வேட்டைக்காரன்

வெக்கையும் புழுக்கமுமான நண்பகல் வேளை. வானம் சிறு மேகம் கூட இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது. காய்ந்துகிடந்த புற்கள் இனி மழை கண்டாலும் பசுமை காண்பதற்கில்லை என்பது போன்று அவநம்பிக்கையோடு காட்சியளித்தன. காடு அமைதியாய் அசைவற்று நின்றுகொண்டிருந்தது. அதன் உச்சிக்கொப்புகள் யாரையோ அல்லது எதையோ எதிர்பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தன.

காடு திருத்தப்பட்ட நிலத்தின் விளிம்புக்கப்பால் உயரமான, குறுகிய தோள்களையுடைய, சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் சோர்ந்த நடையுடன் சென்றுகொண்டிருந்தான். அவன் குதிகாலுயர்ந்த காலணியும் எந்தக் கனவானோ ஒரு காலத்தில் உடுத்திக் கழித்த சிவப்பு நிற மேற்சட்டையும், ஒட்டுப்போட்ட காற்சட்டையும் அணிந்திருந்தான். அவன் சாலையோரம் மெதுவாய் ஆடி அசைந்து சென்றுகொண்டிருந்தான்.

அவனுக்கு வலப்பக்கம் பசிய நிலப்பரப்பும் இடப்பக்கம் தொடுவானம் வரை பொன்னிறத்தில் கடல்போல பரந்த, முற்றிய கம்பு தானிய வயல்களும் காட்சியளித்துக் கொண்டிருந்தன. அவன் உடல் சிவந்து, வியர்வை வழிந்துகொண்டிருந்தது. யாரோவொரு உயர்குடி இளைஞனின் தயவால் வெள்ளைத் தொப்பியொன்று அவனுடைய நார் மயிர்த் தலையில் அழகாய்ப் பொருந்தியிருந்தது.

அவனுடைய தோளில் மாட்டப்பட்டிருந்த வேட்டைப் பையுள் ஒரு கருஞ்சேவல் இருந்தது. சாலையோரப் புதர்களை மோப்பம் பிடித்தபடி அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அவனுடைய மெலிந்த கிழட்டு நாயிருக்கும் திசையில் தன்னுடைய இரட்டைக் குழல் துப்பாக்கியால் குறிபார்த்து விசையை அழுத்த விரலை வைத்தான். எங்கும் ஒரே அமைதி. துளி சத்தமில்லை. எல்லா ஜீவராசிகளும் வெயிலுக்குப் பயந்து எங்கோ பதுங்கியிருந்தன.

“யேகோர் விளாசிச்” சட்டென்று ஒரு மெல்லிய குரல் கேட்டது. அவன் எரிச்சலோடு திரும்பினான். பூமியைத் துளைத்துக்கொண்டு வந்தவள் போல, வெளிறிய முகத்துடனும், கையில் கருக்கரிவாளுடனும் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் அவனை ஏறெடுத்துப் பார்க்கமுயன்று முடியாமல் கூச்சத்துடன் புன்னகைத்தாள்.

“பெலகியா, நீயா?”

வேட்டைக்காரன் வேறு வழியில்லாமல் துப்பாக்கியின் விசையிலிருந்து விரலை எடுத்துவிட்டுக் கேட்டான்,

“நீ எப்படி இங்கே?”

“நம் கிராமத்துப் பெண்கள் இங்கே வேலை செய்கிறார்கள். அவர்களோடு நானும் ஒரு கூலியாளாக வந்தேன், யேகோர் விளாசிச்.”

“ஓ..” முனகலாய் சொல்லிவிட்டு யேகோர் விளாசிச் மெல்ல நடக்க ஆரம்பித்தான்.

பெலகியா அவனைப் பின்தொடர்ந்தாள். இருபதடி தூரம் அவர்கள் எதுவும் பேசாமல் சென்றார்கள்.

