மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 3

கார்டில் கட்டிடம் ( பாரத் இன்சூரன்ஸ் கட்டிடம் )


மெட்ராஸின்  அடையாளங்களென வரிசையில் முதலில் நிற்பது  சிவப்பு நிற கட்டிடங்களே அதில் பத்துக்கும் குறைவான கட்டிடங்களே வெள்ளை நிற கட்டிடங்கள் என்பது  உலகறிந்த ஒன்றுதானென்றாலும், வெள்ளையர்கள் அந்த கட்டிடங்களைப் பலவகையான பாணிகளில் கட்டியிருக்கிறார்கள். கோதிக் ரோமன் கட்டிட பாணி உதாரணம் ( ராயபுரம் ரயில் நிலையம் ) இந்தோ சராசெனிக், (தென்னக தலைமை ரயில்வே அலுவலகம்) விக்டோரியன் கவுன்டி கொலோனில், (உதாரணம் (தலைமை தபால் நிலையம்)  ஜார்ஜியன் தேவாலய பாணி, (செயின்ட ஆண்ட்ரூ சர்ச்)  விக்டோரியன் கட்டிடக்கலை ( பாரத ஸ்டேட் வங்கி) இப்படியான பல வகை பாணிகளைப் பின்பற்றி கட்டிடங்களை வடிவமைத்தவர்கள்  முழுக்க முழுக்க வெள்ளையர்களே ஆனால் அதைக் கட்டிய ஒப்பந்தக்காரர்கள் பெரும்பாலும் உள்ளூர்க்காரர்கள் தான் அதில் மிக முக்கியமான கட்டிட ஒப்பந்தக்காரர் நம் பெருமாள் அவரைப் பற்றிய ஆச்சரியமான தகவல்கள் உண்டு அவரைப் பற்றி வேறொரு முறை பேசலாம், குறிப்பாக அவருக்கு சென்னையில் 99 வீடுகள் இருந்ததாம் 100 வீடு வாங்கினால் ஜாதகப்படி நல்லதில்லை என்று சொன்னதால் அதைத் தவிர்த்துவிட்டாராம்.

அண்ணாசிலையிலிருந்து  LIC கட்டிடம் நோக்கிப் போகிறவர்கள் கார்டில் பில்டிங் என்ற அந்த புகழ் பெற்ற செந்நிற கட்டிட ஆபரணத்தை நீங்கள் இப்போதும் பார்க்கலாம் இப்போது அது பாரத் இன்சூரன்ஸ் கட்டிடமென்று  அறியப்படுகிறது. அந்த முக்கோண வடிவ கட்டிடத்தை பாட்டர்ஸ் ரோடு வழியாகப்  போனால் கட்டிடத்தின் கிழக்குப் புறத்தையும் மவுண்ட் ரோடு வழியாகப் போனால்  அந்தக் கட்டிடத்தின் மேற்குப் புறத்தையும்  உங்களால் பார்க்க முடியும்  வடக்குப் புற முகப்பை புதிதாகக் கட்டப்பட்ட பாரத் இன்சூரன்ஸ் கட்டிடம் மறைத்துக்கொண்டிருக்கிறது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. எவ்வளவு மறைத்தால் என்ன? எவ்வளவு நாசம் செய்தால் என்ன? பழைய மெட்ராஸின் கட்டிடங்களில் இது ஒரு அரிய ஆபரணம் தான் ஒரு  கறையற்ற மனதில் துளியேனும் கலை துளிர்த்திருந்தாலும் நீங்கள் அதன் அழகில் மயக்கம் கொள்வீர்கள்… முகப்பில் உள்ள ஐந்து பிரமாண்ட சாளரங்களின் வண்ணக்கண்ணாடி வேலைப்பாடுகள் உலகத் தரத்திலானவை. ஒவ்வொரு சதுரடிக்கும் கலை எழிலோடு வடிக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தின் இரண்டு கோபுரங்கள் குவி மாடங்களை  கடந்து போகிறபோது ஒரு முறையேனும் பார்த்துவிடுங்கள் அதுவே உதிர்ந்துவிடுவது போலிருந்தாலும், அதை உதிர்த்துவிட  இந்த வரலாற்று அடையாளங்கள் மேல் தீரா வெறுப்புடையவர்கள் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள். வரும்  தலை முறைகள் இந்த கட்டிடத்தைக் காண வாய்ப்பிருக்குமா என எனக்குத் தெரியவில்லை. கட்டிடத்தின் முன்புறத்தில்  வலது இடது மூலைகள் சதுரமாக வளர்ந்து விண்ணோக்கி வளர்ந்துபோகும் கோபுரம் உச்சியில் சதுரமும் வட்டமுமானதொரு மாயத்தை உச்சி கோபுரம் செய்கிறது. மெல்லிய நான்கு நான்காக மொத்தம் பதினாறு கல் தூண்கள்  கோபுரத்தைத் தாங்கி நிற்கிறது. தரையிலிருந்து அதன் உயரம் 100 அடி ஒரு அடிக்கு ஒரு அடி  ஒரு அங்குலத்துக்கு ஒரு அங்குலம்  சுண்ணாம்பு சுதையால் புடைப்பு சித்திரங்கள், கருங்கல் இணைப்புகளெனப் பேரழகு கோபுரங்கள்.

