Barn Burning – சிறுகதையைத் தழுவி Burning திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டுக்கும் நிறைய வித்தியாசமிருப்பதையும், அதே சமயம் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாததாக இருப்பதையும் உணர முடியும். psychological mystery drama என்ற வகைமையில் இந்தப் படம் ஒயேசிஸ்‘ `போயட்ரி‘ போன்ற பிரபல படங்களை எடுத்த லீசாங்–டாங் என்ற கொரிய இயக்குநரால் ` எடுக்கப் பட்டிருக்கிறது.
ஜப்பானியச் சிறுகதை கொரிய சினிமாவாக உருமாறும்போதும்,. ஒரு சிறுகதை சினிமாவாக மாறும்போதும் அடைந்த மாற்றங்களை நுணுக்கமாக ரசிக்க முடிகிறது. சிறுகதையில் வரும் மூன்று பேருக்கும் பெயர்கள் இல்லை. சிறுகதையின் நாயகன் மணமானவன். திரைப்பட நாயகனுக்கு மணமாகவில்லை. சிறுகதையில் கதாநாயகன் கதாநாயகியோடு ஒரு நண்பனின் திருமணத்தில் சந்தித்து அறிமுகமாகிறான். திரைப்படத்தில் அவனும் அவளும் சின்ன வயதிலேயே தெரிந்தவர்கள். தற்சமயம் அவன் அவளை ஒரு விளம்பர மாடலாகப் பார்க்கிறான். உடனடியாக அவனுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. அவள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் முகத்தை மாற்றி இருப்பதாகச் சொல்கிறாள். அதன் பின் நெருக்கமாகிறார்கள். கதாநாயகனின் குணவார்ப்பு பற்றிச் சிறுகதையில் குறிப்புகள் இல்லை. ஆனால் திரைப்படத்தில் கதாநாயகன் தன் அப்பாவின் மீது மிகுந்த வெறுப்பில் இருக்கிறான். அவர் ஒரு பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விசை என்கிறான். அடைப்பு திறந்தால் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அவன் அம்மா, அப்பாவின் மோசமான கோபம் காரணமாகப் பிரிந்து சென்றுவிட்டாள். அம்மாவின் உடைகளை ஒரு பள்ளத்தில் போட்டு அப்பா அவனை எரிக்க வைத்தார். தேவையற்றது எரிதல்/ எரிக்கப் படுதல் திரைப்படக் கதாநாயகனின் மனதில் ஒரு உருவகமாக இருக்கிறது.
அதே போல் கதாநாயகி தான் இருக்கும் இடத்தில் தன்னை முக்கியமாக மற்றவர் கருத, பொய்களைச் சரளமாக அள்ளிவிடுபவள். இந்த இடத்தில் ஒரு காலத்தில் ஒரு கிணறு இருந்தது. சின்ன வயதில் அதில் விழுந்துவிட்டேன் என்று கதாநாயகனிடம் அவள் சொன்னதைப் பின்னால் அவன் பொய் என்று உறுதி செய்துகொள்கிறான்.
கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இருந்த உறவு பூடகமாகச் சிறுகதையில் சொல்லப் பட்டிருக்கிறது, தேர்ந்த வாசகனால் அதை இட்டு நிரப்பிக் கொள்ள முடியும். சினிமாவில் உடலுறவுக்காட்சி இருக்கிறது. அதற்கு முன்பாக, அவன் அவளைச் சின்ன வயதில் அசிங்கமாக இருப்பதாகச் சொன்னதை அவள் நினைவூட்டுகிறாள். அது அவளது பொய்களில் ஒன்று. அவனைப் பொறுத்தவரையில் அது நிகழவே இல்லை. இப்போது அவள் காஸ்மெடிக் சர்ஜரி செய்து தன்னை அழகாக்கிக் கொண்டிருக்கிறாள். மைமிங் கற்றுக்கொண்டிருக்கிறாள். சினிமாவில் நடிக்கும் முயற்சியில் இருக்கிறாள்.
ஆப்பிரிக்க கலஹாரி பாலைவனத்தின் வசிப்பவர்கள் இரண்டுவித பசியோடு இருக்கிறார்கள். சிறிய பசி, அபாரமான பசி. வயிற்றில் பசியோடு இருப்பது சிறிய பசி. வாழ்வின் அர்த்தத்தைத் தேடுவது அபார பசி. நாம் ஏன் வாழ்கிறோம், வாழ்வுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது என்று தேடுபவர்களே அபாரமான பசியுடையவர்கள். என்று தன் ஆப்பிரிக்கப் பயணம் பற்றிய காரணம் சொல்கிறாள். தன் பேச்சில் அவனை வியக்கவும் வைக்கிறாள்.