“உங்களைப் பார்த்துப் பல காலம் ஆகிவிட்டது யேகோர் விளாசிச்” பெலகியா முன்னே செல்பவனின் தோள்களை இளக்கமாய்ப் பார்த்துக்கொண்டே சொன்னாள். “ஈஸ்டரின் போது நம் குடிசைக்குத் தண்ணீர் குடிக்க வந்தீர்கள், அதன் பிறகு நான் உங்களைப் பார்க்கவே இல்லை. ஈஸ்டர் அன்றும் ஒரு நிமிடம்தான்.. நீங்கள் எவ்வளவு குடித்திருந்தீர்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும், என்னைத் திட்டினீர்கள். அடித்தீர்கள்.. பிறகு போய்விட்டீர்கள். நான் உங்களுக்காகக் காத்துக்கொண்டே இருந்தேன். காத்திருந்து காத்திருந்து என் கண்கள் பூத்துப் போனதுதான் மிச்சம். யேகோர் விளாசிச்.. நீங்கள் ஒரு தடவையாவது நம் வீட்டுக்கு வரவேண்டும்.”

“அங்கே எனக்கென்ன வேலை இருக்கிறது?”

“தெரியும், உங்களுக்கு அங்கே ஒரு வேலையும் இல்லை. ஆனாலும் நீங்கள் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டிய இடம் அது. எல்லாம் எப்படிப் போகிறதென்று நீங்கள் பார்க்கவேண்டும். நீங்கள்தானே குடும்பத்தின் தலைவன். நீங்கள் ஒரு கருஞ்சேவலை வேட்டையாடியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.. யேகோர் விளாசிச்.. நீங்கள் இப்போது உட்கார்ந்து ஓய்வெடுக்கவேண்டும்.”

இவற்றையெல்லாம் பெலகியா யேகோரின் முகத்தைப் பார்த்து ஒரு சிறுமியைப் போலச் சிரித்துக்கொண்டே சொன்னாள். அவள் முகம் முழுவதும் மகிழ்ச்சியால் பூரித்திருந்தது.

“உட்காருவதா? உனக்கு விருப்பமென்றால் சரி.” யேகோர் அலட்சியத் தொணியில் சொல்லிக்கொண்டு இரண்டு தேவதாரு மரங்களுக்கிடையிலிருந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான். “நீ ஏன் நிற்கிறாய்? நீயும் உட்கார்”

பெலகியா சற்றுத்தள்ளி வெயிலில் அமர்ந்துகொண்டாள். அவளுடைய சந்தோஷத்தை எண்ணி அவளுக்கே வெட்கமாயிருந்தது. பொங்கிவரும் புன்னகையை அடக்கமாட்டாமல் கைகளால் மறைத்துக்கொண்டாள். இரண்டு நிமிடங்கள் மௌனமாய்க் கழிந்தன.

“நீங்கள் ஒரு தடவையாவது நம் வீட்டுக்கு வந்துபோகவேண்டும்” பெலகியா சொன்னாள்.

“எதற்காக?” யேகோர் தொப்பியைக் கழற்றி சிவந்து வேர்த்திருந்த முன்னெற்றியைத் துடைத்தவாறே சலிப்புடன் கேட்டுவிட்டுச் சொன்னான்,

“நான் வருவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. ஒரு மணி நேரமோ.. இரண்டு மணி நேரமோ.. என் நேரத்துக்குப் பிடித்த கேடு. கடைசியில் உனக்குத்தான் கஷ்டம். அந்தக் கிராமத்தில் தொடர்ந்து தங்க என்னால் முடியாது. உனக்கே தெரியும், நான் வசதியாய் வாழக்கூடியவன். எனக்குப் படுப்பதற்கு மெத்தை வேண்டும். குடிக்க நல்ல தேநீர் வேண்டும். கண்ணியமாக உரையாடவேண்டும். எனக்கு எல்லாவற்றிலும் உயர்தரமானவை வேண்டும். நீயோ வறுமையிலும் கிராமத்துப் புழுதியிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். என்னால் ஒரு நாள் கூட அதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது. சட்டப்படி நான் உன்னோடு அங்கு வாழ்ந்தாகவேண்டும் என்ற கட்டாயம் வந்தால் ஒன்று குடிசைக்குத் தீ வைப்பேன் அல்லது தற்கொலை செய்துகொள்வேன். சிறிய வயதிலிருந்தே கஷ்டப்படாமல் வளர்ந்துவிட்டேன். இப்போது மாற்ற முடியாது.”