பாரத் இன்சூரன்சுக்கு கைமாறிய பிறகு கட்டிடச் சுவரில் பாரதமாதவின் புடைப்பை சுண்ணாம்பு சுதையால் உண்டாக்கியிருக்கிறார்கள். அது அந்த கட்டிடத்தின் கலை நயத்துடன் ஒட்டவில்லை தனித்துத் தெரிகிறது  16 மெல்லிய தூண்கள் மீதான அந்த கட்டிடத்தைப் பார்க்கும் போது ஒப்பீட்டளவில்  இன்றைய நகரின் அறிவியல்பூர்வமான வசதிமிக்க கட்டிடங்கள் வெறும் கட்டிடங்கள் தான் வேறென்ன? இந்த அழகிய பிரமாண்ட கலைப் படைப்பைக் காக்க நகரிலிருக்கும் நாம் என்ன செய்திருக்கிறோம். வெளியூர் ஆட்கள் நகரை நோக்கி சம்பாதிக்க வருகிறவர்கள் வேலை முடிந்ததும் நகரின் மீது பகட்டாக சில விமர்சனங்களை வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால் இங்கேயே பிறந்து இங்கே வாழ்ந்து சாகப்போகிறவர்கள் இந்த பழைய நகரின் அடையாளங்களாக மிஞ்சியிருக்கும் கட்டிடங்கள் பற்றி என்ன நினைக்கிறோம். அதைக் கட்டிய காலத்தில் இம் மண்ணை ஆண்ட ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அதை வடிவமைத்தவர்கள், கட்டியவர்கள் என யாருமேயில்லை ஆனால் அந்த கட்டிடம் இருக்கிறது. அவை நகரின் வரலாற்றுச் சின்னங்கள்..என் பதின் வயதிலிருந்து அவற்றை உற்று உற்றுப் பார்க்கிறேன் குடிசையிலே பிறந்து வளர்ந்த எனக்கு அந்த கட்டிடங்கள் பெரும் வியப்பைத் தருபவையாக இருந்தனவோ என்னவோ… நகரின் கலெக்டர் அலுவலகத்துக்கு என் பதினோரு வயதிலிருந்து போகவும் அந்த அலுவலக பிரமாண்டங்களில் திகைத்துப் போகவுமாக இருந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. இப்போது அந்தக் கட்டிடம் இல்லை ஒரேயொரு கல்தூண் மண்டபம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது அந்த இடத்தில் கட்டப்பட்டது தான் சிங்காரவேலர் மாளிகை. பிராக்கு பார்க்கும் என் பதின் வயதில் LIC கட்டிடம் உயரமாகப் பெரிதாக இருந்ததே தவிர அது என்னைக் கவரவேயில்லை காரணம் அதை விட உயரமான  இயந்திர பொறிகளுடன் கூடிய ஓசை மிக்க மின்நிலையத்தை அருகிலேயே பார்த்து வளர்ந்தவன் என்பதால் அந்த பிரமாண்டம் வியப்பாக இல்லை..அதைவிடவும் 80 களிலேயே LICயை விடவும் உயரமான கட்டிடங்கள் நகரில் தோன்றிவிட்டன. என்பதாலும் இருக்கலாம்.


சரி வாங்க நாம கார்டில் கட்டிட வரலாற்றுக்குப் போவோம் …..  


