நாஞ்சில் நாடன் கதைகள்

நாஞ்சில் நாடன் புனைவுலகின் மிகப்பெரிய பலம் அதன் வட்டாரத்தன்மை ஒரு படைப்பு வட்டாரத்தன்மையால் மட்டும் அதன் இலக்கிய மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. அது சமூகத்தோடு கொள்ளும் உறவில் திரண்டு வருகிறது. ஒரு படைப்பு தன் சமூகத்தில் கலக்கத்தை உண்டு பண்ணலாம். காருண்யத்தைக் கொண்டுவரலாம். படைப்பு நேர்மை என்ற ஒன்று உண்டு. படைப்பாளி தன் அனுபவம் சார்ந்த பார்வையிலிருந்து அதனை உண்டாக்குகிறான். அந்தப்பார்வை நியாயத்தின் பக்கம் நின்று விவாதிக்கிறது, உரையாடுகிறது, முரண்படுகிறது, மனித சமூகத்தைச் சற்றே மேலெடுக்க முயல்கிறது. எனவே வட்டாரத்தன்மை மட்டும் படைப்பின் இலக்கியத்தன்மை என்றாகிவிடுவதில்லை. வட்டாரத்தன்மை என்ற மண்ணில் வேர்விட்டு உயர்ந்து நிற்கும் பெருமரத்தைப் போன்றது இலக்கியம். நாஞ்சில் நாடன் கதைகளில் இவ்விரண்டு அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று பிரிக்கவே முடியாதபடி ஊனும் உயிருமாகத் தோன்றிவிடுகிறது. வட்டாரத்தன்மை என்ற ரத்தமும் சதையுமான இந்த அம்சம் கூடுதல் அழகோடு நாஞ்சில் நாடன் கதைகளில் கூடி வருகின்றன.

நாஞ்சில் நாடனின் பிற்காலக் கதைகள் பம்பாய், நாக்பூர், கோவை போன்ற நகரங்களில் நிகழ்கின்றன. அந்நகரத்தின் மனித வாசனையோடு வீசுகின்றன. வட்டாரத்தன்மை என்பதைக் கதைகள் வேர்கொள்ளும் நிலம் சூழல் மானிடப் பண்புகளோடு தொடர்புடையதாகக் கொள்வதால் இக்கதைகளின் வேறுவகையான பின்னணியை நிறைவாகக் கொண்டு வருகிறார். இதில் கி.ரா. வை விட நாஞ்சில் ஒரு படி மேலே நிற்கிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நாஞ்சில் நாடும் அம்மக்களும் எப்படி இருந்தனர், முரண்பட்டனர், இசைவு கொண்டு வாழ்ந்தனர் என்பதற்கு நாஞ்சில் நாடனின் கதைகள் துல்லியமான திரைமொழி ஆவணம் போல் இருக்கின்றன. இவரது ஒட்டுமொத்த படைப்புகள் நாஞ்சில் நாட்டுக்குத் தந்திருக்கும் பெருங்கொடையாகக் கருதுகிறேன். அதற்கும் மேலாக அப்படைப்புகள் பொதுமனிதர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை பேசுவதாகவும் அமைந்திருக்கின்றன. நேற்றுப்படித்த நாஞ்சில் நாடனிலிருந்து இன்று படிக்கிற நாஞ்சில் நாடன்  புதிய தெளிவுகளையும் வெளிச்சங்களையும் தருபவராக இருக்கிறார். அறிதொரும் அறிதொரும் நம்மிடம் அறியாமை இருப்பதை அறியவைக்கும் படைப்புகளே மேலான படைப்புகள்.

நாஞ்சிலின் புனைவுகளில் நம்மை உடனடியாகக் கவர்வது அவரது மொழியாளுமையும் நடையும், நடையில் வெளிப்படும் எள்ளலும் விமர்சனமும் தான். பல சொற்கள் நமக்கு நேரடி அர்த்தத்தைத் தராதபோதும் கதையோட்டத்தில் விளங்கிக்கொள்ள முடிகிறது. அச்சொற்கள் நாஞ்சில் நாட்டு மக்களின் சதையை கொதைவிழ கிள்ளிப்பார்ப்பது போல இருக்கின்றன.

வைக்கோலை அழியில் போடுவதும்; மாட்டின் கழுத்துப் புண்ணிற்கு புன்னக்காய் எண்ணெய் தடவுவதும், வெங்கலப்பானையை மூடியிருந்த சிப்பலை நீக்கிப் பார்ப்பதும்; அவிழ்த்து விட்ட மாடுகள் கரம்பிக்கொண்டிருப்பதும்; சாமணக்கெட்டுக்காரர்களுக்கு, சக்தி வைப்பு ஐயர்களுக்கு நாதசுர மோளக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் நல்ல கோளுள்ள மாதமாக இருப்பதும்; பருவப்பெண் கம்பி அளியைப் பிடித்துக்கொண்டு வேடிக்கைப் பார்ப்பதும்; திருப்பன் வைத்துக்கட்டிய கொண்டைக்காரிகளின் சிலுப்பலும்; இட்டிலி பாத்திர குட்டுவத்தில் மாவு பிசாகாமல் ஊற்றுவதும், இழவு விழுந்த வீடுகளில் தீப்பெருக்காதிருப்பதும், பால்குடி குழந்தையை வல்லந்தமாக நிறுத்துவதும்; சூல்கொண்டபின் வரும் சாக்கோட்டி மாதங்களில் நடக்கும் காரியங்களையும் வாசிக்கும்போது நாஞ்சில் வாசம் மொழியில் கமகமவென வீசுகிறது.