“இப்போது எங்கே வசிக்கிறீர்கள்?”

“டிமித்ரி இவானிச் என்ற கனவானோடு, வேட்டைக்காரனாக வசிக்கிறேன். நான் எனது வேட்டைப் பொருட்களால் அவரது மேசையை நிரப்புகிறேன். அவருக்கு வேறெதையும் விட இதுதான் பெரிய மகிழ்ச்சி. அதற்காகவே அவர் என்னை வைத்திருக்கிறார்.”

“நீங்கள் செய்வது சரியான வேலையல்ல யேகோர் விளாசிச். மற்றவர்களுக்கு அது பொழுதுபோக்கு. ஆனால் உங்களுக்கு இது தொழில். உண்மையான வேலை.”

“உனக்கு இதெல்லாம் புரியாது, நீ ஒரு மக்கு.” யேகோர் வானத்தை வெறித்தபடி சொன்னான், “நீ ஒருபோதும் என்னைப் புரிந்துகொள்ளவில்லை, எவ்வளவு காலம் ஆனாலும் நீ என்னைப் புரிந்துகொள்ளப் போவதுமில்லை. நீ என்னை முட்டாள், மோசமானவன் என்று நினைக்கிறாய், ஆனால் என்னைப் பற்றி அறிந்தவர்களுக்குத்தான் தெரியும், இந்த வட்டாரத்திலேயே நான் எவ்வளவு பிரமாதமான வேட்டைக்காரன் என்பது. பெரிய மனிதர்கள் என்னைப் பற்றிய செய்திகளைப் பத்திரிகைகளில் அச்சடிக்கிறார்கள். எனக்கு நிகரான வேட்டைக்காரன் இங்கு யாருமே கிடையாது. நானொரு சுகவாசி என்பதாலோ பெருமைக்குரியவன் என்பதாலோ உன் கிராமத்து வேலையை வெறுக்கவில்லை. என் சிறிய வயதிலிருந்தே துப்பாக்கியையும் நாயையும் தவிர வேறு எதற்கும் ஆசைப்பட்டதே இல்லை. யாராவது என் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டால் தூண்டிலை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்கப் போவேன். தூண்டிலைப் பறித்துக்கொண்டால் கைகளைக் கொண்டு எதைப் பிடிக்கமுடியுமோ அதைப் பிடிப்பேன். நான் குதிரை வியாபாரத்தில் கூட ஈடுபட்டிருக்கிறேன். என்னிடம் பணம் இருந்தால் சந்தைகளுக்குப் போவேன். உனக்குத் தெரியுமா, ஒரு விவசாயி வேட்டைக்காரனாகவோ, குதிரை வியாபாரியாகவோ மாறிவிட்டால், விவசாயத்துக்கு அவன் முழுக்குப் போட்டுத்தான் ஆகவேண்டும். சுதந்திரத்தின் வேகம் ஒருவனை ஆட்கொண்டுவிட்டால் அதை அவனிடத்திலிருந்து மீண்டும் பறிப்பது கடினம். அதைப் போலவே ஒருவன் நடிகனாகவோ, கலைஞனாகவோ மாறிவிட்டால் மறுபடியும் அவனால் ஒரு அலுவலகப் பணியாளனாகவோ, பண்ணையாளனாகவோ மாறவே முடியாது. நீ ஒரு பெண், உன்னால் இதையெல்லாம் புரிந்துகொள்ளவே முடியாது.”

“நான் புரிந்துகொண்டேன், யேகோர் விளாசிச்”

“இல்லை, உனக்குப் புரியாது.. நீ இப்போது அழ ஆரம்பித்தால்..”

“நான் அழவில்லை.” பெலகியா சொல்லிவிட்டுத் திரும்பிக்கொண்டாள். “இது நான் செய்த பாவம், யேகோர் விளாசிச். அதிர்ஷ்டம் கெட்ட என்னோடு ஒருநாளாவது நீங்கள் தங்கிச் செல்லுங்கள். நமக்குத் திருமணமாகி பன்னிரண்டு வருடம் ஆகிறது.. ஆனால்.. ஆனால்.. ஒருபோதும் நமக்குள் காதல் இருந்ததில்லை.. நான்.. நான்.. அழவில்லை.”