W.E ஸ்மித் 1868ல் இங்கிலாந்திலிருந்து சென்னை வருகிறார். அடிப்படையில் அவர் ஓரளவு உடற்கூறியல் தெரிந்த மருந்தாளுநர் (பார்மஸிஸ்ட்) அவர் அலோபதி மருத்துவத்திற்கான மருந்து மாத்திரைகள் உற்பத்தி செய்கிற நோக்கத்தில் சென்னையிலிருந்து நீலகிரிக்குச் செல்கிறார் அங்கு அவர் மருந்துகளை உற்பத்தி செய்து பெரும் பணம் ஈட்டுகிறார். ஆந்திரா கர்நாடகா, கேரளாவென தென்னிந்தியா முழுக்க புகழ்பெற்ற மருந்தாளுநராகவும், உற்பத்தியாளராகவும், அறுவை சிகிச்சைக்கான கருவிகள் விற்பனையாளராகவும் இருந்தார். வியாபாரம் பெருகியதால் சென்னையில் அவருக்கு ஒரு அலுவலகம் தேவைப்பட்டது.  நகரில் ஒரு கட்டிடம் கட்டும்படி நண்பர்கள் ஆலோசனை சொல்ல 1897ல் கார்டில் கட்டிடம் அழகு சிற்பமாக உருவெடுக்கிறது. இந்தோ சராசெனிக் பாணியுடன் , துருக்கி ஒட்டோமான் கலை நுணுக்கங்களுடன் இந்தியக் கோவில் கலை மரபையும் சேர்த்துக் கட்டப்பட்ட கார்டில் கட்டிடத்தை வடிவமைத்தவர் அன்றைக்கு மெட்ராஸ் மாகானத்தின் அரசு கட்டிட வடிவமைப்பாளரான J.H.ஸ்டீபன்சன் என்பவர்.

Kardyl Building



(அலுவலகத்தையே இப்படிக் கட்டுகிறவர்கள் அரண்மனைகளை எப்படிக் கட்டியிருப்பார்களோ…)

நம்மூரில் கோயில்களை மட்டும் தான் இப்படிக் கட்டுவார்கள் அதுவும் அதைக் கட்ட கல், மண் சுமந்தவன் அதனுள்ளே நுழைய முடியாது. அவ்வளவு ஏன் கருவறை லிங்கத்தின் மேலேறி உட்கார்ந்து வழுவழுப்பாகச் செதுக்கியவன் அதைக் கருவறையில் நிலை நிறுத்துவதோடு சரி பிறகு அவன் அதனுள் நுழையக்கூட முடியாது. ..அப்படியானதொரு ஊரில் மக்கள் பயன்பாட்டுக்கான கட்டிடங்களையே இவ்வளவு கலை நுணுக்கத்துடன்  கட்டிய மனிதர்கள், வடிவமைப்பாளர்கள், எவ்வளவு நுட்பத்துடன் நம் கட்டிடத் தொழிலாளர்கள் இருந்திருக்கிறார்கள், அல்லது அன்றைய ஆட்சியாளர்கள் அப்படியான உழைப்பு கலைஞர்களை உருவாக்கினார்கள் என்றெல்லாம்  யோசிக்கத்தோன்றுகிறது. கலை விரும்பிகளுக்கு  இந்தக் கட்டிடம் விருந்துதான்.