அவளது சிறிய அபார்ட்மெண்டுக்கு அவன் வரும்போது அவனைப் பற்றி விசாரிக்கும் அவள், தன் அப்பா பற்றிய பிரச்சினை ஒன்றை அவன் சொல்ல வரும்போது இடை மறித்து, பிரச்சினை எங்கு யாருக்குத்தான் இல்லை என்கிறாள்.
அவனுடன் உடலுறவு கொள்ளும் அவள் . படுக்கையிலிருந்து கை எட்டி எடுக்கும் தூரத்தில் இருக்கும் ஆணுறைகளை எடுத்துப் பொருத்துகிறாள். இது கதையில் பேசப்படும் அவளது குணவார்ப்பு பற்றிய ஒரு பொறி. தான் ஆப்பிரிக்கா செல்லும்போது தன் பூனை பாயிலுக்கு இரையிட முடியுமா என்று கேட்டு பூனையைப் பற்றிச் சொல்லும்போதே அங்குப் பூனை இல்லை அது அவளது கற்பனையான வளர்ப்பு மிருகம் என்று தெரிகிறது. அது இல்லாத அவனும் சொல்கிறான். அவன் உணர்ந்த நிஜத்தை கற்பனை என்று அவள் சாமர்த்தியமாகத் திசை திருப்புகிறாள். அவள் ஆப்பிரிக்கா சென்ற பின், பூனைக்கு இரை வைக்க அறைக்கு வரும்போதெல்லாம் அவளை நினைத்துக் கொண்டு சுயமைதுனம் செய்து கொள்கிறான், அவள் மீது காதல் கொள்ள ஆரம்பித்திருக்கும் அவன்.
வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் அவள் தன் புதிய நண்பனொருவனுடன் வருகிறாள். அவன் பணக்காரன், அழகன். அவள் ஆசைப்படும் இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்று தாராளமாகச் செலவு செய்பவன். அவர்கள் மூவரும் சந்திக்கும்போது தன் ஆப்பிரிக்கப் பயணம் பற்றி அவள் உணர்ச்சிவயப்பட்டுப் பேசுகிறாள்.” நாங்கள் பாலைவனத்தில் இருந்தோம். சூரியன் எல்லையற்ற மணல்வெளியில் அடிவானம் தொட்டு மறைய ஆரம்பித்திருந்தது. அப்போது சூரியன் ஆரஞ்சு நிற வண்ணமாக இருந்தது.அதன் பின் ரத்தச் சிவப்பு.அதன் பின் கருநீலம், பின் நீலம். அதன் பின் இருளாகி இருளாகி சூரியன் காணாமல் போய் விட்டது. சட்டென்று என் கண்களில் நீர் திரையிட்டது. நான் உலகின் கடைசி எல்லையில் நின்றதாக நினைத்தேன். நானும் அப்படித்தான் காணாமல் போக விரும்புகிறேன். மரணம் பயமுறுத்தும் விஷயம்தான். வாழ்ந்த அடையாளமே இல்லாமல் காணாமல் போக வேண்டும் என்று அந்தக் காட்சியை விவரித்து அழுகிறாள். கதாநாயகன் கலக்கமாக இருக்க, அவள் அழுவது வசீகரமாக இருக்கிறது என்று பணக்காரன் நண்பன் சொல்கிறான். தன் வாழ்க்கையில்தான் அழுததே இல்லை என்று சொல்லும் அவனை ஆச்சரியமாகப் பார்க்கும் கதாநாயகன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் சம்பாதிப்பதற்கு என்று கேட்க, நான் விளையாடுகிறேன் என்கிறான் அவன்.
அவன் கோடீஸ்வரன்.. அவனது அழகும், வசதிகளும், ரசனையும், ஆடம்பரமான காரும், நகரின் பிரதான பகுதியிலுள்ள பிரமாண்டமான அபார்ட்மெண்டும், அவனைப் போன்ற வசதியானவர்களுடனான பழக்க வழக்கங்களும் எங்கே அவன் தன்னை விட்டு அவளைப் பிரித்துக்கொண்டு போய்விடுவானோ என்று கதாநாயகனை நினைக்க வைக்கிறது. அவன் அவளைப் பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அந்தக் கோடீஸ்வரனும் அவளோடு இருக்கிறான்.” அவன் என்னைவிட எத்தனை வயது அதிகமாக இருப்பான். இந்த வயதில் இப்படியொரு வாழ்க்கை அவனுக்கு எப்படிச் சாத்தியமானது. இளம் வயது புதிரான பணக்காரன். இவர்கள் எப்போதும் ஆபத்துடையவர்கள். ஏன் அவன் உன்னைத் தேடி வருகிறான் என்றெல்லாம் கேள்வி கேட்கிறான். அவள் என்னைப் போன்றவர்களை அவனுக்குப் பிடிக்கும் என்று சொன்னான் என்கிறாள். அவள் தன்னை விட்டு நகரும் இழப்பு வலி அவனைப் பீடிக்கிறது.