“காதல்..” யேகோர் தலையைச் சொரிந்துகொண்டு முணுமுணுத்தான். “அங்கே காதல் இருக்கமுடியாது. நாம் பேருக்குத்தான் கணவன் மனைவியாக இருக்கிறோம். உண்மையில் அப்படி இல்லை. உன் பார்வையில் நானொரு காட்டுமிராண்டி. என் பார்வையில் நீ எதையும் புரிந்துகொள்ள முடியாத ஒரு சாதாரண விவசாயக் கூலிக்காரி, நமக்குள் என்ன பொருத்தம் இருக்கிறது? நான் சுதந்திரமான, உல்லாசமான, ஊர்சுற்றி. நீயோ மரப்பட்டையாலான காலணிகளை அணிந்துகொண்டு முதுகு நிமிராமல் உழைப்பவள். எல்லாவகையான வேட்டைகளிலும் நானே சிறந்தவன் என்ற பெருமையோடு என்னை நான் பார்க்கிறேன். நீயோ.. என்னைப் பரிதாபத்துக்குரியவனாகப் பார்க்கிறாய்.. இதுதான் பொருத்தமான தம்பதிகளுக்கு அழகா?”

“ஆனால்.. நமக்குத் திருமணமாகிவிட்டது, யேகோர் விளாசிச்” பெலகியா விம்மினாள்.

“அது நம் விருப்பத்தின் பேரில் நடைபெறவில்லை என்பதை மறந்துவிட்டாயா? செர்கி பேலோவிச் பிரபுவுக்கும் உனக்கும்தான் நீ நன்றி சொல்லவேண்டும். வேட்டையில் நான் அவனைவிடக் கெட்டிக்காரன் என்பதால் என் மீது அவனுக்குப் பொறாமை. அதனால் வேண்டுமென்றே ஒரு மாத காலம் தொடர்ச்சியாக எனக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துக்கொண்டே இருந்தான். ஒருவன் குடிபோதையில் இருக்கும்போது யாரும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், திருமணம் செய்விப்பது ஒருபுறம் இருக்கட்டும், அவன் மதத்தைக்கூட மாற்றிவிட முடியும். அப்படிதான் அவன் என்னைப் பழிவாங்குவதற்காக நான் நிதானத்தில் இல்லாதபோது உன்னை எனக்குத் திருமணம் செய்துவைத்தான். வேட்டைக்காரனின் மனைவி போயும் போயும் ஒரு ஆட்டுக்காரியா? உனக்குத் தெரியுமல்லவா, நான் குடிபோதையிலிருக்கிறேன் என்று? அப்படியிருந்தும் நீ ஏன் என்னைத் திருமணம் செய்துகொண்டாய்? நீ ஒன்றும் அவனுடைய கொத்தடிமை கிடையாது. நீ நினைத்திருந்தால் மறுத்திருக்கலாம். ஆனால்… ஆடு மேய்ப்பவளுக்கு வேட்டைக்காரன் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்வாய்? அதிர்ஷ்டம் என்று அமைதியாக இருந்துவிட்டாய். நீ அப்போதே யோசித்திருக்கவேண்டும். இப்போது அனுபவிக்கிறாய்.. அழு.. நன்றாக அழு. பிரபு வர்க்கத்துக்கு இது ஒரு விளையாட்டு.. ஆனால் உனக்கு அழுகையும் துயரும். போ.. போய் சுவரில் முட்டிக்கொண்டு அழு.”

சற்று நேரம் அமைதி நிலவியது. மூன்று காட்டுவாத்துகள் புல்வெளிக்கு மேலாய் பறந்து சென்றன. காட்டுக்கு அப்பால் அவை மூன்று புள்ளிகளாய் மறையும் வரை யேகோரின் கண்கள் அவற்றைப் பின்தொடர்ந்து சென்றன. வாத்துகள் கண்ணை விட்டு மறைந்ததும் பெலகியாவின் பக்கம் திரும்பிக் கேட்டான்,

“சரி, நீ எப்படி வாழ்க்கை நடத்துகிறாய்?”