‘நான் சொன்னதை ஞாபகமாச் சொல்லு. இந்தப் பூவிலே முடியாதாம். அடுத்த பூவிலே வேணும்னா பார்க்கலாமன்னு சொல்லு’ (ஐந்தில் நான்கு) என்று வறுமையைச் சொல்லும்போதும் கிடாக்கன்று உறவு தெரியாமல் முகரும் போது ‘சவத்துப்பய சாதிக்கு ஒரு வகுதருவு கெடையாது’ என்றுதிட்டும்போதும் (தேடல்) ‘சாமிப் பண்ணையாருக்கு நான்கு கோட்டை விதைப்பாடு சொந்தம்’ (ஆங்காரம்) பெருமிதத்தைச் சொல்வதும்; “சாலைத் திருப்பத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குப் போவாள் கிழவி. கால் நீவிக்கொண்டே உட்கார்ந்து கதை பேச மண்டபம் இருந்தது…. ஒருநாள் மருமகள் கேட்டாள். “என்ன? பிள்ளை வரம் கேக்கப்போனேளா?” இப்படி (சாலப்பரிந்து) குரூரமாக ஏசுவதும்; ‘பால் மறக்கடிக்கப்பட்ட பேரன் கிழவி காளியம்மையுடன் படுத்துக்கொள்வாள். பால் முலைத் தேடிப் பரிதவித்த பேரனுக்கு வறண்டுபோன தன் முலையை சவைக்கத் தருவதும்’ ‘வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் அறையிலிருந்து வெளியே வரக்கூடாது. வீட்டில் ஆட்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முன்னறையில் காற்றாட ‘அம்மாடி’ என முந்தானை விரித்துப் படுக்கக்கூடாது’ என்கிற புதிய நாகரீக வழக்கத்தையும் (சாலப்பரிந்து) ‘பனக்குடியிலே ஒரு சடங்கு உண்டும், போகாண்டாம்ணுதான் பார்த்தேன். பின்னே பெறப்பிட்டாச்சு” (எலிகள் வளைகளுக்கானவை) என்கிற ஆழத்து அன்பையும், ‘குளத்து மீன்களிலேயே கிளாத்தி ஒன்றுதான் சண்டாளமூதி, தண்ணீரில் ஆயும் போதே மின்னல்போல் துடித்துக்கொண்டு நிற்கும்’ (விலாங்கு) பெருமிதமாக ஏசும் போது நாம் நம்மூரில் இருப்பதில்லை. நாஞ்சில் நாட்டுக் கிராமத்தில் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கேட்டுக்கொண்டு நிற்கிறோம். மொழி தன்னுள் தேக்கியிருக்கும் பண்பாட்டு குணரூபம் தனித்த வசீகரத்தை அளிக்கிறது.

நாஞ்சில் நாடன் என்ற பெயரைச் சூடிக்கொண்ட க.சுப்ரமணியத்திடம் விவசாயச் சூழலின் அத்தனை அம்சங்களும் படையெடுத்து வருகின்றன. சேறும் செகதியும் வயலும் கடுக்கா மரங்களும், மருத மரங்களும், ஆறுமாகப் படைப்பில் விரிகின்றன. தனக்கு நாஞ்சில் நாடன் என்ற பெயரை மிகப் பொருத்தமாகச் சூடிக்கொள்ள இவருக்கு எப்படித் தோன்றியது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பிற கதைகளும் நிரம்பவே எழுதியிருக்கிறார். என்றாலும் நாஞ்சில் நாட்டு மண்ணைப் பேசிய கதைகளில் இவரது ஆன்மா பிரித்தெடுக்க முடியாதபடி கரைந்திருக்கிறது. பிரபஞ்சன், வண்ணநிலவன் என்கிற பெயர்ப் பொருத்தத்தைவிட நாஞ்சில் என்ற பெயர்ப்பொருத்தம் மிகச்சரியாக இருக்கிறது. நாஞ்சில் நாடனின் படைப்புகள் நாஞ்சில் நாட்டு முகம் என்றே சொல்லலாம்.

‘தொட்டாவாடிக் கொடிகள்’ ‘காமனக்கெட்டுக்காரன்’ ‘கொவரப்போகுதல்’ ‘ஆத்தங்குடி கற்கள் பாவிய முன்னறை’ ‘தட்டடி போட்ட வீட்டின் முன் சாய்ச்சிறக்கி போல சின்னாக்கமணம்’ என்ற தொடர்களை மதுரை வட்டாரக் கதைகளில் எழுத முடியாது. நாஞ்சில் நாடன் சகஜமாக எழுதிச் செல்லும் புனைவு மொழியை அதே சகஜத்தோடு மொழிபெயர்த்துவிட முடியாது. பண்பாட்டு இழைகளின் அத்தனை நுணுக்கங்களையும் வாரி அணைத்துக்கொண்ட புனைவு மொழி. நாஞ்சில் மண்ணில் ஒரு கதையை எழுதுகிறார் என்றால் தன் தொல்குடி கைமாற்றிக் கைமாற்றி தந்த மொழி அவரது நினைவடுக்கிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் அருவியெனக் கொட்டுகிறது. அதனை அப்படியே மொழிபெயர்ப்பது என்பது பெரும் சவாலானது. இது நாஞ்சில் நாடனின் தனித்த படைப்பு வீச்சு. ஆதவன் கதைகள் பொதுமொழியால் எழுதப்பட்டது. மொழிபெயர்ப்பது வெகுவானதும் கூட, நாஞ்சில் நாடனின் கதைகளை வேற்றுமொழிக்குக் கொண்டுபோனால் மொழியின் அழகு பல உதிர்ந்துவிடும்.