மவுண்ட் ரோட்டிலிருந்து பாட்டர்ஸ் சாலை பிரியும் முக்கோண சந்திப்பில் இரண்டாவது கட்டிடம் இரண்டு அடுக்கும் நான்கு அலங்கார கோபுரங்களும் கொண்டது அதில் இரண்டு கோபுரங்கள் இப்போதும் அழகு குலையாமல் அப்படியே இருக்கிறது.  இரண்டு கோபுரங்களை (அவற்றைக் கோபுரம் என்று சொல்ல முடியாது அது கூம்பு வகையைச் சேர்ந்த மினார் போன்ற வகை)  கலையறிவற்ற லாப வெறியும், வரலாற்றை ஒழித்துகட்டும் வெறியும் கொண்ட பேய் கைகள் உடைத்து நொறுக்கிவிட்டன. அந்த பக்கம் போகும் போது கண்டிப்பாகப் பாருங்கள் ஆனால் இப்போது அதன் நிலை மிக மோசமாக துயரத்தை உண்டாக்கும் விதமாகவே இருக்கிறது. இரண்டு மாடிகள் கொண்ட அந்த கட்ட்டத்தில் W.E ஸ்மித் அவர்களின் மருந்து கிடங்கு, அலுவலகம், சிறு உற்பத்தி பிரிவு, தண்ணீரில் காற்றைச் செலுத்தி உண்டாக்கப்பட்ட நீர் ( சோடா ) விற்பனையகம் செயல்பட்டது போக மீதமிருந்த  அந்த முக்கோண வடிவ கட்டடத்தில் இடமிருக்க கட்டிடத்தின் பாட்டர்ஸ் ரோடு பக்கமிருக்கும் கிழக்குப்புற கட்டடத்தில் அவரது நிறுவன அலுவலர்கள்  பெரும்பாலும் வெள்ளையர்கள் தங்கியிருந்தனர். மவுண்ட் ரோடு பக்கமாக இருந்த பகுதியில் அன்றைக்கு நகரின் மிகப் பிரபலமான பல் மருத்துவர்களின் மருத்துவமனைகள் இருந்தது. நீதிபதிகள், பணக்காரர்கள் என  சிகிச்சைக்கு வருவார்களாம், கட்டிடத்தில் ஒரு மதுக்கூடமும், கஃபேவும் இருந்திருக்கிறது. அதை விட முக்கியமாக மருந்தாளுநர் W.E. ஸ்மித் அவர்கள் அங்கே ஒரு கண் பரிசோதனை மையத்தையும் நடத்தி வந்தார் அவரே அதில்  கண் பரிசோதகராகவும் இருந்திருக்கிறார். அதனாலோ என்னவோ நகரின் மிகச்சிறந்த மூக்கு கண்ணாடிக் கடையொன்றும் அங்கே இருந்திருக்கிறது. 50களில் புகழ் பெற்ற நடிகர்கள் அந்த கடையின் வாடிக்கையாளராக இருந்தார்களாம். மிகப் பரபரப்பான நகரின் அண்ணா சாலையின் கட்டிட வரிசையில் மகுடம் போலிருந்ததை வீழ்த்துவதற்காக அந்த நாட்களில்.தென்னிந்தியாவின் புகழ் பெற்ற மருந்து கம்பெனியாக இருந்த ஸ்மித் நிறுவனம்  தொழிலில் தள்ளாட்டம் கண்டதால் 1934ல் பாரத் இன்சூரன்ஸ் கம்பெனி கார்டில் கட்டிடத்தை வாங்கியதும் பழைய அழகு கட்டிடத்தின் முன்பாக பாரத் இன்சூரன்ஸ் கட்டிடம் வடக்குப் பக்கமாக தனது கலை நயமற்ற கட்டிடம் ஒன்றைக் கட்டியதில் கார்டில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தின் ஒரு பக்கம் மறைக்கப்பட்டுவிட்டது. கார்டில் பில்டிங் என்கிற கடந்தகால பெயர் மறைந்து பாரத் இன்சூரன்ஸ் கட்டிடம் என்றாகிவிட்டது.

அதன் பிறகும் பல நிறுவனங்கள் அந்த கட்டிடத்தில் வாடகைக்கு தங்கள் சேவையைத் தொடர்ந்தன என்றாலும் பராமரிப்பு என்பது இல்லாமல் கட்டிடம் நலியத் தொடங்கியது. ஒரு அற்புதமான கலைப் படைப்பை பேணத் தெரியாத முட்டாள் குமஸ்தாக்களின் நாட்டில் அந்த கட்டிடம் நாசமாவதைத் தடுக்க எந்த வழியும் இல்லாமல் போய்விட்டது, இந்த நாட்டில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  என்பதுடன் வழக்கமான நவீன பொருட்களால் அதை பராமரிக்க முடியாது. ஒவ்வொரு சதுரடிக்கும் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே அதைச் செப்பனிட முடியும் அதற்கான அறிவும் , தொழில் நுட்பமும் இப்போது இருந்தாலும் அதை பயன்படுத்த யாருக்கும் மனமில்லை என்பதுடன் அதைப் பராமரிக்கும் கலையுள்ளம் ஆட்சியாளர்களின் அதிகாரிகளுக்கு இல்லையென்பது தான் உண்மை. அதை விடவும் வெள்ளையனின் கடந்த கால எந்த அடையாளத்தையும் விரும்பாத ஒரு பிரிவினர் இங்கு அதிகார மையங்களில் கமுக்கமாக சில வேலைகளைச் செய்துவருகிறார்களோ என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு நமக்கும் அது சரியென்றே தோன்றுகிறது.