“இப்போது கூலி வேலைக்குப் போகிறேன். குளிர்காலத்தில் அநாதை இல்லத்திலிருந்து ஒரு குழந்தையை எடுத்துவந்து புட்டிப்பால் கொடுத்து வளர்ப்பேன். ஒரு மாதத்துக்கு ஒன்றரை ரூபிள் கொடுப்பார்கள்.”

“ஓ..”

மறுபடியும் அமைதி.

அறுவடை வயலிலிருந்து மெல்லிய பாடலொன்று அறுபட்ட ஆரம்பத்துடன் கேட்டது. பாட்டுப் பாட முடியாத அளவுக்கு வெய்யில் கொளுத்தியெடுத்தது.

“எல்லாரும் சொல்கிறார்கள், நீங்கள் அக்குலினாவுடன் ஒரு புதிய குடிசையில் வசிக்கிறீர்களாம்.”

யேகோர் எதுவும் பேசவில்லை.

“அப்படியென்றால் அவள்தான் உங்கள் அன்புக்குரியவளா?”

“எல்லாம் உன் நேரம், உன் விதி.” வேட்டைக்காரன் நெளிவெடுத்தபடி சொன்னான், “நீ அதன்படிதான் வாழ்ந்தாகவேண்டும், சரி, நான் போய்வருகிறேன்.. நிறையப் பேசிவிட்டோம். இன்று மாலைக்குள் நான் போல்டோவோவில் இருக்கவேண்டும்.”

யேகோர் எழுந்து உடலை முறுக்கி நெளிவெடுத்தான். துப்பாக்கியை எடுத்துத் தோள்களில் மாட்டிக்கொண்டு கிளம்பினான். பெலகியா எழுந்தாள்.

“பிறகு எப்போது நம் கிராமத்துக்கு வருவீர்கள்?” அவள் மெல்லிய குரலில் கேட்டாள்.

“எனக்கு அங்கே வர ஒரு காரணமும் இல்லை. குடிக்காமல் நிதானத்தில் இருக்கும்போது ஒருபோதும் அங்கு வர வாய்ப்பே இல்லை. குடித்துவிட்டு வந்தாலும் என்னிடமிருந்து நீ எதையும் பெறமுடியாது. குடிபோதையில் இருக்கும்போது பழிவாங்கும் எண்ணத்துடன் தான் இருப்பேன். நான் போய்வருகிறேன்.”

யேகோர் தொப்பியை அணிந்துகொண்டான். சொடக்கு போட்டு நாயை அழைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான். பெலகியா அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றாள். அவனுடைய அசையும் தோள்பட்டைகளையும், அழகான தொப்பியையும், அலட்சியமான நடையையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் சோகமும் பிரியமும் நிறைந்திருந்தன. அவளுடைய பார்வை ஓடிச்சென்று அவள் கணவனின் ஒடிசலான நெகுநெகுவென்ற உருவத்தை ஆரத்தழுவிக்கொண்டது. அவனும் அதை உணர்ந்தவன்போல் நின்று திரும்பி அவளைப் பார்த்தான். எதுவும் பேசவில்லை. ஆனால் அவனுடைய முகத்திலிருந்து, தொய்ந்த தோள்களிலிருந்து… அவன் அவளிடம் எதையோ சொல்ல விரும்புகிறான் என்பது பெலகியாவுக்குப் புரிந்தது. தயக்கத்துடன் அவனருகில் சென்றவள் இறைஞ்சும் விழிகளால் அவனை ஏறிட்டாள்.

“இதை வைத்துக்கொள்” கசங்கிய ரூபிள் ஒன்றை அவள் கையில் திணித்துவிட்டுத் திரும்பி விடுவிடுவென்று நடந்தான்.

“போய்வாருங்கள், யேகோர் விளாசிச்” இயந்திரத்தனமாய் அந்த ரூபிளைப் பெற்றுக்கொண்டு சொன்னாள்.