சின்ன சின்ன அசைவுகள்கூட கதையில் கூடிவரும் போது படைப்பிற்குப் பேரழகைத் தருகின்றன. பொதுவாகக் கிராமப்புறத்திலிருந்து எழுதவரும் படைப்பாளி எழுதும் தற்கணத்திலே உருக்கொண்டு வந்து விடுகின்றன. அவர்கள் எங்கெங்கோ பார்த்த, கேட்ட, அனுபவம் உண்டாகும் யதார்த்தக் கற்பனை எல்லாம் சேர்ந்து தொழிற்படுகின்றன. நுணுக்கமாகக் கவனித்தல் என்ற திட்டம் எல்லாம் இல்லாமலே கவனிக்கப்பட்டிருக்கும். ‘ஆலிலை கனத்தில் சப்பாத்தி’ ‘பட்டம் பிடித்திருந்த வேட்டி நுனிகள்’ ‘சதைப்பிடிப்பில்லாத ஆனால் எலும்பு முள்ளாகத் துருத்தாத உடற்கட்டு’ எனக் கண் அளந்ததை மொழிக்குள் கொண்டு வருகிறார்.

‘தனி ஆவர்த்தனம் முடிந்து – பத்துப் புளியமரங்களில் புளியம்பழம் ஒரே நேரத்தில் உலுக்கியது போல் சடசடவென கைத்தட்டல் தெப்பக்குளத்து மூலைப்பாறையில் மோதி எதிரொலித்தது.’ (கிழிசல்) ‘எங்கிருந்தோ பறந்துவந்து ‘முடுக்’கென்று குளத்துக் கெண்டையைக் கொத்திக் கொண்டோடும் மீன் கொத்தி’ ‘புன்னை மரத்து முடிச்சில் உட்கார்ந்து வெயிலில் காய்ந்து வாயைப் பிளந்து காற்றுக் குடிக்கும் ஓணானைக் காணும்போதெல்லாம் எதையோ இழந்து கொண்டிருக்கிறோம் என்று மனம் ஏங்கும்’ (தேடல்) சில அசைவுகள் கதையோட்டத்தில் ஊடாடி ரசிக்க வைக்கின்றன. சில அசைவுகள் தன் வாழ்வின் தத்தளிப்பைத் தானே விலகி நின்று பார்ப்பதாக மாறிவிடுகின்றன. ‘கடக் கடக் என்று வட்டக் கொம்புகளைப் பிணைத்துக்கொண்டு செல்லச் சண்டை போடும் எருமைக்கடாக்கள்’ என்ற வரியை வாசிப்பின் ஓட்டத்தில் கடந்துவிடலாம். அந்த வரியை, அதுவும் வட்டக்கொம்புகளைப் பிணைத்துக்கொண்டு செல்லச்சண்டை’ என்ற தொடரை ஒரு அனுபவசாலியால் மட்டுமே எழுத முடியும். கலை என்பது கதை சொல்வதல்ல. புனைவு உண்டாக்கும் உண்மை.

பல்வேறு சித்திரங்கள் நினைவடுக்கிலிருந்து கதைக்குப் பொருத்தமாக எழுந்து வந்து அமர்வதைப் புனைவின் சாகசம் என்றே கூறலாம். ‘ஒரு லயத்துடன் கொண்டையைக் குலுக்கும் பனைக்கூட்டங்கள்’ ‘காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம்’ ‘குளத்தங்கரை குறுக்குப்பாதையில் கோயில் மணி கிலுங்கிக் கொண்டிருந்தது.’ ‘பாலத்தின் இறக்கத்தில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை நிலவு தழுவிக் கொண்டிருந்தது’

தன்னை முற்போக்குவாதி என்று பிரகடனப்படுத்திக்கொண்டு எழுதும் படைப்பாளிகளின் கதைகளைவிட மிகச்சிறந்த முற்போக்குக் கதைகளை நாஞ்சில் நாடன் எழுதியிருக்கிறார். முற்போக்குக் கதைகளில் புற உலகின் தோற்றங்கள் உயிர்பெற்று கவிதை நயத்தோடு அசையக்கூடாது என்ற தடைச்சட்டம் ஏதுமில்லையே. சிறுகதை எழுதுவது முற்போக்கான சிந்தனையை நோக்கி இழுத்துச் சென்று முடிப்பதில் மட்டுமே இல்லை. அக்கதை நிற்கும் தளத்தின் முழுமையிலிருந்து எழுதுவதுதான். இந்த கலை மனத்தை நாஞ்சில் பெற்றிருக்கிறார். ‘வாய்க்கசந்தது’ ‘ஒரு முற்பகல் காட்சி’ ‘பாலம்’ ‘துறவு’ ‘தேடல்’ ‘இடலாக்குடி ராசா’ ‘சூடிய பூ சூடற்க’ ‘பேச்சியம்மை’ ‘ஆங்காரம்’ ‘ஐந்தில் நான்கு’ ‘உப்பு’ ‘விலாங்கு’ ‘வனம்’ எனப் பல கதைகள் கலாபூர்வமான முற்போக்குக் கதைகள்.