கடந்த காலங்களில் பல கட்டிடங்கள் கைவிடப்பட்டு நாசமாக்கப்பட்டன, சில அழகு கட்டிடங்கள் எரிந்து விட்டது என்கிற ஒற்றை வார்த்தையில் ஊற்றி மூடப்பட்டன. உதாரணத்துக்கு…மூர்மார்கெட் கட்டிடம், தங்க சாலையில் இருந்த அச்சகம், கடற்கரைச் சாலையில் இருந்த பாரத ஸ்டேட் வங்கி, 2வது கடற்கரைச் சாலையிலிருந்த தலைமை தபால் நிலைய கட்டிடம், 2012ல் சேப்பாக்கம் கல்சா மகால் எல்லாமே இரவில் தீப்பிடித்து எரிந்து நாசமானவைகள். இங்கிலாந்தில் கூட இப்படியான கட்டிடங்கள் இருக்குமா என எனக்குத் தெரியாது மெட்ரோ ரயிலை காரணம் காட்டி பாரி முனையில் உள்ள சென்னை சட்டக்கல்லூரியை விழுங்க விரும்பியவர்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் …..எரிந்த நாசமான கட்டிடங்களின் புகைப்படங்களையும் எஞ்சிய கட்டிடங்களையும் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்.. ஆட்சியாளர்கள் இது வரை அந்த கட்டடங்களைப் பராமரிக்க ஊக்கமான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை என்பதுடன் அந்தக் கட்டிடங்களின் இடுக்குகளில் ஆலமரங்கள் தழைத்துப் பெருகுகின்றன….அந்த விதைகளைத் தூவுவதற்க்கென்றே ரகசிய கயவர்கள் இருக்கிறார்களோ என்று கூட நான் சந்தேகிக்கின்றேன்.     

பல்லாயிரம் கோடிகளைக் கொட்டினாலும் அது போன்ற ஒன்றை நம்மால் எழுப்ப முடியுமா தெரியவில்லை… அந்நியனாக இருந்தாலும் வெள்ளையன் நிதானமாகத் திட்டமிட்டு பிழைக்க வந்த ஊரில் எதற்கு இதெல்லாம் என்று நினைக்காமல் கலையுள்ளத்துடன் ஓவியங்களைப் போலக் கட்டிடங்களை நிர்மாணித்தான். நாம் அவற்றைச் சீரழித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை அதற்கான பல சாட்சிகள் இங்கு இருந்தாலும் மனதை ஊடுருவக் கூடிய  கார்டில் கட்டிடம் சரியான உதாரணம்.


கார்டில் கட்டடம் 1956ல்  இன்றைய எல்ஐசி நிறுவனத்துக்கு கைமாறிய பிறகு 1998 வரை அங்கு பலவிதமான நிறுவனங்கள் குத்தகைக்கு தொழில் நடத்திக்கொண்டிருந்தன, மருந்து கம்பெனிகள், தொழிற்சங்க அலுவலகம்,என இந்த நிலையில் LIC நிறுவனம் அந்த கட்டிடம் மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஆபத்தான பழுதுகளைக் கொண்டிருப்பதால் கட்டிடத்தை காலி செய்யச் சொல்கிறது. கட்டிடத்தில் இருந்தவர்கள் காலி செய்து வெளியேற, கொஞ்சமும் கருணையற்று ஆங்கிலேயரின் அடையாளங்களை துடைத்தழித்துவிடும் உள் நோக்கங்களோடு ( ஆனால் இந்த நோக்கமுள்ளவர்கள் இந்தியக் கல்வி நிறுவனங்களில் இந்திய மக்களின் வரிப்பணத்தில் பயின்று ஏர் இந்தியா வழியே வெள்ளையர்களுக்குச் சேவகம் செய்யக் கிளம்புகிறவர்களின் பெரும்பகுதியானோர் உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியும் என்றே கருதுகிறேன்.) அந்த கட்டிடத்தை இடித்துத் தள்ளி புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டும் வேலையில் இறங்கி அந்த கலைப் படைப்பின் தென் மேற்கு மூலையில் இடிக்கவும் தொடங்கிவிடுகிறார்கள். அப்போது சிதைந்தது தான் அந்த இரண்டு கோபுரங்களும் ஆனால் முக்கிய கோபுரங்கள் இன்னமும் குலையாதிருக்கிறது.