எப்போதும் ஒன்றாகவே சுற்றும் தான் காதலிக்கும் பெண் , அவளது மிகப் பணக்கார நண்பன். . தன் அப்பா ஒரு அரசு அதிகாரியை அடித்து விட்டுத் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றுவிட்டதால் அவரது பசுவைப் பார்த்துக்கொள்ள நகருக்கு வெளியே இருக்க வேண்டியிருக்கும் அவனது சூழல். ஒரு எழுத்தாளனாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் அவன் மனம். இந்தக் குழப்பங்களால் அவன் செய்து கொண்டிருந்த டெலிவரி வேலைக்கும் செல்வதில்லை.
இந்தச் சூழலில் அவனைப் பார்க்க அவள் தன் கோடீஸ்வர நண்பனுடன் பண்ணை வீட்டுக்கு வருகிறாள். பேச்சு, சாப்பாடு, பாட்டு என்றிருக்கும் அவர்கள் மாரிஜுவானாவைப் புகைக்கிறார்கள். உச்ச போதையாகும் அவள் தன் மேலாடையைக் கழற்றிப் போட்டுவிட்டு ஆப்பிரிக்காவில் தான் பார்த்த சூரிய அஸ்தமன நடனத்தை நடனமாடுகிறாள். அவன் அதிர்ந்து போகிறான். அவள் மயங்கிச் சரிகிறாள். அவளை அவனும், கோடீஸ்வர நண்பனும் சேர்ந்து அவளது அரை நிர்வாணமான உடலைத் தூக்கிக் கொண்டு வந்து படுக்க வைக்கிறார்கள்.
மாரிஜுவானா போதையில் கோடீஸ்வர நண்பன் தான் வயல்வெளிகளில் இருக்கும் மற்றவர்களின் கிடங்குகளை எரிப்பேன் என்று சொல்கிறான். ஆச்சரியம் அடையும் கதாநாயகன் அது தவறில்லையா? என்று கேட்க, தவறில்லை என்று வாதிடும் கோடீஸ்வரன் அது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது, பரவசம் தருகிறது. திடீரென எழும் கிடங்குகளை எரிக்கும் ஆசைக்காக நான் கிடங்குகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன். உங்கள் வீட்டுக்கு அருகில் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அதற்காகத்தான் இந்தப் பக்கம் வந்தேன். விரைவில் அதனை எரிப்பேன் என்கிறான்.
அவளும், அந்தப் பணக்கார நண்பனும் கிளம்பிச் செல்லும் முன் கண்ட ஆண்களுக்கு முன்னால் ஏன் சட்டையை அவிழ்த்துப் போடுகிறாய். விபச்சாரிகள்தான் இப்படிச் செய்வார்கள் என்று அவன் சொல்கிறான். .அவள் அவன் சொன்னதை ஒரு பொருட்டாகக் கருதாமல் காரிலேறிச் செல்கிறாள்.
கதாநாயகனுக்கு அந்தப் பணக்காரன் கிடங்குகளை எரிப்பதாகச் சொன்னது ஒருவித உறுத்தலை உண்டுசெய்கிறது. அவன் அடுத்து எரிக்கத் தீர்மானித்திருக்கும் கிடங்கு எது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தன் பண்ணை வீட்டைச் சுற்றித் தேடுகிறான். நிறைய இருக்கின்றன. மிக அருகாமையிலிருப்பதைக் குறிக்கிறான். தினமும் அவற்றை ஓடிச் சென்று எரிக்கப் பட்டிருக்கிறதா என்று பார்க்கிறான்.எதுவும் எரிக்கப் படாததால் ஏமாற்றத்திற்கு ஆளாகிறான். ஒரு கட்டத்தில் தானே நெருப்பு மூட்டிவிடலாமா என்ற அளவிற்கு அதனோடு வெறிகொண்டு ஒன்றிப்போகிறான்.
அந்தக் காலகட்டத்தில் அவனை அவன் வீட்டில் சந்தித்துவிட்டுப் போன பின் பின், அவள் பேசுவதில்லை. அவன் பேச முயன்றால் போனை எடுப்பதுமில்லை. அவளது அபார்ட்மெண்ட் பூட்டியிருக்கிறது. அவன் தவித்துப் போகிறான். அவளது ஊமைக்கூத்துப் பட்டறைக்குப் போகிறான். அங்கும் அவள் இல்லை. தோழிகளையும் பார்க்கவில்லை. பூனைக்கு உணவு வைக்கப் போகலாம் என்று அவன் செல்ல முயல, அவள் தங்கியிருந்த அறையின் உரிமையாளர் அங்குப் பூனையே இல்லை என்று சொல்கிறாள். இரவில் அவனது தொலைபேசிக்கு வரும் அழைப்புகளின் எதிர்முனையில் யாரும் பேசாமலிருக்க அவள்தான் என்று அவன் நினைக்கிறான்.