ஏழை பிராமணர்களின் பாடுகளைச் சொல்வதும் முற்போக்குக் கதைதான் ‘பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்’ ‘பரிசில் வாழ்க்கை’ ‘ஒரு முற்பகல் காட்சி’ முதலியவை. தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் கிட்டத்தட்ட இக்கதைகளை எழுதக்கூடாது என்பார்கள். சுத்தத் தமிழ் ஏழைகள் குறித்து அந்த பாப்பார சாதிக்கு அக்கறை இருக்கிறதா என்பார்கள். அக்கேள்வி யதார்த்தத்தில் உண்மையாகக்கூட இருக்கலாம். பார்ப்பானுக்குப் பரிவு காட்டுவதெல்லாம் பார்ப்பனிய மனம் சார்ந்தது என்பார்கள். வாழ வேறு வழியற்று பூசை செய்யும் ஏழையின் கண்ணீர் படைப்பாளிக்குத் தெரியும். அதே சமயம் பிராமணரின் மேட்டிமைத் தனத்தை, சாதிய உணர்வைப் போட்டுக் கிழிக்கவும் தெரியும். ‘செம்பொருள் அங்கதம்’ என்ற கதையில் வரும் போற்றி ஒரு நிறுவன மேலாளர். பழக்கவழக்கங்களில் தீட்டு பார்ப்பவர். உயர்தரமாக இருப்பதைச் சாதி உணர்வாகக் காட்டுபவர். உயிருக்கு ஆபத்து என்று வரும்போது அவருக்கு யாரோ தின்று குப்பையில் எறிந்த எச்சில் இனிப்பு பிஸ்கட்டைத் தின்றுதான் மீள்கிறார். அதேசமயம், ‘போற்றி கழிப்பறையில் கதவைத் தாளிட்டுக் கொண்டிருக்கும்போதும் அலுவலகப் பொதுமேலாளர் எனும் தன் பதவியை மறைப்பதில்லை என்று மனிதனின் அற்ப குணத்தை திரை விலக்கிக் காட்டவும் செய்கிறார். பாசிசத்திற்கு எதிராக இயங்குபவன்தான் படைப்பாளி. பிராமணியம், திராவிடயம், தமிழியம் என எல்லா கட்டைகள் குறுக்கே விழுந்தாலும் அவனது பார்வை மானுட துக்கத்தின் மீதுதான் இருக்கும். வடக்குத் தெற்குப் பிரச்சனை பேசும் தமிழனால் ‘வளைகள் எலிகளுக்கானவை ‘யாம் உண்பேம்’, ‘கான்சாகிப்’ போன்ற கதைகளை எழுத முடியாது.

‘ஆங்காரம்’ ஒரு தலித் கதை என்றால் ‘ஊதுபத்தி’ தலித்திற்கு எதிரான கதை என்று சொல்லக்கூடும். தலித்திற்கு வன்மம் இருக்காது. பொய்மை இருக்காது எனப் புனிதப்படுத்தலாம். படைப்பாளியும் அப்படிப்பார்க்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கமுடியாது. படைப்பாளி மானிட ஆட்டங்களைக் கவனிக்கிறவன். ‘ஊதுபத்தி’ கதையில் தலித் அல்லாத வேளாள கூலித்தொழிலாளியாக இருந்தாலும் மனிதர்கள் அவ்விதமே நடந்துகொள்வர். நெருங்கிய பழக்கங்களுக்கு எதிர்த்திசையில் பணம் ஒரு முக்கியக்காரணியாக நின்று ஆடும் என்பதைக் காணுவதுதான் அக்கதை.

‘வாய் கசந்தது’ வேளாளன் ஏழை வேளாளனுக்கு செய்யும் துரோகத்தைத்தான் சொல்கிறது. ‘இடலாக்குடி ராசா’ வேளாளர் கூட்டம் சாதிமதம் அற்றுத் திரியும் ஒரு களங்கமற்ற மந்தபுத்தி உள்ளவனைத்தான் விரட்டியடிக்கிறது. ‘ஐந்தில் நான்கு’, ‘கிழிசல்’ ‘மனக்கவலப்பெருமாள் பிள்ளை…’ ‘பாலம்’ கதைகளில் எல்லாம் வேளாளர்களின் பொய் முகங்களைக் காட்டி அவர்களின் குறுகிய மனப்பான்மைகளைச் சீற்றத்துடன் விமர்சனம் செய்கிறார்.

ஒரு படைப்பாளியாக அவரின் சுதந்திரப்பார்வை மனிதக்குலத்தின் எல்லா பக்கமும் சென்று வருகிறது. எல்லா இடங்களிலும் உயர்வும் இருக்கின்றன. தாழ்வும் இருக்கின்றன. ‘கான்சாகிப்’ போன்ற நேசம் மிக்க வடநாட்டு இசுலாமியத் தோழனிடம் வெளிப்பட்ட உயர்ந்த மாண்பை எந்த வேளாங்குடி கதையிலும் நாஞ்சில் கொண்டுவரவில்லை. விவசாயத்தை நம்பி வாழ்ந்த குடியை விவசாயமே தற்கொலையில் ஆழ்த்தி குடும்பங்களைச் சிதறடித்து ரயில் பெட்டியில் ஒரே ஒருவாய் சோற்றுக்கு முதியவர் அலைந்து பசித்தீயை அணைக்கா பற்றும் கையைச் சொன்ன ‘யாம் உண்பேம்’ கதை ஒரு மராட்டிய விவசாயியின் கதை. மிகச்சிறந்த கதையும்கூட. உழைப்பாளிகள் சுரண்டப்படுவதை, ஏமாற்றப்படுவதை, அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மையால் வறுமைச் சூழலுக்குள் தள்ளப்படுவதைப் பல கதைகளில் கொண்டு வந்திருக்கிறார். வறுமையைக் குரல் உயர்த்தி வெளிப்படையாகச் சொல்லாமல் உணரும்படியாக படைப்பில் கொண்டு வருகிறார்.

பொதுச்சமூகமும் இனக்குழுச் சமூகமும் உருவாக்கிய மொழியும் பழந்தமிழ் இலக்கிய பயிற்சியும் பரந்துபட்ட அனுபவம் உண்டாக்கிய பார்வையும் கலந்து உருவான எள்ளல் நடை தனித்த ஒன்றாக நாஞ்சில்நாடனிடம் கூடி வந்திருக்கிறது.

