற அமுதா உடனடியாக எழுந்து கொண்டாள். அவள் எழுந்தது வந்தவருக்கு வார்த்தைகளை எடுத்துக் கொடுத்தது.
“நானும் பாத்துட்டே இருக்கேன். ஒம் மவ வயசிருக்கும் அந்த பொண்ணுகிட்ட என்னடா பேசிட்டுருக்க நீ”
இப்போது நரைத்த தலைக்காரரும் எழுந்தார்.
“நீ என்ன அவ புருசனா. அவளே ஆம்பள சூட்டுக்கு பக்கத்துல வந்து ஒக்காந்துருக்கா” என்று அதே கேலியான குரலில் சொன்னார். அமுதாவுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. இப்போது எழுந்து வந்தவர் சற்று பின்வாங்குவது போலத் தெரிந்தது.
“இதெல்லாம் கேக்கப்போனா நமக்குத்தான் அசிங்கம் சார்” என்று அவர் இருக்கைக்குப் போகும்போது நாகரிகத்தில் அவரைப் போலவே தென்பட்ட இன்னொருவரிடம் சொன்னார்.
அவர் அமர்வதற்கு முன்னதாகவே அமுதா அடித்தொண்டையில் இருந்து கத்தினார்.
“ஏன்டா கெழட்டு ஒலுக்கக்குடுக்கி. நா பூரா வேலை செஞ்சு கஷ்டப்பட்டு பஸ்ஸுல ஒக்கார வந்தா ஒஞ்சூட்டுக்குன்னு வந்து ஒக்காந்ததா நெனச்சியா. ஒம்மாவ வந்து ஒக்காரா சொல்றா கம்முனாட்டி பயலே”
அமுதா தான் அப்படிக் கத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரவே சற்று நேரம் பிடித்தது. தன்னால் அப்படிக் கத்த முடிகிறது என்பது அவளுக்கு அழுகையை வரவழைத்தது. அவளுள் தனித்து நின்ற உணர்வுத்துளிகளை அழுகையை ஒன்றாக இணைத்துவிட அமுதா ஓங்கி அழத் தொடங்கினாள். அவள் அழுகை பேருந்தில் இருந்தவர்களிடம் இரக்கத்தை ஏற்படுத்தியது. தன் இருக்கையில் அமரச் சென்ற கருத்த வலுவான மனிதர் தன் தரப்புக்கு வலு கிடைத்ததும் மீண்டும் நரைத்த தலைக்காரரிடம் வந்தார். அவருள் ஏற்கனவே அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்ததால் நிரம்பியிருந்த ஆற்றாமை இப்போது வெளிக்கிளம்பியது.
கிழவரை ஓங்கி அறைந்தார். அவர் ஏதும் பேசுவதற்கு அவசியமே இருக்கவில்லை. அவருடன் மேலும் இருவர் இணைந்து கொண்டனர். நரைத்த தலைக்காரர் அடிவாங்குவது அமுதாவினுள் ஒரு கொடூரமான நிம்மதியை உண்டுபண்ணியது. அந்தக் காட்சி மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பே கமலாபுரம் வந்துவிட்டது. இறங்கி விடுவிடுவென நடந்த போது நரைத்த தலைக்காரரை அடித்த ஆண்களின் கண்கள் தன்னைத் தொட்டுத் தொட்டு சென்று மீண்டதை அவள் நினைவுக்கு வந்தது. அவள் உடல் ஒரு கணம் சிலிர்த்தது.
-சுரேஷ் பிரதீப்
அருமையான கதை…
நல்ல மொழிநடை . தொடர்ந்து வாசிக்க முடிகிறது .
இரண்டு நெருடல்கள் இந்த கதையில் தோன்றியது . முதலாவது கொத்தனார் வேலை செய்பவர்களை ஒட்டுமொத்தமாக ஸ்திரீலோலன்களாக சித்தரிப்பது .அவர்களிலும் அவ்வகையினர் உண்டுதான் . ஆனால் முழுக்க அப்படியில்லை .
இரண்டாவது
கடைசி காட்சியில் ஆண்கள் அனைவரும் மோசமானவர்கள் என
பொதுப்புத்தி சார்ந்த மதிப்பீட்டை தருவது .
கதையில்
கட்டிட வேலைக்கு செல்பவர்களின் வாழ்வியல் குறித்து சில நல்ல தருணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது .
வாழ்த்துகள்
Writing is very engaging! Depicts a day of the women’s life struggles vey well!
கடைசி வார்த்தை //சிலிர்த்தது//, ‘கூசியது’ என்றிருக்க வேண்டாமோ? ஆங்கில மொழிபெயர்ப்பாளர் என்ன வார்த்தை தேர்வார்?