அந்தக் கோடீஸ்வரனை அவன் தற்செயலாக ஒரு முறை சந்திக்கிறான். கிடங்கை எரித்தாயா? என்று கேட்கிறான். ”ஆம்” என்று அவன் சொல்லி அந்தப் பணக்காரன் ஆச்சரியப்படுத்துகிறான் அதற்க்குப் பின் அவளைப் பார்த்தாயா என்று கேட்க இல்லை என்று சாதாரணமாகக் கூறுகிறான். அவள் எங்காவது சென்றிருப்பாள் என்கிறான். உன்னை அவள் மிகவும் நேசித்தாள். எனக்கு அதில் கொஞ்சம் பொறாமை என்று கூறிவிட்டு இன்னொரு பெண்ணுடன் செல்கிறான். எப்படியாவது அந்தப் பணக்காரனோடு அவளை மறுபடியும் பார்த்துவிட முடியும் என்று அவன் அந்தப் பணக்காரனின் காரைப் பலமுறை ரகசியமாகப் பின் தொடர்கிறான். அவள் கிடைத்தபாடில்லை. அவன் காதலி அவள் ஆசைப்பட்டது போல சூரிய அஸ்தமனம்போலக் காணாமல் போய்விட்டாள்.
அந்தப் பணக்காரன்தான் அவளைக் கொன்றிருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றுகிறது. பணக்காரன் வீட்டுக்கு ஒருமுறை செல்லும் அவன் தன் காதலி தன் வீட்டில் வளர்ப்பதாகச் சொன்ன, அவனை இரையிடச் சொன்ன பூனை பாயில் பணக்காரன் வீட்டில் இருப்பதைப் பார்க்கிறான். அவள் எங்காவது பயணம் சென்றிருக்கலாம் என்று பணக்காரன் சொல்ல, கதாநாயகியின் வீட்டிலிருக்கும் அவள் சூட்கேஸைப் பார்த்து அவள் போக வில்லை என்று முடிவுசெய்கிறான். பலவிதங்களில் யோசித்து, தன் காதலியை பணக்காரன்தான் கொன்றுவிட்டான் என்று உறுதியாக நம்பும் கதாநாயகன், அந்தப் பணக்காரனை கிடங்குகளுக்கு அருகே சந்திக்க வருவது போல் வந்து, கொன்று காரில் வைத்து எரிக்கிறான். மன நெருப்பு பற்றி எரிகிறது.
முரகாமியின் சிறுகதையில் வில்லியம் பாக்னர் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.ஆனால் முரகாமியின் கதைகளின் உரிமையை வைத்திருக்கும் NHK நிறுவனம் பாக்னரின் Barn Burning கதையின் குறிப்பிட்ட அம்சம் ( தன் தந்தை கிடங்குகளுக்குத் தீ வைத்ததன் சாட்சியாக ஒரு சிறுவன். குடும்பமா? சட்டமா? தர்மமா? என்ற அவன் குழப்பம்) முரகாமி கதையிலும் இருப்பதால் முரகாமிக்கு மட்டும் உரிமை கொடுக்க மறுத்தது. அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் படம் தாமதமானது. ஒரு கட்டத்தில் பாக்னரின் ரசிகரான முரகாமி சமாதானம் செய்து கொண்டார். அதனால் திரைப்படத்தில் வரும் பணக்காரன் பாக்னரின் ரசிகன். எப்போதும் அவர் புத்தகத்தை வைத்திருப்பான். முரகாமியின் அனேக வரிகள் படத்தில் வசனமாக இருக்கின்றன. காட்சி, நிகழும் சூழல், கதாபாத்திரங்களின் உடல் மொழி, தட்ப வெம்பம், காட்சிகள் நிகழும் இடங்கள் எல்லாம் சிறுகதையைப் போல அப்படியே இருக்கின்றன. மாற்றப்பட்ட பகுதிகளும் திரைப்படத்துக்கு வலுச் சேர்க்கின்றன. ஒரு சிறந்த எழுத்தாளரும், திரைப்படத்தின் சாத்தியங்களைக் கதையிலிருந்து உள்வாங்கும் சிறந்த இயக்குனரும் ஒன்றிணையும்போது, மூலக் கதையின் ஆன்மா சிதையாத ஒரு அற்புதமான திரைப்படம் உருவாகும் என்பதன் மற்றுமொரு சான்று இப்படம்.
- ஜெகநாத் நடராஜன்