‘ராசாவின் தோற்றம் வாட்டசாட்டமாகத் தாள் தொடு தடக்கையொடு ராஜாபோல் தான் இருக்கும். கருமருதுப் பலகைபோல் விரிந்த மார்பும் முதுகும். ‘இன்றுபோல் இருத்தி’ என்று எந்த சீதை வாழ்த்தினாளோ?’ (இடலாக்குடி ராசா) ‘இங்கே நிலபுலன்களைக் கவனித்துக்கொண்டு பிள்ளைவாளும் மனைவியுமாக ‘முதியோர் காதல்’ நடத்திக் கொண்டிருந்தார்கள். (விரதம்) ‘அறுபது வயதுக்கு மேலானாலும் இருந்த ஆறு மரக்கால் விதைப்பாடு நிலத்தை வைத்துக்கொண்டு சுயாட்சி நடத்திக்கொண்டு போனாள்’ (உப்பு) ‘ஆத்தாளின் வாய் ஆரல்வாய்மொழிக் குதிரை வாகனம் போல எந்த நாய்க்குப் பொறந்த பய எம் பேரனை அடிச்சான்? என்று எடுத்தாளானால் இந்நாட்டு இங்கர்சால், சொல்லின் செல்வர், சிந்தனை சிற்பி, நடமாடும் பல்கலைக்கழகம் எல்லாம் கைவிட்டு உட்கார்ந்து குருகுலம் பயில வேண்டும்’ (உப்பு) ‘பன்னிரண்டு நாள் காலக்கணக்கன் போல உள்ளே இருந்து ஒளிபரப்பாகும் (தேடல்) ‘கலக்டர் வீட்டுக்கு என்று சொல்லி இலவசமாக வடசேரிச் சந்தையில் காய்கறி வாங்கி சஸ்பென்ட் ஆனதைத் தவிர வேறு நாணயக்குறைவுகள் கொண்டவரல்ல’ (வளைகள் எலிகளுக்கானவை). ‘பாலக்காடு கணவாய் தாண்டிவிட்டால் எல்லா மலையாளியும் நாயர் ஆகிவிடுவதைப்போல, சோலாப்பூர் கடந்துவிட்டால் எந்தத் தென்னிந்தியனும் மதராஸிதான். இங்கு பக்கத்து மாநிலத்துக்குத் தண்ணீர் தரமாட்டான் என்பது துணைப்பாடம்.’ ‘போற்றியின் வாலில் நெருப்பு வைத்தாயிற்று’ (செம்பொருள் அங்கதம்) ‘காளியம்மா இட்லிக்கார அக்காவாக இருந்தபோது காலணாவாக இருந்தது இட்லிக்கார அம்மாளானபோது இரண்டணா ஆகி, இட்லிக்கார பாட்டி ஆனபோது எட்டணா ஆகியது’ ‘ஒழுகிய மூக்கும் சூம்பிய கைகால்களும் முன் தள்ளிய வயிறும் கண்களில் நிரந்தர ஏக்கமும் அலுமினியத் தட்டங்களும் இருக்கும்வரை அவளுக்கு இட்லி விற்கும்’ (சாலப்பரிந்து) ஓரளவு இவ்விதம் ஒரு எல்லை மீறாமல் அடக்கி எழுதப்பட்ட மொழியிலிருந்து கொஞ்சம் விலகி ஏறி அடிக்கும் மொழியை இரண்டாயிரத்திற்குப்பின் போகிற போக்கில் கையாள்கிறார். பின் நவீனத்துவ எழுத்தின் வருகை நாஞ்சில் நாடன் எழுத்திலும் வெளிப்பட்டது. நாசூக்கு தன்மையைத் தள்ளிவைத்துவிட்டு ராவான மொழி வெளிப்பாட்டையும் கையாண்டார். மற்றவர்கள் வலிந்து செய்தபோது நாஞ்சில் சந்தர்ப்பம் வாய்க்கும்போது மட்டும் புழக்கத்தில் எரிச்சலான சமயங்களில் வெளிப்படும் கொச்சையான மொழி வீச்சை அங்கங்கே வெளிப்படுத்தினார். மிதமிஞ்சிப் போகாமல் கதையின் ஓரிரு இடங்களில் பொருத்தத்துடன் வெளிப்படுத்தினார்.

‘நாகரிகக் குறைவாக இருக்கிறது என்று ஐம்பது கழிந்தபிறகு மேல்சட்டை போடச் சொன்னாள் மருமகள். காளியம்மை மகளிடம் சொன்னாள். “ரெண்டு உள்பாடியும் வாங்கித்தாலே போட்டுட்டு அலையுதேன்’ (சாலப்பரிந்து) ‘பிணத்துக்கு மைக் வைத்தால்தான் கேட்குமோ என்னவோ? ஒருவேளை பக்கத்துத் தெருவரை பழைய வைப்பாட்டியைப் பார்த்து வர ஆவி போயிருந்தாலோ?’ (பிணத்தின் முன் திருவாசகம்) ‘வயதான தாசியொருத்தி இரண்டு ரூபாய்க்குக்கூட விலைபோகாத தனது வறண்ட மயிரடர்ந்த யோனி காட்டி மயங்கிக்கிடந்தாள்’  (யாம் உண்பேம்) ‘கனவில் வந்த நாககன்னிகையின் படவரவல்குல் உத்தேசமாக எங்கிருக்கும் என ஊகிக்க இயலவில்லை’ (செம்பொருள் அங்கதம்) ‘காலம்பற நான் எந்திரிச்சு வாசத் தெளிச்சு, வேட்டியை மடிச்சுக் கெட்டீட்டு, வெதக்கொட்ட தொங்க, தெருக்கோலம் போடணுமாக்கும்’, ‘கும்பாட்டம் ஆடப்பட்ட குட்டின்னு நெனச்சயா? முன்னயும் பின்னயும் குலுக்கி குலுக்கி ஆட்டுகதுக்கு’ (வங்கனத்தின் நன்று வலிய பரிக’) பின்னை நவீனத்திற்குத் தன் பங்காக நாஞ்சில் நாடன் மொழியில் ஏறியடித்த சில இடங்களும் உண்டு. ஆனால் கலையை கீழிறக்குவதாக இல்லை.