அந்த நெடிய சாலையில் இழுத்துக்கட்டப்பட்ட வார் போல விறைப்புடன் அவன் சென்றுகொண்டிருந்தான். அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் வெளிறிய முகத்துடன் சிலையாய் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் தொலைவில் செல்லச் செல்ல அவனுடைய சட்டையின் சிவப்பு நிறம் கால் சராயின் அடர் நிறத்துடன் கலந்துவிட்டிருந்தது. அவன் எடுத்துவைக்கும் அடிகளைப் பார்க்கமுடியவில்லை. அவனுடைய பாதணிக்கும் நாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை. இப்போது அவனுடைய எதுவுமே தெரியவில்லை, தொப்பியைத் தவிர. சட்டென்று யேகோர் பசிய வெளியினுள் இறங்கி முற்றிலுமாய் மறைந்துபோனான்.

இன்னுமொரு முறை வெள்ளைத் தொப்பியின் தரிசனம் கிடைக்காதா என்ற நப்பாசையுடன் நுனிக்காலில் உந்தி நின்று பார்த்த, பெலகியா கிசுகிசுப்பாய் சொன்னாள், “போய்வாருங்கள், யேகோர் விளாசிச்”

 


 

மூலக்கதை:  The Huntsman

மூலக்கதை ஆசிரியர்:  Anton chekhov

தமிழாக்கம்:  கீதா மதிவாணன்


ஆசிரியர் குறிப்பு:

அன்டன் செகாவ் (1860-1904)
இரஷ்ய இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். சிறுகதை எனும் வடிவத்தின் தந்தையாகவும் போற்றப்படுகிறார். சிறுகதை எனும் வடிவத்தை மிகச் சிறப்பாக செதுக்கியவர்.

ஆன்டன் செகாவ் தன் வாழ்நாளில் எழுதிய 50-க்கும் மேற்பட்ட  சிறுகதைப் படைப்புகளில் தலைசிறந்த சிறுகதைகளில் ஒன்று ‘வேட்டைக்காரன்’

கீதா மதிவாணன்:

ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரத்தில் வசிக்கும் கீதா மதிவாணன் “என்றாவது ஒருநாள்” (ஹென்றி லாசன் எழுதிய ஆஸ்திரேலியக் காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பு) என்ற நூலை வெளியிட்டுள்ளார்  கீதமஞ்சரி எனும் வலைத்தளத்தில் படைப்புகளை எழுதி வருகிறார்.

 

8 COMMENTS

  1. ஆன்டன் செக்கோவ் சிறுகதைகளின் தந்தை….!!

    எல்லா காலகட்டத்திற்கும் இந்தக் கதையை எடுத்துக்கொள்ளலாம்…

    கதையில் பாசப் போராட்டங்கள் நடைபெறுகிறது மற்றும் கதாநாயகன் சந்தர்ப்ப சூழ்நிலையால் நண்பனின் மூலம் வஞ்சிக்கப்படுகிரான்… கதாநாயகனும் கதாநாயகியும் உரையாடல் மீதிக்கதை சுவாரசியம் என்னவென்றால் உணர்ச்சிகள்….

    மிகவும் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார் கீதா மதிவாணன் அம்மா அவர்கள்… வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா….

  2. கதையின் களம் நமது ஊர் போல உள்ளது.இயல்பான மொழி நடை.அருமையான மொழி பெயர்ப்பு. நன்றி.

  3. யோகேர் விளாசிச், பெலகியா, டிமித்ரி இவானிச், செர்சி போலோவிச், அக்குலினா, போல்டோ போன்ற பெயர்கள் இடம் பெற்றிருப்பதால் மட்டுமே இது மொழிபெயர்ப்பு கதை என்று கூற முடிகிறது. இந்த பெயர்கள் இல்லாமல் இருந்தால் மொழிபெயர்ப்பு கதை என்று அறிய முடியாது. அந்தளவுக்கு அருமையாக மொழிபெயர்த்துள்ளார்கள். உண்மையில் படிக்கும்போது மொழிபெயர்ப்பு கதை என்ற உணர்வே ஏற்படவில்லை.

  4. சுதந்திரமான மனிதன் தனக்கு நிகழ்தப்பட்ட கேடுகளுக்கு பதில் கேட்டை ஒரு பெண்ணில் திணித்து வைக்கிறான் ஆனால் அவன் கேட்டை அவன் உணரவில்லை ஒரு ரூபிள் நோட்டின் வழியே அதை கடக்கிறான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.