அந்த கோபுரம் இடிபட்ட பொழுதில் அதைக் கண்ட எனக்குப் பழக்கமான ஆட்டோ ஓட்டுகிற நண்பன் ஒருவன் அந்த தகவலைச் சொன்னபோது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அந்த நண்பனுடனே அங்கு போய் பார்த்தேன். மவுண்ட் ரோடு  பக்கமுள்ள கட்டிடப் பகுதியின் தென் மேற்கு மூலையின் கோபுரங்கள் இடிந்து தகர்க்கப்பட்டு இனி செப்பனிடப்பட முடியாதபடி மண்ணில் இடிபாடுகளாய் கிடந்தது. என்னைப் போலவே நகரின் செந்நிற பழமையான கட்டிடங்களை விரும்புகிறவர்கள் கட்டிடம் இடிப்பதை எதிர்த்து அங்கே கூடியிருந்தார்கள் என்பது ஆறுதலாக இருந்தது. உடனடியாக இடிப்பதை நிறுத்தி வைக்க தடையுத்தரவும் வாங்கிவிட்டார்கள். அவர்களுக்கு நாம் நன்றி சொல்கிறோம்.

ஆனால் அந்த கட்டிடத்தை எப்படியும் இந்த கொலைகாரர்கள் கொன்றுவிடுவார்கள் என்பது தெரிந்து நான் அழுதுகொண்டிருந்தேன்.  என் ஆட்டோக்கார நண்பனுக்கு அது ஆச்சரியமாக இருந்திருக்கும் போல அவன் என்னை ஆச்சரியமாகப் பார்த்ததுடன் ஆறுதல் சொல்லித் தேற்றிக்கொண்டிருந்தான். என் முதலிரண்டு நாவல்களைப் பதிப்பிக்க அலைந்துகொண்டிருந்த நாட்களது.

எத்தனை கொடூர மனம் படைத்த மடையர்கள் உழைப்பின் அருமை மட்டுமல்ல கலையின் சாகசத்தை அதன்  உயிர்ப்பை புரியாத பேராசைக்கார லாபத்தை மட்டுமே சிந்திக்கும் கசடர்களை நான் ஆபாசமாகத் திட்டிக்கொண்டிருந்தேன். நான் இவ்வளவு  பொறுமையிழந்து தவிப்பதைப் பார்த்து என் நண்பன் சிரித்தபடியே எனக்கு திரும்பத் திரும்ப ஆறுதல் சொன்னவன்  “இந்த மாதிரி பில்டிங்குக மேல ஆசைப்படுறது நீ மட்டும் தான்னு நெனைச்சேன் உன்ன மாதிரியே நெறையப்பேர் இருக்குறாங்க போல ..அடேங்கப்பா” என்று வியந்தவன், சமீபத்தில் ஒரு விபத்தில் அவன் மரித்துவிட்டான்.

The Kardyl building (Bharat Insurance Building.)


அன்று அவனும் நானும் கார்டில் கட்டிடத்தை சுற்றிச் சுற்றி வந்தோம் INTACH  இந்திய தேசிய அறகட்டளை இடிப்பதிலிருந்து கட்டிடத்தைக் காப்பாற்ற பொதுநல வழக்கு தொடர்ந்ததால் சட்டப்படி கட்டிடத்தின் மீதான கொலைவெறித் தாக்குதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. 2009ல் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை அப்படியே புனரமைப்பதுடன் அதே வடிவத்துடன் புதிய கட்டடம் கட்டிக்கொள்ளலாம் என்று நீதி மன்றம் அறிவிக்கிறது. அத்துடன் 2010 கார்டில் கட்டடத்தை 400 பாரம்பரிய கட்டிடங்களின்  பட்டியலில் இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவிக்கிறது.

இவ்வுளவு சிறப்புகள் உள்ள அந்த கட்டிடம் இன்னும் எவ்வளவு காலம் அங்கு இருக்குமோ நமக்குத் தெரியாது  இப்போது அந்த கட்டிடம் பாரம்பரிய கட்டிடங்களுள் ஒன்று அதவது குறியீடு கிரேடு A சான்றிதழ் பெற்றுள்ளது
என்றாலும் அந்த கட்டிடம் வெகு காலம் நீடித்திருக்க லாப நோக்கு அறிவாளிகள் அனுமதிக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அது மழை, வெள்ளம் ,புயல், கட்டிடத்தில் வேர்விடும் செடிகள் என பாழாகிக்கொண்டு வருகிறது தந்திரமாய் ஒழித்துக்கட்டி அந்த இடத்தில் சிமெண்டினாலான ஒரு உயரமான பெட்டியை நிறுத்துவார்கள்.

கார்டில் கட்டிடம் பழைய மெட்ராஸின் வரலாற்று அடையாளங்களுள் ஒன்று.



-கரன் கார்க்கி        

1 COMMENT

  1. அடுத்த தடவை சென்னை வரும்போது இந்த சிவப்புநிற கட்டிடங்களை பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.