நாஞ்சில் நாடன் யதார்த்த தளத்தில்தான் இன்னும் தீவிரமாக இயங்குகிறார். யதார்த்த கதியினுள்ளும் புனைவின் தெறிப்புகள் இருக்கவே செய்கின்றன. “அலுமினியத் தட்டேந்தி இட்லி கேட்டு நிற்கும் குழந்தைகளின் முகங்கள் எப்போதேனும் கனவில் வரும்’ (சாலப்பரிந்து) ‘கடைசி சிங்கிளில் கண்டக்டர் கணக்குப் பார்த்து நோட்டுக்களை எண்ணும்போது கூடவே எண்ணுவான்’ (பரிசில் வாழ்க்கை) ‘செத்துப்போன பாட்டியின் குரல் சவத்து மூதி ஆற வச்சுக்குடிக்கப்படாதா? என்று ஒலித்தது’ (உப்பு) ‘இங்க கெடந்தா அந்த எட்டு மரக்கா விதைப்பாட்டையும் உழுதுகிட்டு ரெண்டு எருமையையும் மேச்சுக்கிட்டுத்தாலா கெடக்கணும்’ (ஐந்தில் நான்கு)

இப்படி கதைமொழி பல வண்ணங்கள் கொண்டதாகவும் செறிவான விதத்திலும் உருவாகின்றன. நாஞ்சில் நாடன் கதைகளின் ஊடே பயணம் செய்வது என்பது ராஜபாட்டையில் செல்வதாக இல்லை. இண்டு இடுக்கின்வழி நுழைந்து செல்கின்றோம். கொடிகளும் கிளைகளும் பின்னிப்பிணைந்திருக்க அவற்றை விலக்கிக்கொண்டு செல்வதுபோன்ற அடர்த்தி மிக்கதாகவும் அதே சமயம் தனித்த ஒற்றையடிப்பாதையில் செல்வதாகவும் இருக்கிறது. அதில் விதவிதமான வாசனையை நுகரும் உணர்வைத் தரக்கூடியதாக இருக்கிறது. நோகாமல் விருட்டென்று செல்வதற்கு மாறாக நடைப்பயணத்தில் கிடைக்கும் அத்தனை அனுபவங்களையும் தரவல்லதாக இருக்கிறது.

ஒரு சம்பவம். அதிலே ஓரிரு மனிதர்கள் அல்லது மனுஷி. அதிலே அன்றாட வேலை அதிலே ஏற்படும் முரண். அந்தச் செயலைப் படைப்பாளி தன் பார்வைக்குள் உள்ளிழுத்து முன்வைக்கும் விமர்சனம். இந்த விமர்சனம் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கிறது. எளியவர்களின் குரலாக ஒலிக்கிறது. குரல் உயர்த்தாமல் மண்ணிலிருந்து உறிஞ்சிக்கொண்ட கதையாக எழுந்து விரிகிறது. அக்கதை இந்த மனிதர்களிடம் உறைந்திருக்கும் தீமையின் மீது குத்துகிறது மனிதர்களின் அறத்தின் பக்கம் நிற்கிறது கதை.

அன்றாட சூழலை விஸ்தாரமாக விவரிக்க விவரிக்க அந்த சூழலுக்குள் நாமும் இறங்கி நின்றுவிடுகிறோம். சோம்பலை அந்த விவரணை தருகிறது. அந்த வேடிக்கையோடு நகர்ந்து நகர்ந்து திடுக்கென மனதைப் பிசையச் செய்யும் வறுமையின் நடமாட்டத்தையோ, புலம்பெயர்தலின் வலியையோ இழந்துபோன ஒன்றின் குறையோ.. நம்முன் காட்சிகளாக நிறுத்திவிடுகிறார். எந்தச் சூழலிலும் நாஞ்சிலின் கண்களுக்கு அந்த நெரிசலிலிருந்து தப்புவதே இல்லை.

ஒரு ஆறு, ஒரு சாப்பாட்டுக்கடை, ஒரு திருவிழா, ஒரு களத்துமேடு, ஒரு அடுக்களை, ஒரு மீன்பிடி குட்டை, ஒரு பந்தி, ஊர் சுடுகாடு, சூடடிக்கிற இடம் என ஒவ்வொரு இடத்திலிருந்தும் சாதாரண மனிதர்களிடமிருந்தும் கதை உயிர்பெற்று இயங்குகிறது. அதில் மனிதர்களின் விதவிதமான செயல்பாடுகள் கண்முன் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த வெளித்தோற்றம் மறைந்து அதுவரை கேட்காத, அதுவரை பார்க்காத ஒரு பொறியில் சிக்கித்தவிக்கும் ஒரு சித்திரத்தைக் காட்டிவிட்டு விலகுகிறார்.

படித்த குடியானவ இளைஞனுக்குத் தமிழ்நாட்டில் வேலையில்லை. பிழைப்பைத் தேடி மும்பாய் செல்கிறான். வேலை செய்கிறான். ஊரில் ஒரு வேலை தேடிக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறான். அப்படி வரும் இளைஞன் எதிர்கொள்ளும் நிலையை ‘தேடல்’ கதை சொல்கிறது. பிழைப்பின் பொருட்டு மத்தியதரவர்க்கம் இடம்பெயர்தலில் தத்தளிப்பை உருவாக்குவதில்லை. இந்தக் குடியானவ குடும்பத்து இளைஞர்கள் வேலை நிமித்தமாக இடம்பெயரும்போது மனம் நிலை கொள்வதில்லை. தத்தளிப்புக்குரியவனின் உள்ளம் ஒரு பிரபஞ்சத்தையே இழப்பதுபோல துடிப்பதைக் காட்டுகிறார். சுதந்திர உணர்வு அந்நிய தேசத்தில் அடிமைத்தனத்தில் சிக்கித் துன்பப்படும் ஆன்மாவாகக் காட்டுகிறார். மிகமிக எளிய மகிழ்வான தருணங்களை எல்லாம் இழந்து போகிற மாபெரும் துக்கம் படைப்புகளில் அடியிழையாக ஓடுகின்றன. சென்ற இடத்தில் அந்நியனாக நின்றவன். வந்த இடத்தில் உறவுகளின் பிடுங்கல்கள், எதிர்பார்ப்புகளால் மீண்டும் புலம்பெயர்ந்துதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒரு ஆன்மாவைக் கொன்றுதான் அனுப்புகிறது. ‘தேடல்’ இப்போராட்டத்தை சிறப்பாகச் சொன்னது. கடுமையான வறுமையிலும் பொறுப்பும் அக்கறையும் அற்ற சுயநலக்காரர்களின் இடையேயும் அலட்சியம் வெறுப்பும் கொண்டவர்கள் மத்தியிலும் அடாவடித்தனம் ஆணவம் தலைவிரித்தாடும் இடங்களிலும் காருண்ணியத்தை மீட்டுகிற கதைகளில் நாஞ்சில் நாடனின் கலை ஒரு உயர்ந்த நிலையை எட்டுகிறது.

‘சாலப்பரிந்து’ நாஞ்சில் நாடனின் கதை உலகிலிருந்து விலகியது, வேறுபட்டது. உக்கிரமாக இன்றைய யதார்த்த மனநிலையைப் பேசவைப்பது. நேசத்திற்கு எதிர்நிலையில் நெஞ்சில் ஊறும் கயமைகளில் சுயநலத்தைக் காட்டுகிறது. தனித்த மனுஷியாக நின்று வளர்த்த மகனும் மருமகளும் சேர்ந்து மூதாட்டியை நீரூற்றிக் கொல்வதற்குச் சாட்சியாகப் போகிறான். நவீன வாழ்வு உருவாக்கிய கோலம் இது.

கும்பமுனி கதைகள் தனி ரகமானவை. பொய் முகங்களைக் கிழிப்பதை நோக்கமாகக் கொண்டவை. கும்பமுனியின் கடுமையான விமர்சனங்களும் மொழிப்பிரயோகங்களும் அவரது வயது, அனுபவம், பக்குவத்தால் மிகையாகத் தோன்றுவதில்லை. மாறாக நம்மை ஈர்க்கின்றன.

மேஜிக்கல் ரியலிசத்திற்கென்று நாஞ்சில் வரிந்துகட்டிக்கொண்டு கதை எழுதவில்லை என்றாலும் ‘மனக்கவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்’, ‘பாம்பு’ கதைகளில் நம் நம்பிக்கையின் விநோதங்களை உத்தியாக எடுத்துக்கொண்டு அசலான மேஜிக்கலான கதைகளைத் தந்திருக்கிறார். ‘எண்ணப்படும், யதார்த்த தளத்தில் எழுதப்பட்ட அழகான மேஜிக்கல்ரியலிச கதையாக எனக்குத் தோன்றுகிறது. எதையும் எண்ணிப்பார்ப்பதிலே மூழ்கும் பிளவு கொண்ட மனதின் பைத்தியக்கார பழக்கத்தைச் சாகசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

காமத்தைக் குற்றமாகப் பார்க்காது மனிதத்தேவைகளில் ஒன்று என்று பார்க்கிற பக்குவம் நாஞ்சில் நாடனுக்கு உண்டு.

தமிழ்ச்சிறுகதை பரப்பில் நாஞ்சில் நாடன் வெவ்வேறான மனிதர்கள், வெவ்வேறான பிரச்சனைகள், வெவ்வேறான அனுபவங்கள், வெவ்வேறான உணர்ச்சி வெளிப்பாடுகள் வெவ்வேறுவிதமான அலைச்சல்கள், வெவ்வேறுவிதமான நிலக்காட்சிகள், வெவ்வேறு விதமான பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், மொழிக்காரர்கள், மனப்பதிவுகள் எல்லாம் நிகழ்கால வாழ்வினூடே எழுந்து வருகின்றன. இந்த வகையில் நாஞ்சிலோடு ஒப்பிடக்கூடிய அவரது சமகால எழுத்தாளர் ஒருவர் கூட இல்லை. பல்வேறு வகையான அனுபவங்களைத் தருகின்றன.

கதையின் முன்பகுதி, ஒரு அனுபவப்பரப்பை விமர்சனக் கண்ணோட்டத்துடன் சொல்கிறது. கதை நிகழும் இடம், மனிதர்கள், சமூகம், அரசியல், தேச நிலவரம், உறவுமுறைகள், நண்பர்கள், எதிர்பார்ப்புகள், பிரிவுகள் இப்படிச் சொல்ல வந்த பிரச்சனைக்குத் தோதான பல்வேறு விசயங்கள் இறுக்கமான பின்னணியில் சொல்லப்பட்டு, அதிலிருந்து ஒரு அவரையோ துவரையோ, கரும்போ வாழையோ மண்ணில் முளை விட்டு எழுவதுபோல பிரச்சனையில் சிக்கியிருக்கும் மனிதர் எழுந்துவருகிறார். சாஸ்தா கோயில் வளாகத்திலிருந்தோ வடக்கத்தியான் மேற்கொண்ட சுற்றுலாவிலிருந்தோ, உணவுக்கடையின் மதியநேர பரபரப்பிலிருந்தோ கோயில் கொடை விழாவிலிருந்தோ, மீன்பிடிக்கிற இடத்திலிருந்தோ அந்த மனிதன் இணைந்து வருகிறான்.

கதையை மாந்தர்களின் பின் தொடர்ந்து வளர்த்து அவரின் பாடுகளையோ முரண்களையோ சொல்வதில்லை. ஏற்கெனவே சூழ ததும்பிக்கொண்டிருக்கும் பிரச்சனையின் பல்வேறு முகங்களை விவரித்தபடி செல்கிறார். சில மாதங்களாகவோ, சில காலமாகவோ நிலவிவரும் பிரச்சனையைத் தொகுத்துக்கொண்ட மனநிலையிலிருந்து எழுதுகிறார். அதன் பல்வேறு இழைகள் கூடிவருவதால் அடர்த்திக் கொள்கிறது. நிகழ்ந்து கொண்டிருக்கிற வரலாறு நேற்றைய வரலாறு, காலச்சூழல், மாற்றம், மாற்றமின்மையைப் பற்றியெல்லாம் விலகி நின்று விமர்சனக் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறார். சொல்லப்போகும் கதைக்கு உரம்போல கூட்டு நனவிலியில் இருந்து உருவாகி வருகின்றன. இந்தப்பின்னணி, கதைக்குள் எதைச் சொல்ல வருகிறார் என்று யூகிக்க முடியாத விதத்தில் பெருகி நகர்கிறது. அதுவரை கதாமாந்தர் விவரணையில் தென்படுவதில்லை. சட்டென அதனுள்ளிருந்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் மாந்தன் மேலெழுந்து வருகிறான். அவனது துக்கம், நம்மைப் பலமாகத் தாக்குகிறது. முன் சொல்லப்பட்ட விரிவான பின்னணியின் கண்ணில் சிக்கியிருப்பது தெரியவருகிறது. நாஞ்சில் நாடன் மனதிற்கு இயல்பாகக் கூடிவந்த சொல்முறை இது எனலாம். கதையின் பின்பகுதிதான் முன்பகுதியை எழுத வைக்கிறது என்பது படைப்பின் சூட்சுமம்.

ஒரு அரசு அலுவலகத்தில் சுதந்திர தின கொடியேற்றத்தைச் சொல்ல வருகிறார் என்றால் அந்த நிகழ்வின் இழை எங்கெங்கு சென்று தொடர்பு கொள்கிறது என்பதைக் காட்டுகிறார். அதிகாரி, அலுவலர், பழைய அதிகாரி, நடைமுறைகள் அத்தனை அற்பத்தனங்களும் பொலபொலவென வந்து விழுகின்றன. நடைமுறை எண்ணங்களுக்கு ஏற்ற விதத்தில் வருகின்றன. நிகழ்ச்சி செயல்பாடுகளின் வழியே வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அந்தக்கிளைதான் கதையில் ஆதார மையமாக மாறிவிடுகிறது. புனைவின் சாத்தியத்தை அவ்விடம் ஏற்கும் போது நல்ல கதையாக உருவாகிவிடுகிறது. புனைவு கொள்ளாமல் போகும்போது ஒரு நடைச்சித்திரமாக முடிந்துவிடுகிறது. இந்த விபத்து சில கதைகளுக்கு மட்டுமே நேர்ந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ கதைப்பாணி என்றும் சொல்லலாம்.

இரண்டு பகுதிகளும் பிரிக்க முடியாத அம்சத்தில் புனைவு கொள்கின்றன. மனிதர்களின் பலம் பலகீனம் இணைந்தே வெளிப்படுகின்றன. இது உண்டாக்கும் நம்பகத்தன்மை மனதில் பாதிப்பை உண்டாக்குகிறது. சுற்றிலும் கயமைகள் சூழ்ந்திருந்தாலும் செறிந்த சுரமுள் புதரிடையே சிக்கி வெளிவர எத்தனிக்கும் ஆட்டுக்குட்டியின் விறல்போல மனிதனின் பாடு நம்முன் விரிகிறது. முன் பகுதியின் லேசான கட்டுரை சாயல் மறைந்து மனிதனின் நெருக்கடியான அந்த கணம் மட்டுமே வியாபிக்கிறது.


-சு.வேணுகோபால்

Previous articleஔஷதக் கூடம்
Next articleவேட்டைக்காரன்
சு வேணுகோபால்
சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20 1967) என்பவர் ஒரு மூத்த தமிழ் எழுத்தாளர்.கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.இவர் எழுதிய “வெண்ணிலை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இலக்கிய விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

2 COMMENTS

  1. அற்புதமான பதிவு. மிக விரிவாக நாஞ்சில்நாடனின் படைப்புலகை ஆய்ந்து எழுதியிருக்கிறார்.

  2. வட்டார மொழியாளுமையுடன் எழுதப்படும் இவை போன்ற கதைகளை வேற்றுமொழியில் மொழிபெயர்ப்பு செய்தல் சாத்தியமா என்று அடிக்கடி எண்ணுவதுண்டு. அதற்கான விடை இக்கட்டுரை வாயிலாகக் கிடைக்கிறது.

    \\நாஞ்சில் நாடன் கதைகளின் ஊடே பயணம் செய்வது என்பது ராஜபாட்டையில் செல்வதாக இல்லை. இண்டு இடுக்கின்வழி நுழைந்து செல்கின்றோம். கொடிகளும் கிளைகளும் பின்னிப்பிணைந்திருக்க அவற்றை விலக்கிக்கொண்டு செல்வதுபோன்ற அடர்த்தி மிக்கதாகவும் அதே சமயம் தனித்த ஒற்றையடிப்பாதையில் செல்வதாகவும் இருக்கிறது.\\

    மிக ஆழமான மற்றும் நேர்த்தியான விமர்சனம். அதே சமயம் நாஞ்சில் நாடனின் புனைவுலகுள் புதிதாய் உள்நுழைவோர்க்கான எளிய அறிமுகமும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.